Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நிலக்கிளி" தந்த அ.பாலமனோகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நிலக்கிளி" தந்த அ.பாலமனோகரன்

mail03.jpg

[size=4]"ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்." - நிலக்கிளி அ. பாலமனோகரன்.

ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை நாம் இப்போது அவருடன் பகிர்ந்து கொள்வோம்.[/size]

[size=4]கானா.பிரபா: வணக்கம் திரு.பாலமனோகரன் அவர்களே

முதலில் தங்களின் இலக்கியப் பயணத்தின் தொடக்க காலம் குறித்து சொல்ல முடியுமா?

அ.பாலமனோகரன்: என்னுடைய இருபத்து ஐந்தாவது வயதில்தான் எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டேன். அப்போது பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 2 வருட பயிற்சி முடித்துவிட்டு மூதூருக்கு முதல் நியமனம் பெற்றுச் சென்றிருந்த நேரம். அங்கு யாரோ ஒருவருக்கு ஒரு சிறுகதை எழுதிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அந்தச் சிறுகதையை எழுதி என்னுடைய பெரிய வகுப்பு மாணவர் ஒருவரிடம் கொடுத்து "இதை நல்ல எழுத்தில் எழுதித் தா" என்று சொன்னேன். அம்மாணவர் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு "இதை.. 'வ. அ.' அவர்களிடம் கொடுத்துப் பார்ப்போமே.... நல்ல கதையாக இருக்கிறதே?" என்றார்.

மூதூரைச் சேர்ந்த வ. அ. இராசரத்தினம் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் எனக்கோ அவரை முன்பின் தெரியாது. அந்த மாணவரே, தான் சொன்னபடி அவரிடம் சென்று கதையைக் கொடுத்தார்.

பின்னர் வ.அ எனக்கு தகவல் அனுப்பி, "நான் உங்களைச் சந்திக்க வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார். நானும் சென்று சந்தித்துப் பேசினேன்.

"நீங்கள் அனுப்பிய கதையின் நடை நன்றாக இருக்கிறது. ஆனால் இது சிறுகதை அல்ல. சிறு நாவல்" என்றார்.

அந்தக் கதையில் பார்த்திபன் என்பன போன்ற பெயர்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருந்தேன். ஏனெனில் ஆனந்த விகடன், கல்கி போன்ற தமிழக இதழ்கள், அல்லது இலக்கியங்களை மட்டுமே அதிகம் படித்திருந்தபடியால், அந்த வகையில்தான் எங்கள் சிந்தனையும் இருந்தது போலும்.

அவர் என்னிடம் வேறு பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும், சில ஆங்கில நூல்களையும் தந்து, வாரந்தோறும் படித்துவரச் சொல்வார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வோம்.

திரு. வ. அ. வின் அறிமுகத்துக்குப் பின்னர்தான் எங்கள் மண்ணையும், அங்கு வாழும் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் ஊன்றிக் கவனிக்கத் தொடங்கினேன்.

அதற்கு முன்பும் கூட இதே ஈடுபாட்டுடன் இவற்றையெல்லாம் கவனித்து வந்திருந்தாலும்கூட, அவ்வாறு நான் கவனித்தவற்றை எல்லாம் எழுத்தில் படைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததில்லை. எனவே என்னை இந்த துறைக்கு அறிமுகப்படுத்தியவர் திருவாளர் வ. அ. அவர்கள்தான். அவர் இப்போது நம்மிடையே இல்லை.

கானா.பிரபா: நீங்கள் ஆரம்பத்தில் எழுதிய படைப்புகள் அந்தக் காலகட்டத்தில் இருந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது அல்லவா...? அவற்றைப் பற்றி?

அ.பாலமனோகரன்: வந்திருக்கிறது. அந்த நாட்களில் 'தினபதி'யில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம் இருந்தது. அதற்கு வ. அ. அவர்களும் சில எழுத்தாளர்களை, கதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அந்த வகையிலே வ. அ 'தினபதி' யின் வாரப் பதிப்பான 'சிந்தாமணி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் திரு. இராஜ அரியத்தினத்திற்கு எனது முதலாவது கதையை அனுப்பிய போது அது வெளியானது.

அதைத் தொடர்ந்து இராஜ அரியத்தினம் அவர்களுடான நெருக்கம் அதிகரித்தபோது, தொடர்ந்து 'சிந்தாமணி'யிலேயே வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஒரு கதை அல்லது சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன்.

இந்த வகையில்தான் என்னுடைய படைப்புகள் என் எழுத்துப் பயணத்தின் தொடக்க காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தன.

mail01.jpgகானா.பிரபா: ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றிலே 'நிலக்கிளி' என்ற உங்களுடைய நாவல், தவிர்க்க முடியாத ஒரு படைப்பாக விளங்கி வருகிறது. உங்களைக் கூட 'நிலக்கிளி' பாலமனோகரன் என்று பலர் அடைமொழியிட்டு அழைப்பார்கள். இந்த 'நிலக்கிளி' நாவல் எழுதியதற்கென பின்னணி ஏதாவது இருக்கிறதா?

