Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES 18 மே 2024, 04:07 GMT முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் சுவை மட்டுமின்றி சத்துகளும் நிரம்பியுள்ளது. மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை அளவு அதிகம். எனவே மாம்பழத்தை உண்ணும்போது, அது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும் என்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்றும் பலர் கருதுகின்றனர். உண்மையிலேயே மாம்பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமா? நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசினோம்... பட மூலாதாரம்,GETTY IMAGES மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் மாம்பழத்தில் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் நிறைய உள்ளன. கார்போஹைட்ரேட், புரதங்கள், அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் மற்றும் நார்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது. மேலும், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகளும் உள்ளன. 100 கிராம் மாம்பழம் சாப்பிடுவதால் 60-90 கலோரி ஆற்றல் கிடைக்கும். இது தவிர, மாம்பழத்தில் 75-85 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மாம்பழத்தில் கொழுப்பு இல்லை. நூறு கிராம் மாம்பழத்தில் இருக்கும் சத்துக்களின் பட்டியல்: தண்ணீர்: 83 கிராம் கலோரி : 60 கலோரிகள் (ஆற்றல்) மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) : 14.98 கிராம் புரதம்: 0.82 கிராம் நார்ச்சத்து : 1.6 கிராம் சர்க்கரை: 13.66 கிராம் கால்சியம்: 11 மி.கி இரும்பு: 0.16 மி.கி வைட்டமின் சி: 36.4 மி.கி மாம்பழம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES ஆமதாபாத்தை சேர்ந்த நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மனோஜ் விதாலானி பிபிசியிடம் பேசுகையில், ``சர்க்கரை நோய் இருந்தால் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பது முற்றிலும் கட்டுக்கதை. மாம்பழத்தில் உள்ள சர்க்கரைகள் பிரக்டோஸ் (Fructose) அதாவது எளிய பழச் சர்க்கரை வடிவில் உள்ளன. பழங்களில் உள்ள இயற்கையான `பிரக்டோஸ்’ உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இருப்பினும், அவற்றை அதிகளவில் சாப்பிடக் கூடாது," என்று அவர் விளக்கினார். மாம்பழத்தில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (antioxidant) உள்ளன. பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு உதவும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மாம்பழங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில், சர்க்கரை உறிஞ்சப்படும் செயல்பாட்டை மெதுவாக்குகிறது. இது கார்போஹைட்ரேட் ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உடலுக்கு உதவுகிறது. ஒரு உணவுப் பொருள் ரத்த குளுக்கோஸ் அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கும் அளவீட்டை `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (glycemic index) என்போம். மாம்பழங்களில் மிதமான (Moderate) கிளைசெமிக் குறியீடு உள்ளது. எனவே மாம்பழங்களை அளவோடு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்படும். இதன் விளைவாக, உடலில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் படிப்படியாக அதிகரிக்கிறது. `சர்க்கரை உயர்த்தல் குறியீடு’ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவர் மனோஜின் கூற்றுப்படி, ``கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது ஒரு உணவுப் பொருள், உடலின் சர்க்கரை அளவில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவைக் குறிக்கிறது. தாக்கத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களுக்கு எண்கள் ஒதுக்கப்படும். இந்தக் குறியீட்டில் 0 முதல் 100 வரையிலான அளவீட்டு எண்கள் உள்ளன. 0 என்றால் ஒரு உணவு உடலில் சர்க்கரை அளவை பாதிக்காது. 100 மதிப்பெண் என்றால் அந்த உணவு ரத்த சர்க்கரை அளவை அதிக அளவில் உயர்த்துகிறது என்று அர்த்தம். கிளைசெமிக் இன்டெக்ஸ் 55 அல்லது அதற்குக் குறைவான உணவுகளை உண்பது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாம்பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவீடு 51. எனவே இந்தப் பழங்கள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானது. இது ரத்த சர்க்கரையை அதிகம் உயர்த்தாது. இருப்பினும், ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு நடுத்தர (Moderate) அளவில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, அன்னாசி, தர்பூசணி, உருளைக்கிழங்கு, ரொட்டி போன்ற உணவுகள் 70க்கு மேல் அளவீடு பெற்றுள்ளது. அதாவது அவற்றைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 'மாம்பழம் - நீரிழிவு நோய்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கைப்படி, ``நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவற்றை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர் மனோஜ் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களது அறிவுறுத்தலின்படி, ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களைச் சாப்பிட வேண்டாம். மாம்பழத்தை அளவோடு சாப்பிடுவதால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு நாளைக்கு ஒருவர் 100-150 கிராம் அளவு மாம்பழம் சாப்பிடலாம் அல்லது ஒரு நாளைக்கு மூன்று முறை 50 கிராம் மாம்பழம் சாப்பிடலாம். பொதுவாக ஒரு நபரின் ரத்த சர்க்கரை அளவு, உணவுக்குப் பிறகு உயர்கிறது. உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும். எனவே உணவு சாப்பிட்ட உடனே மாம்பழம் சாப்பிட வேண்டாம். சிற்றுண்டிகள் சாப்பிடும் வேளையில், மாம்பழங்களை சிற்றுண்டியாக உண்ணலாம். மாம்பழத்தின் கிளைசெமிக் குறியீட்டை மேலும் குறைக்க நார்ச்சத்து நிறைந்த பிற உணவுகளுடன் மாம்பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது மாம்பழத்தை, பீன்ஸ் மற்றும் தானியங்களுடன் சேர்த்து கலவையாக (salad) சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான வேகம் குறையும். மெதுவான செரிமானம் நமக்கு முழு உணவை உட்கொண்ட உணர்வை கொடுக்கும். மேலும், நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாது. 'பழச்சாறாகப் பருக வேண்டாம்' பட மூலாதாரம்,GETTY வழக்கமாக நாம் ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம்தான் சாப்பிடுவோம். ஆனால் பழச்சாறாக மாம்பழத்தை உட்கொள்ளும்போது, 2 அல்லது 3 பழங்கள் மற்றும் சர்க்கரையும் சேர்க்கப்படும். எனவே, ஜூஸ் வடிவில் உட்கொள்ளாமல், பழமாக துண்டுகளாக வெட்டி உண்ணுங்கள். பழத்துண்டுகளை சாப்பிடுவதால், அதிகமாகச் சாப்பிட்டது போன்ற உணர்வு ஏற்படும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தைச் சாப்பிடும்போது கலோரி அளவு மற்றும் கிளைசெமிக் அளவை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் மாம்பழம் மிக முக்கியமான பயிர் வகையாகப் பார்க்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா 21.79 மில்லியன் மெட்ரிக் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 1000 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், பிகார், கர்நாடகா, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகியவை மாம்பழம் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்கள் ஆகும். (குறிப்பு - இந்தக் கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே. சந்தேகம் இருந்தால் மருத்துவர்களை அணுகவும்.) https://www.bbc.com/tamil/articles/cy0l8nyek9no
