Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்க மோதும் பேரினவாதம்!

Featured Replies

Land%20Prob_CI.jpg

அண்மையில் கிளிநொச்சி விசுவமடுவில் சிறுவன் ஒருவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட பௌத்த வெசாக் கூட்டை அவன் மேய்த்த மாடு தட்டி விட்டது. அதனால் அந்த வெசாக்கூடு உடைந்து விட்டது. உடனே அதைப் பார்த்துக் கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் 14 வயதுடைய அந்த சிறுவனின் பிஞ்சுக் கால்கள்மீது துப்பாக்கியால் சுட்டு அவனை மடக்கிப் பிடித்தார். ஞானத்தை போதிக்கும் புத்த பெருமானின் பௌத்த மத மார்க்கத்தில் அவர் ஞானமடைந்த நாள் ஒன்றுக்காக கட்டப்பட்டிருந்த வெளிச்சக்கூட்டை ஒரு சிறுவன் தட்டியமைக்காக அவனுக்கு துப்பாக்கிக்சூட்டை இராணுவத்தினரின் பரிசாக வழங்கியிருந்தனர்.

வடக்கு கிழக்கை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை ஈழப்போராட்ட ஆரம்பித்தில் இருந்து தமிழர்களால் முன்வைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் அங்காங்கே சிறுமுகாங்களை அமைத்து நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் எண்ணிக்கை தமிழர்களின் போராட்டம் உக்கிரமடைய உக்கிரமடைய மேலும் அதிகரிக்கப்பட்டது. வன்னிப்போரில் மாத்திரம் சுமார் ஒரு லட்சம் இலங்கைப் படைகள் போர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழர்களின் மரபு வழித்தாயகம் மற்றும் சுயநிர்ணயம், தேசியம் முதலிய கோரிக்கைகளை முழுமையாக இந்த இராணுவமயம் ஆக்கிரமித்து அழித்து வருகிறது. இலங்கையை ஆளும் ஒவ்வொரு சிங்கள ஜனாதிபதிகளும் இராணுவம் என்கிற இலங்கை சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தை தமிழர்களின் தாயகத்தில் அதிகரிப்பதன் வாயிலாக இன அழிப்பை மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் ஜே.வி.பி என்கிற மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்தா நாட்டில் இராணுவம் எங்கு நிலை கொண்டிருக்க வேண்டுமோ அதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்கா அரசு முதல் மகிந்த ராஜபக்ச அரசு வரை தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்திற்கு சிங்களப் பேரினவாத ஆதரவைத் திரட்டி தமிழினப் படுகொலைகளுக்கு எதிராக ஒரு சிங்களப் பிரஜையைக் கூட குரல் எழுப்ப விடாமல் அரசியல் நடவடிக்கையில் ஜே.வி.பி ஈடுபட்டது. யுத்தத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச அரசுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தமிழர்களின் அவலங்களை குறித்து போலிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியது. தம்மை ஒரு இடதுசாரிக் கட்சி என்று மீண்டும் அடையாளப்படுத்திக் கொண்டு இந்த தந்திர அரசியலை தொடங்கியது. அதன் மூலம் இடதுசாரி அரசியலை இலங்கையில் ஒரு இனவாத அரசியலுக்கு பயன்படுத்திய காலக்கொடுமையை ஜே.வி.பி செய்திருக்கிறது.

