Search the Community
Showing results for tags 'கோபிசங்கர்'.
-
துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு இப்பிடித்தான் London போய் ஆறு மாசத்தில, “டேய், கார் வாங்கீட்டாய் தானே,சனி ஞாயிறு வேலை இல்லாட்டி வீட்ட வா” எண்டு சஞ்சீவ் சொல்ல , சரி எண்டு சொல்லீட்டு காஞ்சு போன வாய்க்கு வீட்டுச் சாப்பாட்டு கிடைக்கிற அவாவில வெள்ளிக்கிழமை வெளிக்கிட்டு எப்பிடி வாறது எண்டு வழி கேட்டால், உப்பிடியே Gantshill roundabout ஆல நேர வந்து A 406 எடுத்து அடுத்த roundabout இல மூண்டாவது exit எடுத்து அப்பிடியே north circular ஆல வந்து பிறகு அடுத்த roundabout ஐஞ்சாவது exit ஆல வெளீல வந்து எண்டு சொல்ல, ஊரில இருக்கிற சந்தி மாதிரி இருக்கும் எண்டு நெச்சு இருக்கிற roundabout பேரை எல்லாம் பாடமாக்கீட்டு் , வடிவா விளங்காட்டியும் ஆரையும் கேட்டாவதூ போகலாம் எண்டு நெச்சபடிக் காரை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன். முதலாவது roundabout இலயே exit எடுக்கத் தெரியாமல் சுத்துசுத்தெண்டு சுத்தீட்டு வழி கேக்க வழி ஒண்டுமில்லாமல் தட்டுத் தடுமாறித் திரும்ப , சந்தேகத்தில மறிச்ச பொலிஸ்காரனுக்கு விளக்கம் குடுத்திட்டு அவன்டையும் வழி கேட்டாப் பாவம் அவனுக்கும் சொல்லத் தெரியேல்லை, Map ஐப் பாத்துக்கொண்டு போகச் சொன்னான். திருப்பி வீட்டை வந்து காரை விட்டிட்டு tube எடுத்து harrowக்குப் போனன். அப்ப தான் ஊரின்டை அருமை விளங்கிச்சுது ஒரு நாளும் போகாத ஊருக்கு கூட “அண்ணை அராலிக்கு எப்பிடிப் போறதெண்டு” town ல கேட்டால் சந்திக்குச் சந்தி ஒருத்தன் எங்களுக்கெண்டே நிப்பான் வழி சொல்ல. “சத்திரத்துச் சந்தியால நேர போய் அப்பிடியே மனோகராச் சந்தியால திரும்பிப் போனா வாற ஐஞ்சு சந்தியால வலது பக்கம் திரும்பி ஓட்டுமடச்சந்தியால இடது பக்கம் திரும்பி நேர போங்கோ” எண்டு easyயாய் சொல்லுவாங்கள். இல்லாட்டியும் இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தி வழியவும் சாரத்தோட பேப்பர் வாசிச்சுக்கொண்டு ஆராவது இருப்பினம், வழி கேட்டுக் கேட்டுப் போக. அதோட ஊருக்க போய் ஆரின்டையும் பேரைச் சொல்லிக் கேட்டால் வீட்டடீல கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்காரரை கூப்பிட்டும் விடுவினம். ஊருக்க போய் வீட்டைக் கண்டு பிடிச்சு வாசலில நிண்டு பேரைக் கூப்பிடவும் முறை இருக்கு. பொதுவா ஆச்சி, அப்பு, ஐயா எண்டு கூப்பிடிறது, இல்லாட்டிச் சொந்தம் எண்டா முறையைச் சொல்லிக் கூப்பிடலாம். மனிசிமார் புருசன்டை பேரைச் சொல்லாத மாதிரித தான் வீடு வழிய போய் பேரை நேர சொல்லிக் கூப்பிடீறதோ இல்லாட்டி சபை சந்தீல கதைக்கேக்கயோ பேரைச் சொல்லுறதோ குறைவு. வீட்டுக்கும் , ரோட்டுக்கு ஒரு அடையாளம் மாதிரி ஊருக்க இருக்கிற ஆக்களுக்கும் பேரோட ஒரு அடைமொழி அடையாளமாய் இருக்கும். அப்ப பேருக்குப் பஞ்சம் எண்டதாலயோ இல்லாட்டி Numerology தெரியாததாலயோ ஊர் வழிய ஓரே பேரில கன பேர் இருப்பினம். அதோட வயசுக்கு மூத்த ஆக்களுக்குப் பேரைச்சொல்லிக் கூப்பிடிறது சரியில்லை எண்டு ஒரு மரியாதைக்கும் தான் இப்படி அடைமொழியோட கூப்பிடுறது எண்டு நெக்கிறன். அடைமொழிக்கு வைக்கிற பேர் அநேமா அவரின்டை வேலை சார்ந்ததா இருக்கும் . புரோக்கர் பொன்னம்பலம் , பரியாரி பரமசிவம் , கிளாக்கர் கனகசபை, CTB சிவலிங்கண்ணை எண்டு தொழிலோட பேர் இருக்கும். பிசினஸ் செய்யிற எல்லாருக்கும் ஒரே வேலை எண்டதால வேலைக்குப் பதிலா அவை வேலை செய்யிற இடங்களைச் சேத்துச் சொல்லிறதும் இருந்தது . இது அநேமா சிங்கள ஊரா இருக்கும் . காரைநகர் பக்கம் தான் சிங்கள ஊர் அடைமொழி கனக்கப்பேருக்கு இருந்தது. வெலிகம பொன்னம்பலம், தங்கொட்டுவ தணிகாசலம் , களுத்துறை கனகலிங்கம் எண்டு ஒரு கேள்விப்படாத ஊரில போய் வியாபரம் தொடங்கி ,establish பண்ணி அந்த ஊர் பேரை ஒட்டிக் கொண்டு வந்து பேரையும் பிறந்த ஊரையும் பெருமைப்படுத்தின கன பேர் இருந்தவை. என்டை மச்சான் ஒருத்தனை்பள்ளிக்கூடத்தில அப்பப்பான்டை பேர் என்ன எண்டு கேக்க PM எண்டு சொல்லி இருக்கிறான் , குழம்பிப்போன ரீச்சர் திருப்பி விசாரிக்க , “ ஓம் வீட்டை வாறவை எல்லாம் PM நிக்கிறாரோ எண்டு தான் கேக்கிறவை” எண்டு சொல்லத்தான் ரீச்சருக்கு விளங்கிச்சுது postmaster தான் PM ஆனவர் எண்டு. ஓவசியர், Chairman, SM ( station master ) எண்டு தொழிலே பேராகி பேர் மறக்கப்பட்ட ஆக்களும் இருந்தவை. பெருமைக்கு ஊரைச்சேக்கிற ஆக்களும், ஊருக்கு பெருமை சேக்கிற ஆக்களும் எண்டு ரெண்டு பேரும் பேரோட ஊரைச் சேப்பினம். ஊரில தன்னைத் தானே பெருமையா நினைக்கிறது St John’s கொலிஜ் காரருக்கு மட்டும் இல்லை முழு யாழ்ப்பணத்தானுக்கும் இருந்தது. “ பருத்தித்துறை ஊராம் பவளக்ககொடி பேராம்” எண்டு பாடின கல்லடி வேலுப்பிள்ளையார், ஆடிப்பிறப்பிக்கு பாடின நவாலியூர் சோமசுந்தரப்புலவர் எண்டு , கவிஞனும் சரி கவிதையும் சரி ஊர்ப் பேரோட தான் இருந்தது. ரோடுகளுக்கு ஆக்களின்டே பேர் இருந்தாலும் ஊர் வழிய சந்திக்கு ஆக்களின்டை பேர் வைக்கிறேல்லை. பெரிய சந்திகள் ஊரின்டை பேரிலேம் மற்றச் சின்னன்களுக்கு மரத்தின்டை பேரோட புளியடி, இலுப்பையடி இல்லாட்டி ஒரு கட்டிடம் இருந்தா அந்தப் பேரோட மடத்தடி, கச்சேரியடி, மனோகராத் தியட்டரடி எண்டோ இல்லாட்டி குளத்தையோ , கோயிலையோஅதில இருக்கிற வைரவரையோ , பிள்ளையாரையோ, மாதா கோவிலையோ சேத்துத் தான் பேர் வைக்கிறது. எங்கடை ஒரு ஊரில ஒரு சந்தி இல்லை ஒராயிரம் சந்தி. ஐஞ்சு சந்தி, நாச்சந்தி , முச்சந்தி, கெற்றப்போல் சந்தி எண்டு ஒவ்வொரு சந்திக்கெண்டு ஒரு காரணப் பேரும், இடுகுறிப் பேரும் அதுக்கெண்டு ஒரு சிறப்பும் இருக்கும். அதோட எங்கேயும் சண்டை நடக்கேக்கயும் சொல்லுவாங்கள் இது ஆரியகுளம் சந்தி குறூப் , கொட்டடிச் சந்தி குறூப் , கொய்யாத்தோட்ட குறூப், ஐயனார் கோவிலடி குறூப், இது பிரவுண் ரோட் குறூப் எண்டு. பஸ்ஸில போகேக்க பெரும்பாலும் சந்தீன்டை பேரைச் சொல்லித் தான் இறங்கிறது. ஊருக்குள்ள நிறையச் சந்தி இருந்தாலும் main bus route இல ஊரின்டை பேரோட ஒரு சந்தி இருக்கும். கொக்குவில் , கோண்டாவில் , இணுவில், உடுவில் எண்டு வாறது townஇல இருந்து போகேக்க ஊர் தொடங்கிற சந்தியா இருக்கும். Town க்கு போற பஸ் எல்லாம் KKS ரோட்டாலேம் , பருத்தித்துறை ரோட்டாலேம் A 9 ஆல வந்து ஆஸ்பத்திரீ ரோட்டாலேம் வர ஒரு பஸ் மட்டும் இந்த சந்தியால போறது , அது காரை நகரில இருந்து வாற 782 பஸ் . ஸ்ரான்லி றோட்டால வந்து வெலிங்டன் சந்தீல திரும்பி town க்கு போகும். அதே போல மணிக்கூட்டுக் கோபுரத்தில இருந்து வாற றோட் தான் மணிக்கூட்டு கோபுர வீதி. அது முந்தி ஆசுபத்திரிக்கு குறுக்கால வந்து , ஸ்ரான்லி ரோட் , நாவலர் ரோட் எல்லாம் தாண்டி பிறவுண் ரோட் வரைக்கும் வந்ததாம் . முந்தி இருந்த GA Lionel Fernando தான் குறுக்கால ஆசுபத்திரி கட்ட விட்டவர் அதின்டை எச்சம் தான் இப்ப இருக்கிற மணிக்கூட்டு ஒழுங்கை. அதே போல சந்திக்கும் பழைய பேர் ஏதும் இருந்திச்சுதோ தெரியாது இப்ப அதுக்குப் பேர் வெலிங்டன் சந்தி. Town மாதிரி பழைய வெலிங்டன் சந்தீன்டை நாலு மூலையிலும் கட்டடங்கள். வெலிங்டன் தியட்டர் ஒரு மூலை , முனீஸ்வரா கபேயும் கடைச்சல் பட்டறையும் மற்ற மூலை , லிங்கம் கிறீம் கவுஸ் தெற்கை பாத்த வாசலோட , பிளவுஸில மட்டும் விட்ட அம்பை பெடியளின்டை காச்சட்டை பொக்கற்றிலும் விட்ட விக்ரம் டெயிலேர்ஸ் அதுக்குப் பக்கத்தில, எதிர கண்ணாடி விக்கிற S.M. Fernando , அதையும் தாண்டிப் போக Tower கூல் பார் எண்டு இருந்தது. 85 /86 கோட்டையில இருந்து செல்லுகளும் பொம்பரும் நியூ மாக்கட்டையே இல்லாமல் பண்ண , செல்லுக்கெட்டிய தூரம் தாண்டி சனங்கள் பிழங்கத்தொடங்கேக்க தான் இந்த மாற்றம் வந்தது. வருசம் பதினாறு குஸ்புவைப் பாக்க கள்ளமா ஒதுங்கின அதே வெலிங்டன் தியட்டர்ச் சந்தி . தொண்ணூறில CCA , science hall , science academy , new- master எண்டு கல்விச் சந்தியாகி மாறினதும் இதே சந்தி தான். மனிசிக்குப் பின்னால திரியேக்க வெலிங்டன் சந்தீல “ அவள் வருவாளா” எண்டு பாத்து கொண்டிருந்தது லிங்கம் கடை மூலையில . தொண்ணூறுகளில யாழ்ப்பாணத்தின் tuition கொட்டில் எல்லாம் இருந்தது இந்த சந்தி தான். இதைப் போல ஒவ்வொரு சந்திக்கும் ஓராயிரம் கதை இருக்கும். அது ரோட் சந்திக்கிறதால மட்டுமில்லை ஆக்களும் சந்திக்கிறதால தான் சந்தி எண்டு எழுவாயும் பயனிலையும் சேந்ததா இருக்கு. இப்ப இருக்கிற ஊருக்கும் இருக்காத ரோடுக்கும் board எல்லாம் போட்டிருந்தாலும் எங்கயாவது போறதெண்டால் ஒரு சந்தீல நிப்பாட்டிக் “வட்டுக்கோட்டைக்கு வழி என்ன” எண்டு கேக்கிறாக்களுக்கு விடை “ துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” எண்டு வழி சொல்லிறாக்களும் இருக்கினம் ஊரில. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
-
“ யாரொடு நோகேன்…….. 2015 சனி இரவு 10:30 இருக்கும் சூப்பர் சிங்கர் பாத்துக்கொண்டு இருந்தன் . விளையாடிக் கொண்டிருந்த phoneஐக் கொண்டந்து “அப்பா உங்களுக்கு call “எண்டு தந்தாள் மகள். சேர் “இருபத்தி ஐஞ்சு வயசு , கிளிநொச்சீல இருந்து அனுப்பினவை “எண்டு சொல்லத்தொடங்க , சரி நான் வாறன் எண்டு phone ஐ வைச்சிட்டு சாரம் கழற்றி உடுப்பு மாத்தி வெளிக்கிட்டன். அங்க போய் உடனயே operation தொடங்க வேணும் எண்டு யோச்சபடி. இண்டையான் on call surgeon னிடசொல்லி அவையின்டை operationஐ நிப்பாட்டி எங்கடை case ஐச் செய்யக் கேக்கோணும், ஆர் anaesthetist எண்டு கேக்க வேணும் ICU bed தேவைப்படும் ,bed இல்லாட்டித்தான் பிரச்சினை எண்டு பல யோசனைகளோடு நான் வெளிக்கிட்டன். Theatre க்கு நான் போக எல்லாம் ரெடியாகி அடிபட்டவனை உள்ள எடுத்து மயக்கம் குடுக்கத் தொடங்கீட்டினம் . வெளீல நிண்ட attendant ரெஜிபோம் பெட்டியோட இரத்தம் எடுக்க ஓடிப்போக நானும் உடுப்பு மாத்தி உள்ள போனன் . X-ray எடுக்க கேட்டனான் தான் duty இல்லை ஆனாலும் வாறன் எண்ட தயாபரன் உடுப்பு மாத்தி உள்ள நிண்டான். nurse மதி எல்லாத்தையும் ஒழுங்கு படித்தீட்டு assist பண்ண ready யா நிண்டான். இரண்டு மணித்தியாலத்திக்கு பிறகு வெளீல வந்து யாரும் சொந்த காரர் இருக்கினமோ எண்டு பாக்க ஒருத்தரும் இல்லை. எல்லாம் முடிஞ்சுது எண்டு நானும் வீட்டை வெளிக்கிட்டன். அடுத்த நாள் காலமை போக , கைக்குழந்தையோட இன்னொரு பெரிய குழந்தை ICU வாசலில நிண்டது. “Sir இவை தான் இரவு வந்த …” எண்டு Nurse சொல்ல , கையில இருக்கிற அழுற சின்னனை, எப்படி ஒராட்டோணும் எண்டும் தெரியாமல் குறுக்கும் மறுக்குமா ஆட்டி ஆட்டி , “அவருக்கு எப்பிடி “, எண்டு கேக்கத்தான் உறவு முறைகள் விளங்கிச்சு. முள்ளிவாய்க்கால் நேரம் கட்டினாக்களை பிடிக்கமாட்டாங்களாம் எண்டு அவசரமாக நடந்த தாலி போடும் விழாவுடன் ஓடத் தொடங்கி ,பெயர்ச்சிகளால் இடம் மாறி ,இலகு நிவாரணங்களுக்காக இப்ப தஞ்சம் புகுந்தது திருவையாறு எண்ட கதையை கேட்டிட்டு, அவருக்கு நடந்ததை எப்படி சொல்லுறது எதை சொல்லாமல் விடுறது , சொன்னால் விளங்குமா எண்டு நானும் குளம்பி, வழமையான டாகுத்தர்மாரின்டை பாசையில, “அம்மா முள்ளந்தண்டு பாதிச்சிட்டுது operation செய்தனாங்கள் , முன்ணாண் , நரம்புகள் எல்லாம் பாதிச்சிட்டுது , எழும்பி நடக்கிறது கஸ்டம் , எண்டு கொஞ்சம் விளங்காத மாதிர சொன்னன். எல்லாம் விளங்கின மாதிரிக் கேட்டுட்டுப் பாவம், “ ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே எண்டு மீண்டும் அப்பாவியாய் கேக்க” , நான் இதுக்கு என்னத்தை சொல்லிறதெண்டு யோசிக்க ,security வந்து “அம்மா நேரமாகீட்டுது இப்ப போட்டு பிறகு வாங்கோ”எண்டு என்னை காப்பாத்தி விட்டான் . ரெண்டு நாளால Ward க்கு மாத்தின அவனுக்கு பாக்க ஆக்கள் இல்லாத படியால ஆம்பிளை வாட் எண்டாலும் பரவாயில்லை எண்டு கொஞ்ச நேரம் பகல்ல மனிசியியையும் பிள்ளையோட அவனுக்குப் பக்கத்தில நிக்கவிட்டம். முதல் மூண்டு நாளும் ஒவ்வொரு நாளும் வந்த மனிசி பிறகு விட்டு விட்டுத் தான் வந்திச்சுது . ஒரு கிழமை கழிய திருப்பியும் நான் அவனின் நிலமையை விளங்கப்படுத்தினன். இப்ப நிலமை விளங்க அவரால இனி நடக்க முடியாததை உணர்ந்து “அது நடக்காப்பிணம் நான் நடைபிணம்” எண்டதை அறிந்து நடந்தாள் அவள். இளம் பெடியன் இப்படி நடந்திட்டு ,பாவம் எண்டு physiotherapist எல்லாம் கடுமையா உழைக்க , எல்லாருக்கும் குடுக்கும் அதே காருண்யத்தை ward nurses இவனுக்கு கொஞ்சம் கூடக் குடுக்க, அவனுக்குள் ஒரு ஒளிவட்டம் தெரியத்தொடங்கிச்சு. அவள் வந்து போறது இன்னும் கொஞ்சம் குறைய , “ என்ன மூண்டு நாளா அவவைக்காணேல்லை”எண்டு வாட்டில கேக்கத்தான் வீட்டு நிலமை விளங்கியது . வீட்டில ஒரு சொந்தங்களும் இல்லை எண்டும், இருக்க இடம் குடுத்தது தூரத்து சொந்தமாம் எண்டும். 2009 க்கு பிறகு ஊரப்பக்கம் முளைத்த கம்பனிகள் ஒண்டில Lease க்கு எடுத்த Auto , ஓடித்திரியேக்க சாப்பிட மட்டும் காணுமான காசு கிடைக்க முதல் முதலா வாழக்கையில் பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்படத்தொடங்கினது எண்டு சொன்னான் . எப்பவாவது ஒரு முன்னேற்றம் வரும் எண்ட நம்பிக்கையில் மட்டுமே வாழுற வாழ்க்கையில் மீள்குடியமர்வு, நிவாரணம் , சமுர்த்தி, வீட்டுத்திட்டங்கள் எண்ட நம்பிக்கைகள் ஏனோ அந்நிய நாடுகளின் அனுசரணை போல இருந்தும் இல்லாமல் இருந்தது. ஒரு மாசமா இருந்தவனைப் பாக்க மனிசி வாறதும் குறையத் தொடங்கிச்சுது. கடைசியா வரேக்க கொஞ்சச் சாமாங்களும் Nestomalt ரின் ஒண்டும் கொண்டு மனிசி வந்தது, அதுக்குப் பிறகு காணேல்லை. சரி எண்டு எல்லாம் முடிய அவனை ambulance மூலம் கிளிநொச்சிக்கு திருப்பி அனுப்பி வைச்சம் . ஒரு நாள் நான் கிளினிக் முடிச்சு வெளீல வரேக்க பிள்ளையோட அவன்டை மனசி நிண்டுது. ஏனெண்டு கேக்க , இல்லை உங்களை பாக்கத்தான் எண்டு ஒரு form ஒட வந்தவளை கூட்டிக்கொண்டு போய் முள்ளந்தண்டு வடம் பாதிப்பு எண்டு உறுதி செய்து குடுத்து விட ஒரு ஓட்டோவில் ஏறிப் போறதைப் பாக்க வந்த கவலையை call ஒண்டு போக்கியது. மூண்டு மாதத்தால வழமை போல கிளினிக்குக்கு ஆஸ்பத்திரிக்கு அந்தப்பெடியன் நடந்து walking stick ஓட நடந்து வந்தான் , எனக்கே என்னை பெருமைப்பட வைச்ச சந்தர்ப்பம் அவன் walking stick ஓட நடந்தது. “சேர் வாகனத்தை பொலிசில இருந்து எடுக்க license கேக்கிறாங்கள் , license தரமாட்டாங்களாம் எண்டு சொல்லுறாங்கள் , தாற எண்டா உங்கடை கடிதம் வேணுமாம்” எண்டபடி உள்ள வந்தான். Recommended for modified three wheelers எண்டு குடுத்துப்போட்டூ , அவன்டை மனிசியேயும் பிள்ளையேயும் தேடினா காணேல்லை. அடக்கமுடியாத தமிழனின் விடுப்பு குணத்துடன் , “ எங்க மனிசி பிள்ளையைக் காணேல்லை” எண்டு கேக்க ஒரு சங்கடத்துடன் அவன் பதட்டப்பட , அப்படியே அடுத்த patient உள்ள வர , உள் மனதால் அவனையும் வெளிக்கண்ணால் வந்த நோயாளிகளையும் பார்க்கத் தொடங்கினன். கிளினிக் முடிஞ்சு வெளீல வர அவன் car அடீல நிண்டான். எனக்காகத் தான் எண்டு அறிஞ்சு என்னைத் தனிமைப்படுத்தினேன். இல்லைசேர் இப்ப அவ எண்டவன் தன்டை நிலைமையைச் சொன்னான். அண்டைக்கு இரவு டிப்பரோட அடிபட்டு சாக இருந்தவன் , இப்ப உயிர் தப்பினாலும் நானும் படுத்த படுக்கை , செலவளிக்க சொத்துமில்லை, சேர்த்து வைச்ச சொந்தங்கள் உறங்கு நிலை விதைகளாய் முள்ளிவாய்க்காலில போட்டுது. கட்டினதால விழுதாய் வந்த முளை கையில, பஸ்ஸுக்கு நிக்கேக்க பாவப்பட்ட ஒரு ஓட்டோக்காரன் உதவிக்கரம் நீட்ட அவள் பற்றிக்கொண்டால் நீரில் மூழ்கும் போது கிடைத்த துரும்பு மாதிரி எண்டதை அறிஞ்சன். ஓடம் கவிண்டு நீரில் மூழ்க , உள்நீச்சலோ எதிர் நீச்சலோ தெரியாமல் தண்ணியில் நிக்க கூட திராணியற்று தத்தளித்து, கைச்சுமையுடன் நிண்டவளுக்கு அந்தக்கை ஓரு அபயக்கையாக அதை இறுக்கவே பற்றிக்கொண்டாள் எண்டதையும் சொன்னான். ஓட்டோவில் வந்து கடைசி நாட்களில் ஆஸபத்திரியில் அவனையும் பாத்து தேவையானதை எல்லாம் எனக்கு வாங்கி குடுக்கக காசும், கையில இருந்த பிள்ளைக்கும் பாலும் சாப்பாடும் கிடைக்க , எல்லோர் பசியும் தீரத்தொடங்கினது எண்டது பிறகு தான் வடிவாய் விளங்கிச்சிது. அதுவே சில மாசத்தில நிரந்தரமானது எண்டதை குற்றமாச் சொல்லாமல் யதார்த்தம் அறிந்து சொன்னான். “போன கிழமையும் கண்டனான் அவனோட ஓட்டோவில போனவள் பிள்ளையையும் கொண்டு, பிள்ளையும் சிரிச்சுக்கொண்டு இருந்தது . இரண்டு பேரும் ஆளை ஆள் கண்டனாங்கள் , கண்டிட்டு ….”அவன் சொல்லி முடிக்கேல்லை. “இப்ப நான்கொஞ்சம் பிடிச்சுப் பிடிச்சு நடப்பன், கக்கூசுக்கு தான் குந்தி எழும்ப முடியாது , கதிரையில ஓட்டையை போட்டு சமாளிக்கிறன். சேர் அந்த மூத்திரக்குழாய் மாத்திறது தான் பிரச்சசினை , இதை அப்பிடியே எடுத்தால் என்ன” எண்டு கேட்டவனின் விரக்தியை உணர்ந்து , அதைப்போக்க , தம்பி நடக்கத்தொடங்கின படியால் இதுகும் கொஞ்சம் முன்னேற்றம் வரும் எண்டு ஒரு தெய்வ நம்பிக்கையோடு சொன்னன். “சரி சேர் இப்ப திருப்பியும் ஆட்டோ ஓடுற படியால் காசு வருது , தனி ஆள் தானே செலவில்லை” எண்ட படி கைத் தடியை மெல்லவும் நம்பிக்கையை உறுதியாயும் ஊண்டி நடக்கத் தொடங்கினான். அம்புலிமாமாவில வாற வேதாளம் கதைக் கேள்வி எனக்கும் வந்திச்சுது ? “இதில் யார் செய்தது குற்றம்“ எண்டு. விடை தெரியாமல் நான் யோசிக்க , எங்கயோ தூர ஒரு கோயிலில போட்ட loud speaker , “ யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால் “ எண்டு பாடத் தொடங்கிச்சுது Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
-