அ.பாலமனோகரன்: ஆமாம். பாலமனோகரனைவிட 'நிலக்கிளி' முக்கியமானதும், பிரபலமானதும் கூட. எனவே 'நிலக்கிளி' பாலமனோகரன் என்ற பெயரிலேயே நானும் இப்போது படைப்புகளை எழுதி வருகிறேன்.

இந்த 'நிலக்கிளி' நாவலுக்கு எழுதிய முன்னுரையிலேயே நான் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். வன்னி மண்ணையும் அதன் மக்களையும் மிக அதிகமாக காதலிப்பவன், நேசிப்பவன் நான்.

அப்படிப்பட்ட ஒரு நேசமும், அந்த மண்ணும் அந்த மக்களும் என்னுள் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளும், அந்த மண்ணின் அழகு மற்றும் மக்களின் குணாதிசயங்கள்தான் அந்த நாவலில் இடம்பிடித்துள்ளன.

'நிலக்கிளி' என்ற பெயரை நான் அந்த நாவலுக்கு வைக்கக் காரணமே, அந்தமக்களும் ஒருவகையில் நிலக்கிளி போன்றவர்கள்தான்.

உயரப் பறக்க முடியாதவர்கள் அல்ல, உயரப் பறக்க விரும்பாதவர்கள் என்று சொல்லலாம். அந்த நாட்களைப் பொறுத்தவரையில்...!

அப்படிப்பட்ட ஒரு பாத்திரப் படைப்புகளைக் கொண்ட நாவல் அது.

முக்கியமாக நான் அனுபவித்த அந்தக் காட்டு வாழ்க்கை, வயல், என்னுடைய ஊர், சூழல், அங்கு வாழும் மக்கள், எல்லாம் அந்த நாவலில் இடம்பிடித்துள்ளன.

சில பாத்திரங்கள்.... அவர்கள் உண்மையிலேயே கதாபாத்திரங்களாக வரக்கூடியவர்கள்தான். தண்ணிமுறிப்பு என்ற கிராமத்திலே ராஜசிங்கம் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர்தான் கோணாமலையர். என்னும் பாத்திரத்தில் வருகின்றார். அவர் வாழ்ந்த வாழ்க்கையும் இந்நாவலில் உள்ளது. அவருக்கு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடன் நானும் காட்டிலே வேட்டைக்கு போவதுண்டு.

இப்படி அந்த உண்மையான நிஜமான இடங்களை வைத்து, சிலரை 'மொடல்' (Model) பாத்திரமாகக் கொண்டு இந்தப் படைப்பைக் கொடுத்தேன்.

அப்போது பத்துப் பதினைந்து சிறுகதைகள் மட்டுமே நான் எழுதியிருப்பேன். 'நிலக்கிளி' தான் எழுதிய முதலாவது நாவல். இதை வீரகேசரியில் பிரசுத்தனர். இதுதான் 'நிலக்கிளி' வெளியீடு கண்ட கதை.

கானா.பிரபா: வீரகேசரியில் தொடராக வெளிவந்து, பின்னர் வீரகேசரி பிரசுரமாக வந்த ஒரு நாவல் தானே இது?

அ.பாலமனோகரன்: இல்லை. நேரடியாகவே வீரகேசரி பிரசுரமாக வந்தது. இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒருவகையில் நன்மை செய்திருக்கிறது எனலாம்.

அதாவது தமிழகத்தில் வெளி வந்த தமிழ்ப் பத்திரிகைகளை அக்காலத்தில் நிறுத்தியிருந்தார்கள். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக வீரகேசரி மாதம் ஒரு நாவல் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து 50 அறுபது நாவல்களுக்கு மேல் வெளியிட்டிருப்பார்கள்.

அந்தத் திட்டத்தின் மூலமாக அறிமுகமான எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முக்கியமாக என்னைப் பொறுத்தவரையில் வீரகேசரியின் அனுசரணையும் ஒத்துழைப்பும்தான் எழுத்துத் துறையில் நான் பிரவேசிக்கவும், என்னுடைய படைப்புகள் மக்களைச் சென்றடைவும் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த வகையில் வீரசேகரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கானா.பிரபா: நீங்கள் குறிப்பிடுவதுபோல அன்றைய காலகட்டத்தில் வீரசேகரி பிரசுரம் தொடர்ச்சியாக பல நாவல்களையும் பல எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இவ்வேளையில் ஒரு தகவலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறோம். 'நிலக்கிளி' என்ற இந்த நாவலையும், செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' நாவலையும் படமாக்க வேண்டுமென்று ஒரு முனைப்போடு தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திராவிடம் கொடுத்த போது, 'நிலக்கிளி' கதையில் வரக்கூடிய 'பதஞ்சலி' கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு ஒரு நடிகையை தென்னிந்தியாவிலேயே அப்போது தேட முடியாது என்று சொல்லி, 'வாடைக்காற்று' நாவலைப் படமாக்குமாறு சொல்லியிருந்தாராம். இது சுவையான தகவல், இல்லையா?

அ.பாலமனோகரன்: இது சுவையான தகவல்தான். யாரோ என்னிடம் முன்பு ஒருமுறை இதைச் சொல்லியிருக்கிறார்கள். இது எந்தளவு உண்மை அல்லது பொய் என்பது அப்போது தெரியவில்லை. பின்னர் ஒரு நல்ல இடத்திலிருந்து தம்பியய்யா தேவதாஸ் அவர்கள் இதைப்பற்றி எங்கோ குறிப்பிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

பாலுமகேந்திரா மட்டக்களப்பை சேர்ந்தவர்.

