Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களின் மனதை வெற்றி கொள்ளத் தவறின் விளைவுகள் விபரீதமே

Featured Replies

வட மாகாண சபைக்கான தேர்தல்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்ற நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏனைய அனைத்துத் தேர்தல்களையும் நடத்தி

முடித்திருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான மூன்று கட்ட தேர்தல்களும் நிறைவுக்கு வந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முதல் தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வரையில் அனைத்து பிரதிபலன்களும் ஆளும்கட்சியிடமே போய்ச் சென்றுள்ளன.

ஜனாதிபதி பாராளுமன்றம், மாகாண சபைகள் என அதிகாரங்கள் தம் கையில் இருக்க நாடளாவிய ரீதியிலான பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களையும் அரசாங்கம் வசப்படுத்திக் கொண்டது. கட்டம் கட்டமாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் முதலாவது கட்டத்தில் தங்கு தடையின்றி முன்னேறிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தான் நடத்திய இரண்டாவது கட்டத் தேர்தலில் வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மடக்கி விட வேண்டும் என்ற பாணியில் தனது முழுமையான ஈடுபாட்டினைக் காட்டியிருந்தது.

எனினும் வடக்கை கைப்பற்றும் அரசாங்கத்தின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது. அங்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கொடி கட்டிப் பறந்தது என்று கூறினால் அது மிகையாகாது. இதேபோன்றதொரு பின்னடைவுகொழும்பு மாநகரசபை தேர்தலிலும் ஏற்பட்டது. 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அறிவித்த அரசாங்கம் 21 மன்றங்களைக் கைப்பற்றியிருந்த போதிலும் கொழும்பு மாநகர சபையே அரசாங்கத்தினால் குறிவைக்கப்பட்டிருந்தது.

கொழும்பு மாநகரசபையானது ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து நழுவிய சரித்திரம் இல்லாததால் நாடு முழுவதிலும் வெற்றிக் கொடியை நாட்டி வருகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு மாநகர சபையையும் கைப்பற்றிவிடலாம் என்று அதீத நம்பிக்கை கொண்டிருந்தது. அரசாங்கம் எந்தளவு பிரயத்தனத்துடன் செயற்பட்டதோ அதற்கும் மேலாகவே இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரசார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந்தது.

ஆளும் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் இடையில் நிலவிய கடுமையான போட்டித் தன்மை மற்றும் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் சிறுபான்மை வாக்குகளை கவரும் விதத்தில் தமிழ் பேசும் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களும் களத்தில் குதித்திருந்தன. இந்த நிலைமையானது கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் எத்தகைய பெறுபேறுகளை கொண்டுவரப் போகின்றதோ என்ற அங்கலாய்ப்பில் தான் வாக்காளர் கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இருந்தன. இருப்பினும் அதற்கு தற்போது விடைகிடைத்துவிட்டது.

கொழும்பு மாநகரசபையானது சிறுபான்மை மக்களை பெரும்பான்மையாக கொண்ட விசேடத் தன்மையைப் பெற்றிருக்கின்றது. கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினரே பெருமை சேர்த்து வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் அரசியல் சாணக்கியமே கொழும்பு மாநகரசபையை வெல்வதற்குக் காரணம் என கூறப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மேலும் கொழும்பு மாநகரசபையை கைப்பற்றும் கனவு அரசாங்கத்திடமிருந்து கலைந்து போனமைக்கு அரசாங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாக அமைந்துவிட்டன. கொழும்பு நகரானது இந்நாட்டின் தலை நகராக விளங்குகின்ற போதிலும் இங்கு தான் சேப்புற வாழ்க்கை தின வருமானம் பெறுவோர் குறைவருமானம் பெறு வோர் மற்றும் இதர தொழிலாளர்கள் என்போர் மலிந்திருப்பதைக் காண முடிகின்றது. இந்நிலையில் தான் நாடு முழுவதையும் தனது தனி அதிகாரத்தில் வைத்திருக்கின்ற அரசாங்கம் கொழும்பு நகரை அழகுமயப்படுத்தப் போவதாகக் கூறி வீடுகளை அகற்றும் பணிகளை திடீரென ஆரம்பித்தது. இது மக்களினது வெறுப்பினை மாத்திரமே சம்பாதித்துக் கொடுத்திருந்தது.