லௌ(வ்)கீகம் இப்பவுமே “ லவ் மரீஜ்” எண்டு சொல்லிறதை செய்யக்கூடாத ஒரு பாவமாத்தான் ஊர் பாக்கிறது .சாதி, மதம் தாண்டி “ லவ்” எண்டாலே ஒரு தீண்டாமையான விசயமா இருந்திச்சுது . பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பெடியளுக்கு லவ் ஏன், எப்பிடி வாறதெண்டு தெரியாது, பிரண்ட் ஒருத்தன் “அநேமா மச்சான் அவள் உன்னைத்தான் பாக்கிறாள்”எண்டு உசுப்பேத்திவிட வாற காதல் தான் கூட. Friend உசுப்பேத்திறதோட மட்டுமில்லை ஊரெல்லாம் பரப்பியும் விடுவான். “ ஏன்டா எண்டு கேட்டா“ ஏற்கனவே ஒருத்தன் பாக்கிறான் எண்டு தெரிஞ்சா வேற ஒருத்தனும் பாக்க மாட்டான்டா” எண்டு விளக்கம் சொல்லுவான். பழகிப்பாத்து பாத்து வாறதில்லை பெடியளின்டை லவ். பாத்தோன்னயே வரும் , எதைப்பாத்து பிடிக்குது எண்டு தெரியாது. “மச்சான் ஏன்டா அவளை லவ் பண்ணிறாய்” எண்டு கேட்டா விளக்கம் சொல்லத் தெரியாது. பாக்கத் தொடங்கேக்க சிலவேளை தானாப் பாத்தாலும் இன்னொருத்தன்டை தயவில்லாமல் ஒப்பேத்த முடியாது. பாக்கிற மட்டும் தான் அவன்டை வேலை, மிச்சம் எல்லாத்தையும் பக்கத்தில இருக்குறவன் பாத்துக்கொள்ளுவான். தனக்கு ஏலாததை இன்னொருத்தன் செய்யிறான் எண்டோ, இல்லாட்டி இதோட இவன் அழிஞ்சு போகட்டும் எண்டோ தெரியேல்லை. என்னொருத்தன்டை “லவ்வுக்கு” உதவிறதெண்டால் பெடியள் எல்லாம் ஒற்றுமையாச் செய்வாங்கள். சில வேளை மற்றவன் எல்லாம் பாக்கிறான் எண்டு போட்டு ஒருத்தன் தானும் ஒண்டைப் பாப்பம் எண்டு போட்டு கோயில்லயோ, ரியூசனிலயோ கண்ட பெட்டையை சைக்கிளில விட்டுக்க கலைக்கிறாக்கள் கனபேர். அநேமா அது சைக்கிளில போகேக்க நாய் கலைக்கிற மாதிரி கொஞ்சத் தூரத்தில நிண்டிடும். சிலர் மட்டும் sincere love பண்ணிற எண்டு சொல்லித் திரிவினம். ஆனால் serous ஆ love பண்ணிற ஆக்கள் மட்டும பிள்ளைகளை விட்டுக் கலைச்சுப் பின்னால போய் எந்த ஊர், எங்க வீடு எண்டு கண்டு பிடிக்கிறது முதல் வேலை. அதுக்குப் பிறகு அந்நபர் பிள்ளை வீட்டால வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் இல்லாட்டி ரியூசன் போய்த் திருப்பி வாற வரை முன்னுக்கும் பின்னுக்குத் திரிய வேணும். இப்பிடித் திரியேக்க சந்தேகப்பட்டு ஆரும் மறிச்சுக்க கேட்டா சொல்லக்கூடிய மாதிரி அடுத்த வீடு, பக்கத்து ரோட்டில இருக்கிற ரெண்டு பேரின்டை பேரைத் தேடி அறிஞ்சு வைக்க வேணும். ஒருக்கா ஒருத்தன் சொன்னதைக் கேட்டு நட்புக்காக இப்பிடி ஒரு காதல் தூது போகேக்க மறிச்சுக் கேட்டவனுக்கு சேட்டை வெளீல இழுத்து விட்டிட்டு இயக்கம் மாதிரி காட்ட, அவன் கொஞ்சம் எங்களை முறைக்க பாத்தா மறிச்சவன் அந்தப் பெட்டையின்டை தமையன், அதோட உண்மையில இயக்கம். ஒரு மாதிரிக் காலில விழாக் குறையா கெஞ்சித் தப்பி ஓடினதோட அந்தக்காதல் முடிஞ்சு போனது. இதையும் எல்லாம் தாண்டிப் போய் love பண்ணிற எண்டால், கடைசி வரை பின்னால போய் எங்கடை லவ் strong எண்டு காட்ட வேணும்.முதல்ல தனியப் போனவளவை நாங்கள் பின்னால போறது தெரிய வர ரெண்டு body guards friend எண்டு கூட்டிக்கொண்டு போவினம். அநேமா எரிச்சலில அந்த ரெண்டு friend இல ஒண்டாவது குட்டையைக் குளப்பும். அதை சமளிச்சு, வேறயாரும் போட்டியாப் பாத்தா அவனை ஒரு மாதிரிக் வெருட்டி பாக்கிறதை விடப் பண்ணி அப்பன் காரனிலும் மோசமான bodyguard வேலை பாக்கோணும். அதுக்குப் பிறகு வாயைத் துறந்து கதைக்காம அவை கண்ணால வாயால குடுக்கிற soft signalஐ கண்டு பிடிக்க வேணும். இதை எல்லாம் கவனிச்சுக் கடைசீல என்னைப் பாத்துச் சிரிக்கிறாள் எண்டு நம்பிப் போய்க் கேட்டா வாற பதில் இருக்குதே; “நான் இப்ப படிக்கோணும் , ஐயோ இங்க ஆரும் கண்டாப் பிரச்சனை, நான் டொக்டரா வரோணும், அப்பா அம்மாக்குப் பிடிக்காது, அதில வாறது தெரிஞ்ச ஆக்கள் “ , எண்டு அவளவை சொல்லிற மறுமொழி ஓமா இல்லையா எண்டு தெரியாம குழம்பித்திரிய, அடுத்த நாள் friends இல்லாமத் தனிய வரத்தான் விளங்கும் அது green signal தான் எண்டு. அவள் சொன்னது என்ன எண்டு விளங்காமல் இண்டைக்கும் தேவதாஸாக இருக்கிறாக்களும் இருக்கினம். இது பள்ளிக்கூட காலத்தில ஆனால் கம்பஸ் போற நேரத்தில எல்லாம் மாறீடும். “ கம்பஸுக்குப் போறாய் , படிப்பில மட்டும் கவனமாய் இரு அவன் இவனைப் பாத்து காதல் கீதல் எண்டு வந்தால் “ எண்டு அம்மா சொல்ல முதல் ,“ வந்தால் என்ன எண்டு “ மகள் கேக்க , “ வந்து பார் தெரியும் “ எண்டு அம்மா சொல்ல , அதுக்கு அம்மம்மா ஒத்து ஊத, அப்பர் ஒண்டும் கேக்காத மாதிரி இருக்க”, இந்தச் சம்பாசணை அநேமா எல்லா வீட்டையும் கம்பஸ்ஸுக்கு போற முதல் நாள் இருக்கும். அப்பாடா இயக்கத்திக்குப் போகாமல் பெடி ஒருமாதிரி கம்பஸ் போட்டான் எண்டு சந்தோசப்பட்ட அம்மாமாருக்கு கம்பஸுக்கு பிள்ளைய அனுப்பேக்க வாற அடுத்த கவலை பிள்ளை அங்க ஆரையும் பாத்திடுமோ எண்டு. அது பெடியனோ பெட்டையோ அம்மாமருக்கு படிப்பிலும் பாக்க இது தான் பெரும் கவலை. அம்மான்டை கதையால கம்பஸ் போறது ஏதோ love visa கிடைச்ச மாதிரி எண்டு நெச்சு உசுப்பேறிற பெடியள் கம்பஸு்ககுள்ள எப்பிடியும் ஒண்டு சரிவரும் எண்டு நம்பி வந்து கடைசிவரை கரைசேராமல் போன கதை கனக்க இருக்கு. கடுவன் பள்ளிக்கூடத்தில படிச்சவனுக்கு கம்பஸுக்க போன காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி இருக்கும் , ஆனால் போனாப்பிறகு தான் தெரியும் அங்க இருக்கிற கஸ்டம். கல்வியே கண்ணாய் வாறதுகள் கண்ணெடுத்துப் பாக்காதுகள். அதுகும் medical faculty எண்டால் அது எட்டாக் கனி தான். அதால தான் கனபெடியள் stethoscope ஐ வெளீல விட்டபடி திரிஞ்சு பத்தாம் வகுப்பு படிக்கிறதில வெள்ளைப் பிள்ளையாப் பாத்துச் சுத்தித் திரிவாங்கள். பாக்கிற பெட்டை மட்டும் பாக்காது மாதிரி திரியப் பக்கத்தில போறது உதவிக்கு வரும் கேக்காமலே. “அவர் doctor ஆம்” எண்டு தூது செல்ல, செலவில்லாமல் கரைசேருது எண்டு அம்மாமார் ஓம் சொல்ல, படிச்சு முடிச்சுப் பட்டத்தோட போகேக்க கட்டிக்கொண்டு போயிடுவாங்கள். ஆனாலும் கம்பஸில வந்த நாள் முதல் கடைசீல போற நாள் வரை போராடி விக்கிரமாதித்தன் மார் வேதாளத்தை பிடிக்கேலாமல் போன கதைகள் இருக்கு. அதே போல படிக்கேக்க தம்பதிகளாய் திரிஞ்சிட்டு தம் பாதைகளை பாத்துப் போன கதையும் இருக்கு . கடைசிவரை இவனுக்கு இந்தப் பெட்டை சரிவராதெண்டவன் கடைசிக்காலத்தில சேந்த கதை எண்டு நிறையக் கதை இருக்கு. வெளீல இருந்து பாக்கிறாக்களுக்கு சனம் வாகனம் ஓட license கிடைச்ச மாதிரித்தான் கம்பஸுக்கு வந்தால் love பண்ண license கிடைச்சிடும் எண்டு நெக்கிறது. ஆனால் அதுக்குள்ளயும் love பண்ணி ஒப்பேத்திறது arrears முடிக்கிறதலும் பாக்கக் கஸ்டம். ஒருத்தருக்கும் தெரியாமத்தான் love பண்ணிறம் எண்டு love பண்ணிறவை மட்டும் நெச்சுக் கொண்டிருக்க, FB profile, what’s app status எண்டு ஒண்டும் இல்லாத காலத்திலேம் love பண்ணினனாம் எண்ட கதை ஊரில பரவீடும். “ என்ன என்னமோ கேள்விப்பட்டன் , ஆர் பெட்டை” எண்ட விடுப்புக் கேள்விகளில இருந்து தப்பிறது பெரிய பிரச்சினை. பெட்டைகள் தாங்களாகவே friendsக்கு ஒருத்தருக்கும் சொல்லவேணாம் எண்டு சொல்லியே எல்லாருக்கும் சொல்லிப்போடுங்கள். வீட்டை தெரியாம love பண்ணேக்க முதல் தெரிய வாறது அநேமா பெட்டைகள் வீட்டில அம்மாவா இருக்கும். பொறாமை பிடிச்ச ஒருத்தனோ இல்லாட்டி ஒருத்தியா தெரியாம செய்யிற உதவி இது. பிறகு மெல்ல அம்மா அப்பாவுக்குச் சொல்ல எண்டு வட்டம் விரியும். ஆனால் பெடியள் வீட்டில அம்மாமார் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரியே இருப்பினம். என்னதான் இருந்தாலும் love பண்ண முடிவெடுத்து , அலைஞ்சு திரிஞ்சு, ஒமா எண்டு கேட்டு Visa apply பண்ணீட்டு முடிவுக்காக wait பண்ணிற மாதிரி பாத்துக் கொண்டிருந்து, முடிவு தெரியாம அலைஞ்சு, ஓம் எண்டு சொன்னாப் பிறகு ஒழுங்கை வழிய ஒளிஞ்சு கதைச்சுத் திரிஞ்சு , அப்பப்ப வாற சண்டைப் பிரச்சினைகளுக்கு எல்லாம் முகம் குடுத்து, பிறகு கட்டும் வரை வேற ஆரும் பா(தூ)க்காமப் பாத்து , கட்டிற நிலைமை வர வீட்டில விசயத்தை சொல்லி , அந்தப் பூகம்பத்தையும் ஒரு மாதிரி சமாளிச்சு கலியாணம் எண்டு முடிவாக கையில இருக்கிறதை வைச்சு ஒருமாதிரிக் கலியாணமும் கட்டீட்டு முதல் நாள் கட்டில படுத்துக் கொண்டு யோசிக்க … Dr .T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
சாண் ஏற பப்பா சறுக்கும் நேற்றைக்கு விட்டதை எப்பிடியாவது இண்டைக்குப் பிடிக்கோணும் எண்ட எண்ணம் இரவு நித்திரையைக் குழப்பிச்சுது. நித்திரையால காலமை எழும்பி வீட்டில ஒருத்தரும் பாக்காத நேரம் அலுமாரிப் பெட்டீக்க பயந்து பயந்து வைச்ச கைக்கு அம்பிட்டதோட போனன் , “ எப்பிடியும் விட்டதை இண்டைக்கு பிடிக்கிறதெண்டு “ . காலமை முழுக்க கவனம் சிதறினபடி இருக்க மத்தியானம் சாப்பாட்டு மணி அடிச்ச உடனயே ஓடிப்போய் ரகசியமா விக்கிறவனைக் கண்டு பிடிச்சு கையில இருக்கிற காசை குடுத்தா மூண்டு தந்தான். புளியமரத்தடீல போய் நிண்ட ஆக்களோட சேர மூண்டு இருந்தால் சேக்கேலாது , குறைஞ்சது நாலாவது வேணும் எண்டு சொல்லி திருப்பி அனுப்பினாங்கள். என்னை மாதிரி மூண்டோட நிண்ட ஒருத்தனைக் கண்டு பிடிச்சுக் “ வெற்றிக்கு விளையாடவாறியா” எண்டு கேக்க அவன் சொன்னான் “ ஓம் ஆனால் குறட்ஸ்க்குத்தான் விளையாடலாம்” எண்டு. வாங்கி குறட்ஸின்டை தரம் பாத்து , சாண் விளையாடக் கூப்பிட்டுக் கொண்டு போனன். முதல் கட்டுக் கட்டினவன்டை மாபிளைஅடிச்சிட்டு சாண் கட்ட அது வெளீல போட்டுது. பிறகு அவன் கட்ட ரெண்டு மாபிளும் முட்டிக்கொண்டு நிக்க பெரு விரலில எச்சிலைத் துப்பி சுட்டு விரலோட சேத்து பிசுக்க மற்ற மாபிள் அசையாமல் நிக்க பிதுக்கினது தள்ளிப் போய் விழ ஒரு மாதிரி அவனை வெண்டு போய் கடைசீல main குறூப்போட சேந்தன். கண்ணாடி மாபிளில உள்ளுக்க மூண்டு நிறங்களில பூப் போல design ல தான் முதலில மாபிள் வந்தது அதில பாத்து விருப்பமான கலரைத் தேடித் தேடி வாங்கிறது. பிறகு அதில ஐஞ்சு கலர் உள்ள மாபிளும் வந்திச்சுது. பிறகு ஒரே கலரில உள்ளுக்க bubbles இருக்கிற மாதிரி வந்திச்சுது. ஆறாம் வகுப்பில ஒருத்தன் தனி வெள்ளைக் கலரில வெளீல கலர்க் கோடு அடிச்ச மாபிள் கொண்டர , அதுக்கு கிக்கிரி போளை எண்டு பேர் வைச்சம். போளை எண்டு பேர் ஏன் வந்தது எண்டு தெரியாது , ஊரில போளையடி எண்டு தான் சொல்லிறது. காற்சட்டையின்ட ஒரு பொக்கற்றுக்க நியூசும் மற்றப் பக்கம் குறட்ஸ்ஸுமாய்த்தான் பள்ளிக்கூடம் போறது. இது அநேமா சோட்ஸ் போட்டவன்டை விளையாட்டாத் தான் இருந்தது. ஊருக்குள்ள விளையாடிற மாதிரி குழி வெட்டிக் குழிக்குள்ள உருட்டி விட்டிட்டு விழுந்ததை எடுக்கிற விளையாட்டு பள்ளிக்கூடத்தில விளையாடிறேல்லை. இந்தக் குழி விளையாட்டுத்தான் இப்பத்தை “ bowling“ விளையாட்டுக்கு முன்னோடியோ தெரியல்லை. பள்ளிக்கூடத்தில புளியமரத்தடீல பப்பா கீறீட்டு யார் முதல் விடிறதெண்ட சண்டை முடிவுக்கு வர ஒவ்வொருத்தரா கட்டத் தொடங்கினாங்கள். விளையாட்டு Expert காரர் விழுந்திருக்கிற புளியமிலையைத் தள்ளிவிட்டிட்டு பப்பா கீறின இடம் மண் எப்பிடி இறுக்கமா எண்டு பாத்து, மேடு பள்ளம் பாத்து, காத்துப் பாத்திட்டு பெருவிரலாலேம் சுண்டு விரலாலேம் பிடிச்ச மாபிளை விரலின்டை கீழ்ப்பக்கமா சுருட்டி விட கோட்டைத்தாண்டிப் போன மாபிள் திரும்பி வந்து பக்கத்தில நிண்டதை தட்டிப் போட்டு கோட்டோட நிண்டிச்சுது. நான் கட்டினது side கோடுக்கு வெளீல போய் கடலுக்க போச்சுது. சரி எண்டு திருப்பிக்கட்டினது கோட்டுக்கு கிட்டப் போனாலும் கடைசி தான் எண்டாங்கள். முதல் round ல ஒருத்தன் அடிச்சது ரெண்டு மாபிளில படக் குட்டி எண்டு சொல்ல பரவாயில்லை அடிச்ச மாபிளையும் கட்டில விடுறன் எண்டு சொல்லீட்டு திருப்பி அடிச்சவனுக்குப் படாமப் போக கடைசீல என்டை turn வந்திச்சுது. கை நீட்டுத் தானே எட்டி அடி எண்டு ஒராள் சொல்ல, இல்லை நீ சுருட்டி spin பண்ணுவாதானே அப்பிடி அடி எண்டு இன்னொருத்தன் சொல்ல , இங்க பார் நேரா அடி, இது தான் கோடு எண்டு கீறி ஒண்டில்லாட்டி மற்றதிலயாவது படும் எண்டு சொல்லி அங்கால நிண்டு காட்டின விரலுக்கு உருட்டி விட்ட மாபிள் ஒண்டிலேம் அடி படாமலே போச்சுது. ரெண்டு ரவுண்டில எல்லா மாபிளும் குறைய , கணக்குக்கு நாலு வேணும் எண்டு போட்டு , இனி அடிச்சு வெல்லேலாது எண்டு போட்டு , வேறொருத்தன் அடிச்ச மாபிளை கால் விரலுக்க அமத்தி வைச்சு நைசா எடுத்துப் பொக்கற்றுக்க கவனமா வைச்சன் நாளைக்கு விளையாட எண்டு . ரெண்டு நேரப் பள்ளிக்கூடக் காலத்தில வீட்டை போகாம நிக்கிறாக்களுக்கு ஏதாவது ஒரு விளையாட்டு set ஆகும். கிரிக்கட் எப்பவுமே இருந்தாலும் மற்றவிளையாட்டும் மாறி மாறி வரும். கொஞ்ச நாள் பறக்கும் தட்டு எண்டு விளையாடினம் , பிறகு கிளிபூர், இல்லாட்டி போளையடி எண்டு ஏதாவது இருக்கும். என்ன மாபிளில spin பண்ணினவன் சிலர் கிரிக்கட்டிலேம் spin bowler ஆக, வழமை போல நாங்கள் கொஞ்சப் பேர் வெளீல நிண்டு பந்து பொறுக்கிக் குடுத்தம் மாபிளைப் போல. ஒரு நாள் விளையாடிக்கொண்டு நிண்ட ஒருத்தனை கூடப் படிச்ச prefects எண்ட உளவுப்படை காட்டிக் குடுக்க , அடி வாங்க முதலே அவன் எல்லார்டை பேரையும் சொல்ல, முழுப்பேரையும் office க்கு கொண்டு போய் வைச்சு சாத்தீட்டூ மாபிள்களையும் பறிச்சு வைச்சார் துரைச்சாமி சேர். பூசை குடுத்திட்டுப் Primary school காரரை மட்டும் நிப்பாட்டி “எங்கால மாபிள் எண்டு” கேட்டிட்டு , “அம்மா/ அப்பாவைக் கூட்டிக் கொண்டா” எண்டு சொல்லி அனுப்பினார். “உதுகும் சூது மாதிரித்தான் சும்மா விளையாடாமல் போட்டி எண்டு விளையாடினால் விட்ட மாபிளைப் பிடிக்க வீட்டை களவெடுக்கிறதில தொடங்கி , மற்றவனை ஏமாத்தி மாபிளைப் புடுங்கிறதெண்டு எல்லாக் கெட்ட பழக்கமும் வரும் எண்டு சொல்லித் துரைச்சாமியரும் சொல்ல “ , வந்த அம்மாவும் இவன் குளப்படி தான் எண்டு என்னை இன்னும் போட்டுக் குடுக்க எனக்கெண்டே ஒரு பிரம்பு வாங்கி வைச்சுது அந்தாள். அதுக்குப் பிறகு காலமை பள்ளிக்கூடத்தில துரைச்சாமியரும் பின்னேரம் வீட்டை வரேக்க அம்மாவும் பொக்கற்றையும் bagஐயும் check பண்ணித் தான் உள்ள விட்டிச்சினம். காச்சட்டை போட்ட பள்ளிக்கூட காலம் எப்பவுமே ஏதாவது ஒண்டு பொக்கற்றுக்க இருக்கும்; ஒண்டு சாப்பிட இல்லாட்டி விளையாட. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒண்டும் மிச்சம் இல்லாமல் காலில இருந்து தொங்கிற வால் வரை வித்து முடிக்கிற மாதிரி, சைக்கிள் கடையிலேம் கிழிஞ்ச ரயர் , நசிஞ்ச rim, அறுந்த chain எண்டு எல்லாம் சொல்லிற விலைக்கு “ விருப்பம் எண்டால் வாங்கு“ எண்டு வித்த நிலமை இருந்திச்சுது. திடீர் திடீரெண்டு இந்தா வெளிக்கிடிறன் எண்டு கோட்டையில இருந்து அடிக்கிற செல்லுக்கு ஆக்கள் கொஞ்சம் முதல் ஓட , பிறகு ஆசுபத்திரியும் இடம் பெயர , இனி இருக்ககேலாது எண்டு அதுக்குப் பின்னால நாங்களும் ஓடிப் போக வேண்டி இருந்தது. இதால சைக்கிள் கட்டாயம் தேவை எண்டதால ஆக்களிலும் பாக்க அதைக் கழுவித் துடைச்சு கவனமாப் பாக்க வேண்டி இருந்திச்சுது. அடிக்கடி அடிக்கிற செல்லுக்கு இப்பிடியே போக்கும் வரவுமாய் இருந்த படியா எப்பவும் ஓட ரெடியா சைக்கிளை வைச்சிருக்கிறனாங்கள். ஒயில் ஓடிக்காஞ்சு போன கறுத்த மண், எண்ணையில வழுக்கிற உடைஞ்சும் உடையாத சீமெந்து தரை, ஆண்டாண்டு காலமா தடீல தொங்கிற பழயை ரயர்கள், குமிச்சு அடுக்கின கறள் கட்டின rims, ஆணிகள் அடிச்ச பக்கீஸ்பெட்டீல தொங்கிற ஆறாம், எட்டாம் , பத்தாம் , பன்ரெண்டாம் சாவி , பழைய மரப் பெட்டீக்க குறடு ,சுத்தியல் ,ஸ்பனர் எண்டு கையால தொட்டாலே ஏற்பூசி போட வேண்டிய நிலைமையில கறள் கட்டின சாமாங்கள் , குறுக்கால வெட்டின பழைய பரல் ஒரு மாதமா மாத்தாத தண்ணியோட , ஓட்டு தீராந்தீல இருந்து தொங்கிற ரெட்டைப்பட்டுச் சைக்கிள் செயின் நுனியில வளைஞ்ச ரெண்டு கம்பி அதில முன்காலைத் தூக்கின குதிரை மாதிரி ஏத்தி விட்ட சைக்கிள், நிலத்தில விரிச்ச சாக்கில ; வால் பிளேட், கத்திரிக்கோல் , பாதி தேஞ்ச அரம், வடிவா வெட்டின வெவ்வேறு சைஸ் சதுர ரியூப் துண்டு , பினாட்டு மாதிரி கறுப்பா உருட்டின கொம்பவுண்ட் , பிங் கலர் சொலூசன் , ஒட்டுப் போட்டாப் பிறகு வல்கனைஸ் பண்ண (அவிக்கிறதுக்கு ) ஒரு செட்டப் இவ்வளவும் இருந்தால் இது சைக்கிள் கடை. கடையில ஒரு பெரிய bossம் மற்றது வேலை பழகிற சின்ன boss எண்டு ரெண்டு பேர் தான் இருப்பினம். கடை இப்பிடி இருக்கிறதால கடைக்காரரை சில்லறை ஆள் எண்டு நெக்கக்கூடாது. சில Senior citizens ன்டை கடைகள் இருக்கும் அவைகளுக்காக, என்ன அவை திறந்திருக்கிறதிலும் பாக்க பூட்டி இருக்கிறது தான் கூட. எங்களுக்க ஏத்த மாதிரி கடையைத் தான் தேடிப் போறது. எங்கடை வயதுக்காரர் ஆனால் அவை boss. நாங்கள்சைக்கிளை உருட்டிக் கொண்டு போய் கடையில விட எங்களைக் கண்டாலும் busy மாதிரி கவிட்டு வைச்ச பழைய wheel spoke க்குள்ள சில்லை வைச்சு பக்கிள் எடுக்கிறவங்கள் , காத்தடிக்கப் பொம்பிளைப் பிள்ளைகள் வந்தால் எழும்பி ஓடிப்போய் உடனயே கவனிப்பாங்கள் . கவனிப்பு சைக்கிளுக்கும் ஆளுக்கும் பலமாய் இருக்கும் . அடிக்கடி இந்த கதை நடக்கும்; “ என்ன கனநாளா காணேல்லை “ “ ஏன் சும்மா சும்மா வாறதே “ “அண்டைக்கு ஆரோ பெடியன் பின்னால வந்தான்” “ எனக்கு அப்பிடி ஒருத்தரும் இல்லை“ ( confirmation) காத்தடிச்சிட்டு ,பக்கத்தில நிண்ட சைக்கிளில இருந்து வால்கட்டையின்டை capபைக் கழற்றி பூட்டீட்டு “ இது இல்லாட்டி மண் போய் அடைச்சிடும் “ எண்டு சொல்லி, அதோட பிறேக்கையும் சரிபாத்திட்டு விட; “ எவ்வளவு” “சீ காசு வேணாம் , அடுத்த முறை பாப்பம் “ சொல்லாத thank you சிரிப்பை வாங்கிக் கொண்டு வந்து எங்களைக் கவனிக்காமல் திருப்பியும் buckle எடுக்கத் தொடங்குவாங்கள். இதை கவனிச்சும் இல்லாத மாதிரி, “ கழுவிப் பூட்டேக்க எதையும் மாத்திப் போடுவான்“ எண்டு அம்மா சொன்னதால, நாள் முழுக்க கடையிலயே இருந்து; லாபம் பாத்து சாமாங்களை வேண்டித் தாறம் எண்டு சொல்லி , ஒரு போத்தில் மண்ணெண்ணை , இருவது ரூவாக்கு கிறீஸ், ரெண்டு சைசில ஐம்பது சைக்கிள் போள்ஸ் எல்லாம் வாங்கிக் குடுத்து , கழட்டி வைக்கிறதை கவனமாப் பாத்துக் கொண்டிருந்து, கழுவிப்பூட்டிறவருக்கு கேக்காமலே ஒத்தாசையும் செய்தாத் தான் சைக்கிள் கெதியாக் கிடைக்கும். புதுசா வாங்கின சைக்கிள் ஆருக்கு நேந்ததோ தெரியேல்லை வாங்கி ஒரு வருசத்திலயே காணாமல் போக , ரெண்டு வருசமா பஸ்ஸில அலையவிட்டு வாங்கித்தந்தது தான் கழுவிப் பூட்டக் கொண்டந்த இந்தப் பழசு. இதாலயே பட்டப்பேரும் பழசு எண்டு வந்திச்சுது. நிண்டு கால் நோக இருக்க இடமில்லாமல் பெரிய கரியர் ஓட நிண்ட சைக்கிளை central ஸ்டாண்டில விட்டிட்டு அதில இருந்தபடி சாடயா கண்ணயர்ந்து விழப்பாக்க , “ தம்பி போய்ச்சாப்பிட்டிட்டு வாரும்” எண்டு சைக்கிள் கடைக்காரர் சொன்னார். ,“ இல்லை பரவாயில்லை இருந்து எடுத்துக்கொண்டே போறன்” எண்டு நம்பிக்கையில்லாமல் சொல்ல , அப்ப கொஞ்ச நேரம் இரும் நான் சாப்பிட்டிட்டு வாறன் எண்டு ஒரு மணிக்குப் போனவர் திருப்பி வர மூண்டு மணி ஆச்சிது. என்னை வைச்சு அடிக்கடி சின்னச்சின்ன வேலையும் வாங்கீட்டு பின்னேரம் வரை விடாக்கண்டனா என்னை சைக்கிள்கடைக் கொடாக்கண்டன் “ஆறு மணியாயீட்டுது இருட்டீட்டுது நாளைக்குப் பாப்பம் “ எண்டு சொல்லீட்டு சாமாங்களை உள்ள எடுத்து அடுக்க வேற வழியில்லாமல் வீட்டை போனன். ஒருமாதிரி அடுத்த நாள் சைக்கிளை எடுத்து உழக்கிக் கொண்டு போக செயின் கவரோட முட்டிற சத்தம் கேக்க ஒரு தட்டுத் தட்ட நிண்டிட்டுது சத்தம். எத்தினை சைக்கிள் ரோட்டில போனாலும் எங்கடை வேண்டிய ஆரும் சைக்கிளி்ல வாறதை தூரத்தில வரேக்கையே கண்டு பிடிக்கலாம். ஒவ்வொருத்தன்டை சைக்கிளுக்கும் ஒரு சத்தம் இருக்கும் வாறதை கண்டு பிடிக்க , மணி அடிக்கிற சத்தம் , பிரேக் பிடிக்கேக்க வாற சத்தம் , செயின் உரஞ்சிற சத்தம் எண்டு எல்லாச் சத்தங்களும் உதவி செய்யும் அதோட அவன் அரைக்குண்டீல ஓடிறானா, சீட் நுனீல இருந்து ஓடிறானா, காலை அகட்டி ஓடிறானா எண்டு ஓடிற ஸ்டைலிலேம் கண்டு பிடிக்கலாம். ரியூசன் வகுப்புகள் முடிஞ்சு பின்னேரம் எண்டால் பிரவுண் ரோட்டில குமரன் வீட்டு ஒழுங்கை முடக்கில சாத்தீட்டு நிக்க ஒவ்வொருத்தரா வருவாங்கள். வந்து வழமை போல அரட்டை தொடங்கும் . கடைசீல் நேற்றைக்க அடிச்ச செல் விண் கூவினதையும், யாரை யார் பாக்கிறாங்கள் எண்ட update ஓட கூட்டம் கலையும். ஒருநாள் இப்பிடித்தான் தேடிப்போனா குமரனைக் காணேல்லை. அவன் உங்களோட தானே வந்தவன் எண்டு அம்மா சொல்ல, “டேய் அவன் நேற்றைக்கு சேகரோட ஒளிஞ்சு ஒளிஞ்சு கதைச்சவன் ஒரு வேளை இயக்கத்துக்குப் போட்டானோ” எண்டு பிரகாஸ் கேக்க “விசரே உனக்கு இவனாவது போறதாவது , வா கபிலன் வீட்டை போய்ப் பாப்பம்” எண்டு நவாஸ் சொல்ல போய்ப்பாத்தால் அங்கையும் இல்லை. காணேல்லை எண்டு ரோடு ரோடாத் தேட, கலட்டீக்க புதுசாத் திறந்த சைக்கிள் கடையில காத்துப் போகாத tyreக்கு காத்து அடிச்சும் வந்தவனுக்கெல்லாம் அடிச்சு விட்டு சமூக சேவை செய்து கொண்டு நிண்டான். ஏனெண்டு கேக்க அண்டைக்கு ரோட்டால போகேக்க பாத்துச் சிரிச்ச பிள்ளை இந்த இடத்தில தான் எங்கேயோ இருக்குதாம் எண்டான். கடைசீல இண்டைக்கு காணேல்லை நாளைக்கு ஒருக்கா வந்து பாப்பம் எண்டு எங்களோட வந்தான். இவனுக்கு அவனுக்கு மட்டும் இல்லை எங்கள் எல்லாருக்கும் சுழற்றித் திரிஞ்ச காலத்தில ஒண்டிறதுக்கு எண்டு ஒரு சைக்கிள் கடை இருந்தது. முதலில அந்தப் பிள்ளை இருக்கிற ஏரியாவில ஒருத்தனை friend பிடிச்சு , அவனோட போய் அவளின்டை வீட்டிக்கு கிட்ட இருக்கிற சைக்கிள் கடைக்காரனை friend பிடிச்சு , பிறகு ரியூசன் கொப்பியோட வெளிக்கிட்டு நேராச் சைக்கிள் கடையில போய் இறங்கினதும் உண்டு. தப்பித்தவறி தெரிஞ்ச ஆக்கள் வந்து கேட்டால், சைக்கிள் காத்துப் போட்டுது எண்ட பொய்யோட சமாளிக்கலாம். கடைக்காரனிற்கும் காத்தடிச்சு விட , சாவியை எடுத்துத் தர எண்டு காசில்லாமல் உதவி செய்ய ஒருத்தன் கிடைக்கிறதால பேசாம இருந்திடுவான். அப்ப சைக்கிள் கடை தான் கன பேரின்டை காதலை develop பண்ண உதவி செய்யிற கடையா இருந்திச்சுது. இப்ப சைக்கிளும் குறைஞ்சு , சைக்கிள் கடையும் குறைஞ்ச படியால் இப்பத்தைப் பெடியள் என்ன செய்யிறாங்களோ தெரியேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்.
