Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதவிக் குட்டியின் மனோமி - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாதவிக் குட்டியின் மனோமி - யமுனா ராஜேந்திரன்

18 நவம்பர் 2012

manomi_CI.jpg

சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்த ராம் ராவணன் (மலையாளம் : 2010) மலையாள இலக்கியவாதியான மாதவிக்குட்டியின் மனோமி எனும் படைப்பை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்தியாவுக்கு வர நேர்ந்த ஈழத் தமிழ் அகதிகள், போராளிகள் தமிழகத்திலும் கேரளத்திலும் ஏற்கும்-ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த திரைப்படம். தமிழக-கேரள வெகுஜன சினிமா சட்டகம், தணிக்கை மற்றும் அரசியல் நியதிகளுக்கு உட்பட்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் ராம் ராவணன். ஈழத் தமிழ் மக்களது வாழ்வும் போராட்டமும் குறித்து திசைமாற்றப்பட்ட தரவுகளை வெகுஜன நினைவுகளில் பதிக்கும் படம் ராம் ராவணன்.

ஆயுதவிடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் காயம்பட்ட ஒரு போராளி கேரள மாநிலத்திற்கு வருகிறான. கோவை மாவட்டத்திற்கு அண்மையிலுள்ள கேரள எல்லையில் வாழ்கிற ஓரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்தப் போராளிக்கு அடைக்கலம் தருகிறார்கள். அந்தப் போராளியுடன் சக ஆண் போராளி ஒருவரும் பெண் போராளி ஒருவரும் தங்கியிருக்கிறார்கள். கவிஞனும் கதாநாயகனுமான போராளியின் பெயர் திருச்செல்வம்.

கேரளத்தில் போராளிக்கு அடைக்கலம் கொடுத்த குடும்பம் இலங்கைக்கு ஒரு போது குடியேறி இலங்கையில் நடைபெற்ற தமிழருக்கு எதிரான கலவரத்தையடுத்து மீளவும் இந்தியா திரும்பிய குடும்பம். அந்தக் குடும்பத் தலைவரின் பெயர் அண்ணாத்துரை. அவரது குடும்பம் இலங்கையிலிருந்தபோது, தமிழருக்கு எதிரான கலவரத்தின் போது அவர்களைக் காத்தவர்கள் ஒரு சிங்களக் குடும்பத்தினர். அந்தச் சிங்களக் குடும்பத்தின் தாய் தனது பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றுவிட்டு மரணமடைந்து விடுகிறார்.

குழந்தையைத் தமிழக் குடும்பத்தலைவன் தன் மகளே போல பாசம் காட்டி வளர்க்கிறார். அவரது குடும்பம் இந்தியா திரும்பிய பிறகும் அந்தப் பெண் குழந்தை வளர்ந்து அடிக்கடி இந்தியா வந்துபோவது உண்டு. அந் இளம்பெண்ணின் தகப்பன் தமிழ் போராளிகள் இலங்கை ராணுவத்தின் மீதும் சிங்கள மக்கள் மீதும் மேற்கொண்ட ஒரு தாக்குதலில் கொல்லப்படுகிறார். அனாதையான பெண் அண்ணாத்துரையிடம் அடைக்கலம் கோரி இந்தியா வருகிறாள். அந்த அனாதையான இளம் சிங்களப் பெண்ணின் பெயரே மனோமி.

அவளைத் தன் மகள் போலவே பாசம் காட்டும் அண்ணாத்துரை அவளுக்கு இந்தியாவிலேயே மணம் செய்விக்கவும் முயல்கிறார். அவள் கேரளத்தில் ஓடித் திரிந்த இடங்களுக்குச் செல்லும் தருணமொன்றில் ஒரு கைவிடப்பட்ட மாடிவீட்டில் காயம்பட்டுத் தனிமையில் கிடக்கும் போராளி திருச்செல்வத்தைக் காண்கிறாள். அவனது காயங்களுக்குக் கட்டுப்போட்டு உதவுகிறாள். அவனுக்கு உணவு கொண்டு தருகிறாள். அவனது கவிதைகளை அவள் ஏற்கனவே படித்திருப்பதால் பிரபலமான அந்தக் கவிஞனின்பால் அவர் ஈர்க்கப்படுகிறாள்.

அவள் திருச்செல்வத்தை மணந்து கொள்ளும் தனது விருப்பத்தை அண்ணாத்துரையிடம் தெரிவிக்கிறாள். ஆயுதம் தாங்கிய போராளிகளை வெறுக்கும் காந்தியவாதியான அண்ணாத்துரை அவளது விருப்பத்தை முதலில் மறுத்து, பிற்பாடு ஏற்கிறார். இந்த வேளையில் மனோமியினதும் அண்ணாத்துரையினதும் வேண்டுகோளை மறுத்துவிட்டு திருச்செல்வம் மறுபடியும் போராட்டத்தில் ஈடுபட ஈழத்திற்குத் திரும்பி விடுகிறான்.

