Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"உதவும் கரங்கள்..!"
"உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய்யவேண்டும் என்று இல்லை. சிறிதாயினும் பெரிய அன்புடன், ஈடுபாடுடன் செய்ய வேண்டும். அதற்காக சமயத்தை, பெயரை மாற்ற வேண்டும் என்று உதவும் கரங்களை வியாபாரமும் செய்யக் கூடாது. அதுவும் மத குருமார் செய்வது, அவர்களின் பொய்த்தன்மையை கோடிட்டு காட்டுகிறது என்று நான் எண்ணுகிறேன். "என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணும் சென்று பொருள்கொடுப்போர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து?" என்று நன்னெறி பாடல் ஒன்று கூறுவதுபோல, சுவையான உணவினைக் கையால் எடுத்து நாவுக்கு அளிப்பது, அது தன்னைப் புகழவேண்டும் என்பதற்காகவா? இல்லையல்லவா. அதுபோலத்தான் தன்னை எப்போதும் முகஸ்துதி செய்யாமல் இருந்தாலும் அத்தகையவர்களின் துன்பங்களையும் நீக்குவதற்கு ஓடோடிப் போய் உதவி செய்வர் எவ்வித பலனையும் எதிர்பார்க்காத பெரியோர்கள் ஆகும். அப்படியானவர்கள் உள்ள உதவும் கரங்களை நான் வணங்குகிறேன். மதிக்கிறேன்! வீதி வெயிலில் நிற்கும் ஏழை பிச்சைக்கார சிறுமிக்கு தன் செருப்பை கழட்டி கொடுத்து, தான் வெறும் காலுடன் அந்த வெயிலில் நிற்பதாக ஒரு சுய விளம்பரத்தைக் கண்டேன். அழுவதா சிரிப்பதா எனக்கு புரியவில்லை. அந்த ஏழை சிறுமிக்கு இந்த வெயில் எல்லாம் அத்துப்படி. அவளுக்கு தேவையானது சாப்பாடு, அழுக்கற்ற உடை, தூங்க நல்ல இடம், உழைக்க சிறு வேலை, முடிந்தால் கொஞ்சம் கல்வி. நான் அனுபவ பட்டவள் என்பதால் சொல்கிறேன், அதற்காக எல்லா உதவும் கரங்களையும் சொல்லவில்லை, பாதிக்கு மேல் விளம்பரம் என்பது உண்மை, உங்க முகநூலை / இணையத்தை திறந்து பாருங்கள் உங்களுக்கு தானாகவே புரியும். ஏன் நான் அண்மையில் [மார்ச் நடுப்பகுதி, 2023], எப்படி ஏழை குடும்பம் ஒன்று உதவும் கரங்கள் என்ற போர்வையில், மட்டக்களப்பு - வாகரை, ஊரியன்கட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ நாலு பிள்ளைகளை கொண்ட குடும்பம் ஒன்று பெயர், சமயம் மாற்றப்பட்டது என்பதை ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் (பாகம் : 123) இல் அறிந்தேன் [https://www.youtube.com/watch?v=iKTHOI3SOks]. அதனால் தான் என் கதையை உங்களுடன் கீழே பகிர்கிறேன். வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது. ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி என "செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே" என்று புறம் 189 :7-8 இல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் கூறுகிறார். அன்பு என்ற சுடருக்குத் தியாகம்தானே எண்ணெய்யாக இருக்க முடியும் என்ற தோரணையில், கலி. 139 "பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்று பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் குறிப்பிடுகிறார். உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவும் அழியும் என்று பெருங்கடுங்கோவும் குறிப்பிடுகிறார். உடல் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுவது போலச் சமூக உறுப்புகளான மனிதர்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். இதயம் இரத்தத்தை எல்லாம் தனக்கே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? இரைப்பை, உணவை அப்படியே தானே வைத்துக் கொண்டால் என்ன ஆவது? என் மனம் இப்படித்தான் எண்ணுகிறது. 'கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை' என ஔவையார் ஒருமுறை பாடியது ஞாபகம் இருக்கிறது. ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு ஓலைக்குடிசையின் முற்றத்தில் உள்ள பெரும் கல்லின் மீது உட்கார்ந்து கொண்டு நிலவை வெறுத்து பார்த்துக் கொண்டு இருந்தேன். என் அம்மாவின் இருமல் சத்தம் இன்னும் என் காதுக்கு கேட்கிறது. என் தம்பியும் தங்கையும் வெளியில் எதோ விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். மணி இரவு ஏழு மணி இருக்கும், பக்கத்து காட்டில் பொறுக்கிய சுள்ளித் தடிகள் அடுப்பில் வைத்த மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துக் கொண்டு இருக்கிறது. அப்பா, கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலில் இறந்து பதினாலு பதினைந்து ஆண்டு இருக்கும். அப்பாவின் மறைவிற்குப் பின் அம்மா அப்பப்ப கிடைக்கும் கூலி வேலைகள் மூலம் எம்மை ஓரளவு வளர்த்து எடுத்ததுடன் நானும் உயர் வகுப்பு வரை படித்தேன். என்றாலும் இப்ப அம்மாவும் இயலாமல் இருக்கிறார். எனக்கு சிறு வேலையாவது கிடைக்கும் என்றால், எப்படியும் நாம் இந்த வறுமையில் இருந்து கொஞ்சமாவது நிமிரலாம். மற்றும் படி நிலாவின் குளிர்ச்சியில் காய நான் இங்கு குந்தி இருக்கவில்லை! யாரோ கடலை சாப்பிட்டுவிட்டு எறிந்த பேப்பர் துண்டு காற்றோடு அள்ளுப்பட்டு என் காலடியில் வந்து விழுந்தது. மெல்ல குனிந்து அதை எடுத்து, நிலா ஒளியில் பார்த்தேன். யாரோ வெளிநாட்டில் இருந்து இங்கு வருவதாகவும், அவர் தன் தாயின் பெயரில் உதவும் கரங்கள் நடத்துவதாகவும், அதன் பெயரில் வறுமையில் வாடும் அல்லது உழைக்கும் தந்தையை இழந்த தனிக் குடும்பங்களுக்கு உதவ இருப்பதாகவும் அறிந்தேன். அது எனக்கு ஒரு ஆறுதலாக அந்தநேரம் இருந்தது. அவர் நேரடியாக எம் கிராமத்துக்கு வந்து, அந்தந்த குடும்பங்களை பார்த்து கதைத்து தன் நிறுவனத்தால் இயன்ற உதவிகள் செய்வார் என பின் குறிப்பும் அதில் இருந்தது. நான் ஓரளவு படித்து இருப்பதால், எனக்கு எதாவது ஒரு வேலை எடுக்க அல்லது வீட்டில் இருந்து ஓரளவு வருமானம் தரக்கூடிய தொழில் வாய்ப்புக்கு உதவினால் போதும் என்று என் மனதில் எண்ணினேன். அதை விட்டுவிட்டு எதோ ஒரு கொஞ்ச உணவு மூடை , ஒன்று இரண்டு உடுப்புகள் தந்து, அதை படங்களும் எடுத்து இணையத் தளத்தில், முகநூலில் பெருமைப்படுத்தி போடுவதால் பிரச்சனை தீராது என்பது என் திட நம்பிக்கை. என் பெயர் வெண்ணிலா, வயது இருபது. பெயருக்கு ஏற்ற அழகு என்று என்னை எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் இந்த அழகு, கவர்ச்சி ஏழைக்கு கூடாது என்பதை அந்த உதவும் கரங்களின் ஸ்தாபகரை சந்தித்த பின்பு தான் உணர்ந்தேன். அந்த நிறுவனருக்கு ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கலாம். என் தந்தையை விட கொஞ்சம் வயது கூட என்றே சொல்லலாம். காலை ஒன்பது மணியளவில் அந்த நிறுவனர், தன் சில நண்பர்களுடன் எங்களை அந்த கிராமத்தில் உள்ள பொது விடுதி ஒன்றில் அழைத்தார். எனவே நான் அம்மா, தம்பி, தங்கை எல்லோரும் அங்கு சென்றோம், மிகவும் கரிசனையுடன் முதலில் எங்கள் எல்லோரையும் விசாரித்தார். எங்களுக்கு சில பலகாரங்களும் குளிர் பானமும் தரப்பட்டது. அம்மா அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். தம்பி தங்கைகள் இன்னும் படிக்கிறார்கள் என்று சொன்னேன். என் உயர் வகுப்பு சித்திக்கான சான்றிதழையும் காட்டினேன். தான் கட்டாயம் உதவி செய்வதாகவும், அதற்கு சில படிவங்கள் நிரப்ப வேண்டும் என்றும், இப்ப அம்மா இருமலில் கஷ்டப்படுவதால், அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு மாலை நான் மட்டும் வந்து நிரப்பலாம் என்று அன்பாக கூறி அனுப்பினார். உண்மையில் எதோ எம் கவலைகள் ஓரளவு தீரும் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம். அம்மாவின் முகத்தில் அன்று தான் ஒரு மகிழ்ச்சியை கண்டேன். மாலை மூன்று மணிக்கு பிறகு நானும் எனக்கு துணையாக தம்பியும், திரும்பவும் அங்கு புறப்பட்டோம். அவரின் நண்பர்கள் வெளியே போய்விட்டார்கள். அவர் மட்டுமே அங்கு இருந்தார். எங்களை கண்டதும் அன்பாக வரவேற்று உள்ளுக்குள் அழைத்தார். பிறகு தம்பியை பார்த்து, அக்கா படிவம் நிரப்ப வேண்டும், அதற்கு கொஞ்ச நேரம் எடுக்கும், அதுவரை டிவி பார்க்கும் படி அதை போட்டுவிட்டார். பின் என்னை அலுவலக அறைக்கு படிவம் நிரப்ப கூப்பிட்டார். நான் படிவங்களை நிரப்பும் போது, சரியாக நிரப்ப வேண்டும் அப்ப தான் வேலை எடுக்க உதவும் என்று கரிசனையுடன் சொல்லிக் கொண்டு, தான் சொல்லுவது படி என்னை நிரப்பச் சொல்லி என் அருகில் கொஞ்சம் சாய்ந்தார். என் அப்ப மாதிரி அவர் என்பதால் நான் அதை அந்த நேரம் தவறாக உணரவில்லை. ஆனால் அவர் படிவத்தை நிரப்ப உதவுவதை விட, என் அழகை, என் கவர்ச்சியை விமர்சிக்க தொடங்கினார். அப்பவும் அதை நான் பெரிதாக பொறுப்படுத்த வில்லை. அவர் வயது போனவர் என்பதால், ஒரு விளையாட்டாக சொல்லுகிறார் என்று நினைத்தேன். கொஞ்சம் நிரப்பி முடிய, இனிப்பு பண்டங்களும் குளிர்பானமும் தந்து, இதை சாப்பிட்டுவிட்டு தொடரலாம் என்றார். தானும் என்னுடன் நெருங்கி இருந்து சாப்பிட தொடங்கினார். அப்ப தான் எனக்கு கொஞ்சம் அருவருப்பாக இருந்தது. நான் விலகி தள்ளி இருக்க முயன்றேன். அவர் சடுதியாக கையை பிடித்து, தன்னுடன் இழுத்தார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை, ஓங்கி ஒரு அறை கன்னத்தில் போட்டேன். அதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. படிவத்தை கிழித்து அவர் முகத்தில் எறிந்துவிட்டு சடுதியாக அந்த விடுதியை விட்டு தம்பியுடன் வெளியே வந்தேன். அப்ப தான் எனக்கு நிம்மதி வந்தது. நான் வெளியே ஒட்டமும் நடையுமாக கெதியாக வீடு நோக்கி போனேன். என்னை அறியாமலே கண்ணீர் ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் தற்செயலாக அந்த வழியே வந்த ஒரு இருபத்தி ஐந்து, இருபத்தி ஆறு வயது மதிக்கத்தக்க இளைஞன் எம் இருவரையும் பார்த்துவிட்டான். அவன் என் தம்பியை கூப்பிட்டு என்ன நடந்தது, ஏன் அக்கா அழுகிறார் என்று விசாரித்தார். எனக்கு கோபம் கோபமாக வந்தது. இவனும் அவனை மாதிரி ஒருவனோ என்ற எண்ணம் தான் மனதில் ஓங்கியது. நீ உன் வேலையை பார் என்று அவனைத் திட்டினேன். அப்பொழுது தான் அவனின் அதிகாரப்பூர்வ வேலை அடையாள அட்டை கழுத்தில் தொங்குவதைக் கண்டேன். அதில் அவனின் பெயரும் மற்றும் சிவில் இன்ஜினியர், கட்டிடத் துறை என்று இருந்தது. நான் உடனடியாக மன்னிப்பு கேட்டு நடந்ததை கூறினேன். அவன் ஒன்றும் கொஞ்ச நேரம் பேசவில்லை, பின் தான் இந்த கிராமத்துக்கு புதிதாக வேலைக்கு வந்துள்ளதாகவும், தனது அலுவலகத்தில் ஏதாவது ஒரு பொருத்தமான வேலை இருந்தால் சொல்வதாகவும், எனது வீட்டு விலாசத்தையும், பெயரையும் கேட்டுவிட்டு தன் வழியில் போய்விட்டான். நான் அவனை நம்பவில்லை. என் முதல் அனுபவம் இன்னும் என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது. ஒரு கிழமைக்கு பின்பு, ஒரு நாள் அதே இளைஞன் என் குடிசைக்கு வந்தான். முதலில் அம்மாவிடம் ஏதேதோ கதைதான். ஒரு வேலை படிவத்தையும் தந்தான். அதை நிரப்பி, தனது அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படி கூறிவிட்டு புறப்பட்டான். அம்மா தேநீர் குடித்துவிட்டு போகும் படி கூப்பிட்டாலும், அவன் இன்னும் ஒரு நேரம் குடிக்கிறேன் என்று கூறிவிட்டு உடனடியாக