மேலும் கொழும்புநகரின் சில அரச காணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதான திட்டம், முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள், விலைவாசி உயர்வு, மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் மற்றும் கொழும்பு மாநகர சபையை அதிகார சபையாக்குவதற்கான அறிவிப்பு போன்ற பல விடயங்கள் கொழும்பு வாழ் மக்களிடத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவற்றையெல்லாம் ஆய்ந்தறிந்து தான் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் காய்நகர்த்தல் அமைந்திருந்தது.

எஞ்சியிருந்த 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட கையோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரம் ஊழல் மோசடிக்கு எதிரானதாகவே அமைந்திருக்கும் என்று அக்கட்சி அறிவித்தது. அதேபோல் தனது பிரசாரத்தை முன்னெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகர சபைக்கான பிரசாரத்தை முற்றாக வேறுபடுத்தியிருந்தது. அரசாங்கம் அறிவித்த வகையிலான கொழும்பு நகரில் 65 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் அகற்றப்படவிருப்பதான அறிவிப்பினையும் இதில் தற்கட்டமாக 3529 வீடுகள் கொழும்பு நகரில் அகற்றப்படவிருப்பதான அறிவிப்பினையும் துருப்புச் சீட்டாக மாற்றிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது சகாக்களுடன் இணைந்து கைகோர்த்து சூறாவளியைப் போன்றதொரு பிரசாரத்தை முன்னெடுத்தார்.

இது தான் சந்தர்ப்பம், இதுதான் காரணி என்று அறிந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாநகரசபையை ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியாலும் வென்று விட முடியாது என தனது இறுதிக் கட்டப் பிரசாரத்தின் போது உறுதிப்பட கூறி வந்தார். இதுவரை காலம் அவமானம், அவமரியாதை மிக மோசமான விமர்சனங்கள் ஆகியவற்றை பொறுத்துக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாநகர சபை வெற்றியீட்டப்பட்டதன் மூலம் அனைவரது வாய்க்கும் பெரியதொரு பூட்டினைப் போட்டுவிட்டார் என்றே கூற வேண்டும்.

கொழும்பு வாழ் முஸ்லிம்களையும் தமிழர்களையும் கவரும் நோக்கத்துடன் செயற்பட்ட ரணில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரையே மேயர் வேட்பாளராகவும் நிறுத்தினார். அவரது தீர்மானத்துக்கு நல்ல பலன் கிடைத்தது மாத்திரமல்லாது மேயர் ஏ.ஜே.எம். ஸமில் சியிடம் சபையை ஒப்படைத்துள்ளனர். இது ஐக்கிய தேசியக் கட்சியினால் உணரப்பட்டேயாக வேண்டும். இருப்பினும் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு மாநகரசபையை ஏற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து உடனடியான பிரதிபலனை மக்கள் எதிர்பார்ப்பது சமயோசிதமானதல்ல.

ஏனெனில் கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பு மாநகர சபையானது விசேட ஆணையாளன் கீழேயே இருந்து வந்தது. அதற்கு முந்தைய இரண்டு வருடங்களிலும் சபையில் ஊழல், மோசடி நிறைந்து காணப்பட்டதாகவே இருந்தது. இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் ஐ.தே.க. வசமாகியுள்ள கொழும்பு மாநகர சபையின் உள் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டுக் கிடக்கின்றது. இது இவ்வாறிருக்க இம்முறை கொழும்பு மாநகர சபைக்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் சிறுபான்மையைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் தெவாகியுள்ளனர். இவர்களது தேர்தல் காலத்து இலக்கு வெற்றியாக மாத்திரமே அமைந்திருந்தாலும் இவர்கள் அனைவரும் கொழும்பு வாழ் மக்களின் மீது அதிகமான பாசத்தையும் அதிகமான இரக்கத்தையும் வெளிக் காட்டியதுடன் உங்களோடு இருப்போம் என்றும் உங்களது தேவைகளை ஓடோடி வந்து நிறைவேற்றுவோம் என்றும் புன்னகை மலர உறுதியளித்தவர்கள்.

