Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் மீதான நம்பிக்கை அல்ல, தமிழக பொதுமக்களின் மீதான நம்பிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 ஜூன் 2011

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்:-

நாங்கள் இந்தியாவுக்காகப் பேசினோம். அவர்கள் இலங்கைக்காகப் பேசினார்கள். எல்லாப் பிரச்சினைகளைப் பற்றியும் நாங்கள் பேசினோம். ஓரு மாநிலம் எழுப்பிய அல்லது சில தனிநபர்கள் எழுப்பியப் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் பேசவில்லை.

சிவ்சங்கர் மேனன்

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்

11 ஜூன் 2011

1

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் போன்றவர்களின் இலங்கை விஜயம் முடிவுக்கு வந்திருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உள்பட இலங்கைப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை சார்ந்தவர்களையும், தமிழ்தேசியக் கூட்டமைப்பு, அதனோடு பிற மூன்று கட்சிக் கூட்டணிப் பிரமுகர்களையும் அவர்கள் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசின் மீதான போர்க்குற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழ அறிக்கை வெளியாகியிருக்கிற பின்னணியில், போர்க்குற்றங்களுக்காக ராஜபக்ஸ தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் எனவும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக சட்டசபை ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிற சூழலிலும் இந்த விஜயம் நடந்து முடிந்திருக்கிறது.

விஜயத்தின் முன்பாக இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்திருந்தார்.

ஐநா நிபுணர் குழவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாக, ஈழத்தமிழ் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக, தமிழகச் சட்டமன்றத் தீர்வு தொடர்பாக, இந்திய மத்திய அரசு என்ன நிலைபாடுகளை வெளிப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், அவற்றுக்கு இலங்கை அரசு என்ன எதிர்வினைகளைத் தெரிவிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பாரப்பும் தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் எழுவது இயல்பானது. எதிர்பார்ப்பின்படி இந்த விடயங்கள் அனைத்தும் குறித்து இரு தரப்பும் பேசியிருக்கிறது என்பதும், அது தொடர்பாக இரு தரப்புக்கும் சில பொதுவான புரிதல்கள் இருக்கிறது என்பதற்கும் சான்றாக இந்தியக் குழுவின் பத்திரிக்கை அறிக்கைகள் இருக்கின்றன.

11

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட அறிக்கையையோ அல்லது குறிப்பானதொரு நிலைபாட்டையோ இதுவரை வெளியிடவில்லை.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஐக்கிய நாடுகள் சபை குறித்தும், பொத்தாம் பொதுவாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் பிரீஸின் பயணத்தையடுத்து வெளியிடப்பட்ட இந்திய இலங்கைக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டேயிருந்தது. இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்தியாவின் ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நியமன விருப்பத்தை இலங்கை ஆதரிப்பதாகவும் அந்தக் கூட்டறிக்கை தெரிவித்திருந்தது.

இந்தியா சொல்கிற மனித உரிமை விசாரணையை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான குழு ஏற்கனவே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என இலங்கை சாதாரணமாகப் பதில் சொல்லிவிட முடியும். ஐநா நிபுணர் குழு அறிக்கையை இந்தியா - இலங்கைக்கு ஆதரவாக - சாதுரியமாக் கடந்து சென்ற முறைதான் இந்திய-இலங்கைக் கூட்டறிக்கையின் வாசகங்கள்.

இலங்கை விஜயத்தின் பின்னான இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் சொற்கள், இவ்விடயத்தில் - மேற்கத்திய நாடுகளினதும் அமெரிக்காவினதும் ரஸ்யா சீனா போன்ற நாடுகளதும் துல்லியமான நிலைபாடுகளைப் பார்க்க - இந்திய அரசினது தமிழர் சார்பற்ற போக்கைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது. இலங்கைப் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீது இந்தியாவின் நிலைப்பாடு என்று கேட்டதற்கு, ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனத்திற்கு உட்படுத்த இந்தியா விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளார் மேனன். இலங்கைப் போரின் இறுதிகட்டத்தில் 40,000 பேர் வரை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.அமைப்புகளும், மனித உரிமைக் குழுக்களும் குற்றஞ்சாற்றுகின்றன என்ற வினாவிற்கு, அப்படிப்பட்ட தகவல்களில் உண்மை உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தலாம் என்று சிவசங்கர் மேனன் கூறியுள்ளார்.

