இதயம் காக்கும் இதமான உணவுகள் - 30 வகை
செம்பருத்திப்பூ பானம் தேவை: சுத்தம் செய்த ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தண்ணீர் - 500 மில்லி.
செய்முறை: செம்பருத்திப்பூ இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். ஆறியதும் வடிகட்டவும். அதனுடன் பாதாம் பிசின் சேர்த்துக் கலந்து பருகவும். பயன்: ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், பதற்றம், அதிக கோபம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. கோபத்தைத் தூண்டும் ஹார்மோனைச் சமன் செய்கிறது. இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால் இதயத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
வாயு முறுக்கி பால் தேவை: பூண்டு - 3 பல் சிறிது தண்ணீர்விட்டுக் காய்ச்சிய பால் - 200 மில்லி பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் மருதம்பட்டைப் பொடி - கால் டீஸ்பூன். செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சவும். அதனுடன் பூண்டு, பனங்கற்கண்டு, மருதம்பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி இளஞ்சூடாகப் பருகலாம். இதை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பருகலாம். பயன்: இது ஒரு சிறந்த வாயு முறுக்கியாகச் செயல்படும். அதாவது உடலில் உள்ள வாயுக்களை நீக்கும். கபத்தைக் குறைக்கும். பித்தத்தைச் சமன் செய்யும். வாயு பிரச்னையால் வரும் நெஞ்சுவலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும்.
கொள்ளு சூப் தேவை: கொள்ளு - 50 கிராம் பூண்டு - 8 பல் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) இந்துப்பு - 2 சிட்டிகை அரிசி கழுவிய நீர் - 3 கப். செய்முறை: கொள்ளுப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் ஊறவைத்த கொள்ளு, பூண்டு, இஞ்சித் துருவல், மஞ்சள்தூள், இந்துப்பு, தோலுரித்த சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, மிளகு - சீரகத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 5 விசில் வரை விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் நன்கு கடையவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும். பயன்: இந்தச் சூப்பை வாரத்தில் மூன்று நாள்கள் பருகிவர தேவையற்ற கொழுப்பு நீங்கி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். கபத்தைக் குறைத்து நுரையீரல் சரிவர இயங்க உதவும். கெட்ட கொழுப்பைக் கரைப்பதன் மூலம் இதயத்துடிப்பு சீராக இயங்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும்.
புரோக்கோலி சூப் தேவை: நறுக்கிய புரோக்கோலி - ஒரு கப் பூண்டு - 10 பல் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு, வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன் ஆரிகானோ - ஒரு டீஸ்பூன் அல்லது காய்ந்த துளசி இலை - சிறிதளவு எலுமிச்சைப் பழம் - பாதி அளவு (சாறு பிழியவும்) பட்டை - 2 சிறிய துண்டு சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்). செய்முறை: குக்கரில் புரோக்கோலியுடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, இந்துப்பு, பட்டை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து மத்தால் ஒரு சுற்று கடையவும். அதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், ஆரிகானோ, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வடிகட்டாமல் இளம் சூடாகப் பருகலாம். பயன்: காலை உணவுக்குப் பதிலாக அல்லது 11 மணியளவில் இதைப் பருகலாம். புரோக்கோலி உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகிறது; கொலஸ்ட்ரால் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் வலிமை பெற மிகவும் துணைபுரிகிறது. இதில் அதிக கால்சியம், நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
ஹார்ட் ஸ்பெஷல் கிரீன் டீ தேவை: கிரீன் டீ இலைகள் - ஒரு டீஸ்பூன் ஏலக்காய் - ஒன்று நெல்லிமுள்ளி - 10 கிராம் வெட்டி வேர் - 5 கிராம் தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீருடன் ஏலக்காய், வெட்டி வேர், நெல்லிமுள்ளி சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதனுடன் கிரீன் டீ இலைகள் சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம் (நெல்லிமுள்ளி சேர்க்காவிட்டால் வடிகட்டிய பிறகு பாதியளவு எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து சேர்த்துக் கலக்கவும்). விரும்பினால் சிறிதளவு தேன் சேர்த்துப் பருகலாம். இதை உணவுக்குப்பின் 60 மில்லி வரை வாரம் மூன்று நாள்கள் பருகலாம். பயன்: இந்த டீ இதயப் படபடப்பை சரி செய்யும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடியது. தேவையற்ற எடை அதிகரிப்பைத் தடுக்கும். வெட்டி வேரின் நறுமணம் மன அமைதிக்கு உதவும். ஏலக்காய், சிறுமூளை பாதிப்பைத் தடுக்கும்.
