Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. புதிய QR முறை - சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு! Mar 15, 2026 - 10:10 AM தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்கள், எவ்வித சிக்கலுமின்றி தமது புதிய QR குறியீட்டைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட விசேட விடயங்கள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இன்றைய தினத்திற்குள்ளேயே அவற்றுக்கான உரிய தீர்வுகளை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்தி, பதுக்கல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmr9g01y0013356pit1k9bjw
  2. புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவில் ஸ்தாபிக்க அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதி 15 Mar, 2026 | 09:51 AM வவுனியாவில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையமொன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் விடுத்த கோரிக்கையினை விரைவில் நடைமுறைப்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த உறுதியளித்துள்ளார். விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் விசேட வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த வியாழக்கிழமை 12 அன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் பின்வருமாறு தெரிவித்தார், வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை கமநல சேவைகள் நிலையம், கோவில்குளம் கமநல சேவைகள் நிலையம், பம்பைமடு கமநல சேவைகள் நிலையம் ஆகியவை அதிக சுமையுடன் இயங்கிவருகின்றன. இந்த மூன்று கமநல சேவைகள் நிலையங்களிலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றினைத்து புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனும் முன்மொழிவை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். இதன்மூலம் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு கமநல சேவைகள் நிலையங்களினூடாக சிறந்த, விரைவான சேவையினை வழங்க முடியும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் , இது ஒரு சிறந்த முன்மொழிவு. இந்த விடயத்தை கையாள்வதற்காக ஏற்கனவே ஒரு குழுவொன்று அமைச்சு மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த முன்மொழிவை வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து அனுமதியினை பெற்று அதனை குறித்த குழுவிற்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் புதிதாக ஈச்சங்குளம் கமநல சேவைகள் நிலையத்தை விரைவாக உருவாக்கித்தர முடியும் என தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/240987
  3. ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தியக் கொடியை ஏந்திய இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடிந்தது (சித்தரிப்புப் படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களை தொடர்ந்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்தன. இந்திய வெளியுறவு அமைசகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெர்ஸ்வால் சனிக்கிழமை இத்தகவலை அளித்தார். ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்தியாவுக்கு வரக்கூடிய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன. ஷிவாலிக், நந்தா தேவி எனும் இரண்டு இந்திய கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன, அவை தற்போது இந்திய துறைமுகங்களை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன." என்றார். இரு கப்பல்களிலும் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எல்பிஜி எரிவாயு என, மொத்தமாக சுமார் 93,000 மெட்ரிக் டன்கள் எரிவாயு உள்ளது என அவர் தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பாக வெளியுறவு துறை, பெட்ரோலிய துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் ரந்தீர் ஜெய்ஸ்வால் இந்த தகவலை தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா), அசீம் மஹாஜன் கூறுகையில், மேற்கு ஆசியாவில் நீடிக்கும் மோதலால் இந்தியர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார் என்றார். தற்போதைய சூழலில், அப்பகுதியில் இருக்கும் இந்திய அதிகாரிகள் முழு நேரமும் அதுகுறித்து பணியாற்றி வருகின்றனர், சூழல் குறித்து கண்கானித்து வருகின்றனர். அவர் கூறுகையில், "முந்தைய சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார். ஓமன், இராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் சென்றடைவதற்கும் காணாமல் போனவரை தேடுவதையும் உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்." என்றார். வளைகுடா பிராந்தியத்தில் எத்தனை இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரந்தீர் ஜெய்ஸ்வால் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், பல இந்திய கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்தியா அதன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். அவரை பொறுத்தவரை, இந்த கப்பல்கள் பாதுகாப்பாகவும் தங்குதடையுமின்றி கடக்க சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் ஒருங்கிணைத்துவருவதாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், "இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் விமான இடையூறுகள் காரணமாக, இந்தியாவில் இரானிய குடிமக்கள் பலர் சிக்கியுள்ளனர். இந்த குடிமக்களை தங்கள் நாட்டுக்கு அழைத்துவர இரானிய அதிகாரிகள் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்தவர்கள் அல்லது ராஜ்ஜீய அதிகாரிகளாக வந்தவர்களும் இதில் அடங்கும்." என்றார். "இந்த விமானம் கொச்சியை வந்தடைந்துள்ளது. ஐஆர்ஐஎஸ் லாவன் விமானத்தின் விமான குழுவினர் உட்பட பயணிகள் கப்பலில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த விமானம் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது." என்று அவர் மேலும் கூறினார். மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில், பாரசீக வளைகுடாவில் இந்திய கொடிகளை ஏந்திய 22 கப்பல்கள் உள்ளன. இதுதொடர்பாக, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், இதில் 6 எல்பிஜி டேங்கர்கள், ஒரு எல்என்ஜி டேங்கர், நான்கு கச்சா எண்ணெய் டேங்கர்கள், ரசாயன பொருட்கள் ஏந்திய ஒரு டேங்கர், மூன்று கொள்கலன் கப்பல்கள், இரண்டு பெரிய தாங்கு கப்பல்கள், நீருக்கு அடியில் தோண்டுவதற்கு பயன்படும் டிரெட்ஜர் கப்பல் ஆகியன அடங்கும். "மேலும், ஒரு கப்பல் 'எம்ப்டி பாலஸ்ட்' நிலையில் உள்ளது; மூன்று கப்பல்கள் 'டிரை டாக்' நிலையில் உள்ளன. 'எம்ப்டி பாலஸ்ட்' என்பது அந்த கப்பல் எந்த சரக்கையும் எடுத்துச் செல்லாமல் இருப்பதை குறிக்கும். 'டிரை டாக்' என்பது அந்த கப்பல்கள் வழக்கமான பழுது பார்க்கும் பணிகளில் இருப்பதை குறிக்கும்." என அவர் தெரிவித்தார். புதிய உத்தரவுகளை வெளியிட்ட அரசு உள்நாட்டு எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கிறது. சனிக்கிழமை, அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 இன் விதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், குழாய் மற்றும் எல்பிஜி இணைப்புகள் இரண்டையும் வைத்திருக்கும் நுகர்வோர் எல்பிஜி இணைப்பை தொடர்ந்து வைத்திருக்க முடியாது. அத்தகைய நபர்கள் எந்த அரசு நிறுவன விநியோகஸ்தர் மூலமாகவும் தங்கள் வீட்டு எல்பிஜி சிலிண்டர்களை மீண்டும் நிரப்ப முடியாது. அத்தகையவர்கள் உடனடியாக தங்கள் எல்பிஜி இணைப்பை ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் தனது உத்தரவில் கூறியுள்ளது. குழாய் எரிவாயு இணைப்பு உள்ள நுகர்வோருக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்படாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் தொடர்பான அறிவிப்பு சனிக்கிழமையே வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வெளிப்படையாக, இந்த உத்தரவு குழாய் எரிவாயு கிடைக்கும் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பின் நிலை என்ன? