Everything posted by kandiah Thillaivinayagalingam
-
குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் பாரசீக வளைகுடாவுடனும் மெசபடோமியாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். குறிப்பாக யானைத் தந்தங்கள் சிந்து சமவெளியிலிருந்துதான் மெசபடோமியாவுக்கு ஏற்றுமதியாயின. இந்த யானைத் தந்தங்களுடன், தந்தங்களைக் குறிப்பதற்கான சொற்களும் பாரசீக மொழிக்கும் மெசபடோமியப் பகுதிகளில் வழங்கப்பட்ட மொழிகளுக்கும் ஏற்றுமதியாயின. ஆகவே, இந்த நாடுகளைச் சேர்ந்த அக்கேடியன், எலமைட், ஹுர்ரியன், பழங்கால பாரசீக மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் எழுத்துகளில் சிந்து சமவெளியிலிருந்து வந்திருக்கக்கூடிய சொற்கள், குறிப்பாக யானைகள், தந்தங்களைக் குறிக்கக்கூடிய சொற்கள் கிடைக்குமா என ஆய்வுசெய்தார் பெங்களூரைச் சேர்ந்த பஹதா அன்சுமாலி முகோபாத்யாய [Bahata Ansumali Mukhopadhyay]. உள்ளூரில் தயாரிக்கப்படாத, கிடைக்காத ஒரு பொருளை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது, அந்தப் பொருளை எந்த வெளிநாட்டிலிருந்து வாங்குகிறோமோ அங்கு வழங்கப்படும் சொல்லாலேயே அழைக்கிறோம். இந்த அடிப்படையை மனதில் கொண்டு தேடியபோது அவருக்கு 'பிரு/பிரி' என்ற சொல்லும் அவற்றின் வேறுவிதமான உச்சரிப்புகளும் கிடைத்ததன. இந்த 'பிரு' என்ற சொல்லுக்கு அக்கேடிய மொழியில் 'யானை' என்றும் பழங்கால பாரசீக மொழியில் 'தந்தம்' என்றும் பொருள் இருந்தது. பழங்கால எகிப்திலும் தந்தங்களைக் குறிக்கும் சொற்கள் இருந்தன என்றாலும் 'அப்', 'அபு' போன்ற ஒலிக் குறிப்புகளாக இருந்தன. ஆகவே, மெசபடோமியாவில் புழங்கிய 'பிரு/பிரி' என்ற சொல் சிந்துச் சமவெளியில் இருந்தே வந்திருக்க வேண்டுமென முடிவுசெய்தார் பஹதா. பல திராவிட மொழிகளில், 'பிலு', 'பெல்லா', 'பல்லா', 'பல்லவா', 'பல்' என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் பல யானைகளையும் குறித்தன. ஆனால், 'பிலு' என்பது எப்படி அக்கேடிய மொழியில் 'பிரு' என்றானது என்பதற்கும் விடை தேடியிருக்கிறார் பஹதா. அதாவது, பழங்கால பாரசீக மொழியில் 'ல' என்ற உச்சரிப்பு இல்லை. அதற்குப் பதிலாக 'ர' என்ற உச்சரிப்பே பயன்படுத்தப்படுகிறது. யானையின் தந்தம் என்பது அதன் பல் என்பதால், தந்தத்தைக் குறிக்கும் "பல்", "பல்லு", "பில்லு" என்ற சொற்கள், 'பிரு/பரி என மாறியிருக்கின்றன. அதேபோல, Salvadora persica என்ற மரத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார் பஹதா. அரபியிலும் வட இந்தியாவிலும் 'மிஸ்வாக்' என இந்த மரம் குறிப்பிடப்படுகிறது. இந்த மரத்தின் பாகங்கள் பற்களுக்கு நன்மை செய்யக்கூடியவை என நம்பப்படுகிறது. தற்போதும் பற்பசைகள்கூட இந்தப் பெயரில் வெளியாகின்றன. சிந்துச் சமவெளி காலகட்டத்தில் இந்த 'மிஸ்வாக்' மரமும் 'பிலு மரம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிந்துச் சமவெளி பிரதேசத்தில் பல்துலக்க இந்த மரத்தின் குச்சிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்க்ககூடும் எனக் கருதுகிறார் பஹதா. தற்போதும் பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹரியானா போன்ற சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் இந்த மரங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆகவே, தந்தம், யானை, பற்களுக்குப் பயன்படக்கூடிய மிஸ்வாக் மரம் ஆகியவை எல்லாமே 'பல்' என்பதைக் குறிக்கக்கூடிய சொல்லில் இருந்தே உருவாகியிருக்கின்றன. இந்த 'பல்' என்ற வேர்ச்சொல், திராவிட மொழிகளில் அனைத்திலும் பொதுவானதாக இருந்தது. 'பிளிரு' என தெலுங்கிலும் 'பல்ல', 'பிலு' என கன்னடத்திலும் யானையைக் குறிக்கும் சொற்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் 1924ல் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி 'பிள்ளுவம்' என்ற சொல் யானையைக் குறிப்பதாகச் சொல்கிறது. ஆகவே, தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 'யானை', 'ஏனுக', 'ஆன' போன்ற சொற்களால் யானைகள் குறிப்பிடப்பட்டாலும், பல்லை அடிப்படையாக வைத்த சொற்களும் யானையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல் என்ற சொல்லில் இருந்து 'பல்லு', 'பல்லவா' போன்ற சொற்கள் உருவாகியிருக்க முடியும். ஆனால், 'பல்' என்ற சொல்லில் இருந்து 'பிள்/பில்", 'பிள்ளுவம்' போன்ற சொற்கள் எப்படி உருவாகியிருக்க முடியும்? இந்தக் கேள்விக்கு ஃப்ராங்க்ளின் சவுத்வொர்த்தின் Linguistic Archaeology of South Asia புத்தகம் விடையளிக்கிறது. அதாவது, 'பல்' என்பதைக் குறிப்பதற்கான வேர்ச்சொல் 'பிள்' என்பதாகக்கூட இருக்கலாம் என்கிறார் இவர். மேலே சொன்ன அடிப்படைகளை வைத்துத்தான் சிந்துச் சமவெளிப் பிரதேசங்களில் தொல் திராவிட மொழிகள் பேசப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார் பஹதா. ஒரு மொழியின் மூலத்தைக் கண்டறிவது போன்ற ஆய்வுகளுக்கு இது மாதிரியான அடிப்படைச் சொற்களே ஆதாரமாக அமைகின்றன. தந்தம், பல்துலக்கும் குச்சி ஆகியவற்றுக்கு ஹரப்பாவில் இந்த சொல்லில் இருந்து பிறந்த சொற்களே பயன்படுத்தப்பட்டிருப்பதால், சிந்து சமவெளியில் இருந்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும்" எனத் தெரிவித்தார். சிந்து சமவெளியில் பேசிய மொழியை ஏன் தொல் திராவிட மொழி எனக் குறிப்பிட வேண்டும்; திராவிட மொழிகளிலேயே பழைய மொழியான தமிழ் என்று அதனைக் குறிப்பிட முடியாதா என பஹதாவிடம் கேட்டபோது, "சிந்துச் சமவெளிப் பகுதியில் பேசியிருக்கக்கூடிய ஒரு மொழியை 'தொல் திராவிட மொழி' என்று குறிப்பிடுகிறோம். தற்போது பேசப்படும் திராவிட மொழிகளில் உள்ள பல தொன்மையான சொற்கள் அந்த மொழியில் இருக்கும். ஆனால், அந்த மொழி, தற்போது பேசப்படும் எந்த ஒரு மொழியாகவும் இருந்திருக்காது. ஆகவேதான் அதனை தொல் திராவிட மொழி என்கிறோம்" என்று விளக்கினார் மரபணு மட்டும் இல்லை, ஆதித்தாய்க்கு ஒரு மொழி கூட இருந்து இருக்க வேண்டும், அந்த மொழியும் இன்றும் எங்கள் எல்லோரின் உள்ளேயும் இருக்கின்றதும் போல. ஆமாம் அது தான் இந்த 'தொல் திராவிட மொழி' ஆகும் அதனால்த்தான் தெலுங்கரும் தமிழரும் தம்மையே அறியாமல் கதைத்தார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. இது வரலாறு !! புராணம் அல்ல !!
-
"நிலவே முகம் காட்டு .. "
"நிலவே முகம் காட்டு .. " ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியில் இருந்து அந்த நிலாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவரின் இளம் மகள் மட்டும் தன் மாடி அறையில் இருந்த சாளரத்தினூடாக நிலாவைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அன்று தான் அவள் முகத்தை முழுமையாக பார்த்தேன்! பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள் என அளவான முக அங்கங்கள் கொண்ட பொலிவான வெள்ளை முகம் என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது. இவள் முகத்தில் தோன்றிய வெண்ணிலவின் ஒளி வெள்ளம் என் நெஞ்சம் எல்லாம் பரவி நின்றது. பாபா முகம் எனக்கு முக்கியம் இல்லை. அவளையே பார்த்துக்கொண்டு ஓலைக் குடிசையின் முற்றத்தில் நின்றேன். தங்கள் மனசுக்கு பிடிச்ச உருவத்தை மனதில் நினைத்து கொண்டு பார்த்தால் அதன் முகம் நிலாவில் இருப்பது போல் தோன்றும் என்று யாரோ இதற்கு விளக்கமும் கொடுப்பது காதில் விழுந்தது. நானும் திரும்பி நிலாவை பார்த்தேன், அங்கு பாபா இல்லை, அவள் முகமே இருந்துது! 'நிலவே முகம் காட்டு' என என் வாயும் முணுமுணுத்தது. சோலை பறவைகளும் வண்ணாத்திப் பூச்சியும் அவளின் தலை மேல் படபடத்து, யார் முதலில் அவளின் மூங்கீலென திரண்ட தோளில், மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல தோளில் விழும் கருங் கூந்தலில், அமருவது என போட்டி போடுகின்றன. மாலைப் பொழுது மறையும் கதிரவன் கூட, உடனடியாக ஒரு கணம், மீண்டும் அவளை எட்டிப்பார்த்து மறைகிறது. அப்படி என்றால் நான் எங்கே? அப்படி ஒரு அழகு! நான் திரும்பவும் அவளை அண்ணாந்து பார்த்தேன். அவள் இன்னும் அந்த நிலவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். என்றாலும் நான் மனம் உடைந்து வாடியதை கண்டாலோ என்னவோ, திடீரென எனக்கு கையால் சைகை காட்டினாள். அது சரியாக விளங்கவில்லை என்றாலும், ஒரு நட்பின் அடையாளம் என்று மட்டும் விளங்கியது. அந்தக் கணமே, நாம் யார் யாராக இதுவரை இருந்தாலும், செம்புலத்தில் விழுந்த நீரைப்போல, எம் அன்புடை நெஞ்சம் இன்று கலந்தது போல் உணர்ந்தேன்! அந்த நிலாவுக்கு, பாபா என பொய் பரப்பியவனுக்கு, பொய்களிலேயே வாழும் ஏமாறும் கும்பலுக்கு நன்றி சொன்னேன். "யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே!" இன்னும் ஒரு முக்கிய கேள்வி என் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது, அவள் என்னை திருமணம் செய்வாளோ ?, இல்லை இது வாலிப வயதின் பொழுதுபோக்கு உணர்வோ? அது எனக்குப் புரியவில்லை?. என்றாலும், இப்ப தினம் தினம் அவள் கையால் கண்ணால் ஏதேதோ பேசுகிறாள். நானும் 'நிலவே முகம் காட்டு' என்று அதைப் பார்த்து ரசிக்கிறேன். ஆனால் ஒரு மாதம் கழிய, எங்கள் குடிசையை பார்த்துக்கொண்டு இருந்த அவளின் அந்த சாளரம், அதிகமாக பூட்டியே கிடந்தது. சிலவேளை திறந்தாலும், அதனால் எட்டிப்பார்ப்பது அவள் இல்லை. ஒரு நாள் கல்லில் ஒரு கடிதம் சுருட்டிக் கட்டி எங்கள் முற்றத்தில் விழுந்து இருந்தது. அதை நான் குடிசைக்குள் கொண்டு போய் திறந்து பார்த்தேன். என் கண்களில் மகிழ்வும் கண்ணீரும் வந்தன. யாரோ அவளின் வேலைக்காரி ஒருவள், நாம் இருவரும் ஒருவரை ஒருவர் ரசிப்பதை பெற்றோரிடம் சொல்லிவிட்டார்கள், அதனால் அவளுக்கு வேறு அறை கொடுத்துவிட்டார்கள் என்பதை அறிந்தேன். அது மட்டும் அல்ல, என்னுடைய முன்னைய சந்தேகத்துக்கு அதில் பதிலும் இருந்தது. அதை அவள் நேரடியாக, 'ஒரு நாள் சந்திப்போம் அப்ப நானே உங்க மணவாட்டி, நினைவில் கொள்ளுங்க!' என்று அந்தக்கடிதம் சுருக்கமாக இருந்தது. ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்ற பாரதியின் வழியில், ’அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்ற பாரதிதாசனின் கர்ச்சனையை அதில் கண்டேன்! அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை. ஆனால் 'நிலவே முகம் காட்டு' என்று அதில் அவள் அழகு முகத்தை காண்கிறேன். அங்கு பாட்டி வடை சுடவும் இல்லை, சாய்பாபாவை காணவும் இல்லை. நானும், அதன் பிறகு உயர் வகுப்பில் திறமை சித்தி பெற்று, பல்கலைக்கழகம் புகுந்துவிட்டேன். அது முந்நூறுக்கு மேல் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த படியால், ஆக விடுதலைக்கு மட்டும் தான் வந்துபோவேன். அப்படி ஒருமுறை வரும்பொழுது அவள் என்னை ஒரு சில நிமிடம் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்ப அவள் உயர் வகுப்பு மாணவி. தன் உள்ளங்கையில், தன்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தை, முகநூல் தொடர்பை எனக்கு காட்டினாள். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை, நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை" என்பது உண்மை என்றாலும், உண்மையில் இது ஆறுதலாக இருந்தது. ஒன்று மட்டும் உண்மை, முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? ஆமாம் "பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல், செறியெயிற் றரிவை கூந்தலின், நறியவும் உளவோ நீயறியும் பூவே" என்பது போல, இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? என்ற இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை? முகநூல் ஊடாக நறு மணம் வராது? என்பது எனக்குத் தெரியும். என்றாலும், நிலவே முகம் காட்டு என்ற கற்பனையை விட இது எவ்வளவோ மேல்? ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்பதால், இப்ப ' முகநூலே முகம் காட்டு' என்று அவள் முகத்தை மீண்டும் ரசிக்கிறேன்! எப்படியானாலும் நிலவு ஒரு பெண்ணாக, என் காதலியாக, கற்பனையில் எழுதுவதில் கட்டாயம் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. நிலவுக்கும் பெண்ணுக்கும் எப்போதும் ஓர் ஈர்ப்பு சக்தி உண்டு. நிலவைப் பெண்ணாக உருவகிப்பது அழகின் ஆராதனை என்பதைவிட 'நிலவே அவள், அவளே நிலவு' என்பதே பொருந்தும். அதுதான் 'நிலவே முகம் காட்டு' என்பதை மட்டும் நான் மறக்கவில்லை. ஏன் நிலவைக்காட்டித் தான் அம்மா எனக்கு உணவூட்டினாள் அன்று. 'வெண்ணிலவே வெண்ணிலவே விளையாட ஜோடி தேவை' என்று நான் 'நிலவே அவள் முகம் காட்டு' என்கிறேன் இன்று! "கண்கள் இரண்டும் மகிழ்ந்து மயங்க வண்ண உடையில் துள்ளி வந்தாய் விண்ணில் உலாவும் மதியும் தோற்று கண்ணீர் சிந்தித் தேய்ந்து மறைந்தது!" "வெண்மை கொண்ட என் உள்ளத்தில் பூண் போல் உன்னை அணிந்துள்ளேன் ஆண்டுகள் போனாலும் உன்னை மறவேன் எண்ணம் எல்லாம் நீயே பெண்ணிலாவே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"எதைத் தேடி என்ன பயன் ?"
"எதைத் தேடி என்ன பயன் ?" "அறிவைத் தேடி பள்ளிக்கூடம் போனேன் பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன் வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன் எதைத் தேடி என்ன பயன் ?" "அழகை ரசிக்க ஆசை வேண்டாமா? அன்பைப் பகிர நண்பி வேண்டாமா? இன்பம் கொள்ளக் காதல் வேண்டாமா? கணவன் மனைவி உறவு வேண்டாமா?" "உறவு கொள்ள காமம் தேடினேன் உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன் வாழ்வு முழுமையாக மழலை வேண்டினேன் எதைத் தேடி என்ன பயன்?" "வயது போக முதியோர் இல்லம் தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?" "உலகைப் புரிய மீண்டும் தேடுகிறேன் உண்மையை உணர ஆன்மிகம் தேடுகிறேன் நிம்மதி வேண்டி தனிமை தேடுகிறேன் எதைத் தேடி என்ன பயன் ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!”
