Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கதேசத்தின் தோற்றமும் தமிழீழமும்.! – செண்பகத்தார்

Featured Replies

பல நாடுகள், பல இனங்கள், பல மக்கள், பல மொழிகள், பண்பாடுகள் கொண்டதொரு பரந்த உபகண்டத்தை இந்தியா என்ற பெயரில் ஒரு தனிப்பெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள். பிரிட்டிஷ் ஆட்சி 350 வருடங்கள் நிலவின. 1947ல் அவர்கள் வெளியேறினார்கள்.

வெளியேறும் போது இந்தியாவை இரு துண்டுகளாகப் பிரிவிடுதல் செய்து இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளை உருவாக்கி விட்டுச் சென்றார்கள். பிரிட்டிசாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடு இருக்காததைப் போல் பாக்கிஸ்தான் என்ற நாடும் இருந்ததில்லை.

பாக்கிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் றஹமத் அலி (Rahamat Ali) என்ற இங்கிலாந்தில் வாழ்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட இந்திய முஸ்லிம். பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்த் ஆகிய முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் பெயர்களை ஒன்றினைத்து அவர் பாக்கிஸ்தான் என்ற பெயரை உருவாக்கினார்.

பாக்கிஸ்தானின் தந்தை முகம்மது அலி ஜின்னா என்பது வரலாறு. முதன் முதலாக இலன்டனில் தனது பாக்கிஸ்தான் கோரிக்கையை றஹமத் அலி ஜின்னாவிடம் கொடுத்தபோது அவர் அதை நிராகரித்தார். ஒன்றிணைந்த இந்தியா என்ற கோட்பாட்டை ஆரம்ப காலத்தில் கொண்டிருந்தவர் ஜின்னா.

இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியினரும் இந்தியத் தலைவர்களும் முஸ்லிம்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க மறுத்தபோது அவர் பாக்கிஸ்தான் என்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான நாடு உருவாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரமும் இந்து – முஸ்லிம் முரண்பாடுகளுக்குக் காரணமாக அமைந்தது.

முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் அரசியலை முன்னெடுப்பதற்காகவும்; அனைத்து இந்திய முஸ்லிம் லீக் 1906ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வங்காள மாகாணம் நிர்வாகத் தேவைக்காகப் பிரிட்டிசாரால் கிழக்கு, மேற்கு என்று இரு பகுதிகளாகப் 1905ல் பிரிக்கப்பட்டது.

கிழக்கு வங்காளத்தில் பெரும்பான்மைமயாக வாழ்ந்த முஸ்லிம்கள் இந்தப் பிரிவிடுதலை வரவேற்றார்கள். ஆனால் 1909ல் அதே பிரிவிடுதலை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மீளப்பெற்ற போது கிழக்கு வங்காள முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும் மேற்கு வங்காள இந்துக்களையும் வன்மையாகக் கண்டித்தனர்.

இந்திய தேசியக் காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் கூட்டாகச் செயற்பட்ட உதாரணமும் உண்டு. 1916ம் ஆண்டு கூடுதலான தன்னாட்சி உரித்துக்களைப் பெறுவதற்காக இரு பகுதியும் லக்னோ உடன்படிக்கையைச் செய்தார்கள். இரு பகுதியும் கூட்டாகச் செய்த கோரிக்கையை பிரிட்டிசார் நிராகரித்தனர்.

முஸ்லிம் லீக், காங்கிரஸ் கருத்து முரண்பாடுகள் நீடித்தன. 1930ம் ஆண்டு அலகபாத் நகரில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் உருது மொழிக் கவிஞரும் அரசியல்வாதியுமான டாக்டர் அல்லாமா இக்பால் (Allama Iqbal) முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அடுத்த வருடம் 1931ம் ஆண்டு ஏர்வின் காந்தி உடன்படிக்கை (Irwin Gandhi Pact) காந்தியின் அரசியல் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது. இது முஸ்லிம் லீக்கைத் தனிமைப்படுத்தியது, காங்கிரசிடமிருந்து விலகிச் செல்ல வகை செய்தது.

முஸ்லிம் லீக்கின் தலைமைப் பதவியை ஏற்ற முகம்மது அலி ஜின்னா பிரிவிடுதல் செய்யப்பட்ட இந்தியாவில் முஸ்லிம்களுக்கான தனி நாட்டுக் கோரிக்கையை 1940ம் ஆண்டு முன்வைத்தார். 1942 -43ம் ஆண்டுகளில் நடந்த மாகாணத் தேர்தல்களில் சிந்த், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணங்கள் (North West Frontier Provinces) பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் அதிகாரங்களைக் முஸ்லிம் லீக் கைப்பற்றியது.

இந்தியா பிரிவதைத் தடுப்பதற்காக 1944ல் காந்தி ஜின்னாவுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தினார். பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன. அனைத்திந்திய முஸ்லிம்களின் தலைவர் என்ற அந்தஸ்தை இந்திய முஸ்லிம்கள் ஜின்னாவுக்கு வழங்கினார்கள். 1945ல் பிரிவிடுதலைத் தவிர்க்க முடியாததென்ற நிலை தோன்றியது.

