Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆக்கிரமிப்பால் அழிந்த நகரம் - மல்லாவியின் கதை

Featured Replies

ஆக்கிரமிப்பால் அழிந்த நகரம் - மல்லாவியின் கதை

ஆக்கம்: தமிழ்மாறன் (குளோபல் தமிழ் செய்தி)

ஆக்கிரமாளர்கள் ஒரு நிலப்பகுதியை கைப்பற்றியவுடன் அவற்றை திட்டமிட்டு அழிக்கிறார்கள். நிலம் அழிக்கப்படும் பொழுது அதன் வாசனையுடன் அடையாளத்துடன் அதன் வளமும் அழிந்து போகிறது. வரலாறும் இனமும் ஆபத்துக் கொள்கிறது. அங்குதான் மக்கள் வளர்த்த கனவும் காயங்களுக்குள்ளாகின்றன. மல்லாவி என்கிற பிரதேசத்திற்கும் இந்தக் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. அதிகமதிகம் மல்லாவிப் பிரதேசம் இழந்திருக்கிறது. சனங்கள் வாழ்ந்த நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட மல்லாவிப் பிரதேசத்தின் பூர்வீகம் மிகவும் அழகானது. வளம் நிறைந்தது. பாலியாறும் வயல்களும் காடுகளும் என்று சிவப்பு நிலப் பிரதேசமாக விரிந்திருக்கிறது. இந்த நிலப் பிரதேசத்தின் உயிர்நாடியாக வரலாறும் உழைப்புமே முக்கியமாக தென்படுகின்றன.

ஒரு காலத்தில் பெரும் நகரமாக மல்லாவி உருப்பெற்றிருந்தது. இடப்பெயர்ந்து வந்த சனங்களும் நிறைந்து கலகலப்போடு நகர் வளர்ச்சி பெற்றிருந்தது ஒரு கனவைப் போலிருக்கிறது. மூன்றாம் ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் 2001 இல் சமாதான ஒப்பந்தத்திற்கு அழைக்கும் பேச்சுவார்த்தை மல்லாவியில்தான் நடந்தது. தலைவர் பிரபாகரன் மல்லாவியில் வைத்தே எரிக்சொல்ஹெய்மை சந்தித்திருந்தார். கிளிநொச்சியை இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய சந்திப்புக்கள் பலவும் மல்லாவியில் நடைபெற்றிருக்கின்றன. வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு முதலிய நகரங்களின் முக்கியத்துவங்களோடு மல்லாவியும் முக்கிய இடத்தை வகிக்கிறது. போர் முடிந்த நிலையில் ஆக்கிரமிப்பின் மாற்றங்களால் அழிந்த மல்லாவிப் பிரதேசத்திற்கு மேற்கொண்ட பயணம் பல நினைவுகளையும் கனவுகளையும் துயரக்கதிகளையும் பற்றி எழுத உந்துகிறது.

போரால், போரின் பொழுதும், போர் ஓய்ந்த தருணங்களிலும் மல்லாவிக்கு சென்றதும் அங்கு தங்கயிருந்ததுமான நினைவுகள் அதிகம் உள்ளன. ஆபத்தான பாதைகளாகவும் நெருக்கடிகளின் பொழுது மக்கள் தஞ்சமடைந்த அடைகலமாகவும் அதனால் சனங்களின் வேரோடிய வாசனையும் மல்லாவியை சற்று வித்தியசமாகக் காட்டியது. அரைக்கிலோ மீறற்றர் கூட இல்லாத நீளத் தெருவில் ஒரு நகரம், எல்லாப் பொருட்களையும் பெறக்கூடிய கடைகள் இருந்தன. நீண்ட காலமாக வாழும் மக்களிடம் உறுதியாக சீமென்ட் வீடுகள் இருந்தன. நீண்ட கால பயன்தரு மரங்கள் இருந்தன. வலிய காடுகளும் இருக்கின்றன. மேட்டுக்காணிகளில் மரங்கள் குளிர்மையை கொடுக்க சுற்றி சுற்றி விதைக்கப்பட்ட வயல்கள் இதமான தென்றலை பரப்பிக் கொண்டிருந்தன. குளங்களும், நீரோடும் வாய்க்கால்களும், இவைகளுடன் தொழிற்கு செல்லும் மனிதர்களும், பள்ளி செல்லும் சிறுவர்களும் எல்லாவற்றையும் சிவப்பாக குளிக்க வைக்கும் செம் புழுதியும் மல்லாவியையை செழித்துச் சிவந்த நிலமாக்குகிறது.