ஐ.நா.மனித உரிமைச் சபையில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனத்திற்கு உட்படுத்த இந்தியா விரும்பவில்லை என்றால், அப்படிப்பட்ட மனித உரிமை மீறல் தகவல்களில் உண்மை உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்துவது என்பது எவ்வாறு சாத்தியம்? என்ன பொறிமுறையில் சாத்தியம்? இங்கு கண்டனத்திற்கு உட்படுத்துவது என்பதல்ல முக்கியமானது. சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மை உள்ளதா என்பதைக் குறித்துக் கண்டறிவதற்கான பொறிமுறை என்ன? அந்தக் கேள்விகளுக்கான விடை தேடிய சர்வதேச நிறுவனச் செயல்பாட்டில் இந்தியாவினது நிலை என்னவாக இருக்கப் போகிறது என்பதுதான் கேள்வி. ஐநா மனித உரிமைக் கவுன்சிலிலும், பாதுகாப்புச் சபையிலும் என்ன நிலைபாட்டை இந்தியா எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.

சிவ்சங்கர்மேனனின் 'பூசிமெழுகிய' பதில் நிச்சயமாக ஈழத்தமிழர் சார்பான பரிமாணம் கொண்டது இல்லை.

111

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான தந்திரோபாயத் தோல்விக்குப் பின்னர், இன்று ஈழத் தமிழர் அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினையில் இரண்டு ஆவணங்களின் அடிப்படையில்தான் தீர்வுத் திட்டம் என்பது திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் எனும் ஆவணத்தின் அடிப்படையிலும், அதனையொட்டி இலங்கைப் பாராளுமன்றத்தின் அதே 1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட, இந்தியாவினால் வலியுறுத்தப்பட்டதென சிங்கள அறிவுஜீகளால் பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம் எனும் ஆவணத்தின் அடிப்படையிலும் தீர்வுத் திட்டங்கள் பேசப்படுகிறது. 13 ஆவது சட்டத்திருத்தத்திற்கும் அப்பால் போய் பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தீர்வு அவரது மனதுக்குள் இருப்பதாகவும் தமிழ் மக்கள் அவரை நம்பவேண்டும் எனவும் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மகிந்த ராஜபக்சேவின் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் எந்தவிதமான ஆவண மதிப்போ அல்லது சட்டமதிப்போ இல்லை என்பதனைத் தெரிந்துதான் அதனை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதே வார்த்தைகளைத் தான் கிளிப்பிள்ளை போலச் சொல்லி மகிந்தாவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், இலங்கை அமைச்சர் கருணாவும் தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சரத்துக்களை ஆழ்ந்து வாசிப்போர் அவற்றில் மூன்று முக்கியமான விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருப்பதை எவரும் காணமுடியும். ஓன்று இந்தியத் தரப்பிலிருந்து இந்தியப் பாதுகாப்பு மற்றும் பொருளியல் நலன்கள் எனும் அடிப்படையில் அந்த ஒப்பந்தம் இருக்கிறது. இலங்கை மண்ணில் அந்நியநாட்டு ராணுவப் பிரசன்னம், அந்நியநாட்டின் தொலைத் தொடர்பு நிறுவனப் பிரசன்னம் ஆகியவற்றை நிராகரிக்கும் அந்த ஒப்பந்தம் திரிகோணமலை எண்ணெய்வளத்தைத் தனக்கென உத்திரவாதப்படுத்திக் கொள்கிறது.

இலங்கைத் தரப்பில் இலங்கைக்கு எதிரான போராளிகளுக்குப் பயிற்சி கொடு;த்தல், அவர்களது அரசியலுக்கு ஆதரவாக இந்திய நிலம் இருத்தல் போன்றவற்றினை தடை செய்வதை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது. போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதையும் இலங்கைப் பாதுகாப்பையும் மையப்படுத்தி, இலங்கை அரசு அழைக்கும்போது இந்தியப் படைகள் வரவேண்டும் என்பதனையும் அது உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது. இலங்கையின் ஒற்றையாட்சி இறையாண்மைக்கு ஆதரவாகவும், போராளிகளுக்கு எதிர்நிலையிலும் இந்திய ராணுவத்தை அது உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்து ஒப்பீட்டளவில் ஒரே ஒரு சாதகமான நிலைபாடு அந்த ஒப்பந்தத்தில் உண்டு. ஒப்பந்தப்படி தற்காலிகமாக வடக்கு-கிழக்கு ஒன்றிணைவு என்பது நடைமுறைக்கு வருகிறது. அதன் பின்பு வடக்கு கிழக்கிலான வெகுஜன வாக்கெடுப்பின் அடிப்படையில் நிரந்தரமாக இணைதல் அல்லது பிரிதல் என்பது தீர்மானிக்கப்படுவதை அந்த ஒப்பந்தம் ஒப்புகிறது.