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 02 தவளையைப் பற்றி ஒரு பழங் கதை உண்டு. தவளையை ஒரு கொதிக்கும் நீருக்குள் போட் டால், அது உடனடியாக துள்ளி வெளியே போய் விடும் . ஆனால் அப்படி இல்லாமல், சட்டியில் உள்ள நீரில் முதல் தவளையை போட்டு , பின் மெல்ல மெல்ல சூடேற்றினால் , அந்த தவளை, நீர் கொதித்து, அது இறக்கும் மட்டும் அங்கு இருந்து விடும். கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர் கூட இப்படியான ஒரு உவமை பாவிக்கிறார். ஆனால் தவளைக்கு பதிலாக ஆமை. "... உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இல்லாதேன் ..."என்கிறார். இப்படியான ஒரு நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம். ஆனால், எமது சித்தர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்பே, சமயம் என்ற அண்டாவில் இருந்து தம்மை விடுவித்து துள்ளி வெளியே வந்து எமக்கு உண்மையை தெளிவாக காட்டி விட் டார்கள். இந்த சித்தர்கள் தம்மை பின்பற்றுபவர்கள் என்று எவரையும் வைத்திருக்க வில்லை, அதே போல எந்த ஆசிரமமும் கட்ட வில்லை. அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையில் பக்தர்களுடன் தொடர்பு கொண்டார்கள்: இவர்கள் பக்தர்களை எந்த கட்டுப் பாடும் இல்லாமல் சுதந்திரமாக சிந்திக்க விட்டார்கள். எல்லா சித்தர்களும் ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை அலைய விடாமல் வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். 'மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்.. கலையின் பெயராலே காமவலை வீசும், காசு வருமென்றால் மானம் விலைபேசும், நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும், நிம்மதி யில்லாமல் அலை போல மோதும்...' என்று சும்மாவா சொல்லி வைத்தான்! அது மட்டும் அல்ல மனம் என்னும் இந்த பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன, அதற்காகப் பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டி ச்சித்தர் ஆவார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே பாடல்களை பாடினார். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன. "சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே." [பாடல்:98] "இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!" [பாடல்:61] "ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே." [பாடல்:94] சிவவாக்கியர் மற்றும் ஒரு முக்கிய சிறந்த சித்தர் ஆவார். இவர் பிராமண சட்டத்திற்கு எதிராக கொதித்து எழுந்தவர்., சாதி அமைப்பிற்கும், உருவ வழிபாட் டிற்கும், ஆலய சடங்குக்கும் எதிராக சமுதாயப் புரட்சி செய்தவர். இவரின் மூன்று பாடல்கள் கீழே தரப்பட் டுள்ளன. "பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ? பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!" [பாடல்:39] "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா; உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா; விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா; இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே" [பாடல்:47] "கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே." [பாடல்:34] ஒரு தனிப் பட்டவரை நல்ல மனிதனாக, ஆணவத்தை மையப்படுத்திய இனவாதி அற்றவனாக மாறுவதற்கே, ஆண்டவனோ அல்லது சமயமோ இருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிஸ்துவரும் , இஸ்லாமியரும், இந்துவும், சைவனும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவும், 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய வராகவும் இருக்க வேண்டும். நாம் எல்லோரும் ஒரே ஆண்டவைத் தான் நம்புகிறோம். ஆக, அந்த தெய்வீக சக்தியை நினைவு கூறும் எமது வழி தான் வேறு பட்டது. ஆனால், சமயத்தின் பெயரில், ஆண்டவனின் பெயரில் சிந்தும் குருதியும், வெறுப்பும் , ஆணவமும் அங்கு எதோ சில ஓட்டைகள் இருப்பதைக் சுட்டிக் காட்டுகிறது. இதனால் மனித சமூகம் துன்பப் படுகிறது. 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்பதை உணர வேண்டும். இந்த உலகம் எல்லை அற்றதாக, யுத்தம் அற்றதாக, சமயம் அற்றதாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள் . எல்லா அடிப்படையும் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றன . குடும்பம் ஒன்றாய் இருப்பின் அதுவே ஆரம்பம். சகோதர, சகோதரிகள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தி ஒற்றுமையாக வாழ்ந்தால் அதுவே ஆரம்பம். 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானு றையும் தெய்வத்துள் வைக்கப் படும்'. நல்வாழ்வை தேடி இந்த உலகின் அழகான வாழ்வை ரசிப்போம். நாம் சமயம், சாதி, சமூகம், நாடு என்ற எல்லைகளை தாண்டுவோம். இந்த உலகின் மைந்தராக வாழ்வோம். தமிழரின் சைவ சித்தாந்தம் ஒரு வாழ்க்கை வழி. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் என்றும் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித்தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை . இரண்டும் ஒன்றே! என்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு முழங்கு கிறது. எல்லைகளை தாண்டி எல்லோரையும் அணைக்கிறது! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:03 தொடரும் There was a old story about the frog? They say if you drop a frog into a pot of boiling water that it will immediately jump out, but if you place the frog in a pot at room temperature and gradually raise that temperature, the frog will actually sit there until it boils to death. We are now in this position ,But our Tamil Siddhas even 1500 years ago jump out from the religious pot and show us the real truth ! All of siddhars wanted to subjugate the senses . Winning over the five senses offers an absolute control of the body leading to the control of the wandering mind.One of them refers to the five senses as “five thieves”.The most popular and well known of the siddhar’s is "Pambatti Siddhar" (பாம்பாட்டிச்சித்தர்/the snake character) who may be taken to be a true representation of his tribe. He takes the snake for a symbol to represent the human Soul and uses the expression :"Aadu pampe"(ஆடு பாம்பே/ Dance Snake) as a refrain at the end of each stanza of his poem.The poem of this siddhar is in fewer than six hundred lines and deals with philosophic and spiritual matters in the authentic siddhar pattern with great passion.Three of his poems are given below: "Four vedas, six shastras, several treatises on strategies, Puranas, Agamas espousing arts, Varieties of several other books_ Oh Snake! Dance! Declaring all these as useless books" .--Verse/98 ["சதுர்வேதம் ஆறுவகை சாஸ்தி ரம்பல தந்திரம் புராணங்கலை சாற்று மாகமம் விதம்வித மானவான வேறு நூல்களும் வீணான நூல்களேயென் றாடாய் பாம்பே."] While the Two gathered mud One built the kiln for ten months. The kiln, though wonderful, Is not worth a fraction of a coin. Dance! Oh Snake! Saying this.--Verse/61 ["இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!"] "No one can cook the gourd that is painted on paper. Likewise despite searching in the eight directions there is no refuge.They build a temple for every town and pray ceaselessly. But has never seen the Lord’s feet.Dance! Oh Snake ! Saying this."--Verse/94 ["ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்களென் றாடாய் பாம்பே."] Sivavakkiyar [சிவவாக்கியர்] was another great Tamil Poet/siddhar who lived in the period preceding the 10th Century A.D.He was an early rebel against the Brahmanic order, he was resolutely opposed to the Caste system and was opposed to idol worship and temple ceremonies.Three of his poems are also given below: "Where is the pariah woman? Where is the high-caste woman? Are there numbers inscribed on the skin and flesh? Is the pariah woman’s delight different from that of a the high-caste woman?Analyse the pariah woman and the high-caste woman in you."-- Verse/39 ["பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ? பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ? பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!"] "Drawn milk doesn’t return to the breast. Churned butter doesn’t return to the butter-milk. The broken conch’s sound and the beings don’t re-enter the body. The blossomed flower and the fallen half-ripe fruit never return to the tree.The dead are never born. Never, never, never."--Verse/47 ["கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா;உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே"] "Where are the temples? Where are the holy ponds? You loathsome people who worship the temples and ponds! Temples and ponds are in one’s mind. There is neither creation nor destrution. Never, never, never."--Verse/34 ["கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே! கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே! ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே."] The God or religions are there to make person good human and not the ego centric racist. Every christian or Muslim or hindu should be more acceptable and should be ready to appreciate others religion by visiting each others church mosque and temples.We all believe in one god and its just our way of remembering the Divine power is different. but the bloodshed, hatred and ego shows that there are some loops holes present in the religion and because of this the society is suffering .United we stand, divided we fall, imagine if the World could be one, no Religions, no borders, no wars. The basics all begin at home, if the family can stand as one, that will be the beginning. If brothers & sisters learn to love and live in harmony, that is the beginning.Lets strive for well being, for a beautiful life on this planet. Let's break through the lines of religion, caste, community and even country. lets dissolve the borders. Let us be citizens of this planet. Let us care for this earth.Even Saiva Siddhantam[சைவ சித்தாந்தம்] Philosophy of Tamils is a way of life and This does not advise us to practice anything against nature or interfere with freedom and liberty of people. There is no place for superstitions and blind faith.In the name of God and religion, it does not divide or dissect people.They taught us that "God is LOVE and LOVE is God" ["அன்பே சிவம்" "ANBE SIVAM." -"தென்னாடுடைய சிவனே போற்றி ; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி"]Our Saiva view of life is universal even,2000 years ago.Puranaanooru, proclaimed to the whole wide world :"யாதும் ஊரே, யாவரும் கேளீர்"/"every country is my own and all the people are my kinsmen."and there by proclaimed universal peace! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:03 Will follow
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 29 பரதநாட்டியம் தமிழரின் பாரம்பரிய நடனமாக பண்டைய தமிழக ஆலயத்தில் இருந்து வளர்ச்சி அடைந்து, இன்று தமிழரின் கலாச்சார மற்றும் பாரம்பரிய அடையாளத்தை சித்தரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. இது முன்னைய காலத்தில் தேவதாசிகளால் அல்லது கோயில் நர்த்தகிகளால், ஆலயத்தில் ஆண்டவனுக்கு நன்றியை செலுத்துமுகமாக, ஆலயத்தின் புனித இடத்தில் நடை பெற்று, நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து, பரத நாட்டியமாக முழுமை அடைந்தது எனலாம். அது மட்டும் அல்ல, இந்த ஆண்டவனுக்கு முன்னால் ஆடும் புனித நாட்டியம் தொடர்ந்து எந்த வித இடைஞ்சலும் இல்லாமல் தொடரும் பொருட்டு அவர்கள் ஒரு வித துறவி வாழ்க்கையையும் கடைபிடித்தனர். இவர்கள் மற்றும் பல நாட்டிய தாரகைகளுடன் அரச சபையில் பல்வேறு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு, அரசனால் அழைக்கப்பட்டு பெருமைபடுத்தப் பட்டார்கள். இந்த நாட்டியம் ஒரு மக்களை மகிழ்விக்கும் பொழுது போக்காகவும் அதே வேளை அது தமிழரின் பண்பாட்டை உள்வாங்கி தன்னகத்தே கொண்டும் [Dance is embodied culture] இருந்தது. புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப் பட்டதாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு கதை உண்டு. என்றாலும், அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும், அதாவது , "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லி லிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (காலத்தை அறுதியிடும் அளவு) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படு கிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் எனப்படும் இசையை நேர பகுப்பின் படி பிரிக்கும் விதி சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகிறது. தமிழர்களின் ஆதியும், இன்று வரை குறைந்தது 2500 ஆண்டுகளு க்கு மேலாக தொடரும் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது, பெருமை படத்தக்கது. நமது கலை கலாச்சாரத்தை எத்துனை விதமாக கூறினா லும், நடனத்தின் மூலாமாக சொல்லும் போது அழகு மேலும் அதிகரிக்கின்றது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடனம் தான் பரதநாட்டியம் ஆகும். தமிழரின் தொன்மையான நாட்டியமான பாரத நாட்டியத்திற்குள் அவர்களின் வரலாறும் நடை முறை பழக்கங்களும் [history and ethos] இணைக்கப் பட்டு, அவை ஒரு மேடையில் ஆடுகையில், பார்ப்பவர்களுக்கு அவர்களின் பண்பாட்டு கூறுகள் சென்றடைகின்றன. அவர்கள் வெளிப்படுத்தும் அசைவும் இசையும் உலகிற்கு ஒரு கதையை - தமிழரின் நம்பிக்கைகள், சூழல், பொருளாதாரம், மற்றும் அவர்களின் சமூக மதிப்புகளை வெளிப்படுத்து கின்றன [The movements they use and the music are meant to tell a story to the rest of the world – a story about their beliefs, the environment, their economy, or even their social values]. எனவே பரத நாட்டியம் எமது இளம் சந்ததியினருக்கு அறிமுகப் படுத்துவதால் அவர்களுக்கு தாம் யார் ? மற்றவர்கள் யார்? என்ற வேறுபாடு தெளிவாகத் தெரியும் என்று நம்புகிறேன். கலை எமது வாழ்வின் ஆரம்பத்திலேயே எம்முடன் கலந்தது. நாம் நாடோடியாக திரிந்த பொழுது பாடினோம் ஆடினோம், வேடுவராக இருந்த பொழுது குகையின் சுவரில் ஓவியம் வரைந்தோம், உதாரணமாக, பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வீரர்களின் கதையில் இருந்து அவர்களை மகிழ்விக்க நடித்து காட்டியது முதல் கலை எம் வாழ்வில் ஆழமாக பதிந்து விட்டது எனலாம். ஒரு மனிதனுக்கு கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், அதை நாம் கூர்ந்து பார்த்தால், எமக்கு பல பல வர்ணங்கள் அங்கு பளபளக்கும். உதாரணமாக வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, வாழ்வை, கலை பிரதி பலிப்பதை நாம் உணர்வோம். இன்றைய இயந்திர வாழ்வு எம்மை சூழும் பொழுது, எமக்கு 'இயல் இசை நடனம்', ஒரு புது தெம்பு கொடுக்கிறது. அது மட்டும் அல்ல சூதும் வஞ்சகமும் எம் வாழ்வை கவ்வி, நாம் யார் என்பதை மறக்கும் பொழுது, இந்த கலை எமக்கு துணை நின்று, எம்மை யார் என அடையாளம் காட்டுகிறது. இது தான் பாரம்பரிய கலையின் பெருமை எனலாம். இப்படியான எல்லா கலைகளிலும் நாட்டியம் முறையான அசைவுகளை கொண்டு நாடகம் மாதிரி மற்றவர்களின் கண் முன் அரங்கேறுவதால் அவர்களின் மனதில் இலகுவாக பதியக் கூடியது. எனவே பண்பாட்டு நடனம் [Cultural Dance] ஒரு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். இது எங்கள் வழி முறை மூலம் மற்றவர்களுக்கு எங்கள் பண் பாட்டில் எவை எவையை நீங்கள் அறிய வேண்டும் என்பதை எடுத்து உரைப்பதாகும். அது மட்டும் அல்ல, இதனால் மற்றவர்கள் எங்கள் மரபுகள், பாரம் பரியங்கள் மற்றும் சமூக நீதிகளை [our customs, traditions and norms] அறிந்து மதித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வழி சமைக்கிறது. அறிவு வளர்ச்சியும் நாகரீகமும் முதிர்ச்சிப் பெறுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆடலிலும் பாடலிலும் ஈடு பட்டு வந்தான். நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய இசை, ஆடல் முதலியவை முன்னேற்றம் கண்டு கலை வடிவங்களாக முகிழ்ந்தன. இந்தியாவில் மிகத் தொன்மையான கூத்து நூல் எனக் கருதப் பெறும் நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவர் நாட்டியம் எனும் சொல்லுக்குப் பாடல், ஆடல், அபிநயம், உரையாடல், ஒப்பனை, காட்சித் திரைகள் ஆகியவை ஒருங்கமைந்த நாடகம் என்றே பொருள் கூறினார். பரத முனிவர் தம் நூலில், தென்னாட்டில் தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் இசையிலும் நடனத்திலும் சிறபுற்று விளங்கினர் எனப் புகழ்ந்துரைக்கின்றார். இவ்வாறு மிகத் தொன்மை வாய்ந்ததும் புகழ் பெற்றதுமான ஆடல் வகை பரத நாட்டியம் ஆகும். இதனை நம் முன் னோர் தாசியாட்டம், சின்ன மேலம், சதிர் என்ற பெயர்களில் அழைத்தனர். பண்டைய இலக்கிய நூல்களில், மரபு நாட்டிய கலையின் பூரண நூலாக கருதப்படும் சிலப்பதிகாரம், இசையும் ஆடலையும் விவரிக்கும் கருவூலம் போன்ற நூல் எனலாம். என் றாலும் பரத நாட்டிய சாஸ் திரத்திற்கான அடித்தளமாக சாத்தனார் என்பவர் எழுதிய கூத்த நூல் அதிகமாக இருந்து இருக்கலாம் என அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். கூத்திற்கு தரும் விளக்கமாக, ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, என கூத்த நூலில் வரும் பகுதி மிக அழகாக அமைந்துள்ளது. இது ஒரு மிக ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த மறைபுதிரான அடிகளாகும். இந்த 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய அடிகள் இன்றும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல அடிகலாகவே இருக்கின்றன. மேலும் சங்க இலக்கியமான, பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில், நாட்டிய குறிப்புகள் இருப்பதையம் காணலாம். உதாரணமாக, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, பதிற்றுப் பத்தில் ஆட்டக்கலை குறித்த விளக்கம் வெகுச்சிறப் பாக அமைந்திருப்பதை பதிற்றுப்பத்து. 51; 17-27, பதிற்றுப்பத்து. 47, 5-8 போன்ற அடிகளால் அறிய முடிகிறது. நெய்தல் நிலமான கடற்கரையினூடே பனஞ்சோலைதனில் மணல் திட்டுகள் சூழ்ந்த-பள்ளத்தாக்குகள் நிறைந்த- ஒரு மணல் பரப்பில்- ஞாழல் மரப்பூக்களின் வாசத்தோடு ஆடுமகள் விறலி பீடுநடை போட்டு- வட்ட வடிவ வலையாட்டத் தினை நிகழ்த்திய விதம் இப்பாடல்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. மலர்ந்த நெய்தல் மலர் போன்ற கண்களை உடைய விறலி- புன்முறுவலுடன் அமர்ந்தும், குதித்தும், வீழ்ந்தும், எழுந்தும், உருண்டும், சுழன்றும் ஆடிய ஆடல் பாம்பிற்கு இணையாகவும் கூறப்பட்டுள்ளது. “வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் நனை உறு நறவின் நாகுடன் கமழச் சுடர் நுதல் மட நோக்கின் வாள் நகை இலங்கு எயிற்று அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் வெள் வேல் அண்ணல் ” [பதிற்றுப்பத்து 51; 17-23] சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் பாண்டில் விளக்குப் பரூஅச்சுடர் அழல *நன் நுதல் விறலியர்* ஆடும் தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே. [பதிற்றுப்பத்து 47, 5-8] என்றாலும் இந்த தேவதாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்பான் பண்பாட் டிற்கு போகவேண்டி இருக்கிறது. அங்கு கண்டு எடுக்கப்பட்ட கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்கள் வெவ்வேறு நாட்டியத்தின் முத்திரை களை காட்டுகின்றன. இவைகளில் மிகவும் பிரபலமானது நிர்வாணமான ஒரு நடன மாது. அவளின் இடுப்பு கவர்ச்சி யூட்டக் கூடியதாக முன்தள்ளி [முன்பிதுங்கி] இருப்பது குறிப்பிடத் தக்கது. இது இந்தியாவில் நடனம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதற்கான ஒரு சான்றாகும். இந்த புகழ் பெற்ற சிந்து சம வெளி கைவினை பொருள், கிட்டத்தட்ட 4 அங்குல உயரத்தை கொண்ட செம்பு உருவம் ஆகும். இந்த ஒய்யார வார்ப்பு ஒரு கருத்த பழங்குடி பெண் ஒன்றை சித்தரிக்கிறது, அவள் உடையில்லாது தனது நீண்ட தலை முடியை கொண்டை போட்டு உள்ளாள். இடது கையை வளையல்கள் முற்றாக அலங்கரிக்க, வலது கையின் மேற் பகுதியை ஒரு காப்பும் ஒரு தாயத்தும் அலங்கரிக்கிறது. அவளது கழுத்தை சுற்றி ஒரு வகை சிப்பி அட்டிகை இருக்கிறது. எம் நாட்டில் இன்று உள்ள பல நாட்டிய கலைகளில் இந்த சிலையின் கம்பீரமான நிலையை காணலாம். வலது கையை இடுப்பிலும் இடது கையை இறுக்கமாக பிடித்திருப்பதும் தமிழரின் சம்பிரதாயமான நாட்டிய அபிநயத்தில் ஒன்றாகும். இந்த பண்டைய உலோக சிற்பம் சிறிதாக இருந்தாலும் பல தகவல்களை எமக்கு தெரிவிக்கிறது. பல சிறந்த கற்றறிவாளர்கள் இந்த உலோக வார்ப்பு ஒரு தேவதாசியை அல்லது ஒரு புனித பரத்தையை பிரதிநிதி படுத்துவதாக கருதுகிறார்கள். அந்த பெண் சிலை அம்மணமாக இருப்பதாலும் மருட்டுகின்ற ஒரு நாட்டிய தோரணையில் இடுப்பில் கையையும் தளராத் தன்னம் பிக்கையை முகபாவத்தில் காட்டுவதாலும் ஒரு வேளை அவர்கள் அப்படி கருதியிருக்கலாம் என கருதுகிறேன். பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள், முகபாவங்கள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கை முத்திரைகள் காட்டும், கை முத்திரைகள் வழி கண் செல்லும், கண்கள் செல்லும் வழி மனம் செல்லும், மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர், மிக அழகாக, மிதிலைக் காட்சிப் படலம், எண்: 572 இல், "கைவழி நயனஞ் செல்லக், கண்வழி மனமும் செல்ல, மனம் வழி பாவமும், பாவ வழி ரசமும் சேர". எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நாட்டியத்தில் கை, கால், உடலசைவுகளுக்கு மட்டுமின்றி மன உணர்ச்சிக்கும் வேலை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு நர்த்தகிக்கு அசைவு உடலில் மட்டும் முக்கியமன்று மன உணர்ச்சியிலும் தான் என்பது தெரிகிறது. இது இந்த குறிப் பிட்ட சிந்து வெளி நடன மாதில் வெளிப்படுவதை நீங்கள் இலகுவாக காணலாம். மேலும் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் / அரங் கேற்று காதையில், சிலப்பதிகார வரிகள்: 157-159 இல் "பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத் தென, நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித் துக் காட்டினள் " என்கிறார் அதாவது, பொன்னால் செய்த பூங்கொடி ஒன்று வந்திருந்து நடனமாடியது போலவே அபிநய பாவங்கள் அழகுறக் கடைப் பிடித்து நாட்டிய நூல்கள் சொல்லி வைத்த முறையது தவறிடாது அனைவரும் கண்டு இன் புற்றிட நாட்டிய அரங்கினில் ஆடினள் மாதவி என்கிறார். எனவே ஒவ்வொரு தமிழனும் அவர்களின் மரபு பண்பாட்டு நடனமான பரத நாட்டியத்தை, மத காரணங்களுக்காக அல்லாமல், தங்களை, தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக கடைபிடிக்க வேண்டும் என்று நம்புகிறேன் [I believe every Tamils should know their traditional dance form, not for religious reasons but as a way of expressing themselves]. நீங்கள் ஏதாவது காரணத்திற்காக கொண்டாட வேண்டுமாயின், அந்த கொண்டாட்டத்தை மேலும் வலுவூட்ட , சிறப்பு படுத்த நடனம் கட்டாயம் ஒரு வழியாகும். முன்பு பலரும் பரதநாட்டியம் பயின்றனர், ஆனால் இன்று அப்படியல்ல, சினிமாவில் மிகவும் பிரபலமான பாலிவுட் நடனம் [Bollywood dancing] அந்த இடத்தை எடுத்து- எமது பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக, பரம்பரை பரம்பரையாக கடத்தப் பட்டு, படிப்படியாக காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து தனது புனிதத் தன்மையை [sacredness] நிலை நிறுத்தி, எமது தமிழ் பண்பாட்டின் ஒரு பகுதியாகி, தமிழ் இனக் குழுவின் அல்லது தமிழகத்தின் பரம்பரை அடையாளத்தை [traditional identity] பிரதிநிதித்துவம் படுத்திய - அந்த பரதநாட்டியத்தை மறக்க தொடங்குகின்றனர். எனவே நாம் எமது அடுத்த தலை முறைக்கு இதை கொண்டு போக தீவீரமாக செயல்பட வேண்டும் என்று நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 30 தொடரும்
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 15 பொதுவாக சுமேரியன், ஆன்மீக விடயங்களில் கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொரு நகரமும் குறைந்தது ஒரு கடவுளை வழி பாட்டிற்கு வைத்திருந்தார்கள். உதாரணமாக, நன்னா [Nanna] கடவுளை ஊர் நகரம் வைத்திருந்தது. தெய்வத்தின் கோபத்தை தவிற்பதற்கு என்று ஒழுங்காக தாரளமாக காணிக்கை செலுத்தினார்கள். சிலவேளை, தேவைக்கு அதிகமாகவே கொடுத்தார்கள். உதாரணமாக ஷ்தார் [Ishtar, சுமேரியன் கடவுள், "ஈனன்னா"வின் மறுபடிவம் ஆகும்] ஆலயம், அங்கு வணங்கும் பெண் பக்தர்களிடம் அவர்களின் கன்னிமையையே [virginity] வற்புறுத்தியது. கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [Herodotus, கி மு 490-425] தனது குறிப்பில் ஒரு பெண் கல்யாணம் செய்யும் முன், ஆலயத்தில் தேவதாசியாக கடமையாற்ற நிரபந்திக்கப் பட்டார்கள் என குறிப்பிடுகிறார். இது அவர்கள் ஒரு நல்ல சிறந்த ஆண்மகனின் [சற்புருஷனின் / a good or pious man] கவனத்தை தங்கள் மேல் இழுக்கும் வரை தொடரும் என்கிறார். அந்த சற்புருஷன் தனது சம்மதத்தை, தான் விரும்பும் அந்த பெண்ணுக்கு நாணயங்களையோ அல்லது ஆபரணங்களையோ சுண்டி ஏறிவதால் [கொடுப்பதால்] வெளிபடுத்துகிறார் என்கிறார். இதனால் அழகிய பெண்கள் சில நாட்களிலேயே தமது தேவதாசி கடமையை முடித்து வெளியேறி விடுவார்கள் என்றும் எளிய ஆடம்பரமில்லாத பெண் வருடக்கணக்காக காத்திருக்க வேண்டி வரும் என்றும் ஆகவே, இது ஒரு நியாயமற்ற முறை என்றும் குறிப்பிட்டுள்ளார். கன்னிப் பெண் ஒருவரை ஆண்டவனுக்கு பணி செய்ய கோயிலுக்கு கொடுக்கும் வழக்கம், பண்டைய தென் இந்தியாவிலும் அன்று இருந்தது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துபாட்டு, போன்ற சங்க இலக்கியங்களில் தேவதாசி பாரம்பரியம் இருந்ததிற்கான மேற்கோள்கள் காணப்படுகின்றன. அங்கு பலவிதமான தேவதாசிகளை குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக "கொண்டிமகளிர்", "விறலியர்", "கூத்தியர்", "பரத்தையர்" ஆகும். நமதுபண்டைத் தமிழ் கலாசாரத்தில், பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளை, ‘தேவரடியாள்’ [தேவிடிச்சி] என்பர். இதே முறை சில வித்தியாசங்களுடன் வட இந்தியாவில் ‘தேவதாசி’ என்று அழைக்கப்படும். சங்க இலக்கியம் தேவதாசிகளின் கதைகளை, செய்யுள் வடிவில் விவரிகிறது. சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை மற்றும் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் போன்றவை, தேவதாசிகளின் வாழ்க்கையை விளக்கமாக விவரிகிறது. அதாவது சங்கப் பாடல்களில் வரும் பரத்தையும், சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் இவ்வினமே. இவர்கள் பிரதானமாக ஆடும் கலையையும், பின், நிதானமாக கூடும் கலையையும் கைக்கொண்டு இருந்தார்கள். "பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் வில்லக விரலில் பொருந்தியவன் நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே." [குறுந்தொகை 370] பரத்தை தலைவனை விடாமல் தன்னோடு இருத்திக் கொண்டாள் என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை, ”தலைவன் என்னிடம் வருவதும் வராமல் இருப்பதும் அவன் விருப்பத்தைப் பொறுத்தது” என்று தலைவியின் தோழியர்களுக்குக் கேட்கும்படி, ஆம்பலின் அரும்புகளின் அழகாலும் செழிப்பாலும் ஈர்க்கப்பட்டு, தக்க சமயத்தில் தானாகவே வந்து மொய்த்து, வண்டுகள் அவ்வரும்புகளை வாய்திறக்கச் செய்வதைப் போல், தலைவன் தன் அழகையும் இயல்பையும் விரும்பித் தன்னிடம் வந்தான், நான் அவனைக் கூப்பிடவில்லை என்று பரத்தை கூறினாள். லியோனாட் வூல்லே [Sir Leonard Woolley, the British archaeologist], 1930 ஆண்டு, ஊர் நகரத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது, ஒரு கொடிய மர்மத்தை அம்பலப்படுத்தினார். ஊர் நகரத்தின் அரசனோ அல்லது இராணியோ இறக்கும் போது, பல பணியாளர்கள் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு பணி செய்யவென, அவர்களை தொடர்ந்து அங்கு, அந்த கல்லறையில் விஷம் அருந்தி, தமது உயிரையும் விட்டார்கள் என்ற உண்மை வெளி வந்தது. ஆனால் இவர்கள் தாமாகவே உயிர் துறந்தார்களா அல்லது துறக்க வைக்கப் பட்டார்களா என்பது தெரியாது. இதே போன்ற எண்ணங்களை, சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். இங்கு சங்க கால மகளிர், இம்மை மட்டுமின்றி மறுமையிலும், அதாவது அடுத்த பிறவியிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் என்ற மனநிலையை குறுந்தொகை-49 போன்ற வற்றால் காண்கிறோம். ‘இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரென் கணவனை யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே’ (அம்மூவனார், குறுந்தொகை-49.) இம்மை மாறி = இந்த பிறவி போய், மறுமை யாயினும் = மறு பிறவி வந்தாலும், நீயாகியரென் கணவனை = நீயே என் கணவராக வர வேண்டும், யானா கியர் = யான் + ஆகியர் =நானே, நின் னெஞ்சுநேர் பவளே = நின் நெஞ்சு நேர்பவளே = உன் மனதில் இருப்பவளே என்கிறது. சுமேரியர்கள் தமக்கிடையில் ஒரு பொது மொழி, பண்பாடு இருந்தும், தங்களுக் கிடையில் சமாதானத்தில் வாழ கற்றுக் கொள்ளவில்லை. அதாவது, ஒற்றுமை சுமேரியருக்கிடையில் நிரந்தரமாக நிகழவில்லை. முதல் ஒரு நகரத்தின் அரசன் மற்ற நகரத்தின் அரசர்களை வென்று எல்லா நாட்டிற்கும் அரசனாவான். அதன் பின் இன்னும் ஒருநாட்டின் அரசன் அப்படியே செய்வான். இப்படி மாறி மாறி அங்கு நடைபெற்றன. சுமேரிய அரசர்கள் தமக்கிடையில் ஒற்றுமை இன்றி, தங்களுக்குள் போர் புரிந்தது மட்டும் இன்றி, இதனால் அவர்கள் பலம் இழந்து, எப்படி தங்களை சுற்றியிருந்த செமிட்டிய மக்களிடம் தோற்று கி மு 2000 ஆண்டளவில் முற்றாக அங்கிருந்து மறைந்தார்களோ, அப்படித் தான் சங்க காலத்திலும் இந்த ஒற்றுமையின்மை தொடர்ந்தது என்பதை சங்க பாடல்கள் மூலம் அறிகிறோம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 16 தொடரும்
- ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!”
