இந்தியப் படை வருகை
துட்டக்குரங்கினைச் சிட்டுக்குருவிக்குக்
கட்டிவைத்தே பெரும் சாதனையை
எட்டிவிட்டோமுயர் நோபல் பரிசெமக்(கு)
ஏற்புடைத்தாமென எண்ணினரால்
வெட்டிப் பிடுங்கிய வீறாப்பில் எங்களை
வீழ்த்திடலாமென்ற நோக்குடனே
துட்டப் படைகளை ஏவினர் ஈழம்
துயரடைந்தாள் எனில் சோர்வடையாள்
பாரதச் சூதர்கள் வானரசேனை
படுத்திய பாடுகள் ஒன்றிரண்டோ
நேரெதிர் கொண்ட வியாக்கிர சேனை
நிகழ்த்திய சாதனை ஒன்றிரண்டோ
ஆதரவற்ற தமிழினம் மீது
அமைதிப் படையெனும் போர்வையிலே
காதகர் செய்த பழிகளை மீட்பதில்
காண்பதென்ன அதை விட்டிடுவோம்
பன்னிரண்டு புலித்தலைவர்களின் மறைவு (வேறு)
ஆயுதந் தனைக்கொடுத்தே - அந்த
அமைதியைக் கெடுத்திடு;ம் படைகளிடம்
சேய்கள் தம் பணி முடித்தார் - சிலர்
திருமணம் புரிந்து தம் வாழ்வமைத்தார்
ஆயினும் இழி மனத்தோர் - அந்த
அருந்தவப் புதல்வரை பழி முடிக்க
ஆயிரம் சதி புரிந்தார் - அதில்
ஆறிரு வேங்கைகள் உயிர் கொடுத்தார்
வங்கத்துக் கடற் பரப்பில் - அந்த
வரிப்புலிக் குருளைகள்வருகையிலே
சிங்களக் கடற்படையைத் - தம்
சினேகிதரென நினைந்தருகில் வர
இங்கிதம் சிறிதுமிலார் - அந்த
இழி குணத்தோர் தங்கள் பழி முடிக்க
தங்கங்கள் தனைப் பிடித்தார் - தாய்
தமிழவள் கலங்கிட விலங்குமிட்டார்
காடையர் தலைவனவன் - எங்கள்
கண்மணிகள் தனைக் கடத்தித் தன்றன்
நாடதன் தலை நகரில் வதை
நடத்திடு நான்காம் மாடியெனும்
கூடத்தில் கொடுமை செய்ய மனம்
குறித்து விட்டான் இதைக் குறிப்பறிந்தே
தேடினுங் கிடைக்காத - எங்கள்
தேயத்துப் பன்னிரு வன்னியரும்
மாய்வதில் உறுதிகொண்டார் - நச்சு
மருந்தினை அருந்தித்தம் உயிர் துறந்தார்
சேய்களை இழந்து நின்றாள் - அன்னை
திரும்பவும் தலைமுடி அவிழ்த்து நின்றாள்
நாய்தனை நிச்சயித்துத் - தன்றன்
நலன் நிறைவாழ்வுக்குத் தீங்கு செய்த
பேயெனப் பாரதத்தை - அந்தப்
பேதை தன் மனதினில் நினைந்தழுதாள்
ஈழத்தாய் குமுறல் (வேறு)
பாதகியே துர்க்குணத்துப்
பார் அதம் செய் நச்சு முலைப்
பூதகியே நீ திரும்பிப்போ - நிலை
ஏதுமற்று வாடுமெமை
ஏய்த்து விட வந்திருக்கும்
காதகியே நீ திரும்பிப் போ
ஆதரவற்றே யுலகில்
அன்னையென்று உன்னையெண்ண
தீது செய்தாய் நீ திரும்பிப்போ - உயர்
நீதி செய்வாயென்றிருக்க
நீசரோடு கட்டிவைக்கச்
சூது செய்தாய் நீ திரும்பிப்போ
(வேறு)
உள்ளங் குமுறுதடா - மக்காள்
உடன் செயல் படுவீர்
கள்ளனைக் கட்டு என்றே - என்னைக்
கண்டித்துச் சொல்லுகிறார்
துள்ளித் திரிந்தெனது - மக்காள்
சுதந்திர வாழ்வை
அள்ளி அனுபவிக்க - இவர்
அனுமதியாராம்
கால் கட்டுப் போடுகிறார் - என்றன்
கன்னியழிப் பேனோ
ஆர் கெட்டுப் போனாலும் - நான்
அசைந்திடுவேனோ
சீர் கெட்டு வாழ்விழந்த - அந்தச்
சிறுக்கி மூத்தவள் போல்
பேர் கெட்டுப் போவேனோ - என்
பெற்றி மறப்பேனோ
அப்பன் எனக்களித்த - என்றன்
அரிய சொத்துக்களை
குப்பையில் போடுவனோ - பெருங்
குழியில் வீழ்வேனோ
துப்பிட ஊர் உலகம் - தன்றன்
தூய்மையைத் தானிழந்தே - அவள்
வைப்பாட்டியானது போல்
என்றன் வாழ்வை இழப்பேனோ
துடித்து வாழுகிறார் - என்றன்
சுவாலைக் கண்மணிகள்
