Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்த கதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்த கதை..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனால் கலைத்துறையின் உச்சத்தைத் தொட்ட நிலையிலும் எம்.ஜி.ஆரை போல அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை..! இது காலத்தின் கட்டாயமாக அவருக்கு கிடைத்த அனுபவம்..!

அவர் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, அவரே தோற்றுப் போய் அவரது கட்சியினர் ஒருவர்கூட ஜெயிக்காமல் அவமானத்துக்குள்ளாகி, கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதாதளம் கட்சியில் தனது எண்ணற்ற தொண்டர்களுடன் கரைந்து போனார்..! கடைசியில் ஜனதா தளம் கட்சியும் கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விட அதிலிருந்தும் ஒதுங்கியவர் தனது மரணம் வரையிலும் அரசியலைத் தொடவில்லை..!

அவர் கட்சி ஆரம்பித்த அன்று அவரது வீட்டில் நடந்த நிகழ்வுகளை அன்றைய ஜூனியர் விகடன் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. அரசியலில் ஆர்வமுடையவர்கள் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது..!

அதற்கு முன்பாக அப்போதைய தமிழகத்தின் அரசியல் சூழலை கொஞ்சம் தெரிந்து கொண்டு அதன் பின்பு ஜூ.வி.க்குள் நுழைவோம்.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி மரணமடைந்தார். அவர் மரணமடைந்த மறுநாளில் இருந்தே ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஆர்.எம்.வீரப்பன் தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க.வில் உருவானது..!

ஜெயலலிதா தனது வீட்டின் பால்கனியில் நின்றபடியே தினம்தோறும் தனது ஆதரவாளர்களைச் சந்திக்கத் தொடங்கினார். இதனாலேயே அவருக்கு பால்கனி பாவை என்ற நற்பெயரும் கிடைத்தது. இந்தப் பெயரை அவருக்குச் சூட்டியது கா.காளிமுத்து..!

அப்போதைய சட்டப் பேரவையில் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 132. இதில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள். மீதமிருந்தவர்கள் ஆர்.எம்.வீ.யுடன் இருந்தார்கள். ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவைச் சமாளிக்க வேண்டி இதற்கு ஜானகியம்மாள்தான் முதல்வராக வேண்டும் என்று லாபி செய்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி அவரையே முதல்வராகத் தேர்வு செய்தார். அதுவரையிலும் இடைக்கால முதல்வராக நெடுஞ்செழியன் பதவி வகித்து வந்தார். அவர் தன்னைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுப் பார்த்தார். ஒரு எம்.எல்.ஏ.கூட அவரை ஆதரிக்காதது அவரது துரதிருஷ்டம்தான்..! 1989 ஜனவரி 7-ம் தேதியன்று ஜானகியம்மாள் தமிழகத்தின் முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், துணை சபாநாயகர் வி.பி.பாலசுப்பிரமணியனும் ஜானகியை ஆதரித்தனர். அதே சமயத்தில் அப்போது திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்தற்காக அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர். எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது.

புதிய அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 1988, ஜனவரி 26- ல் நடத்தப்பட்டது. இன்றைக்குத்தான் பல ஆண்டுகள் கழித்து கோபாலபுரத்தில் கால் வைத்தார் ஆர்.எம்.வீரப்பன்..! கலைஞரை சந்தித்து அ.தி.மு.க.வின் ஜானகி தலைமையிலான ஆட்சிக்கு தி.மு.க.விடம் ஆதரவு கேட்டார்..!

நினைத்துப் பார்க்க முடியாத மாற்றம்.. எம்.ஜி.ஆர். மறைந்து சில நாட்களுக்குள்ளாகவே ஆட்சியைப் பிடிக்க ஆளாய் பறந்து, "தீய சக்தி" என்று வர்ணித்து, யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ, அதே நபரிடம் போய் ஆதரவு கேட்டார் எம்.ஜி.ஆரின் மேனேஜர் ஆர்.எம்.வீரப்பன். கலைஞர் எப்போதும்போல் கட்சியின் மேல் மட்டத்தினருடன் கலந்தாலோசித்து சொல்வதாக வீரப்பனை அனுப்பி வைத்தார்.!