-
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!”
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும், கேள்விகளுடன் தான், அறிவு வளர்ச்சி அடையும் என்று. "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படை த்தான் .... மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்.... பொய் நீதியும் நேர்மையும் பேசுவான், தினம் ஜாதியும் பேதமும் கூறுவான், அது வேதன் விதி என்றோதுவான், மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்..." இப்படி இன்றைய நூற்றாண்டு கவிஞன் கூறினான். ஆமாம், என்னை அடிக்கடி தொந்தரவு செய்வது அல்லது அதிகமாக எனது ஆவலைக் கிளறுவது அவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் போது ஏன் இந்த மத பக்திமார்கள் அதை அவமதிப்பாக கருதுகிறார்கள் என்பதே! எமது தமிழ் சித்தர்கள் இதைத் தான் செய்தார்கள். உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்களே இந்த சித்தர்கள் ஆவார். சாதி, சமய சடங்குகளை கடந்து; சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மன மாச்சரியங்களை [பகைமைகளை] மாற்றக் கருதிய சீர்த்திருத்த வாதிகளாகவும் இவர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இந்த மத பக்தியாளர்களை வெளிப்படையாக கேள்வி கேட்டு எதிர்த்தார்கள். கடவுளைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். 'உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான், உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை' என்று உறுதியாகக் கூறினான். இன்னும் ஒரு சித்தர் 'சாஸ்திரங்களை எரித்தவனே' சித்தர் என்கிறார். இந்த எல்லா சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் மற்றும் பல்வேறு மத தரப்பினரும் மனித இனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மிருகம் போல் மாற்றுகிறார்கள். பொதுவாக, அதிகமான சமயம் மனிதனை சிந்திக்க விடாமல் கட்டுப் படுத்துகிறது. பல தெய்வ வழிபாடு நம்பிக்கைகள் இருந்த ஒரு காலத்தில், அதை எதிர்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் கொடுத்த சித்தர் சிவவாக்கியர் ஆகும். பிராமணர்களின் அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்து குரல் கொடுத்தவர். 'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப் பேசும் போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. எம்முள்ளேயே அவன் குடிகொள்ளும் பொழுது, ஏன் நாம் புனித நீராட வேண்டும்? ஆலயம் போகவேண்டும்? புனித மலை எற வேண்டும்? இப்படி பல முக்கிய கேள்விகளை வினவுகிறார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப் பழக்கங்கள் என்று இவர் சாடுகிறார். ஒரு பவுல் [Baul] பங்காள மொழி நாட்டுப் புற பாடல் 'எல்லாம் வல்லவனை எப்படி நீ அடைவாய்? போகும் வழி யெல்லாம் ஆலயம், போகும் வழியெல்லாம் மசூதி, போகும் வழியெல்லாம் குருக்கள், எல்லா பாதையும் மூடி விட் டனவே?? [the road to the Absolute is blocked by temples, mosques and the teachers '] என்கிறது. மற்றும் ஒரு பவுல் பாடல்: "இவ்வுலகில் உன் மதம் என்ன? ஒவ்வொருவனும் லாலனை கேட் டனர். லாலன் சொன்னான்: 'எப்படி மதம் இருக்கும்? நான் அதன் மேல் கண் வைக்கவில்லை. சிலர் கழுத்தை சுற்றி பூ மாலை அணிகிறார்கள், சிலர் தஸ்பீஹ் [tasbis] என்ற பிரார்த்தனை மணிகள் வைத்திருக்கிறார்கள் .எனவே மக்கள் சொல்கிறார்கள் இவர்கள் வேறு வேறு மதத்தினர் என, ஆனால் நான் கேட் கிறேன் , நீங்கள் பிறக்கும் போதும் உங்கள் மதத்தின் சின்னம் அணிந்த பிறந்தீர்களா? இல்லை சாகும் போது தானும் அதை அணிந்து போகிறீர்களா ? ' [Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? "] என்று சித்தர்கள் மாதிரி வினாவுகிறது. சித்தர்கள் எந்த சமயத்துடனும் தங்களை இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களின் சில சித்தாந்தங்கள் சங்க காலத்திலேயே ஆரம்பிக்கப் பட்டதாக கருதப்படுகிறது [கி மு 700 to கி பி 300], எனினும் அவை ஏழாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வளர்ச்சி அடைந்து பண்ணிரெண்டாம் ஆண்டில் முழுமையடைந்ததாக கருதப் படுகிறது. “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்” என்று சிவவாக்கியர் நேரடியாக கேட் கிறார். அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட மூடர்களே, கடவுள் என்பவர் தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ? அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார். இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்று அந்த காலத்தில் சாடுவதென்றால், அவர்களின் கண் மூடித் தனமான பழக்க வழக்கங்களைப் ஆட்டிப் பார்ப்பதென்றால், எவ்வளவு துணிவு இவர்களுக்கு இருந்து இருக்க வேண்டும்? அதே போல,"மாரி தான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? மானிலஞ் சுமக்க மாட்டேனென்னுமோ? கதிரோன் சிலரைக் காயே னென்னுமோ? ...... குலமு மொன்றே குடியுமொன்றே, இறப்புமொன்றே பிறப்பு மொன்றே" என பிற் கால கபிலர் [கபிலர் அகவல்] கேட்கிறார். ஆண்டவனோ அல்லது சமயமோ , எதற்க்காக இவ்வுலகில் ஏற்படுத்தப் பட்டதோ அதை இன்று அவை வழங்க வில்லை. ஒவ்வொரு சமயத்தினதும் முக்கிய கடமை எப்படி ஒருவரை ஒருவர் அன்பு செலுத்துவது என்பதை போதித்து, அதன் மூலம் எம்மை, எமக்கும் உண்மைக்கும் அருகில் கொண்டுவருவதே ஆகும். "உன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்... தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா "ஆனால் , இன்று இதற்கு எதிர் மாறே நடைபெறுகிறது. சமயம் எம்மை ஒன்று சேர்க்கவில்லை, எம்மை பிரிக்கிறது. சமயத்திற்கு சமயம் மட்டும் அல்ல, அவை தமக்குள்ளும் பிரிந்து நிற்கின்றன. சமயம் பழைமை நெறிவாதத்தையும் சகிப்பு தன்மையின்மையையும் எமக்கு கொண்டுவந்து இன்று மிகப் பெரிய பிரச்சனை கொடுக்கிறது. இதனால், மத வெறியர்களை உண்டாக்கி , எமது சுதந்திரத்தை ஆண்டவனின் பெயரால் நாசம் பண்ணுகிறது. ஆகவே, எமது நோக்கத்தை நாம் சரிப்படுத்த வேண்டும், வாழ்க்கை வழியை சரிப்படுத்த வேண்டும், சமயங்கள் தொடக்கத்தில் எதை விரும்பியனவோ அப்படி மீண்டும் வார்த் தெடுக்க வேண்டும். எல்லா சமயங்களும் மனிதாபிமானத்தையே அறிவுறுத்தின. ஆகவே அதை அப்படியே பின்பற்றலாமே? அமைதி எமக்குள்ளே தான் உண்டு. அதே போல அன்பும் எமக்குள்ளே தான் உண்டு. ஏன் ஆண்டவனும் எமக்குள்ளே தான் உண்டு. எனவே கடவுளே அன்பு, அன்பே கடவுள், இதை அறிந்தால், எமக்கு அது உள் அமைதி தரும். ஒரு குழந்தை பிறக்கும் போது அதற்கு அன்பு மட்டுமே தெரியும் , மிச்சதெல்லாம் நாம் கற்பித்ததே. வெறுப்பு, பொறாமை, பேராசை, ஏன் பயங்கரவாதம் கூட நாம் சொல்லிக் கொடுத்ததே. என்னத்தை விதைத்தாயோ அதையே நீ அறுவடை செய்கிறாய். அப்படியென்றால் நீ ஏன் அன்பை விதைக்கக் கூடாது? அன்பை விதைத்தால் அதை விட பெருவாரியான அன்பை அறுவடை செய்யலாமே. அன்பு பலத்தினால் திணிக்க முடியாதது. ஆனால் சமயம் அப்படி அல்ல. இதை நாம் அறிய வேண்டும். ஆகவே நாம் மனித நேயம் தழுவி புது வாழ்க்கை வழியை அமைப்போம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி:02 தொடரும் Most, if not all of us are force fed the concept of god, religion, and the suspect practices that come with the package from the time we can walk.One must understand that Faith and disbelief, God and atheism, caste and equality are twin born foes[opponents]. When one is born, the other rises to challenge it. As every one knows,Knowledge progresses with questioning.What annoys and probably intrigues me is why all these so called believers take offence when their beliefs are questioned.Our so called Tamil siddhars too did the same thing,They challenged these so called believers with questions.A Siddha is a free thinker and a revolutionary who refuses to allow himself to be carried away by any religion or scripture or rituals. One Tamil Siddhas says: "A Siddha is one who has burnt the sastras". All the sastras, Vedas, Puranas, and the various religious sects turn humanity into conditioned animals.Karai Siddhar draws a distinction between a Siddha and a non-Siddha by saying that a Siddha points to the path of the experience whereas a non-Siddha points to the path of scriptures.While poly-theism was an unquestioned canon of their time siddhars dared to speak of “One Indivisible God”. Siddhars like Siva Vakkiyaar have directly attacked the empty and meaningless rituals practised by the brahmins of their time.He raises a pertinent question: why should we go out to the sacred rivers, temples, mountains, etc.,when the threshold is in us.According to Sivavakkiyar a Siddha does not worship any deity in the temple. As a Baul sings: "the road to the Absolute is blocked by temples, mosques and the teachers and another Baul songs says :"Everyone asks: "Lalan, what's your religion in this world?"Lalan answers: "How does religion look?",I've never laid eyes on it.Some wear malas [Hindu rosaries] around their necks,some tasbis [Muslim rosaries], and so people say they've got different religions.But do you bear the sign of your religion when you come or when you go? " .The Tamil Siddhas do not belong to any religion or samayam. "Samayam" in Tamil means "convention", "rule".Some of their ideologies are considered to have originated during the First Sangam period [700BC to 300AD],And formulating over a five hundred year period,between the 7th and the 11th centuries,but fully flowering only after the 12th century.siddhars[சித்தர்],Who lived outside the pale of society, asked blunt questions: ‘What is this mantra you mumble within your mouth going round and round a planted stone,offering it flowers? Can a planted stone talk when the Lord is within you? Can the pot and the spoon feel the taste of food cooked in them?”-Sivavakkiyar [“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறி யுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கை யில்..”--சிவவாக்கிய சித்தர்.].“Will the rains fall only for a few and exclude others? Will the winds discriminate against a few? Will the earth refuse to bear the weight of a few? And the sun refuse to shine on some?”["மாரி தான் சிலரை வரைந்துபெய்யுமோ?காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ?மானிலஞ்சுமக்க மாட்டே னென்னுமோ?கதிரோன்சிலரைக் காயே னென்னுமோ? ......குலமுமொன்றே குடியுமொன்றே,இறப்புமொன்றே பிறப்புமொன்றே"] asked a latter-day Kapilar in a famous " Akaval" poem [கபிலர் அகவல்] It is a fact,God or Religions today no longer serve the purpose for which they came into existence. The very basic theme of each religion was to teach, how to love each other and bring us closer to ourselves and to truth. Today the opposite is happening, Religions are not uniting but dividing us. Forget the differences from religion to religion, each now has so many divisions. The biggest problem Religions are bringing in is Fundamentalism and in-tolerance, giving birth to Fanatics, who are ready to destroy our freedom, just in the name of religion.It is about time, to rectify our vision, rectify our way of life, and mould them to what the various religions originally desired. Humanity is the religion which all religions preach, so why not follow it as such .Peace is within us, Love is within us, God is within us. That means, God is Love, Love is God, and the understanding of this truth gives us that internal Peace.When a child is born, the only thing he/she knows is love. The rest we teach, hatred, jealousy, greed, even terrorism.As we sow, so shall we reap, this is the age-old saying, So why not sow seeds of Love and reap tons of Love !Love is not something which can be given by force, but Religions as they stand today are given by force, by parents to children. Anything given by force can never have fruitful results and can turn us into completely different people, and take us miles away from truth and Humanity.So let’s embrace Humanity and begin a new way of life! [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] Part:02 Will follow
-
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை]
எல்லோருக்கும் நன்றிகள்
-
"காதல் கடிதம்"
"காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். அந்த சுகத்தில் நான் மெளனமாக போய்விடுவேன், ஒரு வார்த்தை கூடப் வாயில் வராது. என் உதடுகளினால் உன்னை முத்தமிட முடியாதலால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுகிறேன், உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்கிறேன். நான் கவிதை கூட இப்ப எழுதுகிறேன்! நான் என் பல்கலைக்கழக படிப்பை அடுத்த கிழமை பேராதனையில் ஆரம்பிக்கிறேன். இனி உன்னை, பாடசாலைக்கு போகும் பொழுது பார்க்கும் சந்தர்ப்பம் அற்றுப் போகப்போகிறது. அது என்னை வாட்டுகிறது. அது தான் என் உள்ளத்தின் கிளர்ச்சியை, இதுவரை சொல்லாத காதலை, ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பார்வையிலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, இனிமையான நினைவுகளைத் தூண்டிய அந்த முகத்திடம் எழுதுகிறேன்! பதிலை, என் பெயருடன், முதலாம் ஆண்டு, பொறியியல் பீடத்திற்கு அனுப்பலாம் பிரியமானவளே உனக்காக காத்திருப்பேன்!" அவள் என் பாடசாலையிலேயே, நாவலர் வீதியில் அமைந்த, முன்றலில் மாமரங்கள் செழித்து அழகு பொழிந்த, யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலேயே படித்தாள் அவள் உயர்தர வகுப்பு முதலாம் ஆண்டு மாணவி. இம்முறை நான் மட்டுமே பொறியியல் பீடத்துக்கு அங்கிருந்து தெரிவாகி உள்ளேன், மொத்தமாக பத்துக்கு அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளோம். எம்மை கௌரவித்து பாடசாலையில் நடந்த நிகழ்வுக்கு சாதாரண மற்றும் உயர் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அவள் முன் வரிசையில் தன் தங்கையுடன் இருந்தாள். தங்கை சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவி என்பதை பின்பு தான் அறிந்தேன். என் கண்கள் சந்தர்ப்பம் வரும்பொழுது எல்லாம் மேடையில் இருந்து அவளையே பார்த்தது, இனி எப்ப இவளை பார்ப்பேனென ஏங்கியது! “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத் திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப் படைத்தனன் நல்கமலத் தோனே! ” இங்கே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று என் முன் இருக்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் கம்பனின் மகன் அம்பிகாபதியின் பாடல் கட்டாயம் இவளுக்கு பொருந்தும். இவளைப் படைத்தவன் பிரம்மனாய் ஒருவேளை இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்கு முன் ஒரு மாதிரிக்காக திருமகளை உருவாக்கிய பின் தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்து விட்டு இவளை உருவாக்கி இருப்பான் என்பது மட்டும் நிச்சியம்! உனக்கு மட்டும் ஏன் இத்தனை அழகு! என்று நான் ஆச்சரியமாக மீண்டும் மீண்டும் அவளை பார்க்கும் பொழுது தான் அவளின் தங்கையும் வந்து அவள் அருகில் இருந்தாள். நீ இருக்கும் இடமெல்லாம் உன் அழகை அள்ளித் தெளித்து விடுகிறாய் போலும், அதனால் தான் உன் தங்கையும் அழகாவே காட்சியளிக்கிறாளே, என்றாலும் அவளின் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனமும் அப்பாவித்தனமும் குடிகொண்டு அக்காவில் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. சாதாரண வகுப்பு முதல் ஆண்டு மாணவ மாணவிகளின் சார்பாக அவளின் தங்கையே வாழ்த்துமடல் வாசிக்க வந்தார். அப்ப தான் அவளின் பெயரை இழையினி என்று அறிந்தேன். என்னவளின் பெயரோ பூங்குழலி. "பொன்காட்டும் நிறம்காட்டிப் பூக்காட்டும் விழிகாட்டிப் பண்காட்டும் மொழிகாட்டிப் பையவே நடைகாட்டி மின்காட்டும் இடைகாட்டி நன் பாட்டில் வாழ்த்து கூறினாள்!" உண்மையில் அந்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது. அவள், மேடையில் இருந்த எங்களுக்கு கை கொடுத்து, தனிப்பட்ட வாழ்த்தும் கூறினாள். நான் பூங்குழலிக்கு எழுதிய கடிதம் இன்னும் என் கால்சட்டை பாக்கெட்டில் இருந்தது, மெல்ல அதை எடுத்து, அவள் எனக்கு கை கொடுக்கும் பொழுது, அதை அவள் கையில் திணித்து, அக்காவிடம் கொடு என்று மெல்லிய குரலில் கூறினேன். அவளுக்கு அது கேட்டு இருக்கும் என்றுதான் அந்தநேரம் நம்பினேன். அவள் மீண்டும் பூங்குழலியின் பக்கத்தில் போய் இருந்தாள். ஆனால் அந்த கடிதத்தை எனோ கொடுக்கவில்லை, அதை மெல்ல தனது பாடசாலை சீருடையின் பாக்கெட்டில் வைப்பதை மட்டும் கண்டேன். ஒருவேளை பின் தனிய பூங்குழலியுடன் வீடு திரும்பும் பொழுது கொடுக்கலாம் என்று நினைத்தேன். அதன் பின் நான் பூங்குழலியை காணவில்லை. நானும் பேராதனை புறப்பட்டு விட்டேன். நான் பேராதனை போய் ஒரு