போய்விட்டான். நான் வெளியே வந்து அந்த பெரும் கல்லின் மீது உட்க்கார்ந்து கொண்டு அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்தேன், நிலவின் குளிர்ச்சியை எனோ இன்று உணர்ந்தேன்! எனக்குள் என்னென்னவோ அலைகள் பாய்ந்து கொண்டு இருந்தன, அது என்ன என்று எனக்குத் சரியாக புரியவில்லை, முகத்தில் மகிழ்ச்சி தானாக வந்தது. அவன் மறையும் மட்டும் கண்வெட்டாமல் பார்த்துக்கொன்டே இருந்தேன். ஒரு கிழமைக்கு பின் எனக்கு உதவி பயிற்சி குமாஸ்தா வேலை கிடைத்தது. நான் முதல் நாள் என்பதால், எதோ என்னிடம் இருந்த உடைகளில் கொஞ்சம் நல்லதாக இருந்ததை உடுத்துக்கொண்டு, அதே நேரம் கொஞ்சம் பயத்துடனும் வேலைக்கு போனேன். அவன் அந்த அலுவலகத்தில் கொஞ்சம் பிஸியாக இருந்தான். அந்த கட்டிடத் துறை அலுவலகத்தின் முகாமையாளர் என்னை நலம் விசாரித்துவிட்டு, அவனுக்குத் தான் என்னை உதவி பயிற்சி குமாஸ்தாவாக நியமித்தார். அது எனக்கு நிம்மதியாக இருந்தது. தெரியாததை பயப்படாமல் கேட்டு அறியலாம் என்ற நம்பிக்கை வந்தது. எனோ அவன் மேல் எனக்கு ஒரு பிரியம் இப்ப ! ஆனால் அவனுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது? ஒன்று மட்டும் என் மனதில் ஆணிவேர் மாதிரி நிலைத்து நின்றது. பெரும் ஆரவாரத்துடன் வந்த அந்த உதவும் கரங்களுக்கும், சொல்லிக்கொள்ளாமல் வந்த இந்த உதவும் கரங்களுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகப் எனக்கு புரிந்தது. ஏனெனில் இந்த செயல் அன்புடன் செய்யப்பட்டது. ஆனால் முன்னையதோ அப்படி இல்லை. அது ஒரு வியாபாரம். இவன் இதில் தனக்கு எந்த புகழையோ அல்லது தற்பெருமையையோ எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், உதவி தேவை என்று தோன்றிய சக மனிதனுக்கு தன்னால் இயன்றதை மௌனமாக செய்து முடித்துள்ளான். அது தான் எனக்கு அவன் மேல் ஒரு காதல். என் மேல் சாயமாட்டானா, கை பிடித்து இழுக்கான என்று வெட்கம் விட்டு மனதில் ஏங்குகிறேன். ஆனால் அவனாக என்னை விரும்பும் மட்டும் எல்லை தாண்டமாட்டேன். அப்படித்தான் நான் வளர்க்கப் பட்டேன்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது]
"ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் கட்டமைப்பு மலர்ந்து மடியும் ஒரு எண்ணக்கரு மந்தக்காற்றில் பறக்கும் பட்டம் போல் மடிந்து விடும் ஒரு நேரத்தில் !" "மகிமையான வாழ்வை பெருமையாக அனுபவி மகிழ்வுடன் துன்பமும் கலந்தவன் மனிதன் மந்திரம் தந்திரம் மகிழ்வைத் தரா மழலையின் முகத்தில் உண்மையை அறி !" "செல்வம் நிலையான நிலை அற்றது செவியில் அதை ஏற்று மனிதா செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் செத்துவிடும் ஒருநாள் நினைவில் கொள் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] 1] நேரார் - பகைவர் 2] செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும் - ஒப்பனை செய்யப்பட்ட சிவிகையும் தேரும் வண்டியும்
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 27 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டி சங்க கால தமிழன் உண்டு அனுபவித்த, சங்க கால கேபாப்பை இனி விபரமாக பார்ப்போம். "பதன் அறிந்து, துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின், பராஅரை வேவை பருகு எனத்தண்டி, காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை, ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி, அவை அவை முனிகுவம் எனினே சுவைய, வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ." அதாவது கயிறு போல் திரிக்கப் பட்ட அருகம்புல் கட்டை தின்ன கொடுத்து கொழுக்க வைக்கப் பட்ட செம்மறி ஆட்டின் பருத்த மேல் தொடை இறைச்சியையும், இரும்புக் கம்பியில் கோர்த்துச் சுடபட்ட இறைச்சி துண்டுகளையும் (கேபாப்? / kebab - a dish of pieces of meat, fish, or vegetables roasted or grilled on a skewer or spit.) உண்ணச் சொல்லி பல முறை வலியுறுத்திக் கொடுத்தான் கரிகாலன். அதன் சூடு தாங்க முடியாது வாயின் வலப் புறமும், இடப் புறமும் கறித் துண்டுகளை மாற்றி, மாற்றி உண்டார்கள். அதன் பின் சோற்றில் நிரம்ப கறித் துண்டுகளை போட்டு கொடுத்தான் கரிகாலன். இனி வேண்டாம் என மறுக்கையில், இனிமையுடைய வெவ்வேறு பல வடிவினையுடைய பணியாரம் கொண்டு வந்து அவற்றைத் தின்னும் படி எங்களையிருத்தினான் என்கிறது. அது மட்டும் அல்ல, அது விருந்தோம்பும் முறையையும் அடிகள் 74-78 மூலம் விளக்குகிறது. "கேளிர்போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி,கண்ணில் காண நண்ணுவழி இரீஈ பருகு அன்ன அருகா நோக்கமொடு" (பொருநராற்றுப்படை, 74-78), அதாவது, விருந்தினரிடம் நண்பனைப் போல உறவு கொண்டு, இனிய சொற்களைக் கூறி, கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து, கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி, எலும்பே குளிரும் படியான, அன்பால் நெகிழச் செய்யதான் என்கிறது இந்த அடிகள். மேலும் உபநிடதம், "பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாம் உணவே. நாம் சிலவற்றை உண்ணு கிறோம். சில எம்மை உண்ணுகின்றன" என்று அறிவுபூர்வமாக சொல்லுகிறது. அத்துடன் புலால் உண்ணுதலையும், கள் [ஒரு வகை மது] உண்பதையும் சங்ககாலச் சான்றோர்கள் கூட கடிந்துரைக்க வில்லை. ஆனால், தமிழர்கள் அல்லது திராவிடர்கள் மத்தியில் பிராமணிய இந்து மதம், சமணம், புத்த மதம் போன்றவை பெரும் பிரபல்யம் பெற்ற போது "கொல்லாமை", "புலால் உண்ணாமை" மற்றும் கள்ளுண்ணாமை அங்கு வரவேற்கப்பட்டது. இன்றைய சமையலில் அவ்வளவு பிரபலமற்ற அல்லது முற்றாகவே வழக்கொழிந்த சங்க கால சமையல்களான - ஈயல் [சிறகு முளைத்த கறையான்], மாதுளை விதைகளை வெண்ணெய்யில் பொரித்தல் [வறுத்தல்] போன்றவற்றை இனி பார்ப்போம். அகநானுறு 394, நற்றிணை 59, புறநானுறு 119 போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் மிக தெளிவாக தமிழர்கள் "மோரில் ஈயலை ஊறப் போட்டு புளிக் கறி சமைப்பது" போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளை எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல கொங்கு நாட்டு பழங்குடிகளான, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் வாழும் இருளர்கள், மலசர்கள் இன்னும் ஈயலை உட் கொள்ளுகிறார்கள். சிறகு முளைத்துப் பறக்கும் கறையான் அல்லது ஈசல், பொதுவாக குறைந்த ஆயுட் காலத்தை கொண்டவை என நம்பப்படுகிறது. புற்றில் இருந்து வெளி வருகிற ஈசல்களில் பெரும்பாலானவை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகி விடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக் கொண்டும் உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்? உண்மையில்,இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன என்பதே உண்மை! மழை பெய்து முடித்த மறுநாள் காலை பொதுவாக பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும். அவ்வேளையில் அதை இந்த மலை வாழ் பழங்குடியினர் பிடிப்பார்கள். இந்த ஈசல்களை பகலில் காய வைத்து, பின் வேறு சேர்மானங்களுடன் [கடலை மற்றும் உப்பு போன்றவற்றுடன்] வறுத்தும் அல்லது அதனுடன் பச்சரிசி, வெல்லம் போட்டு சமைத்தும் உண்பார்கள். இனி அகநாநூறு [394] விரிவாகப் பார்ப்போம். "சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து, ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு, சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, இளையர் அருந்த, பின்றை, நீயும்" -அகநானூறு - 394. சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசி யோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர் என்கிறது. அது போலவே, மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையின் நல்ல இலையையும் கலந்து நல்ல மோரிலிருந்து எடுத்த வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும், மாங்காய் ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்கிறது. "சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்" -பெரும்பாணாற்றுப்படை (306-310). நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 28 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 27 "Food Habits of Ancient Sangam Tamils continuing" Let's take a closer look at the Sangam-era Kebab, which was enjoyed by the Sangam-era Tamils after roasting the meat on an iron rod. "knowing the time to eat, he urged me to eat cooked, thick thigh meat of sheep that were fed arukam grass twisted to ropes, and fatty, big pieces of meat roasted on iron rods. I cooled the hot meat pieces, moving them from one side of my mouth to the other. He gave more and more even when I refused them again and again. He served us many tasty pastries in many shapes, and urged me to stay." Not only that, it also explains hospitality in lines 74-83: "The king treated me like a relative, was one with me desiring friendship, made me stay near him with hospitality and kind words, and looked at me with unending kindness that melted me and chilled my bones. He removed my torn clothes drenched in sweat, patched with different threads and ruled by lice and nits, and gave me clothing filled with flower designs, so fine like the skin of a snake, that I was unable to see the weave." Further, Upanishad well said that , “Everything in the universe is food. We eat some. Some eat us" and In Sangam era, We understand that, no poet speaks bad of meat - eating & liquor drinking. Only the growth of Brahmanical Hinduism, Jainism, and Buddhism made Tamils value vegetarianism and non - drinking as good qualities worthy to follow. Moving from dishes more popular to others less popular or almost not in use in today’s kitchen, we come to few recipes such as winged termites, and pomegranate seeds fried in butter [pomegranate curry]. In Sangam poem, Akananuru 394, Natrinai 59 and Purananuru 119 clearly mentioned about the habit of consuming termites, which is still continued even to this day among the Irula tribes of the Nilgiri mountains, in the states of Tamil Nadu and Kerala, India, as well as malasar tribes of the foothills of the Anamalai hills in southern India. Malasar may be the corrupt form of Malai Arasar meaning king of the hill (malai meaning hills and arasar meaning king). They are distributed in the Palghat district of Kerala and the Coimbatore district of Tamil