Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது மூன்று பெண்களின் கதைகள்-('சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 07:)

Featured Replies

முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

[தவமணி, வசந்தராணி மற்றும் சாரதா ஆகிய மூன்று பெண்கள் குழு கலந்துரையாடல் ஒன்றின் மூலம் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.]

தவமணி: யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த போது, எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்ததால் நாங்கள் அனைவரும் வெளியில் நடமாட முடியாது, பதுங்குகுழிகளுக்குள்ளே ஒளிந்திருக்க வேண்டியிருந்தது. நான் இருந்த பதுங்குகுழிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழிக்குள் சிறுவர்கள் அழுகின்ற சத்தம் எனக்கு கேட்டது. எங்கோ சென்ற இந்தச் சிறார்களின தாயார் மீண்டும் திரும்பியிருக்கவில்லை. இதனால் தனிமையில் இருந்த சிறார்கள் அச்சத்தில் அழுதுகொண்டேயிருந்தனர்.

இறுதியில் அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்வதற்கு நாம் முடிவெடுத்த போது கைவிடப்பட்ட நிலையில் அநாதரவாக இருந்த அந்தச் சிறார்களையும் கூட்டிக் கொண்டு சென்றோம். நான் கூட்டிச் சென்றிருந்த சிறார்களில் பெண் சிறுமி தனக்கு தெரிந்த ஒருவரை வழியில் கண்டு அவருடன் சென்றுவிட்டார். பின்னர் இளம் சிறுவன் என்னுடன் இருந்தான்.

அங்கே நாங்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தோம். நாங்கள் அனைவரும் நந்திக்கடல் கடல்நீரேரியைக் கடந்து சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்காக காத்திருந்தோம். திரும்பும் திசை எல்லாம் துப்பாக்கிச் சன்னங்கள். இதனால் நாம் நிமிர்ந்து நடக்க முடியவில்லை. ஊர்ந்து ஊர்ந்து மெதுவாகச் செல்ல வேண்டியிருந்தது. நாம் இறுதியாகப் பயணித்த சில கிலோமீற்றர் தூரம் வரை இறந்த உடலங்கள் பரவிக் காணப்பட்டன. இவ்வாறு நாம் ஊhர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்த போதும் கூட, எம்முடன் பயணித்த சிலர் துப்பாக்கி ரவைகளால் பதம் பார்க்கப்பட்டு மிக மோசமாகக் காயமடைந்தனர்.

அவர்களை காவிச் செல்ல முடியாதிருந்ததால் அவர்களை அப்படியே அதே இடத்தில் விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இவ்வாறு சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி ரவை ஒன்று சிறு பிள்ளை ஒருவரின் தலையைப் பிளந்து கொண்டு சென்றது. இதனை நான் நேரில் பார்த்தேன். அந்தப் பிள்ளை அந்த இடத்திலேயே இறந்து விட, தாயார் மிகவும் வேதனையுடன் தனது பிள்ளையின் உடலத்தை அப்படியே போட்டுவிட்டு நடக்க வேண்டியிருந்தது.

அந்த நேரத்தில் ஒரு எறிகணையில் பல மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டு வீதிகளில் கிடந்த உடலங்களில் சிறுவர்களின் உடல்களே அதிகமாகக் காணப்பட்டன. இவர்கள் துப்பாக்கி ரவைகளாலும், எறிகணைகளாலும், நீரில் மூழ்கியும் இறந்தனர். என்னுடன் கூட்டிச்சென்ற அந்தச் சிறுவன் எந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன் என்பது கூட எனக்குத் தெரியாது. அவன் ஏனைய சிறார்களுடன் இணைந்து விளையாட விரும்பவில்லை. அவன் தனது தாயார் தன்னை பதுங்குகுழிக்குள் விட்டுவிட்டு சென்றதை பற்றி மட்டுமே கதைத்துக் கொண்டிருந்தான்.

வசந்தராணி [ஐந்து பிள்ளைகளின் தாய்]: நாங்கள் மாத்தளனில் வசித்தோம். அடுத்த நாட் காலை அங்கே எறிகணைகள் செறிவாக வீசப்பட்டன. அப்போது நான் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தேன். நான் அவற்றைக் கழுவி முடித்த பின்னர், நீர் ஊற்றுவதற்காக சில அடி தூரம் நடந்தேன். அப்போது எனது கணவர் பதுங்குகுழியை விட்டு வெளியில் வந்து எனக்கருகில் நின்றவாறு என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது.