மாதம் ஆகிவிட்டது . இன்னும் ஒரு பதிலும் பூங்குழலியில் இருந்து வரவில்லை. என்றாலும் அவள் இன்னும் என் நெஞ்சில் இருந்து மறையவில்லை. பூங்குழலி என்ற பெயருக்கு ஏற்றவாறு அவள் கூந்தலில் ஒரு ரோசா பூ அன்று, நான் பார்த்த அந்த கடைசி நாளில் அழகு பெற்று இருந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந் தெடுத்த தோள்களை முத்தமிட்டு கொண்டு இருந்தது. அளவோடு பொன் நகைகள் அவள் அணிந்து கொண்டிருந்தாள். அவை அவளுடைய மேனியில் பட்டதனாலோ என்னவோ அவையும் அழகு பெற்றிருந்தன. அழகே ஒரு வடிவமாகி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்? அப்படித்தான் பூங்குழலி அன்று இருந்தாள். அது தான் அவளை இன்னும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன் நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?' எனக்கு அதன் தாக்கத்தை வர்ணிக்க முடியாது. ஆனால் அது அவளின் முடிவானால், நான் ஒன்றும் செய்யமுடியாது. நான் அடுத்தநாள், பெப்ரவரி 14 ஆம் திகதி, வகுப்புக்கு போகமுன்பு, ஒரு நற்பாசையில் அன்றும் தபால் ஏதாவது வந்திருக்கா என்று மீண்டும் பார்த்தேன். கொஞ்சம் கனமாக, ஆனால் அனுப்பியவர் விபரம் வெளியே குறிப்பிடாமல் எனக்கு வந்திருந்தது. நண்பர்கள் பலர் அங்கு நின்றதால், அதை உடன் திறந்து பார்க்கவில்லை. மனது எனோ மகிழ்வாக இருந்தது, 'ஹாப்பி வேலன்டைன் டே' என யாரோ யாருக்கோ சொல்லுவது காதில் கேட்டது. என்றாலும் மதிய உணவு இடைவெளியில் என் அறையில் போய் அவசரம் அவசரமாக திறந்தேன். அனுப்பியவர் பெயரை பார்த்தவுடன் எனக்கு ஆத்திரம் ஆத்திரமாகத் தான் வந்தது . அது உங்கள் செல்ல நண்பி இழையினி என்று இருந்தது. என்றாலும் அந்த மடலை வாசிக்கத் தொடங்கினேன். "அன்புள்ள அதிசயமே, என் அன்பே , அன்று நீங்கள் என் கையில் திணித்த அன்புக் கடிதம், அதில் உங்கள் உள்ளங்கை வேர்வையின் நறுமணம் என்னை என்னென்னவோ செய்து விட்டது. நீங்கள் அப்பொழுது எதோ சொன்னது கூட காதில் விழவில்லை, மன்னிக்கவும்! வரிகள் தொடுத்தல்ல, என் சுவாசம் தொடுத்து, சுவாசம் சுமக்கும் நேசம் தொடுத்து, நேசம் நெய்த உன் பாசம் தொடுத்து, இதழ் வாசம் தேடும் என் காதல் தேசம் தொடுத்து, எத்தனையோ தடவை வாசித்துவிட்டேன்! அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !!, உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது. உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது. நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே எனது சுய விருப்பத்தில் நீ கேட்ட பதிலைத் தருகிறேன். காத்து வைத்ததுக்கு மன்னிக்கவும் என் இதயத்திற்கினிய காதலனே. காதலர் தினத்தில் என் பதில் உன்னை அடைய வேண்டும் என்பதால் அன்பே சுணங்கிவிட்டது. நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்! நீயே என் மதிப்புள்ள காதற் கண்மணி, அதில் இனி மாற்றம் இல்லை, - அன்புடன், உங்கள் இழை" நான் அழுவதா சிரிப்பதா எனக்குப் புரியவே இல்லை. அவள் இவ்வளத்துக்கு என்னை நம்பிவிட்டாள். இல்லை நான் தந்த கடிதம் பூங்குழலிக்கு கொடுக்கவே என்று சொன்னால், அவள் ஒரு மாதமாய் என்னென்னவோ கற்பனையில் மிதந்து காத்திருந்தவள், எப்படி அதை ஏற்பாளோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை , நான் விரும்பியவளை விட, என்னை விரும்பியவள் எப்பவும் நல்லதே! இப்ப என் வாழ்க்கையில் குறுக்கிட்டவர்கள் இரண்டு பெண்களாக ஆகிற்று, ஒருத்தி, இழையினி என் தவறான கடிதத்தால், என்னை மிகவும் விரும்புகிறவள். மற்றொருத்தி, பூங்குழலி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள், அவளுக்கு இன்னும் என் காதல் தெரியாது. இருவருமே நல்ல அழகு, ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல, வித்தியாசம் வயது மட்டுமே. கையில் இருக்கும் பறவையை கண்கள் தேடும் பறவையை நம்பி கைவிடலாமா ? அது தான் இப்ப எனக்குத் தடுமாற்றம்? "உறங்கிக் கிடந்த மனது ஒன்று உறக்கம் இன்றி தவிப்பது ஏனோ? உறவு கேட்ட காதல் கடிதம் கை மாறிப் போனது ஏனோ?" "கண்கள் மூடி கனவு கண்டால் பூங்குழலி அருகில் வருவது ஏனோ? கருத்த கூந்தல் காற்றில் ஆட இழையினி மடல் வரைந்தது ஏனோ? "காற்றில் இதயத்தில் குரல் கேட்க காத்திருந்து விழித்திருந்து ஏங்குவது எனோ? காதல் மொழியில் வாழ்த்து அனுப்பி காதலர்தினத்தில் தடுமாற்றம் தருவது ஏனோ? "காந்தி மடியில் சரணம் அடைந்தேன் காரணம் கூறி விடை கேட்டேன்? காமம் துறந்த முனிவன் அவன் தேடி வந்தவளை தேற்று என்றான்!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை]
"◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை] "உன்னை நினைத்து என் இதயம் எரிகிறது! உன் இன்றைய காதலன் பொறாமை வாசனையை எனக்கு வீசுகிறான்!" "எதற்காக இப்படி செய்தாய்? கேட்டிருந்தால் எல்லாமே தந்திருப்பேனே 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'! " "எனக்கு நீ மட்டுமே வேண்டும் எடுத்திடு என் பணம் எல்லாவற்றையும் என் இதயம் எரிகிறது!" "உனக்கு 'நான் விரும்புகிறேன்' சொல்ல, நீயோ மறுபக்கம் திரும்பி என்னை விட்டுவிடு என்கிறாய் என் இதயம் எரிகிறது!" "என்னை பார்த்து அன்று சொன்னாய் விரும்புகிறேன், மணம் முடிப்பேன் என்று கனவுகள் ஆயிரம் கண்டேன்! கோட்டைகள் பலநூறு கட்டினேன்! என் இதயம் எரிகிறது!" "நான் முட்டாள் உன்னை நம்பினேன் கண் மூடி உன்னை நம்பினேன்! என்னை நீயே கொன்றுவிடு மலையில் இருந்து உருட்டி விடு என் இதயத்தை குத்தி உன்னை வெளியே எடுத்துவிடு என் இதயம் எரிகிறது!" "என் இதயம் துடிக்கிறது போதை கொண்டு அனல் கக்கி புகைக்கிறது! என் நண்பர்கள் இப்ப அந்நியர்கள் என்னைச் சுற்றி இப்ப எதிரிகள் உன்னை மறக்க முடியாமல் என் இதயம் எரிகிறது!" "உன்னை மறக்க காற்றாகிறேன் தேவலோகம் பரவி போகிறேன் வேலன் வெறியாட்டம் எனக்கில்லை மூடிய கண்ணில் ஊர்வசி நடனம் காண்கிறேன் என் இதயம் எரிகிறது!" "காதல் போதை எனக்கு ஊட்டுகிறாள் நானும் இந்திரன் சபையில் ஆடுகிறேன்! நான் என்னும் உணர்வை இழந்துவிட்டேன் பைத்தியம் என்று மக்கள் விலகுகின்றனர் என் இதயம் எரிகிறது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 28 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" ஒருவர் கடல் உணவைப் பற்றி எண்ணும் போது, தமிழர் அல்லது திராவிடர் மனதில் முதலில் தோன்றுவது யாழ்ப்பாணமும் கேரளமும் தான். மேலும் தமிழகமும், இலங்கையும் நீண்ட கடற் கரையைக் கொண்டுள்ளதால், தமிழர்கள் உணவில் கடல் உணவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் இவை பற்றிய அரிய தகவல்களை இன்று எமக்கு தருகிறது. உதாரணமாக, வரால் மீன் [murrel or a fresh-water fish], சுறா மீன் கறிகளை புறநானுறு 399 கூறுவதுடன், சிறுபாணாற்றுப்படை [193-195] நண்டு கறியை கூறுகிறது. இரண்டு பாடல்களும் கிழே விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. "அடுமகள் முகந்த அளவா வெண்ணெல், தொடி மாண் உலக்கைப் பருஉக்குற்றரிசி, காடி வெள் உலைக் கொளீஇ நீழல், ஓங்கு சினை மாவின் தீங்கனி நறும் புளி, மோட்டி வரு வராஅல் கோட்டு மீன் கொழுங்குறை, செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகல், பாதிரி யூழ் முகை அவிழ் விடுத்தன்ன, மெய் களைந்து இனனொடு விரைஇ, மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், அழி களிற் படுநர் களியட வைகின், பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக், காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக், கிள்ளி வளவன் உள்ளி அவன் படர்தும், செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்" புறநானூறு 399 [1-14] கிள்ளிவளவனின் சோழ நாட்டில், சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக் கொண்டு வந்த வெண்ணெல்லை, பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப் பட்ட அரிசியால் ஆக்கிய சோற்றை, புளித்த நீருள்ள உலையில் பெய்து, மிகுந்த நிழல் தரும் கிளைகளையுடைய மாமரத்தின் இனிய மாம் பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக் குழம்பும், பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறா மீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும், பாதிரி [அம்பு, அம்புவாகினி,பாடலம்,புன்காலி எனவும் அழைப்பர்] அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்து அவித்த சோறும் உண்பர். வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப் படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர் என்கிறது. "இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த, அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு, கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்." சிறுபாணாற்றுப்படை (193-195). இரும்பாலான உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாக குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்றினைப் பிளந்த காலினையுடைய நண்டின் கறியோடு கலந்து சோற்றுக் கட்டியாகத் தர, நீவீர் உண்பீர் என்கிறது. மேலும் நாம் மலைபடுகடாம் மூலம் மலை வாழ் குரவரின் விருந்தோம்பலை அறிவதும் மட்டும் அல்ல, விருந்தினர் அங்கு காலை தொடக்கம் மாலை வரை, வீடுதோறும் பெற்று உண்டு மகிழ்ந்த பானங்களும், உணவுகளும் கூட அறியமுடிகிறது. "ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு, வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை, பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர, அருவி தந்த பழம் சிதை வெண் காழ், வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை, முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை, பிணவுநாய் முடிக்கிய தடியொடு விரைஇ, வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின், இன் புளிக் கலந்து மா மோர் ஆக, கழை வளர் நெல்லின் அரி உலை ஊழத்து, வழை அமல் சாரல் கமழத் துழைஇ, நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக், குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி, அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ, மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்!" மலைபடுகடாம் (170 – 185) மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிய தேறலை நிரம்பவுண்டு, பின்னர், நெல்லாற் காய்ச்சி வடித்த, மகிழ்ச்சி தரும் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற பின்னர், அருவி அடித்துக் கொண்டு வந்த பழங்களின் விதைகளையும், மற்றும் அம்பு ஏவி கொல்லப் பட்ட கடமானின் கொழுத்த தசையினையும், கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முள்ளம் பன்றிக் கறி, பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டு வந்த உடும்பு கறி, இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய் போட்ட மோர்க் குழம்பு, இவற்றுடன் நறிய மலரைச் சூடுகின்ற மணமிக்க கரிய முடியினையுடைய குறமகள் துழாவி ஆக்கிய வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்த நெல்லரிசிச் சோறும் பெறுவீர்கள். அவள் உங்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டு கேட்டு இந்த உணவுகளை படைப்பாள் என்கிறது. இறுதியாக கலித்தொகை 65 மூலம், வெத்திலை பாக்கு போடும் பழக்கத்தை அறிகிறோம். "திருந்து இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும், பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே, மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல், அம் துகில் போர்வை அணிபெற தைஇ நம், இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத், தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும், காரக் குறைந்து கறைப்பட்டு வந்து நம், சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத், தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே, பாராக் குறழாப் பணியாப் பொழுது அன்றி, யார் இவண் நின்றீர் எனக் கூறிப் பையென, வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது, தையால் தம்பலம் தின்றியோ என்று தன், பக்கு அழித்துக் கொண்டீ எனத் தரலும் யாது ஒன்றும், வாய்வாளேன் நிற்பக் கடிது அகன்று கைமாறிக், கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான், ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின், இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்" [கலித்தொகை 65] மொட்டைத்தலையும் முக்காடும் கொண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும் கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன் அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக் காண போர்வை ஒன்றைப் போர்த்திய படி இரவு நேரத்தில் நின்றிருக்க, அவன் என்னைக் குனிந்துப் பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்; நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு. யான் ஆண் பிசாசு. என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசி விட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன். அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும் படியும் ஆயிற்று என்றுப் பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப் பெற்றுள்ளது. இனி 'இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள்' பற்றி பார்ப்போம் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 29 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 28 "Food Habits of Ancient Sangam Tamils continuing" When one thinks of seafoods, coastal cities such as Jaffna & Kerala comes to the mind, Still, the mix of fishing culture — the Jaffna city survives as a major fishing port today — has created the perfect storm for seafood. International travel website Go Backpacking put Sri Lanka as #1 on its “5 Countries for Seafood Lovers” guide, above seafood powerhouses such as Chile and Japan [January 2, 2013 By Mark Wiens] — and especially called out Jaffna for its great seafood. “Surrounded by sea, you bet [it] catches some high - quality creatures,” the article stated. according to Sri Lankan tourism website yamu.lk. Specialties there include local crab, which can be turned into traditional crab curry. While Purananuru 399 mentioned about fried murrel fish & fatty meat pieces of shark, Sirupanatruppadai, line,193-195 mentioned about crab curry with rice. Both of these ancient Tamil poems given below. "We were on our way to see Killi Valavan of unending great fame, the lord of the Kāviri River, where fields are filled with water, and farm workers working among haystacks happily drink, relax and eat old rice, along with rice brought by a female cook without measuring, that was pounded with a large pestle with a ring, its husks removed, looking like the mature buds of pāthiri flowers that had just opened, and cooked in a bright pot with fermented gruel, with vallai leaves from fields, fatty big pieces of horned fish, large pieces of vāral fish, and sour fragrant pulp of mango fruits growing on tall branches that provide shade." [Purananuru 399,lines,1-14] "will serve cooked white rice balls, from rice finely pounded with an iron pestle whose ends have been blunted, served with split-legged crabs," [Sirupanatruppadai,line,193-195] Also from Malaipadukadam, We come to know, not only the hospitality of the mountain kuravars, the people of foothills, But also Drinks & food enjoyed by the guest from morning to evening, by. lines 170 – 185. "Along with food that they bring climbing mountains, they will give you sweet liquor aged in bamboo pipes which you can drink without limits, and for your hangover to go, in the morning, they will serve you scattered seeds of fruits brought down by waterfalls, big pieces of meat of bison killed ruining arrows, chopped up pieces of fatty meat of porcupines mixed with fuzzy-topped, sweet tamarind and buttermilk, seeds growing on bamboo added to the boiling liquid, and white rice cooked by a mountain woman wearing flowers on her huge hair knot, their fragrances spreading all over the mountains with surapunnai trees. They, along with their children, will be greatly hospitable in all the houses, and prevent you from leaving." Finally ,We come to know from Kalithokai 65, the tradition of Chewing the mixture of areca nut and betel leaf is very old & practice even in Sangam period, 700 BC-300 AD. In both India and Sri Lanka, it was a custom of the royalty to chew areca nut with betel leaf. Kings had special attendants whose duty it was to carry a box with all the necessary ingredients for a good chewing session. There was also a custom for lovers to chew areca nut and betel leaf together. Not only that Betel leaves (Thamboolam,) is usually exchanged whenever marriages are finalised, when guests leave after their stay, while inviting for the weddings and while offerings are made to the Deities. and To the visitors it is offered as a mark of courtesy. "that lame old Brahmin, the one you warned me about, showed up, spotted me, bowed to me and asked, “Why are you here at this unsightly hour?” Slowly, he stuck to my side like an old buffalo that had sighted hay. “Lady, will you eat my betel leaves and betel nuts?” he asked me as he opened his pouch, and said again, “Take these,” as he tried to hand then to me. I was speechless. He spoke without restraint, and said “Girl, you have fallen into my hands! if you are one spirit, I am the other spirit. You better be gracious to me." Let us now look at the 'Food Habits Of Medieval period Tamils' Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 29 WILL FOLLOW
