Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும்-மீராபாரதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் அறமும் அரசியலும் பெண்களின் வாழ்வும்-மீராபாரதி

Baa-1024x229.jpg

01

எனது அப்பாவின் சமூக அடையாளங்கள் பல. ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல், அவர் 60களின் புரட்சியாளர். மார்க்சியவாதி, 70களில் சிறையிலிருந்து வெளிவந்தபின் தொழிற்சங்கவாதி, இறுதியாக அரசியல்வாதி என அவர் வாழ்வு முடிந்தது. ஆனால் ஒரு கணவராக, துணைவராக, தந்தையாக எப்படி வாழ்ந்தார் என்பது நமக்கு – குடும்ப அங்கத்தவர்களுக்கு- மட்டுமே தெரிந்த உண்மை. சிறையிலிருந்து வெளிவந்தபின், கட்சியிலிருந்து வெளியேறியபின் அல்லது வெளியேற்றப்பட்டபின், தொழில் ஒன்றில்லாது குடிக்கு அடிமையாக இருந்த காலங்களில் அவர் குடும்பத்திற்குள் எவ்வாறு இருந்தார்?.

அம்மா பத்தாம் வகுப்புடன் கல்வியை இடைநிறுத்தி, “கணவரே கண் கண்ட தெய்வம்” என வாழ்ந்தார். ஆனால் கணவரோ கடவுள் நம்பிக்கையில்லாதவர். சமூக, குடும்ப, அரசியல் நிகழ்வுகளால் அம்மா பாதிக்கப்பட்டபோதும், அரசியல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்குத்தான் அம்மாவின் பொது மற்றும் அரசியல் அறிவு. கடவுளான கணவரின் அரசியல் செயற்பாடுகளின் விளைவுகளினால் உருவான குடும்ப வறுமைமையில் சிக்குண்டார். அதற்கு முகம் கொடுத்தார். மேலதிகமாக இவரது கணவர் தனது வாழ்க்கை மற்றும் அரசியலில் ஏற்பட்ட தோல்வி, அதன் விளைவாக ஏற்பட்ட விரக்தி, குடி, மற்றும் மனவழுத்தம், மனச் சோர்வு (இவற்றைப் பற்றிய விழிப்புநிலை அன்று இருந்ததா என்பது கேள்விக்குறியே) என்பவற்றினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றினால் அவருக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளின் விளைவாக அம்மா வாங்கிய அடிகளுக்கும் உதைகளுக்கும் அளவேயில்லை. ஆனாலும் அம்மாவுக்கு கணவர் கடவுளாகவே இருந்தார். ஆனால் வெளியுலகில் அப்பாவின் வாழ்வும் அடையாளமும் மேங்குறிப்பிட்டவாறு முற்றிலும் வேறானதாகவே இருந்தது. இவ்வாறன நிலையில் இவரை விடுதலைப் போராளி, சமூக செயற்பாட்டாளர் என மதிப்பதா? இல்லை குடும்ப வன்முறையில் ஈடுபடுகின்றார் என குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனைக்குள்ளாக்கிப் புறக்கணிப்பதா?