ரோகணவிஜயவீர காலத்தில் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக போராடிய ஜே.வி.பி பின்னர் தமிழர்களுக்கு எதிராக வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சிங்களப் பேரினவாதத்திற்கு முழுமையாக முண்டு கொடுத்தது என்பதை யாரும் வரலாற்றில் மறந்துவிட இயலாது. அதன் காரணமாகவே ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சியாக தனது முகத்தை வரலாற்றில் இறுக்காக பதிவு செய்திருக்கிறது. யுத்தத்தற்குப் பின்னர் முற்போக்கு முகம் காட்டியிருந்தது. இப்பொழுது முதலாளித்துவ அரசின் இராணுவத்தை லால்காந்தா ஆதரித்துப் பேசியிருப்பதன் மூலம் ஜே.வி.பியின் கிழிந்த இனவாத முகம் மேலும் கிழிந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நடத்திய மேதினக் பேரணியில் சிங்ககொடியை ஏந்தியமைக்காக தமிழர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக அந்தக் கொடியை அவர் ஏந்தியிருந்தாலும் அந்தக் கொடி தமிழர்களை பிரதிபலிக்கவில்லை. அத்துடன் சம்பந்தர் சிங்கக் கொடியை ஏந்திய பொழுது அரசு அதறகுப் பதிலாக புலிக்கொடியை காட்டியது. அத்துடன் தனி ஈழம் கோரவில்லை என்று இரா. சம்பந்தன் இந்திய எம்.பிக்களிடம் சொன்னதாக கூறப்பட்ட கருத்தும் விமர்சனத்திற்கு உள்ளானது. குறைந்த பட்சமான ஒரு தீர்வுக்காவது இலங்கை அரசு சம்மதிக்குமா என்பதை உலகத்திற்கு உணர்த்தவே அவர் இவ்வாறு சொல்லியிருந்தாலும் இது தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுகள் செய்த அநீதிகளை நியாயப்படுத்துவதுடன் தமிழர்கள் விடுதலைக்காக செய்த தியாகங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைக்கின்றன.

ஆனால் வடக்கு கிழக்கை விட்டு இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை சம்பந்தர் தெரிவித்த பொழுது சம்பந்தர் ஈழம் அமைக்கவே இவ்வாறு குறிப்பிடுகிறார் என்று ஜே.வி.பி குறிப்பிடுகிறது. அப்படியெனில், யார் என்ன சொன்னாலும் வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவத்தை அகற்ற மாட்டேன் என்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இறுக்கமான இனவாத ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை ஜே.வி.பி ஆதரிக்கிறது என்றே அர்த்தமாகிறது. ஆனால் இது வியப்பூட்டும் விடயமல்ல. பயங்கரவாதிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கு! பயங்கரவாதிகளுடனான சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறி!! என்று சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆணையிட்ட ஜே.வி.பி இவ்வாறு சொல்லுவதில் என்னதான் வியப்பிருக்கிறது.

தமிழர்களின் நிலத்தை அபகரிக்கும் பொழுது இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் யாரும் குடியேறலாம் என்று சொல்லுவதும், இனப்படுகொலை நடந்தது என்று சொல்லும் பொழுது பயங்கரவாதிகள்தான் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லுவதும், தமிழர்களின் போராட்டம் என்று சொல்லும் பொழுது முதலாளித்துவ அரசுக்கு எதிராகத்தான் போராட வேண்டும் என்று சொல்லுவதும், தமிழர்களுக்கு உரிமை என்னும் பொழுது சோசலீச சமவுரிமைக்காக போராடுவோம் என்று சொல்லுவதும் ஜே.வி.பியின் சில தந்திரங்கள். முதலாளித்துவ அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதன் மூலம் இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள் என்று சொல்லியபடி சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அரசியல் நடவடிக்கையில் ஈடுபடும் ஜே.வி.பி இனவாத முகத்தை மிகத் தெளிவாகவே காட்டுகிறது.

சிங்கள இனவாத அரசின் பொறிமுறைகளுக்கு ஏற்ப, அதன் திட்டத்திற்கு ஏற்ப, தமிழ் இன அழிப்புக்கு ஏற்ப, தமிழர்களின் நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை தம்மை இடதுசாரிகளாக சொல்லும் ஜே.வி.பியும் நிலை நிறுத்தச் சொல்லுவதற்குப் பெயர் என்ன? சிங்களப் பேரினவாத அணுகுமுறையேயாகும். தமிழ் மக்களின் பெரும்பான்மை பலத்தை பெற்று இன்று உலகளவில் தமிழர்களின் நிலையை எடுத்துக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இராணுவத்தை அகற்றச் சொல்வதை ஏற்கக் கூடாது என்று அரசை கேட்பதன் அர்த்தம் என்ன? சிங்கள இனவாத ஓடுக்குமுறைதான். தமிழர்களுக்கு அதிகாரம் கொடுக்கக்கூடாது. அவர்கள் கேட்பதை வழங்கக்கூடாது, அவர்களால் அவர்களின் தாயகத்தில் உள்ள நிலவரங்களை தீர்மானிக்க இடமளிக்க கூடாது என்பதன் அரத்தம் என்ன? சிங்கள இனவாத போக்குத்தான் என்பது தெளிவாகவே தெரிகிறது.