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 27 10] அறநெறி சரிவு [decline of morality] / சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு: முழு சமுதாயத்திற்கும் அல்லது ஒரு தனிநபரின் நம்பிக்கைகளுக்கும் ஏதாவது ஒரு ஒழுக்கம் இருக்கலாம். இவ்வகையான ஒழுக்க நெறிகள் ஒரு கதையில் இருந்தோ அல்லது அனுபவத்தில் இருந்தோ பிறக்கின்றன. எது சரி, எது பிழை என்பதை இந்த ஒழுக்க நெறிகள் அல்லது விதிமுறைகள் நிர்வகிக்கிறது. எனவே அறம் அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை, நல்லவை தீயவை என்பன தொடர்பில், ஒரு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடத்தைகளின் தொகுப்பு என்றும் கூறலாம். ஒழுக்க நெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்று போல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடு கின்றன. உலகளாவிய சில உதாரணங்களாக, பரீட்சையில் ஏமாற்றுவது ஒரு நற்செயல் அல்ல, அதற்கு எதிர்மாறாக தகுதிகள் அடிப்படையில் உயர் பதவிகளை அடைவது ஒரு சரியான வழி. இதே போல, இனவாதம் தவறானது மற்றும் கஷ்டப்படும் அகதிகளுக்கு அன்பு காட்டுவது உயர்ந்த நெறி முறை. சமூகத்தில் முழுமையாக மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டு மெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுபாடுகளையும், ஒழுக்கங்களையும் விதித்துக் கொள்ளவேண்டும். வேறு வகையில் குறிப்பிடுவது என்றால், ஒரு தனிமனிதன் பிறரிடம் எந்த எந்தப் பண்புகளை எதிர்பார்க்கின்றானோ, அந்தப் பண்புகளைத் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணும்போது, அந்தப் பண்புகள் யாவும் அவன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் அறிநெறிகளாக ஆகிவிடுகின்றன. ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் தனது குறள்: 0131 இல், ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி என்பது தனிச்சொத்து என்கிறார் தந்தை பெரியார், ஈ. வெ. இராமசாமி. ஏனென்றால் , பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்பதாகும். ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. இதைத்தான் வள்ளுவர், குறள் : 0140 இல், உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே என்று ஆணித்தரமாக கூறுகிறார். "உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!" என்றார் விவேகானந்தரும். ஒரு விதையை நீங்கள பார்த்து, அது விதைக்கப் பட்டபின் எத்தனை சுவையான கனி, எத்தனை காலத்திற்கு கொடுக்கும் என்பதை எல்லாம் உடனடியாக ஊகிக்க முடியாது. அது விதையின் தரம், மண்ணின் தன்மை, உரத்தின் இயல்பு, அங்கு நிலவும் இயற்கையின் ஆற்றல், மற்றும் கண்காணிப்பு போன்றவற்றின் சிறப்புகளை பொறுத்தே கூறமுடியும். அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதையாக இருக்கிறான். சமூகத்தில் அவன் நல்ல கனி கொடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கு ஒவ்வொரு மனிதனும் நல்ல ஒழுக்கங்களைக் கொண்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகிறது. ஒரு மனிதன் என்பவன் சமூகத்தின் ஒரு அங்கம். ஒரு உறுப்பில் ஏற்படும் புற்று நோய் அந்த உடலையே, நாளடைவில் பெரும்பாலும் அழிப்பது போல, ஒரு தனி மனிதனிடம் காணப்படும் ஒழுக்கக் கேடுகள், அவன் வாழும் சமூகத்தையே ஒருவேளை அழித்து விடும் ஆற்றல் படைத்தது என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் ஒரு அங்கமாகும் . வன்முறை, இனவெறி, சமயவெறி இவற்றிலிருந்து விடுபட்டு வாழவேண்டிய கட்டாயத்திற்கு நாம் இன்று உள்ளோம். அதற்க்கு நாம் அன்பெனும் கயிற்றில் சமுதாயத்துடன் எம்மை பிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். பொதுவாக தனிமனித ஒழுக்கம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமாகிறது. ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம்’ என்ற பழமொழிக்கேற்ப சமுதாயத்தில் ஒருவன் தீயவனாய் இருந்தாலும் சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அதனால் பெரும் துன்பம் ஏற்படும். இந்த ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந் நோயின் அறிகுறிகளே ஆகும். சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும் மற்றும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே, சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும் போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும். மக்களுள் பலர் பணந் தேடும் நோக்கையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, எவ்வழியிலும் பணம் தேட எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்பதில் அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் தான் உள்ளது. நம் முன்னோர்கள் உயரிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தார்கள் என சங்க பாடல்கள் எமக்கு அறிவுரை கூறுகின்றன. சமூகச் சீரழிவுகள் மாறவேண்டுமெனில் குழந்தைகளிடத்திலிருந்தே மாற்றங்களை விதைக்க வேண்டும். இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம் நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப் பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும் என்று நம்புகிறேன். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 28 தொடரும்
-
"பார்வை ஒன்றே போதும்"
"பார்வை ஒன்றே போதும்" திடீரென எதேச்சையாக இருவர் சந்திக்கும் பொழுது அவர்களின் கண்கள் அப்படியே ஒருவரை ஒருவர் அசையாமல் கணப்பொழுது நின்றுவிட்டது என்றால், அதுவும் இளம் ஆணும் பெண்ணும் என்றால், 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்பதைவிட அது வேறு ஒன்றாக இருக்க முடியாது. இதை பட்டாசு வெடிப்பது போல இதயங்கள் வெடிக்கின்றன என வர்ணிப்பார்களும் உண்டு. இருவரின் தனித்துவமான வெளிப்படையான இயல்புகள் ஒருங்கினையும் பொழுது மின்சாரம் பாய்வது போல அந்த உணர்வு தானாக ஏற்படுகிறது. அது அப்படியே இருவரையும் விழுங்கிவிடுகிறது என்று நான் முன்பு படித்த கவிதை ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது. என் அப்பா ஒரு கிராம அலுவலகத்தில் பணிமனை குற்றேவலனாக [பியூன்] வேலை செய்கிறார். நான் இறுதியாண்டு விஞ்ஞான உயர் வகுப்பு மாணவன். எங்கள் கிராமத்தில் இருக்கும் அந்த ஒரேயொரு உயர்நிலைப் பள்ளியிலும் ஆய்வகம் மற்றும் நூல்நிலைய வசதிகள் பற்றாக்குறையாக இருந்தது. எனவே அப்பா தன் ஆத்ம நண்பனும் இன்று பெரும் வர்த்தகராக பட்டணத்தில் நிறைய செல்வாக்குடனும் வசதியுடன் இருப்பவருமான சுந்தரலிங்க முதலியார் வீட்டுக்கு, அங்கிருந்து, பட்டண பாடசாலையில் இறுதி ஆண்டை படிக்க என்னை அனுப்பிவைத்தார். முதலியாரே தன் காரை அனுப்பி என்னை தன் வீட்டுக்கு கூப்பிட்டார். எனக்கான அறை அவர்களின் கீழ்மாடியில் ஒதுக்கி தரப்பட்டது. அது அவர்களின் நீண்ட பொது அறையை [ஹால்] தாண்டி போகவேண்டும். அவர்கள் எல்லோரினதும் அறை மேல்மாடியில், பணியாளர்கள் வீட்டின் பின்புறத்தில் தனியாக ஒரு சிறு வீட்டில் வாழ்கிறார்கள். நான் காரால் வந்து இறங்கி, கொஞ்சம் களைத்த முகத்துடனும் குழம்பிய சீவப்படாத முடியுடனும் என் பெட்டியுடன் என் அறைக்கு போகும்பொழுது தான், முதல் முதல் அவள் என்னைப் பார்த்தாள், நானும் அவளைப் பார்த்தேன். இன்னும் எனக்கு அவளின் பெயர் தெரியாது, சாதாரண வகுப்பில் படிக்கிறாள் என்று சுந்தரலிங்க முதலியாரும் அவரின் துணைவியாரும் என்னை வரவேற்கும் பொழுது அறிந்தேன். ஆகவே பதினைந்து பதினாறு வயது இருக்கலாம்? அவள் தான் அவர்களின் கடைசி செல்லப்பிள்ளை, அவளின் அக்காவும் அண்ணாவும் பல்கலைக்கழகத்தில் என்றும் கேள்விப்பட்டேன். மற்றும் படி எந்த விபரமும் இப்போதைக்கு எனக்குத் தெரியாது. அவள் எதோ ஹால்லில் இருந்த புத்தக அலுமாரியில் தேடிக்கொண்டு இருந்தாள். அப்ப தான் சுந்தரலிங்க முதலியார், 'நாம் இவளுக்கு செல்லம் கூட கொடுத்து விட்டோம், எந்த நேரமும் எதாவது உலக வரலாறு, இலக்கியம் அல்லது நாடுகள், விலங்குகள், பறவைகள் பற்றித்தான் படிப்பாள். பாடசாலை கணிதத்தில், விஞ்ஞானத்தில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறாள். அது தான் எமக்கு கவலை' என்று வசை பாடினார். "மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து, செய்யவள் இருந்தாள்’ என்று, செழு மணிக் கொடிகள் என்னும் கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண் ஐயனை, ‘ஒல்லை வா’ என்று அழைப்பது போன்றது அம்மா!" என்ற கம்பராமாயண பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது, குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்! என்று அழைப்பது போல, நாம் இங்கு வந்தேனோ என்று என் மனம் எதோ கனவு கண்டது. அப்பேர்ப்பட்ட அழகு அவள்! சீதையின் எல்லையில்லாத பேரழகை அமுதத்திலே எழுதுகோலைத் தோய்த்து எடுத்து எழுதத் தொடங்கினாலும் அவளது அழகை முழுயைாக எழுத முடியாமல் மன்மதன் திகைத்தது போல் "ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’" நானும் ஒரு கணம் திகைத்தே போனேன், என்றாலும் உடனடியாக சமாளித்தவாறு, என் அறைக்கு போனேன். ஒன்றுமட்டும் எனக்கு புரிந்தது, அவள் என்னைப் பார்த்த அடுத்தக்கனமே, கீழே பார்த்து, பின் அவள் தன் கண்களை தரை முழுவதும் துடைப்பது போல நகர்த்தினாள். அது என்னென்னெவோ எனக்குச் சொன்னது. “நள்ளென்றன்றே, யாமம் சொல் அவித்து, இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று, நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மற்ற துஞ்சாதேனே” நள்ளிரவு நிசப்தம் நலவுகின்றதே, தமது சத்தங்களை எல்லாம் தொலைத்து மக்கள் தூங்குகின்றனரே, அடடா உலகமே தூங்குகின்றதே என்னைத்தவிர என அன்று இரவு பொழுது எனக்கு கழிந்தது. என்றாலும் அவள் என்ன நினைத்தாள், ஏன் என்னை அவள் அப்படி பார்த்தாள், வெறுப்பா, அருவருப்பா இல்லை உண்மையில் நான் அவளைத் தாண்டும் சமயம் அவள் இதயம் எகிறி குதித்தோடுயதால் ஏற்பட்ட ஒற்றை பார்வையோ நான் அறியேன் ? அது காலம் தான் உறுதிப்படுத்தும்! ஆனால் ஒன்று மட்டும் எனக்கு புலனாகியது, அவளைப் போன்ற ஒரு பதினைந்து பதினாறு வயது பருவ சிறுமிக்கு கட்டாயம் எளிமை மற்றும் அப்பாவித்தனம் தான் முதலில் இருந்து இருக்கும். அப்படி என்றால் அந்தப் பார்வை, அதனின் எதிரொலியோ? என் மனது விடை தேடியது. அப்படி என்றால் நான் கொஞ்சம் அவளின் எண்ணத்தில் இருந்து விலகுவது மேல் என்று அது பதிலும் சொன்னது. எனக்கும் அது சரியே எனவும் பட்டது. நான் அதன் பின் அவளை நினைப்பதை நிறுத்திக் கொண்டேன். நான் என் படிப்பில் மூழ்கிவிட்டேன். நான் ஞாயிறு இங்கு வந்ததால், திங்களில் இருந்து பாடசாலை போவதும், மாலை வந்து படிப்பில் முழுவதுமாக வெள்ளி மட்டும் போய்விட்டது. அவளை அந்த ஒரு நாளுக்குப் பின் காணவே இல்லை. பொதுவாக சுந்தரலிங்க முதலாளியார் குடும்பம் மேல் மாடியிலேயே இருப்பார்கள். அது மூன்று மாடி கட்டிடம். எல்லா வசதியும் அங்கே அவர்களுக்கு இருந்தது. விருந்தினர்கள் வந்தால், அல்லது வார முடிவில் சுந்தரலிங்க முதலியார் வீட்டில் இருக்கும் பொழுது அல்லது ஏதாவது தேவை இருந்தால் தான் பொதுவாக கீழே வருவார்கள். சாப்பாடு கூட பணியாட்கள் மேலே அவர்களுக்கு வழங்குவார்கள். இவை எல்லாம் பணியாட்கள் மூலம் அறிந்தது. சனிக்கிழமை காலை தேநீர் அருந்திவிட்டு, அவர்களின் ஹால்லில் இருந்த தொலை காட்சியில் நேரடி கிரிக்கெட் [துடுப்பாட்டம்] ஒளிபரப்பை பார்த்துக்கொண்டு, புத்தக அலுமாரியில் இருந்த "A History of Sri Lanka, first published in 1981, by K M De Silva" [கே எம் டி சில்வா எழுதிய இலங்கையின் ஒரு வரலாறு] என்ற புத்தகத்தை மேய்ந்து கொண்டு, கூறை மின்விசிறி தரும் காற்றை அனுபவித்துக் கொண்டும் இருந்தேன். நேரம் இன்னும் ஏழுமணி வரவில்லை. காலை சாப்பாடு பொதுவாக வாரவிடுமுறையில் எட்டு மணிக்குப் பிறகுதான் என்று நேற்றே கூறிவிட்டார்கள். திடீரென பின்னால் என்னை நோக்கி காலடி வரும் சத்தம் கேட்டது. நான் திரும்பி பார்க்கும் முன் 'ஹாய் குட் மோர்னிங்' என்ற இனிய குரல் கேட்டது மட்டும் அல்ல, என் தோளில் மெதுவாக தட்டி, நகத்தைக் கடித்துக் கொண்டு 'can you help me to take a book?' [புத்தகம் எடுக்க உதவுகிறீர்களா?] என்று வேண்டுகோள் வந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அதே கொஞ்சும் பார்வை, அதே கண். ஆனால் அதனுடன் ஒரு மெல்லிய புன்னகை. முகம் கொஞ்சம் அலங்காரம் செய்து கண் மையை இறகு போல் வளைத்து வரைந்தும் அடர் சிகப்பு நிற உதட்டுச்சாயம் பூசியும் இருந்தது. அதற்கு ஏற்ற கை இல்லா மேல்சட்டையும் முழங்காலுக்கு சற்று மேலே வரையான குட்டை கீழ்ச்சட்டையும் அணிந்து இருந்தாள். காய்ச்சிய எண்ணை தேய்த்த அவளின் கரியகூந்தல், மின் விசிறியின் காற்றில் அசைந்தால், அந்த கூந்தலின் காற்று என்னில் பட்டு ’காய்ச்செண்ண தேய்ச்ச நின் கார்கூந்தளத்தின்றே காற்றேற்றால் போலும் எனிக்கு உன்மாதம்’ போல என்னை பித்தனாகியது. அது திடீரென ரதி தேவதையே வந்தது போன்ற அவளின் அந்த அழகும் பெண்மையை கோடிட்டு காட்டும் வனப்பும் தந்த கவர்ச்சியின் அதிர்வை கரைத்து, மகிழ்வில் நனைத்து, உள்ளம் கனத்து, நெஞ்சம் தவித்து, உணர்வை உருக்கி, ஏதேதோ சொன்னது என்றாலும், பல்லைக்கடித்துக்கொண்டு 'ஓகே' என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னேன். நான் அவளை முதல் முதல் கண்ட அந்த புத்தக அலுமாரியில், கொஞ்சம் உயரத்தில் இருந்த சில புத்தகங்களை அவள் காட்ட காட்ட, நானும் எடுத்தெடுத்து அவள் கையில் கொடுத்தேன். அவள் அவ்வற்றை கவனமாக பிடித்து வைத்திருந்தாலும், அது கையில் இருந்து நழுவுவதை கண்டேன். நான் உடனடியாக அதை தடுக்க அவள் கையை பிடித்தேன். அவள் புத்தகம் விழுவதை தடுக்க என்னுடன் ஒத்துழைக்கவில்லை, அது விழுவதையும் பொருட்படுத்தவில்லை. எனவே நான் அவள் கையை விட்டுவிட்டு, புத்தகங்களை என் கையில் ஏந்த முயன்றேன். ஆனால், அவள் என் கையை இறுக பிடித்து, அதே முதல் நாள் பார்வையுடன் நின்றாள். புத்தகங்கள் எல்லாம் கீழே சிதறின. இவளைக் கண்டு கண்கள் இன்புறுகிறது, இவளின் பேச்சை கேட்டு காதுகள் இன்புறுகிறது, இவளின் இதழை உண்டு நாக்கு இன்புறுகிறது, இவளின் வாசனை நுகர்ந்து மூக்கு இன்புறுகிறது, இவளின் தொடுகையில் [அணைப்பில்] என் உயிர் (மெய்) இன்புறுகிறது, என் ஐந்து புலன்களும் இன்பமும் இவளிடம் இருக்கிறதே "கண்டு கேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள" போல நானும் அப்படியே சிலையாக நின்றேன். 'என்ன சத்தம் கீழே' என மேலே இருந்து அவளின் அம்மா கேட்காவிட்டால், என்ன நடந்து இருக்குமோ .. நல்ல காலம் அப்படி ஒன்றும் நடக்கவில்லை! 