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,சுஜாதா சர்மா மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையே நடந்து வரும் போர், உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளது மற்றும் அதன் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில், உள்நாட்டு எரிவாயு விநியோகத்தில் இதன் தாக்கம் குறிப்பாகத் தெரிகிறது. பல நகரங்களில் எல்பிஜி எரிவாயுக்கான நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன, மேலும் வணிக நுகர்வோர் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற ஒரு மாநாட்டில், பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, "எங்களிடம் (இந்தியா) போதுமான அளவு கச்சா எண்ணெய் விநியோகம் உள்ளது, மேலும் எங்கள் சுத்திகரிப்பு நிலையங்களும் முழு திறனுடன் செயல்படுகின்றன. சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு இல்லை என எந்த தகவலும் இல்லை" என்றார். "இந்தியாவிடம் போதுமான அளவு டீசல் மற்றும் பெட்ரோல் கிடைக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான டீசல் மற்றும் பெட்ரோலை நாங்கள் உற்பத்தி செய்கிறோம், எனவே, இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை." எனவும் அவர் உறுதி கூறினார். மேலும் பேசிய சுஜாதா ஷர்மா கீழ்க்காணும் கருத்துக்களை தெரிவித்தார். "இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, எல்பிஜி விநியோகம் தடைபடும் இடங்களில் வணிக நுகர்வோரை பிஎன்ஜி இணைப்புகளுக்கு மாற்ற அரசாங்கம் விரும்புகிறது. இதற்காக, இந்திய எரிவாயு ஆணையம் லிமிடெட் பல ஆபரேட்டர்களுடன் சந்திப்புகளை நடத்தி, அவர்கள் வழங்கக்கூடிய வணிக நுகர்வோருக்கு உடனடியாக பிஎன்ஜி இணைப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. "எல்பிஜி விநியோகத்தைப் பொறுத்தவரை, புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு இன்னும் கவலையளிக்கும் விஷயம் என்று நான் கூறுவேன். மக்கள் பீதியில் எரிவாயுவை முன்பதிவு செய்கிறார்கள். நேற்று முன்தினம் 75 லட்சம் முன்பதிவுகள் இருந்தன, அவை இன்று 88 லட்சமாக அதிகரித்துள்ளன. இது மக்கள் பீதி காரணமாக முன்பதிவு செய்கிறார்களே தவிர வேறில்லை." "நாட்டு மக்கள் பீதி அடைவதைத் தவிர்த்து, தேவைப்படும்போது மட்டுமே முன்பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்கும் நல்லது." உரங்களும் பாதிக்கப்படுமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் இந்தியாவில் எரிவாயு நுகர்வோர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மத்திய கிழக்கு மோதல் காரணமாக இந்தியாவில் எழுப்பப்படும் மற்றொரு கவலை உர விநியோகம். இந்தியாவின் தற்போதைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருப்பதாக அரசாங்கம் கூறினாலும் இந்த கவலை உள்ளது. "இந்தியாவின் யூரியா கையிருப்பு கடந்த ஆண்டில் இதே சமயத்தில் இருந்ததை மிக அதிகமாக உள்ளது. DAP (டை அமோனியம் பாஸ்பேட்) கையிருப்பு கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். அதேபோல், எங்கள் NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) கையிருப்பும் கடந்த ஆண்டை விட மிக அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார். "இந்தியாவின் உள்நாட்டு யூரியா உற்பத்தியைப் பொறுத்தவரை, தற்போதைய உற்பத்தி வழக்கமான நுகர்வை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக ராபி பருவம் முடிவடையவிருப்பதால். மேலும், சில ஆலைகளின் திட்டமிடப்பட்ட வருடாந்திர பராமரிப்பை நாங்கள் ஏற்கெனவே முடித்துவிட்டோம், அதாவது கிடைக்கக்கூடிய எரிவாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்." "தற்போதைய சூழ்நிலையை எதிர்பார்த்து, உரத் துறை ஏற்கெனவே உலகளாவிய டெண்டர்களை முன்கூட்டியே வெளியிட்டிருந்தது. போட்டி அடிப்படையில் 'உடனடி எரிவாயுவை' (spot gas) வாங்க உரத் துறை முடிவு செய்துள்ளது, மேலும் கொள்முதல் முதல் கட்டம் செவ்வாய்க்கிழமைக்குள் நிறைவடையும்." "இந்தியாவின் அனைத்து சர்வதேச கூட்டாளிகளும் எந்த இடையூறும் இல்லாமல் விநியோகம் செய்து வருகின்றனர், மேலும் காரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை உச்சத்தை எட்டும் மே 15 ஆம் தேதிக்குள் போதுமான மற்றும் பாதுகாப்பான உரங்கள் இருப்பில் இருக்கும் என்று நம்புகிறோம்." இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் உண்மைகளின் அடிப்படையில் பேச வேண்டும் என்றும், முழுமையான தகவல்கள் இல்லாமல் ஊகங்கள் மூலம் மக்களிடையே பீதியை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx24873441mo
  4. மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்த தீர்மானம்! Published By: Digital Desk 1 15 Mar, 2026 | 07:40 AM • ஜூனில் தேர்தல் முறைமை அறிவிக்கப்படும் • புலம்பெயர்ந்தோருக்கு வாக்களிக்க வாய்ப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாணசபை தேர்தலை வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்த முறைமையில் தேர்தலை நடத்துவது மற்றும் தேர்தலுக்கான திகதி என்பவற்றை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது. உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. மேலும் எந்த முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள குழு இவ்வாரம் கூட உள்ளது. இதன் போது தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இது குறித்து மேலும் தெளிவுப்படுத்துகையில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது மாகாணசபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்புகளை அரச தரப்பு வெளியிட உள்ளது. மறுபுறம் மாகாணசபை தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் குறித்த குழுவுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகளில் தேர்தல் முறைமை மற்றும் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்துதல் போன்ற விடயங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்பட உள்ளது. அத்துடன் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்த நிலையில், கொழும்பை தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு இராஜதந்திர மையங்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துரையாடி இருந்தார். இந்த கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட விடயங்கள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை குறித்து பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் உத்தேச மாகாணசபை தேர்தலில் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. பொருளாதார இலக்குகளை நோக்கி செல்லும் போது அநாவசியமான அழுத்தங்களை தவிர்க்கும் வகையிலேயே மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வருடத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவுப்பெறுகின்றது. அந்த வரிச்சலுகையினை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், நல்லாட்சி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு என நான்கு துறைகளில் 27 நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கையை பொறுத்த வரையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்தல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளன. மறுபுறம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நடைப்பெறவுள்ளது. மாகாண சபை தேர்தல் விடயத்தில் அநாவசியமான அழுத்தங்கள் வரக்கூடும் என்பதால் அதற்கு முன்னரே தேர்தலுக்கான திகதியை அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240979
  5. அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி Mar 15, 2026 - 08:52 AM அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் நடுநிலைமை தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த அனுமதி மறுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு விமானங்களுக்கு சுவிட்சர்லாந்து தனது வான்பரப்பைத் திறக்காத அதேவேளை, மேலும் மூன்று விமானங்களுக்கு வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து சுவிட்சர்லாந்து அரசு விடுத்துள்ள அறிக்கையில், பராமரிப்பு விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு மாத்திரம் தமது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmr6ln9e0010356pmdk7xekm
