Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி: நேர்காணல்: உள நல மருத்துவர் S.சிவதாஸ்

Featured Replies

பாகம் ஒன்று

அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல்

d-head-1024x691.jpg

எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை செய்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், இந்தப் பணியில் அவர் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் ஆழமான பல கதைகள்.

D-skatch1-230x300.jpg

உளநல மருத்துவர் சிவதாஸ் கவிஞரும் ஒளிப்படக் கலைஞருமாவார். இரு கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. இதுவரையில் ஐந்து ஒளிப்படக்காட்சிகளை நடத்தியிருக்கிறார். மேலும், Angoda through my lence என்ற ஒளிப்படத்தொகுதியொன்றையும் நூலாக வெளியிட்டுள்ளார். இவற்றைத் தவிர, மகிழ்வுடன், நலமுடன், வானைக் காட்டுங்கள் சிறகு விரிக்க ஆகிய நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். இதில் மகிழ்வுடன் குறுகிய காலத்தில் நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளது. விரைவில் ஐந்தாவது பதிப்பு வெளிவரவுள்ளது. இது உளவியல் படைப்புகளின் தொகுதியாகும். விரைவில் வெளிவரவுள்ள இவரது நூல் போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களை எப்படிக் காப்பாற்றி வளமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குத் துணையிருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.

இந்த நேர்காணல் விரிவான பதிவாக அமைகிறது, இதன் இரண்டாவது பகுதியில், அண்மைய நிலவரங்கள் மற்றும் இதற்குப் பிற்பட்ட கால அனுபவங்களுடன் அடுத்த இதழில் பதிவாகும்.

——————————————————————————————————-

*முப்பது (வருடத்திற்கும் மேலான யுத்தம்,அழிவுகள்,உளவியல்தாக்கங்கள், வாழ்வை எதிர்கொண்டு நின்ற நெருக்கடிகள் இவற்றினால் பாதிக்கப்பட்ட ஒட்டூமொத்த இலங்கை மக்களின் மனோநிலை எப்படியான தாக்கங்களுக்கு உள்ளாகி உள்ளது எனக் காண்கிறீர்கள்?

கோரமான போரினை எதிர்கொள்ளும் சமூகம் மெல்ல விகாரமுற்றுச் செல்வது இயல்பானதே. இரண்டு தசாப்தகாலமாக தொடரும் போரின் விளைவுகள் தரும் பரிமாணத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. இது நிராகரிக்கப்பட முடியாத யதார்த்தம். ஆகவே இத்தகைய பாதிப்பின் விளைவுகள் பற்றி ஒரு விழிப்புணர்ச்சி சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இது நமக்கு இந்த நெருக்கீடுகளை ஆரோக்கியமாக எதிர்கொள்ள முதற்படியாக அமையும்.

யுத்தத்தில் ஏற்படும் மனநோய்கள் ஏதோ பாதுகாப்பு சூழலில் வாழும் மேற்குநாடுகளுக்கே பொருத்தமானது, எனவே கீழைத்தேய நாடுகளில் அத்தகைய தாக்கங்கள் ஏற்பட ஏதுநிலை இருப்பதாக தெரியவில்லை என்ற மேற்கத்தேய கருத்தொன்று நிலவிற்று. ஆனால் தயா சோமசுந்தரம் தலைமையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இக்கருத்தினை மறுதலித்து கீழைத்தேய நாடுகளிலும் இத்தகைய தாக்கம் அவதானிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளது. இது உலகளவில் போர்ச்சூழலில் மனவடுக்கள் மற்றும் மனநோய்கள் ஏற்படுகின்றது என்ற கருத்திற்கு வலுச்சேர்த்துள்ளது.

அண்மையில் கீழைத்தேய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களின் உளவியல் பாதிப்புக்கள் பற்றிய ஆய்வுகள் அதன் குறுகிய கால யுத்த நெருக்கடிகளுடன் ஒப்பிடும்போது மிக நீண்ட தொடர் நெருக்கீட்டுக்கு உட்படுபவர்கள் மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆகவேதான் நாம் யுத்தத்திற்கு செலுத்திய மனநல மருத்துவ விலை (Psychiatric cost of war) எத்தகையது என்பது ஆராயப்பட வேண்டியதே. சில ஆய்வுகள் கருப்பைக்குள் இருக்கும் சிசுக்கள் கூட போர்ச்சூழலில் பாதிக்கப்படுவதாக கோடிட்டுக் காட்டியுள்ள நிலையில் இத்தகைய பாதிப்புக்களை புறக்கணிக்கப்பட முடியாதவைகளாக நாம் நோக்க வேண்டியுள்ளது.

* போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பொதுவான உளநிலை எவ்வாறிருக்கிறது?

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளநிலை என்பது வெறுமனே உக்கிரமாக நடைபெற்ற 3 வருட கடைசிப் போர்காலத்தினை மட்டும் கொள்ள முடியாதது. சுமார் இரு தசாப்தகால போர் அனுபவத்தினை – பாதிப்புகளைக் கொண்டவர்களாகவே மக்கள் காணப்படுகின்றனர். அவர்களது மனக்காயம் பல படைகளாக (layers of trauma) காணப்படுகின்றன. தொடர் இழப்புக்களால் ஏற்பட்ட துயரம் கூட்டுச்சேர் இடர்களால் ஏற்பட்ட மனக்காயம் என பல பரிணாமம் கொண்டதான அவர்களது உளப்பாதிப்பு அமைந்திருந்தது. அவர்களது உளநிலை என்பது பலவகைப்பட்ட ஒரு மக்கள் கூட்டாகவே காணப்படுகின்றன. பாதிப்புக்களை வார்த்தைகளினூடாக வெளிப்படுத்த முடியாதவர்களாக காணப்பட்டனர். அதற்கு அவர்களுக்குரிய வழி வழங்கப்படாதது மட்டும் காரணமல்ல. அவர்கள் அதனை வெளிப்படுத்த வழிதெரியாதவர்களாக காணப்பட்டனர்.

