Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. நான் அங்கு நின்ற ஆறு மாதகாலத்தில் நடந்தவற்றை மேலோட்டமாக முன்னர் எழுதியிருந்தேன். அதனால் எழுதாமல் விட்ட சிலதை இப்ப எழுதினாலத்தான் ஒரு தொடர்ச்சி வரும் என்பதனால் எழுதுகிறேன். வீடு எல்லாம் எழுதி முடிந்து கணவரும் சென்ற பிறகு ஒரு வாரம் செல்ல, அடுத்தநாள் காலை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறேன். தாயும் அந்தச் சகோதரியும் நிற்கின்றனர். நான் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். நாம் வாங்கும்போது இருந்ததைவிட வளவு குப்பையாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. வீட்டுடன் சேர்ந்து ஒரு பக்கத்தில் இரண்டு தூண்கள் எழுப்பி ஓடு போட்டபடி ஒரு இடம். அதைக் கடந்துதான் வெளியே உள்ள டொயிலெட்டுக்குப் போகவேண்டும். அந்தத் தூண்களில் இரண்டு மறி ஆடுகள் கட்டப்பட்டிருக்கு. மூன்று குட்டிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது. ஆடுகள் முந்தி இருக்கேல்லையே. எப்ப வாங்கியது என்கிறேன். கன நாட்களாக வளர்க்கிறோம். நீங்கள் வீடு பார்க்க வந்தபோது வெளியே உள்ள வளவில மேயவிட்டனான். அம்மாவுக்கு ஆட்டுப் பால் தான் கொடுக்கிறது என்கிறார் சகோதரி. நாம் முதல்முதல் வந்தபோது ஒவ்வொன்றாகப் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. நாம் வந்து பார்த்த முதல் நாள் இரு மருங்கும் செவ்வரத்தம் கன்றுகள் சடைத்து நின்றன. இப்போது பார்த்தால் அவை எல்லாம் ஆடுகள் கடித்து மொட்டையாகத் தடிகள் மட்டும் நிற்கின்றன. ஏன் தங்கச்சி ஆடுகடிக்க விட்டீர்கள் என்றதற்கு சின்னக் குட்டிகள் தானே இன்னும் கட்டத் தொடங்கேல்லை என்கிறார். வீட்டுக்குள்ளே சென்று பார்க்கலாமா என்கிறேன். ஓம் போய் பாருங்கோ என்று கூற ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வர மூன்றாவது அறையில் இரண்டு கதவுகள் தெரிகின்றன. வெளிப் பக்கம் ஒன்று. உள்ளே இருந்து திறப்பதற்கானது அடுத்தது. நான் மின்விளக்கைப் போட்ட உடன் அறையில் அங்காங்கே ஆட்டுப் பிழுக்கைகள் தெரிய என்ன தங்கச்சி இது என்கிறேன். சின்னக் குட்டி எண்டதால அவை உள்ளேயும் வந்து படுக்கிறவை என்று சாதாரணமாகக் கூற, வீடு பழுதாப் போயிற்றுது உங்கள் வேலையால் என்று நான் கோபமாய்க் கூறுகிறேன். இன்னும் மூன்று மாதத்தில நாங்கள் போயிடுவம் என்கிறார் சகோதரி. இனிமேல் ஆடுகளை உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினாலும் அவர்கள் அதைக் கடைபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிய, எதுவும் பேசாது வெளியேறுகிறேன். அதன்பின் ஒரு வாரம் தென்னைகள் தறித்து வளவைச் சுத்தம் செய்து முடிய பின்னர் உயிர் வேலிகளைத் தறித்துவிட்டு தகரவேலி அடைத்துவிட்டு, இருந்த கிழுவைகளை பின்பக்க தகர வேலியின் உள்ளே அரை அடி தள்ளி ஊன்றும்படி சொல்ல முன்னர் தென்னை தறிக்க வந்த இருவருமே அந்த வேலையையும் செய்கின்றனர். தென்னைகள் எவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரே விடவில்லை. மழைத் தண்ணீர் மட்டும்தான். அதனால் செழிப்பற்று இருக்கு. புற்கள் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கு. பலதும் முட்கள் உள்ள செடிகளாகவும் இருக்கு. அதனால் வேலைக்கு வந்த இருவருமே இரண்டு நாட்கள் பெரிய புற்களைச் செதுக்கி முடிக்கின்றனர். வீட்டின் ஒரு பக்கம் கிட்டத்தட்ட நான்கு பரப்பு நிலம் தோட்டம் செய்யக்கூடிய நிலையில் இருக்கு. ஆனால் ஒருமிளகாய்க் கன்று கூட அவர்கள் நட்டிருக்கவில்லை. அந்த நிலத்தை உழவு இயந்திரத்தினால் உழுதுவிடு என்று கணவர் கூற 6000 ரூபாய்க்கு ஒருவரைக் கூப்பிட்டு உழுதால் மண் சம நிலைக்கு வரவில்லை. அவரிடமே சிறிய மண்ணைச் சமப்படுத்தும் இயந்திரம் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று வேறு ஒருவரை ஒழுங்குசெய்து தருகிறார். அவருக்கு 4000. அதில் ஏதாவது பயிர் வைப்போமா என்று கணவருடன் கதைத்தால் அது நாங்கள் போய் இருக்கும்போது வைக்கலாம் என்கிறார். பின்பக்கம் முழுதும் வாழைகள். அதுவும் பாராமரிக்கப்படாமல் இருக்கு. அவர்கள் வீட்டை விட்டு எழும்பும் மட்டும் பேசாமல் இரு என்கிறார் மனிசன். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பலாமாரம். வலது பக்கத்தில் இன்னொரு பெரிய பலாவும் மாமரமும். நான் ஊஞ்சல் ஆடியபடி அந்த சகோதரியுடன் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். “இந்தப் பலாமரத்தையும் தறியுங்கோ அன்ரி” “ஏன் நல்ல வடிவாத்தானே இருக்கு மரம்” “இல்லை அன்ரி. மரம் உள்ளால கோறையாப் போச்சு. வீட்டுக்குமேல சரிஞ்ச விழுந்தால் உங்களுக்குத்தான் வீண்செலவு” “மரத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே” “மரம் ஒரு காய் கூட இப்ப ஐந்தாறு வருஷமாக் காய்க்கவுமில்லை” நான் இறங்கிப் போய் மரத்தைச் சுற்றிப் பார்க்கிறேன். "பெரிதாக கோறையானமாதிரித் தெரியவில்லையே” “உங்களுக்கு வெளியில தெரியாது. உள்ளுக்குள்ள சரியாப் பழுதாக்கி இருக்கும். நான் சொன்னதைச் சொல்லீற்றன். உங்கடை வீடு. உங்கடை விருப்பம்” அடுத்தநாள் தென்னை தறித்தவர்களைக் கூப்பிடுகிறேன். என் நண்பரின் அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் அவர்கள் மேல் கடும் நம்பிக்கை. “இந்தப் பிலாமரம் கோறை பத்திக் கிடக்கு என்று அந்தப் பிள்ளை சொல்லுறா. ஒருக்காப் பாருங்கோ தம்பியவை” “ஓமம்மா. வெட்டுறதுதான் நல்லது” “கனகாலமா காய்கவும் இல்லையாம். சரி அப்ப வெட்டுங்கோ” “மரத்தை எங்கையம்மா போடுறது” “வெட்டுங்கோ முதல்ல பிறகு ஆரன் விறகுக்குக் கேட்டால் குடுப்பம்” “நான் பெரிய துண்டுகளைக் கொண்டு போகட்டே” “எப்பிடிக் கொண்டு போவியள்” “லான்ட்மாஸ்டர் கொண்டுவந்து ஏத்துவம்” “கொண்டுபோய் என்ன செய்வியள்? லாண்ட்மாஸ்டர் பிடிக்கிற காசுக்கு அங்கினையே விறகுகள் வாங்கிப்போடலாமே” “இப்ப விறகு சரியான விலையம்மா” “பிலாவிலையளையும் சின்னக் கொப்புகளையும் நான் எடுக்கிறன் அன்ரி. பிலாவிலை ஆடுகளுக்கு நல்ல சத்து, நல்லாப் பால் சுரக்கும்” எனக்கு உள்ளுக்குள் சரியான மகிழ்ச்சி. தானாகவே வளவு சுத்தமாகுதே என்று. பலாமரம் வெட்டி முடிந்து அவர்கள் மரங்களைத் துண்டுபோட்டு லாண்ட்மாஸ்டரில் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது என் ஓட்டோ வருகிறது. “ஏனக்கா உதை வெட்டினனீங்கள்? ஓட்டோக்காரர் கேட்கிறார். கோறையாயிற்றுது என்று இவ சொன்னா. அதோடை காய்கிகிறதும் இல்லையாம். என்கிறேன். அவர் சென்று மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அவசரப்பட்டிட்டியள் அக்கா என்கிறார். எனக்கும் ஏதோ ஒருமாதிரி இருந்தாலும் மரம் வெட்டியாச்சு இனி ஒண்டும் செய்ய ஏலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறன். ஓட்டோவில் செல்லும்போது அவங்கள் பலாமரத்தைக் கொண்டுபோய் நல்லவிலைக்கு விப்பாங்கள். அதுதான் அவங்களும் சேர்ந்து வெட்டியிருக்கிறாங்கள் என்கிறார். சரி விடுங்கோ. காய்க்காத மரத்தை வச்சிருந்து என்ன பலன் என்கிறேன். மேலால கொஞ்சத்தை வெட்டியிருந்தாலே காய்க்குமே அக்கா. சரி வெட்டியாச்சு. இனிக்கதைச்சுப் பிரயோசனம் இல்லை. வாற கிழமையே ஒரு பலக் கன்றை நடுவம் என்று கூறுகிறேன்.
  2. மற்றவை நினைச்சால் நினைச்சிட்டுப் போகட்டும் 😃 நன்றி யாயினி. நன்றி குசா. எழுதினதை திருப்ப எழுதி நேரத்தை விரயம் செய்திட்டன்.
  3. எனக்கு இப்பவே மறதி நோய் ஏற்பட்டுவிட்டதோ என்று சந்தேகமாய் இருக்கு அண்ணா 🙂 🤣😂
  4. உண்மையில் நீங்கள் இருவரும் நினைவுபடுத்தியது நல்லதாகப் போய்விட்டது. அவற்றைக் தவிர்த்து எழுதவேண்டியதை மட்டும் இனி எழுதுகிறேன். உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.
  5. எனக்கு இன்னும் பத்து வருடம் இருக்கு. நான் யேர்மனியில் வேலை செய்தது 16 ஆண்டுகள்தான். அங்கே குழந்தை பெற்றவர்களுக்கு 3 ஆண்டுகள் முதலே பென்சன் எடுக்கலாம் என்று ஒரு சட்டமும் இருக்கு. ஆனால் நாற்பது ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்குத்தான் அந்த மூன்று ஆண்டுகள் கணக்கு. உண்மைதான் அண்ணா. வருங்காலத்தில் பென்ஷன் 80 வயதுக்கு என்று கொண்டுவருவார்கள். முன்னரும் சிறு பகுதி எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன் அண்ணா. எனக்கு நினைவில்லை. இப்ப முழுவதும் எழுதுவதால் அதுக்கும் வந்துவிட்டது.
  6. இப்பவே சொல்லி வைக்கிறன். எனக்கும் கனக்கவேண்டாம் ஒரு கோடி கடன் தாங்கோ.
  7. எனக்கு விருப்பு வாக்குகளை இட்ட புங்கை, சுவைப்பிரியன், ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான்,யாயினி, நந்தன், சுவி அண்ணா,கவி அருணாச்சலம் அண்ணா ஆகிய உறவுகளுக்கு மிக்க நன்றி.
  8. உதுதானே வேண்டாம் எண்டுறது. 😀 யேர்மனியில் 68 இல் தானே பென்ஷன் ? குசா அட நீங்களும் 0 4- 04 தானா எந்தக் கதையைப் பற்றிச் சொல்கிறீர்கள் வாத்தியார்?
  9. தங்கை என்னை ஏமாற்றவும் இல்லை. எனக்கும் கண்ணைக் கட்டவில்லை. பிறந்து வளர்ந்த வீடு எண்ட ஒரு இதுதான்.😃
  10. என்ன செய்யிறது. வீதி விட்ட வழிதானே 😄 இணுவிலில ரோட்டுக்கரை ஒரு பரப்பு ஒரு கோடி தொடக்கம் ஒண்டரைக் கொடிவரை போகுது . உள்ளுக்குள் இடத்துக்கேற்ற விலை. 50 தொடக்கம் 60, 65 கூடப் போகுது. வாங்கோ செய்யுங்கோ. எல்லாரும் சேர்ந்து ஒரு முயற்சி செய்யலாம். தங்கைக்குத்தானே கொடுத்தது என்பதனால் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனால் ஊரில போய் நிண்டு காணிக் கதையள் கதைக்கேக்குள்ள நெஞ்சு மனுசனுக்குத் தெரிந்தாலும் எண்டு டிக் டிக் எண்ணும் 😄
  11. நல்லது தெரிஞ்ச ஆட்கள் கொஞ்சப் பேர் நாட்டில வந்து இருந்தாலே பொழுதுபோயிடும். அதுவும் உண்மைதான். வரவுக்கு நன்றி.