  2. கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கோரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீனா மீது கவனம் செலுத்த வேண்டும் என்று மேற்குலகத்தைச் சேர்ந்த நாடுகள் நீண்ட காலமாகவே பேசி வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம், பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையக(GCHQ) உளவு முகமையின் தலைவர், “இது ஒரு சகாப்தத்தின் சவால்” என்று விவரித்துள்ளார். மேற்குலக நாடுகளில் சீனாவுக்கு ஆதரவாக உளவு பார்த்தல் மற்றும் ஹேக்கிங் செய்வதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஹாங்காங் உளவு முகமைகளுக்கு உதவி வருவதாக பிரிட்டனில் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமையன்று சீன தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது பிரிட்டன் வெளியுறவுத்துறை. அதிகாரம் மற்றும் செல்வாக்கு விஷயத்தில் சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவி வரும் நிலையில், அது பொதுவெளிக்கு வந்துள்ளதற்கான அறிகுறியே இந்த கைதுகள். அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சீனாவை பின்னுக்கு தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. ஆனால், மூத்த அதிகாரிகள் மேற்கு நாடுகள் சீனாவின் சவாலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உளவுத்துறை சார்ந்து பின்தங்கிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இது மேற்கு நாடுகளில் சீன உளவு அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும், இரு தரப்பிலும் தீவிரமான தவறுகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்குநாடுகள் போராடின வருகின்றன. ஒரு புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்க முயற்சித்துவரும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உறுதியே மேற்கத்திய அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது. பிபிசியின் புதிய சீனா - மேற்கு நாடுகள் என்ற தொடருக்காக பிரிட்டனின் வெளிநாட்டு உளவு முகமையான எம்ஐ6 அமைப்பின் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் அளித்த அரிதான பேட்டி ஒன்றில், “ சீனா உலகின் உச்ச அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்காவின் இடத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறது” என்றார். என்னதான் சீனா குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், இப்போது வரையிலும் அதன் மீது கண்காணிப்பை பலப்படுத்த மேற்கு நாடுகள் போராடி வருகின்றன. மேற்குலக நாடுகளின் கவனம் இதர பிரச்னைகளில் இருந்த வேளையில், உலகின் முக்கிய சக்தியாக சீனா உருவெடுத்தது என்று கூறுகிறார் எம்ஐ6 அமைப்பின் இரண்டாம் நிலை தலைவராக இருந்த நைகல் இன்க்ஸ்டர். இவர் 2006ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். 2000களில் பெய்ஜிங் உலக அரங்கில் தன்னை உயர்த்துவதில் மும்முரமாக இருந்த வேளையில், மேற்கத்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் சிந்தனையும், உளவுத்துறைகளின் கவனமும், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் இராணுவ தலையீடுகளில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா சைபர் உளவு மூலமாகவும், அல்லது நிறுவனங்களில் நேரடியாக ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் உளவு பார்ப்பதாக மேற்குலக உளவு அமைப்புகள் கூறுகின்றன. சமீபத்தில், மீண்டும் எழுச்சி பெற்றுள்ள ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-காஸா போர் உலகிற்கு கூடுதல் அவசர சவால்களாக தோன்றியுள்ளன என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள். அதே நேரத்தில், சீனா ஏற்படுத்தும் பாதுகாப்பு அபாயத்தை விட, அதன் மிகப்பெரிய சந்தையை பயன்படுத்தும் வாய்ப்பை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தங்கள் உளவுத்துறை தலைவர்கள் அடிக்கடி சீனாவை பற்றி குறிப்பிட வேண்டாம் என்று விரும்புகின்றனர். வணிக நிறுவனங்களும் கூட தங்கள் ரகசியங்கள் குறிவைக்கப்படுவதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. "பொருளாதாரம் மற்றும் வணிக நலன்களின் திசையில்தான் காற்று வீசும்" என்கிறார் நைகல் இன்க்ஸ்டர். ஏற்கனவே 2000 களில் தொழில்துறை சார்ந்த உளவுப்பணியில் சீன உளவுத்துறை ஈடுபட்டிருந்தது என்று கூறும் அவர், அப்போதும் மேற்கத்திய நிறுவனங்கள் அமைதியாகவே இருந்தன என்கிறார். "அதை எதிர்ப்பது அல்லது வெளிப்படுத்துவது சீனாவின் சந்தைகளில் தங்கள் நிலையை பாதிக்கும் என்ற அச்சத்தில் அவர்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்ப விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். மேற்குலகின் பாணியில் இருந்து சீனா வேறு மாதிரியான பாணியில் உளவு பார்ப்பது மற்றொரு பெரிய சவாலாக உள்ளது. இது அதன் செயல்பாட்டை அடையாளம் காண்பதையும், எதிர்கொள்வதையும் கடினமாக்கியுள்ளது. முன்னாள் மேற்குலக உளவாளி ஒருவர், ஒருமுறை சீனா "தவறான வகையில்" உளவு பார்ப்பதாக சீனப் பிரதிநிதி ஒருவரிடம் கூறியதாகக் தெரிவித்தார். அதாவது, மேற்கத்திய நாடுகள் தங்கள் எதிரிகளைப் புரிந்துகொள்ள உதவும் வகையான உளவுத்தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்த விரும்புகின்றன. ஆனால் சீன உளவாளிகளுக்கு அதில் வெவ்வேறு முன்னுரிமைகள் உள்ளன. எஃப்.பி.ஐ.-இன் எதிர்உளவு அதிகாரி ரோமன் ரோஜாவ்ஸ்கி கூறுகையில், "ஆட்சியின் நிலைத்தன்மையே அவர்களின் முதல் குறிக்கோள்" என்று விளக்கினார். அதற்கு பொருளாதார வளர்ச்சியை தருவது அவசியமாகும். எனவே சீனாவின் உளவாளிகள் மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பெறுவதை ஒரு சிறந்த தேசிய பாதுகாப்புத் தேவையாகக் கருதுகின்றனர். பெய்ஜிங் உளவாளிகள் தாங்கள் சேகரித்த தகவல்களை சீன அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக மேற்கத்திய உளவாளிகள் கூறுகிறார்கள். ஆனால், மேற்குலக உளவுத்துறை முகமைகள் தங்கள் சொந்த உள்நாட்டு நிறுவனங்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்வதில்லை. பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு,கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் கூட்டம் வெளிப்படையாக நடந்தது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (ASIO) தலைவரான மைக் பர்கெஸ், "எங்கள் 74 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை நாங்கள் இருந்ததை விட எங்களது நிறுவனம் தற்போது மிகவும் பிஸியாக உள்ளது" என்று என்னிடம் கூறினார். "நான் இதர நாடுகளை மிகவும் அரிதாகவே குறிப்பிட்டு அவர்கள் உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறேன். காரணம் உளவு என்று வரும்போது நாங்களும் அவர்களுக்கு அதையேதான் செய்கிறோம்” என்று கூறுகிறார் பர்கெஸ். "வணிக உளவு பார்ப்பது முற்றிலும் வேறுபட்ட விஷயம், அதனால்தான் சீனா இந்த விஷயத்தில் சிறப்பு கவனத்தை பெறுகிறது." மேற்கத்திய நட்பு நாடுகள் இந்த அச்சுறுத்தலைப் புரிந்துகொள்வதில் தாமதம் காட்டியுள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். "இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன், கூட்டாக நாங்கள் அதை தவறவிட்டு விட்டோம்," என்று அவர் ஒப்புக்கொள்கிறார். கடந்த அக்டோபரில் முதன்முதலாக கலிபோர்னியாவில் வெளிப்படையாக நடந்த அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஃபைவ் ஐஸ் என்று அழைக்கப்படும் உளவுத்துறை-பகிர்வு கூட்டணியின் பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் நான் இருந்தேன். ஒரு அசாதாரண நிகழ்வாக, இந்த ஐந்து நாடுகளின் உளவுத்துறை தலைவர்களும் வெளிப்படையாக சீனா மேற்கொண்டு வரும் வணிக உளவு குறித்து எச்சரிக்கை விடுத்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டம், சீனா குறித்த எச்சரிக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கான மிகவும் திட்டமிட்ட முயற்சியாகும். காரணம் இன்னமும் பல நிறுவனங்களும் அமைப்புகளும் இந்த எச்சரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்ற அச்சம் உள்ளது. இதற்காக சிலிக்கான் வேலி தேர்வு செய்யப்பட்டதும் கூட காரணத்துடன் முடிவு செய்யப்பட்டதே. டெக் நிறுவனங்கள் நிறைந்த அந்த பகுதியில் , சைபர் உளவு மூலமாகவும், நிறுவனங்களில் ஆட்களை ஊடுருவ செய்வதன் மூலமாகவும் தொழில்நுட்பத்தை திருடும் சீனாவின் செயல் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த செயல்களுக்கான சீனாவின் ஆதாரங்கள் வேறு அளவில் உள்ளன. ஒரு மேற்கத்திய உளவுத்துறை அதிகாரியின் தகவலின்படி, சீனாவில் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமார் 6,00,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிட்டுள்ளார். இது உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகம். மேற்கத்திய பாதுகாப்பு சேவைகள் ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்க முடியாது. பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 கூற்றுப்படி, பிரிட்டனில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்டவர்கள், சீன உளவாளிகளால் லிங்க்டு-இன் போன்ற தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்கள் வழியாக உறவுகளை வளர்ப்பதற்காக அணுகப்பட்டுள்ளனர். "அவர்கள் உண்மையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் இருக்கலாம். ஆனால் இறுதியில் அவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தின் எதிர்காலத்தையே அழிக்கக் கூடிய