Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூர சங்காரமும் மாபெரும் இடப்பெயர்வும்

Featured Replies

[size=4]வருடாவருடம் எமது முருகன் கோயில்களில் சூரசங்கார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆறுநாள்கள் கந்தஷஷ்டி விரதம் அனுஷ்டித்து ஆறாம் நாள் மாலையில் முருகன் ஆலயங்களில் இடம்பெறும் [/size]சூரன்போரைத் தரிசித்து ஏழாம் நாள் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்வதுண்டு.

[size=2]

[size=4]அசுரர்கள் தேவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை செய்ததாகவும் தேவர்கள் சிவனிடம் போய் முறையிட்டதாகவும் சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க அதிலிருந்து ஆறு பொறிகள் வெளியேறி சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது விழ அவை ஆறு குழந்தைகளாக மாறியதாகவும் அவற்றைக் கார்த்திகைப் பெண்கள் அள்ளியெடுத்து உமாதேவியார் கையில் கொடுக்க அவை ஆறுமுகம் கொண்ட ஒரு குழந்தையாக மாறியதாகவும் எமது இந்துசமய புராணங்கள் கூறுகின்றன.

அந்தக் குழந்தையையே நாம் ஆறுமுகன், சரவணன், கார்த்திகேயன் போன்ற பெயர்களில் வணங்கி வருகின்றோம். பின்பு உமாதேவியார் முருகனிடம் வேலைக் கொடுத்து அசுரரை அழித்து வரும்படி கட்டளையிட அவன் அசுரருடன் போரிட்டு அவர்களை அழித்ததையே நாம் சூரன் போராகக் கொண்டாடுகிறோம்.[/size][/size]

[size=2]

[size=4]பானுகோபன், தாரகாசூரன் என இரு அசுர தலைவர்களும் அழிக்கப்பட முருகன் பத்மாசுரனை வெற்றிகொண்டு அடிமையாக்கி மயில் வடிவத்தைத் தனது வாகனமாகவும் சேவல் வடிவத்தில் தனது கொடியாகவும் ஏற்றுக் கொண்டதாகப் புராண வரலாறு. எப்படியிருந்தபோதிலும் தேவ அசுர யுத்தத்தில் தேவர்கள் பெற்ற வெற்றியை நினைவுகூரும் ஒரு சடங்காகவே இது கருதப்படுகிறது.

ஆனால் வட இந்தியாவில் வாழும் இந்துக்கள் முருகனைக் கடவுளாக ஏற்பதோ, ஆலயம் அமைத்து வழிபடுவதோ கிடையாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதும் எம் மத்தியில் முருகவழிபாடு மிகவும் மேன்மையுடன் பேணப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி வேல் வணக்கம் ஒரு வீர வழிபாட்டு முறையிலிருந்து தோன்றியதாகவும் பல தொல்லியல் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

ஆதிதிராவிட நாகரிகம் மேலோங்கியிருந்த காலத்தில் போரில் மடிந்த வீரர்களின் புதைகுழிகள் மேல் வேல் நட்டுப் படையல் செய்து பூசை மேற்கொண்டு வந்ததாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்றும் முருகன் குறிஞ்சி நில மக்களின் தெய்வமாக வழிபடப்பட்டு வருவதை நாம் அவதானிக்கலாம். அதேவேளையில் முல்லை நில மக்களும் (வேடர் கதிர்காமம்) நெய்தல் நில மக்களும் (மீனவர்கள் செல்வச்சந்நிதி) வாய்கட்டிப் பூசை செய்து வேல் வணக்கம் செய்து வருகின்றனர்.

எனவே தான் எமது மக்கள் கந்தஷஷ்டி விரதத்தை மிகவும் புனிதமாகவும் பக்தி சிரத்தையுடனும் அனுஷ்டித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர் விரதம் அனுஷ்டித்து அவர் அதைக் கைவிடும்போது அவரின் பிள்ளைகளில் ஒருவர் அதைத் தொடர்வது ஒரு முக்கிய மரபாகப் பேணப்பட்டு வருகிறது.

தலைமுறை தலைமுறையாக கந்தஷஷ்டியும் சூரன்போரும் அனுஷ்டிக்கப்பட்டு வந்தபோதிலும் 1995 ஆம் ஆண்டு சூரன்போர் நாள்களில் துயரக் கதை படிந்த வரலாற்றை நாம் மறந்துவிட முடியாது. நாம் இறைவழிபாடு செய்து விரதம் மேற்கொண்ட அந்த நாள்களில் தான் இலங்கை இராணுவம் வடபகுதி மீது ஒரு பெரும் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டது.

விமானத்தாக்குதல்கள், டாங்கிகள், எறிகணைகள் என்பன மழையாகப் பொழிய இராணுவம் முன்னேறப் பெரும் முயற்சியை மேற்கொண்டது. எங்கள் ஆலயங்களில் விரத பூசைகள் நடந்து கொண்டிருக்க விடுதலைப் புலிகள் நெருப்பு மழைக்குள் நின்று படையினரைத் தடுத்து நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தனர்.