-
“ கப்பு முக்கியம் “ “வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருக்கும் தாழமுக்கம் ரெண்டு நாளில் வலுப்பெற்று கொட்டும் மழையோடு இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்” எண்டு வானிலை அறிக்கையை radio வில சொல்லிக் கொண்டிருந்திச்சினம். இதைக் கேட்ட மனிசி “சூறாவளி வந்தாலும் வரும் கொஞ்ச நாளைக்கு வள்ளம் போகாது இண்டைக்காவது மீன் வாங்கித்தரலாம் தானே“ எண்டு கேக்க, சரியெண்டு வெளிக்கிட்டன். எங்க மீன் வாங்கினாலும் பாசையூர் மீன் மாதிரி ருசி இருக்காது. அதோட சந்தைக்குப் போய் விடுப்புப் பாத்த படி, வள்ளம் வாறதை, மீன் இறக்கிறதை , அதைக் கூறிறதை எல்லாம் ரசிச்ச படி, wholesale விலை வாசியை தெரிஞ்சு கொண்டு அப்பிடியே சந்தையில சில்லறை வியாபாரத்தில மீனை வாங்கி வெட்டிக்கொண்டும் வரலாம். மாரிகாலத்தில பிடிக்கிற மீன் ருசி கூட , அதிலேம் மழைவெள்ளம் கடலில கலக்கிற நேரம் வாற குதிப்பு மீன் தனி taste. கைபிடீல மூண்டு shopping bag உள்ள வைச்சு கொழுவின படி இருந்த plastic கூடையோட சைக்கிளை உழக்கினன். மெல்லப் போய் அந்தோனியாரைத் தாண்டி கடற்கரைப் பக்கம் திரும்பின உடனேயே ஒரு காலநிலை மாற்றம் வந்த மாதிரி இருந்திச்சுது. கடற்கரை ரோட்டில திரும்பக் கடல் எங்க முடியுது மேகம் எங்க தொடங்குது எண்டு விளிம்பு தெரியாம இருந்த கடலுக்குள்ள மழை பெய்யிறது மட்டும் தெரிஞ்சுது. மழை பெய்யிறதை ரசிக்கிற மாதிரி மழை இந்தா பெய்யப் போறன் எண்டு மேகம் மூடிக்கொண்டு வரேக்கேம் ர(ரு)சிக்கலாம் . காலமை கருமையாகி காகம் பறக்கிறது தெரியாமல் கொக்கு மட்டும் வெள்ளை வெளேர் எண்டு தெரியிற மேகம். இன்னும் கொஞ்சம் உழக்க அடிக்கிற குளிரில காது மட்டும் சூடாக, முகத்தில படுற குளிர் காத்து காதில படேக்க சுள்ளெண்டு குத்திற இன்பமான வேதனை, முயற்சி செய்தும் நிறுத்தேலாமல் கிடுகிடுக்கிற பல்லு , இழுத்த மூச்சு சுவாசப்பையோட நிக்க அடிவயித்தால காலுக்குள்ள இறங்கி காலை மட்டும் நடுங்கப் பண்ணிற குளிர், ஒடிற எங்களை விட்டிக் கலைச்சுக்கொண்டு சடசடவெண்டு சத்தத்தோட கலைச்சுக்கொண்டு வாற மழை எண்டு ரசிச்சுக்கொண்டு போக , அதை ரசிக்கவிடாம ஒண்டுரெண்டு மழைத்துளி தலையில விழ இன்னும் கொஞ்சம் இறுக்கி உழக்கினன். திரும்பிப் பாக்க கடலுக்க மட்டும் பெஞ்ச கன மழை அலையோட கரைப்பக்கம் வாறது தெரிஞ்சுது. காத்தோட மழை பெய்யிறதையும் அந்த இருட்டுக்குள்ள இருந்து வாற அலையில வள்ளங்கள் எழும்பி விழுந்து வாறதைப்பாக்க, “மெழுகுவர்த்தி ஏத்தி , மண்டியிட்டு “ மாதாவே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மகனை நீ தான் இந்தப் புயலில இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தாய் மன்றாடினாள் “ எண்டு ஐஞ்சாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில வாசிச்ச ஞாபகம் வந்திச்சுது. கடற்கரை ரோட்டால அப்பிடியே போக , MGR சிலைக்கு போன கிழமை நடந்த விழாவுக்குப் போட்ட மாலை காத்துக்குப் பறந்து கொண்டிருந்திச்சுது. முன்னால இருக்கிற தேத்தண்ணிக்கடையில “ தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் “ எண்டு situationக்கு ஏத்ததாய் TMS பாடினார். சந்தையடியில மழைக்குளிர் எண்டால் என்ன எண்டு கேக்கிற சமூகம் , மற்றச் சனத்தின்டை சாப்பாட்டுக்காய் ஓடிஓடி வேலை செய்து கொண்டிருந்தது. இந்த மழைக்கேம் நாலு பேர் காத்துப் போன பந்தைப் போட்டு அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். பேருக்கு மட்டும் அது கடற்கரை ஆனாலும் முள்ளோ கல்லோ குத்தாம மண்ணில நடக்கவும் ஏலாது , முக்கிக் கடல்ல குளிக்கவும் ஏலாது . ஆனாலும் அலைக்கு கூட அரிக்காத கடற்கரை கல்லெல்லாம் கால் மிதிப்பில கரையிற அளவுக்கு அங்க விளயாட்டு நடக்கும் . இருட்டுக்க கடல்ல இருக்கிற மீனே தெரியிறவன் கண்ணுக்கு பந்து எப்பவும் தெரியும் எண்டதால விளையாட்டுக்கு நேரம் காலம் கிடையாது. என்னதான் கிரிக்கட் நல்ல விளையாட்டா இருந்தாலும் அது நெச்ச உடன எல்லா இடத்திலேம் விளயாடேலாது. அதோட Cricketஐப் பற்றி அதை விளயாடினவங்கள் மட்டும் தான் கதைப்பாங்கள். ஆனால் football அப்பிடியில்லை விளையாடின ஆக்களிலும் பாக்க விளையாட்டைப் பாக்கிற ஆக்கள் கதைக்கிறது கூட . யாழ்ப்பாணத்தில கூடுதலா விளையாடிறதும் விரும்பிப் பாக்கிறதும் football தான். விளையாட்டுத் தொடங்க முதல் இருந்து முடிஞ்சு வீட்டை போனாப்பிறகு கூட பரபரப்பா பாக்கிறதும் கதைக்கிறதும் football தான். இந்த ஊரில வீட்டில என்ன தான் வசதி் இல்லாட்டியும் ஒவ்வொரு வீட்டிலேம் ஒரு Maradona, Baggio, Ronaldo கனவோட ஒருத்தனாவது இருப்பாங்கள் . சாப்பாடே அவங்களுக்கு பந்தடிக்கிறது தான். நாவாந்துறையில இருந்து பருத்தித்துறை வரை இது தான் நிலமை . அவை இல்லாமல் யாழ்ப்பாணத்தில football இல்லை. செல்லடி, துவக்குச்சூடு, மழை எண்டும் பாக்காம ஒவ்வொரு நாளும் தொழிலுக்குப் போறவங்கள் ஆனாலும் தங்கடை ஊர் club விளையாடிற match எண்டா தொழிலுக்கும் போகாம வந்திடுவாங்கள். வந்தவனும் சும்மா நிக்கமாட்டாங்கள். உள்ள போட்டிருக்கிற shorts தெரிய சாரத்தை மடிச்சுக்கட்டீட்டு பந்து போற இடமெல்லாம் தானும் ஓடித்திரிவாங்கள் . coach க்கும் மேலால “ நல்ல தமிழில”சத்தம் போடுவாங்கள். ஆனாலும் தப்பித்தவறி தோத்திட்டால் referee, எதிரணி , தங்கடை அணி எண்டு எல்லாருக்கும் விழும் , பேச்சு மட்டுமில்லை சிலநேரம் அடியும் தான். இப்பிடியான match முடிஞ்ச உடனயே பாஞ்சு வீட்டை ஓடிப் போறது referee மாரும் tournament வைச்சவையும் தான். சிலவேளை பரிசளிப்பு விழா கூட நடக்குறேல்லை, பேப்பரில பாத்துத்தான் முடிவு தெரிய வரும். இயக்கம் இருக்கேக்க சண்டைபிடிச்சா விளையாடத் தடை எண்டு தொடங்கினாப்பிறகு தான் கொஞ்சம் குறைஞ்சுது. இப்பிடி இருக்கேக்க தான் ஊரில போன கிழமை சமாசத்தின்டை வருசக் கூட்டம் வாசிகசாலையிலை நடந்தது. வரவு செலவுக் கணக்கு முடிய, இந்த முறை சேத்த காசில என்ன செயவம் எண்டு கதை்தொடங்கிச்சுது. “ ஒரு வருசம் தடைக்குப் பிறகு போனகிழமை தான் விளையாட விட்டவங்கள் இவங்களை , பெரிய ரோயும் சின்ன ரோயும் என்ன விளயாட்டு , உவன் கெவின் அடிச்ச அடி விண் கூவிச்சுது எண்டாலும் கடைசீல ஒரு goal அடிச்சு அவங்கள் வெண்டிட்டாங்கள், இவங்ககளுக்கு நல்ல சப்பாத்தும் சாப்பாடும் தேவை ,நாங்கள் தான் இந்த முறை சமசத்தால வாங்கிக் குடுக்கோணும்” எண்டு மதி சொன்னதுக்கு கொஞ்சப் பேர் ஒமெண்ட, கனக்கப் பேர் புறுபுறுக்க சமாசத்தின்டை தலைவர் கையைத்தூக்கினார் . அந்தச் சலசலப்பு அடங்க முதல், “ ரெண்டு வருசமா ஊரில நிறையப் பிரச்சினை நான் எத்தினை தரம் சொன்னான் உந்தக் கோயிலை திருத்துங்கோ எண்டு” ஒரு ஆச்சி சொல்ல இளசுகள் கூக்காட்டத் தொடங்கிச்சுதுகள். “ கருவாடு காய வைக்க , வலை தைக்க இடம் வேணும்” எண்டு மகளிர் வேண்டுகோளும் வர முடிவெடுக்கேலாமல் கடைசியாய் ஓரமா இருந்த மாஸ்டரைக் கேட்டச்சினம். மாஸ்டர் ஊரில மரியாதைக்கு உரியவர் பழைய football விளையாட்டுக்காரன். “ பிள்ளைகளுக்குப் பிராக்கில்லை, விட்டால் கெட்டுப் போடுவங்கள் இப்பத்தை நிலமையில விளையாட்டுக்குச் செலவு செய்யிறது நல்லம்” எண்டார் மாஸ்டர் . விளையாடிறதில்லை விளையாடி வெண்டாத்தான் ஊருக்கு மரியாதை எண்டு முடிவோட, இந்த மூண்டு மாதத்துக்கு சமாகத்துக்கும் , ஐக்கிய விளையாட்டுக் கழகத்துக்கு ஒண்டு காணாது ரெண்டு மீனாத் தாங்கோ , கழகத்துக்கு காசைக்குடுப்பம் ஆனா “ கப்பு “ முக்கியம் எண்ட condition ஓட meeting முடிஞ்சுது. வலையை பாறையில காய வைக்க , ரோட்டோரமா மீனைக் காயப்போட , மாதா கோயில் கூரைக்கு ஆரோ பழைய தகரம் ரெண்டைக் கொண்டந்து போட சம்மதிக்க, சமரசம் வந்திச்சுது கூட்டத்தில. வள்ளம் கிட்டவர முதலே இஞ்சின் சத்தத்திலையே உசாரான மதி ,“இந்தா வருது “ எண்டு சொல்லி கூற ஆய்த்தமானான். பாத்துக்கொண்டிருந்த வியாபாரிமார் கிட்ட வந்திச்சினம். வள்ளத்தை கரைக்கு கொண்டு வந்து நிப்பாட்டீட்டு வாயை மட்டும் வெட்டின பிளாஸ்டிக் bucket க்கு கட்டி இருந்த நைலோன் நூலைப் பிடிச்சு இறக்கிக் கொண்டு வந்திச்சினம் வள்ளக்காரர். கொண்டு வந்த பெட்டியோட கவிட்டுக் கொட்டின கும்பலில ரெண்டு மீன் சமாசத்துக்கும் ஒண்டு கூறிற ஆளுக்கும் எண்டு எடுத்து வைச்சிட்டு கூறத்தொடங்கினான் மதி. குவிச்ச மீன் கும்பலை பரவி விட , கண்ணால நிறை பாத்து , கலந்திருக்கிற மீன் பாத்து , அடிப்படை விலை பாத்து கையில இருக்கிற காசைப்பாத்து வியாபாரிமார் விலை கேட்டு காசைக் குடுத்துக் கணக்கை முடிச்சிட்டு சைக்கிளில இருந்த பெட்டீல கொட்டீட்டு விக்கிறதுக்கு வெளிக்கிட அடுத்த கூறல் தொடங்கிச்சுது. இதைப் பாத்த படி, தாண்டிப் போய் சில்லறை வியாபாரீட்டை என்ன மீன் வாங்கிறது எண்டு குழம்பி கடைசீல “சீலையை வித்தாவது சீலா வாங்கோணும்” எண்டு முந்தி ஆச்சி சொன்ன ஞாபகத்தில, சீலாவும், விளையும் வாங்கி, அதோட கூனிறால் கூறும் , நூறு ரூவாய்க்கு காரலும் பொரிக்க எண்டு வாங்கிக் கொண்டு வீட்டை போக மனிசி மண் சட்டியை கழுவி அடுப்பை மூட்டீட்டு பாத்துக் கொண்டிருந்திச்சுது. அம்மீல கூட்டரைச்சு சீலாத் துண்டைப் போட்டு வைச்ச மீன் குழம்பும், றால் வறையும், விளைமீன் பொரியலும் சோத்தோட மழைக் குளிருக்க சாப்பிட, அடுத்த நாளும் பாசையூருக்கு சைக்கிள் தன்டபாட்டை போகும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
-
பிரி(யா)விடை 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் சேர்” எண்டு சொன்னது நல்லூர் முருகனுக்கே கேட்டிச்சுது. பின்னேரம் போல “அடேய் இண்டைக்கு கணேசர் medicos nite க்கு chief guest ஆப் போறாராம் நாங்கள் பின்னேரம் வரத்தேவேல்லை” எண்டு சிலர் வெளிக்கிட “சேர் சொன்னாக் கட்டாயம் வருவார்” எண்டு பெட்டைகள் வெருட்ட வெளிக்கிட்ட பெடியள் திருப்பி நிண்டிச்சினம். ஆர்வக்கோளாறுக்காரர் எல்லாம் அண்டைக்கு வயித்துநோ , கட்டி வெண்டு வந்த ஆளை வைச்சு கட்டி கரைஞ்சு போற அளவுக்கு அமத்திப் பாக்க சிலர் மட்டும் Nursing பழக வந்த பிள்ளைகளோட “சள்” அடிச்சுக்கொண்டு இருந்திச்சனம். புத்தகத்தைப் படிச்சு ஏறாத அறிவை தலைக்கு கீழ படுக்க வைச்சு ஏத்திக் கொண்டு சிலர் இருந்திச்சினம். பாவம் இந்த குறூப் அண்ணாமாரும் அக்காமாரும் மட்டும் இரவிரவா ஆஸ்பத்திரீல நிக்க மருத்துவபீடம் களைகட்டி இருந்திச்சுது. பின்னேரம் medical faculty; Ragging நேரத்தில பாத்தோண்ணயே பிடிச்சதும் சரிவராம , “பழகப் பழகப் பிடிச்சிடும் எண்டு ஒண்டாப் படிச்சதும் சரிவராம கடைசி நாள் வரை முயற்சியைக் கைவிடாம தன்டை காதல் அம்புகளை இசை ரொக்கற்றில விட்டுக் கொண்டிருந்தார் ஒரு அண்ணா. மருத்துவ பீட farewell நிகழ்வில இது எப்பவுமே நடக்கிறது. இவர் விட்ட இசைத்தூதுக்கு இணை அனுசரணை வழங்கின பிரதாபன் organன்டை எந்தப்பக்கமும் எட்டா( வது ) சுரக்கட்டையை தேடித்தேடி வாசிக்க, எங்கடை பீலிங்குக்கு ஏத்த மாதிரி மழை மட்டும் பெய்யத் தொடங்கிச்சுது. முதலாவது வருசத்தில கம்பஸில நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் புதுசா வாறாக்கள் தான் எடுபிடி , ஆனாலும் எங்களுக்கும் எல்லாத்திலேம் பங்கு கிடைக்கும் கட்டி முடிக்காத இப்பத்தைய Hoover Auditorium சுவருக்கு பாயைக் கட்டி வைச்சதால பேர் வந்த “பாய்க்கடை” . இந்தப் பாய்க்கடைப் பக்கம் காத்து வாங்கிறதுக்காக போன கூட்டம் நல்ல “கணகணப்போட” திருப்பி வந்திச்சுது. வந்த குறூப் சும்மா நிக்காமல் சுதியோட வந்து சோகப்பாட்டுக்கும் லயத்தோட ஆடத் தொடங்கிச்சுது. இந்த ஜோதீல பலர் சேர நல்ல பிள்ளைக்கு நடிச்சுக் கொண்டிருந்த சிலர் மட்டும் “வாங்கோ சேந்து குறூப்பா படம் எடுப்பம்” எண்டு சொல்லீட்டு இரகசியமா ரெண்டு பேரா போச்சினம் . படம் எடுக்கிறதை எட்டிப் பாப்பம் எண்டு போய்ப் பாத்தா இந்த ஊர்க்காரர் இந்தப் பள்ளிக்கூட காரர் எண்டு தேடிக் கூப்பிட்டும் தங்கடை சோடிகளோட இணைஞ்சும் படம் எடுத்துக்கொண்டு இருந்திச்சினம் கொஞ்சப் பேர். சோடிகளோட இணையாத பல பேர் இசையோட இணைஞ்சு இருத்திச்சினம். பெய்த மழையில கேட்ட பெரிய இடி உள்ளயா வெளியையா எண்டு தெரியாத அளவு உச்சம் தொட்டிருந்தது பிரியாவிடைப் party. மேடைக்குப் பக்கத்தில கொஞ்சப்பேர் “ குரங்குகள் போலே மரங்களின் மேலே“ எண்டு பாட்டை கும்பலா பாடமாக்கிக் கொண்டு இருந்திச்சினம், கடைசியாப் பாடிறதுக்கு. பிரியிற சோகம் பெரிசாக ஆடிற இடத்தை தாண்டி ஆக்கள் இருக்கிற இடத்தையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிச்சினம் . நாசூக்கா , நாகரீகமா “ நாங்கள் வெளிக்கிடிறம்“ எண்டு கொஞ்சக் காஞ்சிபுரம் கட்டினவையும், டை கட்டினவையும் வெளிக்கிடத் தொடங்கிச்சினம். உடுக்கேறியும் கலை வராத ஆக்களுக்கு கலவைப் பானம் குடுத்து ஆட வைக்க முயற்சிகள் தீவிரமா நடந்து கொண்டிருந்திச்சுது. இரவு ஆசுபத்திரி: வெளீல பெய்த மழையையும் இடிச்ச இடியையும் தாண்டி அங்க எங்களை விட்டிட்டு party போடிறவங்களைத் திட்டிக்கொண்டிருந்த studentsக்கு ஆசுபத்திரீல இருந்து “கணேசரட்ணம் சேருக்கு“ அம்புலன்ஸ் போகத் தான் ஆசுபத்திரி எல்லாம் தெரிய வந்திச்சுது ஒருக்கா மட்டும் கேட்ட இடி இறங்கினது நவாலி church க்க எண்டு. பள்ளிக்கூடக் காலத்தில ஆனந்தராஜா சேரை சுட்டிட்டாங்களாம் எண்டு கேட்ட உடன எப்பிடி கிரவுண்ட் வெறிச்சோடி ஆசுபத்திரி நிரம்பிச்சுதோ அப்பிடித்தான் இண்டைக்கும் நடந்திச்சுது மருத்துவபீடம் வெறிச்சோடி ஆஸ்பத்திரி நிரம்பிச்சுது. ஆசுபத்திரில இருக்கிற ஓரு அம்புலன்ஸை அனுப்பி என்ன செய்யிறது , எத்தினை வாகனம் தேவை எண்டு நிர்வாகம் யோசிக்க ஓட்டோ, மோட்டசைக்கிள் , land master எண்டு நிண்ட எல்லா வாகனத்திலேம் காயக்காரர் வந்திறங்கிச்சனம். வந்தவனுக்குப் பதிவு ஒண்டும் போடாமல் நேர வாட்டில விட்டிட்டு, பெரிய காயக்காரரை theatre க்கு கொண்டு போகத் தொடங்கிச்சினம். ஒப்பிரேசன் தியட்டருக்க போய்ப் பாத்தா ஒரு trolley இல ரெண்டு மூண்டு பேராக் கிடத்தி இருச்சினம். Theatre வாசலிலியே ஒப்பிரேசனுக்கு எடுக்க முதலே ஒவ்வொரு உயிராப் பிரியத் தொடங்கிச்சுது. வீம்பா அறிக்கை விட்டு நான் டொக்டரா வாறது தான் நோக்கம் எண்டு பாலர் வகுப்பிலயே சொல்லிப் படிச்சு வந்த வெள்ளைக் கோட்டுக் கார senior அக்கா மார் இறந்ததுக்கெல்லாம் உயிர் கொடுக்க முயற்சிச்சு சரிவராதெண்டு அறிஞ்சு விக்கி விக்கி அழுது கொண்டு நிண்டிச்சினம். கடைசியா OPD யில வந்திறங்கின tractor ஆல இறங்கக்கூடிய ஆக்கள் இறங்கி வர, இறங்க ஏலாததுகளை தூக்குவம் எண்டு போய் கையைப்பிடிச்சுத் தூக்கினவனுக்கு கைமட்டும் , காலைப் பிடிச்சவனுக்கு கால் மட்டும் கிடைச்சுது . முழுசா ஒண்டு கூட இருக்கேல்லை . எல்லாத் துண்டையும் இறக்கீட்டு அண்டிரவு முழுக்க கையெது காலெது எண்டு பாத்த jig saw puzzle மாதிரி பொருத்தீட்டு அடையாளம் கண்டு பிடிச்சாக்களை அப்பிடியே கட்டிக் குடுத்து விட்டிச்சினம் death certificate கூட இல்லாமல். அடுத்தநாள் விடியாத பொழுதில் செத்தவை ஆரார் எண்டு பேப்பர்காரான் தான் கண்டுபிடிச்சுப் போட்டிருந்தான். பொறுக்காத பொருந்தாத துண்டுகளின் கணக்கு எத்தினை எண்டு இப்பவரை தெரியாது. இந்த சோகத்தை ஊர் அழுது முடியமுதல் அடுத்தடுத்த ஊரிலேம் இடம் பெயர்வு வர எட்டுச் செலவு எட்டாமலும் , அந்திரட்டி அந்தரிச்சும் போனது . இடம்பெயர்வு 30/101995 “ பல்கலைக் கழகம் அகதி முகாமானது” எண்ட தலைப்போட ஒரு நாள் உதயன் வர அதோட சனம் ஒதுங்கின இடம் எல்லாம் அகதி முகாமாக மாற, அண்டின சனத்துக்கு அண்டைக்கு சமைச்சதை பிரிச்சுக் குடுத்துச் சாப்பிட்டிட்டு அடுத்த வேளை கூட சமைக்கலாமா இல்லையா எண்டு சனம் யோசிச்சுக் கொண்டு இருந்திச்சுது. ஸ்பீக்கர் வைச்சு ரோடு ரோடாப் போய் வெளிக்கிடச் சொன்னதை கேக்காம ரெண்டு நாள் பொறுத்துப் பாப்பம் எண்ட சனம் , துவக்குச்சூட்டுக்கும் அசையாத சனம், குண்டு விழுந்தாலும் வரமாட்டேன் எண்ட சனம் எல்லாம் கடைசீல வீம்பைக் கைவிட, உலக வரலாற்றில் முதன் முதலாக ஒரு இனமே மரதன் ஓடியது. உயிரற்றதை எல்லாம் அப்பிடியே விட்டிட்டு, மனமில்லாமல் அடை வைச்ச முட்டையைக் கூட அரை உயிரோட கொண்டு போச்சுது. படிப்புமில்லை இனி ஓடிப் பயனுமில்லை எண்ட சிலர் மட்டும் திருப்பி அடிப்பம் எண்டு அண்ணை வழி போக வழமை போல மற்றவர் எல்லாம் மந்தைகளாய் பிரிந்தனர். நான் தான் முன்னுக்கு ஓடிறன் எண்டு வந்தவனெல்லாம் நிண்ட இடத்திலேயே ஓடிக் கொண்டிருந்தான் . யாழ்ப்பாணத்தில இருந்த நாவக்குளிப் பாலத்துக்கால சனம் எல்லாம் தென்மராட்சிக்கு, பிரசவிச்சு வெளீல வரக் கஸ்டப்படிற பிள்ளை மாதிரி முக்கி ,மூச்சு முட்டி, இஞ்சி இஞ்சியாய் அசைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாய் வந்துது. “அறுந்து போவாங்கள் இப்பிடி செய்யிறதுக்கு ஒரேடியா குண்டைப் போட்டு எல்லாரையும் சாக்காட்டி விடலாம்” எண்டு ஒரு கிழவி சொன்னது ஆருக்கு கேட்டிச்சோ தெரியேல்லை அவனடிச்ச செல் நீர்வேலி தரவை வரைக்கும் வந்து விழ குடும்பமா, குறூப் குறூப்பா ஓடத் தொடங்கினவை எல்லாம் , கூட்டத்தில தாங்கள் எங்க நிக்கிறம் எண்டும் தெரியாம தங்களைச் சுத்தி ஆர் நிக்கினம் எண்டும் தெரியாம தேடிறதையும் கை விட்டிட்டு தனித்துப் போக , வாழக்கைச் சங்கிலிகள் கனக்க அறுந்து போய் தனி வளையங்களாகியது. விடை பெறாமலே பிரிஞ்ச கம்பஸ் பிரியாவிடையும் , சொல்ல முடியாமலே போன இடம் பெயர்வுகளும் கன பேரை பிறகு சேர்க்கவே முடியாத பிரிவிடையாப் போனது தான் சோகம். ஒண்டு மட்டும் உண்மை இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை, இனிமேலும்…… Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
-
வெத்து இலை அம்மா செய்த மைசூர்ப்பாகை களவெடுத்து பள்ளிக்கூடம் கொண்டு போக ஒளிச்சு வைச்சதை எறும்பு காட்டிக் குடுக்க, அம்மா அடிக்கத் தடி தேடி ஆச்சீன்டை பொயிலைக் காம்பைக் கொண்டந்தா. அப்ப அடிக்கிறதுக்கு வசதியா கனக்க இருந்திச்சுது. ஏப்பைக் காம்பு, பூவரசந்தடீ, முருக்கஞ் செத்தல் , பொயிலைக்காம்பு எண்டு கன சாமாங்கள் வீட்டிலயோ வேலீலயோ ready made ஆ இருந்தது. இப்ப வீட்டை அடிக்க கடையில போய் பிரம்பை வாங்கி வைக்க பிள்ளைகள் எடுத்து உடைச்சுப் போடும். வழமையான கடைக்குப் போற வேலைக்கு extra வா சில நேரம் வெத்திலை வாங்கிற வேலை வரும். சைக்கிள் பழகின புதுசில அதை ஓடிறதுக்காகவே சைக்கிளில போக விட்டா வாங்கித்தாறன் எண்டு deal போட்டு , ஓம் எண்டா ஓடிப் போய் வாங்கிறது. மாமா வீட்டை வந்தா வெத்திலை வாங்கு எண்டு சொல்லி கொஞ்சம் கூடக் காசு தருவார் எனக்கும் ஏதும் வாங்க எண்டு. “ வெத்திலை வாங்கேக்க உமா ஸ்ரோர்ஸில வாச வெத்திலை எண்டு கேட்டு வாங்கு” எண்டு மாமா சொன்னார், வெளிக்கிட்டு வர ஆச்சி எனக்கு வெறு வெத்திலை எண்டு சொல்லி காசும் தந்தா. வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு முன்னால இருக்கிற உமா ஸ்ரோர்ஸ் எண்ட கடை இப்பவும் இருக்கு. வாழைப்பழமும் வெத்திலையும் மட்டும் தான் அப்ப விக்கிறது. வாச வெத்திலை ஒரு கூறு எண்டு கேக்க, “ஒரு வெத்திலையா மூண்டு வெத்திலையா “ எண்டு கேட்டதுக்கு பதில் சொல்ல மூண்டு வெத்திலையை பாத்து எடுத்து வாளித்தண்ணீல கழுவி உதறி மேசையில வைச்சிட்டு மேல் வெத்திலையில பாக்கை வைச்சு, ரெண்டாவதில அசோகாப் பாக்கு வைச்சி, பிறகு மூண்டாவதில மூண்டு சீவல் நாறல் பாக்கை வைச்சிட்டு கிழிச்ச பேப்பர்த் துண்டில சுண்ணாம்பை வைச்சு மடிச்சு வெத்திலைக்கு அடீல வைச்சிட்டு ,பழைய கொப்பிப் பேப்பரில மூலைப் பக்கமாச் சுத்தி நிமித்தி் சுருளின்டை அடியை ரெண்டு தரம் மேசையில தட்டீட்டு வெத்திலை நுனியோட பேப்பரையையும் சேத்து மடிச்சுத்தாற ஸ்டைலுக்காக ரெண்டு வெத்திலைக் கூறு வாங்கலாம். யாழ்ப்பாணத்தில அப்ப வெத்திலை போடாதவன் இல்லை எண்டு சொல்லலாம் . சாப்பிட்டாப்பிறகு வெத்திலை பாக்கு கட்டாயம் போடிற பழக்கம் இருந்தது அதோட பழைய laxpray பைக்குள்ள எல்லாம் வைச்ச ஒரு வெத்திலைப் பையும், பாக்கு வெட்டியும், பொக்கை வாய்க்கிழவிக்கு உரலும், இடிக்குறதுக்கு தண்டவாளத்தில சிலிப்பர்கட்டை இறுக்கிற ஆணியோ இல்லாட்டி ஒரு இரும்போ இருக்கும். வீடுகளில பத்து மணிப் பிளேன்ரீயோட ஒருக்கா, மத்தியானம் சாப்பாட்டுக்குப் பிறகு ஒருக்கா, அப்பிடியே பின்னேரம் தேத்தண்ணிக்குப் பிறகு ஒருக்கா எண்டு சாப்பாட்டுக்கு நிறை குறை நிரப்பியா வெத்திலை இருக்கும். வீடுகளில மூத்திரம் பெய்ய ஒரு மூலை மாதிரி வெத்திலை துப்பிற வேலியும் இருக்கும். வீட்டில ஆரும் வந்தாலும் தேத்தண்ணி குடிச்சிட்டு வெத்திலை போடுவினம். அதே போல வெத்திலை ஒரு அத்தியாவசிய உப உணவாக கன கூலி வேலைக்காரருக்கு இருந்திச்சுது. எண்பதில யாழப்பாணம் townக்க “ வாளிக்குள் துப்பவும் “ எண்ட போட்டோட பழைய மண்ணெண்ணை பரலை நிமித்தி வைச்சு வெள்ளைப் பெயின்ற்றும் அடிச்சு வைச்சிருந்தவை . அதோட நல்லூர் வீதியிலையும் திருவிழாக் காலத்தில துப்பிறதுக்கு வாளிகள் வைச்சிருந்தது. ஊரில ஏனோ தெரியேல்லை துப்பிற பழக்கம் பொதுவா இருந்திச்சுது. பயணங்கள் போறவை ஒண்டுக்குப் போகமால் மூத்திரத்தை அடக்கினாலும் வெத்திலை போட்ட எச்சிலை உடனயே துப்பீடுவினம் . ஆனபடியாத்தான் பரலை வெட்டி கக்கூஸ் கட்டாமல் முழுசா நிமித்தி துப்பிறதுக்கு வைச்சாங்கள். முனிசிப்பல் காரங்கள் இடைக்கிடை குப்பை பரலை எடுக்கிறவங்கள் ஆனால் துப்பல் பரலை ஒருநாளும் எடுக்கிறேல்லை . குப்பை எடுக்க வரேக்க பரலுக்குள்ள நெருப்புத் தண்ணி ( Lysol) மாதிரி ஊத்துவாங்கள் அது துப்பலோட சேந்து வெய்யிலுக்கு காஞ்சு போடும். பழைய காலத்தில கசம் கனபேருக்கு இருந்ததால கண்ட இடத்திலேம் துப்பி எச்சிலில இருந்து கிருமி பரவாமத் தடுக்க அப்பிடிச் செய்தாங்களோ தெரியேல்லை. ஆனாலும் அதுக்கு வெத்திலை போடிற ஆக்களுக்கு அது வசதியா இருந்திச்சுது. வெத்திலை வெறும் விசேசத்துக்கும் கோயிலுக்கு கொண்டு போறதுக்கும் மட்டும் இல்லை அதை பரியாரிமார் மருந்துக்கும் பாவிக்கிறவை. தம்பிக்கு ஒரு நாள் சளி இழுக்க வெத்திலையில எண்ணை பூசி தணலில வாட்டி “ அது சளியை உறிஞ்சுமாம் எண்டு” நெஞ்சில வைச்சவ ஆச்சி. குழந்தைப் பிள்ளைகளுக்கு எண்டால் தலையில வைக்கிறதாம் . “சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிச்சுவைக்கும் நிஜாம் பாக்கு “ எண்டு ஆல் இந்தியா ரேடியோவில அடிக்கடி விளம்பரங்கள் போகும். பாலர் வகுப்புப் படிக்கேக்க பள்ளிக்கூடத்துக்கு முன்னால இருந்த முரளீன்டை தாத்தான்டை கடையில சுருட்டின பாதி வெத்திலைக்கு கலர் தேங்காய்பூவும் , முறிச்சு உடைச்சுத் தூவின கறுவாவும் எண்டு 10 சதத்துக்கு வித்தது. சந்தைக்கு விசேசத்துக்கு மரக்கறி சாமான் வாங்கப் போய் கடைசீல வெத்திலைக் கடைக்கும் போறது. தேவைக்கு ஏத்த மாதிரி ரெண்டோ , மூண்டோ கும்பம் வெத்திலை , கிலோவில சீவல் , கொட்டைப்பாக்கு , சுண்ணாம்பு ரின், சுருட்டுக்கட்டு எல்லாம் வாங்கீட்டு , பொயிலைக்காம்பு எண்டு கேட்டுப் பொயிலை எடுத்து விரிச்சு மணந்து பாத்துக் குடுக்க, விரிச்சதை திருப்பிச் சுருட்டி இலையை மடக்கி முடிச்சுப் போட்டுத் தருவாங்கள். ஊரில நல்லது கெட்டது எல்லாத்திலேம் வெத்திலைத் தட்டு இருக்கும். தட்டில ஒரு பக்கமா வெத்திலையை அடுக்கி பாக்குச் சீவலை அள்ளிப் போட்டு பழைய ரின்பால் பேணீல வாங்கின சுண்ணாம்பை அள்ளி வைச்சிட்டு, சுருட்டுக் கட்டொண்டையும் வைச்சுக் குடுப்பினம். அதோட பொயிலைக் காம்பில இருந்து இலையை வெட்டீட்டு காம்பை எடுத்து வைப்பினம், அடிக்கிறதுக்கும், மூக்கில விட்டுத் தும்மிறதுக்கும். அதோட மலச்சிக்கல் காரருக்கு மல வாசலில வைச்சா சிக்கல் இல்லாமல் போகும். ஆய கலைகளில சேக்க மறந்ததில இந்த வெத்திலை போடிறது ஒரு கலையும் ஒண்டு . நல்லது கெட்டதில வைக்கிற வெத்திலைத் தட்டத்தை எடுத்து மடீல வைச்சபடி பழசுகள் வெத்திலை போடும். வெத்திலைத் தட்டில அடுக்கின வெத்திலைக்கு நடுவில ஆகலும் முத்தலும் இல்லாத வெளிறின பச்சையாப் பிஞ்சும் இல்லாத வெத்திலை ஒண்டை எடுத்து ரெண்டு பக்கத்தையும் கையால ( சில வேளை வேட்டியிலே) வடிவாத் துடைச்சிட்டு காம்பை முறிச்சு அப்பிடியே நடு நரம்போட இழுத்து எறிஞ்சிட்டு சுண்ணாம்பை சுண்டு விரலால எடுத்து வெத்திலையின் வெளிப்பக்கத்தில் மெதுவாகப் பூசோணும். அதோட நல்ல மெல்லிசாச் சீவின, காஞ்ச சீவலா பாத்து எடுத்து சாடையாக் கசக்கீட்டு மெல்ல ஊதி தூசை பறக்கவிட்டிட்டு அப்பிடியே ஒரு பக்கக் கொடுப்புக்குள் வைத்து மெல்லச் சப்பத் தொடங்க வாய்க்குள்ள இருக்கிற பாக்கில எச்சில் ஊறும். பிறகு வெத்திலையை மடிச்சு மற்றப் பக்க கொடுப்புக்குள்ள வைச்சிட்டு இரண்டையும் சமமான அளவில் சப்பினபடி நாக்கினால் பிரட்டிக் கலக்க வாற வெத்திலைச்சாறை சுண்டு விரலையும் நடு விரலையும் வாயில வைச்சு தெறிக்காம எட்டித் துப்போணும். காரத்துக்கும் tasteக்கும் தேவையான அளவுக்கு ஏத்த மாதிரி விரலில் இருக்கும் சுண்ணாம்பை நுனி நாக்கில் இடைக்கிடை தடவிக் கொள்ளலாம். அப்பப்ப சின்னத்துண்டா வெட்டியிருக்கிற பொயிலையை எடுத்து விரித்துப் பாத்து நல்லா மணக்கிற பொயிலைத் துண்டை எடுத்து வெறுமையாக இருக்கும் கொடுப்புப் பகுதிக்குள் தள்ளி் அடக்கி வைத்திருக்க வேண்டும். எச்சில் ஊறிய பொயிலைச்சாற்றை வெத்திலையுடன் கலந்து அசைபோட்டுக் கொண்டு இருக்கேக்க வாற எச்சில் கடைவாயின் பக்கம் வழிய முதல் எச்சிலைத் துப்பிப் போடோணும். போட்ட வெத்திலையை ஒரு நாளும் அப்பிடியே விழுங்கக்கூடாது, அசை போட்டு சாறை உறிஞ்சீட்டு எழும்பி்ப் போய் வேலிப்பக்கம் எல்லாத்தையும் துப்பிப் போட்டு, விரலில மிஞ்சி்இருக்கிற சுண்ணாம்பை மரத்திலயோ சிவத்திலயோ பூசீட்டை வாயைக் கொப்பிளிச்சிட்டு வரோணும். இல்லாட்டி எல்லாத்தையும் சேத்துப் போட்டு மாடு மாதிரி அசையும் போடலாம். ( பி.கு . இதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பேற்காது.) இப்ப ஏன் எண்டு தெரியாம வாங்கி வைக்கிற வெத்திலையை போடிறதுக்கு ஆக்களும் இல்லாமல் , அதை போடிறதை ரசிக்கிற ஆக்களும் இல்லாமல் வெத்திலை இப்ப எல்லாம் பெயருக்கு ஏத்த மாதிரி வெத்து இலையாகவே இருக்கு. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதை வென்ற வைத்திய கலாநிதி டி.கோபிசங்கர்! விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற நிலையில் “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்” பற்றி 2020 ம் ஆண்டு எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது. https://onlinekathir.com/archives/52034 இவர் @நிழலியின் நண்பர் என நினைக்கின்றேன்.
