Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
பக்கத்து வீடு
நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது. என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை. “உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்” “இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா” “நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்” “நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்” “என்னவோ செய்து முடி” அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர். எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார். அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன். அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது. கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது. ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன். அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன். அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன். “அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்” “ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?” “நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்” “அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே” “அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்” என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும். கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது. ************ கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான். எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன். ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன். அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார். அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை. நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார். நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன். நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர். நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை. அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும். மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார். “நீயா மணியை அழுத்தினாய்” “ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு” “உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்” “என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்” “உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்” “நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்” “தாராளமாகச் செய்” கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார். “என்னப்பா பிரச்சனை” “பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது” “அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்” “நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்” “இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது” “சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ” அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன். அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம். நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை. நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார். நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன. *********************************** நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன். ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை. அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார். “நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்” “ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்” “ஏலாமல் இருந்தாரா” “ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்” “உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??” “ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.” “நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே” “அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது” “அவர்கள் வந்திருக்கிறார்களா?” “இல்லை நாளைதான் வருவார்கள்” “தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?” “இல்லை எனக்குப் பழகிவிட்டது” “உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??” “வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது” “ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு” “நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்” வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான். ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன. கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன். கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன் யாயினி.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்அது முடிஞ்சு ஆறுமாதாமாகப் போகுது 😄 சரியாய் சொன்னீர்கள் 😂 அதுக்கும்தான்
