Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை வந்தது எதற்காக? – தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

திராவிடக் கட்சிகளின் பங்கேற்பு இல்லாமல் இந்திய நாடாளுமன்ற குழுவினரின் இலங்கை விஜயம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருகையானது சர்வதேச இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏனெனில் இந்த வருகை தமிழ் மக்கள் எதிர்பார்த்த பலன்களைத் தராமலே நிறைவடைந்திருக்கிறது.

இந்திய நாடாளுமன்ற குழு வரவுள்ளது என்பதை அறிந்தவுடனேயே குடாநாட்டு மக்கள் வன்னி மக்கள் உட்பட அனைவரும் எதிர்பார்ப்புடனேயே காத்திருந்தனர். இக்குழு நேரடியாகத் தமது இடங்களுக்கு வருகை தந்து குறைநிறைகளைக் கேட்டறியும் என்று இந்த மக்கள் நம்பினர். ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறான எதுவுமே நடக்கவில்லை.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்வதற்கென்ற போர்வையில் வருகை தந்த இந்தியக் குழுவினரின் செயற்பாடுகள் அனைத்தும் அரசியல் மயப்பட்டதாகவே இருந்தது. செல்கின்ற இடங்களில் எல்லாம் அரசியல்வாதிகளைச் சந்திப்பதிலேயே இந்தக்குழு தமது நேரத்தைச் செலவிட்டது.

தமிழ் நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காகவும் தமிழகத் தலைவர்களின் வாய்களை அடைப்பதற்காகவும் மாத்திரமே இந்தியக்குழு வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்குச்சென்றது. வன்னியிலும் சில பொதுமக்களுடன் மட்டும் உரையாடியது. இதனை விட ஏனைய அனைத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலுடனேயே நடைபெற்றது.

கொழும்பிற்கு வந்தவுடன் அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய மேற்படி இந்திய நாடாளுமன்றக்குழு யாழ்ப்பாணம் வந்தும் அதனையே மேற்கொண்டது. கொழும்பில் சந்தித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் சந்தித்ததுடன் தமிழக மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவரும் இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளவருமான டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்தது.

இதற்கப்பால் ஈழத்தமிழ் மக்களை அழித்தொழித்து, ஈழத் தமிழ் மக்களின் இரத்தத்தில் சுவை கண்ட போர்க் குற்றவாளியாகவுள்ள மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியையும் மேற்படிக் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய ஒரு விடயம் யாதெனில், யாழ்.குடாநாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவேளை உணவிற்கே வழியற்றவர்களாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கையில், யாழ்.நகரை அண்ணாந்து பார்த்த இந்தியக்குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் போருக்குப் பின்னரான யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி பிரமிப்பூட்டுவதாகக் கூறினார்.

போருக்குப் பின்னர் குடாநாட்டு மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்கோடு தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கிப் படையெடுத்து வந்த அரச தனியார் வங்கிகளின் கட்டடங்களையும், குடாநாட்டு வர்த்தகர்களுக்கோ குடாநாட்டு மக்களுக்கோ சந்தர்ப்பம் வழங்காமல் இனவெறிச் சிங்கள ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் தென்னிலங்கை வர்த்தகர்களால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் கட்டடங்களையும், குடாநாட்டு மக்களின் கலை கலாசார பண்பாடுகளைச் சீரழிப்பதற்காக மகிந்த குடும்பத்தின் செல்வாக்குடன் அமைக்கப்படும் ஆடம்பர உல்லாச விடுதிகளையும் பார்த்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா போருக்குப் பின்னர் குடாநாடு அபிவிருத்தியடைகிறது என்று கூறினார்.

சுஷ்மாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு உள்ளம் துடிக்காத தமிழர்களே இல்லை. உள்ளம் துடிக்காதவர்கள் தமிழர்களே இல்லை. சிங்கள இனவெறிப் படைகளும், 1987 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியப் படைகளும் யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றிய கொலைவெறித் தாண்டவங்களால் தமது கணவன்மாரை இழந்த ஏறக்குறைய 9 ஆயிரம் வரையான விதவைகள் இன்று யாழ்.குடாநாட்டில் வசிக்கின்றனர். இதனை விட கடத்தப்பட்டுக் காணாமற்போனோரின் மனைவியரும் ஏராளம். தினமும் ஒருவேளை உணவிற்கே இவர்கள் படுகின்றபாடு எவருக்கும் புரியாது.

இதனை விட ஆண்துணையின்றி தனிமையில் இருக்கின்ற மேற்படி விதவைகள் சிங்களப் படைகளினதும் ஒட்டுக்குழு உறுப்பினர்களதும் பாலியல் இச்சைகளுக்குள்ளும் வலிந்து இழுக்கப்படுகின்றனர். இவ்வாறான பெண்களில் சிலர் தமது பிள்ளைகளின் பசியைப் போக்குவதற்காக 500, 1000 ரூபாய்களுக்காகவே பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் நெற்றியில் குங்குமப் பொட்டிட்டவாறு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்மணியாகிய சுஷ்மா மேற்படி பெண்களைச் சந்தித்து அவர்களின் கதைகளைக் கேட்டறிந்திருந்தால் ஈழத்தமிழர்களினதும் தமிழக உறவுகளினதும் மனங்கள் ஓரளவேனும் குளிர்ச்சியடைந்திருக்கும். ஆனால் சுஷ்மா அப்படிச் செய்யவில்லை. போரில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் தொடர்பாக இந்தியக் குழுவினர் எந்த அக்கறையும் எடுக்கவில்லை.

