Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 25 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்த, பழைமை வாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன் படுத்தியுள்ளனர் என்ற தொழில் நுட்பத்திறனும் கூட புலனாகின்றன. நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால், அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் ஓசை கேட்கும். அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள். ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப் சாறு பருகலாம் என்று அறிவுறுத்துகிறார்.[எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், 260-262] மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரினைக் கொண்டு கட்டி, அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வாழும் நெய்தல் நில மீனவர், தாமே குற்றாத அரிசியில், பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தயாரித்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக படைப்பர், நீயதை உண்ணலாம் என்று கூறுகிறார். அது மட்டும் அல்ல, அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக்கருவிகள் எப்போதும் கிடக்குமாம் என்று அடையாளமும் காட்டுகிறார். [வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர், 279-281]. தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது, நறிய நெற்றியினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார். [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறு குவிர், 304-310]. பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற் கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது, குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார். [குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர், 344-345]. கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை, இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு [Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது. [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும், 355-360]. இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது, அரசன் தொண்டைமான் இளந்திரையன், உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கி விட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான். மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார். [நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை நீக்கி, ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழு ங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும், 468-475]. 500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், மதுவின் செய் முறை விளக்கப் பட்டு இருப்பதுடன் [275-281], பட்டிணப்பாலையில் [106 -110], கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம். "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குறும்பி ஏய்க்கும் பூம்புற நல்அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெம்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" பெரும்பாணாற்றுப்படை (275-281) அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும் படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப் பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது. "துணைப் புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகில் உடுத்து, மட்டு நீக்கி மது மகிழ்ந்து, மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், மகளிர் கோதை மைந்தர் மலையவும்" பட்டிணப்பாலை [106-110] அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 26 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 25 "Food Habits of Ancient Sangam Tamils continuing" Though the people of New Guinea were probably the first to domesticate sugarcane, sometime around 8,000 BC. the extraction and purifying technology techniques were developed by Indians. Originally, people chewed sugarcane raw to extract its sweetness, but later they discovered how to crystallize sugar, probably carried out through the simple process of crushing cut-pieces of cane by a heavy weight and boiling the juice extracted and stirring until solids formed. These solids being of uneven shapes and sizes were called jaggery [Sarkara / chakkarai]. Even Perumpanattuppadai describes one of such sugar cane mills found during the Sangam period in Tamil Nadu, in lines 260-262, as "they will also get sugarcane juice, as much as they desire from the noisy sugar cane mills where cane juice was boiled to make jaggery" [எந்திரம் சிலை க்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்]. In the neithal region where fishermen live, they will see short roofed huts covered with thatched tarpai grass. Fish baskets lie in front of the huts and when the bards stay there, fisherwomen will serve them a drink made from a mash of un-pounded boiled rice mixed with fine powdered sprouts of rice, cooled in large wide mouthed pots for two days to sweeten it along with fried fish [வல்வாய்ச் சாடியின் வழை ச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்]. When they get to the Brahmin settlements at sunset they will get well cooked rice that bears the name of a bird along with fresh pomegranate cooked with butter made from the milk of a red skinned cows, and fresh curry leaves and black pepper. They will also give fragrant pickles made with tender green mangoes [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்]. At the seashore town there are many storied mansions where there is abundant food. They will get abundant toddy with fatty meat of the boar with short legs [குறுந்தாள் ஏற்றைக், கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்]. When they leave these behind and go to the groves where farmers live in huts with roofs made of thatched coconut palm leaves, they will get big jackfruits that grow in clusters and sweet water from young coconuts and alluring plantain fruits. They will also receive young pulpy fruit of the palmyra palms and other dainty sweets to eat [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரு ம்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் ]. And finally when the bards reach the palace of the patron, he will ask them to remove your old clothing and give fine clothing with bright threads and then serve them meat dishes cooked by a talented cook with strong hands. He will also serve large fine red rice and special sweet dishes that are spread in silver bowls [நின் அரைப், பாசி அன்ன சிதர்வை நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்]. Also we found from Perumpanatruppadai [275-81], a recipe for brewing & from Pattinappaalai [106 -110], how young women at nights, enjoy with their husbands at bed, while they drinking toddy. "when you are hungry, you will receive cool fish dishes and fine, fragrant liquor that is made by making a mash of unpounded, boiled rice spread on pots with wide mouths to cool, mixed with fine, tender leaves whose back sides look like the combs of termite mounds where snakes live, stirred twice morning and night with fingers in a jar with firm mouth, and aged and filtered with warm water" Perumpanatruppadai [275-281] "Delicate women who unite with their husbands wear cotton instead of silk and drink wine instead of toddy. Men wear women’s garlands and women wear men’s garlands" Pattinappaalai [106 -110] Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 26 WILL FOLLOW
  2. குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628" "குறள்: 413" "அறிவு பரந்து கிடக்கும் உலகில் அயராது அதைத் தேடி சுவைக்க அக்கம் பக்கம் யார் நின்றாலும் அச்சம் துறந்து கேள்வி கேட்டு அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!" "குறைந்த உணவை நிறைவாக அருந்தி குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட குறைகள் அற்ற ஆன்றோர் போல் குமிழி வாழ்வில் நிறைவு அடைய குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" "குறள்: 628" "இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் துன்பம் வருகினும் துவண்டு விடான்! வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!" "எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்குபவன் திண்ணம் கொண்ட கொள்கை உடையவன் மண்ணில் விழுந்தாலும் எழுந்து நிற்பானே! விண்ணை முட்டும் மகிழ்வு வருகினும் கண்ணைத் திறந்து உண்மை அலசுவானே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. எல்லோருக்கும் நன்றிகள்
  4. "உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம் என்னும் சபரிமலை பக்தர்களுக்கு... " எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையை யும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் ஆனால் மனித ர்கள் தான் தங்களுக்குள் சாதி, வர்க்க, பாலின பிரிவுகளை ஏற்படுத்திக் கொள்வதாகவும் கூசாமல் பொய் சொல்லும் மதவாதிகளை, நீதியின் தீர்ப்பின் பின்பும், சபரிமலை ஐயப்பன் கோவில் சுற்றாடலில், பெண்களை போகவிடாமல் தடுத்து நடைபெறும் அடாவடித்தனமும், அறிக்கைகளும், எச்சரிக்கைகளும், வன்முறைகளும் அம்பலப்படுத்தி இருக்கின்றது. இதற்கு திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கேரள அரசின் நடவடிக்கைகள் உடந்தையாகவும் உள்ளன. பத்து அகவைக்கும் ஐம்பது அகவைக்கும் இடைப் பட்ட காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மாத விடாய் வரும் காலம் என்றும், அதனால் அவர்கள் ஐயப்பனை நேரில் வந்து வழிபடுவதை விரும்பவில்லையாம் ? ஏனென்றால் அப்படி வழிபட வரும் பொழுது ஒருவேளை அவர்களுக்கு மாதவிடாய் வந்து விடுமோ என்ற பயமாம் ? யாருக்கு இந்த தீட்டும் அருவருப்பும் ? - ஐயப்பனுக்கா, நிர்வாகத்திற்க்கா அல்லது ஆண் பக்தர்களுக்கா ?? முதலில் ஐயப்பனை பார்ப்போம், அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அவரின் தங்கை மகிசீ என்பவர் அதற்கு காரணமான தேவர்களை பழிக்கு பழி வாங்க முடிவு செய்தாள். எனவே பிரம்மாவை நோக்கி கடுந் தவமியற்றி, அதனால் பிரம்மா மகிழந்து, சிவனுக்கும் திருமா லிற்கும் பிறக்கும் குழந்தையால் மட் டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு வரம் கொடுத்தாராம். அப்படி ஆண் ஓரினச் சேர்க்கை மூலம், அதாவது ஹோமோ செக்சில் பிறந்தவரே ஐயப்பன் ஆவார். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழி பாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்கு மிடை யில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையைத் தழுவியது, அதற்கு வழமை போல் பிராமணர்களின் ஒரு புராணக் கதையே உண்டு. ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ அல்லது ஒரு சிறு காவல் தெய்வ வழிபாடு ஆகும். ஆகவே இரண்டும் ஒன்றல்ல. மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை / தமிழர்களை வென்ற பின்பு, பண் டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது. பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற திராவிட பெயர்கள் வழங் கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)] . அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர்கடவு ளான “ஸ்கந்தா’வோடு ஒத்து காணப்படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவ ரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனு டன் சேர்த்துவிட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர், முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்!சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண் யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதி யின் மகனாக்கி விட்டார்கள். தமிழர்களின் சைவ மதம் வைதீக பிராமண மதத்துக்குள் உள் வாங்கப் பட்டது.. அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்ற வர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். தென்னிந்தியர்களின் நாட்டார் தெய்வங்களை எல்லாம், இந்து மதத்திற்குள் உள்வாங்கி னார்கள். அவற்றிற்கு, சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப் பட்டன. தமிழரின் நாட்டார் தெய்வமான முருகன், சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றி இந்து மதக் கடவுளர்களில் ஒருவரானார். அதனால் தான், தமிழரை விட அதிகமாக ஆரிய மயப் பட்ட, மலையாளிகளும், கன்னடர்களும், "சுப்பிரமணியக் கடவுள்" என்றே அழைக்கின்றனர். முருகனும், சுப்ரமணியனும் வேறு வேறு என்பதை, தமிழ் இந்துக்களும் [சைவர்களும்] உணர்வ தில்லை. எந்த சிவன் தன் உடலில் பாதியைத் தன் மனைவி க்கு கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என்று உலகத்திற்கே சொன்னதாக கூறப்பட்டதோ, அதே சிவன் தான் இவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படி என்றால் பெண் பங்கு தேவையில்லை என்று ஒரு நாடகம் ஆடி மறுத்தளிப்பு செய்வாரா ? கொஞ்சம் யோசியுங்கள் சபரிமலை பக்தர்களே ? மற்றது படைத்தல் தொழில் செய்யும் பிரமனுக்கு ஒரு உயிர் உற்பத்திக்கு ஆணும் பெண்ணும் அவ சியம் என்பது தெரியாமல் போய்விட்டதா ? அல்லது தன் தொழிலையே மறந்து போய் அல்லது சிவனையோ அல்லது திருமாலையோ பெண் என்று நினைத்தாரா ? எப்படி 'சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தை' என்று சொன்னார் ? யாராவது ஒரு பக்தராவது சிந்தித்தீர்களா ? இல்லை உங்களுக்காவது அறிவு, அனுபவம் இல்லையா ? ஆனால் பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக அன்றே கலகம் செய்தவர் தமிழ் தாய் தந்த திருமூலர் என்பது எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சபரிமலை பக்தர் களுக்கு தெரியும்? தாம் மலையாளி, தமிழ் தெரியாது என்று சொல்ல முடியாது? ஏனென்றால், திருமூலர் காலத்தில் , சங்க காலத்தில் ,ஏன் இந்த புராண ஐயப்பன் காலத்தில், நீங்கள் தமிழ் சேர நாட்டு மக்கள் என் பதும் தெரியாதா ? அவர் தனது ஒரு பாடலில் [2551], “பிறரைத் தீண்டுவது தமக்குத் தீட்டு! தீட்டு!” என்று கூறுபவர் சிறிதும் அறிவிலார். தீட்டு ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் அறிந்திலர். தீட்டு என்ன என் பதை மெய்யாக அறிந்து கொண்ட பின்பு, மனித உடலே உண்மையில் பெரிய தீட்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்கிறார். அதாவது பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்கிறார் திருமூலர் அன்றைய சேர நாட்டு ,ஆனால் இன்றைய ஐயப்பன் பக்தர்களை நோக்கி ? "ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே." இன்னும் ஒரு பாடலில்,[2552], தம்மை உள்ளபடி உண ர்ந்து கொண்ட தத்துவ ஞானிகளுக்கு ஆசூசம் என் னும் தூய்மையின்மை என்பது கிடையாது என அடித்து கூறுகிறார். "ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே." அதே போல, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839 நவம்பர் 22 - 1898 சூலை 5) கூட, திரு மூலர் வழியில் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார். அவர் காலத்திலும் பெண்கள் மாத விடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக் கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில், “வீங்கு புண் முலையாள் மாதவிடாயினள் ஒருத்தி வேட்கை தாங்குறாது இரங்கி அன்னோன் சரண் பணிந்து அதனைச் சொன்னாள் ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு ஈரம் இன்றே என்றானே!” அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார். அப்படி என்றால் எப்படி ஐயப்பனுக்கு தீட்டு வரும் ?, கொஞ்சம் யோசியுங்கள் தாம் ஐயப்பன் பக்தர் என்று கூறுபவர்கள் ?? மற்றது ஐயப்பனை 'மாளிகை புரத்தம்மா' என்ற அழகி மணம் செய்ய விரும்பிய பொழுதும் அதை உதறி தள்ளி, ஒரு பிரம்மச்சரியத்தை தொடர்ந்து கடைபிடித்தவராம். என்றாலும் எப்பொழுது முதல் தரம், வரும் பக்தர்கள் இல்லாது ஒழியுதோ (devotee visiting Sabarimala for first time) அன்று உன்னை மணப் பேன் என்று, அவளுக்கு உறுதி கொடுத்தார், அந்த காதல் தேவி அதை ஏற்று இன்னும் அந்த சபரிமலையிலேயே காத்திருக்கிறாளாம் என்று நம்புவதுடன், அவரின் சிலையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவளும் ஒரு மணப்பெண் என்பது குறிப் பிடத் தக்கது, இது இன்னும் இந்த பக்தர் களுக்கு தெரியாதா ? அவளை ஏன் இன்னும் சபரிமலையில் இருந்து துறத்தவில்லை ? அவளை எப்படி சபரி மலையில் வைத்து வழிபடமுடியும் ?, சிலர் பெண் கள் சபரிமலைக்கு போவது பிரம்மச்சரியத்தில் இருக்கும் ஐயப்பனுக்கு இடைஞ்சல் என்கிறார்கள் , அப்படி என்றால் அவர் அவ்வளவு மனக் கட்டுப்பாடு இல்லாதவரா ? அனுமானும் பிரம்மச்சரி தான், ஆனால் எந்த பெண்களும் போகலாம் வழிபடலாம் , அது எவ்வாறு அல்லது அனுமான் ஐயப்பனை மாதிரி இல்லாமல், உறுதியான மனக் கட்டுப்பாடு உள்ளவர் என்று ஐயப்பனை குறைத்து கூறுகிறீர்களா?? சிலர் பெண்களின் சுகாதார மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு மலை ஏறி வழிபடுவதை தடுத்து கட்டுப்பாடில் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள், இது இந்த நவீன வசதிகள் படைத்த இன்றைய உலகில் ஒரு முற்றிலும் பொருந்தா வாதமாகும்? ஒரு சமயம் என்பது நீதி, அன்பு, மானிடம், சம உரிமை என்பனவற்றினை முலமாக, அடிப்படை யாக கொண்டிருப்பதுடன் உயர் மனித நேயத்தை, இயல்பை திருப்தி படுத்தக் கூடியதாகவும், தனது படைப்பின் உயிர்களுக்கிடையில் வேறு பாட்டை காட்டாமல், அது கருப்போ வெள்ளையோ உயரமோ குட்டையோ பணக்காரனோ ஏழையோ எல்லோரிட மும் ஒரே தன்மை, நிலைபாட்டை உடையதாக இரு க்க வேண்டும் என்பதை தயவு செய்து உணருங்கள் . "எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "எங்கள் பள்ளிக்கூடம்" [இடைக்காடு மகாவித்தியாலயம்] இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய ஒரு யாழ்ப்பாணக் கிராமமான அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள இடைக்காட்டில் எங்கள் பள்ளிக்கூடம் முதலில் ஒரு திண்ணைப் பாடசாலையாக 1925 இல் முப்பது பிள்ளைகளுடன் பண்டிதர் திரு சுவாமிநாதர் இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு, தேற்றாவடி திரு சுப்பர் முருகுப்பிள்ளை ஆசிரியரின் இல்லத்தில் உருவானது. பின் ஓலைக்கொட்டிலில் அமரர் பண்டிதர் திரு க இராமசாமி அவர்களைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு இன்று எங்கள் பாடசாலை அமைந்து உள்ள இடத்தில் நூறு பிள்ளைகளுடன் இடைக்காடு புவனேஸ்வரி ஆரம்ப பாடசாலையாக உருவானது. அப்பொழுது அது ஓரளவு பின்தங்கிய நிலையில், ஆனால் அறிவின் கலங்கரை விளக்கமாக அதை மாற்றக்கூடிய ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள ஆசிரியர்களையும் முதல்வரையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. நான் அங்கு உயர்வகுப்பின் விஞ்ஞான பிரிவில் படிக்கும் மாணவன். என் பெயர் அறிஒளி. என் அப்பா நிலவுகளட்டியில் ஒரு தோட்டக்காரர். ஓரளவு வசதியான குடும்பம். பல தசாப்தங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட எங்கள் பள்ளி, எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், பின் அது இடைக்காடு மகாவித்தியாலயமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. என்னுடன்தான் முதல் முதல் விஞ்ஞான உயர் வகுப்பு அங்கு 1977 / 1978 இல் ஆரம்பித்து முழுமை அடைந்தது. இது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் யாழ் கல்வித்துறையின் ஒத்துழைப்பினாலும் சாத்தியமானது. என்றாலும் வரையறுக்கப்பட்ட வளங்களின் சவால்கள் மற்றும் அன்று வட பிராந்தியத்தை பாதித்த ஒரு கொந்தளிப்பான வரலாற்றின் நிழல் அல்லது பதட்டமான சூழல் இருந்தபோதிலும், எங்கள் பள்ளி கிராமத்தின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதில் உறுதியாக இன்றுவரை நற்பெயருடன் இயங்குகிறது. பல ஆண்டுகளாக, எங்கள் பள்ளி பல தடைகளை எதிர்கொண்டது. இப்பகுதி பின்னாட்களில் மோதல்களால் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் தவறாமல் கலந்துகொள்வதை கடினமாக்கியது, மேலும் உள்கட்டமைப்பை பராமரிப்பதில் தொடர்ந்து சவால்கள் இருந்தன. எவ்வாறாயினும், பள்ளி சமூகத்தின் மீள்தன்மை அசைக்க முடியாததாக இருந்தது. அதற்கான முக்கிய காரணம் அன்று நானும் உயர் வகுப்பில் கற்றுக் கொண்டு இருந்த சக மாணவர்கள் எல்லோரும், எங்கள் நிலைமையை புரிந்து, கட்டாயம் அகில இலங்கை ரீதியில் உயர்வகுப்பிலும் அதே போல சாதாரண வகுப்பிலும் சாதனைகளை புரியவேண்டும் என்பதில் ஒத்த கருத்தில் இருந்து, அதன்பொருட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் குழு ஒன்றை நாம் ஒன்றாக அமைத்தது ஆகும். அது ஒரு திருப்புமுனையாக மாறி, கிராமத்தை நல்ல நிலைக்கு மீட்டெடுக்கவும், குழந்தைகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்யவும் கல்வியே முக்கியம் என்பதை கிராமவாசிகளுக்கு உணர்த்தவும் ஒரு தளமாக இன்றுவரை அமைந்துள்ளது. இதனால், புதிய வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றைக் கட்டுவதற்கு உள்ளூர் வணிகங்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உதவி புரிந்தனர். இந்த சூழலில் தான், நான் என் சக மாணவர்களுடன் உதவி கேட்டு, எங்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவரின் அரச விடுதிக்கு சென்ற பொழுதுதான் நான் அவளை முதலில் சந்தித்தேன். அவள் அந்த மருத்துவரின் மகள். அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்து, இன்று தந்தையின் வேலை மாற்றத்துடன் எங்கள் பிரதேசத்துக்கு வந்துள்ளாள். என்றாலும் அவள் யாழ்ப்பாண வேம்படி மகளீர் கல்லூரியில் தான் தன் சாதாரண வகுப்பை தொடருகிறாள். பெயர் முழுமதி. அந்த முதல் சந்திப்பில் தான் என் நெஞ்சு முதல் முதல் அல்லாட தொடங்கியது. அதுவரை நான் காதல் என்ற ஒன்றை நினைக்கவேயில்லை. இத்தனைக்கும் எங்கள் பாடசாலை ஒரு கலவன் பாடசாலை. ஒருவேளை அவள் என் சக மாணவிகளில் இருந்து கொஞ்சம் வேறுபட்ட பாணியில், வித்தியாசமாக நகர்புறத்து நாகரிக அலங்காரத்தில், உடையில் இருந்தது, பேசியது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் அவளின் கோலம் ஒரு தமிழ் பெண்ணின் அடையாளமாகவே இருந்தது. 'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்' அவள் பின்புறம் இருண்டு தொங்கும் கூந்தலை கொண்டு இருந்ததுடன் பூ மொட்டு போல் இரண்டு மையுண்ட கண்களையும் உடையைவளாக இருந்தாள். என்றாலும் செய்யக் கருதிய எங்கள் பாடசாலையின் வளர்ச்சிக்கான மற்றும் ஒரு தகுதி அல்லது பெருமை பெரும் செயலை முற்றிலும் முடிக்காமல் இடையே அதற்கு ஊறு செய்தால் அதன் பயனை அடையாமையோடு இகழ்ச்சியையும் தரும் என்ற ஒரு அக உணர்வு பொங்க, காதல் அன்பிற்கும் கடமைக்கும் இடையேயான தவிப்பு நிலையாகி, உறுதி கொஞ்சம் தளர்ந்து என் அறிவு ஊசலாட தொடங்கியது. தந்தை மருத்துவர் வந்து எங்களை சந்திக்க எடுத்த ஒரு சில மணித்துளிகளில் அவள் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் ஆர்வமுள்ள மாணவி என்பதையும், கவர்ந்து இழுக்கும் ஒரு வசீகரம் கொண்ட அழகையும் அவளிடம் நான் கண்டேன். மருத்துவரிடம் நாம் கதைக்கும் பொழுது, வேம்படி மகளீர் கல்லூரி யாழ் கோட்டைக்கு அருகில் இருப்பதால், அவரின் இயல்பான பயத்தையும் அறிந்தேன். எனவே ஏன் அவளை தற்காலிகமாக எங்கள் பாடசாலையில் சேர்க்கக் கூடாது என்று ஒரு கேள்வி கேட்டு, நாம் விடை பெற்றோம். என்ன ஆச்சரியம், அடுத்த கிழமை அவள் எம் பாடசாலைக்கு சாதாரண வகுப்பில் சேர்ந்து அங்கு வந்தது மட்டும் அல்ல, என்னைத் தேடி வந்து என்னிடம் முதல்நாள் ஆசீர்வாதமும் பெற்றாள். ' உங்களால் தான் நான் இங்கு சேர்ந்தேன், இங்கு தனியார் வகுப்புகள் இல்லை, என் அப்பா ஓரே பிஸி, எனக்கு தெரியாததை நீங்க தான் சொல்லித்தரவேண்டும்' என்ற சிறு வேண்டுதலுடன் விடை பெற்று தன் வகுப்புக்கு போனாள். அந்த திரும்பி போகும் பொழுது அவள் பார்த்த பார்வை இன்னும் என்னால் மறக்க முடியாது. 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்று கூறிய புரட்சி கவிஞர் பாரதிதாசன் தான் எனக்கு ஞாபகம் வந்தது. கண்கள் இதயத்தின் நுழைவாயில். காதலின் தூதுவன். பழக்கம் வரக் காரணமாகி, ஒழுக்கம் பிறழவும் காரணமாயிருப்பது ஐம்புலன்கள்தானே? அதிலும் பெண்களின் கண்கள் போர் செய்யவல்ல அம்புகள். அது என் நெஞ்சில் துளைத்து என்னை துன்புறுதத் தொடங்கியது. 