  12. ஒன்று எனக்குச் சொந்தமா ஒரு வீடு இருந்தது. என் கணவருக்கு தோட்டக்காணியும் உண்டு. 2012 வரை அந்த நாட்டுக்குப் போய் வாழமுடியும் என்ற எண்ணம் பலருக்குமே இருக்கவில்லைத்தானே. அதனால அந்த வீட்டை விற்பம் விற்பம் என்று என் கணவர் ஒரே கரைச்சல். அம்மாவும் அப்பாவும் கஸ்ரப்பட்டுக் கட்டின வீட்டை விற்க எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் கணவர் கரைச்சல் கொடுத்ததுக்கும் ஒரு காரணம் இருந்தது. அம்மாவின் தங்கை ஒருத்தி. அவவுக்கு அக்காவின் பிள்ளைகள் இனி இங்கு வந்து இருக்கப் போவதில்லை. தன் பிள்ளைகளுக்குத் தான் அக்காவின் வீடுகளும் வந்து சேரும் என்ற பேராசை. புலிகள் முன்னர் சில வீடுகளில் வசித்தபோது தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் “புலிகள் உன் வீட்டைத் தரும்படி கேட்டார்கள். நான் என் நகையை விற்று ஐம்பதாயிரம் கொடுத்து வீட்டை மீட்டுள்ளேன்” என்று என சித்தியிடம் இருந்து ஒரு கடிதம் வர, உடனே நான் என்னைக் கேட்காது நீங்கள் ஏன் பணம் கொடுத்தீர்கள். வீட்டைப் புலிகளிடம் கொடுத்துவிட்டு உங்கள் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு கடிதத்தை எழுதிவிட்டு அப்பா அம்மாவுடன் கதைக்க, அப்பா “அவசரப்படாதை நான் விசாரிக்கிறேன்” என்று கூறி விசாரித்தால் அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்று தெரியவர, அம்மாவுக்கு அப்பதான் தான் தன் தங்கையின் நாடகம் புரிகிறது. மற்றப்பக்கம் கணவரின் மூத்த சகோதரர் குடும்பம் எங்கள் வீட்டில் இடப்பெயர்வின்போது சில ஆண்டுகள் குடும்பத்துடன் வந்து வசித்தனர். அம்மாவின் தங்கைக்கோ அட இந்த வீட்டை நாம் எடுக்கலாம் என்று பார்த்தால் இவர்கள் ஆட்டையைப் போட்டுவிடுவார்கள் போல என எண்ணி என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மருமகன் வீட்டைத் தமயனுக்குக் கொடுக்கப் போறாராம் என்று உசுப்பேற்ற, அம்மா எனக்கு போன் செய்து நாங்கள் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை உன் மச்சான் குடும்பத்துக்கா கொடுக்கப் போகிறாய் என்று ஒரே கரைச்சல். அவர்களுக்குச் சொந்தவீடு இருக்குத்தானே. இப்ப பிரச்சனை முடிஞ்சுதுதானே. உன் மச்சானை வீட்டைவிட்டு எழுப்பு என்று அம்மா தொணதொணக்க எனக்கு இரு பக்கத்தாலும் தலைவலி வர நானும் பேசாமல் வீட்டை விற்றுவிட முடிவுசெய்து புரோக்கர்களிடம் கூறி ஆட்களை ஒழுங்கு செய்யச் சொன்னேன். அந்த நேரம் வீட்டின் பெறுமதி 90 இலட்சம் என்று புரோக்கர் கூற எனக்கோ வீட்டை வைத்திருப்போம் என்ற எண்ணம் தலை தூக்கத்தொடங்க, மீண்டும் கணவரிடம் வீட்டை வைத்திருப்போம் என்கிறேன். கணவரோ நாங்கள் அங்கை போய் இருக்கப் போவதில்லை. விசர்க் கதை கதைக்காமல் வில் என்கிறார். போகும் நேரம் எங்கே நிற்பது என்கிறேன். என் தங்கை வீடு இருக்குத்தானே. நான் தானே அவளுக்கு வீடு கட்டிக் குடுத்தனான். ஐந்து அறைகள் உள்ள வீட்டில ஒருமாதம் தங்க ஒரு அறை தரமாட்டாளா என்கிறார். ஏன் உங்கடை காணியை மட்டும் விக்காமல் என் வீட்டை விக்கச் சொல்கிறீர்கள் என்றதற்கு வெறும் காணி கிடந்தால் ஒரு காலத்தில போய் இருக்கப்போறம் எண்டால் பிறகு நிலமைக்கு ஏற்றமாதிரி சின்ன வீடு ஒன்றைக் காட்டிக் கொள்ளலாம் என்று ஆசை காட்ட நானும் சரி என்று சொல்கிறேன். மனிசன் ஒன்றை நினைத்தால் முடிக்கும் மட்டும் விடாப்பிடியாய் நிப்பார். அதனால ஒரு யோசனை வர எல்லாச் சகோதரர்களுடனும் வீட்டை விற்பது பற்றிக் கூறி யாராவது வாங்கப்போகிறீர்களா என்று கேட்க, ஒரு வீட்டையே பாதுகாக்க ஏலாமல்க் கிடக்கு. இதுக்குள்ள உதை வாங்கி என்ன என்கின்றனர். ஒரு தங்கை மட்டும் கணவருடன் கதைத்துவிட்டுச் சொல்வதாகக் கூற மனம் நிம்மதி அடைகிறது. தங்கை ஒரு வாரத்தின் பின்னர் தம்மிடம் இவ்வளவு காசு இப்ப இல்லை. நாற்பத்தைந்து இலட்சம் என்றால் நான் உடனே வாங்க முடியும் என்கிறாள். கணவருக்கு புரோக்கர் சொன்ன விலையைச் சொல்லாமல் ஐம்பது இலட்சம்தான் வீட்டின் பெறுமதி என்று கூறுகிறேன். அப்போது நாம் கடை நடத்திக்கொண்டு இருந்தபடியாலும் கணவருக்கு தொலைபேசியில் கதைக்க நேரம் இல்லை என்பதனாலும் கணவர் தன் தங்கையிடமோ தங்கையிடமோ தமையனிடமோ காணிவிலை குறித்து விசாரிக்க நேரம் இருக்கவே இல்லை. இவ்வளவு குறைவாக இருக்கு. வேறு இரண்டு மூன்று பேரிடம் சொல்லி விக்கப்பார் என்கிறார். இது நாங்கள் வளர்ந்த வீடு. வேறை ஆருக்கு விற்றாலும் மீண்டும் போக முடியாது. தங்கைக்குக் கொடுத்தால் நாம் போகும் நேரம் போய் நிக்கலாம் என்று கணவரின் மண்டையைக் கழுவிக் காதும் காதும் வைத்ததுபோல் கணவரின் சகோதரர்கள் காதுக்கு விடயம் போகாமல் வீட்டைத் தங்கைக்குக் எழுதியாச்சு. அதன் பின்னர் கணவர் மட்டும் 2015 இல் நாட்டுக்குச் சென்றபோது நாட்டிலும் மனிதர்களிடமும் பல மாற்றங்கள். கணவருக்கே தங்கை வீட்டில் தங்கி இருந்தது மகிழ்வைத் தரவில்லை. நான் விற்ற தங்கையின் வீட்டில் அம்மாவின் திருமணமாகாத தங்கை – தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் - தன் வீட்டைத் தங்கையின் ஒரு மகளுக்குக் கொடுத்துவிட்டு எம் வீட்டில் இருந்தார். அவரைத்தான் அந்த வீட்டுக்குப் பொறுப்பாகத் தங்கை தங்கும்படி கூறியிருந்தாள். அவர் தனியாக இருப்பதனால் உதவிக்காக இராமநாதன் அக்கடமியில் கல்வி கற்கும் வெளி மாநிலப் பிள்ளைகள் சிலரை குறைந்த வாடகையில் வீட்டில் வைத்திருந்தார். எனவே கணவர் பெண்கள் மட்டும் இருக்கும் வீட்டில் நான் இல்லாது அங்கு சென்று தங்க மானமின்றிப்போக கணவருக்கு அந்த விடுமுறை மகிழ்வாக இருக்கவில்லை. நாடு திரும்பிய கணவர் எமக்கு என்று ஒரு வீடு இருக்கவேணும். ஆற்றையன் வீடு ஆற்றையன் வீடுதான் என்று புலம்ப, கூட இருந்த மகளும் “எங்கள் வீட்டை விக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இணுவிலுக்குப் போற நேரம் நிம்மதியா நிண்டிருக்கலாம்” என்று கூற மனிசன் ஒண்டுமே கூறவில்லை. சரி பிரச்சனை இல்லை. அப்பாவின் காணி இருக்குத்தானே. அதில ஒரு வீட்டைக் கட்டுவம் என்று ஆறுதலுக்காய்க் கூறினாலும் நாட்டில போய் வாழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும்பட நாட்டில் போய் இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்குள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
  13. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா. இது முழுக்கமுழுக்க என் கதை இல்லை. காதில் கேட்கும் விடயங்கள் எழுத்தாய் வரும்தானே அண்ணா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா. எங்குமே இப்ப நிறைய காலநிலை மாற்றங்கள் தானே.
