Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாலதீவு ஜனாதிபதி பாடசாலைக்குச் சென்றது ஸ்ரீலங்காவில்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஐ.நா. அறிக்கையில் மாலதீவு ஹலங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் காரணம் என்ன? கீழுள்ள கட்டுரையைப் படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

“வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்”

அந்தக் குடும்பத்தின் வீட்டில் நள்ளிரவில் டெலிபோன் ஒலித்தது. அந்த நள்ளிரவில் போனில் மறுமுனையிலிருந்து கூறப்பட்ட விஷயம், அந்தக் குடும்பத்தை உறைய வைத்துவிட்டது. “வாழ்த்துக்கள். உங்கள் இரு மகன்களும் யுத்தத்தில் மாவீரர்கள் ஆகிவிட்டனர்” என்றது அந்தத் தொலைபேசிக் குரல்.

இந்தக் குடும்பத்தினருக்கு இரு மகன்கள் இருந்தார்கள். மொஹம்மது ஃபஸீஹு ,ஷிவாஹி அப்துல் வஹீது என்பவை அவர்களது பெயர்கள். போன் வந்தபோது அவர்கள் இருவரும் வெளிநாட்டில் (பாகிஸ்தானில்) படித்துக் கொண்டிருப்பதாக அவர்களது பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

தகவலே இல்லாமல் மாயம்

இப்படியொரு தகவல் போன் மூலமாக அந்தக் குடும்பத்துக்குச் சொல்லப்படவே, தமது இரண்டு மகன்களையும் தேடுவதே அந்தக் குடும்பத்தின் முக்கிய வேலையானது.

மகன்கள் தம்மைத் தொடர்புகொள்ளக் கொடுத்திருந்த வெளிநாட்டுத் தொலைபேசி இலக்கத்தை அழைத்தால் எந்தப் பதிலுமில்லை. மாலத்தீவு அரசாங்கம், பாகிஸ்தான் அரசாங்கம் என இரு அரசாங்கங்களிடமும் முறையிட்ட பின்னும், அவர்களுக்குத் தமது மகன்களைப்பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இவர்கள் இருவரும் காஷ்மீர் போரில் மாவீரர்கள் ஆகிவிட்டார்கள் என்ற தகவலை நள்ளிரவில் போன் மூலமாக பாகிஸ்தானிலிருந்து தெரிவித்த நபர் யார் என்ற விஷயத்தை அந்தக் குடும்பத்தினர் ஒருவழியாக அறிந்து கொண்டனர். போன் பண்ணியிருந்த நபரும் மாலதீவைச் சேர்ந்த, வெளிநாட்டில் படிக்கச் சென்ற மற்றொரு மாணவன். பெயர் மொஹம்மது நியாஸ்.

மாலதீவிலிருந்த அந்த மாணவனின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டால் மேலதிக தகவல்கள் ஏதாவது கிடைக்கலாம் என்று அவர்களைத் தேடிப்போனால் அங்கு கிடைத்த பதில் மேலும் மர்மத்தைக் கூட்டியது. மொஹம்மது நியாஸ் என்ற அந்த மாணவனையும் சில தினங்களாகக் காணவில்லை என்று பெற்றோர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.

மாவீரர்கள் ஆனதாகக் கூறப்பட்ட மொஹம்மது ஃபஸீஹு ,ஷிவாஹி அப்துல் வஹீது ஆகிய இருவரும் தமது கல்வியைத் தொடரவே பாகிஸ்தானின் கராச்சி நகருக்குச் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றே பெற்றோர் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ரகசியக் கூட்டங்கள்

ஆனால் கராச்சி சென்ற அவ்விருவரும் வெறும் படிப்புடன் நிறுத்திக் கொள்ளவில்லை. கராச்சியிலிருந்து, வெவ்வேறு பாகிஸ்தானி நகரங்களில் நடைபெற்ற சில ரகசியக் கூட்டங்களுக்கும் அவர்கள் சென்றனர். அந்தக் கூட்டங்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அல்காய்தா ஆகிய தீவிரவாத இயக்கங்களின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டங்களில் கூறப்பட்ட விஷயங்களே அந்த மாணவர்கள் இருவரது வாழ்க்கையைத் திசைமாற்றியிருந்தது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, இவர்கள் இருவரைப்போலவே இரண்டு மாணவர்கள் மாலதீவிலிருந்து கராச்சிக்குப் படிப்பு விஷயமாகச் சென்றிருந்தனர்.