குடும்பத்திற்குள் நடந்த வன்முறையை அம்மா அன்று வெளியில் சொல்லவில்லை. அவருக்கு சொல்ல முடியவில்லை. சொல்லத் தெரியவில்லை என்பதே உண்மை. இதற்கு அவரது அறிவு, ஆற்றல்கள் என்பவற்றின் பற்றாக்குறைகள் எனப் பல காரணங்கள் இருக்கலாம். அன்று அம்மா இவற்றைச் சொல்லியிருந்தாலும், சமூகம் மட்டுமல்ல புரட்சிகர கட்சித் தலைமையும் தோழர்களும் புரிந்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இவ்வாறான குடும்ப வன்முறைகள் தொடர்பாக 70களின் இலங்கையிலிருந்த விழிப்புநிலை மிகவும் குறைவானதே. தொழிலாளர்களின், இனங்களின் உரிமைகள் முக்கியத்துவமாக இருந்தளவிற்கு பெண்ணுரிமைகள் தொடர்பான விழிப்புநிலை இன்றுபோல் அன்று இல்லை என்றே கூறலாம். ஆகவே சமூகத்தில் மட்டுமல்ல புரட்சிகர கட்சி அங்கத்தவர் குடும்பங்களிலும் பெண்ணடிமைத்தனமும் பெண்கள் மீதான வன்முறையும் மற்றும் பொருளாதார, பாலியல் சுரண்டல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்ற காலம் அது என்றால் மிகையல்ல. இக் காரணங்களுக்கா அப்பா அன்று முன்னெடுத்த அரசியல், அதனடிப்படையிலான செயற்பாடுகளுக்கான நியாயத்தன்மை இல்லாது போய்விடுமா? இந்த முரண்பாடுகள் அப்பாவின் தலைமுறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. என் தலைமுறையிலும் தொடர்கின்றது.

சிறுவயதிலிருந்து எனக்குள் வன்முறை வளர்ந்தது. இந்த வன்முறை எங்கிருந்து வந்தது… எனது பரம்பரை மற்றும் தாய் தந்தையின் மரமணுவிலிருந்தா… குடும்ப சுழலிலிருந்தா…. சமூகத்திலிருந்தா… அல்லது இவையனைத்திலுமிருந்தா என்பது தெரியாது… ஆனால் இவற்றின் பாதிப்புகள் எனக்குள்ளான வன்முறையை வளர்த்ததில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மிக சில சந்தர்ப்பங்களில் மட்டுமே எனது பலத்தை என்னை விட பலம் கூடியவர்களுடன் காட்டியிருக்கின்றேன். மற்றும்படி அதிகாரமற்ற பலமற்ற சகோதரிகள் மீது ஆரம்பத்திலும்… சில காலத்தின் பின் அம்மா மீதும்… பின் துணைவியார் மீதும் தொடர்ந்தன… இவ்வாறன வன்முறை பாதை தவறு என ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டேன்… அதற்கு செலவழியும் சக்தியை ஆரோக்கியமான வழிகளில் செயற்படுத்த தியானத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன்…. இதானல் ஆழமான புரிதல் மற்றும் சிறு பயன் கிடைத்தபோதும், பல நேரங்களில் எனது பிரக்ஞையின்மை ஆதிக்கம் செலுத்த என்னையும் மீறி எனக்குள் இருந்த வன்முறை வெளிப்படுகின்றது. இது எனக்குள் ஒரு பிரதான முரண்பாடாகவே இன்றுவரை இருந்துவருகின்றது…

எனது (புரட்சிகர) அரசியல் தேசிய அரசியலுடன் இணைந்தே உருவானது. அரசியல் முக்கியமானது எனது உணர்ந்தளவிற்கு வர்க்க அரசியல் பற்றியெல்லாம் ஆரம்பத்தில் சிந்திக்கவில்லை. பெண்ணியம் தொடர்பான நிலைப்பாடும் இவ்வாறாகவே இருந்தது. ஆனால் 80களின் இறுதியில் உருவான பெண் உரிமைகள் தொடர்பான அறிதல், பெண்களை மதிக்கவேண்டும், ஏமாற்றக் கூடாது, அவர்களது வீட்டு வேலைகளுடன் பங்குகொள்ளவேண்டும் என மேலோட்டமானதாகவே இருந்தது. இதனால் நான் விரும்பிய குறிப்பிட்ட ஒரே ஒரு பெண்தான் என் வாழ்க்கைத் துணைவி. மணந்தால் அவள்தான். இல்லை என்றால் வேறு யாரும் இல்லை. திருமணத்திற்குப் பின்பே உடலுறவில் ஈடுபடுவது. அதுவும் அவளது விருப்பத்திற்கு மாறாக நடைபெறக்கூடாது. பாலியல் தொழிலாளர்களிடம் (அன்று அவர்கள் “வேசிகள்” அல்லது “விபச்சாரிகள்”) செல்லக்கூடாது, நீலப் படங்கள் பார்க்கக் கூடாது என பல பாரம்பரிய சமூக கட்டுப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் தேசிய அரசியல் என்பவற்றின் அடிப்படையில் பல வரையரைகளை நானாகவே எனக்கு வகுத்துக்கொண்டு அதற்கு உண்மையாக இருந்த காலங்கள் அவை. இவ்வாறான இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் எவ்வளவு காலம் தான் வாழ்வது?

