Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவியுடன் "த நேசன்" ஆங்கில வார இதழ் நடாத்திய நேர்காணல்: தமிழாக்கம் டி.பி.எஸ். ஜெயராஜ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Soosais-wife-150interview.jpg

சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார். வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 � 18 ல் மரணமடைந்தார்.

சூசை 1963 ஒக்டோபர் 16ல் பிறந்தவர், இவர் வட இந்தியாவில் பயிற்சி பெற்ற புலிகளின் முதல் தொகுதி ஆட்சேர்ப்பாளர்களில் ஒருவர். கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் வடமராட்சி பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவராக கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் கீழ் பணியாற்றி வந்தார்.

சூசை 1991 முதலே கடற்புலிகள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார்,முதலில் ஒரு தளபதியாகவும் பின்னர் விசேட தளபதியாகப் பொறுப்பு வகித்தார் .தொடர்பாடல்களுக்காக பயன்படுத்தப்படும் சூசையின் சங்கேதக் குறியீடு "சீ ஒஸ்கார்" என்பதாகும்.

சூசை படிப்படியாக கடற்புலிகள் பிரிவில் ஏறக்குறைய தனது ஆளுமையை நிலை நிறுத்திக் கொண்டார். கடற்புலிகளை, "நான் வளர்த்த புலிகள்" என்று சொல்லிக் கொள்வதில் சூசை அதிக விருப்பமுள்ளவராக இருந்தார்.

எல்.ரீ.ரீ.ஈயின் பழைய காலத்தவர்களில் ஒருவரான சூசை, யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு எல்.ரீ.ரீ.ஈ யின் வலிமைமிக்க கோபுரங்களில் ஒன்றாகத் தன்னை நிரூபித்துக் காட்டியவர்.

மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கரையோர சமூகத்தவர்கள், அது ஒரு நுட்பமான தொழில் என்பதால் கடற்புலிகளுக்குள் நன்கு கலந்திருந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரக் கிராமமான பொலிகண்டியிலிருந்து வந்தவரான சூசை, இந்த மக்களின் பொதுவான பாரம்பரியம் மற்றும் பச்சாத்தாபம் என்பனவற்றை அவர்களோடு பகிர்ந்து கொண்டார். அவர் சாதாரண மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததோடு, சாதாரண மக்கள் உண்மையாக விரும்பும் ஒரு சில புலித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்ஜி ராமச்சந்திரனை அழைப்பது போல மக்களிடையே பிரபலமான சூசையையும் "மக்கள் திலகம்" என்றே அழைத்தனர்.

இந்திய இராணுவத்தினரோடு போரிட்டபோது சூசை காயமடைய நேர்ந்தது. குணமடையாமல் இருந்து வந்த காயங்கள் தொடர்ந்தும் அவருக்கு தொல்லை கொடுத்து வந்தது. பின்னர் ஒஸ்லோவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தின்போது சூசை இதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார். 2004 ஒக்டோபரில் சூசை, தில்லையம்பலம் சிவநேசன் என்கிற பெயரில் உள்ள, என் 13565685 என்கிற கடவுச் சீட்டைக் கொண்டு, எயார்பஸ் 330 ரக ஸ்ரீலங்கா விமானசேவைக்குச் சொந்தமான யுஎல் 316 விமான இலக்கத்தைக் கொண்ட விமானத்தில் சிங்கப்பூருக்குப் பறந்தார். அவருடன் வன்னியில் இருந்த மருத்துவரான ஞானசேகரம் கமிலஸ் தர்மேந்திரா என்பவரும், குயின்ரஸ் சகாயரத்னராஜா, மற்றும் கோபாலப்பிள்ளை சத்திய முகுந்தன் என்கிற இரண்டு மெயப்பாதுகாவலர்களும் துணையாகச் சென்றனர். சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் இருந்த பின் அவர் கிளிநொச்சிக்கு திரும்பி வந்தார்.

நான் த ஹிந்து மற்றும் புரொண்ட் லைன் ஆகிய பத்திரிகைகளின் கொழும்புச் செய்தியாளராக பணியாற்றிய சமயத்தில் 1986ல் சூசையைச் சந்தித்துள்ளேன். அப்போது தொண்டமானாறு, செல்வச்சந்நிதி, முருகன் கோவில் சுற்றாடலில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே ஒரு மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு உண்மையான போராட்டத்தைக் காணவேண்டும் என்று நான் எனது ஆவலை வெளிப்படுத்தியபோது, எல்.ரீ.ரீ.ஈ யின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் என்கிற கேணல் கிட்டு, 'சுக்லா' என்கிற ஒருவரை அழைத்து - எனது எண்ணப்படி அவர் மரியநேசன் என்பவராக இருக்க வேண்டும் - சண்டை நடைபெறும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

திடீரென தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட கிட்டு சூசையை அழைத்தார். பின்னர் கிட்டு சூசையை எனக்கு அறிமுகம் செய்து விட்டு சூசையைப் பற்றிச் சொன்னது, "இவர் அவதானமாகவும், பொறுமை மற்றும் பொறுப்புடனும் நடப்பவர்,இவர் உங்களை பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பக் கொண்டுவந்து விடுவார்" என்று. பின்னர் எங்களுக்கு நல்வாழ்த்து கூறி விடை பெற்ற அவர் சூசையிடம் கூறிய ஒரே வார்த்தை "கவனம்" என்பது மட்டும்தான். பின்னர் சூசை எனது இளமஞ்சள் நிறத்திலான எனது மேல்சட்டையை அகற்றும்படி கூறியதையும் டெனிம் கால்சட்டையுடன் போரைக் காண்பதற்காக புலிகளின் வெவ்வேறு நிலைகளை நோக்கி அவருக்கு பின்னால் ஊர்ந்து சென்றதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த அனுபவத்தின் பின்னர் கிட்டுவும் சூசையும் என்னை பத்திரமாகத் திரும்பக் கொண்டுவந்து சேர்த்தனர்.

