Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]" / பகுதி 02 நினைவாற்றல் இழப்பு அல்லது மறதி பொதுவாக மூப்படைவதால் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றே கூறலாம். உதாரணமாக, மக்கள் முதுமையடைய அல்லது வயது போக, அவர்களின் உடலிலும், மூளை உட்பட, அதற்கு ஏற்ற மாற்றங்கள் தென்படுகின்றன. எனவே புது விடயங்களை படிக்க அல்லது உள்வாங்க சிலருக்கு, முன்னையதை விட கூடுதலான நேரம் எடுக்கலாம். மேலும் சில முன்னைய தரவுகளை, செய்திகளை அல்லது தாம் செய்ததை மறந்து விடலாம். உதாரணமாக எங்கே மூக்கு கண்ணாடி வைத்தது என்று அல்லது அது போன்ற அன்றாட செயல்களை. இது பொதுவான மறதியாகும். இதை அல்சீமர் நோய் [முதுமறதி / Alzheimer's disease] உடன் குழப்ப வேண்டாம். அல்சைமர் [முதுமறதி] என்பது மூளையை பாதிக்கும் ஒரு வகை மூளை நோயாகும். இந்த நோய் முதியவர்களிடயே பொதுவானதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஞாபக சக்தி குறைகிறது மற்றும் மிகவும் பலவீனமான நினைவகத்தை கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் மூளை சரியாக செயல்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடைமுறை படிப்படியாக மோசமடையத் தொடங்குகிறது. அல்சைமர் என்பது ஒரு வகை டிமென்ஷியா [மறதி நோய் / dementia] ஆகும். நடுத்தர வயது உள்ளோர், தமது வாழ்க்கையின் பிற்பகுதியில் நினைவாற்றல் இழப்பிற்கு பொதுவாக உள்ளாகிறார்கள். இதை தடுக்க உத்தரவாதமான வழி என்று ஒன்றும் இல்லை என்றாலும், மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன வழிமுறைகள் கையாளவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் பட்டியல் இட்டு உள்ளார்கள். அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம். (1) உடற் பயிற்சி அல்லது உடலால் வேலைகள் செய்தல், இரத்த ஒட்டத்தை முழு உடலுக்கும், உதாரணமாக மூளைக்கும் சேர்த்து அதிகரிக்கிறது. இது உங்க நினைவாற்றலை கூர்மைப்படுத்த கட்டாயம் உதவும். (2) எப்படி உடற் பயிற்சி உங்க உடலை திடமாக, நல்ல வடிவத்தில் வைத்திருக்கிறதோ, அவ்வாறே, மனதைத் தூண்டும் நடவடிக்கைகள், கட்டாயம் உங்கள் மூளையை நல்ல நிலையிலும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். - அதாவது, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கும். (3) சமூக தொடர்பு, மன அழுத்தம் அல்லது மனசோர்வு போன்றவற்றை விரட்ட உதவுகிறது, பொதுவாக இந்த இரண்டும் நினைவாற்றல் இழப்பிற்கு காரணமானவை ஆகும். சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது அல்லது சந்தர்ப்பத்தை நீங்களே உண்டாக்கி, நீங்கள் விரும்புபவர்களுடன், உங்கள் நண்பர்களுடன் மற்றும் எல்லோரிடமும் ஒன்றிப் பழக முயலுங்கள் - குறிப்பாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொழுது. (4) உங்கள் வீடு இரைச்சலாக இருந்தாலும் அல்லது உங்கள் குறிப்புகள் குழப்பத்தில் இருந்தாலும் [if your home is cluttered and your notes are in disarray], நீங்கள் மறப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே எப்பவும் உங்கள் பணிகள், நியமனங்கள் மற்றும் பிற நிகழ்வுகள் போன்றவற்றை ஒரு பிரத்தியேக குறிப்பு புத்தகத்தில் - காகித அல்லது மின்னணு - பதியுங்கள் . அது மட்டும் அல்ல, அவ்வற்றை பதியும் பொழுது, வாய் மூலம் அதை திருப்பி சொல்லவும். இது நினைவாற்றலில் அதை ஒட்டிவைக்க பெரிதாக கட்டாயம் உதவும். நீங்கள் இப்ப அறிந்ததை / நிகழ்வதை பதியும் பொழுது, முன்னையதையும் ஒருக்கா பாருங்கள். மேலும் உங்கள் பணப்பை, சாவி, கண்ணாடி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்ககளை வைத்து எடுப்பதற்கு ஒரு இடத்தை இயன்ற அளவு நிரந்தரமாக ஒதுக்குங்கள். கவனச்சிதறல்களை கட்டுப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடாதீர்கள். நீங்கள் தக்கவைத்துக் கொள்ள அல்லது தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்பும் ஒன்றில், முழு கவனத்தையும் செலுத்தி, செயற்பட்டால், கட்டாயம், பின்னொரு நேரம் அவ்வற்றை திருப்பி நினைவூட்டுவது இலகுவாக இருக்கும். அது மட்டும் அல்ல அப்படியான நிகழ்வுகளை அல்லது குறிப்புகளை, நீங்கள் அதிகம் விரும்பும் பாடலுடனோ அல்லது உங்களுக்கு பழக்கப்பட்ட கருத்துக்கள் உடனோ தொடர்பு படுத்துவதும் ஒரு நல்ல வரவேற்கத் தக்க முறையாகும். (5) ஆரோக்கிய வாழ்விற்கு உறக்கம் ஒரு முக்கியமான ஒன்றாகும். இது நினைவாற்றலுக்கும் பொருந்தும். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் [shut down] காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல. இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, உறக்கத்தின் முக்கிய பாத்திரங்களில் [vital roles] ஒன்று நினைவுகளை உறுதிப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் நமக்கு உதவுவதாகும்..உதாரணமாக, ஒவ்வொரு நாளும் எம் மூளை பெருவாரியான தகவல்களை உள்வாங்குகிறது. அவைகளை நேரடியாக பதிவு செய்யப்படுவதை விட , இந்த உண்மைகளும் அனுபவங்களும் [facts and experiences] முதலில் சீரமைப்பு செய்யப்பட்டு சேமிக்க வேண்டும் [need to be processed and stored]. இவைகளின் பெரும் பகுதி, நாம் உறங்கும் பொழுதே நடைபெறுகிறது. எனவே வயது வந்தோர் குறைந்தது ஏழு மணித்தியாலம் தொடங்கி ஒன்பது மணித்தியாலம் வரை துயில்வது மிக நன்றாகும். (6) படுக்கைக்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது உறக்கத்தை சிறப்பிக்கலாம் அல்லது கெடுக்கலாம். சில குறிப்பிட்ட உணவுகள் மூளையை அமைதிப்படுத்துவதாகவும் மற்றும் உறக்கத்தை ஊக்கிவிப்பதாகவும் [calm the brain and help promote sleep] அறியப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உறக்கத்திற்கு மாலையில் சரியானவற்றை சாப்பிடுவது கட்டாயம் அவசியமாகும். உறக்கத்திற்கு முன், பெரிய அளவு உணவுகள் சாப்பிடக் கூடாது, ஏன் என்றால், இது உபாதைகள் மற்றும் அஜீரணத்திற்கு [discomfort and indigestion] வழிவகுக்கும். ஆனால், சிறிய சிற்றுண்டி பயனுள்ளதாக இருக்கும். மேலும் சில ஆய்வுகள், குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் [nutrients] , உறக்கத்திற்கு ஒரு அடிப்படை பங்கை வகிக்கிறது என சுட்டிக் காட்டுகிறது. உதாரணமாக, ஒரு நீண்ட நல்ல ஆரோக்கியமான உறக்கத்திற்கு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற உணவில் [தக்காளி, ...] காணப்படும் லைகோபீன் [இலைக்கொப்பீன் / lycopene], கார்போஹைட்ரேட்டுகள் [ரொட்டி, பால், உருளைக்கிழங்கு, ... / மாசத்து / carbohydrates], வைட்டமின் சி [கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி, ... / vitamin C], செலினியம் [கொட்டைகள், இறைச்சி மற்றும் மட்டி / selenium], லுடீன் / நிறமி வகை [பச்சை, இலை காய்கறிகள் / lutein / zeaxanthin ] உணவுகள் முக்கியமாகும். இரவில் அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உண்பதும் மற்றும் .உறங்க செல்வதற்கு முன் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றை அருந்துவதும் உறக்கமின்மைக்கு பொதுவான காரணம் ஆகும். இரவு உறங்க செல்லும் முன் இளஞ்சூடான பால், முட்டை, உலர் பழங்கள், வாழைப்பழம், தோல் நீக்கப்பட்ட கோழி, சுண்டல் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் உறக்கத்துக்கு ஏற்ற உணவுகளாகும். அதேநேரத்தில் இத்துடன் மாவுச்சத்து நிறைந்த அரிசி உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இரவு உணவு உண்டதும் உடனடியாக உறங்கச்செல்ல வேண்டாம், அதேநேரம் பசியோடும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டும் உறங்கச் செல்லவும் கூடாது. இரண்டுமே உறக்கத்தைக் கெடுக்கும். ஆரோக்கியமான உணவு மூளைக்கும் இதயத்துக்கும் நல்லது ஆகும். அதிகமாக கூடுதலான பழங்கள், மரக்கறிகள், முழு தானிய உணவுகள் நன்மை பயக்கக் கூடியவை. அது மட்டும் அல்ல குறைந்த கொழுப்பு உள்ள உணவுகளை தெரிந்து எடுங்கள். உதாரணமாக, மீன், பீன்ஸ் [அவரை], தோல் அற்ற வெள்ளை இறைச்சி கோழி, போன்றவை ஆகும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகளான [saturated fats] மாட்டிறைச்சி, சீஸ் [பால் கட்டி], வெண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் நீங்கள் குடிக்கும் பானங்களும் கருத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக கூடுதலாக மது அருந்துதல், தடுமாற்றத்தையும் நினைவாற்றல் இழப்பையும் ஏற்படுத்தலாம். அதே மாதிரி போதை பொருள்களும் ஆகும். இறுதியாக, நீங்கள் ஏற்கனவே மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் [உயர் கொழுப்பு], நீரிழிவு நோய், கூடிய உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்] மற்றும் காது கேளாமை [depression high blood pressure high cholesterol diabetes, obesity, and hearing loss] போன்ற குறைபாடுகளுக்கு மருத்துவர் ஆலோசனையில் இருக்கிறீர்கள் என்றால், கட்டாயம் நீங்கள் உங்களில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். அப்படி என்றால் தான் உங்க நினைவாற்றல் இழப்பு பெரிதாக பாதிக்கப் படாமல் காப்பாற்ற முடியும். மேலும் ஒழுங்காக மருத்துவரின் ஆலோசனை பெற்று, உங்கள் மருந்துகளை மதிப்பாய்வு செய்யுங்கள். பலதரப்பட்ட மருந்துகள் கூட நினைவாற்றலை பாதிக்கலாம். மனித உடலில் கொழுப்புச் சத்து என்பது மிக அவசியமான ஒன்று. ஆனால் அது இருக்க வேண்டிய அளவு எவ்வளவு, அதை நாம் எந்த மாதிரியான உணவுகளில் இருந்து பெறுகிறோம் என்பது தான் முக்கியம். நம்முடைய உடலில் கொழுப்புச் சத்து என்பது இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான, நமக்கு ஆற்றலை வழங்குகிற நல்ல கொழுப்பு, மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கிற மோசமான, ஆபத்தான கொழுப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. [மூலம்: ஆங்கிலத்தில், கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம், தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] தற்காலிகமாக முற்றிற்று