கானா.பிரபா: ஆமாம். தம்பியய்யா தேவதாசுடைய 'ஈழத்து தமிழ்ச் சினிமாவின் வரலாறு' என்ற நூலிலே இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் 'நிலக்கிளி'க்கும் அதில் வரும் பதஞ்சலி பாத்திரத்திற்கும் ஒரு தனித்துவத்தை அன்றே கொடுத்திருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி அல்லவா?

அ.பாலமனோகரன்: ஆமாம்.

கானா.பிரபா: நீங்கள் குறிப்பிட்டதுபோல வீரகேசரி பிரசுரம் மூலமாக 'நிலக்கிளி' வெளியானது. தொடர்ந்து 'குமாரபுரம்' என்ற இன்னொரு நாவலும் உங்களுடைய படைப்பாக வெளியாகியிருந்தது அல்லவா?

அ.பாலமனோகரன்: ஆமாம். 'குமாரபுரம்' என்றொரு நாவல், அதைத் தொடர்ந்து 'கனவுகள் கலைந்தபோது' என்ற நாவலும் வீரகேசரி ஸ்தாபனத்தால்தான் வெளியீடு செய்யப்பட்டது.

கானா.பிரபா: தொடர்ந்து உங்களுடைய படைப்புகளாக, அதாவது நூல் வடிவில் வந்த படைப்புகளாக எவற்றைச் சொல்வீர்கள்?

அ.பாலமனோகரன்: 'நிலக்கிளி', 'குமாரபுரம்' எழுதிய காலத்திலேயே எனது ஊரிலே, தண்ணீரூற்று கிராமத்துக்கு அருகிலே உள்ள வற்றாப்பளையிலே உள்ள அருணா செல்லத்துரை என்பவர் அப்போது இலங்கை வானொலியில் இருந்தார். அவர் மூலமாக என்னுடைய சிறுகதைகளில் பெரும்பாலானவற்றை பின்பு வானொலி நாடகமாக்குவதுண்டு.

ஜோர்ஜ் சந்திரசேகரன், வாசகர் போன்றவர்கள் அந்த நாடகங்களை மிக அற்புதமாக உருவாக்கினார்கள்.

அத்தோடு 'வீக் எண்ட்' என்ற ஆங்கில வாராந்திர ஞாயிறு பத்திரிகையிலும் என்னுடைய கதைகள் ஆங்கிலத்தில் பிரசுரமாயின. எல்லா கதைகளுமே வன்னி மண்ணையும் மக்களையும் பிரதிபலிப்பனவாகத்தான் இருந்தன.

கானா.பிரபா: அன்றைய காலகட்டத்தில் - அதாவது நீங்கள் வன்னி மண்ணிலே இருந்த காலகட்டத்திலே - வன்னி மண்ணிலே இருந்து எழுதக்கூடியவர்களாக உங்களால் குறிப்பிட்டு யாரையெல்லாம் சொல்ல முடியும்?

அ.பாலமனோகரன்: முதலாவதாக நான் குறிப்பிட வேண்டியவர் முல்லைமணி சுப்பிரமணியம். இவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர்.

இவர் ஒரு ஆசிரியர். இவர் அண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார் என்று கேள்விப்பட்டேன். தற்போது வவுனியாவில் இருக்கிறார். அடுத்து, கலாநிதி க. நா. சுப்பிரமணிய ஐயர். இவர் தன்னுடைய எம். ஏ. பட்டத்துக்கு நாவல்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

கானா.பிரபா: அதாவது இலங்கையில் எழுதப்பட்டிருந்த தமிழ் இலக்கிய நாவல்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார்.

அ.பாலமனோகரன்: ஆமாம். அவர் முள்ளியவளையைச் சேர்ந்தவர். வித்தியானந்தா கல்லூரியிலிருந்து முதன்முதலாக பல்கலைக்கழகம் சென்ற பெருமைக்குரியவர். நான் முன்பே குறிப்பிட்ட அருணா செல்லத்துரை. அவரும் இப்போது நிறைய நூல்களை வெளியிட்டுள்ளார்.

நான் குறிப்பிட வேண்டிய மற்றொரு எழுத்தாளர் கவிஞர் முல்லையூரான் என்றழைக்கப்படும் ஒருவர். அவரும் வற்றாப்பளையைச் சேர்ந்தவர். டென்மார்க்கிலே இருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் இப்போது நம்மிடையே இல்லை.

ஏனைய எழுத்தாளர்கள் என்று சொன்னால், பொன் புத்திசிகாமணி என்று வட்டுவாகல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இது முல்லைத்தீவிலிருந்து புதுக்குடியிருப்புக்கு போகும் வழியிலே உள்ள அழகான கிராமம். அவரும் நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார் இப்போது ஜேர்மனியில் வசிக்கிறார். க. ந. இரத்தினசபாபதி மணிவண்ணன் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். அவரும் இப்போது நம் மத்தியில் இல்லை. 'காற்றில் மிதக்கும் சருகுகள்' என்ற அவருடைய நூல் ஒன்று வீரகேசரி பிரசுரம் மூலமாக வெளிவந்தது.