கம்பர்மலையைச் சேர்ந்த சத்யநாதன் என்கிற சங்கரின் தங்கையான சத்யதேவி என்பவரைத்தான் சூசை திருமணம் செய்திருந்தார். சங்கர்தான் மோதலின்போது மரணமடைந்த முதல் எல்.ரீ.ரீ.ஈ போராளி. அவர் 27 நவம்பர் 1982ல் மரணமடைந்தார், மேலும் அந்த நாளைத்தான் எல்.ரீ.ரீ.ஈ வருடந்தோறும் மாவீரர் நாளாக அனுஷ்டித்து வருகிறது. அவருடைய தங்கையான சத்யதேவியின் மேல் காதல் கொண்ட சூசை அவரை மணந்து கொண்டார். அந்த திருமணம் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களின் இணைப்பாக இருந்தது.

அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். கடைசிப் பையனுக்கு அவனது தாய்மாமனின் நினைவாக சங்கர் எனப் பெயர் சூட்டப்பட்டது .சங்கர் 2007ம் ஆண்டு தனது ஐந்தாவது வயதில் கடலில் நடந்த ஒரு விபத்தில் காலமானான். 2007ஜூலை 18ல் நான்கு புதிய படகுகள் கடற்புலிகளுக்கு கிடைத்தன .வட்டவாகல் கடற்கரையில் வைத்து அவை ஒட்டிப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. சூசை தனது கடைசி மகனுடன் அந்தப் புதிய படகுகள் ஒன்றினுள் பயணித்துக் கொண்டிருந்தார். விபத்து நடைபெற்ற அந்த துரதிருஷ்டமான நாளில் சங்கர் தனது தந்தையுடன் அந்தப் படகில்தான் அமர்ந்திருந்தான். ஒரு வேகப் படகு வேகமாகத் திரும்பி மற்றொரு படகுடன் மோதியது. அத்தோடு ஒரு பெரிய வெடிப்பும் ஏற்பட்டது.

சங்கர் கொல்லப்பட்டான். அதேபோல சூசையின் மெய்ப்பாதுகாவலரில் ஒருவரும் கொல்லப்பட்டார். மற்ற மூன்று அங்கத்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மற்றவர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டன. சூசைக்கு கழுத்து, முதுகு மற்றும் தலையின் பின்பகுதி என்பனவற்றில் கடும் காயங்கள் ஏற்பட்டன அவர் நினைவு தப்பிய ஒரு கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. புதுக்குடியிருப்பில் உள்ள பொன்னம்பலம் தனியார் சிகிச்சை நிலையத்துக்கு சூசை கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் ஒரு பெயர் வெளியிடப்படாத ஒரு இடத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ யின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சையளிப்பதற்காக அவர் வேகமாக கொண்டு செல்லப்படடார்.செப்டம்பர் 26, 2007 லிலேயே சூசை திரும்பவும் பகிரங்கமாகத் தோன்றினார்.

தனது குழந்தைகள்மேல் அளவற்ற பாசம் கொண்ட ஒருவர் சூசை. நெல்லியடிவாசிகள் அவரது மூத்த மகனான கடலரசனின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நினைவு கூர்கிறார்கள். சிவநேசன் குடும்பத்தினர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலான "கடல்புறாவின்" வடிவத்தில் ஒரு பிரமாண்டமான கேக்கினை உருவாக்கினார்கள். நெல்லியடியில் உள்ள சுபாஷ் பேக்கரியில் தயாரிக்கப்பட்ட கேக்குகளிலேயே அது நீளம், அகலம் மற்றும் உயரங்களில் மிகவும் பிரமாண்டமான ஒன்றாக இருந்தது, அதை ஒரு பிக் - அப் வாகனத்தில் வைத்தே பிறந்தநாள் வைபவம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லவேண்டி இருந்தது.

எனவே முடிவு அருகே நெருங்கி வந்தபோது, சூசை தனது மனைவியினதும் குழந்தைகளினதும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சூசையின் மனைவி சத்தியதேவி ,மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் மற்றும் சூசையின் மைத்துனியும் குழந்தைகளும் உட்பட்ட உறவினர்கள் சிலருடன் மே 12,2009ல் காரைத்துறைப்பற்றிலிருந்து ஒரு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் இலங்கை கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப் பட்டார்கள். சத்யதேவி சூசையின் மனைவி என அடையாளம் காணப்பட்டார். அவரும் குழந்தைகளும் தனியாக வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அதன்பின்னர் அவரும் பிள்ளைகளும் திருகோணமலையிலுள்ள கடற்படை முகாம் வளாகத்தினுள் தடுத்து வைக்கப்பட்டனர். அதேபோல எல்.ரீ.ரீ.ஈ அரசியற்பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனின் விதவையான மனைவியும் பிள்ளைகளும் பனாகொடவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுடன் கூடிய விடுதலை வழங்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் அந்தக் குடும்பம் இப்போது கொழும்பு புறநகர் பகுதியில் வசித்து வருகிறது. அதேபோல சூசையின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுடன் கூடிய விடுதலை வழங்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் அந்தக் குடும்பம் இப்போது திருகோணமலையில் வசித்து வருகிறது.

