Everything posted by ஏராளன்
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
ஈஸ்டர் தாக்குதலை செய்தது யார் என 3 வாரங்களுக்கு முன்னரே தகவல் கிடைத்தது! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாக செய்தது யார் என்பது தமக்கு தெரியும் என தாம் கூறியது, மூன்று வாரங்களுக்கு முன்னர் கிடைத்த தகவலுக்கமையவே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (23) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களை தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் இரகசிய சாட்சி வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பகிரங்கமாக நீதிமன்றத்தில் சாட்சி வழங்கினால் தனது உயிருக்கும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கும் அது அச்சுறுத்தலாக அமையும். இந்த தகவலை அரசியலுக்காக அல்லாமல், மிகவும் நேர்மையுடன் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296876
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார். தண்டனை சட்டக்கோவைக்கு அமைவாக, 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும். எனினும், 14 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட சிறுமிகள் தங்களின் விருப்பத்துடன் தொடர்புகளை பேணிய தகவல்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க அமைச்சுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், நீதிபதியினால் தண்டணை உத்தரவை பிறப்பிக்கும் வகையில், தண்டனை கோவையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை இரத்து செய்யுமாறு சிவில் அமைப்புகளும் மகளிர் அமைப்புகள் சிலவும் கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அத்தகைய தரப்பினருக்கு மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. கலந்துரையாடலுக்கு பிறகு திருத்தம் அவசியமா, எவ்வாறான திருத்தம் மெற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296900
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள் - பிபிசி கள ஆய்வு
Parandur Issue: எங்க நிலத்தில் Airport எதுக்கு? விடாமல் போராடும் விவசாயிகள் Parandur Land Issue Ground Report: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள் - பிபிசி கள ஆய்வு சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர்.
-
அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் இந்தியா - இஸ்ரோ தயாரித்துள்ள 'புஷ்பக்' ராக்கெட்டின் தனிச் சிறப்பு என்ன?
பட மூலாதாரம்,ISRO/X கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மார்ச் 2024, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டான ‘புஷ்பக்’-ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நேற்று (மார்ச் 22) காலை 7 மணிக்கு கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட சோதனையில் ஆளில்லா புஷ்பக் ராக்கெட் தானியங்கி மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் என்ன? இந்த திட்டத்தின் வெற்றியால் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? உலக நாடுகளுக்கு இடையேயான விண்வெளிப் போட்டியில் ‘புஷ்பக்’ சோதனையின் முக்கியத்துவம் என்ன? பட மூலாதாரம்,ISRO/X இஸ்ரோ அறிக்கை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகாவின் சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் நேற்று காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட ‘புஷ்பக்’ மூன்றாம் கட்ட பரிசோதனையின் மூலம், மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இஸ்ரோ. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வானில் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் விடுவிக்கப்பட்ட ஆளில்லா புஷ்பக் ராக்கெட், அனைத்து தரவுகளையும் தானியங்கி முறையில் ஆராய்ந்து, சரியான வேகத்தில் குறித்த இடத்தில் தரையிறங்கியது. இதற்கு முந்தைய, இரண்டாம் கட்ட சோதனையில் பயன்படுத்திய அதே ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்தி இந்த வெற்றியை பெற்றுள்ளது இஸ்ரோ. அதிக சவால்கள் நிறைந்த இந்த திட்டத்தை எந்தக் குறையும் இல்லாமல் செயல்படுத்திய விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,ISRO.GOV.IN படக்குறிப்பு, வானில் 4.5 கிலோமீட்டர் உயரத்தில் விடுவிக்கப்பட்ட ஆளில்லா புஷ்பக் ராக்கெட். முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் என்ன? மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் எவ்வாறு செயல்படுகின்றன, புஷ்பக் திட்டத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து அறிந்துகொள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையிடம் பேசினோம். “விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் பெரும்பாலும் திரும்பி வருவதில்லை. அவை பல பாகங்களாக பிரிந்து விண்வெளிக் குப்பைகளாக மாறிவிடுகின்றன அல்லது செயற்கைக்கோள்களை அதன் வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பிறகு கீழே விழும் ராக்கெட்டுள், வெப்ப உராய்வின் காரணமாக பூமியை அடைவதற்கு முன்பே எரிந்துவிடும். இதனால் ஒருபக்கம் விண்வெளியில் குப்பைகள் குவிகின்றன, மறுபக்கம் விண்வெளி பயணத்திற்கு அதிகம் செலவாகிறது. ஒருவேளை நம் பூமியில் பயன்படுத்தும் விமானங்கள் மூலம் விண்வெளிக்கு பயணித்து அதே விமானத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்ப முடிந்தால், விண்வெளிப் பயணம் இன்னும் எளிதாகும் அல்லவா. அத்தகைய விண்வெளி விமானம் போன்ற அமைப்பு தான் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டான புஷ்பக்” என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. “இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ராக்கெட்டின் சில பாகங்களை மட்டும் மீண்டும் பயன்படுத்தலாம். இதற்கு உதாரணமாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ஃபால்கான் ஹெவி (Falcon heavy) என்ற ராக்கெட்டை சொல்லலாம். இந்த வகையான ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திய பிறகு, அவற்றின் குறிப்பிட்ட சில பாகங்கள் மட்டும் பூமிக்கு வந்துவிடும். மற்றொரு வகையில் முழு ராக்கெட்டையும் மீண்டும் பயன்படுத்தலாம். இந்தியாவின் புஷ்பக், ஒரு முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்” என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. “மீண்டும் பயன்படுத்தலாம் என்பதைத் தாண்டி, விண்வெளி பயணத்திற்கான செலவுகளையும் நேரத்தையும் இது வெகுவாக குறைக்கும். நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்தியா அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அந்த இலக்கை அடைவதில் இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியா “பல நாடுகள் பூமியிலிருந்து அனுப்பும் ராக்கெட்டுகளின் பாகங்கள் விண்வெளிக் குப்பைகளாக மிதக்கின்றன. அவை சில சமயங்களில் செயற்கைக்கோள்கள் மீது மோதிய சம்பவங்களும் நடந்துள்ளன. அவை விண்வெளியில் ஆய்வு செய்யும் வீரர்கள் மீது மோதும் வாய்ப்பும் உள்ளது. அதுவே முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் என்றால் அவை அப்படியே பூமிக்கு திரும்பிவிடும். இதன் மூலமாக விண்வெளிக் குப்பைகளை நாம் வெகுவாக குறைக்கலாம்” என்று கூறினார் மயில்சாமி அண்ணாதுரை. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருகின்றன. சர்வதேச விண்வெளித் துறையில் இந்த மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது இந்தியா. “விண்கலங்கள் மூலம் விண்வெளியிலிருந்து வளிமண்டலத்திற்குள் நுழைந்து பின் பூமியில் தரையிறங்கும் போது, வெப்ப உராய்வு அதிகமாக இருக்கும். அதை சமாளிக்கும் விதத்தில் சில விண்கலங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் கூட, அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியாது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவை கடலில் தரையிறக்கப்படும். ஆனால் புஷ்பக் ஏவுகணையை சாதாரண விமானங்களைப் போல தரையிறக்க முடியும்” என்று கூறுகிறார் மயில்சாமி அண்ணாதுரை. மேலும், “சந்திராயன் 1 மற்றும் 2 திட்டங்களின் வெற்றியால், நிலவின் மீது மீண்டும் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கோ அல்லது வேறு கிரகங்களுக்கோ நாம் மனிதர்களை குடியமர்த்தும் நிலை வந்தால், புஷ்பக் ராக்கெட்டால் விண்வெளிப் போட்டியில் இந்தியா முன்னிலை பெறும். இந்திய விண்வெளி மையத்தை அமைப்பதிலும் புஷ்பக் முக்கிய பங்கு வகிக்கும். அடுத்தடுத்த வருடங்களில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஆகிய இடங்களில் புஷ்பக் ராக்கெட் சோதனைகள் நடத்தப்படும்” என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். படக்குறிப்பு, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை. தானியங்கி முறையில் செயல்படும் புஷ்பக் 2016இல் முதன்முதலாக நடத்தப்பட்ட புஷ்பக் சோதனையில், ஸ்ரீஹரிகோட்டா அருகே கடலில் ராக்கெட்டை வெற்றிகரமாக இறக்கியது இஸ்ரோ. இப்போது கர்நாடகாவின் சித்ரதுர்காவில், தானியங்கி முறையில் நிலத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது புஷ்பக். இதன் மூலம் விண்வெளிப் போட்டியில் இந்தியா ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பாண்டியன். “முழுக்கமுழுக்க ஆளில்லாமல், தானியங்கி முறையிலே அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஓடுபாதையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில், 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக விடுவிக்கப்பட்ட புஷ்பக் ராக்கெட் சரியான வேகத்தில் துல்லியமாகத் தரையிறங்கியது. மேலும் குறித்த நேரத்தில் பாராசூட் விரிந்ததால் ராக்கெட்டின் வேகம் குறைந்து, குறிக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட்டது. இது இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்பாக, கடந்த வருடம் இதே இடத்தில் தான் இரண்டாவது கட்ட சோதனை மேற்கொள்ளப்பட்டது, இப்போது அதை விட மேம்பட்ட தொழில்நுட்பங்களுடனும் புதிய சவால்களுடனும் மீண்டும் சோதனை செய்துள்ளார்கள். புஷ்பக் திட்டம் முழுமையடைய இன்னும் சில ஆண்டுகளாகும்” என்று கூறினார் பாண்டியன். பட மூலாதாரம்,ISRO/X விண்வெளியில் மருந்து உற்பத்தி புஷ்பக் திட்டத்தின் அடுத்த கட்ட சோதனைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் பாண்டியன், “வானில் இதேபோன்ற சோதனைகள் வெவ்வேறு உயரங்களில் இருந்து நடத்தப்படும். பின்னர் புஷ்பக்கை விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி சோதனை செய்வார்கள். அது பூமியை சுற்றிவந்து தகவல்களை சேகரித்து, மீண்டும் பத்திரமாக தரையிறங்குகிறதா என பார்ப்பார்கள். அதுவே இறுதி கட்டமாக இருக்கும்” என்று கூறினார். எதிர்காலத்தில் விண்வெளியில் புதிய மருந்துகளை தயாரிக்க, உற்பத்தி செய்ய புஷ்பக் போன்ற ஒரு மறுபயன்பாட்டு ராக்கெட் உதவிகரமாக இருக்கும் என்கிறார் பாண்டியன். “விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், சில ஆபத்தான உயிர் கொல்லி நோய்களுக்கான புதிய மருந்துகளை அங்கு வைத்து உற்பத்தி செய்ய முடியும். அதை பத்திரமாக பூமிக்கு கொண்டு வர புஷ்பக் உதவும். எதிர்காலத்தில் பிற கிரகங்களுக்கு மனிதர்களை கொண்டு செல்லவும் புஷ்பக் உதவும். அடுத்த வருடத்தின் இறுதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த திட்டம் நிறைவேறிய பிறகு, புஷ்பக் மறுபயன்பாட்டு ராக்கெட் குறித்த அடுத்தக் கட்ட சோதனைகள் வேகமாக நடைபெறும்” என்று கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் பாண்டியன். https://www.bbc.com/tamil/articles/c2q7geedw94o இராவணனிடம் காப்புரிமை வாங்கிவிட்டார்களோ?!