-
பாஸ் எடுத்தும் fail “மச்சான் பெருங்கண்டம் சோதினை முடிஞ்சுது நாங்கள் வீட்டை போறம், நீ என்ன மாதிரி ” எண்டு ஒண்டாப் படிக்கிற ஹொஸ்டல் காரங்கள் கேக்க, “நானும் போறதுக்கு அலுவல் பாக்கிறன்” எண்டு போட்டு வெளிக்கிட்டன். 95 இல இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்தாப் பிறகு வீட்டுக்காரர் எல்லாரும் கொழும்பு போக நான் மட்டும் தனிச்சு நிண்டு , விட்ட கம்பஸ் படிப்பைப் தொடந்தன். இனிச் சோதினை முடிஞ்சு தான் கொழும்புக்குப் போறதெண்ட முடிவோட இருக்க( படிக்க) ரெண்டு வருசம் ஓடீட்டுது. தனிநாடு கேட்டுச் சண்டை பிடிக்கேக்க தராம பிறகு இருந்த இடத்தையும் பிடிச்சிட்டு எல்லாத்தடையும் விதிக்க நாங்களும் தனிய ஒரு நாடாய் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் எங்களை எந்தத்தடையும் பாதிக்கேல்லை கொழும்புக்குப் போற பாதைத்தடையைத் தவிர. சரி ரெண்டாவது வருசச் சோதினை முடிஞ்சிது தானே போவம் எண்டால் எப்பிடிப் போறது எண்டு பிரச்சினை வந்துது , ஏனெண்டால் அடையாள அட்டை யாழ்ப்பாணம். வெளி மாவட்டம் எண்டால் மட்டும் முன்னுரிமை கிடைக்கும் எண்ட நிலமையால. இயக்கத்தின்டை “ காம்ப்“ , தமிழீழக் காவல்துறை எண்டு இருந்த காலத்தில இருந்து மூண்டாம் நாலாம் குறுக்குத் தெருவுக்கு நாங்களா விரும்பிப் போறேல்லை. ஆனாலும் இடம்பெயரந்து போய் திரும்பி வந்தாப்பிறகு அவடம் யாழப்பாணத்தின்டை முக்கியமான இடமாய் மாறிச்சுது. OLR church ஐ மட்டும் விட்டிட்டு நாலும் ,மூண்டும் சந்திக்கிற சந்தீல இருந்த ஆலமரத்தடீல இருந்து ஆசுபத்திரி்வீதி வரை எண்டு முழு இடத்தையும் ஆக்கிரமிச்சு பெரிய காம்ப் ஒண்டு இருந்திச்சுது. சரி பாஸ்( clearance ) எடுத்து வீட்டை போற அலுவலைப் பாப்பம் எண்டு போட்டு வெளிக்கிட்டு வந்து சைக்கிளை ஆலமரத்தடீல விட்டிட்டு போனா குறுக்கும் மறுக்குமா மரத்தை நட்டுத் தடியைக் கட்டி தடை ஒண்டு இருந்திச்சுது. அதுகளுக்கால குனிஞ்சும் ஏறிக் குதிச்சும் உள்ள போனா நிறைய லைனில சனம் நிண்டிச்சுது. அங்க போன இடத்தில Government servant, கலியாண வீடு ,செத்தவீடு , cancer க்கு மருந்துக்கு ,வெளிநாட்டுக் போறம் எண்டு கன சனம் பிரிஞ்சு மூண்டு நாலு வரிசையில நிண்டிச்சுது. எங்க சனம் குறைவா நிக்கிது எண்டு பாத்திட்டு அங்க ஓடிப் போய் நிக்க அந்தக் கியூ கொஞ்சம் கெதியா முன்னுக்குப் போகத் தொடங்கிச்சுது. என்னடா அதிஸ்டம் அடிக்குது எண்டு யோசிக்க , மற்றப் பக்கம் நிண்ட சனம் சத்தம் போடத்தொடங்க, சத்தத்தைக் கேட்டு எல்லாரையும் கலைச்சுக் கொண்டு போய் ஒரே கியூவில அதுகும் எங்களை கடைசீல கொண்டே விட்டான் ஒரு சீருடையான் எங்கடை ஒத்து(ழையா)மையை ரசிச்சபடி. ஊர் ரெண்டு பட சீருடைக்காரன் பெரியாளானான். நூறு இருநூறு எண்டு போட்டவன் ( குடுத்தவன்) எல்லாம் ஏணீல ஏறி டக்கெண்டு முன்னால போக நாங்கள் முன்னுக்குப் போகாமல் அதே இடத்தில இருந்து இன்னும் பின்னுக்கு வந்தன் பாம்பால சறுக்கின மாதிரி அவனால இல்லை எங்கடை சனத்தால. ஒருமாதிரி ரோட்டில இருந்த தடைதாண்டும் ஓட்டத்தில வெண்டு உள்ள போய்ப் பாத்தா வாடகை இல்லாமல் வசதியாக் கிடைச்ச வீடு தான் அவங்கடை office. அங்க Form வாங்க ஒண்டு , அதைக் குடுக்க ஒண்டு , கிடைக்காத்துக்கு அப்பீலுக்கு ஒண்டு, சிபாரிசுக் கடிதத்தோட ஒண்டு எண்டு ஒவ்வொரு அறைக்கு வெளியில யன்னலுக்கால கை, மூக்கு, வாய் எண்டு நீட்டக்கூடியதை நீட்டிக் கொண்டு சனங்கள் நிரம்பி இருந்திச்சுது. ஒரு மாதிரி Form ஐ வாங்கிக் கொண்டு வீட்டை போய்ப் பாத்தா கனக்க விபரம் கேட்டிருந்திச்சுது. கேட்டைதை எல்லாம் நிரப்பினா அதோட கன கடிதங்களும் இணைக்கச் சொல்லிக் கேட்டருந்திச்சுது. GSஐ தேடிப் பிடிச்சு , அவரிட்டைப் போய் இன்னாரின்டை இன்னார் எண்டு விளக்கம் சொல்லி கடிதம் வாங்கீட்டுப் போனா சொன்னாங்கள் ஏரியா ஆமிக்காம்பில கடிதம் வாங்கு எண்டு. அதை வாங்கப் போனா ஐஞ்சாறு நாள் அலைய விட்டிட்டு, OIC வெளீல போட்டார், கப்டன் காம்புக்குப் போட்டார், மற்றவர் லீவில போட்டார் எண்டு அலைக்கழிச்சுத்தான் உள்ள விட்டாங்கள் . உள்ள போய் campக்குள்ள wait பண்ணேக்க பாத்தால் தான் தெரிஞ்சுது எங்கடை வீட்டுக் கதிரை, மணிக்கூடு , அண்ணா வாசிச்ச மிருதங்கம் அதோட அக்கம் பக்கம் வீடுகளில காணமல் போனது எல்லாம் அங்கதான் இருக்குது எண்டு. இங்க இருக்கிறவரிட்டை கடிதம் மட்டும் பத்தாது எண்டு ஊரெழுவில போய் இன்னொரு clearance எடுக்கோணும் எண்டாங்கள். Respected Sir, Your highness எண்டு தெரிஞ்ச எல்லாத்தையும் போட்டுக் கடிதம் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தன். File ஒண்டைத் தூக்கிக்கொண்டு திரிஞ்சு எல்லாரிட்டேம் recommendation கடிதம் வாங்கிக் கொண்டு போய் formஐக் குடுக்கவே பத்து நாள் செண்டிச்சுது. இந்தக் கெடுபிடியால தேவை இருந்தும் அலைஞ்சு திரியேலாத சனம் போறதையே மறந்திச்சுது, அலைஞ்சு திரிஞ்சும் கிடைக்காத்தால கலியாணம் சில cancel ஆகிச்சுது, லீவு முடிஞ்சு போகேலாத்தால சிலருக்கு வேலை போச்சுது, கொழும்புக்குப் போகக் கிடைக்காமல் கோம்பையன் மணலில cancer treatment சிலதும் முடிஞ்சுது. ஆனால் வெளிநாடு போறவங்களுக்கு மட்டும் கொழும்புக்கே போகாமல் போற route ஐ agencyக்காரன் கண்டு பிடிச்சான். ஒரு மாதிரி எல்லாத் தடையையும் தாண்டிப் போய் form குடுக்க கியூவில நிண்டா, திருப்பியும் snake and the ladder தான். அப்ப கொழும்புக்கு இடைக்கிடை flightம் ஓடினது “ Heli tours “ எண்டு. பாதுகாப்பு படையோட சேந்து தான் போகவேணும். வானத்தில போன ஒரு flight கடலுக்கு land ஆக ஆருக்கு ஆர் பாதுகாப்பு எண்டு கேள்வி வந்திச்சுது. அது மட்டுமில்லை , அதுக்கும் பதிஞ்சிட்டுப் பாத்துக்கொண்டு இருக்கோணும், அதோட காசும் எக்கச்செக்கம். எங்களுக்கு கொழும்பு போக ஒரே வழி கப்பல் தான் . மாகோ , கோமாரி , லங்காமுடித எண்டு கன கப்பல் (Cargo ) ஓடினது. சாமங்களோட சேத்து ஆக்களையும் ஏத்தி ஓடின கப்பல் தான் இதுகள். இரெண்டாயிரத்துக்குப் பிறகு தான் city of Trinco எண்ட மகேஸ்வரன்டை கப்பலை ஓடத் தொடங்கினது ஆக்களுக்கு எண்டு. சோதினை செய்திட்டு results கூட பாக்கப் போகாத நான் Formஐக் குடுத்தாப் பிறகு pass list இல பேர் வந்திட்டா எண்டு ஒவ்வொரு நாளாப் போய்ப் பாத்தாப் பேர் இருக்காது. நித்தம் போனாலும் சலிக்காத முற்றம் இந்தப் பாஸ் ( clearance ) எடுக்கிற இடம் தான் . இயக்கத்திட்டை pass எடுக்கப் போய் இவன், அவன் எண்டு பெடியளை கதைச்ச எங்கடை சனம், ஆர் என்ன Rank , என்ன வயசு எண்டு பாக்காம எல்லா ஆமிக்காரனுக்கும் சேர் போட்டுக் கூப்பிட்டுக் கெஞ்சிக் கொண்டு நிண்டிச்சிது. Campus லீவு ஒரு மாதம் எண்டு கொழும்புக்கு வீட்டை போக வெளி்க்கிட்டிட்டுப் பாத்துக்கொண்டிருக்க கைச்செலவுக்காசு, சாப்பிடுற சாப்பாடு அளவு , இருக்கிற லீவு நாள் எல்லாம் குறைஞ்சு கொண்டு வந்திச்சுது. அடுத்த கப்பலுக்கு பேர் list இல இருக்கு எண்டு ஆரோ சொல்ல வந்த சந்தோசம் A/ L results வர மருத்துவ பீடம் கிடைக்கும் எண்டு சொல்லேக்க கூட வரேல்லை. ஓடிப் போய்ப் பேரைப் பாத்திட்டு “எப்ப வாறது” எண்டு கேக்க “விடிய காலமை வாங்கோ” எண்டு சொன்னாங்கள். சென்றல் பள்ளிக்கூடம், சென்ஜோன்ஸ் பள்ளிக்கூடம் , கைவிட்டருந்த ரெயில்வே ஸ்டேஷன் , சிங்கள மகாவித்தியாலம் எண்டு இடத்தை அடிக்கடி மாத்திக் கொண்டிருப்பாங்கள் ஆக்களை ஏத்திக் கொண்டு போறதுக்கு. இந்த முறை “விடியக் காலமை சென்றல் கொலிஜுக்கு வாங்கோ “எண்டு சொல்லி அனுப்பினாங்கள். அடுத்த நாள் வீட்டை போற ஆவலில விடிய எழும்பப் பிந்தினா விட்டிட்டுப் போயிடுவாங்கள் எண்டு இரவு நித்திரை கொள்ளாம இருந்து விடியப் போய் நிண்டன் திருப்பியும் ஒரு கியூவில. ஆளை bag ஐ எல்லாம் துளாவி ஒண்டும் இல்லை எண்டு confirm பண்ணிப் போட்டு உள்ள கொண்டே இருத்தி விட்டாங்கள் . காலமை ஐஞ்சு மணிக்கு ஊரடங்குச் சட்டம் முடிய முதலே வெளிக்கிட்டுப் போனது சாப்பிடாம. பசியெடுக்க மத்தியானம் வரை தண்ணியைக் குடிச்சிக் குடிச்சு இருக்க அடக்கேலாம அடி வயிறு குத்த ஆரும் பாத்தாலும் பரவாயில்லை எண்டு மூலைக்க ஒதுங்க வேண்டியதாப் போச்சுது. நேரம் போக பசி தொடங்கினாலும் நாளைக்கு வீட்டை போய் நல்லாச் சாப்பிடலாம் எண்ட நப்பாசையில முதல் நாளே வாங்கின தேசிய பிஸ்கட்டான “லெமன் பவ்வை” ஆரும் கேட்டாலும் எண்ட பயத்தில ஒழிச்சு வைச்சுச் சாப்பிட்டன். ஒருமாதிரிப் பின்னேரம் நாலு மணிக்கு பஸ் ஒண்டில அடைச்சு ஏத்தினாங்கள் எல்லாரையும். வழக்கம் போல foot board பக்கம் போக துவக்கோட நிண்டவன் நிமிந்து பாக்க உள்ள போய் நசுங்கிக் கொண்டு நிண்டன் . பின்சீட்டில பாக், பூட்டேலாத யன்னல், ஆணி மட்டும் களராமல் எல்லாமே ஆடிக்கொண்டிருக்கிற பஸ் போற ரோட்டெல்லாம் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போச்சுது. வெய்யிலுக்க என்டை வேர்வையோட பக்கத்தில நிண்டவங்கள் எல்லார்டையும் வேர்வையும் சேந்து, அதோட ரோட்டிப் புழுதியும் படிஞ்சு மூக்கை அடைக்க, உடம்பு மூச்சு விட இன்னொரு மூக்கைத் தேடிச்சுது. பலாலி ரோட்டால போய் உரும்பிராய் தாண்டிப் போன பஸ் ரோட்டை விட்டிறங்கிக் காட்டுக்கால போறமாதிரி இருந்திச்சுது. ஏறிக் குதிச்சுக் குலுக்கிக் எல்லாம் போய் கடைசீல இறக்கினது ஒரு “ஆரம்ப பாடசாலை” எண்டு நெக்கிறன். கதிரை மேசையில இருந்து கக்கூசு வரை எல்லாம் குட்டியாய் இருந்திச்சுது. சீமெந்து factory உந்தப்பக்கம் தான் எண்டு ஆரோ சொல்லத்தான் நிக்கிற இடம் காங்கேசன்துறை எண்டு விளங்கிச்சுது. இறங்கிக் கொஞ்ச நேரத்தில “இண்டைக்கு கப்பல் போகாதாம் காத்துக் கூடவாம் , கடல் கொந்தழிப்பாம் ,நிண்டு பாக்கிற எண்டால் பாக்கலாம் இல்லாட்டி திரும்பிக் கொண்டே விடீனமாம் “ எண்ட செய்தி பயணத்தை இன்னும் தூரமாக்கியது. சரி நாளைக்குப் போகலாம் தானே எண்டு போட்டு இரவு எல்லாரும் நிண்டம் . அடுத்த நாள் காலமை ஆக்கள் எல்லாம் அல்லகோலப்பட செய்தி வந்திச்சுது, “முல்லைத்தீவு கடலில கப்பல் மூழ்கடிப்பாம்” எண்டு. அப்ப தான் விளங்கிச்சுது எங்களை இங்க வைச்சுக்கொண்டு வேற கப்பலை அனுப்பத்தான் இந்தக் கொந்தழிப்புக் கதை எண்டு. கடைசீல pass எடுத்தும் fail ஆன மாதிரி அனுமதி கிடைச்சும் போகேலாமல் திருப்பி யாழப்பாணம் வந்து அடுத்த கப்பலுக்குப் பதிய புது form வாங்க கியூவில போய் நிண்டன் எல்லாத்திக்கும் ஒரு வழி பிறக்காதா எண்ட ஏக்கத்தோட. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
ஏற்றுமதி “சேர் அடுத்த patient ஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு , 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம். என்ன பிரச்சினை ? “ நாரி நோகுது “ எத்தினை நாளா? “ கொஞ்ச நாளா” நாரி மட்டும் தானா இல்லாட்டி வேற எங்கேயும் நோகுதா? “ இல்லை சில நேரம் கழுத்தும் நோகும், போன கிழமை முழங்காலும் நொந்தது” . கால் விறைக்குதா? ஓம் அதோட தலையும் விறைக்குது. சோதிச்சுப்பாத்து ஒண்டும் இல்லை எண்டு சொல்லீட்டு , பதினெட்டு வயசு தானே படிக்கிறீங்களா எண்டு கேக்க, “ இல்லை “ வேலை செய்யிறீங்களா? “ இல்லை “ அப்ப என்ன செய்யிறீங்க “ சும்மா தான் இருக்கிறன் “ ……….. அப்ப குறிக்கிட்டது ஒரு நாப்பது வயது “ இல்லை அவ வெளீல போகப்போறா , கலியாணம் முற்றாகீட்டுது, அதுதான் போக முதல் எல்லாம் ஒருக்காப் பாத்தால் நல்லம் எண்டு வந்தனாங்கள், ஒருக்கா எல்லா scan உம் பண்ணிப் பாக்கலாமா” எண்டு கேட்டா , vehicle full service போட்டுத்தாறீங்களா எண்ட மாதிரி. அப்ப மகளுக்கு நோ எல்லாம் இல்லையா ? “ இல்லை எனக்குத் தான் இடைக்கிடை நாரி நோகிறது. இவ இப்ப வெளீல போனாப் பிறகு தேவை எண்டு இப்ப மேக்கப், கேக் ஐசிங், தையல் எல்லாம் படிக்கிறா , ஒரு நாள் நாரி நோகுது எண்டு சொன்னவள் அது தான் போக முதல் எல்லாத்தையும் காட்டீட்டால் நல்லம் எண்டு வந்தனாங்கள். அவையும் சொன்னவை வரமுதல் உங்கயே எல்லாத்தையும் காட்டீட்டு வரச்சொல்லி, ஒரு பிரச்சினையும் இல்லைத் தானே …..” எண்டு அம்மா சொன்னதுக்கு நான் தலையை ஆட்ட மேக்கப்பை தனக்கும் அம்மாக்கும் போட்டுப் பழகிக் கொண்டிருந்த மகள் சந்தோசமா வெளிக்கிட்டுப் போனா. எல்லா patient உம் பாத்து முடிய , “சேர் எனக்கு கலியாணம்” எண்டு கிளினிக்கில வேலை செய்யிற பிள்ளை வந்து சொல்லிச்சுது. எப்ப ? வாற மாசம் எங்க ? இந்தியாவில ஏன் அங்க? அவருக்கு இங்க வரேலாதாம் போய் எவ்வளவு காலம்? கொஞ்சக் காலம் எந்த இடம்? …. விசாரிச்சதோ ? “தூரத்துச் சொந்தக்காருக்குப் பக்கத்துவீட்டுக் காரருக்க தெரிஞ்ச ஆக்களாம், அவரோட நேர கதைச்சதாம் , வயசு கூடத்தான் ஆனாலும் எப்பிடியும் எனக்கு வெளீல போனாக்காணும், நான் இண்டையோட வேலையால நிக்கப் போறன்” எண்டு சொன்ன பிள்ளைக்கு வாழ்த்துச் சொல்லி எனக்கு வரேலாது இந்தாரும் என்டை gift எண்டு குடுத்த envelope ஐ வாங்கிக் கொண்டு சந்தோசமா வெளிக்கிட்டிச்சிது அந்தப் பிள்ளை. அதுகள் போனாப்பிறகும் இடைக்கிடை இப்பிடிக் கன வாகனங்கள் service க்கு வந்து போய்க்கொண்டிருந்திச்சுது ஒவ்வொரு மாசமும். ரெண்டு மாசம் கழிச்சு இந்தியாவுக்கு கலியாணத்துக்குப் போன பிள்ளை திருப்பியும் வேலைக்கு வந்திச்சுது. “ஆ எப்பிடி இருக்கிறீர், கலியாணம் எப்பிடி, அவர் எங்க “? எண்டு ஆக்களுக்கு முன்னால கேட்ட கேள்விக்கு விடை உடன வரேல்லை, ஆனாலும் பிறகு வந்து , “ Sir இதுதான் photo எல்லாம் வடிவா நடந்தது. போய் sponsor க்கு அலுவல் பாக்கிறராராம் அநேமா மூண்டு மாசத்தில கூப்பிடுவன் எண்டவர் “ எண்டு நம்பிக்கையோட சொலலீட்டுப் போச்சுது. நாலு மாசம் கழிச்சு; “என்ன மாதிரி போற அலுவல் எண்டு கேக்க” , “ அவருக்கு இப்ப தான் பாஸ்போட் வந்ததாம் இனித்தான் கூப்பிடுவாராம் “ . அப்ப இந்தியாவுக்கு கள்ளப் பாஸ்போட்டிலயோ வந்தவர் எண்ட கேள்விக்கு அந்தப் பிள்ளைக்கு விடை தெரியேல்லை. ஆறு மாசம் கழிச்சு; “ Sir ஏதும் நல்ல வேலை இருந்தாச் சொல்லுங்கோ சம்பளம் இங்க காணாது , கலியாண வீட்டுக் கடனையே கட்டேலாமல் நிக்கிறம் அதோட போறதும் இன்னும் சரிவரேல்லை ” எண்டிச்சுது அந்தப் பிள்ளை. அதுக்கு மேல ஒண்டும் கேக்கேல்லை. ஒரு வருசத்தால; “ Sir அது சரிவரேல்லை இது அக்கான்டை மாமான்டை சம்மந்த பகுதிக்காரர் கொண்டந்தவராம் அடுத்த மாசம் இந்தியாவுக்குப் போய் அப்பிடியே போயிடுவன்” எண்டு இந்த முறை நம்பிக்கையா good bye எண்டு அதே பிள்ளை சொல்லீட்டுப் போச்சுது, பதியப்படாமல் நடந்த முதல் கலியாணம் முறிக்காமலே முறிஞ்சது ஒருத்தருக்கும் தெரியாத மட்டும் நல்லம் எண்டு நெச்சபடி நான் வீட்டை வெளிக்கிட்டன். இந்த முறை கலியாணத்துக்குப் போனது ஒரு மாசத்திலயே திரும்பியும் வேலைக்கு வந்திட்டுது . நான் ஒண்டும் கேக்கேல்லை. ரெண்டு பேருமே பேசாம வேலையைப் பாத்தம். போன மாசம்; ரெண்டு தரம் கலியாணம் rehearsal பாத்த பிள்ளை வந்து, “ Sir நான் கனடா போப்போறன். பாங்கில கொஞ்சம் காசு காட்டினா கனடா போகலாமாம். ஏற்கனவே கொஞ்சம் கட்டீட்டன் , மற்ற எல்லாம் ரெடி , ஒரு கோடி காசு ஒரு மாசம் bank இல இருந்தாச் சரியாம் , வீட்டை அடகு வைக்க அம்மா பாக்கிறா போறது நல்லது தானே எண்டு சொன்னதுக்கு என்ன பதில் சொல்லலாம் எண்டு யோசிக்கத் தொடங்கினன். யோசிச்சு முடிக்க முதல் ஏற்றுமதிக்காய் வளத்த இன்னொரு நாட்டுக்கோழி நொண்டாத காலில நோவெண்டு சொல்லிக் கொண்டு வந்து என்னை யோசிக்க விடாமக் காப்பாத்திச்சுது. இருக்கிற முழங்காலில இல்லாத நோவுக்கு வைத்தியம் பாத்திட்டு வெளிக்கிட; “ வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கம் “ எண்டு அரசாங்கம் அறிவித்தது எண்டு லோசனின் செய்திகள் தயையங்கம் சொல்ல, இது எந்த ஏற்றுமதியை எண்டு யோசிச்சபடி நடந்தன். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
-
காய்ச்சல் உடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது , lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸுக்கு வந்தா உடம்பு சுடுற மாதிரி இருந்திச்சுது. காயுதா காயேல்லையா எண்டு தொட்டுப் பாக்க வடிவாத் தெரியேல்லை. ஓடிப்போய் முந்தி ஒரு டொக்டரிட்டை காட்டி தந்த prescription ஐக் காட்டி pharmacy யில மருந்தை எடுத்துப் போட்டு வீட்டை வந்தன். வீட்டை வந்து சாப்பாடுக்கு எந்தக் கடை menu விலயாவது முருங்கைக்காய் கறி , மீன் தீயல் , துவரம்பருப்பு ரசம் இருக்கா எண்டு தேடீக் களைச்சுப் போய் , Uber- eats இல soup ஐ ஓடர் பண்ணீட்டு இப்போதைக்கு பிளேன்ரீயும் பிஸ்கட்டாலேம் வயித்தை நிரப்பீட்டு இருந்தன். வாங்கின Antibiotics , vitamin எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு இருக்க நித்திரை தூக்கி அடிக்க போத்திப் படுத்தன். “பேசாம மூடிக்கொண்டு படு..வேர்த்தாத்தான் காயச்சல் விடும்” எண்டு சொல்லீட்டு அம்மா Vicks ஐ நெஞ்சிலேம் தொண்டையிலேம் பூசீட்டு மூக்கில டப்பியை மணக்கப் பிடிக்க ஆழமா மூச்சை எடுத்திட்டு அப்பிடியே போத்துப் படுத்தன். அரை நித்திரையில அனுங்கி முழிக்க அம்மா நெத்தீல ஓடிக்கலோன் நனைச்ச துணியை வைச்ச படி கட்டிலுக்குப் பக்கத்திலயே இருந்தா. இந்தா பனடோலைக்குடி எண்டு தந்திட்டு அடுத்தது விடிய நாலு மணிக்குத்தான் இப்ப படு எண்டு சொல்லீட்டு தேவாரம் பாடத் தொடங்கினா. விடிஞ்சது தெரியாம பிந்தி எழும்பி வர “ அப்பவும் சொன்னான் மழைக்க நனையாத எண்டு , இப்ப பார் கசக்காரன் மாதிரி இரவிரவா இருமிறாய்” இந்தா இதைக்குடி எண்டு அப்பாச்சி பாலுக்க உழுத்தம்மாவை கரைச்சுக் கொண்டு வந்தா. குடிச்சு முடிய நெத்தீலேம் நெஞ்சிலேம் கையை வைச்சிட்டு மேல் சுடூது சட்டையைப் போடு எண்டு அதட்டீட்டு , இவனை இண்டைக்கு பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டாம் எண்டு சொல்ல அண்ணா தான் மட்டும் போகப் போறன் இவன் வீட்டை நிக்கப் போறான் எண்ட பொறமையோடையும் எனக்கும் காய்ச்சல் வரேல்லையே எண்ட ஏக்கத்தோடையும் போனார். சும்மா நாளில பள்ளிக்கூடம் போகாம நிண்டா ஒண்டு படிக்கோணும் இல்லாட்டி ஏதாவது வேலை செய்யோணும் , ஆனால் காய்ச்சல், பள்ளிக்கூடம் cut, மழை இப்பிடி ஒரு combination கிடைச்சா ராஐயோகம் தான். காலமை இஞ்சியைச் சுட்டு வைக்கிற சம்பல் , இடியப்பம் சொதியோட “வேண்டாம் வேண்டாம்” எண்ட அம்மா தீத்தினா. பத்து மணிக்கு மல்லித்தண்ணியோட தோசைக்கல்லில வாட்டின பாண்துண்டு, பிறகு தேசிக்காய்த் தண்ணி. மத்தியானத்துக்கு முட்டைப் பொரியலும் , விளைமீன் தீயலும், நாலு மணிக்கு இருக்கிற முழு மிச்சப் பாலும் எனக்கு மட்டும் தேத்தண்ணி் ஆகிச்சுது. அதோட கடிக்க பணிஸ், கிறீம் கிரக்கர் எண்டு ஏதாவது மாறி மாறி வந்திச்சுது . அடிக்கடி வந்து எல்லாரும் தொட்டுப் பாத்து காயுதா காயேல்லையா எண்டு கண்டு பிடிச்சு பனடோல் தந்திச்சினம். அதோட போத்தில் திருப்பித் தாறம் தம்பிக்கு காய்ச்சல் எண்டு சந்திக் கடையில அண்ணா வாங்கின orange barley ரெண்டு பேருக்கும் கிடைச்சுது. மரத்து முருங்கைக்காயோட வந்த பக்கத்து வீட்டு அன்ரி வேற ஏதும் வேணுமே எண்டு கேட்டிட்டுப் போனா. காய்ச்சல் வந்தா வீட்டை ராசா தான், எல்லாரும் விழுந்து விழுந்து கவனிப்பினம். அதோட எல்லாரையும் அதை எடுத்துத் தா இதைத் தா எண்டு வேலையும் வாங்கலாம். ஆனா ஒண்டு வீட்டை ஆருக்காவது வருத்தம் வந்தா எல்லாருக்கும் ஒரே சாப்பாடு தான். “ அவன் காய்ச்சல் காரன் பாத்துக்கொண்டிருக்க நீ சாப்பிடிறதே” எண்ட அறிக்கையோட எல்லாரும் அடங்கீடுவினம். மூண்டாம் நாள் இருமல் கூடி சளியா மாற தூதுவளையும் மல்லியும் போட்டுக் காச்சின கசாயம் பத்து மணிக்கு தந்திட்டு , இந்தா இந்த கற்பூரவள்ளியை சப்பு எண்டு ஆச்சி சொல்லீட்டுப் போனா. பேய் கலைக்கிற குறூப் வந்து சூடா இருந்த புட்டுப் பானைக்கை தேயிலைச்சக்கை, தேசிக்காயத் தோல் , eucalyptus இலையையும் எண்டு எல்லாத்தையும் போட்டு கலைச்ச ஆவியை முகத்தை துவாயால மூடி முழுசா மூக்கால இழுத்துப் பிடிச்சன். கடைசீல ஐஞ்சு நாளில காய்ச்சல் மாறிச்சுது. காய்ச்சல் மாறி ரெண்டாம் நாள் சுடுதண்ணி வைச்சுத் தோய வாத்து , மீனுக்குப் பதிலா இறைச்சி காய்ச்சித்தந்து கொஞ்சம் வீட்டுக்க விளையாட விட்டிச்சினம். மூண்டாம் நாள் பச்சைத் தண்ணீல குளிக்க விட்டுப் பாத்து ஒண்டும் இல்லை எண்ட பிறகு தான் பள்ளிக்கூடம் போக விட்டிச்சினம். அடுத்த ஒரு கிழமைக்கு நேரடிக் கண்காணிப்பில இருக்க வேணும் ரியூசனும் இல்லை விளையாட்டும் இல்லை. எப்ப இருமினாலும் தும்மினாலும் ஏதோ ஒரு கைமருந்து வீட்டை இருக்கும் . காய்ச்சல் மாறியும் இருமல் மாறாமல் இருக்க, இது சத்துக்குறைபாடு தான் எண்டு முடிவெடுத்து , ஒரு ஊட்டச்சத்துப் programme வீட்டை தொடங்கிச்சுது. “கோழி ஒரு மாதிரி கொக்கரிக்குது போய்ப்பார்” எண்டு ஆச்சி சொல்ல போய்ப் பாத்தன். உமிச் சட்டிக்கு மேல இருந்த கோழியை தூக்கி எறிஞ்சிட்டு முட்டையைத் தூக்க அது சூடா இருந்திச்சுது . கொண்டு வந்து கவனமா தவிட்டுச் சட்டிக்குள்ள வைச்சிட்டு போனன். இருமல் மாறாதால வந்த வினை இது , காலமை வெள்ளன வெறும் வயித்தில பச்சை முட்டை குடு இவனுக்கு எண்டு ஆரோ அம்மாக்கும் கோழிக்கும் சொன்னதால காலமை முட்டையோட தான் நாள் தொடங்கும். முட்டை நுனியை கரண்டியால தட்டி உடைச்சு எடுத்து எறிஞ்சிட்டு , மேல இருக்கிற வெடுக்கை முன் தென்னை மரத்தில புடுங்கின ஈக்கிலால எடுத்து எறிஞ்சிட்டு, ரெண்டு விரலால எடுத்துப் போட்ட மிளகையும் உப்பையும் ஈக்கிலால கலக்கீட்டு இப்பிடியே குடி எண்டு தந்தா அம்மம்மா. குடிக்க முதலே நான் ஓங்காளிக்க “அப்பிடியே தொண்டைக்குள்ள விடிறன் விழுங்கு” எண்டு சொல்லக் கண்ணை மூடிக்கொண்டு குடிச்சிட்டுப் போனன். பின்னேரத் தேத்தண்ணி போய் வேர்க்கொம்பு கோப்பி வந்திச்சுது. பத்தாத்துக்கு ஆட்டுப்பால் தான் நல்லம் எண்டு ஒரு ஊர்ப் பரியாரி சொல்ல அடுத்த நாளே ஆட்டுக்குட்டி வீட்டுப் பத்தீல நிண்டிச்சுது. “ஆசுபத்திரி வாசலும் பொலிஸ் ஸ்டேசன் வாசலும் ஒரு நாளும் ஏறக்கூடாது” எண்டு ஆச்சி சொல்லிறதால எப்பிடியாவது கை வைத்தியத்தால இருமலை மாத்திற முயற்சீல இலை, குழை, தழை எண்டு சாப்பிடத் தந்திச்சினம். எங்கடை சந்தீல இருந்த சிவராமலிங்கம் apothecary பாவம் ஒரு நாளும் எங்களால வருமானம் இல்லை. அவரே ரெண்டு பாணி மருந்தும் பனடோலும் தான் வைச்சிருந்தவர், இருந்தாலும் அதைக் கூட வாங்க போறாக்கள் கொஞ்சப்பேர் தான் , மற்றவை எல்லாம் வீட்டு வைத்தியம் தான். காய்ச்சல் மாறி , குளிச்சு, தோஞ்சு, இறைச்சி சாப்பிட்டு கடைசீல, “ please excuse my absence as I was suffering from fever” எண்ட கடிதத்தோட பள்ளிக்கூடம் போக வாற கிழமை term test எண்டு சொல்ல இப்ப exam காய்ச்சல் தொடங்கிச்சுது. இவ்வளவு நாளும் இருந்து கொண்டு வேலை வாங்கின என்னை மேசையில இருத்தி வைச்சு வாங்கிச்சினம் எல்லாரும். திடீரெண்டு calling bell அடிக்கிற சத்தம் கேட்டு அட பள்ளிக்கூடம் போக alarm அடிக்குது எண்டு எழும்பிப் போய் பாத்தா Uber காரன் நிண்டான். கனவு போய் காய்ச்சல் மட்டும் நிண்டிச்சுது. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம் .