சட்டப் பேரவையில் தி.மு.க., இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. சபாநாயகர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை கட்சி கொறடா உத்தரவை மீறியதற்காக அவையிலிருந்து நீக்கினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும், ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. கூடவே ஜேப்பியாரின் தலைமையில் நுழைந்த ஒரு கும்பல் ஜானகியம்மாள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பாதுகாப்பதாகச் சொல்லி ஜெயலலிதாவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்களை பதம் பார்த்துவிட்டனர். பலருக்கும் ரத்தக் காயம்..!

அவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி ராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் இதனை மாநில கவர்னர் குரானா ஏற்கவில்லை..!

காங்கிரஸின் காலை வாரி விடும் கலாச்சாரத்தின்படி இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த மத்திய காங்கிரஸ் அரசு, ஜனவரி 31-ம் தேதியன்று ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. இரு பிரிவினரும் தனித்தனியாக கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்று பேட்டியளித்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அ.தி.மு.க.வாக ஏற்க மறுத்தது. அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது.

சட்டப் பேரவையின் வாக்கெடுப்பின்போது ஜானகியம்மாளை ஆதரிக்க வேண்டும் என்று சிவாஜி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார். ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களோ.. "இதுதான் சரியான சந்தர்ப்பம்.. அ.தி.மு.க.வை பலமிழக்க வைத்தால், அது நமது காங்கிரஸுக்குத்தான் நல்லது. எதிர்காலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தலாம்" என்று மேலிடத்திடம் வற்புறுத்த.. ராஜீவ்காந்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக தடம் மாறினார். ஜானகியம்மாளுக்கு ஆதரவில்லை என்று காங்கிரஸ் முடிவெடுத்தது..! இதுவே ஜானகியம்மாளுக்கும், அதிமுகவுக்கும் பெரும் அதிர்ச்சி. இதனைவிட அதிர்ச்சி சிவாஜிக்கு..!

எம்.ஜி.ஆரின் மீதிருந்த அபிமானம், ஜானகியம்மாளின் மீதி்ருந்த பாசம் மற்றும் இரக்கத்தில் சிவாஜி இதனைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது ஜென்ம விரோதியான மூப்பனாருடன் மோதி அவரால் ஜெயிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் இடையில் நுழைந்தார் ஆர்.எம்.வீரப்பன்..!

சிவாஜியை சந்தித்து தனிக் கட்சிக்கு தூபம் போட்டார். கட்சியின் செலவுகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், கட்சிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், தேர்தல் நேரத்தில் தாங்கள் இருவரும் கூட்டணி வைத்துக் கொண்டால், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்றும் ஆசை வார்த்தை காட்ட.. இதுவரையிலும் தனக்கான மரியாதையைச் செய்யத் தவறிய காங்கிரஸுக்கு பாடம் புகட்ட நினைத்து சிவாஜியும் தலையாட்டினார். அதன் விளைவுதான் அவர் ஆரம்பித்த கட்சியான 'தமிழக முன்னேற்ற முன்னணி'..!

இனி ஜூ.வி.யின் அன்றைய நேரடி வர்ணனையைத் தொடர்ந்து படியுங்கள்..!

10.02.1988

கடைசியில், சிம்மக் குரலோன் புதுக் கட்சி தொடங்கியேவிட்டார்! பிப்ரவரி மாதம் 10-ம் தேதி சென்னை - தி.நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜியின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான 'பிள்ளை’கள் கூடினார்கள். தொடக்க நாளன்று சிவாஜி மிகவும் டென்ஷ​னாகவே காணப்பட்டார். காரணம் - கட்சியின் பெயர்(தமிழக முன்னேற்ற முன்னணி)கூட 10-ம் தேதி, காலை 10 மணிவரையிலும்கூட முடிவாகாமல் இருந்ததுதான்..!