சமீபத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" என்கிற ஆங்கில வார இதழுக்காக சாமரா லக்ஷன் குமார சத்யதேவிடம் ஒரு நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணலில் சத்யதேவி தனது சில அனுபவங்களை பதில்களாக நினைவு கூர்ந்திருந்தார். த நேசனின் பூரண அனுமதியோடு அவரது நேர்காணலை எனது தளத்தில் மறு பிரசுரம் செய்கிறேன்.

உங்கள் நண்பன் - டி.பி.எஸ். ஜெயராஜ்

சூசையின் மனைவி நடுக்கடலில் நடந்த நாடகத்தை நினைவு கூருகிறார்

-சாமரா லக்ஷன் குமார-

எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவர் ஒருமுறை அடுத்த ஈழப்போர் நடுக்கடலில்தான் நடைபெறும் என ஒருமுறை மிகைப்படுத்தி பேசியிருந்தார். அவரது அந்த மிகைப்படுத்தல் உதிப்பதற்கு காரணமாக இருந்தது, அவர்களது கடற்புலிகள் என்றழைக்கப்படும் போராளிகள் தங்களிடமுள்ள பல்வேறு வகையான கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கடற்படையினருக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறியிருந்ததே. கடற்புலிகளின் தலைவர் சூசை, எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு எதிராக நடத்தப்பட்ட இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டார், மற்றும் அவர் மனைவி சத்தியதேவி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் சகிதம் ,தப்பிச் செல்வதற்காக அவரது கணவர் சூசை வழங்கிய படகு ஒன்றின் மூலம் நந்திக்கடல் பிரதேசத்தை விட்டு வெளியேற முயன்றார். த நேசனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் சவாலான அந்த நாட்களையும் மற்றும் பாதுகாப்புக் காவலில் உள்ள அவரது தற்போதைய வாழ்க்கையையும் வெளிப்படுத்துகிறார்.

கேள்வி: உங்கள் கணவர் சூசையை எவ்வாறு நீங்கள் முதன்முதலில் சந்தித்தீர்கள் என்று எங்களுக்குச் சொல்வீர்களா?

பதில்: சூசை எல்.ரீ.ரீ.ஈ யில் பணியாற்றிய எனது அண்ணனின் ஒரு நண்பராவார். அந்த நேரத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். 1982ல் எல்.ரீ.ரீ.ஈ க்காக தனது உயிரைத் தியாகம் செய்த முதல் போராளி எனது அண்ணன். எனது அண்ணனின் மறைவுக்குப் பின்னரும் கூட சூசை எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கமாகிவிட்டது. நான் அவரை விரும்பத் தொடங்கினேன். அவர் தேவைப்படும் சமயத்தில் மிகவும் உதவி புரிபவராகவும் மற்றும் அவசியப் படுபவர்களுக்கு உதவி புரிவதில் தயக்கம் காட்டாதவராகவும் இருந்தார். அவருடைய நல்ல பழக்கங்கள் என்னைக் கவர ஆரம்பித்தன மற்றும் நாங்கள் நெருக்கமானவர்களாக மாறினோம். நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, அவர் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து இருந்ததால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. அப்போது அவர் வடமராட்சி பகுதியின் உள்ளுர் தலைவராக இருந்தார். எனினும் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்,மற்றும் அதன் பின் விரைவிலேயே அவர் கடற்புலிகளின் தலைவராக மாற்றம் பெற்றார்.

கேள்வி: நீங்கள் அப்போது எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டிருந்தீர்களா?

பதில்: இல்லை

கேள்வி: சூசையை மணந்த பிறகும் அந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லையா?

பதில்: அதன் பிறகும் மாறவில்லை.

கேள்வி: ஏன்?

பதில்: அது அவசியம் என்று நான் கருதவில்லை சூசையும் என்னை எல்.ரீ.ரீ.ஈ யில் இணையும்படி ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது.

கேள்வி: சூசை, எல்.ரீ.ரீ.ஈ விடயங்களைப்பற்றி வீட்டில் விவாதிப்பாரா?

பதில்: அப்படியான விடயங்களை அவர் ஒருபோதும் விவாதிப்பதில்லை. நாங்கள் வீட்டில் எங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விடயங்களைப்பற்றியே பேசுவோம்.

கேள்வி: அவர் வீட்டுக்கு வந்ததும் எதைப்பற்றி விவாதிப்பார்?

பதில்: அவருக்கு சிறிதளவு ஓய்வே கிடைக்கும். அவர் வீட்;டுக்கு வருவது பிரதானமாகவும் உறங்குவதற்கு வேண்டியே.