தமிழினம் எனும் அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைப்பை மேற்கொள்வது என்பது தர்க்கபூர்வமாக, இனத்தின் அடிப்படையிலான தனித்த ஒரு நாட்டுக்கு வழிவகுத்தே தீரும் என்பதால் இலங்கையின் அன்றைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி - ஜனதா விமுக்தி பெரமுனா - வலதுசாரிகள், சுதந்திரக் கட்சியின் முக்கியமான அரசியல்வாதிகள், பெரும்பாலுமான சிங்கள அறிவுஜீவிகள் இந்த ஒப்பந்தத்தினை எதிர்த்தனர். மட்டுமன்று, இந்த ஒப்பந்தம் இலங்கையின் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம் எனவும், இலங்கை இந்தியாவுக்குப் பணிந்துபோய் உருவாகிய ஒப்பந்தம் இது என்பதும்தான் பெரும்பாலுமான சிங்களவர்களதும் நிலைபாடாக இருந்தது.

இதனது விளைவாக இலங்கை நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில், வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது யாப்புக்கு விரோதமானது (ரn உழளெவவைரவழைடெ) என இலங்கை நீதிமன்றம் தீரப்பளித்தது. பிற்பாடாக வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது சட்டபூர்வமாக முறிக்கப்பட்டது என்பது திரும்ப நிகழ்வது சாத்தியமில்லை என்பதனை மகிந்த தெளிவாகச் சொல்லிவிட்டார். இவ்வகையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஒரேயொரு ஆக்கபூர்வமான கூறு என்பது நிரந்தரமாக கல்லறைக்கு அனுப்பப்பட்டது. இலங்கைத் தமிழரைப் பொறுத்து இன்று இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்று பேசிக் கொண்டிருப்பது எந்தவகையிலும் அர்த்தமற்றது. ஏனெனில் அதில் இன்று மிஞ்சியிருப்பது இலங்கை-இந்தியப் பாதுகாப்பு மற்றும் பொருளியல் நலன்களைப் பறிறியது மட்டும்தான்.

அடுத்ததாக 13 ஆவது சட்டத்திருத்தம். இந்தத் திருத்தத்தில் இலங்கை மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள், மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள், இரண்டுக்கும் பொதுவான அதிகாரங்கள் போன்றன குறித்த பட்டியல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. சுயாட்சி அல்லது தமிழர் தாயக பூமி, தமிழர் அடையாளம் எனும் பிரச்சினையில் மையமாகத் தீர்க்கப்பட வேண்டும் திரும்பத் திரும்பத் பேசப்படும் விடயங்கள் காணி, போலீஸ், நீதித்துறை போன்றவற்றில் உள்ள அதிகாரங்கள் குறித்ததாகும். 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு இல்லை.

அரசு சார்பாக இன்று இயங்கிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, கருணா, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் போன்றவர்கள் தவிர்ந்த தமிழத் தரப்பினர் இதனை முன்வைத்தே அரசுடன் பேசிவருகின்றனர். காணி மற்றும் போலீஸ் அதிகாரங்கள் அற்ற எந்த ஒரு அரசியல் தீர்வையும் ஒப்பப்போவது இல்லை என தமிழ்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

காணி மற்றும் போலீஸ் அதிகாரம் என்பதனை விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கை என்பதாகவே சித்தரித்து வரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, திட்டவட்டமாகக் காணி மற்றும் போலீஸ் அதிகாரம் என்பது தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்தில் இல்லை என்பதைத் துல்லியமாகவும், திரும்பத் திரும்பவும் சொல்லி வருகிறார்.

இந்த இரு வேறுபட்ட முறுகலான பார்வைகளுக்கு இடையில் இந்தியா என்ன நிலைபாட்டில் இருக்கிறது?