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
Moscow Attack: முன்பே எச்சரித்த America; கண்மூடித்தனமாக Gunfire நடத்திய கும்பல். எகிறும் Death toll ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் புகுந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய பயங்கர தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
இலங்கையில் ராஜபக்ஸவை விரட்டியடித்தது யார்? தமிழர்கள், வெளிநாட்டு சக்தி பற்றி அவர் கூறுவது என்ன?
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகமொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த புத்தகத்தின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஸ, பௌத்த மேலாதிக்கத்தை நியாயப்படுத்தி, ஏனைய மதத்தவர்களை சூழ்ச்சிக்குள் உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற 192 பக்கங்களை கொண்ட புத்தகமொன்றை கோட்டாபய ராஜபக்ஸ அண்மையில் வெளியிட்டார். தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் காணப்பட்ட பொருளாதார நிலைமை முதல் தான் பதவியை விட்டு வெளியேற்றப்பட்ட காலம் வரையான விடயங்களை உள்ளடக்கும் வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பௌத்த மதத்தை தவிர்த்து, ஏனைய அனைத்து தரப்பினரும் தன்னை பதவியிலிருந்து வெளியேற்றும் சூழ்ச்சியில் உள்ளடங்கியுள்ளதாக பிரதிபலிக்கும் வகையில் இந்த புத்தகத்தின் உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன. தமிழர்கள் குற்றம்சாட்டும் யுத்தக் குற்றங்கள், இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் கோவிட் மரணங்ளை அடக்கம் செய்ய நிராகரித்த விடயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஜெனீவா யோசனை தொடர்பான விவகாரம் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த அரசாங்கம், ஜெனீவா மனித உரிமை பேரவையின் 30/1 யோசனைக்கு அனுசரணை வழங்கியமையை கோட்டாபய ராஜபக்ஸ இந்த புத்தகத்தின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியமையானது, சிங்கள மக்களை இலக்காக கொண்டு செய்த ஒரு விடயம் என பலரும் உற்று நோக்கியதாக அவர் தனது புத்தகத்தின் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஜெனீவா அறிக்கையின் பிரகாரம், இலங்கை ராணுவம் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டது என்பதை அப்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக இதில் கூறப்பட்டுள்ளது. ''இலங்கை ராணுவம் மீதான யுத்தக் குற்றங்களை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள் அடங்கிய நீதிமன்ற கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கும், கடந்த காலங்கள் குறித்து ஆராய்வதற்கு மேலும் பல நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கும், அனைத்து பொறிமுறைகளுக்கும் சர்வதேச தரப்பிடமிருந்து நிதியுதவி, தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை வழங்குவதற்கும் 2015ஆம் ஆண்டு அரசாங்கம் 30/1 யோசனையின் ஊடாக இணக்கம் தெரிவித்தது" என அவர் கூறுகின்றார். ''உத்தேச நீதிமன்ற கட்டமைப்பின் முன்னிலைக்கு, ஆயுதம் ஏந்திய ராணுவ உறுப்பினர் ஒருவரை ஆஜர்படுத்துவதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல் அல்லது யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் ராணுவ அதிகாரிகளை உள்ளக நிர்வாக செயற்பாடுகளின் ஊடாக சேவையிலிருந்து நீக்குவதற்கு ஜெனீவாவில் 2015ஆம் அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது" என கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசிய நலனுக்கு முரணான வகையில் பல விடயங்கள் ஜெனீவா யோசனையில் உள்ளடங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான விடயங்களினால் 2015-2019 அரசாங்கம் தேசிய விரோத மற்றும் சிங்கள விரோத அரசாங்கம் என்ற விதத்தில் மக்கள் நோக்கினார்கள் என கோட்டாபய ராஜபக்ஸ தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2015 - 2019 அரசாங்கத்தை பாதுகாத்த உள்நாட்டு, வெளிநாட்டு சக்தி? 2015 - 2019ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்ட வெளிநாட்டு சக்திகள், 2022ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றும் போராட்டத்தை செயற்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ''2018ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் விரிசல் ஏற்பட்ட போது, அந்த அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக செயற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள், 2022ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றும் போராட்டத்தை முன்னெடுத்ததாக அவர் தனது புத்தகத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்கள் என்ற விதத்தில் தமது நாட்டிற்குள் காணப்படுகின்ற இடம் தமக்கு இல்லாது போயுள்ளது என்ற உணர்வினாலேயே 2019ஆம் ஆண்டு தனக்கு வாக்களிக்க மக்கள் ஒன்று திரண்டதாகவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES கோவிட் காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்தமை கோவிட் காலப் பகுதியில் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள நேர்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது புத்தகத்தில் இணைத் தலைப்பாக இந்த விடயத்தை அவர் தெளிவூட்டியுள்ளார். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டதுடன், 2020 முதல் 2021 செப்டம்பர் வரை குறைந்தளவான சுற்றுலா பயணிகளே வருகைத் தந்ததாகவும் அவர் கூறுகின்றார். 2020ஆம் ஆண்டு 7,104 டாலர் அந்நிய செலாவணியே நாட்டிற்கு கிடைத்துள்ளது. 2021ஆம் ஆண்டு 5,491 டாலர் அந்நிய செலாவணி நாட்டிற்கு கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு 3,789 டாலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், வாகனம் உள்ளிட்ட இறக்குமதிகளை தடை செய்ய நேர்ந்ததாகவும், வெளிநாட்டிற்கு அனுப்பும் பணத்தை 5000 டாலர் வரை மட்டுப்படுத்த நேர்ந்ததாகவும், வெளிநாட்டு கடன் செலுத்துவதை நிறுத்த நேர்ந்ததாகவும் அவர் கூறுகின்றார். கோவிட் பெருந்தொற்று தனது ஆட்சி காலத்தில் பொருளாதார வீழ்ச்சிக்கு பாரிய தாக்கத்தை செலுத்தியது என அவர் குறிப்பிடுகின்றார். இதனால், வாழ்வாதாரம் ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியமை, மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கியமை உள்ளிட்ட விடயங்களை அவர் இந்த புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட் காலப் பகுதியில் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கமாக கோட்டாபய ராஜபக்ஸ இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். அத்துடன், கோவிட் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்வதற்காக உடனடி தடுப்பூசி திட்டத்தை செயற்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கோவிட் தொற்று காணப்பட்ட காலப் பகுதியில் நடாத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில், தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தன்வசப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு, வரிசை மற்றும் வன்முறை கோவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியினால், 2022 மார்ச் மாதம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், மின்தடையை ஏற்படுத்த வேண்டிய நிலைமையும் காணப்பட்டது என அவர் குறிப்பிடுகின்றார். 2022 மார்ச் மாதம் 28ஆம் தேதி 7 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டதுடன், மார்ச் 31ஆம் தேதி அந்த மின்வெட்டு நேரம் 12 மணிநேரம் வரை அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, 2022 மார்ச் 31ஆம் தேதி தனது மிரிஹான வீட்டு வளாகம் யுத்த களமாக மாறியது என கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார். முதலில் சிறு குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், ஒரு தொலைக்காட்சி மற்றும் சமூகவலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, அது பாரிய போராட்டமாக மாற்றம் பெற்றது என அவர் குறிப்பிடுகின்றார். போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக வருகை தந்த பாதுகாப்பு பிரிவினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடாத்தியதை அடுத்து, போராட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பிரயோகத்தை பாதுகாப்பு பிரிவினர் நடாத்தியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக பெருமளவான வழக்கறிஞர்கள் முன்னிலையானதாக கூறிய அவர், தான் பதவியிலிருந்து விலகும் வரை அந்த செயற்பாடு தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, 2022 ஏப்ரல் 09ஆம் தேதி காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். காலி முகத்திடல் போராட்டத்தில் சிறுபான்மையினர் ''விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான யுத்தத்தை நாம் வென்ற தருணத்திலிருந்து, நான் தமிழ் மக்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்டேன். ஒன்றிணைந்த நாட்டிற்கு பதிலாக ஐக்கிய இலங்கையை கோரி நின்ற புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரல் இந்த போராட்டத்தில் தெளிவாகியது. சமஷ்டி அரசாங்கமொன்றை தமிழ் கட்சிகள் நீண்டகாலமாக கோரியதுடன், காலி முகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் மீது மின்விளக்குகளின் ஊடாக அந்த கோரிக்கை காட்சிப்படுத்தப்பட்டது." என அவர் குறிப்பிடுகின்றார். ''2012ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பு உருவானதுடன், அந்த அமைப்புடன் எனக்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில், நான் முஸ்லிம்களின் எதிரி என்ற கருத்து வெளியானது. கோவிட் மரணங்களை அடக்கம் செய்யும் விவகாரத்தில் கூட முஸ்லிம்களுக்கு எதிரானவன் என கருத்தை காணக்கூடியதாக இருந்தது." ''2019ஆம் ஆண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள், எனது எதிர் போட்டியாளருக்கு கிடைத்த நிலையிலேயே நான்; அதிகாரத்தை கைப்பற்றினேன். பௌத்த மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் இடமான ருவன்வெலிசேய புனித பூமியிலேயே நான் பதவி பிரமாணம் செய்துக்கொண்டேன். சிங்கள பெரும்பான்மை வாக்குகளினால் நான் தெரிவு செய்யப்பட்டமை குறித்து நான் பதவி பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் பல்வேறு அர்த்தங்கள் வெளிப்படும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன." என அவர் குறிப்பிடுகின்றார். தனது அமைச்சரவையில் அறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகிய தமிழர்கள் இருந்த போதிலும், முஸ்லிம்கள் எவரும் இருக்கவில்லை. ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்ததன் பின்னர் அவரது மகன் தெரிவு செய்யப்பட்டபோதிலும், அவருக்கு வயது குறைவு காரணமாக அமைச்சர் பதவி வழங்கவில்லை. தேசிய பட்டியல் ஊடாக அலி சப்ரியை தெரிவு செய்து, அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கினேன்." என அவர் கூறுகின்றார். 'போராட்டத்திற்குள் 'சிங்கள பௌத்த தரப்பில் குறுகிய அளவினரே பங்குப்பற்றினர். சில பௌத்த மத குருமார்களே பங்குப்பற்றினார்கள். போராட்டத்திற்கு ஒரு மூத்த பௌத்த பிக்கு மாத்திரமே ஆதரவு வழங்கினர். ஓமல்பே சோபித்த தேரர் மாத்திரமே ஆதரவு வழங்கினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வசமிருந்த சிங்கள பௌத்த அதிகாரம் இல்லாது போனது என சோபித்த தேரர் ஹிரு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகி பெற்றுக்கொண்ட சிங்கள பௌத்த வாக்குகளை போராட்டத்தின் ஊடாக இல்லாது செய்து நோக்கம் என்பது அவரது கருத்திலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது" என அவர் குறிப்பிடுகின்றார். இந்த போராட்டமானது சிங்கள எதிர்ப்பு மற்றும் பௌத்த எதிர்ப்பு போராட்டம் என்பதுடன், அது வெளிநாட்டு தரப்பினரின் தூண்டுதல் மற்றும் அனுசரணை என கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார். கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் விவகாரம் கோவிட் தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களை அடக்கம் செய்ய கூடாது என சுகாதார தரப்பினர் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய, தான் நடவடிக்கை எடுத்த போதிலும், அதனை முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையாக சிலர் சித்தரித்ததாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையானது, பின்னரான காலத்தில் தனக்கு எதிரான வைராக்கியமாக மாற்றம் பெற்றதை அடுத்து, தன்னை பதவியிலிருந்து விரட்டியடிக்கும் திட்டத்திற்கு அதனை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் கூறுகின்றார். ''கோவிட் மரணங்களை அடக்கம் செய்வதற்கு மாலத்தீவு அரசாங்கத்திடம் தான் உதவி கோரிய நிலையில்,அதற்கு மாலத்தீவு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. எனினும், இனவாத இலங்கை அரசாங்கத்திற்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு ஏன் உதவி செய்கின்றீர்கள் என இலங்கைக்கான ஐரோப்பிய தூதுவர் ஒருவர் மாலத்தீவு அரசாங்கத்திடம் கோரினார். ஜெனீவா மனித உரிமை பேரவை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அரசாங்கத்தை நிர்க்கதி நிலைக்கு தள்ள சர்வதேச வல்லரசு நாடுகள் இந்த பிரச்னையை பயன்படுத்திக் கொண்டன" என அவர் குறிப்பிடுகின்றார். அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் 30 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் கோவிட் சடலங்களை புதைக்க அனுமதி வழங்கப்பட்டது என அவர் தெரிவிக்கின்றார். எனினும், இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம்களை தனக்கு எதிராக திசை திருப்பியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் 'என்னை பதவியிலிருந்து விரட்டியடிக்கும் விவகாரத்தில் கார்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் சிலர் தரப்பினர் பாரிய பொறுப்புக்களை நிறைவேற்றினார்கள். காலி முகத்திடல் போராட்டத்தில் கத்தோலிக்க சமூகத்தையே அதிகளவில் காணக்கூடியதாக இருந்தது. தன்னை வெளியேற்றும் நடவடிக்கைகளின் கத்தோலிக்க சமூகத்தினர் மறைமுகமாகயின்றி நேரடியாகவே களமிறங்கினார்கள்." என அவர் கூறுகின்றார். “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் இரகசிய சாட்சியங்கள் காணப்பட்டமையினால், அதனை வெளிப்படுத்த வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டடிருந்தது. அதனால், கார்தினல் உள்ளிட்ட எவருக்கும் அதனை கையளிக்க முடியவில்லை. எனினும், 2021 பிப்ரவரி 25ஆம் தேதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அனைத்து சாட்சியங்களுடனும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த பிரதிகள் பௌத்த மகாநாயக்க தேரர்கள் மற்றும் கார்தினல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கார்தினல் கோரிக்கை விடுத்தார். எனினும், அந்த அறிக்கை குறித்து கார்தினல் திருப்தி கொள்ளவில்லை" என அவர் குறிப்பிடுகின்றார். இந்த விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டே கத்தோலிக்க சபை தனக்கு எதிராக போராடியது என கோட்டாய ராஜபக்ஸ தனது புத்தகத்தின் தெளிவூட்டியுள்ளார். தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற பல நாடுகள் தொடர்புபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள போதிலும், அந்த நாடுகளின் பெயர்களை தெளிவாக உறுதிப்படுத்த இந்த புத்தகத்தில் கோட்டாபய ராஜபக்ஸ கூறவில்லை. பட மூலாதாரம்,SIVARAJA படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா பத்திரிகையாளரின் பார்வை ''சிங்கள் மக்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார். அவருக்கு மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட, தனது ஆட்சி மோசமான ஆட்சி என வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு வியாக்கியானத்தை கொடுக்க முயல்கின்றார். எனினும், அவரது குடும்பத்திற்குள் வந்த அழுத்தங்களை அவர் சொல்லவில்லை. வெளிநாட்டு சக்திகள் என கூறுகின்றார். ஆனால் வெளிநாட்டு சக்திகள் யார் என்பதை அவர் கூறவில்லை. குறிப்பாக இந்தியா இறுதி நேரத்தில் அவரது விமானத்தை தரையிறக்க அனுமதி மறுத்ததாக செய்திகள் வந்தது. ஆனால், அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. அதேபோன்று, அமெரிக்க பிரஜாவுரிமைக்காக அவர் அமெரிக்காவிற்கு போவதற்கான விசாவை கேட்கின்றார். அதற்கும் அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. மேற்குலக சக்தி என கூறுகின்ற போதிலும், அது எந்த நாடு என கூறவில்லை. ரஷ்ய விமானம் நிறுத்தப்பட்டது ஒரு சதி என சொல்லும் அவர், ரஷ்ய தூதரகம் விளக்கத்தை கேட்ட போதிலும், அவர் அதற்கான விளக்கத்தை கூட சொல்லவில்லை. அனுதாபத்தை தேடி வரலாற்றில் தனக்கு அவப் பெயர் வந்து விடக்கூடாது என யோசிக்கும் கோட்டாபய, வரலாற்றை திரிபுபடுத்தும் வகையில் அந்த புத்தகத்தை எழுதியுள்ளார்." என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். ''இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிய அந்த தவறை இவர்கள் இன்னும் சீர்செய்யவில்லை. பௌத்த மேலாதிக்க வளர்ச்சி தனது ஆட்சியில் வளர்ந்து விடும் என்பதை தடுத்து விடுவதற்காகவே இந்த விடயம் நடந்தது என கோட்டா சொல்கின்ற நிலையில், பௌத்தர்களின் அனுதாபத்தை வென்றெடுக்க முயற்சிக்கின்றார். இன்னும் இவர்கள் பாடம் கற்கவில்லை." எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''இந்த புத்தகத்தின் ஊடாக இனவாத தோற்றம் ஒன்று நிச்சயமாக தெரிவிக்கின்றது. மூத்த பௌத்த தேரர்கள் கூட போராட்டத்தில் இருந்தார்கள். ஓமல்பே சோபித்த தேரர். கோட்டா வெளியேறுவதற்கு கூட நான் உதவி செய்தேன் என அவர் கூறுகின்றார். அதாவது பதவியை விட்டு போங்க என சொன்னதே பிக்குகள் தான். கோட்டாவின் ஆட்சி காலத்தில் மாதத்திற்கு ஒரு முறை பௌத்த மதத் தலைவர்களை மட்டும் அவர் சந்தித்தார். அவர்களுக்கு பாரிய உதவிகளை செய்தார். ஆனால், கோட்டாவை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இன்றும் கூட அவர் சொன்ன கருத்தை எந்தவொரு பௌத்த மதத் தலைவரும் ஆதரவில்லை. பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திய அவர், இப்போது தன்னை நியாயப்படுத்த வருவதாகவே அவர்கள் நினைக்கின்றார்கள். சொல்ல வேண்டிய விடயங்களை அவர் இந்த புத்தகத்தில் சொல்லவில்லை." என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/articles/c3ge7n831wdo
-
கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று அளித்த பாரிய நன்கொடை
ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது. இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. 34 அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மருத்துவமனைகளுக்கு இந்த ICU படுக்கைகள் வழங்கப்பட உள்ளன. சுகாதார அமைச்சரின் நன்றி நன்கொடையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, கனடாவில் வசிக்கும் பட்ரிக் நீல்கமல் பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் தேவையான நன்கொடைக்காக நன்றி தெரிவித்தார். https://ibctamil.com/article/a-huge-donation-sri-lankan-family-ln-canada-1711175253