தகவல்களைக் அவர்களுக்கு பகிர்ந்துகொண்டிருப்பார்கள்" என்று எம்ஐ5 - இன் தலைவர் கென் மெக்கலம் கலிபோர்னியா கூட்டத்தில் என்னிடம் கூறினார். சீனா உள்நாட்டு கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வெளிநாட்டில் அதன் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்தை மட்டுப்படுத்தவும் அதன் உளவாளிகளை பயன்படுத்துகிறது. சமீபத்தில், மேற்கத்திய அரசியலை குறிவைத்து இயங்கி வந்த சீன உளவாளிகள் பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவில் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சீனாவின் "வெளிநாட்டு காவல் நிலையங்கள்" இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேற்கு நாடுகளில் உள்ள சீன அதிருப்தியாளர்களைப் கண்காணிப்பதற்காக, பெய்ஜிங்கின் உளவுத்துறை அதிகாரிகள் பொதுவாக உளவாளிகளை களத்தில் நேரடியாக பயன்படுத்துவதை விட, தனியார் புலனாய்வாளர்களை பணியமர்த்துவது அல்லது அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது போன்று தொலைதூரத்தில் இருந்தே செயல்படுகிறார்கள் என்று கூறுகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள். உண்மையில், 2000களின் முற்பகுதியில் பிரிட்டன் அரசாங்க அமைப்புகளை இலக்காகக் கொண்ட முதல் இணைய நிகழ்வுகள் ரஷ்யாவிலிருந்து அல்ல, சீனாவிலிருந்து வந்தவை. அவை திபெத்திய மற்றும் உய்குர் குழுக்கள் போன்ற வெளிநாட்டு எதிர்ப்பாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டவை. அரசியல் தலையீடுகள் பற்றி கவலைப்படுவதில் தற்போது ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. 2016 ஆம் ஆண்டிலிருந்து, தேர்தல்களில் வேட்பாளர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளைக் கண்டறியத் தொடங்கியதாக ASIO அமைப்பு கூறுகிறது. "அவர்கள் இங்கு தங்கள் விருப்பங்களை புகுத்த முயற்சிக்கிறார்கள், அதை செய்வதற்கு திறன் படைத்தவர்களும் கூட. அவர்கள் அதை மறைமுகமான வழிகளில் செய்வதை நாங்கள் விரும்பவில்லை" என்று மைக் பர்கெஸ் பிபிசியிடம் கூறினார். இதை எதிர்கொள்ளும் வகையில், 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா புதிய சட்டங்களை இயற்றியது. படக்குறிப்பு,பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ ஜனவரி 2022 இல், பெய்ஜிங்கின் விருப்பங்களை முன்னெடுப்பதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்டின் லீ பல பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதாகக் குற்றம் சாட்டி எம்ஐ5 ஒரு அசாதாரண எச்சரிக்கையை வெளியிட்டது. அவர் தற்போது எம்ஐ5க்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் தான் பிரிட்டன் ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. இது வெளிநாடுகளின் தலையீடு மற்றும் பிற செயல்பாடுகளைச் சமாளிக்க புதிய அதிகாரங்களை வழங்கியது. ஆனாலும் , இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சீனா மேற்குலகை உளவு பார்ப்பது போலவே, மேற்குலகமும் சீனாவை உளவு பார்க்கிறது. ஆனால் எம்ஐ6 மற்றும் சிஐஏ போன்ற மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு சீனாவில் உளவுத்தகவலை சேகரிப்பது தனித்தன்மை வாய்ந்த சவாலாக உள்ளது. நாட்டிற்குள் கண்காணிப்பின் பரவலான தன்மை, டிஜிட்டல் கண்காணிப்பு உள்ளிட்டவை மனித நுண்ணறிவின் பாரம்பரிய மாதிரி - உளவாளிகளை நேருக்கு நேர் சந்திப்பதை - கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆக்குகிறது. சீனா ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிஐஏ உளவாளிகளின் பெரிய வலையமைப்பு ஒன்றை துடைத்தெடுத்தது. மேலும் தகவல் தொடர்புகளை இடைமறித்து டிஜிட்டல் நுண்ணறிவை சேகரிக்கும் பிரிட்டனின் அரசாங்க தகவல் தொடர்பு தலைமையகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமைக்கு தொழில்நுட்ப ரீதியாக இது கடினமான இலக்காகும். ஏனெனில் சீனா மேற்கத்திய தொழில்நுட்பத்தை விட, அதன் சொந்த தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது. "சீனாவின் பொலிட்பீரோ எப்படி சிந்திக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை" என்று ஒரு மேற்கத்திய அதிகாரி ஒப்புக்கொண்டார். இது புரிதலுக்கு வழிவகுக்கும் மற்றும் இது கடுமையான அபாயங்களைக் கொண்டுள்ளது. பனிப்போரில், மாஸ்கோ எவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்தது என்பதை மேற்கு நாடுகள் புரிந்து கொள்ளத் தவறிய காலங்கள் இருந்தன. இதன் விளைவாக இரு தரப்பும் விரும்பாத ஒரு பேரழிவுப் போரை நெருங்கின. தைவான் மீதான கட்டுப்பாட்டை மீட்பதற்கான சீனாவின் விருப்பத்தின் மீது, இன்றும் இதேபோன்ற தவறான கணக்கீடுகளின் அபாயங்கள் உள்ளன. தென் சீனக் கடலிலும் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. "நாம் வாழும் மிகவும் ஆபத்தான, போட்டி நிறைந்த இந்த உலகில், எப்போதும் மோதலைப் பற்றி கவலைப்பட வேண்டும், அதைத் தவிர்ப்பதற்கான பாதையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று எம்ஐ6 இன் தலைவர் சர் ரிச்சர்ட் மூர் என்னிடம் கூறினார். "குறிப்பாக நீங்கள் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத அதிகாரம் கொண்டிருக்கும்போது, எனது சேவை அங்குதான் வருகிறது." எம்ஐ6-இன் பணியே, சாத்தியமான அபாயங்கள் வழியாக செல்ல தேவையான உளவுத்தகவல்களை வழங்குவது என்று அவர் கூறுகிறார். "வரையறையின்படி தவறான புரிதல்கள் எப்போதுமே ஆபத்தானவை - உங்களிடம் தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதும், நீங்கள் போட்டியிடும் நபர்களின் நோக்கங்களைப் பற்றிய நுண்ணறிவு இருப்பதும் எப்போதும் சிறந்தது" என்கிறார் அவர். இது தகவல் தொடர்புக்கான வழிகள் திறந்திருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எம்ஐ6 உளவு ஸ்தாபனம், சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில ராணுவத் தொடர்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன என்ற உண்மை பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான அதிக இராணுவ மற்றும் இராஜதந்திர தொடர்பு சமீபத்திய மாதங்களில் சூட்டைக் குறைத்திருந்தாலும், நீண்ட காலப் பாதை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கிறது. உளவு பார்ப்பது பற்றிய அனைத்து வெளிப்பாடுகளும் இரு தரப்பிலும் உள்ள பொதுமக்களிடையே அவநம்பிக்கையையும் அச்சத்தையும் தூண்டுகிறது. இது நெருக்கடி நிலையில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பயணிப்பதற்கான வழியைக் கண்டறிவது, இருதரப்பு உறவின் மோதல் போக்கிலிருந்து விலகுவதற்கு இன்றியமையாத ஒன்றாகும். https://www.bbc.com/tamil/articles/c03dllppx7wo
  3. தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் : முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்து 18 MAY, 2024 | 04:58 PM தமிழர்கள் ஒருதேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதோடு அவர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்த இயலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு,-கிழக்கு) ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதீன முதற்குரு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் வாசிக்கப்பட்ட இந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழினப்படுகொலை முள்ளிவாய்க்காலில் உச்சந்தொட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஒவ்வொரு படுகொலைக்குப் பின்னரும் “இனிமேல் இது நடக்கவே கூடாது” என்ற உணர்வுப் பிரவாகம் வலுவாக எழுந்தாலும், அதுவே தொடர்கின்றது. இனிமேல் நடக்கவே கூடாது என்ற உணர்வுப் பிரவாகம் அர்த்தமற்றதாகிவிட்டது. ஈழத்தமிழினப் படுகொலை ஒரு வரலாற்று செயன்முறையாக காலணித்துவத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. தமிழினப்படுகொலையின் வழிவரைபடம் பேரரசுக் கட்டமைப்பின் புவிசார் அரசியல் நலன்களைத் தவிர்த்து உருவாக்கப்படவில்லை என்பது ஐயமுற தெரிகின்றது. புவிசார் அரசியல் நலன்களின் பிராந்திய தளங்களில் ஏகாதிபத்தியத்தை தக்கவைப்பதற்காக பேரரசுக் கட்டமைப்பை துணைக் குத்தகைக்கு விட்டுள்ளது. அதனுடைய ஒரு வடிவமாகத்தான் இஸ்ரேலையும் இலங்கையையும் அவதானிக்க வேண்டும். தமிழினப்படுகொலை நடந்து 15ஆவது ஆண்டில் பலஸ்தீனப் படுகொலை அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. பலஸ்தீனப் படுகொலையை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தமிழினப் படுகொலைக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப் படுகொலைக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமைப் பண்புகள் இருப்பதை அவதானிக்கலாம். ஆசியாவில் இலங்கைத் தீவினதும், குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமும் மத்திய கிழக்கில் பலஸ்தீனத்தின் கேந்திர முக்கியத்துவமும் புவிசார் அரசியலில் கோலோச்சுவதற்கு பேரரசுக்கு மிக அவசியமானது. பேரரசைக் கட்டமைப்பதற்கு அதன் நலன் சார்ந்த எந்த விலையையும் கொடுப்பதற்கு பேரரசு தயாராக இருப்பதை இவை கோடிட்டுக் காட்டுகின்றன. பேரரசும் அதன் வலையமைப்பும் உற்பத்தி செய்கின்ற இராணுவத் தளபாடங்களுக்கும் பேரரசின் பொருளாதார இருப்புக்கும் தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போர்க்களங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஏக பேரரசை கட்ட முயலும் நாடுகள் தான் மனித உரிமையையும் பொறுப்புக்கூறலையும் போதிக்கின்றன என்பது அபத்தம். இவை இரண்டுமே ஒவ்வாத்தன்மை கொண்டவை. இது பலஸ்தீனப் படுகொலையில் மிகத் தெளிவாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2002 பேச்சுவார்த்தை முறிவடைவதற்கு அமெரிக்கா காரணமாய் இருந்தது என்பது ஏற்கனவே ஆய்வுகள் மூலம் வெளிவந்த உண்மையாய் உள்ளது. அதுவே இன்று காசாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகின்றது. ஐ.