இதயம் காக்கும் பொடி தேவை: தாமரைப்பூப் பொடி, ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூப் பொடி, மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராகிழங்குப் பொடி, சுத்தமான விரளி மஞ்சள் பொடி - தலா 10 கிராம் தேன் - அரை டீஸ்பூன். செய்முறை: தாமரை, செம்பருத்தி, மருதம் பட்டை, அமுக்கிராக்கிழங்கு, மஞ்சள் பொடி வகைகளை ஒன்றாகக் கலக்கவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துக் குழைத்துத் தினமும் இரவு படுப்பதற்கு முன் உண்ணலாம். 200 மில்லி தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் காய்ச்சி 100 மில்லி ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி தேன் சேர்த்துக் காலையில் குடிக்கலாம். பயன்: மேலே கூறிய அனைத்துப் பொடிகளிலும் இதயம் காக்கும் சத்துகள் அடங்கியுள்ளன. இதயம் திறம்படச் செயல்பட இந்தப் பொடி உதவும்.
பசலைக்கீரை ஆளிவிதை பானம் தேவை: நறுக்கிய பசலைக்கீரை - 2 கைப்பிடி அளவு வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் இந்துப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதனுடன் பசலைக்கீரை, புதினா இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் அப்படியே மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி, இந்துப்பு. எலுமிச்சைச் சாறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 100 மில்லி அளவு பருகலாம். பயன்: இதய நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இந்தப் பானம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இது எடை அதிகரிப்பைத் தடுக்கும். மேலும், இரும்புச்சத்து, போலிக் அமிலம் இதில் அதிகமுள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
இஞ்சி பூண்டு வடிநீர்
தேவை: தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு - தலா 100 கிராம் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தேன் - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 3 டம்ளர். செய்முறை: இஞ்சியுடன் பூண்டு சேர்த்து இடிக்கவும். அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் கலக்கவும். தினமும் காலை இந்த வடிநீரை, இளம் சூடாக வெறும் வயிற்றில் 2 டேபிள்ஸ்பூன் பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. பயன்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். செரிமான மண்டலத்தைச் சுத்தம் செய்யும். அஜீரணப் பிரச்னையால் வரும் வாயுத் தொல்லை மற்றும் வாயு பிடிப்பால் வரும் இதயவலிக்கான சிறந்த நிவாரணியாக விளங்கும். இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் நடைபெற உறுதுணை புரியும்.
நெல்லிக்காய் கறிவேப்பிலை சாரம் தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - கால் டீஸ்பூன் தேன் (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இதைக் காலை, மாலை என இருவேளையும் 100 மில்லி பருகலாம். விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம். பயன்: இது ஒரு காயகல்பமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; ரத்தக் கொதிப்பைச் சீராக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ரத்த சோகையை விரட்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.
