Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவோயிஸ்ட்டுகளுக்கு பணம் தருவது யார்? சித்தாந்தங்களும் ரகசியங்களும்

Featured Replies

தமிழகம் முழுவதும் திடீரென ஒரேவிதமான சுவரொட்டிகள் முளைப்பது சமீபகாலமாக ஒருவித கலாச்சாரமாகவே மாறி வருகிறது. மோதல்சாவுகளை ஆதரித்த சுவரொட்டிகள், கூடங்குளத்தை ஆதரித்த சுவரொட்டிகள், நியூட்ரீனோ திட்டத்தை ஆதரித்த சுவரொட்டிகள் என பல சமீபகாலமாக அதிகப்படியாகக் காணக்கிடைக்கிறது. இது ஏதோ மக்கள் தாங்களாக முன்வந்து அடித்து ஒட்டும் சுவரொட்டிகள் அல்ல. மாறாக, அரசு இயந்திரம் தங்களுக்கு சாதகமாக மக்களின் மனங்களைத் தகவமைக்கச் செய்யும் ஒரு நவீன ஏற்பாடு. உலகமயம் உருவாக்கிய முக்கிய வேலை. பிரிவினை நடைமுறைகளில் ஒன்று, நம் வேலையைச் செய்ய வேறு ஒரு நிறுவனத்தை அமர்த்துவது. இதனைத்தான் Out sourcing என்று அழைக்கிறார்கள். இது அரசாங்கம் செய்யும் Out sourcing. சமீபமாக அப்படி ஒரு சுவரொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டது. அது - “சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தின் மிக நேர்மையான ஆட்சித்தலைவரான, தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் மேனன் அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்”. பல லெட்டர்பேடு அமைப்புகள் பல வண்ணங்களில் தினமும் இந்த சுவரொட்டிகளை ஒட்டுவதை ஒரு தேசபக்த செயலாகவே கடமையுணர்வுடன் செய்தன. இந்த மாதிரியான சுவரொட்டிகளை எழுதிக் கொடுப்பவர்களுக்கு, ஒட்டுபவர்களுக்கு, வாசித்துப் பெருமிதம் கொள்பவர்கள் யாருக்குமே உண்மை நிலவரம், பிரச்சினையின் அடிப்படை கூட தெரிந்திருப்பதில்லை என்பது இது தொடர்புடையவர்களிடம் உரையாடியதில் தெள்ளத்தெளிவு.மொத்த இந்திய ஊடகங்களிலும் அலெக்ஸ் பால் மேனனின் மெய்க் காவலர்கள் இருவர் கொல்லப்பட்டது. பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியாகவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_2213.jpg

இந்தியாவின் சிகப்புவெளி (red corrdor) என்று அழைக்கப்படும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும்தான் நாட்டின் மொத்த கனிம வளத்தில் 40% உள்ளது. இந்த இரு மாநிலங்களும் முழுக்க முழுக்க நூற்றாண்டுகளாகப் பழங்குடிகள் வாழ்ந்து வரும் பகுதியாகும். கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதிகளை ஆட்சி செய்த அரசுகளின் தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்டும் இடைவிடாது எதிர்த்துப் போராடிய பிறகுதான் இந்த இரு மாநிலங்கள் பல மாநிலங்களின் பகுதிகளை இணைத்து 2000த்தில் புதிதாக உருவாக்கப்பட்டன. பழங்குடித் தலைவர்களான பிர்சா முண்டா, தில்கா மன்ஜி, சித்து கானு ஆகியோரின் போராட்டங்களுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து தான் பலன் கிடைத்தது. இந்தத் தனிமாநில உருவாக்கம் அவர்களின் வாழ்வின் புதிய அத்தியாயமாக மலரும் என்கிற எதிர்பார்ப்பின்மீது அவநம்பிக்கையின் நிழல் படிந்து இன்னும் இருண்டே காட்சியளிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் அங்கு பாபுலால் மராண்டி முதல் அர்ஜுன் முண்டா வரை எட்டு முதல்வர்கள் ஆட்சி செய்துள்ளனர். இரு முறை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. சத்தீஸ்கரில் மூன்று முதல்வர்கள் ஆட்சியில் இருந்துள்ளனர் (சத்தீஸ்கரில் உள்ள நிலையை அறிய பார்க்க: சல்வா ஜுதும்: அறிவிக்கப்படாத யுத்தம்-உயிர்மை - ஆகஸ்டு, 2006).

கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தாலிய டூரிஸ்டுகள் இருவர், பிஜேடி சட்டமன்ற உறுப்பினர் ஜினா ஹிகாகா மற்றும் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் என இந்த தொடர் கடத்தல்களை முன்வைத்து இங்குள்ள நிலையை விவாதிப்பது, இது சார்ந்து உரையாடுவது ஒரு ஜனநாயக சமூகத்தின் பொறுப்பு என்கிற அடிப் படையில்தான் இங்கே சில குறிப்புகளை முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன். பெரும் ஊடகங்கள் அரசாங்கத்தின் பிரச்சாரக் கருவிகளாக மாறிய சூழலில் இந்த உரையாடலை நிகழ்த்துவது சிறுபத்திரிகைசார் வட்டங்களின் கூடுதல் கடமையாகவும் உள்ளது. இந்தப் பிரச்சினையைப் பற்றி, அங்குள்ள நிலையை பற்றி ஏராளமான நூல்கள், கட்டுரைகளை வாசித்தபோதும், சமீபத்தில் இரு முறை ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களின் பதட்டமான பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் உரையாடியதும் ஜனநாயக அமைப்புகளுடன் விவாதித்ததும் கூடுதலாக இந்த நிலையைப் புரிந்துகொள்ள உதவியது.

collectot.jpg

இந்த மூன்று மாநில அரசுகளும் பன்னாட்டு, உள்நாட்டுக் குழுமங்களுடன் லட்சம் கோடிகள் அளவிலான பெரும் கனரகத் தொழிற்சாலைகளும் கனிமவளத்தை தோண்டி எடுப்பதற்கான ஒப்பந்தங்களிலும் ஈடுபட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் ஜார்க்கண்ட் பகுதியில் மட்டுமே 20 லட்சம் பழங்குடிகள் தங்களின் பூர்வநிலங்களில் இருந்து பெயர்த்து எறியப்பட்டுள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஜார்க்கண்ட் அரசு ரூ.4,67,240 கோடி மதிப்பிலான 102 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் நிலம் சுமார் 2 லட்சம் ஏக்கர். அப்படியானால் இங்கிருந்து 10 லட்சம் பழங்குடிகள் தங்களின் வசிப்பிடங்களில் இருந்து வேறு இடங்கள் நோக்கிச் செல்ல வேண்டும். சத்தீஸ்கரில் சல்வா ஜுதும் என்கிற சட்டத்திற்குப் புறம்பான ஒரு ஆயுதம் தாங்கிய படையை அரசே அமைத்து 5 லட்சம் பழங்குடியினரைப் பல ஆண்டுகளாக வதைமுகாம்களில் வைத்துள்ளது.

சல்வா ஜுதும் என்பது ஏழைகளுக்கெதிராக அதே ஏழைகளை வைத்து போரிட வைக்கும் தந்திரம். வளர்ச்சியின் பெயரால் இப்படி இந்தியாவெங்கும் தங்களின் வசிப்பிடங்களில் இருந்து விரட்டியடிக்கப் பட்டவர் களுக்காக இங்கு குரல் கொடுக்க பலமான ஜனநாயக அமைப்புகள் இல்லாமல் போனது என்றால் அது மிகை இல்லை. இந்த சிகப்புவெளி பகுதியின் வனங்களில் மட்டும் மாவோயிஸ்டுகள் இந்தப் பழங்குடிகளின் கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த ஒரு செய்தியே.