பல யுத்தங்களில் மக்கள் இடர்களுக்கு பயந்து இடம்பெயர்ந்தனர். அது எந்த மக்கட் கூட்டத்திற்கும் பொதுவான இயல்பு. ஆனால் ஒரு தொகை மக்கள் அரசியல் காரணங்களினால் ‘காட்டிக்கொள்ளப்பட்டனர்’ என்பதாகவும் மறந்துவிடமுடியாது. இந்த இரு வகையான மக்களும் வெவ்வேறு விதமான மனநிலையில் காணப்படுகின்றனர். ஒரு பகுதியில் பலவீனமானவர்களாகவும் மறுபகுதியின் தோற்றுப்போனதான மனநிலையை கொண்டும் காணப்படுகின்றனர். இவ்வளவு காலம் பட்ட துயர்கள் எல்லாம் பொருள் இழந்து போவதான உணர்வு, ஆத்திரம், கோபம், சினம், கவலை, சோகம், குற்றவுணர்வு, நாட்டமின்மை என பல பரிமாணங்களை கொண்ட ஒருவித உணர்ச்சி கொதிநிலையில் காணப்படுகிறார்கள். ஆனாலும் ஒரு பகுதியின் பாதிப்புக்களை பல காலம் எதிர்கொண்டவர்கள் தைரியம் கூடியவர்களாகவும் ஒரு வித வளர்ச்சிநிலை அடைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். ஒரே வார்த்தையில் குறிப்பிடுவதானால் வலுவிழந்தவர்கள் செய்வது அறியாது திகைத்துப் போய் உணர்ச்சிக் கொந்தளிப்போடு வாழ்கின்றனர் என்றால் மிகையாகாது. நித்தமும் நடைபெற மரணங்கள் அற்ற நிலையில் பெருமூச்சுடன் கூடிய ஆறுதல் நிலையும் ஏன் சிலரது தேறல் நிலையும் காணப்படுகின்றது. எல்லோரிடமும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்றநிலை காணப்படுவது கண்கூடு.

* மேற்பட்ட பாதிப்பு நிலையைப் போக்குவதற்காக இதுவரையில் என்ன நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? அவற்றை யார் மூலம்மேற்கொள்ள முடிகிறது?

இதற்கு ஒரு வழி நம்பிக்கையை விதைத்தலும் (Instilling Hope) மற்றும் சமூகங்களுக்கிடையே மீள் இணைப்பு (Reconciliation)ஏற்படுத்தலும் எனச் சுருக்கமாக குறிப்பிடலாம். நம்பிக்கை ஏற்படுத்தல் என்பது மிகவும் கடினமான பணியாகும். அடிப்படைத்தேவைகளின் பூர்த்தியிலும் மக்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்க தலைப்படுவர். அந்த சந்தர்ப்பத்தில் அரசும் சரி சமூகத்தவர்களும் மதத்தலைவர்களும் சரி அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டியது மிக முக்கியமானது. அத்துடன் இருமுனையாக்கப்படல் சமூகங்களை மீள் இணைப்பு என்பது நடைபெற வேண்டும். அச்சமற்று பீதி கொள்ளாது மற்றைய சமூகத்தினை ஏற்றுக்கொள்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். சந்தேக மனப்பாங்குடன் மற்ற சமூகத்தினை பார்க்க முற்படுவோமாயின் நம்பிக்கையும் சரி ,மீள் இணைப்பும் சரி சாத்தியமாகாமல் போகலாம். பயம் காரணமாக ஒரு சமூகம் மற்றைய சமூகத்தை அச்சுறுத்தும் பொழுது அந்த அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் சமூகம் அதற்கு எதிராகச் செயற்பட முற்படுவது தவிர்க்க முடியாது. அரசியல்வாதிகளினால் நம்பிக்கையிழந்த சமூகத்தில் அவர்களை விட சமய சமூகத்தலைவர்கள் முன்வந்து இவற்றை செய்ய வேண்டும். மதநல்லிணக்கம் எப்பொழுதையும் விட தற்போது மிக முக்கியம் தேவைப்படுகிறது எனலாம்.

* போரின் பின்னர் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் இருந்த அகதி முகாம்களிலும் மீள் குடியேறியேறியவர்கள் மத்தியிலும் வேலைசெய்திருக்கிறீர்கள். இவர்களின் பாதிப்புகள் தொடர்பாக…?

சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த போது நான் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய சுயவிருப்பின் பேரில் – நானே மேலதிகாரிகளிடம் கேட்டு அனுமதி பெற்று – முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்குப்பகுதிகளில் ஆற்றுப்படுத்தல் தொடர்பாக பணியாற்றியிருக்கின்றேன். அது போலவே மிகப்பெரும் அவலத்தைச் சந்தித்து போரில் இருந்து தப்பித்து மூடப்பட்ட முகாம்களாக உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்கள் மத்தியிலும் அவர்களுக்காக ஆற்றுப்படுத்தலை மேற்கொள்ள எனது தனிப்பட்ட அவாவின் காரணமாக முன்வந்தேன்.

