Everything posted by ஏராளன்
-
மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை
மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் சதொச மனித புதைகுழி அகழ்வு பணி இவ்வாரம் மீண்டும் இடம் பெறவுள்ள நிலையில் தடய பொருட்களை பிரித்தெடுத்தல், புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் செய்தல், அகழ்வு செய்யும் பணிகள் முதற்கட்டமாக இடம்பெற்று வருகின்றது. மன்னார் சதொச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் புதன்கிழமை (9) இடம்பெற்றன. இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கேன் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்க, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே சதொச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடையங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. என்ற போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளையோ கணொளியோ புகைப்படமே எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310491
-
தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள திட்டம் - அமெரிக்காவில் ஆப்கானை சேர்ந்தவர் கைது
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த குற்றச்சாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட நபர் ஐஎஸ் அமைப்பின் பெயரால் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என அமெரிக்க நீதி திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒக்லஹோமா நகரில் வசிக்கும் 27 வயது நசீர் தவ்ஹெடி என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐஎஸ் அமைப்பினால் உணர்வூட்டப்பட்ட இந்த நபர் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று வன்முறையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டார் என எவ்பிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் ஆயுதங்களை சேமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் என எவ்பிஐ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195840
-
தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும் எண்ணம் இல்லை; கோவிந்தன் கருணாகரம் !
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (09) அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் தமது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியி; சங்கு சின்னத்தில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். பெண் பிரதிநிதி ஒருவர் உட்பட எட்டுப்பேர் கொண்ட வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டன. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம், தமிழ் மக்கள் கடந்த கால முதல் இந்த நாட்டிலே எப்படித்தான் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எங்களது மக்களது உரிமைகளை பெறுவதற்கு நாம் ஆணித்தனமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவைள்ளது, வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக ஜனநாயக தமிழ் தேசியக் முன்னணி செயற்படுகின்றது. எங்களது வாக்குகளை பிரிப்பதற்காக சில சுயாட்சிக் குழுக்களும் இங்கு களமிறங்கியுள்ளது . அவர்கள் பெரும்பான்மையினரின் தூண்டுதலால் தமிழ் மக்களின் வாக்கை பிரிப்பதற்கு சிதைப்பதற்கு களம் இறக்கப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள். எங்களால் தமிழ் மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய விடயம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்கள் எட்டு பேரில் யார் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவார் என்பது எமக்கு முக்கியமல்ல் சங்கு சின்னம் அமோக வெற்றி பெற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/195856
-
தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா - உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்
கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09) கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக்கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரியவேண்டும்என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது. இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது.தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/195885
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
'கூகுள் டீப் மைண்ட்' இணை நிறுவனருக்கு வேதியியல் நோபல் பரிசு - எதற்காக? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகிள் டீப் மைண்ட் இணை நிறுவனர் டெமிஸ் ஹசாபிஸ் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜீனா ரன்னார்டு பதவி, அறிவியல் நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டெமிஸ் ஹசாபிஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’-இன் இணை நிறுவனராவார். புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகின்றன. புரதங்களை நன்கு புரிந்துகொள்வது மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர் அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இந்த முறை மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல அறிவியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' "இந்த பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் கௌரவமாகவும்" இருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் டேவிட் பேக்கர் கூறினார். லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, 'ஆல்பாஃபோல்ட்2' என்ற கருவியை உருவாக்கினர். இந்த கருவி வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' செய்ததாகத் தேர்வு குழு குறிப்பிட்டது. இது தற்போது உலகம் முழுவதும் 20 கோடி புரதங்களை ஆராய பயன்படுத்தப்படுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை (அக்டோபர் 9) அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. வெற்றியாளர்கள் 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனர், இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகையை சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், டெமிஸ் ஹசாபிஸ் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார் யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ்? பேராசிரியர் ஹசாபிஸ், லண்டனில், கிரேக்கஂ மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தனது பெற்றோருடன் வளர்ந்தார். சிறுவயதிலேயே அவர் சதுரங்கத்தில் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்தார். 13 வயதில் ‘மாஸ்டர்’ தரநிலையை அடைந்தார். கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், அவர் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார், அதற்காகப் பல விருதுகளை வென்றார். பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டத்தை முடித்து, பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். 2010-இல் அவர் இணைந்து நிறுவிய இயந்திர கற்றல் நிறுவனமான ‘DeepMind’-ஐ 2014-இல் கூகுள் வாங்கப்பட்டது. இது, பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த வழிமுறைகளை உருவாக்க, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்துடன் நரம்பியல் அறிவியலைப் பயன்படுத்துகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm249ne0ym4o
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
அதுக்கு முதலில் வெல்லவேணுமே அண்ணை! இப்ப வந்துள்ள ஆட்சியாளர்கள் வேற சலுகைகளை குறைக்கப் போகினமாம், சேவை செய்ய வருவோர்களுக்குத் தான் நிலமை சரிவரும் போல இருக்கு.
-
அமெரிக்க அட்மிரல் நாளை இலங்கைக்கு விஜயம்
பாய்மரக் கப்பலாம்! அது தான் பாக்க வந்தவர்!!
-
ஈரானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் : பின்புலம் தெரியுமா..!
அண்ணை அப்ப நாங்கள் வசிப்பது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடத்தில் எல்லோ!
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 09 OCT, 2024 | 03:10 PM பாகம் 2 டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பரபரப்பான நிகழ்வுகள் பலப்பல நிறைந்த ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் கடந்தவாரம் எழுதியிருந்தேன். இந்த இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி குறித்து பாராப்போம். கடந்த வாரத்தைய பத்தியில் குறறிப்பிட்டதைப் போன்று ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு தப்பியோடினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கைதாகி கொலை செய்யப்படக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பிய அதேவேளை தங்களது அடையாளங்களை மாற்றி வேவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்து கைதுசெய்யப்படுவதில் இருந்து தப்பி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றவர்களில் அநுரவும் ஒருவர். ஜே.வி.பி.யின் தாபகத் தலைவர் விஜேவீர, இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன ஆகியோர் 1989 - 90 காலப்பகுதியில் அரசினால் கொலை செய்யப்பட்ட ஜே.வி.பி.யின் 14 உயர்மட்டத் தலைவர்களில் அடங்குவர். சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி வாழ்ந்த ஒரேயொரு உயர்மட்டத் தலைவரும் அரசியல் குழு வின் உறுப்பினருமாவார். அவர் பிறகு ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார். 1990ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு தப்பியோடிய சோமவன்ச அங்கிருந்து தாய்லாந்துக்கு சென்றார். அந்த நாட்டில் இருந்து இத்தாலிக்கு மாறிய அவர் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரினார். சோமவன்ச அமரசிங்க பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே மாறிமாறி பயணம் செய்த சோமவன்ச அமரசிங்க புலம்பெயர் சிங்கள சமூகத்தவர்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் கிளைகளை அமைத்தார். அங்கிருந்து அவர் இலங்கையில் இயங்காமல் இருந்த உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு அனேகமாக அழிந்துபோயிருந்த ஜே.வி.