நா. சபையும் அதன் ஏனைய அலகுகளும் சர்வதேச சமூகமும் அதன் கட்டமைப்பும் எவ்வாறு முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய மனித பேரவலத்தை தடுக்கமுடியாமல் போனதோ அதேபோல் இன்று அவர்களால் பலஸ்தீனப் படுகொலையையும் தடுக்கமுடியாமல் போனது எமக்கு ஆச்சரியத்தை தரவில்லை. தமிழினத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி, புதுப்புது வடிவங்களை எடுத்துள்ளன. அது தமிழினத்தின் தன்னிறைவுப் பொருளாதாரத்தின் மீது, பண்பாட்டின் மீது, கல்வியின் மீது, ஈழத்தமிழினத்தின் மரபுகள் மீது, சைவத்தலங்கள் மீது, தொல்லியல் வரலாறு மீது, ஈழத்தமிழினத்தின் வரலாறு மீதானதாக இருக்கலாம். ஈழத்தமிழினத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள உளவியல் போரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் வடிவமாகவே கருத வேண்டியுள்ளது. உளவியல் போரின் நோக்கம், ஈழத்தமிழினம் தமிழ்த் தேசியத்தின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையைச் சிதைத்தலாகும். தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கை விழுமியங்கள் தான் ஈழத்தமிழினத்தின் கூட்டுப் பிரக்ஞையை விழிநிலையில் வைத்துக்கொண்டுள்ளது. தமிழ்த் தேச நிலத்தின் மீதான போரின் பரிமாணங்களின் வடிவங்கள் எல்லாரும் அறிந்ததே. முன்னெப்பொழுதும் இல்லாதவாறு தமிழினம் தனது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது. தமிழினத்தின் இருப்பை சவாலுக்குட்படுத்தும் அலகுகளை எதிர்த்து போராடவேண்டிய வரலாற்றுக் கட்டாயத்துக்குள் தமிழினம் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக் கடமை ஒட்டுமொத்த தமிழினத்துக்கானது. யாரும் இப்பாரிய பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாத வரலாற்றுத் தேவைக்குள் நாம் இருக்கின்றோம். முள்ளிவாய்க்கால், பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல, அடக்குமுறை எதிர்ப்பின் குறியீடும் கூட. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் கொத்துகொத்தாக கொல்லப்பட்ட உறவுகளை நினைக்கையில் அவர்கள் சுமந்து வந்த கனவுகளையும் இலக்குகளையும் நினைத்து, குருதி உறைந்து சிவந்துபோன மண்ணிலிருந்து சபதம் எடுக்கின்றோம். எத்தடை வரினும் எமது இலக்கை அடைவோம் என்று எம் உறவுகளின் கல்லறைகள் மீது உறுதி எடுக்கின்றோம். அதன் அடிப்படையில், * நினைவுகூரல் கூட்டுரிமை சார்ந்தது மட்டுமல்ல பண்பாட்டு உரிமையும் கூட. ஆகவே இலங்கை அரசு தமிழினப் படுகொலை நினைவுகூரலைத் தடுக்க முடியாது. * தமிழினம் தமிழினப் படுகொலைக்கான நீதியை சர்வதேச விசாரணைக்கூடாகவே கோரி வருகின்றது. அக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம். * தமிழினம் ஒரு தனித்துவமான தேசத்திற்குரிய அலகுகளை தன்னகத்தே கொண்ட இனம். * கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கூடாக தமிழின இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது. இதுவும் இன அழிப்புப் போரின் ஓர் அங்கமென நாம் கருதுகின்றோம். * தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்துக்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும். எம் பாசமிகு உறவுகளே, தமிழ் தேசிய விடுதலை தரும் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் பயணிக்க முள்ளிவாய்க்கால் பொதுக்கட்டமைப்பு அழைப்பு விடுக்கிறது என்று வாசித்து முடித்தார். https://www.virakesari.lk/article/183888
  4. அது 1983 ஆம் ஆண்டு காலப்பகுதி. 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு பூராகவும் வெடித்த இனவாதக் கிளர்ச்சியானது, இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானித்த தருணமாகும். தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினால் தவறான நோக்கங்கள் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இனவாதக் கிளர்ச்சியின் முடிவே, பிரிவினைவாதப் போரை நோக்கி கொண்டு சென்றதன் ஆரம்பமாக அமைந்தது. வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர்களின் இளம் இரத்தமானது, தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் ஏற்பட்ட வெறுப்பாக மாற, அதிக காலம் செல்லவில்லை. தங்கள் சகோதர-சகோதரிகளுக்கு, எதிராக தெற்கில் நடந்த அநீதியை எதிர்கொண்ட அவர்களை, தங்களுக்கிடையே ஒன்றிணைந்து, தங்கள் சமூகத்திற்கு நீதி கேட்டு, போராட்டத்தை நோக்கி நகர்த்தியது. இறுதியில், அது 30 ஆண்டு கால யுத்தமாக மாறியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நமக்கு நாமே துப்பாக்கிகளை நீட்டிய நிலையை ஏற்படுத்துகின்ற இத்தகைய ஒரு தலைவிதியை உருவாக்க அந்த வரலாறே காரணமாகும். முப்பது வருடகால போரினால் வடக்கிலும் தெற்கிலும் உள்ள பெண்கள் தங்கள் அன்பான கணவன்களை இழந்தனர். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை இழந்தனர். பலர் தங்கள் கண்கள், கால்கள் கைகளை இழந்தனர். யுத்தத்தினால் எத்தனை பேர் உயிரிழந்தனர் என இன்றும், குறிப்பிட்டுக் கூற முடியாத நிலை காணப்படுகின்றது. பலர் இன்னும் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். இன்றும், வடக்கில் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்படும் எலும்புக்கூடுகள் கொண்ட புதைகுழிகள், கடந்த காலத்தின் இருண்ட மற்றும் கொடூரமான பயங்கரத்தை எமக்குக் காண்பிக்கின்றன. போரில் வெற்றி என்பது இல்லை. யுத்தத்தினால் கிடைப்பது ஒன்றும் இல்லை. போரில் இழப்புகள் மட்டுமே கிடைக்கும். போரின் முடிவு வெற்றி அல்ல. சுதந்திரம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதுதான் மிகவும் கடினமான விடயமாகும். வடக்கிலும் தெற்கிலும் எமக்கிடையில் எழுந்த சந்தேகமும் பயமும் இப்போதும் அவ்வப்போது ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. அந்த அளவிற்கு எமது உள்ளங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. அப்படியாயின், எமது காயங்களை நாம் ஆற்ற வேண்டாமா? வடக்கிற்கு ரயிலில் செல்வது நல்லிணக்கம் அல்ல, தெற்கின் தென்னை மரங்களை வடக்கில் நடுவதும், வடக்கின் பனை மரத்தை தெற்கில் நடுவதும் நல்லிணக்கமல்ல. நல்லிணக்கம் என்பது எம்மை நாமே அறிந்து கொள்வதாகும். கலாசார பன்முகத்தன்மையை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். எமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு அவசியம் நட்பின் கரங்களாகும். நம்பிக்கையுடனான அன்பே அதற்கு அவசியம். மற்றவரை மதிப்பதே அதற்கு தேவையாகிறது. அது அரசியலாக இருக்க வேண்டியதில்லை. அது மனிதாபிமானமாக மட்டும் இருந்தால் போதும். வாருங்கள் இணையுங்கள் உங்கள் நட்பின் கரங்களை நீட்டுங்கள்... அது வேறு யாரோ அல்ல அது எமது சகோதரரே... இனி போதும் இறந்தகாலத்தைப் புரிந்து நிகழ்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்... கட்டியணைப்போம்... #TurningPoint #maheelbandara https://www.facebook.com/story.php?story_fbid=997802095039406&id=100044288731301&mibextid=xfxF2i&rdid=OSMeEXOJfsyopIp6
  5. சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இறுதிப் போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த அஞ்சலி நிகழ்வு, இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றுள்ளது. அக்னெஸ் கலமார்ட் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதை சர்வதேசத்துக்கு கூறுவதே எங்களின் முதன்மையான நோக்கம்.
