Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் டெசோ மாநாட்டின் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கருணாநிதியின் டெசோ மாநாட்டின் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும்[/size]

யதீந்திரா

17 வருடங்களுக்கு பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி டெசோ மாநாட்டை மீண்டும் கூட்டியிருக்கின்றார். 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மேற்படி டெசோ - தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு (Tamil Eelam Supporters Organization (TESO) தமிழ் ஈழத்திற்கான வலுவான ஒரேயொரு குரலாக இருந்த விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 85இல் இது உருவாக்கப்பட்டபோது கருணாநிதியுடன் வீரமணியும் நெடுமாறனும் உடனிருந்தனர். இலங்கையின் வடகிழக்கில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கென ஒரு சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதே அப்போதைய டெசோவின் நோக்கமாக இருந்தது. அன்றைய சூழலில் தமிழ் ஈழத்திற்காக இயங்கிய அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அதனை சாத்தியப்படுத்துவதே அப்போது (டெசோவின்) பிரதான இலக்காக இருந்தது. அப்போது இந்திய மத்திய அரசு, சென்னையில் முகாமிட்டிருந்த இயக்கங்களின் தலைமைகளை வெளியேற்றுமாறு உத்தரவிட்டபோது அதனை எதிர்த்து இவ்வமைப்பினர் டில்லி நோக்கி பேரணியை நடத்தியிருந்தனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்து பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர்.

அன்றைய சூழலில் கருணாநிதி இவற்றை தனது அரசியல் நலன்களுக்காக மட்டும்தான் செய்தார் என்று சொல்லிவிட முடியாது. அன்றைய சூழலில் அப்படி யாரும் கருணாநிதியை விமர்சித்திருக்கவும் இல்லை. ஆனால் இன்றைய டெசோ குறித்து பலவிதமான அபிப்பிராயங்கள் உலவுகின்றன. பெரும்பாலும் யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த சூழலில் அதனை நிறுத்துவதற்கு மத்திய அரசின் மீது காத்திரமான அழுத்தங்கள் எதனையுமே பிரயோகித்திருக்காத கருணாநிதி இப்போது எதற்காக தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கின்றார்? இதன் உள்நோக்கம் என்ன? - இப்படியான கேள்விகளை பரவலாக கேட்க முடிகின்றது. கருணாநிதி நினைத்திருந்தாலும் அதனை செய்திருக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி.

இதில் உள்ள சுவாரசியமான பக்கம் என்னவென்றால், 1985இல் எந்த நெடுமாறன் கருணாநிதியுடன் டெசோவிற்கு ஆதரவாக இருந்தாரோ - அவரே இன்று கருணாநிதி நடத்தியிருக்கும் டெசோவை நிராகரித்திருப்பதுடன், கருணாநிதியை கடுமையாக விமர்சித்தும் இருக்கின்றார். இது கருணாநிதின் 'கபட நாடகம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றையும் நெடுமாறன் எழுதியிருக்கின்றார். சமீபகாலமாக தானே பிரபாகரனின் வாரிசு போல் செயற்பட்டு வந்த - நாம் தமிழர் கட்சியின் தலைவரும் சினிமா இயக்குனருமான சீமான் நெடுமாறனையும் விஞ்சிவிடுமளவிற்கு கருணாநிதியை விமர்சித்திருக்கின்றார் - 'தண்டவாளத்தில் தலையை வைத்து ஏமாற்றியவரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுக்கும் கூட்டம்' என்னும் தலைப்பில் அவரது கட்சி கூட்டமொன்றை நடாத்தி கருணாநிதியை விமர்சித்திருக்கின்றது.

90களுக்கு முன்னர் தமிழ்நாடு ஈழ விடுதலைப் போராட்டத்தின் பிரதான பின்தளமாக இருந்ததை பலரும் அறிவர். அன்றைய சூழலில் இயங்கிய அனைத்து இயக்கங்களும் தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தன. அன்றிருந்த பிரதான இரு திராவிட அரசியல் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும் (தி.மு.க) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அ.தி.மு.க), ஈழ ஆதரவு நிலையை தங்களின் அரசியல் நிலைப்பாடாகக் கொண்டிருந்ததும் உண்மை. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் அன்றைய சூழலில் இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவான நிலையில் இருந்த சூழலில்தான் தமிழ் நாட்டின் திராவிட கட்சிகள் ஈழ ஆதரவையும் தங்களது அரசியல் நிகழ்சி நிரலின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தன. இந்த பின்னணியிலேயே அவர்கள் ஆயுத இயக்கங்களுக்கு போட்டிபோட்டுக் கொண்டு உதவவும் முன்வந்திருந்தனர். இதற்கு சிறந்த உதாரணம் - கருணாநிதியும் எம்.ஜி.இராமச்சந்திரனும் பிரதான இயங்கங்களுக்கு ஒரே நேரத்தில் அழைப்பு விடுத்ததும், ஆனால் இதில் பங்குகொள்வதன் மூலம் இருவரில் ஒருவரது பகையை சம்பாதிக்க வேண்டிவரும் என்று கருதிய பிரபாரகன் புத்திசாதுர்யமாக சந்திப்பை தவிர்த்து, பின்னர் தனியாக எ.ம்.ஜி.ஆரை சந்தித்து உதவிகளைப் பெற்றுக் கொண்டார். இது அன்றைய சூழலில் சுவாரசியமான கதையாக உலவியது. ஆரம்பத்தில் இரண்டு பிரதான திராவிட அரசியல் கட்சிகளும் ஈழத் தமிழர் ஆதரவு நிலையில் செயற்பட்டமையானது, ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையில் அக்கறை கொண்டிருப்பதான ஒரு தோற்றத்தைக் காட்டியது. ஆனால் அது உண்மையல்ல.