  6. QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது : இன்று முதல் அமுல் - எவ்வாறு QR குறியீட்டை பெறுவது ! 15 Mar, 2026 | 06:35 AM நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய புவியியல் - அரசியல் சூழ்நிலையால் பெற்றோலியப் பொருட்களின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் எரிபொருள் தேவையும் அசாதாரணமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள தற்போதைய எரிபொருள் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதால், கிடைக்கும் எரிபொருளை சீராக நிர்வகிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில தரப்பினர் சட்டவிரோதமாக அதிகளவு எரிபொருளை வாங்கி குவித்து வருகின்றனர் என்பது அண்மையில் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காகவே QR குறியீட்டு முறைமை மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் செல்லுபடியாகும் QR குறியீடு இல்லாமல் எந்த எரிபொருள் நிரப்பு நிலையமும் எரிபொருள் வழங்காது என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. QR குறியீட்டை பெறும் முறை ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம். வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும். அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும். வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: * பேருந்துகள் – 60 லீற்றர் * மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர் * வேன் – 40 லீற்றர் * மோட்டார் கார் – 15 லீற்றர் * லொறி – 200 லீற்றர் * வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர் * முச்சக்கர வண்டி – 15 லீற்றர் * விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர் * குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர் தேசிய உற்பத்தி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான வாகனங்களுக்கு தனிப்பட்ட எரிபொருள் விநியோக முறைமையும் அமுல்படுத்தப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240978
  7. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மழை வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 15 Mar, 2026 | 08:42 AM மத்திய,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா, மன்னார், அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். https://www.virakesari.lk/article/240977
  8. ஈரானின் இஸ்பஹான் நகர் மீது தாக்குதல்: தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் பலி Mar 15, 2026 - 08:26 AM ஈரானின் இஸ்பஹான் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பமூட்டிகளைத் தயாரிக்கும் சிவில் தொழிற்சாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்பஹான் நகரம் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது. நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரமான இஸ்பஹானில், இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு துறைகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும், ஈரானின் மிக முக்கியமான பல அணுசக்தி நிலையங்களும் அமைந்துள்ளன. இஸ்பஹான் தவிர, தெஹ்ரான், தப்ரீஸ், பண்டார் அப்பாஸ் மற்றும் கர்மான் மாகாணத்தின் சிர்ஜான் ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmmr5vigc000z356p0wq7ltik
  9. போதைப்பொருள் கடத்தல்காரரின் சொத்துக்கள் முடக்கம் Mar 15, 2026 - 07:44 AM போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தித் தனது மனைவியின் பெயரில் வாங்கிய 155 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டது. பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அந்த உத்தரவு நீடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான அந்தப் பெண் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் அந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்ட சுமார் 400 இலட்சம் (4 கோடி) ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீட்டையும் காணியையும் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmmr4d7i1000w356pou7cte5z
  10. ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை: ட்ரம்ப் அறிவிப்பு Mar 15, 2026 - 06:50 AM ஈரானுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்படிக்கை செய்துகொள்ளும் தேவை உள்ள போதிலும், அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால் தாம் தற்போது அதனைச் செய்ய விரும்பவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அந்நிபந்தனைகள் எவை என்பதைக் கூற மறுத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளை முற்றாகக் கைவிடும் அர்ப்பணிப்பு அந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்று மட்டும் குறிப்பிட்டார். அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட அவர் மறுத்துவிட்டார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய மையமான 'கார்க்' (Kharg) தீவை அமெரிக்கா முழுமையாக அழித்துள்ளதாகத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், வேடிக்கைக்காக அமெரிக்கா இன்னும் சில தடவைகள் அந்த இடத்தைத் தாக்கக்கூடும் என்றும் இதன்போது கூறியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmr2goy5000u356p2jffdg8t
  11. ஹோமுஸ் நீரிணையைப் பாதுகாக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் போர்க்கப்பல்கள் அனுப்ப வேண்டும் – டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்து Published By: Digital Desk 3 15 Mar, 2026 | 10:46 AM மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி விநியோக வழித்தடமான ஹோமுஸ் நீரிணையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கப்பல் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரவும் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் இந்தப் பணியில் அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரான் மீதான போர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஹோமுஸ் நீரிணையில் தொடர்ச்சியாகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பில் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "ஈரானின் இராணுவ பலம் 100 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் உடனடியாகப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அமெரிக்கா தொடர்ந்து ஈரானியக் கடற்பரப்பில் தாக்குதல்களை முன்னெடுத்து, நீரிணையை பாதுகாப்பானதாக மாற்றும்." உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோமுஸ் நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா மிகக்கடுமையான குண்டுவீச்சை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களின் எண்ணெய் உட்கட்டமைப்புகளை அழிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் "நியாயமான இலக்குகள்" என்றும் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு, பிராந்தியத்தில் கப்பல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நேச நாடுகளுடன் பல்வேறு விருப்பத்தேர்வுகள் தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. யுத்தம் ஆரம்பித்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரை 16 கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக UKMTO தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது எந்தவொரு நாட்டு கடற்படையும் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லாத நிலையில், சர்வதேச கூட்டுப் படையை உருவாக்குவதே ட்ரம்ப்பின் திட்டமாக உள்ளது. https://www.virakesari.lk/article/241001
  12. இன்று முதல் மீண்டும் QR முறையில் எரிபொருள் விநியோகம்: வலுசக்தி அமைச்சு அறிவிப்பு Mar 15, 2026 - 01:48 AM மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று (15) காலை 6.00 மணி முதல் QR குறியீட்டு முறை கட்டாயமாக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் விநியோக மார்க்கங்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகக் கையிருப்பில் உள்ள எரிபொருளை மிகவும் அவதானமாகக் கையாள வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி வைக்கும் மோசடிகளில் ஈடுபடுவதே இந்த அசாதாரண கேள்வி அதிகரிப்புக்குப் பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகளைத் தடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதற்கமைய, இன்று (15) காலை 6.00 மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது. வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்): பேருந்துகள் : 60 மோட்டார் சைக்கிள்கள் : 5 வேன்கள் : 40 மோட்டார் வாகனங்கள் : 15 மோட்டார் லொறிகள்: 200 காணி வாகனங்கள் : 25 முச்சக்கர வண்டிகள்: 15 விசேட தேவைக்கான வாகனங்கள் : 40 குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5 நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும். தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmqre9bq000t356pv7bj2q3a
