Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழ்வில் நாணயங்களின் பங்கு

Featured Replies

தமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர் , பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்கள் பல கிடைத்துள்ளன. பொதுவாக நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் வகை, தரம் முதலியன மக்களின் உற்பத்தித் திறனையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டும். மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னனின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன. வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசர், தெய்வங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சமயச் சின்னங்களும் அவற்றில் இடம்பெறுகின்றன. இவை அக்காலத்தின் கலைகளையும் சமயங்களையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.

நாணயத்தின் மதிப்பு அகமதிப்பு, புற மதிப்பு, தொன்மை மதிப்பு என்று பகுக்கப்படுகிறது. நாணயம் என்பது வணிகப் பொருளாக மட்டுமின்றி, அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக உள்ளது. வைகை , நொய்யல் , தென்பெண்ணை , தாமிரபரணி ,பவானி , காவரி , நதிகளின் ஓரம் மண் அரிப்புக்காரர்களிடமிருந்தும், அமராவதி , ஆந்திரா , சித்தூர் , மைசூரு நகரங்களின் பாழடைந்த கோட்டை , கோவில் போன்ற இடங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், புலி, மீன், குதிரை, காளைமாடு, சிங்கம் போன்ற விலங்குள், பறவைகள், சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். களப்பிரர்கள் காசு அவ்வளவாக தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. ஆந்திராவில் அகஸ்டஸ் டைபீஸ் என்ற ரோமானிய மன்னன் கி.மு.40ல் வெளிவந்த நாணயங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் தற்போது அதிகம் கிடைக்கும் தொன்மையான நாணயம் ராஜராஜன் காலத்து காசுகள் தான். கி.மு.ஒன்றாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களையும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன் பார்வதி உருவ நாணயங்கள் வெளிவந்துள்ளன. ஆர்காட் நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்கள்ஆட்சிக் காலத்தில் நிலவிய மத ஒற்றுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சான்றாக உள்ளது

இன்றைய நாணயங்கள் போன்றே அக்கால நாணயங்களிலும் தலை, பூ என்ற இரு பகுதிகள் உள்ளன. இவற்றில் மன்னர்களின் பெயரையோ பட்டப் பெயரையோ மட்டுமே பொறித்துள்ளனர். காலத்தைப் பொறிக்கவில்லை. கி. மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னம் பொறித்த நாணயங்கள் கோவை மாவட்டத்துப் பள்ளலூரில் சவக்குழிகளில் கிடைத்துள்ளன. இதன் தலைப் பகுதியில் யானையின் சின்னம் பொறித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் கிடைத்துள்ள பல்லவர் கால நாணயங்களின் ஒரு பகுதியில் இரண்டாம் இராசசிம்மனின் பட்டப் பெயரான ஸ்ரீநிதி அல்லது ஸ்ரீபர என்பதும் பல்லவர் முத்திரையான காளைச் சின்னமும் காணப்படுகின்றன. சில நாணயங்களில் ஒன்று அல்லது இரண்டு மீன் சின்னங்கள் பொறித்துள்ளனர். மறு பகுதியில் சக்கரம், பிறைமதி, சைத்திய கோபுரம், குடை, ஆமை முதவற்றுள் ஏதேனும் ஒரு சின்னம் இடம் பெறுகின்றது.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பொன், காணம், காசு ஆகிய நாணயங்களின் வடிவ அமைப்பு, எடை ஆகியவை குறித்து அறிய முடியவில்லை. சோழர் காலக் கல்வெட்டுகள் குறிக்கும் காசு, பழங்காசு, மாடை முதலிய தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவளேச்சுரத்தில் கிடைத்துள்ளன. இவை தவிர பிற இடங்களில் கிடைத்துள்ள நாணயங்கள் முழுக்க தங்கத்தால் ஆனவையல்ல. பிற உலோகக் கலப்புடையவை. பிற்காலச் சோழர்கால நாணயங்கள் பெரும்பாலும் செம்பால் ஆனவையே. இம்மாற்றம் அக்காலத்தின் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகின்றது.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது. முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப்பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது. அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.