ஆனாலும் இரு அனர்த்தங்களின் விளைவுகளும் வெவ்வேறானவை. குறிப்பாக எந்தவொரு அனர்த்தத்துக்கும் பிற்பட்ட காலப்பகுதி, உளவியல் ரீதியாக மிக முக்கியத்துவமானது. ஒரு சமூகத்தின் எதிர்காலப் பயணத்தை இத்தகைய அனர்த்தத்தின் பிற்பட்ட காலப்பகுதியே தீர்மானிக்கிறது. சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதி, மக்களிடத்தே நம்பிக்கையை உண்டு பண்ணவும் எதிர்கால வாழ்வு பற்றிய ஆரோக்கியமான நிலைக்குச் செல்லவும் பெரிதும் உதவியது. இதையொரு ஆரோக்கியமான விடயமாகக் கொள்ளலாம்.

யுத்த அனர்த்தங்களின் பின்னர் மூடப்பட்ட முகாம்களில் மக்கள் இருந்தமையால் அவர்களில் பலரும் நம்பிக்கையீனத்தோடேயே காணப்பட்டனர். எல்லோரிடத்திலும் ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வருடங்களின் பின்னரே தமது இடங்களுக்குச் செல்லமுடியும் என்ற நினைப்பிருந்தது. அது வரைக்கும் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. நல்லவேளையாக – அதிஷ்டவசமாக – அவர்கள் நினைத்ததை போல் அல்லாமல் மிக விரைவாகவே மீள்குடியேற்றம் நடந்ததால் மிகப் பெரிய மனப்பாதிப்பில் இருந்து அந்த மக்கள் தப்பிக்க முடிந்தது. விரைவாக மீள் குடியேற்றம் இல்லாது இருந்தால் பெரிய பாதிப்புக்களுக்குள் அவர்கள் சிக்கியிருப்பர். இதைவிட இன்னொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. முகாமுக்குள் வந்தவுடன் சொந்த ஊருக்குப் போதல், சொந்த வீட்டில் மீள வாழ்தல் என்பவற்றை விடவும் போரில் இருந்து தப்பித்தலும் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தலிலுமே அவர்கள் கூடிய அக்கறை காட்டினர்.

போர் ஓய்ந்து அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளும் மெல்ல மெல்ல பூர்த்தியாகத் தொடங்கிய நேரத்தில் தான் தம்முடைய இருப்பியல் பற்றிய கேள்விகள் அவர்களுக்குள் முளைத்தன. இந்தக் கேள்விகளால் அவர்கள் மனதில் ஒரு நிச்சயமற்ற தன்மை உருவானது. வீடு பற்றியும் சொந்த ஊருக்குப் போவது பற்றியும் இதன் பின்னர் தான் அவர்கள் தீவிரமாக சிந்தித்தனர். மீளக் குடியமர்ந்த பின்னரும் பல்வேறு உளப்பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்வதாக அறிய முடிகிறது.

முகாம்கள் ஆரம்பிக்கப்பட்ட சில காலங்களில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஓரளவு சாத்தியப்பட்டது. இதற்கு அரசும் பல நிறுவனங்களும் உதவியிருந்தன. இதை ஒரு அவசரகால உதவியாகக் கருதப்பட்டு அதனை வழங்கியிருந்தனர். ஆனால் மீள் குடியேற்றத்தின் போது அந்த உற்சாகநிலை காணப்படவில்லை. அரசம் சரி நிறுவனங்களும் சரி அந்த பழைய உற்சாக நிலையில் இல்லாதவர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியது. சிலர் குறிப்பிடுகிறார்கள் முன்னைய நிலை ஒரு அவசரநிலை என்றும் தற்போது அத்தகைய நிலை இல்லை என்றும். தற்பொழுது மீள் கட்டுமானக் காலம் என்கின்றனர். என்னைப் பொறுத்த வகையில் உட்கட்டமைப்புக்கள் சரியாக ஏற்படுத்தப்படாத பகுதிகளில் மக்கள் மீள் குடியேற்றப்படல் என்பது அவசரநிலை (emergency phase)என்றே கொள்ள வேண்டும். வேறு நிலையில் பாரிய அவசர நிலை என குறிப்பிடாவிட்டாலும் சிறிய சிறிய அவசரநிலைகள் காணப்படுகின்றன. எனவே அதனை அவ்வாறே கையாள வேண்டும். வன்னியில் இருந்த மக்கள் பலர் பொருளாதார நிலையில் ஒருவித தன்னிறைவாக வாழ்ந்தனர். இப்பொழுது அவர்கள் தங்கி நிற்கின்ற நிலையில் வாழ்கின்றனர்.

* போரில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் முதியோரும் சிறுவர்களுமே. உங்களின் அனுபவத்திலும் அவதானிப்பிலும் இந்த விவகாரம் எப்படியுள்ளது?

அண்மையில் என்னிடம் மருத்துவத்திற்கு முல்லைத்தீவு – ஒட்டிசுட்டானிலிருந்து வந்த ஒரு தாய் குறிப்பிட்டது என்னவென்றால் நான் ஊரிலிருந்து இடம்பெயரும் போது 120 தென்னை மரங்கள் இருந்தன. இன்று 10 மரங்கள் கூட இல்லை. நான் என்ன செய்து வாழப் போகிறேன்? என கண்ணீரும் கம்பலையுமாக நின்றதை குறிப்பிட வருகின்றேன். ‘நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு புதிதாக வாழுவோம் என்றால் அதுவும் சரிவருவது இல்லை’ என அந்த தாய் குறிப்பிட்டதை கூற விரும்புகின்றேன். யுத்தத்தின் காரணமாக இவர் வெளியேறியதும் பல தென்னைகளை யானை முறித்துவிட்டதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