பழங்குடிகளின் கோரிக்கைகளை நம் மத்திய-மாநில அரசுகள் சுதந்திரம் பெற்ற இந்த 65 ஆண்டுகள் சாதனையாகவே-தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகின்றன. இந்தக் கோரிக்கைகள் எதையும் அவர்கள் பரிசீலிக்கப் போவதில்லை என்பதும் தொடர்ச்சியாக இதனை ஒரு சட்ட-ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே அணுகுவதும் நம் அரசுகளின் அறிவிக்கப்படாத நிரந்தரக் கொள்கையாக உள்ளது. உலகெங்கிலும் ஜனநாயகத்தின் எல்லா வாசல்களும் தங்களுக்காகத் திட்டமிட்டு அடைக்கப்பட்டுவிட்டன. அரசுகள் தூங்கவில்லை மாறாக தூங்குவதை போல் நடிக்கிறது என்பதை துல்லியமாக உணர்ந்தபின்புதான் மக்கள்சார் இயக் கங்கள் ஆயுதம் தாங்கிய குழுக்களாக உருமாறுகின்றன என்பது கடந்த 50-60 ஆண்டுகள் உலகின் பல இயக்கங்களை ஆராய்பவர்கள் கூறும் பொது நியதியாக உள்ளது. ஜனநாயகத்தை ஒரு செயல்படும் கட்டமைப்பாக மாற்றாவிட்டால் அது தனக்குத்தானே சவக்குழியை நாள்தோறும் தோண்டிக் கொள்கிறது. நம் ஜனநாயகம் பல தளங்களில் ஏட்டு அளவில்தான் உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் அவ்வாறே விரும்புகிறார்கள். நாம் ஜனநாயகம் என்ற சொல்லைக் கொண்டாட விரும்புகிறோம், சுவாசிக்க விரும்பவில்லை. இது ஏதோ அரசாங்கங்களைக் குறைசொல்ல மட்டுமே அல்ல. அரசாங்கத்திற்கு ஜனநாயகம், மக்கள் உரிமை என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் திருவிழா என்றால் மக்கள் இயக்கங்கள், முதலாளித்துவக் கட்சிகள் என்று இங்கே இருக்கும் அமைப்புகளுக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பதும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சடங்காக உருமாறிவிட்டது. உண்மையாகவே ஜனநாயகத்தின் பண்புகளின்படி ஒருவர் கேள்வி கேட்பார் அல்லது விமர்சனம் செய்வார் என்றால் அவர் உடனடியாக கட்டம் கட்டப்படுவார் அல்லது சிறையில் அடைக்கப்படுவார். ஜால்ரா வாசிக்கத் தெரிவதுதான் ஜனநாயகத்தின் அதிகாரத்தின் உயர் பதவிகளுக்குச் செல்ல சிறந்த வழியாக நமக்கு நாள்தோறும் பலமுறை உணர்த்தப்படுகிறது. ஜனநாயகத்தின் அர்த்தத்தை முழுமையாக உணராததால்தான் இத்தனை சீக்கிரம் ஒப்பந்தங்களின் வழி நம் சுதந்திரத்தை அடகு வைத்துக்கொண்டு அமைதியாக மவுன அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறோம். அதுவும் நகரங்களில் வாழ்பவர்களுக்கு மவுனம் காப்பது என்பது இன்னும் கூடுதல் பயிற்சி பெற்ற திறனாக விளங்குகிறது.

Kishenji_Maoist_.jpg

நகரங்களில் வசிக்கும் இந்தியாவின் அதிமேதாவி வர்க்கத்திற்கு பழங்குடிகள் உரிமை, வன உரிமைகள், பன்னாட்டு நில அபகரிப்பு, நில அபகரிப்பு சட்டங்கள், சுரங்கம் சார்ந்த விதிமுறைகள், ஐந்தாவது அட்டவணை என்றால் கிலோ என்ன விலை என்று கூடத் தெரியாது.

வரலாறு நெடுகிலும் பழங்குடிகள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, பழங்குடிகள் போராடும் கலாச்சாரத்தை தங்களின் குருதியில் சுமந்தவர்களாக விளங்குகிறார்கள். இந்தியாவெங்கும் பூகோளரீதியாகப் பல நிலங்களில் வாழும் பழங்குடிகள் 645 பிரிவுகளாக உள்ளனர். இவர்கள் தான் இன்று இந்தியாவின் மிக பின்தங்கிய மக்களாக உள்ளனர். இந்த மாநிலங்களுக்குச் சென்று இவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்றால் அங்கு ஜனநாயகத்தின், நாகரீகத்தின், நவீன வளர்ச்சியின் எந்தக் கால்தடத்தையும் நீங்கள் காண இயலாது. மருத்துவமனை, ரேஷன் கடைகள், சாலைகள் என எந்த அடிப்படை வசதிகளும் இங்கு கிடையாது. பழங்குடிகள் காலம் காலமாக வனங்களை நம்பி வாழ்பவர்கள், வனங்களைப் பாதுகாப்பவர்கள். நூற்றாண்டுகளாக இந்திய வனங்கள் இவர்களின் பராமரிப்பில் செழித்துதான் இருந்தது, கடந்த நூற்றாண்டின் தொழில் புரட்சிகள்தான் நம் வனங்களின் இன்றைய நிலைக்குக் காரணமே. நுகர்வு உலகின் இயற்கை வளங்கள் அனைத்தையும் முற்றாக அழிக்கத் துடிக்கிறது. மீதம் உள்ள வனங்களை இனி அழிக்க வேண்டும் என்றால் அங்கிருந்து ஏதேனும் ஒரு காரணம் கூறி இவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இதைத்தான் பலவழிகளில் இன்றைய நவீன அரசுகள் செய்து வருகின்றன.

