நான் இல்லாத என் வீடு
- ஆதிலட்சுமி:-
வெறிச்சோடிக் கிடக்கிறது என்வீடு
நீரின்றி இறந்துகொண்டிருக்கும்
மரங்களின் இலைகளால்
நிறைந்து கிடக்கிறது வாசல்.
கூரை களவாடப்பட்டு....மழைநீரில்
கரைந்துகொண்டிருக்கின்றன சுவர்கள்.
ஆளுயரத்துக்கு புற்றெடுத்துக் கிடக்கிறது
வீட்டின் பின்புறம்..
பழுத்து விழுந்த பழங்களின் விதைகள்
முளைத்து நிற்கின்றன பற்றையாய்....
நாய்கள் வந்து சுதந்திரமாய்
மலங்கழித்துப் போகின்றன தரையில்.
எவரையும் காணாத துயரத்தில்
இரவு முழுவதும்
அழுதுவிட்டு போகிறது நிலவு.
அவ்வப்போது அடிக்கும் காற்றில்
மூக்கைத்துளைக்கிறது
அழுகிய பிணவாடை...
பிள்ளையின் ஆசைக்காய் கட்டிய
மாமரத்து ஊஞ்சல் அறுந்து தொங்குகிறது
தாலிக் கயிறாய்....
வெடித்த பலூனின் சிதறல்களாய்
பிள்ளைகளும் பறந்திட...
உடைந்த போத்தில்களையும்
உருப்படாத பொருட்களையும் களவாக
கொண்டுவந்து கொட்டுகிறது ஊர்ச்சனம்.....
அனுமதிக்கு விண்ணப்பித்து
ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும்
வெந்த மனத்துடனும்
வளவுக்குள் நுழையமுடியாத் துயரத்துடனும்
வீதியில் நின்று,
என்வீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/109591/language/ta-IN/article.aspx