''சிவாஜிக்கு எந்தப் பதவியும் தராமல் அலட்சியப்​படுத்தி, அவர் எதிர்பார்ப்புகளை நிராகரித்தே வந்தது இந்திரா காங்கிரஸ். இந்த நிலையில் வேறு கட்சிக்கு உடனே போவது என்பது கௌரவக் குறைச்சல். எனவேதான், சிவாஜியைத் தனிக் கட்சி ஆரம்பிக்க ஆர்.எம்.வீ. வற்புறுத்தினார்.

இதனால், எதிர்வரும் தேர்தலில் இ.காங்கிரஸுக்குத் தேர்தல் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் போகலாம். சிவாஜி மன்ற ரசிகர்களுக்கு மட்டும்தான் கொடி கட்டவும், கூட்டத்துக்கு ஆள் திரட்டவும் தெரியும் என்பது மேலிடம் கவனிக்க மறந்த விஷயம். ஆனால், ஆர்.எம்.வீ. அதை மறக்காமல் செயல்​பட்டார்...'' என்று நம்மிடம் சொன்னார் ஜானகி கோஷ்டி ஆதரவாளர் ஒருவர்.

ஆனாலும், புதுக் கட்சித் தொடங்க சிவாஜி லேசில் உடன்படவில்லை. அவரை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், 'தமிழ் தேசம்’, 'தமிழர் காங்கிரஸ்’ 'சிவாஜி காங்​கிரஸ்’, 'தமிழக முன்னேற்றக் கழகம்’ என்று சுமார் 50 பெயர்களை சிவாஜியின் ஆதரவாளர்கள் தேர்ந்து எடுத்து அவர் முன் வைத்தார்கள்.

''ஏம்ப்பா கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே, இவ்ளோ வேகமா செயல்படறீங்களே... இந்த வேகம் கடைசிவரை இருக்குமாப்பா?'' என்று கேட்டார் சிவாஜி. தொடர்ந்து, ''எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் பெயரை உபயோகப்படுத்த வேண்டாம். 'தேசியம்’கிற வார்த்தை வர்ற மாதிரி ஒரு பேரைத் தேர்ந்தெடுங்க...'' என்று சொன்னார். ஆனால், 'தேசியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த அனுமதி கிடைக்காது என்ற தகவல் வந்தது. கடைசியில் 'தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற பெயர் சிவாஜிக்குப் பிடித்துவிட்டது.

கட்சிக் கொடியின் நிறம், அதன் பொருள், கொள்கை போன்ற விஷயங்கள், வெங்கட்ரமணன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்) ஆகியோர் அடங்கிய ஒரு குழு முடிவு செய்து சிவாஜியின் ஒப்புதலைப் பெற்றது.

சிவாஜி மூலம் எம்.எல்.ஏ. பதவி பெற்றவர்கள் சிலர் இந்தப் புதுக் கட்சியில் சேராமல் நழுவியது குறித்து சிவாஜி வருத்தப்பட்டார். ''நம்பிக்கைத் துரோகம் பல ரூபத்திலே தொடருதேப்பா...'' என்றார்.

அருகில் இருந்த சைதை துரைசாமி, ''நாங்க இருக்கோம்ணே... கவலைப்படறதை விட்டுட்டுத் தலை​வருக்குரிய பந்தாவைக் காட்ட ஆரம்பிங்கண்ணே..'' என்றார் சிவாஜியிடம்.

இதுபோல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையேதான் புதன்கிழமை தொடக்க விழா நடந்தது. சாலையின் முனையில் பிரமாண்டமான கட்-அவுட். அதில்கூடக் கவனமாக சிவாஜியின் வேஷ்டியில் இருந்த காங்கிரஸ் பார்டரை நீக்கி இருந்தார்கள்!