பிக்கு புத்துயிர் கொடுக்கும் ஔிவுமறைவான செயற்பாடுகளை தொடங்கினார். அவர் பிரான்ஸில் இருந்தும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் இங்குள்ள இரகசிய உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். அதேவேளை, பாதுகாப்பு நிலைவரமும் தளரத் தொடக்கியது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜே.வி.பி. மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தது. 1993 மே மாதம் பிரேமதாசவின் மரணத்துக்கு பிறகு ஜே.வி.பி.யை பொறுத்தவரை வசதியாக அமையக் கூடியதாக அரசியல் காலநிலை மாறியது. 1994ஆம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்க இலங்கை திரும்பி அமைதியான முறையில் ஜே.வி.பி.யை மீள ஒழுங்கமைக்கத் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஜே.வி.பி. தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே இருந்தது. அதனால் சோமவன்ச ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அந்த அமைப்பு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு 15,309 வாக்குகளைப் பெற்றது. ஜனித் விபுலகுண பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆனால், அவர் உடனடியாகவே பதவியில் இருந்து விலகவே நிஹால் கலப்பதி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். 1994 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவாக வேலை செய்தது. அவர் ஜனாதிபதியாக வந்ததும் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கினார். அதையடுத்து ஜே.விபி. அரசியல் செயற்பாடுகளை மீண்டும் பகிரங்கமாக முன்னெடுக்கத் தொடங்கியது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. 1995 ஆம் ஆண்டில் அதன் தேசிய மகாநாட்டை தங்காலையில் நடத்தியது. களனி பல்கலைக்கழகம் அதேவேளை, அநுர தனது மூன்றாம் நிலைக்கல்வியை மீண்டும் தொடங்கினார். 1992ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்த அவர் தனது பல்கைலைக்கழக நாட்களில் மிகவும் அமைவடக்கமாக இருந்தார் என்றபோதிலும், மாணவர்கள் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றார். ரியூட்ரிகளில் கற்பிப்பதிலும் அவர் ஈடுபட்டார். சோமவன்சவுடனும் தொடர்பில் இருந்த அநுர அவரிடமிருந்து அந்தரங்க தகவல்களை ஏனைய ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு தெரிவித்துவந்தார். தனது கல்வியை நிறைவு செய்துகொண்ட அநுர 1995ஆம் ஆண்டில் மௌதீக விஞ்ஞானத்தில் பட்டத்தைப் பெற்றார். முழு நேர வேலைவாய்ப்பு ஒன்றைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அவர் முழுநேர அரசியலுக்கு திரும்பினார். முன்னர் கூறியதைப் போன்று சோமவன்ச இலங்கைக்கு திரும்பி ஜே.வி.பி.க்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அநுரவை விரும்பிய சோமவன்ச அவரின் விவேகம், ஆற்றல் மற்றும் கொள்கை உறுதிப்பாட்டினால் பெரும் கவரப்பட்டார். அநுரவை அவர் தனது அரவணைப்பில் எடுத்துக்கொண்டார். அநுரவின் துரித எழுச்சி தங்காலை தேசிய மகாநாட்டுக்கு பிறகு ஜே.வி.பி.யின் ஆதரவுடனான சோசலிச மாணவர்கள் சங்கம் மீள ஒழுஙகமைக்கப்பட்டது. அதன் தேசிய அயைப்பாளராக அநுரா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜே.வி.பி.யின் படிநிலைகளுக்குள் அவர் துரிதமாக உயர்வடைந்தார். 1996ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் உறுப்பினராக வந்த அவர் இரு வருடங்களில் 1998ஆம் ஆண்டில் சகல வல்லமையும் பொருந்திய ஜே.வி.பி. அரசியற்குழுவுக்கு நியமிக்கப்பட்டார். ஜே.வி.பி.யின் மூன்றாவது கட்டம் 1971ஆம் ஆண்டில் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சி ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கமாகக் கொண்டது. 1987 - 90 காப்பகுதியில் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி "இந்திய ஆக்கிரமிப்புக்கு" எதிரான தேசபக்த எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டது. அதற்கு பிறகு இப்போது அதன் மூனாறாவது கட்டம். அந்த கட்டத்தில் ஜே.வி.பி. காயப்பட்டு உருக்குலைந்த ஒரு அமைப்பாக இருந்தது. அரசினால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மக்கள் கவலையுடன் மக்கள் கிலி கொண்டிருந்த போதிலும் கூட, ஜே.வி.பி. செய்த அட்டூழியங்கள் பற்றியும் அச்சமடைந்தவர்களாகவே இருந்தனர். ஜே.வி.பி.யின் பயங்கரம் தலைவிரித்தாடிய காலம் மக்கள் மனதைவிட்டு அகலாமல் அப்படியே இருந்தது. அதனால் ஜே.வி.பி. அதன் மீள் எழுச்சியை முன்னெடு்பதற்கு புதிய ஒரு அரங்கு தேவைப்பட்டது. இலங்கைப்படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தன. சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி. இலங்கைத் தேசியவாதம் மற்றும் நாட்டுப் பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஒரு சிங்கள பேரினவாதப் போக்கை கடைப்பிடித்தது. போரை ஆதரித்த ஜே.வி.பி. அதற்கு பல்வேறு வழிகளிலும் உதவியாகச் செயற்பட்டது. ஆயுதப்படைகளுக்கு ஆட்திரட்டல்களைச் செய்வதற்கான பிரசாரங்களை அது தீவிரமாக முன்னெடுத்தது. படைவீரர்களுக்கு மனத்தைரியத்தை ஊக்குவிப்பதற்காக போரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு ஜே.வி.பி. யின் தலைவர்கள் விஜயம் செய்தார்கள். தேர்தல்களில் போட்டி எதிர்மறையான அரச எதிர்ப்பு படிமத்தில் இருந்து ஒரு நேர்மறையான அரச ஆதரவு படிமத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியில் ஜே.வி.பி. ஒரு புத்தமைவாக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் அது கிரமமாக தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியது. இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கும் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கும் எதிரானதாக இருந்தபோதிலும், ஜே.வி.பி. மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எதிரானதாக இருக்கவில்லை. மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்களிலும் அது போடாடியிட்டது. தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் ஜே.வி.பி.அதன் ஆதரவுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக வந்ததன் மூலம் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் ஒரு அங்கீகாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. பாராளுமன்ற தேர்தல்கள் அதற்கு பிறகு அவர்கள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதில் நாட்டம் காட்டினார்கள். 2000 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜே.வி.பி. 518,774 வாக்குகளைப் பெற்றது. இரு நியமன உறுப்பினர்கள் உட்பட பத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2001 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.க்கு 815, 353 வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றத்துக்கு சென்ற 16 உறுப்பினர்களில் 13 பேர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மூவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள். ஏற்கெனவே கூறப்பட்டதைப் போன்று அநுர இப்போது ஜே.வி.பி.யின் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பினர். சோசலிச மாணவர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளரான அவர் கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மாணவர்கள் சங்கத்தின் அமைப்பாளர் என்ற வகையில் அவர் மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கினார். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஜே.வி.பி.யின் முக்கியமான ஆதரவுச் சக்தியாக மாணவர்கள் விளங்கினர். அநுரவின் வழிகாடடலில் ஜே.வி.பி. ஆதரவு மாணவர்கள் சங்கம் கணிசமானளவுக்கு விரிவடைந்து பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தன்னை நிறுவிக் கொண்டது. எனவே ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டபோது அநுரவுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டது. ஒரு மாவட்டத்துக்கான வேட்பாளராக மட்டுப்பட்டு நிற்காமல் நாட்டின் சகல பாகங்களிலும் அவர் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. மிகுந்த ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளராக வெளிக்கிளம்பிய அநுர கற்பனாவாத வெற்று ஆரவார உரைகளை நிகழ்த்தியவர் அல்ல. கூறவேண்டிய விடயத்தை நேரடியாகவே கூறி நியாயத்தை மக்களுக்கு விளங்கவைப்பதில் மிகுந்த ஆற்றலை அவர் வெளிப்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் அவர் உணர்ச்சிமயப்பட்டவராகவும் பேசுவார். தேசிய பட்டியல் எம்.பி. 2000ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அநுர முதற்தடவையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். இரண்டாவது தடவையும் அவர் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மிகவும் விரைவாகவே அவர் தன்னை பாராளுமன்றத்தில் ஆளுமைத்திறன் கொண்ட பேச்சாளராகவும் ஆற்றல் மிகு விவாதியாகவும் நிரூபித்தார். 2001ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தமோதிலும், அவரது கட்சியான பொதுஜன முன்னணி பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவதாகவே வந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 4,086,026 வாக்குகளைப் பெற்று 109 ஆசனங்களைக் கைப்பற்றியது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி 3,330,815 வாக்குகளுடன் 77 ஆசனங்களைப் பெற்றது. ஜே.வி.பி. 815, 353 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை தனவசமாக்கியது. பொதுஜன முன்னணியினதும் ஜே.வி.பி.யினதும் வாக்குகளை ஒன்றாகச் சேர்த்தால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாவது இடத்துக்கே தளளப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையானது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஜே.வி.பி. இந்த கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2004 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யுடன் கூட்டணி ஒன்றை அமைத்தார். கொழும்பில் இருந்த வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் இந்த கூட்டணி உருவாவதற்கு அனுசரணையாகச் செயற்பட்டார். அதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக ஜே.வி.பி. 2004 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,223,970 வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களைக் கைப்பற்றியது. 