நான் சற்று முன் கழுவிய சமையல் பாத்திரங்கள் இருந்த இடம் தெரியாது ஆங்காங்கே சிதறிக் காணப்பட்டன. நான் எனது கைகளில் வைத்துக் கொண்டு நின்ற பானையில் ஐந்து துவாரங்கள் காணப்பட்டன. அத்துடன் அந்த எறிகணையில் எனது கணவர் காயமடைந்தார். நான் எனது கணவரைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற போது, அவரது காயத்திலிருந்து பெருமளவான இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. இத்துடன் உலங்குவானூர்தி மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் பலர் காயமடைந்தனர். இதேபோல் ஒவ்வொரு தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்ட்டனர், காயமடைந்தனர்.

நான் காயமடைந்த எனது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குருதி நன்கு போய்விட்ட, மிக மோசமான காயக்காரர்களை வைத்தியர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. இதேபோன்று எனது கணவரும் பலத்த காயமடைந்திருந்ததால், வைத்தியர்கள் மருத்துவம் செய்ய முற்படவில்லை. இவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சுவாசித்துக் கொண்டிருந்தார். இவ்வாறிருக்கையில், வைத்தியசாலைக்கு அருகில் வீழ்ந்து வெடித்த குண்டொன்றில் அதிர்ச்சிடைந்த அவர் பின்னர் இறந்துவிட்டார். இது ஏப்ரல் 05, 2009 அன்று இடம்பெற்றது.

ஏப்ரல் 20 அன்று, நாங்கள் தங்கியிருந்த இடத்தை இராணுவத்தினர் கைப்பற்றிக் கொண்டனர். இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தின் நிலைகள் நோக்கி ஓட, பின்னுக்கு நின்றவாறு புலிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். எனக்கு முன்னாலும், அருகிலும் ஒடிச் சென்று கொண்டிருந்தமக்கள் பலர் கொல்லப்பட்டனர். எனது மகன் காயமடைந்ததால், அவர்கள் சறம் ஒன்றால் அவரது காயத்தில் கட்டுப்போட்டு, முதலில் அவனை வெளியில் அனுப்பினர். இராணுவத்தினர் எனது மகனை வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

சாரதா: நான் தற்போது கையில் வைத்திருக்கும் இந்தச் சிறுவன் வன்னியில் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, அதாவது நாங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் தப்பி வருவதற்கு மூன்று நாட்களின் முன்னர் பிறந்திருந்தான். அந்த நாளன்று, பெப்ரவரி 10, 2009 அன்று எம்முடன் இணைந்து 60 குடும்பங்கள் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றோம். எம்மைச் சூழ யுத்தம் தீவிரம் பெற்று நடந்து கொண்டிருந்தது. இதனால் நாம் பதுங்குகுழிக்குள் பாதுகாப்புத் தேடினோம். நான் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றேன். எனது மகன் பிறந்த கையோடு, நான் மீண்டும்எனது குடும்பத்தவர்களுடன் இணைந்து கொண்டேன்.

வைத்தியசாலையில் பெருமளவான நோயாளிகள் நிறைந்து காணப்பட்டதால், என் போன்றவர்கள் மிக விரைவாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். நாங்கள் இறந்து கிடந்த உடலங்களைக் கடந்து மூன்று நாட்களாக நடந்த பின்னர், இறுதியில் இராணுவக் கட்டுப்பாட்டை அடைந்தோம். நாங்கள் புலிகளின் நிலைகளிலிருந்து சில மைல்கள் தூரம் நடந்து சென்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அடைந்தோம். பின்னர் அங்கிருந்து, காடுகளின் ஊடாக பேரூந்துகளில் ஏறுவதற்காக நடந்தோம். நான் நடந்து சென்ற முழுத்தூரமும், சில நாட்களின் முன்னர் பெற்றெடுத்த அந்தக் குழந்தையை கூடை ஒன்றில் பாதுகாப்பாக வைத்து எடுத்துச் சென்றேன். நாங்கள் ஓமந்தையைச் சென்றடைந்த போது, இராணுவத்தினர் பெருமளவான மக்களைத் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கவில்லை. இதனால் நாங்கள் அந்தக் குளிர் இரவில் அந்த வீதியிலேயே படுத்துறங்க வேண்டியிருந்தது. எனது குடும்பத்தவர்களைப் பாதுகாக்குமாறு நான் இறைவனை மண்றாடினேன். அத்துடன் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பிரார்த்தித்துக் கொண்டேன்.

எம்மைச் சூழ துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதை நாம் விரும்பவில்லை. நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை.

http://www.puthinappalakai.com/view.php?20120503106124

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.