  13. யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்துக்களின் சமரை சமப்படுத்தியது இந்து கொழும்பு 15 Mar, 2026 | 01:15 AM (நெவில் அன்தனி) கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று நிறைவடைந்த 15ஆவது இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்து கல்லூரியை 5 விக்கெட்களால் வீழ்த்தி கடந்த வருட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்து கல்லூரி கொழும்பு. இந்த வெற்றியுடன் இந்துக்களின் சமரை 4 - 4 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் இந்து கல்லூரி கொழும்பு சமப்படுத்தியது. இந்த வெற்றியானது இந்த வருடம் வைர விழாவை கொண்டாடும் இந்து கல்லூரி கொழும்புவுக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் 82 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்புவுக்கு வெற்றி இலகுவாக அமைந்துவிடவில்லை. ஐந்து விக்கெட்களை இழந்த பின்னரே இந்து கல்லூரி கொழும்பு வெற்றியை சுவைத்தது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் பொறுமையுடனும் சிறந்த நுட்பத்துடனும் துடுப்பெடுத்தாடிய திவாகரன் யாதவ் 120 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய வேலாந்துரை அபினேஷ் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் சுதர்சன் சுபர்ணன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனகராஜா நித்தீஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். இந்து கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களையும் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்து கல்லூரி கொழும்பு அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். இந்து கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. எண்ணிக்கை சுருக்கம் யாழ். இந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 102 (ரவீந்திரன் ஆதித்தியன் 31, தினேஷ்ராமன் பிரேமிகன் 26, நேசரூபன் நிருஜன் 14, விஷ்வநாதன் யுவராஜ் 33 - 5 விக்., ராமநாதன் தேஷ்கர் 20 - 3 விக்., திவாகரன் யாதவ் 19 - 2 விக்.) இந்து கொழும்பு 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 119 (சுரேஷ் சர்விஷ் 32, வேலாந்துரை அபினேஷ் 24, முத்துகுமார் அபிஷேக் 22, சுதர்சன் சுபர்ணன் 43 - 6 விக்., நேசரூபன் நிரூஜன் 22 - 2 விக்.) யாழ். இந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 98 (சுதர்சன் சுபர்ணன் 34, நேசரூபன் நிரூஜன் 21, ராமநாதன் தேஷ்கர் 20 - 4 விக்., விஸ்வநாதன் யுவராஜ் 44 - 4 விக்.) இந்து கொழும்பு - வெற்றி இலக்கு 82 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 82 - 5 விக். (திவாகரன் யாதவ் 34 ஆ.இ., வெலாந்துரை அபினேஷ் 22, ரஞ்சித் குமார் அகிலேஷ் 11 ஆ.இ., சுதர்சன் சுபர்ணன் 28 - 2 விக்., கனகராஜ் நித்தீஸ் 29 - 2 விக்.) விருதுகள் சிறந்த துடுப்பாட்ட வீரர்: சுதர்சன் சுபர்ணன் (யாழ். இந்து) சிறந்த பந்துவீச்சாளர்: விஸ்வநாதன் யுவராஜ் (இந்து கொழும்பு) சிறந்த களத்தடுப்பாளர்: கனகராஜ் நித்தீஸ் (யாழ். இந்து), ஆட்டநாயகன்: திவாகரன் யாதவ் (இந்து கொழும்பு) https://www.virakesari.lk/article/240973
  14. அத தெரண கருத்துப்படங்கள்.
  15. ஐபிஎல்: கொல்கத்தா அணியில் முசரபானி கொல்கத்தா: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனையொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஜிம்பாப்வே அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பிளெசிங் முசரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், முசரபானி பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒப்பந்தத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முடிவடைந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் முசரபானி சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இந்தத் தொடரில் அவர், 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட முசரபானி, 2017-ம் ஆண்டு அறிமுகமானது முதல் ஜிம்பாப்வே அணிக்காக அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 89 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முசரபானி, 106 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துளளார். முசரபானி தனது வேகப்பந்து வீச்சுத் திறமையை உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களான சிபிஎல், ஐஎல்டி20, பிஎஸ்எல், இங்கிலாந்தின் விட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றின் மூலம் நிரூபித்துள்ளார். முசரபானி ஐபிஎல் அணியுடன் இணைவது இது 2-வது முறையாகும். கடந்த 2025-ம் ஆண்டு சீசனின் இறுதி கட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தற்காலிக மாற்று வீரராக இடம் பெற்றிருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக முசரபானி வரும் 17-ம் தேதி கொல்கத்தா அணியுடன் இணைய உள்ளார். https://www.hindutamil.in/news/sports/musharrafani-in-kolkata-knight-riders
  16. “தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 3வது முறையாகக் கோப்பையை வென்றதையடுத்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் மண்டை காய்ந்து போய் தென் ஆப்பிரிக்கா அணிதான் இந்த உலகக்கோப்பையிலேயே முட்டாள் அணி, அவர்கள் நினைத்திருந்தால் இந்தியாவை வெளியேற்றியிருக்கலாம் என்று உளறிக்கொட்டியுள்ளார். இந்தியா 3-வது முறையாகக் கோப்பையைத் தட்டிச்செல்ல தென் ஆப்பிரிக்கா செய்த மடத்தனமே காரணம் என்று சாடியுள்ளார் மைக்கேல் வான். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மே.இ.தீவுகளை வெல்லச் செய்திருந்தால் இந்திய அணி வெளியேற்றப்பட்டிருக்கும். ஆனால் முட்டாள்தனமாக தென் ஆப்பிரிக்கா அந்தப் போட்டியில் வென்றதால் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்து இங்கிலாந்தை பந்தாடி பிறகு இறுதியில் நியூசிலாந்தையும் பந்தாடி மகுடம் சூடியது. சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை 76 ரன்களில் அதிர்ச்சிகரமாக மண்ணைக்கவ்வச் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு அரையிறுதியைக் கடினப்படுத்தியது. இதனையடுத்து ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலும் மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டி காலிறுதி போல் நாக் அவுட் ஆட்டமாக வாழ்வா சாவா ஆட்டமாக மாறி அதில் சஞ்சு சாம்சனின் அதியற்புத இன்னிங்சினால் வெற்றி கண்டது இந்தியா. இந்நிலையில் மைக்கேல் வான், “இந்த உலகக்கோப்பையில் முட்டாள் அணி எது என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். அது தென் ஆப்பிரிக்காதான். சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவுகளை தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற விட்டிருந்தால் இந்திய அணி வெளியே போயிருக்கும். நான் கூறவருவது இதுதான் இந்தியாவை அப்புறப்படுத்தியிருந்தால் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்திருக்கும். மே.இ.தீவுகளை அந்தப் போட்டியில் வீழ்த்தியதன் மூலம் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டனர். இந்தியா அதன் பிறகு ஜிம்பாப்வேயையும் காலிறுதி போன்ற போட்டியில் மே.இ.தீவுகளையும் வீழ்த்தியது. பிறகு இங்கிலாந்தை வீழ்த்தினர். நான் இப்படிச் சொல்வதெல்லாம் போன்று ஒரு போதும் நடக்காது, நடந்ததும் இல்லை, நடக்கப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் தொடரின் சிறந்த அணியை முன்னதாகவே வெளியேற்ற வேண்டும் என்பதையே.” என்றார். மைக்கேல் வான் பொதுவாகவே இந்தியா வெல்வதை எதிர்மறையாகவே பார்ப்பார். சச்சின் டெண்டுல்கர் சாதனையை ஜோ ரூட் கடக்க வேண்டும், சச்சின் டெண்டுல்கரிடம் அந்த சாதனை இருப்பது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று சர்ச்சை மிகுந்த கருத்துக்கள் இவருக்கு சர்வ சாதாரணம். ஆனால் இப்படியெல்லாம் உளறிக்கொட்டி இந்திய நெட்டிசன்களிடம் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் நாக்கை அடக்க மறுக்கிறார் வான். கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரான இத்தகைய கருத்தை, அதாவது வேண்டுமென்றே தோற்க வேண்டும் என்ற கருத்தை ஒரு முன்னாள் வீரர், அதுவும் கிரிக்கெட்டில் பெரிய பிஸ்தா (ஆனால் பொட்டலம்) என்று சொல்லிக் கொள்ளும் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் இப்படிக் கூறியிருப்பது கிரிக்கெட்டின் ஓர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்காகும். “தெ.ஆ. அணியின் முட்டாள் தனம்... இந்தியாவை வெளியேற்றி இருக்கலாம்” - மைக்கேல் வான்