Nadu. winged termites, [Eeyal / ஈயல்] have a very short life span? They are all over the place when it has rained in the night, Early in the morning they are found in good quantity in anthills. These mountain-folks catch these termites and eat them even today. I am giving below one of the poem, Akananuru 394, which clearly states that termites from red mounds were cooked in curries with tamarind and sweet buttermilk and enjoyed by the ancient Tamils. "Your servants eat mature curds, the off-white color of sheep with small heads, with fine threshed millet and white ants from termite mounds after the rains, mixed with sweet tamarind in the meal with melted white butter from red cows." [lines,2-7] Similarly, Perumpanatruppadai describes pomegranate curry, cooked by pomegranate seeds fried in butter, as below. A pomegranate is a delicious fruit commonly eaten throughout India & Sri Lanka. It has a hard outer covering encasing bright ruby red seeds, which are the edible portion of the fruit. Pomegranates are considered a super food because they are a wonderfully rich source of Vitamin A, Vitamin C, folic acid & antioxidants. Dried pomegranate powder (known as anardana powder) is a commonly used spice especially in North Indian cuisine. However, in this ancient dish, fresh pomegranate seeds were used. "and you will be given dishes made with freshly opened pomegranates mixed with warm butter from fragrant buttermilk of tawny cows, mixed with fresh curry leaves and black pepper. You will also receive fragrant vadu mango [Maavadu / Baby Mangoes] pickles from tender green mangoes from tall trees." [lines,306-310] Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 28 WILL FOLLOW
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 03 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள். "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. ஆகவே சமாதான வழிகள் அன்றே ஆரம்பித்துவிட்டன, ஆனால் இன்று வரை [பஹாய் நம்பிக்கை] அவை திருப்ப திருப்ப எதிரொலிக்கின்றன ஒழிய இன்னும் நிறைவேறியதாக காணவில்லை? எனவே, முதலில் மனித மனம் மாறவேண்டும் / பக்குவமடைய வேண்டும். அதை கலந்து, அலசி ஆராய்ந்து யாரையும் தாழ்த்தாமல், பக்குவமாக உரையாடுதன் மூலம் அறிவை / சிந்தனையை பரவலாக்கவேண்டும் என்று நம்புகிறேன்! இப்ப இவை தொடர்பாக எனக்கு ஞாபகம் வரும் ஆறு பாடல்கள் கிழே தருகிறேன். அவை பொருத்தமான பாடல்களாக எனக்கு தோன்றுகிறது. "When there is righteousness in the heart, there is beauty in the character; When there is beauty in character, there is harmony in the home; When there is harmony in the home there is order in the nation; When there is order in the nation, there is peace in the world." [A.P.J. Abdul Kalam] யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே [கணியன் பூங்குன்றனார்] "'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்." [கலித்தொகை 133] "தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் குமே அதனால் செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே , தப்புந பலவே" [மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்] Imagine there is no heaven no hell below us [Above us, only sky] all men are even and God is with us [Imagine there's no countries It isn't hard to do] Imagine there are no boundaries One is a human not a countrymen And all people are living life in peace. [You may say I'm a dreamer But I'm not the only one I hope someday you'll join us And the world will be as one] [Imagine no possessions I wonder if you can No need for greed or hunger A brotherhood of man] [Imagine all the people Sharing all the world] I am a poet and i write but i hope someday everybody will come together as one and the world will change forever [John Lennon] "I many times thought Peace had come When Peace was far away — As Wrecked Men — deem they sight the Land — At Centre of the Sea — And struggle slacker — but to prove As hopelessly as I — How many the fictitious Shores — Before the Harbor be" — [Emily Dickinson ] அதே நேரத்தில் சமயம், காலம் கடந்த திருக்குறளில் இருந்து ஒரு சில உதாரணத்தை சான்றாக தருகிறேன். குறள் 212: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே. குறள் 851:. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும். குறள் 853:. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும். குறள் 856:. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 04
-
"குடும்பம் ஒரு கோயில்"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"குடும்பம் ஒரு கோயில்"
"குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ என்றால் வயப்படுதல் அல்லது ஒன்றுபடுதல். எனவே ஆலயம் என்றால் உயிர்கள் ஒன்றுபடும் இடமே! அதுவே வீடும் குடும்பமும்!! கோவில் என்பது கோ + இல், இங்கே கோ என்பது அரசனையும், இல் என்பது இல்லம் அல்லது வீடு என்பதையும் குறிக்கும். நானும் அங்கு அரசனாக, இளவரசனாக, இரண்டு தங்கைகளுடன் மகிழ்வாக இருந்தேன். ஆனால் 2023 தொடக்கத்தில் இருந்து இலங்கையில், அசாதாரணமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டமை, மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமை, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறைக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல காரணங்களால், அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. 2021 ஆம் ஆண்டில், வெளிநாட்டுக் கடன், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101% ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் 2022 ஆண்டில் இருந்து இலங்கைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தன என்பது வரலாறு. ஆனால் இது எப்படி சிறு வியாபாரம் செய்துவந்த எம் குடும்பத்தையும் பாதிக்கிறது என்பதை இன்று தான் உணர்ந்தேன். 2023 மார்ச் தொடக்கத்தில் ஒரு நாள் இரவு, நான் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும் பொழுது. திடீரென நான் ஏதோ அம்மா அப்பா அறையில் இருந்து கேட்டேன். இதுவரை நான் அப்படி ஒரு சம்பவத்தை கண்டதோ கேட்டதோ இல்லை. என் அம்மா, அப்பாவிடம், 'இப்படியே போனால் நான் வீட்டை விட்டு, குடும்பத்தை விட்டு எங்கேயாவது போய் தொலையப் போகிறேன்' என கடும் தொனியில் மிரட்டுவது, அதட்டி பேசுவது கேட்டது. நான் எப்படி அந்தநேரம் அதை உணர்ந்தேன் என்பதை என்னால் விளக்குவது கடினம். மகிழ்வு, சோகம் என்ற ஒரு இலகு சொல்லால் விளக்குவதை விட உணர்வுகள் மிகவும் சிக்கலானவை என்பதை இப்ப நான் அறிகிறேன். எத்தனை சொற்களும் இதற்கு போதாது. என்றாலும் நான் சோர்ந்தேன், பயம் கொண்டேன், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன் என்று சுருக்கமாக என்னால் கூறமுடிகிறது. இது முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தாவிட்டாலும் ஓரளவு என் நிலைமையைப் புரிய வைத்திருக்கும். நானும் என் தங்கைகளும் தனிமையில் கை விட்டது போல ஒரு உணர்வு. என் இதயம் வெடித்தது, என்றாலும் நான் என் குமுறலை வெளியில் காட்டவில்லை. அன்பு, பாசம் நிலவிய எம் குடும்பம் என்ற கோவிலில் என்ன நடந்தது? நான் எனக்குள் கத்தி அழுதேன். எம் குடும்பம் என்ற வீட்டின் ஒவ்வொரு சுவரும் இடிந்து விழுவது போல உணர்ந்தேன். நேரம் இப்ப இரவு பத்துமணி இருக்கும். என் தங்கைகள் உறங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் அறைக்குள் இருந்து எப்படியோ அந்த சண்டை கொல்லைப்புறத்துக்கும் போய்விட்டது. அக்கம் பக்கத்தாரின் காதில் விழுந்திடுமோ என்ற பயம் எனக்கு மறுபக்கம். ஒருவரை யொருவர் கத்துகிறார்கள், அதை கேட்கும் பொழுது நானும் என் தங்கைகளும் மிகவும் வேதனைப்பட்டு வெட்கப்படும் அளவுக்கு இருந்தது. எனக்கு சரியாக தெரியவில்லை, எப்படி கல்யாணம் செய்து, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கு இடையில் இந்த தகராறு வெடித்தது என்று ? என்றாலும் எவ்வளவு மோசமானது என்பதை மட்டும் உணர்ந்தேன். அதேநேரம் இது சில உண்மைகளை, இதுவரை தெரியாத செய்திகளை, எமக்கு சொன்னது. 'கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது' என்றதின் அர்த்தமும் ஓரளவு புரியத் தொடங்கியது! அம்மா, அப்பா எம்மை பெற்றதால், நாம் எப்பவும் அவர்களை உயர்வாகவே கருதுகிறோம். அவர்களும் எம் மேல் பாசம் பொழிகிறார்கள். ஆனால் அவர்களிலும் சிலவேளை கொடிய குணங்கள், செயல்கள் இருக்கும் என்பதை மறந்து விடுகிறோம். எமது குடும்பம் ஒரு ஆலயமாக வெளியே பிரகாசித்துக் கொண்டு இருந்தாலும், உண்மையில் அது கொடியவர்களின் கூடாரம் என்பதை உணர்ந்தேன். என் தங்கைகள் இருவரும் தமது அறையில் இருந்து ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து அழுதார்கள். இதை பார்த்த, அப்பா , ஒன்றும் இல்லை , நாம் ஓகே என்று அம்மாவும் அப்பாவும் ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டபடி தம் அறைக்கு போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் மூட்டிய தீ இன்னும் என் மனதில் எரிந்து கொண்டே இருந்தது. அது அணையவில்லை? என் அம்மா கல்யாணம் செய்து சில ஆண்டுகளின் பின், வீட்டின் தேவைகள் அதிகரித்ததால், என் அப்பா ஏற்கனவே வேலை பார்த்து வந்த பல்பொருள் அங்காடியில் வேலைக்கு சேர்ந்தார். அவர் மிகவும் அழகாக, எல்லோருடனும் அன்பாக பேசக்கூடியவராக இருந்ததால், முதலாளிக்கு அவரை நன்றாக பிடித்துவிட்டது. காலம் கொஞ்சம் போக, முதலாளி என் அம்மாவை தனது நேரடி உதவியாளராக பதவி உயர்வு கொடுத்தார். இது அவர்கள் இருவரும் தனிய பல நேரம் சந்திக்கும், கதைக்கும் சந்தர்ப்பங்களை கொடுத்தது. முதலாளி ஏற்கனவே திருமணம் செய்து இருந்தாலும், அவர் மெல்ல மெல்ல அம்மாவுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். அம்மா, தான் பிள்ளைகளின் தாய் என்று முதலில் மறுத்தாலும், சூழ்நிலை சிலவேளை சாதகமாகவும் அமைந்து விட்டது. ஆனால், அம்மா எல்லாவற்றையும் ஒளிவுமறைவு இன்றி அப்பாவிடம் கூறுவார். அப்படி ஒரு கட்டத்தில் தான், முதலாளியின் ஆசைக்கு இணங்குவது போல நடித்து, அதை களவாக வீடியோ எடுக்க திட்டம் போட்டனர். அவர்களின் நோக்கம் அதை வைத்து முதலாளியிடம் இருந்து பெருந்தொகை பணம் கறப்பதாக இருந்தது. அப்படி கடைசியில் ஏமாற்றி பெற்றது தான் இப்ப அப்பா முதலாளியாக இருக்கும் கடை. அந்த முதலாளியும் தனது கடையை இழந்த சோகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டார். இப்ப இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையில், வியாபாரம் மந்தமாக போக, அந்த பாவம் தான் தம்மை வாட்டிவதைக்குது என்று, ஒருவரை ஒருவர் பழியை போட தொடங்கியதே இந்த தகராறு என ஒருவாறு ஊகித்துக் கொண்டேன். எனினும் அதை நான் தங்கைகளுக்கோ அல்லது வெளியேயோ காட்டவில்லை. அந்த கொடியதை நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. இதுவும் ஒரு வாழ்வா ?, அதில் நானும் ஒரு உறுப்பினரா ?? எனக்கு இப்ப அந்த முதலாளியின் குடும்பம் எங்கே, எப்படி என அறிய ஆவலாக இருந்தது. நான் வங்கி உதவி முகாமையாளராக, பல்கலைக்கழக படிப்பு முடித்து சென்ற ஆண்டு முடிவில் பதவி ஏற்றதால், விசாரிப்பது இலகுவாக இருந்தது. முதலாளியின் மனைவியும் அவரது இரு பெண் பிள்ளைகளும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்வதாக அறிந்தேன். எம் குடும்பம் மீண்டும் ஒரு கோவிலாக வேண்டும் என்றால், கட்டாயம் அவர்களுக்கு நல்ல வாழ்வு அமைக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் ஓங்கியது. அதேநேரம் அம்மா அப்பாவின் தகராறையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்ப தான், ஏன் நான் அவர்களின் ஒரு மகளைக் கல்யாணம் கட்டக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அது அம்மா அப்பாவுக்கும் ஒரு ஆறுதலை கொடுக்கலாம்? 'புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே, சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே' என்று நம்புபவன் நான். 'தவறு அறிந்து சரியாய் செய், விளைவு இருக்கு புரிந்து செய்' என்பதை அம்மா அப்பா இனியாவது புரிந்து கொள்ளட்டும்! "மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான் மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!" "குடும்பம் ஒரு கோவில் என்றால் அன்பே அதில் தெய்வம் ஆகும் கருணை ஒளி கண்கள் வீசினால் மங்கலம் என்றும் நின்று ஜொலிக்கும்!" அதனால் தான் நான் அந்த முடிவு எடுத்தேன். இன்று மார்ச் 15, 2023, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அதில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் ஒரு சில மணித்தியாலத்தை, அம்மா அப்பாவின் பாவத்தை கழுவ, அந்த முதலாளியின் குடும்பத்தை சந்திக்க, பெண் கேட்க இப்ப போய்க்கொண்டு இருக்கிறேன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"புண்ணியம்"
"புண்ணியம்" "புண்ணியம் என்று ஒன்றும் இல்லை புரிந்த உணர்வுடன் உலகை அணுகு பசித்த வயிறுக்கு உணவு கொடு புலுடா மத கொள்கை நம்பாதே!" "தவறு செய்யாதே பாவம் வரும் தடுமாறி நீ நரகம் போவாய் தருமம் செய் புண்ணியம் வரும் தடை இன்றி சொர்க்கம் செல்வாய்!" "புளுகிவிட்டான் சொர்க்கம் நரகம் என்று புராண கதையும் ஏமாற்ற இயற்றிவிட்டான் புற்றுநோய் போல் அது பரவி புவியில் உள்ளோரை வலைக்குள் வீழ்த்திவிட்டது!" "நீச செயல்களை என்றும் செய்யாது நீதி செய்தால் உலகம் வரவேற்கும் நீங்காமல் உன்புகழ் இங்கு நிலைக்கும் நீர்க்குமிழி வாழ்க்கைக்கும் பெருமை சேர்க்கும்!" "தவறு அறிந்து சரியாய் செய் விளைவு இருக்கு புரிந்து செய் அன்பு, அமைதி எங்கும் நிலவ உண்மை, ஒற்றுமை நிலை நிறுத்து!" "மனம் நற்குணங்களுடன் கூடும் பொழுது மதிக்கப் படுகிறான் போற்றப் படுகிறான் மகிழ்ச்சியுடன் சுகம், இன்பம் பிறக்கிறது மனிதா இதுதான் உண்மையில் புண்ணியம்!" "பிறரை மதி ஒற்றுமை பேணு கைம்மாறு இன்றி கடமையை செய் பிச்சை போட்டு புண்ணியம் வராது பிறந்தவர் எவருக்கும் மறுபிறப்பு இல்லை!" "புண்ணியம் பாவம் இரண்டும் பூமியிலே சொர்க்கம் நரகம் கற்பனை மட்டுமே முற்பிறவியில் எவனோ செய்த கர்மாவுக்கு இப்பிறவியில் உனக்கு தண்டனை வேடிக்கையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நீசம் = இழிவு
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 26 நீலிசவாதி [nihilist] என்பவன், எந்த அதிகாரத்திற்கும் தலைவணங்காதவன், விசுவாசத்தின் பெயரில், எந்த கொள்கையையும், அது எவ்வளவு மதிப்பிற்குரியதாக கருதப்பட்டாலும் ஏற்காதவன் [who does not accept any principle on faith, however much that principle may be revered.], இப்படித்தான் நான் அதை நம்புகிறேன். என்றாலும் நீலிசத்தைப் பற்றிய தப்பபிப்பிராயம், அதிகமாக 1860 ஆண்டில் ஏற்படுத்தப் பட்ட நீலிச இயக்கத்தால் [“Nihilist Movement”] ஏற்பட்டிருக்கலாம். இது அன்றைய சகல அதிகாரத்தையும் நிராகரித்ததால், அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வன்முறையை முன்மொழிந்தவர்கள் என ஐரோப்பா முழுவதும் இவர்களை அன்று அடையாளப் படுத்தினார்கள். இதனால் தான் நீலிசம் உண்மைக்கு புறம்பாக திரித்துக் கூறப்பட்ட ஒரு நிலையை [distorted idea of Nihilism] அடைந்தது எனலாம். பலவிதமான நீலிச வகைகளை நாம் காணலாம், என்றாலும் முக்கிய மூன்று வகைகளை இங்கு தருகிறேன். முதலாவது வகை நீலிசவாதிகள் [Epistemological Nihilist / அறிவாய்வியல் நீலிசவாதி], உண்மையான அறிவு என்று ஒன்றும் இல்லை என்றும், நீங்கள் ஒருபோதும் எதையும் உறுதியாக நம்ப முடியாது என்றும் நம்புகிறார்கள். ஏன் என்றால், என்றென்றும் நீங்கள், உங்கள் தலையில் அல்லது மனதில் சில கருத்துக்களை பதிந்து அல்லது ஒட்டி வைத்துள்ளீர்கள், அத்துடன் உங்கள் சூழலுக்கு, உங்கள் உணர்வு உறுப்புகள் சொல்லுவதனூடாகவே அணுகுகிறீர்கள் என்பதால் என்கிறார்கள் [you are forever stuck in your head and have access to the environment only via what your sense organs tell you], இரண்டாவது வகை [Existential Nihilist / இருத்தலியல் நீலிசவாதி] நீலிசவாதிகள், வாழ்க்கை ஒரு உள்ளார்ந்த கருத்தையோ அல்லது ஒரு நோக்கத்தையே கொண்டது அல்ல என்கிறார்கள் [denies that life has any inherent meaning or purpose] பிரபஞ்சத்தின் கண்ணோட்டத்தில், எதுவுமே ஒரு மதிப்போ அல்லது நோக்கமோ கொண்டதல்ல [From the perspective of the universe, nothing has any value or purpose] என்கிறது. மூன்றாவது வகை [Ethical Nihilist / நன்னெறி நீலிசவாதி], இவர்கள் சமுதாயம் அல்லது சமூகம் சொல்லுகிறதே என்பதற்காக, அதன் பொருட்டு மட்டுமே ஒன்றையும் செய்ய மாட்டார்கள் [who does not do what society says is ought to be done for just the sake of it.]. உதாரணமாக, ஏதாவது ஒன்று செய்ய எந்த காரணமும் இல்லை என்றால், அதைச் செய்வதால், சமூகம் அவர்களை எவ்வளவு மதிக்கக்கூடும் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல, அவர்கள் கட்டாயம் அதை செய்ய மாட்டார்கள் [If there is no reason do something, no matter how much society might value doing it, an Ethical Nihilist will not do it]. அவர்களுக்கு பின்பற்றவென்று உள்ளார்ந்த ஒழுக்கங்கள், மதிப்புகள் அல்லது விதிகள் [no inherent morals or values or rules] என்று ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன், இதன் கருத்து அவர்கள் வன்முறை மற்றும் கொலையாளிகள் என்பதல்ல, இதன் கருத்து அவர்கள் நடத்தை ரீதியாக, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுக்காதவர்கள் [behaviorally immune to what others think] என்பதே ஆகும். இதனால் நீலிசவாதிகள் வன்முறை, சுயநலம் மற்றும் ஒழுக்கக்கேடானவர்கள் [violent, selfish and immoral] என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் நீலிசவாதிகளும் மனிதர்களே என எண்ண தவறுகிறார்கள். மனிதர்கள் ஒழுக்க ரீதியாக நடந்து கொள்ள, உயிரியல் ரீதியாக பரிணமித்தவர்கள் [human beings have biologically evolved to behave “morally”] என்பதை மறந்து விட்டார்கள் . நீங்கள் மனிதனின் இயல்பான நடத்தையை, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளுடன், குழப்ப வேண்டாம் [Do not confuse natural human behavior with what ought to be done]. ஒரு நீலிசவாதி, தர்க்கரீதியாக நன்மை பயக்கும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று அவர் உணருவதால் செய்கிறார் [he does either because it is logically beneficial or because he feels an urge to do it], ஆனால் என்றென்றும் ஒரு சமுதாயம் சொல்லுகிறதே என்று மட்டும் செய்வதில்லை. அது தான் வித்தியாசம். பிரபலமான ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல, நீலிசம் ஒரு அவநம்பிக்கை அல்ல, நீலிசவாதிகள் ஒரு மனநோயாளி அல்ல, தர்மம் அல்லது தியாகம் அல்லது காணிக்கை [alms or sacrifice or offering] போன்ற ஒன்றும் இல்லை, நல்லது அல்லது தீய செயல்களின் [good or evil deeds] அடிப்படையில் புண்ணியம் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் கூறுகளால் [four elements] கட்டப்பட்டுள்ளது. அவன் இறக்கும் பொழுது பூமி பூமிக்கு போகிறது, நீர் நீருக்கு போகிறது, நெருப்பு நெருப்புக்கு போகிறது அதே போல காற்று காற்றுக்கு போகிறது. அவனின் உணர்வுகள் விண்வெளியில் மறைந்து விடுகின்றன. இந்த உலகில் இருந்து அவன் எந்த உலகிற்கும் போகவில்லை. மறுபிறவி என்று ஒன்றுமே இல்லை, தாய் அல்லது தந்தைக்கு ஆற்றும் சேவையிலிருந்து நீங்கள் ஒரு புண்ணியமும் பெறப்போவதில்லை. சரியான பாதையென ஒன்றில் சென்று, பரிபூரணத்தை [perfection] அடைந்தவர்கள் என எந்த துறவிகளும் பிராமணர்களும் [ascetics or Brahmins] இல்லை. இந்த உலகையும் இதற்கு அப்பால் உள்ளதையும் அறிந்தவர்களோ அல்லது அனுபவித்தவர்களோ இல்லை. நாலு பேர் உன் சவத்தை காவிச் செல்கிறார்கள். அவர்கள் சுடலைக்கு போகும் மட்டும் வீண் பேச்சு பேசுகிறார்கள். அவரின் எலும்பு கருகுகிறது. அவரின் தியாகங்கள் சாம்பலில் முடிகிறது. உடல் இறக்கும் பொழுது முட்டாளும் ஞானியும் [fool and wise] அழிந்துவிடுகிறார்கள். எனவே இவர்கள் பயனற்ற வெற்று பேச்சும் மற்றும் பொய்களும் பேசுகிறார்கள் என்கிறார் கி மு 600 ஆண்டை சேர்ந்த இந்தியாவின் அஜிதா கேஷாகம்பலி [Ajita Kesakambali] என்ற தத்துவவாதியும் முனிவரும். இவர் இந்த பதிலை, ஆற்றல் மிக்க கொடுங்கோண் அரசனாகவும் தனது தந்தை பிம்பிசாரனைக் கொன்று அரசை கைப்பறியவனனுமான, பேரரசர் அஜாதசத்ரு ஹரியங்காவின் [Ajatashatru Haryanka] கேள்விக்கு விடையாக கூறுகிறார். இங்கு நாம் ஒருவித நீலிசம் காண்கிறோம். மேலும் பழங்கால கிரேக்கர்களிடையே, உதாரணமாக கி மு 483-378 ஆண்டை சேர்ந்த கோர்கியஸ் [Gorgias] என்பவர் "எதுவும் இல்லை. ஏதாவது இருந்து இருந்தாலும் அதை அறிய முடியாது அல்லது தெரியாது இருக்கும். ஒரு வேளை அதை அறிந்திருந்தால், அது பற்றிய அறிவு பிறருக்குக் எடுத்து கூற முடியாததாக இருக்கும் " [“Nothing exists. If anything did exist it could not be known. If it