Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி

ஆக்கம்: தியாகராஜா நிரோஷ்

“இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுகள் தடைப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கம் எடுக்கக்கூடிய முடிவுகளுக்குப் பின்னால் நாம் செல்ல வேண்டும் என்பதைவிட நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நிலை கூட்டமைப்பிற்கு வந்துள்ளது” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெவித்தார்.

வீரகேசேயின் வார வெளியீட்டுக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை வருகை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள் தொடர்பாக அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெவித்தார்.

கேள்வி: இன்று தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள நிலைமைகளிடையே இந்நிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை எத்தகைய சூழல்களைத் தோற்றுவிக்கும் எனப் பார்க்கின்றீர்கள்?

பதில்: வருகைதந்துள்ள இக் குழுவினர் இங்கு மக்களின் கஷ்டங்களைப் பார்த்து போகின்றனர். இந்த நாடாளுமன்றக் குழுவில் இடம்பொற்றோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்திற்கு இவர்களால் எந்தவித அழுத்தத்தினையும் பிரயோகிக்க முடியும் என நான் நினைக்கவில்லை. ஆனால், இக் குழுவினர் இங்கு தாங்கள் கண்ணுற்ற, பார்த்துப் பேசிய விடயங்கள் தொடர்பில் ஓர் அறிக்கையினை இந்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை எவ்வாறாக அமையும் என்பதற்கு அப்பால், இவ்வாறாகச் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் உள்ளடங்கப்படும் விடயங்கள் வாயிலாக ஏதாவது நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்தியா தள்ளப்படலாம்.

அத்துடன் இவ்வாறான அறிக்கைகள் மூலம் இந்திய அரசாங்கத்திற்கு இங்கிருக்கக் கூடிய நிலைமைகளை மேலும் தெளிவு படுத்தலாம் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இக் குழுவினைரை சந்தித்தபோது பரஸ்பரம் பேசிக் கொண்ட விடயங்கள் தொடர்பில் சிறப்பாக என்ன கூற முடிகின்றது? அவ்வாறாக நீங்கள் முன்வைத்த விடயங்களுக்கு அவர்கள் என்ன பிரதிபலிப்பினை வெளிப்படுத்தினார்கள்?

பதில்: நாங்கள் இத் தூதுக்குழுவினரிடம் வடக்குக் கிழக்கில் இருக்கக் கூடிய நிலைமைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு நடந்த கதி, மீள்குடியேற்றம் என பல விடயங்களை எடுத்துரைத்துள்ளோம்.

இக் குழுவினர் பிரதேச சபைத் தலைவர்களைச் சந்தித்து பிரதேச சபைகள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளனர். இது ஓர் தகவலறியும் நிலைதான் .உடனடியாகப் பிரச்சினையினைத் தீர்க்காது.

சிலவேளை எதிர்காலத்தில் தூதுக்குழுவில உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரலாம். அவ்வாறாக அதிகாரத்திற்கு வந்தால் அவர்கள் பார்த்துப் போகும் விடயங்கள், தீர்மானத்தினை எடுப்பதற்கு வசதியாக அமையலாம்.

ஆகவே, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை என்பது இவ்வாறாகத்தான் பார்க்கப்பட வேண்டும் நாங்கள் முன்வைத்த விடயங்களுக்கு அவர்கள் பதிலளிக்கையில், தாம் ஜனாதிபதியை சந்திக்க இருக்கின்றோம் எனவும் அவருடன் தாங்கள் இந்தப் பிரச்சினைகளைப்பற்றி கேள்விகளைக் கேட்போம், விவாதிப்போம் எனவும் கூறியிருக்கின்றார்கள். உயர்பாதுகாப்பு வலயம் பேசும்போது தாங்கள் இவ்விடயங்கள் பற்றி பஷில் ராஜபக்ஷவிடமும் வெளிவிவகார அமைச்சிடமும் ஏற்கெனவே பேசியதாகவும் குறிப்பிட்டார்கள்.