கேள்வி: உங்கள் வீடு எங்கே உள்ளது?

பதில்: ஆரம்பத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தோம்,ஆனால் இராணுவத்தினர் "ஒப்பறேசன் ரிவிரச" நடவடிக்கையை ஆரம்பித்த பின்னர்,நாங்கள் நகரத்தை விட்டு இடம் பெயர்ந்தோம். நாங்கள் தேவபுரம்,முல்லைவெளி,வள்ளிக்குளம் மற்றும் இறுதியாக 2007ல் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் வாழ்ந்தோம்.

கேள்வி: சூசை ஒரு வலிமையான மனிதராக அறியப்பட்டிருந்த போதிலும்,தனது பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்ததாக அநேகர் எழுதி அல்லது சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையா?

பதில்: அவர் தனது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசித்தார்.எங்கள் மகனின் முதலாவது பிறந்த நாளின்போது,எங்கள் மகனுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு சொந்தமாகவிருந்த முதல் கப்பலின் வடிவத்திலிருந்த கேக் ஒன்றை கொண்டுவந்திருந்தார்.அது நெல்லியடியில் இருந்த சுபாஷ் வெதுப்பகத்தில் அது தயாரிக்கப்பட்டது.அவரது கடமைகள் அவரது பிள்ளைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிக்க அவருக்கு இடமளிப்பதில்லை, ஆனால் அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை அவர் என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

கேள்வி: 2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவரின் அந்த பயணத்தைப்பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா?

பதில்: இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பட்டபோதும்,சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால்; தீவிர சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியது.

கேள்வி: சிங்கப்ப+ருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது?

பதில்: அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது.தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும்,அவருடன் கூடச் சென்றார்கள்.ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரண்டு தரம் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினர்ர்.

கேள்வி:பிரபாகரனுக்கும் சூசைக்கும் இடையே உறவு எப்படியாக இருந்தது.

பதில்: சூசை பிரபாகரன் மீது உயர்வான நம்பிக்கை வைத்திருந்தார், மற்றும் அதேபோல பிரபாகரனும் சூசைமீது உயர்வான நம்பிக்கையை வைத்திருந்தார்.

கேள்வி: உங்களது குடும்பம் பிரபாகரனின் குடும்பத்தினரோடு எந்த வகையான உறவினைக் கொண்டிருந்தது?

பதில்: எங்களது குழந்தைகள் பிறந்த நேரத்தில் பிரபாகரனின் குடும்பத்தினர் அனைவரும் எங்களிடம் வருகை தந்தனர், அதைத்தவிர வேறு வருகைகள் எதுவும் இடம் பெறவில்லை. ஆனால் புலிகளின் விழாக்களிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ நிச்சயமாக நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வோம். அப்போது நாங்கள் எங்களுக்கு அக்கறையுள்ள பல விடயங்களையும் பற்றிப் பேசிக் கொள்வோம். பிரபாகரன் மற்றும் மதிவதனி ஆகிய இருவருமே எப்படி எங்களின் குழந்தைகளின் படிப்பு விடயங்கள் முன்னேற்றகரமாக உள்ளனவா என வழக்கமாக எங்களிடம் விசாரிப்பதுண்டு.

கேள்வி: உங்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ யினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கி வந்தபோது நீங்கள் அச்சமடையத் தொடங்கினீர்களா?

பதில்: ஏன் இல்லை. யார்தான் அச்சப்பட மாட்டார்கள்?

கேள்வி: அப்போதுகூட எல்.ரீ.ரீ.ஈ யை விட்டு விலகுமாறு அவரிடம் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?

பதில்: நான் அவரிடம் கேட்டிருந்தால்கூட அவர் ஒருபோதும் எல்.ரீ.ரீ.ஈயை விட்டு வெளியேறியிருக்க மாட்டார். தனது சாவு, தான் எல்.ரீ.ரீ.ஈக்காக பணியாற்றும்போது வரக்கூடுமே தவிர வேறு வழியினால் அல்ல என்று அவர் வழக்கமாகச் சொல்வதுண்டு.

கேள்வி: 2007ம் ஆண்டு உங்களுக்கு ஒரு மோசமான ஆண்டாக இருந்தது அல்லவா, உங்கள் மகன் சங்கர் இறந்தது மற்றும் சூசை கூட மிகவும் மோசமான காயங்களுக்கு உள்ளானது போன்றவற்றால்?

பதில்: எனக்கு அந்த திகதி நினைவில் உள்ளது. அது ஜூலை 18ந்திகதி. கிளிநொச்சியில் நடக்கும் ஒரு விழாவுக்காக நான் வாகனமொன்றில் செல்ல இருந்தேன். எங்களது இளையமகன் வாகனங்களில் பயணம் செய்வதில் அளவுகடந்த ஆசை உள்ளவனாக இருந்தான், அதேபோலவே அவன் கடலையும் விரும்பினான். ஆனால் சூசை ஒருபோதும் எங்களது மகனை கடலுக்கு கூட்டிப்போனது கிடையாது. அவர் அவரது மகனை கரையில் உள்ள படகு ஒன்றில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர் ஆழ்கடலுக்குச் செல்வார். சங்கர் படகிலிருந்து மற்றவர்களுடன் விiயாடுவான். இது நடந்த தினத்திலும் கூட இதையேதான் சூசை செய்தார், ஆனால் எப்படியோ அல்லது வேறுவிதமாகவோ அவர் தனது ஆட்களிடம் எனது மகன் இருந்த படகினையும் ஆழ்கடலுக்கு கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். அந்நேரத்தில் படகுகள் சில பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயிற்சியில் ஈடுபட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ படகுகளில் ஒன்று ,சூசையின் படகுடனும் மற்றும் எனது மகன் இருந்த படகுடனும் மோதியது. இந்த விபத்தில் நான் எனது மகனைப் பறிகொடுத்தேன்.