3,504,200 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி 82 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டது. 2004 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பாராட்டத்தக்க ஒரு வெற்றியைப் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியல்களின் அங்கமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜே.வி.பி.யின் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தங்களது வேட்பாளர்களுக்கு உச்சபட்ச எண்ணிக்கையில் விருப்பு வாக்குகள் கிடைப்பதற்கு ஜே.வி.பி.யினர் கடுமையாகப் பாடுபட்டனர். அதன் விளைவாக அந்த கட்சிக்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன. அமைச்சராக அநுர அநுரகுமார திசாநாயக்கவுக்கு 2004ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது.2004 ஏப்ரில் தேர்தல் அவரது தேர்தல் ஞானஸ்நானமாக விளங்கியது. குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிட்ட அவர் 153, 868 விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவானார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க அமைச்சரவையை அமைத்தபோது ஜே.வி.பி.க்கு நான்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டன. அநுர விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார். காலநடை வளர்ப்பும் விவசாயமும் அநுராவின் இதயத்துக்கு நெருக்கமான துறைகள் என்பதால் அந்த அமைச்சைப் பெற்றதில் அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். மிகவும் திறமையாக தனது கடமைகளைச் செய்த அவர் நாட்டின் விவசாயத்துறைக்கும் கால்நடை வளர்ப்பு துறைக்கும் புத்துயிர் அளிக்கப் பாடுபட்டார். ஆனால், நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமாக வேறுபட்ட ஒரு திருப்பத்தை எடுத்தன. அநுராவின் அமைச்சர் பொறுப்புக் கடமைகள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தன. அவரும் ஏனைய ஜே.வி.பி. சகாக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர்முன்னணி அரசாங்கத்தில் வகித்த பதவிகளைத் துறந்தனர். ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். 2004 சுனாமி நடந்தது இதுதான். 2004 டிசம்பரில் சுனாமி இயற்கை அனர்த்தத்தின் வடிவில் நாடு பயங்கரமான பேரிடரை அனுபவித்தது. பெருமளவில் மரணங்கள், அழிவுகள், இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிராந்தியங்களின் பரந்தளவு கரையோரப் பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதேபோன்று வடக்கு, கிழக்கின் வேறு கரையோரப்பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் பகுதிகளினதும் புனர்வாழ்வுக்கும் புனரமைப்புக்கும் 300 கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு சர்வதேச உதவி வழங்குநர்கள் தயாராயிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கும் உதவுவதற்கு பணம் ஒப்புரவான முறையில் செலவிடப்படவேண்டும் என்பது கடுமையான ஒரு நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதி திருமதி குமாரதுங்க நோர்வேயின் அனுசரணை ஊடாக விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். வழமைக்கு மாறான விடுதலை புலிகளுடன் கூட்டுக் கட்டமைப்பு ஒன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [Post - Tsunami Operational Management Structure (P - TOMS) ] என்று அது அழைக்கப்பட்டது. வெளிநாட்டு உதவியின் ஊடாக பெறப்படும் நிதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் பகுதிகளுக்கும் ஒப்புரவான முறையில் விநியோகிக்கப்படுவதற்கு வசதியாகவே அந்த கட்டமைப்பு நிறுவப்பட்டது. அது அரசாங்கத்தினதும் விடுதலை புலிகளினதும் ஒரு கூட்டுப் பொறிமுறையாகும். ஜே.வி.பி. எதிர்ப்பு ஆனால், சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி. அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி. அதன் சொந்த கடந்த காலத்தை மறந்து விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்ததுடன் அந்த கட்டமைப்பு அந்த இயக்கத்தை அரசாங்கத்துக்கு நிகரானதாக நோக்குவதாக கண்டனம் செய்தது. முன்னதாக விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும் ஒஸ்லோ அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகளையும் ஜே.வி.பி. எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002ஆம் ஆண்டில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தபோது விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக ஜே வி.பி. பெரிய ஆர்ப்பாட்ட இயக்கங்களை ஏற்பாடு செய்தது. சுனாமி உதவிக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தபோது திருமதி குமாரதுங்க அரசாங்கம் அதைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஜே.வி.பி. 2005 ஜூன் 15ஆம் திகதியை காலக் கெடுவாகவும் விதித்தது. அதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மறுத்தபோது 2005 ஜூன் 16 ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. அநுரகுமார திசாநாயக்க உட்பட நான்கு அமைச்சர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர். " எமது பணிகளை பூர்த்திசெய்ய முடியாத நிலையில் ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதை நாம் அறிவிக்கிறோம்" என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறினார். அடிப்படை உரிமைமீறல் மனு அதற்கு பிறகு ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த கட்டமைப்புக்கு எதிராக இடைக்காலத்தடை ஒன்று விதிக்கப்பட வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு அநுரா குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் ஐந்து காரணங்களைக் குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டுப் பிரிவுகளுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பித்தது.2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் சுனாமி உதவிக் கட்டமைப்பு செயற்பட முடியாமல் போய்விட்டது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவை வரவேற்ற ஜே.வி.பி.யினர் கூட்டுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை தாங்களே தடுத்து நிறுத்தியதாக கூறினர். ஜே.வி.பி.யின் அன்றைய பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச " பஸ்ஸுக்கு சக்கரங்கள் இல்லை" என்று கூறி அவலத்தில் மகிழ்ச்சி கண்டார். மகிந்தவுக்கு ஆதரவு அதையடுத்து ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்ட ஜே.வி.பி. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தது. அவர் வெற்றி பெறுவதற்கு ஜே.வி.பி. பெரிதும் உதவியது. 19 வருடங்கள் கழித்து இப்போது ஜே.வி.பி. தானாகவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. குறுகிய ஒரு காலப்பகுதியில் (2004 - 05) அமைச்சரவை அமைச்சராக இருந்த அநுரகுமார திசாநாயக்க இப்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. ஜே.வி.பி.க்குள்ளும் பரந்தளவில் நாட்டிற்குள்ளும் அநுராவின் அரசியல் உயர்வை பற்றிய கதையை இந்த கட்டுரையின் மூன்றாவது மாகத்தில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/195845
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
தவறான வாதம் அண்ணை.
-
தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான அவசியமும்
அ. டீனுஜான்சி 64 வயதுடைய மக்கரி ராஜரத்னம், கந்தப்பளையைச் சேர்ந்தவர், தனது இடது கண்ணில் ஏற்பட்ட பார்வைக் குறைபாட்டினை நிவர்த்திப்பதற்காக கடந்த ஆண்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 2023 ஏப்ரல் 5 ஆம் திகதி கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பினார். அப்போது வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரட்னிசோலோன் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்தினார். அதன் பின்னராக, அதிகமான கண்ணீர் வெளியேறல், கண் வலி, தலைவலி போன்ற கடுமையான நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். இதனால் மே 10 ஆம் திகதி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மக்கரி ராஜரத்னம் நிரந்தரமாக பார்வையை இழந்துள்ளார் என்ற துயரச் செய்தி வைத்திய அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. அதேதினத்தில், பண்டாரவளை அளுத்கம பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பீ.ஏ.நந்தசேன நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண்புரை அறுவைச் சிகிச்சை மேற்க்கொண்டிருந்தார். ஏப்ரல் 6ஆம் திகதி வீடு திரும்பியபின்னர் வைத்தியசாலையால் வழங்கப்பட்ட பிரிட்சிசொலன் அசிரேட் கண்சொட்டு மருந்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இவருக்கும் மக்கரி ராஜரத்னம் போலவே, கடுமையான கண் வலி, தலைவலி மற்றும் அதிக கண்ணீர் வெளியேறல் போன்ற அசௌகரியங்களை எதிர்கொண்டார். இதனால் மே 22ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அவர் தனது இடது கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளமை மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. இவர்களைப்போன்றே, தனது இடது கண்பார்வையை இழந்திருக்கிறார், 61 வயதுடைய மந்தனா ஆராய்ச்சி கல்யாணி. 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் திகதி நுவரெலியா பொது மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டாவருக்கு மருத்துவமனையால் பிரெட்னிசோலன் அசிடேட் கண்மருந்து வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்திய பின், கடுமையான கண் வலி ,தலைவலி ஏற்பட்டது. இதனால், மே 18ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் இடது கண் பார்வை இழக்கப்பட்டுள்ளமை மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது. கட்புரை சிகிச்சைக்காகச் சென்று ஈற்றில் கண்பார்வையைப் பறிகொடுத்தவர்களாக இருக்கும் மேற்படி நபர்களால் தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இழப்பீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் எதிரிகளாக கெஹெலிய ரம்புக்வெல (முன்னாள் சுகாதார அமைச்சர்), ஜனக சந்திரகுப்தா (முன்னாள் செயலாளர், சுகாதார அமைச்சு), தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணையகம், எஸ்.டி.