Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரில்லா ஈழத்து அரசியல் நாவல்கள் - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4][size=6]கொரில்லா ஈழத்து அரசியல் நாவல்கள் [/size] [/size]

[size=4]யமுனா ராஜேந்திரன்

Yamuna.jpg [/size]

[size=4]“ஒரு யுத்தச் சூழல் மக்கள் வாழ்நிலையின் சகலதளங்களிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பிரதிபலிப்புகள் எதிர்வினைகள் என்பன பற்றிய அச்சமில்லாத விசாரணைக்கான ஒரு வெளி தேவையாகிறது. விடுதலைப் போராட்டமும். வீரமும் பெருந்தியாகங்களும் திடசித்தமும் அரசியல் நிலைமைகளின் ஒரு பரிணாமமாய் அமைந்த நிலையில் ஈவிரக்கமற்ற கொலைகளும் வதைமுகாம்களும், சர்வாதிகார அகங்காரமும் மறுபுறம் செழிக்கலாயின. மாறுபட்ட அபிப்பிராயங்கள், மாற்றுக் கருத்துக்கள் என்பன சகித்துக் கொள்ள முடியாதனவாகிவிட்டன. விடுதலைப் போராட்டத்தின் நீண்ட பயணத்தில் இவை தடைக்கற்கள் எனக் கருதப்பட்டு இவற்றை அழித்தொழிப்பது இன்றியமையாத பணியாக்கப்பட்டது. [/size]

[size=4]

சமூகத்தின் புரட்சிகரமான மாற்றங்களின்போது இத்தகைய விமர்சனங்களுக்கு காது கொடுத்துப் பதிலளிக்க அவகாசமில்லை என்று சொல்லப்படுவதைக் கேட்பது சரித்திரத்தில் நமக்கு மிகவும் பழகிப்போன விவகாரம். இத்தகைய ஒரு கருத்து நிலைப்பாட்டால் ஏற்பட்ட சமூக அனர்த்தங்கள், உயிர் அழிப்புக்கள் எவ்வளவு என்பதை நாமறிவோம். கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையே வேறு நிறங்கள் இல்லை என்ற அதிகாரபீட வரையறைகள், வண்ணங்களில் கோலம் காட்டும் கலைஞனுக்கு உதவப்போவதில்லை. இந்த மண்ணில் உயிர் வாழ்வது சாத்தியமில்லை என வெளியேறினோர் கணக்கற்றோர். செழியனின் Ôஒரு மனிதனின் நாட்குறிப்Õபிலிருந்து ஒரு துகள் மட்டுமே. குமார் மூர்த்தியின் முகம் தேடும் மனிதன் இன்னுமொரு பொறி. தீட்சண்யமான, துருவித் துருவிக் கேள்விகள் கேட்கும் இலக்கிய நெஞ்சிற்கு மொன்னைத்தனமான பதில்கள் உரஞ்சேர்ப்பதில்லை. மிகப்பலர் மௌனிகளாகினர். சமூகத்தை அதன் உள்ளிருந்தே விசாரணைகள் மேற்கொள்ளும் வாயில்கள் அடைபட்டுவிட்டன. இத்தகைய சூழலில் கலைஞனும் சிறை வைக்கப்பட்டவனாகிறான். [/size]

[size=4]

கடந்த இருபது ஆண்டுகளாக ஈழத்தின் உரிமைப் போராட்ட இயக்கம் உலக அரங்கில் நன்கு கவனம் பெற்றுவிட்டபோதும் இந்த மாற்றங்கள், பிரச்சினைகளை மையமாகக் கொண்ட சிறந்த நாவல்கள் வெளிவரவில்லை என்ற அவதானிப்பு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதுதான். ஈழத்தின் இன்றைய சமூக அரசியல் மாற்றங்களை உள்வாங்கி அவற்றைச் சரித்திரப் பிரக்ஞையுடன் கிரகித்து இந்த வரலாற்று அனுபவங்களைத் தனது சுயமான வாழ்வின் தளத்தில் உணர்ந்த வெளிப்பாடு கொள்ளும் எழுத்துக்காக இன்னும் பலகாலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.” [/size]

[size=4]ஆறு ஆண்டுகளின் முன்பாக ஈழத்து அரசியல் நாவல் (அம்ருதா பதிப்பகம் : சென்னை, 2006) எனும் எனது குறுநூலுக்காக விமர்சகர் மு.நித்தியானந்தன் எழுதிய முன்னுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். [/size]

[size=4]

ஈழம் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் அடிப்படையில் நடைபெற்ற ஆயுத விடுதலைப் போராட்டமும் அதனது மானுட விளைவுகளும் குறித்து எழுதப்பட்ட ஈழ நாவல்களையே நான் இங்கு எனது மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்கிறேன். ஆயுத விடுதலை இயக்கங்களின் தோற்றம், அதனது இலக்குகள், இலட்சியங்கள், அவைகளுக்கு இடையிலான முரண்பாடுகள், இந்த விடுதலை இயக்கங்களுக்கும் பரந்துபட்ட வெகுமக்களுக்கும் இருந்த உறவுகள், முரண்கள் போன்றன இந்த நாவல்களில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பது எனது முதலாவது அக்கறைக்குரிய விஷயமாக இருக்கின்றது. [/size]

[size=4]ஈழ விடுதலைப் போராட்டம் மரபான ஈழ சமூகத்தில் என்னவிதமான மாற்றங்களை, உடைவுகளை, அழிவுகளை, ஆக்கங்களை விட்டுச் சென்றிருக்கின்றன என அவதானிப்பது எனது அக்கறையாக இருக்கின்றது. அழகியல் மற்றும் அரசியல் என இரு தளங்களிலும் இந்த நாவல்களின் முக்கியத்துவம் என்ன என மதிப்பிடுவதும் எனது அக்கறையாக இருக்கிறது. [/size]

[size=4]74 துவக்கம் முதல் எழுபதுகளின் இறுதி வரையிலான காலகட்டம் பல்வேறுபட்ட அரசியல் இலட்சியங்கள் கொண்ட ஆயுத விடுதலை இயக்கங்களின் தோற்றக் காலகட்டம். ‘லங்கா ராணி’ 1978 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிறது. ஈழ ஆயுத விடுதலைப் போராட்டம் குறித்த முதல் நாவல் ‘லங்கா ராணி’ என்று சொல்ல முடிகிறது. Ôலங்கா ராணிÕயைத் தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகப் போராளியான கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் வெளியாகிறது. [/size]

[size=4]திருப்படையாட்சி(ஜூன் : 1998), வினாக்காலம்(டிசம்பர் : 1998), அக்னி திரவம்(ஆகஸ்ட்: 2000), உதிர்வின் ஓசை (டிசம்பர் : 2001), ஒரு புதிய காலம்(டிசம்பர் : 2001) ஆகிய தலைப்புகள் கொண்ட ஐந்து பாகங்களால் ஆன, ஆயிரத்து இருநூற்று நாற்பது பக்கங்கள் கொண்ட, 1981 முதல் 2001 வரையான இருபத்தொரு ஆண்டுக்கால ஈழப் போராட்ட வரலாற்றைப் பேசும் நாவல் ‘கனவுச் சிறை’. 1800க்குப் பின் துவங்கி, 1975க்குப் பின்னும், 1981க்கு முன்னுமான காலம் பற்றிய இவருடைய யுத்தத்தின் முதலாம் அத்தியாயம்(2003) எனும் பிறிதொரு நாவலை ஒருவர் ‘கனவுச் சிறை’ மகாநாவலுக்கு முன்பாக வாசித்தலும் நல்லது என நினைக்கிறேன். [/size]

[size=4]

govindan_CI%20copy.jpg [/size]

[size=4]ஷோபா சக்தியின் ‘கொரில்லா’(2001) மற்றும் ‘ம்’ (2004), செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’(2010) ‘கசகறணம்’(2011) போன்றன தொடர்ந்து வெளியாகிய நாவல்கள். 2012 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் செயந்தனின் ÔஆறாவடுÕ வெளியாகிறது.