வீட்டுக்கு வெளியே பெரிய பந்தலும், வீட்டுத் தோட்டத்தில் ஷாமியானாவும் போட்டு அலங்காரம். காலை 8 மணியில் இருந்தே, ரசிகர்களின் கூட்டம். வந்தவர்கள் எல்லோருமே மிகவும் அந்நியோன்யமாக, சிவாஜி வீட்டின் எல்லா அறைகளுக்கும் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள்.

மெயின் ஹாலில் சிவாஜி தன் மகன் ராம்குமாருடன் அமர்ந்திருந்தார். சிவாஜி மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாகத் தங்கள் படைகளுடன் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ 'தமிழக முதல்வர் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் எழுப்பி மாலை போட்டுவிட்டுச் சென்றார்கள்.

திருநெல்வேலி ரசிகர் மன்றத்தினர் வந்து, 'அண்ணன் சிவாஜி வாழ்க...’ என்று கோஷம் போட, ராம்குமார் அவர்களை அருகே அழைத்து, ''இன்னும் என்னங்க... அண்ணன் சிவாஜிங்கிறீங்க... தலைவர் சிவாஜின்னு சொல்லுங்க...'' என்று உத்தர​விட்டதும், அடுத்து வந்தவர்கள் எல்லாம் 'தலைவர்’ கோஷமே எழுப்பினார்கள்.

புதுக் கட்சி உருவாக்கித் தலைவரான சிவாஜி, அன்றே வாரிசையும் அறிமுகப்படுத்திவிட்டாரா? அப்பாவுக்கு அருகில் இருந்த ராம்குமாரிடம், ''என்ன... நீங்களும் அரசியல் பிரவேசமா?'' என்றதும், ''நோ... நோ... அப்பாவுக்கு ஹெல்ப்பா இன்னிக்கு மட்டும்... அதுவும் இந்த புது அனுபவத்தை என்ஜாய் பண்றதுக்காகத்தான்...'' என்று சொல்லிவிட்டு, ''இதுல ஒண்ணும் தப்பில்லையே...'' என்று 'சிவாஜி’ பாணி​யிலேயே கேட்டார்.

ஒரு ரசிகர் வெகு ஆவேசமாய் வந்து தன் கையை பிளேடால் கீறி ரத்தம் தொட்டு, ''பாரதப் பிரதமர் டாக்டர் சிவாஜி...'' என்று உணர்ச்சிகரமாய்க் குரல் கொடுக்க... ராம்குமார், தளபதி சண்முகம், ராஜசேகரன் உட்பட எல்லோருமே, ''வாழ்க...'' என்றனர். தொடர்ந்து அந்த ரசிகர், ''துரோகி ராஜீவ்காந்தி...'' என்று கத்த, சிவாஜி மிகச் சத்தமாய்... ''வாழ்க...'' என்றார்.(பலே!)

தொடர்ந்து, ''எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன்... நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் ரொம்ப உயர்வா இருக்கணும். படிச்சவங்களும் பாராட்டற மாதிரி இருக்கணும். யாரையும் 'ஒழிக’ கோஷம் போட்டுத் திட்டாதீங்கப்பா... அதுவும் மறைந்த அந்த அன்னையோட பிள்ளையை - என்ன இருந்தாலும் ரொம்ப பெரிய பதவியிலே இருக்கறவரை, அப்படி சொல்லக் கூடாது. அரசியல்லே நாமளாவது நாகரிகத்தோட, நாணயத்தோட, நல்லோரோட கைகோத்து நடப்போம்...'' என்றார் கம்பீரமாக!