  6. கோவேக்சின் தடுப்பூசி & பக்கவிளைவுகள் ஆய்வு குறித்த விளக்கம் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் முக்கிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு தீவிர தொற்றுகளைத் தவிர்த்து அதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் பொருட்டு அவசர நிலையெனக் கருதி தடுப்பூசிகளைத் தயார் செய்தன. அமெரிக்கா - மாடர்னா மற்றும் ஃபைசர் ( கோமிர்நாட்டி) தடுப்பூசி ரஷ்யா - ஸ்புட்னிக் தடுப்பூசி சீனா - சைனோஃபார்ம் பிரிட்டன் - வேக்ஸ்செர்வியா இந்தியா - கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கோவேக்சின் தொழில்நுட்பம் வைரஸை செயலிழக்கச் செய்து அதன் நோய் தொற்று உண்டாக்கும் ஆற்றலை இல்லாமல் செய்து உடலில் செலுத்துவதன் மூலம் நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறுவது கோவேக்சின் தடுப்பூசியின் தொழில்நுட்பமாகும். இது பழமையான காலத்தால் பரிசோதிக்கப்பட்ட குறைவான பக்கவிளைவுகளைக் கொண்ட தொழில்நுட்பமாகும். இந்த தடுப்பூசியை இந்திய அரசின் ஐசிஎம்ஆர் தொழில்நுட்பத்தை வழங்க அதைத் தயாரிக்கும் பொறுப்பை பாரத் பயோடெக் நிறுவனத்தார் ஏற்றனர். இந்தியாவில் இதுவரை 36 கோடி பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு கள ஆய்வுகளில் ஏனைய கொரோனா தடுப்பூசிகளை வைத்து ஒப்பீடு செய்ததில் மிகக் குறைவான பக்கவிளைவுகள் மற்றும் மிகக் குறைவான தீவிர பக்க விளைவுகள் கொண்ட தடுப்பூசியாக கோவேக்சின் தேறி இருப்பது உண்மை. எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு மருத்துவ ஆய்வில் கோவேக்சினுக்கு பக்கவிளைவுகள் இருப்பதாக முடிவு வெளியிடப்பட்டு அது பரபரப்பாகி வருகிறது. இந்தக் கட்டுரையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் தரம் மற்றும் முறைகளை சீர்தூக்கிப் பார்ப்போம். மருத்துவ ஆய்வுகளைப் பொருத்தவரை சிறந்த தரம் கொண்டவை என்றும் ஆய்வின் முடிவு அதிக நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பது "இருபுறமும் மறைக்கப்பட்ட - ஆய்வில் கலந்து கொள்வோரிடத்தே பாரபட்சமின்றி சார்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆய்வுகளாகும். இதை DOUBLE BLINDED RANDOMISED CONTROL TRIALS என்போம். ஆய்வுகளில் பலம் குன்றியவை - OBSERVATIONAL STUDIES நோக்குற்குரிய ஆய்வுகள் இத்தகைய ஆய்வுகளில் நடக்கும் நிகழ்வுகளை நோக்க மட்டுமே முடியுமே அன்றி நிச்சயமாக எதனால் இவை நேர்ந்தன? என்பதை விளக்க இயலாது. மருத்துவ ஆய்வுகளை கூர்நோக்குவதில் பிரபலமான சொலவடை உண்டு.. OBSERVATIONS ARE NOT CAUSATIONS அதாவது ஆய்வில் நாம் கண்ட அத்தனை விசயங்களும் உண்மை ஆனால் அது எதனால் நடந்தது என்பதை கூற இயலாது என்பதால் அவற்றைக் காரணிகளாக அறிவிக்க இயலாது. இந்த ஆய்வும் ஒரு நோக்குற்குரிய ஆய்வு தான். இந்த ஆய்வு செய்யப்பட்ட விதம் :- கோவேக்சின் தடுப்பூசி பெற்றவர்கள் 926 பேரை அவர்கள் தடுப்பூசி பெற்ற நாளில் இருந்து சரியாக ஒரு வருடம் கழித்து அலைப்பேசி மூலம் அழைத்து அவர்களுக்கு நேர்ந்த அல்லது அவர்களுக்கு அப்போது இருக்கும் நோய் குறித்து கேட்டறியப்பட்டது. இதில் தோராயமாக 50% பேருக்கு அந்த வருடத்தில் சுவாசப் பாதை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. 10.5% பேருக்கு தோல் சார்ந்த நோய்கள் 10.2% பேருக்கு பொதுவான நோய்கள் 5.8% பேருக்கு தசை வலி 5.5% பேருக்கு நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் 4.6% பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு 2.7% பேருக்கு கண் சார்ந்த நோய்கள் 0.6% பேருக்கு ஹைப்போதைராய்டிசம் 0.3% பேருக்கு பக்கவாதம் 0.1% பேருக்கு குல்லியன் பாரி சிண்ட்ரோம் எனும் நரம்பு மண்டலத்தை தாக்கி பக்கவாதம்/நரம்பு தளர்ச்சி ஏற்படுத்தும் நோய் வந்ததும் கண்டறியப்பட்டது. ஆயிரம் பேரில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டது என்று பொருள். இதில் மேலே குறிப்பிட்ட நோய்கள் சாதாரணமாக தடுப்பூசி பெறாத மக்களுக்கும் அந்த வருடத்தில் ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆய்வில் CONTROL என்று கூறப்படும் "தடுப்பூசி பெறாத மக்களையும் ஒரு சேர ஆய்வுக்கு உட்படுத்தி அவர்களிடத்தில் இத்தகைய நோய்கள் அந்த வருடத்தில் எந்த விகிதத்தில் உண்டாகின என்பதையும் அறிந்து வெளியிட வேண்டும். அப்போது தான் அது தரத்தில் சிறந்த ஆய்வு. இந்த ஆய்வில் கண்ட்ரோல் ஆர்ம் என்று கூறப்படும் தடுப்பூசி பெறாதவர்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. மேலும் தடுப்பூசி பெற்ற ஒரு வருடத்திற்குள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டோரில் நான்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் மூன்று பேருக்கு நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு ஏற்கனவே இருந்துள்ளது. ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நிகழ்ந்த மரணங்களை நேரடியாக தடுப்பூசிகளினால் தான் நிகழ்ந்தன என்று அறுதியிட்டு கூற இயலாது என்று ஆய்வை செய்தவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்த ஆய்வில் நீங்களும் ஒருவராக இருந்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடம் கழித்து அழைப்பு வந்திருக்கும் "சார் இந்த ஒரு வருசத்துல உங்களுக்கு சளி இருமல் ஏற்பட்டுச்சா?" "ஆமா சார்.. ரெண்டு தடவ வந்துச்சு" "உடம்பு கை கால் வலி?" "இருந்துருக்கு சார்" உடனே ஆய்வாளர் தடுப்பூசி பெற்றவர்களில் அந்த ஒரு வருடத்தில் சளி இருமல் உடல் வலி ஏற்பட்டவர்கள் லிஸ்ட்டில் உங்களையும் சேர்த்து அதை தடுப்பூசியின் பக்கவிளைவாக இருக்கலாம் என்று வெளியிடுவார். ஆனால் உண்மையில் தடுப்பூசி பெறாத உங்களின் நண்பருக்கும் அதே வருடத்தில் நான்குமுறை காய்ச்சல் சளி உடல் வலி ஏற்பட்டிருக்கலாம் அதை ஆய்வாளர் கணக்கில் கொள்ள மாட்டார் . மீண்டும் கூறுகிறேன் எந்த ஒரு விளைவுக்கும் பக்கவிளைவுகள் உண்டு அதே போல மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் உண்டு மருந்தின் நன்மை தரும் விளைவை அதன் பக்கவிளைவுகளோடு சீர்தூக்கிப் பார்த்தே மருந்துகள் புலக்கத்துக்கு வருகின்றன. எனினும் மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருந்து அதன் மூலம் ஆதாயம் தேடி மக்களிடம் தடுப்பூசிக்கு எதிரான ஒவ்வாமையை அதிகரிப்பதில் இது போன்ற ஆய்வுகள் முன்னிலை வகிக்கின்றன. இவ்வாறாக வலு குறைவான தரத்தில் குறைந்த கண்ட்ரோல் எனப்படும் தடுப்பூசி பெறாதவர்களையும் கணக்கில் சேர்க்காத ஆய்வாளரின் சார்புத்தன்மை கேள்விக்குறியான இந்த ஆய்வின் முடிவுகளை மக்கள் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. கோவேக்சின் பெற்றுக் கொண்ட மக்கள் அச்சப்படத் தேவையில்லை. Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை https://www.facebook.com/100002195571900/posts/7906446342771806/?mibextid=xfxF2i&rdid=Jq78XUuAfp0A7sQc
  7. 18 MAY, 2024 | 04:07 PM கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் உருவாக்கியிருந்த தற்காலிக நினைவகத்தை பொலிஸார் அழித்தமை குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகத்தர் வெளிப்படுத்திய வன்முறை அவமரியாதை தற்காலிக நினைவகத்தை தண்டனை குறித்த அச்சமின்றி அவர் அழிப்பது போன்றவை கவனத்தை ஈர்த்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க அவர்களே உங்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் சட்டம் மற்றும் அரசியல் அமைப்பை மீறுகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/183882
  8. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையிலான தீர்மானம் மிக்க போட்டி தோனியின் பிரியாவிடை போட்டியாகவும் இது அமையலாம்! 18 MAY, 2024 | 03:36 PM (நெவில் அன்தனி) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான தீர்மானம் மிக்க இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (18) இரவு பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (19 புள்ளிகள்) ராஜஸ்தான் றோயல்ஸ் (16 புள்ளிகள்), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (15 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் ப்ளே ஓவ் சுற்றில் விளையாடுவதை ஏற்கனவே உறுதி செய்துகொண்டுள்ளன. இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்று தகுதியைப் பெறப் போகும் நான்காவது அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியிலேயே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி, சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான அதிசிறந்த போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்ல இன்னும் ஒரே ஒரு புள்ளியே சென்னைக்கு தேவைப்படுகிறது. இந்தப் போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நான்காவது அணியாக சென்னை நுழையும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைப் பொறுத்தமட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஒவ் வாய்ப்பை பெற முடியும். உதாரணத்திற்கு வெற்றி இலக்கு 200 ஓட்டங்களாக இருந்தால் பெங்களூர் 2 18 ஓட்டங்களால் வெற்றிபெறவேண்டும். பதிலளித்து துடுப்பெடுத்தாடினால் 18.1 ஓவர்களுக்குள் வெற்றிபெற வேண்டும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் அண்மைக் காலங்களில் நடைபெற்ற போட்டிகள் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த 5 போட்டிகளில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரே ஒரு தடவையே சென்னையை வெற்றிகொண்டுள்ளது. ஆனால், இந்தப் போட்டி நொக் அவுட்டுக்கு ஒப்பானதாக இருப்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக முயற்சிக்கும். இரண்டு அணிகளினதும் இந்த வருட ஐபிஎல் முடிவுகளைப் பார்க்கும்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் கடந்த 5 போட்டிகளில் மேடு பள்ளங்களை சந்தித்து வந்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த போட்டி முடிவுகளை வைத்து எந்த அணி வெற்றிபெறும் என்பதை அனுமானிக்க முடியாது. இன்றைய போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் சிறப்பாக விளையாடுகின்றதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியுடன் சென்னை வெளியேறினால் அப் போட்டி 43 வயதை அண்மித்துக்கொண்டிருக்கும் மஹேந்த்ர சிங் தோனிக்கு பிரியாவிடை போட்டியாக அமையும் என கருதகப்படுகிறது. ஆனால், அது நிச்சயம் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. ஒருவேளை இது அவரது கடைசியாகப் போட்டியாக இருந்தால் தோனியும் கோஹ்லியும் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடும் கடைசிப் போட்டியாகவும் இது அமையும். அணிகள் (பெரும்பாலும்) சென்னை சுப்பர் கிங்ஸ்: ருத்துராஜ் கய்க்வாட் (தலைவர்), ரச்சின் ரவிந்த்ரா, டெரில் மிச்செல் அல்லது அஜின்கியா ரஹானே, ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்.எஸ். தோனி, மிச்செல் சென்ட்னர், ஷர்துல் தாகூர், மஹீஷ் தீக்ஷன, துஷார் தேஷ்பாண்டே. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்: விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ் (தலைவர்), க்ளென் மெக்ஸ்வெல், ரஜாத் பட்டிடார், மஹிபால் லொம்ரோர், கெமரன் க்றீன், தினேஷ் கார்த்திக், யாஷ் தயாள், கரண் ஷர்மா, மொஹமத் சிராஜ், லொக்கி பேர்கசன். https://www.virakesari.lk/article/183877