ஹெல்த்தி மோர் தேவை: நன்கு நீர்விட்டுக் கடைந்த மோர் - 200 மில்லி தோலுடன் சேர்த்து அரைத்த வெள்ளரிக்காய்ச்சாறு - 50 மில்லி சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி - தலா கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கலவை - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: நீர் மோருடன் வெள்ளரிக்காய்ச்சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கலாம். 100 மில்லி முதல் 200 மில்லி வரை காலை 11 மணி அளவிலும் அல்லது மாலை 4 மணி அளவிலும் பருகலாம். பயன்: இதில் நுண்ணுட்டச்சத்துகள் அதிகம். மாரடைப்பு வராமல் தடுக்கும். உச்சிமுதல் பாதம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் புத்துயிர் கொடுக்கும். இதில் உள்ள தாது உப்புகள் மற்றும் புரோட்டீன், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்புக் காரணியாக விளங்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்னைகளுக்கும் தீர்வாகும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
அகத்திக்கீரை நீர்ச்சாறு தேவை: அகத்திக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் - 12 (தோலுரிக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சீரகம், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்) பூண்டு - 5 பல் இந்துப்பு - கால் டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப். தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: குக்கரில் அகத்திக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், இந்துப்பு, பூண்டு, மிளகுத்தூள், சீரகம், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நான்கு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் கடையவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கீரையுடன் கலக்கவும். இதனை அப்படியே ஒரு கப் சாப்பிடலாம். அல்லது சாதம், சப்பாத்தி, இட்லி போன்ற வற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். பயன்: அகத்திக்கீரை பித்த சூட்டைக் குறைக்கும். தோல் நோய்களுக்கும் மருந்தாகும். இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை நீங்கும்; நெஞ்சடைப்பு அகலும்; மலச்சிக்கல் சீராகும்.
முருங்கைக்கீரை மசியல் தேவை: முருங்கைக்கீரை (பூக்களுடன்) - ஒரு கப் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப் சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) இந்துப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு.
தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: துவரம்பருப்புடன் பாசிப்பருப்பைச் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, பருப்பு வகைகள், தேவையான அளவு தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், இந்துப்பு சேர்த்துக் கலந்து மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கரண்டியால் நன்கு மசிக்கவும். சூடான, சுவையான, சத்தான, ஆரோக்கியமான முருங்கைக்கீரை மசியல் தயார். பயன்: இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு படிமானங்களைக் கரைக்கும். இதயத்துக்குப் பாதுகாப்பாக அமையும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்; நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
ஸ்ட்ரெஸ் கிளியரன்ஸ் டிரிங்க் தேவை: தூய்மையான விரளி மஞ்சள்தூள் - 4 கிராம் தூய்மையான சந்தனம் - 4 கிராம் தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி - 4 கிராம் அதிமதுரப் பொடி - 4 கிராம் அமுக்கிராக்கிழங்குப் பொடி - 5 கிராம் உலர் திராட்சை - 5 தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சந்தனம், தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, அதிமதுரப் பொடி, அமுக்கிராக் கிழங்குப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதை 30 முதல் 50 மில்லி அளவு உணவுக்குப் பிறகு அருந்தி வரலாம். பயன்: மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படாமல் இருக்கப் பெரிதும் துணைபுரியும். ஹார்ட் அட்டாக் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்ட்ரெஸ் ஆகும். இதைச் சரிசெய்ய இந்த டிரிங்க் உதவும். குறிப்பு: தேவையான பொருள்களில் கொடுத்துள்ள அனைத்து பொருள்களும் 50 கிராம் அளவில் வாங்கி ஒன்றாகக் கலக்கவும். அதிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவு 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்தும் பருகலாம்.
ஹெர்பல் பொடி மிக்ஸ் தேவை: மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் - தலா 10 கிராம் தேன் - ஒரு டீஸ்பூன். செய்முறை: மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சேகரிக்கவும். அரை டீஸ்பூன் பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். பயன்: இந்தப் பொடியைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, இதயம் பலவீனம் அடைவதைத் தடுக்கும். சீதாப்பழ இலை பொடியில் பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை (உப்பு) உறிஞ்சி ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது இதயத்தின் செயல்பாடும் திறம்பட இருக்கும்.