அப்போதும் சரி இப்போதும் சரி - இரண்டு பிரதான அரசியல் கட்சிகளை தவிர்த்துப் பார்த்தால் ஒரு சில சிறிய குழுக்களே ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து பேசிவருபவர்களாக இருக்கின்றனர். ஆனால் இவற்றில் சில இடதுசாரிப் பின்புலம் கொண்ட சிறிய குழுக்களை அல்லது சில நபர்களைத் தவிர்த்துப் பார்த்தால் ஏனையோர் விடுதலைப்புலிகளின் அழிவின் பின்னர் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை கேலிக்குரியதாக மாற்றும் வகையிலேயே செயலாற்றி வந்தனர் - வருகின்றனர். இத்தகையதொரு சூழலில்தான் மு.கருணாநிதி தமிழீழ ஆதரவாளர் மாநாட்டை நடத்தி சில வேண்டுகோளையும் விடுத்திருக்கின்றார். ஆரம்பத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான சுதந்திர தமிழீழத்திற்காக அழைப்பு விடுக்கப் போவதாக கருணாநிதி அறிவித்திருந்த போதும், பின்னர் மத்திய அரசின் தலையீட்டினையடுத்து அதனை கைவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் மாநாட்டின் போது பொதுவாக டெசோ என்னும் பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தலையீட்டினால்தான் கருணாநிதி தனது தமிழீழ நிலைப்பாட்டை பின்தள்ளினாரா அல்லது இல்லையா என்பது திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், தமிழீழத்தின் சாத்தியப்பாடு பற்றி மற்றைய எல்லோரையும் விட கருணாநிதி நன்கு அறிவார். இந்தியாவை பகைத்துக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு என்றுமே சாத்தியப்படப் போவதில்லை என்பது கருணாநிதி அறியாத ஒன்றல்ல. 1985இல் கருணாநிதி தமிழீழ ஆதரவாளர் மகாநாட்டை கூட்டிய போதும் கூட அத்தகைய ஒரு கருத்து நிலையே அவரிடம் இருந்தது. ஆனாலும் தமிழீழம் என்பதை ஒரு உச்ச இலக்காக வைத்துக் கொண்டு ஒரு தீர்வை அடையலாம் என்பதே கருணாநிதியின் ஆலோசனையாக இருந்திருக்கிறது. அப்போதைய சந்திப்புகளில் பங்கு கொண்ட புலிகள் அல்லாத மற்றைய இயங்கங்களின் முக்கியஸ்தர்கள் இப்போதும் இருக்கின்றனர். ஆனால் ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் நிலைமைகள் தலைகீழானது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்னும் குற்றச்சாட்டில் 1991இல் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. இது கருணாநிதியின் ஈழ ஆதரவை மட்டுமல்ல, அதுவரை தமிழ் நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஈழ ஆதரவு சக்திகள் பலரும், ஈழத் தமிழர் பிரச்சனையில் இருந்து ஒதுங்குவதற்கும் வழிவகுத்தது.

இதன் பின்னர், கருணாநிதியின் ஈழ ஆதரவு என்பது மத்திய அரசின் கொள்கைநெறிக்குள் அடங்கிய ஒன்றாகவே இருந்தது. பிரபாகரன்-பிரேமதாச உடன்பாட்டைத் தொடர்ந்து இந்திய அமைதிப் படை வெறியேற நிர்பந்திக்கப்பட்ட அனுபவம், இந்தியாவைப் பொறுத்தவரையில் விரல்களை சுட்டுக் கொண்ட அனுபவமாகவே உணரப்பட்டது. அதன் பின்னர் இலங்கை பிரச்சனையில் இந்தியா, எட்ட நின்று பார்க்கும் நிலைப்பாட்டை எடுத்தது. கருணாநிதியும் தனது ஆட்சிக் கலைப்பைத் தொடர்ந்து விரல்களை சுட்டுக் கொண்ட அனுபவத்திற்கே ஆளாகியிருந்தார். இந்தச் சூழலில் இந்தியாவின் 'எட்ட நின்று பார்க்கும்' கொள்கையே கருணாநிதியின் கொள்கையாகவும் மாறியது. இந்தியா எட்ட நின்றுகொண்டிருந்த காலத்தில் பிரபாகரனின் இராணுவ ஆற்றல் அபரிமிதமாக வளர்ந்து சென்றது. ஆனால் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மீண்டும் இந்தியா கிட்ட வரவேண்டிய சூழல் உருவாகியது. நோர்வேயின் சமாதான முன்னெடுப்புக்கள், இந்தியா மீண்டும் ஓரளவு நெருங்கி வருவதற்கான சூழலை உருவாக்கியது. இந்தியா எட்ட நின்ற போது வளர்ந்து சென்ற புலிகள், கிட்ட வந்த போது முடிவை நெருங்கிச் சென்றனர். இறுதியில் முடிந்தே போயினர். ஆனால் எங்களது சூழலில் இயங்கிய சில ஆய்வு மேதைகளோ, தேவையற்ற வகையில் தமிழ்நாடு குறித்து அபரிமிதமான கற்பனைகளை பரப்பிக் கொண்டிருந்தனர். அவர்களே கருணாநிதி என்ன செய்தார் என்றவாறு விமர்சனங்களையும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் கருணாநிதியின் செயற்பாடுகள் தெளிவாகவே இருந்தன - இருக்கின்றன.