மெட்ராஸ் மெயில் என்று ஒரு எழுத்தாளர் உள்ளார். அவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர். அரியான் பொய்கை செல்லத்துரை, முள்ளியவளையில் வாழ்பவர். அடுத்து ஊத்தங்கரையான். தணணீரூற்றிலே ஊறிப் பாய்கின்ற நல்ல கேணி ஒன்று உண்டு. அதன் அருகிலே ஊத்தங்கரை பிள்ளையார் கோவில் இருக்கும். இந்த ஊத்தங்கரை என்பதை தனக்குப் பெயராகச் சூட்டிக்கொண்டு எழுதியவர். என்னுடைய மாணவர் என்று கூட சொல்லலாம். ஐங்கரலிங்கம் என்பது அவர் பெயர். அடுத்து தாமரைச் செல்வி. இவர் நான்கைந்து வருடங்கள் முன்புதான் எனக்கு அறிமுகமானார்.

நான் யாழ்ப்பாண கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேதான் நவாலியைச் சேர்ந்த அப்பச்சி மகாலிங்கம் வித்தியானந்த கல்லூரியில் பணியாற்றினார். அவர் நல்ல எழுத்தாளர், நாடக ஆசிரியர். அவர் வித்தியானந்தா கல்லூரியில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தார். அந்த பத்து ஆண்டுகளும் அவர் என்னுடைய வீட்டிலேயே தான் வாழ்ந்தார். நான் இளைஞனாக இருந்த அந்தச் சமயத்தில் அவரிடம் நிறைய புத்தகங்கள் பெற்று படித்திருக்கிறேன். அவரும் என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு அடக்கமான எழுத்தாளர்.

அவருடைய ஒரு நாவல் கூட வீரகேசரி பிரசுரமாக வெளிவந்துள்ளது.முக்கியமாக கலைமகளில் 'ராமனுக்கு தோணியோட்டிய வம்சம்' என்ற அவருடைய கதை ஒன்று வந்தது. நல்ல எழுத்தாளர், நல்ல மனிதர். அவரும் இப்போது நம்மிடையே இல்லை.

கானா.பிரபா: வீரகேசரி பிரசுரமாக வந்த உங்களது நாவல்களை அறிந்தோம். அதை தவிர உங்களுடைய படைப்புகள் எழுத்துருவில் பதிப்பாக வந்துள்ளனவா? அவற்றைப் பற்றி?

அ.பாலமனோகரன்: 'வண்ணக்கனவுகள்' என்ற பெயரிலே ஒரு நாவல். அது வீரசேகரி பிரசுரத்திற்காக நான் அளித்தபோது, அவர்கள் அதை 'மித்திரன்' இதழில் பிரசுரித்துவிட்டு பிறகுதான் புத்தகமாகப் போடுவோம் என்று கூறினர். அது மித்திரனில் வெளியானது.

'வட்டம்பூ' என்றொரு நாவல். 'அப்பால்தமிழ்' (www.appaaltamil.com) இணையத்தளத்தில் தொடர்கதையாக வந்தது.அந்த நாவலும்கூட 'நிலக்கிளி'யை ஒத்ததுதான். 'நிலக்கிளி' வன்னி பிரதேசத்தைக் கொண்டு அமைந்தது என்றால், 'வட்டம்பூ' ஆண்டாங்குளம் என்ற கிராமத்தைக் கொண்டு அமைந்தது. இது நாயாறு, குமளமுனை காட்டுப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள பழையகாலத்து பனைகள் உள்ள ஒரு குக்கிராமம்.

அங்கு வாழும் ஒரு முதியவருக்கு குழுமாடு சவாலாக வருகிறது. அவர் எருமை, பசுக்கள் என்று நிறைய வைத்திருப்பவர். மற்ற விலங்குகளைவிட குழுமாடு மிகவும் பயங்கரமானது என்பது பலருக்குத் தெரியும்.அதை எப்படி அவர் அடக்கி வென்றார் என்ற கதையைச் சொல்கையில், இந்த குழுமாடு பிடிக்கின்ற முறைகளையும், அதற்குப் பயன்படும் வார்க்கயிறு ஆகியவை குறித்தும், கூறியுள்ளேன்.

அங்குள்ள காட்டு வாழ்க்கையை மிகவும் அனுபவித்து வாழ்ந்தவன் நான். அதை ஒரு படைப்பிலே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.

அந்தக் காலக்கட்டத்திலேதான் இளைஞர்களும் மாணவர்களும் தங்களுக்கென்று ஒரு அமைப்பை அமைத்து அரசியலில் பிரவேசிக்கின்ற ஒரு காலமாக இருந்தது.

பாராளுமன்ற பிரிதிநிதிகளின் போக்கில் அதிருப்தி ஏற்பட்டு அல்லது வேறு வகையான ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க முனைகின்றனர். அந்தக் காலகட்டத்தில் குமளமுனையிலே ஒரு மாணவன் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவருடைய வாழ்க்கை கூட என்னை மிகவும் பாதித்தது. அவர் இப்போது இல்லை.