இந்த சிகப்புவெளியில் 90% கிராமங்களுக்கு இதுவரை மின்சாரம் கூட செல்லவில்லை. சுதந்திரம் பெற்ற 65 ஆண்டுகளில் நாட்டில் 41% கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க முடியாத ஒரு தேசத்தைத் தான் சில மனநோயாளிகள் வல்லரசு என மார்தட்டி அலைகிறார்கள். இதனைப் பற்றி எல்லாம் அக்கறை கொள்ளாத இந்திய ஊடகங்கள், சிவசேனைக்காரர்கள் பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தை தோண்டுவதையும், ஹிந்துத்துவ குண்டர்கள் பிரஷாந்த் பூஷணைத் தாக்குவதையும், ஐஸ்வர்யா ராய்க்குக் குழந்தை பிறந்ததையும் நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் மிகுதியானவர்கள் இங்குள்ளனர். முகத்திலும் மார்பிலும் எலும்பு துருத்திய குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள். சோமாலியர்களை ஒத்த வாழ்வுமுறை கொண்ட, வருடத்தின் பாதி நாட்கள் ஒரு நேர உணவை மட்டுமே உட்கொள்ளும் பழங்குடிகள். ஒரு வேலை சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் இவர்களைப் பிடித்து நீங்கள்தான் மாவோயிஸ்டுகளுக்கு உணவளிக்கிறீர்கள் என கைது செய்வது, வழக்குப் போடுவது, சித்திரவதை செய்வது பசுமை வேட்டையின் கடமையாக மாறிவிட்டது. தனக்கே உணவில்லாதவன் எப்படி ஒரு பெரும் படைக்கு உணவளிப்பான்.

இந்த சிகப்புவெளி முழுக்கப் பலவிதமான போராட்டங்கள் கடந்த 15 ஆண்டுகளாக மிக உக்கிரமாக நடந்து வருகிறது. வனத்துள் மாவோயிஸ்டுகள் என்றால் இங்குள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் பல மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இவர்களின் போராட்டங்கள் வீரம் செறிந்தவை. அவைகளைப் பற்றி மட்டுமே தனியாக ஒரு நூல் எழுதலாம். 2008 அக்டோபர் முதல் தேதி ஜாம்ஷெட்பூரில் பழங்குடிகள் வழங்கிய நிலத்திற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பழங்குடியினர் உருக்காலையின் 70 கனரக லாரிகளைக் கைப்பற்றினர். இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் அவர்களின் நதிகளை, ஓடைகளை, நிலத்தடி நீரை மாசுபடுத்தி வாழ்தலையே சிக்கலாக்கிவிட்டது என்பது அவர்களின் கோரிக்கை. 2008 செப்டம்பர் 11 அன்று பூஷன் கம்பெனியைச் சேர்ந்த உயரதிகாரிகள் நில அளவையில் ஈடுபட அங்கு வாகனங்களில் வந்தபோது அவர்களைக் கிராமமக்கள் பிடித்து மாட்டுசாணத்தால் அவர்களின் முகத்தை மெழுகி, வைக்கோள் திங்கக் கொடுத்து செருப்பு மாலை அணிவித்து விரட்டினார்கள். அதே 2008 செப்டம்பரில் மிட்டலின் ஆர்செலர் கம்பெனியின் அதிகாரிகள் தொர்பா-காம்தாரா பகுதிக்கு நிலங்களைப் பார்வையிட வந்தபோது அந்தப் பகுதி மக்கள் ஊரடங்கு பிறப்பித்து அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்படியாக மக்களே ஒன்றுகூடி தொடர்ந்த விதவிதமான போராட்டங்களின் மூலம் இப்பொழுது அங்கு கையொப்பமிடப்பட்ட 102 ஒப்பந்தங்களில் ஒன்றைக்கூட தொடங்கவிடவில்லை.

