Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பின்கதவுப் பொறி - சேரமான்

Featured Replies

2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத காலப் பகுதியில் கிளிநொச்சி நோக்கிய சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடக்க நிலையை எய்தியிருந்த நிலையில் தமது பின்கதவுத் தொடர்பாளர்களான ஊடவியலாளர் வித்தியாதரன், சுவாமி சிறீசிறீ ரவிசங்கர் ஆகியோர் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருந்தமை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை எமது கடந்த தொடரில் நாம் வெளிக்கொணர்ந்திருந்தோம்.

இதேகாலப் பகுதியிலேயே போர்நிறுத்தத்தை வலியுறுத்திக் ‘கூண்டோடு பதவி விலகும்’ தனது நாடகத்தை தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களும் அரங்கேற்றியிருந்தார். இது பற்றி 2009 சனவரி மாத இறுதியில் இராமேஸ்வரத்தில் கருத்துக்கூறிய சிறீசிறீ ரவிசங்கர், தமிழக அரசு நினைத்தால் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க முடியும் என்றும், ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நாடகமாடுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இவை ஒருபுறமிருக்க வித்தியாதரனை டில்லிக்கு இந்திய அரசு அழைத்ததிலும், தமிழீழ தேசியத் தலைவருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு சிறீசிறீ ரவிசங்கர் எடுத்த முயற்சியிலும் உள்ளடங்கியிருந்த ஆபத்தான பரிமாணங்களை பற்றிக் கடந்த தொடரில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். இந்தியாவின் சதித்திட்டத்திற்கு சிறீசிறீ ரவிசங்கர் உடந்தையாக இருந்தார் என்று இங்கு நாம் குற்றம் சுமத்த விழையவில்லை.

ஆனால் முற்கூட்டியே கால-நேரத்தை நிர்ணயித்து தொலைபேசியில் சிறீசிறீ ரவிசங்கர் அவர்க

ளுடன் தேசியத் தலைவர் உரையாடுவது என்பது அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயமாகவே அமைந்திருந்தது. ஏற்கனவே செய்கோள் தொலைபேசிகளில் உரையாடிய பொழுது பலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் ஒருவரும், செச்சினிய போராளிகளின் தலைவர் ஒருவரும் துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் உலக விடுதலை இயக்கங்களுக்கு சில படிப்பினைகளை வழங்கியிருந்தன.

போதாக்குறைக்கு இந்தியாவின் செய்கோள் தொழில்நுட்ப உதவியுடன் வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு மையங்களை இலக்கு வைத்து அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை சிங்கள அரசு நிகழ்த்தி வந்திருந்தது. இந்த வகையில் சிறீசிறீ ரவிசங்கர் அவர்களின் அழைப்பை ஏற்று அவருடன் தொலைபேசி உரையாடலை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நிகழ்த்துவது என்பது ஆபத்தான பரிமாணங்களையே கொண்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பான விளக்கம் சிறீசிறீ ரவிசங்கர் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து வழங்கப்பட்டது. இருந்த பொழுதும் இந்தியாவில் செல்வாக்கு மிக்க ஒரு சாமியார் என்ற வகையில் சிறீசிறீ ரவிசங்கர் அவர்களுடனான தொடர்பை தமிழீழ விடுதலைப் புலிகள் முறித்துக் கொள்ளவில்லை. வன்னிப் போரின் இறுதி நாட்கள் வரை சிறீசிறீ ரவிசங்கர் அவர்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பில் இருந்து வந்தார்கள். குறிப்பாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் அவர்களும் சிறீசிறீ ரவிசங்கர் அவர்களுடனும், அவரது செயலாளரான சுவாமி சத்தியோஜாதா அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடி வந்திருந்தனர்.

இது பற்றி எமது அடுத்த தொடரில் நோக்குவோம். இது இவ்விதமிருக்க வித்தியாதரனின் டில்லிப் பயணம் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தால் இறுதிசெய்யப்பட்டு, 14.11.2008 அன்று காலை டில்லியை வித்தியாதரன் சென்றடைந்திருந்தார். வித்தியாதரனை டில்லிக்கு அழைக்கும் ஏற்பாடுகளை அப்பொழுது இந்திய வெளியுறவுத்துறை செயலராகவும், தற்பொழுது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி வகிக்கும் சிவசங்கர் மேனன் அவர்களே மேற்பார்வை செய்திருந்தார். சிவசங்கர் மேனனின் திட்டத்தின்படி டில்லியில் 2008 நவம்பர் 14ஆம், 15ஆம் நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான இந்தியத் தரப்பின் செய்தி வித்தியாதரனிடம் வழங்கப்பட்டது.