was known, the knowledge of it would be incommunicable.”] என்று கூறியதை, நீலிசத்தின் [நிஹிலிஸின்] ஒரு அடிப்படைக் கொள்கையாகவும் கூறலாம். வாழ்க்கை அர்த்தமற்றது என்ற நம்பிக்கையில், அனைத்து மத மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் [religious and moral principles] நிராகரிப்பது நீலிசம் எனப்படுகிறது. எனவே, வாழ்க்கை அர்த்தமற்றதாக இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் அல்லது மற்றவர்கள் செய்யும் எதையும் ஆதரித்து எந்தவிதமான வாதமும் நீங்கள் செய்யத் தேவையில்லை. உங்களிடம் எந்த ஒழுக்கக் கோட்பாடும் இல்லை என்றால், உங்களிடம் சரியோ பிழையோ என்று தீர்மானிக்கும் அளவுகோல் இல்லை. எனவே அது இல்லாமல், எந்த காரணத்தை கொண்டு, ஒரு சமுதாயத்தை ஆதரிப்பதற்கு, மக்களை ஊக்குவிக்க அல்லது அதை நம்பவைக்க முடியும்? அப்படி என்றால் நீலிசம் சமுதாயத்தை, அதன் கட்டுக்கோப்பை குலைக்க வழிவகுக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. மேலும் நீலிசம் அதீதமாக மக்களை இன்பமே நோக்கம் என்ற கொள்கைக்கு [hedonism] வழி நடத்துவதாகவும், இந்த உண்மையை சமுதாயம் முழுவதும் ஓரளவு பார்க்கிறோம் என்பதும் ஒரு பொதுவான வாதமாகும். எனவே நீலிசம் ஒரு வன்முறை மற்றும் பயங்கரவாத தத்துவமாக [violent and even terroristic philosophy] கருதப்படுகிறது. மேலும் வன்முறைக்கு ஆதரவாக நிஹிலிசம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எதோ உண்மை தான். அது மட்டும் அல்ல பல ஆரம்பகால நீலிசர்கள் வன்முறை புரட்சியாளர்களாக [violent revolutionaries] இருந்தனர் என்பதும் உண்மைதான், உதாரணமாக ரஷ்ய நீலிசர்கள் [Russian Nihilists]. இவர்கள் பாரம்பரிய அரசியல், நெறிமுறை மற்றும் மத நெறிகள் [political, ethical, and religious norms] எந்தவொரு செல்லுபடியாகும் அல்லது கட்டுப்படுத்தும் சக்தியை தம் மேல் கொண்டு இருக்கவில்லை என்று நிராகரித்தனர். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததுடன், சமுதாயத்தின் ஸ்திரத்தன்மைக்கு எந்த வித அச்சுறுத்தலையும் கொடுக்கவும் வில்லை. ஆனால், அவர்களது வன்முறை, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலாக இருந்தது என்பது உண்மை தான். நீலிசத்தின் ஒரு வரையறை, மனித வாழ்க்கை அர்த்தமற்றது, எல்லா மதங்களும், சட்டங்களும், தார்மீக கோட்பாடுகளும், அரசியல் அமைப்புகளும் முற்றிலும் வெறுமையானது பொய்யானது [all religions, laws, moral codes, and political systems are thoroughly empty and false] என்பதாகும். எனவே, சமுதாயத்திற்கு நீலிசம் தீங்கிழைக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுகிறது. "அவ்வாறு இருக்கலாம், ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றே இதற்கு நான், என் அனுபவத்தில் இருந்து பொதுவாக பதில் அளிப்பேன். உதாரணமாக, அடிப்படையில் மதத்திற்கு விரோதமாக என் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. எனவே ஒரு மதத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. மற்றும் நான் எந்த மத தூண்டுதல்களையோ அல்லது மத உணர்வுகளையோ கொண்டு இருக்கவில்லை. ஆனால், நான் அடிப்படையில் அனைத்து சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறேன், மற்றும் எனக்கு அர்த்தம் தருகிற தார்மீக கோட்பாடுகளையும், அரசியல் தத்துவங்களையும் [moral codes and political philosophy] கடைப்பிடிக்கிறேன். சட்டத்தை பொறுத்த வரையில், நான் அதை உடைக்க வேண்டும் என்று உணரவில்லை. அதே மாதிரி, ஒழுக்கம் சார்ந்த நெறிமுறையை [morals] பொறுத்த வரையில், நான் அவையை என் பெறோர்களிடம் இருந்து, ஆனால் நான் காரணங்களையும் அதில் உள்ள உண்மைத் தன்மையையும் உணாந்து நானாக கற்றுக் கொண்டேன். என்னை இரு பெறோர்களும் வளர்த்தார்கள். நாங்கள் ஒரு சராசரி குடும்பம். சில நேரங்களில் செலவிட போதுமான பணம் எம்மிடம் இருந்ததில்லை, ஆனால் என்றும் ஒருவரிடமும் இருந்து பணம் திருடவில்லை, ஏமாற்றவும் இல்லை. நான் நாள் முழுவதும், சந்திக்கும் எல்லோரையும், மரியாதையுடன் நடத்த முயற்சி செய்கிறேன். பெருபாலும் எந்த உரையாடலுடனும், நான் மக்களை சுற்றி நகைச்சுவை செய்ய விரும்புகிறேன், எனக்கு, வாழ்க்கை மகிழ்வாக வாழ்வதற்க்கே ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 27 தொடரும்
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 02 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] நாம் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்ககளை கவனத்தில் எடுத்தால், உதாரணமாக 'அன்பே சிவம்' அதாவது அன்புதான் கடவுள் என்று பறைசாற்றுகிறது 'எம்மதமும் சம்மதம்', அதாவது எல்லா சமயமும் எமக்கு ஒன்றே என்கிறது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' , அதாவது அனைத்து மக்களும் நமது உறவினர்களே 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' 'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் உதாரணம்: செல்வத்தை நியாயமான அளவில் பிரி, ஆயுத விற்பனையை கட்டுப்படுத்து, உண்மையை சரியாக, ஆராந்து புரியாமல், நாங்கள் நம்பும் உண்மையே உண்மை என அடம்பிடிப்பது ... இப்படி பல. உதாரணமாக ஒரு நாள் அரசன் ஒருவன் மூன்று அறிஞர்களை, தன் அரசவைக்கு கூப்பிட்டு, பாண் [ரொட்டி] என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு முதலாவது அறிஞர் ரொட்டி என்பது ஜீவனாம்சம் கொடுக்கும் ஒரு உணவு என்றான், இரண்டாவது அறிஞன் ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்து, நெருப்பின் வெப்பத்தில் சுட்ட ஒன்று என்றான், மூன்றாவது அறிஞனோ ஆணடவனின் கொடை என்றான் . இப்படி ஒரு சாதாரண உணவுக்கே கருத்து வேறுபாடு இருப்பதை இங்கு காண்கிறோம். இங்கு தான் எம் கல்வி / அறிவு / நம்பிக்கைகள் சரியாக ஒழுங்கு படுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் முரண்பாடுகள் அதிகரித்து சமாதானத்தை குழப்பலாம்? இன்றைய சூழலை உற்று நோக்கின் பலர் 'மதக் கருத்தை உணராமல், மதம் தோற்றிவித்தவனை வணங்க ஆரம்பிக்கிறார்கள் / ஆரம்பித்துள்ளார்கள் ' உதாரணம் புத்த சமயம், தமிழர் வரலாற்று நிலங்களில் அத்துமீறி புத்தரை ஒரு பட்டாளத்துடன் குடியேற்றிக் கொண்டு, சமாதானத்துக்கு எதிராக புத்தரை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்? புதிது புதிதாக மதம் / மத பிரிவு வந்து கொண்டே இருக்கிறது சமாதானம் வேண்டுமாயின் திட்டம் வகுக்கலாம். ஆனால் அதற்க்கு , அதை ஒரு சமயமாக / நம்பிக்கையாக பெயரிடும் பொழுதே , அது சமாதானத்துக்கு ஆப்பு வைக்கிறது? பிறகு அதை வளர்க்க, பரப்ப, முன்பே இருந்த சமயங்களுக்குள் நுழைந்து மக்களை பிரித்து எடுக்கிறார்கள். அங்கு தான் பிரச்சனை எழுகிறது? உதாரணமாக, அண்மையில் , 1844 ஆண்டில் தொடங்கிய பஹாய் நம்பிக்கையை / Baha’i Faith எடுத்தால், அதன் முக்கிய கோட்பாடுகள் கடவுள் ஒருவரே. மனிதர்கள் அவரை எப்பெயரிட்டு அழைத்தபோதிலும், அவர் ஒருவரே சமயங்கள் ஒன்றே. மனிதகுலத்தைப் படைத்த கடவுள், அவர்களுக்குக் காலம் காலமாக தமது அவதராங்களின் மூலமாக வழிகாட்டி வந்துள்ளார். மனிதர்கள் வாழும் காலம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து இந்த அவதராங்கள் போதனைகளை வழங்கி வந்துள்ளனர். சமயங்கள் அனைத்துமே ஒரே புத்தகத்தின் தொடர்ந்துவரும் அத்தியாயங்களே. மனிதகுலம் ஒன்றே மனித குலத்தைப் படைத்தவர் ஒரே கடவுள். மனிதர்கள் அவரிடமிருந்தே தோன்றியுள்ளனர். மனித ஆன்மா இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளது மற்றும் எல்லாருக்குள்ளும் ஒரே விதமாகவே படைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள், ஒரே குடும்பத்தினர் என்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் சமயம் / தமிழரின் சைவ தத்துவத்தை மற்றும் இலக்கியத்தை எடுத்தால் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பொன்னான வாக்கியத்தை காண்கிறோம் 'வாழு வாழவிடு' என்ற தோரணையில், மணிமேகலையில் ஒரு காட்சி அமைகிறது. அதில் தமிழரின் அன்றைய மனப்பான்மையை, சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது. “ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்ற மாக்கள் தம்முட னாயினும் செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்” (மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63) யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது. அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை கொண்டு ஏற்றுக்கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அனைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். சகிப்புத்தன்மையின் இலட்சியத்தை இங்கு காண்கிறோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 03
-
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்]
எல்லோருக்கும் நன்றிகள்
-
𝑨𝒏 𝒆𝒙𝒄𝒆𝒓𝒑𝒕 𝒇𝒓𝒐𝒎 𝑷𝒓𝒊𝒔𝒐𝒏𝒆𝒓 #1056
𝑨𝒏 𝒆𝒙𝒄𝒆𝒓𝒑𝒕 𝒇𝒓𝒐𝒎 𝑷𝒓𝒊𝒔𝒐𝒏𝒆𝒓 #1056: 𝑱𝒖𝒍𝒚 24, 1983, 𝒘𝒂𝒔 𝒍𝒊𝒌𝒆 9/11 𝒇𝒐𝒓 𝑺𝒓𝒊 𝑳𝒂𝒏𝒌𝒂’𝒔 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔. 𝑫𝒂𝒚 𝒂𝒇𝒕𝒆𝒓 𝒅𝒂𝒚, 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒕𝒂𝒓𝒈𝒆𝒕𝒆𝒅 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒄𝒂𝒑𝒊𝒕𝒂𝒍 𝒔𝒕𝒓𝒆𝒆𝒕𝒔 𝒐𝒇 𝑪𝒐𝒍𝒐𝒎𝒃𝒐 𝒂𝒔 𝒕𝒉𝒆𝒚 𝒘𝒆𝒏𝒕 𝒂𝒃𝒐𝒖𝒕 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔 𝒊𝒏𝒔𝒊𝒅𝒆 𝒃𝒖𝒔𝒆𝒔 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒘𝒂𝒚 𝒕𝒐 𝒘𝒐𝒓𝒌. 𝑺𝒊𝒏𝒉𝒂𝒍𝒆𝒔𝒆 𝒎𝒐𝒃𝒔 𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒇𝒊𝒆𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔, 𝒔𝒕𝒓𝒊𝒑𝒑𝒆𝒅 𝒕𝒉𝒆𝒎 𝒏𝒂𝒌𝒆𝒅, 𝒌𝒊𝒄𝒌𝒆𝒅 𝒂𝒏𝒅 𝒃𝒆𝒂𝒕 𝒕𝒉𝒆𝒎 𝒃𝒆𝒇𝒐𝒓𝒆 𝒔𝒆𝒕𝒕𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆𝒎 𝒂𝒃𝒍𝒂𝒛𝒆 𝒐𝒓 𝒉𝒂𝒄𝒌𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆𝒎 𝒊𝒏𝒕𝒐 𝒑𝒊𝒆𝒄𝒆𝒔 𝒘𝒊𝒕𝒉 𝒎𝒂𝒄𝒉𝒆𝒕𝒆𝒔. 𝑺𝒐𝒎𝒆 𝒇𝒂𝒎𝒊𝒍𝒊𝒆𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒃𝒖𝒓𝒏𝒆𝒅 𝒕𝒐 𝒅𝒆𝒂𝒕𝒉 𝒊𝒏𝒔𝒊𝒅𝒆 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒄𝒂𝒓𝒔. 𝑴𝒐𝒃𝒔 𝒓𝒂𝒑𝒆𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍 𝒘𝒐𝒎𝒆𝒏, 𝒍𝒐𝒐𝒕𝒆𝒅 𝒂𝒏𝒅 𝒃𝒖𝒓𝒏𝒆𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍 𝒉𝒐𝒎𝒆𝒔 𝒂𝒏𝒅 𝒃𝒖𝒔𝒊𝒏𝒆𝒔𝒔𝒆𝒔. 𝑬𝒗𝒆𝒏 𝒘𝒉𝒊𝒍𝒆 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒔𝒍𝒆𝒆𝒑𝒊𝒏𝒈 𝒊𝒏 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒐𝒘𝒏 𝒉𝒐𝒎𝒆𝒔—𝒊𝒕 𝒅𝒊𝒅𝒏’𝒕 𝒎𝒂𝒕𝒕𝒆𝒓. 𝑻𝒂𝒎𝒊𝒍 𝒉𝒐𝒎𝒆𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒇𝒊𝒆𝒅 𝒘𝒊𝒕𝒉 𝒓𝒖𝒕𝒉𝒍𝒆𝒔𝒔 𝒆𝒇𝒇𝒊𝒄𝒊𝒆𝒏𝒄𝒚 𝒘𝒊𝒕𝒉 𝒕𝒉𝒆 𝒉𝒆𝒍𝒑 𝒐𝒇 𝒗𝒐𝒕𝒆𝒓 𝒍𝒊𝒔𝒕𝒔 𝒅𝒊𝒔𝒕𝒓𝒊𝒃𝒖𝒕𝒆𝒅 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝑺𝒓𝒊 𝑳𝒂𝒏𝒌𝒂𝒏 𝒈𝒐𝒗𝒆𝒓𝒏𝒎𝒆𝒏𝒕. 𝑫𝒐𝒐𝒓𝒔 𝒂𝒏𝒅 𝒘𝒊𝒏𝒅𝒐𝒘𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒔𝒎𝒂𝒔𝒉𝒆𝒅 𝒊𝒏, 𝒉𝒊𝒏𝒈𝒆𝒔 𝒃𝒖𝒓𝒔𝒕𝒊𝒏𝒈 𝒂𝒔 𝒕𝒉𝒆 𝒎𝒐𝒃 𝒉𝒐𝒘𝒍𝒆𝒅 𝒐𝒏 𝒐𝒏𝒆 𝒔𝒊𝒅𝒆 𝒂𝒏𝒅 𝒊𝒕𝒔 𝒗𝒊𝒄𝒕𝒊𝒎𝒔 𝒄𝒓𝒊𝒆𝒅 𝒐𝒖𝒕 𝒊𝒏 𝒕𝒆𝒓𝒓𝒐𝒓 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒐𝒕𝒉𝒆𝒓. 𝑾𝒐𝒎𝒆𝒏 𝒂𝒏𝒅 𝒄𝒉𝒊𝒍𝒅𝒓𝒆𝒏 𝒘𝒆𝒓𝒆 𝒏𝒐𝒕 𝒔𝒑𝒂𝒓𝒆𝒅 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒕𝒉𝒖𝒈𝒔 𝒅𝒓𝒖𝒏𝒌 𝒐𝒏 𝒂𝒏𝒕𝒊-𝑻𝒂𝒎𝒊𝒍 𝒃𝒍𝒐𝒐𝒅𝒍𝒖𝒔𝒕. 𝑾𝒉𝒆𝒏 𝒕𝒉𝒆 𝒓𝒊𝒐𝒕 𝒘𝒂𝒔 𝒐𝒗𝒆𝒓, 𝒂𝒍𝒎𝒐𝒔𝒕 𝒕𝒉𝒓𝒆𝒆 𝒕𝒉𝒐𝒖𝒔𝒂𝒏𝒅 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒍𝒂𝒚 𝒅𝒆𝒂𝒅. 𝑬𝒗𝒆𝒏 𝒕𝒉𝒆 𝒑𝒆𝒂𝒄𝒆𝒇𝒖𝒍 𝑩𝒖𝒅𝒅𝒉𝒊𝒔𝒕 𝒎𝒐𝒏𝒌𝒔 𝒊𝒏 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒔𝒂𝒇𝒇𝒓𝒐𝒏-𝒄𝒐𝒍𝒐𝒖𝒓𝒆𝒅 𝒓𝒐𝒃𝒆𝒔 𝒅𝒊𝒅 𝒏𝒐𝒕 𝒔𝒕𝒂𝒏𝒅 𝒂𝒑𝒂𝒓𝒕 𝒇𝒓𝒐𝒎 𝒕𝒉𝒆 𝒗𝒊𝒐𝒍𝒆𝒏𝒄𝒆. 𝑭𝒐𝒓 𝒕𝒉𝒐𝒔𝒆 𝒏𝒊𝒈𝒉𝒕𝒎𝒂𝒓𝒊𝒔𝒉 𝒅𝒂𝒚𝒔, 𝒕𝒉𝒆 𝑩𝒖𝒅𝒅𝒉𝒂’𝒔 𝒕𝒆𝒂𝒄𝒉𝒊𝒏𝒈𝒔 𝒐𝒇 𝒍𝒊𝒃𝒆𝒓𝒂𝒕𝒊𝒏𝒈 𝒔𝒆𝒏𝒕𝒊𝒆𝒏𝒕 𝒃𝒆𝒊𝒏𝒈𝒔 𝒇𝒓𝒐𝒎 𝒔𝒖𝒇𝒇𝒆𝒓𝒊𝒏𝒈 𝒘𝒆𝒓𝒆 𝒔𝒆𝒕 𝒂𝒔𝒊𝒅𝒆, 𝒇𝒐𝒓𝒈𝒐𝒕𝒕𝒆𝒏, 𝒐𝒓 𝒔𝒊𝒎𝒑𝒍𝒚 𝒊𝒈𝒏𝒐𝒓𝒆𝒅. 𝑻𝒉𝒐𝒔𝒆 𝑻𝒂𝒎𝒊𝒍𝒔 𝒘𝒉𝒐 𝒕𝒐𝒐𝒌 𝒔𝒉𝒆𝒍𝒕𝒆𝒓 𝒃𝒆𝒉𝒊𝒏𝒅 𝒘𝒂𝒍𝒍𝒔 𝒘𝒆𝒓𝒆 𝒃𝒖𝒓𝒏𝒆𝒅 𝒂𝒍𝒊𝒗𝒆. 𝑻𝒐 𝒕𝒉𝒊𝒔 𝒅𝒂𝒚, 𝒏𝒐𝒕 𝒂 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒑𝒆𝒓𝒑𝒆𝒕𝒓𝒂𝒕𝒐𝒓 𝒉𝒂𝒔 𝒃𝒆𝒆𝒏 𝒃𝒓𝒐𝒖𝒈𝒉𝒕 𝒕𝒐 𝒋𝒖𝒔𝒕𝒊𝒄𝒆. — 𝑪𝒉𝒂𝒑𝒕𝒆𝒓 1, 𝑷𝒂𝒈𝒆 5
