Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமும் இந்தியாவும்-18: இந்திராவிடம் லலித் கொடுத்த ஆவணம்!

Featured Replies

1984 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் பயிற்சிபெற்ற தமிழ்ப் போராளிகள் பாக்கு நிரேரியைக் கடந்து வந்து இலங்கையின் வட பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியபோது இலங்கை - இந்திய உறவு நிலைகளில் ஒருவித முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை தொடர்பாக கடந்த வாரத்தில் பார்த்தோம். அத்துடன், போராட்டத்தை அடக்குவதற்கான ஒரு பொறிமுறையாக தேசிய பாதுகாப்ப அமைச்சை இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமைத்திருந்தமை தொடர்பாகவும் பார்த்திருந்தோம். தேசிய பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத்முதலியை நியமித்திருந்தார்.

இதேகாலப்பகுதியில் தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்களை அமைத்து ஆயுதப் பயிற்சியை இந்தியப் பலனாய்வு நிறுவனமான 'றோ' வழங்கிவருவது தொடர்பிலான தகவல்கள் ஊடகங்களின் மூலமாகக் கசியத் தொடங்கியிருந்தன. உண்மையில் இந்தச் செய்திகள் கசிந்தனவா அல்லது இந்திய அரசினாலேயே கசியவிடப்பட்டனவா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றுதான். கொழும்பை அச்சுறுத்திப் பணியவைப்பதற்காக இந்தத் தகவல்களை புதுடில்லி வேண்டுமென்றே கசியவிட்டிருக்கலாம் எனக் கருதவும் இடமுள்ளது. இந்தத் தகவல்கள் கொழும்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. புதுடில்லி தம்முடன் 'பதிலாள்' யுத்தம் ஒன்றுக்குத் தயாராகிவருவதை ஜனாதிபதி ஜெயவர்த்தன தெளிவாகவே உணர்ந்துகொண்டிருந்தார். அதற்கான தயார்படுத்தல்களையும் அவர் முன்னெடுத்தார்.

இந்த நிலையில் இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு இந்தியா முயற்சி செய்கின்றது என்ற ஒரு பிரச்சாரத்தையும் இலங்கை மேற்கொண்டு வந்தது. அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர் நேரடியாகவே இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து இந்திய எதிர்ப்பணர்வை இலங்கையில் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள். இதேவேளையில், இந்தத் தகவல்கள் இந்திய எதிர்க்கட்சிகள் மட்டத்திலும் கூட சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அரைகுறையாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியிருந்தன. எதிரணியினரைச் சமாதானப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தமையால் இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் 1984 ஏப்ரல் 6 ஆம் திகதி இது தொடாபில் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

"இது இலங்கை தொடர்பிலான எமது கொள்கையல்ல. எந்தவகையில் உருவானாலும், இலங்கைப் பிரச்சினைக்கு எப்போதும் எங்கேயும் சமாதான முறையிலான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. இலங்கை தொடர்பான எமது கொள்கைக்கு சில வரையறைகள் உள்ளன. பிரிவினை எதனையும் நாம் விரும்பவில்லை. எந்தவொரு நாட்டிலும் பிரிவினைவாதப் போக்கை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. சில வரையறைகளின் அடிப்படையிலேயே எமது கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அதனால், அவற்றை நாம் சமரசத்துக்குள்ளாக்குவோம் என்பதற்கான கேள்வியே இல்லை."

இந்தியப் பாராளுமன்றத்தில் நரசிம்மராவ் வெளியிட்ட அந்த அறிக்கை புரியாத ஒன்றுபோலக் காணப்பட்டாலும், அதற்குள் பல தகவல்கள் மறைந்திருக்கின்றன. குறிப்பாக போராளிகளுக்குப் பயிற்சியளிக்கப்படுகின்றது என வெளியான செய்திகளை அவர் மறுதலிக்காத அதேவேளையில் மறைமுகமாக அதனை ஏற்றுக்கொள்வதைப் போலவும் அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன. அதாவது இலங்கை விவகாரத்தை இந்தியா எவ்வாறு கையாள்கின்றது என்பதை அவரது இந்த சுருக்கமான உரை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்தக் கட்டத்தில் கூட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் றொமேஷ் பண்டாரி உட்பட வெளிவிவகார அமைச்சின் முக்கியமான அதிகாரிகள் பலர் கூட இந்தியா வழங்கும் ஆயுதப் பயிற்சி தொடர்பில் முழுமையான தகவல்களை அறிந்திருக்கில்லை. சில சில தகவல்களே அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

