Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்சண்டை- கொள்கைக்காகவா? கதிரைக்காகவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்சண்டை- கொள்கைக்காகவா? கதிரைக்காகவா?[/size]

முத்துக்குமார்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பிரச்சினை இன்று சந்திக்கு வந்துவிட்டது. கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு பின்னர் இது சந்திக்கு வருமென்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சி உறுப்பினர்கள் பலர் அதனை ஏற்கனவே கூறியிருந்தனர். தங்களினால் தேர்தலுக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் பொறுமை காத்தனர். தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும்போது ஏனைய கட்சிகளின் சுயமரியாதையைக்கூட கவனத்தில் எடுக்காமல் தமிழரசுக்கட்சி உதாசீனம் செய்தமை, சகித்துக் கொள்ள முடியாததே! இதனால் இந்தப் பிரச்சினையை சந்திக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு தெரிவு ஏனைய கட்சிகளுக்கு இருக்கவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை முதன்மைப்படுத்த வேண்டும், கட்சியாகச் செயற்படவைக்க வேண்டும் என்பதில் தமிழ்மக்களும், விருப்பம் கொண்டுள்ளார்கள். இதனால்தான் பதிவுசெய்யமாட்டோம் எனச் சொல்வதற்கு சம்பந்தன் தயாராக இருக்கவில்லை. அதற்காக முயற்சிக்கின்றோம் என்றே கூறி சமாளிக்கப் பார்த்தார். இன்று உள்ளூர் ஊடகங்கள் இதனை சற்று அடக்கி வாசித்தாலும் சர்வதேச தமிழ் இணையத்தளங்கள் இதனை விவாதப் பொருளாக்கியுள்ளன. பொங்குதமிழ் இணையத்தளம் இது தொடர்பாக ஒரு ஆரோக்கியமான விவாதத்தினை தொடக்கி வைத்திருக்கின்றது. உள்ளூர் ஊடகங்கள் இந்தியாவின் செல்வாக்கின் கீழ் இருப்பதால் சம்பந்தன் தலைமைக்கு எதிரான செயற்பாடுகளை விரும்பவில்லை போலத் தெரிகின்றது.

கொழும்பில் வெளிவரும் பிரதான ஊடகம் ஒன்று உடனடியாக உட்கட்சிப் பிரச்சனையை வெளியில் கொண்டுவர வேண்டாம் என ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. உட்கட்சி மட்டத்தில் தீர்க்கமுடியாததினால்தான் இவ்விவகாரம் சந்திக்கு வந்தது என்பது ஊடக ஆசிரியருக்கு தெரியாததல்ல. சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னர் விடயம் சந்திக்கு வரும் என்பது இயல்பானதே!

தமிழரசுக்கட்சி அல்லாத ஏனைய கட்சிகளின் நோக்கம் முதலில் இந்த விடயத்தை வெகுஜன மட்டத்தில் பேசுபொருளாக்கி அதன்மூலம் சம்பந்தன் தலைமைக்கு அழுத்தத்தினைக் கொடுத்து கட்சியை ஒரு கூட்டுத்தலைமையாக பதிவுசெய்வதே! கூட்டமைப்பினைப் பதிவு செய்யாமல் ஏனைய கட்சிகளுக்கு இருப்பில்லை. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இந்தக்கட்சிகளுக்கும், தமிழரசுக் கட்சிக்குமிடையே கொள்கைப் பிரச்சினை எதுவும் கிடையாது. வெறும் இருப்புப் பிரச்சனையே உண்டு. கொள்கை ரீதியாக கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளும் இந்தியாவின் விசுவாசிகள். 13வது திருத்தத்தை தீர்வாகவே ஏற்றுக்கொண்டவர்கள். தேசியம், சுயநிர்ணயம் என்ற இதுவரைகால, தியாகம் நிறைந்த அரசியல் கொள்கைகளை கைவிட்டவர்கள். சிங்கள அரசின் பச்சை ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்த முன்வராதவர்கள். ஏன் 13வது திருத்தத்திலுள்ள அதிகாரங்களைக் கூட காப்பற்றத் திராணியற்றவர்கள். திவிநெகும (வாழ்வின் எழுச்சி) சட்டமூலம் தொடர்பாக மாகாணசபையை இவர்கள் போர்க்களமாக்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் வெளிநடப்புச் செய்திருக்கவேண்டும். வெறுமனவே எதிர்த்து வாக்களித்துவிட்டு தமது கடமையை முடித்துக் கொண்டுள்ளனர்.