இங்கு அவர்கள் நிச்சயமாகப் பேசுவார்கள் ஆனால், அவை எல்லாம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுவதற்கு தீர்மானகரமான விடயமாக இருக்குமா என்பது தான் கேள்வி. இந்த நிலையில் அவர்கள் இங்கு என்ன பேசுகின்றார்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் புதுடில்லியில் தமது அரசாங்கத்திற்குக் கொடுக்கக் கூடிய அறிக்கைதான் பிரயோசனமாக இருக்கக் கூடும்.

கேள்வி: வருகை தந்திருந்த குழுவில் இருந்து தமிழக ஆளுங் கட்சியான அ.தி.மு.க மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க. ஆகியவை விலகிக் கொண்டார்கள். இது பற்றி நீங்கள் இன்றைய நிலையில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: இது சம்பந்தமாக நான் கருத்துகளை வெளியிட விரும்பவில்லை. இது அந்தந்த கட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கக் கூடிய முடிவுகள். இந்த வருகையினால் பெரிய பிரயோசனம் இல்லை என்பது தான் குழுவில் இருந்து விலகிக் கொண்டவர்களுடைய கருத்து. இந்த வருகையால் தாங்கள் சில விடயங்களை அறிந்துள்ளதாக வந்திருப்பவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

கேள்வி: இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இருக்கின்ற இனப்பிரச்சினைத் தீர்வு பற்றிய பேச்சுச் சூழல் தற்போது எந்த நிலையில் இருக்கின்றது? பேச்சுகள் முன்னோக்கிச் செல்லக் கூடிய தன்மைகள் ஏதும் இன்றைய நிலையில் காணப்படுகின்றனவா?

பதில்: இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடை பெற்ற பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அரசாங்கமே இதனை நிறுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இருதரப்பும் சந்தித்துப் பேசுவதற்கான உடன்பாடு இருந்தது.

நாம் அரசாங்கக் குழுவினரை சந்தித்துப் பேசுவதற்காக காத்திருந்தோம். ஆனால், இலங்கை அரசாங்கம் அல்லது இலங்கை அரசாங்கத்தின் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அன்றிலிருந்து இன்று வரை பேச்சுக்கள் நடைபெறவில்லை.

இலங்கை அரசாங்கத்தினைப் பொறுத் தளவில் தாங்கள் இப்போது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்திருப்பதாகவும் அத் தெரிவுக்குழுவுக்கு நாம் வந்தால் இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி பேசலாம் எனவும் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் நாம் செல்லவதற்கு சம்மதம் தெரிவித்தால் சில சமயங்களில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இந்தப் பிரச்சினைகள் பேசப்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு போவதா இல்லையா என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பொருத்தளவில் அங்கு போகக் கூடிய விடயங்கள் ஏதும் சரியான ஓர் தீர்வுக்கு வருவது குறைவு.

கடந்த காலத்தில் மங்கள முனசிங்க தலைமையில் இனப்பிரச்சினை தீர்வு பற்றிய ஓர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இருந்தது. அதில் நானும் ஓர் அங்கத்தவனாக இருந்தேன். அது ஏறத்தாழ மூன்று வருடங்கள் நாம் கூடிப்பேசியிருந்த போதும் எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறாக இதற்குப் பின்பான காலப்பகுதியிலும் பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை எதுவுமே பயனற்றதாகத்தானே அமைந்தன.

இந்த வகையில் ஒரு சாராரிடம், நாங்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் சென்று அதிலும் தகுந்த முடிவு கிட்டாவிட்டால் நாம் அடுத்த ஜெனீவா மாநாட்டுக்கு இந்தப்பிரச்சினையை கொண்டு செல்ல முடியும் எனக் கருத்துள்ளது.

இதன் வாயிலாக தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் எதனையும் கொடுக்கப் போவதில்லை என்ற சாதக கள நிலைமையினை ஏற்படுத்தி விடலாம் என்ற கருத்துள்ளது. அரசாங்கத்துடன் சகல விதத்திலும் நாங்கள் ஒத்துப் போனோம் ஆனால், எதுவும் நடக்கவில்லை என்ற சாதகமான நிலைமையை இது ஏற்படுத்திக்கொடுக்கும் என்ற ஒரு விதமான கருத்தும் இன்று பலர் மத்தியிலும் இருக்கின்றது.