இன்னும் சிலர் தேசிய அரசியலும் பேசினர். இவ்வாறு உறுதிமொழிகளை வழங்கி மாநகர சபைக்கு தெவாகியுள்ள இந்த 24 சிறுபான்மை உறுப்பினர்களும் கொழும்பு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டியவர்களாகவும் கடமைப்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்கள் கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு ஏதாவது செய்தேயாக வேண்டும் என்பதிலும் பார்க்க தான் உறுப்பினராக தெரிவாவதற்கு முன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோராக இருக்க வேண்டும். மாறாக வழமைபோல் 55448 விருப்பு வாக்குகளைப் பெற்று கட்சிக்கும் தமது மேயர் பதவிக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார். இது ஒருபுறமிருக்க கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தான் வழங்கிய உறுதி மொழிகளை அவ்வாறே செயற்படுத்திக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

ஏனெனில் அரசாங்கம் தான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாதிருப்பதாகக் கூச்சலிடுகின்ற ஐக்கிய கட்சி மாறுவது, விலகி நிற்பது இல்லாவிட்டால் எதிர்ப்பு அரசியல் செய்வது போன்ற குதர்க்கமான நிலைப்பாடுகள் தேவையற்றதாகும். அந்த வகையில் கொழும்பு மாநகரசபைக்குள் மூன்றாவது சக்தியாக ஜனநாயக மக்கள் முன்னணி திகழ்கின்றது. தமிழ் மக்களின் வாக்குகளால் 6 உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட மேற்படி முன்னணியானது கொடுத்த வாக்கினைக் காப்பாற்றிக் கொள்ள கூடிய வகையில் நடந்து கொண்டால் மாத்திரமே ஜனநாயக மக்கள் முன்னணியினதும் அதன் தலைவர் மனோ கணேசனினதும் கௌரவம் காக்கப்படும். பிரசார நடவடிக்கையின்போது ஐக்கிய தேசியக் கட்சி சிறுபான்மையினதிடத்தில் எதனைக் கூறி வாக்குகளை சேர்த்ததோ அதேபோன்ற காரணங்களையே ஜனநாயக மக்கள் முன்னணியும் முன்வைத்து தற்போது 6 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் கொழும்பின் சிறுபான்மை மக்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரவளித்தே ஆக வேண்டும். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் அதன் பின்னரும் நடந்ததைப் போன்று மீண்டும் நடவாதிருப்பதே நன்மையைப் பயக்கும். இது இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் பொருந்தும். ஏனெனில் மக்கள் சேவையிலிருந்து விலகி நிற்பவர்களும் கட்சி மாறுபவர்களும் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றமை கண்கூடாகும்.

மத்திய கொழும்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புதிதாக கொழும்பு மாநகர சபைக்கு தெரிவாகியுள்ளவருமான மொஹமட் மஹ்ரூப் 2004 ஆம் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபைக் குட்பட்ட 5 தேர்தல் தொகுதிகளிலும் 46234 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். அதேபோல் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் கொழும்பில் 32353 வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் நடந்து முடிந்த கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் மேற்குறித்த 5 தேர்தல் தொகுதிகளிலும் வெறும் 6726 வாக்குகளையே பெற்றிருந்தார்.

இங்குதான் கொழும்பில் யானைச் சின்னத்தின் பெறுமதி தங்கியிருக்கின்றது. இதேபோல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தன்மை வேட்பாளரான சபீக் ரஜாப்டீன் 2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் யானையின் கீழ் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 5 தேர்தல் தொகுதிகளிலும் 35,071 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்ததுடன் முன்னாள் எம்.பி. மகேஸ்வரனின் மறைவுக்கு பின்னர் பீக்ரஜாப்டீன் எம்.பி.யாக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 30875 வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் தற்போது நடைபெற்ற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தன்மை வேட்பாளராக போட்டியிட்ட அவர் உறுப்பினராகக் கூட தேரிவு செய்யப்படவில்லை. அது மட்டுமல்லாது ஆளும் கட்சியின் மேயர் வேட்பாளராக நின்றவரும் தற்போதைய கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான மிலிந்த மொறகொட ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகியதுடன் அவரது அரசியல் வீழ்ச்சியடைந்து விட்டது.

2004 இல் யானைச் சின்னத்தில் களமிகியறங்கிய அவர் கொழும்பு மாநகர சபைக் குட்பட்ட 5 தேர்தல் தொகுதிகளிலும் 41,369 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். எனினும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு 24296 வாக்குகளே கிடைக்கப்பெற்றன. இந் நிலையில் மிலிந்த மொறகொட தற்போது கொழும்பு மாநகரபைக்கான தேர்தலில் 32,103 வாக்குகளை மாத்திரமே பெற்று எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்துள்ளார். இதே நிலைமைதான் மனோகணேசனுக்கும் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அவருக்கு 2004 பொதுத் தேர்தலில் கிடைத்த விருப்பு வாக்குகள் 51,508 ஆகும். இதில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதி களில் மாத்திரம் கிடைக்கப் பெற்ற வாக்குகள் 41,203 ஆகும். இந்நிலையில் அவர் தற்போது கொழும்பு மாநகரசபை யில் 28,433 விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளார்.