இலங்கை ஜனாதிபதி தன்னுடைய இராணுவப் படைகளை மனிதாபிமானப் படைகள் என்று சொல்லியே வன்னி யுத்தகளத்தில் இறங்கியிருந்தார். தன்னுடைய படையினர் ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் மனிதாபிமானப் பிரதிகளையும் வைத்துக் கொண்டு யுத்தம் செய்தனர் என்று மாபெரும் இனவழிப்பை மிகச் சுலபமாக மூடிமறைக்க முனைந்தார். இந்த உலகத்தில் இந்த நூற்றாண்டில் நடந்திராக மனிதப் பேரவலம் வன்னிப்போரில் நடைபெற்றிருக்கிறது. யுத்த களத்தில் இலங்கை இராணுவத்தினர் தமிழர்களுக்கு எதிராக செய்த அட்டுழியங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் இன்று உலக சமூகத்தாலேயே ஆதார பூர்வமாக பார்க்கப்பட்டிருக்கின்றன.

யுத்தம் மூலம் தமிழரை அழித்து தமிழர்களின் தாயகத்தை சூடுகாடாக்கிய இராணுவத்தினர் யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் நிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். தமிழர்களின் நிலமெங்கும் இராணுவமுகாங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். யுத்தத்தின் மூலம் நிலத்தை கைப்பற்றிய இராணுவத்தினர் இப்பொழுது அங்கிருந்து மக்களை அகற்றுவதிலும் அங்கு முகாங்களையும் புத்தர்சிலைகளையும் நிறுவும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திரமுக்க்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாமும் நிலை கொள்ள விரும்பும் இராணுவத்தினர் அந்தப் பகுதியை அண்டிய பல்வேறு கிராமங்களை அபகரிக்க முயல்கின்றனர். மக்களுக்குச் சொந்தமான காணிகளில் 'இராணுவத்தின் பூமி' என்று எழுதுகின்றனர். இதன் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தை அங்குலம் அங்குலமாக நிலத்தை இழந்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் டிப்போ சந்தியில் சிறுவர் பூங்கா ஒன்று இருந்தது. கிளிநொச்சியில் உள்ள சிறுவர்களுக்கு அந்தப் பூங்கா ஒன்றுதான் விளையாடும் இடம். பெரியளவில் வசதி வாய்ப்பற்ற அந்தப் பூங்காவை கிளிநொச்சியின் சிறுவர்கள் தங்கள் சொர்க்கமாக கருதி விளையாடுவார்கள். கிளிநொச்சியைக் கைபற்றிய பின்னர் இராணுவத்தினர் அந்த சிறுவர் பூங்காவில் தமது பாரிய யுத்த நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்துள்ளனர். அந்த நினைவுச் சின்னமானது பெரும் தடைச்சுவர் ஒன்றை துப்பாக்கிச் சன்னம் ஒன்று தாக்கியழிக்க நீரோப்பலமலர் மலர்வதைப் போல அமைக்கபட்டிருக்கிறது. தமிழீழம் என்ற தடைமீது துப்பாக்கிச் சின்னம் தாக்கிக் கிழிக்க இலங்கை தேசிய மலர் மலர்கிறது.