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்இவ்வளவுதான் அவனுக்குத்தான் தெரியும் 😀
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்கொஞ்சம் மவுசை உருட்டினீர்கள் என்றால் பழையது வரும் 😂
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்பகுதி 2 எழுதிப் போட்டாச்சு😀
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்அவன் தூரத்தில் வரும்போதே துர்நாற்றம் ஒன்று வீச அந்தப் பெரிய கண்ணாடியை மீறி சிறிய கடிதங்கள் மட்டுமே போகக்கூடிய இடைவெளியூடாக அந்த நாற்றம் என் மூக்கில் அறைய நான் என்னை அறியாமலேயே கைகளால் மூக்கைப் பொத்திவிட்டு ஒரு வாடிக்கையாளருக்கு முன் அப்படிச் செய்வது அழகல்ல எனறு எண்ணி கைகளைக் கீழே விட, அவன் அந்த இடைவெளியால் தாளைத் தருகிறான். அவனுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட வழமைபோல் நன்றி கிருஷ்ணா என்றபடி திரும்புகிறான். அவன் கைகளில் வைத்திருந்த பொருட்கள் அப்போதுதான் என் கண்ணில் தெரிகின்றன. "உன் பெயர் என்ன" "மார்ட்டீன்" "எதற்கு இந்த வண்ணக் கட்டிகளையும் பென்சில்களையும் வாங்கிக்கொண்டு செல்கிறாய்" "நான் ஆர்ட் கீறுவதில் மாஸ்ரேஸ் முடித்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் நேரங்களில் படங்கள் கீறுவேன்" "உனக்குக் குடும்பம் இருக்கிறதா" "யாரும் இப்போ இல்லை" "வீடு கூட கவுன்சில் தரவில்லையா" "எனக்கு வீடு இருக்கிறது. இரவில் மட்டும் அங்கு சென்று தூங்குவேன்" "என்னைத் தவறாக நினைக்காதே. உன்னில் ஒரு கூடாத மணம் வருகிறது. இத்தனை படித்த நீ ஏன் சுத்தமாக இருக்கக் கூடாது." "ஓகே" என்றுவிட்டு அவன் செல்ல, வெளியே கடையில் தட்டுக்களில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவர் "என்ன அக்கா. ஏன் இப்பிடி மணக்குது என்று அவனுக்குச் சொன்னீர்கள்" "அப்பவாவது அவன் குளித்து உடைமாற்றிக்கொண்டு வருக்கிறானா என்று பார்ப்போம். எத்தனை நாட்கள்தான் அவனின் நாற்றத்தைத் தாங்குவது" "நீக்கள் சொன்னது போலத்தான் எங்கட முதலாளியும் அவனுக்கு ஒருநாள் சொன்னவர். அவன் அதைக் கேட்டிட்டு "ஜோன் எனக்கு ஒண்டும் சொல்லாதை. நான் இப்பிடித்தான் இருப்பன். எனக்கு மில்லியன் வியூவேர்ஸ் இன்ஸ்ரகிறாமில் இருக்கினம். உனக்குப் பிடிக்காட்டில் நான் எதிர்ப்பக்கம் இருக்கிற கடையில போய் இருக்கிறன்" என்றானாம். அதன்பின் முதலாளி வாயே திறக்கிறேல்லை. ஆனால் நீங்கள் பொம்பிளை எண்டதால ஒண்டும் சொல்லாமல் போறான். நான் சிரித்துவிட்டு என் அழுவலைப் பார்க்கிறேன். அடுத்த நாள் வேலையை ஆரம்பித்து பத்து நிமிடம் செல்ல மார்ட்டீன் என்னை நோக்கி வந்து குட் மோர்னிங் கிருஷ்ணா என்கிறான். நேற்று அவனுடன் கதைத்த பின் எனக்கு அவன்மேல் ஒரு மதிப்புக் கூடியிருந்தது. அதற்குக் காரணம் அவன் படித்திருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் நான் வேலை முடிந்து செல்லும்போது அவன் மட்டையில் வரைந்து முடித்திருந்த அந்த அழகிய அர்த்தம்பொதிந்த ஓவியமும்தான். இன்று நான் சுத்தமாக வந்திருக்கிறேன் என்று தன் ஆடையையும் தொட்டுக் காட்ட அப்பதான் அட இவனில் இன்று எந்தத் துர்நாற்றமும் வீசாததை நான் கவனிக்கவில்லையே என வியந்தபடி மிக்க நன்றி மார்ட்டீன். என் பேச்சு உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள் என்கிறேன். இல்லை இல்லை. நான் ஒன்றும் நினைக்கவில்லை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றபடி திரும்பிச் செல்ல என் மனம் நிம்மதி அடைகிறது. கடைக்கு வரும் பலரும் அவனுக்கு பணம் கொடுப்பது மட்டுமன்றி அவனைக் கூட்டிவந்து அவனுக்குத் தேவையான உணவுகளைக்கூட வாங்கிக் கொடுப்பார்கள். அங்கு மெசினில் கோப்பி அல்லது தேநீர் கூட அவனாகவே வாங்குவதுமுண்டு. மற்றவர்களும் வாங்கிக் கொடுப்பதும் உண்டு. சில நேரங்களில் கையில் பணம் இல்லாதபோது கடையில் நிற்போரிடம் கடன் சொல்லி வாங்கிவிட்டுப் பணம் சேரும்போது கொடுத்தும்விடுவான். இப்ப இரண்டு வாரங்களாக அவனைக் கடைக்கு முன் காணவில்லை. அவன் மன அழுத்தம் காரணமாக மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டானோ? காலையில் எழுந்து பல்விளக்கி முகம் கழுவுகிறானோ என்று கூடத் தெரியாது. குடும்பம் இல்லை. வேறு தொந்தரவுகள் இல்லை. வீதியிலேயே இருப்பதால் வீடு இருந்தாலும் கரண்ட் காசுகூடக் கட்டும் தேவை இல்லாத அவனுக்கே மன அழுத்தம் என்றால் இத்தனை சுமைகளைத் தாங்கி இத்தனைகாலம் குடும்பமாய் வாழும் எனக்கு எத்தனை மனஅழுத்தம் இருக்கவேண்டும். அதனைக்கும் அசையாது இத்தனை மனத்திடத்துடன் நான் இருக்கிறேன் என்னும் பெருமிதமும் எனக்குள் ஏற்படாமல் இல்லை. இருவாரம் ஒரு மாதமாகி ஆறு ஏழு மாதங்களாகியும் அவன் மீண்டும் வரவேயில்லை. அவன் தொடர்ந்தும் மருத்துவமனையில் தான் இருக்கிறானா?? அன்றி அவனுக்கு எதுவும் நேர்ந்துவிட்டதா என்னும் பதைப்பும் என்னுள் எழுந்து மடிய பலரிடம் விசாரித்தும் அவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவேயில்லை. அவன் இருக்கும் இடத்தில் அவன் வைத்துவிட்டுப் போன அந்த மட்டையும் சில நிறம் தீட்டும் பென்சில்களும் கேட்பாரற்று அங்கேயே இன்றுவரை கிடக்கின்றன.
-
அந்த மனிதன்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்சத்தியமாய் நான் இதை மறந்தே போனன். மன்னியுங்கள் மறந்துவிட்டேன் உண்மையை ஒத்துக்கொள்ளத்தானே வேணும்.