-
Bengaluru-க்கு ஏன் இந்த நிலை? இந்தியாவின் IT City இப்படி சிக்கியது எப்படி? | Water Crisis
சிலிக்கான் வேலி, பாஸ்டன், லண்டன் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக உலகின் நான்காவது Technology Hub-ஆக கர்நாடக தலைநகர் பெங்களூரு திகழ்கிறது. இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று புகழப்படும் பெங்களூரு தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டில் தவித்து வருகிறது. தங்கள் வீடுகளிலேயே எளிதாக கிடைக்க வேண்டிய தண்ணீருக்காக மகக்ள் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. தண்ணீரும் மக்களின் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக்கொண்டே வருகிறது. குடிநீருக்கான ஏ.டி.எம்.களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. ஐ.டி. மற்றும் மக்கள் தொகை பெருக்கம்தான் நகரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றிய 180 ஏரிகளின் பெரும்பகுதிகள் விழுங்கப்பட்டுள்ளன. தற்போது அவற்றில் மீண்டும் தண்ணீரை நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம், அதிகார மட்டங்களை கட்டுப்படுத்தும் விதமாக எந்தவொரு தீர்வும் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
-
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் திறப்பு!
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை சுகாதார துறையில் உள்வாங்க வேண்டும் - பருத்தித்துறையில் ஜனாதிபதி 23 MAR, 2024 | 02:11 PM இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 - 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதே நிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம் தேசிய வியாபார முகாமைத்துவ பாடசாலையான (NSBM)மற்றும் பசுமை பல்கலைக்கழகத்திற்கான வைத்தியசாலை ஒன்றை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் லயிசியம் வைத்தியசாலையும் அதற்கான கோரிக்கையை விடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். யாழ். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தமைக்காக நெதர்லாந்து அரசாங்கத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார். பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் DRIVE இலகுக் கடன் முறையின் கீழ் 04 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை மேற்பார்வை செய்த பின்னர் வைத்தியசாலை பணிக்குழுவினருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) மற்றும் VAMED முகாமைத்துவப் பணிப்பாளர் Paul de Bruin ஆகியோருக்கு ஜனாதிபதியால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. அதனையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் வட. மாகாண சுகாதார சேவை முன்னேற்றத்தின் மைல்கல்லாகும் என்றும், DRIVE திட்டத்தின் கீழ் அதற்கு அவசியமான கடன் உதவி வழங்கிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்தார். பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த புதிய வைத்திய வசதிகளை நாட்டின் சுகாதார சேவை முன்னேற்றதுக்காக செயற்திறனுடன் பயன்டபுத்த வேண்டுமென வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையை மக்கள் நலனுக்காக பயன்படுத்தும் போது முடிந்த வகையில் ஒன்றுபட்டுச் செயற்படுமாறும் ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இங்கு உரையாற்றிய நெதர்லாந்து தூதுவர் பொனி ஹொப்ச் (Bonnie Horbach) இலங்கை மக்கள் சகலருக்கும் சம அந்தஸ்த்து கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அதனால் நல்லிணக்கமும் மேம்படும் என்பதால் அதற்கான முயற்சிகளை சுகாதாரம் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை விடயங்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இன்றைக்கு ஆறு வருடங்களுக்கு முன்னதாக வட. மாகாணத்தின் 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக VAMED நிறுவனம் சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைசாத்திட்டிருந்ததாகவும், இந்த நான்கு வைத்தியசாலைகளையும் கட்டமைப்பதற்கான செலவு 16 மில்லியன் யூரோவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது எனவும் அந்த தொகையில் 25% ஆன 4 மில்லியன் யூரோ செலவில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் கொவிட் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றுக்கு நாடு முகம்கொடுத்திருந்ததை கருத்தில் கொண்டு முழுமையான அபிவிருத்தி கொடுப்பனவை 35% ஆக அதிகரிக்க நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்திருந்தாகவும் அதனால் வட. மாகாணத்தின் சுகாதார செயற்பாடுகளை பலப்படுத்துவதில் நெதர்லாந்து அரசாங்கம் கொண்டிருக்கும் அரப்பணிப்பு வெளிப்படுவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான அங்கஜன் ராமநாதன்,காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வைத்தியசாலையின் பணிக்குழாத்தினர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதேநேரம் விவசாய உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையிலான இணைய பக்கம் ஒன்றை ஆரம்பிக்குமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய வட. மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உரிய அமைச்சுக்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய "FARM TO GATE" இணைய பக்கமும் ஜனாதிபதி தலைமையில் பலாலி விமானப் படை முமாமில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நாட்டு விவசாயிகள் மற்றும் வீட்டுத் தோட்ட உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை பெரும் சந்தைகளுக்கு கொண்டுச் செல்வதற்கும் இடைத் தரகர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, விவசாயிகளின் உற்பத்திகளை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டுச் சேர்ப்பதையும் , உற்பத்திக்கு தகுந்த விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் "FARM TO GATE" இணையம் களம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/179504
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு
இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனையை குற்றம் சாட்டும் தாயார் - என்ன நடந்தது? கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்படி மாணவர் மரணித்த தினத்தன்று வைத்தியசாலையின் உள்ளே சிலர் உட்புகுந்து - அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாக வைத்தியசாலை தரப்பு கூறுகிறது. எனவே, அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை வைத்தியசாலையைத் திறக்க முடியாது என வைத்தியசாலை நிர்வாகமும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் கூறுகின்றன. இது இவ்வாறிருக்க, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அலட்சியமே தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என பிபிசி தமிழிடம் உயிரிழந்த மாணவரின் தாய் கவிதா கூறுகின்றார். இலங்கையில் நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இந்நிலையில், திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்ட மாணவரே உயிரிழந்தாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொருபுறம், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் – உயிரிழந்த மாணவரிடம் பெறப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில், மாணவரின் மரணத்துடன் தொடர்பான விஷயங்களை ஆராயும் பொருட்டு பிபிசி தமிழ் களத்தில் இறங்கி, அந்த விஷயத்துடன் தொடர்பான தரப்பினரைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது. மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட விதுஜன் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. விதுஜன் 2007ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தனது ஊரிலுள்ள மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலிருந்தே விதுஜன் விளையாட்டில் ஆர்வமுள்ளவர் என்று அவரின் அம்மா கூறுகின்றார். திருக்கோவிலில் உள்ள பிரபல விளையாட்டுக்கழகம் ஒன்றின் கிரிக்கெட் அணியில் விளையாடும் விதுஜன், தினமும் மைதானத்தில் அதிக தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டவர் என அறிய முடிகிறது. மேலும், விதுஜனுக்கு எந்தவிதமான நோய்களும் இருக்கவில்லை என்றும் அவரின் தாயார் கூறுகின்றார். இந்த நிலையில்தான் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் ‘இல்ல விளையாட்டுப் போட்டிகள்’ கடந்த 11ஆம் தேதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தன. அதன் ஆரம்பப் போட்டியாக காலை 6.50 மணியளவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் 33 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், 6.5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாக இந்தப் போட்டி அமைந்திருந்ததாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி ஜி.கே. தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதில் ஓடிய விதுஜன் 6ஆம் இடத்தைப் பெற்றார். மேற்படி மாரத்தான் போட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை, அதில் கலந்துகொண்ட தனது மகனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டியவாறே தான் சென்றதாக விதுஜனின் தாய் கூறினார். 