Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் ஒரு ஆய்வு

Featured Replies

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் நாடே இன்று அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றது. மலையகத்தில் தொடங்கிய இவர்களின் நடமாட்டம், கிழக்கு மாகாணம் மட்டுமல்லாமல், இப்போது, வடக்கில் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மர்ம மனிதர்களோ, கிறிஸ் பூதங்களோ கிடையாது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் எவரும் தங்களது கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என பொலிசார் மக்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பில் இராணுவத்தினர் இன்னும் ஒருபடி மேலே சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் கவனமாக நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

மர்ம மனிதர்கள் இல்லாவிட்டால், அரசியல்வாதிகள் தொடக்கம், காவல்துறை, பாதுகாப்புப் படை வரையில் அதிகாகளும், அமைச்சர்களும் கூட, அவர்களது நடமாட்டம் குறித்து ஏன் பெரிதாக அலட்டிக் கொள்கின்றார்களோ தெரியவில்லை.

மர்மமான முறையில் வந்து மர்மமான முறையில் மறைந்து போகின்ற இந்த கிறிஸ் பூதங்கள் நாட்டில் அனைவரையும் பேய்க் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெண்களைத் துன்புறுத்துவதாகவும் இளம்பெண்களின் இரத்தத்தைக் குடிப்பதாகவும், ஜனாதிபதி நீண்ட காலம் ஆட்சியில் இருப்பதற்காக இரண்டாயிரம் பெண்களின் மார்புகளில் இருந்து இரத்தம் தேவைப்படுவதாகவும், அதற்காகவே இந்த மர்ம மனிதர்கள் நடமாடி வருவதாகவும் கட்டுக்கதைகள் தாராளமாக நாட்டில் உலவுகின்றன.

மர்ம மனிதர்கள் யார் என்பது இப்போது பூதாகரமாக எழுந்துள்ள ஒரு கேள்வியாக இருக்கின்றது. மர்ம மனிதர்கள் அல்லது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டவர்களைத் துரத்திச் சென்ற பொதுமக்கள் அவர்கள் ஒன்றில் ஒரு பொலிஸ் நிலையம், ஓர் இராணுவ முகாம் அல்லது ஒரு கடற்படை முகாக்குள் ஓடி மறைந்ததாகப் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மறைந்தவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினரோ அல்லது படை முகாம்களைச் சேர்ந்தவர்களோ பொதுமக்களுக்கு விளக்கமளிக்கத் தவறியதனாலேயே இந்த விடயம் பூதாகரமாகியிருக்கின்றது.

துரத்திச் செல்லப்பட்ட மர்ம மனிதர்கள் நாட்டின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்புக்குப் பொறுப்பான நிலையங்களுக்குள் மாயமாகிப் போனால், பொதுமக்கள் யாரைச் சந்தேகிப்பது? சம்பந்தப்பட்ட துறையினரைச் சந்தேகிப்பதில் எந்தவிதமான தவறும் இருப்பதாகத் தெரியவில்லையே.

நாட்டில் மர்ம மனிதர்கள் என கூறப்படுபவர்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களின் இடங்களில் மறைந்து மாயமாகிப்போனால், அது குறித்து விளக்கமளித்து, மக்களை ஆசுவாசப்படுத்தி, அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும்.

மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களிலும், கொல்லப்பட்ட சம்பவங்களிலும், சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது பொது மக்களுக்கு ஓரளவுக்குத் தெளிவாகியிருக்கின்றது. அவர்கள் குற்றமற்றவர்கள்தானா என்பதில் ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர ஏனையவற்றில் இன்னும் தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது.

மர்ம மனிதர்கள் காவல் நிலையங்களிலும் படையினரின் முகாம்களிலும் மாயமாகிப் போனதால், இந்த விடயத்தில் காவல்துறையினருக்கும் படையினருக்கும் சம்பந்தம் இருக்கின்றது என்பது பாதிக்கப்பட்டு, அச்சத்தில் உறைந்து போயுள்ள மக்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் படையினரும், பொலிசாரும் இதில் தங்களுக்கு எந்தவிதமான சம்பந்தம் இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார்கள்.

மலையகத்தைப் பொறுத்தமட்டில், நிலைமை சற்று வித்தியாசமானதாக இருக்கலாம். மர்ம மனிதர்கள் ஓடித்தப்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் படையினரும், பொலிசாரும் எங்கும் நிலைகொண்டிருக்கின்றார்கள். அவர்களைக் கடந்து மர்மமான முறையில் எவரும் தப்பிச் செல்வது என்பது இலகுவான காரியமல்ல.