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
காருக்கு நான்கு சில்லுக்கள் என்பதால் ஒண்டும் நடக்காது 😄 வாங்குவன். இன்னும் வாங்கேல்லை.😄 இன்னும் இல்லை.😀
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
இதை இப்ப வாசிக்க எனக்கே சிரிப்பாக கிடக்கு 😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்உண்மையில் எழுத எத்தனையோ இருக்கு. பார்ப்போம்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஆரவன் என்னை வெருட்டியதாகச் சொன்னது ??😃 அதேதான் எல்லாத்திலையும் ஒரு சலிப்பு வந்திட்டுது. கிழமையில இரண்டு தடவை கட்டாயம் முழுகுவமல்லோ 😃 உங்களுக்குத் தெரியுது ஒண்டுதான் எண்டு நீங்களே எப்பிடி முடிவெடுப்பியள் 😀 அப்பிடியா ? எனக்குத் தெரியவில்லை
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இன்னும் நிறைய இருக்கு அக்கா ஆனால் களைத்துவிட்டது எழுதி. கடல் வற்றாதுதான். ஆனால் நாங்கள் நதி. ஆதலால் வற்றும்.😂 இதுக்கு மிஞ்சி எழுதி ஆர்வம் இல்லை.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நான்தான் மறந்திட்டன் 😄 எனது பெறாமகன் கூட சித்தி பொலிஸ் மறிச்சால் வாய் காட்டிப்போடாதேங்கோ என்று. இரு தடவை மறித்துவிட்டு உடனே விட்டுவிட்டார்கள். இனி சிங்களம் படிக்கிற மூட்டும் இல்லை. என்ன விதிக்கப்பட்டிருக்கோ பார்ப்போம். இத்தனை காலத்தில் இம்முறைதான் தோம்பு என்பதையே நான் கேள்விப்பட்டது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்கொன்றாக் குடுத்தால் இழுத்தடித்துத்தான் வேலை நடக்கும். தினக்கூலி அன்றே குடுப்பதானால் ஓரளவு வேலை நடக்கும். இந்த செப்டெம்பர் போய் ஸ்கூட்டியில தான் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி எல்லாம் போய் வரவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு அதை நினைக்கவே நெஞ்சு திக் திக் எண்ணுது இப்பவே. நாம் இருவரும் போய் இருக்கும்போது கட்டாயம் சிறிய கார் ஒன்று எடுப்போம். எமக்குத் தந்த தோம்பில் யாரும் கையொப்பம் இட்டதுபோல் தெரியவில்லை அண்ணா. உண்மையை உரத்துச் சொல்வோம் 😃
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்தோம்பு என்பது கடந்த காலங்களில் யார் யார் காணியை வைத்திருந்தனர். யாரிடமிருந்து எப்ப வாங்கினர் திகதி உறுதி இலக்கம் உட்பட எல்லாம் இருக்கும். A3 அளவில் மடித்துத் தருவார்கள். கச்சேரியில் தான் இருக்கும். நாமே சென்று பணம் கட்டிப் பெற 160 ரூபாய்கள். அடுத்தநாள் எடுத்துத் தருவதற்கு லோயர் அறவிடும் பணம் பிரதி ஒன்றுக்கு 1500 ரூபாய்கள். நாம் புதிதாக சோலை வரியோ அல்லது காணி வாங்கும்போதோ அல்லது மின்சாரம் பெறவோ அது கட்டடாயம் தேவை. எனக்கு இவ்வளவுதான் தெரியும். வேறு யாருக்கும் இதுபற்றித் தெரிந்தால் குறிப்பிடுக. கன காலம் வராவிட்டால் எல்லாருக்கும் உந்தக்கதிதான். இதிலை நீக்கள் எது என்று சொல்லவே இல்லையே. அனேகமா அந்த நடுவில நிற்கும் கண்ணாடிதானே நீக்கள் ????😄