கேள்வி: அது திட்டமிட்ட ஒரு விபத்து என்று நாங்கள் கேள்விப் பட்டோம்?

பதில்: அப்படி ஒரு வதந்தி நிலவியது, ஆனால் அது ஒரு விபத்து என்றே நான் நம்புகிறேன்.

கேள்வி::அந்த விபத்தில் சூசைக்கு என்ன நடந்தது?

பதில்: அவரது வயிற்றில் மிக நீளமாக கிழிக்கப்பட்டிருந்த காயம் இருந்தபோதிலும் உண்மையில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, மற்றும் அது நடந்தபின் மூன்று வாரங்களாக அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார்.

கேள்வி:: பொட்டு அம்மான் அந்த படகு விபத்தை ஏற்பாடு செய்ததாக வதந்தி பரவியது, அதுகுறித்து எல்.ரீ.ரீ.ஈ கடும் மௌனம் சாதித்ததால் அந்த வதந்தி உண்மையோ என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது?

பதில்:: ஆனால் அவர் அந்த விபத்தை ஏற்பாடு செய்திருப்பார் என நான் நினைக்கவில்லை.

கேள்வி:: பொட்டு அம்மான் அந்த விபத்து நடந்ததுக்குப் பிறகு உங்களுடன் பேசினாரா?

பதில்: ஆம் அவர் என்னுடன் பேசினார். பொட்டு அம்மான் மட்டுமல்ல மற்ற எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் என்னுடன் பேசினார்கள். எல்லா எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களும் எனது மகனின் மரணச் சடங்கில் கலந்து கொண்டார்கள்.

கேள்வி:: காயங்கள் சுகமடைந்த பின்பு அந்த விபத்தைப்பற்றி சூசை ஏதாவது சொன்னாரா?

பதில்:எமது மகனின் மறைவினால் அவர் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்திருந்தார். அது அவருடன் நீண்டகாலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நான் அவரிடம் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளிலிருந்து கொஞ்ச நாட்கள் ஒதுங்கி இருக்கும்படியும் ஆனால் தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் எனது அறிவுரைகளைக் கேட்கவில்லை.

கேள்வி:: நீங்கள் எல்.ரீ.ரீ.ஈயினருக்கு எதுவித உதவியும் செய்வதில்லை எனச் சொல்லப்படுகிறதே. நீங்கள் வீட்டிலிருந்து என்ன செய்வீர்கள்?

பதில்:நான் எனது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதுடன் வீட்டில் அவர்கள் தேவைகளையும் பார்த்துக் கொள்வேன். எங்கள் தேவைகளுக்கு வேண்டிய உணவுப் பயிர்களை நானே பயிர் செய்து கொள்வேன். எனது குழந்தைகளுடன் தொலைக்காட்சி பார்ப்பதில் இணைந்து கொள்வேன்.

கேள்வி: எல்.ரீ.ரீ.ஈ வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவிகளை வழங்காத போதிலும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களின் குடும்பங்களுக்கு வாகனங்களையும் பாதுகாப்பினையும் வழங்கியிருந்ததே?

பதில்: எங்களுக்கு ஒரு வானும் மற்றும் சாரதியுடன் கூடிய ஒரு முச்சக்கர வண்டியும் மற்றும் ஒரு பாதுகாப்பு கடமையாளரும் வழங்கப்பட்டிருந்தன.

கேள்வி:: வடக்குக்கு வெளியே கொழும்பை போன்ற இடங்களில் என்ன விடயங்கள் நடைபெறுகின்றன என்கிற தகவல்களை அறியக்கூடிய வழிகள் உங்களுக்கு இருந்தனவா?

பதில்: நாங்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து அப்படியான விடயங்களை அறிந்து கொள்வோம். சிலவேளைகளில் சூசை வீட்டுக்கு வரும்போது தெற்கில் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகை ஒன்றை வழக்கமாகக் கொண்டு வருவார்.

கேள்வி:: யுத்தம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை எப்போது நீங்கள் அறிந்தீர்கள்?

பதில்: ஆரம்பத்திலிருந்தே நாங்கள் அச்சத்துடன்தான் வாழ்ந்து வந்தோம். இறுதிக்கட்டத்தில் நாங்கள் பதுங்கு குழிகளை விட்டு வெளியேறினால் எந்த வித மாற்றமுமில்லாமல் காயமடைவோம் என்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். விடயம் அத்தகைய மோசமான நிலைக்கு வந்துவிட்டது.

கேள்வி:: இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் கிரிக்கட் போட்டிகள் நடந்த போது யாருக்கு நீங்கள் ஆதரவு வழங்கினீர்கள்?