  2. "பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம்" [01/11/2023 எழுதியது] "எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நானே எதையும் அலசி என்போக்கில் வாழ பழகி விட்டேன்!” "குழந்தை பருவம் சுமாராய் போக வாலிப பருவம் முரடாய் போக படிப்பு கொஞ்சம் திமிராய் போக பழக்க வழக்கம் கரடாய் போச்சு!” "உண்மை தேடி அலச தொடங்கினேன் வேஷம் போட்ட பலதை கண்டேன் ஒற்றுமை அற்ற மதங்களை கண்டேன் ஜனநாயகம் அற்ற ஜனநாயகம் கண்டேன்!” "நானாய் வாழ அமைதி தேடினேன் வாழத் தெரியாதவன் என்று திட்டினர் நாலு பக்கமும் ஓடித் திரிந்தேன் ஒன்றும் செய்யா கருங்காலி என்றனர்!” "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிம்மதியும் இல்லை எழுதத் தொடங்கினேன் மனதில் பட்டதை உற்சாகம் தந்தனர் மகிழ்வும் வந்தது!” "ஓடும் உலகில் நாமும் ஓடி ஓரமாய் கொரோனா ஒதுங்க வைக்க பேரப் பிள்ளைகள் தனிமை போக்க ஆறுதல் அடைந்து ஆனந்தம் கண்டேன்!” "உறங்கி கிடைக்கா மனது ஒருபக்கம் உலகம் துறக்கா ஆசை ஒருபக்கம் பிறந்தநாள் வயதைக் கூட்டுது ஒருபக்கம் பிரிந்த உறவுகளை எண்ணுது ஒருபக்கம்!” "என்னை நினைக்க சிரிப்பு வருகுது அவளை நினைக்க அழுகை வருகுது வாழ்வை நினைக்க ஆத்திரம் வருகுது மரணத்தை நினைக்க மகிழ்ச்சி வருகுது!!” (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
  3. என்னுடைய சில கருத்துக்களை அல்லது இலங்கை வரலாற்று நிகழ்வுகளை சூழ்ந்த, கற்பனைக் கதைகளே கூடுதலானவை. அதில் இதுவும் ஒன்று நன்றி கூடுதலான உண்மையும், அல்லது முழு உண்மையும் சில பொய்களும் அல்லது பொய்கள் இல்லாமலும் கலந்த கதைகளில் சிலவற்றின் லிங்க் கீழே தருகிறேன் ஓரளவு உண்மைக் கதைகளில் சில இதுவே !! சிறுகதை - 3 / "உள்ளம் கவர்ந்த கள்வன்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7146236552118254/? சிறு கதை - 6 / "நினைவில் நின்றவள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7214613928613849/? சிறு கதை - 9 / "அறம் பேசுமா?" https://www.facebook.com/groups/978753388866632/posts/7296183263790248/? சிறு கதை - 15 / "உயர்ந்த மனிதர்கள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7385664131508827/? சிறு கதை - 16 / "மர்மம் விலகியது" https://www.facebook.com/groups/978753388866632/posts/7405763156165591/? சிறு கதை - 18 / "ஒரு தாயின் கண்ணீர்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7446216112120295/? சிறு கதை - 22 / "நிழலாக ஆடும் நினைவுகள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/7547151945360044/? சிறு கதை - 26 / "தந்தை எனும் தாய்") https://www.facebook.com/groups/978753388866632/posts/7692124627529441/? சிறு கதை - 32 / "சத்தம் போடாதே" https://www.facebook.com/groups/978753388866632/posts/7889422104466358/? சிறு கதை - 39 / "அப்பாவின் பேனா..!" https://www.facebook.com/groups/978753388866632/posts/8062796290462271/? சிறு கதை - 42 / "கூட்டுக்குடும்பம்" https://www.facebook.com/groups/978753388866632/posts/8126263057448927/? சிறு கதை - 48 / "நிம்மதியைத் தேடுகிறேன்" https://www.facebook.com/groups/978753388866632/posts/8227714400637125/? சிறு கதை - 108 / "கனகம்மா" https://www.facebook.com/groups/978753388866632/posts/24162380043410639/? சிறு கதை - 129 / "இளங்கவியும்'ஏடிஎச்டி' யும் [ADHD]" https://www.facebook.com/groups/978753388866632/posts/25097762409872393/?
  4. "வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக்குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும். அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க, வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக முதலில் அமைந்தது எனலாம்? உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட, 'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்? இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்? வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு? நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில், தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால் குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள் விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் ! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" "பிள்ளையார் கோவிலில் ஒரு திருவிழா பிள்ளையை அணைத்து போறாள் ஒருநிலா வள்ளி தெய்வானை திருமண விழா துள்ளி குதித்து கொண்டாடினம் தம்பதியர்." "குட்டி எலியில் தொந்தி பிள்ளையார் முட்டி உடையுமோ ஏங்குது குழந்தை? கொட்டி மேளத்துடன் இரு மனவியரை தட்டி வாழ்த்துறாள் ஒரு கண்ணகி ?" "மஞ்சு விரட்டு ஒரு மிருகவதை அஞ்சி நசுங்கும் எலி தெய்வவாகனம்? பஞ்ச பாண்டவருக்கு ஒரு திரெளபதி நெஞ்சு வலிக்குது ஒரு சீதைக்கு ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "பெண்ணை மதித்திடு" கி.மு. 500க்கு முன்னர் திருகோணமலையில் பாரிய சனத்தொகையையோ, கட்டமைக்கபட்ட ஆட்சிமுறையையோ கொண்டிருந்திருக்காத சில மனித குழுக்கள் - அவர்களை இயக்கர், நாகர் என்ற இனமாக - தங்களது அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என வரலாற்று ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். மேலும் 1917ஆண்டு கந்தரோடையில் ஆய்வு செய்த சேர் போல் பிரிஸ் அவர்கள் 1919 ஆண்டு டெயிலி நியூஸ் என்ற ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “இதுவரை கனவிலும் எண்ணிப் பாராத நமது நாகரிகத்தின் கவரத்தக்க வளர்ச்சிக்கட்டம் பற்றிய சான்றுகள் உண்மையாகவே மண்ணுக்குள் புதைந்து இருப்பதை தமிழ் மக்கள் ஒருகாலத்தில் உணர்வார்கள் என்று நம்புகிறேன்…” என்று. அது மட்டும் அல்ல, மகாவம்சம் என்ற பாளி காவியத்தின் படியும், சிங்கள இனம் என்று ஒன்று உலகில் தோன்றாத கி.மு. 3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மகாயான பௌத்தத்துக்கு மாறிய, மகாசேனனால் கோகர்ணம் (திருகோணமலை), எரகாவில்லை (ஏறாவூர் ?), மற்றும் இலங்கை தீவின் கிழக்கு பகுதியில் இருந்த பிராமணன் கலந்தனின் ஊர் ஆகியவற்றில் இருந்த லிங்க கோவில்கள் அழிக்கப்பட்டதாக கூறுகிறது. மகாசேனனால் அழிக்கப்பட்ட மூன்று லிங்க வழிபாட்டு தலங்களும் இருந்த இடங்கள் திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில்தான் இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் அங்கு சைவ தமிழர்கள் அல்லது நாகர்கள் கிருஸ்துக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததை உறுதிப்படுத்துகிறது. அப்படி 2300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் ஒலித்த, தமிழர் வாழ்ந்த திருகோணமலையில், புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகத்தின் அண்மையில், உயர்ந்து நிற்கும் பிரபல சட்ட நிறுவனம், "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சிறப்பான திறனுக்கு இலங்கை முழுவது பெயர்பெற்று இருந்தது. அதன் சுவர்களுக்குள், தினசரி எண்ணற்ற கதைகள் வெளிப்பட்டன, ஆனால் பெண்களுக்கான மரியாதையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதை தழுவுவதற்கும், அதனால் பெண்ணை மதித்திடும் ஒரு நிலை அங்கு காண முடியவில்லை. "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்" என்கிறார் மகாகவி பாரதியார். அவரின் வார்த்தைகளுக்கிணங்க இருபத்து ஓராம் நூற்றாண்டின் இணையில்லா ஆற்றலாக வலம் வருவது பெண்ணின் ஆற்றல். செய்யும் செயலில் நேர்மை, துணிவுடன் ஆற்றும் பணி, அளப்பரிய அறிவாற்றல் கொண்டு பெண்கள் பலர் வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து பெண்ணை மதித்திடு! ஆனால் இதற்கு எதிரானது தான் "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" கட்டிடத்துக்குள் நடந்து கொண்டு இருக்கிறது. பெண்ணை மதிக்காது வளர்வதுதான் ஆண்மைக்கு அழகு என்பதை, எப்படியோ ஆண் குழந்தைகளின் மனதில் பதிய விட்டிருக்கிறோம். அது தான் நாம் விட்ட பெரும் தவறு. 'பொம்பிள்ளை பேச்சை கேட்க்காதே', 'அவா பொம்பிள்ளை தானே', 'ஒரு பொம்பிளைக்கு எவ்வளவு திமிரு பாரு' என்ற அன்றாட சொற்களை வீட்டில் வெளியில் கேட்டு கேட்டு வளர்ந்தவன், தான் பெரியவனாக மாறியதும் , அதையே கடைப்பிடிக்கிறான் என்பதே உண்மை. நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரரான ஆர்.நடராஜ் பெரும் செல்வாக்கு பெற்றவர். அவர் தனது கூர்மையான அறிவுத்திறன், ஈர்க்கக்கூடிய நீதிமன்றத்தின் இருப்பு மற்றும் மற்றவர்கள் சாத்தியமற்றதாகக் கருதும் வழக்குகளை திறனாக வாதாடக்கூடியவர். அவருக்கு தொழில் முறை திறமை இருந்த போதிலும், ஆர்.நடராஜ் ஒரு குறிப்பிடத்தக்க சிலவற்றில் பின்னடைவும் கொண்டு இருந்தார். அவர் தனது நிறுவனத்தில் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் திறனை அடிக்கடி அல்லது என்றும் கவனிக்கவில்லை. பாலின வேறுபாடுகள் பற்றிய அவரது கருத்து பழமையானது, அது ஆண்கள் வழிநடத்தும் மற்றும் பெண்கள் பின்பற்றும் பாரம்பரிய வளர்ப்பால் வடிவமைக்கப்பட்டது. இந்த எண்ணம் அவரது அன்றாட உரையாடல்களில் எப்பொழுதும் பிரதிபலித்தது. அவர் ஒருபோதும் வெளிப்படையாக பெண்களை அல்லது தனது சக பெண் வழக்கறிஞர்களை அவமரியாதை செய்யவில்லை என்றாலும், அவரது மனதில் சிறு வயதில் இருந்தே பதித்திருந்த மறைமுகமான சார்பு அவரது முடிவுகளை பாதித்தது. கூட்டங்களின் போது அவர் பெண் சக ஊழியர்களை அடிக்கடி குறுக்கிட்டு, அவர்களின் வெற்றிகளுக்கு திறமையை விட அதிர்ஷ்டம் காரணம் என்று கூறினார், மேலும் அவர்களின் திறன்களுக்கு கீழே உள்ள பணிகளை மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கினார். அதனால் பெண் ஊழியர்கள் தங்கள் திறன்களைக் காட்ட , வெளிப்படுத்த அங்கு முடியவில்லை. நிறுவனத்தின் கூட்டாளிகளில் வாகைச்செல்வி ஒரு பிரகாசமான மற்றும் உறுதியான இளம் பெண் வழக்கறிஞர். வாகைச்செல்வி தனது அர்ப்பணிப்பு, வழக்கு விவரங்களுக்கு தக்க வழியில் எப்படி வாதாட முடியும் என்பதில் கவனம் செலுத்துதல் மற்றும் சிக்கலான சட்டப் புதிர்களை அவிழ்க்கும் வினோதமான திறனுக்காக அறியப்பட்டார். இருப்பினும், அவரது திறமைகள் பெரும்பாலும் ஆர்.