தமிழர் பிரச்சனைக்கு தங்களுக்கு உகந்த ஒரு அரசியல் தீர்வை காண வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு, அந்த விவகாரத்தில் இந்தியா எந்த விதத்திலும் தலையிடாது என்று சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். தமிழர்கள் பிரச்சினைக்கு வேகமான தீர்வு வேண்டும் என்று நாங்கள் விரும்பினாலும், தங்களுக்கு உகந்த ஒரு தீர்வை இலங்கை அரசுதான் உருவாக்க வேண்டும் என்றும் சிவசங்கர் மேனன் விளக்கியுள்ளார். 13வது அரசமைப்புத் திருத்ததின் அடிப்படையில் தீர்வை உருவாக்குவதாக இலங்கை அரசே கூறியுள்ளது எனவும் சிவ்சங்கர்மேனன் கூறுகிறார்.

இன்றைய நிலையில் அது தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் ஆனந்தசங்கரி முன்வைக்கும் இந்திய மாநில மாதிரி தீர்வுத் திட்டமாயினும் சரி, அல்லது காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களைக் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டமாயினும் சரி, மகிந்தாவினால் அவரது தீர்வுக் கோட்பாட்டின் நோக்கில் அதன் அடிப்படைகளிலேயே நிராகரிக்கப்படுகிறது என்பது தெளிவாக இருக்கிறது.

இன்னும் சிவ்சங்கர் மேனன் குறிப்பிடுகிறபோது 13 ஆவது சட்டத்திருத்தம் எம்முடையது அல்ல, அது இலங்கையருடையது, அவர்கள்தான் அதன் அடிப்படையில் தீர்வு காணவேண்டும். இலங்கை அரசு அதனைச் செய்து கொண்டிருக்கிறது, நாம் இதில் அழுத்தம் கொடுப்பது எனும் பிரச்சினையே இல்லை என்பதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். யுத்தத்தின் போதும் சரி, அதன் பின்னும் சரி இந்தியா எந்த விதத்திலும் அழுத்தம் தரவில்லை என கோத்தபாயாவும் சொல்வது மெத்தச் சரி என்பதனைத்தான் சிவ்சங்கர் மேனனது இலங்கை விஜயத்தின் பின்னான சொற்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

IV

தமிழக சட்டசபைத் தீர்மானப் பிரச்சினைக்கு வருவோம். தி ஹிந்து பத்திரிக்கையாளருடனான சந்திப்பில் தமிழகச் சட்டமன்றத் தீர்மானம் பற்றி எதுவும் பேசப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் மேனன். தமிழக சட்டசபைத் தீர்மானம் பற்றி 'குறிப்பாக' எதனையும் பேசவில்லை என்பதனையும் அவர் தெரிவித்திருக்கிறார். அதே வேளை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது, அதன் சட்ட ரீதியான அடிப்படை குறித்து இலங்கை அரசு கேள்வி எழுப்பியது என்றும், ஆனால் அதற்கு இந்தியக் குழு என்ன பதில் தந்தது என்பதை சிவசங்கர் மேனன் வெளியிடவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதிலிருந்து நாம் தொகுத்துக் கொள்ள முடிவதெல்லாம் இதுதான் : தமிழக அரசின் பிரதிநிதியாக, தமிழக மக்களின் உணர்வுகளை இலங்கைக்குத் தெரிவிப்பராக சிவ்சங்கர் மேனன் இல்லை. அவர் இந்தியப் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டவர் மட்டும்தான். இந்தியப் பொருளியல் நலன்களைக் காப்பாற்றும் அக்கறை கொண்டவர் மட்டும்தான். இந்தியப் பாதுகாப்பு மற்றம் பொருளியல் நலன்களுக்குச் சவாலாக இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் உருவாகும் பிரச்சினைகளை எவ்வாறு சமரசப்படுத்துவது அல்லது சமாளிப்பது என்பதாகவே அவரது அக்கறைகள் இருக்கும்.

தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் சட்டபூர்வத்தன்மை (legality) என்பது இலங்கைக்கும் பெரும் சவாலாகவே இருந்திருக்கும். இது இந்திய அரசியலின் அதிகார நிறுவனங்களில் என்ன விளைவுகளை உருவாக்கும் என்பதனை அவர்கள் அறிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள். அதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என விளக்கி, அவர்களுக்குச் சமாதானம் சொல்வதையே சிவசங்கர் மேனன் செய்திருப்பார்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளியல் நலன்களோடு பிணந்தவைதான் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கையும், ஈழத் தமிழருக்கான தீர்வுத் திட்டமும், தமிழக சட்டசபைத் தீர்மானமும், இவைகளுக்கிடையான உறவும், இதனையொட்டி ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் நிலைபாடுகளும் அவரவரது இலக்குகளை ஒட்டிய தர்க்கத்தின்படிதான் செயல்படும்.

அரசியல் தீர்வில் அழுத்தம்தர விருப்பமற்றவர்கள், போர்க்குற்ற அறிக்கையை முன்வைத்தோ அல்லது தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை முன்வைத்தோ நிச்சயமாக அழுத்தம்தரப் போவதில்லை. இன்றைய நிலையில் மனித உரிமைச் சபையிலோ அல்லது பாதுகாப்புச் சபையிலோ இந்தியா இலங்கை தொடர்பான தனது முன்னைய நிலைபாட்டுக்கு மாறான நிலைபாடு எடுக்கும் எனச் சொல்லவே முடியாது.

V

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது எவ்வாறு ஒரு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையம் கொண்டிருக்கிறதோ அது போன்றே இலங்கை-இந்தியப் பிரச்சினை என்பதும் ஒரு கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கொண்டிருக்கிறது.

இந்தியா என்பது தவிர்க்கவியலாது ஈழத்தமிழர் பிரச்சினையின் அரசியல் தீர்வோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்த முன்வரைவு என்பது இந்திய அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது. அதனது பாதுகாப்பும் அதனது பொருளியல் நலன்களும் அதில் முதன்மைப்படுத்தப்பட்டது. இலங்கையைத் தனது வியூகத்திற்குள் கொண்டுவரவும் அது முனைந்தது. அதுவே இந்திய அரசினது இயல்பு. அதுவே அனைத்து உலக அரசுகளதும் இயல்பாக இருக்கிறது. இலங்கை அரசினதும் இயல்பு இதுவே. தமிழ்ப் போராளிகளை முன்வைத்து இந்தியா அதற்கான வியூகத்தை வகுத்தது. அதே தமிழ்ப் போராளிகளை முன்வைத்து, ராணுவரீதியில் இந்தியாவையே அவர்களுக்கு எதிராக நிறுத்தி இலங்கை ஒரு வியூகம் வகுத்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தமும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்தவைகள் குறித்தும் பார்ப்போம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை நிறைவேற்றும் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவின் அழுத்தமே அதனைச் செய்தல் சாத்தியம். வடக்கு-கிழக்கு இணைப்பு என்பதும், பிற்பாடான வெகுமக்கள் வாக்கெடுப்பு என்பதும் நிகழ்வது சாத்தியப்பட்டிருக்குமானால், ஈழத்தமிழர்களின் அரசியல் செயல்பாட்டிற்கு சர்வதேசிய அளவில் ஒரு சட்டபூர்வமான அங்கீகாரம் (legality) அமைந்திருக்கும். இலங்கை ஏமாற்றுமானால், இலங்கை அரசிற்கு எதிராக மீளவும் தமிழர்கள் போராடுவார்களானால், அதற்கு எதிரான ஈழத்தமிழர்களின் எத்தகைய போராட்டமும் சட்டபூர்வமாகவே பார்க்கப்பட்டிருக்கும். இலங்கை அரசுடன் அதற்கு எதிரான முரணைக் கொண்டிருந்த இந்திய அரசு தனது நலன்களின் பொருட்டேனும், தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் பாதுகாக்கவேனும், இலங்கைக்கு எதிரான நிலைபாட்டையே எடுத்திருக்கும்.

இலங்கையில் வாழும் தமிழரைப் பொறுத்து, உலக முழுமையிலும் அவர்களுக்கு ஆதரவாக நிலைபாடு எடுக்கக் கூடிய ஒரே நாடாக, அரத்தமுள்ளதாக இந்தியாவின் ஆதரவே இருக்க முடியும்.

