Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவுகளை முதன்மைப்படுத்தும் காலம் இது. முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும் நாம் பலவிதமான கவனஈர்ப்புப்போராட்டங்களிலும் வேறுமுயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். நமது விடுதலைப்போராட்டம் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில் நம்மால் இயன்ற சகல சனநாயக வழிமுறைகளிலும் நமது போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதில் கருத்துவேற்றுமைக்கு இடமில்லை. வெளிப்புறத்தில் உலகமக்களினதும் தலைவர்களினதும் பல நாட்டு அரசுகளினதும் ஆதரவைப்பெற முயற்சிக்கும் நாம், நமக்கு உள்ளேயிருக்கும் ஆண்டவனின் ஆதரவையும் பெறமுயற்சித்தால் என்ன?

எமது கீழைத்தேசப்பண்பாட்டில், வாழ்க்கைமரபுகளில்,தெய்வ வழிபாட்டிற்கு முதன்மையான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நெடுங்காலமாக அங்ஙனம் வாழ்ந்து பழகியவர்கள் நாம். "ஆதிபகவன் முதற்றே உலகம்", நாம் கற்ற கல்வியின் பயனே கடவுளைத் தொழுதலாகும் எனக் கருதியவர்கள் நாம். இப்போது புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் நமது முதன்மையான, அடிப்படையான வாழ்க்கை அம்சங்களை, உன்னதங்களை நாம் கைவிடக்கூடாது. வரலாற்றில் முன்னெப்போதும் சந்தித்திராத அழிவுகளையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும் இக்காலப்பகுதியில் நமக்கு உள்ளேயும் திரும்பி கடவுளின் கவனத்தை ஈர்க்கும் வேண்டுதல்களிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவோம்.

பிராத்தனையின் இயல்பு, அதன் பயன் என்பவற்றை மிக எளிமையான, அழகான முறையில், " கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் , தேடுங்கள் சென்றடைவீர்கள் " என்ற புனித பைபிள் வாசகம் விளக்குகிறது. சைவத்திருமுறைகளில் வரும் பின்வருவன போன்ற பல வரிகள் அதனையே வலியுறுத்துகின்றன.

"வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" "வேண்ட முழுதும் தருவோய் நீ"

" தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி". "அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை".

" மனத்துள் நின்ற கருத்தானை, கருத்தறிந்து முடிப்பான் தன்னை"

மேலும் இறைவன் நமக்குள்ளேயே இருக்கிறார் என்பதனை புனித பைபிளில், "இறைவனின் இராச்சியம் உனக்குள்ளேயே இருக்கிறது " என்ற புகழ்பெற்ற வாசகம் தெளிவுபடுத்துகிறது. இராச்சியம் உள்ளே இருப்பின் அதற்கு அதிபதியான இறைவனும் உள்ளேயே இருக்கிறார் என்பது அதிலிருந்து பெறப்படும். திருமுறைகளில் இதே கருத்து பின்வருவன போன்ற பல வரிகளால் வலியுறுத்தப்படுகிறது.

"கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி"; "உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்"

"நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" ; "காயமே கோயிலாக..... " .................................. [காயம் = உடல்]

"உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி"; "சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்"

"எந்தையே ஈசா உடல் இடங்கொண்டாய்" ; "என் சிந்தை நீங்கா இறைவா போற்றி"

எனவே உள்ளக்கோவிலில் வழிபாடுசெய்ய, வேண்டுதல்செய்ய, நீங்கள் வெளியே எங்கோ இருக்கும் கோவிலுக்கோ, தேவாலயத்திற்கோ போகவேண்டிய அவசியமில்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே, வசதியான எந்த நேரத்திலும் வழிபாட்டில் ஈடுபடலாம். கடவுளின் கவனத்தை ஈர்ப்பதற்கான இப்போராட்டவழிமுறைக்கு பொலீசாரின் முன் அனுமதி தேவையில்லை, நமது தொழிலுக்குச் செல்லாமல் விடுமுறை எடுக்கவும் தேவையில்லை. இளையோர் தொடங்கி முதியோர்வரை சகலரும் ஆரவாரமின்றி, அமைதிவழியில் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம்.

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் இருந்தபோது தமிழ் படித்தார். ஓரளவு தமிழில் எழுதவும் அவருக்குத் தெரியும். இந்தியப்பிரிவினையின்போது - 1947 இல் - வடஇந்தியாவில் வகுப்புக்கலவரங்கள் ஏற்பட்டன. கொடுமையான வகையில் பஞ்சாபி இந்துக்களும் சீக்கியர்களும் கட்டிய ஆடையுடன், நிர்க்கதியாக டெல்கி வந்து சேர்ந்தனர். அந்த அகதிகளில் ஒருவர் மகாத்மா காந்தியிடம் தங்களைக் காப்பாற்றும்படி அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவிடம் கூறும்படி கேட்டார். அதற்கு காந்தி அண்ணல், "நேருவினால் எதுவும் ஆகாது, இறைவனை வேண்டுங்கள், அவர் செவிசாய்ப்பார். நான் அதைத்தான் செய்கிறேன் " என்று பதில் கூறினார். அண்ணலின் கருத்தை ஆதரிக்காத தான் அதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டபோது காந்தியடிகள் தனக்கு "திக்கற்றவர்க்கு தெய்வமே துணை " என்ற முதுமொழியைத் தமிழில் எழுதிக்காட்டியதாக தமிழக எழுத்தாளரும்,முன்னாள் இந்திய இராணுவ அதிகாரியுமான, மேஜர் தி.சா.ராசு தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். [நிகழ்ச்சிகள் நினைவுகள் = வானதி பதிப்பகம்,சென்னை = மார்ச் 1991 = பக்:2 - 3]. மகாத்மா காந்தியின் அந்த வழிகாட்டுதலை நாமும் பின்பற்றலாம்.