'முலையவர் கண்ணெனும் பூச லம்பு' என்று கம்பரின் மதிப்பீடு எனக்கு உண்மையானது! நாங்கள் இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக எமக்கிடையில் பகிரப்பட்ட அறிவுசார் நலன்களால் பிணைத்தோம், அவளுக்கு தெரியாத, விளங்காத பாடங்களை போதிக்கும் பொழுது, தெரிந்தும் தெரியாமலும் எங்கள் இதயங்களையும் அங்கு ஊற்றினோம். எண்ணற்ற மணிநேரங்களை செலவழித்ததால் எங்கள் தொடர்பு ஆழமடைந்தது. காலப்போக்கில், எங்கள் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. கல்வி மற்றும் வாழ்க்கையின் சிக்கல்களை ஒன்றாகக் கடந்து, ஒருவருக்கொருவர் முன்னிலையில் நாங்கள் ஆறுதல் கண்டோம். எங்கள் காதல் உணர்ச்சிகளின் சூறாவளி, பகிரப்பட்ட கனவுகள் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் கலவையாகும். ஆயினும்கூட, நான் மற்றொரு அன்பான - எங்கள் பள்ளிக்கூடத்தின் புனிதமான அரங்குகளுக்குள் அறிவைப் பின்தொடர்வதில், அதை 1979 இல் பெருமையாக்கி, முதல் முதல் அங்கிருந்து பொறியியல், மருத்துவ, விஞ்ஞான பீடங்களுக்கு நானும் சக மாணவர்களும், விஞ்ஞான பிரிவு ஆரம்பித்த முதல் ஆண்டிலேயே தெரிவாக வேண்டும் என்பதில் ஒரு நீடித்த பேரார்வம் மாற்றம் இன்றி இருந்தது. எனது ஆர்வத்தைத் தூண்டிய வழிகாட்டிகளையும், என்னை புதிய உயரத்திற்குத் தள்ளிய சகாக்களையும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் துடிப்பான கல்விச் சமூகத்தையும் நான் அங்கு கண்டேன். பள்ளியின் பெயர் கௌரவம் மற்றும் எதிர்கால நற்பெயர் வாய்ப்புக்கு அது அவசியமாக இருந்தது. மேலும் அந்த பெயரை பிரகாசமாக பிரகாசிக்க வைக்க நான் உறுதியாக இருந்தேன். முழுமதி மீதான என் காதல் ஆழமானதால், நான் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டேன். எனது காதல் தோழி மற்றும் எனது கல்வி ஆகிய இரண்டிலும் எனது பக்தியை, அன்பை சமநிலைப்படுத்துவது சவாலானது. இரவு நேர, என் கூடுதலான பாடம் மீட்டல் மற்றும் எங்கள் உறவின் உணர்ச்சிகரமான இணைப்பு சில சமயங்களில் மோதின. இந்த இரண்டு காதல்களுக்கிடையேயான மென்மையான சமநிலையை என்னால் பராமரிக்க முடியுமா என்று நான் கேள்வி எழுப்பிய தருணங்கள் பல இருந்தன. இறுதியில், கல்வியின் மீதான எனது காதல் எனது பள்ளியின் பெயரைப் பற்றியது மட்டுமல்ல, தனிப்பட்ட வளர்ச்சி, அறிவுசார் ஆய்வு மற்றும் அறிவைப் பின்தொடர்வதற்கான அர்ப்பணிப்பு என்பதை நான் உணர்ந்தேன். இந்த காதல் என் எதிர்காலத்தில் ஒரு நீண்ட கால முதலீடாக இருப்பதுடன், அதேசமயம் முழுமதி மீதான என் காதல், அழகாக இருந்தாலும், முதலில் வாழ்க்கைக்கான அத்திவாரம் தேவை என்பதை உணர்ந்தேன். இறுதியில், முழுமதியும் நானும் தற்காலிகமாக சுமுகமாகப் பிரிந்து செல்ல முடிவு செய்தோம், கற்றல் மீதான எம் இருவரின் ஆர்வமும் எங்கள் பள்ளி மீதான எமது அர்ப்பணிப்பும் அசைக்க முடியாததாகவே இருந்தது. ஆனால் நான் அவளுக்கு தனிப்பட்ட பாடப் பயிற்சி கொடுப்பது தொடர்ந்தது. நான் தேர்ந்தெடுத்த துறையில் மற்ற சக மாணவர்களுடன் 1979 இல் பொறியியல் துறைக்கு தேர்ந்து எடுக்கப் பட்டேன். என்னைத் தொடர்ந்து முழுமதியும் 1981 இல் மருத்துவ பீடத்துக்கு தெரிவானாள். அதுவும் நான் படிக்கும் பேராதனை பல்கலைக்கழகத்துக்கே! மீண்டும் எம் காதல் ரோலர்கோஸ்டர் [Roller Coasters] போல், பயங்கரமான வீழ்ச்சி ஒரு முறை இருந்தாலும், அவையைத் தாண்டி நாம் மகிழ்வாக பேராதனை வளாகத்தில் உச்சத்தில் இப்ப இருக்கிறோம். எங்கள் பள்ளிக்கூடம் கூட இப்ப உச்சத்தில்!! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  6. "நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே!" "பட்டி தொட்டி எங்கும் சொல்லி கட்டி தங்கம் வெட்டி எடுத்து செட்டி செய்த மோதிரம் மாற்றி மெட்டி காலில் கண் சிமிட்ட தட்டி கேட்கத் துணை சேர ஒட்டி உரசிப் போகலாம் பெண்ணே!" "மூட்டி அடுப்பில் சமைக்க வேண்டும் கூட்டி பெருக்கித் துடைக்க வேண்டும் ஊட்டி பிள்ளை வளர்க்க வேண்டும் லூட்டி அடித்து குழப்ப வேண்டும் போட்டி போட்டு கொஞ்ச வேண்டும் சீட்டி அடித்து சிரிக்கும் பெண்ணே!" "நாட்டி வளர்த்த காதல் எல்லாம் ஈட்டி ஆக உன்னைத் துளைக்க பாட்டி சொன்ன கதை எல்லாம் கூட்டி குழைத்து உனக்குத் தர ஆட்டி அலைய விடாதே பெண்ணே நொட்டி நொடிய விடாதே பெண்ணே?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 24 வரலாற்று ரீதியாக போதைப் பொருள் பாவனை பண்டைய காலத்தில் இருந்தே வந்துள்ளதை நாம், இலக்கியங்கள், இதிகாசங்கள் மூலம் அறிய முடிகிறது. உதாரணமாக, கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று "மது" பெண் தெய்வமான, வாய் நிரப்பும் பெண்மணி என போற்றப்படும் நின்காசியையும் [Ninkasi] பியர் மது பானம் [அல்லது பீர் / Beer] வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் பாராட்டுகிறது. உதாரணமாக, கடைசி இரண்டு வரியில்: "நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் -அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்" "நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியைத் தருகிறது - நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [ large collector vat] சரியாக வைக்கிறாய்" என்கிறது. மேலும் "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்வதையும் காண்கிறோம். அடுத்ததாக, ரிக் வேதம் [1500-1000 கி மு] சோம பானத்தைப் பற்றி பாடுகிறது. உதாரணமாக, ரிக்வேதத்தில் ”, சோம, நீ வரும் வழியில், இனிமையானதும் மகிழ்வுண்டாக்கும் வெள்ளம் தூய்மையாக பாய்கிறது, அதை இந்திரனின் பானத்திற்காக அமுக்கு " [ In sweetest and most gladdening stream flow pure, O Soma, on thy way, Pressed out for Indra, for his drink.] என புத்தகம் [Rig-Veda, Book 9] 9 இல் பாடல் [HYMN I. Soma Pavamana] 1.1 இல் பாடுகிறது. மேலும் மகாபாரதம் , ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் காண்கிறோம். உதாரணமாக, கம்பராமாயணம் / பால காண்டம் / உண்டாட்டுப் படலத்தில், கட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் அது கள்ளைப் போல் இனித்தது என கம்பர் "கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய்" என்கிறார். இன்னும் ஒரு இடத்தில், வாள் போன்று ஒளி பொருந்திய நெற்றியுடையாள் ஒருத்தி தன்னை போலே அழகின் பெருமையை ஒத்திருக்கும் தனது நிழலை பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள மதுவுண்ணும் கிண்ணத்தில் கண்டு தோழியே! என்னோடு சேர்ந்து நீயும் இம்மதுவை உண்ணுவாய்! என்று வேண்டினாள் என கம்பர் "வாள் நுதல் ஒருத்தி காணா தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி! என்றாள்" என்கிறார். “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று கூறுகிறார் வள்ளுவர். அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண் பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். கள் என்ற இந்த பானத்தை அதன் செய் முறையின் அடிப்படையில் பிழி, தேறல், அரியல், நறவு, மட்டு என்றும் அழைப்பர். மேலும் சங்க இலக்கியத்தில், ஆண் பெண் இரு பாலாரிடமும், மது பானம் ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" என கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிரையும் காணலாம். மேலும் சித்தர் இலக்கியத்தில் கஞ்சா, அபின் போன்ற இன்றைய போதைப் பொருள்களும் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம். "அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன் கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா ஆண்டிருந்தா லாகாதோ" [அழுகணிச் சித்தர் பாடல் 27] கஞ்சா வெறியனடி என்ற வரி மூலம் ஒரு குறிப்பிட்ட மக்களால் சர்வ சாதாரணமாக பாவிக்கப்பட்டு வந்ததை நாம் அறிகிறோம். சமுதாயத்தில் ஏற்படும் ஓர் சில குற்றங்களுக்கும் போதை பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இணைப்பு உள்ளதும் தெரியவருகிறது, உதாரணமாக, சிறைச்சாலை கம்பிகளுக்கு பின் அடிக்கடி இருப்பவர்கள், அதிகமாக குற்றங்களை செய்யும் போது போதையில் இருந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. மற்றும் சிலர் தங்கள் பழக்கங்களுக்கு, போதை பொருள் வாங்குவதற்க்காக, திருடுகிறார்கள் அல்லது வழி பறிப்பு செய்கிறார்கள். போதை பாவனையின் பக்க விளைவாக பெரும்பாலும் கடைகளில் தொடர்ந்து பணம் செலுத்தாமல் சாமான்களை தூக்கி செல்வது [shoplifting] காணப் படுகிறது. எனவே போதை பொருள் பாவனை, தன்னையும், தன் குடும்பத்தையும் மட்டும் இன்றி சமுதாயத்தையும் பாதிக்கிறது என நாம் கட்டாயம் கூறலாம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 25 தொடரும்
  8. காந்தர்வ வகைத் திருமணம் களவு மணம் அல்லது காந்தருவ மணம் இந்து சமய அற நூல்களில் கூறப்பட்டுள்ள எண் வகை மணங்களுள் ஒன்று. காந்தருவ மணம் என்பது கருத்தொருமித்த ஆடவனும் பெண்ணும் தம்முள் இயைந்து கூடும் கூட்டமாகும். இவ்வகை மணம் பெரும்பாலும் களவொழுக்கமாகவே இருக்கும். என்றாலும் அது நடந்தது, வள்ளி, பருவம் எட்டியதும் தினைப் பயிரை காவல் காக்கச் சென்றார். அங்கு முருகன் வேடுவன் [இதைக் கவனிக்க வேடுவன், மிருகங்களை வேட்டையாடும் பலசாலி] வேடமிட்டு வள்ளியுடன் காதல் புரிந்தார். இதனையறிந்த வள்ளியின் தந்தை நம்பிராஜன், படையெடுத்துவந்து முருகனுடன் போரிட்டு மடிந்தார் [இங்கு தன் வீரத்தை வள்ளிக்கு காட்டுகிறான்] . அல்லது தன் அண்ணன் விநாயகப்பெருமானின் உதவியுடன் தன்னுடைய திருவிளையாடலை நிகழ்த்தி அதாவது யானையை அடக்கி அதன் பின் தான் திருமணம் நடந்ததைக் கவனிக்க [Gandharva = காந்தர்வ = காதல் மணம்; பெற்றோருக்கு தெரியாமல் ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வது, என்றாலும் இங்கு முருகனின் திருமணம் ஒரு வீரத்தின் பின்னே நிகழ்கிறது இதற்கு முக்கிய காரணம் முருகன் வேறு ஸ்கந்தன் / சுப்பிரமணியன் வேறு? மத்திய ஆசியாவில் இருந்து நாடோடியாக வந்த ஆரியர்கள், திராவிடர்களை / தமிழர்களை வென்ற பின்பு, பண்டைய திராவிடர்களின் சமயத்திலும் மாற்றம் மெல்ல மெல்ல எற்பட்டது. பண்டைய கால தமிழர்கள் போர் மற்றும் காதலில் சிறந்து விளங்கிய, “இளமை’ கடவுளை வணங்கினர். அக் கடவுளுக்கு இளமை, இளைஞன் எனும் பொருள்பட முருகு அல்லது முருகன் என்ற தமிழ் பெயர் வழங்கப்பட்டன [முருகு விம்மிய மொய் குழலேழை (சீவ.)]. அக்கடவுள், வடஇந்தியர்கள் வணங்கிய போர் கடவுளான “ஸ்கந்தா’ வோடு ஒத்து காணப் படுகிறது. அது போலவே வேதங்களில் 'உருத்திரன்; என்று ஒருவரைப் பற்றிப் பேசப் படுகின்றது! இவரைச் சிவனுடன் சேர்த்து விட்டார்கள். உதாரணமாக, தமிழரின் சிறப்புக் கடவுள்கள், ஆரியக் கலப்புக்குப் பின்னர்: முருகன்→ ஸ்கந்தன் / சுப்பிரம ணியன் ஆனான்! திருமால்→ விஷ்ணு ஆனான்! சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி / துர்க்கை ஆனாள்! அதனால்த்தான் இங்கு திருமணம் ஒரு வீரத்தின் பின்னே நிகழ்வதாக கதை வடிவமைக்கப்பட்டுள்ளது கவனிக்க ] நன்றி சூரனை சங்காரம் செய்தவன் முருகனா ....? https://www.facebook.com/groups/978753388866632/permalink/1236689216406380/
  9. அந்தக் காலத்தில் ஏதாவது வீரத்தில் வெற்றியடைந்தால் - போரில், காளை அடக்குவதில், வில்லில் - அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. உதாரணமாக, முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு தெரியுமா? சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்சா கொடுக்க வேண்டும் என்று நினைத்தது, கொடுத்தது தான் தெய்வானை. இரண்டாம் மனைவியாக முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தாள். மறு பக்கம் வள்ளி அப்படியே இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தினால், மிதிலை மிதிலை ஏகல் லில், “அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் கேட்க, அங்கு “மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று பதில் வருகிறது. எடுத்த மலையே நினையின், "ஈசன், இகல் வில்லாய் வடித்த மலை, நீ இது, வலித்தி" என, வாரிப் பிடித்த மலை, நாண் இடை பிணித்து ஒருவன் மேல்நாள் ஒடித்த மலை, அண்ட முகடு உற்ற மலை அன்றோ? நீ எடுத்தது கயிலை மலை. ஆனால் இராமன் ஒடித்த வில் அதனினும் மேலான மேருமலை போன்றது. இதனால் வலிமையினை ஒப்பிட்டுப் பார்க்க என்கிறது அதன் பின் தான் "கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும். நிலைபெறாது உணர்வும் ஒன்றிட. அண்ணலும் நோக்கினான்: அவளும் நோன்கினாள்." என்கிறது இனி உங்கள் கேள்விக்கு வருவோம் "அல்லது இல்லாள் கொடுத்த பரிசில்(?) போகுமா.. " அன்று போக வாய்ப்பில்லை. காரணம் அவன் வீரன், பலசாலி இன்று ?? நீங்களே உங்களைப் பார்த்து சொல்லுங்கள் நன்றி
  10. எல்லோருக்கும் நன்றிகள்