ஈழத் தமிழர்களால் எழுதப்பட்ட நான்கு ஆங்கில நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. சியாம் செல்வதுரையின் ‘ஃபன்னி பாய்’ Funny Boy நாவல் 1994 ஆம் ஆண்டு வெளியாகிறது. தொடர்ந்து அ.சிவானந்தனின் 'வென் மெமரி டைஸ்' When Memory Dies (1997), வாசுகி கணேசானந்தனின் 'லவ் மேரேஜ்' - Love Marriage(2008), 'சாந்தனின் விர்ல் வின்ட்' - Whirl Wind-(2010) போன்ற நாவல்கள் வெளியாகின்றன. [/size]

[size=4]

தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான பன்னிரண்டு நாவல்களை (தேவகாந்தனின் நாவல்களில் Ôவினாக்காலம்Õ நாவலை மட்டுமெ இங்கு எடுத்துக் கொள்கிறேன்) எனது மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்கிறேன். இந்தப் பன்னிரண்டு நாவல்களை எழுதியிருக்கிற பதினோறு படைப்பாளிகளில் சியாம் செல்வதுரை கொழும்பில் பிறந்து வளர்ந்தவர். அவரது 'ஃபன்னிபாய்' நாவல் முழுமையாகத் கொழும்புத் தமிழர்களின் உணர்வு நிலையிலிருந்தே ஈழப் பிரச்சினையைப் பார்க்கிறது. பிற பத்து படைப்பாளிகளும் வடகிழக்கைத் தமது தாயகமாகக் கொண்டவர்கள். [/size]

[size=4]

யாழ்ப்பாண மேயர் துரையப்பா தாக்குதல் வழக்கில், ஜூன் 5, 1974 ஆம் ஆண்டு இலங்கை காவல்துறையினரிடம் அகப்படாமல் ஸயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்ட உரும்பிராய் சிவகுமாரனது மரணம் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் துவக்கம் எனலாம். சிவகுமாரனின் மரணம் இளைஞர்களிடம் தோற்றுவித்த ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கான வேட்கை என்பது, 1977 ஆம் ஆண்டு ஜூலை கொழும்பு இனக்கலவரத்தையடுத்து அகதித் தமிழர்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வரும் லங்கா ராணி கப்பலில் பயணம் செய்யும். மூன்று இளைஞர்களிடமும், ஒரு மலையகத் தமிழ் இளம்பெண்ணிடமும் எவ்வாறு ஆயுதவிடுதலை இயக்கமொன்றின் தோற்றத்துக்கான அவாவாக எழுகிறது என்பதனை ஈழப்புரட்சி அமைப்பு சார்ந்த அருளரின் 'லங்கா ராணி' நாவல் பதிவுசெய்கிறது. [/size]

[size=4]கவிஞர் செல்வியைப் போலவே விடுதலைப்புலிகளால் கோவிந்தனும் ‘காணாமல் போக’ செய்யப்பட்டார். 1985 ஆம் ஆண்டு வெளியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உட்கட்சிப் போராட்டம் பற்றிய கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' நாவலை விடுதலைப்புலிகள் பரவலாக விநியோகித்தார்கள். கோவிந்தனின் நாவல் வெளியான காலத்தின்பின், சில மாதங்களில் 1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைக் கழகத்தையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியையும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தையும் பிற விடுதலை அமைப்புகளையும் விடுதலைப்புலிகள் தடைசெய்தார்கள். [/size]

[size=4]

விடுதலை அமைப்புகளினுள் தேசியவாதிகள்-அராஜகவாதிகள்- மார்க்சியர்களுக் கிடையிலான போராட்டம் முனைப்புப் பெற்று வந்த காலம் அது. இந்த அமைப்புகளில் நிலவிய குறைந்தபட்ச ஜனநாயகமும், அதனை ஆதரிக்கிற போராளிகளுமே இந்த உட்கட்சிப் போராட்டங்கள், இயக்கங்களின் உள்ளும் வெளியிலும் நடக்க, தெரியவரக் காரணமாக இருந்தார்கள். [/size]

[size=4]

போராளிகள் உருவாகி வந்த சமூகச் சூழல், விடுதலை நோக்கிய அவர்களது புனிதமான அற உணர்வுகள், பெண்களுக்கிடையில் உருவாகி வந்த போராட்ட உணர்வு, ஆண்மைய எதிர்ப்புணர்வு, பெண்கள் இயக்கத்தின் பகுதியாக ஆன பரிணாம வளர்ச்சி என விடுதலைப் போராட்டம் எனும் பிரக்ஞை ஒரு சமூகம் முழுவதும் தழுவி வருவதை கோவிந்தனின் நாவல் வெகு இயல்பாகச் சொல்லிக் கொண்டு போகிறது. [/size]

[size=4]சங்கர் பயிற்சிக்காகத் தமிழகம் போய்விட்டான். அவன் காதலித்த பெண்ணான நிர்மலாவுக்கு வீட்டில் நெருக்கடி. வீட்டைவிட்டு வெளியேறி சங்கர் வீட்டுக்கு வந்துவிட நினைக்கிறாள் நிர்மலா. இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்யவும் விரும்புகிறாள். சங்கரின் தகப்பன் நேர்மையும் இலட்சியப் பிடிப்பும் கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் ஊழியர். எளிமையான வாழ்க்கை அவருடையது. நிர்மலா ஒப்பீட்டளவில் வசதியாக வாழ்ந்த பெண். தமது வீட்டுக்கு வந்ததால் பிற்பாடு அவள் தனது வீட்டின் சௌகரியங்களை இழந்துவிட்டதாகக் கருதக்கூடாது என அவர் நினைக்கிறார். நகைகள், பணம் ஏதுமற்று உடுத்திய புடவையுடன் தனது வீட்டுக்கு அவள் வரவேண்டும் எனவும், ஒரு மகளைப் போல அவளைத் தமது குடும்பம் பார்த்துக் கொள்ளும் எனவும் அவர் நிர்மலாவிடம் சொல்கிறார்.[/size]

[size=4] நிர்மலாவின் அப்போதைய மனநிலையைப் பற்றி கோவிந்தன் அப்போது எழுதுகிறார்: அந்த வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாம் இப்பொழுது பிரகாசமாகவும் சுத்தமாகவும் இருப்பது போலவும், அவைகளை உடனடியாகத் தொட்டுப் பார்க்க வேணடும் போலவும் ஒரு இன்பக் கிளுகிளுப்பு அவளுக்கு ஏற்பட்டது ('புதியதோர் உலகம்' : பக்கம் 129). நாவல் இப்படியான எழுதுமுறையால்தான் ஜீவனுள்ள வாழ்வைப் பற்றிப் பிடித்ததாக ஆகிறது. நாவல் முழுக்கவும் இத்தகைய மனிதர்களது மனநுட்பத்தை கோவிந்தன் பதிவு செய்திருக்கிறார். [/size]

[size=4]

எண்பதுகளில் இயக்கங்களின் தோற்ற நிலைகளிலேயே இந்த அராஜகங்களுக்கு எதிரான போராட்டங்களை இயக்கங்களில் இருந்து மார்க்சியவாதிகள் துவங்கிவிட்டிருந்தார்கள். [/size]

[size=4]“நாம் சிங்கள முதலாளித்துவ அரசின் அராஜகங்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தால் போதாது. தமிழீழ விடுதலை அமைப்பிலும் உள்நுழைந்து வரும் அராஜகப் போக்குகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.அராஜகமும் ஒடுக்குமுறையும் எந்த ரூபத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராட வேண்டும். தன்னளவில் இந்தக் கயமைகளை வைத்துள்ள எந்த அமைப்பாலும் தமிழீழ மக்களுக்கு விமோசனத்தை வழங்க முடியாது ('புதியதோர் உலகம்' : பக்கம் 243) என்கிறார் கோவிந்தன். [/size]