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இவரிடம் 40000 ரூபாய்களுக்கு கன்றுகள் வாங்கினேன். நன்றி அண்ணா ஒரு ஆண்டுகளுள் நாம் கண்டுபிடிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் ஒருவர். உண்மை தெரியவில்லை.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்சுவீசிற்குச் சென்று மற்றக்கோன் மற்றும் ஜங்லேடி போன்றவற்றுக்குச் சென்றுள்ளீர்கள் எனறு புரிகிறது. கேபிள் ரெயினில் செல்வது மறக்கமுடியாத அனுபவம். காதலன் காதலியின் தோள்களில் அல்லது கணவன் மனைவி சாய்வதும் தூங்குவதும் அதைவிட குழந்தைகள் பெற்றோரின் தோள்களிலோ அல்லது எங்கும் சாய்வது யாருக்கும் தொந்தரவாகத் தெரிவதில்லை. ஆனால் மற்றவர்கள் சாய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. படம் எடுக்கும் ஆர்வத்தில் அதுவும் 95 வயதுப் பெண்ணின் வலுவற்ற கால்களை மிதித்தால் கோவம் வராமல் என்ன செய்யும். 😂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நான் வரும்போது பேற்றோல் வரிசை குறைந்திருந்தது. நான் ஸ்கூட்டி வாங்கும்போது கியூவா கோட் முறை ஆரம்பித்துவிட்டாபடியால் எனக்கு அதுபற்றி எழுதிய ஒன்றும் இல்லை. ஆனால் சிலிண்டர் விலை 25000 ரூபாய்களாக உயர்ந்திருந்தது மட்டுமன்றி இலகுவில் வாங்கவும் முடியவில்லை. அதுகும் வெளிநாட்டுக் காறியைக் கொண்டு ஒன்றை இலவசமாக வாங்கி விடவேண்டும் என்பதில் என் சித்தி குறியாக இருந்ததில் கெதியா ஒன்றை வாங்கு என்று எனக்கு கரைச்சல் வேறு. யாழ்ப்பாணம், சுண்ணாகம், வரும்வழி, போகும் வழி எனக்கும் சிலிண்டர் பார்ப்பதே ஒரு வார வேலை. கொட்டடியில் பெரிய விற்பனை நிலையம் உண்டென்று அங்கு சென்றால் அங்கும் இல்லை. பின்னர் அவர்களில் ஒருவர் தந்த தொலைபேசிக்கு தொடர்புகொண்டு கதைக்க ஒரேஒரு சிலிண்டர் தான் இருக்கு. 25000 ரூபாய்கள் என்றும் கொண்டுவந்து தருவதற்கு 2000 ரூபாய்கள் என்றும் கூற சம்மதித்ததும் மாலையே கொண்டுவந்து தந்துவிட்டுச் சென்றனர். மீண்டும் நான் வருவதற்கு முன்னர் காஸ் விலை கூடப்போகிறது என்ற செய்தி வந்ததும் மீண்டும் கடைகளில் காஸ் சிலிண்டர்களை ஒளித்துவைத்துவிட்டு இல்லை இல்லை என்ற வார்த்தை மட்டும்தான். வருகைக்கு நன்றி சபேஷ் நாங்கள் லண்டனில் வசித்தாலும் சாதாரண குடிமக்கள் தான். அதனால் எங்கள் வீட்டிலோ வங்கியிலோ கட்டுக்கட்டாக பணமிருக்காது. இருந்திருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பன்.😃 பரவாயில்லை நேரம் இருந்தால் வாசியுங்கள் அண்ணா.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஏதோ இப்போதுதான் வெளிநாட்டுக்குச் செல்லும் ஆசை எம்மவருக்கு அதுவும் விடுமுறைக்குச் செல்லும் எம்மவரைப் பார்த்து என்று கூறுவதும் முற்றுமுழுதான உண்மை அல்ல. நாம் இங்குள்ள கடின வேலைகளை, குளிரை, நின்மதியை,நோய்களை என்று எவற்றைச் சொன்னாலும் நம்பாது வெளிநாட்டுக்குத் தாமும் சென்று பணம் ஈட்ட வெட்டும் என்பது அவர்களது அடிப்படை ஆசை. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள். வெளிநாட்டில் இருந்து செல்பவர்கள் பாவம் அவர்களிடம் போதிய பயணம் இல்லை எமது பணத்தில் அவர்களை இதையாவது அனுபவிக்க வைப்போம் என்று இங்கிருந்து பொருட்களையோ நகைகளையோ அல்லது பணத்தையோ அவர்களுக்கு வாரி இறைக்கும்போது மட்டும் வேண்டாம் எனறு சொல்லாமல் அனுபவித்துவிட்டு அவர்கள் டம்பம் காட்டுகிறார்களென்பது என்ன நியாயம்???? என்ன சொன்னாலும் நாம் பிறந்த மண்ணில் எங்கள் ஆசைக்கு காணிகளை வாங்கும் உரிமை வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு உண்டு. காணி மலிவாக வேண்டும் என்றால் மலிவாக இருக்கும் இடத்தில் நீக்கள் போய் வாங்குவதை யாருமே தடுப்பதில்லையே.