உண்மையில் அந்த துப்பாக்கிச் சின்னம் பல்லாயிரம் சிறுவர்களின் நெஞ்சை கிழிக்கிறது. அவர்களின் இயல்பான வாழ்க்கையை பறித்திருக்கிறது. அவர்களின் புன்னகையை கொலை செய்திருக்கிறது. இன்று கிளிநொச்சியின் சிறுவர்கள் புன்னகையை இழந்து பூங்காங்களை இழந்து எல்லாவற்றையும் இழந்து வாழ்கின்றனர். இராணுவத்தினரும் அவர்கள் நீட்டியுள்ள துப்பாக்கிகளும் அவர்களின் நடவடிக்கைகளும் இப்படி குழந்தைகளின் வாழ்க்கை முதல் எல்லா இயல்புகiயும் தின்று விடுகின்றன. தமிழர்களுக்கு இயல்பை இழந்த வாழ்வை பரிசளிக்க வேண்டும் என்று சிங்களப் பேரினவாத அரசும் அதன் ஆதரவுக்கட்சிகளும் முண்டியடிக்கின்றன.

வன்னி இறுதி யுத்த வெற்றியை நினைவுபடுத்தும் மாபெரும் இராணுவத்தின் சிலை ஒன்று புதுமாத்தளனில் வைக்கபட்பட்டிருக்கிறது. அந்த இராணுவவத்தின் சிலை யுத்தவெறியோடு ஒரு கையில் துப்பாக்கியையும் மறுகையில் சிங்களத் தேசியக் கொடியையும் ஏந்தியிருக்கிறது. இந்தச் சின்னங்கள் எல்லாமே தமிழர்கள்மீதான அழிவையும் தோற்கடிப்பையும் நினைவுபடுத்துகின்றன. இராணுவத்தினர் இன்று தமிழர்களின் நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் கடுமையாக ஈடுபடுபகின்றனர். கையகப்படுத்தும் பொழுது வரலாற்றில் நிலைத்து நின்று தாக்கும் இராணுவ எச்சங்களை விட்டுச் செல்லுகின்றனர். தமிழர்களின் நிலத்தில் நிரந்தரமாகவே நிலை கொள்ளும் எண்ணத்தில் மக்களின் காணிநிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இதே படைகளை தொடர்ச்சியாக எங்கள் நிலத்தில் நிறுத்தி வைப்பதில் ஜே.வி.பிக்கு மிகுந்த அக்கறையிருக்கிறது. தமிழர்கள் மீள்குடியேற்றப்படவில்லை, அவர்களுக்கு தறப்பாள் கூடாரங்கள் வழங்கப்படவில்லை என்று கண்ணீர் விட்டது இந்தப் போலி இடதுசாரிக்கட்சி. தங்களால் முண்டு கொடுக்கப்படடு நடத்திய யுத்த களத்திலும் தாங்கள் ஆதரித்து நிறைவேற்றிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தினாலும் காணாமல் போனவர்களுக்காய் எங்கள் நகரங்களில் வந்து இந்தக் கட்சி கண்ணீர் விட்டது. ஜே.வி.பியின் இன்றைய நோக்கம் எல்லாம் தமிழர்களின் நிலத்தில் அரசியல் செய்வது மட்டுமே. அதற்காக தன்னால் உருவாக்கப்பட்ட அவலத்தை வைத்து தானே அரசியல் செய்யப் பார்க்கிறது. இது மகிந்த ராஜபக்ச அரசு நடத்திய யுத்தத்தால் மூடப்பட்ட எங்கள் வீதியை தாங்களே விழா நடத்தி திறந்து வைக்கும் அநீதிக்கு ஒப்பானது.

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறுதல் என்கிற நடவடிக்கையிலிருந்துதான் ஜனநாயகம் திரும்பும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனால் வடக்கு கிழக்கில் ஜனநாயகம் திரும்பக் கூடாது என்பதற்காகவே இலங்கை அரசு தனது ஆக்கிரமிப்புப் படைகளை இறுக்கமாக நிலை நிறுத்தி வைத்திருக்கின்றன. கண்ணுக்கு எட்டிய இடங்களில் எல்லாம் படையினர். நம்முடைய வீதியிலும் சந்திகளிலும் நகரங்களிலும் வீடுகளுக்கு அருகிலும் இராணுவத்தினர் எப்பொழுதும் துப்பாக்கிகளை நீட்டியபடியிருக்கின்றனர். உண்மையில் நாங்கள் இராணுவத்தினருக்குள் வாழ்கிறோம். இராணுவமுகாங்களுக்குள் எங்கள் வீடுகள் இருக்கின்றன. நாங்கள் இராணுவத்தினரால் தீர்மாணிக்கப்படுபவர்களாக ஆளப்படுகிறோம்.