[size=4]இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் ஸ்தாபனம் உடையப்போவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால் பிற்போக்கு அராஜகவாதிகளுடன் முற்போக்கு மார்க்சியவாதிகள் நீண்ட காலத்திற்கு தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒத்துழைக்க மாட்டார்கள். அதுவும் தேசியவிடுதலைப் போராட்டம் முடிவுற்றதும் என்றோ ஒரு நாள் புரட்சிகர சக்திகள் இந்தப் பிற்போக்கு அராஜகவாதிகளிடமிருந்து பிளவுபடவே செய்வார்கள். அதை யாரும் தடுக்க முடியாது. அந்த வேளையிலும் நீங்கள் பிரிந்து செல்பவர்களுக்கு மரணதண்டனை விதிப்பதுதான் உங்கள் தீர்ப்பாக இருக்கப் போகிறதா அல்லது பிரிந்துபோகும் உங்களுக்கு மரணதண்டனை வழங்குவது நியாயம் என்று ஒத்துக்கொள்ளப் போகிறீர்களா? இதுவெல்லாம் சுத்த அராஜகம். சுயமாக ஒருவன் அரசியலில் ஈடுபடும் சுதந்திரத்திற்காக நாம் ஆரம்பத்திலிருந்தே போராடி வந்திருக்கிறோம். கழகம் அந்தப் போராட்டத்திற்கூடாகவே வளர்ந்து வந்த ஸ்தாபனம். ஆனால் இன்று நீங்கள் அந்த சுதந்திரத்தை அங்கீகரிக்க மறுத்து குரல் எழுப்புவது இந்த மத்தியக்குழு தனது ஜீவனை இழந்துவிட்டது என்பதையே காட்டுகிறது ('புதியதோர் உலகம்' : பக்கம் : 236) எனவும் சொல்கிறார் கோவிந்தன். [/size]

[size=4]

1985 முதல் 1987 வரையிலான மூன்று ஆண்டுகள் குறித்த கதை 'வினாக்காலம்' நாவல் என்கிறார் தேவகாந்தன். இந்தக் காலகட்டம் பற்றிப் பேசிய நாவல்களின் கதை என்பது பெரும்பாலும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டவர்களின் பார்வையில், போராளிகளின் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. விவரணங்கள் என்பதும் அரசியல் கேள்விகளில் இருந்துதான் கிளர்ந்தெழுகிறது. தேவகாந்தனின் 'வினாக் கால'த்தின் கதை என்பது நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடாத, போராட்ட நடைமுறைகளால் பாதிப்புற்ற, நாட்டுக்குள் இடம்பெயர நேர்ந்த, நாடுவிட்டு தமிழகத்திற்குப் புலம் பெயர நேர்ந்த மாந்தர்களின் பார்வையில் சொல்லப்படுகிறது. [/size]

[size=4]நயினாதீவைச் சார்ந்த ராஜி என்கிற ராஜலட்சுமி என்ற இளம் பெண்ணின் கதையே நாவலாக விரிகிறது. ராஜியின் ஒரு திருமண முயற்சி தோல்வியடையும் நிலையில், இன்னொரு திருமண முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது திருமணப் பதிவு நிகழ்ந்த பின் மணமுடிக்க வேண்டிய சுதன் ராஜியிடம் சொல்லாது இயக்கமொன்றில் சேர்ந்து இந்தியா போய்விடுகிறான். குறுகிய காலத்திலேயே இயக்கத்திலிருந்து வெளியேறும் அவன், இயக்கத்திற்காகத் தான் நடத்திய வங்கிக் கொள்ளைப் பணத்தைக் கையாடல் செய்துவிட்டு, ஐரோப்பாவுக்குப் போய்விடுகிறான். மும்பை சென்று கடத்தில் தொழில் ஈடுபடும் ராஜியின் தம்பியாகிய ராஜேந்திரன் சுதனுடைய வழிகாட்டுதலில் தொழில் செய்கிறான். தனக்குக் கணவனாக வேண்டியவனின் நடத்தை சுயநலமாகவும், தேசத்துரோகமாகவும் ஆனநிலையில் அவனோடு ஜெர்மனிக்குப் போவதனை மறுத்துவிடும் ராஜி, போராளிகளுக்குப் படகோட்டி வேலை செய்யும் மகேசிடம் தன்னைத் தமிழகத்தின் அகதி முகாமொன்றில் சேர்த்துவிடுமாறு கூறுகிறாள். ராஜி தன்னுடன் வரமறுத்துவிட்ட நிலையில் ஷீலாவைக் கூட்டிக் கொண்டு ஜெர்மன் போகிறான் சுதன். சுதனுடன் ராஜியை அனுப்புவதற்காக ஈழத்திலிருந்து படகில் தமிழகம் வரும் ராஜியின் தாய் ராஜியின் மறுப்பறிந்து, அறுதியில் கனடாவிலுள்ள தனது இளையமகளின் பிரசவம் பார்க்கப் போவதென முடிவெடுக்கிறாள். [/size]

[size=4]

போராட்டம் என்பது மாலை நேர விருந்தல்ல என்பார் மாவோ. பேரழிவும் உறவுச் சிதைவும் மரபுகளின் அழிவும் இடப்பெயர்வும் இரத்தச் சிந்துதலும் நிறைந்ததுதான் போராட்டம். இந்தப் பின்னடைவுகள், உயிரழிவுகள், பேரழிவுகள் அனைத்தும் போராட்டத்தின் தார்மீக பலத்தில், பின்னர் அமையப் போகும் சமூகத்தின் இலட்சிய பலத்தில்தான் நிரவப்படுகிறது. போராட்டத்தின் தார்மீகமும் இலட்சியமுமே அழிந்து போகுமானால், அதுவும் போராட்டத்தை முன்னெடுத்தவர்களே அதனை அழிப்பார்களானால் என்ன நேரும் எனும் கேள்வி போராட்டத்தை நேசித்த அமைப்புக்குள் இருக்கும் மனிதர்களுக்குள் மட்டும் எழுவதல்ல, போராட்டத்தை ஆதரித்த ஆயிரமாயிரம் மனிதருக்குள்ளும் இக்கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விதான் ராஜிக்கும் எழுகிறது. [/size]

[size=4]

ஓரு சமூகத்தின் வாழ்நிலை என்பது, அதனது மரபுகள் என்பது ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் விரிசல்கள் தோன்றும்போது அந்த அமைப்பும் விரிசலுக்கு உள்ளாகிறது. கறாரான இலக்குகளை வரித்துக் கொண்ட மனிதர்கள் தம்மை இறுக்கமாக்கிக் கொள்வதன் மூலம் விரிசலை, நொறுங்கிப் போவதைத் தவிர்க்க முனைகிறார்கள். கொலை, கொள்ளை போன்ற பொது சமூகத்தினால், நிராகரிக்கப்பட்டவை இப்போது அவர்களுக்கு வெறும் அறம் சார்ந்த கேள்விகள் மட்டுமல்ல, அரசியல் கேள்விகள். வங்கிக் கொள்ளை இப்போது தமது இலட்சியப் பயணத்தின் ஒரு பகுதி. போதை மருந்து விற்பது இப்போது தமது இலட்சியத்தின் ஒரு பகுதி. தமது இயக்கத்தின் நிதி ஆதாரங்கள் என எவரும் இதனை நியாயப்படுத்திவிட முடியும். [/size]

[size=4]

பொதுசமூகத்தின் அறம் மட்டுமே இங்கு மீறப்படவில்லை, ஒரு அமைப்பின் சட்டமுறை என்பதும் இங்கு மீறப்படுகிறது. பொது சமூக அறம், அரசின் சட்டமுறை என்பதுதான் சிவில் சமூக அமைப்பைக் குலையாமல் காக்க முனைகிறது. போராட்டத்தின் செயல்போக்கில் இவை இரண்டும் மீறப்படுகிறது. வெகுமக்கள் சமூகமும் இதனை அங்கீகரிக்கத் துவங்குகிறது. [/size]

[size=4]