வாழ்வின் யதார்த்தம் வேறு ஒன்றாக இருந்தது. ஒரு பெண்ணிலிருந்து பல பெண்கள் மனதில் வந்தார்கள். சிலர் வாழ்க்கையில் உறவானர்கள். திருணமத்திற்கு பின்தான் பாலியலுறவு என்ற கொள்கை யதார்த்த வாழ்வில் காற்றில் பறந்து சென்றது. எனது விருப்பம் முதன்மையானது. பிரதானமானது. அவளது விருப்பம் இரண்டாம் பட்சமானது. ஆகவே எனது உடலுறுவு வன்புணர்வானது அவளுக்கு. இது சர்வ சதாரணமானது எனக்கு. அது வலியானது அவளுக்கு. இது புரியாதுபோனது எனக்கு. மறுபுறம் இவ்வாறான பாலியலுறவின் அனுபவம் நீலப்படங்களுக்கு இழுத்துச் சென்றது. இங்கிருந்து பாலியல் தொழிலாளர்களிடம் சரணடையவும் வைத்தது. பாலுறவு ஒருவருடன் மட்டும்தான் என்ற கொள்கையும் காற்றோடு காற்றாக பறந்துபோய்விட்டது. யாருடனும் அவர்களின் உடன்பாட்டுடன் உறவு கொள்வதில் தவறில்லை என்ற புதிய புரிதல் உருவானது. ஆனால் அவ்வாறு உறவு கொள்ள விரும்பும் பெண்களிடம் காதல் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. காமம் என்று உண்மை சொல்ல முடிவதில்லை. ஆனாலும் மறுபுறம் நான் முன்பைவிட மேலும் ஆழமான பெண்ணிலைவாதியாக மாறிக் கொண்டு வந்தேன். அதேவேளை முரண்பாடுகளும் எனக்குள் வளர்ந்தன. இதனால் என் மனசாட்சி ஒவ்வொரு கணமும் “எது சரி” என என்னைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கின்றது. இது எனக்குள் நடைபெறும் ஒரு அகப்போராட்டம். இப்படித்தான் இதை வாசிக்கின்ற ஒவ்வொரு ஆணுக்கும் இருக்குமா?

௦௦௦௦

ஒரு பெண் வாழ்க்கைத் துணையானால். நான் கல்வி கற்றளவு அவரும் கற்றிருக்கின்றார். நிரந்தர(?) தொழில் செய்கின்றார். வருமானம் வருகின்றது அவருக்கு. ஆண்களுக்கு எதிரான விமர்சனங்களை நெற்றில்பொட்டில் அடித்தால்போல் தனிப்பட முன்வைப்பார். இவைதான் என் அம்மாவிலிருந்து அவரை வேறுபடுத்தியது. ஆனால் அம்மாவைப் போல அரசியல் அக்கறை மட்டும் இல்லாதிருக்கின்றார். மேலும் தனது கருத்துக்களை பொது தளங்களில் முன்வைப்பதற்கு தயக்கமுள்ளவராக இருக்கின்றார். தமிழில் எழுதி வெளியிடும் ஆற்றலும் இல்லாதிருக்கின்றார். இதனால் தற்சமயம் வரை பொதுத்தளங்களில் கிடைக்கின்ற வசைபாடும் தண்டனைகளிலிருந்து தப்பித்து வாழ்கின்றேன் நான். இது எனக்கு அதிர்ஸ்டமாக இருக்கலாம். ஆனால் இதுதான் யதார்த்த வாழ்வின் முரண்கள்.