போர் முடிந்து விட்டது. பேரழிவுகளால் முடிக்கப்பட்டு விட்டது. இன்று மல்லாவியின் அன்றைய அடையாளஙகள் பல அழிந்து தரையோடு தரையாக்கப்பட்டுள்ளது. அதைக் காணவில்லை என்றும் இதைக்காணவில்லை என்றும் நாம் இப்பொழுது எங்கு நிற்கிறோம் என்ற உணர்வுமே மேலிடுகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் அவற்றை களவாடிச் சென்றுவிட்டார்கள். அவற்றை அழித்து விட்டார்கள். பல இடங்கள் மண்மேடுகளாய் ஒரு இனத்தின் போராட்ட காலமாக புதைந்த மேடுகளாய் மூடுண்டு கிடக்கின்றன. யாரும் எதையும் கிளற முடியாது. யாரும் எதையும் நெருங்க முடியாது. அழிந்தவைகளின் பட்டியல்களையும் புதிதாக உருவாக்கப்பட்டவைகளின் பட்டியல்களையும் எனது நண்பன் ஒருவன் வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டிருந்தான். அழிக்கப்பட்டவைகளை அவன் நேசிக்கிறான். புதிதாக உருவாக்கப்பட்டவைகளை அவன் வெறுக்கிறான். நமது விருப்பும் வெறுப்பும் இந்த ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படி எடுபடும்?

1998, எனது பெரியம்மா கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து அக்கராயனுக்கு வந்து பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பழைய முறிகண்டிக்கு வந்து பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து மூண்டுமுறிப்பிற்கு வந்து பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து மல்லாவிக்கு வந்திருந்தார். அவர் மூண்டு முறிப்பில் இடம்பெயர்ந்து காட்டைக் குடைந்து தஞ்சமடைந்திருந்த பொழுது நான் அவருடன் சில வாரங்கள் சென்று தங்கியிருந்திருக்கிறேன். பின்னர் மாங்குளம், மூண்டு முறிப்பு, மன்னகுளம் என்று படைகள் ஆக்கிரமிப்பை தொடங்கிய பொழுது மல்லாவிக்கு அவர்கள் இடம்பெயர்ந்தார்கள். அப்பொழுதும் மல்லாவியில் அவர்களின் கூடாரத்தில் சில நாட்கள் வந்து தங்கியிருந்திருக்கிறேன்.

பாதைகளில்லாத காலம். வழியில் ஆள ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த்தாக்குதல் பற்றிய அச்சங்கள் நெஞ்சை பிளந்து கொண்டிருந்தன. அக்கராயன், கோட்டை கட்டிய குளம் என வந்து துணுக்காயில் இடம்பெயர்ந்து வந்திருந்த அண்ணாவின் வீட்டில் நின்று விட்டு மீண்டும் மல்லாவிக்கு போனேன். அகதிகளின் குடியேற்றம் மல்லாவியையும் நிறைத்திருந்தது. பார்க்கும் இடமெல்லாம் கூடாரங்களும் மெலிந்த மனிதர்களும்தான் தெரிந்தனர். பலர் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அன்றுதான் கண்டேன். அக்காலத்தில் வன்னியை இரண்டாக பிளந்து செல்லுவதைப் போல இராணுவ நடவடிக்கை அமைந்தது. யாழ் கண்டி வீதியான ஏ-9 பாதையை கைப்பற்றும் திட்டத்துடன் நகர்ந்த இராணுவத்திடம் பனிக்கன்குளத்திற்கும் முறிகண்டிக்கும் இடையில் உள்ள வீதியை தவிர எல்லாமே வீழ்ந்து போனது.

அப்பொழுது மல்லாவியிலிருந்து புதுக்குடியிருப்புக்கு செல்லுவது ஒரு நெடும் பயணம். அத்தோடு மிகுந்த ஆபத்தானதும்கூட. தொடர்புகள் அறுபட்டு இருந்த காலம். மல்லாவிக்குள் யுத்தம் பல விதமான நெருக்கடிகளை தடைகளை ஏற்படுத்திய பொழுதும் அங்கு ஒரு வாழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தது. சிறிய கூடாரத்திற்குள் பெரியம்மா வீட்டிலுள்ள ஏழு பேரும் தங்கினார்கள். வெளியில் மரத்தின் கீழாக சமைப்பார்கள். குளத்தில் குளிப்பார்கள். பெரியம்மா குடும்பத்தைப் போல பலர் குளத்தை அண்டி தஞ்சமடைந்திருந்தார்கள். மல்லாவியில் கடும் கோடை காலத்தில் தண்ணீர் வற்றிவிடும். இதனால் குளத்தை அண்டி வாய்க்கால்களை அண்டியே அன்று அகதிகள் குடியேறியிருந்தார்கள். பெரியம்மாவின் மகளான எனது அக்காவுடன் சைக்கிளில் சென்று மல்லாவி சந்தையில் மரக்கறிகள் வாங்கினேன். மிகவும் நெருக்கடியான காலத்தில் மலிவான பொருட்களை தேடி அவள் சந்தையில் அலைவாள்.