நாங்கள் எதற்காக இப்படியான ஆக்கிரமிப்பு சூழலில் வாழ நிர்பந்திக்கப் படுகிறோம் என்பதே முக்கியமானது. எதற்காக இன்னும் இந்தப் படைகள் வெறியடங்காத துப்பாக்கிகளை நீட்டியபடி இருக்கின்றனர் என்பதே பெரும் கேள்வி. இராணுவத்தினர் கிராமங்கள் தோறும் செல்லுகின்றனர். மக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து பல்வேறு விடயங்களில் ஊடுருவுகின்றனர். மக்களின் உளவில் எப்படியிருக்கிறது என்பதை தொடர்ந்து அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தினர் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக இப்பொழுது அரசியல் பணிகளை செய்கிறார்கள்.

சில கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினர் அங்கு மக்களிடம் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் எண்ணமும் ஈடுபாடும் உண்டா? என்று துருவுகின்றனர். அத்துடன் விடுதலைப் புலிகள் பற்றியும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றியும் என்ன நினைக்கிறிர்கள்? என்று கேட்கின்றனர். மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்படக்கூடாது என்பதற்காக இறுக்கமாக இராணுவத்தினர் தமிழர்களின் தாயகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழர்கள் எதையும் கேட்கக்கூடாது அவர்கள் தங்களுக்காக வாயே திறக்கக்கூடாது என்பதற்காகவே இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும்விட தமிழர்களை அவர்களின் தாயகத்தில் மெல்ல மெல்ல அழிக்கவும் அவர்களின் தாயகத்தை மெல்ல மெல்ல அபகரிக்கவும் இலங்கை அரசு தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை நிறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக தமிழர்களின் வாழ்க்கையை இலங்கை அரசு தனது இயந்திரமான இராணுவத்தின் கையில் கொடுத்திருக்கிறது.

வரலாற்றில் இவ்வாறான அநீதிகள் எங்கேனும் நடந்திருக்கின்றனவா? ஒரு இனத்திற்கு எதிராக எத்தகைய துயரங்களும் அநீதிகளும் பல்வேறு முனைகளில் திருப்படுகின்றன? ஒரு இனத்தை எப்படியெல்லாம் அழிக்கிறார்கள். இந்தப் பூர்வீக இனத்தை தங்கள் வாழ்நிலத்திலிருந்து துடைத்தெறிய எத்தகைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இயல்பான வாழ்வை இழந்து ஈழத் தமிழினம் தவிக்கிறது. உண்மையில் நாம் இன்னும் விழிகளை கூர்மையாக திறந்து வைக்க வேண்டிருக்கிறது. அழிவின் விளிம்பிலிருந்து கொண்டு இந்த அநீதிக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது.

வெசாக் கூட்டை தட்டிய மாட்டை மேய்த்தமைக்காக ஒரு 14 வயதுச் சிறுவனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டிய இராணுவத்தை காவல் படைகள் என்கிற பெயரில் தமிழர் நிலத்தில் நிலை நிறுத்தி ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை இராணுவத்தின் கையில் கொடுத்திருக்கிறது சிங்களப்பேரினவாத அரசு. இராணுவத்தினரே தமிழர்களின் வாழ்க்கையை நோக்கி தமது துப்பாக்கிகளை திருப்பி வைத்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையை எமக்கு திணிக்க முற்படும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத அரசுக்கும் அதனை ஆதரிக்கும் ஜே.வி.பி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும் ஒன்றை மட்டும் தெளிவாக உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் நிலத்தில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கையில் அவர்களை நிலை நிறுத்தும் முடிவை நீங்கள் எடுக்க முடியாது. தங்கள் நிலத்திலிருந்து இராணுவமே வெளியேறு! என்ற முடிவை ஈழத் தமிழர்கள்தான் எடுக்க முடியும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80471/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.