ஓற்றைக் கொலை என்பது குற்றமாக இருக்க, தொழில் முறையிலானதாக எண்ணிக்கையில் அதிகமானதாக அது ஆகிறபோது அது போர்முனையின் பகுதியாக ஆகிவிடுகிறது. சட்டமீறல் என்பது நியாயப்படுத்தப்படுவதற்கான ஏது உருவாகிற போது, உயிர்வாழ்தலுக்கு, தப்பித் திரிவதற்கு, தன்னைக் காத்துக் கொள்வதற்கு, இதனது இழிந்த வடிவமாகத் தனது சுயநலத்திற்கு, சட்டமீறல், மரபு மீறல், அறமீறல் என அனைத்துமே ஒப்புக்கொள்ளத்தக்கது எனும் தர்க்கமனம் உருவாகிறது. [/size]

[size=4]விடுதலைப் போராட்டத்தின் அறத்திலும் தார்மீகத்திலும் இலக்கிலும் தெளிவு கொண்டவர்கள் மட்டுமே இந்தக் குலைவிலிருந்து தம்மை மீட்டுக் கொள்ளும் யத்தனத்தைக் கொண்டிருப்பார்கள். அது அல்லாதவர்கள் ஆன்மா அழிந்த மனிதர்களாக, நிரந்தர அழிவுமனம் கொண்டவர்களாக, இழிந்த வாழ்நிலையைக் கொண்டாடுபவர்களாக ஆவார்கள். அதுவும் இலக்கினை ஒரு போராட்டம் தவறவிடுகிறபோது அச்சமூகத்தின் போராளிகளும் வெகுமக்களும் பெருமளவில் இந்தச் சுழலுக்குள் வீசப்படுவார்கள். [/size]

[size=4]

போராட்டத்தின் உடன் விளைவான இடப்பெயர்வு, உறவுச் சிதைவு, உறவு இழப்பு போன்றவற்றுடன், அதன் பாதிப்புக்குள்ளான மக்கள் தமது உயிர் வாழ்தலுக்கென, தப்பித்திரிய, அறமீறல், மரபு மீறல், சட்டமீறல் என அனைத்தையும் தமது அன்றாட வாழ்வு நடவடிக்கையாகக் கொண்டுவிடுகிறார்கள். இந்த நிலையில் எவரும் எவரையும் நம்புவதில்லை. எவரும் எவரையும் சார்ந்திருக்கவும் முடிவதில்லை. இருத்தலுக்கான மிருகநிலைக்கும் பிரக்ஞையுட னான உயிர்வாழ்தலுக்கும் இடைப்பட்ட நிலை இது. இந்த மானுட நிலையை வினாக்களால் மட்டுமே அவர்கள் கடந்து போகும் காலகட்டம் பற்றிய நாவல்தான் தேவகாந்தனின் 'வினாக்காலம்'. [/size]

[size=4]ரொக்கிராஜ் என்கிற, கொரில்லா என்கிற, அந்தோணியின கதை ஷோபா சக்தியின் 'கொரில்லா' நாவலாக ஆகியிருக்கிறது. விடுதலைப் போராட்டம் சார்ந்த எழுத்துக்களுக்கு தேசவிடுதலைச் மூகங்களிலும் ஈழவிடுதலைப் போராட்ட நாவல்கள் எனினும் கூட சில முன்னோடிகள் உண்டு. நாட்குறிப்புக்கள் என்பது போராளிகளின் எழுத்தில் ஒரு பிரதான வகையினதாகும். கொழும்பில் தலைவருக்கு எழுதிய கடிதத்தைச் சதா பாக்கெட்டில் வைத்து அலைகிற ரொக்கிராஜ் என்கிற அந்தோணி சித்திரவதைகளிலிருந்து தப்பி பிரான்சுக்கு வந்துவிடுகிறார். தினம் தினம் பாக்கெட்டில் தலைவருக்கான கடிதத்தை வைத்துக் கொண்டு கொழும்பில் திரிகிற ஒருத்தர் உயிர்தப்பி வருவதில் உள்ள நம்பகத் தன்மையை யூகத்துக்கே விட்டுவிடுவதுதான் நல்லது. அழிவும் பாலியல் பலாத்காரங்களும் அரசியல் படுகொலைகளும் ஆவணங்களாகத் திரட்டுப்பட்டு பதியப்பட்ட ஒரு வரலாற்றைச் சொல்ல இந்நாவலின் சொல்நெறி போதுமானதில்லை. கருத்தியல்கள் சிதைந்துபோன மிகச் சிக்கலான இன்றைய உலகையும் வாழ்வையும் எழுதுவதற்கான சொல்நெறி நிச்சயமாக இந்நாவல் முன்வைக்கும் சொல்நெறி அல்ல. நிகழ்வைப் புனைவாகவும் புனைவை நிஜமாகவும் ஆக்கியிருக்கும் இன்றைய அதிகாரங்களை விலக்கிப் பார்க்கிற, நிகழ்வையும் புனைவையும் நிதானத்துடன் ஆழச் சென்று வேறுபடுத்துகிற சொல்நெறியே இந்நாவல் எடுத்துக் கொள்ளும் பிரச்சினைக்கும் வாழ்வுக்கும் நியாயம் செய்யும் சொல்நெறியாக இருந்திருக்க முடியும். [/size]

[size=4]

செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை' நூலை நாவல் என பின்னட்டையில் சி.மோகன் குறிப்பிடுகிறார். ஷோபா சக்தியின் 'கொரில்லா', சயந்தனின் 'ஆறா வடு' போன்ற நூல்களுடன் ஒப்பிடும்போது வரலாற்றுக் குறிப்புகள், புனைவு மொழியிலான தன்னனுபவம் என முற்றிலும் வேறுபட்ட பகுதிகளைக் கொண்ட இந்த நூலை, நாவல் எனக் குறிப்பிடுவது பொருத்தமானதுதானா எனும் வடிவம் குறித்த கேள்வி இயல்பாகவே எனக்குள் எழுகிறது. [/size]

[size=4]

தர்க்கங்களல்ல, மாறாக தற்செயல்களே பல சமயங்களில் மனித வாழ்வைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. இன்னும் சாவுக்குத் தப்பித் திரிவதில் இந்தத் தற்செயல்களும், அதனை விவரிக்கும் முறையும்தான் எழுத்தைச் சாஸ்வதமானதாக ஆக்குகிறது. இதை ஜான் லென்னானின் வார்த்தைகளில் சொல்வதானால், நாம் வாழ்வைத் திட்டமிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறபோது, அதற்குச் சம்பந்தமில்லாமல் இருப்பில் நமக்கு நேர்ந்து கொண்டிருப்பதுதான் நமது வாழ்வு. [/size]

[size=4]செழியன் பலமுறை சாவிலிருந்து தப்புகிறார். வாசகனாக என்னளவில் அவர் தப்பிய தருணம், நூலில், 1986 ஆம் ஆண்டு மார்கழி 17 ஆம் நாள்தான் ('வானத்தைப் பிளந்த கதை' : பக்கங்கள் 118-&-132) நிகழ்ந்திருக்கிறது. “அந்த வீட்டின் நான்கு புறமும் கிடுகு வேலியால் ஆனது என்றும் கேட் மட்டும் இரும்பினால் ஆனது என்றும் குறிப்பிட்டேன். அந்த இரும்புக் கேட்டை நிறுத்த கொங்கிரீட் தூண் கட்டியிருந்தார்கள். எப்போதாவது வீட்டைச் சுற்றியுள்ள வேலியை அகற்றிவிட்டு மதில் கட்ட வேண்டும் என்ற நோக்கம் அந்த வீட்டுக்காரர்களுக்கு நிச்சயம் இருந்தது. அதனால் அந்தக் கொங்கிரீட் தூணிலிருந்து ஒரு அடுக்கு சிமெண்டுக் கற்கள் ஆரம்பமாகி இருந்தன. அந்தச் சிமெண்டுக் கற்களுக்கும் கிடுகு வேலிக்கும் இடையில் சிறு இடைவெளி. ஒரு ஆள் நிற்கலாம் போல் தோன்றியது. அடுத்த கணமே அந்த இடைவெளிக்குள் நின்றேன். [/size]

[size=4]