'பார்வை ஒன்றே போதும்' என என் படிப்பு முடியும் மட்டும் எவ்வளவு விலகி நிற்க முடியுமோ, அவ்வளவு விலகி நின்றேன். அது அவளுக்கும் புரிந்து இருக்கும். மீண்டும் ஒரு சனி காலை அவளை தனிய சந்தித்தேன். அவள் என் அருகில் நெருங்கி வந்து இருந்தாள், இந்த கணிதம் விளங்கவில்லை, சொல்லித்தாங்கோ என்று நெஞ்சம் குளிரக் கேட்டாள் சரி என்று நானும் விளங்கப் படுத்தினேன், ஆனால் அவள் குறும்பாய் ஏதேதோ செய்தாலே தவிர அதைக் கவனிக்கவில்லை அவள் முழு பார்வையும் என்னை கவ்விக்கொண்டே இருந்தன. நான் மெல்ல அவள் முகத்தை தட்டி 'காலம் கனியும் பொழுது கட்டாயம் நாம் இணைவோம், இப்ப அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது' என்று செல்லமாக கடிந்தேன். சுருங்கி சிணுங்கி குழைந்து சொல்ல எதோ வந்தாள், ஆனால் நாணி கோணி பின் விலகி நின்றாள். நறுக்காய் ஒரு சிரிப்புடன், சினம் கொண்ட பார்வையுடன், அவள் தன் அறைக்கு மேலே போய்விட்டாள். ஒற்றை பார்வையில் உட்புகுந்தவள். சில நாள் சந்திப்பில் காதலுக்கு அழைப்பிதழ் அனுப்பியவள். இப்ப காத்திருப்பை கவிதையாக்கி, தூர நின்று மூச்சு காற்றால் உறவாடுகிறாள். அவளது உள்ளங்கை வேர்வை அன்று உணர்ந்தேன். அவள் சுவாசம் புரியும், வாசம் தெரியும். அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்வேன். அது காணும், காலம் கனியும் மட்டும், அந்த பார்வை நினைவில் நிற்கும்! தொலைக்காடசியில் "நீயும் நானும் அன்பே.. கண்கள் கோர்த்துக் கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்" என்ற பட்டு ஒலித்துக்கொண்டு இருந்தது. எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் ? ஒருகணம் வாயடைத்து நின்றேன். திரும்பி பார்த்தேன், அவள் சுவரில் சாய்ந்தபடி என்னை பார்த்துக்கொண்டு இருந்தாள். அத்துணை அழகு அவள் அணிந்திருக்கும் கண்ணாடியின் உள் உள்ள அவள் கண்கள்? அவளின் கண்ணசைவுக்கு பதில் கூற முடியாமல் தவித்தேன். என் எண்ணங்களை சட்டென்று மண்ணிலிருந்து விண்ணிற்க்கு கொண்டு போனது. அந்த அவளின் பார்வை போதும் போதும் என்று நான், என்னை கட்டுப்படுத்திக்கொண்டு என் அறைக்குப் போனேன்! எட்டு ஆண்டுகள் கழித்து, இன்று அவள் என் மனைவி. இந்த நொடி தான் உண்மையில் அத்தனை ஆனந்தம் மனதிற்கு. ஆசைப்பட்ட பெண் ஒருத்தி ஆசைப்பட்ட வார்த்தையை, அருகில் அணைத்துக்கொண்டு, வெளிப்படையாக மீண்டும் மீண்டும் அவளாக சொல்லும் நொடிகள் எத்தனை பரவசமானது. ஆசைகள் எல்லாம் ஒருங்கிணைந்தது, அவளின் ஆசைகளும் எனது ஆசைகளும். சிறு சிறு குறும்பு, குழந்தைத் தனமான பிடிவாதம், கொஞ்சல்கள் இப்ப புதிது தான் அனால் அவள் சிரிப்பினை பார்க்கும் பொழுது வரும் மகிழ்ச்சி அளவிட முடியாதவை. என்னவள் எனக்கானவள், உயிரினிலும் உயிராய் கலந்தவளை. முதல் முறை என் படுக்கை அறையில் காண்கிறேன் எனக்கான இன்னொரு உயிரை! அளவுக்கு அதிகமான காதல் இருக்கும் பொழுது அளவுக்கு அதிகமான சொந்தம் என்ற எண்ணம் ஏற்படும். முழுதாக இன்று போல் சொந்தம் ஆன பிறகு தான் செல்லச் சண்டைகள் இட முடியும். எத்தனையோ விடயங்கள் அவளிடம் பழகிய பின் பிடித்தாலும் முதன் முதலில் என்னை மயக்கிய அந்த கண்கள் தான் இன்று வரை பழக்கப் பட்டவை, மனதை கவர்ந்தவை. எவ்வளவு சண்டை, கோபம் வந்தாலும் நேரில் அவள் பார்க்கும் அந்த பார்வை ஒன்றில் எல்லா கோபமும் மறைந்து விடும், அவள் கண் சொல்லும் வார்த்தையால்.! ஆமாம் "பார்வை ஒன்றே போதும்" "புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே" "விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே உருகி பேசி நெஞ்சில் சாய்ந்து வருடி அணைத்தால் ஆனந்தம் ஆனந்தமே" "பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே பருத்த மார்பும் சிறுத்த இடையும் கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே" "பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில் உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே திரும்பி பார்த்து வெட்க்கப் பட்டு விருப்பம் என்றால் ஆனந்தம் ஆனந்தமே" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 28 பாரம் பரிய உணவு என்பது, எமக்கு எம் முன்னோர்களால், பல தலை முறையாக, பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக, உன்ணப்பட்டு, அதன் சிறப்பு அறிந்து, பல பல பரம்பரை ஊடாக கடத்தப்பட்டு, இன்று எமக்கு அளித்த ஒன்று எனலாம். இவை பொதுவாக முழு தானிய உணவுகள் ஆகும். இவை எளிமையானவை, இயற்கையாக வளர்ந்தவை அல்லது வளர்க்கப் பட்டவை, ஊட்டச்சத்து நிறைந்தவை, ஆழ் சிந்தனையுடன், அவசரமற்று, நன்று ஆலோசித்து தயாரிக்கப் பட்டவை ஆகும் [They are simple, naturally grown or raised, nutrient-dense, thoughtfully prepared]. இவை கட்டாயம் ஒரு குறுகிய காலத்துக்கான தேவையை கொண்டதோ அல்லது காலப்பாணியோ அல்ல [They are not fads]. உதாரணமாக பாரம்பரிய உணவுகள் நாலு அடிப்படையை கொண்டவை எனலாம். அவை 1] இன்றைய நவீன, சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்கின்றன [avoidance of modern, refined foods], 2] சுத்தப் படுத்தப் படாத, முழு மற்றும் இயற்கை உணவை கொண்டவை [Contains unrefined, whole and natural foods], 3] உணவில் ஊட்டச்சத்துவின் செறிவை கவனத்தில் எடுக்கிறது [respecting the importance of nutrient-density in our food], & 4] எப்படி எமது மூதாதையர்களை ஆரோக்கியமாக இருக்க உணவு தயாரித்தார்களோ உண்டார்களோ அவ்வாறே தயாரிப்பதையும் உண்ணுவதையும் கொண்டதும் ஆகும் [preparing and eating foods in the same manner that nourished our ancestors and kept them well]. உங்கள் பாட்டி, பூட்டி, ஓட்டி, சேயோள், பரை, அல்லது அதற்கும் முன் இருந்த தாய்மார்கள் இதை முழுமையாக அறியாமல், அடையாளம் காணாமல், நீங்கள் சாப்பிட கட்டாயம் தந்திருக்க மாட்டார்கள்? அது மட்டும் அல்ல உணவு பல குறியீட்டு அர்த்தங்களையும் [symbolic meanings] கொண்டு உள்ளது. உதாரணமாக இது மக்கள் மற்றும் அவர்களின் சூழலுக்கு இடையேயான உறவை நிறுவுவதுடன், மக்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளிற்கு இடையான உறவையும் நிறுவுகிறது [It establishes the relationship between people and their environment as well as between people and what they believe]. எனவே உணவு ஒரு சமுதாயத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது எனலாம். ஒரு தனிப்பட்ட மனிதனால் மட்டும் உட்க்கொள்ளப்படும் உணவு ஒரு சமூக உணவாக இருக்காது. ஆனால் ஒரு மக்கள் குழுவால் ஒன்றாக உட்க்கொள்ளும் பொழுது அல்லது ஒரு மத சடங்கில் உட்க்கொள்ளும் பொழுது, அது சமூக உணவாக அடையாளம் காணப் படுகிறது. ஒரு மனித சமூகத்தில், மக்கள் ஒருவருக்கொருவர் இடையே உறவுகளை அமைத்து அதை வெளிப்படுத்த இந்த உணவு உதவுகிறது எனலாம். இந்த உறவு தனிப்பட்டவர்களிடமோ, ஒரு சமூக உறுப்பினர்களிடமோ, ஒரு மத குழுவினர்களிடமோ, அல்லது ஒரு இனக் குழுக்களிடமோ [among individuals, community members, religious groups, and ethnic groups] இருக்கலாம். எனவே பாரம் பரிய உணவு இவ்வகையில் ஒரு முக்கிய இடத்தை வகுக்கிறது. இன்று மக்கள் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என எங்கும் பரவி இருக்கும் சூழலில், இளம் சந்ததியினர் பலருக்கு தமது பாரம்பரிய உணவு என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இன்று துரித உணவு நிறுவனங்களும் மற்றும் பல நாட்டு உணவு நிறுவனங்களும் அதிகரித்து வரும் வேளையில், இந்த அவர்களின் அறியாமை உண்மையில் எமக்கு ஆச்சரியம் தரவில்லை? ஆனால் எமக்கு இது கவலை அளிக்கிறது. பாரம்பரிய உணவு மட்டும் அல்ல மற்றும் பல பாரம்பரியங்கள் எமது கையினூடாக இன்று நழுவுகின்றன. “கத கதன்னு களி கிண்டி, களிகுள்ள குழி வெட்டி, கருப்பட்டி நல்லெண்ண சேர்த்து தருவாயே, தொண்டையில அது இறங்கும் சுகமான, இளஞ்சூடு மண்டையில இன்னும் மாச மசன்னு நிக்குதம்மா” என்ற கவிஞர் வைரமுத்துவின் களி உணவு எத்தனை பேருக்கு இன்று தெரியும்? எம்மை இன்னும் மகிழ்ச்சியில் வைத்திருக்கும், ஆனால் இன்று அதுவும் மெல்ல மெல்ல எம்மை விட்டு நழுவும் விடயம், தமிழரின் ஒவ்வொரு விழாவிலும் சடங்கிலும் பாரம்பரிய உணவுகள் பெரும்பாலும் இன்னும் வழங்கப் படுவதே. இவை இன்னும் எமது பாரம்பரிய உணவு வகைகளை பேணிகாக்கவும் இளைய தலைமுறை யினருக்கு இன்று அதை அறிமுகப்படுத்தவும் உதவுகிறது. ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. உதாரணமாக, எமது பாரம்பரிய உணவாக, பிறந்த பிள்ளைக்கு [குழந்தைக்கு] முதன் முதலாக ஆறாம் அல்லது ஏழாவது மாதத்தில் சக்கரைப் பொங்கல் அல்லது தேனும், தயிரும் நெய்யும் கலந்த சோறு ஊட்டப்படும். அதே போல குழந்தைகளுக்கு முதல் பல் முளைத்ததும், பல்லுக்கொழுக்கட்டை அவித்து, அவர்களின் தலையில் கொட்டி கொண்டாடுவார்கள். முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தியடைதல், பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல், மஞ்சள் நீராட்டு விழா எனும் பெயர்களால் இன்னும் பாரம்பரியமாக தமிழர்களும் வேறு பிரிவினரும் [ஆப்பிரிக்கா] கொண்டாடுகிறார்கள். உளுந்தக் களி, நல்லெண்ணெய் என உணவே மருந்தாக, உடல் நலத்தை மையமாகக் கொண்டு, உணவு அங்கு கொடுக்கப்படுகின்றன. முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு, ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது. அங்கு பல வித சாதம் / பொங்கல் [புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,...] இடம் பெறுகின்றன. இன்று எமது பாரம் பரிய உணவாக தமிழ் நாட்டில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார், வடை போன்றவை பொதுவான காலை உணவாக உள்ளது, அதே நேரத்தில் - தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளிற்கு இடையிலான வேறுபாடுகளுடன் - இலங்கை தமிழ் உணவுகள், இந்தியா தமிழ் உணவில் இருந்து பலவகையில் தனித்துவமாக உள்ளது. மதிய உணவிற்கு சோறும் கறியும் பரவலாக இருப்பதுடன், காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் அரிசி மாவினால் அதிகமாக 12 சதம மீட்டர் விட்டம் கொண்ட , வட்ட வடிவில் தயாரிக்கப் பட்ட இடியப்பமும் தக்காளி சொதியும் கறியும் இலங்கையில் [கேரள மாநிலத்திலும்], அதிக அளவில் காணப்படுகிறது. அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும் [புட்டும்], வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை. மேலும் தேங்காய் பாலும் உறைப்பு கூடிய மிளகாய் தூளும் பெரும்பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன், பல தரப்பட்ட ஊறுகாய் [அச்சாறு], வடகம் மற்றும் மாவுடன், பணை வெல்லம், எள், தேங்காய், நல்லெண்ணெய் போன்றவைகளை முதன்மையாக பாவித்து வீட்டில் செய்யப்பட்ட பயத்தம் பணியாரம், மோதகம் / கொழுக்கட்டை, பால்ரொட்டி, முறுக்கு, அரியதரம், அவல் போன்ற இனிப்பு வகைகள், வேறு பிற சிற்றுண்டிகள் தனித்துவான மண் வாசனையை அவர்களுக்கு கொடுக்கிறது. இலங்கை மக்களால் மிக மிக விரும்பி உண்ணப்படும் இனிப்பு சீனி அரியதரம் அல்லது அரியதரம் ஆகும். இது திருமணம் போன்ற கலாச்சார வைபவங்களில் மிகமிக முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழர்களின் நாளாந்த உணவு மிக எளிமையானது. அது அதிகமாக வேகவைத்த அரிசி [சோறு], சாம்பார் [தமிழ் நாடு] அல்லது வேகவைத்த அரிசி [சோறு], சொதி, மரக் கறி [இலங்கை தமிழர்] ஆகியவற்றுடன், மீன் அல்லது இறைச்சி [அசைவ உணவாளர்களுக்கு], ரசம், தயிர் போன்றவற்றை கொண்டுள்ளது. சிறப்பு சந்தர்ப்பங்களில் - அரிசி, பால், சவ்வரிசி, சேமியா, சக்கரை, ஏலக் காய், முந்திரிப்பருப்பு முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும், பாயாசம் பரிமாறப்படுகிறது. இன்றைய நவீன கால தமிழ் சமையல் வகையில் காபி [குழம்பி], தேநீர் போன்றவை முதன்மை குடிப்பழக்கமாக மாறியுள்ளது. இது பெரும்பாலும் காலை உணவுடனும் சிலவேளை இரவு உணவுடனும் குடிக்கப்படுகிறது. வளமான, செல்வம் மிக்க குடும்பத்தில் கூட நாளாந்த சாப்பாட்டில் பெரும் வேறுபாடு காணமுடியாது. ஆனால், விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடை பெரும் பொழுது முற்றிலும் வேறுபாடாக, அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும். இன்று நகர்ப் புறங்களில் துருப் பிடிக்காத உருக்கினால் செய்யப்பட்ட கரண்டி, முள்கரண்டி, உணவு கலன்கள் போன்றவை பாவிக்கப்பட்டாலும் ஒரு விழா, சடங்கு என்பனை நடை பெரும்பொழுது, பாரம்பரிய முறைப்படி அனைவருக்கும் தலை வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது. தமிழர் வாழும் இடங்களில், உணவு பழக்கங்கள் மிக மந்தமாகவே மாற்றம் அடைகின்றன. என்றாலும் மாற்றத்தின் சில அறிகுறிகள் இப்ப தெளிவாக தென்படுகின்றன. பொதுவாக கோதுமை மா, தாராளமாக நகர்ப்புற பகுதிகளில் பாவிக்கப்படுகின்றன. இன்றைய நவீனமயமாக்கல், தமிழரின் சமையல் அறையிலும் மெல்ல மெல்ல மாற்றங்களை கொண்டு வருகின்றன. விட்டுக்கொடுப்பும் இணக்கமும் கண்டு மாற்றி அமைக்கப் படுகின்றன. விரிவாக, மிகுந்த அக்கறை யுடன், நிதானமாக சமைக்க வேண்டிய பாரம்பரிய உணவு செய்முறை மறைந்து வருகின்றன. கூட்டுக் குடும்பம் மறைந்து இன்று தனிக் குடும்பம் எங்கும் பரவலாகக் காணப்படுவதும், தொழில் புரியும் பெண்கள் அதிகரித்து இருப்பதும், இப்படியான தவிர்க்க முடியாத இன்றைய சூழ்நிலை, தமிழர்களின் சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்துள்ளது எனலாம். அவர்கள் இன்று இலகுவான சில உணவு வகைகளை நாடுகின்றனர். எனினும் தமிழர் உணவு நடைமுறைகள், அவர்களின் பண்பாட்டு தாக்கங்கள், ஈடுபாடுகள் இன்னும் அவைகளின் அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளன. முதலாம் நூற்றாண்டு சில உணவு செய்முறைகளை இன்னும் அப்படியே அவ்வளவு பெரிய மாற்றம் இன்றி பின்பற்றுகிறார்கள். இன்று இந்த அவசர உலகில், என்ன சாப்பிடுவது என்ற கேள்வி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் எதிர்நின்று எம்மை பயமுறுத்துகிறது. லோ கொலஸ்ட்ரால் [low cholesterol], ஹை புரோட்டீன் [high Protein ], ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் [Omega-3 Fatty Acid], பாலிபினைல் [Polyphenols], ஃபோலிக் ஆசிட் [Folic Acid], குட் கொலஸ்ட்ரால் [good cholesterol] என்று ஏதேதோ சொல்லி நம்மைப் பயமுறுத்துகிறார்கள். இன்று இரண்டு விதமான உணவு வகைகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய நவீன உணவு. அதில் அதிகம் துரிதவகை உணவுகள், செயற்கை சுவையூட்டிகளால் தயாரிக்கப்பட்டது. நார்ச்சத்து வைட்டமின் குறைவு, அதிக சர்க்கரை – உப்பு சேர்க்கப்பட்டது. மற்றொன்று நமது மூதாதையர் காலம் தொட்டு உண்ணப்பட்டு வரும் பாரம்பரிய உணவு. இதில் விதவிதமான சுவைகள், ருசிகள் கிடையாது. ஆனால், உடல் நலத்தை மேம்படுத்தக்கூடியது. இந்த உணவு வகைகள் பருவகால மாறுதல்களுக்கு ஏற்ப உடலைச் சீர்செய்யக் கூடியது. இந்த இரண்டில் எதை நாம் தேர்வு செய்வது என்பதை நாம் முடிவு செய்வதற்கு பதிலாக சந்தை முடிவு செய்கிறது. பகட்டான விளம்பரங்களும் போலி வாக்குறுதிகளும் கவர்ச்சியான பாக்கெட்டுகளும் மேற்கத்திய உணவே சிறந்தது என்று நம்மிடம் திணிக்கின்றன. இதுதான் இன்றுள்ள முக்கியப் பிரச்னை. குறிப்பாக கி மு 300-கி பி 300 இடைப்பட்ட சங்க இலக்கியத்தில், தமிழரின் உணவு பண்பாடு பற்றிய பல பண்டைய செய்திகளை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அதில் அரசனும் செல்வந்தரும், பொதுமக்களுக்கு கொடுத்த உணவு வகைகளைப் பற்றிய வர்ணனைகளை காண முடிகிறது. உதாரணமாக, "கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்" [63-64] மற்றும் “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” [177-178] போன்ற பட்டினப்பாலை அடிகள், அங்கு வறுத்த இறாலையும் வேகவைத்த ஆமையையும் உண்டார்கள் என்பதையும், பூம்புகாரின் அங்காடித் தெருவில் அமைந்து உள்ள மதுபானக் கடை முற்றத்தில், மீனையறுத்துப் பின் இறைச்சியையுமறுத்து அவ்விரண்டு தசையினையும் பொரிக்கும் ஆரவாரத்தையும் தெட்டத் தெளிவாக அது எடுத்து கூறுகிறது. மேலும் மழலைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, பெரியவருக்கு கைக்குத்தல் புழுங்கல், பாட்டிக்கு அவல், மாலை சிற்றுண்டியாக பொரி, என நெல்லை தேவைக்கேற்றபடி தயாரிக்கவும், இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பமும், நீண்ட வெள்ளை சரங்களை போன்று அவிக்கப்பட்ட இடி அப்பமும் பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் இன்று அவிப்பது போன்ற நீராவியில் சமைத்த வட்ட வடிவ இடியப்பம் அன்று இருக்கவில்லை. உணவியல் அறிஞர் கே.டி.ஆசயா [Dr. K.T. Achaya] தனது "Indian Food, A Historical Companion, The Food Industries of British India, and A Historical Dictionary of Indian Food(all published by Oxford University Press, India)" என்ற புத்தகத்தில், தோசை, வடை போன்றவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார். எனினும் இட்டலி அப்படியில்லை என்கிறார். அது ஒரு வெளி நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது என்கிறார். கி பி 1250 இற்கு பின்புதான் இப்ப நாம் செய்வது போன்ற இட்டலி நடைமுறைக்கு வந்ததாக கே.டி.ஆசயா கூறுகிறார். இட்டலி இந்தோனேஷியாவில் முதலில் சமைக்கப்பட்டது என்றும், அதன் ஒரு பகுதியை ஆட்சி செய்த தென் இந்தியா அரசனின் சமையல்காரன் கி பி 800-1200 ஆண்டுகளில் நாடு திரும்பும் போது, இந்த உணவை தென் இந்தியாவிற்கு கொண்டு வந்து இருக்கலாம் என்ற ஒரு பரிந்துரையையும் அவர் முன் வைக்கிறார். மேலும் ‘மதுரைக் காஞ்சி’ வரிகள், 626-627: "கவவொடு பிடித்த வகை அமை மோதகம், தீஞ் சேற்றுக் கூவியர்" என்று சங்க காலத்தில் காய்ச்சின பாகோடே பருப்பும் தேங்காய் கூட்டி உள்ளீடாக வைத்துப் பிடித்த மோதகம் [கொழுக்கட்டை] விற்கும் வணிகர் பற்றிய தகவலையும் தருகிறது. இன்றும் நாம் உண்ணும், தமிழரின் பாரம்பரிய உணவில் ஒன்றான 'தயிர் சாதமும் புளிக் குழம்பும்' என்ற, அன்றைய சங்கத்தமிழரின் உணவு மரபை ஒரு இளமனைவியின் கதையாகவே கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167, ஒரு சமையல் நூல் போல் வர்ணிக்கிறது. கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து விட்டு, புதிதாக திருமணம் செய்த தலைவி தன் காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள். பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள். தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு ... பழக்கம் வேறு இல்லை. தலைவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல் வேறு. விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. தலைவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று அதன் பின் புளிக் குழம்பும் செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள் என்கிறது அந்த பாடல் . “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.” -குறுந்தொகை 167 ஆனால் தமிழில் எழுதப்பட்ட முழுமையான சமையல் நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்ததாக சிறுபாணாற்றுப்படை, வரிகள் 238-241, குறிப்பிடுகிறது. அதில், ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் பாணர்களுக்கு விருந்து படைக்கும்போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப்பட்ட உணவை இட்டானாம் என்று கூறுகிறது. எனினும் இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்துவிட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நூல் இருந்தது என்ற செய்தியால், நாம் அக்கால தமிழரின் உணவு மரபின் சிறப்பைக் காணக்கூடியதாக இருக்கிறது. “கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப் பூ விரி கச்சைப் புகழோன் தன்முன், பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள் பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்," -சிறுபாணாற்றுப்படை 238-241 [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 29 தொடரும்
-
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!"