சில காலத்திற்கு முன்பு தமிழ் இலக்கிய, அரசியல், இணைய மற்றும் செயற்பாட்டு சுழல்களில் பிரபல்யமான இரு உறவுகளின் பல்வேறு முரண்பாடுகள் பொதுவெளியில் அலசி ஆராயப்பட்டன. ஒரு ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக நின்று வசை மொழிகளைப் பயன்படுத்தி வாதிட்டபோதும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து அதில் உறுதியாகவும் இருந்தனர். ஆனால் தொடர்ந்தும் தமது தளங்களில் செயற்படுகின்றனர். குறிப்பிட்ட பெண் இவ்வாறு தொடர்ந்து செயற்படுவதற்கு மிகுந்த தைரியமும் உறுதியும் வேண்டும். இந்தப் பெண்ணுடன் முரண்பாடுகள் விமர்சனங்கள் இருந்தபோதும், இதற்காக மதிக்கப்படவேண்டியவர். ஆனால் இன்னுமொரு பிரபல்யமான உறவில் ஏற்பட்ட முரண்பாட்டில் பெண் தொடர்ந்து இயங்குபராகவும் ஆண் காணாமல் போகவும் செய்யப்பட்டார். துரதிர்ஸ்டவசமாக அந்த ஆணின் பக்க நிலைப்பாடு jules-pascin-nude-women-237x300.jpg

வெளிப்படுத்தப்படவில்லை. அவர் தானாகவே காணாமல் போனார் அல்லது போகடிக்கப்பட்டார். குறிப்பிட்ட ஆண் தவறு செய்தவராக இருந்தபோதும் மற்றும் அவரின் அரசியலுடன் உடன்பாடு இல்லாதபோதும் அவரது அரசியல் மற்றும் எழுத்துச் செயற்பாடு இவ்வாறு முடக்கப்படவேண்டுமா அல்லது அவர் அவ்வாறு தன்னை முடக்கிக் கொள்ள வேண்டுமா என்பது கேள்விக்குட்படுத்தப்படவேண்டிய ஒன்று.

மேற்கூறப்பட்டவை பொது வெளியில் அறியப்பட்ட சில நிகழ்வுகள். ஆனால் சில சம்பவங்கள் அறியப்படாமலே இருக்கின்றன. புரட்சிகர, தேசிய, பெண்ணிய, சாதிய விடுதலை மற்றும் மனித உரிமைகள் பேசுகின்ற, சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்ற, தம்மைத்தாமே தலைவர்கள் என பட்டம் சூட்டிக்கொள்கின்ற பலர் சத்தம் போடாமல் தம் சுயநல நோக்கங்களுக்காகப் பெண்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதனால் எழுத்து மற்றும் சமூக செயற்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்ட குறிப்பிட்ட பெண்கள் இந்தப் “புரட்சிகர தலைமை”களின் வாரிசுகளை பெற்று அவர்களை பராமரித்து வளர்க்கும் பெண்களுக்கு சமூகத்தால் வழங்கப்பட்ட பாரம்பரிய பொறுப்புக்களை விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இப்படி பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் “புரட்சிகர” சக்திகளுக்குள் சத்தமின்றி நடந்தேறுகின்றன. இதற்கு பெண்கள் கொடுக்கின்ற விலை அதிகமானது எனலாம். அதாவது தமது தெரிவுகளை, விருப்பங்களை, பன்முக படைப்பாற்றல்களை உறங்கு நிலையில் ஒதுக்கிவைத்து விட்டு அல்லது முடக்கிவிட்டே இதைச் செய்கின்றனர். இவ்வாறன ஆண்கள் பொதுவெளில் விமர்சிக்கப்படுவதேயில்லை. இந்த நிலையில் வாழ்கின்ற பெண்களின் குரல்களும் பொதுவெளிகளில் கேட்பதில்லை.