அவர்களில் மொஹம்மது இப்ராஹிம் ஷேக் 1983ல் மாலத்தீவிற்கு திரும்பி வந்தார். வரும்போது கராச்சியில் கற்றுக்கொண்ட தீவிரவாதப் பயிற்சிகளைக் கையோடு கொண்டு வந்தார். மாலதீவில் ஷாஃபி-சன்னி மதரீதியான கலாச்சார முரண்பாடுகளை எதிர்த்துப் போரிட்டார்.

காவல்துறையினரிடம் அகப்பட்டு, தீவிரவாத நடவடிக்கைகளுக்காகத் தண்டனையும் பெற்றார்.

தண்டனை முடிந்து வெளியே வந்தபின், வெளிப்படையாக இல்லாவிட்டாலும், ரகசியமாக தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார். சில வருடங்களுக்குமுன், மாலே நகரில் சுல்தான் பார்க்கில் நடந்த வெடிகுண்டு சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள ஷேக் இப்ராஹீம் ஃபரீத் இவரால் பயிற்சி கொடுக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அப்போதே தீவிரவாதக் குழுக்கள் இருந்தன!

கடந்த சில வருடங்களாக, மாலதீவிலிருந்து படிப்பதற்காக கராச்சி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொஹம்மது ஹலீம் என்பவரே பாகிஸ்தானில் படித்த முதல் மாலத்தீவு பிரஜை. “1989ல் அப்போது என்னையும் சேர்த்து 23 மாணவர்கள் மாத்திரமே படித்தனர்” என்று நினைவு கூர்கிறார் அவர்.

“நாங்கள் கராச்சியில் உள்ள பல இடங்களிலும் படித்தோம். அப்போதே பலரும் ஜிஹாதி குழுக்களுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்று பயிற்சி பெற்றனர்”

ஹலீமுடன் கராச்சியில் படித்தவர்களில் முக்கியமானவர் ஃபொனாதூ தீவை சேர்ந்த அலி ஷெரீப். இவரும் சுல்தான் பார்க் வெடிகுண்டுக்கு முக்கிய காரணகர்த்தா என மாலத்தீவு பொலீசார் கூறுகின்றனர். “அலி ஷெரீப்புக்கு, மாலத்தீவை தலிபான்களின் முறையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். ஆயினும், இவரது திட்டம் தோல்வியடைந்தது. எனவே, பாகிஸ்தானுக்குப் படிப்பதற்காகச் செல்லும் மாணவர்களை மிகவும் பலமாக உபயோகிக்க வேண்டும் என கராச்சிக்கு அவர் செய்தி அனுப்பியுள்ளார்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஷெரீப்பின் மற்றொரு கூட்டாளி அப்துல் மாலிக், 1998 முதல் 2003 வரை பலரையும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்குள் கொண்டு போய் பயிற்சி கொடுத்தவர். இந்த அப்துல் மாலிக், காஷ்மீரில் நடந்த போரில் இந்திய துருப்புகளால் கொல்லப்பட்டார். ஆனால், இவருக்கு பிறகும், பல மாலதீவு மாணவர்களும் இவரது வழியைப் பின்பற்றி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.

அஹமது ஷா என்னும் மாலத்தீவு மாணவர் ஒருவர் 1990களில் லஷ்கர்-இ-தொய்பாவில் பயிற்சி பெற்றவர். இவர் தற்போது போதை மருந்துக்கு அடிமையாகி, அதிலிருந்து விடுபடப் போராடி வருகிறார். “மாலத்தீவிலிருந்து வந்த பல மாணவர்கள் என்னுடன் பயிற்சியில் இருந்தனர்” என்று நினைவு கூர்கிறார் அவர்.

மாலத்தீவு மாணவர் ஒருவர், அல்-கய்தாவுடன் இருந்த தொடர்பால் அமெரிக்க அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டும் இருந்தார்.