இன்னுமொரு தாயினை மன்னார் – வட்டக்கண்டல் மீள் குடியேற்றத்தின் போது சந்தித்தேன். இந்த வருடத்தில் ஆரம்பத்தில் அந்த அம்மா முகாமில் இருந்த போது சந்தித்து உரையாடினேன். இப்பொழுது மீள் குடியேறிய பிரதேசத்தில் எப்படி இருக்கிறீர்கள்? என கேட்டபோது முந்திய ‘முகாம் வாழ்க்கையிலும் பார்க்க இந்த வாழ்க்கை பரவாயில்லை. ஆனாலும் நிவாரணங்களில் தங்கியிருக்கும் நிலை மாற வேண்டும். இந்த கட்டுக்கரை குளத்தை திறந்துவிட்டால் ஒரு போதும் நான் யாரிலும் தங்கியிருக்க தேவையில்லை’ என உறுதியுடன் கூறினார். அவர் அந்தக் குளத்தின் நீரைப் பயன்படுத்தி விவசாயத்தைச் செய்து மீள் நிலைக்குத் தாம் திரும்பி விடலாம் என்பதைக் குறிப்பிட்டார்.

எனவே நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக இருக்கின்றதல்லவா.இதனை மற்றான் தாய் மனப்பாங்குடன் செய்ய முடியாது. உரிய அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செய்ய வேணும். அடுத்தது, உழைப்பு நிறைந்த வினைத்திறன் நிறைந்த சேவை தேவை. வினைத்திறன் குறைந்த அரசு இயந்திரம் இதனை முழுமையாக செய்து முடிக்கலாம் என எதிர்பார்க்க முடியாது. எனவே சமூகமாக அதனை வழிநடத்தக்கூடிய சிந்தனையுடன் உதவ முன்வரவேண்டும்.

மீள் குடியேறிய பலரும் மற்றவர்களது வீடுகள் அழிந்திருந்தாலும் தம்முடைய வீடுகள் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கும் என்ற நினைப்போடே சென்றார்கள். ஆனால் எல்லோருடைய வீடுகளும் அழிந்திருந்தன. இதனை அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. திட்டமிடல் இல்லாமல் நிகழ்ந்த மீள் குடியேற்றமே இத்தகைய நிலைக்குக் காரணம். உண்மையில் மீள் குடியேறுவதற்கு முன்னர் உளரீதியான தாங்குதிறன் தயாரிப்புக்கான சந்தர்ப்பம் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது இங்கு நடக்கவில்லை. இதுவே மீள் குடியமர்ந்த பின்னர் மக்களின் தாங்குதிறன் பலவீனமான நிலைக்குச் செல்வதற்கும் அது சார்ந்த உளப்பாதிப்புக்கள் ஏற்படுவதற்கும் ஏதுவாகிவிட்டது.

மேற்சொன்ன காரணத்தைத் தவிர இன்னும் பல காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக முகாமில் இருந்த போது தமக்கிடையே ஒரு பலமான சமூக வலைப்பின்னலை மக்கள் உருவாக்கியிருந்தார்கள். உணவைப் பகிர்ந்து உண்ணல், பெரும் எண்ணிக்கையானோர் நெருக்கமாகக் கூடி வாழ்தல் என்பன பாதுகாப்பான சூழலாக உணர்ந்தார்கள். ஆனால் முகாமில் இருந்து வெளியே போனதும் தனித்துப் போய்விட்டார்கள். இந்தத் தனிமையும், அழிவுகள் நிகழ்ந்த இடத்தை மீளவும் நேரே பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பும் அவர்களிடத்தே உணர்ச்சிகளை ஏற்படுத்தும். இது அவர்களிடத்தே உணர்ச்சிகளை கையாளும் திறனை மழுங்கச் செய்வதால் அதீத உணர்ச்சிவசப்படுதல், உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாடுகளை இழத்தல், வீட்டு முரண்பாடுகள் உருவாகுதல் என்பன போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன. இதுவே இறுதியில் அவர்களைத் தற்கொலை முயற்சிகளுக்கும் தூண்டுகின்றன.

சிறுவர்களில் பெற்றோரோடு இருக்கும் பிள்ளைகள் இத்தகைய பாதிப்புக்களில் இருந்து விரைவாக மீள முடியும். அவர்களுக்கான ஆதரவை உரிய வகையில் பெற்றோர் வழங்க வேண்டும். பெற்றோரை இழந்த பிள்ளைகள் தான் அதிகளவில் மனப்பாதிப்புக்குள்ளாகியிருப்பார்கள். இவர்களை அதிலிருந்து வெளியேற்ற நமது சமூகம் முன் வரவேண்டும்.

* இந்த உளப்பாதிப்புகளை நிரந்தரமாக தீர்த்துக் கொள்வதற்கு என்ன செய்ய முடியும்?