மேற்குறிப்பிட்டவாறு “புரட்சிகர” ஆண்கள் ஒருபுறம் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்தபோதும், மறுபுறம் இவர்கள் செய்கின்ற சமூக மாற்றத்திற்கான அல்லது தேசிய விடுதலைக்கான அல்லது மனித உரிமைகளுக்கான செயற்பாடுகள் தவறானவையல்ல. நியாயமானவை. மேற்குறிப்பிட்ட தவறுகளுக்காக இவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? இவர்களது அரசியல் செயற்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டுமா? அல்லது ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்து வளரத்து இணைத்துச் செல்ல வேண்டுமா? இதற்கான கோட்டை எங்கே கீறுவது?

மேற்குறிப்பிட்ட பெண்களைவிட அரசியல் அக்கறையும் பெண்ணிய சிந்தனையும் கொண்டவர்களும் தமது கருத்தைப் பொதுத்தளங்களில் முன்வைக்கின்ற ஆற்றல்களை கொண்ட பல பெண்கள் இன்று இருக்கின்றனர். இது வரவேற்கவும் ஊக்கப்படுத்தப்படவும் வேண்டிய ஒன்றே. இப் பெண்கள் வாழ்க்கைத் துணையாக வரும் பொழுது ஆண்களின் நிலை என்ன? இந்த ஆணின் பெண்ணியம் சார்ந்த புரிந்துணர்வும் பெண்களின் ஆண்கள் தொடர்பான புரிதல்களும் தான் அவர்களுக்கு இடையிலான உறவின் ஆழத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். அல்லது உறவு விரைவில் முறிவாகும் என்றால் மிகையல்ல. இந்த ஆணினதும் பெண்ணினதும் புரிந்துணர்வுகளின் அடிப்படையில் இவர்களது உறவின் முறிவானது ஆரோக்கியமான வழிகளில் முன்னெடுக்கப்படும். அல்லது வசைபாடல்களாக ஆரம்பித்து தமது கடந்த கால அழகான உறவை கொச்சைப்படுத்துவதில் முடிவடையும். இதில் நாம் எவ்வாறான உறவுமுறையையும் வழிமுறைகளையும் தெரிவு செய்கின்றோம் என்பதற்கான சுதந்திரம் நமக்கு உள்ளது. தெரிவு நம்முடையது.

02

உலக சனத் தொகையில் ஆண்களும் பெண்களும் எண்ணிக்கையடிப்படியில் பருமட்டாக சரிசமானமாகவே இருக்கின்றார்கள். ஆனால் பொதுவெளிகளில் ஆண்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருக்கின்றார்கள். அவர்களிடம் தான் பெரும்பான்மையான அதிகாரம் உள்ளது. இதில் யாருக்கும் முரண்பாடோ சந்தேகமோ இல்லை என நம்பலாம். ஆகவேதான் சமூக மாற்றத்தை நோக்கி செயற்படுகின்றவர்கள் தாம் பயன்படுத்துகின்ற மொழியைப் பயன்படுத்துவதில் மிகவும் ஆழமான விழிப்புநிலை உடையவர்களாகவும் பிரக்ஞையுடன் செயற்படவேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியமானதாக இருக்கின்றது. ஏனெனில் நம் குரல்களிலிருந்து ஒலிப்பது ஆண்களின் குரல். நாம் பேசுவது, எழுதுவது ஆண்களின் மொழி. இந்தக் குரல்களும் மொழிகளும் ஆதிக்கம் செய்கின்ற ஆண்களின் உலகத்தில் தான் நமது வாழ்வு. எங்கும் எதிலும் ஆண்களின் தலைமைத்துவம் மற்றும் அதிகாரம் பரந்து ஆழ்ந்து வேருன்றியிருக்கின்றது.