பதில்: நாங்கள் இந்தியாவுக்கே ஆதரவு வழங்கினோம். நாங்கள் சச்சின் டெண்டுல்கரை மிகவும் விரும்பினோம்.

கேள்வி:: முரளீதரன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: முரளீதரனையும் நாங்கள் விரும்பினோம் ஆனால் டெண்டுல்கரை அதைவிட அதிகம் விரும்பினோம்.

கேள்வி:: யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது நீங்கள் புதுக்குடியிருப்பிலிருந்து வெளியேற விரும்பினீர்கள். ஏன்?

பதில்: நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பியது, மே 12ல். அந்த நேரத்தில் அதிக அளவிலான மக்கள் ஒரு சிறு பகுதி நிலப்பரப்பினுள் அடைபட்டுக் கிடந்தார்கள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தோல்விக்கு அது தெளிவான சான்றாக அப்போது தோன்றியது. நாங்கள் எங்கள் மகள் சிந்துமணியையும் மற்றும் மகன் கடலரசனையும் சூசையின் மூத்த சகோதரனின் மனைவி மற்றும் பிள்ளையுடன் ஒரு படகில் அந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் நான் மற்றவர்களை விட்டுச் செல்ல முடிவெடுக்கவில்லை, ஏனெனில் சூசை அப்படிச் செய்வதை விரும்பவில்லை. ஆனால் இறுதியாக நான் எனது பிள்ளைகளுடன் செல்வது என முடிவெடுத்தேன். சூசை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இறுதிவரை தான் போராடப்போவதாக தெரிவித்த சூசை பின்னர் வெளியேறுவதற்காக எங்களுக்கு ஒரு படகினை வழங்கச் சம்மதித்தார்.

கேள்வி:: அந்தப் படகிலேறி எங்கே செல்ல விரும்பினீர்கள்?

பதில்: எங்களுக்கு இரண்டு இலக்குகள் இருந்தன. ஒன்று முடியுமானால் இந்தியாவுக்கு தப்பிச் செல்வது ஆனால் இதன்போது நாங்கள் ஆழ்கடலில் ஸ்ரீலங்கா கடற்படையினரின் கப்பல்களை எதிர்கொள்ள நேரிடும். கடற்படையினரிடம் பிடிபடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை, அனால் எங்கள் எண்ணமெல்லாம் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பிலேயே இருந்தது. நாங்கள் மே 12ந்திகதி வெளியேற தீhமானித்தாலும் உக்கிரமடைந்த யுத்த நிலமை எங்களை பதுங்கு குழிகளுக்குள்ளேயே தங்கியிருக்க வைத்தது. எனவே கடைசியாக நாங்கள் மே 14ந்திகதியே வெளியேறினோம்.

கேள்வி: மே 12ந்திகதி பிரபாகரனையும் அவரது குடும்பத்தினரையும் நீங்கள் புதுக்குடியிருப்பில் வைத்து காணவில்லையா?

பதில்: ஆம் அவர்கள் அங்கேதான் இருந்தார்கள், நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் வரை அவர்கள் அங்கே பத்திரமாக இருந்தார்கள்.

கேள்வி:: அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர்களுடன் பேசினீர்களா?

பதில்: நான் அவர்களுடன் பேசவில்லை, ஆனால் சிலவேளைகளில் நாங்கள் வெளியேறுவதைப்பற்றி சூசை அவர்களிடம் சொல்லியிருக்கலாம்.

கேள்வி:: பிரபாகரன் அடைபட்டுக் கிடந்த மக்களுடன் இருந்தாரா அல்லது அவர்களிடமிருந்து வேறுபடுத்தப்பட்டு இருந்தாரா?

பதில்: அந்த இறுதிக்கட்டத்தின்போது அவர்களுக்காக எந்த ஒரு தனியான இடமும் இருந்திருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

கேள்வி:: அவரை விட்டுப் பிரியும் முன்பு சூசை என்ன சொன்னார்?

பதில்: நான் கடைசியாக அவரைப் பார்த்தது, மே 12ல். ஆனால் மே 14ல் நாங்கள் அந்த இடத்தை வெளியேறும்போது நான் அவரைக் காணவில்லை . நாங்கள் அன்றுதான் வெளியேறுகிறோம் என்பதை அவர் அறியவில்லை, எங்களுக்கென்று தனியான பதுங்கு குழிகள் எதுவும் இருக்கவில்லை அதனால் நாங்கள் மற்றவர்களுடன் ஒரு பதுங்கு குழியினைப் பகிர்ந்து கொண்டோம்.

கேள்வி: நீங்கள் வெளியேறுவதற்கு முன்னதாக சூசை எங்கேயிருக்கிறார் என்பதை அறிய நீங்கள் முயற்சி செய்யவில்லையா?

பதில்: நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருந்த சூழலில் அதைச் செய்ய முடியவில்லை. யுத்தமானது அநேகமாக ஒரு கைப்பிடியினுள் அடங்கும் நிலையை எட்டியிருந்தது. நாங்கள் எங்களுக்குத் தெரிந்த ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தினரிடம் ,நாங்கள் வெளியேறுவதை சூசையிடம் தெரிவிக்கும்படி சொன்னோம். இரவு 9 மணியளவில் புறப்பட்டோம். நாங்கள் 12பேர்கள் அந்தப் படகில் இருந்தோம் ஆனால் படகு தாக்கப்படும்வரை எங்களால் சுமார் 4 நிமிடம் மட்டுமே பயணம் செய்ய முடிந்தது.