'மருத்துவச் சான்றிதழ் பெற்றோம்' குறித்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்ட பின்னரே, அவர்களைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதித்ததாக, விதுஜனின் பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறியதோடு, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் தெரிவித்த மருத்துவச் சான்றிதழையும் காட்டினார். குறித்த மாரத்தான் போட்டியின் தூரத்தை முழுவதுமாக ஓடி முடித்த விதுஜன், அசாதாரண உடல் நிலையை உணர்ந்தாகவும், அவர் பாடசாலையில் இருந்து நபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் அவரின் பாடசாலை பிரதியதிபர் எஸ். உதய தர்ஷன் கூறுகின்றார். மேலும், மேற்படி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்திருந்த மாணவர்கள் இருவர் மருத்துவச் சான்றிதழ்களின் படி, அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றும், அதனால் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பிரதியதிபர் குறிப்பிட்டார். இது இவ்வாறிருக்க, ‘அதிக வெப்பம் நிலவுகின்றமையால் வெளி நிகழ்வுகளை நடத்த வேண்டாம்’ என அறிவுறுத்தும் வகையில், கல்வியமைச்சின் அறிவித்தல் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறிய அதிபர், வெயில் நேரத்துக்கு முன்னதாக காலை வேளையிலேயே மாரத்தான் போட்டியைத் தாங்கள் நடத்தி முடித்து விட்டதாகவும் குறிப்பிட்டார். மருத்துவமனையில் என்ன நடந்தது? இந்த நிலையில், திருக்கோவில் வைத்தியசாலை தரப்பினரின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்தாக விதுஜனின் தாய் கவிதா பிபிசி தமிழிடம் கூறினார். ”எனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நிமிடங்களில் நான் அங்கு சென்றுவிட்டேன். ஆனால் எனது மகனைப் பார்ப்பதற்கு முக்கால் மணிநேரம் வரை என்னை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு பலவந்தமாக நான் உள்ளே சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது. எனது மகன் கட்டிலில் படுத்திருந்தார், ஒரு வைத்தியர் தனது இரண்டு முழங்கால்களையும் எனது மகனின் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவரின் கைகளால் எனது மகனின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தார். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கேட்டேன். உங்கள் பிள்ளையின் உயிருக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள்,” என்று கூறினார் விதுஜனின் தாய். மேலும், “எனது மகனின் உயிர் அந்த வைத்தியசாலையிலேயே பிரிந்து விட்டது. ஆனாலும், அதைக் கூறாமல், மேலதிக சிகிச்சைக்காக எனக் கூறி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டார்கள்,” என்றார். வைத்தியசாலையிலுள்ள ஆக்சிஜன் இயந்திரத்துக்கு மின்சாரத்தை வழங்குவதற்குப் பொருத்தமான வட்ட வடிவ ‘பிளக்’ (plug) வைத்தியசாலையில் இருக்கவில்லை என்றும், அதனால் அருகிலிருந்த பாடசாலையில் இருந்து அதைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறிய விதுஜனின் தாய், “அதன் பின்னரே எனது மகனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது” என்றார். இப்படி 3 மணிநேரத்துக்கும் அதிகமாகத் தனது மகனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திருந்ததாகவும், அவர் மரணித்துவிட்ட பிறகுதான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைக்கு எனக் கூறி, திருக்கோவில் வைத்தியசாலையினர் உடலை அனுப்பி வைத்ததாகவும் விதுஜனின் தாய் குறிப்பிட்டார். ”திருக்கோவில் வைத்தியசாலையில் ஆம்பியுலன்ஸ் இருக்கிறது. ஆனால் அதனை ஓட்டுவதற்கான சாரதி இல்லை என்றும், நோயாளியை கொண்டு செல்வதற்காக வசதிகள் ஆம்புலன்ஸில் இல்லை என்றும் கூறினார்கள். அதன் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸை அழைத்து, அதில்தான் எனது மகனைக் கொண்டு சென்றார்கள்,” எனவும் கவிதா கூறினார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு தனது மகன் அனுப்பப்பட்ட பின்னர் தாம் அங்கு சென்றதாகவும், அங்குள்ள வைத்தியர் ஒருவர் தனது மகன் ஒரு மணிநேரம் முன்பாகவே இறந்துவிட்டார் என்று கூறியதாகவும் விதுஜனின் தாய் பிசிசி தமிழிடம் குறிப்பிட்டார். வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் படக்குறிப்பு, டாக்டர் அன்பாஸ் பாறூக் விதுஜன் இறந்த செய்தியை அடுத்து, அவர் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக அன்றைய தினம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலையின் வெளியில் இருந்த பெயர் பதாகை உடைக்கப்பட்டதோடு, வைத்தியசாலை மீது கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், விதுஜன் படித்த பாடசாலையின் மாணவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சீருடைகளுடன் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு போலீசாரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். வைத்தியசாலை நிர்வாகம் கூறுவது என்ன? இந்த நிலையில், விதுஜனின் மரணம் தொடர்பில் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரப்பு மறுக்கிறது. விதுஜன் வைத்தியசாலைக்கு வரும்போதே அவரின் இதயத்துடிப்பு மிகவும் குறைந்திருந்ததாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார். பின்னர் அவருக்குப் பல தடவை இதயச் செயலிழப்பு (cardiac arrest) ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவர் தாங்கக் கூடிய அளவை விடவும் அதிகளவான உடல் வேலையில் ஈடுபடும்போது இவ்வாறு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், விதுஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலையில் இருந்த அனைத்துத் தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் மருத்துவ சான்றிதழ், சாதாரண உடல் ஆரோக்கியம் தொடர்பில் வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழ் என்றும், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வோருக்கென தனியான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக விதுஜனின் பாடசாலை நிர்வாகத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது. இதன் காரணமாக, திட்டமிட்டிருந்த தேதியில் மாரத்தான் போட்டியை நடத்த வேண்டாம் என திருக்கோவில் வயலக் கல்வி அலுவலகத்தின் அதிகாரி ஒருவருக்கு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியசட்சகர் தொலைபேசி ஊடாக அறிவித்ததாகவும் பிபிசி தமிழிடம் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது. இந்நிலையிலேயே திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன்போது சிலர் வைத்தியசாலையின் அவசர சிசிச்சைப் பிரிவுக்குள் புகுந்து அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பிரிவு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ் பாறூக் பிபிசிக்கு தெரிவித்தார். இதை நிரூபிப்பதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். எனவே, "வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், வைத்தியர்களை அச்சுறுத்தியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நிபந்தனை விதித்துள்ளனர்," எனக் கூறும் டாக்டர் அன்பாஸ் அவை நடந்தால் மட்டுமே அங்கு வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும், நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களை வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையிலேயே, மேற்படி பாடசாலையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக டாக்டர் அன்பாஸ் சுட்டிக்காட்டினார். காலையிலும் இரவு வேளையிலும்கூட, தற்காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதாகவும் கூறினார். எனவே, கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு மாற்றாக அந்தப் பாடசாலை நடந்துள்ளதாகவும் அன்பாஸ் குற்றஞ்சாட்டினார். அதிக வெப்பம் நாட்டில் நிலவுகின்றமையால் மாணவர்களை வெளிக்களச் செயற்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியில் இருந்தே கல்வியமைச்சு பல தடவை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cp307nyrnv4o
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்யா: மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதலில் 93 பேர் பலி, நால்வர் கைது; முன்பே எச்சரித்த அமெரிக்கா - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாஸ்கோவில் "பெரிய கூட்டங்களை" குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி & ஆண்ட்ரே ரோடன்-பால், பதவி, பிபிசி நியூஸ் 23 மார்ச் 2024, 06:42 GMT புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் மாஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிபிசி சரிபார்த்த வீடியோ காட்சிகளின்படி, வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில், குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. அப்போது அரங்கிற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது தீவிரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்த "பயங்கரவாத தாக்குதலை" கடுமையாக கண்டனம் செய்துள்ளது. இணையத்தில் பரவிவரும் சரிபார்க்கப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஐஎஸ் தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் குறித்து முன்பே எச்சரித்த அமெரிக்கா பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் இதுகுறித்து பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்தி முகமையிடம் பேசியுள்ள அமெரிக்க அதிகாரிகள், ஐஎஸ் அமைப்பு ரஷ்யாவை தாக்க உள்ளது என உளவுத் தகவல் கிடைத்ததாகக் கூறினர். மேலும், மாஸ்கோவில் "பெரிய