கேள்வி: “ஜெனீவா தீர்மானத்திற்கான முன்னேற்ற அறிக்கையினை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டியுள்ள நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்று இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் எதையுமே வழங்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை' என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு ஆதாரபூர்வமாக காட்டிக்கொள்ள முடியும் என்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள்ளும் சென்று நியாயத்தினை புலப்படுத்தலாம் என பலர் கருதுவதாகக் கூறினீர்கள்.

இந்த இடத்தில் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றகரமான நிலைமைகள் என அரசாங்கம் ஜனநாயகச் சூழலுக்காக சிக்களின்றி நடைமுறைப்படுத்தக் கூடிய குறிப்பிடத்தக்க மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என சில சில விடயங்களை ஏற்படுத்திவிட்டு ஜெனீவா தீர்மானத்தினை அடுத்தான முன்னேற்றத்தினை வெளியுலகில் அரசாங்கம் சமாளிக்கும் நிலை ஏற்பட்டால் உங்கள் எதிர்பார்ப்பு தவறாக அமையலாம்தானே. இந்த நிலையில் தமிழ்த் தேசிய பிரச்சினை என்பது மனித உரிமை குறித்த மேம்பாட்டின் வழியாக மட்டும் தீர்க்கப்பட முடியாதல்லவா. இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: நீங்கள் சொல்லுவது போன்று அரசாங்கம் ஒரு சில காரியங்களைச் செய்யக் கூடும். சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை என சில விடயங்களை அரசாங்கம் செய்ய முடியும். சட்டத்தின் ஆட்சி என்பது கூட, உதாரணமாக 17 ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமாக இருந்தால் அரசியல் கலப்பற்ற சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க வேண்டும். நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக் குழுக்கள் அரசியல் கலப்பில்லாமல் மக்கள் எல்லோரும் தங்களுடைய செயற்பாடுகளைக் கவனிக்க வேண்டுமாக இருந்தால் 17 ஆவது திருத்தச் சட்டம் போன்ற ஓர் சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்.

அதற்கு கூட இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொள்ளுமா என்ற கேள்வியே உள்ளது. இதற்கு மேலாக இராணுவத்தினை அகற்றுவது மற்றொரு விடயம். அதே போன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் ஓர் விடயமாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, அப்படியான சூழ்நிலையில் அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கை அரசாங்கத்திற்கான அழுத்தங்கள் மேலும் நிச்சயமாக அதிகரிக்கும்.

இன்றைய சூழ்நிலைகளை நாம் பார்த்தால், ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் கூட ஜெனீவா தீர்மானத்தினை நிறைவேற்றக் கோருகின்றார்கள். ரஷ்யா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தபோதும் தற்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோனை கூறுகின்றது.

ஆகவே, இலங்கை அரசாங்கம் சகலவற்றையும் மறுக்கின்ற நிலையில் அரசாங்கத்திற்கு சாதகமாக இருக்கக் கூடிய நாடுகள் கூட அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் நிலை அப்போது தோன்றலாம். எனவே அரசாங்கத்திற்கு நெருக்கடிகளே உள்ளன. மே மாதத்தில் பேராசியர் பீரிஸ் அமெரிக்க செல்வதற்கு இருக்கின்றார்.

அவருக்கு அங்கிருந்து சிலவிடயங்கள் சொல்லப்படலாம். இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல கடமைகள் இருக்கின்றன. அதாவது இனப்பிரச்சினை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுக்காக மக்கள் மத்தியிலான கலந்துரையாடல்கள் கூட்டமைப்பிற்கு அவசியம்.

இனப் பிரச்சினை தீர்வு பற்றி மேலும் பல நிபுணர்களுடனும் கலந்துரையாட வேண்டியுள்ளது. அரசாங்கம் எடுக்கக் கூடிய முடிவுகளுக்குப் பின்னால் நாம் இழுபட வேண்டும் என்பதைவிட நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நிலை கூட்டமைப்பிற்கு வந்துள்ளது. ஆகவே, பேச்சுவார்த்தை தொடர்பாகவும் சரி, பொறுப்புச் சொல்லும் நடவடிக்கையிலும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி முடிவெடுக்க வேண்டிய நிலையிலேயே உள்ளது.

கேள்வி: சரி. இப்போது சர்வதேசத்திடம் பேசலாம் என்ற விடயம் கட்சியிடம் உள்ளதாகக் கூறினீர்கள்.

