Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசனின் வருகை

Featured Replies

எழுதியவர் உமா வரதராஜன்

இரண்டாம் ஈழப்போரின் ஆரம்பத்தில் (பிரேமதாசா காலம்) நடந்த சம்பவங்களை மையமாக வைத்து வந்த கதை.

இக்கதை வேற்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ப்பட்டுள்ளது.

மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.

ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக்; குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.

ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.

ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.

கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்ற வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.

ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்நத சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில்; நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.

மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனா.; தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.

வாழ்வதற்கான வரமும,; அதிர்ஷ;டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.

பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் 'எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனா.; அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து 'நாங்கள் என்ன குற்றம் செய்தோம்' என்று முனகியன. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.

ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப்; பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்;.

அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.

அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.

'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'

அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.

'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம'?....

ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.

'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'

ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.

போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? '

அரசன் புன்னகைத்தான். 'தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'

'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ' என்றான்; ஊமையன்.

அரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்!' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.

அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள் இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.

'கோயில் தந்தான்

எங்கள் மன்னன் 'கோவில் தந்தான்

இன்னுந்தருவான்

கேட்கும் எல்லாம் தருவான்.

தில்லாலங்கடி......தில்லா....

பிச்சைப் பாத்திரம் இந்தா......'

திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.

'கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.

அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பாhர்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.

வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.

பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்pன்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன் ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.

வுpடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.

'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள'; என்று அதட்டினான்.

அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்நது. இடியுன்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர்.

வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள்.

உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.

ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

'என் உயிரிலும் மேலான மக்களே.....'

மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.

குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.

'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'

காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.

'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும.; உடனே கேளுங்கள்.'

ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள.; சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.

'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'

அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.

ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.

பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.

நன்றி: இந்தியா டுடே

ஏப்ரல் 1994

எழுத்தாளர் சுஜாதா பேட்டி ஒன்றில் தனக்கு பிடித்த ஈழத்து எழுத்தாளர்களாக கவிஞர் ஜெயபாலனையும், உமா வரதராஜனையும் குறிப்பிட்டிருந்தார்.

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.