தாமரைப்பூ சர்பத் தேவை: வெண்தாமரை (அ) செந்தாமரைப்பூ - ஒன்று (இதழ்கள் மட்டும்) பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) தண்ணீர் - 200 மில்லி மருதம்பட்டைப் பொடி - 10 கிராம். செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் தாமரைப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறவிடவும். அதனுடன் மருதம்பட்டைப் பொடி, பாதாம் பிசின் சேர்த்து வாரம் இருமுறை 100 மில்லி அளவு பருகி வரலாம். பயன்: இதயம் பலப்படும். இதயம் சம்பந்தமான நோய்கள் விலகும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இது எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்தாக அமைந்த உணவாகும். இதைத் தயாரிக்க வெண்தாமரைப்பூவே சிறந்தது.
மருதம்பட்டை பானம் தேவை: மருதம்பட்டை - 10 கிராம் தண்ணீர் - 200 மில்லி சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்கள் - ஒரு டீஸ்பூன் பனை வெல்லம் அல்லது தேன் - ஒரு டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீருடன் மருதம்பட்டை, சுக்குத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்துக் குறைந்த தீயில் கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றியதும் வடிகட்டவும். இத்துடன் பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இதன் சுவை சற்றுச் துவர்ப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் பானமாக அமையும். பயன்: ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குவரும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீங்கும். மருதம்பட்டை மற்றும் ரோஜா சேர்ந்த கலவை மன அமைதிக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் உதவும். இதயப் படபடப்பை நீக்கும். உடல் எடை மற்றும் வயிற்றுப்பகுதி சதையைக் குறையும். இதய இயக்கம் சீராகி, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.
சீரகப் பொடி பானம் தேவை: சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன் துளசி இலைகள் - 5 பட்டை - 2 சிறிய துண்டு ஏலக்காய் - 2 பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாகச் சூடு செய்யவும். அதனுடன் சீரகப் பொடி, துளசி இலைகள், பட்டை, ஏலக்காய் சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் சூடு செய்து இறக்கி மூடிவைக்கவும். 2 மணி நேரம் கழித்து மீண்டும் லேசாக ஒரு நிமிடம் சூடு செய்து வடிகட்டவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து மாலை அல்லது இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் குடிக்கலாம். பயன்: நுரையீரல் சம்பந்தமான நோய்கள் விலகும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கம் மற்றும் நுரையீரல் திறம்பட செயல்படுதல் இவை இரண்டுமே இதயத்துக்கு முக்கியமான செயல்பாடுகளாகும். எனவே, இந்தச் சீரகப் பொடி பானம் இதயத்தை வலுவூட்டி, திறம்படச் செயல்பட வைக்கும். மேலும், ரத்தக் கொதிப்பும் சீராகும்.
திராட்சை கோசம்பி தேவை: விதையுள்ள பன்னீர் திராட்சை - ஒரு கப் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம் - தலா கால் டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: பன்னீர் திராட்சையுடன் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து வடிகட்டாமல் பருகவும். இதில் சுவைக்காக உப்பு, சர்க்கரை சேர்க்கக் கூடாது. ஏனென்றால் இது மருந்தாகும் உணவாகும். இதனை அப்படியே உண்ணும்போது முழுப் பயனையும் நம் இதயம் பெறும். பயன்: இது வைட்டமின் பி, சி மற்றும் போலிக் ஆசிட், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துகளைப் பெற்றுள்ளது. இதயத்துக்கு வலுவூட்டவும், ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்யவும் இது உதவுகிறது.
அறுகம்புல் சாறு தேவை: புதிதாகப் பறிக்கப்பட்ட அறுகம்புல் - அரை கட்டு தேன் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) இந்துப்பு - ஒரு சிட்டிகை சீரகத்தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை: அறுகம்புல்லை நன்றாகச் சுத்தம் செய்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் மேலும் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு, சீரகத்தூள், தேன் சேர்த்துக் கலக்கவும். இதைத் தினமும் 100 மில்லி குடித்து வர, இதயம் வலுப்பெறும். பயன்: அறுகம்புல்லில் நார்ச்சத்தும் பல நுண் ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை கொழுப்பைக் கரைக்கவும் ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கவும் பெருந்துணை புரிகின்றன. இதய படபடப்பு குறையவும், ரத்த சுத்திகரிப்புக்கும், இதய தசைகளில் படிந்துள்ள கொழுப்பு படிமானங்களை அகற்றவும் இது உதவுகிறது.