  14. காலை நேரக் குளிர் ஊசியாய்க் குத்த எழும்பவே மனமின்றி தடித்த போர்வையால் முகம் தவிர்ந்த அனைத்துப் பாகங்களையும் குளிர் புகா வண்ணம் போர்த்து மூடியபடி படுத்துக் கிடக்கிறேன் நான். லண்டனில் சினோ விழுவதில்லை. குளிர் குறைவு என்ற பேர்தான். ஐந்து பாகை குளிர்கூட மைனஸ் பத்துப்பாகை போல் குளிரும். அத்துடன் ஊசிக்காற்றும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வெளியே செல்லக்கூட மனமின்றிப் போகும். முன்னர் பதினெட்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி விளையாடு என்று அழைக்கும். வெளியே சென்றால் கூட லண்டனில் குளிர்வதுபோல் குளிர் இருக்காது. ஆனால் இங்கு.............நினைத்துப் பார்த்தவளுக்குச் சிரிப்பும் வந்தது. அங்கு இளமைக் காலத்தில் வசித்தாய். முப்பத்தைந்து கடந்தபின் இந்த நாட்டுக்கு வந்தாய். வயது போகப் போக உடலும் மனமும் சேர்ந்து வலிமை இழக்கும் என்பது தெரியாதா” என யாரோ கேட்பதுபோல் இருக்க, தூக்கக் கலக்கத்திலும் முகம் சிரிப்பில் விரிகிறது. ஐம்பத்தைந்து கடந்துவிட்டதா எனக்கு? திருமணமாகிப் பிள்ளைகள் பெற்று அவர்களை வளர்த்து திருமணமும் செய்துகொடுத்தபின்னும் மனமும் உடலும் அப்படியே இருக்குமா என்ன? மனதில் வலுவும் பதினெட்டு வயதேயான நினைப்பும் இன்னமும் இருக்கிறதுதான். ஆனாலும் இடைகிடை ஒன்றிரண்டு நோய்களும் வந்து உனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது என்பதை நினைவுபடுத்தியும் விடுகிறது. நாமென்ன ஆண்களைப்போல் வேலைக்கு மட்டுமா போய் வருகிறோம். சமையல் வேலை, வீடு துப்பரவாக்கும் வேலை, உடுப்பு வோசிங்கிங் மெசினில்போட்டு எடுத்துக் காயவிட்டு அயண் செய்து மடித்து வைத்து........... இன்னும் எத்தனை எத்தனை இருக்கு. என் அயலில் வாழும் பல தமிழ்ப் பெண்கள் வேலைக்கே போகாமல் வீட்டில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்தான். அவர்கள் அதிட்டசாலிக்கள்தான் என மனம் எண்ணினாலும் எப்படித்தான் அவர்களால் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடிகிறது எனவும் எண்ணியவுடனேயே அவர்கள்மேல் ஒருவித இரக்கமும் ஏற்படுகிறது. உடனேயே உன்னில இரக்கப்பட யாருமே இருந்ததில்லை. இப்ப நீ யாருக்கோ இரக்கப்படுகிறாயா என்கிறது மனம். வெளிநாடு வந்த நாளில் இருந்து கணவர் குடும்பத்துக்கு மாதாமாதம் பணம் அனுப்புவது தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. நான் அதை ஒருநாளும் தடுத்ததும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்ததும் எனது சம்பளம் முழுவதுமே கணவனிடம் போய்விடும். எனக்கு எதுவும் தேவை என்றால் கூட அவரிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும். என் குடும்பமும் ஊரில இருக்கு. ஒரு கொஞ்சக் காசு அனுப்புவம் என்று நினைத்தால் கூட கையில் காசு இருக்காது. ஒருதடவை மனிசன் மகிழ்வாக இருந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு ஒரு இருபதாயிரம் அனுப்பட்டே என்று கேட்டதுதான். ஏன் கொப்பா வேலை செய்யிறார் தானே. அவைக்கு எதுக்குக் காசு என்று முகத்தில அடிச்சதுபோல சொல்ல, ஏன் உங்கடை அப்பாவும் வேலை செய்யிறார்தானே. நீங்கள் ஏன் அனுப்புறியள் எண்டதுக்கு கன்னத்தில விரல் அடையாளம் வந்ததுதான் மிச்சம். அதுமட்டுமில்லாமல் ஒருகிழமை மனிசன் என்னோடை கதைக்காமல் திரிய அதுக்குப் பிறகு நான் கேட்டதுதான் தப்போ என்று எனக்கே யோசினை வந்திட்டிது. லண்டன் வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் துணிவு வந்தது. அதுக்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ஐந்து நாளும் மனிசன் பதிஞ்சு வேலை. எனக்கு ஓரிடத்தில களவாய் வேலை. கையில காசு தருவினம். இவர் காலையில போனால் பின்னேரம்தான் வீட்டை வருவார். இவருக்குச் சொல்லாமல் இரண்டு மணிநேரம் அதிக வேலைசெய்து சேர்த்து வச்சு அம்மாவுக்கு அனுப்பியதை இப்ப நினைக்க கோவம்தான் வருது. எப்பிடி ஒரு துணிவில்லாத ஆளாய் இருந்திருக்கிறன். பிள்ளையள் எல்லாம் வளர வளர எனக்கும் கொஞ்சம் துணிவு வந்தது. என் உள்ளக் கிடக்கையை பிள்ளையளுக்கு சொல்லி அழ, அவைதான் “அம்மா இரண்டு பேருக்கும் சமமான உரிமை இருக்கு. நீங்களும் கஷ்ரப்பட்டுத்தானே வேலை செய்யிறியள். அப்பாவுக்குச் சொல்லிப்போட்டே அம்மம்மாவுக்கு காசை அனுப்புங்கோ” என்று சொன்ன துணிவில பிள்ளையளுக்கு முன்பாக கணவரிடம் கேட்க, வழமைபோல் மறுத்த கணவரை எதிர்த்து பிள்ளையள் நியாயம் கதைக்க, ஒண்டும் சொல்லாமல் போன மனிசன் வழமைபோல் என்னோடை கதைக்காமல் திரிய, நானும் அவரைக் கண்டுகொள்ளாமல் காசை அனுப்பியது மட்டுமல்லாமல் எனக்கு அவரோட கதைக்காமல் இருக்க ஏலும் எண்டு காட்டிய பிறகுதான் மலையேறின சாமி