நடித்து வாழுகிறார் - அந்த
நர்த்தகியின் புதல்வர்
இடித்து எம்மரபை - அவர்
இங்கிலீஸ் பேசுகிறார்
படித்தும் என் புதல்வர் - தங்கள்
பாசை மறக்கவில்லை
மண்ணை இழந்து விட்டால் - சுய
மாண்பெனக் குண்டாமோ
கண்ணைக் கெடுத்து விட்டே - நான்
காட்சி வரைவதுவோ
பெண்ணைக் கொடுத்து விட்டால் - தம்
பிரச்சினை தீர்ந்ததென்றே
எண்ணினரோ மக்காள் - நாம்
இளித்த வாயர்களோ
என்று துடித்ததடா - நம்
ஈழத்து அன்னையின் வாய்
கன்றெனத் துள்ளி வந்தான் - அந்தக்
கன்னித் தமிழ்ப் புதல்வன்
கொன்றிடும் போர் முனைப்பே - அன்னை
கொள்கையென்றே நினைந்தோர்
அன்று உணர்ந்தனராம் - அவள்
அகிம்சைத்தத்துவத்தை
திலீபனின் உண்ணா விரதம்
(வேறு)
தீயிலுடலை எரிக்கவா - கொடுந்
தேளெனைக் கொட்டச் சிரிக்கவா
காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன்
கண்களைக் குத்திக் கெடுக்கவா
தாயுன்றன் வேதனை தீர்க்கவே - எதும்
தாங்குவன் நானெனக் கூறியே
பாயும் புலி எம் திலீபனும் - பெரும்
பட்டினிப் போரைத் தொடங்கவே
இந்தியச் சூதர்கள் இஃதினை
எதிர்பார்த்திருக்காத நிலைமையால் - தங்கள்;
முந்தைய வாக்குறுதி தனை - விட்டு
மோசங்கள் செய்யத் தொடங்கினர்
சிந்தி இரத்தத்தினால் செய்த - எங்கள்
தேச விடுதலைப் போரினைத் - தங்கள்
சொந்த நலன்களைப் பேணவே
சொதப்பிடலாமென எண்ணினர்
நாட்கள் கடந்தனவாயினும் - எங்கள்
நன்மைகளுக் கொரு காப்பிலை
ஆட்களைக் கொண்டு வந்தெம் நிலம் - தனில்
ஆயிரமாய்க் குடியேற்றலும்
சாக்குச் சமாதானம் கூறலும்
சரிவரும் யாவுமென்றெத்தலும் - எனப்
போக்கினர் காலம் திலீபனோ - தன்றன்
பொன்னுடல் தேயத் தொடங்கினான்
மாய்வதொன்றே தன் கடன் இனி - என்று
மன்னவன் மண்ணின் விடுதலைத்
தீயை விழுங்கிக் கிடந்தனன் - ஈழ
தேசம் அழுது துடித்தனள்
பாயும் புலி பசும் புல்லினை - தன்றன்
பட்டினி போக்கப் புசிக்குமோ - அட
வாயில் வயிற்றில் விடுதலைப் பசி
வாட்டத் துடித்தது அவனுயிர்
காந்தி பிறந்த பெருநிலம் - புத்தன்
கருணை உரைத்த உயர் நிலம் - பச்
சோந்திகளின் புதரானதால் - எங்கள்
சோகத்தை யாரும் மதித்திலர்
ஏந்தல் திலீபன் இறந்திடில் - எமக்(கு)
என்ன எனத் திமிர் கொண்டுமே
சேர்ந்து இலங்கை அரசுடன் - சதி
செய்தனர் எம்மை ஒடுக்கவே
நீருமருந்த மறுத்துமே - கொடு
நீசர்கள் நெஞ்சிலுறுத்தவே - இந்தப்
பாரினில் பட்டினிப் போர் செய்த - எங்கள்
பாலகன் தன்னுயிர் நீத்தனன்
ஊரெங்கும் வேதனை சூழ்ந்தது - கொடி
யோரின் சொரூபம் தெரிந்தது - நெஞ்சில்
ஈரமில்லாதவரோடினிக் - கதை
ஏதென ஈழம் தெளிந்தனள்
அன்னை பூபதி
இன்னுயிர் ஈந்த திலீபனின் - பின்
எதற்கினி வாழ்வெனக் கென்றுமே
தன்னுயிர் நீத்திடு நோக்குடன் - ஒரு
தாய் எழுந்தாள் அந்த நாளிலே
அன்னை அவள் பெயர் பூபதி - தன்
ஐம்பத்தியாறு வயதிலே
உன்னி விடுதலைக் காகவே - தன்
உணவை மறுத்தனள் சாகவே
பூபதி வாழ்வும் முடிந்தது - ஈழ
பூமியிற் சோகம் கவிந்தது
சேய் பதினாயிரம் சேர்ந்திட - புலிச்
சேனை பெருகிச் சிறந்தது
வாபதில் சொல்கிறோம் என்று - இந்திய
வானர சேனையிற் பாய்ந்தது
தாயவள் காளி விழித்தனள் - இந்தத்
தாரணி ஆடச் சிரித்தனள்.