2007இல் மீண்டும் மல்லாவிக்குச் சென்றேன், நானும் ஜெனிட்டும், வசந்தீபனும், நிரஞ்சனும் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு மல்லாவிக்குச் சென்றோம். சுமார் ஏழு ஆண்டுகளின் பின்னர் மல்லாவிக்குச் சென்றேன். அகதி மக்களை காணவில்லை. தவிர மல்லாவி அப்படியே இருந்தது. அப்பொழுது அங்கு தஞ்சமடைந்திருந்த அகதி மக்களில் பெருமாளவானோர் 2001இன் பின்னரான சூழலில் தமது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியேறி விட்டார்கள். அகதிகள் தஞ்சமடைந்திருந்த காணிகள் வெளித்திருந்தன. பெரும் காணிகளில் உள்ள பெரிய வீடுகள் அகதி அவலம் நீங்கி அழகாக இருந்தது. அதுதான் இயற்கையான மல்லாவி. அதுதான் மல்லாவியின் அழகு. நான் போயிருந்த அந்தக் காலத்தில் ஈழத்தின் நான்காம் போர் தொடங்கியிருந்து. மன்னார் பகுதிகளிலும் வவுனியா பாலமோட்டை பகுதிகளிலும் அடிக்கடி தாக்குதல் நடந்து கொண்டிருந்தன. விமானத்தாக்குதல் எல்லா இடங்களைப் போல மல்லாவியையும் அச்சுறுத்தியது.

பாலிநகர் பாடசாலை பற்றி ஒரு விவரணப் படத்தை எடுப்பதற்கு நானும் ஒளிப்பதிவாளர் சாரங்கனும் போயிருந்தோம். பாலிநகர் பாடசாலையில் அப்பொழுது பெண் ஒருவர் அதிபராக இருந்து பாடசாலையை திறம்பட நடத்திக் கொண்டிருந்தார். எபபிடி இருப்பினும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக இருந்தது விமானத்தாக்குதல்தான். பாலிநகர் பாடசாலை எங்கும் பதுங்குகுழிகள் நிரம்பியிருந்தன. வகுப்பறைகளுக்கு சமீபமாக வகுப்பறை தாழ்வாரங்களில் விளையாட்டு மைதானத்தடியில் என்று எங்கும் பதுங்குகுழிகள்தான். விமானங்கள் தின்னும் நேரத்தை தவிர படிப்பது, விளையாடுவது போன்ற செயற்பாடுகளில் மாணவர்கள் ஈடுபட்டார்கள். பாலி நகர் என்கிற சிறு நகர்தெருவில் உள்ள கடைகளில் தேனீர் அருந்தியதும் வாய்க்கால் வயற்கரை தெருக்களால் பசுமையுடன் பயணித்ததும் அந்தத் திட்டுக்களில் அமர்ந்திருந்ததும் இன்னும் செழிந்த நினைவுகளாக உள்ளன.

செம்படம்பர் 01 2008 அன்று மல்லாவியை இராணுவம் கைப்பற்றியது. விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாக மையங்கள் செயற்பட்ட இடமே மல்லாவி என்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தாம் கைப்பற்றியதாகவும் குறிப்பிட்ட இராணுவம் மல்லாவி வெற்றியை பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. வெறுமையான கட்டிடங்களிலும் அழிந்த நகரத்திலும் இராணுவம் நடமாடும் காட்சிகள் வெளியிடப்பட்டன. மல்லாவி, துணுக்காய் மக்களோ கிளிநெசாச்சித் திசையை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அக்காலத்தில் நாகலிங்கம் நந்தகுமார் துணுக்காய் பிரதேசத்தில் கிளிமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் யுத்த காலத்தில் மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதேசத்தை பெரும் அபாயப் பகுதியாக மக்களை அச்சுறுத்தியது. எனினும் இந்தப் பகுதிகளில் நடந்த மோதல்களில் இராணுவத்தினருக்கும் பலத்த இழப்புக்களும் ஏற்பட்டன.