ஒரு மூதாட்டி - சுமார் 80 வயது இருக்கும். ''அப்பா... நானொரு அநாதை... அந்த மவராசன் - எம்.ஜி.ஆரு இருந்தவரைக்கும் எனக்குக் கொள்ளி போட வருவாருன்னு நெனைக்காட்டியும், எம் புள்ளையா நெனைச்சிருந்தேன்... இனி நீதாம்பா எம் புள்ளை...'' என்று அழுதபடியே ஏதேதோ பேச, சிவாஜி எழுந்து அந்த மூதாட்டியின் காலில் விழுந்து, ''உங்க ஆசீர்வாதம் கிடைக்கவே எனக்குக் குடுத்து வெச்சிருக்கணும். உங்க பிள்ளையாவே ஏத்துக்​கிட்டீங்களே... என் பாக்கியமம்மா... பாக்கியம்!'' என்றவர் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, ''சாப்பிட்டீங்களாம்மா...'' என்று கேட்டு, சாப்பிட ஏற்பாடு செய்து அனுப்பி​னார்!

அடுத்து சிறுவர்கள் நான்கைந்து பேர் வந்து மாலை போட்டுவிட்டு, ''அண்ணே... எங்க ஏரியா முழுக்க உங்க பக்கம்தாண்ணே...'' என்றார்கள். சிவாஜி சிரித்தபடியே, ''உங்க ஏரியான்னா? உங்க வயசுப் பிள்ளைகளா? ஹூம்... உங்க ஆதரவு இருந்தா, டிஸ்ட்ரிபியூட்டருக்குத்தான் லாபம்... எனக்கு இல்லையேப்பா. ஆனா, பெரியவங்க சொல்றபடி கேட்டு நடக்கணும்... படிக்கிறீங்களா?'' என்று விசாரித்து, தட்டிக் கொடுத்து அனுப்பினார்.

காலை 10 மணியில் இருந்தே காத்திருந்த நிருபர்களில் ஒருவர், ''எப்போ சார் கட்சியைத் தொடங்கப் போறாரு...?'' என்றார். அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், ''கொஞ்சம் பொறுங்க சார்... இன்னிக்குப் புதன்​கிழமை... பன்னிரெண்டு டூ ஒன்றரை ராகு காலம். அது முடிஞ்சதும் கரெக்டா 1.35-க்கு ஆரம்பிச்சிடலாம். நல்ல காரியத்தை நல்ல நேரத்துலே பண்ணுவோமே...'' என்று சமாதானப்​படுத்தினார்.

சரியாக மதியம் 1.40 மணிக்குக் கை கூப்பியபடியே மேடைக்கு அருகே வந்த சிவாஜி, பிள்ளையார் கோயிலை நமஸ்கரித்துவிட்டு மகன் ராம்குமாருடன் மேடை ஏறினார். சிவாஜியை வாழ்த்தும் கோஷமும், பட்டாசு வெடிக்கும் கோஷமுமாகத் தூள் கிளம்பியது.

முதலில், தளபதி சண்முகம் புதிய கட்சியின் தலைவராக சிவாஜியை முன்மொழிந்தார். அதை ஒவ்வொரு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்களும் வழிமொழிந்தார்கள். பலரும் தம் பேச்சின் முடிவில் 'ஜெய்ஹிந்த்’ என்று சொன்னார்கள். சண்முகம், ''பழக்க தோஷம்... லேசிலே போகுமா...'' என்று சொல்லிச் சிரித்தார்.

கடைசியில் சிவாஜி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டு, புதுக் கட்சி ஆரம்பித்ததற்கான அறிக்கையை வாசித்து முடித்தார்.

மேடையைவிட்டு இறங்கும் சமயம் ஒரு தயாரிப்பாளர் சிவாஜியின் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே, ''பூஜையைப் பிரமாதமா போட்டி​ருக்கீங்க அண்ணே...'' என்றார். சிவாஜி தனக்கே உரிய பாணியில், ''வாஸ்தவம்தான்... வழக்கப்படி நம்ம பிள்ளைங்க காப்பாத்துவாங்கங்கற நம்பிக்கைதான்...'' என்றார்!

காப்பாற்றுவார்களா?

''எட்டப்பர்களை ஒழிக்க வந்த கட்டபொம்மன்!''