நான் நின்று கொண்டிருந்த இடத்தை கேட் அடியில் இருந்தோ, வீட்டின் வாசலில் இருந்தோ பார்த்தால் காணமுடியாது. ஆனால் வீட்டின் முன்புறமாக சுமார் 10 அல்லது 15 அடிதூரம் சென்று நின்று பார்த்தால் என்னைக் கண்டுவிடலாம்

ஒரு வண்ணாத்திப் பூச்சியாய் இருக்கலாம். கூரையிலிருந்த மின் விளக்கின் ஒளியில் பறந்து திரிந்தது. அதனைக் கண்ட நாய்க்குட்டி வண்ணாத்திப் பூச்சியைத் துரத்தியது. வண்ணாத்திப் பூச்சி மேலும் கீழும், அங்குமிங்கும் எனப் பறந்து நாய்க்குட்டிக்குக் கண்ணாம்பூச்சி காட்டியது. இந்த வண்ணாத்திப் பூச்சி நான் இருந்த பக்கமாய் வந்து தொலைத்தால் என்னைக் கண்டு நாய்க்குட்டி குலைக்க, நான் விடுதலைப் புலிகளிடம் பிடிபட்டு விடுவேன். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இக்கட்டான நிலையில் இருந்தேன். என உயிர்வாழ்தலுக்கான இருத்தலியல் அவலத்துடன் முடிகிறது செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை'. [/size]

[size=4]

“இது ஒன்றும் பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாற்றுக் கதையல்ல. இவர்கள் வருவதற்கு முதல்நாளில் என் கிராமம் அம்மக்களும் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் தடயமும்தான் இது. என் கிராமத்துக் கதவுகளை அரித்த கறையான்கள் நடத்திய அரசியல் சரித்திரத்தின் ஒரு சிறுபொறி மட்டுமே இந்நாவல்” என தனது ‘சசகறணம்’ நாவல் பற்றி நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் விமல் குழந்தைவேல். [/size]

[size=4]

arular-arudpragasam%20copy.jpg [/size]

[size=4]நாவலின் கதைக்களம் எண்பதுகளின் மத்தியிலும் தொண்ணூறுகளிலும் கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிகழ்வதாக இருக்கிறது. தமிழ் விடுதலை அரசியல் இன்னும் தீண்டாத கிராமிய சமூகமான அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான அன்றாட வாழ்வின் அந்நியோன்யங்களில் நாவல் துவக்கம் பெறுகிறது. அவர்களது அன்பு தோய்ந்த, கள்ளமற்ற, மறைபொருளற்ற வெளிப்படையான வாழ்வில், அரசியல் பிரவேசம் மழை அல்லது காற்றின் வந்துபோதலைப் போல, முக்கியத்துவமற்று, சமவேளையில் அனிச்சையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டுக் கடந்து போகிறது. அரசியல் அவர்களது அன்றாட வாழ்வின் அக்கறைகளாகவோ அல்லது அரசியல் பிரக்ஞையாகவோ, அவர்களிடம் தீராத ரணங்களை விதைப்பதாகவோ இன்னும் உருவாகி இருக்கவில்லை. நாவலின் முதல் அத்தியாயத்தை இப்போது கடந்து போக இருக்கும்போது, ஈழ விடுதலைப் போராளிகள் அக்கரைப்பற்று மக்களின் வாழ்வுக்குள் பிரவேசிக்கிறார்கள். [/size]

[size=4]துரோகம், நம்பிக்கையீனம், துவேஷம் போன்றன மதம் மற்றும் அரசியல் மாறுபாடுகளின் வழி கிராமிய வாழ்க்கையினுள் நுழைகிறது. தோழர்கள் எதிரிகளாகித் துரோகிகளாக ஆகிறார்கள். வேறுபட்ட மனிதர்களுக்கு இடையிலான மிக இயல்பான நிகழ்வுகள் கூட விடுதலை அரசியலின் பிரச்சினையாகவும், மத அடையாளப் பிரச்சினையாகவும் ஆக்கப்படுகிறது. முழு அக்கரைப்பற்றுப் பிரதேசத்தையும் பேரூழி போல இந்த விஷக்காற்று தனக்குள் சுழற்றி எடுத்துக் கொள்கிறது. [/size]

[size=4]அடித்தட்டு மக்கள் என்று சொல்கிறபோது, ஈழப்போராட்டம் குறித்த இதுவரைத்திய நாவல்களில் பேசப்படாத அவர்களது முழுமையான வாழ்வு, உழைத்து வாழும் மக்களின் வாழ்க்கை எனும் அளவில் இந்த நாவல், முதன்முதலாக அவர்களைப் பற்றிப் பேசிய நாவலாக இருக்கிறது. இந்த நாவல் ஈழத் தமிழ் மக்கள் குறித்த ஐம்பதாண்டு கால வாழ்வின் சாராம்சத்தைக் கொண்டிருந்தாலும், உதிரிப்பாட்டாளிகளாக உழைத்து வாழும் மக்களின் ஜீவனைக் கொண்டிருக்கும் வெளியான ஒரு கிராமச் சந்தை பற்றியதாக இருக்கிறது.

போராளிகள் எந்த மக்களைப் பற்றி நாவல் பேசுகிறதோ அதே மக்களின் பகுதியிலிருந்து தோன்றிய, அதே மக்களைச் சார்ந்த மனிதர்கள்தான். அவர்கள் தேவதூதர்களும் அல்ல, தேவகுமாரர்களும் அல்ல. அதுபோலவே அவர்கள் சத்துராதிகளும் அல்ல. வரலாற்றினால் சத்துராதிகள் ஆக்கப்பட்ட அன்பான புதல்வர்கள், தோழமை மிக்க நண்பர்கள். பேரழிவில் கொல்லப்பட்ட சாதாரண மனிதர்கள் போலவே பரிவுக்கும், புரிந்து கொள்ளலுக்கும், படைப்பாளியின் இரங்கலுக்கும், தேடிப் பார்த்து அறிந்து கொள்வதற்கும் உரியதுதான் அவர்களது வாழ்வும் மரணமும். அவர்கள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின் கதவுகளை அரித்த கறையான்கள் அல்ல. இனவாதம் எனும் கறையான் புற்றைக் கரைக்கக் கைவைத்து, விஷநாகம் தீண்டி, தமது உடம்பும் விஷம் பாரித்து, மரணித்த மனிதர்கள்தான் அவர்கள். [/size]

[size=4]ஈழ விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்பாளர்களாக ஆக்கப்படாத, பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தப்பட்ட, பல வேளைகளில் விடுதலைப் போராட்டத்தில் பலவந்தமாக உள்ளீர்க்கப்பட்ட தன்னிலைகளாகத்தான் பெரும்பாலுமான ஈழமக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தமது பிரக்ஞைபூர்வமான பங்கேற்பு இல்லாமலேயே அவர்கள் அதனுள் அமிழ்த்தப்பட்டார்கள். இத்தகைய அந்நியமான மனிதர்களைப் பற்றிய நாவல்தான் செயந்தனின் 'ஆறா வடு' நாவல். இத்தகைய மனிதர்களை சதத்ஹாசன் மண்டோவின் படைப்புக்களில் நாம் அதிகமும் காணமுடியும். [/size]

[size=4]

கோவிந்தன் துவங்கி விமல் குழந்தைவேலின் நாவல் வரை அந்த நாவல்களில் அறிமுகமாகும் பிரதான கதை மாந்தர்களில் பலர் இயக்க அரசியலில் ஈர்க்கப்பட்டவர்கள். நிறைய அரசியல் பேசுபவர்களாக, இயக்கத்தின் ஸ்தாபன வடிவம், அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசுபவர்களாக, தேர்ந்துகொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக, எதிர்காலம் குறித்து பதட்டங்களை வெளியிடுபவர்களாக இருக்கிறார்கள். [/size]

[size=4]

DSC_0261%20copy.jpg [/size]