ஒரு தேர்தலின் பின்னர் தென்னமரவடி கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து குமளமுனையிலே வாழ வேண்டிய ஒரு நிர்பந்தம்.

ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், தேர்தலில் தோற்றவர்கள் கொழும்பில் உள்ள தமிழர்களையும், இலங்கையில் உள்ள மற்ற தமிழர்களையும் தாக்கி தமது கோபத்தை தீர்த்துக் கொள்வது வழக்கம். அதனால் கலவரங்கள் ஏற்படும். இதைப் பின்னணியாகக் கொண்டு ஒரு கதை.

இப்படியொரு கதைக் களமிருப்பதை வீரகேசரி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இதை விரும்பவில்லை.

அப்போது முல்லையூரான் அந்தக் கதையைப் படித்தார். 'இந்தியாவுக்குப் போய் இந்தக் கதையை எழுதுங்கள்' என்று அவர் சொன்னார்.

நானும் இந்தியாவுக்குச் சென்று இக்கதையை எழுதி உடனே வெளியிட வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றேன். இத்தனைக்கும் கதைக்கான குறிப்புகள் எதையுமே கையில் எடுத்துச் செல்லவில்லை. இந்தியாவில் எனக்கு வசதியான இடம் கூட கிடையாது.

இந்தியாவில் ஒரு மட்டையை மடியில் வைத்து தரையில் அமர்ந்தபடி எழுதுவார்கள். உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அப்படி தரையில் அமர்ந்தபடி இரண்டு நாட்களில் அந்த நாவலை எழுதி முடித்துவிட்டேன். அந்த சுவாரசியமான அனுபவம் பற்றி நிறைய சொல்லலாம். கதையை முடித்து 'நர்மதா' ராமலிங்கம் அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அது திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த காலம்.

"இப்போது எங்களுடைய இலக்கிய முயற்சிகளுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை. என்னால் இந்தக் கதையைப் படித்துக்கூட பார்க்க முடியாது" என்பதுபோல நர்மதா ராமலிங்கம் சொன்னார். நான் அவரிடம் சொன்னேன், "இலங்கையிலிருந்து இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து, இரண்டு நாட்களுக்குள் இக்கதையை எழுதி முடித்துள்ளேன். நீங்கள் ஒருமுறை படித்துப் பாருங்கள். நான் காலையில் வந்து வாங்கிச செல்கிறேன்" என்று சொல்லி விடைபெற்றேன்.

காலையில் சென்றபோது அவர் என்னை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார். வீட்டுக்குள் அழைத்துச் சென்று காலை உணவு அளித்து, தான் ஒரு பண்புக்காக, நாகரிகத்துக்காக அந்தக் கதையில் இரண்டு பக்கங்கள் படிக்கலாம் என்ற எண்ணத்தில் எடுத்துப் படித்தால், அதன் பிறகு கதையை வைக்க முடியவில்லை என்றும் முழுமையாகப் படித்ததாகவும் சொன்னார்.

"இந்தக் கதை ஒரு 'உலகளாவிய கருத்து' (யூனிவர்சல் தீம்) ஆக இருக்கிறது. எனினும் என்னால் வெளியிட முடியாத சூழ்நிலை" என்று கூறிவிட்டார்.

பிறகு எப்படியோ இந்தியாவில் சோமபுத்தக நிலையத்தினர் மூலமாக ‘நந்தாவதி' என்ற பெயரில் இக்கதை வெளியானது.

'வட்டம்பூ' என்றால் மக்கள் வாங்கமாட்டார்கள் என்று கூறிவிட்டனர். இப்படித்தான் 'நிலக்கிளி'க்குக் கூட வீரகேசரி பிரசுரத்தார் பெயரை மாற்றுப்படி கூறினர். நான் மறுத்துவிட்டேன். பிரசுரிப்பதாக இருந்தால் 'நிலக்கிளி' என்ற பெயரில் வெளியிடுங்கள், இல்லையென்றால் பிரசுரிக்கத் தேவையில்லை என்று கூறிவிட்டேன்.

நல்லவேளையாக முதல் நாவலிலேயே என்னுடைய விருப்பத்தில் தீவிரமாக இருந்தபடியால் நிலக்கிளி என்ற பெயர் வந்தது. இல்லையெனில் அந்நாவல் பதஞ்சலி என்ற பெயரில் கூட வந்திருக்கக்கூடும். நிலக்கிளி என்ற பெயரை எல்லோரும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்று கருதினர். வெட்டுக்கிளி, நீலக்கிளி என்றெல்லாம் பலர் பலவிதமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் சுவையான அனுபவங்கள்.

இதைத் தொடர்ந்து 1984ல் டென்மார்க் வந்துவிட்டேன். இங்கு டென்மார்க் வந்த பிறகு 'தாய்வழி தாகங்கள்' என்றொரு நாவல் எழுதி அதை சென்னையில் வெளியிட்டேன்.

இங்கே டென்மார்க்கிலே எனது டெனிஷ் தமிழ் அகராதியை பதினைந்து வருடங்களுக்கு முன்பு இங்குள்ள ஒரு பெரிய வெளியீட்டு நிறுவனம் தங்களது பதினோராவது பிறமொழி அகராதியாக வெளியிட்டனர்.