கூட்டங்களை" குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவை எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிப்பதற்காக சம்பவ இடத்தில் சிறப்புப் பிரிவுகள் செயல்பட்டு வருவதாக ரஷ்யாவின் தேசிய காவல் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய உயர் அதிகாரிகளும் கிராஸ்னோகோர்ஸ்க்கு சென்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, "தீவிரவாதிகள் மாஸ்கோவில் பெரிய கூட்டங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளனர்," என்ற தகவல் குறித்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறும் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை செய்தது. பின்னர் வெள்ளிக்கிழமை மாலை தனது அறிவிப்பைப் புதுப்பித்து வெளியிட்ட அமெரிக்கா, தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறு தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்காக 6,000க்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் குவிந்தனர். இந்நிலையில் இசைக்குழு மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியுள்ளார். அதேநேரம் இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தற்போது வரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நேரடியாக மக்களிடம் பேசவில்லை. ஆனால், அவரது அலுவலகத்தைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி, பாதிக்கப்பட்ட மக்கள் விரைந்து நலம்பெறத் தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது நுழைவுவாயில் ஒன்றில் பணியில் இருந்த காவலர் ஒருவர், எப்படி இந்த வன்முறை கும்பல் ஆயுதங்களோடு அரங்கிற்குள் நுழைந்தது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளார். "அங்கு மூன்று பாதுகாவலர்கள் இருந்தனர். தாக்குதல் மேற்கொண்டவர்களைப் பார்த்தவுடன் அவர்கள் ஒரு விளம்பரப் பலகையின் பின்னால் ஒளிந்து கொண்டனர்," என்று அவர் ரஷ்ய டெலிகிராம் சேனலான பாசாவிடம் கூறியுள்ளார். மேலும் "தாக்குதல் மேற்கொண்ட அந்த நபர்கள் எங்களிடமிருந்து 10 மீ [30 அடி] தொலைவில் நின்றுகொண்டு, தரைத் தளத்தில் இருந்தவர்களை நோக்கி கண்முன் தெரியாமல் சுடத் தொடங்கினர்," என்று தெரிவித்துள்ளார் அவர். அரங்கின் உள்ளே இருந்த பெண் ஒருவர், தானும் மற்ற பார்வையாளர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை உணர்ந்தவுடன், மேடையை நோக்கி ஓடியதாக ரஷ்ய தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார் . "அங்கிருந்த ஸ்டாலில் ஒரு நபரை ஆயுதத்துடன் பார்த்தேன். அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் ஒலிபெருக்கியின் பின்னால் மறைந்தவாறு செல்ல முயன்றேன்," என்று அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் குழந்தைகளும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்டடத்தின் இரண்டு மேல்தளங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் முகப்புப் பகுதி தீயில் சிக்கிக்கொண்டது. இதன் விளைவாக எழுந்த புகை வானத்தில் பரவத் தொடங்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் வீசிய ஒருவகை நெருப்பு உண்டாக்கும் கருவியின் விளைவாகவே தீ பற்றியதாகத் தெரிய வந்துள்ளது. இசைநிகழ்ச்சி அரங்கில் பால்கனியில் இருந்த விட்டலி தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துவதைப் பார்த்துள்ளார். இதுகுறித்து விவரித்த அவர், "அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அனைத்தும் எரிய ஆரம்பித்தன. நாங்கள் வெளியேறும் வழியை நோக்கி ஓடத் தொடங்கினோம்,” என்றார். தாக்குதலின்போது, அந்த வளாகத்தில் நடைபெற்ற பால்ரூம் நடனப் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் இருந்ததாக நேரில் கண்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரங்கில் இருந்தவர்களில் சிலர் மேடையில் இருந்து பார்க்கிங் பகுதிக்கு தப்பிச் செல்ல முடிந்தது. மற்றவர்கள் மேல்பகுதிக்குச் சென்றனர். மேலும் 100 பேர் கட்டடத்தின் அடித்தளத்தின் வழியாக தப்பிச் சென்றதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். டஜன் கணக்கான அவசர ஊர்திக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தச் சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இதுவொரு கொடூரமான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தையொட்டி தலைநகரில் நடைபெற இருந்த அனைத்து பொது நிகழ்வுகளையும் ரத்து செய்துள்ள மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், "பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக நான் வருந்துகிறேன்," என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்த சில மணிநேரங்களில் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட பல பிராந்தியங்களும் நடக்கவிருந்த பொதுநிகழ்வுகளை ரத்து செய்துள்ளன. ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்தச் சம்பவத்தை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும் என்றும், இதுவொரு கொடூரமான குற்றம் என்றும் தெரிவித்துள்ளார். ரஷ்யா யுக்ரேன் மீது இரண்டு ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று யுக்ரேன் கூறியுள்ளது. "யுக்ரேனுக்கு நடந்துள்ளது என்னவாகினும், அதற்கான முடிவு போர்க்களத்தில் மட்டுமே தீர்மானிக்கப்படும்" என்று யுக்ரேன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். ஆறு நாட்களுக்கு முன்புதான் ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் உண்மையான எதிர்க்கட்சிகள் எதுவும் இல்லை, தேர்தல் சுதந்திரமானதோ அல்லது நியாயமானதோ அல்ல என்று மேற்கத்திய நாடுகள் கண்டனம் செய்துள்ளன. யுக்ரேனிய ராணுவ புலனாய்வு செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூசோவ் இந்தத் தாக்குதல் எந்த ஆதாரமும் இல்லாமல், "புதினின் சிறப்பு சேவைகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட செயல்" என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மாஸ்கோவில் மக்களை நோக்கி நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும். இது 2002இல் தலைநகரில் நடத்தப்பட்ட தியேட்டர் தாக்குதலை நினைவுபடுத்தியுள்ளது. அந்தச் சமபவத்தில் 40 செச்சென் போராளிகள் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 900க்கும் மேற்பட்ட மக்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தனர். இறுதியில் அந்த தியேட்டர் அரங்கிற்குள் நுழைந்த ரஷ்ய பாதுகாப்புப் படை தூக்க வாயுவை உள்ளே செலுத்தியது. இந்தச் சம்பவத்தில் 130 பணயக் கைதிகள் இருந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, துப்பாக்கிச் சூடு காட்சிகள் "பயங்கரமானதாகவும் பார்ப்பதற்கு கடினமாகவும் இருந்தன" என்று தெரிவித்துள்ளார். மேலும் "இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே எங்களது சிந்தனை இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/ckd8n7lv0n4o
-
இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் தேசிய தினம்
23 MAR, 2024 | 02:04 PM பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பித்தார். இந்நிகழ்வில், பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாகிஸ்தானின் தேசிய தினத்தை குறிக்கும் விசேட செய்திகளும் வாசிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் கொள்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியதோடு தமது தாய்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் மட்டுமல்லாமல், இரு நட்பு நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை மேலும் நெருக்கமாக கொண்டுவருவதிலும் பாகிஸ்தான் சமூகம் தங்கள் பங்கை திறம்பட ஆற்றுமாறும் குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் ஆழமான நட்பையும் உயர்ஸ்தானிகர் இதன்போது நினைவுகூர்ந்தார். எதிர்காலத்திலும் இரு நட்பு நாடுகளும் இரு நாடுகளினதும் நலனுக்காக இந்த உறவினை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179507
-
பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும் - வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகர்
23 MAR, 2024 | 02:17 PM (எம்.நியூட்டன்) பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வளர்க்கின்றபோதுதான் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகரான மருத்துவர் திருமகள் தெரிவித்தார். தேவை நாடும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மல்லாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் பிள்ளைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி வளர்ப்பதால் அவர்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் சூழல் ஏற்படுகின்றது. இதனால் பல சமூக விரோத செயற்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள். இது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பிள்ளைகளை வளர்க்கும்போது ஞானத்துடன் வளர்க்க வேண்டும். இந்த விடயத்தில் சிறுவர்கள் மீது பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்தும் அதேவேளை சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் அமைப்புகள் கூடிய அக்கறையுடன் தொடர் கண்காணிப்புடன் செயற்படவேண்டும் என்றார். இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மகளிர் அமைப்பின் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், மகளிர் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களின் உரைகளை தொடர்ந்து சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பங்கேற்பிலான கண்காட்சியும் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/179505