இறங்கினது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்கள் பலரும் மனைவியருக்கு உதவி செய்கின்றனர் தான். ஆனாலும் மனமிருக்கும் எல்லோருக்கும் உதவி செய்ய நேரம் இருக்கவேண்டுமே. மனிசன் கூட என்னிலும் நன்றாகப் புரியாணி செய்வார். பிள்ளைகள் கூட அப்பாவின் புரியாணி சுவையாக இருக்கு என்று என் முன்னாலேயே கூறும்போது சிறிது கோபம் எட்டிப்பார்க்கும். இத்தனைகாலம் மூன்று நேரமும் சமைத்துக் கொடுக்கிறேன். ஒருநாள்க் கூட இப்படிக் கணவரோ பிள்ளைகளோ புகழ்ந்ததில்லை. நன்றி கெட்டவர்கள் என்று அவர்களைத் திட்டவேண்டும் என்று மனதில் சிறிது கோபம் கூட எழும். சரி போகட்டும் என அடக்கிக் கொள்வேன். நான் எழுந்து பல் தீட்டிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் முடங்கிக் கொள்கிறேன். இன்று வேலை இல்லை. இன்னும் சிறிது நேரம் படுத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அதையும் இதையும் நினைத்தபடி படுத்திருக்க கணவரின் போனில் அலாரம் அடிக்கிறது. நான் கேட்காததுபோல் கண்களை மூடியபடி கிடக்கிறேன். எழுந்த கணவர் பல் தீட்டிவிட்டு வந்தவர், அறையின் திரைச் சேலைகளை இழுத்து ஒதுக்க வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது. “இன்னும் நீ எழும்பேல்லையே. நான் தேத்தண்ணி ஊத்தியிருப்பாய் எண்டு நினைச்சன்” “இண்டைக்கு எனக்கு வேலை இல்லை. நீங்கள் ஊத்த ஏலாதே” “நீ ஊத்துறமாதிரி வராது. உன்ர கையால குடிச்சாத்தான் குடிச்சமாதிரி இருக்கும்.......எழும்பு. சுடுதண்ணிப் போத்தலிலும் போட்டு வை. நான் வெளிக்கிட்டு வாறன். சாப்பாடுப் பெட்டியும் என்ர பாக்கில கிடக்கு. கழுவிப்போட்டு சாப்பாட்டையும் போட்டு வை” ஒரு நாளைக்கு எண்டாலும் கொஞ்ச நேரம் படுக்க விடாயினம். ஏன் அவர் ஊத்தினால் தேத்தண்ணி கோப்பியாய் மாறீடுமோ? வேலைக்குப் போக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு. நீங்களே போட்டுக்கொண்டு போக ஏலாதா என்று கேட்போம் என்று எண்ணியும் வார்த்தைகள் மனதுள்ளேயே சிக்கிக்கொள்கின்றன. எனக்கும் யாராவது தேத்தண்ணியோ கோப்பியோ ஊத்திக்கொண்டுவந்து ஒருநாளாவது தராயினமோ என்ற ஆசை அப்பப்ப எழுவதுதான். எனக்கு கொண்டுவந்து தாங்கோ என்று வாய்விட்டுக் கேட்கவும் என் தன்மானம் இடம்கொடுத்ததில்லை. கணவர் என்று இருக்கிறீர்கள். இத்தனைகாலத்தில ஒருக்காத்தன்னும் நீங்களாகத் தேநீரோ கோப்பியோ போட்டுத் தந்திருக்கிறியளா? இல்லை சும்மாதன்னும் கேட்டாவது இருக்கிறியளா? என எண்ணும்போதே அம்மாவின் முகமும் அப்பாவின் முகமும் கண்முன்னே வருகிறது. இருவருமே ஆசிரியர்கள். காலையில் அம்மா எழுந்து காலை உணவு, மதிய உணவு இரண்டையும் தயார் செய்ய வேணும். அதற்குள்ளும் எனக்கும் தம்பிக்கும் கட்டிலில் தேநீரைக் கொண்டுவந்து எழுப்புவார். எனக்கு ஒரு பன்னிரண்டு வயதுவரை இது தொடர்ந்தது. அப்பா அம்மாவுக்குத் தேங்காய் துருவிக் கொடுப்பது முதல் பல உதவிகளைச் செய்து கொடுப்பார். ஆரம்பத்தில் துலாவில் தண்ணீர் அள்ளித் தொட்டிக்குள் நிறைத்து எங்களைக் குளிப்பாட்டுவதுகூட அப்பாதான். அவர்கள் நினைவில் என் கண்கள் நிறைகிறது. என் கணவர் கூட உதவியே செய்யாதவர் அல்ல. எத்தினையோ உதவிகள் நான் கேட்காமலே செய்திருக்கிறார். ஆனாலும் உணவு விடயத்தில்த் தான் அதிகம் தலையீடு செய்வார். அதுதான் எனக்கு அதிக சினத்தைக் கொடுக்கும். நான் ஒரு சமையலைத் திட்டமிடும்போது அவர் வேறொரு விதமாய் சமையல் குறிப்புச் சொல்லுவார். என் சமையலை என் நண்பர்கள் உறவினர்கள் பாராட்டுவதோடு மட்டுமில்லாது மிச்சம் இருந்தால் தாடி என்று வீட்டுக்கும் எடுத்துச் செல்வதும் என் சமையலின் சுவையினால்தானே. பிறகு எதற்கு இவர் திருத்தம் சொல்கிறார் என்று கடுப்பாக இருக்கும். அதுவும் இப்ப கொஞ்ச நாட்கள் என் போனுக்கு சமையல் குறிப்புகளும் யூடியூப் லிங்குகளும் கணவர் போனில் இருந்து என் வற்சப், மெசெஞ்சர் என்று வந்து விழும்போது கடுப்பு அதிகரிக்கும். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம். அதோடை இதைச் சேர்த்துக் கறி வைத்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லும்போது ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாது நீங்களும் நல்லாச் சமைக்கிறீங்கள் தானே. நீங்களே இவற்றைச் சமைத்துத் தாருங்கள். என்றதுடன் மனிசனும் பேசாமல் இருப்பதும் அடிக்கடி நடப்பதுதான். அம்மா முன்னரெல்லாம் உப்புமா செய்வார். நெய்யில் வறுத்து உதிரி உதிரியாய் குழைந்து வராமல்...... எமக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் அந்த உப்புமா மிகவும் பிடிக்கும். உப்புமாவோடு முட்டைப் பொரியாலோ அல்லது அவித்த முட்டையோ இருக்கும். பள்ளி முடிந்து வந்து உடுப்பை மாற்றி முகம் கழுவியவுடன் சமையலறைக்குச் சென்று