naxalites4.jpg

102 திட்டங்களைத் தொடங்க முடியாத அரசு, உடனே பசுமை வேட்டையை அங்கு தொடங்கியது. பசுமை வேட்டை என்பது மாவோயிஸ்டுகளைப் பிடிக்க அல்ல. மாறாக, இந்தப் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் திட்டங்களை அமல்படுத்தவே என்பது இதில் இருந்து தெளிவாகிறது. இதனை மூடி மறைக்கத்தான் நம் பிரதமர் மாவோயிஸ்டுகள் கனிம வளம் மிக்க பகுதிகளில் வளர்கிறார்கள் என புதிய விளக்கம் கொடுத்தார். இவர்களைத்தான் உள்துறை அமைச்சர் நாட்டின் மிகப்பெரும் உள்நாட்டு அச்சுறுத்தல் எனவும் வர்ணிக்கிறார். பசுமை வேட்டை என்பது இந்த உலகின் பெரும் ஜனநாயகத்தின் மொத்த பலத்தையும் தன் மக்களின் மீது தொடுக்கும் போராகவே உள்ளது. அத்துமீறல்கள், பலாத்காரங்கள், கொலைகள் என அந்தப் பகுதியையே ஒரு பதட்டம் மிக்க பூமியாக உருமாற்றியிருக்கிறார்கள். இவர்களின் படைகள் தவிர்த்து அங்கு இருக்கும் பெரும் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கான ஆயுதம் தாங்கிய படைகளை வைத்துள்ளனர். இவர்கள் அங்கு வேலை பார்ப்பவர்கள் முதல் அங்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பழங்குடிகள் வரை அனைவரையும் சுட்டுக் கொல்கிறார்கள். இவை எல்லாம் அங்கு மிக சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. கலிங்காநகர் பகுதிக்கு நாங்கள் சென்றபோது அங்கு 14 பழங்குடிகள் கொல்லப்பட்ட இடத்தைப் புகைப்படம் எடுக்க என் காமிராவை எடுத்தேன். உடனே அங்கே இருந்தவர்கள் தடுத்து விட்டார்கள். மெல்ல பல திசைகளில் கையைக் காட்டினார்கள். திரும்பும் திசை எல்லாம் ஆயுதம் ஏந்திய அரசின் ஆசீர்வாதம் பெற்ற மாபியாக்கள்.

அரசின் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களில் பலர் மாவோயிஸ்டுகளாக மாறியுள்ளனர். மாவோயிஸ்டுகள் மொத்த பழங்குடிகளின் பிரதிநிதிகளாக அங்கு இல்லை. பல இயக்கங்கள் அங்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதைக் காணமுடிகிறது. பல கிராமங்களில் ஆண்களே இல்லை. மொத்த ஆண்களையும் மாவோயிஸ்டுகள் என்று அரசு கைது செய்து வருடக்கணக்காகச் சிறையில் அடைத்து வைத்துள்ளது. இப்படி அந்தப் பகுதி முழுவதும் அரசின் அடக்குமுறை சார்ந்து ஓராயிரம் சம்பவங்கள், கண்ணீர்க் கதைகள் விரவிக் கிடக்கின்றன. பசுமை வேட்டை மீதான மக்கள் குறைகேட்பு ஒன்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது. அதில் அருந்ததி ராய், பிரஷாந்த் பூஷண், கே.எஸ்.சுப்பிரமணியம், நீதிபதி விக்ரமாதித்யா பிரசாந்த் ஆகியோருடன் நானும் பங்கு கொண்டேன். அங்கேதான் இந்த துயரக் கதைகளை நேரில் கேட்க முடிந்தது.

குண்டு துளைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், ஊருக்கு வெளியே மலம் கழிக்கச் சென்ற சிறுவர்கள், புரச இலையைப் பொறுக்க வனத்துள் சென்ற பெண்கள் என அடுக்கடுக்காக பெண்களின், குழந்தைகளின் அனுபவங்களைக் காண சகிக்க முடியவில்லை. Òமாவோயிஸ்டுகளுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அடர் வனங்களுக்குள் சென்றால் மாவோயிஸ்டுகள் எங்களை உளவாளிகள் என்று விரட்டுகிறார்கள், பலரைக் கொலையும் செய்துள்ளார்கள். கிராமங்களில் வாழ்ந்தால் அரசும் அவர்களின் பலவிதப் படைகளும் எங்களைத் துன்புறுத்துகிறது, எங்கள் மக்களைக் கொன்றும் குவிக்கிறது’’ என தெளிவாக அவர்களின் நிலையை எடுத்துரைத்தார்கள். இந்த சிகப்புவெளியில் மாவோயிஸ்டுகள் ஒரே குழுவாக, அணியாக இல்லை. இவர்களுக்குள் தலைமைப் பிரச்சினையும், மொழிசார் மேலாதிக்க பிரச்சினையும் உள்ளது. அதனால் வெவ்வேறு வனப்பகுதிகளில் துண்டு துண்டாக இவர்களும் சிதறித்தான் கிடக்கிறார்கள்.

