Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்யராஜும் எதார்த்த காதல்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாக்யராஜும் எதார்த்த காதல்களும்

[size=4]முரளிக்கண்ணன்[/size]

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வரை காதல் என்று ஒன்று கிடையாது என்றே நம்பிக்கொண்டிருந்தேன். அக்காலத் திரைப்படங்களில் பறந்து பறந்து போடும் மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளைப் போலவே காதலும் மிகைப்படுத்தப் பட்ட ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு புறச்சூழலே காரணம். ஏனென்றால் எங்கள் தெருவிலும், அருகேயிருந்த தோட்டத்திலும் யாரும் குரூப் டான்ஸர்கள் புடை சூழ ஆடிக்கொண்டிருக்கவில்லை.

ஆனால் காதல் என்ற ஒன்று உலகில் இருக்கிறது என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர் தெருவில் இருந்த குமார் அண்ணன். எப்பொழுதும் என்னை பவுண்டரி லைனுக்கு வெளியிலேயே நின்று பீல்ட் செய்யுமாறு பணிக்கும் அவர், ஆச்சரியமாக பேட் செய்யும் வாய்ப்பை வழங்கினார். பின்னர் தான் தெரிந்தது, விக்டோரியா க்வின் என்று அந்த செட்டால் பெயர் சூட்டப்பட்டிருந்த கோடி வீட்டு நிர்மலா அக்காவுக்கு என்னைத் தூது அனுப்பத்தான் என்று.

ஆம். நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அதைச் சுற்றி ஒரு காதல் கதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பத்தாண்டுகளில் அப்படி நடக்கும் பல காதல்கள் திரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. காதல், 7ஜி ரெயின்போ காலனி, அங்காடிதெரு என இப்போது பல படங்களில் சமூகத்தில் நாம் கேள்விப்படும் இயல்பான காதல்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.

ஆனால் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்தில் கடவுள்கள், அரச குடும்பத்தினர், செல்வந்தர்கள் வட்டாரத்தில் நடக்கும் காதல்களே பெரிதும் திரைப்படுத்தப் பட்டிருந்தன. பின் எம்ஜியார்,சிவாஜி கால கட்டத்தில் ஒரு ஹீரோவைச் சுற்றியே காதல் இருந்தது. அரிதாக ஹீரோயினியின் பார்வையிலும். ஸ்ரீதர் வருகைக்குப் பின் நடுத்தர வர்க்கத்துக் காதல் [கல்யாணப்பரிசு] கதைகளின் வரவு ஆரம்பித்தது. பாலசந்தரின் பெருநகர மத்திய தர வர்க்கக் காதல் கதைகள், பாரதி ராஜாவின் கிராமத்துக் காதல் கதைகள், மகேந்திரன், பாலு மகேந்திராவின் இயல்பான காதல் கதைகள் என அது தொடர்ந்தது.

இந்த வரிசையில் பார்த்தால், பாக்யராஜும் பல இயல்பான காதல் களங்களை தன் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய படங்கள் குழப்பமில்லா திரைக்கதை,மெல்லிய காமம் கலந்த நகைச்சுவை போன்ற அம்சங்கள் கொண்டதாக மட்டுமே இப்போது அடையாளப்படுத்தப் படுகின்றன. ஆனால் அவர் படங்களில் தான் பல இயல்பான காதல் களங்கள், அதுவரை யாரும் தொடாத களங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அவர் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்களில், ஒரு தெருவில் இருக்கும் அழகான பெண் மீது, அடுத்த தெருவில் இருக்கும் வசதி படைத்தவனுக்கு வரும் காதல், அது தொடர்ந்த காட்சிகள் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும். அப்பெண்ணை சந்திக்க, கவர அடிக்கடி அங்கு விஜயம் செய்வதும், அதற்காக அங்கு உள்ள கடையில் டாப் அடிப்பதும், அந்தக் கடைக்காரர் அதை உபயோகப் படுத்திக் கொள்வதும் இன்னும் கூட எங்காவது ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு தெருவில் உள்ள இளைஞர்கள் மற்றும் யூத்துகளின் அக/புறச் சமநிலையை குலைக்க வேறெதுவும் வேண்டாம். ஒரு அழகுப் பெண்ணுடைய குடும்பம் அங்கே குடியேறினாலே போதும். அந்தப் பெண்ணின் கவனம் கவர, காதலைப் பெற அம்மக்கள் எந்த நிலைக்கெல்லாம் இறங்குவார்கள் என்பதை காட்சிப்படுத்திய படம் ”இன்று போய் நாளை வா”. தன் குடும்ப அவசரத்திற்காகக் கூட கடைக்குப் போகத் தயங்கும் ஒருவன், பெண்ணுக்காக ரேஷன் கடைக்குப் போவதும், வடாம் பிழிவதும் உச்சகட்டமாக கழுதையைக் கூட அழைத்து வருவதும், யதார்த்தத்தை பிரதிபலித்த ஒன்று. இன்னொரு நாயகன் படித்த ஹிந்தி இன்று வரை நமக்கு இனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் கூட தெருவிலோ, அலுவலகத்திலோ ஒரு அழகுப் பெண்ணின் வருகை அங்குள்ள ஆண்களின் சமநிலையை குலைத்துக் கொண்டிருப்பது நாம் அறியாததா, என்ன?

