Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

Featured Replies

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி.

பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம்.

இது சிறைக் கொட்டடியில்லை; பம்பாய், கல்கத்தாவின் குடிசைப் பகுதியில்லை – நியூயார்க்.

மண்ணுலக சொர்க்கமான அமெரிக்காவின் மாபெரும் நகரம். 100 மாடி 150 மாடிக் கட்டிடங்கள் நிரம்பிய அந்த கான்கிரீட் காட்டின் ஏதோ ஒரு கட்டிடத்தில் இது ஒரு பொந்து.

இந்தப் பொந்தில் வசிப்பவர்கள் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு 7 மணிக்கு வேலை செய்யத்துவங்க வேண்டும்.

வேலை செய்யும் தொழிற்கூடமோ பக்கத்து அறைதான். 15 அடிக்கு 18 அடி அளவுள்ள அறைக்கு 15 தையல் எந்திரங்கள். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை.

இந்தச் சித்திரவதைக் கூடங்களுக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் சூட்டியிருக்கும் பெயர் வியர்வைக் கடைகள். நியூயார்க், லாஸ் எஞ்செல்ஸ் போன்ற அமெரிக்காவின் பெருநகரங்கள் அனைத்திலும் நிரம்பியுள்ள இத்தகைய ‘வியர்வைக்கடை’களில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரும் தாய்லாந்து, சீனா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் – கொத்தடிமைகள்.

துபாய்க்கும் சிங்கப்பூருக்கும் வேலை தேடிச் சென்று ஏமாந்து கொத்தடிமைகளாகும் நம்மூர் மக்களின் கதையைக் காட்டிலும் கொடியது இவர்களது கதை.

”லாஸ் எஞ்செல்ஸ் நகரிலுள்ள அதி நவீன தையற்கூடம் ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்குக் காட்டினார்கள். பார்ப்பதற்கே மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை; வாரத்தில் 5 நாட்கள் வேலை. மாதம் 2400 டாலர் சம்பளம். விடுமுறை நாட்களில் டிஸ்னிலாந்து போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம் என்று ஆசை காட்டினார்கள்; நம்பி வந்தோம்.”

“லாஸ் ஏஞ்செல்ஸ் விமான நிலையத்திலிருந்து நேரே இந்தப் பொந்துக்குத்தான் கொண்டு வந்தார்கள். எங்களிடமிருந்து பாஸ்போர்ட், பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். அதிகம் பேசாதே – கேள்வி கேட்காதே – யாரோடும் நட்பு சேராதே – என்ற எச்சரிக்கையுடன் இங்கே அடைக்கப்பட்டோம்”.

”தாய்லாந்தில் 8 மணி நேரம் உழைத்துச் சம்பாதித்ததை இங்கே 16 மணிநேரம் உழைத்துச் சம்பாதிக்கிறோம்.”

இது லே போதாங் என்ற தாய்லாந்துப் பெண்ணின் கதறல்.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2.jpg

யூலி என்ற சீனப்பெண்ணின் கதை இன்னும் கொடூரமானது.

”அமெரிக்காவில் வேலை வாங்கித் தருகிறோம், அங்கே சம்பாதித்து எங்கள் கடனைக் கொடுத்தால் போதும்” என்று சொன்ன ஏஜெண்டுகளின் பேச்சை நம்பி, தன் கணவனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள் யூலி.

1991-இல் அமெரிக்கா போன கணவனிடமிருந்து பணம் வரவில்லை; கடிதமும் இல்லை; ஆளையும் காணவில்லை. அனுப்பி வைத்த ஏஜென்டுகளைக் கேட்டால் ”இன்னும் கடன் அடையவில்லை” என்றார்கள். தன்னந்தனியாக 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு 5 ஆண்டுகளாக வாழ்வதற்குப் போராடி வந்த யூலி ஒரு முடிவுக்கு வந்தாள்.

மிச்சமிருந்த எல்லா உடைமைகளையும் விற்றுத் தன் கணவன் வாங்கிய கடனை அடைத்தாள். ”என்னையும் என் பிள்ளைகள் மூன்று பேரையும் என் கணவனுடன் நியூயார்க்கில் சேர்த்துவிடுங்கள்” என்று ஏஜென்டுகளிடம மன்றாடினாள்.

