பாகம் இருபத்தொன்று
அதிகாலை ஒரு மணியை தாண்டி நந்திகடலின் மேற்கு பக்கமாக இடியென அதிரும் வெடியோசைகளும், இரவை பகலாக்கும் பரா வெளிச்சங்களுமாக இருந்தது.
இயக்கம் இறங்கிட்டுது..மக்கள் தங்களுக்குள் பேசி கொண்டார்கள்.
விடிகாலை ஐந்து மணிவரை இடைவிடாத செல்சத்தங்களும், கனரக ஆயுத வெடிச்சத்தங்களும் கேட்டு கொண்டே இருந்தன.
அந்த கொடிய வேளையிலும் மக்கள் மனசில் ஒரு ஆத்மா திருப்தி..தலைவரும் தளபதிகளும் ..உயிரோட தப்பி போயிடுவார்கள் ..
சிலர் வாய் விட்டே வேண்டினார்கள்..
"வற்றாப்பளை அம்மாவே ..எங்கள் தலைவனையும் அவன் பெடியளையும் நீதான் காப்பாத்த வேண்டும் ..அவங்கள் எங்களுக்காக பட்ட கஷ்டங்களை நீ பார்த்து கொண்டு தானே இருந்தாய்...இதையாவது எங்களுக்காக செய் ..அவங்களை காப்பாத்து தாயே ..""
நெஞ்சுருக வேண்டினார்கள்.
தங்கள் பிள்ளைகள் கணவன்மார் மனைவிமார் என்று பறி கொடுத்தும், தலைவன் உயிரோடு இருக்க, ஆண்டவனை வேண்டின மக்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
ஆனால் காலையில் கேள்விபட்ட செய்தி வேறு விதமாக இருந்தது.
"நேற்று இறங்கின பெடியள் அவ்வளவும் முடிஞ்சுதாம்..முதாவது இரண்டாவது லைனை உடைச்சிட்டாங்களாம். மூன்றாவது லைனிலே வைச்சு அவன் ஒரு பிடி பிடிச்சானாம் ..பெடியளும் என்ன செய்கிறது வேவு தகவல்கள் இல்லை ..செல் இல்லை ..பின்னணி பலம் இல்லை ..எல்லாம் முடிஞ்சு போச்சு .."
ஆனாலும் தலைவருக்கும் தளபதிகளுக்கும் ஒண்டும் நடக்கலையாம்..அவர்கள் பத்திரமாக இக்கரையில் இருகினமாம் என செய்தி ராணியம்மாவின் மனசில் பாலை வார்த்தது..
கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை என்று தோணிச்சு..
இருந்தாலும் யார் பெத்த பிள்ளைகளோ தலைவனுக்காக தங்களை ஆகுதியாகுதுகள்.. என்று மடிந்த மறவர்களுக்காக ஏங்கவும் செய்தாள்..
அன்று பதினாறாம் திகதி..மாலை இரண்டு மணிக்காக காத்திருந்தார்கள் மக்கள்..
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் சொன்ன நேரத்துக்கு வரும் என்று நம்பி அந்த சுடு வெய்யிலிலும் ..அந்த நடு தார் சாலையில் மூடை முடிச்சுகளுடன்..குஞ்சு குருமங்களுடன் காத்திருந்தார்கள்..
காயமடைந்த போராளிகளும் சாலையோரத்தில் காய வேதனையுடன், இலையாங்களுடன் போராடி கொண்டிருந்தார்கள்.
இரண்டு மணி மூன்றாகி..நாலாகி ஐந்தாகி விட்டது .. அந்த முள்ளிவாய்க்கால் கரையில் சூரியன் மறைய தொடங்கிவிட்டான்..ஆழ் கடலில் கரைய தொடங்கிவிட்டான்... மக்கள் மனசில் இருந்த நம்பிக்கையை போல..
இந்தா வருகிறோம் வருகிறோம் என்று சொல்லி கொண்டிருந்த ICRC கடைசி வரை வரவே இல்லை..
மக்கள் மனசில் விரக்தியும் கோபமும் தான் மிஞ்சின.
புலிகளின் தலைமைக்கும் தங்கள் இறுதி கட்ட தாக்குதலை பதினெட்டாம் திகதிக்கு பின் போட வேண்டிய நிலைமை.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூட நம்ப வைத்து கழுத்தறுத்தது..
மக்கள் பொறுமை இழந்தனர்..
மக்கள் நடுவே ஊடுருவி இருந்த புல்லுருவிகளும் நயவஞ்சகர் சிலரும், காவல் கடமையில் இருந்த கடற்புலி போராளி ஒருவனின் கையில் இருந்த ஆயுதத்தை பறித்தெடுத்து அவனை சுட்டு கொன்றனர்.
எந்த மண்ணை...எந்த மக்களை அவன் நேசிச்சானோ..அந்த மக்களே சுட்டு கொல்லும் போதும்..அண்ணே ஆமியிடம் போகாதீங்கள் எல்லாம் பிழைச்சு போயிடும்..அண்ணையை காப்பாத்த முடியாமல் போய்விடும் என்று சொல்லி சொல்லியே செத்து போனான்.
சொல்லுங்கள் உறவுகளே..இப்படி போராளிகள் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோம்..
ஏன் இவர்கள் எல்லாம் எங்கள் கூட வந்து பிறந்தார்கள்..
வேறு எங்காவது நாட்டில், வேறு எங்காவது இனத்தில் பிறந்திருந்தால் நல்லா இருந்திருப்பார்களே..