இவர்கள் உருவாக்கிய சமூக நிறுவனங்கள் மற்றும் ஆண்களின் கலாசாரம் என்பவற்றுக்குள்தான் ஆண்களினது மட்டுமல்ல பெண்களினது வாழ்வும் இருக்கின்றது. இதற்குள் வாழ்வது ஆண்களுக்கு ஒப்பிட்டளவில் பிரச்சனையில்லாது இருக்கலாம். ஆனால் நிச்சயமாக பெண்களுக்கு பிரச்சனையானதே. மறுபுறம் பெண்கள் இன்னும் தமது குரல்களை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் தமது மொழியைக் கண்டுபிடிக்கவில்லை. தாம் பயமின்றி சுதந்திரமாக வாழ்வதற்கான சமூகத்தையோ கலாசாரத்தையோ உருவாக்கவில்லை. ஆனால் அதைத் தேடிப் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதுவரை அவர்கள் ஆண்கள் உலகத்தில் வாழ்ந்து, ஆண்களின் மொழியைத்தான் பேசவேண்டியுள்ளது.

Female-Singer--300x216.jpg

யதார்த்தம் என்பது மேற்குறிப்பிட்டவாறு அல்லது இதற்கு அண்மையாக இருக்கின்ற ஒன்று. அதேவேளை, ஆண்களும் பெண்களும் தமது வர்க்க, சாதிய, இன, நிற, கல்வி மற்றும் சுழ் நிலைகளுக்கு ஏற்ப அதிகாரமுள்ளவர்களாகவும் அதிகாரமற்றவர்களாகவும் இருகின்றார்கள் என்கின்ற இன்னுமொரு யாதார்த்தமும் உள்ளது. இதற்கேற்ப ஒருவரது குரல் உரத்தும் மற்றவரது குரல் தாழ்ந்தும் ஒலிக்கும். அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகாரங்கள் சலுகைகள் மாறுபடும். பொதுவாக இந்திய சமூகத்தில் பிராமணிய உயர் வர்க்கத்தினருக்கும், மேற்குலகில் உயர் வர்க்க வெள்ளையினத்தவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அதிகமாக கிடைக்கின்றன. ஒரு அடக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணைவிட பிராமணிய பெண்ணுக்கும் புலம் பெயர்ந்து வாழ்கின்ற வெள்ளை நிறமல்லாத ஆணைவிட வெள்ளையினப் பெண்களுக்கும் சலுகைகளும் வாய்ப்புகளும் அதிகாரமும் செல்வாக்கும் அதிகமாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் அவர்கள் சுந்திரமாக தனித்து பயமின்றி நடமாட முடியாது. அந்தளவிற்கு பல்வேறு தளங்களில் பலவகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள். ஆகவே இவ்வாறான பிராமணிய அல்லது வெள்ளையினப் பெண்களுக்கு எதிராக சாதி, இன, நிற மற்றும் பலவகையான காரணங்களை அடிப்படையாகக்கொண்டு பாலியல்ரீதியாக வசைபாடுகின்றமை அவர்களுக்கு எதிரான ஆண்களின் இன்னுமொருவகையான அடக்குமுறைதான். இந்த ஆண்கள், நாளை சாதி, மத, இனரீதியாக அடக்கப்படுகின்ற பெண்களுக்கு எதிராகவும் இவ்வாறன பாலியல் வசைகளை முன்வைக்க தயங்கமாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முன்வைப்பதற்கான காரணங்கள் மட்டுமே வேறுபடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சாதி, மத, இன ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட பெண் பலதளங்களில் அடக்குமுறைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். ஆகவேதான் ஒவ்வொருமுறையும் அடக்குமுறைகள் எந்த வடித்தில் எங்கிருந்து வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியிருக்கின்றது. எதிர்க்கும் சொல் மற்றும் முறை தொடர்பாக பிரக்ஞை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டி உள்ளோம்.