அதற்கு 1,32,000 டாலர் செலவாகும்; நீங்கள் வேலை செய்து அடைக்க வேண்டும் என்றார்கள் ஏஜெண்டுகள். யூலி ஒப்புக் கொண்டாள்.

இப்போது யூ லியும் 3 பிள்ளைகளும் நியூயார்க் நகரில். மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. கணவனைப் பார்த்துவிட்டாள். ஆனால் குடும்பம் சேர்ந்து வாழமுடியவில்லை. ஆளுக்கோரிடத்தில் வேலை. சேர்ந்து வாழவேண்டும் என்ற கனவுக்காகத் தனித்தனியாக உழைக்கிறார்கள்.

ஐந்து பேரும் ஒரு நாளைக்கு 17 மணிநேரம் உழைக்கிறார்கள். மாதந்தோறும் 3000 டாலர் கடன் கட்டுகிறார்கள்: ஆனால் கடன் அடையவில்லை; அடையப் போவதுமில்லை.

படிக்க வேண்டிய பிள்ளைகளைக் கொத்தடிமையாக்கி விட்டதற்காக வருந்தி அழுகிறாள் யூலி.

ண்ணீர்க் கதைகளுக்குப் பஞ்சமில்லை.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3.jpgஇந்தத் தொழிலாளர்களெல்லாம் ஆசிய நாடுகளிலிருந்து மாஃபியாக் கும்பல்களால் கொண்டுவரப் பட்டவர்கள். முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இருந்தால் அதை இத்தொழிலாளர்களிடமிருந்து பறித்து வைத்துக் கொள்கின்றன இந்த மாஃபியா கும்பல்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் கள்ளத் தோணியில் கொண்டுவரப்பட்டவர்கள்.

ஒவ்வொர் ஆண்டும் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் குடியேறும் சீனர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அமெரிக்க உளவு நிறுவனம். தாய்லாந்திலிருந்தோ 24,000 பேர். சட்ட பூர்வமாகவே தாய்லாந்திலிருந்து அமெரிக்காவில் குடியேறுவோர் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர். இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்களை அமெரிக்க அரசு ஏன் தடுத்து நிறுத்த வில்லை என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான விடைகளில் ஒன்றுதான் இந்த வியர்வைக் கடைகள். பலமாடிக் கட்டிடங்களின் இடுக்குகளிலும், காற்றுப் புகாத பரண்களிலும், நிலவறைகளிலும் இயங்கும் இத்தகைய வியர்வைக் கடைகள். நியூயார்க் நகரில் மட்டும் 400.

”வேலை நிலைமைகளைப் பற்றியோ, கூலியைப் பற்றியோ யாராவது புகார் செய்தால் மறுகணமே அவர்கள் அமெரிக்காவை விட்டுத் துரத்தப்படுவார்கள். எனவே யாரும் வாய்திறக்கவே அஞ்சுகிறார்கள்” என்கிறார் சீனத்தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் விங்லாம்.

அமெரிக்காவை விட்டு ஓடத் தயாராக இருப்பவர்களையும் அப்படி ஓடிவிடுவதற்கு அனுமதிப்பதில்லை மாஃபியா கும்பல்கள். ”எங்களுக்குச் சேரவேண்டிய தொகையை கொள்ளையடித்தாவது கொடுத்துவிட்டுப் போ” என்று மிரட்டுகிறார்கள். கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். கொத்தடிமையாக நீடிப்பதா, கிரிமினலாக மாறுவதா என்ற கேள்வி வந்தால் முதலாவதைத்தான் தெரிவு செய்கிறார்கள் அந்த ஏழைத்தொழிலாளர்கள்.

நியூயார்க் நகரின் தொழிலாளர் சடப்படி ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 5.15 டாலர். இந்தக் கொத்தடிமைகளுக்குக் கொடுக்கப்படுவதோ ஒரு டாலர். அந்தச் சம்பளமும் ஒழுங்காகக் கொடுக்கப்படுவதில்லை. இரண்டு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொள்வதென்பது மிகவும் சகஜம். அமெரிக்காவின் காவல்துறை, குடியேற்றத் துறை, தொழிலாளர்துறை ஆகிய மூன்றுமே இந்த இரகசிய உலகத்தைக் கண்டு கொள்வதில்லை.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-4.jpg

மே தினப் போராட்டத்தின் மூலம் உலகத்தொழிலாளர்களுக்கு ”8 மணி நேர வேலை” எனும் அடிப்படை உரிமையைப் பெற்றுத்தந்த நாட்டில், மே தினப் போராட்டத்திற்கு முன்னால், சென்ற நூற்றாண்டில் நிலவியதைக் காட்டிலும் கொடூரமான சுரண்டலும் ஒடுக்கு முறையும் தொடர்கிறதே இதற்குக் காரணம் என்ன?