விதிவிலக்காக சிவசக்தி ஆனந்தன் சில போராட்டங்களை ஒழுங்குபடுத்தினர் என்பதை மறுக்கவில்லை. அவை தொடர்ச்சியான போராட்டங்களாக இல்லாமையினால் அவை போதுமானவையாக இருக்கவில்லை. மாவை, துர்க்கையம்மன் கோவிலில் நடாத்திய போராட்டமும், சிறீதரன் கிளிநொச்சியில் நடாத்திய போராட்டமும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போராட்டங்களை நடாத்தியமையால் தங்களது செல்வாக்கு குறைந்துவிடும் என பயந்து நடாத்திய போராட்டங்களே!

இந்தக் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சம்பந்தன் தலைமைக்கு அழுத்தத்தை கொடுத்துக்கொண்டேயிருக்கப் போகின்றன. அதில் சிறிய வெற்றிகளையும் கண்டுள்ளார்கள் என்றே கூறவேண்டும். மன்னார் ஆயர் இராயப்பு யோசேப், முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன், பேராசிரியர் சபா ஜெயராஜா போன்றவர்களும் தமிழரசுக்கட்சியை விட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினையே பலப்படுத்த வேண்டும் என்ற வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவையெல்லாம் ஒரு பொதுக்கருத்தாக வளர்வதற்கு வாய்ப்பினைக் கொடுத்துள்ளன.

ஆனால் சம்பந்தனோ அல்லது தமிழரசுக் கட்சியிலுள்ள ஏனையவர்களோ கூட்டமைப்பினைப் பதிவு செய்வதற்கு இலகுவில் முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று ஒரு தேசிய இயக்க அரசியலை நடாத்துவதற்கு தயாராக இல்லை. மாறாக பாராளுமன்றக் கதிரைக்கான அரசியலை நடாத்துவதற்கே தயாராக உள்ளனர். கூட்டமைப்பினை பதிவு செய்தால் ஏனைய கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்கவேண்டும், அதற்குரிய பொறிமுறைகளை உருவாக்கவேண்டும், நிதிக்கணக்கு விபரங்களை பொதுவாக்கவேண்டும், சம்பந்தனதும், சுமந்திரனதும் தனித்த ஓட்டங்களை நிறுத்தவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் தேர்தல்களில் வெல்வதற்கு தாங்களே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் நிலை ஏற்படும். கிழக்கு மாகாணசபை வேட்பாளர் தெரிவின்போது கிள்ளித்தெளித்த மாதிரி ஏனைய கட்சிகளுக்கு தெளிக்கமுடியாது. அவ்விடயத்தில் தாராளம் காட்டவேண்டி ஏற்படும்.

இவையெல்லாம் தமிழரசுக் கட்சிக்காரருக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. பிரதான தேர்தல் மாவட்டங்களான யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு என்பவற்றில் தமிழரசுக்கட்சி தொடர்பாக பெரிய நம்பிக்கை மக்களுக்கு கிடையாது. ஒரு ஐக்கியப்பட்ட குரல் தேவை என்பதற்காக வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கின்றனர். ஏனைய கட்சிகள் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும்போது அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பு உண்டு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்கள் மாவையும், சம்பந்தனும், செல்வராஜாவும் மட்டுமே. ஏனையவர்கள் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொதுவேட்பாளர்களுமே. தற்போது பொது வேட்பாளர்களை தமிழரசுக் கட்சி தனக்குள் உள்ளீர்த்துள்ளது.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஆறுபேரில் நான்கு பேர் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எனவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைக் கட்சியாகப் பதிவு செய்வதால் தமிழரசுக் கட்சி தன்னகங்காரத்துடன் செயற்படுவது தடுக்கப்படுவதோடு தேர்தலில் வெற்றி வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறையப்பார்க்கும். இவற்றிற்கெல்லாம் தமிழரசுக் கட்சியின் மூத்தவர்கள் சம்மதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