[size=4]குறிப்பிட்ட இந்த நாவல்களில் நாம் நுழைவதற்கு முன்பாகவே இவர்கள் அரசியல் மயப்பட்ட மனிதர்களாக நமக்கு அறிமுகமாகிறார்கள். இவர்கள் அரசியல்மயப்படுவதற்கு முன்பாக, போராளிகளாக வெளியுலகு இவர்களை அடையாளம் காண்பதற்கு முன்பாக இவர்கள் என்னவாக இருந்தார்கள்? இவர்கள் எவ்வாறு போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டார்கள்? இவர்கள் அரசியல் கல்வி பயிற்றுவிக்கப்பட்டவர்களாக இருந்தார்களா அல்லது யதேச்சையாக அமைப்புக்குள் தூக்கிவீசப்பட்டவர்களாக அல்லது பலவந்தமாக அமைப்பினுள் உள்வாங்கப்பட்டவர்களாக இருந்தார்களா அல்லது நம்பிக்கையினால் மட்டுமே வழிநடத்தப்படும் மந்தைகளின் பகுதிகளாக இருந்தார்களா? போராட்டத்திலிருந்து மிக இயல்பாகவே அந்நியமாகி இருந்த, வெளியாட்களாக இருந்த இந்த வெகுமக்கள் போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டபோது அவர்கள் கொடுத்த விலை என்ன? அந்த சாதாரணர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள்தான் ஈழத்தின் பெரும்பான்மையான மக்கள் எனில் அவர்களது வாழ்வு, அந்த வாழ்வின் முக்கியத்துவம், போராட்டம் குறித்து வெளியாகின இதுவரைத்திய நாவல்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா? [/size]

[size=4]

இந்த வெளியில்தான் செயந்தனின் நாவல் மிக ‘நுட்பமான சித்தரிப்புகளுடன்’ பிரவேசிக்கிறது. போராட்டத்திலிருந்து அந்நியமான இந்த மனிதர்களின் வாழ்வு குறித்துத்தான் 'ஆறாவடு' பேசுகிறது. வெகுமக்களின் இந்த அந்நியமாக்கப்பட்ட நிலையே போராட்டத்தின் வீழ்ச்சிக்கான விதைகளையும் கொண்டிருக்கிறது என ஒருவர் இனம்காணமுடியும். இந்த வகையிலும் 'ஆறா வடு', 'நாவல் போராட்டம்' குறித்த உளவியல் ஆவணமாக இருக்கிறது. நாவலின் கூறுமறையாக எங்கும் பரவியிருக்கிற அங்கதம் என்பது இந்த உளவியலின் வெளிப்பாடுதான். அந்நியமாக இருப்பதன் கைத்த மனநிலைதான் விரக்திநிலையில் இங்கு அங்கதமாக வெளிப்படுகிறது. இந்த அங்கதத்தின் தொனி கொண்டாட்ட மனநிலையில் ஆனதல்ல. மாறாக, அது கசந்த மனதின் வெளிப்பாடு. [/size]

[size=4]

எரித்திரியக் கடற்கரைக்குள் நுழைகிற இறுதி அத்தியாயம் நாவலை சர்வதேசிய அரசியல் தளத்தினுள் கொண்டு நிறுத்துகிறது. இது, நாவலின் மிகப் பெரும் செய்தி. ஈழப் போராட்டமும் அதனது மனிதர்களும் அவர்களது அனுபவங்களும் தனித்த தீவுத்தன்மை கொண்டவைகள் இல்லை. ஓரு முனையில் ஈழ விடுதலைப் போராட்டம் தவிர உலகின் அனைத்து விடுதலைப் போராட்டங்களும் நேர்த்தியானவை, சரியானவை என்கிற பிரமை பெரும்பாலுமான கண்மூடித்தனமான விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களால் கட்டி எழுப்பப்படுகிறது. குறிப்பாக, பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் புனிதமானது, ஈழப் போராட்டம் பாசிசம் என்பார்கள் இவர்கள். [/size]

[size=4]நாவலின் இலக்கிய மேதைமைக்கும், அரசியலற்ற இந்நாவல் சொல்லும் அரசியலுக்கும் இதுவரைத்திய ஈழத்து அரசியல் நாவல்களில் சொல்லப்படாத இந்த உரைநடை சான்று : “ஆயுதாரிகளைக் கண்டதும் கைகளை உயர்த்தியபடி லேக் ஹவுஸ் ஊழியர்கள் ஒரு மூலைக்குள் ஒதுங்கியிருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேறிப் போகுமாறு சைகை செய்தார்கள். தாகத்தில் நா வறண்டு போயிருந்தது. நீர்க்குழாயின் அருகில் வாயை வைத்து கைகளால் ஏந்தித் தண்ணீர் குடித்தார்கள். க்ளுக் க்ளுக் என்ற சத்தத்தோடு தொண்டைக் குழிக்குள் தண்ணீர் இறங்கிப் போனது. பிறகு அவர்கள் சயனைட் குப்பியைக் கடித்து உடைத்தபோது மெல்லிய கண்ணாடித்துண்டுகள் நாக்கையும் கடைவாய் உதட்டையும் வெட்டிக் கிழித்து இரத்தம் வரப் பண்ணியிருந்தன. அப்பொழுது தம்மிடமிருந்த மீதிக் குண்டுகளையும் அவர்கள் உடலோடு அணைத்து வெடிக்க வைத்தனர் ('ஆறா வடு' : பக்கம் 101). [/size]

[size=4]

Shoba_sakthi%20copy.jpg [/size]

[size=4]கொழும்பில் வசதி படைத்தவர்கள் வாழ்கிற பிரதேசம் சின்னமன் கார்டன்ஸ் எனப்படுகிற சின்னமன் தோட்டம். இந்த வசதி படைத்த தமிழ்ப்பையன் ஒருவனின் கொழும்பு நினைவுகளாகவே 'விந்தைப் பையன்' ஆங்கில நாவல் இருக்கிறது. [/size]

[size=4]

நாவல், அர்ஜி எனும் சிறுவனுக்கு ஏழு வயதிருக்கும்போது தொடங்குகிறது. ஜூலை 25, 1983 ஆம் ஆண்டுக் கலவரம் தொடங்கிவிட்டது. பதின்மூன்று இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு விட்டதின் பின் கொழும்புத் தீ மூண்டு விட்டது. கனத்தை கல்லறையருகில் இருந்த முழுத் தமிழ் வீடுகளும் எரிக்கப்பட்டுவிட்டன.அர்ஜியின் பாட்டிகாரோடு பெற்றோல் ஊற்றிக் கொளுத்தப்படுகிறார். அர்ஜியின் வீடு எரியுண்டு போகிறது. அர்ஜியின் அண்டை வீட்டுக்காரர்களும் சிங்களர்களுமான பெரா மாமியும் அவரது கணவரும் அர்ஜியின் குடும்பத்தைத் தமது வீட்டில் வைத்துக் காப்பாற்றுகிறார்கள். அர்ஜியின் வீடு எரிந்துவிட்டதைக் கேள்விப்பட்டு வரும் ஷெகான் அர்ஜியின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறான். முதன் முதலாக அர்ஜியின் மனசுக்குள் ஒரு உண்மை வந்து போகிறது. ஷெகான் ஒரு சிங்களவன். தான் அவ்வாறானவன் அல்ல என்பதுதான் அந்த உண்மை. ஆனால் இவையெதுவும் ஷெகான் மீதான அர்ஜியின் நேசத்தைக் குறைத்து விடவில்லை. [/size]

[size=4]

கொழும்பில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டிருந்த தனது தகப்பனின் பார்வையிலிருந்து- கொழும்பு மேல் வர்க்கக் குழந்தையின் இளைஞனின் கிறிஸ்தவத் தமிழரின் பார்வையிலிருந்து இப்பிரச்சினை பார்க்கப்பட்டிருக்கிறது. போராட்டத்துக்கு வெளியில் இவர்களது வாழ்வும் வர்க்கமும் இருந்தாலும்; கூட, இவர்களது வாழ்வின் உள்ளே போராட்டத்தின் நெருக்கடிகளின் தாக்கம் தவிர்க்கமுடியாததாகவே இருந்தது. [/size]