சுல்தான் பார்க்கில் நடந்த வெடிகுண்டு பற்றிய விசாரிப்பின் போது, இந்த குழுக்கள் இதைவிட கொடூரமான தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தனர் என்பதும் தெரியவந்தது. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களாக கருதப்படும் அலி ஷமீம் மற்றும் அப்துல் லதீஃப் இப்ராஹீம் ஆகிய இருவரும், இந்தியாவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆயுதங்களை வாங்க முற்பட்டதாக கைது செய்யப்பட்டனர்.

திடீரென மாலதீவு எப்படி தீவிரவாதிகளின் சொர்க்கமாக மாறியது?

மாலதீவுக்கு நீங்கள் சென்றிருந்தால், அது ஒரு வித்தியாசமான சூழ்நிலையுடைய இடம் என்பதைக் கவனித்திருப்பீர்கள். அங்குள்ள கடைத்தெருக்களில் பலமாக ஹிந்தி பாடல்கள் அலறியவண்ணம் இருக்கும். பழமையான டிவீஹி மொழிபேசும் மக்கள் வசிக்கும் அங்கு, ஹிந்திப் பாடல்கள் அலறுவதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவித்ததில்லை. காரணம் மாலதீவு மக்கள் பழமைக்கும் புதுமைக்கும் இடையே இருக்கப் பழகி விட்டனர்.

ஹிந்திப் பாடல்கள் சத்தமான ஒலிக்கும் அதே தெருவில்தான் ஸீனியா மன்ஸில் என்ற குழுவும் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் பிரார்த்தனை குழுவாக ஆரம்பித்த இவர்கள், பிறகு தீவிரவாத இயக்கமாக மாறினர்.

உள்ளே பாயும் வெளிநாட்டுப் பணம்

சுல்தான் பார்க்கில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பாகிஸ்தானிலிருந்தும், பிரிட்டனிலிருந்தும் பணம் குவிந்திருக்கும் என மாலத்தீவு போலீசார் கூறியிருந்தனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஆயிரம் டொலர் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், பொலீசார், இவர்களது நடவடிக்கைகளுக்கு மேலும் பல ஆயிரங்கள் தேவைப்பட்டிருக்கும் என்றனர்.

இந்தக் குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் பணம் வருவது பிரதானமாக பிரிட்டனிலிருந்தே என்று கூறப்படுகின்றது. பிரிட்டனில் வசித்த அபு இஸ்ஸா என்பவரே இதற்கான நிதியுதவிகளைச் செய்துவந்ததாகவும் மாலதீவு பொலீசாரால் கூறப்பட்டது.

இந்த அபு இஸ்ஸா என்பவர், 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் பணத்துடன் மாலதீவு சென்றவர். சுல்தான் பார்க் குண்டுவெடிப்பில் ‘குண்டை வெடிக்க வைத்தவர்’ என பொலீசார் கூறும் இனாஸ் என்பவர்தான், அபு இஸ்ஸாவின் உதவியை பலருக்கும் கிடைக்கும்படி செய்தவர். மேலும், இஸ்லாமிய தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வேறு இருவரும், இஸ்ஸாவுடன் சுனாமி மீட்பு வேலைகளில் ஈடுபட்டவர்களே.

மாலதீவில் 2004ன் சுனாமியை ஊடகங்களுக்காக கவர் செய்த செய்தியாளர் அஹ்மது அப்துல்லா, “அப்போதே, தீவிர இஸ்லாமியக் கொள்கைகளை யாரெல்லாம் ஏற்றுக்கொள்கின்றனரோ, அவர்களுக்கே இஸ்ஸா குழுவினர் நிவாரணம் வழங்கி வந்தனர். இதனால் அப்போதைய நிலையில் பலரும் அவர் வழி சென்றனர்” என்கிறார்.