இது அவருக்கு ஒரு கணிசமான பின்னடைவாகும். இவ்வாறான நிலையில் பிரதான கட்சிகள் தவிர்ந்த சிறு கட்சிகள் அவை முஸ்லிம் கட்சிகளானாலும் தமிழ்க் கட்சிகளானாலும் தெற்கில் அரசியல் செய்வதென்றால் வீராப்புக்கள் மூட்டை கட்டப்பட வேண்டும்.

மேலும் அரசியல் களத்தில் தான் ஒரு நிறைவான அரசியல்வாதியென்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தம்மைத் தயார்படுத்துவது அவசியமாகும். அந்தவகையில் கொழும்பு மாநகர சபைக்குத் தெவாகியுள்ள 24 தமிழ் பேசும் உறுப்பினர்களும் தமது மக்களுக்காக சேவை செய்ய தம்மைத் தயார்படுத்த வேண்டும். தவறுவார்களேயானால் அரசியல் அநாதைகளாக்கப்படுவார்கள் என்பது மாத்திரம் உறுதியாகும்.

தற்போது அதிகாரத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தனியொரு இனத்துக்கு சொந்தமான கட்சியல்ல, அது அனைத்து மக்களையும் உள்வாங்கியுள்ளது. அதுபோல் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள வெற்றியும் அவ்வாறு அமைந்தது தான். எனவே அக்கட்சி இன ஐக்கியத்தையும் மற்றும் இன சமத்துவத்தையும் பேண வேண்டிய தார்மீகப் பொறுப்பினைக் கொண்டிருக்கின்றது.

அனைத்து மக்களினதும் வாக்குகளால் மேயராக சிறுபான்மையினத்தைச் சேர்நத ஒருவர் தெரிவாகியிருக்கின்ற நிலையில் பிரதி மேயர் பதவியும் சிறுபான்மையினருக்கே வழங்கப்பட வேண்டும் என்பதும் இல்லாவிட்டால் பேரப் பேச்சுக்கள் இடம்பெறுவதும் ஒருவிதமான மிகைப் போக்காகும். இதனைக் காரணம் காட்டி எதிர்ப்பு அரசியல் செய்ய இயலப்படுமேயானால் அவ்வாறானவர்களின் பின் விளைவுகள் அடுத்துவரும் தேர்தல்களின் போது தெந்து விடும். எனவே கொழும்பு நகரின் தேவைகளை உணர்ந்து உண்மையான சேவைகளை முன்னெடுக்க முனைவோரை மக்கள் என்றும் மறந்து விடபபோவதில்லை. கொழும்பு நகரின் வடிகான்கள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றன.

மழை காலங்களில் கொழும்பு நகரிர் மக்கள் அவல வாழ்க்கை அனுபவிக்கும் நிலைமை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதற்கான சிறந்த திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.இதேவேளை, அரசாங்கம் அல்லாத கொழும்பு மாநகர சபை எதிர்க்கட்சியிடம் கொழும்பு மாநகர சபை சென்றிருப்பதால் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்துக்கும் அதன் திட்டங்களுக்கும் அரசாங்கம் இடையூறாக அமைந் துவிடக் கூடாது. மாறாக உதவுவதே மேன்மையானதாகும். ஏனெனில் ஆளும்தரப்பு சார்பிலும் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களையும் மக்களையும் முன்னேற்றுவதற்கென வாக்குறுதியளித்தே சிறுபான்மையினர் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

எனவே அவர்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட 5 உள்ளூராட்சி சபைகளை அதிகார சபைத் திட்டத்தின் கீழ் கொண்டு வரவிருப்பதாக அரசாங்கம் அவ்வப்போது கூறி வருகின்றது. எனினும் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப திட்டங்கள் வகுக்கப்படுவதே சிறந்ததாகும். ஜனநாயக ரீதியில் வழங்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையிலான செயர்பாடுகளை அரங்கேற்ற முற்படுவதானது குரோதமானது அதே நேரம் மக்கள் விரோதமானதுமாகும்.

http://akkinikkunchu.com/new/index.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.