270px-Spsc.png

magnify-clip.png

சங்ககால பாண்டியர் வெளியிட்ட வெள்ளி முத்திரைக் காசுகள்:

தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டின் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நிறுவப் பயன்படுகிறது. முதலில் இவற்றைப் போன்ற முத்திரைக் காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால், இக்காசுகள் வட இந்தியா வழியே தமிழகத்துக்கு வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து வட இந்தியா வழி முத்திரைக்காசு என்ற கருதுகோள் மாறத்தொடங்கியது. அதற்கு வழுச்சேர்க்குமாறு தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

முதன் முதலாக முத்திரை நாணயங்களை வெளியிட்டவர்கள் பாண்டியர்கள். இதைத் தொடர்ந்து செப்பு நாணயங்களை வெளியிட்டார்கள். இவர்கள் வெளியிட்ட செப்பு நாணயம் சதுர வடிவமானது. முன்பக்கத்தில் இடது பக்கம் நோக்கி நிற்கும் குதிரை காணப்படுகிறது. இதன் தலையின் கீழ் ஆமைகள் இரு தொட்டிகளில் உள்ளன. பின்பக்கத்தில் உருவகப்படுத்தப்பட்ட மீன் உள்ளது. தமிழ் - பிராமி வரி வடிவடிவத்தில் பெருவழுதி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கும் என்று நம்புகின்றனர். இதில் காணப்படும் ஆமை, வேள்வியோடு தொடர்புடையது. இது பாண்டியர் வேள்வி மீது கொண்டிருந்த ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது.

135px-Peruvazhudhi.jpg

magnify-clip.png

பெருவழுதி நாணயம்:

பெருவழுதி நாணயம் என்பது சங்ககால பாண்டியர் வெளியிட்ட செப்பு நாணயமாகும். சிலர் பேரரசர்களான மூவேந்தர்களும் குறுநில மன்னர்கள் என்றும், அதனால் அவர்கள் நாணயங்கள் வெளியிடவில்லை என்றும் அவர்கள் மௌரிய பேரரசின் நாணயங்களையே பயன்படுத்தினர் என்றும் கூறி வந்தனர். இதற்கு முன்பு சங்ககால இலக்கிய கூற்றுகள் கற்பனை என்றே வரலாற்றாசிரியர்களால் நம்பப்பட்டு வந்தது. இந்நாணயம் கிடைத்த பிறகு சங்க காலத்தில் பண்டமாற்று முறையே இருந்ததென்றும் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை என்றும் நிலவி வந்த கருத்து மாறியது. சங்ககால பாண்டியர்களின் பட்டப்பெயரான பெருவழுதி என்பது இந்நாணயங்களில் பொறிக்கப் பட்டிருப்பதையும் இந்நாணயங்கள் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதைக் கொண்டும் சங்ககாலம் பொ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியிருந்ததை அறிய முடிகிறது.

270px-Sangamcholacoin.jpg

magnify-clip.pngவேறொரு சங்க கால சோழர் நாணயம் (முன்பக்கம் யானையும் பின்பக்கம் புலியும் காணப்படுகிறது)

அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர்காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையிலும் பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டும் இருக்கிறது. இந்நீள்சதுர வடிவச் செப்புக் காசில் காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரைக் காசுகளில் உள்ள காளையைப் போலவே உள்ளதால் இக்காசு வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து செய்யப்பட்டுளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

180px-Sangamkothaicoins.jpg

magnify-clip.png

மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை காசுகள்:

சங்ககாலச் சேரர் நாணயங்கள் விற்பொறி பொறித்தனவாயும், சிலக் காசுகளில் மன்னர்களின் பெயரயே பொறித்ததாயும் உள்ளன. அதில் மன்னரின் தலை வடிவம் கீழும் மேற்பரப்பில் தலையைச் சுற்றி அரைவட்ட வடிவில் அவர்கள் பெயர் பொறித்தும் காணப்படுகிறது. இதற்கு உதாரணமாக சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை மற்றும் குட்டுவன் கோதை போன்ற சங்ககாலச் சேர மன்னர்களின் காசுகளை உதாரணமாகக் கொள்ளலாம். மேலும் இவர்கள் வெளியிட்ட முத்திரைக் காசுகளும் தமிழகத்தில் கிடைத்துளன.