2011இல் மீண்டும் மல்லாவி சென்றேன், வசந்தீபன் போரில் பலியாகிவிட்டான். இப்பொழுது பாலிநகர்த்தெருக்கள் அவனைப் பற்றிய ஞாபகங்களைத் தருகின்றன. நான், வசந்தீபன், ஜெனிட், நிரஞ்சன் எல்லாலோரும் மாலையிலும் இரவிலும் அந்த தெருக்களில் அலைந்து பின்னர் மல்லாவி நகரில் உள்ள தையல் கடை ஒன்றிற்குள் தங்கிவிட்டு காலையில் எழுந்து நகரில் உள்ள தேநீரகத்தில் தேநீர் குடித்ததும் நினைவுக்கு வருகின்றன. இம்முறை மல்லாவியில் என்னை வரவேற்ற நண்பன் அச்சுதன் நான் இறங்கியதும் அதே தேநீரகத்திற்கு அழைத்துச் சென்றான். நகர் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஒரு சில கடைகளைத் தவிர எல்லாம் அழிந்து மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நகரத்தின் பழைய தோற்றம் அழிந்து விட்டது. இவன் எப்படி என்னை என் நினைவில் உள்ள அதே கடைக்கு அழைத்துச் செல்லுகிறான் என்று நினைத்தேன். அந்த தேனீரகத்தை நடத்துபவரின் கோலமும் மாறிவிட்டது. நாமும் நமது சூழலும் நிறைய இழந்து வந்திருக்கிறோம் அதனால் எல்லாமே கோலத்தால் மாறியிருக்கிறோம் என்பதைத்தான் உணர்ந்தேன். இழந்தவைகளை தேடுகிறோம் என்பதைத்தான் உணர்ந்தேன்.

முதலில் மல்லாவி மத்திய கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அந்தப் பாடசாலை எப்பாடாவது பட்டு முன்னேறிக் கொண்டுதானிருக்கின்றது. பௌதீக வளத்தில் கட்டிட வசதியை ஓரளவு பூர்த்தி செய்து கொண்டு இயங்குகிறது. மல்லாவிப் பிரதேசத்தில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் இது முக்கியமானது. முழங்காவில், கல்விளான், தென்னியங்குளம், விநாயகபுரம், துணுக்காய், பாண்டியன்குளம், நொச்சிக்குளம் போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள் உயர்தரக்கல்விக்காக இங்குதான் வருகிறார்கள். இவை நீண்ட தூரப் பகுதியாக இருப்பதனால் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மாணவர்கள் குறிப்பிட்டார்கள். தமது கல்விக் காலத்தில் போக்குவரத்தோடு அதிக காலம் கழிந்து போவதாக வருத்தப்பட்டார்கள்.

பாடசாலை தனது பெருமளவான வளங்களை இழந்திருப்பதால் எல்லோரிடமும் உதவி கோருகின்ற நிலையில் இருப்பதாக அதிபர் துரைராசா ஜெயசுதானந்தம் சொன்னார். வரலாறு, வர்த்தகம் போன்ற உயர்தரப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ஆசிரியர் தங்குவதற்கு இடவசதி ஏதுமில்லை என்றும் அதிபர் குறிப்பிட்டார். பாடசலை ஆசிரியர்களில் 90 வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். மாங்குளம் - மல்லாவி இடையிலான போக்குவரத்தில் சீரின்மை காணப்படுவதால் இந்த ஆசிரியர்கள் தினமும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

857 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில் 80 மாணவர்கள் போரில் தாய் அல்லது தந்தையை இழந்திருக்கிறார்கள். 14 மாணவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்திருக்கிறார்கள். ஏழு பேர் அங்கவீனமடைந்திருக்கிறார்கள். போரில் எல்லா மாணவர்களும் பல உளவியல் தாக்கங்களுக்கு முகம் கொடுத்தவர்கள். இந்தப் பாடசாலையில் அதற்கு மாற்றீடாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பாடசாலை அதிபரிடம் கேட்டேன். 'மகிழ்ச்சி இல்லம்' என்ற இல்லத்தை உருவாக்கி கலாநிதி எதிர்வீரசிங்கம் பாடசாலையின் ஆசிரியர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றிய ஆராய்ச்சியை நடத்தி அதற்குரிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதாக அதிபர் ஜெயசுதானந்தம் குறிப்பிடடார். இதனால் மங்கை குடியிருப்பு போன்ற கிராமங்களில் உள்ள சிறுவர்களின் நிலமையை மேம்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு முக்கியமான குறிப்பு.