  17. 109-வது 'பொன் அணிகளின் போர்': சமநிலையில் நிறைவு! Mar 14, 2026 - 09:19 PM 'பொன் அணிகளின் போர்' என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109-வது பெருஞ்சமர் சமநிலையில் நிறைவடைந்தது. இத்துடுப்பாட்டப் போட்டி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய புனித பத்திரிசியார் கல்லூரி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 49 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ்ப்பாணக் கல்லூரி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மூன்றாம் நாள் ஆட்டமான இன்று (14), தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த புனித பத்திரிசியார் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனால் போட்டி சமநிலையில் (Draw) முடிவடைந்தது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியின் எஸ்.கே. ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவரை நடைபெற்ற 109 போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 தடவைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. ஏனைய 32 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmmqhx1ew000p356pyuajctvv
  18. ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை Mar 14, 2026 - 08:46 PM ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பல நாடுகள் தமது வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பிற்காகப் போர்க்கப்பல்களை அனுப்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இராணுவ பலத்தை அமெரிக்கா 100 சதவீதம் அழித்துள்ள போதிலும், அவர்கள் இன்னும் ட்ரோன்கள், கண்ணிவெடிகள் மற்றும் குறுகிய தூர ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாகவே, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmqgvr2d000o356p67w8zxd2 வல்லரசுக்கு வந்த சோதனை!!
  19. பாஜக கூட்டணிக்கு தயாராகிறதா தவெக? - மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலேயே, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு" எனும் அதிரடி ஆஃபரை வெளியிட்டார் விஜய். இது திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் தங்களை நோக்கி வரும் என விஜய் நம்பினார். ஆனால், யதார்த்தம் வேறாக அமைந்தது. காங்கிரஸ் மீண்டும் திமுக-வுடனேயே பயணிக்க முடிவு செய்தது, விஜய்யின் ஆரம்பகட்ட வியூகத்துக்குப் பின்னடைவாக அமைந்தது. அதிகாரப் பகிர்வு எனும் துருப்புச்சீட்டு கையில் இருந்தும், ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத தவெக-வின் வாக்கு வங்கி மற்றும் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டால், மற்ற கட்சிகள் தவெக பக்கம் தலைவைக்கத் தயங்கின. இது ஒருபுறமிருக்க, சிறிய மற்றும் செல்வாக்கான கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க தவெக போட்ட திட்டங்களை, பாஜக மேலிடம் மிக சாதுர்யமாக முறியடித்ததாகக் கூறப்படுகிறது. தற்போது தவெக தலைவரைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பலவாறாக நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டுச் சிக்கல்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் என விஜய் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார். அதேசமயம் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழிவகுத்து, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை பாஜக-வும் நன்கு உணர்ந்துள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ஏற்கெனவே திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இறுதி முயற்சியாக பாஜக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?' என்ற யோசனை விஜய் தரப்புக்கும் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இது குறித்து விவாதிக்க, நேற்று தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார் பொதுச்செயலாளர் ஆனந்த். அதில், மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பலத்தைக் காட்டுவதா அல்லது, தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க கூட்டணியில் கைகோப்பதா? ஒரு வேளை, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், ஏற்கெனவே அவர்களை ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்குப் பொதுமக்களிடம் என்ன பதில் சொல்வது என்பது குறித்தெல்லாம் பலவாறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், "புதிதாகக் களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே பாதுகாப்பு" என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விஜய் எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று (மார்ச் 14) விஜய் டெல்லி செல்கிறார். நாளை அவரிடம் விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று இரவு டெல்லி ஹோட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியான சந்திப்புகள் நடந்தால் கிட்டத்தட்ட பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும். https://www.hindutamil.in/news/tamilnadu/is-vijay-joining-nda
  20. இந்தியாவில் இருந்த ஈரானிய கடற்படையினர் நாடு திரும்பினர்! Mar 14, 2026 - 07:59 PM இந்தியாவின் கொச்சின் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் லவான்’ (IRIS Lavan) கப்பலில் இருந்த மாலுமிகளில் ஒரு தொகுதியினர் நேற்று (13) ஈரான் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 183 பணியாளர்களைக் கொண்ட அந்தக் கப்பலில் இருந்த ஒரு தொகுதியினரை விசேட விமானம் மூலம் ஆர்மீனியாவிற்கு அழைத்துச் செல்ல ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த மாலுமிகளும், இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் உடல்களும் ஆர்மீனியாவிலிருந்து தரைவழியாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் கலந்துகொள்ள வந்த மற்றொரு ஈரானியப் போர்க்கப்பலில் இருந்த 204 மாலுமிகள் தற்போது இலங்கையின் வசம் உள்ளதுடன், அவர்கள் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஈரானிய தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் இடம்பெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துக்கொண்டு மீண்டும் ஈரான் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) கப்பல், இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் வைத்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டார்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளானது. இதன்போது கப்பலில் இருந்த 32 மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அக்கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளின் சடலங்களும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையின் நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சடலங்கள் நேற்று (13) விசேட விமானம் மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டன. சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 32 மாலுமிகளில், குணமடைந்த 28 பேர் தற்போது கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். மேலும் நான்கு ஈரானிய மாலுமிகள் தொடர்ந்தும் அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmqe4h5c000m356pocae3hwc
  21. ஜப்பானிய பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு விஜயம் Mar 14, 2026 - 05:57 PM இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேரடங்கிய ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவினர் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட வருகை தந்தனர். இலங்கையின் வரலாறு, பௌத்த மதத்தின் வருகை மற்றும் அதன் பரவல், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், பாரம்பரிய சடங்குகள், உணவு முறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிந்துகொள்வதே இந்தத் தூதுக்குழுவின் நோக்கமாகும். இதன் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடிய அவர்கள், தாம் பெற்றுக்கொண்ட அறிவை ஜப்பானிய மக்களுடன் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். அத்துடன், ஜப்பானில் இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்துதல், கொழும்பு, அனுராதபுரம், சிகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சப்புகஸ்கந்த புராதன விகாரை, மிஹிந்தலை, அனுராதபுரம், சிகிரியா, தம்பானை, மல்வத்து மகா விகாரை மற்றும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர். https://adaderanatamil.lk/news/cmmqae4il000j356pkl2g81d0
  22. அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!