நடராஜ் அவர்களால் வேண்டும் என்றே கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பது உண்மை, அவர் அவளை ஒரு வருங்காலத் தலைவராகக் அல்லது முன்னணி வழக்கறிஞர் ஆக காட்டிலும் விடாமுயற்சியுள்ள ஒரு தொழிலாளி தேனீயாகக் தான் கண்டார். அது தான் அவர் தெரிந்தும் தெரியாமலும் விடும் தவறு!! வாகைச்செல்விக்கு அவளது ஆண் சகாக்கள், தன் திறனுக்கு குறைவாக அல்லது சமமாக தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்புகள் பெறுவதைப் பார்த்தபோது விரக்தி அதிகரித்தது. இருந்தபோதிலும், அவள், வாகைச்செல்வி, தொழில்முறையாக தனது கவனத்தை என்றும் தளர்த்தவில்லை. மற்றும் அவளது சிறந்த வேலையை வழங்குவதில் பின்வாங்கவும் இல்லை. அவளது உறுதியும் விடாமுயற்சியும் அவள் எதிர்கொண்ட சவாலுக்கு எதிராக மௌனத்தால் மட்டும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். தனித்ததாக சற்று உள்ளே தள்ளி காணியின் மத்தியில் வாகைச்செல்வியின் வீடு இருந்தது. அலுவலகத்தில் மட்டும் அல்ல, இங்கேயும் அன்னியப்பட்டுப்போனது போலிருந்த அந்த வீட்டிலே சிந்தனையுடன் வராந்தாவில் இருந்த குந்தில் சாய்ந்து இருந்து வெளியே பார்த்துக்கொண்டு வாகைச்செல்வி இருந்தாள். அவள் அறிவில் கடலாக இருந்தாலும் என்ன பிரயோசனம்? மனிதப் பழக்கவழக்கங்களில் பெண் என்பவள் இப்படித்தான் என எழுதி வைத்து விடார்களே? முற்றத்தில் மாமரம். அதில் விளையாடுற கவலையற்ற இரு அணில்கள். ஆணும் பெண்ணுமாக துள்ளி குதித்து ஓடி விளையாடுகின்றன. அவற்றின் வாழ்க்கையில் வேறுபாடை அல்லது அணியாய இழைகளை அவள் காணவில்லை. அவளுக்கு சற்று தள்ளி துணி ஒன்று வளையில் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. ‘அம்மாட பழஞ்சீலை அதனுள் அவளின் ஆறுமாச பெண் குழந்தை. அவள் இண்டைக்கு என்னமோ அழாமல் இருக்கிறது. அங்கே தவழ்கிற குளிர்ந்த காற்றிலே தூங்கிப்போய் விட்டதோ? அந்த அமைதியான சூழலிலும் வாகைச்செல்வி மனதில் சிறிதும் மகிழ்ச்சியில்லை. அவள் தன்னை ஒருதரம் கண்ணாடியில் பார்த்தாள். இந்த அழகை அனுபவிக்க துடிக்கும் ஆண்கள், ஏன் பெண்ணை சமமாக மதிப்பத்தில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை? "சினிமாவிலே வருகிறமாதிரி, பெண் விடுதலைக் கொடியை ஏந்திக் கொண்டு வெளிக்கிட முடியுமா? சினிமாத்தனங்களை ரசிக்கிற ஆண்களும். ஏதோ பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ம். நியவாழ்வு என வருகையில் ‘வாழ்க்கைப் பிரச்சனை’ என்று சொல்லி தட்டிக் கழித்துவிடுகிறார்கள்" அவள் வாய் முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு அப்பொழுது கார்னிலியா சொராப்ஜி (Cornelia Sorabji ( 1866 – 1954) யின் நினைவுதான் வந்து. இவர் இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராகும். பெண்களின் முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கியிருந்த அந்தக் காலத்திலேயே வெளியே வந்து சமூக புறக்கணிப்புகளை எல்லாம் தாங்கிக் கொண்டு வரலாற்று சாதனை படைத்த பெண்களுள் அவள் முதன்மையானவள். "பெண்களுக்கு எல்லாம் ஓர் முன்னோடி" அவள் தனக்குள் பேசிக்கொண்டாள். "ஏன் தான் இந்த ஆண்கள் இன்னும் அதை விளங்கிக்கொள்ளவில்லை. அதிலும் என் பாஸ் ஆர்.நடராஜ் இன்னும் பின்னோடி, காலம் வரும் , கோலம் புரிவான்" தனக்குள் சிரித்துக் கொண்டாள். அடுத்த நாள் வாகைச்செல்வி அலுவலகம் சென்ற போது, அங்கு பல பில்லியன் ருபாய் வழக்கை எதிர்கொள்ளும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு பிரதிநிதித்துவப்படுத்த அவளின் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது அறிந்தாள். அது தான் அவளுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அறிவுசார் சொத்துரிமை (இலங்கை வழக்கு - புலமைச் சொத்து) என்பது பாட்டு, கதை, கட்டுரை, ஓவியம், படங்கள், கண்டுபிடிப்புகள், நுட்பங்கள், வணிகச் சின்னங்கள் போன்ற ஆக்கபூர்வமான படைப்புக்களின் உரிமை பற்றியதாகும். இதற்கான சட்டம் சிக்கலான விவரங்களை உள்ளடக்கியது. ஆர்.நடராஜ், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, தனது நிர்வாகத்தில் இருந்த சிறந்த வழக்கறிஞர்கள் குழுவைக் கூட்ட முடிவு செய்தார். பலருக்கு ஆச்சரியமாக, திறமைமிக்க நடுத்தர அகவை கொண்ட வாகைச்செல்வி ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், தற்செயலாக ஒரு மூத்த பங்காளிகளில் ஒருவர் நோய்வாய்ப்பட்டபோது விதி தலையிட்டது, கடைசி நிமிட மாற்றாக வாகைச்செல்வி அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டார். ஆர்.நடராஜ் அவளின் திறமையில் எந்த நம்பிக்கையும் இல்லாத போதிலும், வாகைச்செல்வி, அதை தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பாவிக்க எண்ணினாள். கார்னிலியா சொராப்ஜியாவின் மூத்த சகோதரிகள் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து பல்கலைக்கழகத்தில் சேரத்துடித்தனர். கல்லூரியில் சேர விண்ணப்பித்த போது பெண்கள் யாரையும் இதுவரையில் பல்கலைக்கழகத்தில் சேர்த்ததில்லை அதனால் உங்களையும் சேர்க்க முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் நிச்சயம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சபதமேற்கிறார் கார்னிலியா. அதை செய்தும் காட்டினார். அந்த வரலாறு வாகைச்செல்விக்கு புத்துணர்வு கொடுத்தது. அந்த உற்சாகம் தந்த நம்பிக்கை மற்றும் விடா முயற்சியால் விரைவில் அவள் தனது உண்மையான தகுதியை நிரூபித்தாள். அவளுடைய நுண்ணறிவு இன்னும் இன்னும் கூர்மையாக இருந்தது, அவளது வாதங்கள் அழுத்தமானவை மட்டும் அல்ல சட்டத்தின் நுணுக்கங்களை எடுத்துரைத்தது. மேலும் தொடர்பில்லாத எதிர் கட்சியின் வாதங்களை முறியடிக்கும் அவளது திறன் ஒப்பிடமுடியாதது. வழக்கு முன்னேறும்போது, ஆர்.நடராஜ், வாகைச்செல்வியின் விதிவிலக்கான திறமையைக் தெரிந்தும் தெரியாமலும் கவனிக்கத் தொடங்கினார். வெற்றி அலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றுவதில் அவளது பங்களிப்புகள் முக்கியமானவையாக இருந்தன. படிப்படியாக, ஆர்.நடராஜ்ஜனின் கருத்து மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அவர் வாகைச்செல்வியை ஒரு திறமையான வழக்கறிஞராக மட்டும் பார்க்காமல், நிறுவனத்தின் முக்கிய சொத்தாக பார்க்கத் தொடங்கினார். இந்த வழக்கின் உச்சக்கட்டம் பரபரப்பான விவாதமாக மாறி நீதிமன்றத்தை கலக்கியது. வாகைச்செல்வியின் புத்திகூர்மையான நுணுக்கமான வாதம் எல்லோரையும் அசத்தியது. எதிர்க்கட்சிகளின் வாதங்களை மிக நுணுக்கமாக நேரடியாக தகர்த்து, சட்டப்பூர்வ புத்திசாலித்தனத்தை மட்டுமல்ல, வழக்கின் நுணுக்கங்களைப் பற்றிய ஆழமான புரிதலையும் அவள் வெளிப்படுத்தினாள் . இதனால் அவளின் நிறுவனம் இந்த வழக்கை வென்றது, கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு இலகுவாக வெற்றியைப் பெற்றது. இது, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" இல் கடமை புரியும் எல்லோராலும் பரவலாக கொண்டாடப்பட்டது. வெற்றிக்குப் பிறகு, ஆர்.நடராஜ் நீண்ட பயணத்தின் பின், தன்னை மாற்றி அமைத்துக் கொண்டார். தன் முன்னைய தவறுகளை உணர்ந்தார். மிக முக்கியமாக, அவர் தனது நிறுவனத்தில் பெண்கள் மீதான அவரது அணுகுமுறை அடிப்படையில் குறைபாடுடையது என்பதை அவர் புரிந்துகொண்டார். வாகைச்செல்வியின் வெற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர் தன்னை அறியாமலே அவரின் வாய் முணுமுணுத்தது. "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே --அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை [பெற்றோர்] வளர் ப்பினிலே '' ஒரு பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் அல்ல, அவளும் இந்த சமூகத்தின் பங்காளி, என்பதை சில பெண்களும் கூட மறந்து விடுகின்றனர் என்பதே உண்மை. இன்று வரை எத்தனையோ மாற்றங்கள், வளர்ச்சிகள் சமூகத்தில் உருவான பின்னும் இன்னமும் பெண்களை மதிக்காமை தொடர்கின்றன. பெண்கள் தொடர்பாக சமூகத்தில் நியாயமான மாற்றத்தை விரும்புகின்றதும் புரிந்து கொள்கின்றதுமான நிலைமை இழுபறியாகவே உள்ளது. என்றாலும் ஆர்.நடராஜ் இன்று பெண்களை மதிக்கத் தொடங்கியது, அவரது நிறுவனத்துக்கு பெருமை சேர்த்தது. ஆர்.நடராஜ்ஜனின் மாற்றம் படிப்படியாக ஆனால் ஆழமானதாக இருந்தது. அவர் தனது பெண் சகாக்களின் கருத்துக்களை தீவிரமாகத் மதிக்கத் தொடங்கினார், அது மட்டும் அல்ல, அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து மதிப்பிடத் தொடங்கினார். பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் கொள்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தினார். நிறுவனத்திற்குள் பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் வழிகாட்டல் திட்டங்கள் நிறுவப்பட்டன. இந்த மாற்றத்தின் அடிப்படையில் வாகைச்செல்வி தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தார். அவள் ஒரு மூத்த பங்குதாரர் ஆனார், அவளது பயணம் பலருக்கு உத்வேகமாக இருந்தது. ஆர்.