ஜெயரத்ன (தலைவர், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம்) , விஜித் குணசேகர (இயக்குனர், தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்) , வைத்தியர் அசேல குணவர்த்தன (பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார அமைச்சு) வைத்தியர் ரோகண எதிரிசிங்க (கண் அறுவைச் சிகிச்சை நிபுணர், பொது வைத்தியசாலை நுவரெலியா) வைத்தியர் மகேந்திர செனவிரெட்ன (இயக்குனர் பொதுவைத்தியசாலை நுவரெலியா) இந்தியானா ஆபத்தில்மிக்ஸ் குஜராத் 363035 (மருந்து நிறுவனம்), சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்குத் தொடர்ந்த மூவரும் 100மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பாராத பார்வையிழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பொருளாதார இழப்புகள் மனரீதியான அச்சத்தை பெருமளவில் விட்டுச்சென்றிருக்கிறது. சொந்த உழைப்பால் வருமான மீட்டியவர்கள் இப்போது தங்கி வாழ்பவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் இடம்பெற்று ஒருவருடத்திற்கும் அதிகமான காலம் உருண்டோடியிருந்தாலும், அவர்களுக்குரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. தமக்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பலர் காத்திருந்தாலும், நியாயத்தை தேடும் பயணத்தை சிலர் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த கண்மருந்துப் பாவனையால் பார்வையிழப்பைச் சந்தித்த 6 பேர் தமக்கான இழப்பீட்டைக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இலவச வைத்திய சேவை என்பது இலங்கையின் குறிப்பிடத்தக்க சிறப்பான திட்டங்களுள் முதன்மையானது. சுகாதாரத்துறையின் சேவைகளை மக்கள் அனைவரும் சமவாய்ப்புடன் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். இது நாட்டு மக்களின் அவசிய மருத்துவசேவையை செலவின்றி பகிரக் கூடிய வாய்ப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தது. ஆனால் தரமற்ற மருந்துகளின் தாக்கத்தால் உருவான அச்சம், மீண்டும் பொதுமக்களிடையே சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. 2022 மற்றும் 2023 ஆகிய காலகட்டங்களில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சுகாதாரத்துறையில் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகித்தது. முக்கிய மருந்துப் பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, மருத்துவத்துறை ஸ்தம்பித்தது. இதனை நிவர்த்திக்கும் நோக்கில், அப்போதைய சுகாதார துறை அமைச்சினால் சில மருந்துப்பொருட்கள் அவசரக் கொள்வனவின் மூலம் இறக்குமதி செய்யப்பட்டன. இவற்றுக்கான இறக்குமதிக்கான அனுமதிகள் முறையான செயன்முறைகளுடாக பெறப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை இந்திய அரசாங்கத்தின் கடனுதவித் திட்டம் மற்றும் ஏனைய உள்நாட்டு நிதிப்பங்களிப்புடன் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த மருந்துகளைப் பாவித்த நோயாளிகள் பல்வேறு இழப்புக்களை எதிர்கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் நடைபெற்ற பரிசோதனையின் பின் அந்த மருந்துகள் தரமற்றவை எனத்தெரியவந்தது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளுள் ஒன்றுதான் ‘பிரட்னிசொலோன்’ எனப்படும் கண்சொட்டு மருந்து. இம்மருந்து சத்திரசிகிச்சையின் பின் பயன்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு தரமற்ற மருந்துகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், இலங்கையின் சுகாதாரத்துறையின் கறுப்பு பக்கங்களை புரட்டியது. கண் சத்திர சிகிச்சைக்கு பின் சொட்டு மருந்தாக பயன்படுத்தப்படும் prednisolone Acetate Ophthalmic suspension USP 10 – PRED-S எனும் மருந்தில் உருவான பற்றீரியா காரணமாக இந்த மருந்தை பயன்படுத்திய 20 நோயாளிகள் தங்கள் கண்பார்வையை இழந்தனர். கொழும்பு, நுவரெலியா, அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளில் இந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறிப்பாக நுவரெலியா வைத்தியசாலையில் பத்து நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் பிரிவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் MSD/Q/P/2023/25 சுற்றறிக்கையின் கீழ் இந்த மருந்து தொகுதியை உடனடியாக திரும்பப் பெறுமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. பாதிக்கவப்பட்டவர்கள் சார்பாக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விபரத்தின் படி இந்த மருந்துகள் இந்தியாவின் குஜராத்தை தளமாக கொண்ட இந்தியானா ஆபத்தில் மிக்ஸ் மருந்து நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது . வழக்கின் பிரதிவாதிகள் பட்டியலில் குறித்த மருந்து நிறுவனமும் இணைக்கப்பட்டுள்ளது. நட்டஈடு வழங்குவதை வலியுறுத்தும் குரல்கள் “பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் என்று அடையாளம் காணப்பட்ட மருந்துத் தொகுதிகள் மட்டுமே மீளப்பெறப்பட்டன. அந்த நிறுவனத்தை நாங்கள் தடைசெய்யவில்லை. இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்” என்று தொடர்பாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் சவேன் சேமேஜ் குறிப்பிடுகின்றார். மருந்துகள் தர உறுதி ஆய்வகத்தின் அறிக்கையின் படி, சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்பட்ட பிரெட்னிசொலன் மருந்து தொகுதியில் மாசுபாடு மற்றும் கோகோபாசில்லி பற்றீரியாவால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சத்திரசிகிச்சையால் பார்வையிழப்பு ஏற்படவில்லை என்பதும் தரமற்ற மருந்தின் விளைவுதான் பார்வையிழப்பிற்கான காரணம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும் குறித்த நிறுவனம் தடை செய்யப்படாதிருப்பதற்கு காரணங்கள் எவையும் சுட்டிக்காட்டப்படவில்லை. அரச வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் (தமிழ்) வைத்தியர் சப்னாஸ் மஹரூப், “நாங்கள் இந்த விடயத்தில் ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுக்கிறோம். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு, இந்த சம்பவம் இடம்பெற்ற போது கண் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கண்பார்வையை இழந்திருக்கிறார்கள். சிலர் பார்வை குறைபாடுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள் இதற்கான காரணமாக குறிப்பிட்ட மருந்தில் பற்றீரியா தாக்கம் இருந்ததாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார். அத்துடன், “பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தின் ஊடாக மட்டுமல்ல, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த நபர்கள் மற்றும் மருந்து தயாரித்த நிறுவனம் ஊடாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். மேலும் பார்வை இழப்புகள் சத்திர சிகிச்சைகளால் ஏற்பட்டதல்ல. சத்திர சிகிச்சைக்கு பின்னராக பயன்படுத்தப்பட்ட மருந்து மூலம் ஏற்பட்டது என்பது ஆய்வுகளில் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, கண்சொட்டு மருந்து அவசர மருந்து கொள்வனவு முறை மூலமாக இறக்குமதி செய்யப்பட்டது. மருந்துக் கொள்வனவில் வெளிப்படைத்தன்மை வேண்டும். நாங்கள் அவசரக் கொள்வனவை முழுமையாக எதிர்க்கிறோம். மருந்துகளின் தரம் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு முறைகளை பின்பற்றல் சம்பந்தமாக தொடர்ந்தும் பேசுகிவருகிறோம் அத்துடன் மருந்துகளின் தரத்தை பரிசோதிப்பதற்காக சகல வசதிகளுடன் கூடிய ஆய்வகம் ஒன்று அவசியமாக உள்ளது இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி. வருகிறோம் “ என்றார். மருத்துவம் சார்ந்த இழப்பீடுகளுக்கான சட்ட ஏற்பாடு தொடர்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன், “மருத்துவ அலட்சியத்தால் உண்டாகும் பாதிப்புகளுக்கான சட்ட ரீதியான தீர்வுகளுக்காக சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது ரோமன் டச் பிரிவில் இலங்கை பொதுச் சட்டத்தில் உள்ளடங்குகிறது. அதன்படி ‘கவனத்தை காட்ட வேண்டிய நபர் கவனயீனமாக கவனத்தை காட்டாமல் தவறு இழைத்திருந்தால் அதன் போது ஏற்பட்ட விளைவுகளுக்கான சட்ட ஏற்பாடாக இந்த தீங்கியல் சட்டம் அமைந்துள்ளது’ என்றார். “இந்த சட்ட துணையை நாடும் பாதிக்கப்பட்ட நபர் இரண்டு வருடங்களுக்குள் தனக்கு நேர்ந்த பாதிப்புகளுக்கான ஆதாரங்களுடன் வழக்கு தொடர வேண்டும். இவ்வாறான வழக்கினை தொடரும் பாதிக்கப்பட்ட நபருக்கு வைத்தியதுறை சார்ந்த வழக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட வைத்தியர், வைத்திய அத்தியட்சகர், பரிசோதனை கூட ஆய்வாளர்கள், தாதியர் மற்றும் சம்பவத்தின் போது பங்குபற்றுனர்களாக இருந்தவர்களை சாட்சியங்களாக எடுத்துக்கொள்ள முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுக்கொள்வனவு சட்டத்தின் அவசியம் பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டனர். இந்த விடயம் சுகாதாரத் துறை மீதான நம்பிக்கையீனத்திற்கு வழிவகுத்தது.ஊழல்களால் உருவாக்கப்படும் இழப்புகள் பற்றிய அச்சத்தையும் விட்டுச் சென்றது. பல தசாப்தங்களாக, வெளிப்படைத்தன்மையற்ற, பொதுக்கொள்வனவு முறை இலங்கையின் ஊழல் பக்கங்களுக்கு வடிவம் கொடுத்து வருகிறது என்பது வெளிப்படையான விடயம். ,ஆனாலும் அதற்கெதிரான மாற்றங்களுக்கான கோரிக்கைகள் பல வருடங்களாக ஒலித்தாலும் அவசர மருந்து கொள்வனவின் பின்னரான பாதிப்புகள் ஊழல்களுக்கு சாதகமான எழுத்து வடிவங்களை மாற்றத் துணிந்துள்ளன. அந்த வகையில் தேசிய ரீதியிலான திறந்த பொதுக்கொள்வனவு சட்டத்தின் அவசியத்தை சர்வதேச நாணயநிதியம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இந்த விடயம் தொடர்பாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தின் ஆளுகை மற்றும் ஊழல் எதிர்ப்பு பிரிவின் தலைவர் சங்கீதா குணரத்ன, “சர்வதேச நாணயநிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புதிய கொள்வனவு சட்டம் இவ்வருடம் டிசம்பர் மாதத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன், சட்டவரைபு தயாரிக்கப்பட்டு, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று குறிப்பிடுகின்றார். “அச்சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் பொது ஆலோசனைக்கு அனுப்பப்பட வேண்டும். இன்னுமொரு புதிய கொள்முதல் வழிகாட்டல் கையேடு தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.ஆனால் இன்னும் அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், “தரமற்ற மருந்துகளால் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் அதிகமாக மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்த அவசரக் கொள்வனவால் இடம்பெற்ற ஊழல்கள் மிக நேர்த்தியாக அவர்களைச் சென்று சேர்ந்திருக்கிறது” என்று சங்கீதா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வெளிப்படைத் தன்மையற்ற கொள்வனவுகளால் உண்டாகும் ஊழல் வாய்ப்புகளை தடுப்பதற்கான முறைகளை பின்பற்ற வேண்டியது இன்றியமையாதது.அந்த வகையில் இலங்கையில் உள்ள பொருட்கொள்வனவு வழிகாட்டியை முழுமையாக பின்பற்றுதல், பொருட்கொள்வது செயல்முறையில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தல் மற்றும் அவசியம் இல்லாத போது அவசர நிலைமைகளின் கீழ் பொருட்கொள்வனவு செய்வதை தவிர்த்தல், பாவனைக்கு முன் மருந்துகளின் தரத்தைப் பரிசோதித்தல் என்பவை முக்கியமானவை. அந்தவகையில் இந்த விடயப் பரப்பிற்கான முன்னுரிமை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். கிராம மற்றும் மாவட்டங்களில் காணப்படுகின்ற சுகாதார சேவை தொடர்பான ஊழல்களை அம்பலப்படுத்த மக்களுக்கான விழிப்புணர்வும் அவதானமும் அவசியமானது. இதற்காக, பொதுமக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் . மேலும் பொதுமக்களை விழிப்பூட்டி ,சுகாதாரத்துறை ஊழல்களை ஒழிக்க சிவில் அமைப்புகள் மிகவும் காத்திரமான பங்களிப்பை செய்ய வேண்டும்.இத்தகைய மாற்றங்கள் தென்படும் போது ஊழலுக்கெதிரான சூழல் கருக்கொள்ளும். https://www.virakesari.lk/article/195734