நல்லூரில் ஆறாம் நாள் சூரன்போர் நடக்க நீர்வேலியில் பெரும் போர் நடந்தது. அடுத்தநாள் பாரணை. விமானக் குண்டுகள் விழுந்து கொண்டிருக்க எமது மக்கள் பாரணையை அதிகாலையில் முடிக்கிறார்கள். அந்தப் பாரணைப் பூசையின் பின் எமது ஆலயங்களில் பல மாதங்கள் பூசைகள் நடக்கவுமில்லை, மணிகள் ஒலிக்கவுமில்லை.

இராணுவம் விமானக் குண்டு வீச்சுக்களையும் எறிகணைப் பொழிவையும் மேற்கொண்டவாறே கோப்பாயை நோக்கி முன்னேறிய நிலையில் வேறு வழியின்றி 5 லட்சம் மக்கள் இரவோடிரவாக அந்தக் குறுகிய செம்மணி வீதியால் வலிகாமத்தை விட்டு வெளியேறினர்.

5 லட்சம் மக்கள், குழந்தைகள், முதியோர், பெண்கள், நோயாளர்கள் ஒரு குறுகிய பாதையில், குறுகிய பாலத்தினூடாக வெளியேற வேண்டிய அவலம். தலைக்கு மேல் சுற்றும் விமானங்களும் நெருங்கி வரும் வெடியோசைகளும் மக்களை ஓட ஓட விரட்டுகின்றன.

கால் வைத்து நடக்க இடமின்றி மக்கள் அங்குலமங்குலமாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானம் ஒன்று தாழப் பறந்து இரண்டு குண்டுகளைத் தள்ளிவிடுகின்றது. சில உயிர்கள் பறிக்கப்பட மனிதக் குருதி செம்மணி நீரில் கலக்கிறது. எங்கும் ஒரே அவல ஓலம். எமது மக்களின் நிலை கண்டு வானம் விம்மி வெடித்து மழையாகப் பொழிகிறது.

ஆனாலும் உப்பு நீர் வாவியில் குடிக்க நீரின்றி குழந்தைகள் தாகத்தில் கத்த ஒரு தாய் குடையில் வழிந்த நீரை ஏந்திக் குழந்தைக்குக் கொடுக்கிறாள். மழையில் நடுங்கிய முதியவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குகின்றனர். நாவற்குழி, கைதடி, நுணாவில், சாவகச்சேரி பகுதிகளின் பாடசாலைகளும் பொது மண்டபங்களும் எமது மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.

1995 ஆம் ஆண்டின் சூரன்போர் சாவுகளாலும், காயங்களாலும் பசி, பட்டினியாலும் இடப்பெயர்வாலும் எழுதிய சோக வரலாறு இது. கந்தஷஷ்டிப் பாரணையன்று தொடங்கிய அந்த வரலாறு இன்று வரை தொடர்கிறது.

எமது மக்கள் தென்மராட்சியின் பல பகுதிகளிலும் வீட்டு விறாந்தைகள், தாவாரங்கள், ஒத்தாப்புக்கள், ஓலைக்குடில்கள் என எவ்வித வசதியுமின்றி வாடிக் கொண்டிருக்க முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத்த யாழ்ப்பாணம் கச்சேரியில் சிங்கக் கொடியேற்றித் தன் வெற்றியைப் பிரகடனம் செய்துவிட்டு அந்தச் செய்தியை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா விஜயகுமாரணதுங்கவுக்கு அனுப்பி வைத்தார்.

சில மாதங்களின் பின்பு மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினர். எங்கும் இராணுவ முகாம்களும், காவலரண்களும் பரவிக் கிடக்கின்றன. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று தெரியாத பயங்கர நிலை. பல வீடுகளில் தொலைக்காட்சி, வீட்டுத் தளபாடங்கள் உட்படப் பல பொருள்கள் களவாடப்பட்டுக் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டன.

ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாகிச் சமிபாடு அடைந்துவிட்டன. எனினும் மீண்டும் வாழ்வைத் தொடங்கும் நோக்குடன் ஒரு பகுதியினர் சொந்த இடங்களுக்குத் திரும்பினர். மறுபகுதியினர் வன்னியை நோக்கி நகர்ந்தனர். ஆனால் வலிகாமத்தில் குடியேறிய மக்கள் முற்றாகவே தங்கள் நிம்மதியை இழந்தனர்.

வெள்ளை வான்களின் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டது. இரவிரவாக வாலிபர்கள், இளம் பெண்கள் கடத்தப்பட்டனர். இளம் குடும்பஸ்தர்கள் காணாமற் போயினர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்டவர்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் வீசப்பட்டனர்.

ஆயிரக் கணக்கானோர் காணாமல் போயினர். 1995 ஆம் ஆண்டு சூரன் போர் நிறைவுபெற்ற பின்பு தொடரப்படும் தமிழ் மக்கள் மீதான அழிவுப் போர் யாழ். குடாநாட்டை இனவெறியர்களினதும் ஆயுதக்குழுக்களதும் வேட்டைக் காடாக்கியது.[/size]

[/size][size=2]

[size=4]ஆனால் பாடசாலை மாணவி படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பல விடயங்களை அம்பலத்துக்குக் கொண்டு வந்தது.