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 14] உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் என்று இன்று அழைக்கப்படுவது, இப்போதைய ஈராக் ஆகும். அங்கு தான் பண்டைய மெசொப்பொத்தேமியா நகரம் இருந்தது. அங்கு வாழ்ந்த பண்டைய சுமேர் மக்களை, அதாவது சுமேரியனை உள்ளடக்கிய அந்த முதல் நாகரிகத்தை, சிலவேளை திடீர் நாகரிகம் என வரலாற்று அறிஞர்கள் கூறுவர். மெசொப்பொத்தேமியாவில் உள்ள டைகரிஸ் மற்றும் யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் [Tigris and Euphrates rivers] இடைப் பட்ட பகுதியில், கிறிஸ்துக்கு முன், கிட்டத்தட்ட 4000 ஆண்டு அளவில் திடீர் என உண்டாகிய நாகரிகம் இது ஆகும். 5000 ஆண்டுகளுக்கு முன், சுமேரியர்களே உலகின் முதல் எழுத்து வடிவத்தை உண்டாக்கியவர்கள் என, இதுவரை அறிவியல் ரீதியாக கிடைத்த சான்றுகளில் இருந்து நம்பப்படுகிறது. இந்த எழுத்துக்களின் வடிவம் ஆப்பு எழுத்து அல்லது கூனிபோம் எழுத்து [Cuneiform script] என்று அழைக்கப்படும். இவை முக் கோண வடிவம் கொண்டவை ஆகும். அவர்களே முற்காலத்திய நகர் சார்ந்த நாகரிகத்தை, தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைத்தவர்கள். இங்கு தான், கிறிஸ்துக்கு முன், 3500 க்கும் 3000 ஆண்டுகளுக்கு இடையில் விவசாய குடியிருப்பாளர்களான இவர்கள், இந்த நகர் சார்ந்த நாகரிக அமைப்பை நிறுவினார்கள். இதில் மிகவும் சிறந்து விளங்கியது 'ஊர்' என்ற நகரமாகும். ஆனால் குழப்ப மூட்டும் ஒரு கேள்விக்கு, அதாவது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதற்கு நாம் விடை தேட வேண்டி உள்ளது. அப்போது தான், இந்த திடீர் சுமேரியர்களைப் பற்றிய மர்மம் தீர்க்கப் படும். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான மொழி இருந்தது. ஆனால் அது அவர்களை சுற்றிய பகுதி எதன் உடனும் ஒத்து போக வில்லை. அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்கள் என நம்பப்படுகிறது .ஆனால் கடல் வழியாகவோ தரை வழியாகவோ எனத்தெரியாது? என்றாலும் சில உண்மைகள், அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டக் கூடியவையாக உள்ளன. உதாரணமாக சுமேரியன் கடவுள் அடிக்கடி குன்றில் நிற்பது போலவே, அவர்களின் இலக்கியத்தில் எடுத்துச் சொல்லப் படுகிறது. இதை தமிழ் கடவுள் முருகனுடன் ஒப்பிடலாம். மேலும் அவர்களுடைய முன்னைய கட்டிடங்கள் மரக் கட்டைகளை அடிப் படையாக கொண்டவை ஆகும். ஆகவே, மரங்கள் செறிந்து இருக்கும் ஓர் இடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். தொல் பொருளியலின் படி, அவர்கள் [சுமேரியர்கள்], தங்களை கறுத்த தலையினர் என அழைத்ததுடன், அவர்கள் நாடோடியினர் எனவும் எங்கு இருந்து வந்தார்கள் என சரியாக இன்னும் அடையாளம் காணப்படாதவர்கள் எனவும் அறியப்படுகிறது. அவர்கள் மெசொப்பொத்தேமியாவில் இருந்த இரண்டு ஆறுகளுக்கு, அதாவது யூபிரிடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகளுக்கு [the Tigris and the Euphrates] இடையிலும் அருகிலும் குடியேறி, சகல கூறுகளையும் கொண்ட, சிறப்புடைய நாகரிகத்தை மேம்படுத்தினார்கள். அவர்கள் வேளாண்மையை ஒரு ஒழுங்கு முறை படுத்தி, நீர்ப் பாசனத்தை விருத்தி செய்து, முதலாவது சக்கரத்தையும் குயவர் பயன் படுத்தும் சக்கரத்தையும் செய்து ஒரு தொழில் நுட்ப முன்னேற்றம் அடைந்தார்கள். அது மட்டும் அல்ல, ஒரு வித குடியாட்சி நிலை நாட்டி, கிறிஸ்துக்கு முன் 4000 ஆண்டளவில், நகரங்கள் அமைத்தார்கள். பேராசிரியர் சாமுவேல் நோவா கிராமர் [professor Samuel Noah Kramer (September 28, 1897 – November 26, 1990)] அவர்களது வாழ் நாள் உழைப்பால், சுமேரியர்கள் நல்லதோர் கவிதைகளும் இலக்கியங்களும் எழுதியது தெரிய வந்தது. எப்படியாயினும் அவர்களும் அவர்களை வென்று அங்கு வாழ்ந்தவர்களும் அதாவது பாபிலோன், அசிரிய மக்கள் போன்றோர்களும் [Babylon and Assyria] அந்த நாகரிகத்தை, நகரத்தை கைவிட்டு தீடீரென மறைந்து போனார்கள். அவை, அந்த சிறப்பு மிக்க முதல் நாகரிகம், 2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் மூடப்பட்டு விட்டது. சுமேரியன் முதலில், படம் எழுத்துகளுடன் எழுத ஆரம்பித்தான். அங்கு ஒவ்வொரு உருவ வடிவமும் ஒரு முழு சொல்லை குறித்தது. உதாரணமாக, 'டு' [du] என்ற சொல், பாதத்தின் [foot] படம் மூலம் குறிக்கப்பட்டது. ஆனால் பாதத்தின் படம் மேலும் நில், போ, வா, கொண்டு வா, போன்ற வற்றையும் குறிக்கலாம். ஒருவினைச் சொல்லை தெரிவிக்க, இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சின்னம் அல்லது குறியீடு ஒன்றாக போடப்பட்டன. உதாரணமாக, ஒரு தலை கிண்ணத்திற்கு பக்கத்தில் இருந்தால், அது 'தின்' அல்லது 'சாப்பிடு' [eat] என்பதை குறிக்கும். சுமேரு எழுத்து மிகவும் சிக்கலானது. அதனால் ஒரு சில எழுத்தாளர்கள் தான், அதில் தேர்ச்சியடைந்தார்கள். கிட்டத்தட்ட 250 பேர் அளவில் இருக்கலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவர்களை சுமேரிய அறிஞர்கள் [sumerologist] என அழைப்பர். சுமேரியன் தனது நிலத்தை அல்லது நாட்டை "கி .என் .கிர்" [KI.EN.GIR, the "Land of the Lords of Brightness"] என அழைத்தார்கள். இதன் பொருள் 'ஒளி மயமான கடவுளின் நாடு' ஆகும். சுமேரிய மொழியில் சமயத்தை குறிக்கும் சொல் கிடையாது. ஏனென்றால், அங்கு ஆலயத்தின் வழிபாடு குடும்ப வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. இயற்கை வழிபாடே அங்கு காணப்படுகிறது. என்றாலும் நாளடைவில் மனித உருவம் இந்த இயற்கை சக்தியுடன் இணைந்து விட்டது. பண்டைய சுமேரியன் தனது பல நேரங்களை கடவுளுக்கு அற்பனித்தார்கள். இது, இந்த அற்பனிப்பு, வழிபாட்டாலும் தியாகம் அல்லது பலியாலும் கையாளப்பட்டது. ஆலயம் பல வேறு பட்ட நோக்கத்திற்காகவும் பாவிக்கப் பட்டது. என்றாலும், அங்கு முக்கிய செயல்பாடு, வழிபாடும் கல்வியும் ஆகும். ஒவ்வொரு ஆலயமும் கல்வி நிலையம் வைத்திருந்தன. அங்கு மாணவர்கள் கணிதமும் எழுத்தும் படித்தார்கள். சுமேரியரின் ஆசிரியர் 'உம்மை' [ummia] என்று அழைக்கப்பட்டார். ஒரு துணை அல்லது ஒருதார மணம் அங்கு நிலவியது. என்றாலும், காமக்கிழத்தி அல்லது வைப்பாட்டி, அவர்களின் சமூகத்தில், பொறுத்துக் கொள்ளப் பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப் பட்டது [Monogamy was the normal practice, although concubines were tolerated]. பொதுவாக, குடுப்பத்தின் மூத்தவர் மண வாழ்க்கையை ஏற்பாடு செய்தனர். மேலும் சுமேரியரின் வீடுகள் பொதுவாக ஓர் அடுக்கு வீடு. இது சுட்ட அல்லது சூரிய ஒளியில் காய்ந்த களிமண் செங்கல்லால் கட்டப் பட்டது. இது நவீன வீட்டிற்கு உரிய எல்லா வசதியையும் கொண்டுள்ளது. மேலும் செல்வந்தர்கள் ஈரடுக்கு வீடு கட்டி வாழ்ந்தார்கள். இசை அவர்களின் வாழ்க்கையுடன் ஒட்டியிருந்தது. அது மட்டும் அல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கும் கவிதைகளும் பாடல்களும் தாராளமாக காணப்பட்டன. மேலும் ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட போது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். ஆயினும் பல வருடங்களுக்கு பின்பு தான் பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான, சாமுவேல் நோவா கிராமர் [samuel noah kramer], இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இக் காதல் கணவனுக்காக, முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு [sumerian king Shu-sin [Cu-Suen]] உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை, அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே, உலகின் மிகப் பழைய காதல் பாட்டும் ஆகும். இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ["Man of my heart, my beloved man, your allure is a sweet thing, as sweet as honey......."] இதனை என்னால் இயன்ற வரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன். கட்டாயம், உங்களுக்கு இது, சங்க கால காதல் பாடல்களை ஒரு வேளை, நினைவூட்டலாம்? "அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே ! உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே! உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது" "நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே எனது சுய விருப்பத்தில், நான் உன்னிடம் வருவேன் ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னைக் உன்னுடன் கொண்டு போ" "நீ என்னை மயக்கி விட்டாய், எனவே எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன் காதல் தோழனே! படுக்கையறைக்குள் என்னை உன்னுடன் தூக்கிப் போ" "மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு என் மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர விடு தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே!" "இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட விடு வீரனே! நீ என்னை கவர்கிறாய், எனவே என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன் என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்" "உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது எனக்குத் தெரியும் மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது எனக்குத் தெரியும் இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு" "வீரனே! நீ என்னை விரும்புவதால், நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால் எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!! "என்லில்" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும் எனது "ஷு-சின்" அரசனே! உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின், தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின், அளவு சாடியின் மூடி போல, அங்கே உன் கையை எனக்காக மூடு [வை] மரச் சீவல் சாடியின் மூடி போல அங்கே உன் கையை எனக்காக விரி [பரப்பு]" [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] குறிப்பு: ஷு சின்: கி.மு 2037 - 2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர். என்லில்: மழை மற்றும் காற்று கடவுள் [Shu - sin or Cu - Suen: was king of Sumer and Akkad, and was the penultimate king of the Ur III dynasty. "Lord (of the) Storm" / Ellil is one of the most important gods of Mesopotamia.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 15 தொடரும் படம்-[01]: நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமேரியர்கள் வாய்க்கால் முறையை பாவித்தார்கள் படம்-[02]: மெசெப்பொத்தோமியா கல்வி படம்-[03 & 04]: பண்டைய மெசெப்பொத்தோமியா படம்-[05]: ஊர் நகரத்தின் மாதிரி.ஊரில் உள்ள அரச சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைவினை கலைப்பொருள் இதுவாகும் படம்-[06]: காதலர்கள் [கோவலன் கண்ணகி]
-
"உதவும் கரங்கள்..!"
"உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய்யவேண்டும் என்று இல்லை. சிறிதாயினும் பெரிய அன்புடன், ஈடுபாடுடன் செய்ய வேண்டும். அதற்காக சமயத்தை, பெயரை மாற்ற வேண்டும் என்று உதவும் கரங்களை வியாபாரமும் செய்யக் கூடாது. அதுவும் மத குருமார் செய்வது, அவர்களின் பொய்த்தன்மையை கோடிட்டு காட்டுகிறது என்று நான் எண்ணுகிறேன். "என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து?" என்று நன்னெறி பாடல் ஒன்று கூறுவதுபோல, சுவையான உணவினைக் கையால் எடுத்து நாவுக்கு அளிப்பது, அது தன்னைப் புகழவேண்டும் என்பதற்காகவா? இல்லையல்லவா. அதுபோலத்தான் தன்னை எப்போதும் முகஸ்துதி செய்யாமல் இருந்தாலும் அத்தகையவர்களின் துன்பங்களையும் நீக்குவதற்கு ஓடோடிப் போய் உதவி செய்வர் எவ்வித பலனையும் எதிர்பார்க்காத பெரியோர்கள் ஆகும். அப்படியானவர்கள் உள்ள உதவும் கரங்களை நான் வணங்குகிறேன். மதிக்கிறேன்! வீதி வெயிலில் நிற்கும் ஏழை பிச்சைக்கார சிறுமிக்கு தன் செருப்பை கழட்டி கொடுத்து, தான் வெறும் காலுடன் அந்த வெயிலில் நிற்பதாக ஒரு சுய விளம்பரத்தைக் கண்டேன். அழுவதா சிரிப்பதா எனக்கு புரியவில்லை. அந்த ஏழை சிறுமிக்கு இந்த வெயில் எல்லாம் அத்துப்படி. அவளுக்கு தேவையானது சாப்பாடு, அழுக்கற்ற உடை, தூங்க நல்ல இடம், உழைக்க சிறு வேலை, முடிந்தால் கொஞ்சம் கல்வி. நான் அனுபவ பட்டவள் என்பதால் சொல்கிறேன், அதற்காக எல்லா உதவும் கரங்களையும் சொல்லவில்லை, பாதிக்கு மேல் விளம்பரம் என்பது உண்மை, உங்க முகநூலை / இணையத்தை திறந்து பாருங்கள் உங்களுக்கு தானாகவே புரியும். ஏன் நான் அண்மையில் [மார்ச் நடுப்பகுதி, 2023], எப்படி ஏழை குடும்பம் ஒன்று உதவும் கரங்கள் என்ற போர்வையில், மட்டக்களப்பு - வாகரை, ஊரியன்கட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ நாலு பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்று பெயர், சமயம் மாற்றப்பட்டது என்பதை ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் (பாகம் : 123) இல் அறிந்தேன் [https://www.youtube.com/watch?v=iKTHOI3SOks]. அதனால் தான் என் கதையை உங்களுடன் கீழே பகிர்கிறேன். வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி என "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று புறம் 189 :7-8 இல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கூறுகிறார். அன்பு என்ற சுடருக்குத் தியாகம்தானே எண்ணெய்யாக இருக்க முடியும் என்ற தோரணையில், கலி. 139 "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவும் அழியும் என்று பெருங்கடுங்கோவும் குறிப்பிடுகிறார். உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுவது போலச் சமூக உறுப்புகளான மனிதர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். இதயம் இரத்தத்தை எல்லாம் தனக்கே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? இரைப்பை, உணவை அப்படியே தானே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? என் மனம் இப்படித்தான் எண்ணுகிறது. 'கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை' என ஔவையார் ஒருமுறை பாடியது ஞாபகம் இருக்கிறது. ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு ஓலைக்குடிசையின் முற்றத்தில் உள்ள பெரும் கல்லின் மீது உட்கார்ந்து கொண்டு நிலவை வெறுத்து பார்த்துக் கொண்டு இருந்தேன். என் அம்மாவின் இருமல் சத்தம் இன்னும் என் காதுக்கு கேட்கிறது. என் தம்பியும் தங்கையும் வெளியில் எதோ விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மணி இரவு ஏழு மணி இருக்கும், பக்கத்து காட்டில் பொறுக்கிய சுள்ளித் தடிகள் அடுப்பில் வைத்த மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துக் கொண்டு இருக்கிறது. அப்பா, கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலில் இறந்து பதினாலு பதினைந்து ஆண்டு இருக்கும். அப்பாவின் மறைவிற்குப் பின் அம்மா அப்பப்ப கிடைக்கும் கூலி வேலைகள் மூலம் எம்மை ஓரளவு வளர்த்து எடுத்ததுடன் நானும் உயர் வகுப்பு வரை படித்தேன். என்றாலும் இப்ப அம்மாவும் இயலாமல் இருக்கிறார். எனக்கு சிறு வேலையாவது கிடைக்கும் என்றால், எப்படியும் நாம் இந்த வறுமையில் இருந்து கொஞ்சமாவது நிமிரலாம். மற்றும் படி நிலாவின் குளிர்ச்சியில் காய நான் இங்கு குந்தி இருக்கவில்லை! யாரோ கடலை சாப்பிட்டுவிட்டு எறிந்த பேப்பர் துண்டு காற்றோடு அள்ளுப்பட்டு என் காலடியில் வந்து விழுந்தது. மெல்ல குனிந்து அதை எடுத்து, நிலா ஒளியில் பார்த்தேன். யாரோ வெளிநாட்டில் இருந்து இங்கு வருவதாகவும், அவர் தன் தாயின் பெயரில் உதவும் கரங்கள் நடத்துவதாகவும், அதன் பெயரில் வறுமையில் வாடும் அல்லது உழைக்கும் தந்தையை இழந்த தனிக் குடும்பங்களுக்கு உதவ இருப்பதாகவும் அறிந்தேன். அது எனக்கு ஒரு ஆறுதலாக அந்தநேரம் இருந்தது. அவர் நேரடியாக எம் கிராமத்துக்கு வந்து, அந்தந்த குடும்பங்களை பார்த்து கதைத்து தன் நிறுவனத்தால் இயன்ற உதவிகள் செய்வார் என பின் குறிப்பும் அதில் இருந்தது. நான் ஓரளவு படித்து இருப்பதால், எனக்கு எதாவது ஒரு வேலை எடுக்க அல்லது வீட்டில் இருந்து ஓரளவு வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புக்கு உதவினால் போதும் என்று என் மனதில் எண்ணினேன். அதை விட்டுவிட்டு எதோ ஒரு கொஞ்ச உணவு மூடை , ஒன்று இரண்டு உடுப்புகள் தந்து, அதை படங்களும் எடுத்து இணையத் தளத்தில், முகநூலில் பெருமைப்படுத்தி போடுவதால் பிரச்சனை தீராது என்பது என் திட நம்பிக்கை. என் பெயர் வெண்ணிலா, வயது இருபது. பெயருக்கு ஏற்ற அழகு என்று என்னை எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் இந்த அழகு, கவர்ச்சி ஏழைக்கு கூடாது என்பதை அந்த உதவும் கரங்களின் ஸ்தாபகரை சந்தித்த பின்பு தான் உணர்ந்தேன். அந்த நிறுவனருக்கு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கலாம். என் தந்தையை விட கொஞ்சம் வயது கூட என்றே சொல்லலாம். காலை ஒன்பது மணியளவில் அந்த நிறுவனர், தன் சில நண்பர்களுடன் எங்களை அந்த கிராமத்தில் உள்ள பொது விடுதி ஒன்றில் அழைத்தார். எனவே நான் அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் அங்கு சென்றோம், மிகவும் கரிசனையுடன் முதலில் எங்கள் எல்லோரையும் விசாரித்தார். எங்களுக்கு சில பலகாரங்களும் குளிர் பானமும் தரப்பட்டது. அம்மா அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். தம்பி தங்கைகள் இன்னும் படிக்கிறார்கள் என்று சொன்னேன். என் உயர் வகுப்பு சித்திக்கான சான்றிதழையும் காட்டினேன். தான் கட்டாயம் உதவி செய்வதாகவும், அதற்கு சில படிவங்கள் நிரப்ப வேண்டும் என்றும், இப்ப அம்மா இருமலில் கஷ்டப்படுவதால், அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு மாலை நான் மட்டும் வந்து நிரப்பலாம் என்று அன்பாக கூறி அனுப்பினார். உண்மையில் எதோ எம் கவலைகள் ஓரளவு தீரும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம். அம்மாவின் முகத்தில் அன்று தான் ஒரு மகிழ்ச்சியை கண்டேன். மாலை மூன்று மணிக்கு பிறகு நானும் எனக்கு துணையாக தம்பியும், திரும்பவும் அங்கு புறப்பட்டோம். அவரின் நண்பர்கள் வெளியே போய்விட்டார்கள். அவர் மட்டுமே அங்கு இருந்தார். எங்களை கண்டதும் அன்பாக வரவேற்று உள்ளுக்குள் அழைத்தார். பிறகு தம்பியை பார்த்து, அக்கா படிவம் நிரப்ப வேண்டும், அதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும், அதுவரை டிவி பார்க்கும் படி அதை போட்டுவிட்டார். பின் என்னை அலுவலக அறைக்கு படிவம் நிரப்ப கூப்பிட்டார். நான் படிவங்களை நிரப்பும் போது, சரியாக நிரப்ப வேண்டும் அப்ப தான் வேலை எடுக்க உதவும் என்று கரிசனையுடன் சொல்லிக் கொண்டு, தான் சொல்லுவது படி என்னை நிரப்பச் சொல்லி என் அருகில் கொஞ்சம் சாய்ந்தார். என் அப்ப மாதிரி அவர் என்பதால் நான் அதை அந்த நேரம் தவறாக உணரவில்லை. ஆனால் அவர் படிவத்தை நிரப்ப உதவுவதை விட, என் அழகை, என் கவர்ச்சியை விமர்சிக்க தொடங்கினார். அப்பவும் அதை நான் பெரிதாக பொறுப்படுத்த வில்லை. அவர் வயது போனவர் என்பதால், ஒரு விளையாட்டாக சொல்லுகிறார் என்று நினைத்தேன். கொஞ்சம் நிரப்பி முடிய, இனிப்பு பண்டங்களும் குளிர்பானமும் தந்து, இதை சாப்பிட்டுவிட்டு தொடரலாம் என்றார். தானும் என்னுடன் நெருங்கி இருந்து சாப்பிட தொடங்கினார். அப்ப தான் எனக்கு கொஞ்சம் அருவருப்பாக இருந்தது. நான் விலகி தள்ளி இருக்க முயன்றேன். அவர் சடுதியாக கையை பிடித்து, தன்னுடன் இழுத்தார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, ஓங்கி ஒரு அறை கன்னத்தில் போட்டேன். அதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. படிவத்தை கிழித்து அவர் முகத்தில் எறிந்துவிட்டு சடுதியாக அந்த விடுதியை விட்டு தம்பியுடன் வெளியே வந்தேன். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது. நான் வெளியே ஒட்டமும் நடையுமாக கெதியாக வீடு நோக்கி போனேன். என்னை அறியாமலே கண்ணீர் ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் தற்செயலாக அந்த வழியே வந்த ஒரு இருபத்தி ஐந்து, இருபத்தி ஆறு வயது மதிக்கத்தக்க இளைஞன் எம் இருவரையும் பார்த்துவிட்டான். அவன் என் தம்பியை கூப்பிட்டு என்ன நடந்தது, ஏன் அக்கா அழுகிறார் என்று விசாரித்தார். எனக்கு கோபம் கோபமாக வந்தது. இவனும் அவனை மாதிரி ஒருவனோ என்ற எண்ணம் தான் மனதில் ஓங்கியது. நீ உன் வேலையை பார் என்று அவனைத் திட்டினேன். அப்பொழுது தான் அவனின் அதிகாரப்பூர்வ வேலை அடையாள அட்டை கழுத்தில் தொங்குவதைக் கண்டேன். அதில் அவனின் பெயரும் மற்றும் சிவில் இன்ஜினியர், கட்டிடத் துறை என்று இருந்தது. நான் உடனடியாக மன்னிப்பு கேட்டு நடந்ததை கூறினேன். அவன் ஒன்றும் கொஞ்ச நேரம் பேசவில்லை, பின் தான் இந்த கிராமத்துக்கு புதிதாக வேலைக்கு வந்துள்ளதாகவும், தனது அலுவலகத்தில் ஏதாவது ஒரு பொருத்தமான வேலை இருந்தால் சொல்வதாகவும், எனது வீட்டு விலாசத்தையும், பெயரையும் கேட்டுவிட்டு தன் வழியில் போய்விட்டான். நான் அவனை நம்பவில்லை. என் முதல் அனுபவம் இன்னும் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது. ஒரு கிழமைக்கு பின்பு, ஒரு நாள் அதே இளைஞன் என் குடிசைக்கு வந்தான். முதலில் அம்மாவிடம் ஏதேதோ கதைதான். ஒரு வேலை படிவத்தையும் தந்தான். அதை நிரப்பி, தனது அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படி கூறிவிட்டு புறப்பட்டான். அம்மா தேநீர் குடித்துவிட்டு போகும் படி கூப்பிட்டாலும், அவன் இன்னும் ஒரு நேரம் குடிக்கிறேன் என்று கூறிவிட்டு உடனடியாக போய்விட்டான். நான் வெளியே வந்து அந்த பெரும் கல்லின் மீது உட்க்கார்ந்து கொண்டு அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன், நிலவின் குளிர்ச்சியை எனோ இன்று உணர்ந்தேன்! எனக்குள் என்னென்னவோ அலைகள் பாய்ந்து கொண்டு இருந்தன, அது என்ன என்று எனக்குத் சரியாக புரியவில்லை, முகத்தில் மகிழ்ச்சி தானாக வந்தது. அவன் மறையும் மட்டும் கண்வெட்டாமல் பார்த்துக்கொன்டே இருந்தேன். ஒரு கிழமைக்கு பின் எனக்கு உதவி பயிற்சி குமாஸ்தா வேலை கிடைத்தது. நான் முதல் நாள் என்பதால், எதோ என்னிடம் இருந்த உடைகளில் கொஞ்சம் நல்லதாக இருந்ததை உடுத்துக்கொண்டு, அதே நேரம் கொஞ்சம் பயத்துடனும் வேலைக்கு போனேன். அவன் அந்த அலுவலகத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்தான். அந்த கட்டிடத் துறை அலுவலகத்தின் முகாமையாளர் என்னை நலம் விசாரித்துவிட்டு, அவனுக்குத் தான் என்னை உதவி பயிற்சி குமாஸ்தாவாக நியமித்தார். அது எனக்கு நிம்மதியாக இருந்தது. தெரியாததை பயப்படாமல் கேட்டு அறியலாம் என்ற நம்பிக்கை வந்தது. எனோ அவன் மேல் எனக்கு ஒரு பிரியம் இப்ப ! ஆனால் அவனுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது? ஒன்று மட்டும் என் மனதில் ஆணிவேர் மாதிரி நிலைத்து நின்றது. பெரும் ஆரவாரத்துடன் வந்த அந்த உதவும் கரங்களுக்கும், சொல்லிக்கொள்ளாமல் வந்த இந்த உதவும் கரங்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகப் எனக்கு புரிந்தது. ஏனெனில் இந்த செயல் அன்புடன் செய்யப்பட்டது. ஆனால் முன்னையதோ அப்படி இல்லை. அது ஒரு வியாபாரம். இவன் இதில் தனக்கு எந்த புகழையோ அல்லது தற்பெருமையையோ எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், உதவி தேவை என்று தோன்றிய சக மனிதனுக்கு தன்னால் இயன்றதை மௌனமாக செய்து முடித்துள்ளான். அது தான் எனக்கு அவன் மேல் ஒரு காதல். என் மேல் சாயமாட்டானா, கை பிடித்து இழுக்கான என்று வெட்கம் விட்டு மனதில் ஏங்குகிறேன். ஆனால் அவனாக என்னை விரும்பும் மட்டும் எல்லை தாண்டமாட்டேன். அப்படித்தான் நான் வளர்க்கப் பட்டேன்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது]