தாங்கள் ஆயுதம் தூக்காதவர்கள் என்ற பெருமிதமும் தமிழரசுக் கட்சிக்காரருக்கு உண்டு. ஆயுத இயக்கங்களில் தவறுகள் இருக்கலாம். அவர்களின் தியாகங்களை ஒருவரும் குறைத்து மதித்துவிடமுடியாது. கனவான் அரசியலை மட்டும் நடாத்தினால் நல்ல பெயர் கேட்பதில் பெரிய கஸ்டங்கள் இல்லை. போராடுபவன் தான் தவறுசெய்ய முடியும். சும்மா இருப்பவர்கள் தவறுகள் செய்ய முடியாது. தமிழரசுக் கட்சிக்காரர்கள் சும்மா இருப்பவர்களே! தமிழ்த்தேசிய அரசியல் சர்வதேச மட்டத்திற்கு வந்தது ஆயுதம் தரித்த போராளிகளினால் தான் என்பதை எவரும் நிராகரித்துவிட முடியாது. அவர்களின் தியாகத்தில் சம்பந்தன் தலைமை குளிர்காய்கின்றது என்பதே நடைமுறை உண்மை.

சம்பந்தன் தலைமைக்கு கொடுக்கின்ற அழுத்தங்கள் வெற்றியளிக்காவிட்டால் ஏனையகட்சிகள் அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டியிருக்கும். அதாவது அடுத்த கட்டம் என்பது அக்கட்சிகள் எல்லாம் இணைந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதே! ஆனந்தசங்கரி தலைமையில் பதிவு செய்யும் நோக்கமும் அவர்களுக்கு உண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தை அவர்கள் முன்னிலைப்படுத்த முனைவர். ஆனந்தசங்கரியினை கூட்டமைப்புடன் இணைத்தது இந்தியாதான். ஆனால் சம்பந்தன் தலைமைக்கு அதுவே தலைவலியாகப் போய்விட்டது. புலிகள் காலத்தில் சம்பந்தன் ஆனந்தசங்கரியினைப பழிவாங்கினார். தற்போது ஆனந்தசங்கரி சம்பந்தனைப் பழிவாங்க முற்படுகின்றார்.

ஆனால் ஏனைய கட்சிகள் கொள்கைவழி பிரியாமல் வெறுமனவே பதிவு செய்வது என்ற ஒன்றிற்காக மட்டும் பிரிவது அவர்களுக்கு வெற்றியைத் தரும் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தமிழ் அரசியல்வெளிகளைப் பொறுத்தவரை மூன்று வெளிகள்தான் உண்டு. மிதவாத அரசியல்வெளி, பிரக்ஞைபூர்வ அரசியல்வெளி, மூன்றாவது சலுகை அரசியல்வெளி என்பவையே அவையாகும். இவற்றில் மிதவாத அரசியல்வெளியினை தமிழரசுக் கட்சி பிரதிபலிக்கின்றது. பிரக்ஞைபூர்வ அரசியல் வெளியினை கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பிரதிபலிக்கின்றது. சலுகை அரசியல் வெளியினை டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், பிள்ளையான் தலைமையிலான தமி;ழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் பிரதிபலிக்கின்றன. இந்த மூன்றுவெளிகளில் ஒன்றில் இணைந்தால்தான் ஏனைய கட்சிகளினால் தமது இருப்பைக் காப்பாற்றமுடியும். தனித்து தமிழரசுக் கட்சிக்கு போட்டியாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என இயங்கினால் மிதவாத வாக்குவங்கியில் சிறிய வெடிப்புகளை ஏற்படுத்தலாமே ஒழிய வெற்றியை ஏற்படுத்த முடியாது.