வியர்வைக் கடைகள் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இதற்குப் பதில் சொல்கிறது. ”அவர்கள் தங்கள் சொந்த நாட்டினராலேயே இரக்கமில்லாமல் சுரண்டப் படுகிறார்கள்.” உண்மைதான், தமது சொந்த நாட்டைச் சேர்ந்த மாஃபியாக் கும்பல்களால்தான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள்; அவர்களால்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் யாருக்காக? அந்த வியர்வைக் கடைகளின் பொந்துகளிலிருந்து அவர்கள் உற்பத்தி செய்யும் காற்றோட்டமான சட்டைகளை அணிபவர்கள் யார்? அவற்றை விற்று ஆதாயம் அடைவர்கள் யார்? அமெரிக்காவின் மிகப்பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிறுவனங்களும், ஏற்றுமதி நிறுவனங்களும்தான் இந்த வியர்வைக் கடைகளின் சரக்கைக் கொள்முதல் செய்பவர்கள்.

இந்தியாவிலிருந்தும் பிற ஏழை நாடுகளிலிருந்தும் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் அமெரிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், நேரடியாக சென்னைக்கும், பம்பாய்க்கும் வந்திறங்கி, தங்களது ஆடைகள் எங்கே தைக்கப்படுகின்றன, எப்படித் தைக்கப்படுகின்றன என்று சோதனை செய்கிறார்களே – துணை ஒப்பந்தத்தில் வேலை செய்யும் சிறிய முதலாளிகளின் தையலகங்களைக் கூட அவர்கள் விட்டுவைப்பதில்லையே – அத்தகைய அமெரிக்க முதலாளிகள் தங்கள் நாட்டின் வியர்வைக் கடைகளை மட்டும் பார்வையிடாதது ஏன்?

”கலிஃபோர்னியாவில் இத்தகைய வியர்வைக் கடையொன்றை தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கே உற்பத்தியாகும் ஆடைகளெல்லாம் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆடை விற்பனையகங்களுக்குச் சொந்தமானவை எனத் தெரியவந்தது” என்கிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5.jpg

நியூயார்க்கின் மிகப்பெரும் நிறுவனங்களான வால் மார்ட், கே மார்ட் ஆகியோரது ஆடை விற்பனையில் பாதி நியூயார்க் கொத்தடிமைகளின் தயாரிப்புதான் என்கிறது – டைம் வார ஏடு. வால் – மார்ட், கே – மார்ட் ஆடைகள் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றுக்கும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

சதாம் உசேனின் கழிப்பறையில் இரசாயன ஆயுதத்தின் நெடி வீசுவதை வானத்திலிருந்தே மோப்பம் பிடிக்கத் தெரிந்த கிளிண்டனின் நாசியில் வால் மார்ட் சட்டைகளில் வீசும் வியர்வையின் நெடி ஏறாதது ஏன்?

இது ஒரு வர்த்தகத் தந்திரம். மலிவான உழைப்புச் சந்தை என்ற ஒரே காரணத்தினால்தான் இந்தியா போன்ற ஏழை நாடுகளிலிருந்து ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள். இந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் தலைவிதி பிணைக்கப்பட்டு விட்டது. மலிவு விலையில் உழைப்பை இறக்குமதி செய்த அமெரிக்கா, இப்போது உழைப்பாளிகளையே மலிவு விலையில் இறக்குமதி செய்கிறது.

அன்று ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை விலங்குகளைப் போல வலைவீசிப் பிடித்து, தாயை கரும்புத் தோட்டத்திலும், பிள்ளையை நிலக்கரிச் சுரங்கத்திலும் பிரித்துப் போட்டு, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி அமெரிக்க சொர்க்க பூமியை உருவாக்கிக் கொண்டார்கள். இன்று அந்தச் சொர்க்கத்தின் நியான் விளக்குகளில் சொக்கி விழும் விட்டில் பூச்சிகளான யூலி போன்றோரைக் கள்ளத்தோணியின் மூலம் கவர்ந்திழுக்கிறார்கள்.