மாவோயிஸ்டுகளுக்கு எப்படி நிதி கிடைக்கிறது என்பது பொதுவாகவே பெரும் கேள்வியாக உள்ளது. இந்த மாவோயிஸ்டுகளுக்கு சீனாவில் இருந்து நிதி வருகிறது என சில முன்முடிவுகளுடன் எழுதுபவர்கள் தொடர்ந்து பிதற்றி வருகிறார்கள். மறுபுறம், மாவோவின் பேரனும் மாவோயிச அறிஞருமான மாவோ சின்யா சமீபத்தில் எங்கள் தாத்தாவின் பெயரை இந்திய மாவோயிஸ்டுகள் கெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனால் இந்தப் பகுதிக்குச் சென்றால் அங்கு கதையே வேறாக உள்ளது. அரசிடம் இருந்து அனுமதி பெற்று கனிம வளங்களை வெட்டி எடுக் கிறார்கள். வனப்பகுதிகளின் இந்த நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட இயலாது. ஆனால் இந்த நிறுவனங்களுக்கு வனம், உரிமை பெற்ற பகுதி என்று பாரபட்சம் இல்லை. பல அடர் வனப்பகுதிகளில் தொடர்ந்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கே வெட்டி எடுக்க நீங்கள் அரசிடம் அல்ல, மாவோயிஸ்டுகளிடம் அனுமதி பெற வேண்டும். அவர்களிடம் பெரும் தொகை செலுத்த வேண்டும். 2011 செப்டம்பர் 11 அன்று ESSAR நிறுவனத்தின் உயரதிகாரி வர்மா மாவோயிஸ்டுகளிடம் பணம் கொடுத்த புகாருக்காகக் கைது செய்யபட்டார். இப்படி இந்தப் பகுதிகளில் தொழில் செய்யும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் (Tata, Jindal, Vedanta, Mittal, Infosys, Essar மற்றும் பல)அனைவரும் தொடர்ந்து நிதி கொடுத்து வருகிறார்கள் என்பது அந்தப் பகுதி மக்களின் அறிதலுக்கு உட்பட்ட விஷயமாக உள்ளது. சோனி சோரியின் முழுக் கதையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. எஸ்ஸார் நிறுவனம் தெகல்காவுக்கு பெரும் தொகை கொடுக்கிறது. எஸ்ஸார் நிறுவனம் குழாய்கள் பதிப்பதில் மாவோயிஸ்டுகள் தலையிடாமல் இருக்க பணம் கொடுக்கிறது. எஸ்ஸார் நிறுவனம் காங்கிரசுக்கு இன்னும் அதிகமாகப் பணம் கொடுக்கிறது. இங்கே அறம்-ஜனநாயகம்-அரசு என்கிற ஒரு கோட்டை வரைந்தால் இவர்களில் யார் எங்கே நிற்பார்கள் என்றே புரியவில்லை.

இது ஒரு வகை Extortion Economyயாக உள்ளது. வனத்துள் பெரும் தொகைகளுடன் சிக்கும் மாவோயிஸ்டுகளின் கூரியர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பது மக்களின் வேலையாக உள்ளது. இவை எல்லாம் அங்குள்ள பத்திரிகைகளின் செய்தியாகவும் வருகிறது. இது அங்கு பெரும் illegal mining நடக்க களம் அமைத்து தருகிறது. இவை எல்லாம் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

IMG_2416.jpg

ராஞ்சியில் இருக்கும் நிறுவனங்களின் அலுவலகங்களில் பல நாட்கள் காலை எவ்வளவு தொகை வேண்டும் என்று காகிதத்தில் எழுதி வீசி இருப்பார்கள். அதனைப் பார்த்தவுடன் தொகையை அவர்கள் கூறும் இடத்தில் செலுத்த வேண்டும். இப்படி தொடர்ந்து பணம் பெற்று இன்றைய நிலையில், மாவோயிஸ்டுகளிடம் 20,000 கோடி ரூபாய் பதுக்கப்பட்டுள்ளது என்று சிலர் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆயுதங்கள் தருவிக்கவும் இந்த நிறுவனங்கள் உதவி செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் அங்கு முன்வைக்கப்பட்டன. பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளின் வர்த்தக நலனை எப்படி ஒரு புரட்சிகர படை காக்க இயலும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இவர்களே கனிம வளங்களை வெட்ட அனுமதி அளிப்பதன் மூலம், பழங்குடிகளின் இருப்பையும் சேர்த்தே கபளீகரம் செய்கிறார்கள். மொத்த ஊடகங்களுமே மேற்கு வங்க சி.பி.எம். அரசுதான் நக்சல்களை வளர்த்து விட்டது என்று இன்றளவும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் நந்திகிராம், சிங்கூர் சம்பவங்களின்போது மம்தா அத்வானியுடன் ஒரே அணியாக இவர்கள் நின்ற போது ஏற்பட்ட குழப்பங்கள், இவர்கள் பெரு முதலாளிகள் கூட்டில் இருப்பது தெளிவானது. மம்தா இவர்களை out source செய்து சி.பி.எம்.ஐச் சேர்ந்த 400 தொண்டர்களைக் கொலை செய்தார். 1967களில் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரியில் தொடங்கிய இவர்களது பயணம் இன்று எங்கோ திசையைத் தொலைத்து நிற்கிறது. இது மாவோயிஸ்டுகளின் சித்தாந்த குழப்பமா அல்லது சித்தாந்தம் அற்ற குழப்பமா? எப்படி இந்தப் பெரும் முதலாளிகளுக்கு இவர்களும் சேவகம் செய்கிறார்கள்? இந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களாக, இந்த நிறுவனங்களின் தலைமைக் குழுவில் சிதம்பரம், அருண் ஜெட்லி, அபிஷேக் சிங்விக்களும் இடம் பெறுகிறார்கள்?!