இந்தியத் தொடர்பு

அபு இஸ்ஸா இருந்து, மும்பை மற்றும் திருவனந்தபுரத்திற்கு சென்றதாகவும் தகவல் இருக்கிறது. மும்பையில் தீவிரவாதத்திற்கு பணம் கொடுத்து உதவுபவர்களுக்கும், அதை நடத்துபவர்களுக்கும் இடையே ஒரு கூட்டம் நடந்ததாகவும் அதில் அபு இஸ்ஸா முக்கிற பேச்சாளராகக் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் ஆயுதங்கள் வாங்கியதற்காக கைது செய்யப்பட்ட இப்ராஹீம் ஆஸிப்பிற்கும் அபு இஸ்ஸாவே பணம் கொடுத்திருக்கக் கூடும் என இந்திய உளவுத்துறை நம்புகிறது.

அபு இஸ்ஸாவால் வழங்கப்பட்ட பணத்தின் மூலம் மாலதீவில் பல இஸ்லாமிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதாகவும், இந்த நிறுவனங்களை சயீது அஹமது என்பவரால் ஆரம்பத்தில் நிர்வாகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் எதுவும் தீவிரவாதத்தின் சாயல் எதுவுமின்றி இயங்கிவருவதால், அவற்றின்மீது சட்ட நடவடிக்கை எதையும் எடுக்க முடிந்திருக்கவில்லை.

2004ல் மாலத்தீவில் கேயூமின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களில் இந்த சயீது அஹமதுவும் ஒருவர். அதன்பிறகு அவர் மாலதீவிலிருந்து வெளியேறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்று அவரது குடும்பம் தெரிவித்திருக்கிறது. மற்றய மாலத்தீவு இஸ்லாமிய தீவிரவாதிகள் போல, இவரும் ஜமியா சலாஃபியாவை சேர்ந்தவர்.விறுவிறுப்பு.கொம்

மாலதீவில் ஏற்படும் தீவிரவாதச் சிந்தனைகளுக்கு முக்கிய காரணம் அங்கு நடைபெறும் கலாச்சார மாற்றங்களே.

ஒருகாலத்தில் கட்டுப்பாடற்ற கலாச்சார முறையைக் கொண்டிருந்த மாலதீவில் மமூன் அப்துல் கயூமின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில், கடுமையான இஸ்லாமியக் கலாச்சார முறை பின்பற்றப்படும் போக்கு தொடங்கியது. அவரது ஆட்சி நவம்பர் 2008ல் முடிவுக்கு வந்து, தற்போதய ஜனாதிபதி மொகமட் நஷீட் ஆட்சிக்கு வந்தபின் நிலைமை ஓரளவுக்கு மாறத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதியின் இலங்கைத் தொடர்பு

தற்போதய ஜனாதிபதி மொகமட் நஷீட், வெளிநாடுகளில் கல்வி கற்றவர். இவர் மாலதீவுக்கு அருகிலுள்ள நாடுகளில் இந்தியாவைவிட, இலங்கையுடன் பல தொடர்புகளை வைத்திருப்பவர். காரணம் என்னவென்றால் இவர் கல்வி கற்றது இலங்கையில். கொழும்பிலுள்ள இன்டர்நேஷனல் ஸ்கூலில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவர். அதன்பின் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தவர்.

இதனால் இவரது அணுகுமுறையில் கடுமையான இஸ்லாமியக் கொள்கைகள் இல்லை என்று கூறப்படுகின்றது.

மாலத்தீவில் நடக்கும் கலாச்சார மாற்றங்களை அந்த நாட்டின் புகழ்பெற்ற நடனப்புயல் அலி ரமீஸை விட வேறு ஒருவராலும் விளக்க முடியாது. கடுமையான இஸ்லாமியக் கொள்கைகள் மாலதீவில் வேர்விடத் தொடங்கியபோது, அவர் தனது பழைய பாடல்கள் பலவற்றையும் மாலத்தீவின் கடலில் எறிந்து, தனது ஆதரவாளர்களை ஷேக் ஃபரீதின் வழியை பின்பற்றுமாறு கூறினார்.

முன்பு மிகவும் முன்னேறிய ஒரு நாடாக இருந்த மாலத்தீவு, கடுமையான இஸ்லாமியச் சட்டங்கள் அறிமுகமாகத் தொடங்கியபோது மிகவும் பழமையானதாக மாறியது. பெண்கள் மினி ஆடைகளை விடுத்து உடல் முழுவதும் மூடிய ஆடைகளுடனும், பெரிய தாடிகளுடன் ஆண்களும் மாலத்தீவில் வலம்வர ஆரம்பித்தனர்.