நடராஜ்ஜுடனான அவளது உறவு, அவளது பங்கு ஒரு வழிகாட்டியாக மற்ற பெண் ஊழியர்களுக்கும் இருந்து, பரஸ்பர மரியாதை மற்றும் போற்றுதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமமானவர்களின் உறவாக அது உருவானது. "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" நிறுவனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் திருகோணமலையில் மட்டும் அல்ல, இலங்கை முழுவதும் உள்ள சட்ட சமூகங்களில் ஒரு அலை போல் அங்கும் தாக்கி மாற்றங்களை ஏற்படுத் தூண்டியது. இதனால் மெதுவாக, பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு பரந்த இயக்கம் வடிவம் பெறத் தொடங்கியது. வாகைச்செல்வியின் கதை பரவலாக எல்லா சமூக தளங்களிலும் பகிரப்பட்டது, இது விடாமுயற்சியின் சக்தி மற்றும் சமூக விதிமுறைகளை சவால் செய்வதன் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாக மாறியது. ஆர்.நடராஜ்ஜனின் இந்த மாற்றம் ஒரு வெற்றிகரமான பாலின சமத்துவத்திற்கான பயணமாக அமைந்தது. பணியிடத்தில் மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்து மதிப்பதன் தாக்கத்தை இது எடுத்துக்காட்டியது எல்லா ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, "ஆர்.நடராஜ் & அசோசியேட்ஸ்" அதன் சட்ட வல்லமைக்காக மட்டுமல்ல, பன்முகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காகவும் அரசால் கௌரவிக்கப்பட்டது . பெண்களுக்கு உண்மையான மரியாதை என்பது வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்கள் மற்றும் அணுகுமுறைகள் பற்றியது என்பதை தொடர்ந்து அது நினைவூட்டியது. வாகைச்செல்வியின் உருவப்படம் நிறுவனத்தின் புகழ் மண்டபத்தில் தொங்கியது, திறமை அங்கீகரிக்கப்பட்டு பாரபட்சமின்றி வளர்க்கப்பட்டால் என்ன என்ன சாதிக்க முடியும் என்பதன் அடையாளமாக அது எல்லோருக்கும் நினைவூட்டியது . மகாவம்ச காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இந்த தொகுப்பு "பவுத்தர்களது [பவுத்த பக்தர்களது] மனக் கிளர்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆக தொகுக்கப்பட்டது" [“serene joy of the pious”], என்ற அறைகூவலை திருப்ப திருப்ப பதித்து எழுதப்பட்டது போல, தங்களது ஒவ்வொரு சந்திப்பிலும், அதன் முடிவில் , "பெண்ணை மதிக்கவும்" என்ற நெறிமுறை அங்கு எதிரொலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. முதியோருடன் ஒரு அலசல்: "நினைவாற்றல் இழப்பு [memory loss]" / பகுதி 01 நினைவாற்றல் என்றால் என்ன என்பது பற்றி அறிய முன்பு, முதலாவதாக, எமது பண்டைய மூதாதையர்கள், இன்று உங்கள் தகவலுக்கு அல்லது செய்திகளுக்கு தமது எண்ணங்களை, பதிவுகளை எப்படி கைவிட்டு சென்றார்கள் அல்லது எப்படி அதை தமது நாகரிக வளர்ச்சியுடன் அல்லது பரிணமித்தலுடன் முன்னேற்றினார்கள் என்பது முக்கியமாகிறது. உதாரணமாக, முதலாவதாக மனிதன் குகைகளிலும் பாறைகளிலும் தனது எண்ணங்களை, செய்திகளை, செயல்பாடுகளை தனது மகிழ்வு அல்லது பொழுது போக்கிற்காகவும் மற்றும் மற்றவர்களுக்கு தனது கருத்து அல்லது செய்திகளை சொல்லுவதற்காகவும் வரைந்தான், ஆனால் அவன் வேட்டையாடும் உணவு சேர்க்கும் சமூகமாக அன்று இருந்ததால், கட்டாயம் சூழ்நிலைகள், வசதிகளுக்கு ஏற்ப அசைய வேண்டிய கட்டாயமும் இருந்ததால், அந்த வரைதல்களை அவன் போகும் இடங்களுக்கு எடுத்து செல்ல முடியாது என்பதை உணர்ந்த அவன், அதன் பின், இலைகளிலும் [உதாரணம் ஓலை] மற்றும் கற்பலகைகளிலும் [உதாரணம் சுமேரிய கற்பலகைகள்], அதை தொடர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் காகிதத்திலும், மீண்டும் பல நூறு ஆண்டுகளுக்கு பின் அவற்றை மைக்ரோசிப்பிலும் [நுண் சில்லு] ... இப்படி அவன் இன்றைய நாகரிகத்துக்கு வளர்ச்சி அடைந்தான். இந்த நுண் சில்லுகளில் இருந்து / நுண் சில்லுகளுக்கு அனுப்ப அல்லது மீட்டெடுக்க / அறிவுறுத்த நாம் மின்சாரம், ஒளி ... போன்றவற்றை இன்று பாவிக்கிறோம். கிட்டதட்ட இவ்வாறுதான், நாம் தகவல்களைக் கற்றுக்கொண்டும் சேமிக்கவும் எம் உடலின் ஒரு பகுதியாக உள்ள மூளையை பிரத்தியேகமாக பாவிக்கிறோம். இனி நாம் கொஞ்சம் விரிவாக நினைவாற்றல் என்றால் என்ன என்று பார்ப்போமாயின், எமது ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் எல்லாம் பொதுவாக சில குறிப்பிட்ட வழிகளில் எமது மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை எமக்கு நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும். நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் [மின்னேற்றம்] தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார். நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கின்றன? சொல்லுங்கள் பார்ப்பம்? பொதுவாக எமது மூளை அன்றாடம் ஆயிரக்கணக்கான தகவல்களைப் பெறுகிறது. இவ்வாற்றில் சில குறுகிய கால நினைவாற்றல் எனப்படும். உதாரணமாக, இதன் தேவையை பொருட்டு, அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி அல்லது தேவை முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதனால் தான் இதை குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது. அது போலவே மற்றது நீண்டகால நினைவாற்றல் ஆகும். உதாரணமாக நாம் செய்யும் தொழிலுக்குத் தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறது” என்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இனி நாம், மனிதர்கள் வயது போக அல்லது நோய்வாய்ப்பட , எம் நினைவாற்றலுக்கு என்ன நடக்கிறது என பார்ப்போம். சில பல காரணங்களால், எமது நினைவுகளை சேமிக்கும் அல்லது சேமித்த நினைவுகளை மீட்டெடுக்கும் பொறிமுறைகள் தம் ஆற்றலை இழக்கின்றன அல்லது அவை நாம் எதிர்பார்த்த அளவு திறன் அற்று போகிறது. அப்படி என்றால் இதில் இருந்து நாம் விடுபட அல்லது அவை வராமல் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும் ? அதற்கு முதல், பலர் மனதில் எழும் கேள்வி நினைவாற்றல் அல்லது நினைவாற்றல் இழப்பு ['மறதிநோய்'] ஒரு வரமா ? அல்லது சாபமா ? சர் சார்லசு குன் காவோ (Sir Charles Kuen Kao] ஒரு மின் பொறியாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் தொலைத்தொடர்புகளில் ஒளியிழைகளை உருவாக்கியதிலும், பயன்படுத்துவதிலும் முன்னோடி ஆவார். குன் காவோ அகண்ட அலைவரிசையின் தந்தை என்றும் அறியப்படுகிறார். குன் கோவிற்கு 2009 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அவரது கண்ணாடி இழை தகவல் பரிமாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக, மற்றும் இருவருடன் சேர்ந்து வழங்கப்பட்டது. ஹொங்கொங் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அக்டோபர் 2009 இல் இவரை பேட்டி காணச் சென்றபோது, அவர் தன்னை மறந்தவராக, நினைவாற்றல் இழந்து இருந்தார். அவருக்கு அவரின் கண்டுபிடிப்பு பற்றியோ அல்லது தான் நிகழ்த்திய சாதனை பற்றியோ எந்த நினைவுகளும் அவரிடம் காணப்படவில்லை! அவரை இந்த உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த அந்த வரமான நினைவாற்றல், இப்ப சாபமாக , நினைவாற்றல் இழப்பில் முடித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. "இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன் நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று" என்பது ஒரு சுவையான திரைப்பட பாடல். ஆனால் உண்மையில் எமக்கு இருப்பது ஒரே ஒரு மனம். அது காலப்போக்கில் தன் நினைவாற்றலை இழக்கிறது என்பதே உண்மையாகும். இனி நினைவாற்றலை கூர்மைப்படுத்த அல்லது அதன் இழப்பை தடுக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாக பகுதி 02 இல் பார்ப்போம் [மூலம்: ஆங்கிலத்தில், கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்
  8. "அலைபாயும் மனது நான் அல்ல" / கவிதை - 02 "அலைபாயும் மனது நான் அல்ல அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்! அன்பாய் இவள் இடம் கேட்க அதிகாரம் அற்று அணைத்தவன் நான்!" "ஆழ்ந்த அறிவு பார்த்து இவளை ஆசிரியர் ஆகவும் கொண்டவன் நான்! ஆறுதல் தேடி அடைக்கலம் புகுந்தவளை ஆரவாரம் போடாமல் சேர்த்தவன் நான்!" "அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என அன்றும் இன்றும் உணர்பவன் நான்! அனாதையாய் நிற்கிறேன் என்று வந்தவளை அடக்கமாய் நட்பாய் இணைத்தவன் நான்!" "ஆடைகளை கழட்டுவது போடுவது போல் ஆசைக்கு பெண்களை சேர்ப்பவனல்ல நான்! ஆதிக்கமின்றி பண்பாய் பாசமாய் வந்தவளை ஆனந்தமாய் பற்றுடன் ஏற்றவன் நான்!" "அனைவருக்கும் மேல் இவளை உயிராய் அக்கறையுடன் என்றும் நேசிப்பவன் நான்! அனுபவம் அழகு நிறைந்த அவளை அச்சம் இன்றி கைபிடித்தவன் நான்!" "ஆட்டமாய் ஆடினாலும் கூட்டத்தை சேர்த்தாலும் ஆன்லைன்கடந்த அன்பில் மூழ்பவன் நான்! ஆத்திரம் கொண்டாலும் ஆற அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பவன் நான்!" "அடுத் தடுத்து துன்பங்கள் வந்தாலும் அறவையிலும் வந்தவளை வாழவைப்பவன் நான்! அந்தரங்கம் மதித்து விட்டுக் கொடுப்புகளுடன் அயிர்ப்புஇன்றி அவளை ஏற்பவன் நான்!" "ஆனந்த வாழ்வின் அர்த்தம் புரிந்து ஆறறிவுகொண்டு அவளை நோக்குபவன் நான்! ஆண்டு பலமாறி கோலம் பலமாறினாலும் ஆதரவு அன்பு குறைக்காதவன் நான்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பி கு : அறவை --- உதவியற்ற நிலை [Helplessness] அயிர்ப்பு --- சந்தேகம் [Doubt]
