அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,
நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.
ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட தமிழனை தான் நினைத்த மாத்திரத்தில் கைது செய்யவோ / கடத்தவோ முடியும் என்று, அதுவும் வெளிநாட்டு தலைவர்கள் வந்து சென்று சில நாட்களில், உலக ஊடகங்களே உற்று நோக்கும்போதே செய்ய முடியும் என்று சிங்களம் காட்டிய போது, அதை எங்கள் தமிழ் ஊடகங்கள் பயன்படுத்த தவறி விட்டனவே என்று நான் கவலையுடன் இருந்த போது உங்கள் விடுதலை இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.
இந்த வேளையில் உங்கள் விடுதலைக்கு உதவியவர்களுக்கு உங்கள் யாழ் கள உறவாக நானும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.
வன்னி எங்கும் எத்தனையோ தமிழ் மக்களை பலிகொடுத்த போது உலகெங்கும் தொலைபேசி எடுத்து மக்கள் கதறி அழுதபோது பேசாமல் இருந்த உங்கள் நண்பர் நோர்வே சுந்தரலிங்கம், வன்னிவிளாங்குளத்தில் உங்களுக்கு நேர்ந்த கொடுமையை இருபது வினாடிகளில் நோர்வேயில் இருக்கும் உங்கள் நண்பர் சுந்தரலிங்கத்துக்கு எடுத்து சொன்னபோது (கவனிக்க அந்த மக்களுக்கு உங்களின் நண்பரின் தொலைபேசி இலக்கம் கிடைத்த விதம் உங்களுக்கு தான் தெரியும், சில வேளைகளில் நீங்கள் தொலைபேசி எடுக்க சொல்லித்தான் கத்தினீங்களோ TID இற்கு தான் வெளிச்சம்) உங்கள் நண்பர் ஊடகங்களுக்கு அறிவித்தமைக்கு முதலில் நன்றி.
மக்களை கதற கதற கொன்ற சிங்கள பயங்கரவாதிகளின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, உங்களின் கத்தலை கேட்டு உங்கள் அம்மாவின் சமாதிக்கு அழைத்து சென்றமைக்காக அவர்களின் மனித நேயத்துக்காக நன்றிகள். (நீங்கள் உங்கள் அம்மாவின் சமாதிக்கு உண்மையிலேயே சென்றிருந்தால் உங்கள் அம்மாவின் ஆன்மா என்னை மன்னிக்கட்டும்.)
எத்தனயோ பள்ளிவாசல்கள் உடைக்க பட்ட போதும், ஹலால் எதிர்ப்பு என்ற போர்வையில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களின் கடைகள் எரிக்கபட்ட போதும், கிழக்கில் முஸ்லிம் கலவரங்கள் நடந்த போதும் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத அமைச்சர் ஹக்கீம், உங்களுக்காக அமைச்சு பதவியில் இருந்துகொண்டே அரசை எதிர்த்து பேசியமைக்காக எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களைப்போல எத்தனயோ தமிழ் கவிஞர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், சிங்கள அரசால் கொல்லப்பட்டபோது, அவர்கள் நல்லவர்கள், பொய் பேசாதவர்கள் என்று ஒரு வார்த்தை கூட பேசாத பஷீர் சேகுதாவுத் அவர்கள், உங்களை புகழ்ந்தமைக்காக நன்றிகள்.
நடுநிலை வகிக்கவந்த தங்களை கூட பொருட்படுத்தாமல், பச்சை குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் சிங்கள பேரினவாத அரசாங்கம் குண்டு வீசி அழிப்பதை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தும் கூட , ஒரு சொல்லுக்காக கூட வாய்திறக்காத தோழர் எரிக் சோல்கைம்,
கொட்டும் பனியிலும் தங்களின் உறவுகளுக்காக ஆயிரமாயிரம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் போராடிய போது மௌனமாக இருந்த தோழர் எரிக் சோல்கைம், ராஜதந்திர வழமைக்கு மாறாக உங்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து அறிக்கை விட்டமைக்காக என உளப்பூர்வமான நன்றிகள்.