  23. ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு Mar 14, 2026 - 04:28 PM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் தற்போது 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலைநகர் தஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து நிலவும் மோதல் சூழல் காரணமாக, இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், மோதல்கள் ஆரம்பமானது முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஈரானைச் சேர்ந்த 25,000 இற்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmq7p0yc000g356p3k8rhicf
  24. அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம் ஷீல்ட்’ பயிற்சிக்கு பதிலடி: வடகொரியா – ஜப்பான் கடலுக்கு வெளியே ஏவுகணை சோதனை! Published By: Digital Desk 1 14 Mar, 2026 | 01:39 PM அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் 11 நாட்கள் நடைபெறும் ‘ப்ரீ டம் ஷீல்ட்’ என்ற கூட்டு இராணுவ பயிற்சியை தொடங்கிய நிலையில், வடகொரியா இதனை தமது நாட்டிற்கு எதிரான படையெடுப்பு ஒத்திகை எனக் கண்டித்து, அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தனது ஏவுகணை சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுகளை இலக்காகக் கொண்டு, ‘சோ ஹியோன்’ எனும் அதிநவீன போர்க்கப்பலில் இருந்து கடந்த 11 ஆம் திகதி குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டு, கடலில் உள்ள இலக்குகளை துல்லியமாகச் சேதப்படுத்தியது. இந்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜு ஏ உடன் நேரில் பார்வையிட்டார். சோதனைக்குப் பிறகு கிம் ஜாங் உன் கூறுகையில், "நமது நாடு எப்போதுமே வலிமையான மற்றும் நம்பகமான அணுஆயுதத் தற்காப்புத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். எதிரிகளின் எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது கடற்படை தயாராக இருப்பதை இந்த சோதனை நிரூபித்துள்ளது" என்று எச்சரித்தார். இதையடுத்து, அமெரிக்கா – தென்கொரியா நடத்தும் வருடாந்திர இராணுவ பயிற்சியை கண்டித்து, ஜப்பான் கடற்பகுதியை நோக்கி சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வடகொரியாவில் இன்று சோதனை செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடலில் விழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனை மதிப்பிடவும், ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும், ஜப்பான் பிரதமரின் அவசர முகாமைத்துவ மையம் சிறப்பு குழுவை அமைத்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகங்கள் சூழ தொடங்கியுள்ளன, மற்றும் வடகொரிய-தென் கொரியா-அமெரிக்கா இடையேயான பதற்ற நிலை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம், உலக அரங்கில் கொரியாவின் பாதுகாப்பு நிலை மற்றும் வடகொரியா – தென் கொரியா – அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் பரபரப்பாக மாறியுள்ளதை காட்டுகிறது. https://www.virakesari.lk/article/240942
  25. ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபஞ்சங்கள் உள்ளனவா? பட மூலாதாரம்,Victor de Schwanberg/Science Photo Library via Getty Images கட்டுரை தகவல் எலன் சாங் பிபிசி உலக சேவை 48 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எங்காவது ஒரு இணையான பிரபஞ்சத்தில் உங்களை ஒரு ராக்ஸ்டார் அல்லது விண்வெளி வீரராக நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? ஒரு "மல்டிவர்ஸில்" பல பிரபஞ்சங்கள் உள்ளன என்ற யோசனை பகற்கனவுகளையும் அறிவியல் புனைகதைகளையும் ஒருசேரத் தூண்டியுள்ளது - ஆனால் இது சில விஞ்ஞானிகளால் தீவிரமாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலும் ஹாலிவுட்டில் சித்தரிக்கப்படுவதைப் போல் இல்லாமல் இருக்கலாம். அது உண்மையில் என்னவாக இருக்கும் என்பதில் யாருக்கும் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பிரபஞ்சம் நாம் நிச்சயமாக இருக்கும் இந்த பிரபஞ்சம் நமக்காக மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. "உதாரணத்திற்கு, ஈர்ப்பு விசை பலவீனமாக இருந்திருந்தால், நமது நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவாகியிருக்காது," என்று அமெரிக்காவின் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் இயற்பியலாளரும், 'தி அலூர் ஆஃப் தி மல்டிவர்ஸ்' புத்தகத்தின் ஆசிரியருமான பேராசிரியர் பால் ஹால்பெர்ன் விளக்குகிறார். "மறுபுறம், ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருந்திருந்தால், பிரபஞ்சம் அதன் ஆரம்பத்திலேயே அழிந்திருக்கும்," என்று அவர் கூறுகிறார். உண்மையில், இயற்கையின் 'அடிப்படை மாறிலிகள்' என்று அழைக்கப்படுபவை சுமார் இரண்டு டஜன் உள்ளன - அவற்றின் துல்லியமான மதிப்புகள் நமது இயற்பியல் விதிகளைச் செயல்பட வைக்கின்றன. ஆனால் அவை எங்கிருந்து வந்தன? பட மூலாதாரம்,Roberto Machado Noa/Getty Images படக்குறிப்பு,நமது பிரபஞ்சத்தில் நாம் காணும் ஈர்ப்பு விசையின் குறிப்பிட்ட வலிமை, ஒளியின் வேகம், எலக்ட்ரானின் நிறை மற்றும் பல்வேறு மதிப்புகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் நமக்குத் தெரிந்த உயிர் வாழ்க்கையைச் சாத்தியமாக்குகின்றன. சிலர் இவை ஒரு தெய்வீகப் படைப்பாளரை - நமது பிரபஞ்சத்தைக் கவனமான துல்லியத்துடன் வடிவமைத்த ஒரு கடவுளைச் சுட்டிக்காட்டுவதாக வாதிடுகின்றனர். இருப்பினும் மற்றவர்கள் ஒரு