Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்விட்டர் - வானம் தொட்டு விடு தூரம் தான்

Featured Replies

கலைஞர் முதல் வலைஞர் வரை

- சி. சரவண கார்த்திகேயன்கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் தொடங்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் ஆங்கிலத்தில் இருந்தது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றியது அது. ஆதரவாளர்களிடம் இருந்து வாழ்த்துகளும் வரவேற்புகளும் பெருகத் தொடங்க, சிறிது நேரத்தில், திமுக மாநில மாநாடு நடைபெரும் நகரின் சாலைபோல் மாறிவிட்டது ட்விட்டர் டைம்லைன். ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களை எந்தவொரு பிரபலத்தாலும் புறக்கணித்துவிடமுடியாது என்பதற்கு கலைஞர் ஓர் உதாரணம்.

சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் எனப்படும் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வின் அத்தியாவசியமாகி ரொம்ப காலம் ஆகிறது. சமூக உளவியலில் அது ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. தொலைபேசி, மின்னஞ்சல், வலைதளம், ட்விட்டர், ஃபேஸ்புக் என்று தகவல் தொலைநுட்பத் துறை தொட்டுள்ள உயரம் அசாதாரணமானது.

ட்விட்டர் என்பது ஒரு சுவாரஸ்யமான சமூக வலைதளம். அதில் ட்வீட் என்பது ஒரு படைப்பு. ஒரு ட்வீட்டில் 140 எழுத்துக்களுக்கு மட்டுமே அனுமதி. அந்த வரையரைக்குள் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். ட்விட்டர் வலைதளம் 2006ல் ஜேக், எவான் என்ற இருவரால் தொடங்கப்பட்டது. இன்றைய தேதியில் உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அதாவது உலகில் 14 பேரில் ஒருவர் ட்விட்டர் பயன்படுத்துகிறார்.

ஃபேஸ்புக்கில் ப்ரொஃபைல் அல்லது பேஜ் உருவாக்கலாம். முக்கியமாக, புகைப்படங்கள் இதில் பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. ஃபேஸ்புக் தளத்தை 2004ல் மார்க் சூக்கர்பெர்குடன் இணைந்து ஐந்து பேர் தொடங்கினார்கள். உலகம் முழுக்க 96 கோடி பேர் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் நாளில் இந்திய மக்கள் தொகையை இது தொட்டுவிடும்.

‘இந்த ஊடகத்தை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. அதனால் இது குறித்த பதட்டமும், சந்தேகமும் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி உங்களோடு பேச, விஷயங்களைப் பகிர இப்போது இங்கே வந்திருக்கிறேன்.’ இரு மாதங்களுக்கு முன்பு, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் பேசியது இது.

இன்று கிட்டதட்ட எல்லாத் துறை பிரபலங்களும் ஏதாவதுவொரு சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். தம்முடைய ரசிகர்களுடன், வாசகர்களுடன், தொண்டர்களுடன் நேரடியாகப் பேசுகிறார்கள். தகவல்களை, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தீவிரமாக ட்விட்டரில் இயங்குகிறார். அரசியல் கருத்து, கலை விமரிசனம், வாழ்த்து, அஞ்சலி என நிறையவே பகிர்ந்துகொள்கிறார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் மிகத் தீவிரமாக இயங்குகிறார். பங்களாதேஷைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ட்விட்டரில் பெண்ணிய ஆதரவுக் கருத்துக்களைத் தொடர்ச்சியாக அளித்து வருகிறார். ‘முதலில் நான் ஒரு மனுஷி. என் யோனி என்பது இரண்டாம் பட்சம் தான். அதைக்கொண்டு என்னைத் தீர்மானிக்கலாகாது.’ இது அவருடைய சமீபத்திய ட்வீட்களில் ஒன்று.

கவிப்பேரரசு வைரமுத்து மாதமொருமுறை தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தன் வாசகர்களுடன் உரையாடுகிறார். அவர்களுடைய கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு, விமரிசனங்களுக்கு பதிலளிக்கிறார். இதை ‘எழுத்தாடுதல்’ என்று குறிப்பிடுகிறார். வைரமுத்துவின் மகன், பாடலாசிரியர் மதன் கார்க்கியும் ட்விட்டர் மூலம் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பிரபல பின்னணிப் பாடகிகள் ஸ்ரேயா கோஷல், சின்மயி இருவரும் ட்விட்டரை அதிகம் பயன்படுத்துபவர்கள்.

‘இசை ஞானி’ இளையராஜா குடும்பத்தின் இளைய தலைமுறையில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், வாசுகி பாஸ்கர் எல்லோரும் ட்விட்டரில் இருக்கின்றனர். இவர்களுக்குள் அவ்வப்போது சுவாரஸ்யமான உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடக்கின்றன.