-
“ பாலுமகேந்திரா “ View finder ( வியூ ஃபைண்டர்) க்கால பாத்துக்கொண்டு சரியான அளவுக்கு ஃபிரேமை fix பண்ணீட்டு , கமராவின்டை முன்பக்கம் இருக்கிற பெரிய வட்டத்தை adjust பண்ணி புள்ளிகள் ஒண்டாகி முகம் கூர்மையாகி வந்திச்சுது. முன்னால இருக்கிற fine focus ஐ உருட்டி சப்பை மூக்கின்டை நுனி தெளிவாத் தெரிஞ்சுது. Konica film roll ISO 200 load பண்ணின Yashica கமராவின்டை அப்ஃபேச்சரை குறைச்சு focal depth ஐ மாத்த பின்னால மரம் மறைஞ்சு முகம் மட்டும் தெரிய எடுத்த portrait ஐ பிரேம் போட்டுக் கொண்டந்து முன் கண்ணாடியைத் துறந்து மாட்டி வைச்சான் தானும் ஒரு பாலுமகேந்திரா எண்ட நினைப்பில, இதைப்பாத்திட்டு படம் எடுக்க ஆக்கள் கூட வருவினம் எண்டு நம்பிக்கையில். எண்பதுகளில போட்டோக்கடைக்கு போட்டி இல்லாட்டியும் வருமானம் அளவாத் தான் வாறது . எங்கேயும் கலியாண வீடு , விசேசங்கள் எண்டால் மட்டும் நல்ல வருமானம் வரும். கடை வாசலில ஒரு கலியாண வீட்டுப் படம் , அதே போல Coat போட்ட ரெண்டு பேரின்டை படம் எண்டு கண்ணாடிக்குள்ளால frame ஓட கறுப்பு வெள்ளைப் படம் தொங்கும். முகத்தில போட்ட பவுடர் திட்டுக் கூட தெரியிற அளவு உண்மையான உருவத்தைச் சொல்லிறது கறுப்பு வெள்ளைப் படம் தான். முந்தி வசதிக்கு ஏத்த மாதிரி மூண்டு நாலு வருசத்துக்கு ஒருக்கா குடும்பமாப் போய் படம் எடுத்து வைக்கிறது . உயரமான மரயானைக் குட்டீல சாய்ஞ்சு நிண்டபடி ஒவ்வொரு பிள்ளையையும் விட்டு , பிறகு பக்கத்தில ஒரு பெரிய flower vase இருக்க பிள்ளைகளை அணைச்சபடி அம்மாவும் அப்பாவும் ஒரு குடும்ப photo, ஒரு கையில ஒரு handbag ஓட கட்டின சாறீன்டை head piece மற்றக் கையில சரிஞ்சு தொங்க சரோஜாதேவி மாதிரி pose குடுத்தபடி புரோக்கருக்கு குடுக்கிறதுக்கு சித்திக்கும் மாமிக்கும் ஒரு photo , செத்தா கல்வெட்டில போடிறதுக்கு கிழவீன்டை தனிப்படம் எல்லாம் எடுத்திட்டு வந்த எல்லாரும் அப்பிடியே town இல மிச்ச அலுவலை முடிச்சிட்டுப் போவினம் . தனிப்படம் எடுத்த ஆள் தவறிப்போனால் அந்திரட்டி வரேக்க படத்தை தேடிப் பிடிச்சு enlarge பண்ணி பிரேம் போட்டு போன ஒழுங்கில தொங்கவிடிறது வீட்டு hallஇல. படத்துக்கு frame போடிறதுக்கு மானிப்பாய் ரோட்டில glass house ம் , சத்திரத்துச் சந்தீல பட்டாபி பட மாடமும் தான் இருந்தது . பிறேம் போடத படங்களை show case இல இருக்கிற photo frame இல சொருகி வைக்கிறது. எப்பவாவது தூசுதட்டேக்க அலுமாரிக்கு அடியிலிருந்து ஒரு அல்பம் கிடைக்கும். பழைய அல்பம் தடிச்ச மட்டையோட மூலையிலை பித்தளைக் கிளிப் போட்டபடி வெளிக்கவர் இருக்கும். உள்ள பாத்தா கறுப்பு நிறப் பேப்பர். அந்தப் பேப்பரில மட்டையின்டை நடுவில படம் செருக எண்டு வசதியா இருக்கிற முக்கோண மூலைக்களுக்க படத்தை சொருகி வைச்சிருப்பினம். அதோட ரெண்டு பேப்பருக்கிடையில ஒரு ரிசுப்பேப்பர் இருக்கும். கறுப்பு வெள்ளை படம் எண்டாலும் ஒரு பழுப்பு வெள்ளையாத் தான் இருக்கும். இவர் ஆரெண்டு சொல்லு பாப்பம் எண்டு படத்தைக்காட்டி பிறக்கமுதல் செத்துப்போனவையை, இருத்தி வைச்சு அம்மா சொல்லித்தந்ததால முறைதலை எப்பவுமே தெரிஞ்சுது . ஊரில படம் எடுக்க சில கடைகள் தான் எண்பதில இருந்திச்சுது. வெலிங்டன் சந்தீல ஸ்ரான்லி ரோட் பக்கமா சித்திராலயா ஸ்டூடியோ , சந்தியால அப்பிடியே திரும்பிப் போனா ஞானம்ஸ் ஸ்டூடியோ, கம்பஸ் பக்கமா பேபி ஸ்டூடியோ தான் எனக்கு ஞாபகம். சோதினை எடுக்க postal identity card வேணுமாம் எண்டு போட்டு ஸ்டூடியோக்குப் போனன். என்ன சைஸ், எத்தினை கொப்பி எண்டு விபரம் கேட்டிட்டு உள்ள போங்கோ எண்ட , திருப்பியும் உள்ள “அண்ணை postal identity card” எண்டு சொல்ல உள்ள கூட்டிக்கொண்டு போய் இருட்டின அறையின்டை light ஐப் போட்டிச்சினம். ஒரு சின்ன அறைக்குள்ள முகம் பாக்கேலாத கண்ணாடீல சீப்பால தலையை இழுத்திட்டு வெள்ளையாத் தெரியும் எண்ட நம்பிக்கையில Cuticura powder ஐயும் போட்டிட்டு எல்லாருக்கும் பொருந்திற மாதிரி இருக்கிற ஒரே கோட்டை போட்டிட்டுப் போய் ஒரு stool இல இருக்க , தலையை உயத்துங்கோ,கொஞ்சம் மேலபாருங்கோ கொஞ்சம் கீழ, கொஞ்சம் அங்கால இங்கால எண்டு சைக்கிள் மாதிரி buckle எடுத்திட்டு, சரி “இங்க பாருங்கோ கண்ணை வெட்டாதீங்கோ” எண்டு தலையை காட்டாமல் குரலை மட்டும் காட்டினார் கமராக்காரர். கண்ணையே வெட்டாம கன நேரம் இருந்து கடைசியா அடிச்ச flashக்கு கண்கலங்கி இருட்டுக்கால தடவித்தடவி வெளீல வந்தா பிரின்ட் போட்டுத் தர ரெண்டு கிழமை செல்லும் எண்டு சொல்லிச்சினம். கலியாணவீட்டை கமராக்காரார் ஆதிக்கம் செய்யாத காலத்தில கலியாண வீட்டில கமராவோட திரிஞ்சா பெருமை எண்டு நினைக்கத்தொடங்கினது எண்பதின்டை தொடக்கத்தில இருந்திச்சுது. Double barrel மாதிரி load பண்ணிற Kodak இன்டை 110 எண்டு ஒரு கமரா வந்திச்சுது . Loading பிரச்சினை இல்லை , மேல இருக்கிற பட்டினை இழுத்து இழுத்து அடிக்கிறது . இருவத்தி நாலுக்கு படத்துக்கு கிட்ட எடுக்கலாம். ஆனாலும் மணவறையில படம் எடுக்கிறது ஒரு பெரிய கமராக்காரர் மட்டும் தான். அதுக்குப் பிறகு வெளிநாட்டுக்காரர் வரத்தோட SLR வரத் தொடங்க கனபேர் கமராவைத் தொழில் ஆக்கிச்சினம். தொண்ணூறுகளின் கலியாணம் எண்டால் கொழும்பால வரேக்க தாண்டிக்குளத்தால என்ன கொண்டராட்டியும் பிடிபடாம எப்பிடியாவது ரெண்டு பிலிம் ரோலும், flash க்கு நாலு பற்றிரியும் கொண்டு வந்திடுவினம். அங்கால இருந்து இங்கால கஸ்டப்பட்டு கொண்டு வர “அண்ணை எங்களுக்கு ரெண்டு பற்றிரியை குடுத்திட்டுப் போங்கோ” எண்டு பெருமாளின்டை பிச்சையை அனுமார் புடுங்க, இதையெல்லாம் தாண்டிக் கொண்டுவந்து கடைசீல கஸ்டப்பட்டு கமராக்காரனைப் பிடிச்சு படம் எடுத்திட்டுக் கழுவக் கொழும்புக்கு கொண்டு போகேலாமல் நிறைய கலியாணவீட்டுப் படங்கள் இன்னும் பிலிம் ரோல் ஆகவே இருக்குது. Friend ஒருத்தன் புதுக்கமராவும் பிலிம்ரோலுமா திரியிறானாம் படம் எடுக்க ஆள் வேணுமாம் எண்டு கேள்விப்பட்டு , கவுண்டமணி சொன்ன advise ன் படி “தெரியாத ஒண்டில தான் முன்னுக்கு வரலாம்” எண்டு போட்டு ஓடிப்போய் உதவிக்கரம் நீட்டினன். அக்காவின்டை campus going down party ஆம் எண்டு சொல்ல முதல் முதலா கம்பஸுக்க காலடி வைச்சன் கமராக்காரனா. கொஞ்சம் பயந்து போன எனக்கு கையில இருந்த கமராவைக்கண்டோன்ன எங்களையும் ரெண்டு படம் எடுங்கிறீங்களோ எண்டு கேட்டு வந்த ஆக்கள் சாப்பாடும் ஜூசும் தந்திச்சினம் , எல்லாம் கமரா தந்த demand. பள்ளிக்கூடத்தில படிக்கேக்க ஏனோ தெரியேல்லை வகுப்பில எல்லாருமாச் சேந்து படம் எடுக்கிறேல்லை . ஏதாவது பள்ளிக்கூட விசேசம் எண்டால் prize வாங்கிறவன், drama நடிச்சவன் மட்டும் படம் எடுக்க tie கட்டிக்கொண்டு வந்து கைதட்டினவனிட்டை படம் ஒண்டும் இருக்காது . இல்லாட்டி ஏதாவது விளையாடி இருந்தால் team photo இருக்கும் . கம்பஸில அப்பிடி இல்லை வருசத்தில மூண்டு நாலு party இருக்கும். batch photo வில இருந்து சின்னச்சின்ன குறூப் போட்டோ எண்டு எல்லாரும் படம் எடுக்கலாம். எல்லா பெற்றோருக்கும் ஒரே கனவு , கையில சுருளைப் பிடிச்சபடி அலுமாரீல புத்தகம் அடுக்கின பிறேமுக்கு முன்னால ஒரு படம் பட்டமளிப்பு விழா முடிய எடுத்து வீட்டில தொங்கவிட்டிட்டு வாற போற எல்லாருக்கும் காட்டிறது. யாழ்ப்பாணத்தில அப்ப பிலிம் ரோலும் பற்றிரியும் பவுண் விலை வித்திச்சுது. அதுகும் Aldi யில தான் வாங்கலாம். இந்த விலைக்கு எல்லாம் வாங்கி படம் எடுத்திட்டு கொழும்புக்கு கழுவக் குடுத்தால் பாதிப்படம் வராமலே போயிடும், மிச்சப் படம் வர பாதி வருசம் போயிடும். எல்லாக் கமராக்காரரும் அப்ப producers தான். கம்பஸில ஏதும் விசேசம் எண்டால் கடன் வாங்கி கமராவுக்கு பிலிம்ரோல் போட்டு படம் எடுத்திட்டு , எனக்கு ஒரு கொப்பி இவனக்கொரு கொப்பி எண்டவனை நம்பி extra copyக்கும் ஓடர் குடுத்து காசையும் கட்டி கொழும்புக்கு அனுப்பீட்டு படம் வர எனக்கு வேணாம், இதில நான் வடிவாயில்லை் எண்டு சொல்லிற சிலராலேம், படம் வரேக்க கம்பஸ் முடிஞ்சு காணாமல் போற பலராலேம் முதல் இழந்து, படம் flop ஆகி இனிப் படமாக எடுக்கிறேல்லை எண்டு தொழிலைக் கைவிட்டாக்களும் இருக்கினம். 4 R சைசில வாற குறூப் படத்தில இது நான் அது அவன் எண்டு கண்டு பிடிக்கிறதே பெரிய காரியம். என்ன தான் வீட்டில அல்பம் இருந்தாலும் எப்பவாவது ஒண்டாப் படிச்ச எவனாவது share பண்ணிற படத்தில நான் இருக்கிறனா நான் பாத்ததுகள் இருக்கா எண்டு பாத்து படீற சந்தோசமும், CD வாங்கிக் கேக்கிற பாட்டிலும் பாக்க ரோட்டில போகேக்க எங்கயோ ஒரு மூலையில போடிற பழைய பாட்டுக் கேக்கேக்க வாற சந்தோசமும் எப்பவுமே தனிரகம். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
இலக்கை நோக்கி பெலரூஸ் December 2022 மைக்கின்டை சுருட்டை பாதி வாங்கிப் பத்தின அன்ரனோவ் கண்ணை telescope இல இருந்து எடுக்காம சுத்திப் பாத்துக்கொண்டிருந்தான். அதை வாயில் வைக்க முதல் காட்டுப்பக்கம் வந்த சலசலப்பு என்ன எண்டு பாக்க பெரிய focus light ஐத் திருப்ப , “உது கரடி தான்” எண்டு மைக் சொல்ல , “இல்லை இந்த நேரம் கரடி திரியாது , அதோட இது மரத்தின்டையோ , கிளையின்டயோ சலசலப்பு இல்லை நிலத்தோட வாறது” எண்டு சொல்லித் திருப்பியிம் பாத்திட்டு ஒண்டையும் காணேல்லை எண்டு போட்டு கடைசியா ரெண்டு தரம் நல்லா உள்ள இழுத்து நெஞ்சு முட்ட நிறைச்சு வைச்சு மூச்சைக் கொஞ்சம் கொஞ்சமா வெளீல மூக்கால விட்டிட்டு, கடைசிக் காத்தோட காறி எச்சிலைத் துப்பீட்டு ஒரு chewing gum ஐ வாயில போட்டான். Al jazeera news ஆரோ ஒருத்தர் “அமெரிக்காவின் நாடகம் இந்த Ukraine war” எண்டு போட்டதை பாக்காம அடுத்த நியூஸைப் பாத்துச் சிரிக்கத் தொடங்கினான் ; இந்தமுறை இங்கிலாந்தில் வெள்ளை கிறிஸ்மஸ் வர வாயப்பு எண்ட நியூசைப் பாத்து, இனியும் அடக்கேலாது இல்லாட்டி வெடிச்சிடும் எண்டதால அன்ரனோவ் கண்காணிப்புக் கோபுரத்தில இருந்து இறங்கி வந்து குதிச்சால் மூண்டடிக்கு பனி மூடி இருந்திச்சுது. பக்கத்தில இருந்த mobile கக்கூசுக்க போய் கடமையை முடிச்சிட்டு திருப்பியும் ஏறத் தொடங்கினான். இப்பிடி எல்லையில நிக்கிறதுக்கு பேசாம நேர சண்டைக்குப் போய் செத்தாலும் பரவாயில்லை எண்டு யோசிச்சுக் கொண்டே ஏற எங்கயோ ஒரு ஓநாய் ஊளையிட்டது. Drone attack எண்டு ஒரு பக்கம் வளந்தாலும் இந்த எல்லைப் பாதுகாப்புக்கு ரெண்டாம் உலக யுத்தம் மாதிரி முள்ளுக்கம்பி வேலி, காவல் கோபுரம் , focus light தான் . ஆனால் நல்ல night vision goggles, M 82 sniper, focusing lunar lights இருந்தும் ஒவ்வொரு தரமும் மூத்திரத்துக்கு ஏறி இறங்க வேண்டி இருக்கு இந்தக் குளிருக்க எண்டு புறுபுறுத்த படி திருப்பியும் focus light ஐ auto rotation இல விட்டிட்டு அடுத்த சுருட்டைத் தேடினான். முல்லைத்தீவு ஜூன் 2022 “இந்த முடிவு தற்கொலை மாதிரி, யோசிச்சு செய்யுங்கோ” எண்டு ஆரோ சொன்னதையும் தாண்டி எதிர்காலம் மனிசி பிள்ளையெல்லாம் கண்ணைவிட்டுப் போகாம இருக்கேக்க எடுத்த முடிவு தான் இது . “எப்பிடியாவது செய்யோணும் எவ்வளவு காலம் தான் இப்பிடி இருக்கிறது எங்களுக்கு ஒரு விடிவு காலம் வர வேண்டும் எண்டால் இந்த முடிவை நான் எடுக்கவேண்டும்” எண்டு தீர்மானிச்சுத் தான் போக சம்மதிச்சனான் என்றான் கரன். “ அண்ணை பிளான் எல்லாம் ரெடி,சொன்னபடி செய்யுங்கோ ஒண்டுக்கும் பயப்பிட வேண்டாம் , மற்ற ஆக்களை கொழும்பில் சந்திக்கலாம்” எண்டான் வந்தவன். பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆர் மற்ற ஆக்கள் எண்டு சொல்லேல்லை. “கொழும்பில உங்களை ஒரு வீட்டில தங்க வைப்பம் என்டை வேலை இது மட்டும் தான் அங்க வேற ஒராள் சந்திப்பார்” எண்டு சொல்லீட்டு தேவையான பேப்பரை எல்லாம் குடுத்திட்டுப் போனார். பெலரூஸ் December 2022 ஒரு ஓநாய் எண்டு பாத்தால் ரெண்டு மூண்டு சத்தம் போட , “ இண்டைக்கு இதுகளுக்கு குளுமாடு ஒண்டு மாட்டீட்டுப் போல” எண்டு மைக் சொன்னதை கவனிக்காம சினைப்பரை load பண்ணி light ஐ ஒரே பக்கமாத் திருப்பி நிப்பாட்டி ஏதோ நடக்கப் போகுது எண்டு உள்ளுணர்வு சொன்னதுக்கு மதிப்புக் குடுத்து உத்துப் பாத்தபடி நிண்டான் அன்ரனோவ் . அண்மைக்காலமாக ஊடுருவல் இந்தப் பக்கமாத்தான் நடக்குது எண்ட தகவல் பெலரூஸ் முப்படையின் மேலிடத்துக்கு வர , இதுக்கு best sniper ஆள் தேவை எண்டு தான் அன்ரனோவ் இங்கு இடம் மாறி அனுப்பப்பட்டவன். விடிய நாலு மணி ,நாயும் பேயும் கூட நித்திரையா இருக்கேக்க , telescope இல இருந்து எடுக்காத கண்ணை கூர்மையாக்கினான் அன்ரனோவ். ஊர்ந்து வாற ஒரு உருவத்தைப் பாத்து . உடனே மைக்கை எழுப்ப அவன் அரைத் தூக்கத்தில சுட வெளிக்கிட வேண்டாம் எண்ட அன்ரனோவ், எவனையாவது பலிக்கடாவா முன்னுக்கு அனுப்பி சூடு விழுந்தா direction ஐ மாத்தி மற்றவங்கள் தப்பீடுவாங்கள் எண்ட படியால் சுடாமல் கிட்ட வரவிட்டு இறங்கிப் போய் பிடிப்பம் எண்டு முடிவு பண்ணீட்டு இறங்கி மூண்டடி பனிக்குள்ளால இழுத்து இழுத்து நடந்து போனான். அசைஞ்ச உருவம் அப்பிடியே நிக்க லோட்பண்ணின பிஸ்டலோட கிட்டப் போய் பாத்தவன் shock ஆகினான். முல்லைத்தீவு November 2022 இரகசியாமாப் போங்கோ எண்டு சொன்ன படியால் இரவு மனிசி பிள்ளைகளோட ஒண்டாப் படுத்திட்டு , விடியப் பிள்ளைகள் எழும்ப முதல் அழத் தொடங்கின மனிசீன்டை முகத்தைப் பாக்காமல் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் எண்டு இறுக்கிச் சொல்லீட்டு ரெண்டு உடுப்போட ஒரு பையைக் கொண்டு போனான். கொழும்பு பஸ்ஸில ஏறி ஜா-எல வில இறங்கி வீடு தேடிப் போனா ஏற்கனவே மிச்ச ஆறு பேரும் வந்திருந்திச்சினம் . அறிமுகத்தோட கொஞ்சமாக் கதைச்சிட்டு எப்ப வெளிக்கிடிறது எண்டு பாத்துக்கொண்டிருந்தம். ரெண்டு நாளா நேரத்துக்கு நேரம் சாப்பாடு வந்திச்சுது வெளீல ஒருத்தரும் போகேல்லை. என்ன செய்யப் போறம் எண்டு தெரிஞ்சாலும் எப்பிடி எண்ட பிளான் தெளிவா இல்லை . இருந்த ஆறில ரெண்டு வாடல் 18 வயது தான் இருக்கும் எண்டாலும் எங்களோடு சேர்ந்திருந்திச்சுது. இண்டைக்கு இரவு எண்டு சொன்னவன்டை கதையை நம்பி மூண்டு இரவு இருந்து பாத்தம் . வந்த வாடல் ஒண்டு “எனக்குப் பயமா இருக்கு நான் அம்மாட்டைப் போப்போறன்” எண்டு ஓடீட்டுது . வெளீல ஆக்கள் இருக்கிற மாதிரி காட்ட வேண்டாம் எண்டு சொன்னதால சமைச்சுக்கூட சாப்பிடிறேல்லை. ரெண்டு கிழமையால வந்தவன் தேவையான உடுப்பு , போற map , location காட்ட GPS phone எல்லாம் கொண்டு வந்து தர இரவுப் பயணம் உறுதியானது. இனி சாப்பாடு எப்பிடியோ தெரியாது எண்டு போட்டு கொத்து வாங்கிச்சாப்பிட்டிட்டு வெளிக்கிட்டம். நீங்கள் எல்லாரும் ஒண்டாப் போகாதேங்கோ ரெண்டு குறூப்பாய் போய் அங்கால திருப்பி ஒண்டாச் சேந்து போங்கோ எண்டு சொல்ல, சூசையப்பரையும் வைரவரையும் துணைக்கு கூப்பிட்டிட்டு வெளிக்கிட்டம். Belarus 2022 மைக் தலைமையகத்துக்கு பிரச்சினையை அறிவிக்க அந்த இடம் திடீரெண்டு busy ஆகிச்சுது. ராணுவம் மட்டும் வந்து சேந்து நிலமையைப் பாத்து அம்புலன்ஸ் ஒண்டைக் கூப்பிட்டது. தன்னைக் கண்டு பிடிச்ச அன்ரனோவை கண்டதும் கண்மட்டும் ஒளிக்க தன்டை உடம்பில உயிர் மட்டும் எப்பிடி ஒட்டி இருக்குது எண்டு விளங்காமல் அவன் மயக்கமானான். . “அம்மா , ஈழம் , தமிழ்” எண்டு அவன் கதைக்கிற பாசை விளங்காமல் அன்ரனோவ் முழிச்சான். அப்பிடியே மயக்காமனவனை அம்புலன்ஸ் கொண்டு போக , தான் சுடாமல் விட்டது நல்லதே எண்ட நெச்ச அன்ரனோவ் வேலை முடிஞ்சு வெளிக்கிட்டான் பிறகொருக்கா அவனைப் போய் ஆஸ்பத்திரீல பாக்கோணும் எண்ட நினைப்போட. யாழப்பாணம் May 2023 வழமை போல இந்த மாதமும் சுண்டுக்குளி ஜெய்ப்பூர் நிறுவனத்தில செயற்கை கை கால் தேவைப்படிற நோயாளிகளைப் பாக்கப் போன எனக்கு , “சேர் ஒரு special patient, இவருக்கு என்னவும் செய்ய ஏலாதா” எண்ட ஏக்கத்தோட வேலை செய்யிறாக்கள் கொண்டந்து காட்டிச்சினம். வந்து பாத்தா , “ பெலாரூஸ் , அன்ரனோவ் , பிரான்ஸ், வேலை” எண்டு அடிக்கடி சொன்னபடி படுத்திருந்தான் கரன். ஊரெல்லாம் கடன் வாங்கி, இருந்த ஒரே பட்டறையையும் ஈடு வைச்சுப் பிரான்சுக்கு போகிற ஆசையில வெளிக்கிட்டு இப்ப ரெண்டு கையும் இல்லாமல் காலும் இல்லாமல் திரும்பின கரனின் கதையைக் கேட்டு ஏற்பட்ட பரிதாபம் அவன் மேலயா இல்லை அவனை மாதிரி இன்னும் போக இருக்கிற ஆக்கள் மேலயா எண்டு தெரியேல்லை. “பெலரூஸ் நகரில் பனியில் உறைந்து ஐந்து தமிழர் மரணம் , ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் ” எண்ட செய்தி போட்டிருந்த பேப்பரை ஒருத்தரும் பாத்ததாத் தெரியேல்லை. ஏனெண்டால் அடுத்த கிழமை பிரான்ஸ் போக அடகு வைக்க நகையைச் சுத்திக் கொண்டு போன இன்னொரு கரனின் கையில் இந்தச் செய்தியுடன் இருந்த அந்தப் பேப்பர் அடகு கடை குப்பைக்குள் எறியப்பட்டிருந்தது. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
