Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம்

Featured Replies

photo.gif-யேர்மன் தலைநகர் பெர்லினில் 26 / 27 .05 .2012 நாட்களில் நடைபெற்ற அனைத்துலக மக்களவையின் மாநாடு-

முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, இதுவரைகாலமும் தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களுக்கும் அந்நிய ஆக்கிரமிப்பால் படுகொலைசெய்யப்பட்ட எமது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது.

நிகழ்வில் அனைத்து நாடுகளிலிருந்தும் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பாக வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அடுத்து, ஒவ்வொரு மக்களவையின் தலைவர் அல்லது அதை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர் மாநாட்டில் கலந்துகொண்ட தமது நாடுவாரியான மக்களவை உறுப்பினர்களை அறிமுகம்செய்து வைத்தனர். தொடர்ந்து, அந்தத்த நாடுகள் ரீதியாக தாம் மேற்கொண்டுவரும் முக்கிய பணிகளையும் செயற்பாடுகளையும் சிறிய தொகுப்பாக வழங்கினார்கள் .

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளரும் தமிழ்நாட்டு கொம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளருமான சி.மகேந்திரன் அவர்கள் இந்திய மத்திய அரசின் ஈழம்சார்ந்த தற்போதைய நிலைப்பாடும் தமிழ்நாட்டு தலைவர்களின் உறவுகளின் நிலைப்பாடு, செயற்பாடு சம்மந்தமாக உரையாற்றினார். முக்கியமாக அவரின் கருத்தில், ஈழத்தமிழர் தமது அரசியல் வேணவாவை வெளிக்காட்டும் முகமாக சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தைக் குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழகத் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் தமது தனிநபர் மற்றும் கட்சி அரசியலைத் தாண்டி ஓர் 'ஐக்கிய தமிழக மக்கள் அமைப்பாக' ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முகமாக சில வேலைத்திட்டங்களை ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார்.

திரு.மகேந்திரன் அவர்களின் நேரத்தைத் தொடர்ந்து, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு பிரேமன் தலைவர் திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள் இனப்படுகொலை விடையமாக ஆழமாக எடுத்துரைத்தார். இனப்படுகொலை என்பது எப்படி சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையும், ஈழத்தமிழர்கள் மீது வல்லாதிக்க நாடுகளின் ஆதரவோடு சிங்கள அரசு மேற்கொண்ட 'இனப்படுகொலையை' எந்தவகையில் நீரூபிப்பது அல்லது இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள வைப்பது பற்றியும் விளக்கியதோடு, அதற்காக நாம் எடுக்க வேண்டிய வழிமுறைகள் சம்மந்தமாகவும் விரிவாக விளக்கிக்கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், சிங்கள இராணுவம் இனப்படுகொலையை மேற்கொண்டபோதிலும் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முறியடிப்பே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வழிவகுத்தது எனவும் அதற்கு எந்த வல்லரசு நாடுகள் பின்னணியில் இருந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அனைத்துலக மக்களவை முன்னெடுக்க வேண்டிய பல அரசியல் விடையங்கள் ஆழமாக கலந்துரையாடப்பட்டது .அத்துடன் ஆராயப்பட்ட விடயங்களின் பொருட்டு மற்றும் மக்களவையின் அடிப்படை உருவாக்கத்தையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானம் இவ் மாநாட்டில் எட்டப்பட்டுள்ளது .

சென்ற 26 /27.05.2012 நாட்களில் யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக மக்களவை மாநாட்டில் புலம்பெயர் தமிழீழ மக்களின் அரசியல் வேணவாவை வலியுறுத்தும் முகமாக எட்டப்பட்ட தீர்மானம் இன்று முழுமையாக்கப் படுகின்றது .

ஜூன் 3 ம் நாள், 2012

1. சட்ட ஆட்சி மானிட உரிமைக்கான மதிப்பு, சனநாயகம், நபர்களுக்கிடையேயான சமத்துவம், மக்கள் குமுகத்திற்கான தன்னாட்சி உரிமை ஆகிய நியமங்களிற்கமைவாகவும்,

2. தமிழ் மக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமையையும், உடல் ரீதியான பாதுகாப்பையும் நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டும்,

3. ஐரோப்பியக் காலணித்துவ ஆட்சி இலங்கைத் தீவில் காலூன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளிற்கு முன்பிருந்தே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் தனித்தனியான இராச்சியங்கள் இருந்தன என்பதைக் கருத்தில் கொண்டும்,

4. தமிழ்த் தேசத்திற்கும், முழுமையாகச் சிங்களவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சிறீலங்கா அரசாங்கத்திற்குமிடையே சரித்திர ரீதியாக முறையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளும், தீர்மானங்களும் தொடர்ந்தும் சிங்கள தேசத்தால் முறிக்கப்பட்டதையும், தன்னிச்சையாக முற்றுமுழுதாக வறிதாக்கப்பட்ட பட்டறிவினாலும்,