துளசி மஞ்சள் சாரம் தேவை: துளசி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு சுத்தமான விரளி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி சீரகம் - கால் டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் துளசி இலைகள், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். இதைத் தினமும் காலை அல்லது மாலை வேளையில் 100 மில்லி வரை குடிக்கலாம். பயன்: துளசி மற்றும் மஞ்சளில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நுரையீரல் நோய்த்தொற்றைச் சரிசெய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத் துடிப்புக்கு மிகவும் உறுதுணை புரிகிறது. மூளை செல்கள் சிதைவடையாமல் காத்து மன அமைதிக்கும் வழிவகுக்கிறது. செரிமான மண்டலத்தைச் சீர் செய்கிறது. மனச்சோர்வை நீக்குகிறது. இதயத்தின் படபடப்பை நீக்குகிறது. குழந்தைகளுக்கு துளசி - மஞ்சள் சாரத்துடன் சிறிதளவு பால் கலந்தும் கொடுக்கலாம்.
நெல்லிக்காய் சர்பத் தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 தோல் சீவிய இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு எலுமிச்சை (விரும்பினால்) - பாதி அளவு (சாறு பிழியவும்) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன் புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு - ஒரு சிட்டிகை ஊறவைத்த சப்ஜா விதை - கால் டீஸ்பூன் தண்ணீர் - 250 மில்லி. செய்முறை: நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கவும். அதனுடன் இஞ்சி, இந்துப்பு, புதினா, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து வடிகட்டவும். தேன், சப்ஜா விதைகள் சேர்த்துக் கலந்து பருகலாம். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம். பயன்: இதில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி எலும்புக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் இதயத்துக்கு இதமளித்து, ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் பிராண வாயுவை அதிகரித்துச் செல்களுக்கும் மூளைக்கும் புத்துணர்வு அளிப்பதால், இதயம் சீராகச் செயல்பட உறுதுணை புரிகிறது.
மோர்க் கற்றாழை தேவை: கடைந்த நீர் மோர் - 200 மில்லி சோற்றுக்கற்றாழை - ஒரு மடல் இந்துப்பு - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு. செய்முறை: சோற்றுக்கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல்லிப் பகுதியை ஐந்து முதல் ஏழு தடவை வரை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுச் சுற்றவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, இந்துப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும். இறுதியாக மோர் சேர்த்து நன்கு அடித்து எடுத்து உடனே பருக வேண்டும். பயன்: இது தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் உறுதுணை புரியும். உடல் சூட்டைத் தணிக்கும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்துக்கு வலுவூட்டும்.
ரோஜாப்பூ இயற்கை லேகியம் தேவை: நாட்டுப் பன்னீர் ரோஜா இதழ்கள் - 3 கைப்பிடி அளவு பனங்கற்கண்டுத்தூள் (அ) நாட்டுச் சர்க்கரை - 100 கிராம் தேன் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: சுத்தம் செய்த ரோஜா இதழ்களை ஜாடியில் போடவும். அதன் மீது பனங்கற்கண்டுத்தூள் அல்லது நாட்டுச் சர்க்கரை, மீண்டும் ரோஜா இதழ்கள் என மாற்றி மாற்றி நிரப்பவும். பிறகு ஜாடியைச் சுத்தமான துணியால் மூடி கட்டவும். தினமும் குலுக்கிவிடவும். மூன்றாவது நாள் காலையில் நன்கு கலந்து வெயிலில் துணி கட்டியபடியே ஒருநாள் வைத்து எடுக்கவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இயற்கை முறையில் செய்த ரோஜாப்பூ லேகியம் தயார். பயன்: இந்த லேகியம் மூளையில் செரடோனின், மெலடோனின் போன்றவை சரியான நிலையில் உற்பத்தியாக உதவுகிறது. இது மன அமைதிக்கு உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து இதயம் சீராகச் செயல்பட உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கிறது.