மிகுதி உப்புமா இருக்கா என்றுதான் தேடுவேன். ஆனால் அம்மா எப்படித்தான் எல்லோருக்கும் அளவாக மிகுதியே வாராததுபோல் சமைப்பார் என்பது இன்றுவரை எனக்கு விளங்கக்கவே இல்லை. என்னடா இவள் தேவையில்லாமல் உப்புமாவைப் பற்றிக் கதைக்கிறாளே என்று உப்புமாவைப் பிடிக்காத உங்களுக்கு எரிச்சல் வரும்தான். ஆனாலும் அதிலும் ஒரு பெரிய விடயம் இருக்கு. திருமாணமான பின் நானும் உப்புமா செய்து பழகினேன் என்று கூறுவது தவறு. அம்மாவிடம் கேட்டுச் செய்தேன். கண்பார்த்தால் கை செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எனக்குக் கை வந்த கலை. நானே உண்டு பார்த்துவிட்டு என்னை மெச்சிக்கொண்டேன். கணவருக்கு ஆசையுடன் போட்டுக்கொண்டு போய்க் கொடுத்தவுடன் இரண்டு வாய் உண்டவர் “என்ன இது அவியாமல் இருக்கு. தண்ணீர் கூட விட்டு கிண்டினால்த்தான். சாப்பிடலாம். அம்மா அப்பிடித்தான் செய்து தாறவ” என்றவுடன் என் உற்சாகம் வடிந்து போக “அம்மா இப்பிடித்தான் செய்யிறவ. நல்லாய் இருக்குத் தானே என்றவுடன். “எனக்கு வேண்டாம். தொண்டைக்குள்ள சிக்குது. இடியப்பம் அவி” என்றுவிட்டு திரும்பிக்கொள்ள நான் உப்புமாவை கொண்டுபோகிறேன். இப்போதென்றால் என் பதில் வேறாக இருந்திருக்கும். திருமணமான புதிதில் புது மாப்பிளை சொன்னால் கேட்கத்தானே வேண்டும் என்று எண்ணி இடியப்பம் அவித்துக் கொடுத்தது மட்டுமின்றி. பின்னர் எப்போதும் அம்மா செய்வதுபோல் செய்ய எண்ணியது கூட இல்லை. தண்ணீர் அதிகம் விட்டு அவருக்காக அவரின் அம்மா செய்வதுபோல் செய்து குடுத்துக் குடுத்து அதையே நானும் உண்டு பழகி உப்புமா என்றாலே அதுதான் என்று எனக்கும் பழகிப் போச்சு. அது மட்டும்தான் என்று நினைக்காதேங்கோ. அம்மா நிறையத் தேங்காய்ப்பூப் போட்டு அவிக்கும் பிட்டுக் கூட என் ஆசைக்கு அவிக்கேலாமல் போச்சு. அம்மா கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணீர் விட்டு சிறிதாகக் குற்றி அவிக்கும் பிட்டின் வாசனை இன்றும் மனதை நிறைக்கிறது. நான் கணவருக்கு முதல்முதல் அவித்தபோது “என்ன புட்டு அவிக்கிறாய். அம்மா தண்ணீர் அதிகம் விட்டு கையால உதிர்த்துத்தான் புட்டு அவிப்பா. உப்பிடி சில்வர் கப்பால குத்துறேல்லை என்றபோது“ உங்கட வீட்டில சிவர் கப் இல்லையாக்கும்” என்று கூறி முடியமுதலே “தேவை இல்லாமல் வாய்க்கு வாய் காட்டாதை” என்றதோடை நில்லாமல் “இண்டைக்கு ஓகே. இனிமேல் அம்மா அவிக்கிற புட்டுமாதிரி அவிச்சுப் பழகு” என்று முடித்ததுதான். முப்பத்தெட்டு ஆண்டாய்த் தொடருது. இன்று மாலை என்ன சமைக்கலாம் என்று யோசித்தபோது அம்மா அவிக்கும் பிட்டுப்போல் வெள்ளைமாப் பிட்டு அவித்தால் என்ன என்று எண்ணியவுடனேயே வாயில் எச்சில் ஊற ஆரம்பிக்கிறது. கணவருக்கு தனியாகவும் எனக்குத் தனியாகவும் அவித்தால் என்ன என்ற யோசனைவர அதுவும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது. கணவர் ஆறு மணிக்கு வேலையால் வந்தாலும் எட்டு மணிக்குத்தான் இரவு உணவை உண்பார். நானோ ஆறு மணிக்குள் உண்டுவிடுவேன். பிட்டை எனக்கு மட்டும் அவித்து மதியம் வைத்த மீன் குழம்புடன் கடையில் வாங்கிய மாம்பழத்தையும் சீவி வைத்தபடி உணவு மேசையில் அமர்ந்து உலிர் பிட்டை ஆற அமர உண்டபோது மனதே நிறைந்துபோகிறது. கணவர் உணவு மேசைக்கு வருவதாகக் கட்டியங் கூறியவுடன் மளமளவென்று பிட்டை அவித்து மீன்குழம்பு மாம்பழத்துடன் பரிமாற, அரை வயிறு நிறைந்தபின்தான் “என்ன கொம்மான்ர புட்டு அவிச்சிருக்கிறாய்” என்கிறார். இத்தனை காலம் உங்கள் விருப்பத்துக்கு அவிச்சாச்சு. இனிமேல் இந்தப் பிட்டுத்தான் என்று கூறியபடி அப்பால் நகர்கிறேன் நான். அன்று இரவு எல்லா வேலையும் முடித்துக் களைத்து நாளை காலை வெள்ளண வேலைக்குப் போக எழுவதற்காக ஆறுமணிக்கு அலாமை வைத்துவிட்டு அக்கடா என்று கட்டிலில் சாய்கிறேன். கட்டிலுக்கு வந்த மனிசன் நித்திரை கொண்டிட்டீரோ என்றபடி கைகளால் துழாவ, நான் நித்திரை கொள்ளப்போறன், இண்டைக்கு ஏலாது என்றபடி திரும்பிப் படுக்கிறேன் நான்.
  15. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாயினி. உங்களைத் தவறவிட்டுவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசோதரன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அல்வாயான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செம்பாட்டான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூங்கை. ஆனால் நீங்கள் இன்னும் திருந்தேல்லை 😃 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா. நெருங்கியஉறவுக்குள் திருமணம் செய்த பலருக்கு குறைபாட்டுடன் குழந்தை பிறந்திருக்குக்தானே அண்ணா . கால மாற்றத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.