  9. எலுமிச்சை, இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு! சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை இன்றைய தினம் (18) சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை எட்டியுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/301947
  10. Published By: DIGITAL DESK 3 18 MAY, 2024 | 03:26 PM பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை (18) நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அவரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நாளை ஞாயிற்றுக்கிழமை (19) காலை 9.00 மணிக்கு நுவரெலியா சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அதனை தொடர்ந்து, நாளை மாலை 5.15 மணிக்கு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறும் சத்சங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அந்நிகழ்வில், நாடளாவிய ரீதியில் வாழும் கலையின் 12 திறன் மேம்பாட்டு மையங்களை திறந்து வைக்கவுள்ளார். இந்த மையங்கள் 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன்களை வளர்த்து அவர்களை வேலைக்குத் தயார்ப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்புக்கிணங்க, திங்கட்கிழமை (20) காலை 10.00 மணிக்கு திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/183875
  11. 18 MAY, 2024 | 01:18 PM இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் தெரிவித்தார். 2009 மே 18 ஆம் திகதியன்று இலங்கையின் உள்ளகப் போர் நிறைவடைந்து, முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பெருமளவான பொது மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்த நினைவுதினத்தை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலிசெலுத்திவிட்டு அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நிலவிய ஆயுதம் தாங்கிய உள்ளகப் போரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு தவறிய இலங்கைய அதிகாரத் தரப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் இணைந்த கவனயீனமான செயற்பாட்டை இன்றைய வருடபூர்த்தி நினைவூட்டுகின்றது. 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் இறுதி நாட்களில் உயிரிழந்த பெருமளவான அப்பாவி பொது மக்கள் உயிர் நீத்த பகுதியில் இன்று நாம் மிகவும் துயரத்துடன் நிற்கின்றோம். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, யுத்தத்தின் போது தாம் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தமிழ் சமூகத்தார் முன்னெடுத்திருந்த முயற்சிகளை தடுக்கும் வகையில் கைதுகள், பலவந்தமாக தடுத்து வைப்புகள் மற்றும் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்பியிருந்தமை போன்ற நினைவுகூரலை தடுக்கும் வகையிலான சம்பவங்களை நாம் அவதானித்திருந்தோம். உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், தமது அன்புக்குரியவர்களுக்காக அமைதியான முறையில் ஒன்றுகூடி தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைக்கு அதிகாரத்தரப்பினர் மதிப்பளிக்க வேண்டும். யுத்தத்தில் இரு தரப்புகளிலிருந்தும் சர்வதேச சட்டங்களுக்கமையவும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறும் வகையிலான குற்றங்கள் புரியப்பட்டுள்ளமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் காணப்படுகின்றமையை ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் இனங் கண்டுள்ள போதிலும், அவ்வாறான பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் பக்கசார்பற்ற அல்லது சுயாதீனமான தேசிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் எஞ்சியுள்ள அங்கத்தவர்கள், தமது அன்புக்குரியவர்களை தொடர்ந்தும் தேடிய வண்ணமுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியை நீண்ட காலமாக தேடுவதை அவர்களிடமிருந்து அறிந்து கொள்வது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சிறந்த தீர்வாக அமைந்திருந்த போதிலும், கடந்த 15 வருட காலப்பகுதியில் பொறுப்புக்கூரலுக்காக உள்ளகக் கட்டமைப்பை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் வெறும் கண்துடைப்புகளாகவே அமைந்திருந்தன. இந்த வாரத்தின் முற்பகுதியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், இலங்கையின் பொறுப்புக்கூரல் செயற்பாடுகளில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக, இந்த விடயம் தொடர்பான கறைகள் மாறாமல் காணப்படுவதை வலியுறுத்தியிருந்தது. உண்மை, நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்காக இன்றும் ஆயிரக் கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் காத்திருக்கின்றனர். இன்று முள்ளிவாய்க்காலில் நாம் அவர்களுடன் உறுதியாக கைகோர்த்துள்ளோம் என்றார். இதேவேளை, போரின் இறுதிக் கட்டத்தின் போது குறிப்பாக 2009 மே மாத காலப்பகுதியில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதநேய சட்டங்களை மீறல்கள் போன்றன பெருமளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக போர் நடைபெற்ற பகுதிகளில் சுமார் இடம்பெயர்ந்த சுமார் 300,000 பொது மக்கள் மனிதக் கேடயங்களாக அடைபட்டிருந்தனர். இலங்கையின் வட மாகாணத்தின், முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறிய கிராமமான முள்ளிவாய்க்கால் பகுதியில், இலங்கை படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போர் நடந்ததுடன், ஐக்கிய நாடுகளின் மதிப்பீடுகளின் பிரகாரம் சுமார் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வில், போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடி, போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்வதுடன், நீதியையும் பொறுப்புக்கூரலையும் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) இந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183864
  12. 18 MAY, 2024 | 01:34 PM (நா.தனுஜா) மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது. மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது. அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் எனவும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த போராட்டங்களின் தளமாக அமைந்திருந்த காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் 2022 மே 18 ஆம் திகதியன்று எவ்வித இன, மதபேதமுமின்றி சகலரும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுட்டித்து போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். அதன்படி, கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், சந்தியா எக்னெலிகொட, ராஜ்குமார் ரஜீவ்காந்த், கௌதமன், ரத்னவேல், நுவன் போபகே உள்ளிட்ட பலரும், கத்தோலிக்க மதகுருமாரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் 'சிங்கள ராவய' அமைப்பினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் பிற தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி, நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையடுத்து 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர். இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து நிகழ்வை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறும், தாமதமேற்படின் அதன் பின்னர் நிகழக்கூடியவற்றுக்குத் தம்மால் பொறுப்புக்கூறமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணி ரத்னவேலிடம் எச்சரித்தார். இக்குழப்பங்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்தியா எக்னெலிகொட, மிலானி மற்றும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஆகியோர் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரவேண்டியதன் தேவைப்பாட்டையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினர். அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதற்கும், உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மலர்களை கடலில் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாக வருகைதந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான மிராக் ரஹீம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தண்டவாளத்துக்கு அண்மையிலேயே பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர். நிகழ்வில் குழப்பம் விளைவிப்பதற்கென குழுவொன்று வருகைதந்ததாகவும், எனவே தாமதமாக வந்த செயற்பாட்டாளர்களை தாம் அறிந்திருக்காததன் காரணமாக அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் பொலிஸார் விளக்கமளித்தனர். பின்னர் அனைவரையும் வெகுவிரைவாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/183867
  13. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு 18 MAY, 2024 | 03:30 PM முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்டு, தமிழினப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் (18) பதினைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் தொடர்பான நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது. அடுத்து, மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த பெண்ணொருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அவரை தொடர்ந்து, ஏனையவர்களும் தங்கள் உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர், தொடர்ச்சியாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நினைவேந்தலின் முக்கிய விடயம், முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் முற்றத்துக்குச் சென்ற சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். https://www.virakesari.lk/article/183876