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்படத்துக்கு நன்றி அண்ணா. தபேந்திரன் கூறியிருப்பது எல்லாம் சரியென ஒத்துக்கொள்ள முடியாது அண்ணா. இங்கக்கு பெரிய வளவுகள் வைத்திருப்பவர் குறைவு. அதிலும் தாயக்கத்தைப் போல பெரு மரங்கள் இருக்கும் வீடுகள் மிகக் குறைவு. அங்கு நிரந்தரமாக வாழ்பவர்களே உயிர் வேலிகளை வைத்திருப்பதில்லை. அதுவும் வசதி குறைந்தவர்கள் கூட கதியால்களை அகற்றிவிட்டு மதிலோ தாகரமோ அடைக்கிறார்கள். அறிவுள்ளவர்கள் யாரும் வளவுக்குள் உள்ள மரங்களை அழிக்கமாட்டார்கள். நான் கவனித்தவரை என் அயலிலேயே பல வீடுக்களில் மரங்கள் இல்லை. ஏன் வெட்டிவிட்டீர்கள் என்று கேட்டால் குப்பையைக் கூட்ட முடியவில்லையாம். புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் காணிகளை விற்றும் விட்டனர். தற்போது காணிகளை வாங்கிக்குவிப்பதாகக் கூறப்படுவோர் ஏதோ எமது நாட்டில் நல்லது செய்து நான்கு பெருக்காவது வேலைவாய்ப்பைக குடுக்கலாம் என்ற நல்ல நோக்கத்திலேயே காணிகளை வாங்குகின்றனர். ஒருசிலர்தான் வீணாக ஆடம்பரத்துக்காக மாடி வீடுகளைக் கட்டி வீட்டைப் பார்க்க ஆட்களையும் நியமித்து பணத்தையும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதனால்தான் காணிகள் விலை என்று கூறுவது மிகத் தவறு. எமது ஊரில் ஒரு பரப்பு 30-60 லட்சம் வரை போகிறது. அதுவே நான் காணி வாங்கிய இடத்தில் 8 - 12 இலட்சயமே போகிறது ஒரு பரப்புக் காணி. எமது ஊரில் நான் வாங்கியிருந்தால் வெறும் 5 பரப்புக் காணி மட்டுமே வாங்கியிருக்க முடியும். எம்மூரில் காணிகளே விற்பனைக்கு இல்லை என்பது வேறு விடயம். தாம் வசிக்கும் இடத்தை விட்டு பக்கத்து ஊருக்குக் கூடப் போக விரும்பாதவர்கள்தான் அங்கு உள்ளவர்கள். அதனால் தான் காணிகள் அதிக விலை போகின்றன..அடுத்தது 10 லட்சம் போகும் காணியை தமது புரோக்கர் பணத்துக்காக 15,16 எனக் கூட்டி விலை ஏற்றுபவர்கள் புரோக்கர்மார் தான். வெளிநாட்டினரே எல்லாக் காணிகளையும் வாங்குகின்றனர் என்பது மிகைப்படுத்தல்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ம்க்கும் 😀 உண்மைதான் அக்கா பாரிய மாற்றம் எங்கும். பல்லைக் கடித்துக்கொண்டு வாழ்ந்தால்த்தான் உண்டு.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இருபது ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணம் செல்லும்போது பெரும்பாலும் பஸ்சில் தான் போய் வந்தேன். முன்புபோல பேருந்துச் சேவைகளோ அன்றி மினிபஸ்களோ கூட இல்லை. ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டு தான் செல்கின்றன. எல்லோர் வீட்டிலும் ஸ்கூட்டியும் மோட்டார் சயிக்கிலும் இருப்பதுதான் அதற்குக் காரணம். பஸ்சில் பெரிதாக ஆட்களே இருப்பதில்லை. அதிலும் அரசாங்க பஸ் சிவப்பு நிறத்திலும், தனியார் பஸ் பச்சை நிறத்திலும் ஓடுகிறது. சிலவேளைகளில் மட்டுமே மினிபஸ் ஆட்கள் நிறையாது வரும். மற்றப்படி ஆட்டுப்பட்டிகளை அடைப்பதுபோல் அடைந்தபடிதான் வருவார்கள். பின்னுக்குப் போ பின்னுக்குப் போ என்று அவர்கள் கத்தும்போது ஆட்களும் எதுவும் பேசாது இடித்தபடி பின்னால் நகர