Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்

Featured Replies

[size=1]mahendran.jpg[/size]னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது.

நீ கனவு கண்டுகொண்டு இருக்கிற துறையில் நுழைந்து, நான் பெற்ற அனுபவங்களும் சிந்தனைகளும்தான் இந்தப் பகிர்தலுக்கான எனது தகுதி. நான், உன் மீதுகொண்ட அன்பும் அக்கறையும்தான் எனது இந்தப் பகிர் தலுக்கான காரணம்.

நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை என்றாலும்கூட, எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படி இருக்க வேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானது இல்லை, என் சமூகத்துக்கானது இல்லை என்று, அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியில் இருந்து உருவான கனவு. எனது திரைப்படங்கள் அப்படித்தான் உருவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு, அப்படிப்பட்ட கனவா?

சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் ஒன்றும் தேவ தூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங் களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவை இருக்காது.

நமது நாட்டில் எவ்வளவோ பேர் பட்டினிகிடக்கிறார்கள். விவசாயம் பண்ணுகிறவன் பட்டினி கிடக்கிறான். அன்றாடங்காய்ச்சி பட்டினிகிடக்கிறான். மாதச் சம்பளம் வாங்குபவன்கூடச் சமயங்களில் மாதக் கடைசியின் போது பட்டினிகிடக்கிறான். ஆனால், சினிமாவில் ஜெயித்த ஒரு நடிகரோ, டைரக்டரோ, தான் ஃபீல்டுக்கு வந்து பட்டினி கிடந்ததையும் முன்னேறியதையும் சொல்லும்போது, அதற்கு ஒரு அதிகப்படியான முக்கியத்துவம்... அந்தப் பட்டினியின் மீது ஒரு கவர்ச்சியும் ஏற்பட்டுவிடுகிறது. என்றோ அடைந்துவிடுவோம் என்கிற வெற்றிபற்றிய கனவு. அடுத்த வேளை பட்டினியைப் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளும்படி உன்னைத் தயார்படுத்திவிடுகிறது. இதுதான் சினிமாவின் அபாயகரமான கவர்ச்சி.

இளமையையும் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்கும் அளவுக்கு இந்தக் கவர்ச்சி உன்னிடத்தில் ஏற்படுத்துகிற பாதிப்பு என்னை வருத்தமடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கில் வந்து இங்கே நுழைந்தவர்களில் சிலர் ஜெயித்திருக்கின்றனர். அந்தச் சிலரில் ஓரிருவர் தவிர்க்க முடியாமல் பட்டினிகிடந்து இருக் கிறார்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களது எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அவர்கள் அடைந்த வெற்றியின் காரணமும் அடிப்படையும்தான் முக்கியமே தவிர, அவர்கள் பட்ட கஷ்டங்கள் உனக்கான முன் மாதிரியாக இருக்க முடியாது.

என்னை அணுகி வாய்ப்புக் கேட்ட பல இளைஞர்களிடத்தில் நான் பார்த்துக் கவலைப்படும் மற்றோர் அம்சம் - அவர்களது தீர்மானம் இன்மை. தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கே இருக்கிற குழப்பம். அசிஸ்டென்ட் என்று துவங்கி, 'கதை சொல்றேன்... பாட்டு எழுதுறேன்... டயலாக் எழுதுறேன்’ என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில், 'ஆபீஸ் பாய்னாக்கூட சரி சார்... எப்படியாச்சும் உள்ளே நுழைஞ்சுட்டாப் போதும்’ என்பார்கள். எனக்கு மனசு கஷ்டப்படும். உங்கள் திறமை, உங்கள் தகுதிபற்றி உங்களுக்கே ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் வேண்டாமா? உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா? அப்படி என்ன அவசியம் சினிமாவுக்கு?

சினிமாவுக்கு வருகிற உன் போன்றவர்களின் ஊக்கத்தைக் குறைப்பதோ, உறுதியைக் குலைப்பதோ எனது எண்ணம் இல்லை. நிறையப் பேர் வர வேண்டும். உங்களது வருகையும் இருப்பும் உங்களது முழுப் பரிமாணத்தை யும் காட்ட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால், திட்டமோ, கவனமோ இல்லாமல் இங்கு வந்து, தயக்கமும் பயமுமாக நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகி வாய்ப்புக் கேட்பது எனக்குச் சங்கடம் தருகிறது.

ஒரு மனிதனுக்குக் காதல் என்பது அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். அதற்கு மரியாதை செய்யுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனசும்தான் சிறந்த படைப்புகளைத் தர உதவும். ஒரு சின்ன வேலையைத் தேடிக்கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அடிமனதில், சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள் கனன்றுகொண்டு இருக்கட்டும். அதை அணையவிடாது, அந்தக் கனலுடன் இருங்கள். அந்தக் கனலின் வீரியம்கூடிக் கொண்டுதான் இருக்கும்.

