Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடகம் முடிந்தது! வேடம் கலைந்தது - பழ. நெடுமாறன்

Featured Replies

ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், ‘கிடையாது’ என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் ‘டெசோ’ மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89வது பிறந்த நாளையட்டி 03.06.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. 09.06.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், “தமிழீழம் உருவாக வேண்டும்.

அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்

பதற்காகவும் உயிரைவிடவும் விரும்புகிறேன்” என முழங்கினார். அதற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு கருணாநிதியின் சுருதி இறங்கியது. 27.07.2012 அன்று மாநாட்டிற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு’ என மாநாட்டுக்குப் பெயர் சூட்டப்பட்டது. ‘தமிழீழம்’ என்ற பெயர் காணமல் போயிற்று. விழுப்புரத்தில் நடைபெறவிருந்த மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டது. மாநாட்டில் மத்திய அமைச்சர்களான சரத் பவார், பரூக் அப்துல்லா, அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களான சரத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்துகொள்வதாக விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனால், ராம்விலாஸ் பாஸ்வானைத் தவிர மற்றவர்கள் கலந்துகொள்ளவில்லை. தமிழீழத்திலிருந்து மா.வை. சேனாதிராஜா உள்பட ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. மாநாட்டிற்கு முதல் நாள் 11.08.2012 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பிய வெளிநாட்டினர் அனைவருக்கும் மத்திய அரசு விசா வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஆனாலும் தமிழீழத்திலிருந்து யாரும் வரவில்லை. உலக நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க ஈழத்தமிழர்கள் ஒருவர்

கூட கலந்துகொள்ளவில்லை.

சிங்களக் கட்சியான நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன மட்டும் கலந்துகொண்டார். இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா.வை வேண்டிக்கொள்ளும் தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது. மறுநாள் செய்தியாளர்களின் கூட்டத்தில் இத்தீர்மானத்தை கருணாரத்ன மறுத்துப் பேசினார். ஐ.நா.வால் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாது. இத்தீர்மானத்தினால் எந்தப் பயனும் ஏற்படாது. வெறும் விளம்பரம் மட்டுமே கிடைக்கும் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை. ஈழத்தமிழர்களின் அவல நிலைக்குக் காரணமான காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும், அதற்காகவே நான் ‘டெசோ’ மாநாட்டில் கலந்துகொண்டேன் எனக் கூறினார். இலங்கையிலிருந்து வந்தவர் அவர் ஒருவரே என்றாலும் அவரும் மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்கவில்லை.

தமிழீழ விடுதலையை ஆதரித்து ‘டெசோ’ மாநாட்டில் எத்தகைய தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசு கூறியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் பணிந்துபோன கருணாநிதியை மத்திய அரசு மீண்டும் குட்டியது. மாநாட்டிற்கான தலைப்பிலிருந்து ‘ஈழம்’ என்ற சொல்லையே நீக்க வேண்டும் என வெளியுறவுத்துறை எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தது. பிறகு பிரதமரிடம் நேரடியாகப் பேசி, கெஞ்சிக் கூத்தாடிய பிறகு அதற்கு அனுமதி கிடைத்தது. தில்லியில் இவருடைய ‘செல்வாக்கு’ எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்த மாநாடு அம்பலப்படுத்திவிட்டது.

2009-ம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இலட்சக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்துக்

கொண்டு குண்டுமழை பொழிந்தபோது அவர்களைக் காப்பாற்றும் அதிகாரம் கருணாநிதியிடம் இருந்தபோது என்ன செய்தார்? தில்லிக்கு விரைந்துசென்று, உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என சிங்கள அரசை வற்புறுத்திச் செயல்படுத்துவதோடு கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியா கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என வலியுறுத்துவதற்குப் பதில் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று ‘சாகும்வரை உண்ணா

விரதம்’ இருக்கப்போவதாக அறிவித்தார்.

அதிகாரம் படைத்த ஒரு முதலமைச்சர் செய்கிற வேலை இதுதானா? பிரதமரும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும் தொடர்புகொண்டு இவரிடம் பேசினார்கள். கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது இல்லை என சிங்கள அரசு அறிவித்திருப்பதாகக் கூறியதையட்டி உண்ணாவிரதத்தைத் திரும்பப்பெற்று 6 மணி நேரத்தில் வீடு திரும்பினார். ஆனால், நடந்தது என்ன? அன்று மாலையே சிங்கள இராணுவம் பீரங்கிகள் மூலமும் விமானங்கள் மூலமும் குண்டுகளை வீசித் தாக்கி ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். உண்ணாவிரத நாடகம் அம்பலமானது.