து ஒரு ராஜ தந்திரம். தமக்கு ஆடை ஏற்றுமதி செய்யும் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகள் கிளின்டனின் அரசியல் ஆணைக்குப் பணிய மறுத்தால், ஆடை இறக்குமதி நிறுத்தப்படும். ஒரே நொடியில் இந்நாடுகளின் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருவில் வீசப்படுவார்கள். ஆசியாவின் ஆடை இறக்குமதியாகாத அத்தகைய தருணங்களில் ஆசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொத்தடிமைகள் அமெரிக்காவின் நிர்வாணத்தை மறைத்து நாகரிகப் படுத்துவார்கள். ஆசியத் தொழிலாளிக்கெதிராக ஆசியத் தொழிலாளிகள்!

து ஒரு வர்க்கத் துவேசம்! மருத்துவர்களையும், பொறியியலாளர்களையும் கணினி வல்லுநர்களையும் குடியுரிமை தந்து இறக்குமதி செய்து கொள்ளும் அமெரிக்கா இந்த உழைப்பாளிகளுக்கும் குடியுரிமை தரலாமே! சட்டப்படி குடியுரிமை தந்தால், சட்டப்படி ஊதியம் கேட்பார்கள். அவர்களைக் கள்ளத் தோணிகளாகவே வைத்திருந்தால்தான், தேவை முடிந்தபின், அவர்களது இளமை முடிந்தபின், அவர்களைக் கந்தல் துணியைப் போலக் கடலில் வீச முடியும். வீசிவிட்டுக் கள்ளத் தோணியைத் தடுக்கத் தவறியதாக அந்த நாட்டைக் குற்றம் சாட்டி மிரட்டவும் முடியும்.

துதான் சுதந்திர வர்த்தகம்! தேசங்கடந்து அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வரும் மூலதனத்திற்கு இங்கே ரத்தினக் கம்பளம்; மாலை மரியாதைகள். தேசங்கடந்து செல்லும் நம் உழைப்புக்கு அங்கே கொத்தடிமைத் தனம்! குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை எதிர்க்கிறது பென்டகன். ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தின் சீருடைகள் ஆசியக் குழந்தைகளால் தைக்கப்படுகின்றன. பிள்ளைக்கறி தின்னும் இந்த நாயன்மார்கள்தான் தாங்கள் சுத்த சைவமென்றும், பரீதாபாத்திலிருந்து (டில்லி) அனுப்பப்படும் கம்பளங்களில் ”இது குழந்தைகளால் நெய்யப்பட்டதல்ல” என்று முத்திரை குத்தி அனுப்ப வேண்டுமென்றும் கோருகிறார்கள். இந்த நாயன்மார்களிடம் எச்சில் பிரசாதம் வாங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் ”சிவகாசி மத்தாப்பூ கொளுத்தமாட்டோம்” என்று நாளைய அமெரிக்கக் குடி மக்களான பத்மா சேஷாத்ரி, சர்ச் பார்க் கான்வென்டு பிள்ளைகளை வைத்து மனிதச் சங்கிலி நடத்துகிறார்கள்.

அப்படியா

அப்படி ஓர் இடம் இருக்கிறதா?

ஒன்றுமே தெரியாதது போல

பாசாங்கு செய்கிறார்கள்

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

அப்படியொரு ரகசிய உலகம்

இருக்கிறது என்பதை.

சகமனிதர்கள் உழிழும் கழிவிலும்

குப்பை கூளத்திலும்தான் – அங்கே

சிலர் வாழ்கிறார்கள் என்பதை

ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-6.jpg

விண்ணை முட்டும் 150 மாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, கியூபா முதல் சீனம் வரை, உலக மக்கள் அனைவருக்கும் ஜனநாயகமும் மனித உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று முழங்குகிறார் கிளின்டன்.

அந்தக் கட்டிடத்தின் நிலவறையில் புதைந்திருக்கும் வியர்வைக் கடையிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ” நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்” என்கிறார் 66 வயதான சோன் லீ என்ற சீனத் தொழிலாளி.

வால் – மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடித்து ஏப்பம் விட்ட பாமரேனியன்களும், சீமைப் பன்றிகளும் ”மனித உரிமை வாழ்க” என்று கைதட்டுகின்றன.

_________________________________________

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

_________________________________________

தொடர்புடைய பதிவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.