வெள்ளிக்கிழமை கைது செய்தால் இரண்டு நாட்கள் அடைத்து வைத்திருந்து திங்கட்கிழமை தான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த முடியும் என்று இலங்கை சட்டங்கள் தெரிந்த உங்களை பற்றி கூட கொஞ்சமும் அறியாமல், ஒரு தமிழன் கைது செய்யபட்டிருக்கிறான் மனித உரிமைகள் மதிக்கபடுவதில்லை என்பதற்கு பதிலாக, இந்திய தேசிய விருது நடிகர்,புகழ் பெற்ற கவிஞர் கைது என்று கொள்ளை எழுத்தில் வியாபாரம் செய்த ஊடக நண்பர்களுக்கும் புரட்சி வாதிகளுக்கும் நன்றி.
முக்கியமாக மெழுகுதிரி வெளிச்சத்தில் என்னை ஆதவன் பத்திரிகைக்காக சிங்கள அடக்குமுறைக்கு எதிராக பேட்டி எடுக்க வந்த மஞ்சுள வெடிவர்த்தன, இன்று எத்தனையோ தமிழ் இளைஞர்கள் குற்றங்களே செய்யாமல் சிறையில் வாட, உங்களுக்காக விரைந்து செயற்பட்டமைக்காக நன்றிகள்.
இதைவிடவும், வெள்ளை கொடியுடன் வந்தவர்களை கதற கதற சுட சொன்னவரும், தமிழ் ஆண்களின் இரத்தம் கடலுக்கு பெண்கள் உங்களுக்கு என்று, சிங்கள படையினருக்கு கட்டளை இட்டு எத்தனையோ இசைபிரியாக்களை கத்த கத்த அழிப்புக்கு மூல காரணமான கோத்தபாய, நீங்கள் கத்த கத்த உங்களின் இரத்தத்தை கடலுக்கு காணிக்கையாக்காமல் விட்டதுக்கு கோடான கோடி நன்றிகள். (சில வேளைகளில் அவனுக்கு தெரிந்திருக்குமோ நீங்கள் மற தமிழன் இல்லை என்று )
இறுதியாக நீங்கள் விடுதலையாகி வந்ததும், முதல் அறிக்கை என்ற பெயரில் எண்ணற்ற அறிக்கைகளை விடப்போறீங்கள் என்று உங்கள் முதாலவது அறிக்கையிலேயே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள்.
இங்கு நான் யாருக்காவது நன்றி கூறாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும்.
இன்னும் சில நன்றி உடையவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களின் பாதுக்காப்பை உறுதி செய்தபின்னர் இரண்டு வாரங்களில் மிச்ச பேருக்கு நன்றி சொல்லலாம் என்று விட்டிருக்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
பகலவன்.
பிற்குறிப்பு :
ஜெயபாலன் ஐயா,
உங்களை கருணாவிடம் இருந்து காப்பாற்றி உங்களை யார் என்று இப்போ உலகுக்கு காட்டியமைக்காக பொட்டம்மானுக்கும் நன்றி.
உங்களை வைத்தியசாலையில் வைத்து கொல்லாமல் விட்ட குமர என்கிற 74792 இலக்க பொலிஸ்காரர் இற்கும் நன்றி.
இன்னும் இரண்டு ஒரு வாரங்களில் நான் இலங்கைக்கு சென்று தமிழ்-சிங்கள நல்லிணக்கம் பற்றி பேச விரும்புவதால், என்ன மாதிரியான முன்னேற்பாட்டுடன் செல்ல வேண்டும் என்று உங்கள் ஆலோசனை தேவை.
அத்துடன், எனக்கு தமிழ் அரசியல் படிக்க நிறைய நாள் ஆசை. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் பகுதிநேரமாக படிக்க கேட்ட போது, அவர் தனது வயதையும், நேரமின்மையும் சொல்லி உங்களை கேட்டு பார்க்க சொன்னார்.
உங்களுக்கு நேரமிருப்பின் இந்த மடலுடன் சேர்த்து அதற்கும் பதில் தாருங்கள் ஐயா.