மேற்குறிப்பிட்டவாறான ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த, அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. ஆனால் இந்த நிலை இன்று சிறிது சிறிதாக மாறி வருகின்றது. ஆகவே தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். அதேவேளை இந்தப் பெண்களும் தமது கருத்துக்களைக் கூற ஆணாதிக்க சமூகத்திலிருந்து கற்ற வசை மொழிகளை அறிந்தோ அறியாமலோ பயன்படுத்துகின்றார்கள். ஆனால் சமூக அக்கறைகொண்டு தமது சாதிய தேசிய அரசியல் நிலைப்பாடுகளினடிப்படையில் இவற்றை எதிர்க்கின்ற பெரும்பான்மையான ஆண்கள் மேற்குறிப்பிட்ட பெண்களைவிட மேலும் கீழிறங்கி பாலியல் வசை மொழிகளை இவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். இது பெண்களது கருத்துக்கூறல் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துகின்றது. ஆகவேதான் இது ஆரோக்கியமான விவாத முறையற்றதாக இருக்கின்றது. இதற்கு மாறாக வசை மொழியை விமர்சிப்பதுடன் அதிலிருந்து மேல் சென்று அவர்கள் முன்வைத்த கருத்தை கருத்தியல்ரீதியாக மட்டுமே விமர்சிக்கின்ற பண்பு அனைவருக்கும் வரவேண்டும். அப்பொழுதுதான் தவறாக விமர்சனத்தை முன்வைத்தவர்கள் தமது தவறை உணரவும் மேலும் வளரவும் வழிவகுக்கும். இவ்வாறன ஒரு சூழலில்தான் பல பெண்கள் நம்பிக்கையுடன் விவாதங்களில் பங்கேற்றகவும் முன்வருவார்கள். ஆனால் நாம் வாழும் சூழல் தமது கருத்துக்கள் தவறானதாக இருந்தபோதும் அதை முன்வைப்பவர்களை தடுத்து நிறுத்துவதாகவே உள்ளது. இது ஆரோக்கியமானதல்ல.

ஒரு தனிநபர் குறிப்பிட்ட சாதி, வர்க்கம், இனம் என்பவற்றில் பிறந்தது என்பது தற்செயலானது. இதற்காக அவரது கருத்துக்களுக்காக அவரை எதிர்ப்பதும் மறுப்பதும் ஆரோக்கியமற்ற ஒரு போக்கு. ஏனெனில் ஒரு சமூகத்தில் வளர்ந்தவர் தனது நம்பிக்கைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப குறிப்பிட்ட சமூகத்தின் கருத்துக்களையே பிரதிநிதித்துவப்படுத்துவார். நாம் அறிகின்ற கருத்துக்களையும் பார்க்கின்ற நிகழ்வுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்கின்ற பண்போ கல்வியுட்டலோ நமது சமூகங்களில் இல்லை. ஆகவே ஒருவரது கருத்துக்கள் ஆரோக்கியமான தளத்தில் விமர்சிக்கப்படவேண்டும். குறிப்பிட்ட தனிநபரல்ல மாறாக அவர் சார்ந்து நிற்கின்ற கருத்தியலும் நிறுவனமும்தான் விமர்சனத்திற்கு உட்படவேண்டும். அப்பொழுதுதான் நாம் நம்புகின்ற சரியான பாதையில் பயணிப்பதற்காக குறிப்பட்ட நபரையும் வென்று எடுக்கலாம். இது அதிகாரத்துவ கருத்துக்களையும் அதன் நிறுவனங்களையும் வன்முறையற்ற பாதையில் செயலிழக்கச் செய்யக்கூடிய ஒரு வழிமுறையாகும். ஆனால் நாம் அதைச் செய்யாது நமது வசைபாடல்கள் மூலம் தனிநபர்களை விரோதிகளாக்கிவிடுகின்றோம். இவ்வாறன வழிமுறை நீண்டகால நோக்கில் எந்தவகையிலும் பயனளிக்கப்போவதில்லை. மாறாக அடக்கப்படுகின்றவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படவும் பலமின்றி பிரிந்திருக்கவும், அதிகாரத்திலுள்ளவர்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கவுமே வழிவகுக்கும். ஆகவே நாம் பொறுப்புடன் செயற்படுவதுடன் சில பொதுவரையறைகளையும் நமக்குள் உருவாக்கவேண்டும்.