பின்னர் பாலியாற்றை நோக்கி நகர்ந்தேன். மாலை நேரம் இருள் என்று வந்து விட்டால் பாலியாற்றை பாக்க முடியாது. இருளடைய முதல் பார்ப்பது பாதுகாப்பானது என்பதாலும் அடுத்து பாலியாறங்றை பார்க்கலாம் என ஒட்டங்குளத்தை நேர்ந்த நண்பன் ஒருவன் குறிப்பிட்டான். மல்லாவியிலிருந்து ஒட்டங்குளத்திற்குச் செல்லும் வழியில் சந்திக்கிற பாலியாற்று பாலத்தை நோக்கி நகர்ந்தேன். பாலி நகரிற்குச் சென்றிருக்கிறேன். பாலியாற்றிக்கு இதுவரையில் நான் சென்றிருக்கிவில்லை. பாலியாற்றை பற்றி படித்த விடயங்களில் முதன் முதலில் மனதில் படிந்தது ஜெயபாலனின் கவிதையில்தான். பாலியாறு நகர்கிறது என்ற அவரது முதலாவது கவிதை ஈழத்து நவீன கவிதைகளில் முன்னோடி, அதைப்போல ஈழத்துப் புரட்சியையும் முன்மொழிந்த கவிதை. வன்னியை அழகியலாகவும் வரலாற்றுடன் சித்திரித்தது. பாலியாறு ஈழத்தின் ஜீவநதிகளில் ஒன்று. வலிமையும் பூர்வீகமும் கொண்ட பாலியாற்றை பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது.

காடுகள் சூழ்ந்த சிவப்பு வீதியில் சென்று பாலியாற்றை நெருங்கியதும் எல்லாவற்றுக்கும் தயார் படுத்திக் கொண்டோம். பாலியாறு எப்படியிருக்கும் என்று தெரியாவிட்டாலும் பாலியாற்றுக்கு எப்படி பாதுகாப்பு இடப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்த்தேன். எதிர்பார்த்ததைப்போலவே பாலியாற்றுச் சூழல் இருந்தது. ஒரு வரலாற்று நதியை அதன் குளிர்ச்சியுடன் அதன் நிழலை அனுபவிக்க வேண்டும் என்கிற தாகத்தை வெளிப்படுத்த முடியாது கட்டுப்படுத்திக் கொண்டே சென்றேன். புhலியாற்றை அதிகமதிகம் கொண்டாடி தாகத்தோடு ஜெயபாலன் ரசிப்பவர். பாலியாற்றுப் பாலத்தில் இராணுவத்தின் காவரண்கள் இரண்டு பக்கமும் இடப்பட்டிருக்கின்றன. இராணுவத்தினரின் அனுமதியை பெற்றுக் கொண்டு பாலியாற்றில் இறங்கி கால் நனைத்து முகம் கழுவிக் கொண்டேன். ஜெயபாலனின் கவிதையில் இடம்பெறுவவதை மாதிரி இன்று அங்கு இளம் பெண்கள் யாரும் நீராடிக் கொண்டிருக்கவில்லை. பாலியாறு தனித்திருக்கிறது. அடிமைப்பட்டிருக்கிறது. அங்கு முகாமிட்டுள்ள இராணுவத்தினர்தான் நீராடுகறார்கள். தமது சமையல் பாத்திரங்களையும் இராணுவ உடைகளையும் கழுவி உலர விட்டிருக்கிறார்கள்.