நான் மட்டுமே பின்னால எங்கே தம்பி போறது என்று கேட்டு நகராமல் நிற்பேன். ஆனால் எதுவும் பேசாது ஆட்கள் இடித்துக்கொண்டு நெருக்கியடித்து நிற்பார்கள். அதற்குள் பலத்த சத்தத்துடன் பாட்டுகளைப் போட்டு யாரும் கதைக்கக்கூட முடியாதபடி சத்தத்துடன் இருக்கும். அதற்கும் எவருமே எதுவும் சொல்வதில்லை. தோழில் பைகளைக் கொண்டு வருபவர்கள் கேட்டுக்கக்கேள்வியின்றி இருப்பவரின் மடியில் தமது பைகளை வைத்துவிட்டு நிற்பார்கள். ஒரு மரியாதைக்காவது “இதை ஒருக்கா வைத்திருக்கிறீர்களா” என்று கேட்பதில்லை. முன்னர் பள்ளிக்கூட பஸ்சில் தான் மாணவர்கள் ஏறவேண்டும். இப்போது மினிபஸ்சிலும் நெரிபட்டுக்கொண்டு வருகிறார்கள். “இப்போது பள்ளிக்கூட பஸ் வருவதில்லையா” என்று கேட்டதற்கு “அது வரும்வரை நிற்கேலாது” என்கின்றனர். ஆட்கள் மினிபஸ்சில் குறைவு என்றால் எங்காவது தரிப்பில் நிறுத்தி ஒரு மூன்று நான்குபேர் ஏறுமட்டும் ஒரு பத்து நிமிடமாவது நிறுத்திவைத்துவிடுவார்கள். யாரும் ஏன் நிக்கிறாய் போ என்று சொல்வதில்லை. ஒருதடவை தட்டாதெருவில் 15 நிமிடம்வரை நிக்க, “ஏன் தம்பி நிக்குது?” என்று நான் கேட்க யாரோ தமக்குத் தெரிந்தவர் வரவேண்டும் என்கிறான் அந்தப் பெடியன். “உங்களுக்குத் தெரிந்தவர் வரும்வரை இத்தனை பேரும் காத்திருக்கவேண்டுமா” என்று நான் கேட்க “விருப்பம் இல்லாட்டில் அவவை இறங்கி ஓட்டோவில போகச் சொல்லு” என்கிறான் சாரதி. “எண்ணண்டு அப்பிடி நீர் சொல்லுவீர். என்னை ஓசியிலா ஏற்றிக்கொண்டு செல்கிறீர். இறங்கச் சொல்ல உமக்கு எந்த றைற்றும் இல்லை” என்றுவிட்டு அவர்கள் இருவரையும் படம் எடுக்க பக்கத்தில நிண்ட மனிசி “பிள்ளை உவங்களோட கதைச்சா பிரச்சனை. வெட்டிக்கிட்டிப் போடுவாங்கள். அதுதான் நாங்கள் கதைக்கிறேல்லை” என்கிறா. இன்னும் இரண்டுபேர் என்னிடம் “உவங்களோட கதைக்கேலாது” என்று மற்றவர்களுக்குக் கேட்காதவாறு சொல்கின்றனர். ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று மீசாலையில் இருக்கும் ஒரு நட்பைப் பாரக்கச் செல்கிறேன். எந்த பஸ்சில் ஏறுவது என்று தெரியவில்லை. ஒருவர் முன்னால நிக்கிற பஸ் என்று காட்ட, போய் ஏறுவதற்கு போக சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம்.. கொடிக்காம் .... தம்பி இது மீசாலைக்குப் போகுமோ? ஓம் ஏறுங்கோ கெதியா. கொடிக்காம் என்று ஒரு ஊர் இருக்கோ தம்பி? கொடிகாமம் எந்ததைச் சுருக்கிச் சொல்லுறன் அம்மா. தம்பி உங்களுக்கு என்ன பெயர்? சங்கீதன் அம்மா. உங்களை சதன் எண்டு கூப்பிடால் நல்லாவா இருக்கும்? சீற்றில ஏறி இருங்கோ அம்மா முதல்ல சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம் கொடிக்காம் ........ ஒருதடவை யாழ்ப்பாணம் செல்லும்போது மினிபஸ்சில் சனம் இல்லை. கடைசி இருக்கையில் நடுவே நான்குபேர் இருக்கும் இருக்கையில் ஒரு இடம் காலியாக இருக்க சென்று அமர்கிறேன். எனக்கு ஒருபுறம் இருவர். மறுபுறம் இன்னொருவர். ஒருபுறம் பெண் என்பதால் நான் அவருடன் நெருங்கி அமர்கிறேன். மறுபுறம் இருப்பவர் அடக்க ஒடுக்கமாய் இருக்காது கால்களை அகட்டி வைத்தபடி இருக்கிறார். போதாததற்கு கால்களை அப்பப்ப ஆட்டியபடியும் இருக்க, அவர் ஆட்டும்போது எனக்குப் பட்டுவிடும்போல் இருக்க அவரை ஒருதடவை திரும்பி