இந்த அடிப்படைகளில்தான் அண்மையில் நடைபெற்ற தம்மீதான வசைபாடல்களுக்கு எதிரான முறைப்பாடுகளை கவனிக்கவேண்டியுள்ளது. ஒரு (பிரபல்யமான ஆனால் சமூக மாற்ற மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாத) பெண் தன் மீது ஆண்கள் பொதுத்தளங்களில் முன்வைத்த பாலியல் வசைகளுக்கு எதிரான முறைப்பாட்டை தனது புரிதலுக்கு உட்பட்ட, தெரிந்த, பாதுகாப்பானது என நம்புகின்ற வழிமுறைக்கூடாக முன்வைத்தார். இது ஒரு சதாரண பெண்ணின் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது இவரது செயற்பாடு புரிந்துகொள்ளப்பட கூடியதே. இதற்கு மாறாக இப் பெண்ணிடம் ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாருக்குரிய பண்பை எதிர்பார்ப்பது எந்தவகையிலும் நியாயமற்றது. ஆனால் சமூக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலும் பரந்த அறிவும் கொண்ட, சமூக அரசியல் மாற்றங்களை நோக்கமாகக் கொண்டு புரட்சிகரமாக செயற்படுகின்ற பிரபல்யமான ஒருவர் தன் மீதான வசைகளுக்காக இவ்வாறன ஒரு முறையிடலை வைக்கும் பொழுதுதான் பிரச்சனை உருவாகின்றது. இது நமக்கு கவலை மற்றும் நம்பிக்கையினத்தை மட்டும் வழங்கவில்லை, நமது புரிதலுக்கும் எழுத்துக்கும் யதார்த்த வாழ்விற்கும் இடையிலான முரண்பாடுகளை கேள்விக்குட்படுத்துகின்றது. இதை நாம் புரிந்துகொள்ளதாவரை நமது நிலைப்பாடுகள் தனிநபர் சார்ந்ததாகவே இருக்கும் மாறாக கருத்துநிலைகள் சார்ந்தவையாக இருக்காது. இது எந்தவகையிலும் சமூக மாற்றத்தை உருவாக்க உதவப்போவதில்லை.

பொது இணையத்தளங்களான வலைப்பதிவுகள், முகப்புபுத்தகம், டூவிட்டர்கள் போன்றவற்றில் எழுதுகின்ற ஒவ்வொருவரும் இணைய ஊடகவியளாளர்களே என்றால் மிகையல்ல. ஆகவே இவ்வாறு எழுதுகின்ற கருத்துத் தெரிவிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஊடக அறத்தைப் பேணுகின்ற பொறுப்பு உள்ளது. ஆனால் பொறுப்புடன் இருக்கவேண்டிய பிரபல்யமான ஊடகங்களே இவ்வாறன அறங்களை மீறி செயற்படும் பொழுது இணையத்தளங்களில் குப்பைகளைக் கொட்டும் எழுத்தாளர்களைப் பற்றி என்ன தான் கூறமுடியும். ஆனால் நம் மனதுக்குள் அடக்கிவைக்கப்பட்டிருக்கின்ற மனவக்கிரகங்களான இந்தப் குப்பைகள் ஆண்களின் கழிப்பறைகளில் எழுதுவதைப் போல் இருக்கின்றபோதுதான் வருத்தமாக இருக்கின்றது. இதுவே பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. இவ்வாறு நாம் கழிப்பறைகளில் கொட்டுகின்றதைப்போல பொதுவெளிகளிலும் கொட்டவேண்டுமா? இது எந்தளவிற்கு சக மனிதர்களை வளர்க்க உதவி புரியும்? ஆகவேதான் இந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்திருக்கும் இந்த இணைய மற்றும் வலைப்பதிவு வாய்ப்புக்களை எவ்வாறு பயனுள்ளவகையில் பொறுப்புடனும் ஆரோக்கியமாகவும் நம் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்போகின்றோம் என்பது நம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வியாகும். இதற்கு சுந்திரம் என்பது பொறுப்புடன் கூடியது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே சாத்தியமானது. ஆனால் இவ்வாறன புரிதல் இணைய எழுத்தாளர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இது தூரதிர்ஸ்டமானது.

http://eathuvarai.net/?p=2046

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.