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 11:22 AM இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/179491
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
மொஸ்கோ தாக்குதல் - ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியது Published By: RAJEEBAN 23 MAR, 2024 | 06:55 AM மொஸ்கோவின் மிகவும் பிரபலமான இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ள அதேவேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது. டெலிகிராமில் ஐஎஸ் அமைப்பு தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளது எனினும் இந்த தாக்குதலை தான் மேற்கொண்டமைக்காக ஆதாரங்கள் எவற்றையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை. இதேவேளை இந்த தாக்குதலை ஐஎஸ் அமைப்பே மேற்கொண்டுள்ளது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் உறுதி செய்துள்ளன. ஐஎஸ் அமைப்பு ரஸ்யாவில் தாக்குதலொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல்கள் நவம்பர் மாதம் முதல் கிடைத்தன என அமெரிக்க புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் பாதி;க்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஐஎஸ்தாக்குதல் குறித்த எச்சரிக்கையை ரஸ்யாவிடம் பகிர்ந்துகொண்டன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஸ்கோவில் உள்ள அமெரிக்கர்கள் பொதுமக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்கவேண்டும் குறிப்பாக இசைநிகழ்ச்சிகளை தவிர்க்கவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இரண்டுவாரங்களிற்கு முன்னர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாககுதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்களை உன்னிப்பாக அவதானிப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/179474
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கண்கவர் தொடக்க விழாவுடன் ஐபிஎல் 17ஆவது அத்தியாயம் ஆரம்பம் 23 MAR, 2024 | 09:36 AM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் 17ஆவது அத்தியாயம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவுடன் பிரமாண்டமாக ஆரம்பமானது. வெள்ளிக்கிழமை மாலை 6.30க்கு தொடங்கிய ஆரம்ப விழா சுமார் அரை மணித்தியாலமாக அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதக்கச் செய்தது. தொடக்க விழாவின்போது தேசிய கொடியுடன் பொலிவூட் நடிகர் அக்சய் குமார் கம்பியில் தொங்கியவாறு மிதந்து வந்தார். அவரிடம் இருந்து மற்றொரு பொலிவூட் நடிகர் டைகர் ஷெரொப் தேசிய கொடியைப் பெற்றுக்கொண்டு அதனை மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார். தேசிய கொடி நாட்டப்பட்டதும் பொலிவூட் நடிகர்கள் இருவரும் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி இரசிகர்களை குதூலிக்கச் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து தனது மகன் அமீனுடன் மேடையில் தோன்றிய இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இனிமையான பாடல் ஒன்றைப் பாடி இரசிகர்களையும் பாட வைத்தார். ரகுமான், அவரது மகன் மற்றும் சுவேதா மோகன் ஆகியோர் மற்றொரு பாடலை இணைந்து வழங்கினர். இதனைத் தொடர்ந்து இந்திய சினிமா நட்சத்திரங்களால் நடத்தப்பட்ட இந்திய கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் நிரம்பி வழிந்த இரசிகர்களை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி இரசிகர்களையும் பிரமிக்க வைத்தன. https://www.virakesari.lk/article/179469
-
பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய் - வீடியோ அறிக்கையில் விபரங்களை வெளியிட்டார்
Published By: RAJEEBAN 23 MAR, 2024 | 06:32 AM பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோ அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார் புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார். நோய் பாதிப்பு குறித்த விபரங்கள் முழுமையாக வெளிவராத போதிலும் இளவரசி முழுமையாக குணமடைவார் என கென்சிங்டன் அரண்மணை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நான் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவேளை நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றேனா என்ற விபரம் தெரியவரவில்லை, ஆனால் சத்திரசிகிச்சைக்கு பிந்திய மருத்துவபரிசோதனைகளின் போது நான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. நான் ஹீமோதெரபி சிகிச்சைக்கு என்னை உட்படுத்தவேண்டியுள்ளது. சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார். பெப்ரவரியில் சிகிச்சை ஆரம்பமாகியுள்ளது – நோய் சிகிச்சை குறித்த ஏனைய விபரங்களை வெளியிடப்போவதில்லை என கென்சிங்டன் அரண்மணை தெரிவித்துள்ளது. இந்த வகையான நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் நான் இந்த தருணத்தில் நினைத்துப்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ள இளவரசி கேட் (42) இந்த வகை நோயினை அதன் எந்த வடிவத்தில் எதிர்கொள்பவராக நீங்கள் இருந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள் நீங்கள் தனியாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/179472
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
23 MAR, 2024 | 06:35 AM ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் தீ வைப்பு சம்பவங்களும் இடம்பெற்றதால் அப்பகுதியில் தீ பரவியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டடுள்ளது. இணையத்தில் பரவும் பல தாக்குதல் காணொளிகளில், இசை நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தரையில் வீழ்ந்து பாதுகாப்பைத் தேடுவதும், இருக்கைகளுக்குப் பின்னால் மறைந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் மற்றும் கூச்சல் இடம் சந்தம் கோட்பதையும் அங்கிருந்து பலர் வெளியே பாதுகாப்புத் தேடி ஓடுவதையும் வெளிப்படுத்துகின்றது. தாக்குதலையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ரஷ்யா பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இந்த தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179471
-
சீன பல்கலைக்கழக பிரதிநிதிகள் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் : ஒப்பந்தம் கைச்சாத்து
23 MAR, 2024 | 10:44 AM சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோருடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்த நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது. அத்துடன் சீன பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கும் இடையிலான கூட்டம் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர், பீடாதிபதிகள், பதிவாளர், நூலகர், நிதியாளர் அத்துடன் சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் பல்கலைக்கழக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, இந்த நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழகம் சார்பாக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், யுனான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் உபபீடாதிபதி ஹூ ஜின்மிங்க் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அவ்வேளை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் இப்பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிருவாக தலைமைத்துவ பயிற்சிநெறிகளை பூர்த்திசெய்த கல்விசார் உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. ஊழியர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சிதம்பரேசன் தலைமையில் நடைபெற்ற இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹூ ஜின்மிங்க் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், விஜயத்தின் ஓர் அங்கமாக Confucius Unit நிலையத்துக்கான உத்தேச இடம் சீன பிரதிநிதிகளால் பார்வையிடப்பட்டது. மேற்படி நிலையம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179488
-
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் திறப்பு!
23 MAR, 2024 | 10:42 AM பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் ஒன்றாகும். இது “ஏ” தர ஆதார வைத்தியசாலையாக உள்ளது. ஆதார வைத்தியசாலைகளின் வசதிகள் குறைவாக காணப்படுவதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அதிகளவில் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர மற்றும் திடீர் விபத்து பிரிவின் ஊடாக பலர் நன்மையடையவுள்ளனர். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்ததன் பின்னர், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைப் பிரிவுகளை சென்று பார்வையிட்டனர். இந்த வைத்தியசாலையின் ஊடாக அதிகபட்ச பலனை பெற்றுக்கொள்ள வேண்டுமென வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, புதிய சிகிச்சை பிரிவில் சிடி ஸ்கேன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையானது இப்பகுதி மக்களுக்கான ஒரு வரப்பிரசாதம் எனவும் ஆளுநர் தெரிவித்தார். ஆகவே, மத்திய அரசாங்கத்தின் “அனைவருக்கும் ஆரோக்கியம்” என்ற கொள்கையை அனைத்து மக்களிடையேயும் கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179484
-
அடேங்கப்பா😲 | யாழில் குவிந்த அழகிகள்💃 | Jaffna Bridal Show | Ks Shankar | Sri Lanka
நம்மட அழகிகளையும் அவர்களுடைய அலங்காரங்களையும் பார்த்து இரசியுங்கள்.