பிரிட்டிஷ் தேசாதிபதி மவுண்பேற்றன் பிரபு (Lord Mountbatten) பிரிவிடுதல் திட்டத்தை 1947ம் ஆண்டு அறிவித்தார். இதன் அடிப்படையில் இந்தியா பாக்கிஸ்தான் நாடுகள் முறையே 1947 ஆகஸ்து 16ம் நாள் நள்ளிரவு, 1947 ஆகஸ்து 15ம் நாளன்று தோன்றின.

இந்திய உபகண்டம் மத அடிப்படையில் பிரிவிடுதல் செய்யப்பட்டது. பாக்கிஸ்தான் இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் இரு அலகுகளைக் கொண்ட ஒற்றை நாடாக உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மேற்கில் மேற்குப் பாக்கிஸ்தானும் கிழக்கில் கிழக்கு பாக்கிஸ்தானும் தோற்றம் பெற்றன.

இந்தப் பிரிவிடுதல் அசாதாரணமானது. புவியியல் ரீதியாக இரு அலகுகளும் வெகு தூரத்தில் நேரடித் தொடர்பு இல்லாத தொலைவில் இருந்தன. இரு பகுதி மக்களையும் பிணைப்பதற்கு மதம் போதுமானதாக இருக்கவில்லை. மொழி மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் பிரதானமாக இருந்தன.

கிழக்கு பாக்கிஸ்தான் தலைநகர் டக்காவுக்கு 1948ம் ஆண்டு வருகை தந்த முகம்மது அலி ஜின்னா கிழக்கும் மேற்கும் இணைந்த முழுப் பாக்கிஸ்தான் நாட்டின் ஒற்றை மொழியாக உருது மாத்திரம் இருக்குமென்று பிரகடனம் செய்தார். இது வங்காள மொழி பேசும் கிழக்கு பாக்கிஸ்தான் மக்களைக், குறிப்பாக மாணவர்களைக் கொதிப்படையச் செய்தது.

கிழக்கு பாக்கிஸ்தான் மறைவதற்கும் வங்க தேசம் (Bangladesh) என்ற புதிய நாடு தோன்றுவதற்கும் மொழி அடையாளம் அடிப்படைக் காரணமாக அமைகிறது. இந்திய உபகண்டத்தில் இருதேசங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் (The Two Nation Theory) உருவாக்கப்பட்ட பாக்கிஸ்தான் பாரிய சவாலை எதிர்கொண்டது.

இரு அலகுகளும் கிட்டத்தட்ட ஒரேயளவு மக்கள் தொகையைக் கொண்டவை. ஆனால் ஆட்சி அதிகாரம் மேற்கு பாக்கிஸ்தானிடம் மாத்திரம் இருந்தது. இறைவனால் தமக்கு அருளப்பட்ட ஆள்புலமாக கிழக்கு பாக்கிஸ்தானை மேற்கு பாக்கிஸ்தான் ஆட்சியர்கள் கருதினார்கள். பொருளாதார ரீதியாக கிழக்கு பாக்கிஸ்தான் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தது. அதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கு பாக்கிஸ்தான் மேற்கொள்ளவில்லை.

வங்காள மொழிக்கான கிளர்ச்சிகளை மாணவர் அமைப்புக்கள் 1952ம் ஆண்டு பரவலாக ஆரம்பித்தன. 1952 பெப்ரவரி 21ம் நாளன்று பொலிஸ் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திப் பல மாணவர்களைக் கொன்றனர். இன்று இந்த நாள் வங்க தேசத்தில் தியாகிகள் நாளாகக் (Martyrs Day) அனுட்டிக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு யுனெஸ்கோ (Unesco) அதே நாளை அனைத்துலகத் தாய்மொழி நாளாகப் (International Mother Language Day) பிரகடனஞ் செய்துள்ளது.

மாணவர்களின் எதிர்ப்பை தமது ஆட்சிக்கு விடப்பட்ட சவாலாக மேற்கு பாக்கிஸ்தான் நிர்வாகம் கருதியது. நீறு பூத்த நெருப்பாக பரஸ்பர சந்தேகமும் வெறுப்பும் தோன்றின. வரலாற்றில் முதன்முறையாக இரு அலகுகளையும் உள்ளடக்கிய பொதுத் தேர்தல்கள் 1971ம் ஆண்டு நடைபெற்றன.

ஷேக் முஜிபுர் றஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி 169 தேர்தல் தொகுதிகளில் 167 தொகுதிகளைக் கைப்பற்றியது. இரு அலகுகளின் தேர்தல் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 313. பெரும் பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றிய காரணத்தால் முழுப் பாக்கிஸ்தானையும் ஆளும் தகுதியை அவாமி லீக் பெற்றது.