இளம் நடிகர்கள் ஜீவா, சிம்பு, தனுஷ், சித்தார்த் மற்றும் நடிகைகள் ஸ்ரேயா, த்ரிஷா, சமந்தா, ஸ்ருதி ஹாசன், திவ்யா, சமீரா ரெட்டி, பாவ்னா, ஜெனிலியா, நமீதா, ஸ்வாதி, சோனியா அகர்வால் ஆகியோரும் ட்விட்டரில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், இயக்குநர்கள் கௌதம் மேனன், செல்வராகவன், வெற்றிமாறன், கே.வி. ஆனந்த், எம். ராஜேஷ், சி.எஸ். அமுதன், தயாரிப்பாளர்கள் தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் ட்விட்டரில் உள்ளனர். இது தவிர பிரபலங்களின் மனைவிகளான கீதாஞ்சலி செல்வராகவன், கிருத்திகா உதயநிதி, நந்தினி கார்க்கி போன்றோரும் ட்விட்டரில் வலம் வருகிறார்கள்.

இயக்குநர்கள் விக்கிரமன், வசந்தபாலன், லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நடிகர் சித்ரா லக்ஷ்மணன், நடிகை ‘அண்ணி’ மாளவிகா ஆகியோர் ஃபேஸ்புக்கில் இயங்கி வருகின்றனர். நடிகர் ரா.பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாசமான, சுவாரஸ்யமான வெளிப்பாட்டு உத்திகளுடன் ஃபேஸ்புக்கில் வலம் வலம் வருகிறார். திரையுலகப் பிரமுகர்களுக்கு இணையாக வெகுஜன எழுத்தாளர்களும், நவீன இலக்கியவாதிகளும் சமூக இணையதளங்களில் தீவிரமாக செயல்படுகின்றனர்.

மனுஷ்ய புத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சமகால நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது பகடி கலந்து எழுதுகிறார். சாரு வாசகர் வட்டம் என்ற குழுமம் ஃபேஸ்புக்கில் இயங்கி வருகிறது. இதில் சாரு நிவேதிதா பங்கேற்கிறார். தான் எந்தவொரு சமூக வலைதளத்திலு இல்லை, தன் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் எந்தக் கணக்கும் தன்னுடையதல்ல என்று சமீபத்தில் அறிக்கை விட்டார் ஜெயமோகன். எஸ்.ராம கிருஷ்ணனும் இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் இருக்கும் ஞாநி அவ்வப்போது அங்கே சில தீவிரமான விவாதங்களை நிகழ்த்துகிறார்.

பெண் படைப்பாளிகளான எழுத்தாளர் சந்திரா, கவிஞர் மற்றும் இயக்குநர் லீனா மணி மேகலை, ஆங்கிலக் கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தம்முடைய காத்திரமான கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.

எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன், இரா.முருகன், பாஸ்கர் சக்தி, ஷோபா சக்தி, ‘சுபா’ சுரேஷ், தமிழ்நதி, உமா ஷக்தி, லக்ஷ்மி சரவணகுமார், கவிஞர்கள் மகுடேசுவரன், பழனிபாரதி, ராஜா சந்திரசேகர், தபூ சங்கர், பத்திரிக்கையாளர்கள் குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், புதிய தலைமுறை ஆசிரியர் மாலன், பதிப்பாளர் காந்தி கண்ணதாசன், ‘காலச்சுவடு’ கண்ணன், ‘கிழக்கு’ பத்ரி சேஷாத்ரி ஆகியோர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். எழுத்தாளர் பா.ராகவன் ட்விட்டரில் இயங்கி வருகிறார். அவரது ட்வீட்கள் ‘குற்றியலுகரம்’ என்ற தொகுப்பாகவும் வந்திருக்கிறது. என்.சொக்கன் சங்க இலக்கியம், சினிமா பாடல்கள் குறித்து சுவாரஸ்யமாக ட்வீட் செய்கிறார். பாடலாசிரியர் விவேகாவும் அவ்வப்போது கவித்துவ வரிகள் பகிர்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், மற்றும் எம்எல்ஏக்கள், மேயர்கள் உள்ளிட்ட பல கட்சி அரசியல் பிரமுகர்களும் ஃபேஸ்புக் தளத்தில் செயல்பட்டு வருகின்றனர். கலைஞருக்கும் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வப் பக்கம் உருவாக்கி இருக்கிறார்கள்.

*

சில விநோதமான பிரச்னைகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலங்கள் சந்திக்க நேர்கிறது. 2009 மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது அரசாங்கத்தின் விசா கொள்கைகள் குறித்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சசி தரூர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விகள் கடும் சர்ச்சைக்குள்ளாயின.