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் கட்டமைப்பு மலர்ந்து மடியும் ஒரு எண்ணக்கரு மந்தக்காற்றில் பறக்கும் பட்டம் போல் மடிந்து விடும் ஒரு நேரத்தில் !" "மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன் மந்திரம் தந்திரம் மகிழ்வைத் தரா மழலையின் முகத்தில் உண்மையை அறி !" "செல்வம் நிலையான நிலை அற்றது செவியில் அதை ஏற்று மனிதா செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் செத்துவிடும் ஒருநாள் நினைவில் கொள் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 1] நேரார் - பகைவர் 2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும்
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 27 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டி சங்க கால தமிழன் உண்டு அனுபவித்த, சங்க கால கேபாப்பை இனி விபரமாக பார்ப்போம். "பதன் அறிந்து, துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின், பராஅரை வேவை பருகு எனத்தண்டி, காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை, ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி, அவை அவை முனிகுவம் எனினே சுவைய, வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ." அதாவது கயிறு போல் திரிக்கப் பட்ட அருகம்புல் கட்டை தின்ன கொடுத்து கொழுக்க வைக்கப் பட்ட செம்மறி ஆட்டின் பருத்த மேல் தொடை இறைச்சியையும், இரும்புக் கம்பியில் கோர்த்துச் சுடபட்ட இறைச்சி துண்டுகளையும் (கேபாப்? / kebab - a dish of pieces of meat, fish, or vegetables roasted or grilled on a skewer or spit.) உண்ணச் சொல்லி பல முறை வலியுறுத்திக் கொடுத்தான் கரிகாலன். அதன் சூடு தாங்க முடியாது வாயின் வலப் புறமும், இடப் புறமும் கறித் துண்டுகளை மாற்றி, மாற்றி உண்டார்கள். அதன் பின் சோற்றில் நிரம்ப கறித் துண்டுகளை போட்டு கொடுத்தான் கரிகாலன். இனி வேண்டாம் என மறுக்கையில், இனிமையுடைய வெவ்வேறு பல வடிவினையுடைய பணியாரம் கொண்டு வந்து அவற்றைத் தின்னும் படி எங்களையிருத்தினான் என்கிறது. அது மட்டும் அல்ல, அது விருந்தோம்பும் முறையையும் அடிகள் 74-78 மூலம் விளக்குகிறது. "கேளிர்போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி,கண்ணில் காண நண்ணுவழி இரீஈ பருகு அன்ன அருகா நோக்கமொடு" (பொருநராற்றுப்படை, 74-78), அதாவது, விருந்தினரிடம் நண்பனைப் போல உறவு கொண்டு, இனிய சொற்களைக் கூறி, கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து, கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி, எலும்பே குளிரும் படியான, அன்பால் நெகிழச் செய்யதான் என்கிறது இந்த அடிகள். மேலும் உபநிடதம், "பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாம் உணவே. நாம் சிலவற்றை உண்ணு கிறோம். சில எம்மை உண்ணுகின்றன" என்று அறிவுபூர்வமாக சொல்லுகிறது. அத்துடன் புலால் உண்ணுதலையும், கள் [ஒரு வகை மது] உண்பதையும் சங்ககாலச் சான்றோர்கள் கூட கடிந்துரைக்க வில்லை. ஆனால், தமிழர்கள் அல்லது திராவிடர்கள் மத்தியில் பிராமணிய இந்து மதம், சமணம், புத்த மதம் போன்றவை பெரும் பிரபல்யம் பெற்ற போது "கொல்லாமை", "புலால் உண்ணாமை" மற்றும் கள்ளுண்ணாமை அங்கு வரவேற்கப்பட்டது. இன்றைய சமையலில் அவ்வளவு பிரபலமற்ற அல்லது முற்றாகவே வழக்கொழிந்த சங்க கால சமையல்களான - ஈயல் [சிறகு முளைத்த கறையான்], மாதுளை விதைகளை வெண்ணெய்யில் பொரித்தல் [வறுத்தல்] போன்றவற்றை இனி பார்ப்போம். அகநானுறு 394, நற்றிணை 59, புறநானுறு 119 போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் மிக தெளிவாக தமிழர்கள் "மோரில் ஈயலை ஊறப் போட்டு புளிக் கறி சமைப்பது" போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளை எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல கொங்கு நாட்டு பழங்குடிகளான, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் வாழும் இருளர்கள், மலசர்கள் இன்னும் ஈயலை உட் கொள்ளுகிறார்கள். சிறகு முளைத்துப் பறக்கும் கறையான் அல்லது ஈசல், பொதுவாக குறைந்த ஆயுட் காலத்தை கொண்டவை என நம்பப்படுகிறது. புற்றில் இருந்து வெளி வருகிற ஈசல்களில் பெரும்பாலானவை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகி விடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக் கொண்டும் உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்? உண்மையில்,இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன என்பதே உண்மை! மழை பெய்து முடித்த மறுநாள் காலை பொதுவாக பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும். அவ்வேளையில் அதை இந்த மலை வாழ் பழங்குடியினர் பிடிப்பார்கள். இந்த ஈசல்களை பகலில் காய வைத்து, பின் வேறு சேர்மானங்களுடன் [கடலை மற்றும் உப்பு போன்றவற்றுடன்] வறுத்தும் அல்லது அதனுடன் பச்சரிசி, வெல்லம் போட்டு சமைத்தும் உண்பார்கள். இனி அகநாநூறு [394] விரிவாகப் பார்ப்போம். "சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து, ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு, சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, இளையர் அருந்த, பின்றை, நீயும்" -அகநானூறு - 394. சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசி யோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர் என்கிறது. அது போலவே, மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையின் நல்ல இலையையும் கலந்து நல்ல மோரிலிருந்து எடுத்த வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும், மாங்காய் ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்கிறது. "சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்" -பெரும்பாணாற்றுப்படை (306-310). நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 28 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 27 "Food Habits of Ancient Sangam Tamils continuing" Let's take a closer look at the Sangam-era Kebab, which was enjoyed by the Sangam-era Tamils after roasting the meat on an iron rod. "knowing the time to eat, he urged me to eat cooked, thick thigh meat of sheep that were fed arukam grass twisted to ropes, and fatty, big pieces of meat roasted on iron rods. I cooled the hot meat pieces, moving them from one side of my mouth to the other. He gave more and more even when I refused them again and again. He served us many tasty pastries in many shapes, and urged me to stay." Not only that, it also explains hospitality in lines 74-83: "The king treated me like a relative, was one with me desiring friendship, made me stay near him with hospitality and kind words, and looked at me with unending kindness that melted me and chilled my bones. He removed my torn clothes drenched in sweat, patched with different threads and ruled by lice and nits, and gave me clothing filled with flower designs, so fine like the skin of a snake, that I was unable to see the weave." Further, Upanishad well said that , “Everything in the universe is food. We eat some. Some eat us" and In Sangam era, We understand that, no poet speaks bad of meat - eating & liquor drinking. Only the growth of Brahmanical Hinduism, Jainism, and Buddhism made Tamils value vegetarianism and non - drinking as good qualities worthy to follow. Moving from dishes more popular to others less popular or almost not in use in today’s kitchen, we come to few recipes such as winged termites, and pomegranate seeds fried in butter [pomegranate curry]. In Sangam poem, Akananuru 394, Natrinai 59 and Purananuru 119 clearly mentioned about the habit of consuming termites, which is still continued even to this day among the Irula tribes of the Nilgiri mountains, in the states of Tamil Nadu and Kerala, India, as well as malasar tribes of the foothills of the Anamalai hills in southern India. Malasar may be the corrupt form of Malai Arasar meaning king of the hill (malai meaning hills and arasar meaning king). They are distributed in the Palghat district of Kerala and the Coimbatore district of Tamil Nadu. winged termites, [Eeyal / ஈயல்] have a very short life span? They are all over the place when it has rained in the night, Early in the morning they are found in good quantity in anthills. These mountain-folks catch these termites and eat them even today. I am giving below one of the poem, Akananuru 394, which clearly states that termites from red mounds were cooked in curries with tamarind and sweet buttermilk and enjoyed by the ancient Tamils. "Your servants eat mature curds, the off-white color of sheep with small heads, with fine threshed millet and white ants from termite mounds after the rains, mixed with sweet tamarind in the meal with melted white butter from red cows." [lines,2-7] Similarly, Perumpanatruppadai describes pomegranate curry, cooked by pomegranate seeds fried in butter, as below. A pomegranate is a delicious fruit commonly eaten throughout India & Sri Lanka. It has a hard outer covering encasing bright ruby red seeds, which are the edible portion of the fruit. Pomegranates are considered a super food because they are a wonderfully rich source of Vitamin A, Vitamin C, folic acid & antioxidants. Dried pomegranate powder (known as anardana powder) is a commonly used spice especially in North Indian cuisine. However, in this ancient dish, fresh pomegranate seeds were used. "and you will be given dishes made with freshly opened pomegranates mixed with warm butter from fragrant buttermilk of tawny cows, mixed with fresh curry leaves and black pepper. You will also receive fragrant vadu mango [Maavadu / Baby Mangoes] pickles from tender green mangoes from tall trees." [lines,306-310] Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 28 WILL FOLLOW
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 03 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. ஆகவே சமாதான வழிகள் அன்றே ஆரம்பித்துவிட்டன, ஆனால் இன்று வரை [பஹாய் நம்பிக்கை] அவை திருப்ப திருப்ப எதிரொலிக்கின்றன ஒழிய இன்னும் நிறைவேறியதாக காணவில்லை? எனவே, முதலில் மனித மனம் மாறவேண்டும் / பக்குவமடைய வேண்டும். அதை கலந்து, அலசி ஆராய்ந்து யாரையும் தாழ்த்தாமல், பக்குவமாக உரையாடுதன் மூலம் அறிவை / சிந்தனையை பரவலாக்கவேண்டும் என்று நம்புகிறேன்! இப்ப இவை தொடர்பாக எனக்கு ஞாபகம் வரும் ஆறு பாடல்கள் கிழே தருகிறேன். அவை பொருத்தமான பாடல்களாக எனக்கு தோன்றுகிறது. "When there is righteousness in the heart, there is beauty in the character; When there is beauty in character, there is harmony in the home; When there is harmony in the home there is order in the nation; When there is order in the nation, there is peace in the world." [A.P.J. Abdul Kalam] யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே [கணியன் பூங்குன்றனார்] "'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்." [கலித்தொகை 133] "தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் குமே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே , தப்புந பலவே" [மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்] Imagine there is no heaven no hell below us [Above us, only sky] all men are even and God is with us [Imagine there's no countries It isn't hard to do] Imagine there are no boundaries One is a human not a countrymen And all people are living life in peace. [You may say I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will be as one] [Imagine no possessions I wonder if you can No need for greed or hunger A brotherhood of man] [Imagine all the people Sharing all the world] I am a poet and i write but i hope someday everybody will come together as one and the world will change forever [John Lennon] "I many times thought Peace had come When Peace was far away — As Wrecked Men — deem they sight the Land — At Centre of the Sea — And struggle slacker — but to prove As hopelessly as I — How many the fictitious Shores — Before the Harbor be" — [Emily Dickinson ] அதே நேரத்தில் சமயம், காலம் கடந்த திருக்குறளில் இருந்து ஒரு சில உதாரணத்தை சான்றாக தருகிறேன். குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே. குறள் 851:. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். குறள் 853:. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். குறள் 856:. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 04
-
"குடும்பம் ஒரு கோயில்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"குடும்பம் ஒரு கோயில்"
"குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். எனவே ஆலயம் என்றால் உயிர்கள் ஒன்றுபடும் இடமே! அதுவே வீடும் குடும்பமும்!! கோவில் என்பது கோ + இல், இங்கே கோ என்பது அரசனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். நானும் அங்கு அரசனாக, இளவரசனாக, இரண்டு தங்கைகளுடன் மகிழ்வாக இருந்தேன். ஆனால் 2023 தொடக்கத்தில் இருந்து இலங்கையில், அசாதாரணமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டமை, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல காரணங்களால், அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் 2022 ஆண்டில் இருந்து இலங்கைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன என்பது வரலாறு. ஆனால் இது எப்படி சிறு வியாபாரம் செய்துவந்த எம் குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை இன்று தான் உணர்ந்தேன். 2023 மார்ச் தொடக்கத்தில் ஒரு நாள் இரவு, நான் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது. திடீரென நான் ஏதோ அம்மா அப்பா அறையில் இருந்து கேட்டேன். இதுவரை நான் அப்படி ஒரு சம்பவத்தை கண்டதோ கேட்டதோ இல்லை. என் அம்மா, அப்பாவிடம், 'இப்படியே போனால் நான் வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு எங்கேயாவது போய் தொலையப் போகிறேன்' என கடும் தொனியில் மிரட்டுவது, அதட்டி பேசுவது கேட்டது. நான் எப்படி அந்தநேரம் அதை உணர்ந்தேன் என்பதை என்னால் விளக்குவது கடினம். மகிழ்வு, சோகம் என்ற ஒரு இலகு சொல்லால் விளக்குவதை விட உணர்வுகள் மிகவும் சிக்கலானவை என்பதை இப்ப நான் அறிகிறேன். எத்தனை சொற்களும் இதற்கு போதாது. என்றாலும் நான் சோர்ந்தேன், பயம் கொண்டேன், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் என்று சுருக்கமாக என்னால் கூறமுடிகிறது. இது முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தாவிட்டாலும் ஓரளவு என் நிலைமையைப் புரிய வைத்திருக்கும். நானும் என் தங்கைகளும் தனிமையில் கை விட்டது போல ஒரு உணர்வு. என் இதயம் வெடித்தது, என்றாலும் நான் என் குமுறலை வெளியில் காட்டவில்லை. அன்பு, பாசம் நிலவிய எம் குடும்பம் என்ற கோவிலில் என்ன நடந்தது? நான் எனக்குள் கத்தி அழுதேன். எம் குடும்பம் என்ற வீட்டின் ஒவ்வொரு சுவரும் இடிந்து விழுவது போல உணர்ந்தேன். நேரம் இப்ப இரவு பத்துமணி இருக்கும். என் தங்கைகள் உறங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் அறைக்குள் இருந்து எப்படியோ அந்த சண்டை கொல்லைப்புறத்துக்கும் போய்விட்டது. அக்கம் பக்கத்தாரின் காதில் விழுந்திடுமோ என்ற பயம் எனக்கு மறுபக்கம். ஒருவரை யொருவர் கத்துகிறார்கள், அதை கேட்கும் பொழுது நானும் என் தங்கைகளும் மிகவும் வேதனைப்பட்டு வெட்கப்படும் அளவுக்கு இருந்தது. எனக்கு சரியாக தெரியவில்லை, எப்படி கல்யாணம் செய்து, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு இடையில் இந்த தகராறு வெடித்தது என்று ? என்றாலும் எவ்வளவு மோசமானது என்பதை மட்டும் உணர்ந்தேன். அதேநேரம் இது சில உண்மைகளை, இதுவரை தெரியாத செய்திகளை, எமக்கு சொன்னது. 'கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது' என்றதின் அர்த்தமும் ஓரளவு புரியத் தொடங்கியது! அம்மா, அப்பா எம்மை பெற்றதால், நாம் எப்பவும் அவர்களை உயர்வாகவே கருதுகிறோம். அவர்களும் எம் மேல் பாசம் பொழிகிறார்கள். ஆனால் அவர்களிலும் சிலவேளை கொடிய குணங்கள், செயல்கள் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம். எமது குடும்பம் ஒரு ஆலயமாக வெளியே பிரகாசித்துக் கொண்டு இருந்தாலும், உண்மையில் அது கொடியவர்களின் கூடாரம் என்பதை உணர்ந்தேன். என் தங்கைகள் இருவரும் தமது அறையில் இருந்து ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள். இதை பார்த்த, அப்பா , ஒன்றும் இல்லை , நாம் ஓகே என்று அம்மாவும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டபடி தம் அறைக்கு போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் மூட்டிய தீ இன்னும் என் மனதில் எரிந்து கொண்டே இருந்தது. அது அணையவில்லை? என் அம்மா கல்யாணம் செய்து சில ஆண்டுகளின் பின், வீட்டின் தேவைகள் அதிகரித்ததால், என் அப்பா ஏற்கனவே வேலை பார்த்து வந்த பல்பொருள் அங்காடியில் வேலைக்கு சேர்ந்தார். அவர் மிகவும் அழகாக, எல்லோருடனும் அன்பாக பேசக்கூடியவராக இருந்ததால், முதலாளிக்கு அவரை நன்றாக பிடித்துவிட்டது. காலம் கொஞ்சம் போக, முதலாளி என் அம்மாவை தனது நேரடி உதவியாளராக பதவி உயர்வு கொடுத்தார். இது அவர்கள் இருவரும் தனிய பல நேரம் சந்திக்கும், கதைக்கும் சந்தர்ப்பங்களை கொடுத்தது. முதலாளி ஏற்கனவே திருமணம் செய்து இருந்தாலும், அவர் மெல்ல மெல்ல அம்மாவுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். அம்மா, தான் பிள்ளைகளின் தாய் என்று முதலில் மறுத்தாலும், சூழ்நிலை சிலவேளை சாதகமாகவும் அமைந்து விட்டது. ஆனால், அம்மா எல்லாவற்றையும் ஒளிவுமறைவு இன்றி அப்பாவிடம் கூறுவார். அப்படி ஒரு கட்டத்தில் தான், முதலாளியின் ஆசைக்கு இணங்குவது போல நடித்து, அதை களவாக வீடியோ எடுக்க திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் அதை வைத்து முதலாளியிடம் இருந்து பெருந்தொகை பணம் கறப்பதாக இருந்தது. அப்படி கடைசியில் ஏமாற்றி பெற்றது தான் இப்ப அப்பா முதலாளியாக இருக்கும் கடை. அந்த முதலாளியும் தனது கடையை இழந்த சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டார். இப்ப இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், வியாபாரம் மந்தமாக போக, அந்த பாவம் தான் தம்மை வாட்டிவதைக்குது என்று, ஒருவரை ஒருவர் பழியை போட தொடங்கியதே இந்த தகராறு என ஒருவாறு ஊகித்துக் கொண்டேன். எனினும் அதை நான் தங்கைகளுக்கோ அல்லது வெளியேயோ காட்டவில்லை. அந்த கொடியதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. இதுவும் ஒரு வாழ்வா ?, அதில் நானும் ஒரு உறுப்பினரா ?? எனக்கு இப்ப அந்த முதலாளியின் குடும்பம் எங்கே, எப்படி என அறிய ஆவலாக இருந்தது. நான் வங்கி உதவி முகாமையாளராக, பல்கலைக்கழக படிப்பு முடித்து சென்ற ஆண்டு முடிவில் பதவி ஏற்றதால், விசாரிப்பது இலகுவாக இருந்தது. முதலாளியின் மனைவியும் அவரது இரு பெண் பிள்ளைகளும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்வதாக அறிந்தேன். எம் குடும்பம் மீண்டும் ஒரு கோவிலாக வேண்டும் என்றால், கட்டாயம் அவர்களுக்கு நல்ல வாழ்வு அமைக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் ஓங்கியது. அதேநேரம் அம்மா அப்பாவின் தகராறையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்ப தான், ஏன் நான் அவர்களின் ஒரு மகளைக் கல்யாணம் கட்டக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அது அம்மா அப்பாவுக்கும் ஒரு ஆறுதலை கொடுக்கலாம்? 'புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே, சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே' என்று நம்புபவன் நான். 'தவறு அறிந்து சரியாய் செய், விளைவு இருக்கு புரிந்து செய்' என்பதை அம்மா அப்பா இனியாவது புரிந்து கொள்ளட்டும்! "மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான் மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!" "குடும்பம் ஒரு கோவில் என்றால் அன்பே அதில் தெய்வம் ஆகும் கருணை ஒளி கண்கள் வீசினால் மங்கலம் என்றும் நின்று ஜொலிக்கும்!" அதனால் தான் நான் அந்த முடிவு எடுத்தேன். இன்று மார்ச் 15, 2023, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அதில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் ஒரு சில மணித்தியாலத்தை, அம்மா அப்பாவின் பாவத்தை கழுவ, அந்த முதலாளியின் குடும்பத்தை சந்திக்க, பெண் கேட்க இப்ப போய்க்கொண்டு இருக்கிறேன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"புண்ணியம்"
"புண்ணியம்" "புண்ணியம் என்று ஒன்றும் இல்லை புரிந்த உணர்வுடன் உலகை அணுகு பசித்த வயிறுக்கு உணவு கொடு புலுடா மத கொள்கை நம்பாதே!" "தவறு செய்யாதே பாவம் வரும் தடுமாறி நீ நரகம் போவாய் தருமம் செய் புண்ணியம் வரும் தடை இன்றி சொர்க்கம் செல்வாய்!" "புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புவியில் உள்ளோரை வலைக்குள் வீழ்த்திவிட்டது!" "நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்!" "தவறு அறிந்து சரியாய் செய் விளைவு இருக்கு புரிந்து செய் அன்பு, அமைதி எங்கும் நிலவ உண்மை, ஒற்றுமை நிலை நிறுத்து!" "மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான் மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!" "பிறரை மதி ஒற்றுமை பேணு கைம்மாறு இன்றி கடமையை செய் பிச்சை போட்டு புண்ணியம் வராது பிறந்தவர் எவருக்கும் மறுபிறப்பு இல்லை!" "புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நீசம் = இழிவு
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
எல்லோருக்கும் நன்றிகள்