- "கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... "
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது]
எல்லோருக்கும் நன்றிகள்
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 01 [இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !] காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார் நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார் மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார் இவர்களில் இருந்தும் பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார் சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார் தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா இவர்களில் இருந்தும், மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும் உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால், மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்புகளுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே. ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த காலக், சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது. உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ... போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது. இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!! இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும். எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது. இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்! பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese] ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன். அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும். எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது. எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தொடரும் பகுதி : 02
-
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது]
"அதுவொரு கனாக்காலம்" [அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது] ஒரு காலத்தில், இலங்கையின் வெப்பமண்டல சொர்க்கத்தில், தமிழ் சிங்கள வேறுபாடுகள் இன்றி பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட மக்கள் இலங்கையன் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக இருந்தனர். இலங்கை மக்கள் தங்கள் வாழ்க்கையையும் நிலத்தின் மீதான அன்பையும் பகிர்ந்து கொண்டு இணக்கமாக வாழ்ந்தனர். இலங்கைத்தீவு வளங்கள் நிறைந்ததாக இருந்தது மட்டும் அல்ல, அதன் மக்கள் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒற்றுமையில் மகிழ்ச்சியடைந்தனர். உதாரணமான சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டது மட்டும் அல்ல, 1911 ஆம் ஆண்டு முதல் இலங்கைச் சட்ட சபை உறுப்பினராக தெரிவும் செய்யப்பட்டார். அதுமட்டும் அல்ல, சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். ஆனால் அந்த கனாக்காலம், 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், எல்லாளனை நடத்திய விதம் மாதிரியே, இராமநாதனையும் சிங்கள அரசியல் வாதிகள் ஒதுக்கத் தொடங்கினார்கள். இலங்கையில் நிலவிய அந்தக் கனாக்காலம் 1948, 1956, 1970, 1977, 1983, என சிதறத் தொடங்கியது. அந்த கால இடைவெளியில் தான், 1982 ஆண்டு தொடக்கத்தில், விஜயவீர என்ற இளைஞனும், மகிழ்விழி என்ற இளம் பெண்ணும் பக்கத்து பக்கத்து கிராமங்களில் வசித்து வந்தனர். அவர்கள் வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - விஜயவீர சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர், மகிழ்விழி ஒரு தமிழர். அவர்களிடம் கலாச்சார வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களின் காதல் எல்லைகளைத் தாண்டியது! அதுமட்டும் அல்ல, அங்கு இன்னும் ஒரு கனாக்காலம் நிலவியதால், அவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் அவர்களின் உறவை எந்த இன ரீதியாகவும் பார்க்கவில்லை. காலம் செல்ல செல்ல, 1983 ஜூலைக்கு பின் அவர்களின் கனவு காலம் மறைய ஆரம்பித்தது. மலை அடிவாரத்தில், பரந்தவெளியில், எந்த பயமும் தயக்கமும் இன்றி இருவரும் மாலைப்பொழுதில் முழு நிலாவின் அழகை பார்த்து ரசித்து கொஞ்சி பேசி காதல் புரிந்த அந்தக் காலம் 'அதுவொரு கனாக்காலம்' ஆக அவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஒரு காலத்தில் நிலவிய தீவின் சிறப்பியல்புகள் குறையத் தொடங்கி, பதட்டங்கள் தோன்றின. பற்றாக்குறையான வளங்கள், வேலை வாய்ப்புகள் சமூகங்களுக்கிடையில் சச்சரவுகளைத் தூண்டின, மேலும் சில அரசியல், மத தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை வளப்படுத்துவதற்குப் பதிலாக, பிளவுபடுத்தி குறுக்குவழியில் இலாபம் அடைய பார்த்தனர். பல நூற்று ஆண்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கை மண், தவறான புரிதல்கள் மற்றும் அச்சங்களால் தூண்டப்பட்டு, இன பாகுபாடு மற்றும் இனப் பதட்டங்களை அனுபவிக்கத் தொடங்கியது. ஆழமான காதல் வசப்பட்ட விஜயவீராவும் மகிழ்விழியும், இந்த வளர்ந்து வரும் இன கொந்தளிப்பின் மத்தியில் தங்களைக் கண்டுகொண்டனர். ஒரு காலத்தில் அவர்களது உறவை ஆதரித்த அவர்களது குடும்பங்கள் மாறிவரும் காலத்தின் அழுத்தத்தால், மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள், சமூக எதிர்பார்ப்புகள், பயம் காரணமாகவும் அவர்களின் எண்ணங்களை மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கினர். மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளின் உறவை இனம் மற்றும் கலாச்சாரத்தின் கண்ணாடிகளின் ஊடாக இன்று பார்க்கத் தொடங்கினர். எதுஎவ்வாறாகினும், விஜயவீராவும் மகிழ்விழியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர். தங்கள் சமூகங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பிளவை தங்களின் பிணைப்பு ஒரு பாலமாக சரிப்படுத்தும் என்று நம்பினர். அவர்கள் ஒரு காலத்தில் தங்கள் நிலத்தை வரையறுத்திருந்த ஒற்றுமையை தங்கள் தங்கள் மக்களுக்கு நினைவூட்டும் நம்பிக்கையில், புரிந்துணர்வு மற்றும் பச்சாதாபத்திற்காக உறவினருடனும் அயலவருடனும் வாதிட்டனர். அவர்களின் எண்ணம் எல்லாம் "அதுவொரு கனாக்காலம்" ஆக மாறாமல் என்றும் அது தங்களுக்கும் தங்கள் வருங்கால பிள்ளைகளுக்கும் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே! ஆனால், அவர்களின் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதிகரித்த பதட்டங்கள் இரு தரப்பிலும் தீவிரவாதக் குரல்களுக்கு வழிவகுத்தது, பிளவுகளை விரிவுபடுத்தியது மற்றும் விஜயவீராவும் மகிழ்விழியும் பகிர்ந்து கொண்ட அன்பை மறைக்க முயன்றது. அவர்களால் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான தெளிவான பாதை, பனிமூட்டமாக வளர்த் தொடங்கி, தப்பெண்ணம் மற்றும் பயத்தின் இருண்ட மேகங்களால் மறைக்கப்பட்டது. ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இது ஒரு கனாக்காலமாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் எல்லாவற்றையும் மூடி மறைக்க தொடங்கினர். துரதிர்ஷ்டவசமாக, 1983 ஜூலையில் தமிழ் மக்கள் மேல் மீண்டும் ஒரு வன்முறை ஏவிவிடப்பட்டது. வன்முறை நகரங்கள், கிராமங்கள், குடும்பங்கள் மற்றும் உயிர்களை கிழித்தெறிந்தது. இந்த குழப்பத்திற்கு மத்தியில் விஜயவீராவும் மகிழ்விழியும் கட்டாயத்தின் பேரில் பிரிக்கப்பட்டனர். ஒரு காலத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அவர்களது காதல், அவர்களது நிலத்தை, உயிரை மூழ்கடித்திருந்த வெறுப்பின் முகத்தில் அற்பமானதாகத் தோன்றியது. ஆண்டுகள் சென்றன, மோதலின் காயங்கள் ஆழமாக ஓடியது. விஜயவீரா மற்றும் மகிழ்விழியின் காதல் கதைகள் புராணக்கதைகளாக மாறிவிட்டது. கொந்தளிப்பின் போது இழந்த காதலை மீண்டும் புதுப்பிக்க முடியவில்லை. பாரபட்சம், இனத்துவேசம் மற்றும் பயத்தின் காரணமாக ஒற்றுமை கனவு சிதைந்ததை நல்ல உள்ளங்கள் பல உணர்ந்து தமது அந்த முன்னைய கனாக்காலத்தை வருத்தத்துடன் திரும்பிப் பார்த்தனர். 1987-89 ஜேவிபி புரட்சி மற்றும் 1987-90 இந்திய அமைதி காக்கும் படையின் போர் என இலங்கை முழுவதுமே ஒரே பதட்டத்திலும் பயத்திலும் மூழ்கி இருந்தது. என்றாலும் மகிழ்விழி முன்பு விஜயவீராவை சந்திக்கும் மலை அடிவாராத்தில் பரந்தவெளியில், ஆனால் இன்று சந்திரன் தோன்றாத அமாவாசை மாலையில் வானத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறாள். அவள் எண்ணம் எல்லாம், விஜயவீராவுடன் மகிழ்வாக காலம் கழித்த அந்த கனாக்காலம் மட்டுமே ! ஆமாம் அவளுக்கு "அதுவொரு கனாக்காலம்" ஆக இன்று மாறிவிட்டது! "என் அன்பு ஒன்றில் நீ வாழ்ந்தாய் உன் அன்பு ஒன்றில் நான் வாழ்ந்தேன் நம் அன்பு கடலில் இருவரும் நீந்தினோம் நாளை நாமதேயென ஒன்றாய் மகிழ்ந்தோம்!" "உன் துன்பம் என்னை வலிக்கும் என் துன்பம் உன்னை வலிக்கும் நம் காதல் பூந் தோட்டத்தில் இன்ப மலர்கள் பூத்த காலமது!" "என் நிழலாக இருட்டிலும் நீயிருப்பாய் உன் மழலையாய் என்றும் நானிருப்பேன் இனம் மதம் தாண்டியதே நம்காதல் மனிதம் மட்டுமே அங்கு மலர்ந்தது!" "பொல்லாத வெறியர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான வார்த்தைகளை உண்மையென பரப்பி பிரியாத உள்ளங்களை தூர விலக்கி அதுவொரு கனாக்காலம் ஆக்கி விட்டார்களே!" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்]
"ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும்" [அரசியல், சமயம் மற்றும் வரலாற்று வாதிகளுக்கு, இன்று 24/07/2024 இல்] "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!" "சுயநல ஆசைகள் எங்கும் வளர்கிறது சுதந்திரமாக மனித மனதிலும் பதுங்குகிறது சுழன்று சுழன்று அவனை கெடுத்து சுருக்கி விடுகிறது அவனின் இதயத்தை!" "எமக்கு வேண்டியதை நாங்கள் எடுக்கிறோம் எம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் எதுக்கு எடுத்தாலும் எம்மை முதல்நிறுத்தி எடுத்த காரியத்துக்கு நியாயம் கூறுகிறோம்!" "நாங்கள் மன மற்றவர்களாகத் தோன்றுகிறோம் நாடி வருபவர்களுக்கு கையை விரிக்கிறோம் நாதியற்ற மக்களை வரவேற்பதும் இல்லை நாணம் எம்மை வருந்துவதும் இல்லை!" "நாங்கள் காயப் படுத்திய மக்களை நாம் அழித்த எண்ணற்ற உயிர்களை நாம் விட்டுச் சென்ற அழிவின் பாதையை . நாங்கள் எனோ இன்னும் உணரவில்லை!" "இருப்பதை விட்டு இல்லாததுக்கு ஏங்குகிறோம் இல்லாத இடங்களிலும் தேடி பார்க்கிறோம் இடுகாடுவிலும் மனிதத்தை புறக்கணிக்கிறோம் இறுமாப்புடன் எம்மிடம் தவறில்லை என்கிறோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு
எல்லோருக்கும் நன்றிகள்
-
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 "
"சத்தம் போடாதே, இன்று ஜூலை 23 , 1983 " இன்று ஜூலை 23 , 1983 , சனிக் கிழமை. நானும் என் மனைவியும் எமது ஒரு வயது மகளும் நாலு வயது மகனும், கொழும்பில் இருந்து சனி காலை புறப்பட்டு, என்னுடன் வேலை செய்யும் சக பொறியியலாளர் ராஜரத்ன வீட்டிற்கு, அனுராதபுர பட்டணத்தில் இருந்து கொஞ்சம் உள்ளே உள்ள ஒரு கிராமத்துக்கு, அவரின் முதல் பிள்ளையின் முதலாவது பிறந்த நாளுக்கு வந்தோம். சனிக்கிழமை மதியம் மகிழ்வாக, கலகலப்பாக காலம் நகர்ந்தது. சனி இரவு நாம் கொண்டாட்டத்துக்கான அலங்காரம் மற்றும் ஏற்பாடுகள் செய்வதாக இருந்தோம். அதேவேளை என் மனைவி பிறந்த நாள் கேக் செய்வதில் ராஜரத்ன மனைவியுடன் சுறுசுறுப்பாக இருந்தார். எனவே நானும் ராஜரத்னாவும் அவரின் இரு தம்பிமாரும், மதிய உணவுக்கு பின் கொஞ்சம் பீர் [beer] எடுத்துக் கொண்டு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தோம். என் மனைவிதான் கேக்யை வடிவமைத்தார். ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று யாழ் குடா வடிவில், நடுவில் பனை மரம் அமைத்து, அதன் உச்சியில் மெழுகுதிரி வைக்கக் கூடியதாக நுட்பமான கைவண்ணத்துடன் அமைத்தார். அது முடிய ஜூலை 24 , ஞாயிறு அதிகாலை ஒரு மணி ஆகிவிட்டது. நாம் நால்வரும் பிறந்த நாளுக்கான சோடனைகளும் மற்றும் ஏற்பாடுகளும் அதற்கு சற்று முன் தான் முடித்தோம். இறுதியாக, எல்லோரும் நித்திரைக்கு போகுமுன், ஒரு வலுவான காபி [strong coffee] குடித்துக்கொண்டு, இலங்கை ஆங்கில வானொலியில் பாடல் கேட்டோம். அது தான் எம்மை கொஞ்ச நேரத்தால் 'சத்தம் போடாதே!' என என்னையும், மனைவியையும், பிள்ளைகளையும் மௌனமாகியது! ஆமாம், நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள். இப்ப நாம் இருப்பது முற்றும் முழுதான சிங்கள கிராமத்தில். அது என்ன புது விடுகதை என்று யோசிக்கிறீர்களா ?. இது விடுகதை அல்ல, அவசர செய்தியாக வானொலியின் அறிவித்தலே அந்த விடுகதை! 1983 சூலை 23 இரவு 11:30 மணியளவில், யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதல் செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து நடந்த மோதலில், ஒரு அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் என அறிவித்தது தான் அந்த திடுக்கிடும் செய்தி. ஆனால் அதை தொடர்ந்து பலாலி இராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினர் திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள அனைத்துக் கடைகளையும் அடித்து நொறுக்கினர். யாழ்ப்பாணத்தில் 51 தமிழ் பொதுமக்கள் பின்னர் பழிவாங்கும் வகையில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இந்த செய்திகள் எல்லாம் மௌனமாக்கப் பட்டன என்பதும் அதன் உள் நோக்கமும் பின்பு தான் தெரிந்தது. ஞாயிறு மாலை / இரவு தமிழருக்கு எதிரான வன் முறைகள் பெருவாரியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஆனால் ராஜரத்ன, அவரின் சகோதரர்கள் எம்மை எல்லா நேரமும் கவனித்த படியே இருந்தார்கள். அவர்களின் ஒரே ஒரு வேண்டுகோள், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் அங்கு இருப்பது, அந்த கிராமத்தில் இருக்கும் காடையர்களுக்கும் இனவெறியாளருக்கும் மற்றும் ராணுவத்திற்கும் தெரியக்கூடாது. அதற்கு ஒரே வழி ' சத்தம் போடாதே' . ஏன் என்றால் எமக்கு தெரிந்த மொழிகள் தமிழும் ஆங்கிலமும் தான்! நம் சத்தம் கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும். மற்றும் அன்று இரவு தான் பிறந்தநாள் கொண்டாடட்டம். கிராம மக்கள் பலர் வருவார்கள். அவர்களில் நல்லவர்களும் இருப்பார்கள். கெட்டவர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு பிடி கொடாமல் சமாளிக்கவும் வேண்டும். பாவம் ராஜரத்ன குடும்பம். எந்த மன சோர்வும் இன்றி, தைரியமாக அவர்கள் இருந்ததை நாம் கட்டாயம் போற்றத்தான் வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இப்ப, இன்னும் இரண்டு மணித்தியாலத்தில் கேக் வெட்ட வேண்டும். ஆனால் கேக் யாழ்குடா வடிவில், பனை மரத்துடன்! யார் இதை பார்த்தாலும் ஒரு சந்தேகம் வரக்கூடிய சூழ்நிலை. அது தான் அந்த சிக்கல்! சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகிக்கு கூறிய காதல் மொழிகள் தான், என் மனைவியின் அழகு பற்றி எண்ணும் பொழுது வரும். அது எனோ எனக்குத் தெரியாது. அதில் உள்ள தமிழின் சிறப்பாக கூட இருக்கலாம் அல்லது அதைவிட அவளின் அழகு மேன்மையாக இருக்கலாம்? "மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே! காசு அறு விரையே! கரும்பே! தேனே! அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா? இசையே என்கோ? தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னைஒ-என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி, தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி," குற்றம் இல்லாத [24 கரட்?] பொன்னே, வலம்புரி முத்தே, குறை இல்லாத மணம் நிறைந்த பொருளே, கரும்பே, தேனே, சுலபத்தில் கிடைக்காத பெண்ணே, என் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் மருந்தே, பெரும் வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே! உன்னை நான் எப்படிப் பாராட்டுவேன்? மலையில் பிறக்காத மணியே என்பேனா? கடலில் பிறக்காத அமுதமே என்பேனா? யாழில் பிறக்காத இசையே என்பேனா? ... எனக்கே என்றும் புரியவில்லை. ஆனால் அது இப்ப முக்கியம் இல்லை, ஆமாம் அவள் உடலில் மட்டும் அழகு அல்ல, அறிவிலும் அழகானவள். அது தான் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவள் ஒருவாறு மெதுவாக கதைகள் சொல்லி, காரணம் நாம் சாதாரணமாக கதைப்பது தமிழில் தான். எனவே காதும் காதும் வைத்தாற் போல் பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை நித்திரை ஆக்கிவிட்டார். கொண்டாடட்டம் முடியும் மட்டும் அவர்களும் 'சத்தம் போடாதே' தான்! அவர்கள் தூங்கிய கையோடு, தான் முன்பு வடிவமைத்த கேக்கை, கொஞ்சம் கண்டி நகரம் போல் வடிவை சரிப்படுத்தி, பனை மரத்தை கித்துள் மரமாக மாற்றி அமைத்து, ஓ! அதன் எழிலில் எழுத்தில் சொல்ல முடியாது. ராஜரத்ன கண்டி சிங்களவன் என்பதால், அது அவர்களுக்கும், ஏன் , கொண்டாட்டத்துக்கு வந்தவர்களுக்கும் உற்சாகமும் மகிழ்வும் கொடுத்தது. ஆனால் எம்மால் அதை நேரடியாக பார்த்து ரசிக்க முடியவில்லை ! நானும் மனைவியும் பிள்ளைகளுக்கு எந்த சிறு சத்தமும் இடையூறும் வராதவாறு கண்ணும் கருத்துமாக, கொண்டாட்டம் முடியும் வரை இருந்தாலும், நாம் இருவரும் அருகில் அருகில் இருந்தது எமக்கு ஒரு சங்க பாடலையும் [அகநானுறு 136] நினைவூட்டி சென்றது. இவளை நன்கொடையாக வழங்கி [சத்தம் போடாதே என கட்டளையிட்டு ஒரு அறையில் இருட்டில் அடைத்து], ஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள் இரவில் (இந்த பிறந்தநாள் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல் முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்.. ஒரே புழுக்கமா இருக்கு அவளுக்கு ! அவள் நெற்றி இப்படி வேர்க்குதே? கொஞ்சம் காற்று வரட்டும் என எண்ணி [ஒரு சாட்டாக அதை என் கையில் எடுத்து], அவள் அழகை பார்க்கும் ஆவலுடன், ஆடையை திறவாய் எனச் சொல்லி, ஆர்வம் ததும்பும் நெஞ்சோடு, துணியை நான் கவர. அய்யோ [அலற முடியாது, 'சத்தம் போடாதே' தடுக்கிறதே என அவள் முழிக்க] உறையில் இருந்து உருவிய வாளைப் போல, அவளின் அழகு விளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது. அவள் தன் வடிவம் மறைக்க அறியாதவள் ஆனாள். [பிள்ளைகள் ஒரு பக்கம், தூங்கி இருந்தாலும், இயல்பாக பெண்களில் எழும்] வெட்கப்பட்டாள் (ஒய்யாரம்?) ஏய், என்னை விடுடா -ன்னு இறைஞ்சுகிறாள் [ஆனால் சத்தம் வராமலே ?]; வண்டுகள் மொய்க்கும் … ஆம்பல் மாலையைக் கழட்டி வச்சிட்டு; கூந்தலையே இருட்டாக்கி, அந்த இருட்டில் தன்னை, மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, மறைச்சிக்கிட்டு வெட்கப்படுகிறாள்! "தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், ‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணி, பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே." 1983 சூலை 25 காலை 9:30 மணிக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தனா நாட்டின் பாதுகாப்புப் பேரவையை சனாதிபதி மாளிகையில் கூட்டினார். அதே நேரத்தில் அம்மாளிகையில் இருந்து 100 யார் தொலைவில் இருந்த 'அம்பாள் கபே' தீ மூட்டப்பட்டு எரிந்து கொண்டிருந்தது எவ்வளவு தூரம் அரச நிறுவனமும் அதன் உறுப்பினர்களும் இந்த வன் முறையில் ஈடுபட்டார்கள் என்பதை சத்தம் போடாமல் சொல்லிக்கொண்டு இருந்தன! அது மட்டும் அல்ல, அருகில் யோர்க் வீதியில் 'சாரதாஸ்' நிறுவனமும் தீக்கிரையானது. தொடர்ந்து சனாதிபதி மாளிகைக்கு முன்னால் இருந்த பெய்லி வீதியில் அனைத்துத் தமிழ்க் கடைகளுக்கும் தீ மூட்டப்பட்டன. பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் முடிவடைவதற்கிடையில், கொழும்பு கோட்டைப் பகுதியில் இருந்த அனைத்துத் தமிழ் நிறுவனங்களும் தீக்கிரையாகின. அது மட்டும் அல்ல, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக காடையர்களாலும் அரசின் சில தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட இந்த கலவரம் அடங்க ஏழு நாட்கள் சென்றது குறிப்பிடத் தக்கது . முக்கியமாக அங்கு சிங்களக் காடையர் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர். இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இன்னும் ஒன்றையும் நீங்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும். அதாவது கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 ஜூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தன அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்: "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" இது ஒன்றே இந்த கலவரத்தின் நோக்கத்தையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்! இவை எல்லாம் தமிழர்களை நோக்கி 'சத்தம் போடாதே'. என்ற ஒரு எச்சரிக்கையாக அரசு செய்து இருக்கலாம்? ஏன் இந்த கதை எழுதிக்கொண்டு இருக்கும் ஜுலே 2022 காலப் பகுதியிலும் கொழும்பில், காலி முக ஆர்ப்பாட்ட இளைஞர் குழுவினருக்கு 'சத்தம் போடாதே ' நிறைவேறிக்கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.! என் கதை வாசிப்பவர்களுக்கு, ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த கதை பற்றி 'சத்தம் போடாதே!' [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... "