முறைத்துப் பார்த்தபின்னும் அவர் நிறுத்தவில்லை. நான் : அண்ணா கால் ஆட்டாதைங்கோ அவர் : ஏன்? என்ர கால் நான் ஆட்டுறன். நான் : எனக்கு முட்டுற மாதிரி இருக்கு. . அவர் : ஏன் முட்டினதே? இல்லையே. நான் : முட்டாமல் இருக்கத்தான் முதலே சொல்லுறன். காலை ஒடுக்கிக்கொண்டு இருங்கோ. கடைசியில என் குரல் உயர்ந்து மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, தன் காலை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறார். நானாட்டானில் இருந்து மன்னார் மன்னார் வரும்போதும் எனக்கு கடைசி இருக்கை தான். அரச பேருந்து அதிவேகமாகச் செல்லும். எனக்கு முன்னால் பிடிப்பதற்குக் கூட எதுவும் இல்லை.அது ஐந்துபேர் இருக்கக்கூடிய இருக்கை. நாம் நாங்கு பேர்தான். ஒரு ஐம்பது மதிக்கத்தக்க ஒருவர் என்னருகில். பிரேக் பிடித்தால் நான் விழுந்துவிடுவேன் என்ற பயத்தில் முன் இருக்கையின் கம்பியை இறுக்கிப் பிடித்தபடி இருக்க, நித்திரை தூங்கியபடி என் கைகளில் தலையைக் கொண்டுவந்து சாய்ப்பதும் நான் கையை எடுப்பதுமாக இருக்க, அவர் வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது தற்செயலானதா என்று புரியாவிட்டாலும் கூட இதுக்கு மிஞ்சி சகிக்க முடியாது எனறு எண்ணி என் பலம் கொண்ட மட்டும் அவர் தலையை கைகளால் தள்ள திடுக்கிட்டு விழித்தவர்போல் என்னைப் பார்க்க, அண்ணா என்ர கையில படுக்காதேங்கோ. நித்திரை வந்தால் பின்னால சாய்ந்து படுங்கோ என்றபின் மன்னார் வரும்வரை அவர் நித்திரையே கொள்ளேல்லை. அரச பஸ்சில் ஏறினால் டிக்கட் கொடுப்பதற்கு மிஷின் இருக்கு. ஆனாலும் நாம் மாற்றிய காசு கொண்டு செல்வதுதான் நல்லது. மிச்சக்காசை இறங்கும்போது நாம்தான் கேட்டு வாங்கவேண்டும். மினிபஸ்சில் என்னைப் பார்த்ததும் எப்படித்தான் அவர்களுக்குத் தெரிக்கிறதோ இருபது ரூபாய்கள் அதிகமாகவே வாங்குவார்கள். சரி போகட்டும் என்று விட்டுவிடுவது. நாம் எப்படித்தான் சாதாரணமாக வெளிக்கிட்டுப் போனாலும் எம்மை எப்படித்தான் வெளிநாட்டவர் என்று அறிகிறார்களோ தெரியவில்லை. மண்ணெண்ணை தட்டுப்பாடு இருந்து எந்தக் கடைகளிலும் இல்லை. அடுத்தநாள் கொடுக்கிறார்களாம் என்று கதை அடிபட நானும் சித்தியின் அட்டையைக் கொண்டுசென்று வாங்குவோம் என முடிவெடுத்து 1000 ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் கானும் வாங்கி வைத்தாச்சு. ஓட்டோவில் போகவர மண்ணெண்ணை வந்திட்டுதா என்று கேட்டு கடைசியில் மாலை நான்கு மணிக்கு மருதனார்மட பெற்ரோல் நிரப்பு நிலையத்தில் கொடுக்கிறார்களாம் என்று என் ஓட்டோக்காரர் கூற உடனேயே அவருடன் புறப்பட்டு வந்தாச்சு. நாம் வரும்போது வரிசையில் எமக்கு முன்னால் இருபதுபேர். சிறிது நேரத்தில் திபுதிபு என ஆட்கள் கூட எமக்கு முன்னால் சிலர் இடையே புகுகிறார்கள். தம்பி பின்னுக்கு வாங்கோ. நாங்களும் மண்ணெண்ணைக்குத்தான் நிக்கிறம் என்று நான் மட்டும்தான் சொல்லிக்கொண்டு நிக்கிறன். மற்றவர்கள் வாயே திறக்கவில்லை. ஓரிடத்தில் அட்டையைக் கொடுத்து பதிந்தபின் மற்ற இடத்தில் மீண்டும் வரிசையில் நின்று எண்ணையை வாங்க வேண்டும். பெடியள் எல்லாம் இரட்டு அட்டைகளைக் கொண்டுவந்து இடையில் புகுந்து அல்லது தமக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து