அலாரம். “ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு சொன்னியெல்லோ , கொண்ணன் பிந்தித்தான் படுத்தவன் நீ எழும்பு” எண்டு திருப்பித் திருப்பி சொல்லவும் அந்தச் சண்டையில பெரியவன் எழும்பினான். அரைநித்திரையில கட்டில்ல இருந்து எழும்பின சின்னவன் பெட்சீட்டால போத்த படி வந்து மேசையில திருப்பியும் படுத்தான் . பத்து நிமிசத்துக்கு ஒருக்கா “சின்னவா பெரியவா” எண்டு மாறி மாறிக் கூப்பிட்டு கடைசீல என்ன சத்தமில்லை எண்டு வந்து பாத்திட்டு “பார் ஐஞ்சு மணி பெருமாள் கோயில் மணி கேக்குது” எண்டு மனிசி நித்திரை கொண்டவனுக்கு மேல செம்பில இருந்து தண்ணியைத் தெளிச்சு எழுப்பி படிக்க விட்டுது. வீட்டை செல் விழுந்ததால நிண்டு போன வைண்ட் பண்ணினா ஓடிற மணிக்கூடு , பற்றிரி ஊரில இல்லாத படியால் ஓடாத மற்ற மணிக்கூடு , அடுத்த மாதம் வாங்கித்தருவினம் எண்டு இப்போதைக்கு கனவில மட்டும் கட்டிற கசியோ கைமணிக்கூடு எண்ட நிலைமையில் வீடு இருந்தாலும் , பாக்காத மணிக்கூட்டுப்படி நேரம் பிசகாம வேலை செய்வா சாந்தக்கா. பத்துச் சகோதரத்துக்கு ஒரே பொம்பிளைப்பிள்ளை; ஊரில ராசாவ இருந்தவரோட கலியாணம் , கண்ணை மூடித்திறக்க ஒரு பொம்பிளைப்பிள்ளை எண்டு சடுசடு எண்டு சந்தோசம் மட்டுமான வாழ்க்கை உயர்ந்து கொண்டு போக ஒற்றைச் சரிவு ஒரே நாளில ஆளைக் கவித்திச்சுது. மத்தியானச் சாப்பாட்டுக்கு வாறன் எண்டு போன மனிசனைக் காணேல்லை எண்டு தேட , அப்பா வந்தா வெளியில விளையாடலாம் எண்டு பிள்ளை வாசல் பாக்க கறுத்தக்காரில சுத்தித்தான் கொண்டந்தாங்கள். எப்பிடி அழுறது எண்டு கூடத் தெரியாத சாந்தக்கா இப்பவும் அவரைப் பாத்த படியே நிண்டா. மூக்குத்தியை கழற்றி மூத்த தம்பீட்டை குடுத்து “ அடகு வேண்டாம் இப்போதைக்கு மீட்க ஏலாது வித்துக் கொண்டா“ எண்டு சொன்னவ பிள்ளையைக் கொண்டே தன்டை தாய் தேப்பனிட்டைக் குடுத்திட்டு வேலை எல்லாம் சரியா நடக்குதா எண்டு பாத்தபடி வேப்பமிலையால அவரின்டை முகத்தை விசிறிக் கொண்டிருந்தா. கிரியை நடக்க கழுத்துத் தாலியைக் கழற்றி நெஞ்சில வைச்சிட்டு அதை திருப்பி எடுத்துப் பிள்ளைக்கெண்டு கவனமா வைச்சிட்டு மிச்சக் கடமைகளை முடிச்சா. ஒரு மாதம் ஊரே வந்து வந்து செத்தவரைப் பற்றிக் கதைக்க இவ மட்டும் வாழப் போறதை எப்பிடி வழி சமைக்கிறது எண்டு யோசிக்கத் தொடங்கினா. செத்து அந்திரட்டிக்குப் பிறகும் வீட்டுக்கு தூரமாகேல்லை எண்டு பாத்திட்டு அப்ப அவர் தான் வரப்போறார் எண்டு சிலர் நம்ப, “ என்டை நிலமையில ஒண்டையே கரை சேக்கிறது எப்பிடி எண்டு தெரியேல்லை இதோட என்ன செய்யிறது எல்லாத்திக்கும் காட்டுத்துறையானே நீ தான் விட்ட வழி“ எண்டு கைவிட்ட கடவுளை இன்னும் இறுக்கமா நம்பினா சாந்தக்கா. செத்தாள் தான் திரும்பி வந்திருக்கு எண்டு சனம் நம்பினது உண்மை எண்ட மாதிரி இந்தப் பூவும் அவசரமாய் உதிர்ந்திச்சுது உதரத்துக்குள்ளயே. பேரனை எழுப்பி விட்டிட்டு ,அடுப்புச் சாம்பலை வழிச்சு தும்பையும் தூக்கிக் கொண்டு வந்த கிணத்தடீல வைச்சு இயத்தை மினுக்கீட்டு அடுப்பை மூட்ட பிள்ளையார் மணி கேட்டுச்சுது. குளிச்சுப்போட்டு கிணத்தடீல கிழக்கை பாத்துச் சூரியனைக் கும்பிட்டவ மேற்கை திரும்பி “ காட்டுத்துறையானே இதுகளுக்கு ஒரு வழிகாட்டும் “ எண்டு வேண்டுகோளை விடவும் , பக்கத்து ஒழுங்கேக்க அடிச்ச மணிச்சத்தம் பால்காரன்டை எண்டதை தெரிஞ்சு பால்ச்செம்பைக் கொண்டு gate அடிக்குப் போனா. “இந்தா தேத்தண்ணி உனக்கெல்லே வகுப்பு எண்டு சொன்னனீ , நேரம் சரி வெளிக்கிடு” எண்டு பெரியவனை ஆறு மணி வகுப்புக்கு அவசரப்படுத்தீட்டு கூட்டின விளக்குமாத்தை முத்தத்தைக் கூட்டி முடியாமலே பின்வளவுக்குப் போனா அவன் வெளீல போப்போறான் எண்டு. பிள்ளைகளோட மல்லுக்கட்டி மிச்ச ரெண்டையும் எழுப்பி பிரட்டின புட்டுக்கு ஒரு வாழைப்பழத்தையும் , மூண்டவதுக்கு மறக்காம சீனியையும் வைச்சி கட்டிக்குடுத்து பள்ளிக்கூடம் அனுப்பீட்டு மகள் வர “ அவன் எல்லே சைக்கிள் கேட்டவன் “ எண்டு மூண்டாவதுக்கு வக்காளத்து வாங்கீட்டு , “ அம்மம்மா என்டை ஒரு எழுத்துக் கொப்பியை காணேல்லை “ எண்ட இளையவனின்டை கொப்பியைக் கண்டுபிடிச்சு மேசையை அடுக்கவும் நல்லூரான் பத்து மணி எண்டார் . காணாமல் போட்டுது எண்டால் மனிசி குண்டூசியைக்கூட கண்டு பிடிச்சுக் குடுக்கும் . வெய்யில் உரக்கத் தொடங்கி முன் மாமர நிழல் சுருங்கி முத்தத்தில விழ , பத்தரை ஆகுது எண்டபடி அப்பிடியே வெளிக்கிட்டு பழைய மாட்டுத் தாள் bag ஓட ஒழுங்கை முடக்குக்கு வந்த சாந்தக்கா. பாசையூரில வாங்கி பெட்டீல கட்டிக்கொண்டு போனவனை மடக்கிப் பிடிச்சு குளம்புக்கு சீலா , பொரிக்கத் திரளி , கொஞ்சம் றால் பொரிக்க எண்டு வாங்கி , றால் மூஞ்சையில சொதி, முருங்கையிலை வறை எண்டு சமையலை முடிச்சிட்டு போய்ப் படுத்தா. மேற்குப் பக்க ஜன்னலால தலையில வெய்யில் பட “சரி ரெண்டு மணி அவங்கள் வரப்போறாங்கள் சின்னவன் காலமை குளிக்கேல்லை “ எண்டு ஞாபகம் வர ஓடிப்போய் கிணத்தடி வாளீல தண்ணியை நிரப்பி வைச்சிட்டு lifebouy சோப்பையும் எடுத்து வைச்சா. திரும்பு , குனி கையைத்தூக்கு , காலைத்தூக்கு எண்டு ஓடர் போட்டு , தேச்சுக் குளிக்க வாத்து , காலமை அரைகுறையா paste ஆல மினுக்கின பல்லை திருப்பி அமத்தி கொஞ்சம் கரி போட்டு மினுக்கி , கொடீல இருந்த துவாயால துடைச்சுவிட்டிட்டு காதுக்க “ உனக்கு றால் பொரிச்சனான்” எண்டு சொன்னதுதான் சின்னவன் சோட்ஸ் போடாமலே சாப்பிடப் போனான் . வீட்டில எல்லாரும் சாப்பிட்டு முடிய , மிச்சத்தை இரவுக்கும் மிச்சம் வைச்சுட்டு தானும் சாப்பிட்டிட்டு வெத்திலைவாயோட விறாந்தையில சீலைத்தலைப்பை விரிச்சிட்டு கண்ணயர்ந்தவ “ பழைய போத்தில் , பேப்பர் அலுமினியம் இருக்கா “ எண்டு சத்தம் கேக்க எழும்பிப் போய் பின்னால பத்திக்குள்ள கட்டி வைச்ச மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு பிளாஸ்டிக் வாளியோட வந்தா. சாந்தக்கா கைநீட்டிக் கடன் வாங்காமல் கட்டுப்பாடா வாழ்ந்து , வளந்து , வளர்த்து கலியாணமும் கட்டிக் கொடுத்தது எப்பிடி எண்டது ஒருத்தருக்கும் விளங்காத புதிர். Income கூடாமல் expenses கூடேக்கையும் ஒரு நாளும் accounts சமப்படாமல் போகேல்லை. இப்ப பேரப்பிள்ளைகளுக்காக மட்டும் செலவு செய்தாலும் ஒரு சதமும் வீணாப்போகமல் செலவு செய்வா. இந்தா கிடாரத்தை தூக்கித்தா , அவிச்சு புழுங்கலைக் கொண்டு போய் காயப் போடு, ரெண்டு உலக்கை போட்டுட்டுப் போ, கப்பி மட்டும் இடிச்சுத்தா எண்டு எப்பிடியும் ஆக்களிட்டை வேலை வாங்கீடுவா . அதே நேரம் நான் போகோணும் வகுப்பெண்டால் “ நீ போ , நான் பாக்கிறன்“ எண்டு தானே குத்தி , பிடைச்சு , ஊறப்போட்டு, மாவாக்கி , இரவு புட்டாக்கித் தருவா . மரக்காலை விறகு , மரத்தூள் அடுப்பு , மண்ணெண்ணை விளக்கு , பல்லு மினுக்க கரி, பின் வளவு முருங்கை, சீனி இல்லாட்டி பனங்கட்டி , இருக்கேக்க மட்டும் பால் தேத்தண்ணி , எல்லாக் கோயில் விரதம் ( வாழ்வாதாரத்தோட வழிபாடும்), வெள்ளை ரவிக்கை , விதம் விதமான மடிப்போட ரெண்டு சீலை, கால் பிரண்டா கரியும் சோறும் , காலால உழுக்கும் , கன நாள் நோவுக்கு வாதநாராயணி ஒத்தடம், எவரும் தேவை இல்லை எண்ட திமிர் , என்னால முடியும் எண்ட ஓர்மம் , கேட்ட விலைக்கு தராட்டி இருக்கிற காசுக்கு மட்டும் எண்ட வியாபாரம், சொன்ன சொல்லுக்கு தலையையும் அடகு வைச்சு காப்பாத்திற திறமை , பச்சாபதாபம் வேண்டாம் பரிவு மட்டும் காணும் எண்ட பிடிவாதம் இது தான் சாந்தக்கா. சாந்தக்கா; காலமை பேப்பர் பின்னேரம் கதைப்புத்தகம் , கேட்டதும் வாசிச்சதும் பேரப் பிள்ளைகளுக்கு குடுக்கிற சொத்து . மகாபாரதம் , கம்ப ராமாயணம் , அறுபத்து மூண்டு நாயன்மார் எண்டு கதைவழி கல்வி cards விளையாடேக்க குடுப்பா . Cards எண்டால் காணும் 304 இல தொடங்கி donkey வரை எல்லாம் தெரியும் , எப்பனும் அளாப்ப ஏலாது, கள்ள விளையாட்டை கண்டு பிடிச்சிடும் , கம்மாரிசு பிந்தினா cards பறக்கும் . அக்கம் பக்கம் அலம்பப் போகாட்டியும் அப்பப்ப அளவா advise பண்ணுவா. “ தம்பி மூத்தவள் இன்னும் சின்னப்பிள்ளையில்லை நீர் பாத்து சொந்தத்தில செய்து வையும் , உமக்கும் மூண்டு குமர் “ எண்டு சொல்ல சண்முகம் உடனயே மகளுக்கு முற்றாக்கினார். “ தம்பி உவன் தயாவின்டை சேர்க்கை பிழை”எண்டதை கவனிக்காத நாதன் ஒரு மாதத்தில அவனைக் காணேல்லை இயக்கத்துக்குப் போட்டான் எண்டு ஒப்பாரி வைக்க , போனதை விடும் மிச்சத்தை கவனமாப் பாரும் கிருபா கவனம் எண்ட சொன்னது தான் அடுத்த நாளே கிருபா கொழும்புக்கு வேலைக்கு அனுப்பப்பட்டான். Mail train யாழ்ப்பாணம் போகேக்க வாற horn சத்தத்தை கேட்டி ஆறரை ஆக்கள் போகுது இன்னும் என்ன விளையாட்டே எண்டு பேரனை படிக்க இருத்தீட்டு வந்து ரேடியோவில ஆகாசவாணி தொடங்க தோசைக்கல் இல்லாட்டி புட்டுக் குழல் அடுப்பில வைப்பா. எட்டு மணிக்குள்ள எல்லாருக்கும் சாப்பாட்டைக் குடுத்திட்டு பத்து மணிக்கு பயமில்லாமால் கேட் பூட்டி படுத்திடுவா சாந்தக்கா . எப்பவுமே மணிக்கூடு கட்டவும் இல்லை அதைப் பாக்கிறதும் இல்லை ஆனாலும் நல்லூர் முருகனே இவவைப் பாத்துத் தான் மணிக்கூடு நேரம் adjust பண்ணிறவர் . எல்லா வீட்டிலேம் இப்பிடி ஒரு சாந்தக்கா இருப்பா , எங்களுக்கும் இருந்தவ. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு O /L எண்ட கண்டம் முடிஞ்சிது எண்ட முதல் அடுத்த கண்டம் தொடங்கீட்டுது. என்ன படிக்கிறதெண்டு தெரியாம A/L க்குப் போய் , ஆர் நல்ல மாஸ்ரர் எண்டு தெரியாம எல்லா கொட்டிலுக்கும் போய் , கடைசீல பிரண்டுக்காக , பாக்கிற சரக்குக்காக எண்டு ரியூசன் மாறி மாறிப் போய் ஒருமாதிரி இந்தக் கண்டத்தையும் முடிச்சிட்டு இருக்க தன்மானம் இருக்கிறவன் தரணி காக்கப் போக அம்மாக்குப் பயந்த நான் இனி என்ன செய்யிறது எண்ட கேள்வி திருப்பியும் வந்திச்சுது. A/L எடுத்தாப் பிறகு வெளிநாட்டுக்கு இல்லாட்டி கொழும்புக்கு ஏதாவது course படிக்கப் பாஸ் எடுத்தோ எடுக்காமலோ தப்பிப் போக வசதி இல்லாத ஆக்களுக்கு கம்பஸ் போறது தான் ஒரே வழி, இல்லாட்டி கடன் வாங்கி கடலால எண்டாலும் கனடா போகோணும். பத்தாம் வகுப்பில “நான் இயக்கத்துக்குப் போயிடுவன்” எண்டு சொல்லி வெருட்டேக்க வெருண்ட அம்மா பன்னிரெண்டுல சுதாரிச்சு “ அங்க போனாத் தெரியும் தானே உடுப்புத் தோயக்கிறதில இருந்து உன்டை வேலை எல்லாம் நீ தான் பாக்கோணும்” எண்டு வீக் பொயின்டில கை வைக்க இனி இந்தப் பருப்பு வேகாது எண்டு தெரிஞ்சுது. தப்ப வேற வழியில்லை எண்ட நிலமை வர படிக்கிறதை கொஞ்சம் கடுமையாக்க வேண்டி இருந்தது. A/L bio படிக்கிற பிள்ளைகளை பெத்த அம்மாமார் எல்லாரும் மாதிரி என்டை அம்மாவும் இவன் டொக்டராகோணும் எண்டு கனவு காண, cut off எண்ட கண்டம் என்டை கழுத்தை சாடையா இறுக்கிற மாதிரி வந்து இல்லாமல் போக விசயம் பேப்பரில வர முதல் நாலு பேர் வீட்டை வந்து வாழ்த்துச் சொன்னாங்கள். வந்த நாலு பேரும் சும்மா வரேல்லை , இயக்கம் “வரட்டாம்” எண்டு கூப்பிடிறமாதிரி நாளைக்கு காலமை மருதம்மா baseக்கு வரட்டாம் எண்டு condition ஓட வந்தாங்கள். ஊரெல்லாம் “தம்பி medical faculty போறார்” எண்டு என்னோட சேந்து வீட்டுக்காரர் பீலா காட்ட, என்னோட கம்பஸ் வரப்போற ஒரு சித்தாண்டிப் பெடியனுக்கு இப்பவே சீதனம் குடுத்து புக் பண்ணிக் கொண்டிருந்திச்சினம். நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா சேட் , ரவுசர் , சப்பாத்து , புத்தகம் , பேனை, ஸரெதஸ்கோப் எண்டு எல்லாம் தேடி சேத்து வைக்கத் தொடங்கினம், கம்பஸ் போனாப்பிறகு தேவை எண்டு. அவனவனுக்கு இப்பவே கலியாணம் booking ஆகிக்கொண்ட இருக்க, at least சும்மா ஒண்டையாவது சுழற்றலாம் எண்டால் எதைப் பாக்கிறது எண்டும் தெரியேல்லை . எதைக் கேட்டாலும் அதை அவன் பாக்கிறான் இவன் பாக்கிறான் எண்டாங்கள். ஏற்கனவே எட்டாம் வகுப்பிலயே கலைக்கத்தொடங்கி , அதையே ஒரு வேலையாச் செய்து பத்தாம் வகுப்புக்குள்ள பாக்க நல்லா இருக்கிற பெட்டைகள் எல்லாம் book பண்ணீடுவாங்கள். இதையும் தாண்டி A/L க்கு வாறதுகளில நல்லா இருக்கிறதுகள் ஏன் கஸ்டப்படுவான் எப்பிடியும் ஒரு Doctor மாட்டுவான் எண்டு நம்பிக்கையோட arts , commerce எண்டு திரிய bio படிக்க வாறதுகள் கொஞ்சம் தான். இதுகள் எல்லாம் படிக்கிற காலத்தில பக்கத்தில இருக்கிற பெட்டையையே பாக்காத்துகள் , எங்களை எப்பிடித் தெரியவாறது. சரி இப்பதான் enter பண்ணீட்டம் தானே ஏதையாவது பாக்கலாம் எண்டு பாத்தா , அரை குறையா வளந்திருந்த தாடி மீசையை அடியொட்ட வழிச்சு, மொட்டை அடிச்சு ,ரீசேட் , Jeans போடவிடாமப் பண்ணி , பெல்டை் கட்டவிடாமப் பண்ணி, செருப்பு மட்டும் போடப்பண்ணி் சேது சீயான் விக்ரம் மாதிரி மாத்தி விட்டிடுவாங்கள். ஊரெல்லாம் கோமாளி வேலை செய்துகொண்டு ,seniors க்கு அடிமையா ஓடித்திரியிறதால எங்களோட enter பண்ணிறதுகளும் எங்களைக் கவனிக்காது, ரோட்டில போறதும் கவனிக்காது .அதிலேம் எங்களோட கம்பஸ் வாறது எல்லாம் சீனியரை மட்டும் பாத்து சிரிச்சிட்டு நாங்கள் பாத்தா தெரியாத மாதிரியே திரியுங்கள் . சீனியரான எல்லா அலாவுதீனுக்கும் faculty எண்ட அற்புத விளக்கில ஒவ்வொரு வருசமும் கிடைக்கிற பூதங்கள் தான் juniors . பூதங்கள் நாங்கள் தலைகீழா நிண்டாவது அவங்கள் சொல்லிறதை செய்யோணும். ஆனாலும் உள்ள வந்து ஒரு மாசத்தில நாங்களும் அலாவுதீன் ஆகீடுவம் எண்ட நினைப்பிலயே எல்லா வேலையும் சொல்ல முதலே செய்திடுவம். ஆனாலும் அலுப்புத் தந்தவன் தன்டை புத்தகம், பேப்பர் எல்லாம் கூப்பிட்டுத் தருவான், ஆக்களைப் பத்தி அறிமுகம் தருவான், பொருளாதார நிலமை அறிஞ்சு புத்தகம் மலிவா வாங்கித் தருவான், எங்கேயோ பொறுக்கின உடைஞ்ச மண்டையோடும் இன்னும் கொஞ்ச எலும்பும் தருவான் , வேற ஆரும் ஓவரா அலுப்படிச்சாக் காப்பாத்தியும் விடுவான். போட்டோ கொப்பி மெசின் toner தேயிற அளவு கைவிடாம நோட்ஸ் எழுதிக் களைச்சுப்போய், உரும்பிராயிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஓடிக் களைச்சுப்போய், சாமத்தில நடு ground இல கிரிக்கட் pitch இல பிரதட்டை பண்ணிக் களைச்சுப் போய் , நடு ரோட்டில நாவூத்துக்கு எரிச்ச நெருப்பில பத்த வைச்ச சுருட்டை இழுத்து இழுத்துக் களைச்சுப் போய் , நாச்சிமார் கோவில் தேரடி மேடையில சத்தமே இல்லாம ஒரு சங்கீதக் கச்சேரி செய்து களைச்சுப் போய், நல்லூரானுக்கு நாலு பேர் 2nd MB சோதனை பாஸ் ஆகிறதுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலமை ஐஞ்சு மணி பூசைக்கு போய் அரிச்சனை செய்து களைச்சுப்போய், பொம்பிளை புரோக்கராய் போய் இடம் வலம் விசாரிச்சுக் களைச்சுப் போய் , ஐஞ்சு கடைக்குப் போய் அரிசி, பருப்பு, மிளகாய் , சீனி , கோதம்ப மா கிலோ விலை , மூட்டை விலை எண்டு தனித்தனியக் கேட்டு அப்பிடியே மறக்காம விலை வாசி எல்லாம் ஞாபகம் வைச்சு அதை சரியாப் போய்ச் சொல்லிக் களைச்சுப் போய் , வாடைக்கு அறை பாக்கிற வேலை செய்து களைச்சுப் போய் கம்பஸ் எப்ப தொடங்கும் எண்டு wait பண்ணிக் களைச்சே போட்டம். கம்பஸ் enter பண்ணீட்டம் ஆனாலும் course தொடங்கேல்லை எண்ட நிலமை வருசக் கணக்கா ஓடிக்கொண்டிருந்தச்சுது. கலியாணம் கட்டினவையைப் பாத்து “ என்ன இன்னும் பிள்ளை வரேல்லையோ “ எண்டு கேக்கிற மாதிரி ஊரில “என்ன தம்பி இன்னும் படிப்புத் தொடங்கேல்லையோ“ எண்டு கேக்கத் தொடங்க சீனியேர்ஸ் மாதிரி இவைக்கும் ஒளிச்சுத் திரிய வேண்டி இருந்திச்சுது. ஆத்தாக் கொடுமைக்கு Cut off வரப் party கேட்டவன் சிலர் ஒரு வருசம் bank இல வேலை தொடங்கி எண்டு உழைக்கும் வர்க்கமாகி கூப்பிட்டு party வேற வைச்சான். இப்பிடியெல்லாம் தவண்டு எழும்பி தப்பிப்பிழைச்சு இருக்க கடைசீல கம்பஸ் போற நாளும் வந்துச்சுது. தெம்பு , திமிர், தலைக்கனம் எல்லாம் இறங்கி கடைசீல கம்பஸ்ஸுக்குள்ள காலடி எடுத்த வைக்க யோகர் சுவாமி சொன்ன “யார் நீ ?” எண்ட கேள்வி வந்திச்சுது. பத்தாம் மாசம் பத்தாம் திகதி காலமை ஆறு மணிக்கு அம்மா எழுப்பி விட்டா. சீனியேர்ஸ் சொன்னாங்கள் எண்டதால ஏழுமணிக்குப் போய் ஆடியபாதம் வீதி வெள்ளை மாளிகையை நிமிந்து பாத்து , மெய்ப்பட்ட கனவுச் சந்தோசத்தோட காலடி எடுத்து வைக்க, “இது கோயில் மாதிரி விழுந்து கும்பிட்டிட்டு செருப்பைக் கழற்றி கையில எடுத்துக் கொண்டு போ” எண்டு நித்திரை கொள்ளாமல் படிச்சிட்டு அப்பிடியே விடிய எழும்பி நாங்க போக முதலே வந்து நிண்ட சீனியேர்ஸ் சொன்னதையும் செய்தம். உள்ள போனா பிந்திப்பிள்ளைப் பெத்த வீடுகளில மூத்த பிள்ளைக்கும் கடைசிப்பிள்ளைக்கும் உள்ள பத்து வயசு வித்தியாசத்தில இருக்கிற மாதிரி கனபேர் ஊசலாடிற இளமையோட நிண்டிச்சினம். இது வரை காலம் இலவு காத்து இந்த batch சிலயாவது ஏதும் தேறாதா எண்டு சில பாலை வன ராஜாக்கள் கொண்டு வராத ரோஜாக்களோட நிண்டச்சினம். “தம்பி நாங்கள் AL எடுத்துப் பத்து வருசம், பயப்பிடாத உனக்கும் அப்பிடித்தான்” எண்டு ஆசீர் வதிக்கேக்க தான் விளங்கிச்சுது எங்க , ஏன் இளமை துலைஞ்சதெண்டு. சரி இவரின்டை பேரை சொல் எண்டு ஒராள் கேக்க , “சுப்பர் , சுப்பர்” எண்டு தொடங்கி வாய் சூம்பிப் போக , மேசைக்கு மேல ஜூடியும் செல்வவேலும் தலமை தாங்கின ராவணன் படை இல்லாத எதிரியோட முன்னேறித் தாக்க, வராத அழுகையை மூக்கால உறிஞ்சி சமாளிச்ச படி நிண்ட சுதர்சினியையும், வாசுகியையும் சுத்தி நிண்ட பெடியள் விலகிப் போக, சொந்த இடம் கலம்பா இல்லைக் கொழும்பா எண்டு தெரியாம சாருவும் துசியும் நிக்க , திருக்குறள் வகுப்பெடுத்த அகிலனும் பரிமேலழகரின் பொழிப்பைச் சொன்ன பரதனும் முடிக்காமல் பாதியில் விட, ஐயர் உமாசங்கர் அடிச்ச மணிக்கு கன நேரமா குட்டிக் கும்பிட்டுக் கொண்டிருந்த தாமுவும் தர்மியும் சந்தனம் வீபூதி எல்லாருக்கும் குடுக்க, விதானையார் மாதிரி குடும்ப விபரம் கேட்ட குறூப்புக்கு தான் கலியாணம் கட்டப் போறதை சொல்லலாமா எண்டு நவஜீவனும் , ரொகானும் முழிக்க, batch பொம்பிளைப் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் படிப்பிச்ச பிரதாபனும் பிரதீபனும் கிளாசை நிப்பாட்டாமல் தொடர , கன கச்சிதமா நடுவரா பட்டிமண்டபத்தில இருந்த அனுவின்டை தீர்பை எதிர்த்து சஞ்சீவனும் சியாமளனும் மேல் முறையீடு செய்ய , கொரிடோரின் நீளம் என்ன எண்டதை குந்திக்கொண்டே அளந்து கொண்டிருந்த தெய்வம் குப்பிற விழ, அடக்கமா குந்தில இருந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த அக்காமாருக்கு முன்னால கட்டின கையோட அப்பாவியா நடிச்சபடி கட்சின்சன் நிக்க , ஏற்கனவே இருந்த சங்கங்களுக்கு உறுப்பினரை சேத்துக் கொண்டு உமாசங்கர் , முகுந்தனோட கொஞ்சப் பேர் திரிய , அதிலேம் ஸ்பெசலா அடுத்த பாராளுமன்றதுக்கு ஆரை உறுப்பினராக்கலாம் எண்டு ஏற்கனவே இருக்கிற உறுப்பினர் கலந்து ஆலோசிக்க, ஒருத்தருமே போடாத ball க்கு தானே கொமன்ரி சொல்லிக் கொண்டு வரதன் தும்புத் தடியால விதம் விதமா shots அடிச்சுக்கொண்டிருக்க, புரோக்கரை வைச்சு சில seniors லவ் proposal செய்ய, “டேய் Dean எடா” எண்ட கத்தல் எல்லா சலசலப்பையும் மொத்தமா நிசப்தமாகியது . எங்களுக்கு அடுத்த கண்டம் தொடங்கிச்சுது. பள்ளிக்கூடத்திலேம் கம்பஸிலேம் ஏனோ படிச்சது சோதினையோட மறந்து போக இதுகள் மட்டும் இண்டைக்கும் ஞாபகத்தில். பி.கு இது கம்பஸில வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கு மட்டும். Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