70 கிலோ மீற்றர் நீளமான பாலியாற்றின் பாலம் 1925இல் வெள்ளையர்களால் கட்டப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்ததும் ஈழத் தமிழ் அரசர்களுக்கு நெருக்கமானதும் வன்னியின் வளத்தின் நாடியாக அமைவதுமான ஜீவநதியான பாலியாற்றுக்கு இந்த கதி நேர்ந்து விட்டதே என்கிற துயரம் மனதை துயரப்படுத்தியது. பாலியாற்றில் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இராணுவம் பார்த்துக் கொண்டே நின்றது. இராணுவத்தின் விசாரிப்பை முடித்து அனுமதியை பெற்றுக் கொண்டு பாலியாற்றை கடந்து ஒட்டங்குளம் பேனேன். பாலியாற்றின் கரையாக காட்டு வழிகளில் செல்லும் பொழுது சிற்றாறுகள் வந்து இணைகின்றன. செழித்த வயல்களும் இடையிடையே இருக்கின்றன. பாலியாறு நம்பிக்கையையும் புன்னகையையும் இன்னும் வைத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒட்டங்குளம் கிராமத்தில் வயல்கள் பயிரிடப்பட்டிருக்கின்றன. பூவரசம் குளத்திலிருந்து வரும் தண்ணீர் ஒட்டங்குளமெங்கும் வாய்க்கால்களில் ஓடிக் கொண்டிருந்தன. அங்காங்கெ சில மண் வீடுகள் தென்பட்டன. கடைகள் கூட இல்லாத பின்தங்கிய கிராமம். எந்தத் தேவைக்கும் மல்லாவி நகரத்திற்கே வர வேண்டும். அங்குள்ள மக்களுக்கு வீட்டுத் திட்டம் மறுக்கப்பட்டிருப்பதாக மக்கள் குறிப்பிட்டார்கள். பலரும் தம்மால் முடிந்த மண்வீடுகளை கட்டி ஓலையால் வேய்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போரால் அழிக்கப்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். அந்தப் பகுதிகளின் ஊடாகவே இராணுவம் நகர்ந்து பாலியாற்றை கைப்பற்றி மல்லாவியை நோக்கி நகர்ந்தது.

மல்லாவி மக்கள் யுத்தத்தில் கடும் பாதிப்புக்களை சந்தித்துள்ளார்கள். சொத்து, உறவு என்று எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். இன்று அவர்களில் பலர் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் கணிசமான வெற்றியையும் அவர்களாக எட்டியிருக்கிறார்கள் என்பது நம்பிக்கை அளிக்கின்றது. ஆனால் சில குடும்பங்கள் அடி எடுத்து வைக்க முடியாமல் இருக்கின்றன. இரத்தினசிங்கம் துஷ்யந்தி வளநகரில் வசித்து வருகிறார். சுகந்திரபுரத்தில் நடந்த செல் தாக்குதலில் அவர் காயமடைந்ததில் இரண்டு கால்களும் செயற்பாட்டை இழந்திருக்கின்றன. இப்பொழுது சக்கர நாற்காலியிலேயே இவரது நாட்கள் கழிகின்றன. இவரது சகோதரி ஒருவர் இதே செல்தாக்குதலில் பாலியாகியுள்ளார். இன்னொரு சகோதரி யுத்த களத்தில் காணாமல் போயிருக்கிறார். துஷ்யந்தியைப் போல யுத்தத்தினால் கடும் பாதிப்புக்களை இழந்தவர்களுக்கு எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கால்களை இழந்து சகோதரிகளை பறிகொடுத்த அவரது மனநிலை சக்கர நாற்காலியில் முடங்குகிற பொழுது இன்னும் இன்னும் மனப் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றன. தன்னைப் போலவே தனது கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மதுராவும் குடும்பஸ்தரான ராகுலனும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கால்கள் இயங்காதவர்களாக உள்ளனர் என்று துஷ்யந்தி சொன்னார்.

மல்லாவி இன்று இழந்திருப்பவை ஏராளம். தன் சனங்களின் பலத்தை, பாதுகாப்பை, வாசனையை, அடையாளங்களை, நிலத்தின வளங்களை எல்லாற்றையும் இழந்திருக்கிறது. பழைய மல்லாவியை நினைவிருக்கிறதா? என்று கேட்பவர்களில் பலர் மல்லாவியில் பிறந்து வளர்ந்தவர்கள். இது எந்த இடம் என்று எனக்கே தெரியவில்லை என்கிற அளவில் அந்தச் சின்ன நகரம் அழிக்கப்பட்டிருக்கிறது. மல்லாவியை இராணுவம் கைப்பற்றிய பொழுது பாதுகாப்பு அமைச்சு வெளியிடட்ட புகைப்படங்களில் மல்லாவியின் வெறுங் கட்டிடங்களும் காயப்பட்ட கட்டிடங்களும் காணப்பட்டன. இப்பொழுது பார்;பதைப்போல பேரழிவுகளுக்கு உள்ளாகியிருக்கவில்லை. மக்கள் மல்லாவிக்கு மீள அனுமதிக்கப்பட்ட பொழுது எல்லாமே அடித்து நொருக்கப்பட்டிருந்தன.