ஆளும் காங்கிரசின் பங்காளியாக இருந்த கருணாநிதி மீண்டும் விரல்களை சுட்டுக் கொள்ள விரும்பியிருக்கவில்லை. விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் ஏன் கருணாநிதி டெசோ மாநாட்டை கூட்டவில்லை என்பதற்கு இதுதான் பதில். இதிலிருந்து ஈழத் தமிழ் அரசியல் சக்திகள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது - தமிழ் நாட்டின் பிரதான அரசியல் சக்திகள் எதுவும் தங்களின் அரசியல் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் செயலாற்றப் போவதில்லை. இது ஒரு வகையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்குச் சமாந்தரமானது. எனவே இதனை விளங்கிக் கொண்டே தமிழ் நாட்டில் ஈழத் தமிழரின் பேரால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் ஈழத் தமிழர் தலைமை நோக்க வேண்டும்.

இந்த பின்புலத்தில் கருணாநிதியின் டெசோ மாநாடு தொடர்பில், தற்போதைய ஈழத் தமிழர் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவானது ஒரு முன்னேறிய நகர்வாகும் என்பதே இப்பத்தியின் கணிப்பு. கூட்டமைப்பு இதில் பங்கு கொண்டிருந்தால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவின் பகையை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும். அத்துடன் தெற்கின் அடிப்படைவாத சக்திகளின் கூட்டமைப்புக்கு எதிரான பிரச்சாரங்கள் வலுவடைந்திருக்கும். கூட்டமைப்பின் தலைமை புத்திசாதுர்யமாக இதனை கையாண்டிருக்கிறது. ஆனாலும் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் நாட்டின் தேசியவாத சக்திகள் குறித்து புத்திசாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கருணாநிதியின் மேற்படி அதிரடியான ஈழ ஆதரவு நிலைப்பாடு ஈழத் தமிழ் மக்கள் இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில் ஒரு விடயம் அல்ல, ஆனால் கருணாநிதியின் நகர்வு தமிழ் நாட்டின் உள்ளக அரசியலில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடும். கருணாநிதியின் நடவடிக்கையைத் தொடர்ந்து ஜெயலலிதா மத்திய அரசுக்கு ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனையை வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார். கருணாநிதி ஜெயலலிதா போன்றோர் ஒரே நேரத்தில் இலங்கையின் பிரச்சனையை பேசுபொருளாக்குவதை மத்திய அரசு தனது இலங்கை நோக்கிய கரிசனையை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாகவே தெற்கின் இனவாத சக்திகள் டெசோவை எதிர்க்கின்றன.

கருணாநிதி கூட தனது சொந்த விருப்பார்வத்தின் அடிப்படையில்தான் இந்த முடிவை எடுத்தாரா என்றும் சிலர் சந்தேகம் கொள்கின்றனர். அவ்வாறான சந்தேகங்கள் இலகுவாக நிராகரிக்கக் கூடியவையும் இல்லை. எது எவ்வாறிருப்பினும் தற்போதைய களநிலைமைகளை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய பொறுப்பு த.தே.கூட்டமைப்பிற்கு உண்டு. ஆனால் ஈழத் தலைமைகள் பங்கு கொண்டாலும், இல்லாது விட்டாலும் - தமிழ் நாட்டில் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும். ஏனெனில் ஈழத் தமிழர் பிரச்சனை என்பது இன்றைய சூழலில், தமிழ் நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளினதும் மட்டுமல்ல - பிரதான அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டுமென்னும் நோக்குடன் செயலாற்றிவரும் சிறிய கட்சிகளினதும் அரசியல் நிகழ்சிநிரலாகிவிட்டது. இது எப்போதும் இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர் பிரச்சனையில் தனது கரிசனையை சூடாக வைத்திருப்பதற்கான உந்துசக்தியை கொடுத்துக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒவ்வொரு சக்தியும் தங்களது நலனில் நின்று கையாளும் ஈழத் தமிழர் பிரச்சனையை ஈழத் தமிழரின் நலன்சார்ந்து எவ்வாறு கையாளுவது என்பதுதான் கூட்டமைப்பின் பணி.

http://www.pongutham...3b-813815ea5b0b

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.