இதேபோலத்தான் கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவரின் நிலையும் இருந்தது. இது தொடர்பாக அவருக்கு எந்தவிதமான தகவல்களும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்காத அதேவேளையில், அது தொடர்பாகக் கேட்கப்பட்டால் அதனை மறுதலிக்குமாறு புதுடில்லியின் உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. அதேவேளையில், ஆயுதப் பயிற்சி முகாம்கள் தொடர்பான படங்கள் மற்றும் இலங்கையில் கைது செய்யப்படக் கூடிய போராளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் அவற்றை ஆதாரமாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டால் தமிழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே போராளிகளுக்கு ஆதரவளிக்கின்றார்கள் எனக் கூறுமாறும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையை அச்சுறுத்துவதற்காக சில தகவல்களை கசியவிட்ட புதுடில்லி, உத்தியோகபூர்வமாக அதனை மறுதலிப்பதெனன்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தது.

இந்தப் பின்னணியில் ஜனாதிபதி ஜெயவர்த்தன இந்தியா எதிர்பார்க்காத வகையிலான காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த லலித் அத்துலத்முதலியை புதுடில்லிக்கு அனுப்பிவைத்து இந்தியாவுடனான பேச்சுக்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டார். லலித்தை அந்தத் தருணத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதற்கு ஜெயவர்த்தன எடுத்த தீர்மானம் மிகவும் முக்கியமானதாகும். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, இலங்கையின் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பெற்றுக்கொள்வது என்பவற்றின் அடிப்படையிலேயே இந்த விஜயம் இடம்பெறும் என ஜெயவர்த்தன அறிவித்திருந்தமையால், லலித் அத்துலத்முதலியை வரவேற்பதற்கு இந்தியா தயாராகவே இருந்தது.

இருந்தபோதிலும், தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியை வழங்குகின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்களில் ஒருவராக லலித் அத்துலத்முதலி இருந்தமையால் அவரது விஜயத்தின்போது என்ன நடைபெறப்போகின்றது என்பதை அனைத்துத் தரப்பினரும் நுணுக்கமாக அவதானித்தனர். அத்துடன், இந்தப் பேச்சுக்களின் பெறுபேறுகளும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ன. 1984 ஏப்ரல் நடுப்பகுதியில் ஆரம்பமான லலித் அத்துலத்முதலியின் இந்த டில்லி விஜயம் நான்கு நாட்களுக்குத் தொடர்ந்தது. இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜீவ் காந்தி, வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ், பாதுகாப்பு அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், இலங்கைக்கான இந்தியாவின் விஷேட தூதுவர் ஜ.பார்த்தசாரதி உட்பட இந்தியாவின் உயர் மட்ட அதிகாரிகள் பலரையும் லலித் அத்துலத்முதலி சந்தித்தார்.

அத்துலத்முதலியின் இந்த விஜயத்தின்போது அவருடன், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஜயந்த ராஜபக்‌ஷ, தேசிய புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த ஸெனி விஜயசூரிய ஆகியோருடன் இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய போர்னாட் திலகரட்ணவும் இணைந்திருந்தார்கள்.

புதுடில்லியில் அத்துலத்முதலி மேற்கொண்ட சந்திப்புக்களில், இந்திரா காந்தியுடனான அவரது சந்திப்புத்தான் பரபரப்பானதாக அமைந்திருந்தது. இந்தச் சந்திப்பின்போது இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களை வெளிப்படுத்தும் வகையிலான ஆவணம் ஒன்றை இந்திரா காந்தியிடம் லலித் அத்துலத்முதலி கையளித்தார். குறிப்பிட்ட பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக லலித் அத்துலத்முதலி சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்திரா காந்தி இருக்கவில்லை. அது அத்துலத்முதலிக்கும் தெரியும். இருந்தபோதிலும் தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா ஆயுதப்பயிற்சியை வழங்குவது தொடர்பான தகவல்கள் தமக்கு ஆதாரபூர்வமாகத் தெரியும் எனக் காட்டிக்கொள்வதன் மூலம் இந்திரா காந்தியை மடக்கலாம் என அத்துலத்முதலி எதிர்பார்த்தார்.

குறிப்பிட்ட ஆவணங்களைக் காண்பித்த அவர், அந்த முகாம்களை மூடிவிடுவதற்கு இந்தியா உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனை வலியுறுத்திய அவர், தேவையேற்பட்டால் குறிப்பிட்ட பகுதிகளை கூட்டாக பரிசோதனை செய்வதற்கும், இந்தியாவுடன் நட்புறவு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன்மூலமாக இந்திராவை மடக்கிவிடட்டதாக அத்துலத்முதலி கருதினார். இருந்தபோதிலும் இந்திரா காந்தியின் பிரதிபலிப்பு மறுதலையாகவே அமைந்திருந்தது. அத்துலத்முதலி எவ்வாறான கோரிக்கைகளுடன் வருவார் என்பதை இந்திரா காந்தி எதிர்பார்த்தே இருந்தார்.