கேள்வி:: பின்னர் என்ன நடந்தது?

பதில்: அதை இயக்கிக் கொண்டிருந்த நபரை அவர்கள் தாக்கியபோது அவர் குண்டடிபட்டு படகினுள் விழுந்தார். படகின் பல இடங்களிலும் துவாரம் ஏற்பட்டு அதனுள்ள நீர் வர ஆரம்பித்தது. நாங்கள் நீரை வெளயேற்றிக் கொண்டிருந்தபோது சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய கடற்படைப்படகு எங்களை அணுகியது. சிலர் கொட்டியா கொட்டியா எனச் நத்தமிடுவதை நான் கேட்டேன் மற்றும் அவர்கள் எங்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ என நாங்கள் அஞ்சினோம். அந்த நிமிடத்தில் ஒரு பெரிய படகு உறுதியான வெளிச்சத்தை பாய்ச்சியபடி எங்களை நோக்கி வந்தது. சூசையின் சகோதரரின் மனைவி றூபனின் கைக்குழந்தையை உயர்த்திக் காட்டினார். சிறிய படகில் இருந்த மனிதர்கள் எங்களை நெருங்கி வந்து எங்களுடன் தமிழில் பேசினார்கள். �பயப்பட வேண்டாம் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம்;� என அவர்கள் சொன்னார்கள் .பிறகு அவர்கள் எங்களை அவர்களது படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தார்கள்.

கேள்வி:: நீங்கள் சூசையின் மனைவி என்பதை அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்களா?

பதில்: உடனடியாக இல்லை. எனது இரண்டு பிள்ளை களையும் சூசையின் சகோதரரின் மனைவியுடையது என்று கூறினேன.; எனது சொந்த விருப்பத்தின்படி தனிமையாக்கப்பட்ட நான், றூபனின் தூரத்து உறவினர் என அவர்களிடம் கூறினேன். நாங்கள் புறப்படும் முன்பே நாங்கள் கடற்படையினரிடம் அகப்பட நேர்ந்தால் இவ்வாறு பேசவேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம். எப்படியாயினும் சூசையின் சகோதரரின் மனைவி தனது காலிலுள்ள காயமொன்றுக்கு மருந்து போட என்னுடன் மருத்துவ நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முதலாவது சோதனைச் சாவடியை நாங்கள் கடந்தபோது கடற்படையினரிடம் சரணடைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் ஒருவர் என்னைச் சுட்டிக்காட்டி நான் சூசையின் மனைவி என்பதை சொல்லிவிட்டார். உடனடியாகவே பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். இரண்டாவது தடவையாக நான் மற்றவர்களிடமிருந்து வேறாக்கப் பட்டேன். நான் ஏன் எல்.ரீ.ரீ.ஈ பிரதேசத்தை விட்டு வெளியேறினேன் என்றும் நான் எங்கு போக எண்ணியிருந்தேன் என்றும் என்னிடம் வினாவினார்கள். கடற்படையினர் என்னை தடுக்காவிட்டால் நான் இந்தியாவுக்குச் செல்ல எண்ணியிருந்ததாக நான் அவர்களிடம் சொன்னேன். இந்தியாவை அடைந்ததும் அங்கிருந்து லண்டனில் உள்ள எனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி ஏதாவது ஏற்பாடுகளைச் செய்திருப்பேன் என கடற்படையினரிடம் தெரிவித்தேன்.

கேள்வி:: கடற்படையினர் சூசையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கவில்லையா?

பதில்: எனக்கு சூசையின் தொலைபேசி இலக்கம் தெரியுமா என அவர்கள் என்னிடம் வினவியபோது எனக்குத் தெரியாது என அவர்களிடம் நான் கூறினேன். ஆனால் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

கேள்வி:: சூசை ஒரு தொலைபேசியை பயன படுத்தியதில்லை என்றா சொல்ல வருகிறீர்கள்.

பதில்: அவர் ஒன்றைப் பயன்படுத்தி வந்தார் ஆனால் மே 12ந்திகதி கடைசியாக நான் அவரைச் சந்தித்த போது அவரிடம் தொலைபேசி எதுவும் இருக்கவில்லை.

கேள்வி:: மே 12ந்திகதி எல்.ரீ.ரீ.ஈ யுத்தத்தில தோற்கடிக்கப்படும் என்பதை, சூசை அறிந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?

பதில்: யுத்தத்தில் நாங்கள் வெல்வோமா அல்லது தோற்போமா என்பதை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. அவ்வளவு குறுகிய நேரச் சந்திப்பு. ஒரு எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் எங்களை அவரிடம் கூட்டிச் சென்றபோது நாங்கள் அங்கே நிற்கிறோம் என்பதைக் காணமட்டுமே அவரால் முடிந்தது. அந்தச்சமயத்தில் இராணுவத்தினர் வெகு சமீபத்தில் வந்து விட்டதால் வெகுநேரம் எங்களால் அங்கு நிற்க முடியவில்லை.