  11. "இனப்படு கொலை" [இது எந்தவொரு அரசியலையோ அல்லது நிகழ்வையோ சார்ந்தவையல்ல. இது எனது பார்வையில் , எனக்கு தெரிந்த அளவில், ஒரு பொதுவான சுருக்கமான அலசல் மட்டுமே] இனப்படுகொலை பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் / குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட , முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் , படை , ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில், பொதுவாக நடை பெறுகிறது. ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது , அவைகளுடன் போர் குற்றங்கள் [War Crimes] ,' மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன. இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம். இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என கொன்று குவிப்பதோ, அழிப்பதோ மட்டும் அல்ல. அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி, பண்பாடு, பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை, வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே! இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவாக்கினார். ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும் அதாவது கிழே தரப்பட்டவைகளை, முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலைக் குறிக்கிறது . அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை *கொல்லுதல் *உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல் / விளைவித்தல். *வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல் *அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல். *அந்த குழுவின் சீரார்களை கடாயப்படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல் . ஆகியவை இனப்படு கொலையாகும்! இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்று நிகழவில்லை என்று பொருள் அல்ல. பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் இனப்படு கொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல். அவ்வளவுதான் ! உதாரணமாக கி.மு. 2000 ஆண்டுகளில் நாகரிகம் அடைந்து பின்னர் கி.பி. 300 ஆண்டுகளில் இருந்து, 700 ஆண்டுகள் வரை மிக செழிப்பாக வாழ்ந்த மாயன் நாகரிகத்தை படைத்த மாயன் மக்களை ஸ்பெயின் நாடு பீரங்கிகளை கொண்டு தாக்கி 'யுகடான்" (Yucatan) மாநிலத்தை கைப்பற்றயது. அத்துடன் நிறுத்தி விடவில்லை. 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' என்பார்கள். அது போல, 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'. வரலாற்றில் இது பல இடங்களில் நடைபெற்றிருக்கிறது. 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது! இப்படி ஒன்றையே மாயான்களுக்கு உதவி செய்ய, மீட்பவர் [இரட்சகர் ] போல வந்து சேர்ந்த ஸ்பானிய கிருஸ்தவ மதகுரு டியாகோ டி லாண்டாவும் (Diego de Landa) செய்தார். இனப்படு கொளையாளிகள் என்றதும் ஹிட்லர் மற்றும் முசோலினியின் உருவங்கள் உடனடியாக நம் நினைவுக்கு வருகிறது. ஏன் என்றால் லட்சக் கணக்கானவர்களின் மரணத்துக்கு அவர்கள் நேரடிக் காரணம் என்பதால். ஆனால், இவர்களைக் காட்டிலும் குரூரமான பலரை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி ஒருவரே ஸ்பானிய மதகுரு,டியாகோ டி லாண்டா ஆவார் . அமாம் வானியல், அறிவியல், கணிதவியல், விவசாயம் என மாயன் பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து- அனைத்தையும் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தனர் மாயான்கள். எழுதி வைத்திருந்த ஆயிரக்கணக்கான அந்த நூல்களை, ஸ்பானிய இராணுவத்தின் உதவியுடன் மொத்தமாகத் தீயில் போட்டுக் கொளுத்தினார் லாண்டா. இவரால் அழிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும், விலை மதிப்பற்ற, மீண்டும் பெறமுடியாத களஞ்சியமாகும். அவை எல்லாம் இன்று எமக்குக் கிடைத்திருக்கும் என்றால், உலகின் பல இரகசியங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் விடை கிடைத்திருக்கலாம் அல்லவா ?. இது போலவே இந்து சம வெளி மக்களையும் அவர்களது நாகரிகத்தையும் இந்தியாவிற்குள் 1700 கி மு வந்த ஆரிய இனம் அழித்து துரத்தியது.? சிந்து சம வெளி நாகரிகம் 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புற்று விளங்கியது. மேலும் அவர்களுக்கும் திராவிடருக்கும் நெருங்கிய தொடர்புண்டு என வரலாற்றாசிரியர் கூறுவர். ஏறத்தாழ கி மு 2000 ஆண்டு காலப் பகுதியில் அலை அலையாக அதிகமாக கைபர் கணவாய் (Khyber Pass) மூலம் மலைகளை கடந்து இந்தியாவிற்குள் வந்த நாடோடி மக்களான ஆரியரே சிந்துவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணமாயிருந்தனர் என்பது இப்பொழுது ஆராய்ச்சி யாளர்களின் ஒரு முடிவாகும். என்றாலும் வேறு சில முடிவுகளும் உண்டு. ஆரியர்கள், தமது மேம் பட்ட படைக் கலத்தாலும் போரிடும் தேர்ச்சித் திறமையாலும் விவசாயம் சார்ந்த பழங்குடி இனமான [agricultural and tribal peoples] சிந்து சம வெளி மக்களை வென்று அவர்களை தென் இந்தியா நோக்கி தள்ளினார்கள் ஒரு முடிவு. அது உண்மையா இல்லையா என்பது இன்னும் விவாதத்துக்குரியது . சிந்துவெளி நாகரிகம் கி.மு.1700-ம் ஆண்டளவிற்குப் பின்னர் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறது. இதன் வீழ்ச்சிக் காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இந்த கருது கோளை மேலும் உறுதிபடுத்துகிறது. 1953 ஆம் ஆண்டு , தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) மேலே குறிப்பட்ட கோட் பாட்டை முன்மொழிந்து அதற்கு சான்றாக போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் அங்கு மேற்படைகளில் காணப்பட்டதை இக் கோட்பாட்டிற்கு மேலும் ஒரு சான்றாக காட்டி அதற்கு வலு சேர்த்தார். உதாரணமாக, புதை குழிக்குள் அவசரம் அவசரமாக எறியப்பட்ட இறந்த மனித உடலின் எலும்புக்கூடுகளின் தொகுதி ஒன்று அங்கு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது அந்த இறந்தவர்களை புதைத்தவர்கள் கால அவகாசம் இல்லாததால் அப்படி செய்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. மேலும் ஒரு ஆண், ஒரு பெண், இருவரினதும் எலும்புக்கூடுகள் மாடி படிக்கட்டில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்த இருவரும் அவசரம் அவசரமாக தப்பி ஓடுவதை தெளிவாகக் காட்டுகிறது. அத்துடன் அந்த எலும்புக் கூட்டை பரிசோதித்ததில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என தெரிய வருகிறது. இது பற்றி மேலும் குறிப்பிட்ட போது, இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே [Indra, the leader of the Devas], இந்த அழிவுக்காகக் குற்றம் சாட்டப்படுகிறான் என்றார். மேலும் ஆடு மாடு மேய்த்து வந்த நாடோடி கூட்டமாகிய ஆரியர்கள் தங்களுடன் போர் தொடுத்த திராவிடர்களை திட்டி, கேவலப் படுத்தி, பழித்து தங்கள் வேதங்களில் எழுதி வைத்தனர் என "ரோமேஷ் மஜும்தார்" தமது "பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்" என்ற புத்தாகத்தில் 22 ஆம் பக்கத்தில் கூறுகிறார். மேலும் ஆரியர் அல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் எனவும் தஸ்யுக்கள், அசுரர்கள் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளன என Dr. ராதாகுமுத முகர்ஜி Phd "இந்து நாகரிகம்" பக்கம் 69 இல் குறிப்பிடுகிறார். இதற்கு ஒரு மாதிரி எடுத்துக்காட்டாக ஒரு பாடலை கிழே தருகிறோம் . "இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் [தமிழர்களை] கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்." மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் இதில் ஒருவர் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் , மாயனும் இந்து சம வெளி மக்களும் தமிழர்களின் மூதாதையர் அல்லது அவர்களுடன் தொடர் உடையவர்கள் என அறிஞர்கள் இப்ப சான்றுகளுடன் கூறுவது . ஆகவே இந்த இரு முதன்மை இனப்படு கொலைகளை தாண்டித்தான் நாம் இப்ப வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . அது மட்டும் அல்ல இக் கொலைகளை /அழிவுகளை புரிந்தோர் இருவரும் ஒரே இந்தோ -ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மொழி குடும்பத்திற்குள் உள்ள இந்திய-ஈரானிய மொழி குடும்பத்தில் தான் பல வட இந்தியா மொழியும் உள்ளன என்பதும் கவனிக்கதக்கது. மேலும் ஒரு கடைசி உதாரணமாக எமது பார்வையை மகாபாரதம் அல்லது விஸ்ணு புராணம் பக்கம் திருப்புவோம். விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் என கருதப்படும் பரசுராமரை இங்கு சந்திக்கிறோம். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். ஒரு முறை கார்த்தவீரியன் என்றோர் அரசன் [சத்திரியன் / க்ஷத்ரியர்] ஜமதக்கினி முனிவரின் காமதேனு பசுவை கடத்தி சென்று விட்டான், இதை அறிந்த பரசுராமர் அவனைக் கொன்று பசுவை மீட்டார். ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அங்கு பரசுராமர் இல்லாததால் , அவனின் தந்தை ஜமதக்னி முனிவரின் தலையை பலிக்கு பலி வெட்டினர். தாயின் அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அப்பொழுதே இந்தக் க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார் பரசுராமர். அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். இரத்த ஆறு ஓடியது. குரு - க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. இதை அடுத்து கொடிய கொலைக்காரனாக மாறி பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் இல்லாமல் போகும்படி இருபத் தொரு திக்விஜயம் செய்து, இருபத் தொரு தலை முறையை வேரறுத்தார் என கூறுகிறது. இவர் தனி மனிதனாக அழித்த அரச வம்சத்தின் எண்ணிக்கை செங்கிஸ்கான் [mongolian king genghis khan], ஹிட்லர் [Adolf Hitler], ஸ்டாலின் [Joseph Stalin], முசோலினி [Benito Amilcare Andrea Mussolini], மாசேதுங் [Mao Zedong ] இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த கொலைகளை விட மிக மிக அதிகம். சத்திரியர் குலத்தை அழித்ததினால் பிராமணர்கள் இவரை கடவுளின் அவதாரமாக்கி விட்டனர் போலும். என்றாலும் க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பும் அந்த வம்சத்தை தழைக்கச் செய்தான் மூலகன். சூர்ய குலத்தில் பிறந்தவன் இந்த அரசன். இராமாயண ராமன் இவனது எட்டாவது தலை முறையாகும். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது. ஆகவே பொதுவாக விவேகமும் வீரமும் ஆற்றலும் கொண்ட ஒரு இனத்தை முழுமையாக தடை செய்யவோ அழிக்கவோ முடியாது என்பது கண்கூடு எப்படி என்றாலும் ஒரு இனப்படு கொலை நடை பெறும் போது ஒரு தற்காலிக பின்னடைவு நிகழ்கிறது. அதனால் தான் பொதுவாகத் எல்லோரும் அறிய விரும்புவது : *உண்மையில் என்ன நடந்தது ? *இது ஏன் நடந்தது ? *இதற்கு யார் பொறுப்பு ? *இந்த அட்டூழியத்திற்கு யார் யார் உடந்தையாக பின் புறத்தில் இருந்தவர்கள் ? *நாம் யாரை குற்றம் சுமத்த வேண்டும் ? இதனால்த் தான் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவரும், தனது திருக்குறள் 548 இல்: "எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்." என்று கூறுகிறார். அதாவது, நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பல வகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான் என்கிறார். இப்படியான கேள்விகளுக்கான உண்மையான, ஆக்கபூர்வமான, பக்க சார்பு அற்ற, பதில்களையே இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆகவே இந்த நேர்மையான கோரிக்கைகள் சிக்கலான ஒன்று அல்ல. மிக மிக இலகுவான ஒன்றே !! *"உண்மைகளை வெளிபடுத்துவது " *"நேரடியாகவோ மறைமுகமாவோ இதில் ஈடு பட்டவர்களை அல்லது குழுக்களை பகிரங்கமாக தண்டிப்பது" *"இதை ஒரு பாடமாக மற்றவர்களுக்கும் உணர்த்துவது " அப்படி என்றால் இவை மேலும் தொடராமல் தடுக்கலாம் . அடுத்த பரம்பரைக்கும் இந்து சம வெளி மற்றும் மாயன் ? போல் தொடராமல் இருக்க . அது மட்டும் அல்ல பரசுராமர் போல் பரம்பரை பரம்பரையாக அழிப்பதை நேரத்துடன் தடுக்கலாம் என்பதாலும் . இன்னும் ஒரு மூலகன் வரும்வரை இருபத்தி ஒரு தலை முறைக்கு காத்திருக்க தேவை இல்லை என்பதாலும் ஆகும் . "வாருங்கள், வந்து கை கொடுங்கள்- இமைகள் மூடி பல நாளாச்சு மூடுங்கள், மூடி கண்ணை கட்டுங்கள்- வரிசையாய் வருங்கள் பல சடலங்கள் தாருங்கள் தீர்வை, தந்து கவலை தீருங்கள்- கேள்விகள் கேட்டு என்னை வதைக்கின்றன நாக்கை அறுத்தனன் நாதி யற்றவன்- நங்கை இவள் உண்மை உரைத்ததால் முலையை சீவினான் கொடூர படையோன்- வஞ்சி இவள் காமம் சுரக்காததால் கண்களுக்குள் புதையாத இவர்களை தருகிறேன்- அப்பாவிகளை ஒன்று ஒன்றாய் புதைக்க வரிசையில் வரிந்து வருகினம் பல்லாயிரம்- இடையில் சின்னஞ் சிறுசு சில ஆயிரம் முழங்கினர், கதறி கண் முன் வந்தனர்- விசாரணை எடு- உண்மையை நிறுத்து கூடுங்கள், ஒன்றாய் உண்மையை உரையுங்கள்- படு கொலையை எதிர்த்த சடலம் கேட்கிறது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "நட்பு" "தேர்ந்தெடுக்கும் நிறம் குணம் காட்டும். தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் தேய்ந்துபோகும் காதலும் நட்பு இன்றேல் தேயாமல் வாழும் நட்பு ஒன்றே !" "இருகண்கள் அழுதால் கைத்துண்டு துடைக்கும் இருதயம் அழுதால் நட்பு துடைக்கும் இன்பமாய் உலகின் அதிபதியாய் இருப்பினும் இருளாகும் நண்பர் ஒருவர் இல்லாவிடில் !" "இளமை காலத்தில் காதல் வரும் இன்பமாக சில வேளை திருமணமாகும் இளையோர் பலருக்கு நட்பு மலரும் இறுக்கமாக பல வேளை நிரந்தரமாகும்!" "உன்முகம் பார்த்து நட்பு பழகுவதல்ல உயர்தகுதி பார்த்து நட்பு பழகுவதல்ல உதடு கொட்டும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல உள்ளத்தின் ஆழமான அன்பால் நீடிப்பதுவே!" "நல்ல நட்பு வளர்பிறை போன்றது நன்றாக நாளுக்கு நாள் வளரும் நல்ல நட்பை என்றும் நாடுவோம் நல்ல நட்பையே தினம் சுவாசிப்போம்" "வீட்டுக்கும் ஊருக்கும் எல்லை போடலாம் நாட்டுக்கும் ஆட்சிக்கும் எல்லை போடலாம் போட்டிக்கும் விதிக்கும் எல்லை போடலாம் நட்புக்கும் உறவுக்கும் எல்லை போடலாமா?" "நட்பு என்பது குறிப்பு போன்றது காதல் என்பது காசோலை போன்றது குறிப்பு புத்தகத்தில் தடைகள் இல்லை காசோலையில் தடைகள் என்றும் உண்டு !" "உணவைப் போன்றது ஒரு நட்பு மருந்தினைப் போன்றது ஒரு நட்பு நோயைப் போன்றது ஒரு நட்பு தெரிந்து எடுங்கள் சரியான நட்பை" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 26 உலகம் தோன்றின நாள் முதல் இன்றுவரை உயிர்கள் அனைத்தும் நம் கண் முன்னால் பல்வேறு இனங்களாக இன்றும் இருப்பதற்கு காரணம் அவை அனைத்தும் ஆண் பெண்ணாக பரணமித்ததே. இன்றைய அறிவு நிலையில் அல்லது பரிணாம நிலையில் , ஆண் மட்டும் பிறந்தோ அல்லது பெண் மட்டும் பிறந்தோ, அவை தமக்குள்ள காதலித்து இணைந்து வாழ்ந்து இருந்தால், இன்று நானும் நீங்களும் மற்றும் ஏராளமான உயிர் இனங்களும் இல்லை!! ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிர் இனங்கள் பெரும்பாலும் உடலால் மட்டும் இணைகின்றன. ஆனால் ஆறறிவு மனிதன் மட்டுமே உடலாலும் மனதாலும் இணைகின்றன. எனவே தான் மற்ற உயிர்கள் இணைவதற்கு இனப்பெருக்கம் என்றும் மனிதன் இணைவதற்கு திருமணம் என்றும் கூறுகிறோம். இந்த மனதால் இணைதல் என்ற பண்பு மற்றவற்றில் இருந்து மனிதனை வேறுபடுத்துகின்றது. இனப்பெருக்கம் என்ற ஒரு குறிக்கோளை தாண்டி, பல்வேறு ஒழுக்கங்களை அவன் ஏற்படுத்துகிறான். எனவே அந்த ஒழுக்கங்களுடன் அமைவதே முறையான திருமண உறவு என்று கூறலாம். திருமணம் என்ற சொல்லில் உள்ள மணம், கூடுதல், கலத்தல் என்று பொருள் படும். அடிப்படையில் இவை இணைத்தல் என்ற விளக்கத்தை பெற்று, இது மங்கள நிகழ்வு என்பதால், ‘திரு’ எனும் அடையைச் சேர்த்து இருவரும் உடலாலும் மனதாலும் இணை வதை திருமணம் என்றனர் முன்னோர். இதை கரணம், வரைவு கடாதல், கற்புமணம், வதுவைச் சடங்கு, மன்றல், உடன்போக்கு மணம் என்ற சொற்களாலும் அழைத்ததை இலக்கியங்களில் காணலாம். இன்றைய சொல் வழக்கில் உள்ள ‘கல்யாணம்’ எனும் சொல் சங்க காலத்தில் இல்லை. அதற்கு பின் நீதி இலக்கியத்தில் ஒன்றான ஆசாரக் கோவையிலும், நாலடியாரிலும் ‘கல்யாணம்’ என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது. கடி மணம் என்ற சொல்லும் வழக்கில் இருக்கிறது. இதை பொதுவாக குடும்பத்தில் நிகழும் பெரிய மங்கல நிகழ்வாக தமிழர்கள் கருதினர். பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பெண் வீட்டார் பெண் கொடுக்க ஆண் வீட்டார் பெற்று கொள்ளும் திருமண முறையும் பொருள் கொடுத்தும் திறமையின் அடிப்படையிலும், போர் நிகழ்த்தியும், காதல் நிகழ்விற்கு பின்னரும் என பல வகையில் திருமணம் நிகழ்ந்திருக்கின்றது. உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து எதோ ஒருவகையில் நான் குடும்பத்தன் என்பதை காட்ட தனி முத்திரை இடப்படுவது இயல்பு. அந்த வகையில் இன்று மாப்பிள்ளை பொண்ணுக்குத் தாலிகட்டுவது தான் கல்யாணம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால், சங்க காலத்தில், அப்படி இல்லை; தாலியைப் பற்றிய எந்த குறிப்பையும் அங்கு காண முடிய வில்லை. என்றாலும் அப்படி ஒரு பழக்கம் இல்லை யென்று உறுதியாக கூறிவிட முடியாது. உதாரண மாக அகநானூறு 7 இல், ”பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி” என்ற ஒரு வரியையும், குறுந்தொகை 67 இல், புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப பொலங்கல ஒருகா சேய்க்கும் என்ற ஒரு வரியையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். இவையே நாளடைவில் மாற்றம் பெற்று சங்கம் மருவிய சிலம்பின் காலத்தில் தாலி உறுதியாய் வருவதற்கு வழிவகுத்தும் இருக்கலாம், உதாரணமாக, சிலம்பின் மங்கல வாழ்த்து 46-47 ஆம் வரிகளில், “முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந் தன பணிலம், வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது” என்று சொல்லும் போது மங்கல அணி என்ற சொல்லாட்சியும் வருவதைக் காணலாம். அதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “முரசுகள் இயம்பின, மத்தளங்கள் அதிர்ந்தன, சங்கு முழக்கம் முறைப்பட எழுந்தது, அரசெழுந்தது போல் வெண்குடைகள் எழுந்தன இத்தனைக்கும் பின்னே மணம் நடக்கும் அகலுள் (அகல் என்பது ஒரு சாலை அல்லது மண்டபம் அல்லது hall) மங்கல அணி எழுந்தது” என்று உணர்த்துகிறார். என்றாலும், அகநானூற்றுப் பாடல்களில் பழைய திருமணச் சடங்குகளை சொல்லும் பாடல்கள் இரண்டு (86, 136) இருக்கின்றன. இரண்டு பாடல் களிலும் ஐயரோ, நெருப்போ இல்லை. ஒரு பாடல் மட்டும் கடவுளை கும்பிட்டதாக குறிக்கிறது. ஆனால் கடவுள் பெயர் இல்லை. தாலி இல்லை. ஆனால், திருமணம் நடத்த நல்ல நாள் நாள் பார்ப்பது, புதுத் துணி உடுப்பது, உற்றார், உறவினர் வருவது எல்லாம் இருக்கிறது. இரண்டு பாடல்களுமே உணவின் சிறப்பையும் முதல் இரவின் வர்ணனையையும் கூறுகிறது . பூவும், நெல்லும் சொரிந்த நீரில் மணமகள் நீராடப்பட்ட பின்னர் திருமணம் நடைபெற்றது. இந்நீரை முகந்து கொண்டு வருவதற்கும், அதை வாங்கி மணமகளின் தலையில் ஊற்றுவதற்கும் மங்கல மகளிரும் ஈடுபடுத்தப்பட்டமை காண்கிறோம். திருமண நாளன்று அரிசியும், உளுந்தும் கலந்த பொங்கல் உணவு அனைவருக்கும் அளிக்கப்பட்டது. உழுத்தம் பருப்போடு கூட்டி சமைத்த, குழைந்த பொங்கல் எனும் பெருஞ்சோற்றுத் திரளை இடையறாது உணவிட, பந்தலில் வரிசையாக மாலையிட்டு மணல் பரப்பியுள்ளனர் என்றும், திருமண நேரத்தில், முதிய மங்கல மகளிர் முன்னே தருவனவும், பின்னே தருவனவும் முறையாகத் தந்திட, மகனைப் பெற்ற தூய அணிகளையுடைய மகளிர் நால்வர் கூடி நின்று கற்பிலிருந்து வலுவாறு நன்றாகப் பல பேறுகளைத் தந்து, உன்னை எய்திய கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தை உடையவளாக ஆகுக” என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலே, நீரைச் சொரிந்து, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவுகிறார்கள்; அதோடு கல்யாணம் முடிகிறது. மொத்தத்தில் மஞ்சள் நீர் ஆடுவதும், பூ, நெல் சொரிவதும், வாழ்த்துவதும் தான், அகநானூற் றின் படி, மண்ணுதல் என்று சொல்லப்படும் மணம் ஆகிறது. எனவே திருமணச் சடங்குகளை நிகழ்த்த புரோகிதர்கள் ஈடுபட்டதாகச் எந்த சங்க இலக்கியக் குறிப்புகளும் இல்லை. என்றாலும் சங்க மருவிய காலத்தில் எழுந்த சிலப்பதிகாரம், “மாமுது பார்ப் பான் மறைவழி காட்டி’ யமைப் பற்றியும், மண மக்கள் தீவலம் வந்தமைப் பற்றியும், தெளிவாகக் கூறுகிறது. உதாரணமாக மங்கல வாழ்த்துப் பாடலில் வானிலுள்ள ஒரு மீனாகிய அருந்ததி போல் கற்புடையவளான கண்ணகியை, பிதாமகன் மறைநெறியிற் சடங்கு காட்டக், வானின்கட் செல்லும் திங்கள் உரோகிணியைச் சேர்ந்த நாளிலே, கோவலன் கலியாணஞ் செய்து , இருவரும் சேர்ந்து தீயை வலஞ் செய்தனர் என "வான்ஊர் மதியம் சகடணைய வானத்துச் சாலி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை" என்று பாடுகிறது. எது எப்படி ஆயினும் ‘தாலி’ மங்கல அணிகளுள் மிக முக்கியப் பொருளென தமிழர்கள் இன்று கருதுகின்றனர். எனவே சங்க காலத்திற்கு அருகிய நிலையில் தாலியணியும் வழக்கு இருந்ததோ என கருத இடமுண்டு. தாலி பற்றிக் குறிப்பிடும் முதற் கல்வெட்டு கி.பி. 958-ஆம் ஆண்டுக்குரியது என தெரிய வருகிறது. (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், பக். 131-132) இதனடிப்படையில், சிலர் தாலி எனும் மரபு தமிழ் மக்களுக்கு உள்ள மரபாக இருந்திருக்கிறது என்றும், வேறு சிலர் சங்க காலத்தில் தாலி அணியும் வழக்கமில்லை, எனவே அது பிற்சேர்க்கை எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எது எவ்வாறாயினும், இன்று தமிழர் திருமணச் சடங்கில் பொதுவாக பரிசம் போடுதல், முகூர்த்தக் கால் நடுதல், தாலி கட்டுதல் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாக உள்ளன. இவைகளில் திருமணத்திற் கான தொடக்க நிலைச் சடங்காக மணமகன் வீட்டார் தம் உறவினருடன் பெண் வீட்டிற்குச் சென்று தாம்பூலம் மாற்றி மண ஒப்பந்தம் செய்து கொள்வது பரிசம் போடுதல் [betrothal or engagement ] எனப்படும். இதனை நிச்சயதார்த்தம் அல்லது நிச்சய தாம்பூலம் என்றும் கூறுவதுண்டு. இச்சடங்கு திருமணத்திற்கு முன் ஒரு நல்ல நாளில் பெண் வீட்டில் பொதுவாக நடை பெறும். இன்னார்க்கு இன்னார் என்று மணமக்களை மற்றவர்கள் அறிய உறுதி செய்வதே இச்சடங்கின் நோக்கமாகும். இதை அடுத்து, அந்த காலத்தில் மணப் பந்தல் போட்டு திருமணம் செய்ததால், அந்த பந்தல் போடும் தொடக்க விழாவாக, அந்த பந்தலின் ஒரு கால் முதலில் ஒரு நல்ல நாளில் நாட்டப் படுவதே முகூர்த்தக் கால் எனப்படுகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன், மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக இதை நடுவார்கள். மூங்கிலும் பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கையே இந்த சடங்கின் கருத்தாகும். "ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரிட்டு, மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்க" என்று மணமக்களை வாழ்த்தும் வழக்கமும் இதனால் ஏற்பட்டதே ஆகும். திருமணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல் (மஞ்சள் கயிறு கட்டுதல்) என்பது ஒரு முக்கிய இறுதி நிகழ்வு ஆகும். இங்கு மங்கல அணியான தாலியை ஒரு தாம்பூலத்தில் வைத்துத் தேங்காய், பூ, மஞ்சளில் புரட்டிய அரிசி இவற்றுடன் பெரியவர்களிடம் ஆசி வாங்குவர். பின்னர் கெட்டி மேளம் முழங்க, மங்கலப் பெண்கள் குலவை விட மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவார். தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போட வேண்டும் என்பது மரபாகும். பெரியோர்களிடம் அங்கீகாரத்தையும் வாழ்த்தையும் பெறுவதே தாலி கட்டுதலின் நோக்கமாகும். நாட்டுப்புற மக்களின் திருமணத்தில் வைதீக மரபுகள் (பிராமணர்கள் மந்திரம் ஓதுவது, வேள்வித்தீ வளர்ப்பது) இடம் பெறுவதில்லை என்பது இங்கு மனத்தில் கொள்ளத் தக்கது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 27 தொடரும்
  14. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 12 [2] சுமேரியா தமிழ் இனத்தின் தோற்றத்தின் மூல அல்லது ஆதி இடமாக நாலு யோசனைகள் வெவ்வேறு அறிஞர்களால், வெவ்வேறு கால கட்டத்தில் முன்மொழிந்ததின் அடிப்படையில், முதல் ஜோசனையான, குமரி கண்டம் பற்றிய சில கருத்துக்களை பகுதி 11 வரை அலசிய பின், பகுதி 12 இல் இருந்து இரண்டாவது ஜோசனையான சுமேரியாவை [சுமேரியா / மெசொப்பொத்தேமியா / Ancient Mesopotamia, corresponding to modern-day Iraq] பற்றி இயன்ற அளவு, விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம். பேராசிரியர் மீவ் லீக்கி [Professor meave leakey / இவர் தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கியின் இரண்டாவது மகனை திருமணம் செய்தவர்] தலைமையிலான குழு, கிழக்கு ஆஃப்ரிக்காவில் கண்ட முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்களை (fossil) தொடர்ந்து, உலகில் இரண்டு மிகப் பெரிய மனித இடப் பெயர்வு நடந்து இருக்கலாம் என தெரிய வந்தது. இன்றைய மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படும் ஹோமோ எரெக்டஸ் [Homo erectus / இதன் கருத்து நிமிர்ந்து நிற்கும் அல்லது நன்கு நிமிர்ந்து நடக்கும் மனிதன்] இன மக்களின் பெரிய மனித புலப்பெயர்வு 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன், முதல் முதல் ஆரம்பமானது. இந்த இனம் ஆஃப்ரிக்காவில் தோன்றி ஜார்ஜியா [Georgia / இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடு] இந்தியா, இலங்கை, சீனா, ஜாவா [Java / இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு] வரை பரவியது. இது [ஹோமோ எரெக்டஸ்] கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்ததுடன், நெருப்பை தமது கட்டுப் பாட்டில் வைக்கக் கூடிய ஆற்றல் உடைய முதல் மனித இனமாகவும் இருந்துள்ளது. இதுவே இன்றைய நவீன மனிதனின் நேரடியான மூதாதையர் ஆகும். இது எம்மைப் போல உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆனால் சின்ன கையுடனும் நீண்ட காலுடனும் ஆகும். இது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 200,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது. இதன் பிரதான உணவு இறைச்சி ஆகும். இது ஒரு வேடுவர் சமூகமாக இருந்துள்ளது. அதன் பின்பு, நீண்ட இடை வெளியின் பிறகு, ஹோமோசப்பியன்ஸ் [Homo sapiens] என்று சொல்லப் படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்கா முழுவதும் 150,000 வருடங்களுக்கு முன் குடியிருந்து, 70,000 வருட அளவில் ஆஃப்ரிக்கா விட்டு வெளியேறியதாக தெரிகிறது. அதன் பின்பு, ஒரு நீண்ட இடை வெளியின் பின், கோமோ சப்பியன்ஸுக்கு உரிய ஆதிமுன்னோர் சார்ந்த திராவிடர்கள் [proto Dravidians belonging to Homo sapiens] ஆஃப்ரிக்காவில் இருந்து உணவு, புகலிடம் தேடி சுற்றித்திரிந்து மத்தியத் தரைக்கடல் [Mediterranean / மெடிடேரியன் கடல்] பகுதியை அடைந்தார்கள். கூட்டமாக வாழ்ந்து. மிருகங்களை வேட்டையாடியும், சைகை மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டும், மற்றும் நெருப்பை கண்டு பிடித்து இருந்தாலும் அவர்களை நாகரிகம் அடைந்தவர்கள் என அழைக்க முடியாது. இவர்கள் மினாஸ் பக்கத்தில் இருந்த பண்டைய கோஸ் தீவை [The old island of “Cos” near MINAS] தமது வாழ்விடமாக அமைத்தார்கள் என கிமு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [கி.மு484-425 / Egyptian historian Hiridotus] சான்று கூறுகிறார் [The old island of “Cos” near MINAS was abode of these proto Dravidians as attested by the old Egyptian historian Hiridotus.]. பின் அது எரிமலை வெடிப்பால் அழிந்து போக, அங்கு வாழ்ந்தவர்கள் சிதறி, கிமு 4000 ஆண்டு அளவில், சுமேர் [southern Mesopotamia area called sumer] என அழைக்கப்படும் தெற்கு மெசொப்பொத்தேமியா பகுதிக்குள் நுழைந்தார்கள். இவர்கள் திராவிடர்கள் தான் என்பது பின்வருவன வற்றில் இருந்து நம்பப்படுகிறது. தென் இந்தியாவில் / இலங்கையில் பேசப்படும் தமிழைப் போன்ற திராவிட மொழியுடன் சுமேரியன் மொழி ஒரு சேய்மை தொடர்பு [remote relationship] கொண்டுள்ளது. சுமேரியர்கள் முதலாவது சிறப்பு மிக்க பாரிய கோயிலையும் நகரத்தையும் மேலும் எழுத்தையும் கண்டு பிடித்தவர்கள். அந்த நகரத்தை 'ஊர்' என்றே அழைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது. ஆலய வழிபாடு, குன்றில் 'சந்திரன் தெய்வம்' வழிபாடு போன்றவை சுமேரியனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. சுமேரியன் தங்களை கறுத்த தலையர் ["Sag-giga" meaning the “black-headed"] என அழைக்கின்றனர். கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் இரண்டு விதமான எதியோபியனை குறிப்பிடுகிறார். ஆஃப்ரிக்காவில் வாழும் மேற்கு எதியோபியனும் இந்தியாவில் வசிக்கும் கிழக்கு எதியோபியனும் கறுத்த நிறத்தவர் எனவும், ஆக ஒருவர் சுருட்டை மயிரையும் மற்றவர நேரான மயிரையும் கொண்டவர் என்கிறார் [Herodotus wrote in his celebrated History that both the Western Ethiopians, who lived in Africa, and the Eastern Ethiopians who dwelt in India, were black in complexion, but that the Africans had curly hair, while the Indians were straight-haired.]