மனோமியை அண்ணாத்துரையின் குடும்பத்திலுள்ளவர்கள் சிங்களப் பெண் என்பதற்காக ஏற்க மறுக்கிறார்கள். வெறுக்கிறார்கள். மனோமி வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். இது கதையின் முதல் பகுதி.

கதையின் இரண்டாம் பகுதி ஈழத்திற்குச் சென்ற திருச்செல்வம் மறுபடியும் இந்தியாவுக்குத் திரும்பி வருவதுடன் துவங்குகிறது. அவனால் மனோமியையும் மறக்க முடிவதில்லை. கேரளா வரும் அவனை அங்குள்ள அவனது சக போராளிகளான ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள். சிங்களப் பெண்ணான மனோமியின் மீதான அவனது நேசம் இருவருக்குமே உவப்பானதாக இருக்கவில்லை.

திருச்செல்வம் கடல் வழியில் கேரளத்துக்கு வந்திருப்பதனையறிந்த கேரள காவல்துறை அந்தப் பயங்கரவாதியைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடிக் கொண்டிருக்கிறது. திருச்செல்வம் மீளவும் எதற்காக இந்தியா வந்தான்? அதற்கான காரணம் என்ன? இயக்கம் அதனை விரும்புகிறதா? இயக்கம் திருச்செல்வத்தைக் கண்காணிக்கிறது. சிங்களப் பெண்ணான மனோமியை அவன் தேடிச் செல்வதாகச் சந்தேகிக்கிறது. திருச்செல்வம் இந்தியா திரும்பியதற்கான காரணம் இந்தியாவில் எங்கோ இருக்கும் அவனது தாயைச் சந்திப்பதும் அவளோடு தங்குவதும்தான்.

காவல்துறையிடமிருந்தும் தன்னைத் துரத்தும் தமது சக போராளிகளிடமிருந்தும் தப்பும் திருச் செல்வம் ஒரு மலைக் குடிசையில் தனது தாயைச் சந்திக்கிறான். அந்த வீட்டில் தாயைப் பராமறிக்கும் கருணையுள்ள பெண்ணாக மனோமியையும் சந்திக்கிறான். தாய் மனோமியை மணந்து கொண்டு கண்காணாத இடத்திற்குச் சென்றுவிடுமாறு மகனைக் கேட்கிறாள்.

காவல்துறை திருச்செல்வம் இருக்கும் இடம் தெரிந்து அங்கு வர, மனோமியுடன் தபபுகிறான் திருச்செல்வம். அவள் நிரந்தரமாக அவனுடன் வர விரும்புகிறாள். திருச்செல்வம் அவளது தந்தையைக் கொன்றது தானே என்பதாலும், தான் எப்போதும் கொல்லப்படலாம் என்பதாலும், தனது தாயைக் கவனிக்க அவள் வேண்டும் என்பதாலும் அவளைத் தன்னுடன் வருவதை ஏற்பதில்லை. மனோமி துயரத்துடன் அவனை விட்டு விலகும் போது மனம்மாறி அவளை அழைத்தபடி அவளை நோக்கி முன்னேறுகிறான் திருச்செல்வம்.

இப்போது அவனை ஏதோ ஒரு வகையில் விரும்பகிற தனது சகபோராளிப் பெண்ணினால் சுட்டுக்கொல்லப்படுகிறான். படம் முடிவுக்கு வருகிறது.

அனாதையான மனோமி அன்பு சுரக்கும் கருணை மரபாளன் புத்தனின் மகள் நான் என்கிறாள். அண்ணாத்துரை ஆயதமேந்தியவர்களை வெறுக்கிறார். அண்ணாத்துரையின் குடும்பத்தவர்கள் தமிழ் வெறியர்களாக அனாதைச் சிங்களப்பெண்ணை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். திருச்செல்வம் மனோமியின் தந்தையைக் கொலை செய்தவனாக இருக்கிறான்.

காட்சி ரூபம் எனும் அளவில் படத்தின் முதல் காட்சியே இதுதான். ஆரவாரமற்று அமைதியாக இருக்கும் இலங்கை இராணுவ முகாமொன்றின் மீதும் சூழவுள்ள சிங்கள மக்கள் குடியிருப்புகளின் மீதும் ஈழப்போராளிகள் தாக்குதல் தொடுக்கிறார்கள். அந்தக் குடியிருப்புகளிலிருந்து சிறுமியான மனோமியும் அவளது தந்தையாரும் உயிர் தப்பிச் செல்கிறார்கள்.