  9. "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 27 மரணம் ஒவ்வொரு ஆணினதும் பெண்ணினதும் வாழ்வை தொட்டு, முழு மானிட சாதியையும் "தவிர்க்கமுடியாத மாள்வு" என்ற ஒன்றின் கீழ் இணைக்கும் ஒரு இயற்கை நியதி ஆகும். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுள் காலம் 30,000 நாளாகும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 40,000 நாள் வாழமுடியும். எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இது சுமார் 7000 நாட்களே. அதாவது 20 வருடங்களிலும் குறைவே என்பது குறிப்பிடத் தக்கது. மரணத்தில் இருந்து எவருமே தப்பமுடியாது என்பதை எல்லா சமயங்களும் ஏற்று கொண்டதுடன் அதற்கு பதிலாக நல்ல மாற்று வழியாக மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை / afterlife) நம்பிக்கையை கொடுத்துள்ளது. இது, இந்த எண்ணம், தமது அன்புக்கு உரியவர்களை இழந்த பலருக்கும், மரணத்தை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் ஒரு ஆறுதல் கொடுக்கிறது. திருமூலர் தமது திருமந்திரத்தில், மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து அவனைப்பற்றிய நினைவை ஒழித்து விடுகிறார்களாம் என்று தமிழரின் மரபை அன்று கூறுகிறார். இன்றும் கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை. "ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!" [திருமந்திரம்] பண்டைய தமிழக தமிழர்கள், இறந்தவர்களை கையாளும் மரபு ஒரு கவர்ச்சிகரமாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் வயது முதிர்ந்து, அசைவதை நிறுத்தி, கண் பார்வை, காது கேட்டல் போன்றவற்றை இழக்கும் போது, இவர்களை கிராமத்திற்கு வெளிய ஒரு ஒதுக்கு புறத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே மதமதக்கத் தாழி [முதுமக்கட்டாழி] என அழைக்கப்படும் ஒரு சின்ன கல் வீட்டில் அவர்களை விட்டு, அவர்களின் குடுபத்தில் இருந்து ஒரு பெண் தினம் அங்கு சென்று அவருக்கு சாப்பாடு கொடுத்து கவனிக்கிறார். இப்படி அவர் சாகும் மட்டும் தொடர்கிறது. அவர் இறுதியாக சாவை தழுவும் போது, அவரின் குடும்பம் முதுமக்கள் தாழி என்ற பெரிய மட்பாண்டம் ஒன்றில் அவரை உட்கார்ந்து இருக்கும் நிலையில் அவரின் முக்கிய உடமைகளையும் சேர்த்து உள் வைத்து அடக்கம் செய்கிறார்கள். இந்த தாழி [urn/pot] பிரத்தியேகமாக தோண்டிய குழியில் புதைக்கப்பட்டது. பெரிய கற்பலகை [பாறை] அதன் மேல் மூடி வைத்து, மண்ணால் மூடப்பட்டது. இது குப்பை கிளரும் விலங்குகள் அந்த இறந்த மனிதனின் உடலை வெளியே எடுப்பதை தடுப்பதற்கு ஆகும். அத்துடன் ஒரு சின்ன நடுகல் அங்கு நாட்டுகிறார்கள். இது அந்த அடக்கம் செய்யப்பட்ட இடைத்தை அடையாளம் காணவும், வருடாந்த நினைவு சடங்குகளை அங்கு நிறைவேற்றுவதற்கும் ஆகும். மற்றொரு முறையில் அந்த தனிப்பட்ட நபர் இறந்த பின்பு சடலத்தை எரியூட்டி எஞ்சிய சாம்பலை மட்டும் சிறிய கலயத்தில் [குடத்தில்] இட்டுப் புதைத்துள்ளார்கள். அத்துடன் சிலவேளை தனிப்பட்ட நபர் இறந்த பின்னர் உடலை வெட்ட வெளியில் கிடத்தி சில நாள்கள் ஆன பிறகு விலங்குகள், பறவைகள் உண்டது போக எஞ்சிய எலும்புத்துண்டுகளை மட்டும் பொறுக்கி எடுத்து சிறிய அளவிலான மட்பாண்டத்தில் இட்டுப் புதைத்தும் உள்ளனர். பீமண்டபள்ளி கிராமத்தில் 8 அடி நீள ஈமப்பேழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்றைய சவப்பெட்டியை நினைவூட்டுகிறது. இங்கு எலும்புக்கூடு காணப்பட்டது. அந்த இறந்த மனிதர் மல்லார்ந்த படுக்கை நிலையில் உள்ளார். இன்றைய அவசர காலத்தில், கணவன் மனைவி இருவரும் வேலை, பிள்ளைகள் பாடசாலை, பல்கலைக் கழகம், இடையில் கொண்டாட்டங்கள், விடுமுறைகள் ... கூட்டுக்குடும்பம் என்றால் வயதானவர்களை கவனிக்க குடும்பத்தில் யாராவது ஒருவர் இருப்பர். ஆனால் இன்றோ பலர் தனிக்குடும்ப முறை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் இப்படி நேரம் இன்றி அலையும் உலகில், தாய் தந்தையரை அல்லது தமது குடும்பத்தில் வாழும் முதியோரை, எப்படி அன்று சின்ன கல் வீட்டில் விடார்களோ, அப்படியே இன்றும் முதியோர் இல்லத்தில் விடுவதை காண்கிறோம். இதில் பெரும் தவறு இருப்பதாக நான் கருத வில்லை. ஆனால், அதோடு நின்று விடுகிறார்கள். முற்றுப் புள்ளி வைத்து விடுகிறார்கள். அங்கு தான் தவறு ஏற்படுகிறது? அன்று அவர் குடும்பத்தின் ஒரு பெண், தினம் அங்கு சென்று அவரை கவனித்தார். எனவே தனிமை அவரை வாட்டி இருக்காது. ஆனால் அங்கு ஒரு உயிர் ஏங்குகிறது என்பதை இன்று அதிகமாக மறந்து விடுகிறார்கள். "கருவறையில் இடம் தந்தேன்..! உன் வீட்டில் நான் வசிக்க.. இல்லையா சிறு அறை.. உள்ளத்தில் ஒரு மூலையில்... ஒருக்கா எம்மை நினைக்க... ஒருக்கா எம்மை பார்க்க .. ஒருக்கா எம்முடன் கதைக்க... " இப்படி அந்த ஜீவன் தவிக்கிறது, ஏங்குகிறது இன்று !. மேலும் பண்டைய தமிழகத்தில் எப்படி இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பதை விரிவாக தெளிவாக ஒரு வரிசை கிரமத்தில் மணிமேகலையும் (6-11-66-69) சொல்கிறது "சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்" பிணங்களைச் சுடுவோரும் [cremators] வாளா இட்டுப்போவோரும் [leave dead body to decay] தோண்டப்பட்ட குழியி லிடுவோரும் [placed into a hole dug specifically for the burial], தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் [entomb the dead body in small low lying chambers] தாழியினாலே கவிப்போருமாய்ப் [embalm the dead body in burial urn and cover mouth] பல்வேறு வகையாக இறுதிக் கடன்கள் செய்ய, இரவும் பகலுமாகிய இருபொழுதும் வருவோரும் செல்வோரும் செய்யும் ஆரவாரமும் என்று ஐந்துவகையில் இறந்த உடல் அடக்கம் செய்வதை இந்த பாடல் எடுத்து கூறுகிறது. மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கும் சடங்குகள் அவன் இறந்த பின்பும் இங்கு தொடர்வதை காண்கிறோம். இறந்தோருக்காகச் செய்யப்படும் சடங்குகளே இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என வழங்கப்படுகின்றன. நாட்டுப் புறங்களில் ஒருவர் இறந்தவுடன் நிறை மரக்காலில் நெல்லை நிரப்பி அதன்மேல் விளக்கேற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. இறந்தவரின் உயிர் ஒளியாக - சோதியாக மாறியுள்ளது என்பதைக் குறியீடாய் இச்செயல் உணர்த்துகிறது. இறப்புச் சடங்கில் கொள்ளி வைத்தல் என்பது மிக முக்கியமான சடங்காகும். சுடுகாட்டில் உடலுக்கு எரியூட்டும் முன் இறந்தவரின் மகன் நீர் நிறைந்த கலயத்தைத் தோளில் வைத்து மூன்று முறை உடலை வலம் வந்து குடம் உடைத்துக் கொள்ளி (தீ) வைக்கும் நிகழ்வே கொள்ளி வைத்தல் என்பதாகும். தாய் இறந்தால் தலைமகனும் தந்தை இறந்தால் இளைய மகனும் கொள்ளி வைக்க வேண்டும் என்ற வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. ஆதி மனிதர்களிடம் முதன்முதலில் தோன்றிய சடங்குகள் ஈமச் சடங்குகளே என்று கூறுவதுண்டு. இறந்தோரைப் புனிதப் படுத்துவதற்காகவும் இறந்தோரால் எவருக்கும் எத்தகைய தீங்கும் விளையக் கூடாது என்பதற்காகவும் இறப்புச் சடங்குகள் பொதுவாக கடைப்பிடிக்கப் படுகின்றன எனலாம். ஆசாரங்கள், சடங்குகள் போன்றவை பெரும்பாலும் தொன்மையான பழங்குடிவாழ்க்கையிலிருந்து எழுந்தவை. சில நடைமுறை வசதிக்காக உருவாக்கப்பட்டவை, சில குறியீட்டு ரீதியானவை. அவை நம்மை நம்முடைய தொன்மையான இறந்த காலத்துடன் இணைக்கின்றன. இந்த வகையில் நீத்தார் சடங்குகள் ஒரு குறியீட்டு நிகழ்வுகளாகும். அவற்றின் குறியீட்டுச் செயல்பாடுகளை உணர்ந்து செய்வது நம் உள்ளத்தை மலரச்செய்கிறது. வாழ்க்கைக்குப் பொருள் அளிக்கின்றது. அவை இல்லையேல் வாழ்க்கை வெறும் அன்றாட நிகழ்வுகளால் ஆனதாக மட்டும் எஞ்சிவிடும். எனவே சடங்குகளின் தேவையை அவை அளிக்கும் பயன்களைக் கொண்டு மட்டும் மதிப்பிட்டால் போதும். ஆனால் சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றில் ஒரு கவனம் தேவை. பல ஆசாரங்களும் சடங்குகளும் சென்ற நிலப்பிரபுத்துவ காலகட்டம் சார்ந்தவை. ஆகவே அவற்றில் இன்று மானுட சமத்துவம் மனித உரிமை போன்றவற்றுக்குச் எதிரான பல இருக்கலாம். அத்தகையவற்றை முழுமையாக நிராகரிப்பது அவசியம். என்றாலும் நடைமுறைச் சடங்குகளும் மங்கலச் சடங்குகளும் அழகியல் சடங்குகளும் குறியீட்டுச் சடங்குகளும் இல்லாமல் இன்று மனிதன் வாழ்வது கடினம். நாம் பழைய சடங்குகளை தவிர்த்தாலும் கூட புதியவை வந்து சேருகின்றன. உதாரணமாக, மலர்ச்செண்டுகளை அளிப்பது, நாடா வெட்டி திறந்துவைப்பது, படத்திறப்பு செய்வது போன்ற எத்தனை நவீனச் சடங்குகளை நாம் இன்று செய்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை ஆகும். நான் "என் இறுதி சடங்கில்" என்ன நடக்கலாம் , நடக்கும் என்று ஒரு கனவு கண்டேன் இந்த கட்டுரை எழுதும் பொழுது . அதை கீழே தருகிறேன்! "என் இறுதி சடங்கில் என்னை எரிவனம் எடுத்து சென்று எரிக்க என் நேரடி தொடர்பை அறுக்க எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது" "ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து ஒளி தீபங்கள் சுற்றி வைத்து ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது" "சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து சிறப்பான அலங்கார பாடை தருவித்து சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்" "நரம்பு நாடி தளர்ந்து போகையில் நம்மைநாடி நோய் வந்து சேர்கையில் நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில் நல்வரமாய் தான் இறப்பு இருக்குது" "மன்னனாய் பிறந்தாயென்று கர்வம் கொள்ளாதே மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே மதுபோதையில் தவழ்ந்து முட்டாளாய் வாழாதே மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே" "நான் தீயில் சங்கமிக்கும் பொழுது நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது நான் என்னை சற்று பார்த்தேன் நாமம் அற்ற சடலமாகக் கண்டேன்" "உறவினர் நண்பர்கள் முகங்களைப் பார்த்தேன் உவகை இழந்த சிலரைக் கண்டேன் உறக்கம் துறந்த பிள்ளைகளைக் கண்டேன் உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்" "உடம்பு கெட்டால் உயிருக்கு மரியாதையில்லை உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில் உண்மையை நான் இன்று அறிகிறேன்" "காமம் தெளித்த உடலும் படுத்திட்டு காதல் தந்த மனதும் உறங்கிற்று காதற்ற ஊசியும் வர மறுக்குது காலனின் வருகையால் எல்லாம் தொலைந்திட்டு" "என் பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன் என் பெயரை மறக்க வேண்டாம் என் பெயர் எம் அடையாளம் எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 28 தொடரும்
  10. இது பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு பிரம்மச்சாரியாக வேலை செய்யும் பொழுது, ஆனால் இன்று எல்லாம் கனவே !!