வடகாட்டில் போர்க்காலத்தில் மக்களுக்குரிய உதவிகளை வழங்கும் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வந்திருந்தது. இன்று அந்த இடத்தில் பெரும் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைக்கப்பட்டிருக்கிறது. பாலிநகரில் தனியார் ஒருவரது காணியில் விடுதலைப் புலிகளின் காவல்துறை நிலையம் இயங்கி வந்தது. இன்று அந்தக் காணியில் தெற்கிலிருந்து வந்திருக்கும் முதலாளி ஒருவர் மதுபானநிலையம் நடத்துகிறார். மாறன் ஆண் சிறுவர்கள் இல்லமும் சாந்தி பெண் சிறுவர்கள் இல்லமும் இப்பொழுது பெரும் இராணுவ முகாம்களாக்கப்பட்டுள்ளன. வேலுப்பிள்ளை பரஞ்சாதி என்கிற தனியார் ஒருவரது காணியிலேயே சாந்தி சிறுவர் இல்லம் தற்காலிகமாக இயங்கியது. இன்று அந்தக் காணி உரிமையாளருக்கு மறுத்து இழுத்தடிக்கப்படும் நிலையில் பெரும் இராணுவ முகாமை அங்கு அமைத்திருக்கிறார்கள். வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் உழுது சிதைத்து அழிக்கப்பட்டிருக்கிறது. ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லமும் சிதைத்து அழிக்கப்பட்டு அதன்மேல் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதைவிடவும் மல்லாவியுடனும் மல்லாவி மக்களின் வாழ்க்கையுடனும் போராட்டத்துடன் கலந்து நகர்ந்த பல அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கபட்டிருக்கின்றன. மல்லாவி நகரத்தில் இருந்த மாவீரர் வணக்க மண்டபம், அதன் முன்பாக இருந்த மெழுகுதிரி வடிவிலான மாவீரர் நினைவுக் கோபுரம், நீதிமன்றம், காவல் நிலையம், தியாகி திலீபன் மருத்துவமனை, நுண்கலைக்கல்லூரி முதலிய இடங்களும் கட்டிடங்களும் அழிக்கப்ட்டிருக்கின்றன. ஐயன்குளத்தில் ஆள ஊடுருவும் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் 17 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களின் நினைவாக கட்டப்படடிருந்த நினைவு தூபியை இராணுவத்தினர் உடைத்துக் கிண்டி நொருக்கி அழித்துள்ளனர். இப்படி மல்லாவியை சுற்றி பல தாக்குதல்களும் அழிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் பல கிராமங்கள் இருக்கின்றன. மல்லாவி வடக்கு எனப்படும் மங்கை குடியிருப்பிற்குச் சென்றேன். அங்கு பார்த்த குழந்தைகளின் காட்சிகள் மனதை மிகவும் துயரப்படுத்தியது. மிகப் பசியுடன் ஒரு பிஸ்கட் பையை உடைத்து குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகள் வறுமையாலும் காலத்தாலும் சூழலாலும் மிகவும் கறுத்துப் போய் மெலிந்திருக்கிறார்கள். அவலத்திலும் அவர்களிடமிருந்து புன்னகை வெளிப்படுகிறது. அந்தக் குழந்தைகள் வேலியாக கட்டப்பட்ட தடியில் கயிற்றைக் கொலுவி வெறும் தரையில் கிணறு என்று சொல்லிக் கொண்டு வாளிகளை போட்டு தண்ணீர் அள்ளி குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிணறில்லாமல் தண்ணீருக்கு தவிக்கும் அந்த கிராமத்தின் துயரை குழந்தைகள் தமது விளையாட்டுக்களில் துயரக் கதைகளாய் வெளிப்படுத்தினார்கள். அந்தக் கிராமம் முழுவதும் பார்த்த எல்லாக் காட்சிகளும் இப்படித்தான் இருந்தன.