இலங்கையிலுள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்கு இந்தியா படையெடுப்பை நடத்தவேண்டும் என இந்தியாவிலுள்ள சில தீவிரவாத சக்திகள் தெரிவித்துவருவதாகவும் முறைப்பாடு செய்த அத்துலத்முதலி, இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி ஜெயவர்த்தன இந்தியாவுக்கு எதிரான சில கருத்துக்களை வெளியிட்டதாக அத்துலத்முதலி இந்திரா காந்திக்கு விளக்கினார். இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் ஜனாதிபதியினாலும் எனைய தலைவர்களினாலும் தெரிவிக்கப்படும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டியவராக அத்துலத்முதலி இருந்துள்ளார்.

லலித் அத்துலத்முதலி எதிர்பார்த்த வகையில் இந்தப் பயணம் அமைந்திருக்கவில்லை என்றாலும் கூட, இலங்கையின் இனநெருக்கடியில் தன்னுடைய மத்தியஸ்த்த பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வழியை இந்த விஜயம் ஏற்படுத்தியிருந்தது. 83 ஆடிக் கலவரத்தின் பின்னர் மத்தியஸ்த்த முயற்சிகளில் இந்தியா இறங்கியிருந்த போதிலும், கொழும்பின் ஒத்துழைப்பின்மையால் அந்த முயற்சியை இந்தியாவினால் தொடரமுடியவில்லை. இந்த நிலையில் தமிழ்ப் போராளிகளின் ஊடுருவல்- தாக்குதல் என்பன மீண்டும் இந்தியாவின் தயவை நாடி வரவேண்டிய நிர்ப்பந்தத்தை இலங்கைக்கு ஏற்படுத்தியது.

இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு முகாம்கள் இல்லை எனவும், அவர்களுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கவில்லை எனவும் இந்திரா காந்தி திட்டவட்டமாகக் கூறியது சில தெளிவான விடயங்களை அத்துலத்முதலிக்கு உணர்த்தியது. அதாவது, பயிற்சிகளை இந்தியா நிறுத்தப்போவதில்லை என்பதை புதுடில்லி விஜயத்தின்போது அவர் தெளிவாக உணர்ந்துகொண்டார். அதேவேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களைக் குறைக்கலாம் என்பதையும் அவர் உணர்ந்தார். அதனால், இந்தியாவின் மத்தியஸ்த்தத்துடன் 'இணைப்பு- சி' தொடர்பில் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக இந்திரா காந்தியிடம் அவர் தெரிவித்தார். உண்மையில் இந்தியா எதிர்பார்த்ததும் இதனைத்தான்!

இருந்தபோதிலும், பேச்சுவார்த்தை எனக்கூறி காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழர் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதுதான் ஜெயவர்த்தனவின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது. அத்துலத்முதலியின் இந்திய விஜயத்தின் மூலம் ஒரு விடயத்தை ஜெயவர்த்தனவினால் உறுதிப்படுத்த முடிந்தது. அதாவது இந்த விடயத்தில் இந்தியா எவ்வாறான அணுகுமுறையைக் கையாளப்போகின்றது என்பதை அவர் தெளிவாகப் பரிந்துகொண்டிருந்தார். உண்மையில் அதற்காகத்தான் அத்துலத்முதலியை அவர் புதுடில்லிக்கு அனுப்பிவைத்திருந்தார்.

1984 ஏப்ரல் நடுப்பகுதியில் இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு அத்துலத்முதலி கொழும்பு திரும்பிய உடனடியாகவே தனது ஆலோசகர்களுடன் ஜெயவர்த்தன அவசர ஆலோசனைகளை நடத்தினார். இதன்படி மே, ஜூன் மாதங்களில் சீனா, அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு தானே நேரடியாகச் செல்வதற்கு அவர் தீர்மானித்தார். விஜயத்தின் நோக்கம் என்ன என்பதை வாசகர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். புவிசார்ந்த அரசியல் காய்நகர்தல் ஒன்றை ஜெயவர்த்தன ஆரம்பித்தார். அவர் அதில் வெற்றிபெற்றாரா?

அடுத்த அத்தியாயத்தில்..

பூராயத்துக்காக

சிவயோகன்

http://www.pooraayam.com/mukiaya/3795-eelamindia18.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.