90px-Malayamancoin.jpg

magnify-clip.png

மலையமான் காசுகள்:

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

270px-Satavahana_%282%29.jpg

magnify-clip.png

தமிழகத்தில் கிடைத்த சாதவாகனர் காசுகள்:

சங்ககாலத் தமிழருக்கும் ஆந்திர மன்னர்களான சாதவாகனர்களுக்கும் நல்ல உறவு இருப்பது அவர்கள் வெளியிட்ட காசுகள் அதிகளவு தமிழகத்தில் கிடைத்திருப்பதைக் கொண்டு நிறுவலாம். வசிட்டிபுத்திர சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சிவ சிரிபுலுமாவி, வசிட்டிபுத்திர சாதகர்ணி மற்றும் கௌதமி புத்ர சாதகர்ணி போன்ற மன்னர்களின் நாணயங்களே அதிகளவில் உள்ளன. இந்நான்கு மன்னர்களின் நாணயங்களிலும் முன் பக்கத்தில் யானை மற்றும் அம்மன்னனின் தலையும் பின் பக்கத்தில் உச்சயினி குறியீடும் காணப்படும். மன்னனின் தலைப்பகுதியின் ஒரு பக்கம் அவனது பெயர் தமிழிலும் மற்றொரு பக்கத்தில் பிராகிருதத்திலும் காணப்படும். இவற்றில் காணப்படும் தமிழ் எழுத்துகள் மாங்குளம் கல்வெட்டுகள் உள்ள தமிழ் போல் காணப்படுகிறது. சாதவாகனர் காசுகள் செய்ய பயன்படுத்திய ஐந்து வார்ப்புக்கூடுகள் தமிழகத்தில் செய்த காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைத்துளன.

அரிக்கமேட்டில் கிடைத்துள்ள உரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்து நாணயங்களும் அவரையடுத்து வந்த மன்னர் காலத்து நாணயங்களும் சங்க இலக்கியத்தில் சுட்டியபடி அயல் நாடுகளுடன் தமிழகத்திற்கு இருந்து வந்த வணிகத் தொடர்புகளை நிலை நாட்டுகின்றன. கருநாடக மாநிலத்தில் சந்திரவல்லியில் கண்டெடுக்கப்பட்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குரிய சீன நாணயம் ஒன்று சீனர்களோடு தமிழகத்துக்கு இருந்த தொடர்பினை விளக்குகிறது.

108px-Greek_coin_karur.jpg

magnify-clip.pngகரூரில் கிரேக்கக் காசு

தமிழகத்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும், கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதைக் கூட அறிய முடிகிறது. கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இக்காசுகளைக் கொண்டு கிரேக்கத் தீவுகளான ரோட்சு, கிறீட்சு, திரேசு, தெசிசு போன்றவற்றுக்கும் தமிழகத்துக்கும் இருந்த வணிகத்தொடர்புகளையும் கிரேக்க நாகரிக கடவுளர்களையும் அறிய முடிகிறது. மேலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிரிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட பத்து காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன . இவற்றைக் கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு சென்று பின் மெசொப்பொத்தேமியா நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர் என்ற கருதுகோளை உறுதிப்படுத்தினர்.