[size=4]

அ.சிவானந்தனின் ஆங்கில நாவலான 'வென் மெமரி' டைஸ் இலங்கைத் தீவு முழுக்கவுமான மனிதர்கள் பற்றியது. இந்தத் தீவு மனிதர்களின் கடந்த கால வரலாறு இவர்களிடமிருந்து பல்வேறு அன்னியர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்றை மறுவாசிப்பு செய்யப் புறப்பட்ட இவர்கள் பல வரலாறுகள், பல்கலாச்சார நினைவுகள் பரவிய ஒரு வெளியை- மதம் இனம் மொழி சார்ந்த பொய்யான நினைவுகளைக் கட்டமைக்க முற்பட்டார்கள். நேசமும் பாசமுமாய் இருந்த நினைவுகள் மரணித்தன. அகழ்வாய்விலும் மானுடவியலிலும் கல்விச் சாலைகளிலும் விஷம் விதைக்கப்பட்டது. அடர்ந்த வனங்களும் அருவிகளும் அழகும் நிறைந்த இந்த நாடு பிணக்காடாக ஆகியது. இந்நாவல் இந்த மனிதர்கள் குறித்த கதை. மூன்று தலைமுறை மனிதர்கள் குறித்த, நூற்றாண்டு காலம் குறித்த, தியானத்தின் விளைவு இந்நாவல். [/size]

[size=4]

விஜய்யின் பாத்திரம்தான் நாவலின் உயிர்நாடியான கருத்தியல் பிரதிமையாக நமது இறுதி நினைவுகளில் உறைகிறது. விஜய் ஒரே சமயத்தில் சிங்களவனாகவும் தமிழனாகவும் இருக்கிறான். அதே வேளை இரண்டு தரப்பாரும் இன விஷம் ஏறிய நிலையில் மறுக்கப்படவும் சந்தேகிக்கப்படவும் ஆன உயர் அன்பு நிறைந்த உயிர் ஜீவியாக இருக்கிறான். கடந்த கால நினைவுகளின் அற்புதமான லட்சிய வடிவமாகத்தான் அவன் நாவலில் பரிமாணம் பெறுகிறான். அவனது வேர்கள் இலங்கைத் தீவு முழுக்கத் தழுவி அழுத்தமாக இருக்கிறது. ஆனால் இன்று அவனுக்கு வேர்கள் இல்லை. இந்தச் சோகம்தான் 'வென் மெமரி டைஸ்' நாவலின் ஜீவனாக இருக்கிறது. நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் கடைசியில், எண்பதுகளின் இறுதியில் முடிகிறது. வாசுகி கணேசானந்தனின் 'லவ் மேரேஜ்' நாவல் ஒரு மீள்நோக்கிய பார்வையில், அகமண முறை, தமிழ் சமூகத்துக்குள்ளான காதல் திருமணங்கள், சிங்கள- தமிழ் கலப்பினக் காதல் திருமணங்கள் இவற்றினூடே தமிழ்-சிங்கள இனமுரண்பாட்டையும், இதனால் உறவுகளுக்குள் விளையும் தொடர் முரண்பாட்டையும் பேசுகிறது. [/size]

[size=4]தனது மாமனான குமரனின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரிக்கத் தனது தாயுடனும் தந்தையுடனும், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வரும் யாழினி எனும் இருபது வயதுப் பெண்ணின் முன்பின்னான நினைவுகளாக 'லவ் மேரேஜ்' நாவல் இருக்கிறது. இலங்கை அரச வன்முறையை எதிர்த்துப் போராடுகிற விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களையும் சுதந்திரமின்றி வைத்திருக்கிறது, மாற்றுக் கருத்தாளர்கள் மீது வன்முறை செலுத்துகிறது, இன்னும் புகலிட நாடுகளிலும் அந்நிலை தொடர்கிறது என நாவல் சொல்கிறது. குமரனின் புதல்வி கன்டாவில் விடுதலைப்புலிகளுக்காக வேலை செய்கிற, போதைப் பொருள் கடத்துகிற போராளி ஒருவருக்கு மணம்முடித்து வைக்கப்படுவதன் மூலம் இந்தச் செயல் இடையறாது தொடர்கிறது என்கிறது நாவல். [/size]

[size=4]

இந்த நாவலின் கதாநாயகியான யாழினி பிறந்த 1983 ஆண்டு என்பதனை ஒரு இடைநிலையாகவும், விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை முன்பின்னாக மீள்நோக்கிப் பார்ப்பதற்கான ஒரு குறியீட்டு நிலையாகவும் நாவல் கொண்டிருக்கிறது. [/size]

[size=4]

சாந்தனின 'விர்ல் வின்ட்' ஆங்கில நாவல் இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளைத் தேடுவதற்காக ஒரு கிராமத்தின் மக்களை அவர்களது வீடுகளைத் துறந்து, அமைதிப்படை முகாமிட்டிருக்கிற, கைவிடப்பட்ட வீடொன்றின் எதிரில், இன்னொரு கைவிடப்பட்ட அகண்ட வீட்டில் குடியேறப் பணிக்கப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளைத் தேடி அழிக்கும் வரை அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாது. விடுதலைப்புலிகளைத்தேடி அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது சோர்ந்துபோகும் அமைதிப்படை அதிகாரி அகண்ட வீட்டில் முகாமிட்டிருக்கும் மக்களை அவர்களை அடையாளம் கண்டு சொல்லுமாறு நிர்ப்பந்திக்கிறார். அதற்கென அவர்களுக்கு அவகாசம் தருகிறார். அந்தக் கெடு காலம் முடிந்தவுடன் அந்த வீட்டிலுள்ள இருநூறுக்கும் அருகிலான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மீது இந்திய ராணுவம் சுடத் துவங்குகிறது. சுவரிலிருந்த மகாத்மா காந்தியின் படம் சிதறுகிறது. [/size]

[size=4]

கிராமத்து வீடுகளைக் காலி செய்து அகண்ட அந்நிய வீட்டில் தங்கும் மக்களின் அன்றாட உணவுத் தேவைகள், கழிப்பிடத் தேவைகள் உள்ளிட்ட இருத்தலியல் அவலங்களைப் பேசும் நாவல், சமகாலத்தில் அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கிடையிலான உரையாடல்களின் போக்கில் இலங்கை அரசியலையும் அலசுகிறது. தமிழ்-சிங்கள இனங்களின் வரலாறு, நெருக்கடியில் இந்தியாவின் வரலாற்றுரீதியான பங்கு ஆகியவை குறித்த பன்முக விவாதங்கள் பதிவுசெய்யப்படுகிறது. தமது இலக்குகள் அறியாது இலங்கைத் தீவுக்குள் வந்த இந்திய ராணுவ இயந்திரம், விரக்தியுற்ற நிலையில் ஈழமக்களின் மீது தாக்குதலைத் துவங்குகிறது. இவ்வாறாக, இந்திய அமைதிப்படைக் காலத்தில் ஈழமக்களின் இருத்தலியல் பதட்டங்களைப் பேசும் நாவலாக 'விர்ல் வின்ட்' இருக்கிறது. [/size]

[size=4]

'லங்காராணி' என்னும் இந்தப் படைப்பு வெறும் கற்பனைக் கதையல்ல. பொழுதுபோக்குவதற்காக எழுதப்பட்ட புனைகதையல்ல. இந்தப் படைப்பிற்கு என்ன இலக்கியப் பெயர் சூட்டலாம் என்பது எமது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது” எனக் குறிப்பிடுகிறது அருளரின் 'லங்கா ராணி' நூலின் பதிப்புரை. 'புதியதோர் உலகம்' இலக்கியமாகக் கருதி மட்டுமே எழுதப்படவில்லை, ஒரு அறைகூவலாகவே எழுதப்பட்டது” என்கிறார் கோவிந்தன். செழியனின் 'வானத்தைப் பிளந்த கதை' நூலின் முதல் பாதி வரலாற்று ஆவணப் பதிவாகவும் இரண்டாம் பகுதி புனைவுத்தன்மை கொண்ட சுயவரலாறாகவும் இருக்கிறது. ஷோபா சக்தியின் 'ம்' நாவல் அதிகமும் ஆவணத்தன்மை கொண்டதாகவே உருவாகியிருக்கிறது. 'விர்ல் வின்ட்' நாவல் பல்வேறுவிதங்களில் லங்கா ராணியை ஒத்த விவரண முறையாக அமைகிறது. 'லங்கா ராணி'யில் கொழும்பு துவங்கி யாழ்ப்பாணம் நோக்கிய கடல் பயணத்தில் நடக்கும் பிரதானமான அரசியல் விவாதமே நாவல். வீடுகளிலிருந்து வெளியேறி தற்காலிக முகாமில் இருக்க நேர்பவர்களுக்கிடையில் நடக்கும் பிரதானமான அரசியல் விவாதமே விர்ல் வின்ட் நாவல். [/size]