அதே இடத்தில் முன்னர் வினாவுக்கு பதிலளிக்கையில் தெரிவுக்குழுவிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சென்றால் இனப்பிரச்சினையில் தமிழர் தரப்பு நியாயங்களை ழுமையாக வெளியுலகிற்கு நியாயப்படுத்தி விடலாம் என்பதுவும் சிலரது கருத்தாகவுள்ளது என தெவித்திருந்தீர்கள். இந்நிலையில் சிலசமயம் தெரிவுக்குழுவிற்குள் கூட்டமைப்பு நுழையுமாயின் அங்கே என்னென்ன நகர்வுகள், முன்வைப்புகள் தொடர்பான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் ஒரு முழுமையான தீர்வுத் திட்டத்தினைக் கொடுத்துள்ளது. அந்தத் தீர்வுத் திட்டத்தினையே தெரிவுக் குழுவிடம் முன்வைக்க வேண்டியதாக இருக்கும். அந்தத் தீர்வுத்திட்டத்தில் உள்ளவற்றில் சிலவற்றை கூறுவதாக இருந்தால் வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரம், நிதி அதிகாரம், வரி அதிகாரங்கள் போன்ற பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளது. பேச்சு வார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் இது எல்லாம் கொடுக்க முடியாது என்று ஜனாதிபதியே கூறினார்.

ஆகவே ஜனாதிபதியே இவ்வாறு கூறிய போது தெரிவுக்குழுவில் இடம்பெறும் சிங்கள பௌத்த பேரினவாதிகள் என்ன கூறுவார்கள் என ஊகிக்க முடியும்.

கேள்வி: தற்போது நடைபெறுகின்ற பேச்சுகள் அரசியலமைப்பில் ஏற்கனவேயுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை நடைமுறைப்படுத்தக் கோரியே இடம்பெறுகின்றன என்ற கருத்துகள் நிலவுகின்றனவே. இது பற்றி என்ன கூறுகின்றீர்கள். நிலவும் கருத்துகள் சரியானதாக இருந்தால் இந்த பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தினை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் மக்கள் திருப்தியோடு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றாகக் கருதமுடியாதல்லவா?

பதில்: 13 ஆவது திருத்தத்திற்காக பேச்சுகள்தான் நடைபெறுகின்றதாயின் அதற்கான ஓர் பேச்சுவார்த்தை அவசியமில்லை. 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பின் ஒரு பகுதி. ஆகவே, அதனை நிறைவேற்ற வேண்டியது அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டு பதவிக்கு வரும் அரசாங்கத்தினுடைய ஓர் கடமை. எனவே 13 ஆவது அரசியலமைப்பினை நடை முறைப்படுத்துமாறு யாரும் பேச வேண்டிய அவசியமில்லை. அப்படியான ஓர் விடயத்திற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடவேண்டும் என்பதில்லை.

13 ஆவது அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்துவது தான் பிரச்சினை என்றால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அதற்கு நீதிமன்றம் போகலாம். அல்லது ஜனாதிபதியிடம் சொல்லலாம். அவ்வாறு செய்யா விட்டால் அதற்குப் போராட்டம் நடத்தலாம். ஆகவே, இங்கு நாங்கள் பேச்சுவார்த்தை தொடங்கியதற்குக் காரணம் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது போதுமானதல்ல என்பதால்தான். அது பிரச்சினையினைத் தீர்க்காது. அதற்கு போதுமான அதிகாரங்கள் இல்லை. அதில் அதிகாரங்கள் ஒருகையால் கொடுக்கப்பட்டு மறுகையால் பறிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக நாங்கள் தீர்வுத்திட்டத்தினைக் கொடுத்துள்ளோம். இது ஏற்றுக்கொள்ளப்படுகின்றபோது இரண்டில் மூன்று பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் தேவை. எமது தீர்வின் பிரகாரம் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியிருக்கும். சில சமயம் அதுவோர் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் போக வேண்டியிருக்கும். இங்கு நாம் முன்வைத்த தீர்வினை ஆளுங்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொண்டால் சர்வஜன வாக்கெடுப்பிற்குப் போவது கூட பெரிய விடயமல்ல. ஆனால், இங்கு அவர்கள் அதனைச் செய்யமாட்டார்கள் என்பதுதான் காலங்காலமான வரலாறு. ஆகவே, 13 ஆவது திருத்தம் என்பது முழுமையான விடயம் அல்ல. அதனடிப் படையில் இனப் பிரச்சினையினைத் தீர்க்க முடியாது என்பதுவே கூட்டமைப்பினுடைய கருத்து. அதனடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகி நடைபெற்றன.