180px-AugustusCoinPudukottaiHoardIndia.jpg

magnify-clip.png

புதுக்கோட்டையில் அகசிட்டசு மன்னர் நாணயம்

உரோமானிய வெள்ளிக் காசு ஒன்று கொங்கு நாட்டிலுள்ள திருப்பூரில் கிடைத்துள்ளது. இத்தகைய தொடர்பால், கருத்துப் பரிமாற்றங்களும், பண்ட மாற்றங்களும், பண்பாட்டுத் தாக்கங்களும் நிகழ்ந்துள்ளமையை அறிய முடிகிறது. தமிழகத்தில் கிடைத்த ரோமானிய நாட்டு மன்னர்களான அகசிட்டசு , தைபிரியசு, கலிகுலா, கிளாடியசு , நீரோ ஆகியவர்களின் நாணயங்களைக் கொண்டு, வரலாற்றாய்வாளர்கள் எந்தெந்த மன்னரின் காலத்தில் ரோமானியர் எந்த அளவு தமிழகத்துடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறிகின்றனர். இந்த ரோமானிய நாணயங்களை ஆராய்ந்தோர் இதற்குச் சமமான நாணயங்கள் வேறெங்கும் கிடைக்கப்பெறாததால் இவை வெறும் காசுகளாக மட்டும் பயன்படாமல் திரவியங்களகவும் பெரும் மதிப்புமிக்க பொருட்களாகவும் பயன்பட்டன எனக் கருதுகின்றனர். இதனாலேயே பெருமளவு நாணயங்கள் குவியல்களாக புதைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். பிளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுட்டெர்செசு (Sesterces) தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியைப் பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிபத் தொடர்புகள் எந்தளவுக்குச் சிறந்திருந்தது என்பதை அறியலாம்.

தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் உரோம நாட்டுடன் வாணிபத் தொடர்பு இருந்திருக்கிறது. இதற்குத் தமிழகத்தில் கிடைத்த உரோமானியக் காசுகள் சான்று பகர்கின்றன. சேரநாட்டின் மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் உரோமநாட்டு மக்களை மிகவும் கவர்ந்தன. உரோமானியர்கள், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளைக் கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள மேற்குறிப்பிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாகப் பல உரோமானியக் காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளன.

பண்டைய தமிழகமும் சீனாவும் கொண்டிருந்த வாணிபத் தொடர்பின் எச்சங்களாகத் தமிழகத்தில் கிடைத்த சீன நாணயங்கள் விளங்குகின்றன சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் 'ஒலயக் குன்னம்' என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள 'தாலிக்கோட்டை' என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது. சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர். தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.பண்டைய தமிழர்கள் மேலை நாட்டாருடன் மட்டும் கடல் வாணிபம் கொண்டிருக்கவில்லை. கீழை நாடுகளான சீனம், மலேசியா, ஜாவா, வட போர்னியா போன்ற நாடுகளுடனும் கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். தாய்லாந்திலும் சீனாவிலும் சோழக்காசுகள் கிடைத்தைக் கொண்டு கிழக்காசிய நாடுகளுடனான சோழர் தொடர்பும் உறுதிப்பட்டுள்ளது. வரலாற்றாளர்கள், அதே போல் தமிழகத்தில் கிடைத்த பினிசிய மன்னர்களின் காசுகளைக் கொண்டும், சசானிய மன்னர்களின் காசுகளைக் கொண்டும் அந்தந்த நாடுகளுடனான தமிழகத்தின் தொடர்பையும் அறிய முடிந்தது.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தாய்லாந்துடன் கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழகம் கடல் வாணிபத் தொடர்பினை வைத்திருந்தது தெரிய வருகிறது. அங்கு இந்தியாவிற்குச் சொந்தமான கர்னீலியன் மணிகள், கண்ணாடி மணிகள், கர்னீலியன் முத்திரைகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் சோழ மன்னரின் செப்பு நாணயமும் கிடைத்துள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர் அந்நாட்டுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

கிழக்காசிய நாடுகளுக்கும், ரோமாபுரிக்குமிடையே நடைபெற்று வந்த கடல் வாணிபத்தில் தமிழகமும் பெரும்பங்கு ஏற்று வந்தது. சீனம், மலேசியா, ஜாவா போன்ற நாடுகளிலிருந்து பல பண்டங்களைக் கொள்முதல் செய்து அவற்றை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது எனக் கூறுகின்றனர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

பொருட்கள் பண்டமாற்றில் இருந்து நாணயங்களை அறிமுகப்படுத்தியது என்பது மிகமுக்கிய விடயம்.

ஆனால், நாம் எமக்கு என ஒரு நாட்டை உருவாக்காமல் போனதால் எமது பெருமைகளையும் கண்டுபிடிப்புகளும் உலகிற்கும் எமது தலைமுறைகளுக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.