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பழங்குடியினரின் பங்கேற்புடன் அரசின் செயல்பாடுகளை அமைப்பது, நலவாரியங்கள் அமைப்பது என மத்திய திட்ட கமிஷனின் பல பரிந்துரைகள் காற்றில் பறக்கவிட்டு சிவகங்கையின் ஏ.டி.எம். திறப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் மத்திய உள்துறை அமைச்சர் இதனை ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்க்க வேண்டும். இவர்களைத் தீவிரவாதிகள் போல்தான் நடத்த வேண்டும் என தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவரது உத்தரவின் பெயரில் 94,000 துணை ராணுவப் படைகள், 78 பெட்டாலியன் மத்திய ரிசர்வ் படைகள், எல்லைக் காவல் படைகள், இந்தியத் திபெத்திய எல்லைப் படை மற்றும் இவர்களுக்கு ஆதரவாக மாநிலங்களில் லட்சக்கணக்கான காவல் துறையும் இணைந்து பசுமை வேட்டை என்கிற பெயரில் கடந்த சில வருடங்களாக அப்பாவி பழங்குடிகளை வேட்டையாடி வருகிறது. இந்தப் படைகளுக்கு நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பக் கருவிகள் என நம் வரிப்பணத்தில் ஒரு பகுதி சொந்த நாட்டுப் பிரஜைகள் மீது போர் தொடுக்க அரசு செலவிடுகிறது. மறுபுறம், பேச்சுவார்த்தை என்று அழைத்து செம்கூரி, ராஜ்குமார் என்கிற ஆசாத் உள்பட பல மாவோயிஸ்டு தலைவர்களைச் சுட்டுத்தள்ளுவது என புதிய உத்திகளைக் கையாண்டு வருகிறது.

‘தோழர்களுடன் பயணம்’ எழுதிய அதே அருந்ததிராய் அதன் பின்னர் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு விவாதத்திற்கு நாம் இப்படி வைத்துக்கொள்ளலாம். பழங்குடிகளின் கனிம வளங்களின் செல்வசெழிப்பு மிக்க இந்த சிவப்புவெளியின் முழுமையான அதிகாரத்தை நாம் மாவோயிஸ்டுகளுக்கே கொடுத்து விடுவோம். இந்தப் பகுதியின் நிர்வாகத்தை, வர்த்தக விதிமுறைகளை இவர்கள் எப்படி வகுப்பார்கள்? இவர்கள் இந்தக் கனிம வளங்களை வெட்டி எடுத்து சந்தைக்கு எடுத்துச் சென்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து அடிப்படை கட்டுமானங்கள் அமைப்பார்களா? அவர்களின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவார்களா அல்லது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தேவைப்படும் அளவு மட்டுமே கனிம வளங்களை வெட்டி எடுப்பார்களா அல்லது அடிப்படை தேவைகள் என்பதை எப்படி வரையறுப்பார்கள்? ஒரு மாவோயிஸ்டு அரசின் அடிப்படை தேவை என்பதே அணு ஆயுதங்களாகக் கூட இருக்குமா?

ரஷ்யா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடப்பதை வைத்து நாம் யூகித்தால், அதன்படி முதலாளித்துவ அரசுகள் மற்றும் கம்யூனிஸ்டு அரசுகளுக்குப் பொதுவில் ஒன்று உள்ளது. அது அவர்களின் டி.என்.ஏ.க்களில் பதிந்துள்ள கனவுகள். அவர்களின் புரட்சிகள் முடிந்த பிறகு, சோசலிச சமூகங்களைக் கட்டியமைத்த பிறகு, பாட்டாளிகள்-விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வுக்காக எல்லா சம்பளங்களும் வழங்கிய பிறகு இப்பொழுது இரு வகை நாடுகளுமே முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. இருவருக்குமே வளர்ச்சி என்பதன் அளவுகோள் நுகர்வை அடிப் படையாகக் கொண்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு நீங்கள் தங்குதடையின்றி உங்கள் தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருளை அனுப்ப வேண்டும். அப்படியென்றால் சுரங்கங்கள் வேண்டும், பெரிய அணைகள் வேண்டும், நீங்கள் அடக்குமுறையைப் பின்பற்ற வேண்டும், உங்களுக்கு காலனிகள் வேண்டும், போர்கள் வேண்டும். பழைய அதிகாரங்கள் சிதைந்து புதிய அதிகாரங்கள் தோன்றி வருகிறது. அதே கதைதான். கதாபாத்திரங்கள்தான் வெவ்வேறு. பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டுகின்றன. நேற்று அது ஐரோப்பா, அமெரிக்கா; இன்று அது இந்தியா, சீனா. நாளை அது ஆப்ரிக்காவாகவும் கூட இருக்கலாம். நாளை என்று ஒன்று சாத்தியமா? இப்படிக் கேட்பதற்கான தருணத்தை தவறவிட்டோமா? இருப்பினும் நம்பிக்கை கொள்ள காரணகாரியங்கள் அவசியம் இல்லை.”