காங்கிரஸில் இருந்து விலகிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த கூட்டம், அவர் காங்கிரஸில் இருந்த​போது இருந்ததைவிட, உணர்ச்சிபூர்வமாகவே பூரித்திருந்தது. காங்கிரஸ் பிரமுகர்களின் கார்கள் மட்டும் மிஸ்ஸிங்.

'வருங்கால முதல்வரே! தமிழினத் தலைவரே! வருக வருக’ போன்ற ஸ்லோகங்கள் சிவாஜியைத் தனி உலகத்​துக்கு அழைத்துச் சென்று இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தில் பிரஸ் மீட் வைத்தார். அங்கு என்னென்ன சொன்னாரோ, அது அப்படியே திருமண விழாவிலும் பிரதிபலித்தது.

''தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை ராஜினாமா செய்ய வைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த சிவாஜி, குருஷேத்திர யுத்தத்தில், பாண்டவர்களுக்கு உதவிய கண்ணனைப் போன்றவர். அவரை எங்கள் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டோம்!'' என்றார் செல்வேந்திரன்.

மணமக்களை வாழ்த்த வந்த ஒருவர், ''தலைவர் சிவாஜி, எட்டப்பர்களின் கொட்டத்தை அடக்க வந்த கட்டபொம்மன்!'' என்றார். ''எங்கள் இதய தெய்வம் டாக்டர் சிவாஜி!'' என்றார் பழக்கடை பாண்டியன்.

கடைசியில் பேசிய சிவாஜியின் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. ''நான் 30 வருஷமா கட்சி கட்சினு அலைஞ்சு, வேறு எதையும் சிந்திக்காமல் போயிட்டதால, சொந்தக்காரப் பயலுக எவனுமில்லாமப் போயிட்டானுக... (கூட்டம், 'நாங்கள் இருக்கிறோம்’ என அலறியது.) நம்மகிட்ட 3,60,000 மன்ற மறவர்கள் இருக்காங்க. ஒண்ணுமில்லாத கட்சி இப்போ காங்கிரஸ்தான். பொய்யை வெச்சே ஒரு கட்சி இருக்கிறதுன்னா, அது காங்கிரஸ்தான்.

இலங்கைப் பிரச்னையில் இவங்க ஆதரவும் கையெழுத்தும் எப்படி வாங்கினாங்கங்கிறது மத்தவங்களுக்கு வேணாத் தெரியாம இருக்கலாம். நமக்குத் தெரியாமல் இருக்குமா? எனக்கு அங்கே மரியாதை கிடைக்கலேப்பா. தேசியம், தேசியம்னு... பம்பாய் நம்மது, காஷ்மீர் நம்மது, டில்லி நம்மதுன்னு நினைச்சு என்னத்தைக் கண்டேன்? எல்லாம் கைவிட்டிடுச்சி. பார்த்தேன்... இனி இந்த தமிழ் மக்கள்தான்! அவங்க காலடியில வந்து விழுந்திடுவோம்கிற முடிவுக்கு வந்துட்டேன். தோளில்வெச்சு சுமந்தா, சுமக்கட்டும். இல்லாட்டி, காலில் போட்டு மிதிச்சாலும் மிதிக்கட்டும். ஏன்? 30 வருஷம் காங்கிரஸுக்கு உழைச்சதுக்கு தண்டனை வேணுமே! என் உசுரு போறதும் இந்த தமிழ் மக்கள் மடியிலேயே போகட்டும். என்ன செய்யறது... காலங்கெட்ட நேரத்துலதான் புத்தி வருது!

சரி நான்தான் வேஸ்ட் பண்ணிட்டேன். நீங்களாவது (எதிர்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு காங்கிரஸ் பிரமுகரைப் பார்த்து) காலாகாலத்துல வந்து சேருங்க. (கரவொலி) இல்லேன்னா, அங்கேயே கிடந்து சாவுங்க. பாவம் இவரு... டெல்லிக்குக் கொண்டுபோன ஏலக்காய் மாலையைச் சேமிச்சு வைச்சிருந்தா, பெரிய ஏலக்காய்க் கடையே வைக்கலாம். என்ன ஆச்சு... ஒண்ணும் ஆகலை...''