ஸ்டிரீட் ஸ்மார்ட் என்னும் வகையிலான பெண்களையும் நம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கறாரான பேச்சு, தன் குடும்ப நலனுக்காக பல வழிகளும் சிந்திப்பது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு ஒரு அளவுக்கு மேல் மதிப்பு கொடுக்காதது, தன் கருத்தே சரி என்று அதற்கு வாதங்களை அடுக்குவது என்ற குணங்களுடன் வாழும் பெண். அவளுக்கு வரும் காதல், கணவன் இன்னொரு பெண்ணுடன் அசந்தர்ப்பவசமாக உறவு கொண்டதால் வந்த கோபம், பின்னர் வெல்லும் காதல் என ஒரு நடுத்தர வர்க்க ஸ்டிரீட் ஸ்மார்ட் பெண்ணின் காதல்தான் மௌன கீதங்கள்.

ஒரு பெண், இயற்கையாக அவளுக்குத் தோன்றும் காதல், அதை பகிர, குறைந்த பட்ச தகுதி [அழகு, குணம்]கொண்ட ஆண் அவசியம். வீடு, தெருவைத் தாண்டி செல்ல முடியாத சூழல். சுற்றிலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆண் இல்லை. அந்தச் சூழ்நிலையில் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வருபவனிடத்தில் அவை இருக்கும் போது காதல் பூப்பது இயல்புதானே? அந்த ஏழு நாட்களிலும் அதுதான் நடந்தது.

பெண்ணைத் திருமணத்திற்காகப் போய் பார்த்த உடன் மிகவும் பிடித்து வருகிறது. ஆனால் லௌகீக, ஈகோ காரணங்களுக்காக அது தகையாமல் போய் விடுகிறது. ஆனாலும் அதை நனவாக்க முயற்சி எடுக்காமலா இருப்பார்கள் நம்மவர்கள்?. அப்படி காதல்வயப்பட்டவனின் முயற்சிகள் தூறல் நின்னு போச்சாக வந்து பலரின் மனசுக்குள்ளும் மழையடித்துப் போனது.

சிறு வயதில் தோன்றி, மனதில் ஆழமாக வேரூன்றிய காதலைப் பேசிய படம் ”டார்லிங்... டார்லிங்... டார்லிங்...” அக்கால பாக்யராஜ் படங்களுடன் ஒப்பிடும் போது இது பேன்ஸியான காதல்தான்.

என் தந்தையின் பணி காரணமாக பல ஊர்களில் வசித்திருக்கிறோம். அதில் பல நண்பர்களைத் தந்த வரையில் மறக்க முடியாத ஊர் அருப்புக்கோட்டை. இரண்டாம் ஆட்டம் முடிந்து, எங்கள் குழு [ஐ டி சி என அப்போது பெயர் சூட்டப் பட்டிருந்தோம் தெருவால் : இண்டர்நேஷனல் தரிசு கோஷ்டி] திரும்பிய போது, தெருவே அல்லோல கல்லோலபட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவின் பிரெஸ்டிஜ் பத்மனாபன் கதறிக் கொண்டிருந்தார். காரணம் அவர் பெண் ஜெண்ட்டாகி [கம்பி நீட்டுவது, எஸ்ஸாவதின் அருப்புக்கோட்டை ஸ்லாங்] இருந்தாள். உடன் போக்கு எய்தியவன், பக்கத்து தெரு அசடு ஒருவன். சில நாட்கள் தேடலுக்குப் பின் அவர்கள் சிக்கினார்கள். ஐ டி சி யின் உறுப்பினன் ஒருவன் தாங்க முடியாத மன வருத்தத்தில் அந்தக் காதலின் காரணத்தை அப்பெண்ணிடம் கேட்ட போது, எங்க வீட்டில அப்பா, பெரியப்பா, சித்தப்பா, ஏன் என் அண்ணன் உட்பட யாருமே கட்டுனவள மதிக்க மாட்டாங்க, மாடு, பன்னின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க வீட்டுல அப்படியில்ல, மரியாதையா நடத்துறதப் பார்த்தேன். அதுக்கு ஆசைப்பட்டுத் தான் அவன லவ் பண்ணினேன் என்றாள்.