  14. யாழில் பல்வேறு தரப்பினரை சந்தித்தார் அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 18 MAY, 2024 | 01:02 PM யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். அதனொரு அங்கமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நயினாதீவு நாகவிகாரைக்கு 16 ஆம் திகதி சென்ற இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், நெடுந்தீவில் கடற்றொழில் அமைப்புக்களையும் சந்தித்து பேசினார். https://www.virakesari.lk/article/183860
  15. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அஞ்சலி 18 MAY, 2024 | 01:41 PM முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலாமார்ட் (Agnès Callamard) யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம், இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருப்பதாக உணர்வு மேலிட தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183866
  16. Published By: RAJEEBAN 18 MAY, 2024 | 08:35 AM ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183839
  17. டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
  18. 18 MAY, 2024 | 08:44 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183837
  19. வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் என நீதிமன்றில் தெரிவிப்பு Published By: VISHNU 18 MAY, 2024 | 03:26 AM வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார். இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார். இவ் வழக்கு அடுத்த தவணைக்காக யூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183835
  20. வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று(17) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301897
  21. இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம் பட மூலாதாரம்,KUMANAN| X 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் மே 18ஆம் தேதி, இலங்கைப் போரில் இறந்த தமிழர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், சமீப ஆண்டுகளாகவே இந்த நிகழ்வுகளை நடத்துவதில் பல தரப்பினரிடம் இருந்து, பல்வேறு விதமான தடைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வாரம் வடகிழக்குப் பகுதி முழுவதிலும் பல இடங்களில், “முள்ளிவாய்க்கால் கஞ்சி” எனப்படும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், கடந்த இரு தினங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரு நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் தடை போட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவு சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளது. மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னில (22), கமலேஸ்வரன் விஜிதா (40), செல்வ வினோத் சுஜானி (40), நவரத்ன ராசா ஹரிஹர குமார் (43) ஆகிய நால்வரும் மே 27ஆம் தேதி வரை மூதூர் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் மே 12ஆம் தேதி திரிகோணமலை சம்பூரில் உள்ள சேனையூர் பிள்ளையார் கோவில் முன்பு, உள்ளுர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அங்கு வந்த சம்பூர் காவல்துறையினர், வெள்ளமுள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடல், உணவு வழங்குதல் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடை ஆணையை நால்வரிடமும் வழங்க முற்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் அதை வாங்க மறுத்துள்ளனர். அந்தத் தடை உத்தரவில் வெள்ளமுள்ளிவாய்க்காலில் எந்தவிதமான பள்ளிகள், கோவில்கள் அருகில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தவும், வாகன அணிவகுப்புகளை நடத்தவும், பொது சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையிலான கூட்டத்தைக் கூட்டவும், உணவுப் பொருட்கள் வழங்கவும் தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை, மகாவீரர் சங்கத்தின் தலைவர் கந்தையா காண்டீபன், துணைத் தலைவர் சாந்தலிங்கம் கோபிராசா, பொருளாளர் நவரத்ன ராசா ஹரிஹர குமார், செயலாளர் செல்வ வினோத் சுஜானி, இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு 14 நாட்களுக்குப் பிறப்பித்துள்ளது. விடுதலை புலிகளுக்கான கொண்டாட்டமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மே 14ஆம் தேதி காவல்துறையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல காவல் வட்டாரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்வதே இக்குழுவின் நோக்கம் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, திரிகோணமலை சம்பூர் காவல் பிரிவில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்டாடுவது சட்டவிரோதமான செயல் என்று, சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி மூதூர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார். 'கஞ்சி விநியோகித்ததால் கைது செய்யப்படவில்லை' படக்குறிப்பு,சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்குத் தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் நால்வருக்கும் ஒரே மாதிரியான நீதிமன்ற உத்தரவை காவல்துறை பெற்றுள்ளது. சம்பூர் காவல் நிலையத்தின் காவலர், கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று நீதிமன்ற தடை உத்தரவை அந்தக் குழுவிடம் வழங்கியதாகவும், ஆனால் அதை ஏற்க மாட்டோம் என்று கூறி அவர்கள் நிகழ்வை தொடர்ந்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கைதாகியுள்ள நால்வரில் ஒருவர் இந்நிகழ்வில் ஈடுபடாதவர், அவரும் இதில் பங்கேற்று கைதாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால், காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் வேறு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறிய வழக்கில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக அவரது மகள் வீட்டுக்கு காவல்துறை சென்றபோது அவரின் மகள் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொள்வதாக காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனே காவலர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தி அந்தப் பெண்ணையும், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் காவலர்களை நோக்கி கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் பெண் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் என்ன? மேற்கண்ட சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி, நீதிமன்ற உத்தரவை மீறுதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், காரணத்துடன் அல்லது விருப்பத்துடன் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நால்வரும் 12.05.2019 அன்று சம்பூர் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மூதூர் கௌரவ நீதவான் நீதிமன்றில் 13.05.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 27ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், திரிகோணமலை துறைமுகம் மற்றும் உப்புவெளி காவல் பிரிவுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அந்த காவல் நிலையங்களின் காவலர்கள் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'வெசாக் உணவு தானத்தை தடுக்குமா காவல்துறை?' படக்குறிப்பு,ஈழப்போர் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் உணவாகச் சமைத்து உண்ட கஞ்சியே அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் சமைக்கப்படுகிறது. பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய மனித உரிமை சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான அம்பிகா சத்குணநாதன், “மே மாதத்தில் தமிழ் மக்கள் போரில் இறந்த, குறிப்பாக இறுதிக்கட்டத்தில் இறந்த அனைவரையும் நினைவு கூர்வார்கள்” என்று கூறினார். கஞ்சி விநியோகத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த மாதம் அவர்கள் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூர்கின்றனர். ஆனால், அரசாங்கம் அவர்களைத் தடுக்க முயல்கிறது" என்றார். “ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நவம்பர் மாதம் மகாவீரர் தினத்தில் நினைவுகூரப்படுவதாகவும், போரில் உயிரிழந்த அனைவரும் மே மாதத்தில் நினைவுகூரப்படுவதாகவும்” அவர் தெரிவித்தார். மேலும், கஞ்சி வழங்கும் நிகழ்வுகளைத் தடை செய்ய காவல்துறை கூறும் காரணங்களில் சுகாதாரமும் ஒன்று. இதே வெசாக் தான நிகழ்வுகளை அவர்களால் நிறுத்த முடியுமா என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார். “இந்த மாதத் தொடக்கத்தில் மே தினப் பேரணிகள் நடந்தன. அப்போதும் மக்கள் உணவைப் பகிர்ந்து கொண்டனர். அங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அடுத்த வாரம் வெசாக் பண்டிகை நடக்கவுள்ளது. அதிலும் உணவு தானம் நடைபெறும். அதைத் தடை செய்ய காவல்துறை நீதிமன்ற உத்தரவைப் பெறுமா?" 'எல்லாவற்றையும் மறப்பதா நல்லிணக்கம்?