  11. எல்லோருக்கும் நன்றிகள்
  12. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 25 9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture] நாம் வாழும் சமுதாயம் ஒழுக்கமானதாக இல்லாத போது, நாம் மட்டும் ஏன் ஒரு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி ஒருவரிடம் எழும் பொழுது, அவர் ஒன்றிலும் கவலை இல்லாதவராக, "நான் எதையும் பற்றி கவலைப்படப் போவதில்லை, எனக்கு, என் வாழ்க்கையின் மீது, கட்டுப்பாடு இல்லை " என்று அவர் எந்த வெட்க உணர்வும் இன்றி அல்லது அதை இழந்து விட்டவராக சொல்லுவதைக் கேட்க்கிறோம். இது தான் எந்த மதிப்புகளையும் மற்றும் தரங்களையும் கொண்டிராத அழியும் ஒரு சமுதாயத்தில் பொதுவாக காண்கிறோம். இவர்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதை மறுத்தலைக் காண்கிறோம். இப்படியான நிலையை 'இல்லாமை தத்துவம்' அல்லது 'நீலிசம்' என்று அழைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். Nihilism [நிஹிலிசம் அல்லது நீலிசம்], என்பது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil இருந்து பிறந்த ஒரு சொல்லாகும். உன் வாழ் நாளில், நீ செய்த முயற்சிகளின் பின்னாலோ அல்லது நீ அனுபவித்த துன்பங்களின் பயனாலோ, 'வாழ்க்கை அர்த்தம் அற்றது' என்று சலிப்பு கொண்டு, 'நாம் ஏன் ஏதாவது செய்யவேண்டும், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' என உன் மனம், கட்டாயம் ஒரு கணம் கேட்டிருக்கும். எனவே நாம் அனைவரும் நீலிசம் [நிஹிலிசம்] என்ற தத்துவத்தின் தாக்கத்தை, அது என்ன வென்று தெரியாமலே, உணர்ந்து இருப்போம். அனுபவித்திருப்போம். ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னேற்றம் அல்லது முயற்சி வீணாகும் பொழுது, "என்ன பிரயோசனம்" [“what’s the point?”] என்று உங்களையே நீங்கள் கேட்டிருக்கலாம். ஏன் என்றால் நாம் ஒரு நாள் கட்டாயம் சாகத்தான் போகிறோம், எனவே அது எதுவும் எமக்குத் தேவையில்லை [none of it will matter] என, உங்கள் வாழ்வில் ஏற்பட்ட, தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள், துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவையால், நீலிசத்துடன் [நிஹிலிசம்] தெரிந்தும் தெரியாமலும் நீங்கள் மோதியிருப்பீர்கள். உதாரணமாக இந்த கட்டுரையை உங்களுக்கு நான் எழுதும் பொழுது, சில வேளையில், சில சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரையை எழுதுவதால் என்ன பிரயோசனம் என்று நான் என்னை கேள்வி கேட்டிருப்பேன். நீலிசத்திற்கு ஊடாக போய், அதன் மறு பக்கத்தினூடாக வெளியே வந்து, என்னை இன்று நான் இப்ப இருக்கும் ஒரு நபராக வடிவமைத்துள்ளேன். அது மட்டும் அல்ல, நீலிசத்துடனான என் அனுபவம், என்னை முன்னையதிலும் பார்க்க மிகச் சிறந்த நபராக மாற்றியுள்ளது என்பதும் உண்மையே. பொதுவாக உலகளாவிய இணைய தளத்தில், மற்றும் செய்திகளில், நீலிசம் [நிஹிலிசம்] பற்றிய கருத்துக்கள் பிழையாக அல்லது மோசமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். இன்று நாம் வாழும் வாழ்க்கை ஒரு ஒரு மோசமான நிலைமையாக காணப்படுகிறது. ஏன் என்றால், மதம் மற்றும் பாரம்பரியம் [religion and tradition] எம் மனதை ஆணையிடுகிறது, அங்கு, 'தானே சிந்திக்கும்' ஒரு சுதந்திர மனிதனை காண முடியவில்லை. ஏனென்றால் எம் சமுதாயம் “மதிப்புகள்”, “ஒழுக்கம்”, “நல்லொழுக்கம்” மற்றும் “நன்மை” [“values”, “morals”, “virtue” and lastly “goodness”] என்ற போர்வைக்குள் எம்மை மூடி, அதற்க்கு கீழ்ப்படி என எமக்கு கோரிக்கை விடுகிறது. இதனால் எம்மில் பலர் கண்மூடித்தனமாக, எந்தவித விளக்கமும் இன்றி, சமுதாயம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் காட்டிய அந்த வழியை பின்பற்று கிறார்கள். அது மட்டும் அல்ல, உணர்வுபூர்வமாக அது ஏன் என்று தெரியாமல் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கிறார்கள். இந்த சங்கிலியை உடைத்து எறியும் முயற்சியையே நீலிசம் தருகிறது எனலாம். இந்த நீலிசம் என்ற தத்துவம், ரஷ்ய இலக்கியத்தின் நாயகரான 'இவான் துர்கனேவ்' [Ivan Turgenev] என்ற எழுத்தாளரால் தன் 'தந்தையரும் தனயரும்' [Fathers and Sons] என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானது எனலாம். அந்த நாவலில் முக்கிய பாத்திரமான, பஸாரவ் [Bazarov] ஒரு நீலிசவாதியாகும், இவர் அந்த நாவலில் வரும் தந்தையின் மகனான அர்க்காதியின் நண்பராவார். ஒரு கட்டத்தில், ஒரு போட்டியில், அர்க்காதியின் பெரியப்பாவை சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான். இன்னும் ஒரு கட்டத்தில், நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸாரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான். அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான். நாங்கள் இன்று அதிகமாக அப்படியான ஒரு நீலிச காலத்தில் வாழ்கிறோம். இங்கு பலரிடம் வாழ்க்கை எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல்லாமல் இருப்பதை காண்கிறோம். உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் உண்மையில் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று கருதும் காலமாக மாறுகிறது. உண்மையில் நீலிசம் அல்லது நிஹிலிசம் ஒரு கலாச்சார நிலை, அல்லது உளவியல் நிலை [cultural condition or the psychological state] ஆகும். அங்கே, ஏதேனும் உள்ளார்ந்த அல்லது தனித்துவமான மதிப்பு அல்லது பெறுமானம் கொண்டிருப்பதாக அவர்கள் உணரவில்லை. சிலவற்றிற்கு எந்தவொரு பண மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதுடன் இதற்கு சம்பந்தம் இல்லை. ஒரு தோட்டம், ஒரு அன்பான செல்ல பிராணி, ஒரு அழகான கழுத்தணி, ஒரு ஆழமான நாவல் அல்லது படம், அல்லது ஒரு நபர், இவைகள் தனக்கு என ஒரு மதிப்பு கொண்டிருப்பதாக கருதவில்லை, அந்த மதிப்புகள் அல்லது பெறுமானம், அந்த மதிப்பை கொடுத்தவர்களுடன் தொடர்புடையது என்றாகிறது என்கிறார்கள். இதன் தீவிர போக்கை தீவிரவாத நீலிசம் [“radical nihilism”] என்று அழைக்கிறார்கள். உதாரணமாக ஒருவர் மதிப்பிற்குரியதாக கருதப் படுபவை எல்லாம், உண்மையில் ஒரு வழக்காறு அல்லது மரபு, அதை விட அதில் வேறு ஒன்றும் இல்லை என்கிறார்கள். ஒரு மௌனமான அல்லது மறைமுகமான, பரீட்சிக்கப்படாத சில அனுமானங்கள் மூலம் ஒருவரின் செயலையும் அவரின் சமூக நடத்தையையும் வழிநடத்தும் ஒரு மறைமுகமான கட்டளை [a tacit, unexamined set of assumptions that directs one’s actions and social behaviour] இது ஆகும் என்கிறார்கள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 26 தொடரும்
  13. "வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், துப்பரவாக்கள், குழந்தை பராமரிப்பில் ஓரளவு அனுபவமும் திறமையும் உண்டு. கைவசம் இப்ப வீட்டில் இருக்கும் கொஞ்ச காசும் உணவு பொருட்களும் ஒரு கிழமைக்கு தாக்குப்பிடிக்கும், அதற்குள் எப்படியும், படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஒரு வேலைக்கு போகவேண்டும். அப்ப தான் தன் இரு தம்பிகளும் இரு தங்கைகளும் படிப்பை தொடரமுடியும், சாப்பிடமுடியும் என்று அவளுக்குத் தோன்றியது. அதனால், தன் அம்மா அப்பா கூலிவேலை செய்த ஒரு சில இடங்களில், ஏதாவது வீட்டு வேலைகள் கிடைக்குமா என்று விசாரித்து பார்த்தாள். ஆனால் ஒருவரும் அவளை வேலைக்கு சம்மதிக்கவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்னும் மூன்று நான்கு நாட்கள்தான் ஒருவாறு சாப்பாட்டுக்கு சமாளிக்கலாம். அப்ப தான், அவள் தன் குடிசைக்கு திரும்பும் பொழுது, இளம் தம்பதியர், தம் இரு சிறு குழந்தைகளுடன் காரில் இருந்து இறங்கி, வீட்டுக்குள் போவதைக் கண்டாள். அவர்களின் மூத்த மகள் ஒரு நாலுவயது இருக்கும், சடுதியாக முன் படலை மூடமுன்பு வீதிக்கு ஓடிவிட்டார். நல்ல காலம், மலர் இதைக் கவனித்துக்கொண்டு இருந்ததால், ஓடிப்போய் தூக்கிவிட்டார், இல்லாவிட்டால், வேகமாக வந்த பாரவூர்தியில் நசிங்கிப்போய் இருப்பார். பாரவூர்தியின் சடுதியான நிறுத்தமும், குழந்தையின் அழுகுரலும் பெரும் அதிர்ச்சியை பெற்றோருக்கு கொடுத்தது, என்றாலும் குழந்தை பாதுகாப்பாக மலரின் கையில் இருப்பதைக் கண்டு, அவளுக்கு நன்றி கூறியதுடன், அவளின் உடையையும், முகத்தில் தவழும் சோகத்தையும் பார்த்த அவர்கள், அவளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தனர். அப்பொழுதுதான் மலரின் அப்பா, அம்மா இருவரும் சிலவேளை இவர்களின் வீட்டிலும் தொட்டாட்டு வேலை செய்தது தெரியவந்தது. அவர்களும் இவளின் இந்த திறமையை நேராக கண்டதாலும், அவளின் அப்பா அம்மாவின் அறிமுகம் முன்பே இருந்தலாலும், தமக்கு ஒரு வீட்டு உதவியாளராக, வேலைக்காரியாக, காலை பொழுதுக்கு சம்மதித்தனர். எது என்னவென்றாலும், அவளின் வேலையை, நடத்தையை பொறுத்தே நிரந்தரமாக்குவோம் என்று உறுதியும் கொடுத்தனர். அவளுக்கு நல்ல சந்தோசம், வீடு திரும்பியதும் அந்த செய்தியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்துகொண்டாள். அடுத்தநாள் காலை அவள் கண்விழித்து எழுந்தபோது, அவள் நேற்று வைத்த அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கும் நீ அலர வேண்டாம்..’ என்பதுபோல், கடிகாரத்தின் தலையில் தட்டி அடக்கி வைத்தாள். அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்ததுபோல் நாலு மணிக்கே எழும்பி விட்டாள். வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக்கொள்ளும் சுகத்தைக் கோரின. எனினும் தான் இன்றில் இருந்து வேலைக்காரி என்ற நினைவு அதை மறுத்தது. அவசரம் அவசரமாக சாப்பாடு தயாரித்துவிட்டு, சகோதரர்களை சாப்பிட்டு விட்டு கவனமாக பாடசாலை போய் வரும்படி கூறி விட்டு, ஆறுமணிக்கு முதலே வேலைக்காரியாக, தன் முதல் நாள் வேலையை தொடங்கினாள். இங்கு சமையல் பெரிதாக இல்லாவிட்டாலும் குழந்தை பராமரிப்பும் வீடு, வளவு துப்பரவாளாலுமே முக்கியமாக இருந்தது. அவளுக்கு அவை ஏற்கனவே பழக்கமாக இருந்ததால், அது அவளுக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. மேலே இருந்த அறை ஒன்றில், வீட்டுக்கார அம்மா தன் மகளை பாலர் பள்ளிக்கு தயார் படுத்திக்கொண்டு அவளும் தன்னை ஆயத்தமாகிக் கொண்டிருந்த அரவம் கேட்டது. மலர் கொஞ்சம் மேலே எட்டிப் பார்த்தாள். அந்த நாலு வயது பிள்ளை அடம் பிடித்துக்கொண்டு இருந்தது. அவள் நித்திரையில் வரைந்த ஓவியத்தைப் போல் அலங்கோலமாய் இன்னும் வெளிக்கிடாமல் இருந்தாள். தன் நாலு தம்பி தங்கையுடன் பழகிய அனுபவம் நெஞ்சில் வர, 'அம்மா நான் உதவி செய்யவா?' என்று கேட்டவாரே மேலே ஓடிப்போய், அந்த குழந்தையின் கன்னத்தில் தடவிக் கொடுத்துக் கொண்டு, குளியல் அறைக்கு கூட்டிக்கொண்டு போய், பல் துலக்கி வாய் கொப்பளித்து, முகம் கழுவி பின் சாப்பாடு தீத்த தொடங்கினாள். அந்த குழந்தையும் அவளுடன் மகிழ்வாக சேர்ந்து கொண்டது. வீட்டுக்கார அம்மா, அப்படியே திகைத்து இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘ நாலு வயசுதான் ஆவுது, அதுக்குள்ளியும் இன்னா பேச்சு!..’ , மலர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அதன் பின் முதலில், சமையல் அறை போய் அங்கு சுத்தம் செய்தாள். பிறகு சட்டிப் பானைகள், சாப்பட்டு பாத்திரங்களை கழுவி வைத்தாள். மீந்தச் சாப்பாட்டை முதலில் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு பின்னர் உணவு தட்டுகளை பேசினில் [basin] போடாமல், அப்படியே வீட்டுக்காரர்கள் போட்டதால் கவலைகள் நிறைந்துக் கிடந்த அவளின் மனசைப்போல், பேசின் அடைத்துக் கொண்டது. எண்ணைய் மிதக்கும் தண்ணீரைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. அடைத்துக் கிடந்த சோற்றை அகற்றிவிட்டு பேசினைச் சுத்தம் செய்து முடித்தாள். ' என்ன மலர் இன்னும் குசினியிலேயா?' வீட்டுகார அம்மாவின் சத்தம் கேட்டு திரும்பினாள். 'இனி காணும் கொஞ்ச நேரம் தம்பியுடன் விளையாடு , நான் சமைக்கப் போகிறேன்' என வீட்டுக்கார அம்மா மலருக்கு ஓய்வு கொடுத்தாள். அப்படியே துப்பரவாக்களும் குழந்தைகளுடன் விளையாட்டுமாக அன்றைய பொழுது மலருக்கு போய்விட்டது. என்றாலும் முதல் நாள் வேலை முடிந்து வீடு திரும்ப இரவு ஏழு மணி கடந்துவிட்டது. என்றாலும் அவர்கள் மிஞ்சிய சாப்பாடுகளை அவளுக்கு வீட்டுக்கு எடுத்துப்போக கொடுத்துவிட்டனர். அவள் அங்கு மூன்று நேரமும் சாப்பிட்டதால், அதை சகோதரர்களுக்கு கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் அனுபவம் பெற, கெதியாக அதேநேரம் நேர்த்தியாக துப்பரவாக்கள் செய்ய தொடங்கினாள். இதனால், அவர்களின் மூத்த மகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கணக்கும் தமிழும் மிஞ்சிய நேரத்தில் படிப்பிக்கவும் தொடங்கினாள். அது அவர்களை மிகவும் கவர்ந்தது. மலர் பாடசாலையில் படிக்கும் காலத்தில், ஒரு திறமையான மாணவியாக இருந்தது இதற்கு அவளுக்கு உதவியது. அவளை இப்ப அவர்கள் தங்களின் ஒரு குடும்ப உறுப்பினராக கருத தொடங்கியதுடன், அவளை சாதாரண வகுப்பு பரீட்சைக்கு தனியார் பரீட்சையாளராக தோற்றுவதற்கான உதவிகளையும் வழங்கி, அவளுக்கு தாமே ஓய்வுநேரத்தில் படிப்பித்தனர். இருவரும் பட்டதாரிகள் என்பதால், படிப்பித்தல் அவர்களுக்கு இலகுவாகவும் இருந்தது. மலரின் நேர்மையான திறமை அவளை மீண்டும் படிப்பை தனியார் மாணவியாக தொடர் வைத்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 02 உங்கள் கண்கள் உலகின் ஜன்னல்கள். கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது உங்களுக்கும் மற்றும் உங்கள் உடலுக்கும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். நீங்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வை பெரும் பங்காற்றுகிறது. பார்வைக் குறைபாடுகள் (Visual impairment) தொடங்கும் பொழுது நீங்கள் கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அதிலும் நீரிழிவு நோய் [diabetes] இருப்பவர்கள் கட்டாயம் ஒரு ஒழுங்காக மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். பார்வைக் குறைபாடுகளில் (Visual impairment) பொதுவானதும் மற்றும் வயது தொடர்பான கண் பிரச்சினைகளை பற்றி இனி ஆராய உள்ளோம். அவைகளில் முதன்மையானவை 1] வெள்ளெழுத்து அல்லது கிட்ட பார்வைக் குறைவு [Presbyopia], 2] கண் அழுத்த நோய் (Glaucoma), 3] வறண்ட கண்கள் [dry eyes], 4] வயதுசார் விழித்திரை தேய்மானம் அல்லது சிதைவு [age related macular degeneration], 5] கண்புரை [cataract], & 6] தற்காலிக தமனி அழற்சி [ஜெயண்ட் செல் ஆர்க்டிடிஸ் / temporal arteritis or Giant cell arteritis] ஆகும். முதியோர்களின் கண் பார்வையை பாதிக்கும் இவைகளின் தாக்கங்களை சுருக்கமாக பார்ப்போம் 1] வயதுசார் விழித்திரை தேய்மானம் [age related macular degeneration] -- மங்கலான பார்வை, விம்பத்திரிவு [image distortion], விழித்திரையின் நடுவிலுள்ள குருட்டுத்தன்மை [central scotoma]. 2] கண் அழுத்த நோய் [Glaucoma] -- பார்வை நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு நிலைக்கு விரைந்து முன்னேறுவதும், பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு செல்ல முடியாததுமான ஒரு கண் நோய் ஆகும். இதனால், சிறிது சிறிதாக கண்பார்வை குறைவு ஏற்படுகிறது 3] கண்புரை [cataract] -- நீரிழிவு நோய் போன்றவற்றின் விளைவாகவும், கண்களில் ஏற்பட்ட காயங்களின் விளைவாகவும் கண்புரை ஏற்படலாம். மங்கலான பார்வை, கண் பிரதிபலிப்பு அல்லது கூசுதல் [glare], ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை அல்லது இரட்டை நோக்கு குறைபாடு [monocular diplopia] ஆகும் [டிப்ளோபியா [diplopia] நோயாளி என்பது, அவர் அருகில் உள்ள பொருள் இரண்டு உருவங்களாக தோன்றும் ஒரு காட்சி குறைபாடு ஆகும். இது இரண்டு வகையாகும். அதில் ஒன்றுதான் ஒரு கண்ணில் மட்டும் ஏற்படும் இரட்டை பார்வை குறைபாடு ஆகும்] 4] நீரிழிவுசார் விழித்திரைக் கோளாறு [diabetic retinopathy] -- மங்கலான பார்வை, வீரியமான ஒளிபுகாநிலைகள் [கண் மிதவைகள் / floaters], காட்சி புலம் இழப்பு அல்லது குறைபாடு [உங்கள் காட்சி புலத்தில், ஒரு பகுதியை இழத்தல், உதாரணமாக பக்கப்பார்வையிழப்பு / Visual field loss is when you have lost an area of vision in your visual field], மோசமான இரவு பார்வை. [உங்கள் கண்களில் மிகவும் சிறிய புள்ளி போன்ற மிதவைகள் (Floaters), கண்களுக்குள் உள்ள பகுதிகளில் மிதந்து கொண்டிருக்கும். சில மிதவைகள் உங்கள் பார்வையில் நிழல்களாகத் தோன்றலாம். இவை உங்கள் கண்களில் உள்ள திரவத்தில் இருப்பதால் நீங்கள் நகரும் போது இவையும் நகரும். இதனால் உங்கள் பார்வை பாதிக்கப்படும். இவை வயது தொடர்பான மாற்றங்களால் ஏற்படலாம். கண்களில் சேரும் தூசிகள், மற்றும் கண்ணில் உள்ள திரவங்களும் இதற்கு காரணம். இவை கண்களில் காயம் மற்றும் கண் கட்டிகள் ஏற்படும் போதும் உண்டாகலாம்] கண் தனக்கு வேண்டிய பிராணவாயுவை [ஆக்ஸிஜன் / oxygen] கண்ணில் உள்ள நீர் கலந்த திரவத்தின் [aqueous] மூலம் பெறுகிறது. மேலும் கண்ணின் கருவிழிக்கும், வில்லைக்கும் மற்றும் விழித்திரைப்படலத்துக்கும் [கதிராளி; கருவிழித்திரை] உணவூட்டுதல், [கார்னியா, லென்ஸ் மற்றும் ஐரிஸ்], வில்லையினால் வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்களை அகற்றுதல், உள்விழி அழுத்தத்தை [intraocular pressure] கட்டுப்படுத்துதல் அல்லது சீர்செயிதல், நோய் எதிர்ப்பாற்றல் வழங்குதல் மற்றும் கண்ணின் வடிவத்தை பராமரித்தல் போன்றவை இவைகளின் வேலைகளாகும். ஒரு ஆச்சிரியம் என்னவென்றால், மூளையில் இருக்கும் பகுதிகளில் கண் ஒன்றே, நேரடியாக பார்க்கக் கூடியது. உதாரணமாக, கண்களில் சொட்டு மருந்து ஊற்றி, 'டைலடேஷன்' [Dilatation] எனப்படும் விரிவாக்கம் செய்து, ஒரு கண்அகநோக்கி [ஆப்தல்மஸ்கோப் / ophthalmoscope] மூலம் நேரடியாக கண்களில் உள்ள நரம்புகளை முழுமையாக கண் மருத்துவரால் பார்க்க முடியும். கண்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை இப்படித்தான் கண் பரிசோதனை செய்து அறிகிறார்கள். நீங்கள் பூமியை எடுத்துக்கொண்டால், அது ஒவ்வொரு மைலுக்கும் எட்டு அங்குலம் வளைகிறது. எனவே உங்கள் கண், தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் இருக்கிறது என்று வைத்தால், நீங்கள் பார்க்க கூடிய ஆக்க கூடுதலான தொலைதூர பூமியின் விளிம்பு மூன்று மைலாகும். எமது கண்ணில் உள்ள வில்லை ஒரு குவி வில்லையாகும் [convex lens]. இது நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் இருக்கும். மனிதர்கள் பலதரப்பட்ட பொருட்களை, நிறங்களை பார்க்கும் இயல்பு