5. 1976ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழீழ தேசமக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்கு சுதந்திரமும், இறையாண்மையும் உள்ள சமய சார்பற்ற நாடொன்றினை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் அமைப்பதற்கான ஆணையைக் கொடுத்தனர் என்பதைக் கவனத்தில் கொண்டும்,

6. தமிழ் மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் அவர்களின் மேற்குறிப்பிட்ட அரசியல் பெருவிருப்பினைப் பெறுவதற்கு நடாத்திய அமைதிவழிப் போராட்டங்கள், சிங்கள தேசத்தின் கடும் போக்கினாலும், சிறீலங்கா அரசாங்கங்களின் நேர்மையின்மையினாலும்,

தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி மறுக்கப்பட்டமையினாலும் பயனற்றதாக்கப்பட்டதையும் மனதில் கொண்டும்,

7. நான்கு தசாப்தங்களாக அமைதிவழியிலும், யாப்பு ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் முன்னேற்றமின்மையினாலும், அவ்வழிகளினால் முரண்பாட்டினைத் தீர்க்க முடியாமையினாலும், தற்பாதுகாப்பை வேண்டியும், தமிழ்த் தேசத்தின் தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்துவதற்காகவும் தமிழ்த்தேசம் ஆயுதவழிப் போராட்டத்தினை நோக்கி உந்தப்பட்டதைக் கருத்திற் கொண்டும்,

8. தமிழ்த் தேசத்தின் அரசியல், ஆயுதவழிப் போராட்டத்தினால் உருவாக்கப்பட்ட நடைமுறைத் தமிழீழ அரசு, தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கான ஒரு அரசியல் வெளியினை ஏற்படுத்தியமையையும் மனதிற்கொண்டும்,

9. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைதி உடன்படிக்கையின் ஓர் உறுப்பாக தமிழர் தரப்பில் முன்மொழியப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணைகளை சிறீலங்கா அரசு உதாசீனம் செய்தமையினைக் கருத்திற் கொண்டும்,

10. சிங்கள தேசம் ஒருதலைப் பட்சமாகவும் முடிவாகவும் அமைதி உடன்படிக்கையை சனவரி 2008ல் வறிதாக்கி, தொடர்ந்தும் கொடூரமான இனவழிப்புப் போரைத் தமிழர் தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டதனைக் கருத்திற் கொண்டும்,

11. தமிழர் தாயகத்தில் அரசியல் பெருவிருப்பை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி தமிழீழ தேசத்தில் தற்போது இல்லையென்பதை மனதிற் கொண்டும்,

12. இலங்கையில் வாழும் தமிழர்களால் அவர்களது அரசியல் பெருவிருப்பை வெளிப்படுத்த முடியாமையினாலும், தங்கள் பூர்வீக நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட புலம்பெயர் தமிழீழ மக்கள், அவர்களிற்காகக் குரல் கொடுப்பதற்கு வரலாற்று அடிப்படையில் கடப்பாட்டினைக் கொண்டிருப்பதினாலும்,

13. 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நோர்வே, கனடா, செருமனி, சுவிஸ், இத்தாலி, ஐக்கிய இராச்சியம், டென்மார்க், அவுஸ்ரேலியா, பிரான்சு மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் மீளுறுதி செய்யப்பட்டதையும், கடந்த காலங்களில் தமிழீழ தேசம் செய்த ஈகங்களையும் மனதிற் கொண்டும்,

14. தமிழீழ தேசம் தொடர்ந்தும் ஒரு காலனிதுவ இராணுவ ஆட்சியின் கீழ் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு, தமிழ்மக்கள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதினைக் கருத்திற் கொண்டும்,

15. சிறீலங்கா அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பு தமிழ் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் தமிழர் தேசத்தில் நசுக்கி, அவர்களைப் பன்முறையும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து வேரோடு அகற்றியமையையும் கருத்திற் கொண்டும்,

16. அனைத்துலகப் போர்விதிகளையும், மானிடநேயச் சட்ட நியமங்களையும் மதிக்காது, மே 2009 இல் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நடாத்திய இனவழிப்புப் போரில், கடைசி சில நாட்களில் மட்டும்; 75 000 ற்கும் மேற்பட்ட பொதுமக்களைப் படுகொலை செய்தும், மேலும் 70 000 தமிழ்மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையிலும், அதற்கும் மேலாக 300 000 க்கும் மேற்பட்ட தமிழ்மக்களை வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமையையும் மனதில் கொண்டும்,