. மேலும் "The Ancient History of the Near East, pp. 173–174, London, 1916." இல் சுமேரியனை கறுத்த தலையர் அல்லது கறுத்த முகம் உடையவர் என்கிறது. நினைவுச் சின்னங்கள் தாடி இல்லாமலும் மொட்டை தலையாகவும் உள்ளது. இது இவர்களை செமிடிக் பபிலோனியர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது [செமிடிக் பாபிலோனியர்கள், தாடி மற்றும் நீண்ட கூந்தலுடன் காட்டப் படுகிறார்கள் / Semitic Babylonians, who are shown with beards and long hair.]. பபிலோனியாரின் இதிகாசத்தில் இருந்தும், பாரம்பரியத்தில் இருந்தும், நாம் அறிவது அவர்களுடைய [சுமேரியர்களின்] பண்பாடு தெற்கில் இருந்து வந்தது என்று. ஆகவே சேர் ஹென்ற ரோலின்சன் [Sir Henry Rawlinson] என்பவர் சுமேரியர் ஆஃப்ரிக்கா எதியோபியன் என்று, இதில் இருந்தும் வேறு சான்றுகளில் இருந்தும், முடிவுக்கு வருகிறார். ஆனால் இந்த கொள்கையை டாக்டர் எச்.ஆர். ஹால் [Dr Henry Reginald Holland Hall, of the Dept. Of Egyptian & Assyrian Antiquities of the British Museum,] முற்றாக நிராகரிக்கிறார். இந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மெசொப்பொத்தேமியாவை நாகரிகமாக்கினார்கள் என வாதிடுகிறார்? சுமேரியர்களின் 'இன' மாதிரி அவர்களின் உருவச் சிலைகளில் காணக்கூடியதாக உள்ளது என்றும், அவை அவர்களை சுற்றி இருந்தவர்களிடம் இருந்து முற்றாக வேறுபடுவதாகவும் அப்படியே மொழியிலும் என்கிறார் [“The ethnic type of the Sumerians, so strongly marked in their statues and reliefs,” says Dr. H.R. Hall, “was as different from those of the races which surrounded them as was their language from those of the Semites, Aryans, or others]. இந்தியா 'திராவிட இன' மாதிரியுடன் அவர்கள் ஒத்து போவதுடன் செமிடிக் அற்ற, ஆரியர் அற்ற இவர்களே, மேற்கை நாகரிகமாக்க, கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்றும், இதை நாம் எமது கண்களாலேயே எப்படி இந்தியனும் சுமேரியனும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபடுகிறார்கள் என காண முடியும் என்றும் கூறுகிறார். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்றான, "ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேற்றம்" மாதிரியின் படி, ஹோமோ எரெக்டஸை [நிமிர்நிலை மாந்தர்] ஆப்ரிக்காவிற்கு வெளியே பரவிவிட்டு, பின் அது திரும்பி வந்து அல்லது ஆஃப்ரிக்காவில் மீதியிருந்த ஹோமோ எரெக்டஸ் மீண்டும் ஆஃப்ரிக்காவிலேயே ஹோமோசப்பியன்ஸ் [சாரநிலை மாந்தர்] ஆக படிவளர்ச்சியுற்று, மீண்டும் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறியது, என்பது ஒரு விந்தையாக உள்ளது. அதாவது ஹோமோசப்பியன்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் தோன்றியது என்று சொல்லுவது எனக்கு புரியவில்லை? ஏனென்றால் அதற்கு முதல் ஹோமோ எரெக்டஸை இந்தியா, இலங்கை உட்பட பல இடங்களுக்கு பரவி விட்டது என்று கூறிவிட்டு, பின் இது வேறு இடங்களில் உயர் படிவளர்ச்சி அடைய ஒரு சந்தர்ப்பமும் இல்லை என கூறுவது போலவும் அல்லது மீன் முழுவதும் ஒரு கடலிலோ அல்லது ஒரு குளத்திலோ படிவளர்ச்சியுற்றது என கூறுவது போலவும் உள்ளது? பூமத்திய ரேகை பகுதியில் பல இடங்கள் படிவளர்ச்சி அடையக்கூடிய சூழ் நிலையை கொண்டுள்ளன. இந்த கருத்தே முன்பு தொடக்கத்தில் நாம் சுட்டிக்காட்டிய இன்னும் ஒரு கொள்கைக்கு வழி வகுத்தது. இது பல்பிராந்திய மாதிரி [பல்பிரதேசத் தோற்றம்] ஆகும். முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா, ஆசிய, ஐரோப்பியா பிராந்திய குழுக்களில் இருந்து ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் நவீன மனிதர்களாக பரிணாமம் அடைந்ததாக கருதுகிறது [Saying Homo sapiens ["wise man"] all evolved from one place even after first migration of Homo erectus covering India, Sri Lanka etc could not be understand by me, Like there is no chance for life on other places or all fish evolved from one ocean, lake or bay? We all know that the environment has to be perfect for any evolution and there are hundreds of perfect places near the equator for hominids to live & evolve. This Idea create the multiregional model / hypothesis, which says there were parallel lines of evolution in each inhabited region of Homo erectus to become origin of modern humans (Homo sapiens sapiens). இந்த இரண்டாவது மாதிரி தான், பரிணாமம் அடைந்தது என்றால், நாம் மிக இலகுவாக டாக்டர் எச்.ஆர். ஹால் இன் மேல் கூறிய கூற்றையும் புரிந்து கொள்ள முடியும். "நவீன மனிதரின் ஆஃப்ரிக்காத் தோற்றக் கோட்பாடு" அல்லது " ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேற்றம் கோட்பாடு", ஆஃப்ரிக்காவில் தோன்றிய நவீன மனிதர், ஒற்றைப் புலப்பெயர்வு அலையொன்றின் மூலம் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி ஏற்கெனவே வாழ்ந்த பிற மனித இனங்களை மாற்றீடு செய்து உலகம் முழுதும் பரவினர் என்று கூறுகின்றது. முதற் பரம்பல், ஆஃப்ரிக்காவில் இருந்து இடம் பெற்றதாயினும், அவர்கள் முற்றாக அழிந்துவிட்டனர் அல்லது மீண்டும் திரும்பிச் சென்று விட்டனர் என்று இந்த கொள்கையில் கருதப்படுகிறது. இங்கு இரண்டாவது பரம்பல் மூலம், ஆசியாவின் தெற்குக் கடற் கரையூடான தெற்குப் பாதையூடாகச் சென்ற மனிதர் அவுஸ்ரேலியா [ஆஸ்திரேலியா] வரை சென்று குடியேறினர். இதிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அண்மைக் கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் குடியேறினர் என்கிறது. இந்த ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டுக்குப் போட்டியாக உள்ள முக்கியமான இன்னொரு கருதுகோள் தான் நாம் மேலே சுட்டிக்காடிய, நவீன மனிதரின் பல்பிரதேசத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். படம் 01 , கொஞ்சம் விபரமாக பார்ப்போமானால், நவீன மனிதர்களின் தோற்றம் குறித்து இரண்டு போட்டிக் கருதுகோள்கள் உள்ளன: 'ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியே என்ற மாதிரி [கருதுகோள்]' மற்றும் 'பல பிராந்திய மாதிரி [கருதுகோள்]'. ஹோமோ எரெக்டஸ் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவிற்கு [ஐரோப்பா மற்றும் ஆசியாவை உள்ளடக்கிய நிலப்பரப்பு / Eurasia] விரிவடைந்தது என்பதை இரு மாதிரிகளும் ஒப்புக்கொள்கி றது, ஆனால் அவை நவீன மனிதர்களின் (ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ்) தோற்றத்தை விளக்குவதில் வேறுபடுகின்றன. முதல் கருதுகோள் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டாவது இடம்பெயர்வு சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று முன்மொழிகிறது, இதில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த நவீன மனிதர்கள் தொன்மையான மனித இனத்தை முற்றாக ஈடு செய்தது. (ஹோமோ சேபியன்ஸ்; மாதிரி A). பல்பிராந்திய மாதிரி Model D , ஒவ்வொரு பிரதேசத்திலும், முன்பு பரவிய ஹோமோ எரெக்டஸ், அந்தந்த இடங்களிலேயே தன்பாட்டில் [சுயாதீனமாக] நவீன மனிதனாக தோற்றம் பெற்றன [பரிணாமம் / படிப்படியான மாற்றம் (GRADUAL TRANSFORMATION) அடைந்தது ] என்கிறது. பங்கிட்டுக்கொடுக்கும் பல்பிராந்திய மாதிரி Model C என்பது அந்தந்த இடங்களில், மாதிரி Model D மாதிரி பரிணாமம் அடைந்தாலும், கண்டங்களுக் கிடையில், படத்தில் காட்டியவாறு, [மக்களிடையே] மரபணு ஓட்டமும் காணப்படுகிறது. இதை டிரெல்லிஸ் கொள்கை (the trellis theory) என்கிறார்கள். ஒரு சமரச இணக்கம் கொண்ட ஆஃப்ரிக்கா வெளியே மாதிரி Model B என்பது பெரும்பாலான மனித மக்கள் தொகையின் பரிமாணத்தில் ஆஃப்ரிக்காவில் இருந்து நவீன மனிதனின் தோற்றத்தை, மாதிரி Model D மாதிரி வலியுறுத்துவதுடன், சிறிய உள்ளூர் பங்களிப்புகளின் சாத்தியத்தையும் அனுமதிக்கிறது. [ Broadly speaking, there are two competing hypotheses on the origin of modern humans: the Out-of-Africa hypothesis and the multiregional hypothesis. Both agree that Homo erectus originated in Africa and expanded to Eurasia about one million years ago, but they differ in explaining the origin of modern humans (Homo sapiens sapiens). The first hypothesis proposes that a second migration out of Africa happened about 100,000 years ago, in which anatomically modern humans of African origin conquered the world by completely replacing archaic human populations (Homo sapiens; Model A). The multiregional hypothesis states that independent multiple origins (Model D) or shared multiregional evolution with continuous gene flow between continental populations (Model C) occurred in the million years since Homo erectus came out of Africa (the trellis theory). A compromised version of the Out-of-Africa hypothesis emphasizes the African origin of most human populations but allows for the possibility of minor local contributions (Model B).] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 13 தொடரும் பி கு : படம் - [07]: 1935 இல் ஒல்டுவை பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஆய்வுப்பயணம். தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கி [மத்தியில்], மற்றும் தொல்பொருளியல் மாணவி மேரி நிகோல் [வலது பக்கம்]. இவர்கள் பின் 1936 இல் திருமணம் செய்து கொண்டார்கள். / A 1935 expedition to Olduvai. Louis Leakey (center) and archaeology student Mary Nicol (right). They wed in 1936 படம் - [06]: ஆரம்ப மனிதக் குடும்பத்தின் எச்சங்களின் புதை குழிகள் நிரம்பிய முக்கியமான இடங்கள் / Major early hominin sites படம் - [05]: ஹோமோ எரெக்டஸ் / Homo erectus படம் - [04]: எசுன்னா நகரத்தின் ஒரு பகுதியான காபாஜேயிலும் [கி மு 2500], லகாஷ் நகரத்திலும் [கி மு 2350] கண்டுபிடிக்கப்பட்ட சுமேரியன் உருவச் சிலைகள் / Left - 2500 BC Sumerian statue from Khafaje / part of the city-state of Eshnunna; Right - Sumerian scribe circa 2350 BC from Lagash.
  15. "ரதியின் கனவு" [போதை பொருள் மற்றும் பாலியல் விழிப்புணர்வு] வடக்கே கிளிநொச்சியையும் கிழக்கே இந்துசமுத்திரத்தையும், மேற்கே மன்னாரையும், தெற்கே திருகோணமலை மற்றும் வவுனியாவையும் எல்லைகளாக கொண்ட, சங்க கால நிலக்கூறுகளின் பண்பை ஒத்த நானிலத்தன்மை கொண்டதாகவும் உள்ள முல்லைத்தீவில் தனது சிறு வீட்டில் பெற்றோர் சகோதரர்களுடன் வாழும் இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி இரண்டு அகவை மதிக்கத்தக்க, எழுத்தாளரும் சமூக தொண்டாளருமான இளம் பெண் ரதி, காலை தேநீரை அருந்திக் கொண்டு, ஹால் இல் இருந்த தொலைக்காட்சியில் அன்றைய செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தார். கிழக்கு வானம் சிவந்து சூரியன் மெல்ல மெல்ல கீழ்வானில் இருந்து மேலே ஏறிக் கொண்டு இருந்தது. பறவைகள் தமது கூட்டை விட்டு புறப்பட்டு வானில் அங்கும் இங்கும் எதையோ தேடி பறந்து கொண்டு இருந்தன. ஆடு மாடுகள் கூட்டம் கூட்டமாக மகிழ்ச்சியாக புல்லுகளை மேய்ந்து கொண்டு இருந்தன. ஆனால் ரதியின் கண்கள் சிவந்து சிவந்து ஏறிக்கொண்டு இருந்தன. அவள் மனம் அங்கும் இங்கும் வெறுப்பில் பறந்துகொண்டு இருந்தன. அவள் எதையோ, தான் எழுதிய முன்னைய கவிதையில் இருந்து மேய்ந்து மேய்ந்து அசை போட்டுக் கொண்டு இருந்தாள். அப்படி என்ன செய்தி டிவி யில்? புங்குடுதீவு மாணவி வித்யா என்ற பாடசாலை மாணவி, கூட்டுப் பாலுறவு வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்வதற்கான திகதியை - எட்டு ஆண்டுகள் கழித்து, இன்னும் தண்டனை வழங்கப்படாமல் இழுத்தடித்து - இன்று மார்ச் 20, 2023 உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது என்ற செய்தியே அதுவாகும். முக்கிய குற்றவாளி இன்னும் அதற்கான தண்டனை வழங்கப்படாமல் இருப்பது வேடிக்கையே! அவள் மனம் இந்து புராணத்தை தட்டிப் பார்த்தது. விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம். நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக் கூடாது என ஜலந்தர் போலவே உருவம் எடுத்து விஷ்ணு அவளுடன் ஏமாற்றி இணைந்து பாலுறவு கொண்டார். இன்னும் இந்தக் கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? விஷ்ணுவை தூக்கி எறியவும் இல்லை ? இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். ரூபிஸ் [roofie / Date-rape drugs] போன்ற ஒரு காம மயக்கம் தரும் மாத்திரை வடிவில் உள்ள ஒன்றை எதாவது ஒரு குடி பானத்தில் கலந்து கொடுப்பது மூலம் அல்லது பருக்குவது மூலம், அந்த பெண்ணை குழப்பமான உணரவில் ஆழ்த்தி, தங்களை தற்காத்துக் கொள்வதில் பலவீனமாக்கி, என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள முடியாத பக்குவத்துக்கு ஆக்கி, கூட்டு அல்லது தனிப்பட்ட பாலுறவு வன்முறைகள் இலங்கை வடமாகாணத்தில் இன்று பெருகிவருவது அவளுக்கு கவலை கொடுத்துக் கொண்டு இருந்தது. 