நாம் அணுகுமுறையில் புதிய மாற்றங்கள் கோருகிறோம், சல்வா ஜுதும் போன்ற படைகள் சட்டத்திற்குப் புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தப் பின்னணியில் நான் சத்தீஸ்கரில் இருந்தபோது பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரின் பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன். அதில் Neccesity of Social Security from Problem of Naxalism என்று சல்வா ஜுதுமை விளக்கி அதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பாடம் இருந்தது. நகரங்களின் நுகர் வெறியைத் தணிக்காமல் இனி இயற்கை வளங்களைக் காக்க இயலாது. இந்த வெறியைத் தணிக்க மீண்டும் நம் வேர்களை நோக்கி நம் பார்வைகளைத் திருப்பியாக வேண்டும். எஃப் ஷீமாக்கரை, ஜெ.சி. குமரப்பாவை, புத்தரை மீண்டும் நாம் வாசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும்.

muthusmail@gmail.com

http://www.uyirmmai....s.aspx?cid=5736

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் ...

உண்மையான வரிகள்

ரஷ்யா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடப்பதை வைத்து நாம் யூகித்தால், அதன்படி முதலாளித்துவ அரசுகள் மற்றும் கம்யூனிஸ்டு அரசுகளுக்குப் பொதுவில் ஒன்று உள்ளது. அது அவர்களின் டி.என்.ஏ.க்களில் பதிந்துள்ள கனவுகள். அவர்களின் புரட்சிகள் முடிந்த பிறகு, சோசலிச சமூகங்களைக் கட்டியமைத்த பிறகு, பாட்டாளிகள்-விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்வுக்காக எல்லா சம்பளங்களும் வழங்கிய பிறகு இப்பொழுது இரு வகை நாடுகளுமே முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. இருவருக்குமே வளர்ச்சி என்பதன் அளவுகோள் நுகர்வை அடிப் படையாகக் கொண்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு நீங்கள் தங்குதடையின்றி உங்கள் தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருளை அனுப்ப வேண்டும். அப்படியென்றால் சுரங்கங்கள் வேண்டும், பெரிய அணைகள் வேண்டும், நீங்கள் அடக்குமுறையைப் பின்பற்ற வேண்டும், உங்களுக்கு காலனிகள் வேண்டும், போர்கள் வேண்டும். பழைய அதிகாரங்கள் சிதைந்து புதிய அதிகாரங்கள் தோன்றி வருகிறது. அதே கதைதான். கதாபாத்திரங்கள்தான் வெவ்வேறு. பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டுகின்றன. நேற்று அது ஐரோப்பா, அமெரிக்கா; இன்று அது இந்தியா, சீனா. நாளை அது ஆப்ரிக்காவாகவும் கூட இருக்கலாம். நாளை என்று ஒன்று சாத்தியமா? இப்படிக் கேட்பதற்கான தருணத்தை தவறவிட்டோமா? இருப்பினும் நம்பிக்கை கொள்ள காரணகாரியங்கள் அவசியம் இல்லை.”

[size="1"]

எஃப் ஷீமாக்கரை, ஜெ.சி. குமரப்பாவை, புத்தரை மீண்டும் நாம் வாசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும்
[/size]

அட புத்தரை[size="1"],விவாதித்து [/size] என்னத்தை கிழிக்கப்போறோம் ...[size="1"],விவாதித்தவனே [/size] தலை கீழா நிற்கிறான்...புத்தரின்ட நாடுகள் செய்யிற அட்டகாசம் தாங்கமுடியவில்லை

சித்தாத்தங்களுக்காக உயிரை கொடுத்தவன் கொடுப்பவன் முட்டாள்

Edited by putthan

இந்தியாவின் உடையவே இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும். அது மட்டும் அல்ல தென் ஆசியாவின் பல இனங்கள் சுதந்திரமாக வாழவும் வழி அமைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.