  18. அவள் லண்டன் வந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டதுதான். போர் முடிந்தும் பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் வதனி வந்ததுக்கு இன்னும் இலங்கை போகவில்லை. ஆறு வயதிலும் நான்கு வயதிலும் கொண்டுவந்த பிள்ளைகள் இருவருமே படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அவள் இலங்கைக்குப் போகும் ஆசையை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறாள். அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. கணவன் நோயில் இறந்தபின் கணவனின்றி எங்குமே அவள் செல்வதை நிறுத்திவிட்டிருந்தாள். வாரம் ஒருதடவை மகனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்தால் பிறகு அடுத்த வாரம்தான். பிள்ளைகளும் ஆண் பிள்ளைகள் என்பதால் அவர்களைக் கூட்டிக்கொண்டு செல்லவேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் தாய்க்குப் புற்றுநோய் என்று தம்பியார் அறிவித்ததில் இருந்து அவள் மாதாமாதம் பணத்தை அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறாள். “தெல்லிப்பளையில் மருத்துவம் எல்லாம் இலவசம் அக்கா. எதுக்கு அவைக்கு மாதாமாதம் காசு அனுப்புறியள்” என்று நண்பி மலர் கூறினாலும் “தம்பி பொய்யோ சொல்லப்போறான்” என்று இவள் மலரின் கதையை காதிலும் எடுக்கவில்லை. இவள் கணவன் செய்த ஸ்பொன்சரில் எப்பிடியோ லண்டனுக்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாளாயினும் வந்து சேர்ந்ததை நினைக்க இப்ப நினைத்தாலும் பெரும் மலைப்பாகவே இருக்கும். இவளுக்கு ஆங்கிலமும் சுட்டுப் போட்டாலும் வரவில்லை. ஆனாலும் தட்டுத் தடுமாறி ஏதோ விளங்கிக் கொண்டாலும் கணவரும் இவளை வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததில் மொழி தெரியாததும் ஒரு பிரச்சனையாகப் படவில்லைத்தான். கணவன் இறந்தபின் இரு மாதங்கள் திண்டாடித்தான் போனாள். அந்தநேரம் கணவனின் அண்ணன் தான் கைகொடுத்தது. வேலைக்கு லீவு சொல்லிவிட்டு இவர்களுடன் வந்து ஒருமாதம் நின்று எல்லா உதவிகளும் செய்து இவர்களின் அலுவல்கள் எல்லாம் பார்த்தது. கணவன் ஆயுட்காப்புறுதி செய்து வைத்திருந்ததில் வீட்டுக்குக் கட்டவேண்டிய பணம் முழுதும் கட்டப்பட்டுவிட, மூத்த மகனுக்கும் உடனேயே வேலை கிடைத்ததில் இவள் நிம்மதியாய் தொடர்ந்தும் இருக்க முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக மூத்தமகனின் சம்பளம் மொத்தமாக இவள் கைகளுக்கு வர, சீட்டுப் பிடிக்கிறேன் என்று பத்தாயிரத்தைத் தொலைத்தபின் மகனும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் இவளுக்குக் கொடுத்துவிட்டுத் தானே சேர்த்து வைக்க ஆரம்பிக்க, பிள்ளை தன் கைவிட்டுப் போய்விட்டாதே என்ற ஆதங்கம் எழுகிறது. “உன் அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி உங்களிட்டைக் கையேந்த வீட்டிருப்பாரே” என்று அழுது பார்த்தும் மகன் முழுச் சம்பளத்தையும் அதன்பின் கொடுக்கவே இல்லை. இப்ப இரண்டு வாரங்களாக தம்பியாரின் போன் “வந்து அம்மாவைப் பார் அக்கா. சரியான சீரியஸ் என்று சொல்லிப் போட்டினம்” என்று ஒரே தொல்லை. அம்மாவைப் போய்ப் பார்க்கவேணும் என்று இவளுக்கு அத்தனை பாசம் ஒன்றும் இல்லை. இவள் காதலித்து வண்ணனைக் கலியாணம் செய்யப் போகிறேன் என்றதும் தந்தையிலும் பார்க்க தாய்தான் குதியோ குதி என்று குதித்தது. இவள் வீட்டுக்குத் தெரியாமல் கலியாணம் கட்டிக்கொண்டு வந்தபிறகும் “நீ செத்திட்டாய் எண்டு நினைச்சுக்கொள்ளுறன். இனிமேல் இந்த வீட்டில உனக்கு இடமில்லை” என்று கதவை அடிச்சுச் சாத்தினபிறகு, பேரப் பிள்ளைகள் பிறந்தபிறகும் கூட தாய் வதனியையோ பேரப் பிள்ளைகளையோ பார்க்க வரவே இல்லை. வெளிநாடு போக முதல் ஒருக்காச் சொல்லிப்போட்டுப் போவம் என்று பிள்ளைகளுடன் போனவளை நிமிர்ந்துகூடத் தாய் பார்க்கவில்லை. அந்தத் தாயின் மகள்தானே இவளும். ஆனால் தம்பியில் உள்ள பாசம் இவளுக்குக் குறையவே இல்லை. தம்பியும் இவளின் கணவர் இருக்கும் வரை இவளோடு தொடர்பு கொள்ளவில்லைத்தான். கணவர் இறந்தபின் வாரம் ஒருதடவை போன் எடுத்துக் கதைப்பது வழமையாகியது. இவளுக்கும் வேறு என்ன வேலை. தம்பியின் பிள்ளைகளும் அத்தை அத்தை என்று ஒரே வாரப்பாடுதான். ஆனால் பெடியள் இருவரும் “உங்கடை சொந்தத்திலை நாங்கள் கலியாணம் செய்யவே மாட்டம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள். அது இவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்றாலும் பிள்ளைகளின் மனதை மாற்ற முடியாது என்பதால் இவளும் தான் ஆசையை அடக்கிக் கொண்டாள். நேற்றுப் போனில் கதைக்கும்போதும் “அக்கா ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அம்மா இண்டைக்கோ நாளைக்கோ என்று இருக்கிறா” என்றதில் பிள்ளைகள் இருவரிடமும் கதைத்ததில் “நினைவே இல்லாமல் கிடக்கிறவவைப் போய் பார்த்து என்ன பிரயோசனம் அம்மா” என்கிறான் மூத்தவன். புதிதாக வேலைக்குச் சேர்ந்து இரண்டாம் மாதச் சம்பளம் பெற்றுக்கொண்ட துணிவில் இரண்டாவது மகன் “அண்ணா நான் அம்மாவுக்கு டிக்கற் போட்டு அனுப்புறன். செலவுக்கு மட்டும் நீங்கள் காசு குடுங்கோ என்றதில் சரி போனால் போகட்டும் என்று ஆயிரம் பவுண்டஸ் தாறன் என்று மூத்தவன் சொல்ல, இப்ப விடுமுறை காலமாதலால் இரு மடங்கு விலையில் டிக்கட் புக் செய்து தாயை நேரடியாகப் போகும் விமானத்தில் ஏற்றிவிடுகிறார்கள். கொழும்பு வந்து அக்காவைக் கூட்டிவர வானுக்கு 70,000 ரூபாய் என்கிறான் வதனியின் தம்பி குகன். மூத்தவன் விசாரித்ததில் கொழும்பிலிருந்து போக 35 ஆயிரம்தான். ஆனால் அம்மா