ஆயினும் மாலதீவு முழுவதுமான மாறவில்லை. சில நிழலான இடங்களுக்குச் சென்றால், போதை மருந்து விற்கும் குழுக்கள் இயங்குவது நிற்கவேயில்லை என்பதைக் காணலாம். 2006ல் ஐ.நா. சபை வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி மாலதீவிலுள்ள 300,000 மக்கள் தொகையில் 8000 பேர் போதை மருந்திற்கு அடிமையானர்கள் என்பது தெரிகிறது. மேலும், இந்த நாட்டின் தென்பகுதிய மக்களில் 70% சதவிகிதம் பேர் போதை மருந்து உட்கொள்பவர்கள்.

இங்குள்ள செய்தியாளர் ஒருர் கூறுகையில், “பல பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் இஸ்லாமிய முறைக்கு மாறுவதை வரவேற்கின்றனர். ஏனெனில் அது அவர்களது போதை மருந்திலிருந்து விலக்கி விடுகிறது”

மாலதீவின் இன்றைய நிலைமைக்கு, முன்னாள் ஜனாதிபதி கேயூமின் நடவடிக்கைகளே காரணம் என்று கூறப்படுகிறது. முப்பது வருடங்களுக்கு முன்பு பதவிக்கு வரும்போது அங்குள்ள அநீதிகளை நீக்க, பிரதமர் கேயூம் இஸ்லாமியச் சட்டங்களையே கையிலெடுத்தார். இந்த வாய்ப்பை இஸ்லாமிய கடும்போக்காளர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டனர். இதனால், அங்கு மக்களாட்சி பற்றிய பேச்சுக்கள் குறைந்து, இஸ்லாமிய முறைகள் பற்றிய பேச்சுக்கள் அதிகரித்தன.

அப்போதுதான் தீவிரவாதம் வெளிப்படையாக அங்கு பரவத் தொடங்கியது.

செப்.11 தாக்குதலுக்குப் பின்னர் ஒரு பள்ளிக்கு எதிரில் ஒசாமா பின்லேடனை புகழ்ந்து ஒரு போஸ்டர் இருந்தது. அரசே அதை அகற்ற முன்வரவில்லை. 2006ல் கிருத்துமஸ் புகைப்படம் ஒட்டியிருந்த காரணத்திற்காக ஒரு கடை முதலாளி தாக்கப்பட்டார்.

மீண்டும் மேலைத்தேய ஆடைகளுடன் பெண்கள்!

இப்போது நிலைமை மெதுவாக மாறத் தொடங்கியுள்ளது. கடுமையான இஸ்லாமிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்தல் வெளிப்படையாக இல்லை. மேலைத்தேய ஆடைகளை அணிந்த பெண்களையும் வீதிகளில் காணமுடிகிறது.

தற்போது, பல வழிகளிலிருந்தும் பிரச்சனைகள் வருவதால் மாலத்தீவு மக்கள் கடும் இஸ்லாமியச் சட்டங்களை மெதுவாக எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

தீவிர இஸ்லாமியக் கொள்கைகளைப் போதிக்கும் ஹிமாந்து மற்றும் சலாஃபி மசூதிகளை அரசாங்கமே மூடிவிட்டது. ஆயினும் பிரச்சனை இன்னமும் முழுமையாக ஓய்ந்த பாடில்லை.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் கால்கள் இன்னமும் மாலதீவில் பதிந்திருப்பதாகவே உளவு அறிக்கைகள் கூறுகின்றன. சர்வதேச உளவுப்பிரிவுகளும், மாலதீவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் வரும் பணம் பற்றித் தகவல்களை வைத்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து மாலதீவுக்கு வந்துசேரும் இந்தப் பணம், நாளைக்கே மாலதீவில் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடக்கிவிடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

காரணம், பல தீவிரவாத இயக்கங்களுக்கு, முன்பே நன்கு பரிச்சயமான மைதானம் மாலதீவு!

மூலம்: விறுவிறுப்பு.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.