வயிற்றுப் பசி இல்லாமல் முகத்தில் தெளிவும் - மனம் முழுக்க உங்களது திறமை குறித்த தன்னம்பிக்கையும் - உள்ளே 'என்னால் சாதிக்க முடியும்’ என்கிற உறுதியும்கொண்டு, நீங்கள் ஒருவரிடம் வாய்ப்புக் கேட்பது மிகவும் ஆரோக்கியமான தாக இருக்கும். அப்போது உங்க ளிடம் தேவையற்ற தயக்கம்இருக் காது... கூச்சம் இருக்காது... உறுதி இருக்கும். நம்பிக்கை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் வாய்ப்புக் கிடைக்காவிட்டால், நீங்கள் நிச்சயம் கூசிப்போக மாட்டீர்கள். உங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய மற்றொருவரைத் தேடி, அதே கம்பீரத்துடனும் தெளிவு டனும் நீங்கள் செல்வீர்கள்.

அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேரும்பட்சத்தில் அதிலேயே மூழ்கி நம்முடைய பிரதான லட்சியம் மங்கிப் போகுமோ என்கிற சந்தேகம் இயல்பாகவே வரலாம். ஆனால், அப்படி அவசியம் இல்லை. எல்லாக் கலைகளும் கதைகளும், சுற்றி உள்ள சமூகத்தில் இருந்து தான் உருவாகின்றன. உங்களுக்கான காலம் கனியும் வரை நீங்கள் உங்களைத் தயார் செய்துகொண்டு இருங்கள்.

நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டுவிட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை - வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலும் உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன.

தவிர, நிறைய வேற்று மொழிப் படங்களைப் பார்ப்பது உங்களைச் செழுமைப்படுத்தும். நான் பார்த்த ஒரு வேற்று மொழிப் படம் நினைவுக்கு வருகிறது. 'Rape in the Virgin Forest’ எனும் படம். பழங்குடி மக்கள் வாழும் ஒரு காட்டில் 'நாகரிக’ மனிதர்கள் நுழைகிறார்கள். இவர்களது தேவைக்காக விறகு வெட்ட பழங்குடி மக்க ளையே உபயோகிக்கிறார்கள். அந்தப் பழங்குடி பெண்களில் ஒருத்தியை ஒருவன் நதியோரத்தில் கெடுப்பதற்காக விரட்டிச் செல்கிறான். அவள் ஓடுகிறாள். மற்றொரு புறத்தில் இவனுக்கா கப் பழங்குடி ஒருவன் பிரமாண்டமான ஒரு மரத்தை வெட்டிச் சாய்க்கிறான். நெடிதுயர்ந்த அந்த மரம் வீழ்கையில் அந்தப் பெண் ணின் கதறல் பின்னணியாக ஒலிக்கிறது. அப்படியே ஆடிப் போய்விட்டேன். இப்போது நினைத்தாலும் அந்தக் கதறல் மனதில் கேட்கிறது. மரம் விழுவதற்கு அந்தப் பெண்ணின் கதறல் எவ்வளவு பொருத்தமான பின்னணி இசை!

இதுபோன்ற படங்கள் நமக்குள்ளே இருக்கும் திரியைத் தூண்டிவிடுவதுபோல் ஒரு தூண்டலாக இருக்கின்றன.

அன்றாடத் தேவைகளின் முக்கியத்தை உணர்ந்து, அதை நிறைவேற்றியபடியே உனது அடுத்த இலக்குக்காக முயல்வதும்... உன்னை மேலும் மேலும் 'அப்டேட்' செய்துகொண்டு, வாழ்வைக் கவனித்து கவனித்து உனது கலை மனசைக் கூர்மைப்படுத்திக் கொள்வதும்தான் அதிமுக்கிய மாகப்படுகிறது. ஆனால், இவற்றைவிடவும் பெரிதான ஒன்று உண்டு. இந்தப் பாடத்தை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது மாமா.

ஒருநாள் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு சிறு பருக்கை கீழே சிதறிவிட்டது. அவர் புன்னகையோடு சொன்னார், ''இந்தப் பருக்கையோட நிலையைப் பாத்தியா... பாவம்!''

நான் வியப்பாக ''ஏன்?'' என்றேன்.

''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள்! எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது!''

நான் அதிர்ந்து, அப்படியே சிலையாக நின்றுவிட்டேன். எவ்வளவு எளிமையான மனிதரி டம் இருந்து எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!

நம்முடைய பிறப்பும் அந்த அரிசிபோலத்தான். நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித் தப்பி வாழ்வைக் கடந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஒருபோதும் இந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக் கூடாது. கடைசி நிமிடத்தில் தவறிய அந்தப் பருக்கைபோல் தவறிப்போனவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்!

இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மிகப் பெரிய கனவும் உழைப்பும்கொண்டு நீ சினிமாவில் வெல்ல முயலலாம். வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆனால், அப்படி ஆக முடியாது போனால் அது ஒன்றும் குறைபாடு இல்லை.

சினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை.

உன்னை, என்னை உருவாக்கி, இப்போது நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது வரை, உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின் பங்கு இருக்கிறது.

இதுவரை கீழே தவறி விழாத சோற்றுப் பருக்கையாக நீயும் நானும் இப்போது நாம் இருக்கும் இடத்தில் நிற்கிறோம்.

இந்த உதாரணத்தை எனக்கு சொல்லிக் கொடுத்த என் மாமாவும்கூட... பிரபலமாகாத ஓர் எளிய விவசாயிதான்!

http://youthful.vikatan.com/index.php?nid=90#cmt241

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.