20, மார்ச் 2023 அப்படியான சம்பவம், யாழ் அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு எதோ கலந்த மதுபானம் அருந்தக் கொடுத்து அண்மையில் நடந்த கூட்டு பலாத்காரம் அவள் நினைவுக்கு வந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், பொலிஸார், யாழ் மனித உரிமை ஆணைக்குழு தலையிடும் மட்டும், அந்தச் சிறுமியை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்காமல் இரவு எட்டு மணி மட்டும் வைத்திருந்தது?? அந்த கூட்டு வன்முறையாளர்களுடன் சேர்ந்து ஓர் சில காவல் படையினரும் ஒத்துழைக்கின்றனர் என்பது தெரிய வந்தது அவளுக்கு? ஆனால் அந்த இளம் பெண்ணால் தனிய, இதற்கு எதிராக என்னத்தைத்தான் சாதிக்க முடியும்? ஆனால் முடியும் முடியும் என்று அவள் வாய் முணுமுணுத்தப் படி, தன் வீட்டு தூணில் சாய்ந்தபடி வெளியே பார்த்தாள்! கதிரவன் தன் முழுக் கைகளையும் [கதிர்களையும்] விரித்தபடி, அள்ளி அள்ளி வெப்பத்தை கொட்டிக்கொண்டு இருந்தது. முற்றத்தில் இருந்த ரோசா பூக்களை, வண்டுகள் மொய்த்து கூட்டாக தேன் பருகிக் கொண்டு இருந்தன. அவளுக்கு வண்டுகளை பார்க்க பார்க்க கோபம் கோபமாக வந்தது. இன்று அப்பாவி பெண்களின் நிலையும் ரோசா மாதிரி ஆகிவிட்டதே, அது தான் அவளின் ஒரு ஏக்கம், ஏன் அவள் கூட ஒரு குமரிப் பெண்ணே! பெண்கள் அழகு சிறிது சிறிதாக கூட ஆரம்பித்து குமரிப் பருவத்தில் உச்சத்தில் இருக்கிறது என்பார்கள். அப்படித்தான் ரதியும் இருந்தாள். உடலியல்பு, வடிவு, பேச்சு, நலம், வாசம் என அனைத்துமே ஒரு உச்ச கட்டத்தில் அவளிடம் இருந்தது. அதிலும் அந்தக் கருங்கூந்தல், கார்மேகம் தனைத்தந்த கருங்கூந்தல் ஆக, அகிற்புகை மணத்திலே சுகித்திருக்க பலவண்ண நறுமண மலர்கள் பலவும் சூடி இருக்க ஐயகோ எப்படி வர்ணிப்பேன் அவள் கூந்தலை? என்றாலும் காலை உலாவும் தென்றலும் அவளுக்கு இன்று சுகிக்கவில்லை. அது அள்ளி வீசும் குளிர்ச்சியும் அவளுக்கு தழல் போல் இருந்தது. அவளின் பெண்மையின் சிறப்புத்தன்மையும் சுகிக்கவில்லை. கதிரையில் இருந்த அவளோ தோகை மயில்போல் எழுந்து தன் அந்த அழகு பொழியும் கருங்கூந்தலின் பாரத்தையும் இன்று தாள முடியாதவளாகினாள். என்ன கொடுமை இது? வடமாகாணம் முழுவதும் திடீர் திடீரென புத்தர் முளைக்கிறார். ஆனால் புத்தர் பூமி ஆக்குவதில் கரிசனை இருக்கே தவிர, அவரின் ஒரு போதனையாவது காப்பாற்ற, கடைபிடிக்க முயன்றால், இந்தக் கொடுமை தானாக அற்றுப்போகுமே. அவள் குருந்தூர் மலைத் திசையை நோக்கி வெறுத்துப் பார்த்தாள்! வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களில் ஒன்று முல்லைத்தீவு ஆகும். அடங்காப் பற்றுக் கொண்ட வீரமன்னன் பண்டாரவன்னியன் தனது இறுதி மூச்சுவரை ஆங்கிலேயருடன் போரிட்டு வீர காவியம் படைத்த மண். அம் முல்லை மண் ஈன்றெடுத்த முத்துக்களில் ஒருவளாக ரதி, தன் நண்பி சிலருடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் இன்று போக ஏற்கனவே திட்டம் போட்டு இருந்தாள். ஆனால் அவளை இந்த செய்திகள் குழப்பிக் கொண்டு இருந்தன. பச்சைநிற வயல்வெளிகளும், நீரோடைகளினால் குளிர்ந்த காற்றும், பறவைகளின் ஒலியும் மனதிற்கு இனிமை அவளுக்கு கொடுத்தாலும் அவளின் எண்ணம் முழுக்க இதற்கு தீர்வு காணவேண்டும், மக்களை போதை பொருள் விழிப்புணர்ச்சி படுத்தவேண்டும், ஆனால் அதை எப்படி ஆரம்பிக்கிறது என்பது தான் அவள் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அவளின் நண்பிகள் படலையை திறந்து 'ஹாய் ரதி, ரெடியா போக?' என கேட்கவும், அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு அவர்களுடன் புறப்பட்டாள். ஆனால் மனது மட்டும் இலங்கையில் பாவிக்கப்படும் போதைப்பொருள் விபரங்களையும், அதை எப்படி எப்படி எல்லாம் தங்கள் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்ற பாவிக்கிறார்கள் என்பதையும் மீட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் நந்திக்கடலின் ஓரத்திலே, கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்புக்கு நடந்து போகக்கூடிய தூரத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு பெற்ற ஆலயமாகும். அவளும் மூன்று நண்பிகளும் பேருந்தில் வற்றாப்பளை போனார்கள். அப்பொழுதுதான் தன்னுடன் வரும் யாதவி, அங்கு தன் முகநூல் நண்பரை முதல் முதல், அவனின் வேண்டுகோளின்படி சந்திக்க இருக்கிறார்கள் என்றும், அவனின் பெறோர்கள் இன்று அங்கு பொங்கல் செய்கிறார்கள் என்றும் அவளுக்கு தெரிய வந்தது. அவன் பெரிய வர்த்தகரின் மகன், என்றாலும் பெரிதாக படிக்கவில்லை, நல்ல வசதிகளுடன் இருக்கிறான். அவன் யாதவியை முகநூல் மூலம் நண்பியாக, காதலியாக பழகுவதாக மற்ற நண்பிகளின் கதைகளில் இருந்து அவள் ஊகித்தாள். ரதி மனதில் ஒரு மூலையில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது, காரணம் பொதுவாக பாலுறவு பலாத்காரம் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் மற்றும் அந்நியர்களுக்கு இடையில் நடப்பது அவளுக்கு தெரியும். அதுமட்டும் அல்ல, முகநூலில் அறிமுகமானவர்களுடன் கவனமாக இருக்கவேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும். அது தான் அவளின் பதற்றம். என்றாலும் அதை அவள் வெளியில் காட்டவில்லை. 'கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல. முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். ஆனால் அவனின் உண்மையான நோக்கம் யாருக்கும் தெரியாது, அவன் இன்னும் அந்நியனே' ரதி தனக்குள் முணுமுணுத்தாள். உடனடியாக அவள் பிரச்சனைகள் வரும் பொழுது நாடும் எனக்கு குறும் செய்தி அனுப்பினாள். நான் அவளின் முன்னைய ஆசிரியர், இன்று ஓய்வு பெற்று கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி பொழுது போக்குகிறேன். நான் உடனடியாக, அவளுக்கு ஒரு செய்தி அனுப்பிவிட்டு, இரண்டு மிளகு தெளிப்பான் [pepper spray] எடுத்துக்கொண்டு அவளை கண்ணகி அம்மன் கோவிலில், அவளின் நண்பிகள் சந்தேகப்படாதவாறு சந்தித்து, எதாவது அசம்பாவிதம் நடந்தால் இதை பாவி என, அதை அவளிடம் கொடுத்ததுடன், நான் தூர இருந்து கண்காணிப்பேன் என்றும் தைரியம் கொடுத்தேன். அத்துடன் என் நண்பனும், இன்று பொலிஸ் அதிகாரியாக இருபவனிடமும், எதாவது பொருத்தமான அறிவுரை பெற, விபரம் கூறி கதைத்தேன். அப்ப பொலிஸ் அதிகாரி கூறியது என்னைத் தூக்கிவாரி போட்டது. யாதாகியின் இந்த முகநூல் நண்பன், ஏற்கனவே ஒரு பெண்ணை ஏமாற்றி, அவனுக்கு எச்சரிக்கை கொடுத்து இருப்பதாகவும், அவனின் தந்தையின் பணப்பலம் தண்டனையில் இருந்து தப்ப உதவியதாகவும் கேள்விப்பட்டேன். அந்த பெண் கற்பை இழந்ததுடன், வழக்கிலும் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்தாள் என்றும் மேலும் கூறினார். யாதவியை கோயிலில் சந்தித்த, அவளின் முகநூல் காதலன், கொஞ்ச நேரம் எல்லாருடனும் அளவளாவிய பின், தங்கள் நிலத்துக்கான கேப்பாப்பிலவு, பிலவுகுடியிருப்பு போராட்டம் நடை பெறுவதாகவும், ஏன் நாம் அதை போய் பார்க்கக் கூடாது என, எதோ கரிசனையாக கேட்டு, கெதியாக போகவேண்டும் என்று குறுக்குவழியால் யாதவியையும் அவளின் நண்பிகளையும் கூட்டிக் கொண்டு போனான். எனக்கு உடனே ரதி செய்தி அனுப்பினாள். நானும் அதை உடனே பொலிஸ் அதிகாரிக்கு அனுப்பி, அவர்களை தூர நின்று, மறைவாக பின் தொடர்ந்தேன். அரைவாசி தூரம் கூட போய் இருக்கமாட்டார்கள், திடீரென, யாதாவியின் காதலனின் மூன்று நண்பர்கள் அவனுடன் இணைந்து, ஆளுக்கு ஒரு பெண்ணாக எதோ தண்ணிமாதிரி ஒன்றை வாயில் வலாற்காரமாக பருக்கிக் கொண்டு கையை பிடித்து இழுக்க தொடங்கினார்கள். ரதி ஒருவாறு அந்த மிளகு தெளிப்பான்களை எடுத்து, அவன்களின் கண்ணில் தெளிக்கவும், நானும் அந்த பொலிஸ் அதிகாரியும், அதிகாரியுடன் வந்த மூன்று காவல்துறை வீரர்களும் மடக்கி நாலு பேரையும் பிடித்ததுடன், ஒரு காவத்துறை வீரன் முழுநிகழ்வையும் விடியோவும் எடுத்தான். ரதியின் புத்தியான முன்செயல்களால், இம்முறை அவன் சிறைக்கு போய் இருந்தாலும், அவன் ஏந்த நேரமும் பணப்பலத்தால் வெளியே வரவும் சந்தர்ப்பம் உண்டு. எதுவாகினும் அந்த நிகழ்வு கொடுத்த நம்பிக்கையும், அந்த நிகழ்வின் மூலம் ரதி மேல் தெரிந்தவர்கள் அயலவர்கள் கொண்ட நம்பிக்கையும், இன்று அவளை போதை மற்றும் பாலுறவு வன்முறைக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த தைரியம் வழங்கியது. இன்று மார்ச் 31, 2023, வெள்ளிக் கிழமை, ரதியின் முதலாவது ஆரம்ப விழிப்புணர்வு கூட்டம், அந்த பொலிஸ் அதிகாரியின் தலைமையில் ஒட்டிசுட்டான் தான்தோன்றீசுவரம் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பித்தது. இதற்கு நான் பிரதம விருந்தினராக முன் வரிசையில் இருந்தேன். நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை அதில் பதித்த அந்த ரதியின் முகம், முத்துகளைக் கோத்து அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள், மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மன்மதன் நுகரப் படைத்த அழகு, எனோ இன்று அவளிடம் காணவில்லை. கோபம் தணியாத கண்ணகி, தன் மார்பைக் கிள்ளி மதுரையின் மீது எறிந்தாள். இவளோ கோபத்தின் விளிம்பில், கருங்கூந்தல் காற்றோடு ஆட , மேடையில் நின்றாள். கோபம் கொண்டோரை பிசாசு சூழாது. கோபம் கொண்டோரை பிரியங்கள் ஆளாது. கோப முகத்தில் ஈக்கள் மொய்ப்பதில்லை. உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் மனதுக்குள் கோபம் ஒரு கவசம். அப்படித்தான் தன் முதல் கன்னி பேச்சை, "எல்லா ஆண்களும் சுதந்திரமாக பிறந்தார்கள் என்றால், எப்படி எல்லா பெண்களும் அடிமையாக பிறந்தார்கள்?" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்" உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும் ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், முதியோர்கள் தனிமையை உணர தொடங்குவதையும், தாம் தனித்து விடப்பட்டு விடுவார்கள் என ஏங்க தொடங்குவதையும் காண்கிறோம். இது அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியுமாகும். இந்த நிலையில் ஐந்து புலன்களில் முக்கியமான காது கேட்டலையும் இழந்தால், அவரின் நிலை மேலும் விரக்தியைத் தான் ஏற்படுத்தும். ஆகவே இன்று நாம் "காதும் கேட்டாலும்" பற்றி சிறுது அலசுவோம். காது வழியாக நாம் ஒலியை கேட்பதால் தான், எங்களால் பேச முடிகிறது. குழந்தைகள் முதலில் ஒலியை உணர்கின்றன. அதனால்த் தான் குழந்தைகள் பேசவே ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. எனவே, மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது எனலாம். தூக்கத்தின்போது 1. கண் (eye), 2. காது (ear), 3. மூக்கு (nose), 4.நாக்கு(tongue), 5.தோல்(skin) ஆகிய ஐம்பொறிகளில் நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது இந்த காது தான் ! அதேபோல், விழிக்கும் பொழுது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் இதுவே தான் ! எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் என்று நாம் கூறலாம். உதாரணமாக, காது கேட்காமல் வாழ்வதும் [செவிடனாக] அல்லது குறிப்பிடத்தக்க அளவு, கேட்கும் சக்தியை அல்லது திறனை இழந்து வாழ்வதும் கட்டாயம், ஒரு மனிதனில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. கேட்கும் உணர்வை இழப்பது அவனை தனிமைக்கு இட்டு செல்லலாம் அல்லது ஒரு மனச்சோர்வை அவனில் ஏற்படுத்தலாம். அது மட்டும் அல்ல சில ஆய்வுகள் இது பாரதூரமான நோய்களுக்கும், உதாரணமாக மனச் சோர்வினால் ஏற்படும் ஒரு வித மறதிநோயை [Dementia / டிமென்ஷியா] ஏற்படுத்தலாம் என்றும் உறுதி படுத்துகிறது. ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும் என கூறலாம். இது ஒரு வித சக்தி ஆகும். இது ஒரு ஊடகத்தினூடாக பயணிக்கும் பொழுது, ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை [அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் / atoms and molecules] அதிர்வுறச் செய்கிறது. அதன் மூலம் ஒலி பரவுகின்றது. உதாரணமாக, மத்தளத்தை தட்டியவுடன், மத்தளத்தின் தோல் அதிர்வுறுகின்றது. அத்தோலில் ஏற்படும் அதிர்வுகள் காற்றில் [வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம்] உள்ள மூலக்கூறுகளையும் அதிர்வுறச் செய்கின்றன. அம்மூலக்கூறுகள் நம் செவியில் உள்ள சவ்வுகளை அதிர்வுறச் செய்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும். ஆனால் இது வெற்றிடத்தின் [vacuum] ஊடாக செல்லாது. அதிர்வினால் ஒலி அலைகள் ஏற்படுகின்றன. எல்லா ஒலி அலைகளும் மனிதனால் கேட்க முடியாது. உதாரணமாக, மனிதனின் கேட்கும் திறனின் எல்லை கிட்டத்தட்ட நொடிக்கு 20 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும். 