ஆங்கில நாவலாசிரியர் சேத்தன் பகத் தன் புத்தகங்கள் கள்ளப்பிரதிகள் விற்கப்படுவது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் ட்விட்டரில் குமுறினார். இப்படிப்பட்ட ஒரு தேசம் எப்படி முன்னேறும் என்று அவர் கேட்டபோது, அதை ஒருவர் கிண்டல் செய்ய, கடுங்கோபத்துக்குள்ளான சேத்தன் அவரை ப்ளாக் செய்துவிட்டார். அவ்வளவுதான், சேத்தனின் மற்ற ஃபாலோயர்கள் அவரைக் கண்டித்து எதிர் ட்வீட்டுகளால் போர் ஒன்றைத் தொடுக்க, பதிலளிக்க முடியாமல் சேத்தன் திணறிவிட்டார்.

பின்னணி பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன் தமிழக மீனவர் பிரச்னை, பிராமணியம், பெண்ணியம் போன்ற விஷயங்களில் தமிழ் ட்விட்டர்களுடன் விவாதத்தில் இறங்கி, அது கருத்து மோதலாக வளர்ந்து இறுதியில் சங்கடத்தில் முடிந்தது. கணிசமான தமிழ் ட்வீட்டர்களை அவர் ப்ளாக் செய்தார். கடைசியில் அவரது அம்மா தலையிட்டு பிரச்னையை சுமூக மாகத் தீர்க்க வேண்டி இருந்தது.

சமீபத்திய ஐபிஎல் போட்டிகளின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா (‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘7-ஆம் அறிவு’ படங்களில் துணை நடிகையாக நடித்தவர்) தமிழர்களை மின்சாரத்துக்காகவும், தண்ணீருக்காகவும் பிச்சை எடுப்பவர்கள் என்று தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். அது பெருத்த பிரச்னையானதில் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டு, இனிமேல் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி பெங்களூரு சென்றுவிட்டார்.

டெசோ மாநாடு பற்றிய கடுமையான தாக்குதல்களை கலைஞர் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் எதிர்கொள்ள வேண்டி வந்தது. சில ஆதரவுக் குரல்களும் பறந்தன.

*

பிரபலங்கள் சமூகவலைதளங்களுக்கு வருவது ஒரு பக்கம். சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்கள் இன்னொரு பக்கம். சமூக வலைத்தளங்களில் இருந்து சிறந்த விஷயங்களைத் தேர்ந்தெடுத்து பிரபல பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ஆனந்த விகடனில் ‘வலைபாயுதே’, குங்குமத்தில் ‘வலைப்பேச்சு’, குமுதம் ரிப்போர்ட்டரில் ‘ஆன்லைன் ஆப்பு’, அவள் விகடனில் ‘நெட் டாக்ஸ்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பேயோன் தனது ட்வீட்களை தொகுத்து ’பேயோன் ஆயிரம்’ என்று புத்தகமாக வெளியிட்டார். இப்போது ஆனந்த விகடனில் பத்தியும் எழுதுகிறார். தோட்டா என்ற பெயரில் ட்விட்டரில் எழுதும் ஜெகன் குங்குமம் இதழில் தொடர் எழுதுபவராகப் பரிணமித்திருக்கிறார். ஒருவரைக் கூட ஃபாலோ செய்யாமல் தன் அபாரமான ட்வீட்கள் மூலம் கிட்டதட்ட நாலாயிரம் ஃபாலோயர்களை ஈர்த்து வைத்திருக்கிறார் அராத்து.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் சமூக வலைதளங்களில் சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் எனக் குறிப்பிட்ட ஐவரில் ட்விட்டரில் ராஜன்லீக்ஸ் என்ற பெயரில் எழுதும் ராஜனும் ஒருவர். பின்ஸ்டார்ம் தேர்ந்தெடுத்த இந்தியா இன்ஃப்ளூயன்சர்ஸ் என்ற 100 பேர் பட்டியலில் தமிழில் இருந்து இடம்பெற்ற ஒரே ஆளும் இவர்தான்.

ஹெட்லைன்ஸ் இந்தியா தளம் அறிவித்த ஹைஃப்ளையர்ஸ் 2011 விருதுகளில் இந்திய அளவில் சிறந்த ட்வீட்டராக கார்க்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். 6,300 பேருடன் தமிழில் அதிகம் ஃபாலோயர்கள் கொண்ட ட்வீட்டர் இவர். டான் அஷோக் இந்திய அளவில் ஃபேஸ்புக்கில் சிறந்தவராக ஹைஃப்ளையர்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரட்டைகேர்ள் என்ற பெயரில் எழுதி வரும் கோவையைச் சேர்ந்த சௌம்யா ஒரே ஆண்டில் 16,700 ட்வீட் போட்டு 4,700 ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். தமிழ் ட்வீட்டர்களில் மிக அதிக ஃபாலோயர்கள் கொண்ட பெண் இவர்தான்.

ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகப் பல பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் காலடி எடுத்து வைத்த வண்ணம் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும், பல புதிய பிரபலங்கள் சமூக வலைத்தளத்தால் உருவாகிக்கொண்டும் இருக்கிறார்கள்.

http://www.aazham.in/?p=1861

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.