"கறுப்பு யூலையை (Black July, ஆடிக்கலவரம்) முன்னிட்டு ... " "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருப்பை தனதாக்கி மற்றவனை தாழ்த்தி இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்லவே !" "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமற்ற காட்டு மிராண்டிகள் அவர்களல்ல இந்நாட்டின் பூர்வீக குடிகளில் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாக வாழ உரிமை உடையவர்களே ! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற கறுப்புமனமே ! இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " "இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [On the night of 24 July 1983, anti-Tamil rioting started in the capital city of Colombo and then spread to other parts of the country. Over seven days, mainly Sinhalese mobs attacked, burned, looted, and killed Tamil civilians. Estimates of the death toll range between 400 and 3,000. and 150,000 people became homeless. Around 8,000 homes and 5,000 shops were destroyed.The economic cost of the riots was estimated to be $300 million. Even I was personally left Colombo, on Indian cargo ship from Colombo harbour to KKS harbour with family and many others as an internal displaced refugees. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும், 400 முதல் 3000 பேர் வரை படுகொலை செய்ததுமான ஒரு நிகழ்வாகும். இதில் நானும் என் குடும்பமும் மற்றும் பலரும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாக , கொழும்பு துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை முகத்துக்கு [KKS] இந்தியாவின் ஒரு சரக்கு கப்பலில் சென்றது இன்னும் மறக்க முடியாது.]
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு ஆண்: "வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே காலுனக்குப் பொசுக்கலையோ கற்றாழைமுள்ளுக் குத்தலையோ?" பெண்: "திண்ணை திண்ணையாத் தாண்டிப் போறவனே பாசாங்கு வேண்டாம்டா பசப்புவார்த்தை வேண்டாம்டா?" ஆண்: "இடுப்புச் சிறுத்தவளே இறுமாப்புநீ பேசாதேடி சிவத்த பாவாடை சித்தம் கலக்குதடி?" பெண்: "நேற்றுவரை உன்னை வெகுவாக நம்பினேனே அறம் அற்றவனே நானே விலகுகிறேனே?" ஆண்: "சிவத்த புள்ள நெனப்பெல்லாம் ஓமேல கரம்நீட்டி இவனைச் சந்திக்கக் கூப்பிடாயோ?" பெண்: "சந்திலே பொந்திலே மேஞ்சு பார்ப்பவனே உன் ஆசைதீர்க்க என்னை நண்பியேன்றாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]"
kandiah Thillaivinayagalingam replied to kandiah Thillaivinayagalingam's topic in அறிவியல் தொழில்நுட்பம்எல்லோருக்கும் நன்றிகள்
- "முதுமையில் தனிமை [Senior Isolation]"
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
"முதுமையில் தனிமை [Senior Isolation]" மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் மேலும் அதிக அளவு உயர உள்ளதுடன், சராசரி ஆயுட் காலமும் 75 -ஐ தாண்டுகிறது. எது எப்படியாகினும், அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது? பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 எனக்கு ஞாபகம் வருகிறது: ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.” எனவே, கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப்பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும், முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படிக் எடுத்து உரைக்கிறது; "பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளுநாள் சாகின் றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?" அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால்,பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது. முதுமையில் தனிமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் நேரத்துடன் ஓரளவு விபரமாக நாம் அறிவதன் மூலம் அதை இலகுவாக தடுக்கலாம். மனிதர்களுக்கு வயது போகப் போக, தனிமையில் வசிக்கும் நிலையின் வாய்ப்பும் அதிகமாக அதிகரித்து செல்கிறது. தனிமையில் வாழ்வது, அவர் சமூகத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டார் என்பதை குறிக்காது எனினும், கட்டாயம் ஒரு நோய் தாக்க நிலைக்கு அடிகோலக் கூடிய காரணிகளில் ஒன்றாகும். தனிமைக்கான காரணங்கள் ஒருபுறம் இருக்க, அதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானதும் ஆகும். இந்த முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்து விடுவதில்லை. எனவே முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொண்டால் அதை அவரால் தன்பாட்டில் தவிர்க்கவும் முடியும். பொதுவாக இவர்கள் இரண்டு விதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். முதலாவது, அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதலும் அதன் காரணமாக, வெளியில் தனிமையில் போக முடியாததால், ஓர் இடத்தில் முடங்கிப் போதல், அதனால் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு குறைந்து போதல் போன்றவையாகும். மற்றது மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கப்படுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுது போக்கின்மை மற்றும் வாழ்வில் ஆர்வ மின்மை போன்றவை ஏற்படுத்தும் மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும். இவர்களது மிக முக்கிய தேவை என்பது அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவையாகும். ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளில் மிக்க கொடுமையானது அவர்கள் அனுபவிக்கும் முதுமையில் தனிமைதான். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர் முதுமையில் தனிமையில் பேச்சுத் துணை இன்றி சிலவேளை இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது சில வேளை இருப்பது, தனது சுகதுக்கங்களை மனம் விட்டுப் பேச முடியாது சிலவேளை இருப்பது, போன்ற நிலைமைகள், அவர்களை கட்டாயம் துன்பப்படுத்தும். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சினைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாத போது, அவற்றுக்குத் தீர்வு என எதுவும் அவர்கள் கண்ணில் படுவதும் இல்லை. நாளை நமக்கு முதுமை வரும் போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோமோ, அப்படியே இன்று நம் முன் நடமாடும் தாய் தந்தையரை, மற்றும் முதியோரை, நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை, நாம் அனைவரும் எமது மனதில் ஏற்றுக் கொண்டாலே இதற்கு விடை இலகுவாகி விடுகிறது எனலாம். பொதுவாக நகர்ப்புறத்தில் இந்நிலை மிகவும் மோசமாக உள்ளது. உதாரணமாக பல மூத்த குடிமக்கள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வாழ்வது அங்கு கண்டறியப்பட்டுள்ளது. இது கிராமப் பகுதியில் குறைவு. வயதான காலத்தில் இத்தகைய தனிமையின் கொடுமையை அனுபவிக்கும் நிலையில் யார் யார் என்று பொதுவாக பார்த்தால், குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தையே இல்லாத நிலையில் இருப்பவர்கள், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள், சமூக நல்லுறவுக்கும், பரிவர்த்தனைக்கும் வாய்ப்பின்றி இருப்பவர்கள் என நாம் வகைப்படுத்தலாம். இத்தகைய பாதிப்புள்ளானவர்களில், நகர்ப்புற முதியவர்கள் கிராமப்புறப் பகுதிகளை விட பொதுவாக, மனோதத்துவ ஆலோசனைகள் அதிகம் தேவைப்படுபவர்களாக உள்ளனர். பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகளே பெற்றோரை முதியோர் இல்லங்களில் தள்ளுவதைப் பற்றிய செய்திகளைப் பார்த்து வருந்தியிருப்போம். செய்தியாகப் படிக்கும் போதே நமக்கு வலிக்கிறது என்றால், முதியோர் இல்லங்களில் நடைப் பிணங்களாக வாழும் வயது முதிர்ந்த பெற்றோர்களது மனம் என்ன பாடுபடும்? குறிப்பாக ஒரு வெளி நாட்டிற்கு குடிவரவாளர்களாக தமது முதுமைப் பருவத்தில் வந்தவர்கள் தம்மைக் அந்த நாட்டின் வாழ்வுச் சூழலுக்குள் பொருத்திக்கொள்வதற்கு எதிர்கொள்ளும் தடைகள் ஒரு புறம் இருக்க, புதிய நாடு, புதிய கலாசாரம், பழக்கமில்லாத காலநிலை, பரிச்சயம் இல்லாத மொழி என்கிற சூழலில் தெரிந்தவர்கள் அதிகம் இல்லாமல் தமது பிள்ளைகளை நம்பியே இங்குவரும் பெற்றோர், தமது பிள்ளைகளால் தனித்து விடப்படும் போது மிகப்பெரும் மனநெருக்கடிக்கு உள்ளாகின்றார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒரு புறம் நோய்களும் இன்னொரு புறம் ஆதரவற்ற தனிமையும் மனதை வாட்டி முதியவர்களைப் பாடாய்படுத்திவிடும். சமீபத்தில் அமெரிக்காவின் அறிவியல் நிறுவனம் முதியவர்கள் பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ‘சமூகத் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்ட நிலையில், தனிமையின் வேதனை மனதை வாட்டுவதால் பெரும்பாலான முதியவர்கள் பிரச்சினைக்கு ஆளாவதாகவும், இந்த மனரீதியான பிரச்சினையால் அதிக அளவில் மரணங்கள் நிகழ்வதாகவும்’ அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. எனவே முதியோர்களை வாட்டும் தனிமையை விரட்டியடிக்கும் வகையில் முதியவர்களுக்கு உணவு பரிமாறுவது, இசையைச் கற்றுக்கொடுப்பது, ஃபேஸ்புக்கை [Facebook] இயக்கச் சொல்லிக் கொடுப்பது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஒன்றுகூடல் நிகழ்வுகள், முதியவர்களுடன் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் அல்லது விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் முதியவர்களை, தனிமையை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையருக்கு ஒரு பாது காப்பாக முதியோர் இல்லம் சேர்ப்பவர்கள் இன்று பலர். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அது தவிக்கிறது. மேலும் வசதி வாய்ப்புகள் இருந்தும் சில முதியோர்களை தனிமை வாட்டுகிறது. மனம் விட்டு பேச வீட்டில் யாரும் இல்லாததால் சில முதியோர்கள் தாங்களே விரும்பி முதியோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத முதியோர்கள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு துரத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]