யேர்மன் மொழியில் செய்தியை கேட்க, பார்க்க விரும்பினால்,
https://www1.wdr.de/nachrichten/iran-protest-unterwasche-festnahme-100.html
செய்தியின் சுருக்கம்,
ஈரானில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய அரசின் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு பல்கலைக்கழக மாணவி தன் ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக்கழக முன் வளாகத்தில் வெளியார் முன்பாக நடமாடினாள்.
ஈரானிய இஸ்லாமிய அரசில், பெண்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடு இருக்கின்றது என்பது உலகம் அறிந்த விடயம்தான். ஆனாலும் அவ்வப்போது தெஹ்ரான் போன்ற பெருநகரங்களில், இளம் சமுதாயத்தினர் ‘முக்காடு அணிய வேண்டும்’ என்ற அரசின் கொள்கையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மஹ்சா அமினி என்ற பெண் முக்காடு விடயத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போய் சித்திரவதையின் விளைவாக இறந்தார். ஈரானில், ஆடைக் கட்டுப்பாடுகளை பெண்கள் மீறினால் சித்திரவதைகளை,வன்முறைகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்கு மஹ்சா அமினி ஒரு சாட்சி.
ஈரானில், தனியார் பல்கலைக்கழகமான ஆசாத் பல்கலைக்கழகத்தின் ( Asad-University) நிர்வாகிகள், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் கட்டாயம் மொட்டாக்கு அணிய வேண்டும் என்று அறிவித்ததன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின் கோபம் கொண்ட ஒரு மாணவி எதிர்ப்பைக் காட்டுவதற்காக தனது ஆடைகளைக் களைந்து உள்ளாடைகளுடன் பல்கலைக் கழகத்துக்கு முன்பாகக் காட்சி தந்தார் என மனித உரிமை அமைப்பான ஹெங்கா (Hengaw )தெரிவித்திருக்கிறது.
பல்கலைக் கழக நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் வந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள். இப்பொழுது அந்தப் பெண் ஒரு மனநோயாளி எனவும் அவள்மேல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்கள்.
ஈரான் ஜனாதிபதி Massoud Peseschkian தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் மீதான ஆடைக் கட்டுபாடுகள் பற்றிய பிரச்சினையை தீர்க்கப் போவதாக உறுதியளித்திருந்தார். புதிய ஜனாதிபதியாக இருந்தாலும் அவரும் பழமைவாத-மிதவாத ஜனாதிபதிதான்.
இங்கே யார் மனநோயாளி என்பதில் ஒரு குழப்பம் வருகிறதல்லவா?