ரெக்கை கட்டிப் பறக்குதடீ …….. உலகப் பொருளாதாரம் கொரானாவின் உச்சத்தில இருக்கேக்க எல்லாரும் சைக்கிள் வாங்க நானும் ஒண்டை வாங்கினன். “ அப்பா என்னை சைக்கிளில வைச்சு ஒருக்காச் சுத்துவீங்களோ” எண்டு சின்னவள் கேக்க நானும் மூச்சு வாங்க ஒரு சுத்தி சுத்தீட்டு வந்திறங்க , மனிசி தன்னையும் எண்டு கேக்க சைக்கிள் என்னைப் பாத்து சிரிச்சுது. “ லவ் பண்ணிற காலத்தில ஏறும் ஏறும் எண்டு கேட்டிட்டு இப்ப மாத்திரம் என்ன “ எண்டு மனிசி முறைச்சுது. லவ் , ரொமான்சுக்கு நல்ல வாகனம் ஒண்டு குதிரை இல்லாட்டிச் சைக்கிள் தான். இதில வாற சுகம் காரிலயோ இல்லைத் தேரிலயோ கூட வராது. சைக்கிளில ஏத்திக்கொண்டு போகேக்க முட்டியும் முட்டாமலும் படிற முதுகு , சட்டையோட சேந்து தட்டுப்படிற இடது கால் , பின்னால வருடிற வலது துடை மூக்கில உரசி வாயில கடிபடிற பறக்கும் தலைமயிர் எல்லாம் ஒரு மயக்கம் தர அப்பிடியே handle கைபிடியில இருக்கிற கையை அரக்கி நடு handle இல நடுங்கி நடுங்கி இறுக்கிப் பிடிச்ச படி சூடா இருக்கிற மூக்கு நுனியால மூச்சை கழுத்துப் பக்கம் குனிஞ்சு விட அந்த சூட்டில மனிசீன்டை காது சிவக்க என்ன கதைக்கிறது எண்டு தெரியாமல் நான் ஏதோ சொல்ல மனிசி திரும்பி “ காணும் நிப்பாட்டுங்கோ நான் இறங்கிறன் “ எண்டு சொல்ல , நானும் சடின் பிறேக்க போட்டு நிப்பாட்டிறதும் மனிசி இறங்கி ஓடிறதும் இடைக்கிடை நடந்தது. ஒவ்வொருக்காலும் கைக்கு சிக்கினது காதோட முடிஞ்சுது எண்டு கவலைப் பட்டாலும் , ஏதோ கிடைச்ச மட்டும் லாபம் எண்டு இருந்தனான். யாழ்ப்பாணமும் ஒரு காலத்தில ஒக்ஸ்போட் மாதிரி ஒரு சைக்கிள் சிற்றி தான். VC துரைராஜாவில இருந்து Prof. சிவசூரியா வரை சைக்கிளில தான் திரிஞ்சவை. சைக்கிள் அது ஒரு ஆபத்பாந்தவன், canteen க்கு காசில்லாட்டி அம்மாட்டை காசு வாங்க எனக்காக ரெண்டு ஒட்டு வாங்கும், பள்ளிக்கூடம் பிந்திப் போய் detention class இல மாட்டாம இருக்க காத்துப் போகும். அப்பப்ப சைக்கிள் செயினைக் கழட்டி பொம்பிளைப் பிள்ளைகளின்டை வீட்டைக் கண்டு பிடிக்க உதவும் , இயக்கமோ ஆமியோ சந்தீல நிண்டால் பிடிபடாமப் பறக்கச் செய்யும், குறூப்பாச் சேந்து சண்டைக்குப் போட்டு நிலமையைப் பாத்திட்டு அரைவாசியிலயே தப்பி ஓட வைக்க எண்டு நிறைய உதவி செய்யும். சைக்கிள் ஏற , இறங்க , ஓட நிப்பாட்ட எண்டு எல்லாத்துக்கும் வசதி. எங்கையும் கொண்டே நிப்பாட்டலாம், ஸ்டாண்ட் இருந்தா நடு ரோட்டில, இல்லாட்டி வேலியோ, மரமோ , ஒரு மதிலோ இருக்கும் சாத்திவிட. அதோட மதிலோட சாத்தீட்டு இருக்க அது கதிரை, மரத்தோட சாத்தீட்டு ஏறி மாங்காய் புடுங்க ஏணி, வேலிக்கு மேலால எட்டி விடுப்புப் பாக்க stand , டைனமோவை உருட்டி பாட்டுக்கேக்க உதவிற generator எண்டு multi purpose ஆப் பயன்படும். “விட்டா நீ உதில தான் கக்கூசுக்கும் போவாய் “ எண்டு அம்மம்மாவிட்டை பேச்சு வாங்கிற அளவுக்கு சைக்கிள் வாழ்க்கையோட ஒட்டி இருந்தது. எல்லாம் கடன் வாங்கிற வீட்டுப் பழக்கத்தில சைக்கிள் மட்டும் கடன் வாங்க வேண்டி இருக்கிறேல்லை ஏனெண்டால் தெரியாதவன் கூட எங்க மறிச்சாலும் ஏத்திக்கொண்டு போய் விடுவான். “ அண்ணை நேரயோ போறீங்கள் “ எண்ட கேட்டவருக்கு பதில சொல்லாமல் slow பண்ணி இடது கையை தூக்கி இடம் விடப் பாஞ்சு ஏறினவர் நன்றிக் கடனாக pedal போட்டுத் தர ஏத்தின சுமை தெரியாம ஓடலாம். “இது தான் சந்தி ,சரி வாறன் எண்டதில “ இருந்த thank you க்கு சிரிப்பாலயே “ you are welcome “ எண்ட படி தொடந்து உழக்கிறது அடுத்த ஆள் ஏறும் வரை. அப்ப ஆம்பிளைகளுக்கு இருந்த ஒரே ஆபரணம் சைக்கிள் தான் . அதால தான் அவன் அதை துடைச்சு துடைச்சு கவனமாப் பாவிப்பான் ஆரையும் ஏத்துவான் ஆனால் லேசில இரவல் குடுக்க மாட்டான். சைக்கிள் எண்டால் Size க்கு ஏத்த மாதிரி அரைச்சைக்கிள், கேபிள் போட்ட முக்காச் சைக்கிள், பின்னுக்கு support ஓட வாற chopper cycle மற்றும் சாதாரண சைக்கிள் எண்டு கன வகை இருந்தது. எண்பதுகளில் பெடியள் எல்லாருக்கும் ரெண்டு crush ஒண்டு சில்க் சுமிதா மற்றது Asia bike. சிவலிங்கப்புளியடி சண்முகலிங்த்தின்டை சைக்கிள் கடையில அரை நாளுக்கு ஐஞ்சு ரூவா எண்டு வாடகைக்கு அரைச்சைக்கிள் வாங்கி பழகின பக்கத்து வீட்டு அண்ணாட்டை இலவசமா இரவல் வாங்கி உருட்டத் தொடங்கி விழுந்தெழும்பி ஓடிப் பழகத் தொடங்கினன். வீட்டை “ஓடிப்பழகவா” எண்டு கேட்டால் “ஏன் இப்ப கொஞ்சம் பொறு “ , பஸ்ஸில போ எண்டு பழகவிடாதுகள். ஓடுவன் எண்டு ஓடிக்காட்டிக் கேட்டாத்தான் சைக்கிள் கிடைக்கும். அடுத்த மாசம் ஊருக்கு வந்த அப்பாவுக்கு ஓடிக்காட்ட அடுத்த வருசம் பள்ளிக்கூடம் போக சைக்கிள் வாங்கித் தாரன் எண்டார். அப்பா திரும்பிப்போக அடுத்த நாளே அம்மாவை “ எப்ப வாங்கித் தாராராம் எண்டு நச்சரிக்க”அடுத்த முறை லீவில அப்பா வரக் கேப்பம் எண்டா. ஆறாம் வகுப்புக்கு போக முதல் ஒரு மாதிரி கரும்பச்சைக் கலர் ஏசியா சைக்கிள் கஸ்தூரியார் வீதி வெங்கடேஸ்வரா கடையில போய் வாங்கினம். சைக்கிளை மட்டும் வித்திட்டு மற்றதெல்லாம் extra எண்டு சொல்ல பின்னுக்கு ஒரு கரியர்,handle பூட்டிற கரியர், பெல், side ஸ்டாண்ட், barக்கு கவர், பிறேக் கம்பிக்கு வயர், மட்கார்ட் கவர் எண்டு தேடித் தேடி வாங்கி அதோட ரயர் ரெண்டுக்கும் மறக்காம் பூவும் அங்கங்க குஞ்சமும் போட்டு உருட்டிக் கொண்டு வீட்டை வந்தன் , வாங்கின சைக்கிளைக் கழுவிப்பூட்டித்தான் ஓட வேண்டும் எண்ட படியால். கட்டின புதிசில மனிசியும் வாங்கின புதுசில வாகனமும் நல்லாத் தான் இருக்கும் போகப் போக தான் பிரச்சினைகள் வாறதோட maintenance costம் கஸ்டமாய் இருக்கும். அப்ப சந்திக்கு ரெண்டு சைக்கிள் கடை இருந்தும் பத்தாமல் இருந்தது.சின்ன வேலைக்கும் waiting time கூடவா இருந்திச்சுது, “ விட்டிட்டுப் போங்கோ பாப்பம் ஐஞ்சு சைக்கிள் நிக்குது” எண்டு தொடங்கி, ஆறேழு தரம் அலைய வைச்சுத்தான் திருத்தித் தருவாங்கள். இப்ப எப்பிடி mobile phone இல்லாம இருக்கேலாதோ அப்பிடித்தான் அப்ப சைக்கிளும் இல்லாமல் இருக்க ஏலாது. சைக்கிளை திருத்தக்குடுத்திட்டு போய் வாறதுக்கு ஆருக்கும் பின்னால கெஞ்சித் திரியிற கொடுமை இருக்குதே , யோச்சாலே எரிச்சல் வரும். இப்ப ஆசுபத்திரிக்கு வாறவனெல்லாம் அரைமணித்தியாலம் இருக்கமுடியாமல் புறுபுறுப்பாங்கள் ஆனால் repair க்கு வாகனத்தைக் குடுத்திட்டு அலையேக்க மட்டும் சும்மா இருப்பாங்கள். எங்கயாவது அவசரமாப் போக வெளிக்கிடேக்க தான் சைக்கிள் காத்துப் போய் இருக்கும் . அக்கம் பக்கம் “பம்ப் “ கடன் வாங்கிக் கொண்டு வந்தாக் கைபிடி ஆடும், கிறீஸ் ஒழுகும் பத்துத் தரம் முக்கி முக்கி அடிச்சாலும் கொஞ்சமும் ஏறாது. ஆரோ சொன்னான் எண்டு அவசரத்திக்கு உதவும் எண்டு hand pump ஒண்டு வாங்கிக்க கொண்டு வந்து சீட்டுக்கு கீழ இருக்கிற bar இல பூட்டி வைச்சன். ஆனாலும் ஒரு நாளும் ரயருக்கு காத்தடிக்க உதவேல்லை , கடைசீல நல்லூர் திருவிழாவில தான் தெரிஞ்சுது பலூனுக்கு காத்தடிக்கத்தான் அது பாவிக்கிறது எண்டு . சைக்கிள் கடையில முந்தி இலவசமாக் காத்தடிச்சும் விட்டவங்கள். பிறகு காத்து அடிச்சுவிட மட்டும் காசு வாங்கி கடைசீல அடிச்சாலும் காசு அடிச்சு விட்டாலும் காசு எண்டு ஆகிச்சுது. டொக்டரிட்டை வருத்தம் எண்டு போறமாதிரித்தான் சைக்கிள் கடைக்குப் போறதும் . பிறேக் பிடிக்கேல்லை எண்டு போனால் நாலு சாமான் மாத்தி ரெண்டு சாமான் வாங்கிப் பூட்டினாப் பிறகு தான் விடுவினம். டொக்டர்மாரும் அப்பிடித்தான் இருமிக்கொண்டு போனவருக்கு இருமல் மருந்தோட இவ்வளவு நாளும் இல்லாத நாலு extra வருத்தத்தையும் கண்டுபிடிச்சு அதுக்கும் சேத்து மருந்து தருவினம். அப்பப்ப ஓடேக்க சைக்கிளில இருந்து விதம் விதமா எல்லாம் சத்தம் கேக்கும், இதுகும் இருமல் தடிமன் மாதிரித் தான் உடன ஓடிப்போய் கடையில காட்டத் தேவையில்லை. கை மருந்து மாதிரி செய்தால் சரி. Chain cover இல chain முட்டிற சத்தம் கேக்க காலால தட்டின தட்டுக்கு வகுப்பில மாஸ்டர் பிரம்பை உயத்த அடங்கிற சத்தம் மாதிரி இதுகும் நிக்கும் ஆனால் திருப்பியும் கொஞ்ச நேரத்தில கேக்கும். சைக்கிளில போய் எப்ப அடிபட்டாலும் இல்லாட்டி விழுந்தாலும் பேசினோன்ன மூஞ்சையை திருப்பிற மனிசி மாதிரி Handle உடன திரும்பீடும். கால் ரெண்டுக்கும் நடுவில வைச்சு இழுத்து நிமித்தினால் சரி ( குறிப்பு மனசியை இல்லை) handle சரியாகீடும். ஒருக்காலும் சைக்கிள் துறப்பைத் துலைக்காதவன் இருக்க மாட்டான். சைக்கிள் கனபேரின்டை காதலுக்கு “ மாமா” வேலை பாத்திருக்கு . ரியூசன் வழிய பொம்பிளைப் பிள்ளைகள் கதைக்கிறதுக்குச் சந்தர்ப்பம் சைக்கிளல வாறது , “காத்துப் போட்டு, செயின் கழண்டிட்டு, துறப்பைக் காணேல்லை “ எண்டு கேக்கிற பெட்டைகளுக்கு கேக்காமலே செய்யிறதுக்கெண்டே ஒரு உதவிப்படை திரியும் . இதையே டெக்னிக்கா பாவிச்சு மெல்ல மெல்ல லவ்வை develop பண்ணின கனபேர் இருக்கினம். உதவி கிடைக்காத நாங்கள் துறப்பைத் துலைச்சிட்டு பூட்டை உடைக்கத் தெரியாம தூக்கிக் கொண்டு சைக்கிள் கடைக்குப் போய் பூட்டை உடைச்சுட்டு பூட்ட வழியில்லாமல் நாய்ச்சங்கிலிக்கு Gate ன்டை ஆமைப்பூட்டை கொண்டு போய் தூணோட சேத்துக் கட்டின நாளும் இருந்தது. காலமை எழும்பி பால் வாங்க கடைக்குப் போகத் தொடங்கி , பள்ளிக்கூடம் , ரியூசன், விளையாட்டு , சரக்குச் சுழற்றிறது எண்டு ஊரைச் சுத்தீட்டு வீட்டை வந்து இரவில தலைகீழா கவிட்டு வைச்சு சைக்கிளை சுத்தி BBC , வெரித்தாஸ் , ஆகாசவாணி, லங்காபுவத் எல்லாம் கேட்டிட்டு கடைசீல உள்ளூர் செய்தியோட நித்திரைக்குப் போக அடிச்சுப் போட்ட மாதிரி ஒரு நித்திரை வரும் ஊர் உலகத்தை சுத்தின களைப்பால. மனிசி திருப்பியும் “என்னப்பா ஏலாதே நான் சொன்னான் உங்களுக்கு வயசு போட்டு எண்டு” என்டை இளமையை நக்கலடிக்கிறதைப் பொறுக்கேலாமல் “ஏறும் “ எண்டு சொல்லி ஏத்திக்கொண்டு உழக்க திருப்பியும் அதே ரொமான்ஸ் மூட் வந்திச்சுது ஆனாலும் கட்டினாப்பிறகு கூட வழமை போல மனிசி காணும் இறங்கிப்போறன் எண்டு சொல்ல திருப்பி வீட்டை வந்திட்டன். இரவு சைக்கிள் ஓடினதால கால் நோகுது எண்டு சொல்ல மனிசி காலை ஊண்டிவிட , செத்தும் கொடுத்த சீதாக்காதி மாதிரி ஓடினாப் பிறகும் ரொமான்ஸ்க்கு வழி செஞ்சுது சைக்கிள். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
-
Degree 2021 Dec 22 வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு) , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் , Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali) சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு வந்திருந்த மீடியாக்காரங்கள் மைக்கை நீட்ட , சிரிப்பு மாறாமல் அதை தவிர்த்துக் கொண்டு போனார் கிரேக். 1982 ஆடி மாதம் “ ரேடியோவைக் குறையன்” எண்டு அம்மா பேச, “ நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா“ எண்ட வரியோட ரேடியோவை நிப்பாட்டீட்டு வந்தன். வெளியில வந்து நிண்டால் எனது நிலைமையை நெச்சுத் தான் ராஜேந்தர் பாடினாரோ எண்டு இருந்திச்சுது. ஊரில ஆர் வீடு கட்டினாலும் காலமை ஓடிப்போய் “அண்ணை bag ஐப் பாத்து வெட்டுங்கோ நூலை எடுத்து வைச்சுத் தாங்கோ” எண்டு கொஞ்சம் கொஞ்சமா சீமெந்து பாக் நூலைச்சேத்து கட்டிக்கட்டி நூலைப் பந்தாக்கி தடியில சுத்தீட்டு பட்டத்துக்கு வழி தெரியாம அம்மாட்டைக்கேக்க , “ எடுக்கிற marks க்கு இது தான் குறை எண்ட பதில் “ அந்த வருசப் பட்டம் விடிற ஆசையை நூல்ப்பந்தோட போக வைச்சுது. அம்மாவைப் பொறுத்த மட்டில் படித்துப் பெற்றாலே பட்டம் மற்றதெல்லாம் வெறும் வட்டம். அடுத்த ஆவணீல திருப்பியும் விண் கூவிக் கேக்க அதே ஆசை திரும்பி வந்திச்சுது. சரி இந்தமுறை எப்பிடியும் கட்டுவம் எண்டா எப்பிடி எண்டு தெரியேல்லை. கிரிக்கட் , கிளிபூர் , பிள்ளையார் பேணி எண்டு எல்லாம் விளையாடின ஒழுங்கையில பட்டம் மட்டும் ஏனோ விடிறதில்லை. ஈக்கிலை எடுத்து வளைச்சுக்கட்டினா மீன் பட்டம் எண்டு ஆரோ சொன்னதைக்கேட்டு நானும் கட்டீட்டு ,ஒட்டிறதுக்கு பழைய பேப்பரை் எடுத்து வெட்டி சுடுதண்ணி விட்டுக் கிண்டின கோதம்பமாப் பசையால ஒட்டிக்கொண்டு போனா அதுக்கு முச்சை கட்டிற எப்பிடியெண்டு தெரியேல்லை. சொத்தியாக்கட்டின முச்சையில பட்டம் ஏறாமல் சும்மா சுத்திக்கொண்டு மட்டும் இருந்திச்சுது. அடுத்த வருசம் அம்மாவுக்கு ஜஸ் வைச்சு ஒரு மாதிரி கடையில வாங்கின பட்டத்துக்கு ஏற்கனவே இருந்த முச்சையில நூலைக்கட்டி, குஞ்சம் கட்டி பழைய சீலையைக் கிழிச்சு வாலும் கட்டீட்டு பறக்க விடுவம் எண்டா தூக்கிப்பிடிச்சு காத்தில ஏத்தி விட ஒருத்தரும் வரேல்லை. கிளிபூர் எண்டால் குடும்பமாய் வாறவங்கள் பட்டம் விடுவம் எண்டு கேக்க பதுங்கினாங்கள். நிலத்தில பட்டத்தை வைச்சிட்டு பறக்கும் எண்ட நம்பிக்கையில திரும்பிப் பாக்காம ஓட பட்டமும் நிலத்தோடயே வந்திச்சுது. அடுத்த முறை உதவிக்கு ஒருத்தனைக் கூப்பிட்டு உயத்திப்பிடிக்க விட்டிட்டு திருப்பியும் ஓட, ஏற முதலே பட்டம் கிழுவை மரத்தில சிக்கிச்சுது. மரத்தில ஏறி கிழியாம எடுத்து திருப்பிப் பறக்க விட பட்டம் மரத்துக்கு மரம் சிக்கிச்சிதறி ரோட்டால போற பிச்சை எடுக்கிற ஆச்சீன்டை உடுப்புப் போல கிழிஞ்சு தொங்கி வந்திச்சுது. அப்ப தான் விளங்கிச்சுது ஒழுங்கைக்கு ரெண்டு பக்கமும் வேலிக்கு நட்ட மரம் இருக்கும் வரை பட்டம் விடேலாது எண்டு. பட்டக்கனவு பகற்கனவு ஆக விடாமல் அடுத்த கிழமை canteen க்கு வைச்சிருந்த கைக்காசை போட்டு ஓட்டுக்கு மேல ஏறி நிண்டு பட்டம் விட எழும்பின பட்டம் காத்தில இழுபட்டு கரண்ட் வயரில சிக்க எனது முதல் degree ( பட்டம்) கிடைக்காமலே போனது. அடுத்த கிழமை பள்ளிக்கூடத்துக்குப் போனால் கைவேலை வகுப்பில வெசாக்கூடு கட்டு எண்டாங்கள் . பச்சை ஓலையின்டை ஈக்கிலைச் சீவி வெட்டி சதுரமாயக்கட்டி அதைக் கூடாக்க செய்த முயற்சி பட்டம் போல சொத்தியாய் வர விளங்கிச்சுது “ இது புளிக்கிற பழம் எண்டு” . வீட்டை வந்து படுத்தால் எங்கேயோ வயல் வெளியில ஏத்தி விட்ட பட்டம் இரவிரவாய் விண் கூவிறது கேட்டுக்கொண்டே இருந்திச்சுது. “ பட்டம் பறக்குது பட்டம் பறக்குது பாலா ஓடி வா “ எண்டு பிள்ளை படிக்கிற பாடம் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பள்ளிக்கூடத்தில வெசாக் கூடு கட்டு எண்டு கைவேலைப் பாடத்தில சொன்னவங்கள் பட்டம் கட்டு எண்டு ஏனோ சொல்லவோ சொல்லித்தரவோ இல்லை இண்டைக்கும். 2021 தை 14 அண்ணா இந்தமுறையும் நாங்கள் தான் sponsor எண்டு சொன்ன செந்தாவின் குரலில , ஊரின் பற்றும், திறமையின் இறுமாப்பும் தெரிய இந்தமுறை போறது எண்டு முடிவெடுத்தன். வல்வெட்டித்துறைக்காரங்கள் எண்டால் எல்லாத்திலேம் விசேசம் தான். பாசக்கார கோபக்காரங்கள். கடலில மட்டும் இல்லை காத்திலேம் கப்பல் விடுவாங்கள். காரில இருந்து பிளேன் வரை விதம் விதமா செய்வாங்கள். செய்யிறது மட்டுமில்லை உலகத்தையும் திரும்பிப் பாக்க வைப்பாங்கள். ஊரெல்லாம் ஆடி ஆவணீல பட்டம் விட இவங்கள் மட்டும் வாடைக்காத்தில மார்கழி தையில பட்டம் விடுவாங்கள். எங்கடை ஊரில, பட்டம் கட்டிறவனுக்கு முச்சை கட்டத் தெரியாது. முச்சை கட்டிறவனுக்கு விண் கட்டத் தெரியது. எல்லாம் கட்டினவனுக்கு ஏத்தத் தெரியாது. இவ்வளவத்தையும் செய்து ஏத்தீட்டு ஏத்தின பட்டத்தை இறக்கி திருப்பிக் கொண்டாறவன் ஒருத்தரும் இல்லை . இவங்கள் பரம்பரையா கடத்தினதில கனக்க இருக்கு அதிலேம் பட்டக்கலை முக்கியமானது. அது இவங்களுக்கு மாத்திரம் கை வந்த கலை. ஈக்கிலை வளைக்கவே நாங்கள் கஸ்டப்பட மியான்மார் பக்கத்து மூங்கில் வீடுகள் உடைஞ்சு கடலில மிதந்து வாறதை எடுத்து சீவி வெட்டி பட்டம் செய்யிறது லேசில்லை . நாங்கள் ஒரு பட்டத்துக்கு முக்கேக்க இவங்கள் ஐஞ்சு பட்டம் ஒண்டா ஏத்தி அதில ஒண்டுக்கு வயரையும் சேத்துக் கட்டி ஏத்தி இரவில light ஐ எரிய விடுவாங்கள். அது என்னத்துக்கும் சமிக்கையோ தெரியாது. ஏத்தின பட்டத்தை காத்தோட விடாமல் கிட்டக்கிட்ட நிக்கிற ரெண்டு பனைக்கு குறுக்கால தடிகட்டி ஏத்திற பட்டத்தை கரைவலை மாதிரி ஐஞ்சாறு பேர் சேந்து இறக்குவாங்கள். பட்டத்துக்கு விதம் விதமாச் சத்தம் போடிற நாண் கட்டுவாங்கள். உரபாக், ரிபன் துண்டு, parcel கட்டி வாற மஞ்சள் tape எண்டு கன சாமாங்கள் பயன்படுத்துவாங்கள். எண்டாலும் நாண் கட்டிறதுக்கெண்டு பனையின்டை வடலித்தண்டு தான் திறம். கூடலா சேந்து நிக்கிற வடலியின்டை தண்டை வெட்டி சீவிக் காய வைச்சு, பிறகு குதிக்காலால அமத்தி வைச்சுக்கொண்டு கையால இழுத்து இழுத்து , கத்தியால சீவிக் கட்டிற நாண்மாதிரி எந்த நாணும் வராது. தனித்தனிய பட்டம் ஏத்தினவங்கள் தொண்ணூறுகளில தான் இதை திருவிழாவா மாத்தினாங்கள். இடம்பெயர்வோட நிண்டிருந்த பட்டத் திருவிழா திருப்பியும் 2010 இல தொடங்கிச்சுது. வாலில்லாமல் கட்டிற பெட்டிப் பட்டம் தான் 3D பட்டத்துக்கு முன்னோடி. மூண்டு பெட்டியைக்கட்டி நடுப்பெட்டிக்கு மட்டும் பேப்பர் ஒட்டாம விட நடுவால போற காத்து பட்டத்தை balance பண்ணும் எண்டு நிறுவப்படாத physics விதியை பயன்படுத்துவாங்கள். எட்டு வருசத்துக்கு முதல் விட்ட பொங்கல் பானைப்பட்டம் பரிசபெற, 3D பட்டம் போட்டிக்கு வரத் தொடங்கிச்சுது. ஈக்கில் , மூங்கில் , பிரம்பு எல்லாம் சேத்து தங்கூசி நூலால கட்டி , கட்டேக்கயே எங்க காத்துக்கு ஓட்டை விடுறது எங்க உச்சிக்கு நூல் வைக்கிறது எண்டு யோசிச்சுக் கட்டி ஒருத்தருக்கும் காட்டாம ஒளிச்சு வைச்சு தைப்பொங்கலண்டு பின்னேரம் ஐஞ்சு பேரா தூக்கிக்கொண்டு போய் நூலைக்கட்டி ஏத்த judge மார் வந்து பரிசு குடுப்பினம். ஒருக்கா ஏத்தின பட்டத்தின்டை நூலை கைவிட மறந்த ஒருத்தர் பட்டத்தோட மேல எழும்ப , கண்டவன் கையிலையும் இருக்கிற கமராபோனில ஆரோ ஒருத்தன் அதைப் படம் எடுத்துப் போட்டான். ஊரில் facebook இல நூறு likes கூட வரேல்லை , “ பட்டத்துடன் பறந்த வாலிபர்” எண்டு இந்தியாவின்டை பொலிமரும், இலங்கையின்டை தெரணவும் தலைப்புச்செய்தியாக்க ஒருத்தன் overnight இல ஒபாமா ஆனான். “ சீ நான் பறந்த காலத்திலை இப்பிடி போன் இல்லை இருந்திருந்தா நானும் நியூசில வந்திருப்பன்“ எண்ட சலிப்பு ஊரில கனபேரின்டை வாயால வரத்தான் தெரிஞ்சுது இது முதலாம் தரம் இல்லை எண்டு. எண்டாலும் பறந்தவன் , பறக்கப் பண்ணினவன் பிறந்த ஊரால கிலி கொண்ட பலரில் ஓவராப் பயந்தது ஒஸ்ரேலியா. அடிக்கிற காத்து திசையில இருக்கிறதாலேம், இன்னும் அடிக்கடி வள்ளங்களில எங்கடை ஆக்கள் போறதாலேம் இன்னும் பயந்து கொண்டுதான் இருக்குது. எல்லாத்தையும் கடத்தக்கூடிய இவங்கள் ஆக்களை இப்பிடியும் கடத்துவாங்கள் எண்ட intelligent report ஐ நம்பி இண்டைக்கும் ரேடியோவிலேம் TV யிலேம் “ ஆட்கடத்தற்காரரை நம்பி ஏமாற வேண்டாம் , அவுஸ்திரேலியாவுக்கு விசா இல்லாமல் வர முடியாது “ எண்டு விளம்பரம் இன்னும் போகுது. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
மருத்துவப் பழம் வாழை இறக்க வந்தவன் ஆக்களே இல்லாத வீட்டை மாறி வந்திட்டனோ எண்டு யோசிக்க , “ஓம் தம்பியவை இங்க தான் இறக்குங்கோ”எண்டு வந்த பெரியவரை , “ அப்பா நீங்க சும்மா இருங்கோ வந்தவனுக்கு கொஞ்சம் கூடத் தாறம் எண்டா இறக்கி கட்டி விடுவாங்கள்” எண்ட மகளின்டை குரல் அவரை அடக்கிச்சுது. வாழை கட்டிக் கொண்டிருக்கேக்க வந்த வானில இருந்து பத்துப் பெடியள் இறங்க வீடே பரபரப்பானது. வந்தவங்கள் கமராவைத்தூக்கிக் கொண்டு போய் லைட்டைப் போட பொம்பிளை ஒரு மார்க்கமா வெளிக்கிட்டு வர , கலியாணம் தொடங்கப் போகுது நாங்கள் பிந்தீட்டம் எண்ட படி வாழைக்காரன் அந்தரப்பட்டான். “ஏன் இப்பிடி அரக்கப் பறக்க நிக்கிறீங்கள் கலியாணம் நாளைக்குத்தானே “ எண்ட படி ஐயா milo packet ஓட வந்து , “ஒண்டும் இல்லை இது ஏதோ pre wedding shooting ஆம் எண்டார். பத்தாததுக்கு பொம்பிளையின்டை மச்சாள் காரி “ என்டை கலியாணத்தில கொரனா எண்டு இப்பிடிச் செய்யேல்லை , இதோட நானும் எடுத்து அல்பத்தில பிறகு சேக்கிறன் “ எண்டு தானும் வெளிக்கிட்டு வந்தா. படம் எடுத்த வீடியோக்காரன் படத்தோட நாளை்ககு ஆர் ஆர் எப்பிடி படம் எடுக்கேக்க என்னென்ன செய்யோணும் எண்ட “முறை தலையை “ எல்லாம் விளங்கப்படுத்த , “அண்ணை என்ன எண்டாலும் பரவாயில்லை நீங்கள் சொல்லிறபடி செய்யிறம் படங்கள் முக்கியம்” எண்டு சொல்லிக்கொண்டிருந்த பொம்பிளைகளை சிரிப்போட பாவமாப் பாத்தாங்கள் வாழை கொண்டு வந்த பெடியள். வெளியில வந்த வீடியோக்காரன் குலையாப் பாத்து பச்சையும் மஞ்சளும் கலந்திருக்கு படத்துக்கு எடுப்பா இருக்காது எண்டான். நாங்கள் வேணும் எண்டால் மருந்து அடிச்சு விடிறம் நாளைக்கு முழு மஞ்சளா இருக்கும், ஆனால் என்ன வெட்டி வித்தால் ஒருத்தனும் வாங்க மாட்டான் எண்டான் வாழைக்காரன். “ஆனாலும் மஞ்சள் spray paint அடிச்சா படத்துக்கு நல்லா இருக்கும்“ எண்டு எல்லா முறையும் சொல்லித்தாற வீடியோ அண்ணா சொல்ல , வீட்டுக்காரர் painterக்குச் சொல்லி அனுப்பிச்சினம். எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருந்த ஐயாவுக்கு அந்தக் காலத்துக் கலியாணத்தில வாழை கட்டிறது ஞாபகம் வந்திச்சுது. படலைக்கு ரெண்டு பக்கமும் இடம் பாத்து அலவாங்கு போடேக்க மண் கல்லு மாதிரி இருந்திச்சுது. தண்ணி விட்டு வைச்சிட்டு பிறகு கிடங்கை அலவாங்கால கிண்டி ஆழப்படுத்தி வைக்க வண்டில்ல வாழை வந்திறங்கிச்சுது. வாழையைப் பாத்திட்டு காத்தடக்குது இன்னும் அரையடி தோண்டவேணும் எண்டு சொல்ல வேலை தொடந்திச்சுது. பெரிய தேவைக்கு எல்லாம் நீரவேலி சிறுப்பிட்டி தான் வாழைக்கு. அங்க கிணத்து இறைப்பில தான் வாழைத்தோட்டம் எல்லாம். கன இடத்தில பங்குக்கிணறு எண்டாலும் மூண்டு நாளைக்கு ஒருக்கா தண்ணி காட்டிற படியா தண்ணிச்சண்டை இல்லை. தண்ணி இறைக்கத் தொடங்கி பாத்தி நிரம்பி வழிய பாத்தியை மாத்தி் தண்ணி கட்டீட்டு கடைசிப் பாத்தி நிரம்பி வழிய இறைப்பு நிக்கும். வீட்டு மூலைக்க குளிக்கிற தண்ணீல வளரிற மாதிரி இல்லை; வாழைத்தோட்டம் இறைக்கேக்க பாத்தி நிரம்பி வழிஞ்சோடும் வரை இறைக்கோணும் . ரெண்டு நாளைக்கு முதல் நீர்வேலித் தோட்டத்தில முத்தினகுலையாப் பாத்துச் சொல்ல , வெட்டிப் புகைபோட்டு பழுக்கப் பண்ணி அனுப்பி இருந்தான் தோட்டக்காரன். விசேசங்களுக்கு வாழையோட குலை வாங்கப்போனா குலை மஞ்சளா இருக்காது . அளவான குலை, நிமிந்த வாழை முத்தின குலை எண்டு தேடிப்பாத்து வாங்க வேணும். பழுக்காத குலையை வாங்கிப் புகை போட்டுப் பழுக்க வைச்சுத்தான் கட்டிறது. புகை போடிறதுக்கு எண்டே தோட்டத்தில ஒரு இடம் இருக்கும். வாழையை வெட்டி கிடத்திப்போட்டு குலையை மாத்திரம் கிடங்குக்க இறக்கி அடியிலேம் மேலேம் வாழை மடலைப் போட்டு மேல வாழைச்சருகால போட்டுப், பிறகு ஈரமண்ணைப் பரவிப் போட்டு மூட வேணும். கிடங்கின்டை ஒரு மூலையில இருக்கிற இன்னொரு சின்னக் கிடங்கில பொச்சு சருகு எல்லாம் வைச்சு தணல் கட்டையை வைச்சு மூடி விட சூட்டடுப்பு மாதிரி ரெண்டு கிடங்குக்கும் உள்ள connection ஆல புகை மட்டும் போகும் . சூடு போனால் பழம் வெந்து போடும் . உள்ள போன புகை கிடங்கெல்லாம் நிரப்பி வழையை பழுக்கப் பண்ணீட்டு கடைசீல எங்கயோ ஒரு மூலையால வெளீல வரத்தொடங்கும். கிடங்கில இருந்து புகை வரத் தொடங்க சின்னக்கிடங்கின்டை அடுப்பை அணைக்கோணும். இப்பிடி மூண்டு நேரம் புகை போட அரை மஞ்சள் நிறத்தில குலை இருக்கும். சாப்பிட பழம் வேணும் எண்டால் ரெண்டு நாளைக்குப் புகை போட வேணும். இறக்கின வாழையை நிமித்தி் உயரம் பாத்து அடியால குறைச்சு நிமித்திக் கட்டீட்டு இலையைக் கட்டி இருந்த வாழைச் சருகை வெட்ட வாழை விரிஞ்சு நிண்டுது. நல்லது கெட்டது எண்டு வீட்டில , வெளீல நடக்கிற காரியங்கள் , கோயில் காரியங்கள் எண்டு எல்லாத்திலேம் வாழை இருக்கும். கலியாணம் கோயில் எண்டால் கதலி , செத்தவீட்டுக்கு மொந்தன் வாழை , வாழை வெட்டுக்கு குலையோட வாழை எண்டு பாத்துப் பாத்து கட்டிறது. அதோட வாழை கட்டிறதுக்கு எண்டு ஒரு குறூப்பும் இருக்கும், பழத்தைக் களவெடுக்கவும் ஒரு குறூப் திரியும். மதில் இல்லாத காலத்தில படலை இல்லாட்டி ஒழுங்கை வாசலில பனைமரம் நட்டு அதோட வாழையைச் சேத்துக்கட்டிறது . வாழையைக் கட்டீட்டு வாழை நாரால கட்டி இருக்கிற இலையை அவிட்டு விட , இலை எல்லாம் விரிஞ்சு வடிவா நிக்கும். பிறகு என்னெண்டால் வாழை கட்டினவன் பக்கத்து வீட்டை களவா புடிங்கி இளநீர் குடிச்சுப் பிடிபடப் போய் சமாளிக்கத்தான் , குலை நுனியில இளநீர் கட்டத் தொடங்கிச்சினம் வடிவெண்ட பேரில. இப்ப கடைசியா வாழை தனிய , குலை தனிய வாங்கி கட்டிற நிலமையும் வந்திட்டுது. ஆனா இப்ப என்னெண்டால் வீடியோக்காரன் சொல்லிறான் எண்டு என்னென்ன எல்லாம் செய்யினம் எண்டு யோசிச்ச படி நிண்ட ஐயாவுக்கு உள்ள வந்து Coat ஐ போடுங்கோ படம் எடுக்கவாம் எண்டு கூப்பிட ஓடிப் போனார். ஒரு காலத்தில வாழை இல்லாத வீடு யாழ்ப்பாணத்தில இல்லை. எங்கயாவது ஒரு குட்டியைக் கிளப்பிக்கொண்டு வந்து கிணத்து தண்ணி ஓடிற இடமாப்பாத்து வைக்க அது தானா வளரும். ஒண்டும் பராமரிக்கத்தேவை இல்லை. குலை போடுதா இல்லைப் பழுத்திட்டுதா எண்டு கூடப் பாக்கத் தேவையில்லை. காகம் குலையைக் கொத்தேக்க போய் வெட்டினாச் சரி. வெட்டின குலை உடனயே சீப்பாகி அக்கம் பக்கம் எல்லாம் போயிடும் எண்ட படியால மிஞ்சிறதும் இல்லை அழுகியும் போறேல்லை. ஏனோ தெரியாது,வேலிச்சண்டை இருந்த காலத்திலேம் வாழைச்சண்டை இருக்கேல்ல. பள்ளிக்கூடம் போற ஒவ்வொரு நாளும் மாஜரின் பூசின பாணுக்கு வாழைப்பழம் தான் காலமைச் சாப்பாடு. ஒரு றாத்தல் பாண், மாஜரின் பக்கற், ஒரு சீப்புக் கதலி் இப்ப சாப்பிட” எண்ட சம்பாசணை எல்லா வாழைப்பழக்கடையிலும் காலமை கேக்கலாம். வாங்கிற அரைக்கிலோ பழத்துக்கு கடையில பழம் ஒண்டு தாங்கோ சாப்பிட்டுப் பாப்பம் எண்டு கேக்க முடியாது, ஆனாலும் வாழைப்பழம் வாங்கிறதுக்கும் ஒரு முறை இருக்கு. எல்லாக் கடையிலேம் வாழைப்பழம் வித்தாலும் ஊருக்குள்ள ஒரு வாழைப்பழக்கடை இருக்கும். “ இப்ப சாப்பிட , இரவுக்கு, நாளைக்கு கோவிலுக்கு, ரெண்டு மூண்டு நாள் வைச்சுச் சாப்பிட “ எண்டு தேவைக்கு ஏத்த மாதிரி எல்லா stage லும் வாழைப்பழம் அங்க எப்பவும் இருக்கும் . தலைகுனிஞ்சு போற சின்னக்கடை மிச்சச் சுண்ணாம்பு பூச்சில வெள்ளையான குறுக்க மரத்தில தொங்கிற முடிச்சுக்களில வாழைக்குலைகள் தொங்கும். கோயில் தேவைக்கு இடைப்பழம் பழுத்த கதலிக் குலையில வாங்கிற சீப்பு ரெண்டாம் நாள் நிறத்து சரியா இருக்கும். கோயில் அருச்சனைக்கு எண்டாக் கதலி தான். கதலிப்பழம் எவ்வளவு பழுத்தாலும் காம்பில இருந்து கழராது அழுகும்வரை. ஆனால் தோல் டக்கெண்டு கறுக்க வெளிக்கிட்டிடும். சுடச்சுட இறக்கின அரிசிமாப் புட்டுக்கு திருவின செத்தல் தேங்காயப் பூவோட ரெண்டு பழத்தை உரிச்சு சீனியும் கொஞ்சம் போட்டுக் குழைச்சுச் சாப்பிட கதலி தான் சரி. பழம் கூடப்பழுத்திருந்தா வாய்ப்பன் சுடலாம். வயித்தாலை போகாட்டி இதுதான் மருந்து. சபையில வைக்கிறதும் இந்தக் கதலிப் பழம் தான். கப்பல் பழம் முழுக்க மஞ்சளா இருக்கும். கலியாண வீட்டுத் தட்டத்துக்கு தேடி வாங்கிறது. அதோட நல்லாப் பழுத்த பழம் சிலநேரம் முத்தி வெடிச்சும் இருக்கும். நுனீல இருக்கிற கறுப்பு விழுந்தாத் தான் அது பழம் . கப்பல் பழம் எவ்வளவு பழுத்தாலும் லேசில கறுக்காது, சீப்பில இருக்கிற ஒரு பழத்தில கையை வைக்க அது கையோட கழண்டு வந்தால் சரியான பதம் . கப்பல் சாப்பிட்டாப்பிறகும் வாய் ஒரு கரகரப்பா இருக்கும். கப்பல் பழம் சூடு எண்டு சொல்லி வயித்தாலை அடிக்கு தேடி வாங்குவினம். கூவக்கட்டு, பொக்குளிப்பான் எண்டால் குளிர்மை எண்டு இதரை தருவினம். அப்ப இதரை பெரிய பழம் , தாரை விட்டு தோலை மட்டும் உரிச்சு சாப்பிடுறது. சாப்பிட்டு முடிக்க ஐஞ்சு நிமிசம் வேணும். ஆனாலும் இப்ப வாறது பழைய இதரை இல்லை. தொங்கவிட்ட குலையில இருந்து பழுக்கத் தொடங்க இதரைப்பழம் பொத்துப் பொத்தெண்டு விழும். சாப்பிடேக்கேம் சாப்பிட்டாப் பிறகும் ஒரு புளிப்புத் தன்மை இருக்கும் . சீனிக்கதலிக்கு நடுவில சின்னச்சின்ன கொட்டைகள் இருக்கிறதால பெரிசா demand இல்லை. பச்சையா இருக்கிற யானை வாழை எண்பதுகளின் கடைசீல தான் ஊரப்பக்கம் கூட வரத்தானது. ஆனாலும் எங்கடை ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு மரு(க)த்துவத் தன்மை இருக்கிறது தெரியாம இப்ப ஏதோ மருத்துவப் பழம் புதுசா ஒண்டை சனம் ஏமாந்து வாங்குது. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
வாழ்க்கை ஒரு செவ்வகம் “ உங்களுக்கு என்ன விசரே பிள்ளைகள் எல்லாம் வளந்திட்டுது “ எண்ட பதில் அரும்பாமலே பல ஆசை இரவுகளை கருக்கி விட்டிடுது இப்ப பலருக்கு. அட ஐஞ்சு அறையோட இருக்கிற இந்தக் காலத்தில இப்படி எண்டால் அந்தக்காலத்தில ஒரே அறையில எட்டுப் பத்தெண்டு பெத்தது எப்பிடி எண்டு எனக்குத் தெரியேல்லை. “ அவள் கெட்டிக்காரி எண்டு கன பிள்ளை பெத்த அம்மாமாரை பாத்துச் சனங்கள் சொன்னது எந்தக் கெட்டித் தனத்துக்கு எண்டு அப்ப விளங்கேல்லை. ஊரில கலியாணம் பேசேக்க சீதனமா கட்டாயமா வீடு மற்றது எல்லாம் extra. சீதனமா வீடு எண்டோன்ன ஏதோ சொத்துக் கிடைச்சிட்டு எண்டு ஆசைப்படக்கூடாது. எழுதிற வீட்டுக்கு சீவிய உரித்து வைச்சுத் தான் எழுதுவினம். அதை விக்கவும் ஏலாது ( அடகு) வைக்கவும் ஏலாது. SJ சூரியான்டை dialog மாதிரி “ இருக்கு ஆனா இல்லை” . ஆனபடியா சீதனவீட்டை போய் இருந்த படி பிறகு எல்லாரும் தங்களுக்கெண்டு ஒரு வீடு கட்டிப் போறது தான் வழமை. யாழ்ப்பாணத்தில கலியாணம் கட்டிற ஆம்பிளைகள் எல்லாரும் வீட்டோட மாப்பிளைமார் தான் . மாப்பிளைக்கு வேலை கிடைச்சோன்னயே ஊரில கலியாணம் சரிவந்திடும் . பத்து வயசு வித்தியாசத்தோட பதினெட்டில ஒரு மனிசியைக் கட்டிவைப்பினம். கட்டிறாக்கள் எல்லாம் வீட்டோடை மாப்பிளை எண்ட படியால் மாமியார் மருமோள் சண்டை ஊரில குறைவு. கட்டின மனிசி கலியாணத்துக்குப் பிறகு தான் தன்டை அம்மாவைக் கேட்டு கேட்டு எல்லாத்தையும் பழகும் ஆனாலும் அடுத்த வருசமே பிள்ளை பிறந்திடும். வீட்டை சீதனமா வாங்கி வாற மாப்பிளைமார் சீதன வீட்டில ஒரு அறைக்குள்ளயே இருந்தபடி தான் குடும்பம் நடந்துவினம். ஆனாலும் பத்துக்கு மேல பிள்ளைப் பெத்துடுவினம். பெரும்பாலும் வெளியூரில வேலை செய்யிற மாப்பிளை வந்து நிக்கேக்க ஒரு நாள் பங்கு இறைச்சி, ஒரு நாள் கூழ் எண்டு மாமி கவனிப்பா. புருசன் கேட்டா மட்டும் பேசிற மாமி மருமோனுக்கு தீபாவளிக்கெண்டு வளக்கிற வெள்ளடியனை வெள்ளி செவ்வாய் கூடப் பாக்காம ஆவணியிலயே அடிச்சுக் குடுப்பா. மாப்பிள்ளை ஊரை விட்டு போய் நிக்கிறவர் போற இடத்தில மேஞ்சாலும் எண்டு பயத்தில மாமியார் இங்க வரேக்க சாப்பாடு போட்டு வடிவாக் கவனிச்சு அனுப்புவா. மகள் பெத்து விட்டாலும் பேரப்பள்ளை மாரை வளக்கிறது அம்மம்மாவும் , தாத்தாவும், சித்தி மாரும் தான். பேரப்பிள்ளை பாசம் இருந்தாலும் எல்லாமே தன்டை பிள்ளைக்காகத் தான் அம்மா செய்வா. மருமோன் வந்து நிண்டா இண்டைக்கு நீ என்னோட படு எண்டு குஞ்சுகளை கூப்பிட்டு மாமியார் வழி சமைச்சுக் குடுப்பா. காலமை மகள் வேளைக்கே எழும்பி விழுந்து விழுந்து “ அவரை” கவனிக்க அம்மா சந்தோசப்படுவா. அம்மம்மாவோட வளரிற பேரப் பிள்ளைகளுக்கு அம்மாவழி உறவுகள் நல்லதாகவும் அப்பா வழி எல்லாம் வெத்தாகவுமே காட்டப்படுறதால அநேமா அம்மாவழி உறவுகள் பலமாக இருக்கிறது தவிர்க்க முடியாததாகிவிடும். அதோட வாற மூத்த மருமோனுக்கு எல்லாம் நீங்க தான் எண்டு தூக்கித் தலப்பா கட்டி மச்சாள், மச்சான் மாரைக் கரை சேக்கிற பொறுப்பை குடுத்திடுவினம். மகன் அங்காலயே மினக்கடிறதால தான் சம்மந்திமார் முறுகல் வாறது. அப்ப ஒரு காலத்தில அக்கா செத்தாலோ வருத்தமாப் போனாலோ தங்கச்சி இலவச இணைப்பாக் கிடைக்கும் எண்டு தேடிக் கட்டினாக்களும் இருக்கினம். பிள்ளைகளை பெத்து , வளர்த்து காசை செலவளிச்சாலும் அதுக்குள்ளேயும் கொஞ்சம் கொஞ்சமா மிச்சம் பிடிச்சு தங்களுக்கு எண்டு ஒரு வீட்டைக் கட்டுவினம் வாங்கின சீதனக் காணியில. எல்லா ஆம்பிளைகளுக்கும் வீடு எண்டது ஒரு வாழ் நாள் சாதினை. அப்பாமார் ஒரு நாளும் அலட்டிறேல்லை ஆனாலும் அவைக்கு பெருமை எண்டால் உழைச்சு கட்டின வீடு தான். அந்தக் கட்டின வீட்டை இருந்து கட்டையில போறது தான் கனவு. ஆம்பிளை குடும்பத்தைப் பத்தி ஒண்டும் கதைக்காதவன் ஆனா ஊரெல்லாம் வீட்டைப் பத்தி மட்டும் கொஞ்சம் கூட்டிச் சொல்லுவான். அவன் வீடு கட்டி முடியவும் பெட்டை சாமத்தியப்படவும் சரியா இருக்கும். சாமத்தியப்பட்ட பிள்ளையை சாட்டி வீடு மாறிப் போறவன் தன்டை வீடு எண்டு நாலைஞ்சு வருசம் தென்னை மாவெண்டு நட மகள் கலியாணம் கட்டி வர திருப்பியும் தனி அறை வாழக்கைக்கு தள்ளப்படுவான். இப்பிடி மகன் , புருசன் அப்பா எண்ட முக்கோண வாழ்க்கை வட்டம் ஒரு செவ்வக அறைக்குள்ளயே தொடங்கி அதுக்குள்ளயே முடிஞ்சடும். சின்னனில வீட்டை இருக்கிற ஒரு extra அறையும் பொம்பிளைப்பிள்ளை , குமர்ப்பிள்ளை, வளந்த பிள்ளை எண்ட பேரில பொம்பிளைகளுக்கே குடுபடும். பெடியளுக்கு privacy என்னவோ கக்கூஸில மட்டுந்தான். கிணத்தடீலயே குளிச்சிட்டு உடுப்பு மாத்தீட்டு அந்த ஒண்டையே அண்டைக்கு முழுக்கப் போட்டு திருப்பியும் இரவு கொடீல இருக்கிற சாரத்தை மாத்தி , தோய்க்கிற பஞ்சீல ரெண்டாம் நாத்தும் அதே உடுப்பை போட்டுக்கொண்டு திரிவாங்கள் ஆனாலும் சாரத்தை மட்டும் தோய்ப்பாங்கள். நானும் கட்டினாப் பிறகு ஒருநாள் கடைக்குப் போக மனிசி என்னைப்பாத்து “ அப்பா முதல் நாள் நாங்கள் சந்திக்கேக்க நீங்க போட்டிருந்த பிரவுண் ரீசேட் மாதிரி ஒண்டு வாங்குவமே” எண்டு பத்து வருசத்துக்கு முன்னை நடந்ததைச் சொல்ல , எனக்கு வலு சந்தோசம், என்டை மனிசி அப்பவே என்னை வடிவாத்தான் கவனிச்சிருக்கெண்டு. ஆனாலும் சந்தோசம் தொடங்கமுதலே “ நான் என்ன போட்டிருந்தனான் ஞாபகம் இருக்கோ” எண்ட விடை தெரியாத கேள்ளவியைக் கேட்டு அண்டைக்கும் மனிசி என்னை முட்டாள் ஆக்கிச்சுது. வருசம் முழுக்க ரெண்டு உடுப்பை போடிற எங்களையும் நேரத்திக்கு ரெண்டு உடுப்பு போடிற உங்களையும் ஒப்பிட்டு ஞாபகம் இருக்கா எண்ட கேள்ளவி very biased எண்டு நான் மனிசிக்குச் சொல்ல , “உப்பிடித்தான் உம்மடை கதை எல்லாம் நல்லா சாட்டுச் சொல்லிறீர் “ எண்டு மனிசி பார்க்க நான் அமைதியானேன். பெடியளுக்கு சாப்பிடவும், இரவில படிச்சிட்டுப் படுக்கிறதுக்கும் தான் வீடு. வீட்டில இடமில்லாததால தான் பெடியள் எல்லாரும் ஒழுங்கை முடக்கு , உடைஞ்ச மதில் எண்டு தஞ்சமடைஞ்சு குறூப்பாச் சேந்து அதையே ஆக்கிரமிச்சு இருப்பாங்கள். அதில மட்டும் தான் அவங்கடை சண்டித்தனம். இதை விளங்காம அப்ப பெடியளை எல்லாம் ஊர் மேயுறாங்கள் எண்டு சொன்னது பிழை எண்டு நெக்கிறன். குடும்ப வாழ்க்கை இப்பிடி அறையில தொடங்கி அறைக்குள்ளேயே முடிஞ்சிடும். இதால ஒரு நல்லது கெட்டதாவது அறையைத்தாண்டி வீட்டில நடக்கட்டும் எண்டு தான் எல்லாத்திலேம் வீடு எண்டு சேர்க்கை வாறது எண்டு நெக்கிறன். அதோட நல்லது கெட்டது எல்லாம் வீட்டை வைச்சுத் தான் செய்யிறது வழமை . கலியாண வீடு, சாமத்திய வீடு, செத்த வீடு , பூசை வீடு எண்டு. ஆனாலும் இளங்கோ கேக்கிற “சின்னவீடு எண்டு அதுக்கும் வீட்டை சேத்தது ஏன்“ எண்ட கேள்விக்கு விடை இல்லை. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்
-
நானும் அவளும்…. அவள் “ ஏய் கொஞ்சம் சுண்ணாம்பு தாவன், பொயிலைக் காம்பிருக்கே எண்டு தனித்தனியக் கேட்டு முழுசா வெத்திலைப்பையை வாங்கிக் கொண்டு, “ இதைப்பார் ஒரு எட்டு போட்டு வாறன்” எண்டு சொல்லீட்டு வெளிக்கிட்டன். காலமை மூண்டு மணிக்கே எழும்பி வந்தது சாக்கு சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு வர நாலு மணி தாண்டீட்டு. வந்து மூட்டை விரிக்க கோயில் மணி நாலரை எண்டு சொல்ல ஆரவாரம் கூடிச்சுது. வெத்திலையோட வெளிக்கிட்டு வர மூத்திரம் முட்டிக்ககொண்டு வந்தது , போறதுக்கு இடம் தேடினால் ,இடமில்லை. ஆம்பிளைகள் எண்டால் மூலை வழிய எங்கையும் எப்பவும் ஒதுங்கலாம் எங்கடை சீரழிவு எங்களோட தான் . ஒருமாதிரி கோழிக்கடை பின்மூலையில கட்டி இருந்த தட்டி மறைப்புக்க ஒதுங்கீட்டு வந்தா காலில ஓட்டினது கோழிப் பீயா, கோழிச்செட்டையா இல்லை வெட்டிக் கழிச்சு எறிஞ்ச துண்டா எண்டு தெரியாம காலைக்கழுவீட்டு வர கொஞ்சம் வெளிச்சம் வந்திட்டுது. எவ்வளவு நாள் கேட்டும் மாநகரசபை கக்கூஸ் கட்டித் தருதில்லை, பொம்பிளைகளின்டை பிழைப்பு விளங்கினாத்தானே. இந்தமுறை காசு கேக்க வரேக்க சொல்லோணும் எண்டு யோச்சபடி பிளேன்ரீயைக் குடிச்சிட்டு வெத்திலைப்பையை துறந்தன். சரசக்கா பாவம் எதைக் கேட்டாலும் இல்லை எண்டு சொல்லாது. எல்லா அவசரத்திக்கும் அது தான் உதவி. சந்தையில senior கிட்டத்தட்ட இருவத்தைஞ்சு வருசம் service . “பதினாறு வயசில ஓடிப்போய் கலியாணம் கட்டி ஒரு வருசத்தில அந்தாள் விட்டிட்டுப் போக பிள்ளைத்தாச்சியாக் கடகம் தூக்கினனான்” எண்டு அடிக்கடி சொல்லுவா. இப்பவும் அவவின்டை வடிவில கன பேருக்கு கண் . மஞ்சள் நிறம் கூடின வெள்ளை, பெரிய கொண்டை, வெத்திலைச் சிவப்பு வாய் , ஒரு ரூபாய் அளவு குங்குமம் , கழுத்தில ஒரு சங்கிலி எண்டு அம்சமா இருப்பா. முதல்முதலா சந்தைக்கு வந்து கடகத்தோட இருக்க பாத்தவன் , முறைச்சவன் , சிரிச்சவன் எண்டு எல்லாரையும் ஓடும் செம்பொன்னும் போல் ஒக்கவே நோக்கி ,ஆம்பிளைகள் மட்டும் தான் எண்ட சந்தையில அடிப்படையை மாத்தி தனிச்சு நிண்டு ,நிமிந்து , காசுழைச்சு திருப்பியும் ஒண்டைக் கட்டி இப்ப இன்னும் நாலு பிள்ளை . “ சந்தையில எல்லாப் பொம்பிளையையும் சொர்ணாக்கா எண்டு தான் சொல்லுவினம் , அதைக் கணக்கெடுக்காத , கொஞ்சம் சிரிச்சாலும் அவனவன் தலையில ஏறி இருந்திடுவான் இல்லாட்டியும் வீட்டை போனா சந்தையில ஒரே சிரிப்பும் கனைப்புமாம் எண்டு கதைக்கிறதில கரவு இருக்கும் “ எண்டு சரசக்கா வந்த முதல் நாளே சொல்லீட்டா. பஸ்ஸில கடகம் ஏத்தேக்க கண்டக்டரோட சண்டை தொடங்கி ,விக்க சந்தைக்குள்ள கொண்டு போற சாக்குக்கு கணக்கு போடிறவனோட முழுச்சாக்கை அரைச்சாக்கெண்டு சண்டை பிடிச்சு உள்ள கொண்டு போய் , எல்லாரும் ஒரே விலையெண்டு கதைச்சு சந்தை தொடங்கும். கொஞ்ச நேரத்தில விக்கத்தந்திரமில்லாதவன் மரக்கறி விலையைக்குறைக்க அவனோட சண்டையைத் தொடர்ந்து, வித்து முடிஞ்சு வீட்டை வெளிக்கிட்டு வந்து கொமிசன் வாங்கறவனோட சண்டை பிடிச்சு காசைக்குறைச்சு ,வீட்டை வர பள்ளிக்கூடத்தால வந்துதுகள் சண்டை பிடிக்கத் தொடங்க அதோட சேந்து சண்டையைப் பிடிச்சு , சாராய மணத்தோட வந்தவன் சாப்பாட்டைக் குறை சொல்ல அவனோடேம் சண்டையைப் பிடிச்சிட்டுப் படுக்க நித்திரை மாத்திரம் சண்டை பிடிக்காம வரும். உடம்பு வருந்தி வேலைக்குப் போறவை எல்லாரும் வெத்திலைப்பையோடயே தான் திரிவினம் . பலருக்கு ஒரு நேரச் சாப்பாட்டை மறக்கப்பண்ண இந்த வெத்திலை உதவி செய்யும். வெத்திலையால வயித்தை நிறப்பீட்டு வந்து இருக்க, வழக்கமா வாற சில்லறைக்கடைக்காரர் எல்லாம் வந்து சாமானை ஏத்தத் தொடங்கிச்சினம். வந்தவன்டை பழைய கணக்கெல்லாம் பாத்து காசைக் கேக்க, “நாளைக்கு எண்டவனுக்கு” சாமானை மாட்டன் எண்டு சொல்லாமல் எப்பிடியும் நாளைக்குத் தா எண்டு சொல்லீட்டு , வீட்டை ஈடு வைச்சவனுக்கு இண்டைக்கெல்லோ காசுத் தவணை சொன்னான், அவனுக்கு என்ன சொல்லிற எண்டு யோசிக்கத் தொடங்கினன். அப்ப முன்னுக்கு வந்து எங்க சாமான் வாங்குவம் எண்டு யோச்சபடி நிண்ட சின்னப் பெடியினை இந்தா என்ன வேணும் , கொண்டா பையை எண்டு அங்கால போக விடாமப் பையை வாங்கினன். நான்…… சந்தையில சாமான் விக்கிற பொம்பிளைகள் எல்லாரும் வயசு வித்தியாசம் இல்லாமல் ஆச்சி மார் தான் எங்களுக்கு . “ சாமான் வாங்கப் போனா ஆச்சிமாரிட்டை கவனமா இருக்கோணும் , அங்க நிறைய சொர்ணாக்காக்கள் இருப்பினம் பாத்தோன்னயே நாங்கள் சந்தைக்கு புதுசு எண்டு எழுதி ஒட்டி இருக்கிறது அவைக்குத் தான் தெரியும் . தப்பித் தவறிக் கிட்டப்போனா சரி , என்ன ஏது எண்டு கேக்காமல், உந்தப் பையைத்தா எண்டு பறிச்சு வாங்கீடுவினம். பையைக் குடுத்தா பொல்லைக் குடுத்து அடி வாங்கின மாதிரித்தான் “ எண்டு ஒரு அனுபவஸ்தன் சொன்னது எனக்கும் நடந்திச்சிது. என்னென்ன எப்பிடி வாங்கிற எண்டு அம்மா சொன்ன theory க்கு practical செய்வம் எண்டு கையை வைக்கச் ,”சரி, நீ உடைச்சிட்டு வைக்கிறதை நானே கொண்டு போய்த் தின்னிறது , இங்க என்ன அழுகலே நான் விக்கிறனான்” எண்டு கை வைச்சுப் பாக்க முதலே புறுபுறுக்கத் தொடங்கீனா ஆச்சி. வெளீல இருந்து மூட்டை ஒண்டைக் கொண்டந்து இறக்கினவன், “ எணை காசு” எண்டு சொன்னதுக்கு “நான் என்ன ஓடியே போப்போறன் எண்ட ஆச்சி சொல்ல”, “உன்ன எவன் கூட்டிக்கொண்டு ஓடப் போறான் , இருக்கேலாதெண்டு தானே கட்டினவன் விட்டிட்டுப் போனவன்” எண்டு திருப்பிச் சொன்னவனுக்கு ஆச்சி ஓளவையார்த் தமிழில பதில் சொல்ல நான் அடக்கமா நிண்டன். கொண்டந்த பிளாஸ்டிக் பைக்குள்ள சாமாங்களை அடைஞ்சிட்டு நிமிந்து பாக்க ஆச்சி கணக்குச் சொல்லி காசை கேட்டா. நான் கணக்குப் பாக்க முதலே காசை வாங்கீட்டா ஆச்சி. சரியெண்டு பாரத்தோட பையைத் தூக்க பையின்னடை கைபிடி அறுந்திச்சுது. சத்தத்தைக் கேட்டு ஆச்சி பழைய உரபாக்கும் சணல் துண்டும் சும்மா தந்திட்டு மற்ற ஆக்களைக் கவனிக்கத் தொடங்கினா. கணக்குக்கு நல்ல மாக்ஸ் எடுத்த எனக்கு நூற்றைம்பது கிராம் பச்சை மிளகாயில இருந்து ரெண்டு கிலோ கிழங்கு வரை எல்லாச் சாமாங்களும் வாங்க எழுதாமல் ஆச்சி சொன்ன கணக்கு வீட்டை வந்து ரெண்டாந்தரம் கூட்டிப் பாக்கத் தான் சரியா வந்திச்சுது. Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.