விடுவிக்கப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் எந்தவிதத் தொழில் வாய்ப்புகளும் இன்றிக் கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கான மறுவாழ்வு தொடர்பில் கூட இந்தியக் குழுவினர் எந்தவித அக்கறையும் எடுக்கவில்லை. உண்மையாகவே இந்தியக் குழுவினர் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய வந்திருந்தால் அவர்கள் மேற்படி விடயங்களில் அக்கறை எடுத்திருப்பர். ஆனால், அவர்கள் வந்த நிகழ்ச்சி நிரல் வேறாக இருந்தது.

யாழ்.குடாநாட்டில் இன்றுவரை எத்தனை சதவீத நிலப்பகுதி சிறீலங்காப் படையினரால் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்குள்ள மக்கள் நலன்புரி நிலையங்களிலிருந்து எத்தகைய துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்பதும் சுஷ்மாவுக்கோ இந்தியக்குழுவினருக்கோ தெரியுமா?

தமிழர் தாயகத்தின் கரையோரப்பகுதிகளும் வலி.வடக்கு, வலி.மேற்கு, மண்டைதீவு மற்றும் வன்னிப் பிராந்தியங்களின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள அராஜகப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பாரிய படைமுகாம்களும் படைத்தளங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கிருந்து விரட்டப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் உள்ள நலன்புரி நிலையங்களில் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கின்றனர். இதெல்லாம் சுஷ்மாவுக்குத் தெரியாதா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சி முடிவுக்குக்கொண்டு வரப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம், வன்னி உட்பட வடக்கு கிழக்கில் எத்தனை புத்த விகாரைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன என்பதும் எந்தெந்த இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் சுஷ்மாவுக்கோ இந்தியக் குழுவுக்கோ தெரியாதா? நிச்சயமாக இல்லை. மேற்படி விடயங்களைத் தெரியாத ஒருவர் இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. எம்.பிக்களாகவும் இருக்கமுடியாது. ஏனெனில் இலங்கையைப்போல் இந்தியாவிலும் ஈழத்தமிழர் பிரச்சினையே அரசியலையும் அரசியல்வாதிகளையும் தீர்மானிக்கின்றது.

இந்தியாவில் இருந்தவாறே தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியக் குழுவினர் அறிந்தவர்களாகவே உள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அன்றாடப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடாமல், அவர்களின் இடங்களுக்குச் சென்று பார்வையிடாமல் அரசியல்வாதிகளை மட்டுமே இக்குழு சந்தித்திருக்கிறது.

அரசியல்வாதிகளை மட்டும் சந்திப்பதாக இருந்தால் இந்தியாவிற்கு அவர்களை அழைத்துச் சந்தித்திருக்கலாமே. ஆனால் இங்கே வந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவது என்ற போர்வையில் இந்தியா தனது இராஜதந்திர காய் நகர்த்தலை மேற்கொண்டிருக்கிறது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையால் கொதிப்படைந்துள்ள மகிந்த குடும்பத்தையும் அமைச்சர்களையும் ஆசுவாசப்படுத்துவதற்காகவே இந்திய அரசு இந்தக்காய் நகர்த்தலை மேற்கொண்டுள்ளது. குழுவின் தலைவரும் இந்திய எதிர்க்கட்சித் தலைவருமாகிய சுஷ்மா தனிமையாக மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தமை இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இந்நிலையில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களும் தமிழகத் தமிழ் மக்களும் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புகள் கொஞ்சமானதல்ல. மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தில் ஏராளமான உயிர்கள் உட்பட இழக்கக்கூடாத அனைத்தையும் தமிழ் மக்கள் இழந்து நிற்பது அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக அல்ல. அதேவேளை எமக்கான விடுதலையை சிங்களத் தரப்பு தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருமென்று தமிழீழ தேசியத் தலைவரோ போராளிகளோ தமிழ் மக்களோ நம்பியிருக்கவில்லை. தற்போதும் நம்பவில்லை.

இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் இந்திய மத்திய அரசு ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் தனது கடும்போக்கு மனநிலையைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின் முதலாவது தடவை ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்ட போதே, போர் முடிந்துவிட்டது, இனியாவது இலங்கை அரசு தமிழர்களுக்கு தீர்வை வழங்கட்டும் என்று எண்ணி இலங்கை அரசைக் காப்பாற்றாமல் விட்டிருக்கும்.

ஆனால் அப்போது காப்பாற்றிய இந்தியா இப்போது தமிழ் நாட்டு மக்களுக்குப் பயந்து இலங்கைக்கு எதிராக வாக்களித்துவிட்டு இன்று நாடாளுமன்றக் குழுவை அனுப்பி மகிந்தவிடம் மண்டியிட வைத்துள்ளது. ஆனால் 7 கோடி தமிழ் மக்கள் வாழ்கின்ற தாய்த் தமிழகத்தில் இன்று என்றுமில்லாதவாறான தமிழர் ஆதரவு மேற்கிளம்பியிருக்கிறது. எதிரும் புதிருமாக இருந்த கருணாநிதி ஐயாவும் ஜெயலலிதா அம்மாவும் ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் இன்று ஒருமித்த கருத்திற்கு வந்திருக்கின்றனர்.

இதனை தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுத் தலைவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எல்லோரும் சொல்வதுபோல் இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தராது. தமிழக மக்களும் தமிழகத் தலைவர்களும் இணைந்து இதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களும் இதில் காத்திரமான பங்கு வகிக்க வேண்டும்.

நன்றி : ஈழமுரசு

http://video.thaaitamil.com/?p=69

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.