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குணமாக்கல் வெளிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த வெளிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் நாம் தவறிவிடுகின்றோம். அண்மையில் கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே தமது பாடசாலை மாணவர்கள் பலர் மரணவீட்டில் கலந்துகொள்வது போலவும், காயம் பட்டோரை தூக்கிக் கொண்டு ஓடுவதும் போலவும் தமக்கிடையே விளையாடுவதாகவும் ,இது உளப்பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலையோடு ஆசிரியர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் உண்மையில் இத்தகைய விளையாட்டுக்கள் அவர்களுக்கான – பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான – குணமாக்கல் வெளிகளை உண்டு பண்ணக்கூடியவை. தமக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளே ஒருவித ‘கிரியேட்டி விட்டி’ யுடன் விளையாட்டாக வெளிப்படுத்தி தமது மனப்பாரத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள். இதனைத் தடுப்பதுதான் பிழையானது என்று கூறினேன்.d-p-02-last-284x300.jpg

தாங்குதிறனை வளர்க்கவும் வெளிகளை உருவாக்கவும் நாம்தான் துணைபுரிய வேண்டும். எங்கள் மக்களால் அது முடியும்.. இப்படித்தான் ‘சுமைதாங்கி’ என்ற ஆற்றுப்படுத்தலை நலன்புரி நிலையங்களில் நடைமுறைப்படுத்தினோம். செட்டிக்குளம் முகாமின் உள்ளே ஓலையால் வேயப்பட்ட குடிசை போன்ற இடத்திற்கு வருபவர்கள் தமது உணர்ச்சிச் சுமைகளை சிறிது நேரம் இறக்கி வைத்து ஆறுதல் எடுத்துவிட்டு மீளவும் தமது சுமைகளை தாமே தூக்கிச் செல்லும் வகையில் சுமைதாங்கியின் செயற்பாடு அமைந்திருந்தன. இதன் மூலம் பலர் போரின் பாதிப்புக்களின் இருந்து விடுபட்டதை அவர்களே பின்னர் என்னிடம் தெரிவித்தார்கள். போரால் ஏற்பட்ட உளப்பாதிப்புக்களில் இருந்து தேறி வந்தவர்கள் ஏனையோரும் அவ்வாறே தேறி வருவதற்கு உதவி செய்வதோடு நம்பிக்கையும் அளிக்கவேண்டும்.

* முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தித்து அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளைச் செய்து வருகிறீர்கள். அவர்களுடைய மனநிலை, மற்றும் அவர்கள் எதிர்கொண்டு நிற்கும் நிலைமைகள் குறித்து சொல்லுங்கள்?

முன்னாள் போராளிகளில் தம் சுயவிருப்பின் பேரில் போராட்டத்தில் இணைந்தவர்கள் அதிகளவு தாங்குதிறனை கொண்டிருப்பதால் அவர்களுடைய மனப்பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். அப்படி பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்களுடைய மனப்பாதிப்பு குறைவானதாகவே இருக்கும். அப்படி பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீளக்கூடிய வலிமையை அளிக்கக்கூடிய அவர்களுக்கு சரியான சூழலும் ஆதரவும் தேவை.

அடுத்த தரப்பினர், பலவந்தமாக இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி, நீண்டகாலம் தடுப்பில் இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு, தாம் உழைத்துக் காக்க வேண்டிய உறவுகள் பெரும் பொருளாதாரக் கஸ்ரத்தின் மத்தியிலும் பணத்தைச் செலவழித்து தம்மை வந்து பார்க்க வேண்டியுள்ளதே என்ற குற்ற உணர்ச்சி போன்றவற்றால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் தடுப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, ஏனையோரைப் போலவே சமூகத்தின் அரவணைப்பும் கிடைத்தால் அவர்களும் பழைய நிலைக்கு மீள முடியும்.

*இவ்வனைத்து அனுபவம், உளவியல் தாக்கங்கள் விளைவின்பின் ,இம்மக்களின் எதிர்கால வாழ்வு எப்படி இருக்கும் என மதிப்பிடுகிறீர்கள்?

போர் நிறுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் இடம்பெயர்வுகள் நிறைவுக்கு வந்து இழக்கப்பட்ட வீடுகள் புனரமைக்கப்பட்டு உருவாகி வரும் ஒரு பாதுகாப்பான சூழலில், இவ்வளவு காலமும் ஆழ்மனதில் புதைக்கப்பட்டிருந்த மனவடுக்கள் உளவியல் உபாதைகளாகவும் மனநோயாகவும் வெளிப்படக் கூடிய ஏதுநிலை பெருமளவில் தெரிகிறது. நிறைவான எதிர்காலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை, பொருளாதார நிலை, வாழ்க்கை நிலை எல்லாம் இந்தப் பாதிப்பை உருவாக்குகின்றன. குடும்ப உறுப்பினர்கள் பிரிந்திருக்கும் நிலையும் இதில் ஒன்று.

இரண்டாம் உலகப் போரின் பின் பல நாடுகளில் தற்கொலை வீதம் பலமடங்கு அதிகரித்து சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய பாதிப்புக்கள் நேரம் குறிக்கப்பட்ட வெடிகுண்டு போல வெடிப்பதற்கு காத்திருக்கின்றனவா? என்பதே எம்முன் உள்ள அச்சம் தரும் செய்தியாகும். அவற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே எம்முன்னே உள்ள முக்கிய சவாலாகும்.

ஆனால் இறுதிப்போரின் பின்னரான வன்னி மக்களின் நிலை அவ்வாறானது அல்ல. போர் முடிந்த பின்னும் சந்தேகம், அச்சம், எதிர்காலம் பற்றிய ஏக்கம் என்பனவெல்லாம் அவர்களிடத்தே தொடர்ந்தும் நிலவுகின்றன. இதனால் அவர்களுடைய மனப்பாதிப்புகள் ஒரு நீடித்த அல்லது தொடர்ச்சியான தன்மைக்கு சென்றுகொண்டிருக்கின்றன. அனர்த்தத்தின் பிற்பட்ட இத்தகைய நிலை கரிசனையோடு பார்க்கப்படவேண்டியதாகும். இத்தகைய பாதிப்பு வருவதிலும் ஆச்சரியம் இல்லைத்தான். சுனாமியின் போது குறித்த சில பகுதிகளில் வசித்த மக்கள் மாத்திரமே பாதிப்படைந்தனர். ஆனால் போரின் போது ஒரு சமூகமே வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தது. இத்தகைய மிகப் பெரிய மனப்பாதிப்பு ஆறுவதற்கு நீண்ட ‘குணமாக்கல் வெளி’ தேவைப்படும். ஏறக்குறைய இரண்டு தசாப்தகாலம் இத்தகைய பாதிப்புக்களிலிருந்து முற்றாக விடுபட தேவைப்படும் என எண்ணுகின்றேன்.