ஆகவே, இந்த மனிதர்களின் நடமாட்டத்திற்கும், அவர்களின் திடீர் மறைவுக்கும் பொறுப்பும் பதிலும் கூறவேண்டியது அவர்களின் பொறுப்பாகவே இருக்கின்றது.

கிறிஸ் பூதங்கள் அல்லது மர்ம மனிதர்கள் எனப் பெயர் பெற்றிருந்தாலும்கூட, இவ்வாறு வந்து பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் தொல்லை கொடுப்பவர்கள் நிச்சயமாக மனிதர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகம் இல்லை.

தொல்லை கொடுப்பவர்களை துரத்திப் பிடிக்க முடியும், அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும், அல்லது அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாது காத்துக்கொள்ள முடியும் என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் உதிரிகளாக, ஒருவராக, இருவராக அல்லது மூன்று நான்கு பேர்களாக மட்டும் வருகின்ற இந்த மர்ம மனிதர்களின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் பெரிதும் அச்சமடைந்து, பீதியில் உறைந்து போயிருப்பதற்கு வலுவான காரணம் இருக்கின்றது.

உதிரிகளாக வந்தாலும், பரவலான இடங்களில் வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகவும், கவனத்திற்கொள்ள வேண்டியதாகவும் இருக்கின்றது. அது மட்டுமன்றி, இவர்களுக்குப் சக்தி ஒன்று இருக்கின்றது என்ற சந்தேகம் மக்கள் அச்சமடைந்திருப்பதற்குக் காரணமாகும்.

அந்த சக்தி அரசாங்க சக்தியாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தினால் பொதுமக்களின் அச்சம் பீதியும் அதிகமாகியிருக்கின்றது, இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனைத் தட்டிக்கழிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல், நாட்டின் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பான பொலிசாரும், (இப்போது முப்படையினரும் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்), படையினரும் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாத்து, அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டும். இது அவர்களின் தலையாய கடமையாகும்.

கிழக்கு மாகாணத்தில் இரண்டு பொலிஸ் உயரதிகாகளின் தலைமையில் மக்கள் மத்தியில் மர்ம மனிதர்கள் பற்றிய தெளிவையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது ஆறுதல் தருகின்ற தகவலாக வெளியாகியிருக்கின்றது. எனினும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் தமது பொறுப்புகளில் இருந்து தவறுவதனாலேயே மக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுக்க வேண்டிய அவசியம் கட்டாயம் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.

தமது அன்றாட சீவியத்தையும் வாழ்க்கை நடவடிக்கைகளையும் பார்ப்பதற்கே நேரமின்றி இருக்கும் பொதுமக்கள், பொழுது போக்குவதற்காகவோ அல்லது வேண்டுமென்றோ சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக் கொள்வதில்லை.

தொல்லைகளையும், கஷ்டங்களையும் பொறுக்க முடியாத நிலையிலேயே பொதுமக்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தள்ளப்படுகின்றார்கள்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்கு எவரும் இல்லையென்ற உணர்வு அவர்களின் மனதில் எப்போது தோன்றுகின்றதோ, அப்போது அவர்கள் நடவடிக்கையில் இறங்கத் துணிகின்றார்கள்.

ஆயினும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறித்த விடயத்தில் பொதுமக்கள் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து விட்டதே, அதனைச் சீர் செய்வோம் என்ற எண்ணத்தோடு செயற்படவில்லை. மர்ம மனிதர்களின் நடமாட்டம், அவர்களின் செயற்பாடுகள் குறித்து எழுந்துள்ள பலத்த சந்தேகம், அத்துடன் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே அவர்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுக்கத் துணிகின்றார்கள்.

நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. யுத்தகாலத்தில் நிலவிய பல்வேறுபட்ட நெருக்கடிகள் மறைந்துவிட்டன. யுத்தம், துன்பங்களும், கஸ்டங்களும் நீங்கிவிட்டன. இனிமேல் நிம்மதியாக வாழ்வோம் என்ற எண்ணத்தில் தமது வாழ்க்கைப் போக்கில் கவனம் செலுத்தியுள்ள பொதுமக்களைச் சீண்டும் வகையிலேயே மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மர்ம மனிதர்கள் பெண்களைக் கொடுமைப் படுத்தியதாகவோ, அவர்களைப் பாலியல் ரீதியாக, வன்மையாகத் துன்புறுத்தியதாகவோ அல்லது பொருட்களைக் கொள்ளையடித்ததாகவோ தகவல்கள் வெளியாகவில்லை. பெண்களின் கையைப் பிடித்து இழுத்தார்கள், ஒரு பெண்ணின் கைகளில் காயமேற்படுத்தினார்கள், தனிமையில் இருந்த பெண்ணை எட்டிப்பார்த்தார்கள், என்ற தகவல்கள்தான் வெளியாகியிருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், அவ்வாறு செயற்பட்டவர்கள், அந்தப் பெண்கள் கூக்குரலிட்டதும், ஓடித் தப்பிவிட்டதாகவும், அவர்களைத் துரத்திச் சென்றவர்களினால் அவர்களைப் பிடிக்க முடியாமல் போய்விட்டதாகவுமே தெவிக்கப்பட்டுள்ளது, சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டவர்களைத் துரத்திச் சென்றபோது, அவர்களில் சிலர் பொலிஸ் நிலையத்திற்குள் அல்லது படை முகாக்குள் ஓடித் தப்பியதைக் கண்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றார்கள். இதனால் பாரதூரமான செயற்பாடுகளில் இந்த மர்ம மனிதர்கள் இதுவரையில் ஈடுபடாத போதிலும், அவர்களின் செயற்பர்டுகள் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

பொதுமக்களுடைய இடங்களில், அவர்களது வீடுகளில், பெண்கள் தனிமையில் இருக்கும் இடங்களில் அல்லது பெண்களை இலக்கு வைத்த வகையில் மர்ம மனிதர்கள் ஏன் நடந்து கொள்கின்றார்கள், அதன் பின்னணி என்ன, அவர்களது நோக்கம் என்ன என்பது குறித்து பாதிக்கப்பட்டவர்களினால் தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாதிருக்கின்றது. இதனால் அவர்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றார்கள். எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி அதனை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்வது போன்று மர்ம மனிதர்கள் தொடர்பில் பரப்பப்பட்டுள்ள பல்வேறு கதைகளும் இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. மர்ம மனிதர்கள், பெண்களை நோக்கி வருகின்றார்கள் என்பதனால், பெண்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். தமது பெண்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததும் குடும்பங்களில் உள்ள ஆண்களும் அச்சமடைந்திருக்கின்றார்கள்.

நிலைமைகளை தீர்க்கமாக நோக்கும்போது, இந்த அச்ச உணர்வானது அர்த்தமற்றதாகத் தோற்றலாம். ஆனால் மறுபக்கத்தில் இந்த மர்ம மனிதர்கள் யாரைச் சார்ந்திருக்கின்றார்கள் என்ற விடயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம், அல்லது மேலோட்டமான தகவல் அவர்களைப் பெதும் குழப்பத்திற்கும் கூடிய அச்சத்திற்கும் உள்ளாக்கியிருக்கின்றது.

அத்துடன், மர்ம மனிதர்கள் தொடர்பான அரசியல்வாதிகளின் கதை பேச்சுக்களும், ஊடகங்களில் வெளியாகி வருகின்ற பரபரப்பான செய்திகளும் இந்த சந்தேகங்களை அதிகரிக்கச் செய்து அவர்களை அச்சத்தில் உறையச் செய்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம் ஒழுங்கைப் பேணுபவர்கள் அதனைச் சரியாகப் பேணி, பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொண்டால், பொதுமக்கள் சட்டத்தைத் தமது கைகளில் எடுக்க வேண்டிய தேவை ஏற்படமாட்டாது. அதேநேரத்தில் பொலிசாரும், படையினரும் தமது நம்பிக்கைக்கு உகந்த வகையில் நடந்து கொள்ளவில்லை என்பதை உணரும்போது அவர்கள் குழுநிலையிலான சீற்றத்திற்கு உள்ளாகின்றார்கள். இத்தகைய ஒரு நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே பொலிசார் மீதும், படை முகாம்கள் மீதும் பொதுமக்கள் திரண்டு சென்று தாக்குதல் நடத்திய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

எனவே, மர்ம மனிதர்களினால், குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள பொதுமக்களை, அந்தக் குழப்பத்தில் இருந்து மீட்டெடுக்க வேண்டியது பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். குழப்பத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்கள் தமது நாளாந்த செயற்பாடுகளில் இயல்பாக ஈடுபடச் செய்ய வேண்டியதும் அவர்களின் கடமையாகும்.