17. மே 2009ல் போர் முடிவுற்றமையின் பின்னர் சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தைத் தொடர்ந்தும் சிங்கள மயப்படுத்துவதையும், அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட தமிழ் மக்களை அங்கு மீள்குடியமர்வதைத் தடுப்பதையும் கருத்திற் கொண்டும்,

18. தமிழர் தாயகத்திலே வாழ்விடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், வழிபாட்டிடங்கள் போரினால் சிதைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, சிறீலங்கா அரசாங்கம் சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னங்களை தமிழர் தாயகத்தில் அமைத்து வருவதன் மூலம் தமிழீழ தேசத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் செயற்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளதைக் கருத்திற்கொண்டும்,

19. நில ஆக்கிரமிப்புப் போரின் பின்னர் தொடர்ந்தும் இனவழிப்பு நோக்கோடு தமிழ்ப்பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கி இனக்கலப்பு செய்வதோடு, தமிழரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் திட்டமிட்டு அழிப்பதனூடாகவும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதன் மூலம் தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பரப்பு துண்டாடப்படுவதையும் கருத்திற்கொண்டும்,

நாங்கள் பின்வருமாறு தீர்மானிக்கிறோம்:

1.சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடாத்தப்படும் இனவழிப்பு, போர்க்குற்றம், மானிடத்திற்கெதிரான குற்றங்கள் தடையின்றி நடப்பதினால் அனைத்துலக குமுகாயம் சிறீலங்கா அரசையும் அதன் படையையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

2.மேற்கூறிய தொடரும் இனவழிப்பு செயல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்.

3.சுதந்திரமும் இறையாண்மையும் உள்ள தமிழீழத் தனியரசை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். மற்றும் அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய இறைமையின் அடிப்படையில் தாயகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் மத்தியிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பு எடுப்பதற்கான நடவெடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஒப்பம் :

கனடியத்தமிழர் தேசிய அவை

நோர்வே ஈழத்தமிழர் மக்கள் அவை

டென்மார்க் ஈழத்தமிழர் பேரவை

தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

ஹோல்லாந்து ஈழத்தமிழர் பேரவை

சுவிஸ் ஈழத்தமிழரவை

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

தமிழர் பண்பாட்டு கழகம் - பெல்ஜியம்

தீர்மானம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணைக்கப்பட்டுள்ளது .

1. இத்தீர்மானம் சர்வதேச அரசாங்கங்களின் உயர்நிலை வரை கொண்டுசெல்லப்படுவதுடன் இத்தீர்மானத்தை புலம்பெயர் தமிழ்மக்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு எடுத்துச் செல்வது எனவும்,

2. ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கையில் குறிப்பிப்பட்டது போல் அனைத்துலக நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ்மக்கள் வாழும் நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள அந்தந்த நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் அந்நாட்டு அரசுகளுடன் சந்திப்பை மேற்கொள்ளுவது எனவும்,

3. ஐக்கிய நாடுகள் அவை, பொது நலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சிங்கள அரசு செய்கின்ற இனவழிப்பை உறுதிசெய்து தமிழ்மக்களுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதெனவும்,

4. புலம்பெயர்நாடுகளில் அந்தந்த நாட்டு மக்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், ... போன்றோருக்கு இலங்கையில் நடந்த இனவழிப்புப் பற்றிய விளக்கங்களைக் கொடுப்பதற்கு ஒன்றுகூடல்கள், கவனயீர்ப்புக்கள், கருத்தரங்குகள், ஊடகவியலாளர் மாநாடுகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (சனல் 4) போன்ற நிகழ்வுகளை நடாத்தி, அவர்களை தமிழ்மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக விழிப்படையச்செய்து, அவர்கள் மூலம் அவர்களின் நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமெனவும்,

5. இன்று அனைத்துலக மட்டத்தில் தமிழ்மக்களால் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் அமைப்புக்களிடையே மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பை உருவாக்கி தமிழர் பிரச்சினையில் அனைத்துலக நீரோட்டத்தை ஆய்வுசெய்து, அதற்கமைய வேலைகளை முன்னெப்பதெனவும்,

6. தாயகத்தில் உள்ள மக்களுக்கு உதவிசெய்யும் முறைகள் ஆராயப்பட்டு அங்குள்ள தமிழ் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகளால் அடையாளங்காணப்பட்டவர்கள் மூலம் அனைத்துலகத்தின் ஆதரவுடன்; அவர்களுக்கான உதவிகள் சென்றடையச் செய்வது எனவும்,

தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் இவ் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக, பல்வேறு வழிகளில் மிக விரைவாக பல சந்திப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

நன்றி

செயலகம்

அனைத்துலக மக்களவை

y-makkalavaianaiththulakam%20%284%29.jpgy-makkalavaianaiththulakam%20%281%29.jpgy-makkalavaianaiththulakam%20%282%29.jpgy-makkalavaianaiththulakam%20%283%29.jpg

http://eeladhesam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.