மங்கை குடியிருப்பிற்கு தற்பொழுது மல்லாவி வடக்கு குடியிருப்பு எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த மக்களின் மீள் வாழ்க்கை அவர்களின் இழப்பு துயரம் இவைகளையும் விடவும் இந்தக் குடியிருப்பிற்கு பெயர் மாற்றுவதுதான் முதலாவது வேலையாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மங்கை என்பது மாவீரர் ஒருவரது பெயர் என்று காரணம் கூறப்பட்டு இந்தப் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறது. மங்கை குடியிருப்பில் மேலும் 65 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களால் காணிகளற்று வாழ்ந்த வன்னிப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு காணிகள் காடுகளாக வழங்கப்பட்டுள்ளன. அந்தக் காடுகளை வெட்டி நாடாக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் காடாகவும் எரிந்த சூழலாகவும் இருக்கும் இந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகள் ஏதுவுமில்லாமல் மக்கள் அவலப்படுகின்றார்கள். வீடு இல்லை, கிணறு இல்லை, மலசல கூடம் இல்லை, உணவு இல்லை என்று முழுமையான வறுமையும் துயரும் அணிந்த குடியிருப்பாக காட்சியளிக்கிறது. அங்கு வெட்டப்பட்டுள்ள ஒரு கிணறு சரியான ஊற்றிடத்தில் வெட்டாததால் தண்ணீர் வறண்டு கிடக்கிறது. இந்திய வீடு வரும்... வரும்... என்று மக்களின் வாழ்க்கை தகரக் கூடாரங்களிலும் தறப்பாள் கூடாரங்களிலும் கழிக்கின்றன. எரிந்த காட்டுக்கு இடையில் இந்த அவலக்கூடாரங்கள் மௌனமாய் கிடக்கின்றன. இந்தக் கிராமத்தில் பார்த்த துயரக் காட்சிகளில் மிகவும் வறிய கோலத்துடன் மெலிந்த குழந்தை இறப்பர் கிண்ணத்தில் தண்ணீரைப் பெருந்தாகத்துடன் அருந்திக் கொண்டிருந்தது மனதை மிகவும் பாதித்தது. அங்குள்ள பல சிறுவர்கள் பாடசாலை செல்லாமல் வீடுகளில் இருக்கிறார்கள். வறுமையும் கைவிடப்பட்ட நிலமையும் அவர்களிடமிருந்து படிப்பையும் பறக்கச் செய்திருக்கின்றன.

துணுக்காய் பிரதேசத்தில் 20 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவற்றில் பல கிராமங்களின் நிலை இப்படித்தானிருக்கிறது. மங்கை குடியிருப்போடு, தேராங்கண்டல், ஐயன்குளம், அனியன்குளம், தெனனியங்குளம், பழைய முறிகண்டி போன்ற கிராமங்களின் நிலமை இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மல்லாவி நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள அபிவிருத்தி மற்றும் அரசியல் நோக்கங்கள் கொண்ட அழகிய விளம்பரப் பலகைகளும் நிர்மாணிக்கப்பட்ட சில கட்டிடங்களும் மல்லாவியின் அடையாளத்தை மறைத்திருப்பதுடன் மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதேசத்தின் போரால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் அவலக் கதைகளையும் இறுக்கமாக மறைத்து மூடியிருக்கின்றன.

ஈழத்தில் மல்லாவியும் ஒரு முக்கியமான நிலப்பகுதி. நீண்ட வரலாற்றையும் உழைப்பும் கொண்ட இந்த நிலப்பகுதி ஒரு காலத்தில் போரால் துரத்தப்பட்ட மக்களை அணைத்து தஞ்சமடைய இடமளித்தது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் முக்கியம் பெற்றிருந்தது. தனது பூர்வீக அடையாளங்களுடன் போராட்ட காலத்தில் பரிணாமித்த அடையாளங்களும் அழிந்தும் ஆபத்திலும் உள்ளன. போரால் எல்லாவற்றையும் இழந்து வறுமை பீடித்த குழந்தைகளின் துயரக் காட்சிகள் இந்த நிலத்தின் இன்றைய அவலத்தை முகத்தில் அறைகின்றது. ஆறும் குளமும் வயல்களும் பசிய காடுகளும் இந்த நிலத்தை உயிர்ப்பை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது அவலத்தினிடையிலும் நம்பிக்கையைத் தருகிறது.

மூலம்: உலகத் தழிழ் செய்திகள் - ஆடி 21, 2011

பிரசுரித்த நாள்: Jul 21, 2011 12:06:56 GMT

மல்லாவியில் நான் கொஞ்ச காலம் இருந்தேன் ( யோகபுரத்தில்) நல்ல இடம் அங்கு மக்களும் நல்லவர்கள் ( நான் இருந்த காலத்தில் யாழ்ப்பாண மக்கள் அங்கு வரவில்லை) அங்கு வளநகர் என்ற இடத்தில் கூட அனலதீவு என்ற இடத்து ஆக்கள் இருந்தார்கள்( மல்லாவி பாடசாலைக்கு பின் பகுதி) அதி என்னொடு நல்ல நட்ப்பாக இருந்தவரும் பின் முல்லைதீவி இரானுவ முகாம் தாக்குதலில் இறந்து விட்டார்>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.