மல்டிவர்ஸ் இருப்பதாகக் கூறி அவற்றை விளக்குகிறார்கள். இந்த மாறிலிகளின் குறிப்பிட்ட கலவையைக் கொண்டிருக்கும் எண்ணற்ற பிரபஞ்சங்கள் எப்படியோ இருந்தால், அறிவுள்ள உயிரினங்கள் இருக்கக்கூடிய ஒரு சரியான பிரபஞ்சத்தில் நாம் தற்செயலாக இருக்கிறோம். இவ்வளவு அதிர்ஷ்டசாலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? உயிரற்ற அந்த பிரபஞ்சங்களில் நாம் வாழ்ந்திருக்க மாட்டோம் என்பதால் இந்தக் கேள்வியைப் பற்றி அங்கே சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் வாய்ப்புகள் மிக அதிகம் என்று சிலர் கூறலாம். இது மானுடவியல் தத்துவம் (Anthropic principle) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சங்கள் எவ்வாறு தோன்றியிருக்கலாம் என்பதற்கான அனைத்து வகையான கற்பனை யோசனைகளையும் இயற்பியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர், இவை பெரும்பாலும் சிக்கலான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வோம். பல உலகங்கள் விளக்கம் முதலாவது எலக்ட்ரான்கள் போன்ற சிறிய துகள்களின் விசித்திரமான உலகமான குவாண்டம் மெக்கானிக்ஸில் இருந்து வருகிறது. இந்த நுண்ணிய உலகத்தை நாம் உற்றுநோக்கும்போது, ஒரு துகளின் பண்புகள் இயல்பாகவே நிலையானவை அல்ல என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு எலக்ட்ரான் இங்கேயோ அல்லது அங்கேயோ இருப்பதில்லை. மாறாக, அது இங்கேயோ, அங்கேயோ அல்லது சாத்தியமான வேறு எந்த இடத்திலோ இருப்பதற்கான சில நிகழ்தகவுகளைக் கொண்டுள்ளது. கிளாசிக்கல் கோட்பாட்டின்படி, யாராவது அந்தத் துகளைப் பார்க்கும்போது, அந்த நிகழ்தகவுகள் ஓர் ஒற்றை எதார்த்தமாகச் சுருங்குகின்றன - எலக்ட்ரான் ஒரு நிலையான இடத்தைப் பெறுகிறது. அது அனைத்தும் நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்திற்குள் நடக்கிறது. இதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இன்று அறிவியலில் குவாண்டம் மெக்கானிக்ஸ் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பட மூலாதாரம்,Antonio Masiello/Getty Images படக்குறிப்பு,ஆஸ்கார் விருது வென்ற 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' திரைப்படம் மல்டிவர்ஸை மையமாகக் கொண்ட பல அறிவியல் புனைகதை திரைப்படங்களில் ஒன்று, ஆனால் இது விஞ்ஞானிகள் பொதுவாகப் பேசும் வகை அல்ல என்று ஹால்பெர்ன் கூறுகிறார். கடந்த 1957-ஆம் ஆண்டில், ஹக் எவரெட் III என்ற மாணவர் ஒரு மாற்று யோசனையை முன்வைத்தார், அது பின்னர் 'பல உலகங்கள் விளக்கம்' என்று அழைக்கப்பட்டது: அதாவது ஒரு குவாண்டம் துகள் ஒரே ஒரு நிலையான எதார்த்தத்தை எடுப்பதில்லை. மாறாக, அது ஒரே நேரத்தில் சாத்தியமான அனைத்து எதார்த்தங்களாகவும் கிளைத்துச் செல்கிறது, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன. யாராவது இந்த குவாண்டம் துகளைப் பார்க்கும்போது, அந்த நபரின் உணர்வுள்ள இருப்பு பிரிகிறது என்று ஹால்பெர்ன் விளக்குகிறார்: ஒருவர் ஒரு எதார்த்தத்தைப் பார்க்கிறார், அவரது பிற பதிப்புகள் மற்றவற்றைப் பார்க்கின்றன. ஆனால் அந்த மாற்று வடிவங்கள் திரைப்படங்களில் நாம் காணும் அற்புதமான இணையான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார். "நீங்கள் ஒரு சினிமாவுக்கு செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், அந்தப் படம் ஒருவரைப் பற்றியது, அவர் ஒரு எலக்ட்ரானை பூஜ்ஜிய நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிப்பதற்குப் பதிலாக, ஒரு நானோமீட்டர் தூரத்திலிருந்து கவனிக்கிறார்," என்று ஹால்பெர்ன் கூறுகிறார். இத்தகைய நுட்பமான வேறுபாடுகள் "ஹாலிவுட் பாணியிலான கதையாக இருக்காது". இந்த மல்டிவர்ஸ் யோசனைக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். ஆனால் இது சிலரை அருவருப்படையச் செய்கிறது, அவர்கள் இதைச் சோதிக்க முடியாது என்கிறார்கள்: சரி பார்க்க நாம் நம்மை மற்றொரு பிரபஞ்சத்திற்கு அனுப்ப முடியாது இல்லையா? தத்துவஞானி கார்ல் பாப்பர் கருத்துப்படி, ஒரு கோட்பாடு தவறு என்று நிரூபிக்கப்படாவிட்டால், அது உண்மையான அறிவியல் அல்ல. பட மூலாதாரம்,Universal History Archive/Getty Images படக்குறிப்பு,ஆங்கில இடைக்கால பிரான்சிஸ்கன் துறவி வில்லியம் ஆஃப் ஓக்காம், 'ஓக்காம்ஸ் ரேஸர்' என்ற கொள்கைக்காகப் பாராட்டப்படுகிறார் - சமமான வாய்ப்புள்ள இரண்டு விளக்கங்களில் எளிமையானதைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தேவையற்ற ஊகங்களை நீக்குவது என்பதே அது. அந்த வாதம் சிட்னி பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணரான பேராசிரியர் ஜெரான்ட் லூயிஸை பாதிக்கவில்லை. ஒரு நாள் நாம் மற்றொரு பிரபஞ்சத்திற்குச் செல்ல முடியலாம் என்று அவர் கூறுகிறார். "எதையாவது சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ளுவது என்றால் உங்களிடம் முழுமையான படம் இருக்க வேண்டும், ஆனால் நம்மிடம் இன்னும் அது இல்லை," என்று லூயிஸ் வாதிடுகிறார். அவர் ஒரு மாறுபட்ட எதிர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறார்: ஓக்காம்ஸ் ரேஸர் என்று அழைக்கப்படும் கொள்கை. "மிக அதிகமானவற்றை விளக்க உங்களுக்கு மிக எளிமையான சமன்பாடுகள் தேவை," என்று அவர் கூறுகிறார். "உங்கள் சிக்கலைத் தீர்க்க எண்ணற்ற பிரபஞ்சங்களை அழைப்பது, உங்கள் சிக்கலை முடிந்தவரை எளிமையாக்குவது போலத் தெரியவில்லை." நிலையான வீக்கம் மற்றொரு மல்டிவர்ஸ் யோசனை நமது அண்டத்தின் ஆரம்ப தருணங்களை மையமாகக் கொண்டுள்ளது. தற்போதைய