அவர்களே ஐந்து மாதங்கள் கழித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய பத்துப் பதினைந்து சிறுகதைகளை இங்குள்ள இரண்டு பிரபலபமான எழுத்தாளர்கள் மொழிபெயர்த்து அச்சிறுகதைத் தொகுதியை 'நாவல் மரம்' என்ற பெயரில் வெளியிட்டனர். அந்தச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற கதைகள் அனைத்துமே என் மண்ணையும் மக்களையும் பற்றியதுதான்.

இதேபோல் 'தீப தோரணம்' என்ற பெயரில் என்னுடைய சிறுகதைகளில் பதினொரு கதைகளைத் தேர்ந்தெடுத்து நானே வெளியிட்டேன். அதற்கு இலங்கையில் எனக்கு சாகித்ய மண்டபப் பரிசும் கிடைத்தது. இதற்கிடையே 'நிலக்கிளி' நாவலும் மல்லிகைப் பந்தலின் வெளியீடாக, இரண்டாவது பதிப்பாக மூன்று - நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது.

ஏன் இவ்வாறு வெளியிட நேர்ந்தது என்றால், வீரகேரி நாவல்களுக்கும் புத்தகங்களுக்கும் அவர்கள் பயன்படுத்துவது வெறும் நியூஸ் பிரிண்ட் தாள்தான். அது நீண்ட காலம் நிலைத்து இருக்காது. எனவே 'நிலக்கிளி' நாவல் நாளடைவில் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில், பயத்தில் நான் 'மல்லிகை' ஜீவா அவர்களுடன் பேசி, அவர் மூலமாக இரண்டாம் பதிப்பாக வெளியிட்டேன்.

கானா.பிரபா: எழுத்துத்துறை தவிர ஓவியம், மொழிபெயர்ப்புத் துறையிலும் தடம் பதித்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு பற்றிச் சொல்லும்போது டெனிஷ் மொழியில் வெளி வந்துள்ள பல ஆக்கக்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து?

அ.பாலமனோகரன்: டெனிஷ் மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழியாக்கம் செய்திருந்திருக்கிறேன். ஆனால் இவை எல்லாவற்றையும்விட என்னுடைய வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டமாக கலாநிதி குணசிங்கம் அவர்கள் தன்னுடைய கலாநிதி பட்டத்துக்காக எழுதிய 'தமிழ் தேசியவாதம்' என்ற நூலை தமிழாக்கம் செய்கின்ற வாய்ப்பு கிடைத்ததைச் சொல்ல வேண்டும்.

காரணம், எங்களுடைய வரலாற்றுக்குரிய சான்றுகள் பல அந்நூலில் உள்ளன. கலாநிதி குணசிங்கம் என்னிடம் அடிக்கடி சொல்வார், "இலங்கைத் தமிழர்களுடைய வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கின்ற நூல்கள்தான் இதுவரை வெளிவந்துள்ளன. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை ஒரே நூலில் முழுமையாகவும் தகுந்த ஆதாரங்களுடன் சான்றுகளுடனும் சொல்கின்ற ஒரு ஆக்கம் நம்மிடையே இல்லை. அதை நான் கட்டாயம் உருவாக்க வேண்டும்" என்பார்.

இதை ஒருவித தியாக உணர்வுடன், தாகத்துடன் அவர் செய்து கொண்டிருந்தார். அவருக்கு சிறு உதவியாக என்னால் இருக்க முடிந்ததைப் பெரிய காரியமாக நினைக்கிறேன்.

கானா.பிரபா: இத்தகைய பெரிய பணிக்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் என்பதும் கூட மிக அதிகமாகேவ இருந்திருக்கும் அல்லவா?

அ.பாலமனோகரன்: உண்மைதான். நான் முறையான பட்டப் படிப்பு பெற்றவன் அல்ல. என்னுடைய அதிகபட்ச படிப்பு என்று பார்த்தால் ஆங்கில ஆசிரியராகப் பட்டம் பெற்றதுதான். அதைவிட இங்கே டென்மார்க்கில் டெக்னிக்கல் அஸிஸ்டென்ற் எனப்படும் கட்டிடத்துறையில் தொழில்நுட்பவியலாளருக்கான மூன்று வருடப் படிப்பை முடித்திருக்கிறேன்.

என்னுடைய ஐம்பதாவது வயதில் அந்தப் பட்டப்படிப்பை முடித்தேன்.

என்னுடைய ஒரே ஆசை என்னவென்றால், என் தாய்நாட்டுக்குப் போகவேண்டும். அங்கு எவ்வளவோ கட்டிடங்கள் எழுப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதற்கு ஏதேனும் ஒருவகையில் உதவியாக இருக்கலாம் என்பதற்காகவே படித்தேன்.

கானா.பிரபா: ஓவியத்திலும் நீங்கள் கைதேர்ந்த கலைஞராக இருக்கிறீர்களே... எப்படி?