உள்ளவர்கள். கட்புலனாகும் நிறமாலை [visible spectrum] என்பது, மின்காந்த நிறமாலையில் [electromagnetic spectrum] உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும். இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு [Electromagnetic radiation] "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" [visible light or simply light] எனப்படுகின்றது. பொதுவான மனிதக் கண், வளியில் 380 தொடக்கம் 780 நானோமீட்டர் [nanometres / 0.000000001 m] அலைநீளம் கொண்ட கதிர்வீச்சுக்களைப் பார்க்கக் கூடியது. ஆகவே ஒரு பொருளில் இருந்து இந்த அலை நீளத்தில் வெளியிடப்படும் ஒளி, எங்கள் கண்ணில் நுழைந்து, கண் வில்லையினூடாக கடந்து, எங்கள் கண்களுக்கு உள்ளே உள்ள விழித்திரையில் விழும் பொழுது, நாம் பொருட்களை காண்கிறோம் எனலாம். ஆகவே விழித்திரையில் பொருட்களின் விம்பம் முதலில் சரியாக விழவேண்டும். அப்ப தான் பொருட்கள் எமக்கு தெரியும். எனவே தான், கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பொதுவாக கண்ணாடி அணிகிறோம். உதாரணமாக, கிட்டப் பார்வை எனும் பார்வை குறைபாட்டில் அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால், தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாகத் தெரியும். இந்தக் குறைபாடு உள்ள கண்களில் ஒளியானது விழித்திரைக்கு முன்னதாகவே குவியும். நடுவில் மெல்லியதாகவும் ஓரங்களில் தடிமனாகவும் உள்ள குழி வில்லை (கான்கேவ் லென்ஸை / concave lens) இதற்கு பயன்படுத்தப் படுகிறது. அதே போல, தூரப் பார்வை எனும் குறைபாட்டில், விழித்திரையைத் தாண்டி அதன் பின்னால் குவியும். இதற்கு நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெல்லியதாகவும் உள்ள குவி வில்லை (கான்வெக்ஸ் லென்ஸ் / convex lens) அணிய வேண்டும். மனிதன் பெறத்தக்க அறிவுகளுள் ஒன்று கண்ணின் வழியாகப் பெறப்படும் பார்வைப் புலனாகும். இதை தொல்காப்பியர், தனது நூற்பாவில், “ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே இரண்டு அறிவதுவே அதனொடு நாவே மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே” என்று 'நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே' என குறிப்பிடுகின்றார். அதே போல, மனித அறிவோடு, கண் நெருங்கிய தொடர்புடையது என்பதை திருவள்ளுவர், கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்: கல்லாதார் முகத்தின்கண்ணே இரண்டு புண்ணுடைய ரென்று சொல்லப்படுவர் என “கண்ணுடையர் என்பர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” (திருக்குறள் – 393) என்று கூறியிருப்பதன் மூலம் நன்குணர முடிகிறது. உறுப்புகளில் முதலிடம் பெறுகின்ற கண்ணை, ஒருவர் தாம் மிக அதிகமாக நேசிக்கும் காதலருக்கும், அவர் வழியாக ஈன்றெடுக்கும் குழந்தைகட்கும் நிகராகக் கருதத் தொடங்கினர். எனவே தான் காதலரை அன்பொழுக அழைக்கின்ற போதும், குழந்தையை அன்போடு விளிக்கும் போதும், “கண்ணே” என்றழைக்கும் மரபு உண்டாயிற்று. உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் மாதவி, கோவலனை “கண்மணி அனையான்” எனக் குறிப்பிட்டிருப்பது கருதத்தக்கது. “வருந்துயர் நீக்கு எனமலர்க்கையின் எழுதி கண்மணி யனையாற்குக் காட்டுக என்றே மண்உடை முடங்கல் மாதவி யீந்ததும்” (சிலம்பு – புறஞ்சோர் இறுத்தகாதை 74-76) அதேபோல, தாலாட்டு பாடல் ஒன்று கண்ணான கண்ணே கண்ணுறங்கு – என் கானகத்து வண்டுறங்கு” என கூறுகிறது. இப்படி பெருமை பெற்ற கண்ணை, அறிவின் நுழைவாயில் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். ஆகவே, உடல் உறுப்புகளில், அறிவின் திறவுகோலாக விளங்குவது கண்கள் ஆகையால், அதை முழுமையாக அறிந்து பாது காப்பது மிக மிக அவசியம். [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "மதமென்னும் போதை!!" "மதமென்னும் போதை தலைக்கு ஏற மதிகெட்டு நிலை மாறிய போர்த்துக்கேயர் மக்களை கூட்டி பதவிகள் கொடுத்து மரணத்தை காட்டி ஆசைகள் சொல்லி மதம் மாற்றிய யாழ்ப்பாண வரலாறு மனிதா நான் உனக்கு சொல்லவா ?" "எம் மதமும் சம்மதம் என்றாய் எல்லா ஊரும் எம் ஊரென்றாய் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எம் பண்பாட்டை ஏன்தான் விற்றாய் எருமைமாடாய் குளிர்காய சோம்பேறி பிடித்ததோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. அக்பரில் தானே சாப்பிட்டு இருப்பீர்கள் ,,,, ஆமாம் இறுதி ஆண்டு அங்குதான். அந்தநேரம் என் உடம்பை பார்த்தால் தெரியும். அப்பொழுது எடுத்த ஓர் சில படங்கள் கீழே [checked shirt நான்] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம், முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும் இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்"
  17. "பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]" "திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று திரு விழாவா பெரு விழாவாவென திகைத்து இவன் வியந்து பார்க்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தில்லைக் கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற குழந்தை இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கள் மறைந்து ஞாயிறு மலர திலகம் இட்டு மங்கையர் வாழ்த்த திருநாள் இது இவனின் பொன்நாள் திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "தின் பண்டம் வந்தோரை மகிழ்விக்க திறமையான அலங்காரம் காற்றில் ஆட திருப்தி கொண்டு இவனும் மகிழ திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒலிக்க திரேனின் [Dhiren] பிறந்த நாள் இன்று !" "அச்சம் தவிர்த்து துணிந்து நின்று அழகு வார்த்தைகள் நாவில் தவழ அன்பு ஒன்றால் உலகை ஆள அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!" "ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி ஆக்கமான செயலில் ஈடு பட்டு ஆலமரம் போல் நிழல் கொடுத்து ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!" "ஆகாயத்தில் அம்மம்மாவின் வாழ்த்து கேட்குது ஆகாரம் பலபல சுவையில் இருக்குது ஆசி பெற்று அறிஞனாய் வளர்ந்து ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும்! "இளமை கல்வி மனதில் நிற்கும் இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து இதயம் சேர வாழ வேண்டும்!" "ஈன்ற பெற்றோரை நன்கு மதித்து ஈரக் கண்ணீர் சிந்த விடாதே ஈவு இரக்கம் காட்ட வேண்டும் ஈனப் புத்தி என்றும் வேண்டாம்!" "உலகம் போற்றும் வாழ்வு எட்ட உள்ளம் வைத்து ஆற்ற வேண்டும் உரிமை உள்ள ஒரு மனிதனாக உயர்ந்து நின்று வாழ வேண்டும்!" "ஊக்கம் வேண்டும் பற்று வேண்டும் ஊரார் எண்ணம் அறிய வேண்டும் ஊமையாய் என்றும் காலத்தை கழிக்காமல் ஊன்றுகோலாய் அறிவைப் பயன்படுத்த வேண்டும் !" "ஒன்பதுஆண்டு மகிழ்ச்சியின் மகுடம் இன்று ஆச்சரியமானவரே பாலகனே கனவுகள் சிறகடிக்கட்டும்! உயர்ந்து வாழ்வதைப்பார்க்க அம்மம்மா இல்லையென்றாலும் அவளுடையகருணை உனக்கு என்றும் பாதுகாப்புகவசமே!" "காற்றின் கிசுகிசுக்களில் அம்மம்மாவின் குரல் உன்னை வழிநடத்தும் கலங்கரை விளக்கமே! விண்மீன்கள் சிமிட்டும் அம்மம்மாவின் ஆசீர்வாதம் இரவும் பகலும் உன்னை அடையுமே!" "பொன்னான இந்நாளில் வானிலிருந்து ஒருவாழ்த்து அன்பான அம்மம்மாவின் கருணை மழையே! பட்டாம்பூச்சி பறப்பதைப்போன்ற இலகுவான இதயமே காலைக்கதிரவனாய் உந்தன் நாள் பிரகாசிக்கட்டுமே!" "குட்ட குட்ட குனியக் கூடாது குடை பிடித்து வாழக் கூடாது குறை இல்லாத வாழ்வு இல்லை குரோதம் வேண்டாம் அமைதி ஓங்கட்டும்!" "பதினெட்டு ஏழில் பிறந்த அழகனே பகலோன் போல உலகில் பிரகாசித்து பகைவர்கள் அற்று கவலைகள் அற்று பல்லாண்டு நீ வாழ வாழ்த்துகிறேன்!" "ஒழுக்கம் கொண்ட அழகுப் பேரனே ஒன்பது அகவை இன்று உனக்கு ஒல்லாரையும் மதித்து நடக்கும் பேரனே ஒற்றுமை கொண்ட பண்பாடு மலரட்டும்!" தாத்தா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப்படும், இரண்டாவது யேல் சமையல் பலகையில் [YBC 8958], ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு பற்றி பதிவிட்டுள்ளது "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை, பின் இரைப் பையை பிரித்து துப்பரவு செய்,அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" இப்படி போகிறது. அதன் பின், "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அல்லது நறுக்கிய லீக்ஸ், மற்றும் உள்ளி, சமிடு [ரவை?], போதுமான வெங்காயம் சேர்த்து கொள்," என்று சமையயலை முடிகிறது. அப்படி என்றால், இப்ப 4000, ஆண்டுகளுக்கு பின்பும் எதற்கு குழப்பம் ? "கோழிக் குழம்பு தான் என்று கரண்டியை விட்டு விட்டு எடுத்தனர். எதுவுமே கரண்டியில் வரவில்லை. சில இலைகள் மட்டுமே கரண்டியில் வந்து கொண்டிருந்தது. .... ???" ஒருவேளை "பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் .... " அப்படி என்றால் கோழியின் [பறவையின்] சாப்பிட முடியாத பகுதி போக , ஒன்றும் மிஞ்சவில்லை போலும் ?? பாவம் "மாறி சுமேரியன் சமையல் பலகையை பார்த்துவிட்டார் போலும்" "என்ன குழம்பு என்று கேட்டனர். கோவாக் குழம்பு என்று பதில் வந்தது. ... " ஆமாம் வேறு என்ன பதில் சொல்ல முடியும் ?? மன்னித்து விடுங்கள் !!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.