(அடுத்த இதழில் தொடரும்)

http://eathuvarai.net/?p=1200

சேவை செய்யும் உள நல மருத்துவர்களுக்கு நன்றிகள்.

இந்ந்தப்புண்களுக்கு சிங்களம் தானும் மருந்து போடாமல் மற்றையவர்களையும் மருந்து போடாமல் தடுத்துவருதும் இனவழிப்பே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றி[/size]

இந்த புண்களுக்கு சிங்களம் மருந்து போடாமல் இருக்கலாம் .

ஆனால் நாங்கள் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட பார்க்கின்றோம்

"அடுத்த தரப்பினர், பலவந்தமாக இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி, நீண்டகாலம் தடுப்பில் இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு, தாம் உழைத்துக் காக்க வேண்டிய உறவுகள் பெரும் பொருளாதாரக் கஸ்ரத்தின் மத்தியிலும் பணத்தைச் செலவழித்து தம்மை வந்து பார்க்க வேண்டியுள்ளதே என்ற குற்ற உணர்ச்சி போன்றவற்றால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் தடுப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, ஏனையோரைப் போலவே சமூகத்தின் அரவணைப்பும் கிடைத்தால் அவர்களும் பழைய நிலைக்கு மீள முடியும்."

இப்படியான செய்திகளை வாசிக்கும் போதுதான் எங்கட தேசிய பூசணங்களை அடித்து துலைக்க வேண்டும் போல வாறது .இவர்களின் பெற்றோருக்கும் தனது பிள்ளை படிக்க வேண்டும் ,வெளிநாடு போகவேண்டும் என்ற கனவெல்லாம் இருந்திருக்கும் .இவர்களின் முழு ஆசையிலும் மண்ணை அள்ளி கொட்டி விட்டு இவர்கள் முகாம்களில் இருந்து புலம்ப இதற்கும் தங்களுக்கும் எதுவித சம்பந்தமுமில்லாத மாதிரி தங்கள் சுய புராணங்களில் இறங்கிவிட்டார்கள் .

[size=4]

இந்த புண்களுக்கு சிங்களம் மருந்து போடாமல் இருக்கலாம் .

ஆனால் நாங்கள் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட பார்க்கின்றோம்

"அடுத்த தரப்பினர், பலவந்தமாக இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி, நீண்டகாலம் தடுப்பில் இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வு, தாம் உழைத்துக் காக்க வேண்டிய உறவுகள் பெரும் பொருளாதாரக் கஸ்ரத்தின் மத்தியிலும் பணத்தைச் செலவழித்து தம்மை வந்து பார்க்க வேண்டியுள்ளதே என்ற குற்ற உணர்ச்சி போன்றவற்றால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் தடுப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, ஏனையோரைப் போலவே சமூகத்தின் அரவணைப்பும் கிடைத்தால் அவர்களும் பழைய நிலைக்கு மீள முடியும்."

இப்படியான செய்திகளை வாசிக்கும் போதுதான் எங்கட தேசிய பூசணங்களை அடித்து துலைக்க வேண்டும் போல வாறது .இவர்களின் பெற்றோருக்கும் தனது பிள்ளை படிக்க வேண்டும் ,வெளிநாடு போகவேண்டும் என்ற கனவெல்லாம் இருந்திருக்கும் .இவர்களின் முழு ஆசையிலும் மண்ணை அள்ளி கொட்டி விட்டு இவர்கள் முகாம்களில் இருந்து புலம்ப இதற்கும் தங்களுக்கும் எதுவித சம்பந்தமுமில்லாத மாதிரி தங்கள் சுய புராணங்களில் இறங்கிவிட்டார்கள் .

[/size]

[size=4]சரி இதற்கு நாங்களும் நீங்களும் எதை எவ்வாறு செய்யலாம் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?[/size]

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பகுதி 2

*போர் மற்றும் அரசியல் முரண்பாடுகளின் காரணமாக நீண்டகாலமாகச் சிறைகளில் இருப்போரின் உளவியல் மிகப் பாதிக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாதிருக்கும் இத்தகைய கைதிகளின் மனநிலை நம்பிக்கை வரட்சியில் உள்ளது. இந்த நிலையை எப்படி நாம் எதிர்கொள்வது?