‘டெசோ’ மாநாட்டுக்கு அகில இந்தியக் கட்சிகளைத் சேர்ந்த பல தலைவர்களையும் பல நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் வரவழைக்கும் செல்வாக்குப் படைத்த கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்கள் படுகொலைக்கு ஆளானபோது அதைத் தடுத்து நிறுத்த இந்தத் தலைவர்களை ஒன்றுதிரட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை. ஆனால், இப்போது எல்லோரும் செத்து சாம்பலானபிறகு மாநாட்டைக் கூட்டுகிறார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி இலங்கை அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்பார்வைக் குழுவை நியமிக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்தது இந்திய அரசே என்பதையும் அதன் விளைவாக ஐ.நா. தீர்மானம் செயலற்றுக் கிடக்கிறது என்பதையும் அடியோடு மறைத்திருக்கிறார் கருணாநிதி.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. அவையை வற்புறுத்தும் மற்றொரு தீர்மானத்தையும் மாநாடு நிறைவேற்றியுள்ளது. ‘போர்க் குற்றவாளிகள்’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, முதலாவது குற்றவாளியான ராஜபக்சவின் பெயரைத் தீர்மானத்தில் குறிப்பிட மாநாடு தயங்கியுள்ளது. ராஜபக்சவைப் போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என மேற்கு நாடுகள் குரல் எழுப்பியபோது இந்தியா அவரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதற்கெதிராக தமிழகக் கட்சிகள் குரலெழுப்பியபோது கருணாநிதி அமைதி காத்தார்.

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மரத்தடியிலும் திறந்தவெளியிலும் முடங்கிக் கிடக்கின்றனர். மறு குடியமர்த்தப்பட்டத் தமிழர்கள் நரகவேதனை அனுபவிக்கின்றனர். ஈழப்பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்களும் வீடுகளும் வன்பறிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்டும் முயற்சிகளை ஐ.நா. மன்றம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்தியிருக்கிறது.

இப்போதாவது ஈழத்தமிழர்களின் அவல நிலை கருணாநிதிக்குப் புரிந்திருக்கிறது. ஆனால், 2009-ம் ஆண்டில் முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு உருவானதால் அதை நீர்த்துப்போகச் செய்வதற்காக அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பினார். நான்கு நாள்கள் அங்கிருந்த பிறகு 14.10.2009 அன்று இக்குழு சென்னை திரும்பியது. இக்குழுவின் சார்பில் முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், ‘முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் 3 மாதத்திற்குள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ என உறுதியளித்தார். ஆனால், 3 ஆண்டுகள் ஆன பிறகு அவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது என்பதையும் 3 மாதங்களில் அனைவருக்கும் விடிவு கிடைக்கும் என முன்பு வெளியிட்ட அறிக்கை திசை திருப்பலான அறிக்கை என்பதையும் ‘டெசோ` தீர்மானத்தின் மூலம் கருணாநிதி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சிங்கள இராணுவக் கொடும் முகாம்களில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலையைக் கண்டு இன்று கண்ணீர் வடிக்கும் கருணாநிதி எந்த மாநிலத்திலும் இல்லாதபடி தமிழகத்தில் ‘சிறப்பு முகாம்கள்` என்ற பெயரில் கொடுமையான சிறைகளை உருவாக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த ஈழ இளைஞர்களையும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களையும் அடைத்துவைத்து எந்த விசாரணையும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அவர்கள் வாடிக்கொண்டிருக்கிறார்களே, அதற்கு இவரின் பதில் என்ன? தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருந்த ஈழவேந்தன், சிவாஜிலிங்கம் போன்ற ஈழத் தமிழர் தலைவர்களை ஈவு இரக்கமில்லாமல் தமிழகத்தைவிட்டு வெளியேற்றியது இவரே. உடல் நலமின்றி சிகிச்சைக்காக தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்ட பிரபாகரனின் தாயார் மூதாட்டி பார்வதி அம்மையாரை கொஞ்சமும் இரக்கமில்லாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியது யார்? ஈழத்தமிழர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியதில் ராஜபக்சவுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு?

இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வேண்டிக்கொண்டிருக்கிறது.