முருங்கைக்காய்க்காக மட்டுமே நம் ஞாபகத்தில் இருக்கும் முந்தானை முடிச்சின் அடிநாதம் இது தான். ஒரு காட்சியில் ஊர்வசி சொல்லுவார், இந்த ஊரில எல்லோரும் பொண்டாட்டி இருக்கும் போது, இன்னொன்னை வச்சிருக்காங்க, எங்க அய்யனும்தான். ஆனா, இந்த வாத்தியாரு பொண்டாட்டி செத்தும் பிள்ளையை வளர்க்கணும்னு யோக்கியமா இருக்காரு, அதான் அவர் மேல ஆசப் பட்டேன் என்பார். குடும்பத்தில், சூழலில் காணக் கிடைக்காத பண்பை இன்னொரு ஆளிடம் பார்க்கும் போது பூக்கும் காதல் எல்லைகளையும் அறியாது.

இப்படி பெரும்பாலும் இயல்பான காதல்களன்களுடன் பயணித்த பாக்யராஜ், வணிக வெற்றிகளின் காரணமாக சிறிது திசை மாறினார்.

எங்க சின்ன ராசாவில் தம்பிக்கு என்று சொன்ன பெண்ணை தனக்கு என்று பார்த்து, திருமணத்திற்கு பின் அவள் காதலை உண்மையாக வெல்லும் கமர்சியல் பாத்திரம் பாக்யராஜுக்கு.

பாலகுமாரன் இயக்கத்தில், பாக்யராஜின் மேற்பார்வையில் வந்த படம் இது நம்ம ஆளு. இதில் புரோகிதம் செய்ய வேடமிட்டு வந்த ஒருவன் மீது அந்த வீட்டுப் பெண்ணுக்கு ஒரே நாளில் காதல் வந்தது டூ மச் தான்.

ஆராரோ ஆரிரரோ, வீட்ல விசேஷங்க ஆகிய படங்களில் மனநிலை தவறிய அல்லது நடிக்கும் பெண் அவளுடன் ஒரு நல்லவனுக்கு வரும் காதல், அதை ஊக்குவிக்கும் பொது மனிதர் என சினிமா காதலே பிரதானமாக இருந்தது.

சுந்தர காண்டத்தில் மாணவிக்கு ஆசிரியர் மேல் வரும் காதலைச் சொல்லி இருந்தார். இது ஓரளவு நடைமுறையில் நாம் பார்த்து வருவது. பவுனு பவுனு தான் படத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்து தன் மாமன் மேல் தீராக் காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் காதல். இது மிகவும் மிகைப்படுத்தப் பட்டு சொல்லியதால் தோல்வி அடைந்தது.

பாக்யராஜின் படங்களிலேயே நம்ப முடியாத காதல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தான். அரண்மனை இளவரசி, ஒருவன் செய்யும் நல்ல காரியத்தைப் பார்த்து ஒரே நாளில் காதல் கொள்வதும், அவனை அடைய பல முயற்சிகள் எடுப்பதும் பேண்டஸி வகையில் இந்த படத்தைச் சேர்க்கச் சொல்லி நம்மைத் தூண்டுகிறது.

ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன் மீது, பணக்காரப் பெண்ணுக்கு வரும் காதல் ஞானப்பழம். இது இந்தக் காலத்தில் நடக்குமா என்ன?

சொக்கத் தங்கத்தில் விஜயகாந்த்துக்கு சவுந்தர்யா மேல் வரும் காதல் முதியோர் கல்வியை ஞாபகப்படுத்தியது.

தன் வாரிசுகளை களம் இறக்கும் போதும், இந்த பாணியை மாற்றவில்லை. பாரிஜாதத்தில் அம்மாவிற்கு பிடித்ததனால் பெண்ணை மணக்கும் மகன் கூட நிஜத்தில் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் சித்து+2 சினிமா காதல்தான்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு சறுக்கினாலும் தமிழ் சினிமாவுக்கு பல வகையான காதல் களங்களை அறிமுகப்படுத்தியவர்களில் பாக்யராஜும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

http://panbudan.com/story/baghyarajin-kathalkal

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கியராஜ் நல்ல திரைப்படங்களை இயக்கியதோடு முந்தானை முடிச்சு போன்ற படங்களில் நடிப்பிலும் (நகைச்சுவை கலந்த) முத்திரை பதித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.