பிராந்திய அளவிலும் உலக அளவிலும் ஈழத்தமிழர் பிரச்சினையில் இன்றும் என்றும் இந்தியாவே பின்னணியில் இருந்து வருகிறது என்பதனை எவரும் மறுக்க முடியாது. எதிர்மறையிலும் நேர்மறையிலும் இதுவே நிஜம். மாறாக, விடுதலைப் புலிகள் இந்தியாவின் எதிரிகளாக ஆனார்கள். இந்தியாவுக்கு எதிராக பிரேமதாசா அரசும் விடுதலைப் புலிகளும் ஒரே குரலில் பேசினார்கள். இந்தியாவை விரட்டுவதில் பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் சகோதரர்களாக நின்றார்கள். விடுதலைப் புலிகள் எடுத்து வந்திருக்கும் இலங்கை அரசு மற்றும் நிறுவனங்களின் மாற்றப்படவே முடியாத இனவாதத்தன்மை குறித்த கடுமையான நிலைபாடு உண்மையானால், இது அவர்களது அரசியல் தவறாகவே இருக்க முடியும்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்குமான இந்த முரண்பாடு மிகக் கசப்பான விளைவுகளையே உண்டு பண்ணின. இந்திய ராணுவத்தின் பாலியல் வல்லுறவுகள், விடுதலைப் புலிகளின் மீதான வேட்டை, ராஜீவ் காந்தி படுகொலை, இந்தியாவில் செயல்பட்ட புலிகளின் ஆதரவாளர்கள் கூட புலிகளுக்கு ஆதரவான அரசியலை முன்னெடுக்க முடியாமை, தமிழக வெகுமக்களின் ஆதரவுத்தளத்தினை இழந்தமை, உலக அளவில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டமை என மீளவே முடியாத பின்னடைவில் விடுதலைப் புலிகளின் அரசியல் தந்திரோபாயம் பின்தள்ளப்பட்டது. இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பரிமாணம்.

பிறிதொரு பரிமாணம் : பிரேமதாசாவுக்கும் 13 ஆவது சட்டத்திருத்ததின் பிரகாரம் அமைந்த வடக்கு-கிழக்கு மாகாணசபை முதல்வரான வரதராஜப் பெருமாளுக்கும் ஆன முரண். 13 ஆவது சட்டத்திருத்தம் என்பது போதுமான அதிகாரங்கள் கொண்டிராத, அதிமத்தியத்துவப்படுத்தும் பண்பு கொண்டதாக வரதராஜபெருமாள் அறிவித்தார். பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் இந்திய அரசுக்கு எதிரான நிலைபாடு எடுத்தமையும், பிரேமதாசா வரதராஜபெருமாளுக்கு எதிரான நிலைபாடு எடுத்தமையும் நிகழ்ந்தன. போலீஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் போன்றவற்றினைப் பேசிய வரதராஜபெருமாள், தமிழ்தேசியப் படை எனும் கட்டாய ஆள்சேர்ப்பிலான படையையும் உருவாக்கியதோடு ஈழத்தையும் பிரகடனப்படுத்தினார். 2010 ஆம் ஆண்டின் இறுதியிலும் வரதராஜபெருமாள் 13 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பாக அது அதிமத்தியத்துவப்படத்தப்பட்டது, மாகாண சபைகளுக்கு அதிகாரம் தராதது எனும் இதே நிலைபாட்டைத்தான் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவும்-இலங்கையும் தொடர்பான விடுதலைப் புலிகள் மற்றும் வரதராஜப் பெருமாளின் அரசியல் முடிவுகளின் சரிபிழைகளுக்கு அப்பால் இந்த நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் இரண்டு அரசியல் பண்புகளைக் குறிப்பாக எடுத்துக் கொள்ள விழைகிறேன்.

இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் அல்லது ஈழத்தில் இந்தியாவின் ஆதிக்கம் என்பதுதான் விடுதலைப் புலிகளின் இந்திய எதிர்ப்புக்கு ஆதரமாக இருந்திருக்க முடியும். கடந்த ஐம்பது ஆண்டுகளிலான காலனியாதிக்க அனுபவங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, ஏகாதிபத்தியம், தேசிய விடுதலை போன்ற விவாதங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, விடுதலைபெற்ற நாடுகளின் சார்பு நிலைகளை எடுத்துக் கொண்டாலும் சரி, எந்த நாட்டினதும் சார்பு நிலை கொண்டிராமல், எந்த நாட்டினதும் ஆயுத மற்றும் பொருளாதார ஆதரவு இல்லாமல், உலக அரசியலில் அவர்களது பாதிப்புகள் இல்லாமல், விடுதலை பெற்ற அல்லது தமது விடுதலையை வென்ற நாடுகள் என ஏதேனும் உண்டா? வியட்நாம் முதல் கியூபா வரையிலும் இலங்கை ஈராக இன்று வெளிநாடுகளின் மூலதனங்களைக் கொண்டிராத நாடு என ஏதேனும் உண்டா? எதுவும் இல்லை.