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
நியூஸிலாந்தை 88 ஓட்டங்களுக்கு சுருட்டி 66 ஓட்டங்களால் வென்றது நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஒன்பதாவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் பலசாலிகளுக்கு இடையிலான போட்டி என வருணிக்கப்பட்ட ஏ குழு போட்டியில் நியூஸிலாந்தை 60 ஓட்டங்களால் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. அப் போட்டியில் நியூஸிலாந்தை 88 ஒட்டங்களுக்கு கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா, இந்த வெற்றி மூலம் தானே பலசாலி என்பதை உறுதிப்படுத்தியது. பெத் மூனி, எலிஸ் பெரி ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களும் மெகான் ஷுட், அனாபெல் சதலண்ட், சொஃபி மொலினொக்ஸ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்த வெற்றியுடன் ஏ குழுவில் முதலாம் இடத்தை அடைந்துள்ள அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இலங்கையை தனது முதல் போட்டியில் வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தனது எஞ்சிய இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளை சந்திக்கவுள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (08) இரவு நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. நியூஸிலாந்து சார்பாக அமேலி கேர் திறமையாக பந்துவீசி 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் அவுஸ்திரேலியா ஒரளவு கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. பெத் மூனி, எலிஸ் பெரி ஆகிய இருவரும் வேகமாக ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலியாவைப் பலப்படுத்தினர். மூனி 32 பந்துகளில் 40 ஓட்டங்களையும் எலிஸ் பெரி 24 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். அத்துடன் அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்கள் இருவரை விட அணித் தலைவி அலிசா ஹீலி 26 ஓட்டங்களையும் ஃபோப் லிச்பீல்ட் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அமேலிய கேரை விட ப்றூக் ஹாலிடே 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரோஸ்மேரி மாய்ர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 149 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஆரம்ப வீராங்கனை ஜோர்ஜியா ப்லிம்மர் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 7 ஓட்டங்களாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சுஸி பேட்ஸ் (20), அமேலியா கேர் (29) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்க்க முயற்சித்தனர். பத்து ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களைப் பெற்றிருந்த நியூஸிலாந்து ஓரளவு பலமான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து படுதோல்வி அடைந்தது. மத்திய வரிசையில் லீ தஹுஹு (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். பந்துவீச்சில் மெகான் ஷுட் 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் சதலண்ட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையம் சொஃபி மொலினொக்ஸ் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: மெகான் ஷுட் https://www.virakesari.lk/article/195808
-
“நஸ்ரல்லாவுக்கு அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்; இனி எல்லாம் லெபனான்மக்கள் கையில்...” - நெதன்யாகு
"ஹெஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலில் அதன் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா மட்டுமல்ல அவருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட தலைமை அதற்கு அடுத்தவர் அடுத்தவருக்கு அடுத்தவர் என அனைவரையும் அழித்துவிட்டோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை லெபனான் மக்களுக்கு வீடியோ மூலம் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “நாங்கள் ஹெஸ்புல்லாக்களின் அனைத்து பலங்களையும் சிதைத்துவிட்டோம். நஸ்ரல்லாவை மட்டுமல்ல அவருக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட தலைமை அவருக்கு மாற்று மாற்றத்திற்கு மாற்று என அடுத்த வாரிசுகள் அனைத்தையும் வீழ்த்திவிட்டோம். லெபனான் மக்கள் இனி தங்களின் தேசத்தைஹெஸ்புல்லாக்களின் பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டும். லெபனான் ஒரு காலத்தில் அழகுக்கும் சகிப்புத்தன்மைக்கும் அறியப்பட்டது. ஆனால் இப்போது குழப்பங்களுக்கும் போருக்கும் அறியப்படுகிறது. இதற்கு ஹெஸ்புல்லாக்களே காரணம். ஹெஸ்புல்லாக்களுக்கு ஈரான் நிதியுதவியும் ஆயுத உதவியும் வழங்குகிறது. காலப்போக்கில் ஈரான் லெபனானை தனது ராணுவத் தளமாக மாற்றிவிட்டது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய அடுத்த நாளில் இருந்தே ஹிஸ்புல்லாக்களும் அந்தப் போரில் எங்களுக்கு எதிராக இணைந்துவிட்டனர். இதுவரை இஸ்ரேல் மீது 8000-க்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்திவிட்டனர். இதில் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ட்ரூஸ் என பல்வேறு இன மக்களும் இஸ்ரேல் மண்ணில் பாரபட்சமின்றி கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முடிவு கட்ட இஸ்ரேல் முடிவு செய்தது. எங்களின் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் உரிமை எங்களுக்கு உள்ளது. போர் எங்களின் உரிமை. அதில் வெற்றியும் எங்களின் உரிமை. நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போரில் வெற்றி பெறுவது உறுதி. லெபனான் மக்கள் இப்போது ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கின்றனர். ஹெஸ்புல்லாக்கள் முன்புபோல் இல்லை. முற்றிலும் வலுவிழந்துவிட்டனர். இப்போது மக்கள் தான் நாட்டில் அமைதியும் வளமும் வேண்டுமா! இல்லை ஹெஸ்புல்லாக்கள் வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும். முடிவு எடுக்காவிட்டால் ஹெஸ்புல்லாக்கள் உங்களைக் கேடயமாக வைத்து போரிடுவார்கள். லெபனானை முழுவீச்சு போருக்குள் இழுத்துவிட ஹெஸ்புல்லாக்கள் தயங்க மாட்டார்கள். லெபனான் மக்களே உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் வேண்டாமா?. அப்படியென்றால் உங்கள் தேசத்தை நீங்கள் மீட்டெடுங்கள். தீவிரவாதிகள் பிடியில் உங்கள் தேசம் இனியும் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உங்கள் தேசத்தை ஹெஸ்புல்லாக்களிடமிருந்து விடுவிப்பதையும் உறுதி செய்யுங்கள்.” என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/195836
-
காஞ்சிபுரம்: சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவது ஏன்? - பிபிசி கள நிலவரம்
காஞ்சிபுரம்: சாம்சங் தொழிற்சங்க பிரச்னையில் என்ன நடக்கிறது? ஒரு மாத போராட்டத்தின் முழு பின்னணி பட மூலாதாரம்,CPIM TAMILNADU படக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் உட்பட பல சாம்சங் ஊழியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டனர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 9 அக்டோபர் 2024, 08:37 GMT புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (அக்டோபர் 9) கைது செய்யப்பட்டுள்ளனர். விடியவிடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் கூறுகிறது. "தொழிலாளர்களின் பக்கமே அரசு நிற்கிறது. அவர்களை அச்சுறுத்தவில்லை" என்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன். இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் கூறிய நிலையில், ஊழியர்கள் கைது செய்யப்பட்டது ஏன்? போராட்டம் நடைபெற்ற இடத்தில் என்ன நடந்தது? ‘தொழிற்சங்கம் தொடங்க அனுமதி மறுப்பு’ பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைக் கடந்துவிட்டது காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 1800-க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். வீட்டு உபயோக பொருட்களைத் தயாரிக்கும் இந்த ஆலையில் கடந்த ஜூலை மாதம் சி.ஐ.டி.யு சார்பில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு தொழிலாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சாம்சங் நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தொழிற்சங்கத்துக்கு அனுமதி, சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா நிறுவனத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள எச்சூர் என்ற இடத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம், 30 நாட்களைக் கடந்துவிட்டது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 'சங்கம் அமைப்பதைத் தவிர மற்ற கோரிக்கைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்தது. இதனை தொழிலாளர்கள் தரப்பு ஏற்கவில்லை. ஊழியர்களின் போராட்டத்துக்கு எதிராக காஞ்சிபுரம் கூடுதல் நீதிமன்றத்திலும் சென்னை உயர் நீதிமன்றத்திலும் சாம்சங் இந்தியா நிறுவனம் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேநேரத்தில், சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்குவதற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நான்கு முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. தொழிலாளர்களின் போராட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சாம்சங் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், "ஊழியர்களின் நலனே எங்களுக்குப் பிரதானமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுகிறோம்" என்று கூறினார். ஊதியம், சலுகைகள், பணிச்சூழல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் நேரடியாக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சி.