ஈழத்தமிழர்களாகிய நாம் மிகச்சிறிய ஒரு சிறுபான்மைஇனம். நமது போராட்டத்தை அழித்தொழிக்கவேண்டுமென ஆசியாவின் ஆதிக்கசக்திகளும்,மேற்கின் மேலாதிக்கசக்திகளும் வரிந்துகட்டிக்கொண்டு செயற்படுகின்றன.அதனால் நாம் மிகமிகவிழிப்பாக,ஒற்றுமையுடனும்,கட்டுக்கோப்புடனும், நீண்டநெடுங்காலம் தொடர்ந்து போராடவேண்டும். அதனால் பொருத்தமான வழிமுறைகள் எல்லாவற்றையும் முழுமையாக நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஏற்கனவே நாம் பயன்படுத்திய அமைதிவழிப் போராட்டவழிமுறைகள் எவற்றையும் கைவிடவேண்டுமென்பது எனது கருத்தல்ல. அவற்றுடன் ஆண்டவன் ஆதரவையும் சேர்த்துக்கொண்டால் பெரிய எதிரிகளையும் வெல்லும் பலம் நமக்கு வந்து சேரும். ஆன்மீக நம்பிக்கையுடன் உளப்பூர்வமாகப் பெருமளவு மக்கள் பிரார்த்தனை செய்தால் மகாத்மா காந்தி நம்பியதுபோன்று இறைவன் செவிசாய்ப்பார்.

ஈழத்தமிழறிஞரும் பன்மொழிப்புலமை மிக்கவருமான வண.பிதா தனிநாயகம் அடிகளார் தமிழ்மொழி பக்திக்குரிய மொழி என்று கூறியுள்ளார். நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தும் தாய்மொழியாகிய தமிழ் அத்தகைய தனிச்சிறப்புக் கொண்டதாயின் நாம் அதனை நமது விடுதலைப்போராட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளல் மிகப்பொருத்தமானது என்பதுடன் அது மிக அவசியமானதும் ஆகும்.

இறைவனை வழிபடுதல் என்பது அவரை 'நினைத்தல்' ஆகும்.

" நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே "; "நெஞ்சே நீ நினையாய் "; "நினைவார்க்கு இனியான் ";

"நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்"; " நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் ";

"நினையாது ஒருபோதும் இருந்தறியேன்"; "அடியேன் நினைக்கப் பெற்றுயந்தவாறே";

போன்ற தேவாரவரிகள் இந்த 'நினைத்தலின்' மகிமையைக் கூறுகின்றன. இந்த 'நினைத்தல்' என்பது நமக்குள்ளே, நமது மனத்தில் இடம்பெறும் செயலாகும். ஒரு நாளின் 24 மணித்தியாலங்களிலும் இடம்பெறக்கூடிய செயல் இதுவாகும்.

இந்த நினைத்தல் என்பது பலமற்ற, மென்மையான வழிமுறைபோல் தோற்றமளிக்கலாம். எனினும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட ஈழவிடுதலையை உளப்பூர்வமாக வேண்டி ஆர்வமுடன் நினைக்க அந்த நினைப்பே மிகுந்த மனப்பலமூட்டி சிறந்த செயற்பாட்டுக்குவழிவகுக்கும். திருவள்ளுவர்

" உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின் " [ திருக்குறள் 540 ]

என்று கூறுகிறார். அதாவது ஒருவன் எண்ணியதை விடாமல் தொடர்ச்சியாக எண்ணிச் சோர்வில்லாமல் இருப்பின் அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

" மனம் நினைத்தால், அதைத் தினம் நினைத்தால், நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம். " என்ற திரைப்படப் பாடல்வரியும் அதனையே வலியுறுத்துவதைக் காணலாம்.

தொழில்நுட்பச்சோதனைக் கெடுபிடிகள் மலிந்துள்ள சூழலில் அவற்றால் அணுகமுடியாத,அவற்றுக்கு அப்பாற்பட்ட, இந்த வழிபாட்டுமுறை நமது உள்ளங்களில் உறுதியையும்,உரத்தையும் ஊட்டவல்லது. தாயகத்தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்கள் போன்ற வேறுபாடுகள் எதுவுமின்றி எல்லோராலும் எங்கும் எப்போதும் பின்பற்றக்கூடிய வழிமுறை என்ற தெளிவுடன் செயற்படுவோம்; பயன்பெறுவோம்.

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.