அந்த மணமேடையை அரசியல் மேடையாக்கி, முழு அரசியல்வாதிக்கு உரிய தகுதியைப் பெற்றுவிட்டார் சிவாஜி!

நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011

மீண்டும் நான்..!

1989 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க.-ஜனதா தளம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன. ஜெயலலிதா அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியில் நின்றன. ஜானகி அ.தி.மு.க.வும், நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணியும் கூட்டணி வைத்திருந்தன. இந்த நேரத்தில் மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாகக் காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை.

1989, ஜனவரி 21-ல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மொத்தம் 69.69 % வாக்குகள் பதிவாகின. தி.மு.க. கூட்டணி 169 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏறியது..! ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு 32 தொகுதிகள் கிடைத்தது. ஜானகி எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வுக்கு 2 தொகுதிகள்தான் கிடைத்தன. நடிகர் திலகத்தின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை..! சிவாஜியே திருவையாறு தொகுதியில் தோல்வியடைந்தது மிகப் பெரும் சோகம்..!

திமுக

இடங்கள்

அதிமுக (ஜெ)

இடங்கள்

மற்றவர்கள்

இடங்கள்

திமுக

150

அதிமுக (ஜெ)

27

அதிமுக (ஜா)

2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

15

இந்திய கம்யூனிஸ்ட்

3

காங்கிரசு

26

ஜனதா கட்சி

4

அதிமுக

2

சுயேட்சைகள்

5

மொத்தம் (1989)

169

மொத்தம் (1989)

30

மொத்தம் (1989)

35

மொத்தம் (1984)

24

மொத்தம் (1984)

--

மொத்தம் (1984)

17

அ.தி.மு.க.வின் ஒற்றுமையின்மையால் அக்கட்சியின் வழக்கமான ஆதரவு சிதறிவிட்டது. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்ட தி.மு.க. குறைவான வாக்குகளைப் பெற்றாலும், பெருவாரியான இடங்களில் வென்றது.

சிவாஜியை எதிர்த்து தி.மு.க.வின் சார்பில் துரை சந்திரசேகரன் என்னும் புதுமுகம் போட்டியிட்டார். தேர்தலில் துரை சந்திரசேகர் பெற்ற வாக்குகள் 36981. சிவாஜி வாங்கியது 26338. 10643 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் சிவாஜிகணேசன்..! இத்தோடு நடிகர் திலகத்தின் தனிக்கட்சி ஆசையும் முடிவுக்கு வந்தது..!

சிவாஜியின் வலது, இடமாக சினிமாவுலகில் திகழ்ந்து வந்த நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜனும், வி.கே.ராமசாமியும்.. இவர்கள் இருவருமே சிவாஜியின் கட்சியில் இணைந்தார்கள். மேஜர்தான் கட்சியின் பொருளாளர் என்று நினைக்கிறேன்..! தேர்தலில் இருவரும் பிரச்சாரமும் செய்தார்கள்.

கட்சி தேர்தலில் படு தோல்வியடைந்தவுடன் மேஜர் சுந்தர்ராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக பத்திரிகைகளுக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு அக்கடிதத்தை சிவாஜிக்கு அனுப்பி வைத்தார். இதனை மிகப் பெரிய அவமானமாகக் கருதிய சிவாஜி, அன்றோடு மேஜருடனான தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டார். மேஜர் விரும்பியும், அவருடன் பேச மறுத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த மேஜர் சுந்தர்ராஜனை சந்திக்க விரும்பாமல் மாடியிலேயே உட்கார்ந்து கொண்ட சிவாஜியை யாரும் சமாதானப்படுத்த முடியவில்லை. அன்றைக்கு சிவாஜியின் வீட்டில் இருந்து வெளியேறிய மேஜர் சுந்தர்ராஜன், திரும்பவும் சிவாஜி இறந்த தினத்தன்று அவருக்கு மாலை போடத்தான் அந்த வீட்டிற்கு வந்தார்.