அ.பாலமனோகரன்: டென்மார்க்கில் என் ஓவியங்களை டெனிஷ் மக்கள் ஓரளவு விரும்பிப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். சிலர் தங்களுடைய வீடுகளிலும் அவற்றை வைத்துள்ளனர். ஆனால் எங்கள் மக்கள் மத்தியில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது என்றால், நான் ஓவியம் வரைவேன் என்பது எம் மக்களுக்குத் தெரியவந்தது என்றால் அதற்காக நான் திரு. கி.பி. அரவிந்தன் அவர்களுக்குதான் நன்றி சொல் வேண்டும். 'அப்பால் தமிழ்' தளத்தில் ஓவியக்கூடம் என்று ஒரு பகுதியை ஆரம்பித்து அதிலே என்னுடைய ஓவியங்களை மட்டுமல்ல ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் அளித்தார். அதிலே என்னுடைய ஓவியங்களும் உள்ளன.

நான் ஒன்றும் முறையாக ஓவியம் கற்றுக் கொள்ளவில்லை. சுயமாகத்தான் வரையத் தொடங்கினேன். இப்போதும் அதில் ஈடுபட்டு வருகிறேன். சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல இவ்வாறு நான் சுயமாக கற்றுக் கொண்டது நல்ல விஷயமாகவே இருக்கிறது.

Kaatu%2520koazhi.jpg

( அ.பாலமனோகரனால் 1994 இல் வரையப்பட்ட "காட்டுக் கோழிகளின் சண்டை", இது Amateur Art Scene வெளியிடும் PAINT சஞ்சிகையில் வெளிவந்தது)

கானா.பிரபா: உங்களது இளம் பருவ காலம் குறித்து?

அ.பாலமனோகரன்: என்னுடைய தாயார் தான் எனக்கு சிறு வயதில் ஆசிரியையாக இருந்தவர். மூன்றாம் வகுப்பு மட்டும் தண்ணீற்று சைவ பாடசாலையில் படித்தேன். அங்குதான் என் தாயார் பணியாற்றினார். அவரை பெரியம்மா வாத்தியார் என்று சொல்வார்கள். அதன் பிறகு உடுவில் மகளிர் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள், அதன் பிறகு யாழ்ப்பாணம் கல்லூரியில் படித்தேன்.

மிக சின்ன வயதிலேயே என்னை என் தாயார் பெரிய வகுப்பு மாணவர்கள் ஓவியம் வரையும்போது அங்கு அழைத்துச் சென்று அவர்களுடன் ஓவியம் வரைய விடுவார்.

அதன் காரணமாகவோ என்னவோ ஓவியம் பழகிவிட்டது. எழுத்துத் துறையில் ஒரு ஓவியரின் கண்ணோட்டத்துடன் சில விஷயங்களைப் பார்க்கும்போது அது எங்களுடைய எழுத்துக்கு அழகும் மெருகும் சேர்ப்பதை என்னால் உணர முடிகிறது.

கானா.பிரபா: வன்னி மண் மாந்தர்கள், அதாவது உங்கள் காலட்டத்திலேயே வாழ்ந்தவர்கள் பின்னர் கதை மாந்தர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டடத்தில் வன்னி மண்ணின் முக்கியத்துவம் கருதி நமது தேசிய போராட்டம் கருதி - அதாவது வன்னி மண்ணில் இருந்துகொண்டு பலர் கலை, இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதற்கு முன்னர் - அதாவது 90-களுக்குமுன்னர் வன்னி மண்ணிலிருந்து அதிகமான படைப்பிலக்கியங்கள் வெளிவராமல் இருந்ததற்கு குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா?

அ.பாலமனோகரன்: எங்களுடைய விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்துக்குப் பிறகு வன்னியில் ஒரு புது வெள்ளம் அல்லது புது ரத்தம் பாய்ந்தது போன்ற நிலைமை ஏற்பட்டது. 84ஆம் ஆண்டு டென்மார்க் வந்து, அதன் பிறகு பத்து வருடங்களுக்குப் பின்னர் முதன்முதலாக அங்கு சென்றபோது, வன்னி மண்ணையும் சரி, மக்களையும் சரி முன்பிருந்த வகையில் நான் காணவில்லை.

குறிப்பாக அங்கு வாழ்ந்த இளைஞர்கள் மிகவும் வலிமையான சில தன்மைகளைப் பெற்றிருந்தனர். அதாவது சூழல் பிரச்சனையாகும்போது - சூழல் வாழ்க்கைக்கு இலகுவாக இல்லாத வேளையில் தாவரங்களும் சரி, மனிதர்களும் சரி, அந்த சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. அதாவது இயற்கை அவர்களை மாற வைத்திருந்தது.

நான் அங்கு சென்ற வேளையில் இந்திய ராணுவம் அங்கிருந்தபோது நடந்த போர்களால் யாவுமே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. காயம்பட்ட மாந்தர்களையும் மரங்களையும் செடிகளையும்தான் பார்க்க முடிந்தது.

இருந்தாலும் காலையில் இருள் பரந்த நேரத்திலே கற்கள் நிறைந்த அந்த வீதியிலே . ஒரு ஒற்றையடிப் பாதைமூலமாகத்தான் சைக்கிளில் போவார்கள். இளைஞர்களும் யுவதிகளும் அந்தக் காலை நேரத்திலே சைக்கிளில் செல்வார்கள். அப்போதுதான் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. அவர்கள் அந்த நேரத்திலும் சிரித்துப் பேசிக் குதூகலத்துடன் சென்றார்கள்.