அண்மையில் பூசாவில் விசாரிக்கப்பட்ட பின்னர் ஒரு வருட புணர்வாழ்வு பெறுவதற்கு சிலர் மருதமடு முகாமிற்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் கூறியது இங்கு குறிப்பிட வேண்டும்.”இப்ப சரியாக எப்ப விடுதலையாவோம் என தெரியும் என்பதால் நம்பிக்க இருக்குது” என குறிப்பிட்டார்கள். இத்தகைய புணர்வாழ்வு என்பது காலவரையறை கொண்டதாகவே அமைய வேண்டும். இல்லாவிடில் நம்பிக்கை இழப்பு ஏற்படும். இன்னுமுள்ள மிக முக்கியமான தேவை நம்பிக்கையை விதைத்தல் என்ற விடயமே. அவர்களது புணர்வாழ்வில் மட்டும் நம்பிக்கையை விதைக்க முடியாது. அவர்கள் புணர்வாழ்வு முடிந்த பின்பு அச்சமற்று பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளை அமைக்கப்படுவதன் மூலமே நம்பிக்கையூட்ட முடியும். அத்துடன் பொருளாதார நிலையில் ஓரளவு தன்னிறைவினை தரக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானது. வெறுமனே கடன்களைக் கொடுத்து அவர்களை கடன்காரர்களாக மாற்றுவதன் மூலம் அதனை மீளச் செலுத்த முடியாத நிலைக்குச் சென்று துன்பப்படும் நிலையே ஏற்படும். எமது வவுனியா மனநலச்சங்கத்தால் ஒரு முன்னாள் போராளிக்கு ஒரு புகைப்படக் கருவி அன்பளிப்புச் செய்திருந்தோம். அவர் தனக்கு ஒரு தொழிலை ஆரம்பிக்க அது உதவியுள்ளது.

அத்துடன் அவர்கள் விடுதலையானதும் தேசிய அளவிலும் உள்ளுரளவிலும் பாதிக்கப்படாத பொறிமுறை ஒன்று தேவை. அத்துடன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட வேண்டும். சுமார் 10,000இற்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். மிகக்குறைவாக 10 சத வீதமானோர் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இது 1000 பேரிற்கு மேற்பட்டவர்களாகவே அமையும். எம்மைப் பொறுத்தவரையில் 300 இற்கு உட்பட்டவர்களை சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளோம். எனவே தான் இன்னும் பலர் அடையாளம் காணப்படாது துன்பப்படுகிறார்கள். அவர்களையும் இதற்குள் உள்ளடக்க வேண்டிய தேவை இருக்கிறது.

*. போரின் காரணமாகவும் அரசியல் முரண்பாடுகளினாலும் காணாமற்போரைப் பற்றிய தகவல்களை அறிய முடியாத நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். தாய்,துணை,பிள்ளைகள்,சகோதரர்கள் என்றவாறிருப்போர் தங்களின் உறவினரைப் பற்றிய தகவல்களைப் பெறமுடியாத நிலையில்,காணாமற்போனோர் இருக்கின்றனரா இல்லையா என்று தெரியாத நிலையில் உள்ளனர். இவர்கள் மிகப் பதற்றமாகவும் அலைச்சலோடும் உள்ளனர். உளப் பாதிப்புகளால் மருத்துவ மனைகளுக்கு வருவோரில் அதிகமானவர்கள் இத்தகையவர்களே என்று சொல்லப்படுகிறது,இதைக்குறித்து உங்கள் அனுபவம் என்ன?

காணாமல் போனவர்களில் பலரைப் பற்றிய விபரம் தெரியவில்லை. தெரிவதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கிறது. இத்தகையவர்களின் பாதிப்பிற்கு பெரியளவில் ஒன்றும் செய்யமுடியாது. இவர்களுக்கு நம்பிக்கையூட்டலைச் சொல்வது மிகவும் கடினமானது. பலரும் அத்தகையவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடனே இருக்கிறார்கள். பொதுவாக மனித மனம் நல்லதையே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும். நம்பிக்கைக்கும் நம்பிக்கையீனத்திற்கும் இடையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இவர்களின் வாழ்க்கை மிகவும் அவலமானது. முற்றுப்புள்ளியிட முடியாத முடிவில்லாத துயரில் வாழ்வது பரிதாபகரமானது.

d-p-01-300x261.jpg

மனநலத்துறையைப் பொறுத்த மட்டில் இதற்குப் பெரிய பரிகாரம் காணமுடியாது. அவர்களது வாழ்க்கையில் அன்றாடக் கடைமைகளிலும் வேறு நம்பிக்கை தரும் விடயங்களிலும் அவர்கள் கவனத்தை செலுத்தித் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தினை உயர்வானதாக வைத்துக் கொள்ளல் என்ற அடிப்படையில் உதவ முடிகிறது. ஆனால் இவர்களின் பிரச்சினைகளை ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வதில் சோதிடர்கள் பாரம்பரிய குருமார்கள் ஈடுபடுகின்றனர். இத்தகைய தேடுதலை தவறு என்று சொல்லமுடியாது. மாற்று வழியே இல்லாத போது இத்தகைய ஆற்றுப்படுத்தலை நான் ஆரோக்கியமாகவே பார்க்கிறேன்.

*.இலங்கைச் சமூகங்கள் ஒன்றை ஒன்று சந்தேகிக்கும் ஒன்றை ஒன்று அச்சத்துடன் பார்க்கும் நிலை பகிரங்கமாகவே தெரிகிறது. இந்த உளநிலை கடந்த காலம்இ நிகழ்காலம் இரண்டையும் மிக மோசமாகப் பாதித்திருக்கிறது. இந்த நிலை தொடருமாக இருந்தால் எதிர்காலமும் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகலாம். ஆகையால் இதை மாற்றியமைப்பதற்கான அவசியத்தை எப்படி உணர வைப்பது? அல்லது இந்த நிலையில் இருந்து இலங்கைச் சமூகங்களை எப்பிடி மீட்டெடுப்பது?

சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்களை முதலிட்டு அரசியலாக நடத்தப்படும் நாட்டில் இதற்கு உடனடித் தீர்வு கிடைக்குமென்று நான் நினைக்கவில்லை. இது பாமர அடித்தட்டு மக்களிடம் ஆரம்பிக்கப்பட்டு ஆரோக்கியமாக உருவாக்கப்படும் மீள்நல்லிணக்கம் மூலமே சாத்தியமாகும். இன்றுள்ள நிலைமை போர் இல்லாத நிலைமையே ஒழிய முரண்பாடுகளற்ற நிலைமை இல்லையே. போர் முடிந்தவுடன் இருந்த மீள்நல்லிணக்கத்திற்கான நல்ல புறச்சூழல் காணப்பட்டது. அது சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு அத்தகைய சூழல் காணப்படாத நிலையில் இது இன்னும் கடினமானதாக அமைந்துள்ளது. கடினமானது என்பதற்காக அதைக் கைவிடத் தேவையில்லை. வலிமையாக முயற்சித்து அதை அடைய வேண்டும்.

மீள் நல்லிணக்கம் என்பது சிங்கள- தமிழ் இனத்திற்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல. எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையினதாக அமைய வேண்டும். சாதிவேறுபாடுகளுக்கிடையிலும் ஏற்பட வேண்டியுள்ளது.

இதை உணர்த்த வேண்டிய புத்திஜீவிகள் பணி மிகையானது. அத்துடன் கலைஞர்கள் பத்திரிகையாளர்கள் எனப்பட்டவர்கள் இதற்கு முன்வர வேண்டும். அரசியல் வாதிகளிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு நிலைமையில் அவர்களது அரசியல் பிழைப்பு முடிந்துவிடும். எனவே தான் அவர்களிடம் எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். அவர்களை விட இராணுவத்திடம் எதிர்பார்ப்பது கூட ஆரோக்கியமானது. பல புனர்வாழ்வு முகாம்களில் இராணுவத்தினர் – முன்னாள் போராளிகள் புரிந்துணர்வு என்னை பல சந்தர்ப்பங்களில் வியப்பை உண்டுபண்ணும். அவர்களிடையே மன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அரசியல்வாதிகளை விட இலகுவானதும் சாத்தியமானதும் என்பது என் கருத்து.

அடுத்து கலைஞர்களுக்கிடையில் மிக இறுக்கமான இணைப்பினை ஏற்படுத்தி, கலைகளுக்கூடாக மன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இதை ஒரு தேசிய இயக்கமாக கலைஞர்கள் ஏற்படுத்தல் ஒன்றே இன்றைய நிலையில் சாத்தியமானதாக எனக்குப் படுகின்றது.

*. யுத்தமும் சுனாமியும் வடக்குக் கிழக்குச் சமூகங்களை மிக மோசமாகப் பாதித்துள்ளன. சிலர் இரண்டு அனர்த்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்,இந்தப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் அளவுக்கு உரிய உளநிவாரணம் செய்யப்படவில்லையே! இதில் உள்நாட்டின் கவனமும் போதாது. சர்வதேச சமூகத்தின் அக்கறையும் போதாது என்ற அபிப்பிராயம் உள்ளது. இதைக் குறித்து உங்களுடைய அவதானம் என்ன?

யுத்தத்திலும் சுனாமியிலும் பருமனில் வேறுபாடுகள் இன்றி இவை எல்லா சமூகத்தையும் எல்லா வாழ்க்கைத் தட்டு மக்களையும் பாதித்திருக்கிறது. இதுவே எம் கண்முன்னே தோன்றும் விடயம். ஆனாலும் பாதிப்பின் விகிதம் மிகவும் வறிய மக்களிடையே கூடிய அளவிலும் நீண்ட அளவிலும் உள்ளது. அத்தகைய மக்களினைப் பற்றி யாருக்குத்தான் கவலை? ஓட்டுக் கேட்கும் போது மட்டும் அரசியல் வாதிகளுக்கு கவலையிருக்கலாம். இத்தகையவர்களை ஏமாற்றி ஓட்டுக் கேட்பதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எனவே அவர்களும் கவலைப் படப்போவதில்லை.

வர்த்தக நிறுவனங்களுக்கு அவர்களை சுரண்டி கடன்காரர்களாக்குவதே நோக்கம். அபிவிருத்தி என்ற பெயரில் அதைச் செய்து கொள்கிறார்கள். சில மதநிறுவனங்கள் மதமாற்றம் என்ற பெயரில் இவர்களை மேலும் பாதிப்படையச் செய்கின்றன. இத்தகைய மக்கட்கூட்டம் தங்களது சுயமுயற்சியினாலும் அவர்களுக்கேயுரிய தாங்குதிறனாலுமே முன்னுக்கு வரமுடியும். அதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.

அபிவிருத்தி, வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தல் என்ற பேரில் அவர்களை பலவீனப்படுத்தாமல் விட்டாலே அவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அதற்குக் கூட விடுகிறார்களில்லை. மீள்குடியேற்றம் நடைபெற்று வட்டக்கண்டல் பிரதேசத்திற்கு நான் சென்ற போது அங்கு முகாமில் இருந்த ஒரு வயதான அம்மாவை சந்தித்தேன். அவரை சந்தித்ததும், அம்மா உங்களுக்கு உதவிகள் கிடைக்கிறதா? நிவாரணம் கிடைக்கிறதா? எனக் கேட்டேன். அதற்கு அந்த தாய் “இந்த கட்டுக்கரை குளத்தை திறந்துவிட்டால் நான் ஒரு போகம் பயிர் செய்தால் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை.” எனது உறுதிபடக் கூறியதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். இதை முன்னரும் குறிப்பிட்டிருக்கிறேன். எனவே தான் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தகைய மக்கள் பலப்படுத்தப்பட வேண்டும். வளப்படுத்தப்பட வேண்டும். அவையே தேவை.

http://eathuvarai.net/?p=1337

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.