ஐ.டி.யு மாநில தலைவரும் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் கௌரவ தலைவருமான அ.சவுந்தரராஜன் ஆனால், சி.ஐ.டி.யு சார்பில் சங்கம் அமைக்கப்படுவதை அந்நிறுவனம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊழியர்கள் பேரணி நடத்தினர். இதில், 900க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் பிறகு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கடந்த திங்கள்கிழமையன்று தலைமைச் செயலகத்தில் சாம்சங் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் அறிவித்தனர். ஆனால், சி.ஐ.டி.யு அமைப்பு அதனை மறுத்தது. போலீஸ் மூலம் அச்சுறுத்தல் என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,CPIM TAMILNADU படக்குறிப்பு, தொழிலாளர்களின் போராட்டத்தை போலீஸ் மூலம் முடிவுக்கு கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார் அமைச்சர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் போராட்டத்தை போலீஸ் மூலம் முடிவுக்கு கொண்டு வரும் வேலையில் அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறுகிறார், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார். (சுங்குவார்சத்திரம் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடங்கியுள்ள இந்த தொழிற்சங்கத்தை சாம்சங் இந்தியா நிர்வாகம் ஏற்று அங்கீகரிக்க மறுப்பதே தற்போதைய போராட்டம் முற்றுப் பெறாமல் நீடிக்க காரணம்) நேற்று (செவ்வாய்) நள்ளிரவு முதல் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களைக் கைது செய்யும் வேலையில் சுங்குவார்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று (08.10.2024) காலை போராட்ட பந்தலுக்கு சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த தொழிலாளர்களின் வாகனம், சாம்சங் ஆலை அருகே கவிழ்ந்தது. அதில் காயம் அடைந்த 12 பேரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். "அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் என்பரை தாக்கியதாக தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், என்னுடைய பெயர் முதல் நபராக உள்ளது. நான் அந்த இடத்திலேயே இல்லை" என்கிறார் முத்துக்குமார். இந்த சம்பவத்தில் எஸ்.ஐ மணிகண்டனை தாக்கியதாக ராஜாபூபதி, மணிகண்டன், பிரகாஷ் உள்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்பிறகு நேற்று இரவு (8ஆம் தேதி) 10 தொழிலாளர்களை வீடுகளுக்கே சென்று போலீஸ் கைது செய்ததாக கூறும் முத்துக்குமார், "போராட்ட பந்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் பிரித்துவிட்டனர். தற்போது போராட்டத்துக்கு வரும் ஊழியர்களை வழிமறித்து போலீஸ் கைது செய்கிறது" என்கிறார். போராட்டம் நடைபெறும் இடம் அரசுக்கு சொந்தமான நிலம் என்றும் அங்கு அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாகவும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமையன்று போலீஸாரின் கைது நடவடிக்கையால் இரண்டு ஊழியர்கள் மயக்கமடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு காவல்துறை அனுப்பி வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடைபெற்று வந்த எச்சூர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. காவல்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பேசினோம். "சாம்சங் நிறுவன பிரச்னை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி-யிடம் பேசுங்கள்" என்றார். ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமாரை பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை. இதையடுத்து, சுங்குவார்சத்திரம் காவல்நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்திடம் பேசினோம். "கூட்டத்தில் இருப்பதால் இப்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார். சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவா? தமிழ்நாடு அரசு பதில் சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவான தமிழக அரசின் செயல்பாடு என்பது, ஒட்டுமொத்த தொழிற்சங்க சட்டங்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளதாகவும் சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் குற்றம்சாட்டினார். ஆனால், பிபிசி தமிழிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இதனை மறுத்தார். "தொழிலாளர்களுக்கு எந்த வடிவிலும் அச்சுறுத்தல் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு வரக் கூடாது என்பதையே முதலமைச்சரும் விரும்புகிறார். தொழிலாளர்களின் பக்கம் மட்டுமே நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் கூறினார். தலைமை செயலகத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,X.COM/TRBRAJAA படக்குறிப்பு,சாம்சங் இந்தியா போராட்டம் தீர்வு எட்டப்பட்டதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 7) தலைமைச் செயலகத்தில் இரு தரப்பையும் அழைத்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட 14 கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்பதாக கூறியதால், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். கோரிக்கைகள் என்ன? தொழிலாளர்களுக்கு இடைக்கால சிறப்பு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 உயர்த்தி வழங்க வேண்டும் 5 வழித்தடங்களில் மட்டுமே உள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, 108 வழித்தடங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் பணியின் போது இறந்தால் உடனடியாக ரூ.1 லட்சம் தரமான உணவு மற்றும் உணவுப்படி உயர்வு திருமணத்திற்கு மூன்று நாள் விடுப்பு; குழந்தை பிறந்தால் 5 நாள் விடுப்பு இந்த மாதத்தில் இருந்தே ஊழியர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தை உயர்த்தி தருவதாக சாம்சங் இந்தியா உறுதியளித்துள்ளதாக கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "ஒரு தரப்பினர் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் வேலைக்குச் செல்ல வேண்டும். இந்தப் போராட்டத்தால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. ஒப்பந்தத்தை ஏற்பதாக தொழிற்சாலையில் உள்ள சங்கத்தினர் கூறியுள்ளனர்" என்றார். "சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் என இரு தரப்பிலும் சில குறைபாடுகளை தெரிவித்தனர். சில கோரிக்கைகளை ஏற்பதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுத்தது" என்றும் அவர் கூறினார். சி.ஐ.டி.யு தரப்போ, அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘ஒப்பந்தமே ஒரு நாடகம்’ பட மூலாதாரம்,X.COM/TRBRAJAA படக்குறிப்பு,அமைச்சர்களுடன் சாம்சங் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் "தொழிற்சாலையில் உள்ள சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அமைச்சர் கூறுகிறார். இவர்கள் கூறுவது நிறுவனத்தின் ஆதரவில் இயங்கும் பணியாளர் குழுவைத் தான். இந்த ஒப்பந்தமே ஒரு நாடகம்" என்கிறார் சி.ஐ.டி.யு மாநில தலைவரும் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் கௌரவ தலைவருமான அ.சவுந்தரராஜன். "நிறுவனத்துக்குள் 'சங்கமே வரக் கூடாது' என சாம்சங் கூறுகிறது. பணியாளர் கமிட்டியை மட்டும் சங்கம் என அமைச்சரே கூறுவது சரியா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். போராட்டம் நடத்துகிறவர்களுக்கும் இந்த ஒப்பந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்கிறார். தலைமைச் செயலகத்தில் 7ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், சி.ஐ.டி.யு தரப்பிடம் பேசிய பின்னர், மீண்டும் அழைப்பதாக கூறிய அமைச்சர்கள், போலியான ஓர் ஒப்பந்தத்தைக் காட்டி தொழிலாளர்களை ஏமாற்றுவதாக கூறுகிறார் அ.சவுந்தரராஜன். சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அரசு வெளிப்படையாக செயல்படுவதாக குற்றம் சாட்டும் அ.சவுந்தரராஜன், "சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தை அரசு பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. அதை ஏற்பதற்கு சாம்சங் மறுக்கிறது. அதையே அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர்" என்கிறார். ‘நாடகம் நடத்தப்பட்டதா?’- அமைச்சர் சி.வி.கணேசன் பதில் பட மூலாதாரம்,CVGANESAN "அமைச்சர்கள் நாடகம் நடத்தியதாக சி.ஐ.டி.யு கூறுகிறதே?" என தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேள்வி எழுப்பினோம். "அவ்வாறு கூறுவதை ஏற்க முடியாது. சி.ஐ.டி.யு-வின் நோக்கத்தை நாங்கள் குறை கூறவில்லை. சங்கம் அமைப்பது தொடர்பான அவர்களின் விருப்பத்தைக் கூறியுள்ளனர். சாம்சங் இந்தியா பிரச்னை தொடர்பாக, இதுவரை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏழு முறையும் என் தலைமையில் நான்கு முறையும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், முடிவு எட்டப்படவில்லை" என்கிறார். திங்கள்கிழமையன்று நடந்த பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய சி.வி.கணேசன், "தலைமைச் செயலகத்தில் 11 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். சி.ஐ.டி.யு உடன் பேசுவதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுக்கிறது. சங்கத்தைப் பதிவு செய்யக் கோருவது நியாயமானது. அதற்கு மறுப்பு சொல்ல முடியாது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம்" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c4g0jnj2l9ko
-
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்.
வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அருச்சுனா , தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை , சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி வைத்தியசாலையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கில் வைத்தியர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வழக்கு விசாரணையின் போது, பிணை நிபந்தனைகளை மீறியமை , ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை உள்ளிட்ட காரணங்களால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் அருச்சுனாவின் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் மன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அதற்கான கட்டளை நாளை வியாழக்கிழமை (10) வழங்கப்படும் என மன்று திகதியிட்டிருந்தது. இன்று புதன்கிழமை (09) மீண்டும் நகர்த்தல் பத்திரம் மூலம் மன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், வைத்தியர் இனி வரும் காலங்களில் பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதி அளித்தது. அதேவேளை வைத்தியருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நாளை வியாழக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195838
-
ஞானசாரருக்கு பிடியாணை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன் ஹோட்டலில் தேசிய பலசேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குர்ஆனை அவமதித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அவர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றில் முன்னிலையாகினர். விசாரணை மார்ச் 5, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/310484
-
அமெரிக்க அட்மிரல் நாளை இலங்கைக்கு விஜயம்
09 OCT, 2024 | 03:29 PM 4 நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கேலர், நாளை வியாழக்கிழமை (10) இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதை அறிவிப்பதில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது. 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அதியுயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இதுவாகும். தனது விஜயத்தின் போது, நீடித்த, மீண்டெழும் தன்மையுடைய, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் வலுவான பங்காண்மையினை அட்மிரல் கேலர் மீள வலியுறுத்துவார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும், கடல்சார் கள விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்பு நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்காகவும், நாடுகடந்த அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் இலங்கைக்கு உதவி செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவதற்காகவும், மற்றும் அமெரிக்க மற்றும் இலங்கை இராணுவங்களுக்கிடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு தொர்பாக கலந்துரையாடுவதற்காகவும் அட்மிரல் கேலர் சிரேஷ்ட இலங்கை அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொள்வார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியினையும் ஸ்திரத்தன்மையினையும் ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பங்காளரான இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்துவதில் அமெரிக்கா கொண்டுள்ள வலுவான உறுதிப்பாட்டினை இவ்விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அட்மிரல் ஸ்டீபன் கேலர் கட்டளைத்தளபதி, அமெரிக்க பசிபிக் கப்பற்படை அட்மிரல் ஸ்டீபன் கேலர் ஒரு கடற்படைக் குடும்பத்தில் வளர்ந்தார். அவர் போல்டர் நகரிலமைந்துள்ள கொலராடோ பல்கலைக்கழகத்திலிருந்து 1986 ஆம் ஆண்டில் பௌதீகவியலில் விஞ்ஞான இளமானிப் பட்டமொன்றைப் பெற்றுக்கொண்ட பட்டதாரியாவார். அங்கு அவர் Naval Reserve Officer Training Corps (NROTC) படைப்பிரிவினூடாக படைத்துறைப்பணிக்காக நியமிக்கப்பட்டார். 1989 மார்ச் மாதத்தில் கடற்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், 600 தடைவைகள் விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானங்களைத் தரையிறக்கியது உட்பட 3,900 இற்கும் மேற்பட்ட மணித்தியாலங்கள் F-14 Tomcat மற்றும் F-18 Super Hornet ஆகிய விமானங்களை ஓட்டியுள்ளார். கடற்படைப் போர்க் கல்லூரியிலிருந்து தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் தொடர்பான முதுமானிப்பட்டத்தினைப் பெற்றுள்ள அவர் Joint Staff College and the Navy Nuclear Program இன் பட்டதாரியுமாவார். கடலில் Fighter Squadron (VF)211, VF-41 பிரிவுடன் பணியாற்றிய அவர், USS Carl Vinson (CVN 70) இன் நிறைவேற்று அலுவலராகவும், Fighter Squadron (VFA) 143; USS Bataan (LHD 5); USS Dwight D. Eisenhower (CVN 69); மற்றும் Carrier Strike Group Nine ஆகிய பிரிவுகளின் கட்டளைத்தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். இந்த தொழிற்பாட்டுப் பயணங்களின் போது அவர் Operations Desert Storm, Southern Watch, Iraqi Freedom, Inherent Resolve, Freedom’s Sentinel, Deliberate Guard, மற்றும் ஹைட்டிக்கு அவசரகால பேரனர்த்த நிவாரணங்களை வழங்கிய நடவடிக்கையான Unified Response, மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் சரியிணை போட்டி நடவடிக்கைகள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார். தரையில், கேலர் VF-101 இன் பயிற்சியளிக்கும் விமானியாகவும், கடற்படை அதிகாரிகள் பணியகத்தின் வேலை வாய்ப்பு அதிகாரியாகவும், டிஜிபூட்டியில் Joint Task Force Horn of Africa இன் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க கப்பற்படைகள் தலைமையகத்தில் கப்பற்படை பயிற்சிகளுக்கான பணிப்பாளராகவும்; அமெரிக்க இந்தோ-பசிபிக் தலைமையகத்தில் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளராகவும் (J3); அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் பிரதி கட்டளைத் தளபதியாகவும்; அமெரிக்க 3ஆவது கப்பற்படையின் கட்டளைத் தளபதியாகவும், மற்றும் Joint Staff இன் மூலோபாயம், திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கான பணிப்பாளராகவும் (J5) அவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி அவர் பொறுப்பேற்றார். https://www.virakesari.lk/article/195842
-
கேக் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை
கேக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பரிசோதிப்பதற்கு இலங்கையில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் லேபிள்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் போலியானவை என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் போன்றவற்றை கேக் உற்பத்திக்கு பயன்படுத்துவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, தயாரிப்புகளில் பெரும்பாலும் வெண்ணெய் சுவை மற்றும் செயற்கை முட்டை சுவை உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் குறிப்பிட்டார். மேலும் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கேக்குகள் முட்டை அல்லது வெண்ணெய் அல்லது மார்ஜரின் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதையும் நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/310482
-
இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ?
மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை 09 OCT, 2024 | 12:07 PM சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறையைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் பாமக சார்பில் நேற்று நடைபெற்றது. வங்கக்கடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்கள்அத்துமீறி கைது செய்யப்படுவதோடு, ஆண்டுக்கணக்கில் சிறை தண்டனை, கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இவற்றைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா தலைமையில் நடந்த போராட்டத்தில் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை தடுத்துநிறுத்திய போலீஸார், 5 பேரைமட்டும் மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். அப்போது, செய்தியாளர்களிடம் பாமக பொருளாளர் திலகபாமா கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் 162 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 192 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்டுள்ள படகுகள் மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்பட்டவை. பிரதமர்பெயரால் வழங்கிய படகுகள் இன்னொரு நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்திய - இலங்கை மீனவர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி மீன்பிடித்தனர். அதேபோன்ற ஒருநிலையை மீண்டும் உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இரு நாட்டு பிரதிநிதிகளும் அடங்கிய குழு அமைத்து, மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மூலம் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். https://www.virakesari.lk/article/195830
-
ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியுடன் பாஜக ஆட்சி; ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா!
யூனியன் பிரதேசமாகிவிட்ட ஜம்மு காஷ்மீர் முதல்வராகும் ஒமர் அப்துல்லா முன்னுள்ள சவால்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், தில்நவாஸ் பாஷா பதவி, பிபிசி இந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை முடிவுகள் வெளியானவுடன், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார் என்று ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு- காஷ்மீரின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த 54 வயதான ஒமர் அப்துல்லா, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். 2009ஆம் ஆண்டு அவர் முதல் முறையாக முதல்வரானார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, “2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரில் ஜனநாயக ஆட்சி அமையவுள்ளது. காஷ்மீர் கட்சிகளை, குறிப்பாக தேசிய மாநாட்டுக் கட்சியை பாஜக குறிவைத்தது. எங்களை பலவீனப்படுத்த முயற்சிகள் நடந்தன. எங்களுக்கு எதிராக சில கட்சிகளை திசை திருப்பவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இந்தத் தேர்தல் அந்த முயற்சிகள் அனைத்தையும் அழித்துவிட்டது.” என்று கூறினார். இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஜம்மு- காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட ஒமர் அப்துல்லா, அப்போது திகார் சிறையில் இருந்தவாறே போட்டியிட்ட பொறியாளர் ரஷீத்திடம் தோல்வியடைந்தார். அரசியலமைப்பின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, பாரதிய ஜனதா அரசாங்கத்தால் ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்யப்பட்டது. ஜம்மு- காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, லடாக் இந்த பிராந்தியத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. லெப்டினன்ட் கவர்னர் மூலமாக, ஜம்மு- காஷ்மீர் அரசு பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். ஒரு முதலமைச்சராக ஒமர் அப்துல்லாவுக்கு செய்வதற்கு அதிகம் இருக்காது. இருப்பினும், காஷ்மீர் மக்களுக்கு தன் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது என்ற செய்தியை இந்தியாவிற்கு உணர்த்துவதில் ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று இந்த ஆண்டு ஜூலை வரை அப்துல்லா கூறி வந்தார். "இதற்கு முன் நான் ஒரு முழு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தேன். ஆனால் இப்போது ஒரு பியூனைத் தேர்வு செய்யக் கூட லெப்டினன்ட் கவர்னரின் ஒப்புதலைப் பெற அல்லது அவரது அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து அவர் கையெழுத்திடும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை." என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, காஷ்மீர் மக்களுக்கு தன் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது என்ற செய்தியை உணர்த்துவதில் ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி? காஷ்மீருக்கு இந்த தேர்தல் முக்கியமான ஒரு மைல்கல் என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் முகமது யூசுப் டெங். காஷ்மீரின் அடையாளம் குறித்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதையும், காஷ்மீர் மக்களுக்கு இது மிகப்பெரிய அரசியல் பிரச்னை என்பதையும் இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது என டெங் குறிப்பிடுகிறார். "தேசிய மாநாட்டுக் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு ஒமர் அப்துல்லா தலைமை தாங்கினார், மத்திய அரசு காஷ்மீரின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை எவ்வாறு சேதப்படுத்தியது மற்றும் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை எவ்வாறு நசுக்கியது என்பதைப் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்துவதில் அவர் வெற்றி பெற்றார்" என்று டெங் கூறுகிறார். டெங்கைப் பொருத்தவரை, ‘ஒமர் அப்துல்லா, மக்களை தன்னுடன் ஒன்றிணைப்பதில் வெற்றி பெற்றார். காஷ்மீர் மக்கள் அவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.’ வாக்குரிமையை தங்கள் விருப்பப்படி பயன்படுத்துவோம் என்ற செய்தியை காஷ்மீர் மக்கள் வழங்கியுள்ளனர் என்று டெங் கூறுகிறார். ஆனால் காஷ்மீரின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், முதல்வருக்கு மிகக் குறைந்த அரசியல் அதிகாரமே இருக்கும். ஒமர் அப்துல்லாவின் வெற்றி ஏன் முக்கியம்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஒமர் அப்துல்லா தனது தாயார் மோலி அப்துல்லா மற்றும் சகோதரி சஃபியா அப்துல்லாவுடன் (ஸ்ரீநகர்) ஒமர் அப்துல்லா அரசியல் ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த தலைவர் இல்லை என்றாலும் கூட, அவரது கட்சியின் இந்த வெற்றி அடையாள ரீதியாக மிகவும் முக்கியமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜம்மு- காஷ்மீர் இப்போது யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதன் லெப்டினன்ட் கவர்னர் பதவி மிகவும் சக்தி வாய்ந்தது. அவருக்கு கீழ் தான் முதல்வர் பணியாற்ற வேண்டும். ஆனால் இதையும் மீறி, ‘காஷ்மீரின் தலைவராக இருக்க மக்கள் என்னை தான் விரும்புகின்றனர்’ என்ற செய்தியை வழங்குவதில் ஒமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். “ஒமர் அப்துல்லா கைகளில் என்ன அதிகாரம் இருக்கும், அவர் ஒரு பிராந்திய தலைவர். ஆனால் காஷ்மீரின் அரசாங்கம் டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் ஒரு சிறு இடமாற்றம் (Transfer) செய்ய வேண்டும் என்றால் கூட, ஒமர் அப்துல்லாவால் அதை செய்ய முடியாது. இருப்பினும், காஷ்மீர் மக்களின் தலைவர் அவர் தான், எனவே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்புகளின் சுமை அவர் மீது மட்டுமே இருக்கும்” என டெங் கூறுகிறார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மாநாட்டுக் கட்சி பல வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் மிக முக்கியமான வாக்குறுதி, ‘காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம், சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்பதாகும். கடந்த 5 ஆண்டுகளாக காஷ்மீரில் லெப்டினன்ட் கவர்னர் அலுவலகத்தில் இருந்து நிர்வாகம் நடத்தப்படுகிறது. ஆட்சி அதிகாரம் தங்களிடமிருந்து விலகி இருப்பதாக காஷ்மீர் மக்கள் உணர்ந்தனர். "ஒமரின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால், அதிகாரமும் ஆட்சியும் மக்களுக்கு நெருக்கமாக தான் இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது." என டெங் கூறுகிறார். ‘காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கவும் போராடுவோம்’ என்றும் தேசிய மாநாட்டுக் கட்சி உறுதியளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் சுமையும் ஒமர் அப்துல்லாவின் தோள்களில் இருக்கும். ஒமர் அப்துல்லாவின் அரசியல் பயணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஒமர் அப்துல்லா மார்ச் 10, 1970 அன்று நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் பிறந்தார். அவரது குடும்பம் ஜம்மு- காஷ்மீரில் நீண்ட, நெடிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பமாகும். ஒமரின் தாத்தா ஷேக் அப்துல்லா ஒரு முக்கிய காஷ்மீர் தலைவர் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முதல் பிரதமர் ஆவார். (1965க்கு முன் வரை காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் பதவி, ‘பிரதமர் பதவி’ என்றே அழைக்கப்பட்டது) ஒமர் அப்துல்லா தனது ஆரம்பக் கல்வியை ஸ்ரீநகரில் உள்ள பர்ன் ஹால் பள்ளியில் பயின்றார், பின்னர் மும்பையில் உள்ள சிடன்ஹம் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவரது குடும்பத்தின் அரசியல் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஒமர் அரசியலுக்கு வருவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. ஒமர் அப்துல்லா 1998ஆம் ஆண்டு ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட்டு தனது 28-வது வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தார். இந்தியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அடல் பிஹாரி வாஜ்பேயி அரசில் இணை அமைச்சராகவும் அவர் இருந்தார். அடுத்த ஆண்டே, தேசிய மாநாட்டுக் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவரானார். அவருக்கு கட்சிக்குள் மட்டுமல்ல, நாட்டிலும் அங்கீகாரம் கிடைத்தது. சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2009இல் தேசிய மாநாட்டுக் கட்சி காஷ்மீரில் ஆட்சியமைத்த போது, ஒமர் அப்துல்லா முதலமைச்சரானார். ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், காஷ்மீரின் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தார். காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுத்தார். ஒமர் அப்துல்லா கடந்து வந்த பாதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தந்தை ஃபரூக் அப்துல்லாவுடன் ஒமர் அப்துல்லா ஆனால் ஒமர் அப்துல்லாவுக்கு எல்லாம் எளிதாக இருக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதும், 2010-ஆம் ஆண்டில் ஜம்மு- காஷ்மீரில் இருந்த பதற்றமான சூழ்நிலையும் அவருக்கு கடினமான சவால்களை உருவாக்கின. காஷ்மீரில் 2010ஆம் ஆண்டில், மீண்டும் எழுந்த பிரிவினைவாதத்தைக் கையாள்வதில் அவர் வெற்றிபெறவில்லை. இதனால் அடுத்த தேர்தலில் அதன் விளைவுகளை அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. காஷ்மீரின் 2014 சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி படுதோல்வி அடைந்தாலும், அதன் தேசியத் தலைவராக ஒமர் தொடர்ந்து பதவி வகித்தார். 2019ஆம் ஆண்டில், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, 370வது சட்டப்பிரிவை நீக்கியபோது, அரசின் இந்த முடிவுக்கு எதிரான ஒரு வலுவான அரசியல் குரலாக ஒமர் உருவெடுத்தார். ஒமர் அப்துல்லா, நீண்ட காலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இருந்த போதிலும், ‘சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை காஷ்மீர் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், அதற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ போன்ற கருத்துகளை அவர் தொடர்ந்து வெளியிட்டார். இப்போது மீண்டும் ஒருமுறை காஷ்மீரின் அதிகாரம் ஒமர் அப்துல்லாவின் கைகளுக்கு வரப் போகிறது. ஆனால் இந்த முறை அவருக்கு அரசியல் சூழ்நிலைகள் மட்டுமல்ல, சவால்களும் வித்தியாசமாக இருக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7487pdy19wo
-
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் விபரம்
மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி! தமிழ் மக்கள் கூட்டணி மான் சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை (09) கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், வரதராஜன் பார்த்திபன், தவச்செல்வம் சிற்பரன், முருகானந்தன் யசிந்தன், கதிரேசன் சஜீதரன், குலேந்திரன் செல்ரன், அருள்பரன் உமாகரன், நாவலன் கோகிலவாணி, மிதிலைச்செல்வி ஶ்ரீபத்மநாதன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். https://www.virakesari.lk/article/195834
-
ஊழல் அரசியல்வாதிகளை நிறுத்தினால் பிரதான அரசியல் கட்சிகளை மக்கள் முற்றாக நிராகரிப்பார்கள் - சிவில் சமூக பிரதிகள் எச்சரிக்கை
Published By: RAJEEBAN 09 OCT, 2024 | 11:28 AM பொதுமக்கள் தற்போதைய ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் பொருத்தமான உரிய வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழவில் சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொருத்தமான வேட்பாளரை பொதுமக்கள் தெரிவு செய்வதற்கான 10 அம்ச அளவுகோல்களை மக்களிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன. சுத்தமான கரங்களை கொண்ட ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்யவேண்டும் என்பது குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன உள்ளதால் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்கள் வேட்பாளர் தெரிவு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்மையற்ற ஊழல் அரசியல் பின்னணி கொண்டவர்களை இம்முறை பொதுமக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான அரசியல் கட்சிகள் வரலாற்றின் குப்பைதொட்டிக்குள் தூக்கி வீசப்படும் நிலையை ஏற்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொருத்தமான வேட்பாளரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது குறித்து மாத்திரமல்லாமல் பொதுமக்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த சிறந்த அறிவுள்ளவர்களை அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற விரும்பினால் அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை தெரிவு செய்யக்கூடாது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195823
-
வடக்கில் போதைப்பொருள் மற்றும் மண் கடத்தலை கட்டுப்படுத்த விசேட கலந்துரையாடல்!
09 OCT, 2024 | 11:12 AM வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலர்கள், பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாண இராணுவ, கடற்படை,விமானப்படை பொறுப்பதிகாரிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் தொடர்பான இரகசிய நடவடிக்கைகள் விரிவுபடுத்தல். போதைப் பொருளுக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது , சிவில் சமூக பிரதிநிதிகளால் வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்ட சில பிரதேசரீதியாகவும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூகப் பிணக்குகள் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மண் அகழ்வில் போலியான அனுமதி பத்திரங்கள் தயாரித்து இடம்பெறும் மோசடி தொடர்பாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. மண் அகழ்வினால் ஏற்படும் சூழல் பாதிப்பு தொடர்பாகவும் கவனம் எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்கள் தொடர்பான விடயங்களும் கவனத்தில் எடுக்கப்பட்டது. வீதியில் பயணிப்பவர்களின் அவதானம் இன்மையால் பல விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. நகர்ப்பகுதி வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் உரிய சமிஞ்சைகள் இன்றி வீதிகளில் விரைவாக திரும்புதல் மற்றும் அதிக வேகம் போன்றவற்றிற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பணிப்புரை விடுக்கப்பட்டது. இதன் போது வீதி விபத்துக்கள் தொடர்பாக மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/195819
-
பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த ரஸ்யா திட்டம் - எம் 15
09 OCT, 2024 | 11:06 AM பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த ரஸ்யா திட்டமிட்டுள்ளது என பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15 இன் தலைவர் எச்சரித்துள்ளார். பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கென் மக்கலம் ரஸ்யா நாசவேலைகள் உட்பட ஆபத்தான நடவடிக்கைகளை பொறுப்பற்ற விதத்தில் முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பிரிட்டன் ஆதரித்தமைக்காகவே ரஸ்யா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார். 2022 முதல் ஈரான் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடியத்துள்ளதாக தெரிவித்துள்ள கென் மக்கலம் இஸ்லாமிய தீவிரவாதிகளே அனேகமான இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார். வலதுசாரி தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார். இளவயதினர் அதிகளவிற்கு தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்,தீவிரவாத விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 13 வீதமானவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். 2017 முதல் பிரிட்டனில் துப்பாக்கிகள் வெடிபொருட்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு பல முயற்சிகள் இடம்பெற்றன இவற்றில் 43 தாக்குதல் முயற்சிகளை இறுதி நேரத்தில் முறியடித்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195821
-
லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் - இஸ்ரேல் 08 OCT, 2024 | 03:24 PM தென்மேற்கு லெபனானில் தரைதாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பகுதிக்கு மேலும் படையினரை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை முன்னெடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30 திகதி தென்லெபனான் மீது தரைதாக்குதலை ஆரம்பித்திருந்த இஸ்ரேல் கிழக்கு பகுதியிலேயே கவனம் செலுத்தி வந்தது. இதேவேளை லெபனானிலிருந்து 25 ரொக்கட்கள் இன்று ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சில ரொக்கட்கள் இடைமறிக்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195776