இதை அனுமதிக்க மேற்கு பாக்கிஸ்தான் இராணுவம் மறுத்து விட்டது. ஒவ்வாரு அலகிற்கும் தனித் தனித் பிரதமர் என்ற திட்டத்தை மேற்கு பாக்கிஸ்தான் தலைவர் சுல்பிக்கார் அலி புட்டோ முன்வைத்தார். இதைக் கிழக்கு பாக்கிஸ்தான் ஏற்க மறுத்தது.

நிகழ்ச்சிகள் படுவேகமாக மோதல் நிலைக்குச் சென்றன. 07 மார்ச்சு 1971ம் நாள் “ எங்கள் போராட்டம் எங்கள் தாயக சுதந்திரத்திற்காக” என்று ஷேக் முஜிபுர் றஹ்மான் பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேற்கு பாக்கிஸ்தான் துருப்புக்கள் பாக்கிஸ்தான் பயணிகள் விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் ஊடாகக் கொண்டு செல்லப்பட்டன.

இந்தத் துருப்புக்கள் சிவில் ஆடைகள் அணிந்திருந்தன. இந்த துருப்பு நகர்வு 10-13 மார்ச்சு 1971ம் நாட்களில் நடைபெற்றது. ஒப்பரேசன் சேர்ச்லைற் (Operation Searchlight) என்ற படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. சிவிலியன் மக்கள் படுகொலை நடத்தப்பட்டது. இன அடையாளத்தை அழிக்கும் நோக்கில் பாலியல் வன்முறை பரவலாக நடத்தப்பட்டது.

பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு எதிர்ப்புக்கள் தொடங்கப்பட்டன. முழு அளவு எதிர்ப்புப் போர் 26 மார்ச்சு 1971ம் நாள் தொடங்கியது. வங்க தேசத்தின் சுதந்திர நாளாக இன்று இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வங்கதேசச் சுதந்திரம் போர் 26 மார்ச்சு 1971ல் தொடங்கி 16 டிசம்பர் 1971 வரை நீடித்தது.

இந்த ஒன்பது மாத காலப் போரில் மூன்று மில்லியன் கிழக்கு பாக்கிஸ்தான் மக்கள் உயிரிழந்தனர். பத்து மில்லியன் மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். ஷேக் முஜிபுர் றஹ்மான் மார்ச்சு 26ம் நாள் கைது செய்யப்பட்டு மேற்கு பாக்கிஸ்தான் கொண்டு செல்லப்பட்டார்.

பாக்கிஸ்தான் இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்காக இராணுவத்தில் இருந்து வெளியேறிய வங்காளிகள், மாணவர்கள், பொது மக்கள் சேர்ந்த முக்தி பகினி (Mukti Bahini) என்ற போராட்ட அமைப்பு விடுதலைப் போர் தொடங்கிய 26 மார்ச்சு 1971ம் நாள் தொடங்கப்பட்டது.

முக்தி பகினிக்கு வேண்டிய பொருளாதார, ஆயுத தளபாட உதவிகள், இராணுவ ஆலோசனைகளை இந்தியா வழங்கியது. இந்திய உளவமைப்பு றா கூட்டாகச் செயற்பட்டது. இந்தியாவின் மேற்கு மாநிலங்களிலுள்ள விமான தளங்கள் மீது பாக்கிஸ்தான் விமானப் படை 03 டிசம்பர் 1971ம் நாள் தீடிர் குண்டு வீச்சு நடத்தியது.

இதைப் போர்ப் பிரகடனமாக எடுத்த பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு தனது இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானுக்கு அனுப்பியது. 03 டிசம்பர் 1971ல் தொடங்கிய இந்தியப் படை நடவடிக்கை 16 டிசம்பர் 1971ல் பாக்கிஸ்தான் படைகளின் சரணாகதியோடு முடிவுக்கு வந்தது. 93,000 படையினர் இந்தியப் படைகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு வங்க தேசம் என்ற புதிய நாடு தெற்கு ஆசியாவில் உருவாகியது. 1976 மே 05ம் நாள் தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பிரதமர் இந்திரா காந்தி சிறந்த ஆதரவு நல்கினார்.

இந்திரா காந்தி அகால மரணமடைந்த போது தமிழீழ மக்கள் தமது கையறு நிலையை உணர்ந்து கண்ணீர் சிந்தினர். வங்கதேசம் உருவாக உதவியதைப் போல் தமிழீழம் உருவாக இந்திரா காந்தி உதவுவார் என்ற நம்பிக்கை அந்த அப்பாவிகளிடம் இருந்தது.

வங்கதேசம் உருவாக உதவிய இந்தியா ஏன் தமிழீழம் உருவாக உதவக் கூடாது என்ற வாதத்தைப் பல முறை கேட்டிருக்கிறோம். இந்திரா காந்திக்கோ அவருடைய வாரிசு ராஜீவ் காந்திக்கோ தமிழீழம் அமைக்க உதவும் நோக்கம் ஒரு போதும் இருந்ததில்லை. வங்கதேசத்தையும் தமிழீழத்தையும் ஒப்பிடுவது தவறு. இது பற்றி பிறிதோர் இடத்தில் ஆய்வு செய்யலாம்.

www.Tamilkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.