வாங்குகின்றனர். யாரும் எதுவும் பேசவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் வருகிறார். எனக்கு முன்னார் நிற்பதற்கு முயல நான் விடாது “அண்ணா இத்தனைபேர் இவ்வளவுநேரம் காத்துக்கொண்டு இருக்கினம். நீங்கள் இப்ப வந்திட்டு இடையில நிக்க வாறியள். போய் வரிசையில நில்லுங்கோ” என்று சொல்ல,ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு முன்னால் போனவர் பத்து நிமிடத்தில் எண்ணையை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் காட்டிப்போட்டுப் போறார். எனக்கு கடும் கோபம்வர பொறுங்கோ நான் போய் கேட்டுட்டு வாறன் என்று கிளம்ப, “அயலில இருக்கிறவை அக்கா. ஏனக்கா தேவையிலாத பிரச்சனை. பேசாமல் விடுங்கோ” என்கிறார் இன்னொருவர்.கடைசியில் எதுவும் பேசாது பார்த்துக்கொண்டுநின்று மண்ணெண்ணை வாங்கிவர இரண்டு மணித்தியாலம். எனக்கு ஏன் மண்ணெண்ணை என்றுதானே கேட்கிறீர்கள். என் வளவில் இருக்கும் கறையான் புற்றுக்களுக்கு விடுவதற்கு வாங்கியதுதான். திரும்பி லண்டன் வரும்போதும் நான் நிண்ட கோட்டலில் முதல் நாளே எனக்கு விமான நிலையம் செல்வதற்கு ஊபர் ஒழுங்கு செய்து தாருங்கள் என்றேன். நீங்கள் தயாராகிக் கீழே வந்தவுடன் சொல்லுங்கள். ஊபர் இருக்கிறது மலிவாக இருக்கும் என்றனர். என் போனில் போட அது ஏதோ சில்லெடுத்தபடி இருக்க அங்கு நின்றவரிடம் கூறினேன். ஒரு இருபது நிமிடமாக இருவர் போனை வைத்துக்கொண்டு அங்குமாறி இங்குமாறித் திரிய எனக்கோ நேரம் ஆகிறதே என்ற பதட்டம். தங்கச்சி ஊபர் விமான நிலையத்துக்கு வருதில்லை. தூரமாம். பெற்றோல் விலை என்பதனால் வர மறுக்கிறார்கள் என்கின்றனர் இருவரும் சொல்லிவைத்ததுபோல். பிரைவேட் கார் ஒழுங்கு செய்து தரட்டா என்று கேட்க நானும் என்ன என்றாலும் வரட்டும் என்று கூற, தங்கச்சி 9000 ரூபாய்கள் கேட்கின்றார். என்ன சொல்ல என்கிறார். சரி வரச் சொல்லுங்கள் என்கிறேன். விமான நிலையம் வந்து செக்கின் முடிய கணவருக்கு போன் செய்ய, நாம் வரும்போது ஊபருக்கு 3000 ரூபாய்தான் கொடுத்தோம். கோட்டலில் உள்ளவர்கள் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர் என்கிறார்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஊரெழுவில் உள்ளது. தாவடியில் ஒரு நல்ல பெண் வைத்தியர் இருக்கிறார். பிரதேச செயலகத்துக்குப் போனால் கடுப்புத்தான் வரும் . இருந்தாலும் அடிக்கிக்கொண்டு வருவது. ஒருமுறை நான் போய் இருக்கிறேன். வேலை ஆரம்பிப்பது 9.00 மணிக்கு. நான் 8.50 இக்குப் போய்ப் பார்த்தால் ஒரே ஒரு முதியவரும் இரு இளம் ஆணும் தான் வந்திருந்தனர். பத்து நிமிடம் ஆகியும் அங்கே மாறி இங்கே மாறித் திரிக்கின்றனர். அதன் பின் நான்கு இளம் பெண்கள் வருகிறார்கள். பசிக்குது என்ன சாப்பிடுவம் என்று ஆளையாள் பார்த்துக் கேட்க எனக்கும் வாய் சும்மாஇருக்குமா? வேலைக்கு வரும்போது வீட்டில் சாப்பிடாமலா வருவீர்கள் என்கிறேன். அவர்கள் என்னைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்க அந்த முதியவர் அவர்களைப்பார்த்து அசடு வழிந்துகொண்டு இருக்கிறார். சமையல் செய்யிறன். இன்னும் முடியவில்லை. 😃
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்உறுதி, தோம்பு எல்லாம் போட்டோ கொப்பி பண்ணி கொண்டுபோய் குடுத்தது. இனி வரும்போதுதான் பார்க்கலாம்.