சலுகை அரசியல்வெளியிலும் இவர்கள் இணையமுடியாது அது ஒரு சிறியவெளியாக மட்டும் இருப்பதோடு இவர்கள் கருதுகின்ற எதிர்ப்பு அரசியலையும் அங்கு மேற்கொள்ள முடியாது. இவ் அரசியல் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிற்குள்ள அனுபவமும் இவர்களுக்கு கிடையாது.

இந்நிலையில் இவர்களுக்குள்ள ஒரே தெரிவு கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து கொள்வதுதான். அவ்வாறு இணைவதற்கு பலவிடயங்களுக்கு இவர்கள் தயாராகவேண்டும். முதலில் கொள்கைரீதியாக மாற்றத்திற்குள்ளாகவேண்டும். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இருதேசங்கள், ஒரு நாடு என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இவர்களுக்கு அதனை ஏற்பது இலகுவாக இருக்கப்போவதில்லை இக்கட்சிகள் அனைத்தும் இந்திய விசுவாசக் கட்சிகளாக இருப்பதனால் 13வது திருத்தத்திற்கு மேலாக ஒரு அரசியலை நடாத்த இவர்களால் முடியாது. இக்கட்சிகள் மிதவாத அரசியல் வெளிக்குள்ளும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் இழுத்து பெரிய வெடிப்பு ஒன்றினை உருவாக்கவே விரும்புகின்றன. ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதற்கு தயாராக இல்லை. மிதவாத அரசியல் வெளிதான் தனது அரசியல் என்றால் கஜேந்திரகுமார் கூட்டமைப்பிலிருந்து பிரிந்திருக்கமாட்டார். கூட்டமைப்பிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார்.

இதுவிடயமாக கூட்டமைப்பின் ஏனைய கட்சியினர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் பேசியபோது அவர்கள் மூன்று விடயங்களை தெளிவாக கூறியிருக்கின்றனர். ஒன்று இருதேசக் கோட்பாட்டை நீங்கள் ஏற்கவேண்டும், வடமாகாணசபைத் தேர்தலில் கட்சி ரீதியாக போட்டியிடக்கூடாது. ஆனந்தசங்கரியும், சித்தார்த்தனும் போருக்கு ஆதரவளித்தவர்கள் - அவர்கள் இருக்கின்ற கூட்டமைப்பிற்கு எம்மால் வரமுடியாது. நீங்கள் இருதேசக் கோட்பாட்டையும், வடமாகாண சபைத்தேர்தல் தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டையும் ஏற்பீர்களானால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்றும் இணைந்து செயற்படுவது பற்றி யோசிக்கலாம் எனக் கூறியிருக்கின்றனர். இவ்வாறான முடிவுகளை எடுப்பது ஏனைய கட்சியினருக்கு சிரமமாக இருக்கும் என்பதால் அவ்விணைவிற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு

இந்நிலையில் சம்பந்தன் தலைமையுடன் ஒரு சமரசத்திற்கு செல்வதே இவர்களது தெரிவாக இருக்கும். சம்பந்தனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் இவர்களுடன் செல்வதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. ஏதாவது சில சலுகைகளைக் கொடுத்து தன்னுடன் வைத்திருக்கவே பார்ப்பார். எனவே அழுத்தம் கொடுப்பதற்கு அப்பால் இவர்களது நடவடிக்கைகள் மேலே செல்லாது என்றே எதிர்பார்க்கலாம்.

தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற ஒடுக்குமுறை புறத்தே இருந்து வருவதால் தமிழ்மக்களின் அனைத்துப் பிரிவினரையும் இணைத்த ஐக்கிய முன்னணி ஒன்று அவசியம்தான். அது கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணியாக இருக்கவேண்டுமே தவிர கதிரைக்கான ஐக்கிய முன்னணியாக இருக்கமுடியாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், செந்திவேல் தலைமையிலான மாக்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியும் ஒரு ஐக்கிய முன்னணியாக செயற்படுகின்றார்கள். இது சமத்துவமான, கொள்கை ரீதியான ஐக்கிய முன்னணி.

இவ்வாறான ஐக்கிய முன்னணிதான் எதிர்காலத்தில் தேவை.

http://www.pongutham...82-cd81a84bef08

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.