[size=4]

குழந்தைவேலின் 'கசகறணம்', தேவகாந்தனின் 'வினாக்காலம்', சயந்தனின் 'ஆறாவடு' போன்றன பாத்திரப் படைப்புகளையும் புனைவுத்தியையும் மையப்படுத்திய படைப்புக்களாக இருக்கின்றன. ஆங்கில நாவல்களில் 'வென் மெமரி டை'சும் 'ஃபன்னி பா'யும், புனைவுத்தியையும் பாத்திரப் படைப்புகளையும் மையப்படுத்தியதாக இருக்கிறது. [/size]

[size=4]

இன்றைய சூழலில் எழுத்தாளர்களிடம் போராட்டங்களின் பாலான சார்பு நிலை எடுப்பது அருகி வருகிறது. தேச விடுதலைக்குப் பின்னான சமூகங்களில் சுதந்திரமும் தேர்வும் அற்ற நிலைமையும், நிலவிய சோசலிசம் ஏற்படுத்திய பின்னடைவுமே இதற்கான பிரதான காரணங்களாகும். இவ்வாறான நிலைமையில் பொத்தாம் பொதுவாக யுத்தத்திலும் போராட்டங் களிலும் சம்பந்தப்பட்டவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் மனித உரிமைக்கு எதிரானதாகச் சித்தரிக்கும் அதிமனிதாபிமானம் எனக் கருதும் அரசியல்சார்பு நிலையற்ற ஒரு நிலைபாட்டை சில மனித உரிமையாளர்களும் கலைஞர்களும் முன்வைக்கிறார்கள். இந்த அணுகுமுறையின் மூலம் போராட்டங்களும் சமூகநெருக்கடிகளும் தோன்றியதற்கான காரணங்கள், அதற்கு மிக ஆதாரமான ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் போன்ற வற்றையும் இவர்கள் மறந்து விடுகிறார்கள். சில வேளை தமது சமூக ஆர்வங்களின் பொருட்டு இதனை மறுத்துவிடவும் செய்கிறார்கள். [/size]

[size=4]ஈழப்போராட்டம் குறித்து எழுதப்பட்ட பெரும்பாலமான நாவல்களில் ஆவணத்தன்மை அதிகமும் இருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணம்தான் பல எழுத்தாளர்களுக்கு தமது நாவலின் வடிவத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் இட்டுச் செல்கிறது. நிலைநிறுத்தப்பட்ட இயக்கங்கள் சொல்வதுதான் வரலாறு எனும்போது, அதற்கு மாற்றான அல்லது விமர்சனபூர்வமான வரலாற்றை ஆவணப்படுத்துவது என்பது இங்கு ‘கதை’யின் பிரதான கூறாகிவிடுகிறது. இன்னும் வரலாற்றைப் ‘போதிப்பது’ என்பதும் கதையின் பிரதான அம்சமாகிவிடுகிறது. [/size]

[size=4]கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' எழுதப்பட்ட காலத்தில் அவரது உயிர்த்தலின் அடையாளமாக அவரது நாவல் பிரசவமாகிறது. ஆயுத விடுதலைப் போராட்டம் குறித்து எழுத நேரும் உலகின் அனைத்து எழுத்தாளர்களும் இப்பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். ஓடுக்குமுறை அரசு மற்றும் ஆயுத விடுதலை இயக்கங்கள் என இரு தரப்பாலும் வேட்டையாடப்படுபவர்களாக கலைஞர்கள் ஆகிவிடுகிறார்கள். பாலஸ்தீன நாவலாசிரியன் காசன் கனாபானி இஸ்ரேலிய அரசின் தாக்குதலால் கொல்லப்பட்டான். எல் ஸால்வடோர் கவிஞன் தனது சொந்த விடுதலை இயக்கத்தினால் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காரணத்தினால்தான் சாந்தனின், 'விரல் வின்ட்' நாவல் தவிர பிற பதினொரு ஈழ நாவல்களும் ஈழத்துக்கு வெளியில் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டன என நாம் சொல்ல முடியும். [/size]

[size=4]முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தில் இலங்கை அரசப் படைகளால் பல்லாயிரம் விடுதலைப் புலிப் போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிற விடுதலை இயக்கப் போராளிகள் பல்லாயிரம் பேர் விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தத்தமது இயக்கத்தின் மீது விமர்சனம் முன்வைத்தவர்களை அந்தந்த இயக்கத்தினரே கொலை செய்திருக்கிறார்கள். இந்த மரணங்கள் எழுத்தாளர்களை போராட்டத்தை விமர்சனமற்று ஆதரிப்பது என ஒரு தரப்பாரையும், விடுதலையை விமர்சனத்துடன் என ஆதரிப்பது என பிறிதொரு தரப்பாரையும், முற்றிலும் போராட்டத்தினை நிராகரிப்பது என இன்னொரு தரப்பாரையும் உருவாக்கி இருக்கிறது. [/size]

[size=4]

அருளரின் 'லங்கா ராணி' ஈழப் போராட்டத்தின் இலட்சியவாதத்தினை முன்வைத்தது. கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' இலட்சியவாதத்தையும் விமர்சனத்தையும் சமஅளவில் கொண்டிருந்தது. ஷோபா சக்தியின் கொரில்லாவும், விமல் குழந்தைவேலின் 'கசகறண'மும் இலட்சியவாதத்தை உதிர்த்துவிட்டு போராட்டத்தின் இருண்மையையே முற்றமுழுதாக முன்வைத்தன. சயந்தனின் ஆறாவடு இருண்மையின் இடையிலும் இலட்சியவாதத்தின் நம்பிக்கைக் கீற்றுக்களையும் கொண்டிருந்தது. [/size]

[size=4]

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டபோதிலும் இன்னும் ஈழ அரசியல் தனது உணர்ச்சிவசமான பார்வையில் இருந்து மீளமுடியவில்லை. கடந்த முப்பதாண்டுகளின் பின் படைப்பாளிகளும் அதிலிருந்து இன்னும் மீளுவதும் சாத்தியமாகியிருக்கவில்லை. ஈழப் போராட்டத்தின் இலட்சியம்-இருண்மை- நம்பிக்கை அல்லது நம்பிக்கையீனும் எனும் வரலாற்றுச் செயல்போக்கின் பன்முக மானுடப் பார்வைகளையும் உட்கொண்டதான சமநிலை கொண்ட நாவல் இன்னும் உருவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். [/size]

[size=4]கட்டுரையின் ஆரம்பத்தில் நான் மேற்கோள் காட்டியவாறு, விமர்சகர் மு.நித்தியானந்தன் சொல்கிறபடி, 'ஈழத்தின் இன்றைய சமூக அரசியல் மாற்றங்களை உள்வாங்கி அவற்றைச் சரித்திரப் பிரக்ஞையுடன் கிரகித்து இந்த வரலாற்று அனுபவங்களைத் தனது சுயமான வாழ்வின் தளத்தில் உணர்ந்த வெளிப்பாடு கொள்ளும் எழுத்துக்காக இன்னும் பலகாலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.” [/size]

[size=4]

rajrosa@gmail.com

http://www.uyirmmai....s.aspx?cid=5818[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.