யுத்த காலத்தில் இனந்தெரியாத ஆயுத மேந்தியவர்களின் அடாவடித்தனங்கள், தாக் குதல்கள், துப்பாக்கிச் சூடுகளினால் பொதுமக்கள் நிலைகுலைந்திருந்தார்கள்.

அதேவேளை, வகைதொகையின்றி, ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என்ற வித்தியாசமின்றி ஆட்களைக் கடத்திச் சென்ற வெள்ளை வான்களின் நடமாட்டங்களினாலும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயிருந்தார்கள். இது யுத்த காலத்துச் சூழலில் இடம்பெற்ற சம்பவங்களாகும்.

இத்தகைய யுத்த காலச் செயற்பாடுகளுக்கு நிகராக, இன்னும் சொல்லப்போனால் அதையும் விட அதிகமான அச்சத்தையும் பீதியையும் இந்த மர்ம மனிதர்கள் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

மனித உரிமை மீறல் நடவடிக்கைகள், அதனைத் தொடர்ந்த போர்க்குற்றச்சாட்டுக்கள், தொடர்பிலான சர்வதேச நெருக்கடிகள், யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வைக்காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது தொடர்பிலான அழுத்தங்கள், அத்தகைய தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள், நிபந்தனையுடன் கூடிய நெருக்குதல்கள் போன்ற பல்வேறு சிக்கல்களில் இன்று அரசாங்கம் ஆழ்ந்திருக்கின்றது.

இவை போதாதென்று, யுத்தம் முடிவடைந்து ஆயுதமேந்திப் போராடி வந்த விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் அவசரகால நிலைமை ஏன் தொடர வேண்டும் என்ற கேள்விகளுடன் கூடிய நெருக்குதல்கள் என்பனவும் அரசாங்கத்திற்குத் தலையிடி கொடுத்திருக்கின்றன.

இந்த நிலையில் அடுத்த மாதம் அவசரகாலச் சட்டம் நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருக்கின்றது என்ற தகவல் வெளியாகிய சூட்டோடு இந்த மர்ம மனிதர்கள் நடமாடத் தொடங்கியிருக்கின்றார்கள்.

ஆனால் இதற்கு முன்னோடியாக பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ப்படைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கின்றார். நாட்டின் ஜனாதிபதி என்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அவருக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார். நாட்டில் அசாதாரணமான ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் மட்டுமே பொது அமைதியை ஏற்படுத்துவதற்காக இவ்வாறாக ப்படையினரையும் கடமைக்கு அழைக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போது நாட்டில் ஓர் அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

அப்படியானால், பொது அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை என்ன என்பது இப்போது எவருக்கும் புரியாத புதிராக இருக்கின்றது.

பொது அமைதியைப் பேணுவதற்கான ஜனாதிபதியின் இந்த உத்தரவு கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமையன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கையில், பிரச்சினைகள் எழக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கான உள்ளூராட்சி சபைகளின் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருக்கின்றது. கடந்த எட்டு மாதங்களாக அரசாங்கத்துடன் அரசியல் தீர்வு குறித்து பேச்சுக்கள் நடத்தி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் 3 விடயங்களை முன்வைத்து அவை தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தெளிவுபடுத்த வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது, இந்தக் காலக்கெடு பதினெட்டாம் திகதி முடிவடைகின்றது. இத்தகைய ஒரு சூழலில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைதியை நிலைநாட்டுவதற்கான அழைப்பு முப்படையினருக்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டிருக்கின்றது. மறுபக்கத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம், அதனால், நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகளும், அமைதியின்மையும் ஏற்பட்டிருக்கின்றது.

இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து சீர்தூக்கிப் பார்க்கும்போது, இப்போது இடம்பெற்று வருகின்ற நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஏதேனும் ஓர் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகமே ஏற்படுகின்றது. அந்த உள்நோக்கம் என்ன, அடுத்து என்ன நடக்கப் போகின்றது, பேய் வரப்போகின்றதா, பிசாசு தோன்றப் போகின்றதா என்பது தெரியவில்லை.

http://akkinikkunchu.com/new/index.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.