வியட்நாமும் சீனாவும் இன்று அமெரிக்க மூலதனங்களைக் கொண்டிருக்கின்றன. கியூபா இன்று அமெரிக்காவுக்குப் பதிலாக பிரித்தானிய பிரெஞ்சு மூலதனங்களைக் கொண்டிருக்கின்றன. சீன மூலதனத்தைக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா கியூபாவை அங்கீகரித்து அது தனது மூலதனத்தை கியூபாவில் முதலிட வருமானால் கியூபா அதனை நிராகரிக்கும் எனத் தோன்றவில்லை. இலங்கையோ ஈழமோ இன்றைய உலக நிலைமையில் இந்தியாவினதோ, சீனாவினதோ, அமெரிக்காவினதோ சார்பு நிலை இல்லாமல் இருக்க முடியுமா? எதனுடைய சார்பும் இல்லாமல் இருப்பதும், எதனுடைய பொருளியல் அல்லது ராணுவச் சார்பு நிலை இல்லாமல் இருப்பது என்பதும் கனவாகவே இருக்க முடியும்.

சில அதிதீவிரவாதிகள் இதனைப் பற்றி சொற்சாலம் செய்து கொண்டிருக்க மட்டுமே முடியும்.

இந்நிலைமையில் ஈழத் தமிழர்களுக்கு என அவர்கள் தேர்ந்து கொள்ள எவரது பொருளியல் மற்றும் ராணுவ சார்பு நிலைகள் உண்டு? இந்தத் தேர்வு ஒரு நாட்டை நம்புவது அல்லது நம்பாமல் இருப்பது என்பது தொடர்பான தேர்வு இல்லை. எமது நலனுக்கு உகந்ததாக எந்த நாட்டை நாம் கையாளமுடியும் என்பது தொடர்பானது. எனில் அந்த நாடு தொடர்பாக நாம் அதனது எதிரிப் பட்டியலில் விழுந்துவிட முடியாது. ஆசியப் பிராந்தியத்தில் தமிழர்கள் தமக்கு ஆதரவாகக் கையாளக் கூடிய ஒரே சக்தி இந்தியாதான். இந்தியாவோடு ஒப்பிட அமெரிக்காவோ ரஸ்யாவோ சீனாவோ பாகிஸ்தானோ ஒரு போதும் தமிழர்களுக்கு ஆதரவாகக் கையாள முடியாத சக்திகள்.

இந்தியாவை ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் திருப்பக் கூடிய வல்லமையாக இருப்பது தமிழகத் தமிழர்களின் சக்தி. இவ்வகையில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்பது உலக அரசியல் பரிமாணத்தில் அல்லது புறநிலையில் தமிழகத் தமிழர்களின் அரசியல் சக்தியோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தீர்மானம் உறுதியாக முன்னெடுக்கப்படுமானால், தமிழகத் தமிழர்களின் ஒன்றுபட்ட அரசியல் சக்தி திரளுமானால் மத்திய அரசு வெகுமக்களின் போரட்டங்களைப் புறக்கணித்துவிட முடியாது.

தெலிங்கானா மக்களின் போராட்டங்களும் அதற்கு மத்திய அரசின் சாதகமான எதிர்வினையும் ஒரு அண்மைய இந்திய அரசியல் சான்று.

இந்திய-இலங்கை ஒப்பந்த நிகழ்வின் விளவான இன்னொரு பண்பு, 13 வது சட்டத்திருத்தம் என்பது எவ்வளவு நீர்த்துப்போன தீர்வு என்பதும், அது எந்த அதிகாரங்களையும் தமிழர்க்கு வழங்காது என்பதனையும் உணர்ந்துகொள்வது. வரதராஜபெருமாள் பிரகடனப்படுத்திய ஈழத்தனிநாட்டை இன்று எவரும் எவ்வளவு இகழ்ச்சியுடன் நோக்கக் கூடும் எனினும் அதனது அரசியல் செய்தி தெளிவானது. அதனை கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும் இன்று சொல்லி வருகிறார். மாகாண சபைக்கு உருப்படியாக எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லை என்பது அவரது முறைப்பாடு. அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றவர்களது நிலைபாடு பணிதல் பண்பு கொண்ட தோற்றுப்போன மனநிலையிலுள்ள இருத்தலைப் பேணிக் கொள்ளும் அரசியல் நிலைபாடு என்பது தவிர வேறில்லை.