நான் பார்த்தது ஒரு புது சந்ததி. வன்னி மண்ணிலே ஒரு புதிய சந்ததி, வலிமையான சந்ததி உருவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

அதன் பிறகு ஓவியத்துறை தொடர்பாக நான் அங்கு சென்று சில இடங்களை சென்று பார்த்ததுண்டு. அங்கு பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். இலக்கியத் துறையிலும் கால்பதித்து தங்களுக்கென தனி முத்திரை பதித்து, மிகவும் யதார்த்தமான இலக்கியதைப் படைத்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

அந்த படைப்புகள் எல்லாம் வெளியே வந்துள்ளனவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

அங்கே உள்ள ஓவியர்கள், திறமை உள்ளவர்களின் பல படைப்புகள் நம்மை வந்து அடையவில்லை. இதுபற்றி அரவிந்தன் அவரிகளிடமும் கூறியுள்ளேன். அத்தகைய படைப்புகளை நாம் எடுக்க வேண்டும்.

அவற்றுக்கென தனியாக ஒரு ஓவியக்கூடத்தை - தமிழீழ ஓவியக்கூடம் என்ற பெயரில் உருவாக்க வேண்டும். அந்தப் படைப்புகளுக்கென ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்து வெளியே இருக்கின்ற நம்மவர்களுக்கு நம் மண்ணைச் சேர்ந்த திறமைசாலிகளின் படைப்புகள் வெளியே வரவேண்டும் என்கிற ஆதங்கம் இருக்கிறது.

ஆர்ட் கேலரி என்று சொல்கின்ற இணையத்தளங்களில் சென்று பார்த்தால் நம்முடைய சகோதர இனமாகிய எத்தனையோ சிங்கள ஓவியர்களின் எத்தனையோ படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் ஈழத்தில், எங்களுடைய மண்ணில் அத்தகைய திறமை இல்லாமல் இல்லை. அப்படிப்பட்ட படைப்புகளை இணையத்தளத்தில் கொண்டு வருவதும் சிரமமான பணியல்ல. இந்தப் பணியைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. வன்னி மண் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது என்பேன்.

கானா.பிரபா: நிறைவாக ஒரு கேள்வி, உங்களுடைய பார்வையிலே ஓர் இலக்கியப் படைப்பு என்பது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?

அ.பாலமனோகரன்: இலக்கியம் குறித்து இந்தக்கட்டத்தில் பெரிதாகப் பேசும் அளவு எனக்கு அதுகுறித்த ஆழ்ந்த புலமை இல்லை என்பேன்.

எனினும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவல் அல்லது கதையானது அதை வாசிப்பவர்களுக்கு ஒரு மெசேஜ், அதாவது ஒரு செய்தியை கொண்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

அதாவது வாசி, யோசி, நேசி என்பேன்.

நாங்கள் எழுதுவதையெல்லாம் வாசிக்கிறோம்தானே? அவ்வாறு வாசிக்கும்போது ஒரு செய்தியை வாசகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு படைப்பானது அமைய வேண்டும் என்பது என் கருத்து.

ஒரு விஷயத்தை சிந்தித்து, அதை எழுதி, அதன் வழியாக பிறரை நேசிக்கச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையை வளர்க்க வேண்டும்.

இந்த உலகத்திலே எந்தத் துறையாக இருப்பினும், அதில் வெற்றிகரமாக முன்னேறியிருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் ஒரு குழு முயற்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

குறிப்பாக வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் வாழும் இளம் தலைமுறையினரின் திறமைகளை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

இப்படிப்பட்ட வினாக்களை, பிரச்னைகளை, விஷயங்களை நம்முடைய படைப்புகளில் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.

நம்முடைய படைப்பு ஏதாவது ஒருவகையில் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்ளுக்கும், இந்த உலகுக்கும் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். கதையளவில் இத்தகைய அம்சங்கள் இருக்க வேண்டும்தான். ஆனால் அதைவிட இளம் தலைமுறையினரின் திறமைகளை வெளிக்கொண்டு வருவது முக்கியம் என்றும், அதை நம் படைப்புகள் பிரதிபலிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

நன்றி வணக்கம்

புகைப்படங்கள் உதவி: அப்பால் தமிழ்

ஓவியம்: பாலமனோகரனின் பிரத்தியோகத் தளம்

படைப்பாளிகளின் வாழ்வியில் அனுபவப் பகிர்வுகளை அவர்களின் குரலிலேயே பதிவு செய்து ஒலி ஆவணப்படுத்த வேண்டும் என்ற என் தொடர் முயற்சியின் பிரகாரம் திரு.அ.பாலமனோகரன் அவர்களை இப்பேட்டியைக் கண்டிருந்தேன். இப்பேட்டி ஒலி வடிவில் தமிழ்நாதம் இணையத்தளத்திலும், எழுத்து வடிவில் அப்பால் தமிழ் இணையத் தளத்திலும் வந்திருந்தது. இம்முயற்சியில் உறுதுணை புரிந்த என் சக பயணிகளுக்கு என் மேலான நன்றிகள் உரித்தாகுக.[/size]

[size=4]http://kanapraba.blogspot.ca/2007/10/blog-post.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.