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போரில் இறந்தவர்களின் சிதிலமடைந்த கல்லறைகள் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை மீறப்படுவது நாட்டின் நல்லிணக்கத்திற்குத் தடையாக உள்ளதாக சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் வலியுறுத்துகிறார். நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள பார்வை என்ன என்பதை அவர் விளக்கினார். “நல்லிணக்கத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை அறிய உரிமை இல்லை. இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்த உரிமை இல்லை. நமக்கு நடந்த அனைத்தையும் மறந்துவிடுவது, போர் குறித்தான அரசுத் தரப்பு வாதம் மற்றும் போரினால் உண்டான பின்விளைவுகளை எதிர்க்காமல் இருப்பது ஆகியவைதான் நல்லிணக்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” மேலும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை அறியவும், நீதியைப் பெறவும், நினைவேந்தல் உரிமையும், இழப்புகளுக்கு நஷ்டஈடு பெறும் உரிமையும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மனித உரிமை ஆணையத்தில் புகார் படக்குறிப்பு,போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கான உரிமையை மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள போதிலும் காவல்துறை நீதிமன்ற உதவியுடன் அதைத் தடுக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ள இளம் ஊடகவியலாளர் அமைப்பு, “மனித உரிமைகள் ஆணைக்குழு ‘நினைவேந்தல் உரிமையை’ 2016இல் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டு காவல்துறையினர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக” தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டப்பிரிவின் (ஐசிசிபிஆர்) கீழ் அவர்கள் குற்றம் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறி அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் நீதி, நல்லிணக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சம உரிமைகளை மட்டும் அரசாங்கம் மதிக்கவில்லை என்பதையே காவல்துறையினரின் இந்தத் தன்னார்வப் பணி காட்டுவதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தனது புகாரில் தெரிவித்துள்ளார். மற்றொரு தடை உத்தரவு படக்குறிப்பு,இந்த ஆண்டு இதுவரை இரண்டு இடங்களில் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதற்கிடையில், மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கல்முனை பாண்டிரிப்பு அரசடி அம்மன் கோவிலுக்கு அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். கல்முனை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நோக்கில் இவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்வது மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான செயல் என்பதாலேயே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அமுலுக்கு வரும் இந்த நீதிமன்றத் தடை உத்தரவு தமிழ் தேசிய ஜனதா பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தனின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் என்ன? படக்குறிப்பு,மக்களிடம் ஒவ்வொரு பொருளாக வசூலித்து சமைக்கப்படும் உணவே இந்தக் கஞ்சி. இது கடைசிகட்ட போரில் உயிரிழந்த மக்களின் நினைவாகக் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்த நிலையில் அந்தப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் பல வார காலமாக உணவு கிடைப்பதில் சிரமங்களை எதிகொண்டனர். அந்தச் சூழலில் தமிழர்கள் அவர்களுக்குக் கிடைத்த அரிசியைக் கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியைப் போக்கிக் கொண்டனர். எனவே அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் 18 வரை வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படும் அரிசியில் இருந்து கஞ்சி சமைத்து தானம் செய்வார்கள். மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் பேரணியுடன் இந்த நினைவேந்தல் வாரம் நிறைவடைகிறது. https://www.bbc.com/tamil/articles/czrxjm718j2o
  22. லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன Published By: VISHNU 18 MAY, 2024 | 12:57 AM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது. இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது. அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார். இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை. மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில் அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது. மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண் https://www.virakesari.lk/article/183821
  23. 18 MAY, 2024 | 07:28 AM முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183838
  24. 17 MAY, 2024 | 09:53 PM (நா.தனுஜா) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளைக் கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கூட்டாக வலியுறுத்தியிருக்கும் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள், உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது என பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் நேர்மைத்தன்மை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சுவீடன், பின்லாந்து, அவுஸ்திரேலியா, நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளை தளமாகக் கொண்டு இயங்கிவரும் மனித உரிமைகள் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தமது கையெழுத்துடன் கூடிய கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் கலாநிதி ஷரிகா திரணகம, பிரிட்டன் பர்மிங்ஹாம் சட்டக் கல்லூரியின் சர்வதேச சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் மொஹமட் ஷஹாபுதீன், பிரிட்டன் ஒக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஃபரா மிலர், லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிரன் க்ரெவல், பிரிட்டன் பாத் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஒலிவர் வோல்ற்றன், இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைசார் நிபுணர்களான கலாநிதி கேப்ரியேல் டியெட்ரிச், கலாநிதி ரோஹினி ஹென்ஸ்மன், கலாநிதி குர்மீற் கௌர், கலாநிதி சுஜாதா பட்டேல் உள்ளடங்கலாக 72 பேரின் பெயர்கள் இதில் உள்ளடங்குகின்றன. அதன்படி, மேற்குறிப்பிட்ட சட்ட வல்லுநர்கள், துறைசார் நிபுணர்களின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு: உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தற்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். இந்த உத்தேச ஆணைக்குழு தொடர்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி போரின் மிகையான தாக்கத்துக்குள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினரும், சிவில் சமூக அமைப்புக்களும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் பின்னணியிலேயே நாம் எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகின்றோம். குறிப்பாக, ஆணைக்குழுவுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கி சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதி இடைக்கால செயலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன. சுயாதீன ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கையின்மை, கடந்த காலங்களில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் நீதியை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்துள்ளமை, தற்போதைய தலைமைத்துவத்தின் கடந்தகால செயற்பாடுகள், காணாமல்போனோர் பற்றி அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்களின் தோல்வி, அரச மீறல்கள் தொடர்ந்து மறுதலிக்கப்படல் போன்ற விடயங்கள் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. கடந்தகால மீறல்கள் தொடர்பான உண்மைகளை அறிந்துகொள்வதற்குத் தனிநபர்கள் கொண்டிருக்கும் உரிமையானது உடன்பாட்டு அடிப்படையிலான ஐ.நா அமைப்புக்கள், ஐ.நா விசேட அறிக்கையிடல்கள், பிராந்திய நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச, உள்ளக நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. போரின் பின்னரான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது மிக ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் சமூகங்களை மீள் இணைப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான தீர்வினை வழங்குவதற்கும் உதவக்கூடும். இருப்பினும் அப்பொறிமுறையானது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதும், அனைவரையும் உள்ளடக்கியதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை வலுவூட்டக்கூடியதும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கி முன்னகர்த்திச்செல்லக்கூடியதுமான முறையில் அமையவேண்டியது மிக அவசியமாகும். அத்தோடு குறித்த நாடு உண்மையைக் கண்டறியும் பொறிமுறைக்குத் தயார் நிலையில் இருக்கவேண்டும். அதன்படி உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முற்படும் அரசாங்கம் முதலில் கடந்தகால மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுப்பதற்குத் தாம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பை வெளிக்காட்டவேண்டும். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்டோர் சார்ந்த தமது அரசியல் ரீதியான தன்முனைப்பை வெளிக்காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் தற்போதைய அரசாங்கத்துக்கு இருந்தபோதிலும், அதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. அடுத்ததாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது பரந்துபட்ட அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக மனித உரிமை மீறல்கள், தொடர் கண்காணிப்பு, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான ஒடுக்குமுறைகள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடியின் பின்னர் மக்களின் பொருளாதார மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான உத்தரவாதத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமை போன்ற விடயங்களுக்காகத் தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பின்னணியிலேயே உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாதிக்கப்பட்டோரும், சாட்சியாளர்களும் உத்தேச பொறிமுறை மீது நம்பிக்கை கொண்டிருப்பதுடன், அதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இணங்கவேண்டும். ஆனால் இலங்கையில் நிலைமாறுகால நீதி உறுதிப்படுத்தப்படவேண்டிய குற்றங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இப்பொறிமுறையை வலுவாக எதிர்ப்பது, இப்பொறிமுறை ஸ்தாபிக்கப்படக்கூடாது என நாம் வலியுறுத்துவதற்கான காரணமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் முற்றுமுழுதான உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உண்மை மற்றும் நீதியை அடைந்துகொள்ளமுடியாது எனவும், ஆகவே உள்ளக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சர்வதேசத்தின் பங்கேற்பை உறுதிப்படுத்துவது அவசியம் எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு செவிசாய்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையுடன் இணைந்து பணியாற்றுமாறும் அரசாங்கத்தைக் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183814

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.