விடுதலைப் புலிகள் எதிர்ப்பிலிருந்து வரதராஜபெருமாள், பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்றவர்கள் இன்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் இன்று கால்பாவாத நிலையில் இவர்கள் கொண்டிருக்கும் அரசியல், அபத்தமானது மட்டுமல்ல அது மகிந்தாவுடனான நிழல்விளையாட்டு என்பதனை அவர்கள் விரைவிலேயே உணர்வார்கள்.

VI

இந்திய மத்திய அரசு முழுமையாக இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசியல் ஒரு புறம் பேசப்படுகிறது. ஓன்றிணைந்த நாட்டுக்குள் காணி-போலீஸ் அதிகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கான அரசியல் அலகு ஒரு புறம் முன்னெடுக்கப்படுகிறது. மதவாதிகள் போல மகிந்த மீதான நம்பிக்கை அரசியல் பிறிதொரு புறம் நடக்கிறது. முழு இலங்கையின் ஒன்றுபட்ட பாட்டாளிவர்க்க ஒற்றுமையை முன்னிறுத்திய சமதர்மபூமி நோக்கிய அரசியல் பிறிதொரு புறம் நடக்கிறது. போர்க்குற்ற விசாரணையை நோக்கி முன்னுந்தும் அரசியல் ஒரு புறம் நடக்கிறது.

இந்த பல்வேறு போக்குகளையும் முன்னுறுத்துகிற, நடைமுறை அரசியலில் ஈடுபட்டிருக்கிற அனைவருமே இந்தியாவின் பாத்திரத்தைப் புறக்கணித்திருக்க முடியவில்லை. இந்தியாவின் பாத்திரத்தை தீவிரமாக நிராகரிக்கிறவர்களுக்கு தமிழ் அரசியலில் ஒருவிதமான பாத்திரமும் இல்லை. இது நடைமுறையில் சரியான அரசியல் (politically correct) என்பது அல்ல, மாறாக இதுதான் நிஜஅரசியல் (real politics). மற்றவை அனைத்தும் வெறும் கற்பனாவாதம்.

முள்ளிவாய்க்காலின் பின்னானவெளி தமிழர்களுக்குள் ஒரு ஜனநாயக அரசியல் வெளியைத் திறந்துவிட்டிருக்கிறது. இது எதிர்மறையின் இயங்கியல். போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கை தொடர்பான போராட்டம், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றும் போராட்டம், அரசியல் தீர்வுக்கான போராட்டம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டது. இந்தியாவும் தமிழகத் தமிழர்களும் இவற்றுடன் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத் தமிழர்களுடன் புகலிடத் தமிழர்களும் தாயக ஈழத் தமிழர்களும் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் தமது பகுப்பாய்வுகளுடன் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அடுத்து யார் முதல்வராக வருவது எனும் ஆதாய அரசியல் செய்யாமல் மேற்கொள்ளப்படும் தமிழகத் தமிழர்களின் ஒன்றுபட்ட அரசியல் என்பதோடு, அதனை அவர்கள் வெகுமக்கள் திரள் அரசியலாகக் கொண்டு சொல்லப் போகிறார்களா என்பதைப் பொறுத்தே இந்தியாவின் திசைவழி என்பது தீர்மானிக்கப்பட முடியும்.. இது இந்தியாவின் மிதான வெற்று நம்பிக்கை அல்ல. மாறாக இந்திய அரசின் மீதான தமிழக வெகுமக்களின் நெருக்குதலின் அரசியல் விளைவுகள் குறித்த நம்பிக்கை.

இதுவன்றி இந்தியாவை எதிர்ப்பது ஒன்றே தமது திசைவழி எனப் பிரகடனப்படுத்தும் தீரக்கதரிசிகள், தமது திசைவழியையும் திட்டங்களையும் வெறும் சொற்ஜாலங்கள் அல்லாத சொற்களில் வைக்கவேண்டும் என நாம் கோருகிறோம்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62605/language/ta-IN/article.aspx

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.