காந்தியரான அண்ணாத்துரை, கருணையின் வடிவான மனோமி, பயங்கரவாதிகளை வேட்டையாடும் காவல்துறை, சொந்தப் போராளியைச் சுட்டுக்கொல்லும் ‘காட்டுச் சட்டங்கள் கொண்ட இயக்கம்’ (தனது அன்னையைக் காணப் போவதைத் தடுக்கும் சக போராளிகளிடம் திருச்செல்வம் சொல்லும் வார்த்தைகள்) என திடீர் திருப்பங்கள் கொண்ட சோகமயமான இந்தக் காதல் கதையில் ஏழைகளுக்கும் வறுமைக்கும் என்று முடிவுகிட்டும் என்று திருச்செல்வம் கவிதை எழுதுகிறார். பகத்சிங், நேதாஜி, நெல்சன் மர்ண்டேலா இவற்றுடன் ஈழம்-தமிழன் என்றும் இடையிடையே வசனம் பேசுகிறார்.

கதை மலையாளக் கதை என்றாலும், இதனை மலையாள மொழியில் சொல்லியதில் எந்தப் பொருத்தமும் இல்லை. தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் எல்லைப் புறத்திலுள்ள கேளத்தினுள் கதை நடக்கிறது. கதையின் மையக்குடும்பம் தமிழக் குடும்பம். பிறிதொரு பகுதிக் கதை மாந்தரான ஈழத்தவரும் தமிழர்கள். மனோமி தமிழ்க் குடும்பத்தினால் வளர்க்கப்பட்டள். இவர்களோடு சம்பந்தப்பட்ட காவல்துறை மட்டுமே மலையாள மொழி நிறுவனம். மலையாள மொழி இக்கதைக்கு முற்றிலும் அன்னியமான மொழி. படத்தின் ஆதாரத்தன்மை என்பது இதனால் குலைந்து போகிறது.

இந்த இடத்தில் சைனைடு அல்லது குப்பி எனும் படத்தினைக் குறிப்பிட விரும்புகிறேன். படம் கர்னாடகத்தில் நடந்தாலும் கர்னாடகத்தில் வாழும் தமிழரே பெரும்பாலுமான பாத்திரங்கள். இதுவே தென்னிந்தியக் குடிசனப் பரம்பலின் இயல்பு. ராம் ராவணன் படத்தில் அவரவர் வீட்டிலும் வெளியிலும் பேசும் தமிழ்-மலையாள மொழியை இயல்பாகச் சொல்நெறியாகக் கொண்டிருப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க ஆதாரத்தன்மையுடன் ஒரு வெகுஜன திரைப்படத்தினைக் கொடுத்திருக்க முடியும். முழுமையான மலையாள மொழிப்படமாக எடுத்ததால் அந்த வாய்ப்பு தவரவிடப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் முதல் திரையிடல் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடக்கவிருந்தது. சுரேஷ் கோபி அதற்காக சென்னைக்கும் வந்திருந்தார். நாம் தமிழர் கட்சியின் கடுமையான எதிர்ப்பினால் சுரேஷ் கோபி தனது திட்டததை கைவிட்டு கேரளா திரும்பினார். அரசியல் எனும் அளவில் கேரள மாநிலத்தவரின் அதிகாரமட்ட சார்பு நிலைகள் என்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் சார்பு நிலை என்பது புத்தபகவானின் அகிம்சைக்கும் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாகச் சுட்டி அறுதியில் வரலாறு குறித்த மயக்கமான இலங்கை அரசு சார்பு நிலையையே எடுக்கிறது.

போராளி இயக்கத்தினை அரசியல் ரீதியில் விவாதிக்கிற அளவு அது இலங்கை அரசு மற்றும் பௌத்த-சிங்கள அரசியலை அது விவாதிக்க முனைவது இல்லை. அன்பின் வடிவமான புத்தனின் மகளான மனோமியின் தியாகமே படத்தில் முன்னிறுத்தப்படுகிறது. ஈழத்தில் நடைபெறும் யுத்தம் வறுமைக்கும் செல்வச் செழிப்புக்கும் இடையிலான யுத்தமல்ல மாறாக உரிமைக்கான யுத்தம் என்பது கூட படத்தின் இயக்குனரான பிஜூ வட்டப்பாராவுக்குத் தெரியவில்லை என்பது அறியாமையதாக இருக்க முடியாது அரசியலாகவே இருக்க முடியும். அழகான கேளரத்துப் புல்வெளிகளும் அழகிய கேரளப் பெண்களும நிரம்பிய, யாத்ரா மொழி எனும் கவித்துவமான பாடலும் கொண்ட இப்படம் கதைக்கருவில் உள்ளழகு கொண்ட திரைப்படம் இல்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85550/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.