-
நாட்டில் 12 சதவீதமான முதியவர்களுக்கு பற்கள் இல்லையாம்
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 08:58 AM நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார். பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம். நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/179475
-
இன்றைய வானிலை
கொழும்பு, கம்பஹா, மன்னார் மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்! 23 MAR, 2024 | 06:41 AM வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலம் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/179473
-
நாமக்கல்: பட்டியலின சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரம் - உண்மையில் என்ன நடந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், சுதாகர் பாலசுந்தரம் பதவி, பிபிசி தமிழுக்காக 22 மார்ச் 2024 ஊர் கட்டுபாடு என்னும் பெயரில் தொடரும் சாதிய வன்கொடுமையால் இரண்டு பட்டியலின சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடை உரிமையாளர் உட்பட மூன்று பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள திருமலைப்பட்டி காமராசர் காலணியைச் சேர்ந்தவர் 33 வயதான அருள்பாண்டியன். தனியார் நிறுவன ஊழியரான இவர், தன்னுடைய இரண்டு மகன்கள் மற்றும் மனைவியுடன் இந்த ஊரில் வசித்து வருகிறார். கடந்த ஞாயிறன்று, மதியம் 1 மணியளவில், தனது இரு மகன்களையும் முடிவெட்டுவதற்காக தனது ஊருக்கு அருகேயுள்ள தெவ்வாய்பட்டி கிராமத்திலுள்ள சலூன் கடைக்கு அனுப்பியுள்ளார் அருள்பாண்டியன். அங்கு சென்ற சிறுவர்களிடம், சலூன் கடையின் உரிமையாளர் சிட்டு, கோவிலுக்குப் போவதால், கடையைப் பூட்டுவுள்ளதாகக் கூறி சிறுவர்கள் இருவரையும் திருப்பி அனுப்பியுள்ளார். இந்தத் தகவலை வீட்டுக்குத் திரும்பிய சிறுவர்கள் தனது தந்தையிடம் தெரிவித்தனர். இந்நிலையில் அன்று மாலை, அருள்பாண்டியன் தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் சிட்டுவின் முடிவெட்டும் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது மூடுவதாகக் கூறப்பட்ட கடை திறந்து இருந்தது. கடையின் உரிமையாளர் சிட்டு ஒருவருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தனது மகன்களுக்கு முடிவெட்ட வேண்டும் என்று அருள்பாண்டியன் கேட்டபோது, கடை உரிமையாளர் முடிவெட்ட மறுத்துள்ளார். “எனது மகனுக்கு முடிவெட்ட வேண்டும் என்று நான் சிட்டுவிடம் கேட்டபோது, உங்களுக்கெல்லாம் முடிவெட்ட முடியாது. ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கிறது. மீறி வெட்டினால் பஞ்சாயத்தில் கடையை மூடிவிடுவார்கள் என கடை உரிமையாளர் என்னிடம் சொன்னார்,” என்று பிபிசியிடம் பேசிய அருள்பாண்டியன் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்த காவல்துறை சாதியை முன்வைத்து, சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்த விவகாரத்தில், அருள்பாண்டியன் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, சலூன் கடை உரிமையாளர் சிட்டுவை கைது செய்தது. இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தல், அவமானப்படுத்தும் நோக்கத்தோடு அவமரியாதை செய்தல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் பட்டியிலினத்தவர்களுக்கு முடிவெட்டக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு உள்ளது என்று கூறி சலூன் கடை உரிமையாளரை மிரட்டியதாக இந்த வழக்கில் மேலும் இரண்டும் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிட்டு கைதான நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சமூகத்தினரின் மிரட்டலுக்குப் பயந்து தனது கணவர் முடிவெட்ட மறுத்ததாகவும், இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று சிட்டுவின் மனைவி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறும்போது, அருள்பாண்டியன் புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவில் இவ்வழக்கு பதியப்பட்டுள்ளது. அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என சலூன் கடை உரிமையாளரை மிரட்டிய ஆதிக்க சாதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ராஜேஷ்குமார்(35), பால்காரர் செல்வராசு(52) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம மக்களிடம் பேச பிபிசி முயற்சி செய்தது. ஆனால் காவல்துறை கைது நடவடிக்கைக்குப் பயந்து யாரும் பேச முன்வரவில்லை. தொடரும் அவலம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் "சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடப்பது வேதனையளிக்கிறது. இன்னொரு மனிதனுடைய சுயமரியாதையை கேவலப்படுத்துவதற்காக சக விளிம்புநிலை சமூகங்களில் இருப்பவர்களையே கருவியாகப் பயன்படுத்துவது இந்த நாடு இன்றும் ஜனநாயகப்படவில்லை என்பதையே காட்டுகிறது," என்றார் பழங்குடியின செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பாலமுருகன். இதுகுறித்துப் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், "இன்றைய காலகட்டத்தில் நேரடியான சாதிய தீண்டாமைகளுக்கு மாற்றாக நவீன தீண்டாமைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதுபோன்ற நேரடியான தீண்டாமை வடிவங்கள் தமிழக கிராமங்களில் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. ஒரு மனிதன் பயன்படுத்திய பொருளை, இடத்தை, கடையை நான் பயன்படுத்த மாட்டேன் எனச் சொல்லி பட்டியிலின மக்களை ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வு மேற்கொண்டு தீண்டாமை கொடுமைகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்," என்றார். ராசிபுரம் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய ஆணையர் டாக்டர் ரவிவர்மன் பிபிசியிடம் பேசினார். தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது தொடர்பான வழக்குகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே பதிவாகின்றன. கடந்த மாதம் சேலம் கொளத்தூர் அருகே முடிவெட்டுவது தொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் “காவேரிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ரமேஷ் என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். அவர் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் செய்வதில்லை என்ற புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோது உங்களுக்கு வெட்டினால், உயர் சாதியினர் என்னிடம் முடிவெட்ட வர மாட்டார்கள் என்றார் அந்த கடைக்காரர். வேண்டுமென்றால் வழக்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்." இதுபோல பல ஊர்களின் நடந்தாலும், பெரியளவில் அந்தச் சம்பவங்கள் வெளிவருவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் குறித்துப் புகார் அளித்தால் மட்டுமே தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், நேரடியாக விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று ரவிவர்மன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திருப்பூர், கோயமுத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு நாமக்கல், கரூர், ஒரத்தநாடு, உள்ளிட்ட பகுதியில் அதிகளவில் பட்டியலின மக்களுக்கு முடிவெட்டாமல் புறக்கணிக்கப்படுவதாக தகவல் வருகின்றன. ஆனால் இங்கு யாரும் புகாரளிக்க முன்வருவதில்லை என்றார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடிவெட்ட மறுத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,20,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும். எஃப்.ஐ.ஆர் போட்டவுடன் 25% தொகையும், குற்றப் பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்பு 50% தொகையும், நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 25% தொகை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ராசிபுரம் விவகாரத்தில், தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், நேரடியாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாது. தேர்தல் முடிந்ததும், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் இதுவரை முடிவெட்ட மறுத்தல் தொடர்பாக கொளத்தூர் மற்றும் நாமக்கல் என இரு வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c970n3765z5o
-
வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன
22 MAR, 2024 | 08:49 PM இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் மார்ச் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடிவதோடு, அந்த தொகையை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வீதி விபத்துக்களை மட்டுப்படுத்தும் வகையிலான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அறியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கும் காப்புறுதி நிறுவனங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொடர் கலந்துரையாடலின் பலனாக நீதிமன்ற நடவடிக்கையின்றி விரைவாக இழப்பீடு வழங்கும் வேலைத் திட்டம் மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னரான விபத்துக்கள் தொடர்பில் மாத்திரமே இத்திட்டம் செயற்படுத்தப்படும். விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள காப்புறுதி நிறுவனத்தின் எந்தவொரு கிளையிலிருந்தும் அதிகபட்சமாக 05 இலட்சம் ரூபா வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். மாறாக பாதிக்கப்பட்டவர் மேலதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை நாட வேண்டும். இந்த நடவடிக்கை குறித்து இலங்கை பொலிஸார் மற்றும் பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிவரவுத் திணைக்களம், விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியன இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதன்படி மாதமொன்றுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 50 டொலர்களும், 6 மாதங்களுக்கு 75 டொலர்களும், ஓரு வருடத்திற்கு மேலான அனுமதி பத்திரங்களுக்கு 200 டொலர்களும் அறவிடப்படவுள்ளது. மேலும், ஏப்ரல் 10 முதல் திறன் மதிப்பீட்டு புள்ளிகள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில், போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் செலுத்தும் தபால் நிலையங்கள், குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப் பத்திர விவரம் மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபையின் தகவல் கட்டமைப்பின் இணைக்கப்படவுள்ளன. அந்த தரவுகளின்படி, விபத்து குறித்த குறுஞ்செய்தி மற்றும் விபத்து தொடர்பான காணொளிகள் தேசிய வீதி போக்குவரத்து பாதுகாப்பு அதிகார சபையினால் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும். வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன்படி, கல்வி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவை இணைந்து ஏப்ரல் 3ஆம் திகதி முதல் ஒவ்வொரு பாடசாலைகளிலும் வீதி பாதுகாப்பு ஒன்றியங்களை நிறுவ தீர்மானிக்கப்பட்டளது. பல்வேறு படிமுறைகளின் கீழ் இத்திட்டத்திற்காக பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதக்கம் வெள்வோர் சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படுவர். கல்வியற் கல்லூரிகளிலும் வீதி போக்குவரத்து தொடர்பிலான ஒன்றியங்களை நிறுவி மேற்கூறியது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்திருக்கிறோம். அதற்கு மேலதிகமாக வீதி விதிமுறைகள் மற்றும் வீதி போக்குவரத்து தொடர்பிலான அறிவை பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றுகொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபை 1998 இல் நிறுவப்பட்டது. தற்போதைய நிலைமைகளுக்கமைய அதற்காக ஏற்பாடுகளை செய்ய முடியாது என்பதால் தேசிய வீதிப் போக்குவரத்து அதிகார சபையை வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவாக மாற்றியமைப்பதற்கான அங்கீகாரத்தை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார். அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/179468