எங்களுக்காக சாகவேண்டும் என்று இவர்களுக்கு என்ன விதி ..
அந்த போராளியின் சாவை தொடர்ந்து நிலைமை கட்டுகடங்காமல் போனது.
புலிகளின் அரசியல் பிரிவு ஒலிபெருக்கி மூலம் மக்களை அறிவுறுத்தியது..மக்களை நிரையாகவும் வரிசையாகவும் செல்லும்படியும், எக்காரணம் கொண்டும் சாலையை விட்டு இறங்காமல் செல்லும் படியும் கேட்டு கொண்டது.
மக்கள் விரக்தியின் விளிம்பில் புலிகளை விட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி, வட்டுவாகல் கரையை நோக்கி நகர தொடங்கினார்கள்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்து மூன்று மாதகாலமாக கடும் முயற்சி எடுத்தும் கடற்புலிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்படிருந்த ராணுவத்தின் 59 ஆவது படைபிரிவு மக்களுக்கு நடுவாக புலிகளை நோக்கி நகர தொடங்கியது.
தலைவரையும் தளபதிகளையும் வெளியேற்றும் வரை புலிகளுக்கு ஒரு தாய் நிலபரப்பு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதை இல்லாமல் செய்யும் நோக்கோடு ராணுவம் மக்களை பணயமாக்கி மக்களுக்கு நடுவாக தனது நகர்வினை மேற்கொண்டது.
உடனடியாக தலைமைக்கு தெரியபடுத்தபட்டு ஒரு பதில் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் புலிகளின் பிஸ்டல் குழுவினர்.
மக்களோடு மக்களாக வந்து, மக்களூடாக ஊடுருவும் ராணுவத்தை பிஸ்டல் கொண்டு சுட்டார்கள்.
தனது திட்டம் குலைவதை கண்ட ராணுவம், கனரக ஆயுதம் கொண்டு மக்களை நோக்கி சுட தொடங்கியது.
செய்வதறியாத மக்களில் நூற்று கணக்கானோர் அந்த இடத்திலேயே உயிரை விட்டார்கள். ஒரு ஒடுங்கிய பாதையில் விழுந்து படுக்க கூட இடமில்லாமல் துடி துடித்து செத்தார்கள்.
சிலர் பயத்திலே பாதையை விடிறங்கி கண்ணிவெடி வயல்களுக்கு அகப்பட்டு சிதறி செத்தார்கள்.
அந்த காட்சியை வாழ்நாளில் யாருமே பார்க்க கூடாது.
கண் முனாலேயே கைகள் கால்கள் சிதறிபறந்தன. ஒரு கால் சிதறியபடி நொண்டி நொண்டி இன்னொரு மிதிவெடியில் சிக்கி சிதறிய காட்சி..உங்கள் இனத்தில் தான் நடந்தது உறவுகளே.
எங்கே ராணுவம் பாதையை பூட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில் கட்டிய கணவன் குண்டடிபட்டு சாகும்போது, அவனை கூட தூக்காமல் இராணுவத்திடம் ஓடிய மனைவி, பெத்த அப்பன் மிதிவிடியில் கால் சிதறி கத்தும் போது, அவரை கைவிட்டு ஓடிய மகன்கள்.. காயப்பட்டு தூக்கி கொண்டு வந்த வயதான அம்மாவை மிதி வெடி வயலில் தூக்கி எறிந்து விட்டு போன பிள்ளைகள் .. இப்படி சொல்லி கொண்டே போகலாம்..
மனித அவலத்தின் வெளிபாடு..மக்களை சுயனலவாதிகாளாக்கி இருந்தது.. அவர்கள் அந்த கோர நிகழ்வுகளில் பின்னர் மனிதர்களாக இருந்தார்களா என்பதே சந்தேகம் தான்..
அன்பான உறவுகளே..இவையனைத்தும் வேறு எங்கோ நடக்கவில்லை ...எங்கள் இனத்தில் எங்கள் மண்ணில் தான் நடந்தன..
எவ்வளவு வலி இருந்ததால் ..எவ்வளவு கோரங்களை கண்டிருந்தால் ..எங்கள் மக்களின் மனம் இவ்வளவு பேதலிச்சிருக்கும்..
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்..
இந்த மனித பேரவலத்தை தொடர்ந்து புலிகள் சுடுவதை நிறுத்தி பின்வாங்குமாறு கட்டளை வந்தது.
மக்கள் அலையலையாக ராணுவ கட்டுபாட்டு பகுதியை நோக்கி நடந்தார்கள்.
மாலை ஆறுமணியுடன் இராணுவம் மக்கள் உள்ளே வருவதை தடுத்து நிறுத்தியது. தனது நகர்வுக்காக படையணியை மாத்தியது..
யுத்த தாங்கிகள், கனரக ஆயுதங்களை தயார்படுத்தியது. அடுத்த நாள் காலையில் தனது இறுதி தாக்குதலை தொடுபதற்கான முழு முயற்சியில் இறங்கியது.
அது தெரியாமல் ..இப்பகுதியில் காலையிலாவது ICRC வரும் என்ற நம்பிக்கையில்...
காயமடைந்த போராளிகளும், இன்னொரு தொகுதி மக்களும் காத்திருந்தனர்.
அவர்களுடன் ராணியம்மாவும் காத்திருந்தார்.
(தொடரும்)
பாகம் இருபத்திரண்டு இங்கே அழுத்துங்கள்