வி.கே.ராமசாமியும் அந்தத் தேர்தல் தோல்வியோடு தனது அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு சினிமாவுக்கே போய்விட்டார்..! சிவாஜி இறந்த பின்பு அடுத்தடுத்து முதலில் வி.கே.ராமசாமியும், பின்பு மேஜர் சுந்தர்ராஜனும் இறந்தது சோகம்தான்..!

"சிவாஜி தேர்தலில் பிரகாசிக்காததற்குக் காரணம் அவருக்குப் பொய் சொல்லத் தெரியாது.." என்றார் சோ. சிவாஜி இறந்த தினத்தன்று அவருக்கான இரங்கல் அஞ்சலியிலும், சோ இதைத்தான் குறிப்பிட்டார். "சிவாஜி ஒரு பச்சைக் குழந்தை.. ஒரு குழந்தை எப்படி பேசுமோ. என்ன செய்யுமோ அதைத்தான் தன் வாழ்க்கை முழுவதும் செய்தார். பேசினார்.. இதனால்தான் அவரால் அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை.." என்றார் சோ..!

இதையேதான் இன்றுவரையிலும் அரசியல் கட்டுரைகள் எழுதி வரும் மூத்தப் பத்திரிகையாளர்கள் பலரும் சொல்லி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது திண்டுக்கல் வந்த சிவாஜியை நாகல்நகர் பொதுக்கூட்டத்தின்போது மிக அருகில் பார்த்து பரவசமடைந்தது எனக்கு இப்போதும் நியாபகத்துக்கு வருகிறது.

அன்றைக்கு திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கி வித்தியாசமான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் சிவாஜி. “இத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்...” என்றெல்லாம் பேசியவர், ஜெயலலிதாவை பற்றி எதையும் சொல்லவில்லை. இது பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அம்மு பாவம்.. நல்ல பொண்ணு. ஏதோ சேர்வார் சேர்க்கை சரியில்லை. அதான் இப்படி செய்யுது..” என்று மனதில் இருந்ததை பளிச்சென்று சொன்னார் சிவாஜி..!

ஏற்கெனவே சிவாஜி, ஜெயலலிதாவை விமர்சிக்காமல் தவிர்ப்பது பற்றி கோபத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன், இதைக் கேள்விப்பட்டு இன்னமும் கடுப்பாகி, சிவாஜி தேர்தல் செலவுகளுக்காகக் கேட்டிருந்த பணத்தினை கொடுக்க வேண்டாம் என ராமசாமி உடையாரிடமும், சைதை துரைசாமியிடமும் சொல்லிவிட்டாராம்.. தொலைந்தது கதை..!

கடைசி நேரத்தில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு எதிரேயிருந்த சிவாஜி கார்டனில் ஒரு பகுதியை விற்று 5 கோடி ரூபாய் அளவுக்கு செலவுகளைச் செய்தார் சிவாஜி. அத்தனையும் காலி..!

பிறிதொரு முறை ஒரு திருமணத்தன்று மூப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தபோது “போச்சு போச்சு.. 5 கோடி போச்சு..” என்று உச்சுக் கொட்ட மூப்பனார் சிவாஜியின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுப் போனது வரலாற்றுச் சம்பவம்..!

நடிக்கத் தெரிந்தவர்கள் நடிக்கலாம். அரசியல் செய்யத் தெரிந்தவர்கள் அரசியல் செய்யலாம். இரண்டும் தெரிந்தவர்கள் இரண்டையும் செய்யலாம் எம்.ஜி.ஆரை போல். தெரியாதவர்கள் தெரிந்ததை மட்டும் செய்யலாம். இதற்கு முழு முதற் உதாரணம் நடிகர் திலகம் சிவாஜிதான்..!

http://truetamilans.blogspot.com/2011/05/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.