2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை சிங்கள இராணுவத்தில் உள்ள 53 வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தியாவில் இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடலோரக் காவல்படை சிங்களக் கடற்படைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து புலிகளுக்கு வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது. சிங்களக் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் மூலம்தான் சிங்கள இராணுவம் புலிகளோடு மோதுவதற்கு துணிந்தது. அந்தப் பயிற்சி மட்டுமல்ல, இராணுவ ரீதியான உதவிகளையும் இந்தியா செய்தது. போர் முடிந்த பிறகு இந்த உண்மைகள் வெளியாயின. போர் வெற்றி விழாவையட்டி கொழும்பில் நடத்தப்பட்ட சிங்கள இராணுவ அணிவகுப்பில் இந்தியா கொடுத்த ராடார் கருவிகள், 40 மி.மீ. குறுக்களவு வாய் கொண்ட பீரங்கிகள், ‘70 ரக’ விமான எதிர்ப்பு பீரங்கிகள் ஆகியவை பகிரங்கமாகக் கொண்டுவரப்பட்டன. அதுமட்டுமல்ல, போரில் முக்கியப் பங்கெடுத்த ‘சயூர’, ‘சாகர’ என்னும் இந்தியப் போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டு மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டன.

இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியான லெப். ஜெனரல் சதீஷ்சந்திரா சிங்கள இராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இதற்கு இந்திய அரசு அனுமதி கொடுத்தது. இதெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்ததா? போர் நிறுத்தம் செய்யும்படி இந்திய அரசு ஒருபோதும் இலங்கையிடம் கூறவில்லை. ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா நடத்தவேண்டிய போரை இலங்கை நடத்துகிறது’ என வெற்றி விழாவில் பகிரங்கமாக அறிவித்தார் ராஜபக்ச. ‘இந்தியா விடுதலைப் புலிகளை ஒழிக்கக் கூடுதலான ஆதரவையும் உதவிகளையும் எங்களுக்கு வழங்கிவருகிறது. எப்போதுமே இந்தியா எங்கள் பக்கமே செயல்படும்’ என இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ச கூறினார்.

10.06.2009 அன்று வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர மேனன், ‘இலங்கை இனப்பிரச்னையில் இனி என்ன செய்ய வேண்டும் என்று இலங்கைக்குச் சொல்ல மாட்டோம். அப்படிச்சொல்வது இந்தியாவின் வேலை அல்ல. ராஜபக்ச என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நான் நடத்தினேன் என ராஜபக்ச சொன்னது சரிதான். இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இந்தியா பாதுகாப்பாக இருக்க முடியாது’ என்று கூறினார். இந்திய அரசு வெளிப்படையாகவே சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான எல்லா உதவிகளையும் செய்தபோது அதைத் தமிழக மக்களிடமிருந்து மூடி மறைக்க கருணாநிதி உதவினார்.

போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்தியிருப்பதாகப் பலமுறை கூறி மக்களை ஏமாற்றினார். முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெற்ற பிறகு 2010-ம் ஆண்டு ஜுலை மாதம் தில்லி வந்த ராஜபக்சவுக்கு இந்திய அரசு ரத்தினக் கம்பள வரவேற்புக் கொடுத்தது. இந்தியாவுடன் 7 உடன்பாடுகளில் அவர் கையெழுத்திட்டார். சிங்களரின் மேலாண்மைக்கு அடங்கி அழியும்படி ஈழத்தமிழர்கள் கைகழுவி விடப்பட்டனர். ஈழத் தமிழரைப் பலிகொடுத்தாவது ராஜபக்சவைத் திருப்தி செய்வதில் இந்தியா முனைந்தது. தமிழரின் ரத்தக்கறைபடிந்த கரங்களுடன் இந்தியா வந்த ராஜபக்சவுடன் மத்திய அரசு உடன்பாடுகளை செய்துகொண்டதைக் கண்டிக்க தி.மு.க. முன்வரவில்லை.

‘டெசோ’ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவில்லையென்றால், கருணாநிதி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விக்கு அவரிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் அவர் ஆட்சியை இழந்திருக்கலாம். ஆனால், தில்லியில் ஆளும் கூட்டணியில் அவரும் ஒரு முக்கியமான அங்கமாகத் திகழ்கிறார். மத்திய அமைச்சரவையில் அவரது மகன் உள்பட தி.மு.க.வைச் சேர்ந்த பலர் அங்கம் வகிக்கிறார்கள். ஈழத் தமிழர் துயர் துடைக்க அவர்கள் மூலம் தில்லியை வற்புறுத்தலாம்.

தங்கள் கோரிக்கையை ஏற்க தில்லி தவறுமானால் தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகி வெளியேறுவதுதான் அரசியல் நாணயமாகும். முச்சந்தியில் மாநாடு கூட்டி தீர்மானம் போடுவது ஏன்? எதற்காக? யாரை ஏமாற்ற?

‘டெசோ’ நாடகம் முடிந்துவிட்டது. கருணாநிதியின் ஈழக்காவலர் வேடமும் கலைந்துவிட்டது!

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.