முன்னணி கோட்பாடுகளின்படி, பிரபஞ்சம் ஒரு விநாடியின் மிகச்சிறிய பகுதியில் மிக வேகமாக விரிவடைந்தது. "அதிவேக விரிவாக்கத்திற்கு வழிவகுத்த ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருந்தது," என்று ஹால்பெர்ன் விளக்குகிறார். அது நின்றதும், அந்த ஆற்றல் பருப்பொருள் மற்றும் ஒளியாக மாறியது, இதைத்தான் நாம் பெரும்பாலும் பெருவெடிப்பு என்று நினைக்கிறோம், இது இன்று நம்மைச் சுற்றி நாம் காணும் பிரபஞ்சத்திற்கு வழிவகுத்தது. பட மூலாதாரம்,Nasa/Esa/CSA/STScI/Michael Ressler (Nasa-JPL) படக்குறிப்பு,பருப்பொருள் தோன்றுவதற்கு முன்பு பிரபஞ்சம் ஒரு நுண்ணிய கணம் விரிவடைந்ததாகவும் அதன் மூலம் நமது பால்வீதி போன்ற நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது என்றும் தற்போதைய கோட்பாடுகள் கூறுகின்றன. இந்த அண்ட வீக்கம் நமது விண்வெளிப் பகுதியில் ஏன் தொடங்கியது அல்லது நின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. 1980-களில், சில இயற்பியலாளர்கள் வீக்கம் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் முடிவடையவில்லை என்று பரிந்துரைத்தனர். ஒருவேளை அது நமது பகுதிக்கு அப்பால் தொடர்ந்து கொண்டிருக்கலாம். இந்த "நிலையான வீக்கம்" யோசனையின் ஒரு பதிப்பில், வீக்கம் எங்கு நின்றாலும், விண்வெளியின் அந்தப் பகுதி அதன் சொந்த பிரபஞ்சமாகப் பிரிந்துவிடும். மேலும் ஒவ்வொரு பிரபஞ்சமும் வித்தியாசமாக இருக்கும்: சில மிக வலுவான ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கலாம், மற்றவை எதையும் கொண்டிருக்காமல் இருக்கலாம். "அவற்றில் பெரும்பாலானவை உயிரற்றவையாகவும் மலட்டுத்தன்மையுடனும் முடியப் போகின்றன," என்கிறார் லூயிஸ். "அவ்வப்போது நீங்கள் வசிக்கக்கூடிய சிலவற்றைப் பெறுவீர்கள்." ஆனால் ஒரு குவாண்டம் மல்டிவர்ஸை போலவே, நமக்கிடையே எப்போதும் விரிவடைந்து கொண்டிருக்கும் அந்த இடைவெளி இருப்பதால், இந்த மற்ற பிரபஞ்சங்களைத் தொடர்பு கொள்ள முயல்வது சற்றே கடினமான காரியமாகும். தடயங்களைத் தேடுதல் இருப்பினும், இரண்டு பிரபஞ்சங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உருவானால், அவை பிரிக்கப்படுவதற்கு முன்பு குறுகிய காலம் மோதியிருக்க வாய்ப்புள்ளதாக மல்டிவர்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர். வானியலாளர்கள் இந்த மோதல்களின் வடுக்களை அண்ட நுண்ணலை பின்னணியில் (CMB) தேடுகிறார்கள் - இது நமது ஆரம்பக்கால பிரபஞ்சத்தின் வழியாகப் பயணிக்கும் முதல் ஒளியின் எச்சங்கள். அது பின்னர் நுண்ணலை கதிர்வீச்சாகக் குளிர்ந்துள்ளது, விண்வெளி முழுவதும் அதைப் பார்க்க நாம் தொலைநோக்கிகளைப் பயன்படுத்தலாம். ஹால்பெர்ன் கருத்துப்படி, இந்த வடுக்கள் "ஒரு வகை புல்ஸ்-ஐ வடிவம் அல்லது இலக்கு வடிவம் போல் இருக்கும்." பட மூலாதாரம்,Esa/Planck Collaboration படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் பிளாங்க் தொலைநோக்கி CMB-ஐ வரைபடமாக்கியுள்ளது, அங்கு சிறிய வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் ஆரம்பக்கால பிரபஞ்சத்தில் பருப்பொருளின் வெவ்வேறு அடர்த்திகளைப் பிரதிபலிக்கின்றன. சுற்றியுள்ள பகுதிகளைவிட வித்தியாசமாக குளிர்ச்சியாகத் தோன்றும் 'குளிர் புள்ளி' (Cold spot) போன்ற CMB-இல் உள்ள விசித்திரமான அம்சங்களையும் சில வானியலாளர்கள் உற்றுநோக்கியுள்ளனர். மற்றொரு பிரபஞ்சம் நம்மைக் கவர்ந்ததால் இது ஏற்பட்டதாகச் சிலர் வாதிட்டனர். "எனக்குத் தெரிந்தவரை, ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு கருத்தை முன்வைக்கும்போது, மற்ற குழுக்கள் புள்ளிவிவர பகுப்பாய்வுகளைச் செய்து: 'இல்லை, அந்த கருத்து தவறு' என்று கூறியுள்ளன". 'வெறும் சில கருத்துகளின் தொகுப்பு' CMB-இல் திட்டவட்டமான வடுக்களை நாம் கண்டறிந்தாலும், மற்ற பிரபஞ்சங்களை நாம் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றால் அவை இருப்பதாக நம்புவதற்கு அது போதுமானதாக இருக்குமா? "அறிவியலில் நாம் மறைமுக ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன," என்று ஹால்பெர்ன் கூறுகிறார். உதாரணமாக, பூமியின் மையப்பகுதிக்கு நாம் ஒருபோதும் சென்றதில்லை என்றாலும், அது இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது என்று நாம் நம்புகிறோம். உண்மையில், பிற பிரபஞ்சங்கள் என்ற யோசனையை அவர் விரும்புகிறார். "அதைவிடச் சிறந்த மாதிரியை நாம் கண்டுபிடிக்கும் வரை, இப்போதைக்கு நிலையான வீக்கத்தை நம்புபவராக என்னை நான் நிறுத்திக் கொள்வேன்," என்று அவர் வெளிப்படுத்துகிறார். லூயிஸ் ஏதோ ஒரு வடிவிலான மல்டிவர்ஸ் இருப்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். ஆனால் பல போட்டியிடும் யோசனைகள் முன்வைக்கப்படுவதால் அதை உண்மையில் வரையறுப்பதில் இருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம் என்று அவர் கூறுகிறார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், மல்டிவர்ஸ் தற்போது "வெறும் ஒரு கருதுகோள்கூட அல்ல, வெறும் சில கருத்துகள் மற்றும் யூகங்களின் தொகுப்பு மட்டுமே" என்று அவர் எழுதுகிறார். "நாம் மல்டிவர்ஸை பற்றி ஒரு பொது இடத்தில் விவாதிக்கப் போகிறோம் என்றால், அதற்கு முதல் படி நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம் என்பதை வரையறுப்போம்," என்று அவர் பிபிசியிடம் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y4z7w78d4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.