மக்களைப் பாதுகாக்கும் நிமித்தம் போர்நிறுத்தத்திற்கான அழைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்திருந்த நிலையில் இதனைத் திசைதிருப்பும் வகையில் முரண்பட்ட செய்திகளை வித்தியாதரன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுப்பியிருந்தது. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக அழிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பதே முதற்செய்தியாக அமைந்திருந்தது. அதேநேரத்தில் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கிற்கான பழியை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புக்கொள்ளாத நிலையிலும், ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதற்கான விருப்பத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிடாத பட்சத்திலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் நிலையில் இந்தியா இல்லை என்ற மற்றொரு முரண்பட்ட செய்தியை வித்தியாதரன் ஊடாக இந்தியா வழங்கியிருந்தது.

அதாவது இந்தியாவின் முரண்பட்ட செய்தியை நாம் உற்றுநோக்குமிடத்து, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தமிழீழ தேசியத் தலைவரையும், ஏனைய மூத்த போராளிகளையும் சிக்க வைப்பதிலும், ஆயுத போராட்டத்தை கைவிடுவதற்கான நிர்ப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்துவதிலுமே இந்தியா குறியாக இருந்தமை வெள்ளிடைமலையாகும்.

இந்தச் செய்தி வித்தியாதரனிடம் மட்டும் வழங்கப்படவில்லை. வித்தியாதரனுடன் டில்லியில் இடம்பெற்ற சந்திப்பைப் போன்று அமெரிக்காவிலும் 2008 நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்திய ராஜதந்திரி ஒருவரால் இரண்டு சந்திப்புக்கள் நிகழ்த்தப்பட்டன.

சிங் என்று அழைக்கப்படும் இந்த இந்திய ராஜதந்திரி முதலில் அமெரிக்காவில் உள்ள ஜெயலிங்கம் என்ற மருத்துவரையும், அதனை தொடர்ந்து உருத்திரகுமாரனையும் நேரடியாக சந்தித்து இதே செய்தியை வழங்கியிருந்தார். இதற்கு முன்னோடியாக உருத்திரகுமாரனுடன் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் தலைவரான பரந்தன் ராஜன் தொலைபேசி உரையாடல்களை நிகழ்த்தி வந்திருந்தார். அப்பொழுது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்த எம்.கே.நாராயணனின் பணிப்புரைக்கு அமையவே உருத்திரகுமாரனுடன் தொலைபேசித் தொடர்பை ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன் பேணி வந்தார்.

இவை தொடர்பான ஆதாரபூர்வமான தகவல்களை இனிவரும் வாரங்களில் வெளிவரவுள்ள எமது பத்திகளில் நாம் வெளிக்கொணர உள்ளோம். இவ்வாறாக தமிழீழ விடுதலைப் புலிகளை பெரும் பொறிக்குள் மாட்டுவதற்கு இந்தியா எடுத்த முயற்சியை சாதுரியமாக தவிர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள், இதற்கான தமது அதிகாரபூர்வ பதிலை 2008 நவம்பர் 27ஆம் நாளன்று வழங்கியிருந்தனர்.

இந்தியாவை நட்பு நாடாக வர்ணித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி முறிந்து போன உறவைப் புதுப்பிக்குமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய மாவீரர் நாள் உரையே இந்தியாவிற்கான தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலாக அமைந்தது. அதேநேரத்தில் பின்கதவுத் தொடர்புகள் ஊடாக உரையாடுவதை விடுத்து வன்னியில் உள்ள தலைமைப் பீடத்துடன் நேரடியாக இந்தியா தொடர்புகளைப் பேண முன்வர வேண்டும் என்றும், வித்தியாதரன், சிறீசிறீ ரவி சங்கர், உருத்திரகுமாரன் போன்றோர் ஊடாக இந்தியாவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தெரியப்படுத்தியிருந்தனர்.

2007இற்கு முன்னரான காலப்பகுதியிலும் நோர்வே ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தமது செய்திகளை அனுப்பி வந்த இந்தியா, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைப் பேணுவதற்கான சமிக்ஞைகளை வெளியிட்டு, பின்னர் அவற்றிலிருந்து பின்வாங்கியிருந்தது. இதன் ஓர் அம்சமாக 2006ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை டில்லிக்கு அழைத்த இந்திய தரப்பினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரனை இந்தியாவிற்கு அழைத்துப் பேசுவதற்கு தாம் விரும்புவதாகக் கூறிவிட்டு, பின்னர் இது பற்றி மௌனம் சாதித்திருந்தனர்.

எனினும் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான சூழல் வலுவடைந்திருந்த 2008ஆம் ஆண்டின் இறுதியில், பின்கதவுத் தொடர்புகள் ஊடாக முரண்பட்ட செய்திகளை வழங்குவதை விடுத்து நேரடியாக தம்முடன் இந்தியா பேசுவதையே தமிழீழ விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தனர்.

இதுவே தமிழீழ தேசிய தலைவரின் உரை ஊடாகவும், இந்தியாவின் பின்கதவுத் தொடர்புகள் வாயிலாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட செய்தியாகும்.

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு (22.04.2011)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா வழக்கம் போல கட்டுரைக்குள் உருத்திரகுமாரனப் புகுத்திச் சேறடிச்சாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.