கேள்வி: இந்தியா கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தீர்வு பற்றி என்ன விடயத்தினைப் பேசிவருகின்றது? இக் கலந்துரையாடல்களில் என்ன புலப்படுகின்றது?

பதில்: இந்தியாவுடன் நாங்கள் பல்வேறு பட்ட காலங்களில் பல்வேறுபட்ட வகையில் பேசியிருந்தோம். இந்தியா, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் குறிக்கப்பட்ட காலப்பகுதியில் கொண்டிருந்த நிலைக்கும் இன்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்குக் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமையினால் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை இந்தியா ஆதரித்திருக்கக் கூடிய சூழ்நிலையில் இன்று நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. ஆகவே, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தமிழ் மக்களுடைய தீர்வுக்கு பங்களிக்கும் என நான் நம்புகின்றேன்.

இப்போது இந்தியா மாத்திரமல்ல அமெரிக்காவும் எமது பிரச்சினையில் பங்குதாரர் ஆகியுள்ளது. அவர்கள் தான் ஜெனீவா தீர்மானத்தினைக் கொண்டுவந்தார்கள். ஆகவே, இன்று சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு எமது பிரச்சினையில் ஆரம்பமாகியுள்ளன.

இந்தியா 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றிக் கூறிக்கொண்டிருந்தாலும் கூட, ஓர் கட்டத்தில் இந்தியப் பிரதமர் பதின்மூன்று பிளஸ் பற்றி எங்களுக்குக் கூறினார். அதனையே இலங்கை ஜனாதிபதியும் கூறினார். ஆனால், பிளஸ் என்பதற்கு யாரும் விளக்கம் தரவில்லை.

ஆகவே, அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலைமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியுள்ளது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் கொள்கையளவில் இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட நடைமுறையில் அது சாத்தியப்படாத தொன்றாகவேயுள்ளது. தற்போது வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை தாங்கிய சுஷ்மிதா நாடாளுமன்றத்தில் 13 பிளஸ் பற்றி கேள்வியெழுப்பிய போது கூட யாரும் வாய் திறக்கவில்லை.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய நிலையில் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றுடனான தீர்வு பற்றி நகர்வில் முன்னெடுத்துச் செல்ல வில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே. இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கையளித்த தீர்வுத்திட்டத்தில் இவ்விடயங்கள் என்னவகையில் உள்ளன?

பதில்: தயாகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற விடயங்களினுடைய அர்த்தங்கள் ஒவ்வொருவராலும் எந்த வகையில் பொருளாக்கம் செய்யப்படுகின்றது என ஓரு கேள்வியுள்ளது. வடகிழக்கு என்பது எமது தாயகம். அதைப்பற்றியே பேசுகின்றோம்.

தமிழ் மக்களுடைய தேசியம் என்பது நாங்கள் பல்லாண்டு காலமாக அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே மொழியினைப் பேணுகின்றோம். ஒரே கலாசாரத்தினைப் பேணுகின்றோம். பண்பாட்டினைக் கொண்டுள்ள மக்களாக நாம் வாழ்கையில் ஒரு தேசிய இனமாக நாங்கள் இருக்கின்றோம். அவ்வாறான ஓர் தேசிய இனத்திற்கு தனது தலைவிதியை தானே நிர்ணயிப்பதற்கான சுயநிர்ணய உரிமை உண்டு.

இந்த இடத்தில் நான் கூறுவது என்ன வெனில், முன்னர் எமக்கு ஓர் பாரிய பலம் இருந்தது. ஆனால், இன்று புலிகளின் அழிவுக்குப்பிற்பாடு அது இல்லை. இன்று நாம் எமக்கான பலம் என்று கூறினால் அது எமது மக்களும,; இன்றைக்கு கிடைத்திருக்கக்கூடிய சர்வதேச ஆதரவுமே ஆகும்.

தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு நானோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எதிரானவர்கள் அல்ல. நிச்சயமாக தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், வடகிழக்கு இணைந்த ஒரு பிரதேசம் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற படியே தீர்வுத்திட்டத்தினை தயாரித்துள்ளோம்.

இலங்கை அரசாங்கம் சுயநிர்ணய உரிமையினை ஏற்றுக்கொண்டு தமிழ்த் தேசத்தினையும் சிங்கள தேசத்தினையும் அங்கீகரிக்கவேண்டும். அந்த அங்கீகரிப்பின் பிரதிபலிப்பாக இருதேசம் ஒரு நாடாக வரவேண்டும் என்பது மிக நல்ல விடயம். ஆனால், புலிகளின் காலப்பகுதியில் கூட இலங்கை அரசாங்கம் இரண்டு தேசங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒஸ்லோவில் கூட சமஷ்டி பற்றி பேசுவதற்குத்தான் பாலசிங்கத்திற்கும் பீரிஸ{க்கும் இடையில் உடன்பாடு வந்ததே தவிர, இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் அல்ல. இரண்டு தேசங்கள் என்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், மாறியிருக்கக்கூடிய தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் விடுதலைப் புலிகளின் காலப்பகுதியை விட இறுக்கமான விடயங்களுடன் முன்நகர முடியாது. இலங்கை அரசாங்கத்திடம் இருதேசங்களை ஏற்றால்தான் நாங்கள் பேசுவோம் என்றால் அது எவ்வளவு தூரம் இன்றைய ஆக்கிரமிப்பு நெருக்கடிகளுக்குள் அதிகாரங்களைக் கையில் எடுப்பதற்கு சரியான ஒரு வழியாக இருக்கும்? இதற்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது.

தமிழ் மக்கள் தமது ழு விடயங்களையும் பண்பாடு கலாசாரம் பாதுகாப்பு என இவை எல்லாவற்றையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில் ஒரு தீர்வு தேவை. அப்படியான ஒரு தீர்வை எடுத்துக்கொண்டு தமிழ் மக்கள் தமது கால்களில் நின்றுகொண்டு அடுத்தகட்டத்தினைப்பற்றி யோசிக்க வேண்டும்.

கேள்வி: உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியது என்கிறீர்கள். அவ்வாறாயின் ஏன் அந்தத் தீர்வுத்திட்டத்தில் வெளிப்படைத் தன்மை பேணப்பட முடியாது போனது? இவ்வாறாக வெளிப்படைத்தன்மை பேணப்படாதது பல்வேறு விமர்சனங்களை அல்லவா ஏற்படுத்தியுள்ளது?

பதில்: இது நியாயமான கேள்விதான். பேச்சுவார்த்தையினை முறியாமல் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் எல்லா விடயங்களையும் நாம் வெளியில் கூற முடியாது என்ற நிலை காணப்பட்ட போது சிங்களத் தரப்பின் அதி தீவிர எதிர்ப்பாளர்களாலும் அதே மாதிரி தமிழ்த் தரப்பில் அப்படி இருக்கக் கூடியவர்களாலும் பேச்சுவார்த்தை முறியடிக்கப்படலாம் என்றிருந்தது உண்மை. இதனை அரசாங்கம் தனக்குச் சார்பாகப் பயன்படுத்தியது.

பேச்சுகள் பொதுவில் வெளிப்படைத் தன்மையாகவும் தகவல்கள் வெளியிடப்படாதும் நடத்தப்படலாம். எனினும், தமிழ் மக்களிடத்தில் தமக்கான தீர்வாக கூட்டமைப்பு என்ன பேசுகின்றது என்பது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் என்பதும் நியாயம்.

ஆகவே, நான் நினைக்கின்றேன் எதிர்காலத்தில் பேச்சுகளை முன்னெடுப்பதாக இருந்தால் ஓர் வெளிப்படைத்தன்மை அவசியம் என விளங்கிக்கொள்கின்றேன்.

மூலம்: வீரகேசரி – சித்திரை 19, 2012

பிரசுரித்த நாள்: Apr 23, 2012 18:20:37 GMT

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.