20 அதிர்வுகளைவிடக் குறைவாயின், அது அக ஒலி அல்லது தாழ் ஒலி (infrasound) எனவும், 20000 அதிர்வுகளை விட அதிகமாக இருந்தால் அது மிகை ஒலி அல்லது மீயொலி (ultrasound) எனவும் அழைக்கப்படுகின்றது. மனிதனை விட, ஏனைய விலங்குகளின் கேட்கும் வீச்சு எல்லை வேறுபட்டதாக இருக்கும். காது அல்லது செவி (Ear) என்பது ஒரு புலனுறுப்பு ஆகும். இது கடவுளால் அல்லது பரிணாம வளர்ச்சியால் அல்லது படிவளர்ச்சியால் வடிவமைக்கப்பட்ட ஒரு பொறியியல் பகுதி என்று கூறலாம். இதனால் நாம் எல்லாவிதமான ஒலிகளையும் கேட்டு இன்று மகிழ்கிறோம். அது மட்டும் அல்ல, ஒலி பிறந்ததால் தான் எழுத்தும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடன் ஒருவர் கலந்து பேசவும், தொடர்பு கொள்ளவும் இதுவே வழிசமைத்தது எனலாம். மனிதக் காது மூன்று பாகங்களால் ஆனதாகும். அவை புறச்செவி, நடுச்செவி, உட்செவி என்பனவாகும். உதாரணமாக, காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது ஆகும். நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிப்பது ஆகும். அங்கு மூன்று சிறிய எலும்புகள் இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கின்றன. உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’ (Cochlea) என்ற உறுப்பு இருக்கிறது. அதில் சிறு சிறு நரம்புகள் ஒன்றாக இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடைகின்றன. ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த திரை மிருதங்கம் போல் மெலிதான தோலாகும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு மூளையைச் சென்றடையும். மூளை ஒரு அதிநவீன கணினி போல், இதை ஒலியின் உணர்வாக எமக்கு மாற்றி தருகிறது. அதாவது இது மின்சார ஒலிபெருக்கி [Microphone / மைக்ரோஃபோன்] போல் தொழிற்படுகிறது எனலாம். காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். உதாரணமாக காது கால்வாயை [ear canal] துப்பரவாக வைத்திருக்க வேண்டும். மேலும் கேட்டல், நுகர்தல், சுவைத்தல் [காது, மூக்கு, தொண்டை / வாய்] ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. உதாரணமாக செவித்திரைக்கும் (Tympanic Membrane) உட்செவிக்கும் (Inner Ear) இடையில் உள்ள பகுதியான நடுச் செவியில் (Middle Ear) தான் நடுச்செவி குழாய் [Eustachian Tube or middle ear tube] உள்ளது. இது மூக்குக்கும் தொண்டைக்கும் நீண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் தடை அல்லது அடைப்பு, காதின் கேட்கும் திறனைப் பாதிக்கக் கூடியது. மனிதர்கள் மூப்படைய, செவிப்பறையும் ['eardrum' காது நடுச் சுவர்] தடிப்பாகவும் மற்றும் அதிர்வது கடினமாகவும் மாறுகிறது. நடுச்செவியின் உள்ளே உள்ள எலும்புகளும் ஒன்றுக் கொன்று இணைந்து [get fused] தன்பாட்டில் அதிராமல் [vibrate] விடலாம். இதனால், உட்செவியின் நரம்பு தொகுதி [inner ear nervous system] சரியாக தொழிற் படாமல் போகலாம். அது மட்டும் அல்ல வேறு செயலிழப்புகளும் [malfunction] ஏற்படலாம். காது கேளாமைக்கு ஒரு மாற்று வழியாக கேள் உதவிக் கருவிகள் [hearing devices / செவிப்புலன் உதவி சாதனம்] இன்று பயன் படுத்தப் படுகின்றன. இது மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். கேட்கும் திறனை மேம்படுத்துவதற்காக இக்கருவி மூன்று கட்டங்களினூடாக அல்லது பகுதிகளினூடாக ஒலியினை பெருக்குகிறது. காது கேள் கருவியில் ஒரு சிறிய ஒலிவாங்கி [microphone ] ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. இந்த சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது [amplifier] அதிகரிக்கச்செய்கிறது. அதன் பின் ஒலிபெருக்கி [speaker] ஒன்று காதுக்குள் பெருக்கப்பட்ட ஒலியை [amplified sound] ஏற்படுத்துகிறது. இவ்வாறு காது குறைபாட்டை செவிப்புலன் உதவி சாதனம் நிவர்த்தி செய்கிறது. [மூலம்: ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம்" "பூவுக்குள் ஏனப்பா பூகம்பம் பூரியரென்று யார் சொன்னது? பூவையர் என்றால் கேவலமா பூத்துக்குலுங்குவது அழகு மட்டுமா?" "மண்ணில் வளத்தைக் காண்பவனே பெண்ணில் வளமோ ஏராளம்! ஆண்களின் இன்பப் பொருளல்ல கண்கள் அவர்களே வாழ்வில்!" "சிவன்-பார்வதி கதை தெரியாதோ சித்தத்துடன் சமஉரிமை வழங்காயோ? சினம்கொண்டு அவள் எழுந்தால் சிதறிப்போவாய் வாழத் தெரியாமல்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பூரியர் - இழிந்தோர், கீழ்மக்கள்
  18. இது தமிழ் சினிமாவில் வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் காட்சிகள் ஆனால் உண்மையில் , ஆண்மை என்றால் என்ன ? ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும். Masculinity (also called manhood or manliness) is a set of attributes, behaviors, and roles associated with men and boys. Masculinity can be theoretically understood as socially constructed, and there is also evidence that some behaviors considered masculine are influenced by both cultural factors and biological factors. அதாவது, ஆண்மை என்பது ஆண் தன்மை, வலிமை மற்றும் வீரத்தை குறிக்கும். இது பொதுவாக ஆண்களின் உடல் மற்றும் மன வலிமையை குறிக்கின்றது என்றும் குறிக்கலாம். பெண்கள் [மனைவி, காதலி என்ற பெண்கள்] விரும்புவது உண்மையான நேர்மையான ஒழுக்கமான ஆண்மையை, முரட்டு ஆண்மையை அல்ல?? நன்றி
  19. "முதியோர்களின் வாழ்வின் சில நிகழ்வுகள்" / உராய்வு [Events in senior's everyday life / Friction] கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து இவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமையாகும். பொதுவாக 65 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் சிலவேளை 'தனக்கு வயதாகி விட்டதே என்று கவலைப்படுவதும் உண்டு. இது இயற்கையின் நியதி என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது. எப்படியென்றாலும் இன்று முதியோர்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது வெளியேயோ எதாவது ஒன்றை கையாளும் பொழுது, தமக்கு வயது போய்விட்டதே என்ற உணர்வாலும், வயதிற்கு ஏற்ற பலயீனத்தாலும், மிகவும் கவனமாக அவதானமாக, மெதுவாக, தமது உடல் நிலையை கவனத்துக்கு எடுத்து, அதை செயல்படுத்துகிறார்கள். முதியோர்கள் மிகவும் அபாயகரமான மற்றும் அபாயமற்ற விபத்துக்கள் போன்றவற்றை [fatal and non fatal accidents] பொதுவாக விழுவது மூலம் [falls] அடைகிறார்கள். அது மட்டும் அல்ல , 65 அகவைக்கு மேற்பட்டோர்களில் , முக்கால் வாசி பேர் [almost three quarters] அதிகமாக கை, கால், தோள்களில் [ arms legs and shoulders] காயத்துக்கு அல்லது வலிகளுக்கு உள்ளாகிறார்கள். அப்படியான ஒரு விபத்து முதியோர்களிடம் ஏற்படின், அதனால் காயங்கள் [injuries] எதாவது ஏற்படின், அது நீண்ட காலம் குணமடைய எடுக்கலாம், சிலவேளை அது முற்றாக குணமடையாமல் கூட போகலாம்? மேலும் முதியோர்கள் பொல்லு [பொல்லுத்தடி / walking stick] அல்லது சக்கர நாற்காலி [wheelchair] போன்றவற்றை தம் அசைவுக்கு [moving around] துணையாக மற்றும் இலகுவாக இருப்பதற்காக, அதிகமாக பாவிக்கிறார்கள். சில முதியோர்கள் வாகனமும் செலுத்துகிறார்கள். எனவே இவை எல்லாவற்றிலும் உராய்வு அல்லது உராய்வு விசை [frictional force] முக்கிய பங்கு அளிக்கிறது. உதாரணமாக, ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது சறுக்கும்போது, இரு தொடு பரப்புகளுக்கிடையே செயல்படும் விசை உராய்வு விசையாகும். பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் இந்த உராய்வு விசை செயல்படும் என்பது குறிப்பிடத் தக்கது. நாம் எம் இளம்பிராயத்தில் இருந்து உராய்வு என்ற சொல்லை கேள்விப்பட்டு இருந்தாலும், உராய்வு என்றால் என்ன ? விசை என்றால் என்ன ? மற்றும் இவையை நாம் எப்படி எம் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பு படுத்தலாம் என்பது, எல்லோருக்கும் தெரியும் என்று கருதமுடியாது. ஒரு பொருத்தமான உதாரணமாக, தடுப்பக்கருவியை [பிரேக்கைப் / brake] பயன்படுத்துவதன் மூலம் ஒரு வாகனத்தின் வேகத்தை வீதியில் குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவதை குறிக்கலாம். இன்னும் ஒரு ஆச்சரியமான உதாரணமாக, ஒரு கிராம புரத்தை கருத்தில் கொள்வோம். வயல் வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கட்டிப் போடும்போது நீளமான கயிற்றைக் கொண்டு கட்டுவார்கள். சில சமயம் கம்புகளில் முடிச்சுகள் போட்டுக் கட்டாமல், முளைக்கம்பு மீது நான்கைந்து சுற்றுகள் மட்டுமே சுற்றிவிட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுவும் அவிழாமல் இருக்கும். முடிச்சுகள்தான் அவிழாமல் இருக்கிறது என்று நினைத்தால், முடிச்சு போடாமலேயே கயிறுகளும் அவிழ்வதில்லை. அது ஏன்? இதற்குக் காரணம், நூலுக்கும் பொருளுக்கும் உள்ள உராய்வு விசைதான். இதனால்தான் முடிச்சுகள் அவிழ்வதில்லை. உராய்வு விசையை கவனத்தில் எடுத்தால், அது உராயும் இரு மேற்பரப்புகளின் தன்மையிலும், மற்றும் அதன் பொருளிலும் [The materials that are in contact and the nature of their surfaces] தங்கி உள்ளது தெரியவரும். உதாரணமாக ஒரு மென்மையான மற்றும் ஈரமான தரையில் நடக்க கடினமாக இருப்பதும் மற்றும் வாழைத்தோலில் மிதித்து நழுவி விழுவதும் இதனால் ஆகும். மேலும் ஒரு வேளை உராய்வு விசை முற்றிலும் இல்லாமல் இருக்குமானால், மலைகள் மீது திரண்டு நிற்கும் பாறைகள் உருண்டு விழும். நடக்கவோ உட்காரவோ ஓடவோ முடியாமலும் சுவர்க் கடிகாரங்களை மாட்ட ஆணி அடிக்க முடியாமலும் பூட்டைப் பூட்ட முடியாமலும் (பூட்டு செய்யவே முடியாது) போகும். உராய்வை வெல்ல அல்லது தோற்கடிக்க நாம் அதற்க்கு எதிராக கடும் வேலை செய்யவேண்டி இருந்தாலும், பல வேளைகளில் அது எமக்கு உதவும் விசையாகவும் உள்ளது. உதாரணமாக, எமது சப்பாத்துக்கும் தரைக்கும் இடையிலான உராய்வு, எம்மை வழுக்குவதில் இருந்து தடுக்கிறது [friction between our shoes and the floor stop us from slipping]. அது போல, காரின் சில்லுக்கும் வீதிக்கும் இடையில் உள்ள உராய்வு காரை சறுக்குவதில் இருந்து தடுக்கிறது [friction between tyres and the road stop cars from skidding]. அவ்வாறே பிரேக்குக்கும் மற்றும் சக்கரத்துக்கும் இடையில் உள்ள உராய்வு வண்டியை நிற்பாட்டிட அல்லது மெதுவாக்க உதவுகிறது [friction between the brakes and wheel help bikes and cars to slow down]. எனவே இங்கு எல்லாம் உராய்வு விசை பயனுள்ள விசையாக எமக்கு தொழிற்படுகிறது. கார் அல்லது சக்கர நாற்காலியின் தடுப்பக்கருவியை அழுத்தும் பொழுது, பிரேக் பட்டைகள் [brake pads] சக்கரத்தை இறுக்கி பிடிக்க [grip the wheel], டயர்களும் இதனால், தரையை இறுக்க பிடிக்கிறது. இறுதியாக வண்டி ஓய்விற்கு வருகிறது. எனவே பிரேக் பட்டைகள் மற்றும் டயர்கள் [brake pads and tyres] நல்ல தரத்தில் இருப்பது அவசியம். அப்ப தான் குறுகிய நேரத்தில் வாகனத்தை ஓய்வுநிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை முதியோர்கள் கட்டாயம் புரிந்து இருக்க வேண்டும். இதன் மூலம் தமக்கு ஏற்படும் தேவையற்ற விபத்துகளை அவர்கள் தடுக்கமுடியும். உங்கள் சப்பாத்துக்கும் தரைக்கும் இடையில் உராய்வு இல்லாமல், உங்களால் என்றுமே முறையாக நடக்க முடியாது. உதாரணமாக உராய்வு இல்லையென்றால், நாம் எல்லோரும், எமக்கு மேல் எந்த கட்டுப்படும் இல்லாமல் வழுக்கிக்கொண்டு இருப்போம். நீங்கள் நடக்கும் பொழுது, முன்னோக்கி போக முயற்சிப்பதற்காக. நீங்கள் உங்கள் பாதத்தை பின்னுக்குத் தள்ளுகிறீர்கள். உராய்வு உங்கள் சப்பாத்தை தரையுடன் வைத்திருப்பதால் [friction holds your shoe to the ground], உங்களால் நடக்க முடிகிறது. எனவே சவக்காரம் படிந்த அல்லது எண்ணெய் படித்த தரை, [soapy or oily surfaces] மிகவும் குறைந்தளவு உராய்வை கொண்டு இருப்பதால், அப்படியான வழுக்கும் மேற்பரப்புகளில் [slippery surfaces] நடப்பதை கட்டாயம் முதியோர் தவிர்க்கவேண்டும். இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று உராயும் பொழுது கைகள் சூடு ஆவதை உணர்ந்து இருப்பீர்கள் [hands feel warm]. உராய்வே இதற்க்கு பொறுப்பாகும். அதாவது இரு கைகளும் ஒன்றுக்கு ஒன்று தேய்க்கும் பொழுது, அங்கு சில அளவு எதிர்ப்பு ஏற்படுகிறது [some amount of resistance]. ஆனால் அதே கையை, சும்மா ஒன்றாக இணைக்கும் பொழுது [just put your hands together], அங்கு ஒரு எதிர்ப்பும் இருக்காது. எனவே எந்த அளவு வெப்பமும் [no amount of warmness] கையில் ஏற்படவில்லை. இவ்வாறு மேலும் பல நிகழ்வுகள் உராய்வு விசை மூலம் அன்றாட வாழ்க்கையில் நடை பெறுகின்றன. அவை தீக்குச்சி கொளுத்துதல் [Lighting Matchsticks], நடத்தல் [Walking], எழுதல் [Writing], ஓட்டுதல் [Driving], சறுக்குதல் [ஸ்கேட்டிங் / Skating], சுவரில் ஒரு ஆணியைத் துளைத்தல் [Drilling a nail into the wall], கம்பளத்தை ஒரு குச்சியால் அடிப்பதன் மூலம் தூசி அகற்றல் [The dusting of the carpet by beating it with a stick], இஸ்திரியிடல் [Ironing a shirt], பொருள்களைப் பிடித்துக் கொள்ளுதல் [Holding onto objects], உங்கள் விரலில் மோதிரம் [Ring on your finger] மற்றும் இவை போன்றவையாகும். அதில் சிலவற்றை நாம் இங்கு விளக்கமாக தந்துள்ளோம். இதை ஆதாரமாக கொண்டு, மற்றவற்றை நீங்கள் புத்தாகங்கள் ஊடாகவோ அல்லது வலைத்தளங்களிலோ அறியலாம். அது உங்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், உங்களை மேலும் மேலும் அறியத் தூண்டும். [மூலம், ஆங்கிலத்தில் என் அண்ணா, கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம் மொழிபெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.