தனியப் போறபடியால் மாமாவே கொழும்புக்கு வந்து கூப்பிடட்டும். காசு போனால் போகிறது என்கிறான் இளைய மகன். விமான நிலையத்துக்கு வதனியின் தம்பியார் மட்டுமன்றி மனைவி பிள்ளைகள் என்று அனைவரும் அக்காவை அழைத்துப்போக வந்திருக்க வதனிக்கும் மகிழ்வாகவே இருக்கிறது. இருபது ஆண்டுகளின் பின்னர் வருவதில் எல்லாமே புதிதாய் இருக்கிறது. ஏன் அக்கா பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே என்கிறான் தம்பி. அவங்களுக்கு வேலையில லீவு குடாங்கள் இந்த நேரம். ரிக்கற்றும் விலைதானே என்று சமாளிக்கிறாள் வதனி. காலையில் வந்தபடியால் இடையில் ஒரு உணவகத்தில் நிறுத்தி உண்டபின் பயணம் தொடர்கிறது. வீதி எங்கும் கடைகள் மாடிக் கட்டடங்கள் எனப் பார்க்க மலைப்பாக இருக்கிறது வதனிக்கு. ஆறு மணிநேரப் பயணத்தின் பின் அவள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வர அழுகை வருகிறது. தாயை நினைத்துத்தான் அவள் அழுவதாக எல்லோரும் நினைத்துக்கொள்கின்றனர். கணவர் பிள்ளைகளுடன் வர முடியவில்லையே என்பதில் வந்த அழுகையே அது. அக்கம் பக்கத்தவர்கள் சிலர் வந்து விசாரித்துவிட்டுப் போக நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டதில், தம்பி ஒழுங்கு செய்த காரில் தம்பி குடும்பமும் இவளும் போய்த் தாயைப் பார்க்கின்றனர். நினைவின்றிக் கிடக்கும் தாயைப் பார்க்க இவளை அறியாமலே கண்ணீர் வருகிறது. இரண்டு நாட்களின் பின் “எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். இங்கே வைத்திருந்து பிரயோசனமில்லை. நீங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகலாம்” என வைத்தியர் கூற அடுத்த நாள் தாயை வீட்டுக்குக் கூட்டிவருவதாக ஏற்பாடு. தாயை வீட்டில் வைத்துப் பராமரிக்க ஒருவரை ஒழுங்கு செய்யலாம் என்றால் ஒரு நாளைக்கு மூவாயிரம் என்கின்றனர். ஆனாலும் அக்கா இருக்கும் துணிவில் சரி என்கின்றனர். உயர்த்திப் பதிக்கும் பிரத்தியேக கட்டில் ஒன்றரை இலட்சம் ரூபாய்கள். எந்த நேரமும் சாகத் தயாராக இருக்கும் அம்மாவுக்கு இத்தனை செலவில் கட்டில் வாங்கத்தான் வேணுமா என்று யோசித்தவளின் கௌரவம் வெற்றிபெற, வாங்கு தம்பி என்று பணத்தைப் பவுண்ஸ்சாகவே தம்பியிடம் கொடுக்கிறாள். தாயை வீட்டுக்குக் கொண்டு வந்தபின் அயலட்டைச் சனம் தொடங்கி சொந்தக்காரர் எல்லாம் தாயாரின் சாட்டில் வதனியையும் பார்த்துப் புதினங்கள் கேட்டுவிட்டுப் போகின்றனர். வீடு எந்தநேரமும் கலகலப்பாக இருக்கிறது. ஆட்கள் அடிக்கடி வந்து போவதனால் அப்பப்ப கடையில் இருந்தும் உணவு எடுக்கின்றனர். வடை, முறுக்கு, ரோள்ஸ் என்று வதனியையும் தாயையும் பார்க்க வருபவர்களுக்கு உபசரிப்பும் நடக்கிறது. தாயில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. மின் விசிறி இல்லாமல் முதல் நாள் இரவு வியர்வையில் குளித்ததில் காலை எழுதவுடனேயே “தம்பி பான் இல்லாமல் படுக்கேலாதடா என்றது மட்டுமன்றி உங்களுக்கும் சேர்த்துப் பான் வாங்குங்கோ என்றதில் எல்லாமாக நான்கு பான்கள் வந்திறங்க, வதனிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்கிறது. அம்மா படுத்திருக்கும் வராந்தாவுக்கு ஒன்று. உங்கள் அறைக்கு ஒன்று. பிள்ளைகள் படுக்கும் அறைக்கும் எங்கடை அறைக்குமாக நான்கு வாங்கினது. சரிதானே அக்கா என்று தம்பி கேட்க ஓம் என்று தலையாட்டுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும் வதனியால். இவள் வந்து இருவாரங்களில் தாயில் எந்த வித மாற்றமும் இல்லாவிட்டாலும் ஆட்கள் வந்துபோவது குறைகிறது. நல்லூர் திருவிழாவும் ஆரம்பித்துவிட்டதில் “அம்மாவைப் பார்த்துக்கொள்ள ஆள் இருக்குத் தானே அக்கா, நல்லூருக்குப் போட்டு வருவம் என்று தொடங்கி ரிச்சா பாம் வரை ஒவ்வொருநாளும் ஒரு இடமாக தம்பி குடும்பம் வதனியை ஊர் சுற்றிக் காட்டியதில் வதனி பிள்ளைகளுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்துக் கொண்டுவந்த பணமும் மொத்தமாகக் கரைந்து போக, மூன்று வாரங்களில் இத்தனை செலவா என மலைத்துப்போகிறாள் வதனி. கிடந்த மிச்சப் பயணத்தில் லண்டன் நண்பிகள் சொல்லிவிட்ட பற்றிக் நைட்டி முதற்கொண்டு அவர்கள் பிள்ளைகளுக்கு உடைகள், கோப்பித்தூள், அரிசிமா, மிளகாய்த்தூள் என வாங்கி முடிய இவளுக்குத் தாயைப் பார்க்கத்தான் தான் வந்தது என்பதே மறந்து போகிறது. இவள் வெளிக்கிடும் நாள் நெருங்க தம்பி குடும்பமே அதிகம் கவலை கொள்கிறது. மீண்டும் எழுபதாயிரம் ரூபாய்களுக்கு வான் ஒழுங்கு செய்து அக்கம்பக்கம் சொல்லிக்கொண்டு தம்பி குடும்பத்துடன் விமானநிலையம் வந்து சேர ஒருவித நிம்மதி பிறக்கிறது வதனிக்கு. தம்பி குடும்பம் கொழும்பிலிருந்து கிளம்பி நான்கு மணி நேரம் ஆகியிருக்கும். தாய் இறந்துவிட்டதாக தாயைப் பார்ப்பவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்புச் சொல்ல, “ஐயோ அக்கா உனக்கு விதியில்லாமல் போச்சே” என அழும் தம்பியைப் பார்க்க முடியாத தூரத்தில் பறந்துகொண்டிருக்கிறது வதனியின் விமானம்.
  19. எம்மவர்களின் அடுத்தடுத்த தலைமுறை வரலாறுகளைத் தெரிந்துகொண்டு கொண்டாடுகிறார்களோ இல்லையோ தவறான வரலாறுகள் தொடர்ந்தும் பரப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றனவே. அதை எப்படி அடுத்த சந்ததி நம்பாதிருக்க வழி செய்யலாம் என்று யோசியுங்கள்.
  20. நீங்கள் என்னதான் தெளிவாகத் தீபாவளி பற்றி எழுதினாலும் எந்தப் பயனும் இல்லை அண்ணா. தமிழர்கள் தான் அதிகம் சிந்திக்காமலேயே தொடர்ந்து கொண்டாடிக்கொண்டே வருகிறார்கள்.
  21. நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.