அங்காயப் பொடி தேவை: மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, வேப்பம்பூ - தலா 20 கிராம் தனியா (மல்லி) - 50 கிராம் மிளகு, சீரகம் - தலா 25 கிராம் காய்ந்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, தனியா, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துச் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டுச் சூடான சாதம் அல்லது இட்லியுடன் சேர்த்து உண்ணலாம். பயன்: இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. இவை இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும்; கெட்ட கொழுப்பை கரைக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றைச் சரி செய்யும். நரம்புகளுக்கு வலுவூட்டும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல் தேவை: வெற்றிலை - 10 (காம்பு, நுனி கிள்ளவும்) பன்னீர் ரோஜாப்பூ - 3 (இதழ்கள் மட்டும்) உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப) எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு சீரகம் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு சிறிய துண்டு (பொடிக்கவும்) எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக வெற்றிலை, ரோஜாப்பூ இதழ்கள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பிறகு வெல்லம், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, அரைத்தெடுத்த துவையலில் சேர்க்கவும். சாதம், இட்லி, தோசை என அனைத்துக்கும் இது சூப்பர் காம்பினேஷன். பயன்: வெற்றிலை மற்றும் ரோஜாப்பூவில் உள்ள மருத்துவக் குணங்கள் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை நீக்கி இதயத்தைப் பாதுகாத்து, பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சரி செய்யும். நுரையீரல், இதயம் சரிவர இயங்கத் துணை புரியும்.
துளசி நெல்லித் துவையல் தேவை: துளசி இலைகள் - 2 கைப்பிடி அளவு பெரிய நெல்லிக்காய் - ஒன்று (கொட்டை நீக்கி நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்) பூண்டு - 5 பல் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (அ) மிளகு - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன். செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் அல்லது மிளகு சேர்த்து வதக்கவும். பிறகு நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். இறுதியாக துளசி இலைகள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்து வைத்த துவையலில் கலக்கவும். கமகமவென்ற மணத்துடன், உடலுக்கும் மனத்துக்கும் ஆரோக்கியம் தரும் துவையல் தயார். பயன்: துளசியும் நெல்லிக்காயும் பல்வேறு சத்துகள் கொண்டவை. இவை இரண்டும் சேர்ந்து ஓர் உணவாகும்போது அது மருந்தாக வேலை செய்கிறது. நுரையீரல் மற்றும் இதயம் இவை இரண்டுக்கும் நன்மை செய்யும் விதமாக அமைகிறது.
வெந்தய மல்லி பானம் தேவை: வெந்தயம், மல்லி (தனியா), சுக்கு, விரளி மஞ்சள், சீரகம் - தலா 100 கிராம் பட்டை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தண்ணீர் - 200 மில்லி. செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயம், மல்லி, சுக்கு, மஞ்சள், சீரகம், பட்டை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தண்ணீருடன் அரைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாகக் குறைந்ததும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இளம் சூடாகப் பருகவும். இதை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அருந்தலாம். பயன்: நாம் உண்ட உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும், அதிக எடை போடாமல் தடுக்கவும் இந்தப் பானம் உதவுகிறது. மாரடைப்புக்கு முக்கிய காரணங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை ஆகும். இவற்றைச் சரி செய்து மாரடைப்பு வராமல் பாதுகாக்க இந்த வெந்தய மல்லி பானம் உதவுகிறது.