கொலைக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ராஜபக்ஷ செம்மணிப் படுகொலைகள் பற்றியும் புதைகுழிகள் பற்றியும் வெளிக் கொண்டு வந்தான். பல சடலங்களின் எச்சங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. ஆனால் இன்றுவரை இவை தொடர்பாக எவரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் கொலைகள் மட்டும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அன்று இந்த நரபலி வேட்டையைத் தலைமையேற்று நடத்திய ஜெனரல் அனுரத்த ரத்வத்த பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். ஊழல் மோசடி, முறையற்ற விதத்தில் சொத்துச் சேர்த்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைவாசம் அனுபவித்தார். இறுதியில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

அன்று சிங்கள மக்களின் ஒப்பற்ற வீரபுருஷனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட இவரின் இறப்பு சிங்கள மக்களாலோ, ஆட்சியாளர்களாலோ கௌரவிக்கப்படவுமில்லை பெரிதாகப் பொருட்படுத்தப்படவுமில்லை. ஆனால் அவரால் தலைமையேற்று நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புப் போரும் இன அழிப்புக் கொடூரங்களும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டு விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

அதேவகையான கொடூர வீரபுருஷர்களாகப் பலர் முன்வந்து செயற்பட்டு வருகின்றனர். பத்மாசுரன் தன் வீரத்தளபதிகளான தம்பியர் பானுகோபன், தாரகாசுரன் ஆகியோர் போரில் இறந்தபின்பு, படையினர் அனைவரையும் இழந்த பின்பு ஓடித் தலைமறைவாக முயன்றும் முடியாத நிலையிலேயே அவன் சேவலும் மயிலுமாக்கப்பட்டு அடிமையானான்.

ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய சில குழுக்கள் எதிரிகளின் கொடிகளில் சேவல்களாகவும் அவர்களை சுமக்கும் மயில்களாகவும் முற்கூட்டியே மாறி தமிழ் மக்களை அழிப்பதில் ஆட்சியாளர்களுக்குத் துணை நிற்கின்றனர். வெள்ளை வான்களில் திரிந்து வேட்டை நடத்தினர்.

இன்று இன அழிப்பாளர்களைச் சுமப்பது மட்டுமன்றி அவர்களின் கொடிகளில் பறந்து கொக்கரித்து வருகின்றனர். தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

1990 இல் விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தொடர்பாக அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதில் பல தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு சில தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணீர்விட்டனர்.

அதைத் தவறு என்று எவரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்களுக்கு 1995 இல் 5 லட்சம் தமிழ் மக்கள் வலிகாமத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை ஏன் நினைவுக்கு வரவில்லை. ஏன் அன்றைய அவலத்துக்காவும் இன்றுவரை அது தொடர்வதற்காகவும் அவர்கள் கண்ணீர் விடவில்லை.

எப்படியிருந்த போதிலும் ஒவ்வொரு சூரன்போரின் போதும் பாரணை விரதம் சோற்றை அள்ளி வாயில் வைக்கும்போதும் எமது 1995 ஆம் ஆண்டின் அவலமும் அதைத் தொடர்ந்த படுகொலைகள், காணாமற் போதலும் நினைவில் வந்துபெரும் நெருப்பாய் எரியும். இன்று எம்மீது தொடரும் அடக்குமுறைகள் அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றி மேலும் கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.

போரில் வெற்றிபெற்ற முருகன் தேவனாகவும் தோல்வியடைந்த சூரன் அசுரனாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கலாம். பத்மாசுரன் வெற்றிபெற்றிருந்தால் அவனே தெய்வமாக்கவும் பட்டிருக்கலாம். இன்றும் அதேநிலைதான். போரில் வெற்றி பெற்ற ஆட்சியாளர்கள் மீட்பர்களாகவும் தோல்வியடைந்த விடுதலைப் போராளிகள் பயங்கரவாதிகளாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். ஆனால் நியாயத்தின் முன் எல்லாத் தீமைகளும் எரிந்து சாம்பலாகிவிடும்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5144142025528340[/size]

  • தொடங்கியவர்

[size=5]

1990 இல் விடுதலைப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது தொடர்பாக அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதில் பல தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு சில தமிழ் அரசியல்வாதிகளும் கண்ணீர்விட்டனர். [/size]

[size=5]அதைத் தவறு என்று எவரும் சொல்லிவிட முடியாது. ஆனால் அவர்களுக்கு 1995 இல் 5 லட்சம் தமிழ் மக்கள் வலிகாமத்தை விட்டு வெளியேற்றப்பட்டமை ஏன் நினைவுக்கு வரவில்லை. ஏன் அன்றைய அவலத்துக்காவும் இன்றுவரை அது தொடர்வதற்காகவும் அவர்கள் கண்ணீர் விடவில்லை.

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.