கேள்வி:: கடற்படையினர் உங்களை அடையாளம் கண்டு கொண்டபின் என்ன நடந்தது?

பதில்: எங்களை அவர்களது முகாமுக்கு கொண்டு சென்றார்கள். எங்கள் படகில் துவாரங்கள் ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டதால் படகினை இலகுவானதாக்க நாங்கள் எங்கள் பொதிகள் யாவற்றையும் தூக்கி எறிந்து விட்டோம் மற்றும் நாங்கள் அப்போது உடுத்திருந்த உடைகள் ம்ட்டுமே எங்களிடம் இருந்தது. கடற்படையினர் எங்களுக்கு உடைகளை வழங்கினார்ர்கள்.

கேள்வி:: உங்களது தற்போதைய வாழ்க்கையைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

பதில்: நாங்கள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டதும், எனது பிள்ளைகளும் நானும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப் படுவோமோ என எண்ணி நான் ஆழமாக அச்சமடைந்திருந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்கும் போது நாங்கள் நலமாகவே உள்ளோம்.

கேள்வி:: நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்று கூறுவதால் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: அது இப்படித்தான். நாங்கள் எங்களுக்கு உரியது என் நம்புவதிலும் அதிகம் வசதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. பிள்ளைகள் பாடசாலை மற்றும் பூங்கா என்பனவற்றுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நானும் அவர்களுக்கு துணையாகச் செல்கிறேன். ஆனால் நாங்கள் எங்கள் சொந்த பந்தங்களைப் பார்ப்பதற்கும் மற்றும் வேறு இடங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப் படவதில்லை என்பதை எண்ணும்போதுதான் நான் துக்கப்படுகிறேன்.

கேள்வி:: உங்கள் உறவினர்கள் உங்களுடன் பேசினார்களா?

பதில்: என்னுடைய சகோதரரும் தந்தையும் லண்டனில் வசிக்கிறார்கள். தொலைபேசி மூலம் அவர்கள் என்னுடன் பேசுவார்கள். அவர்கள் ஒருமுறை என்னைக் காண வந்திருந்தார்கள்.

கேள்வி:: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: எனது இரண்டு பிள்ளைகளுக்கும் முறையான கல்வி வழங்கப்பட்டால் அதுவே எனக்குப் போதும் மற்றும் அவர்கள் படிப்பதற்கு வேண்டிய வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

கேள்வி:: உங்கள் தினசரி வாழ்க்கைமுறை என்ன?

பதில்: நான் காலை 4.30 மணிக்கு எழுந்து எனது பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களை பாடசாலைக்கு அனுப்புகிறேன் அதன் பின்னர் நான் துவைத்தல், வீட்டுச் சாமான்களை அடுக்கி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். வெளியே கோவில் மற்றும் பூங்கா என்பனவற்றுக்கச் செல்கிறேன் இரவில் வேலை ஏதுமின்றி இருந்தால் தொலைக்காட்சிகளை ரசிப்பேன்.

கேள்வி:: மிக முக்கியமான ஒன்றை உங்களிடம் கேட்க மறந்து விட்டேன். நீங்கள் கடற்படையின் படகுகளால் வழி மறிக்கப்பட்டபோது உங்களிடம் 2 கிலோகிராம் தங்கம் மற்றும் ரூபா 600,000 பணம் என்பன உங்களிடம் இருந்ததாக அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தளவுக்கு தங்கமும் பணமும் ஏன் கொண்டு சென்றீர்கள?

பதில்: என்னிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை, ஆனால் என்னுடையது 200,000ரூபா. மற்றும் றூபுனின் மனைவியுடையது 200,000ரூபா. எங்களோடிருந்த மற்றொருவருடைய பணம் 175,000ரூபா என்பனவே மொத்தப்பணமும். எல்லா தங்க நகைகளும் என்னுடையதல்ல, ஆனால் எங்கள் மூவருக்கும் சொந்தமானது. என்னுடைய தங்க நகைகள் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பலராலும் பரிசுகளாக வழங்கப்பட்டவைகளாகும்.

கேள்வி:: உங்களைச் சுற்றி யுத்த அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கையில் இவ்வளவு தங்கத்தையும் எப்படி உங்களால் வைத்துச் சமாளிக்க முடிந்தது மற்றும் தப்பி ஓடும்போது ஏன் அவற்றைக் கொண்டு சென்றீர்கள்?

பதில் : நான் தங்கங்கள் யாவற்றையும் ஒரு பெட்டியில் போட்டு நாங்கள் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வேன், எனதுபிள்ளைகளுடையதும் மற்றும் என்னுடையதும் எதிர்காலத்துக்கு பயன்படும் என்கிற எண்ணத்தில்தான்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள மக்களாதரவில் வலிமையான சக்தி கொண்டு விளங்கும் சிங்கள ஊடகரின் கருத்து சுதந்திரமே உலாவமுடியாத ஒரு தேசத்தில், மொத்தமாய் இனத்தைக் கொன்றாலே கேட்க ஆள் இல்லாத ஒரு அநாதை இனத்தில் இப்படி ஒரு செவ்வியின் தேவை என்ன? சிங்கள ஆரசபயங்கரவாதத்தை வெள்ளை அடிக்கவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.