அமுக்கிராக்கிழங்குப் பொடி பால் தேவை: அமுக்கிராக்கிழங்குப் பொடி - 10 கிராம் பால் - 200 மில்லி பூசணி விதை - 10 கிராம் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 20 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் அமுக்கிராக் கிழங்குப் பொடி, பூசணி விதை, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டாமல் அருந்தவும். பயன்: உயர் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும். இதயம் சீராக இயங்க உதவும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் சோர்வு நீக்கும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வெப்பத்தைச் சீர் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
சுரைக்காய் சாரம் தேவை: சுரைக்காய்த் துண்டுகள் - ஒரு கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) இந்துப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை கலவை - ஒரு கைப்பிடி அளவு பூண்டு - 10 பல்
தண்ணீர் - 2 கப். தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: குக்கரில் சுரைக்காய்த் துண்டுகளுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பூண்டு, இந்துப்பு, தண்ணீர் சேர்த்து மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து சுரைக்காய்க் கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதை பிரவுன் ரைஸ் அல்லது சிறுதானிய சாத வகைகளுடன் மதிய உணவாகச் சாப்பிடலாம். அல்லது காலை நேரங்களில் பிரவுன் அல்லது கோதுமை பிரெட்டுடன் சாப்பிடலாம். பயன்: சுரைக்காயில் நீர்ச்சத்து, கனிமச்சத்துகள், உயிர்ச்சத்துகள் கூடுதலாக உள்ளன. இவையனைத்தும் உடலின் தேவையற்ற கொழுப்பை எரிக்கவல்லவை. ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்தி இதயம் சீராக இயங்க உதவுபவை.
செம்பருத்திப்பூ தோசை தேவை: ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 முதல் 20 (பொடியாக நறுக்கவும்) வரகு பச்சரிசி - 200 கிராம் இட்லி அரிசி - 50 கிராம் கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க: ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: வரகு பச்சரிசியுடன் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 6 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அரைத்தெடுத்து உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணிநேரம் புளிக்கவிடவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பொடியாகக் கிள்ளிய செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்க செம்பருத்திப்பூ தோசை ரெடி. இதற்குப் பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல் அல்லது துளசி நெல்லித் துவையல் நல்ல காம்பினேஷன். பயன்: இது இதயத்துக்கு இதமளிக்கும். இதில் உள்ள காசி பால் எனும் பொருள் ஹார்மோனை சமன் செய்யும். ரத்த விருத்தியை ஏற்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்பைச் சீர் செய்யும்.
அவசர யுகத்துக்கு அவசிய உணவுகள்
இன்றைய அவசர உலகில் நோய்களும் அவசர அவசரமாக நம்மைத் தாக்குகின்றன. வயோதிகத்தில் நம்மைத் தாக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நோய்கள் பலவும் வாலிபப் பருவத்திலேயே வாட்டி வதைக்கின்றன. குறிப்பாக, இதயம் சார்ந்த நோய்கள் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளன. இதற்கு முக்கிய காரணங்கள் வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப் பழக்க மாற்றம். இதயம் சார்ந்த நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நல்ல தூக்கம், உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் அவசியம். இதயம் காக்கும் முயற்சியில் இறங்கி, நாம் உண்ணும் உணவேயே மருந்தாக, அதிலும் இதயத்துக்கு உறுதியளிக்கும் மருந்தாக விளங்கும் விதத்தில் தோசை, சூப், துவையல், மசியல், சர்பத் என வகை வகையாகத் தயாரித்து விருந்து படைக்கிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி.
``இங்கே வழங்கப்பட்டுள்ள உணவு வகைகள் இதயம் சம்பந்தப்பட்டவை என்பதால் சோடியத்தை (உப்பு) குறைத்து பொட்டாசியத்தை (காய்கறி, பழங்கள் மற்றும் இயற்கை பொருள்கள் மூலம்) அதிகரித்து வழங்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில், அதே நேரம் அனைவரும் சமைத்து உண்ணும் விதமாகவும் அமைந்துள்ளன. இவை நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறக்க உறுதுணைபுரியும்’’ என்கிறார் ஓசூர் சாந்தி.
https://www.vikatan.com