Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும்

அரவிந்த கிருஷ்ணா
 

மின்னத் தவறிய நட்சத்திரங்கள்

 

துப்பாக்கி படம் வெற்றிபெற்றதும் கோலிவுட்டில் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் தொடர்ந்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தோற்றுவருவதுதான். கடந்த ஆண்டு 'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' ஆகியவற்றிலிருந்து தொடங்கிய இந்தச் சறுக்கல் 'மாற்றான்' வரை மாற்றமில்லாமல் தொடர்ந்தது. பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட், வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், நாயக பிம்பங்கள் ஆகியவை படத்தின் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் தராது என்பதைக் காட்டிவிட்டன இந்தப் படங்கள். துப்பாக்கி இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

 

துப்பாக்கியைப் பற்றிப் பேசுமுன் இந்தச் சறுக்கலின் விவரங்களை அலசலாம்.

 

சினிமாவில் நட்சத்திரங்கள் என்றாலே தனி மவுசு இருக்கும். அதிலும் முன்னணியில் இருக்கும் பெரிய நட்சத்திரங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம், வி.ஐ.பி. மரியாதை, மக்களின் அன்பு என்று பலவகையான சிறப்புகள் அவர்களுக்கு உண்டு. அதனால்தான் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்குப் பரபரப்பு கூடிவிடுகிறது. இவர்கள் நடிக்கும் படங்கள் வெளிவந்தாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

 

ஆனால் இவர்கள் இருப்பதாலேயே ஒரு படம் ஓடிவிடுமா? மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் இருக்கும் படம் என்றால் முதல் சில நாட்களில் அதற்கான வரவேற்பு அமோகமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் படம் வெற்றி பெறவும் போட்ட பணத்தை எடுகவும் இது போதாது. எந்த மக்கள் இந்த நட்சத்திரங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களோ அதே மக்கள் அவர்கள் படங்கள் பிடிக்கவில்லை என்றால் இரக்கமில்லாமல் நிராகரித்துவிடுகிறார்கள்.

 

நட்சத்திர மதிப்பைப் பெற்ற படங்களில் பெரும்பாலானவை தோல்வியடைந்திருக்கின்றன. அஜித் நடித்து பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'பில்லா-2', விக்ரமின் 'தாண்டவம்', சூர்யாவின் 'மாற்றான்', தனுஷின் '3', கார்த்தியின் 'சகுனி', ஜீவாவின் 'முகமூடி' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.

 

இந்த ஆண்டு ரஜினி, கமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பெரிய நடிகர்களின் படங்களில் விஜய் நடித்த 'நண்பன்' மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் விஜய், தனக்கு ஏற்ற பத்திரம் என்று பார்க்காமல் பாத்திரத்திற்கேற்ற நடிப்பு என்ற அணுகுமுறையைக் கைக்கொண்ட படம் இது. ஷங்கர் என்ற சீனியர் இயக்குநர் சொல்வதை ஏற்றுக்கொண்டு நடித்ததும் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு படத்தை அடியொற்றிய மறு ஆக்கம் என்பதும் அந்தப் படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணிகள்.

 

பெரிய படங்கள் என்று சொல்லப்படும் இதுபோன்ற படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அனைத்து வகையான விளம்பரங்களும் இந்தப் படங்களுக்குக் கிடைக்கின்றன. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் திறந்தால் அந்த படங்களைப் பற்றிய செய்திகள் அலங்கரிக்கும். புத்தம் புதிதாக ஏதோ ஒரு விஷயம் இருக்கப்போகிறது என்ற தோற்றம் எழுப்பப்படும். படத்தின் 'ஸ்டில்களைக்' கூடப் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியிடுவார்கள். இசை வெளியீடு ஒரு திருவிழாபோல நடக்கும். பேட்டிகள், கிசுகிசுக்கள், துணுக்குகள் என்று படம் சம்ம்பந்தமான செய்திகளை ஊடகங்களை நிறைக்கும். படத்தின் நாயக நாயகியரை இணைத்துக் கிசுகிசுக்கள் பரப்பப்படும். சில படங்களுக்கு 'கவர் ஸ்டோரி' கூட எழுதப்படும்.

 

இப்படியெல்லாம் கிளப்பிவிடப்படும் எதிர்பார்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள 2000க்கும் அதிகமான திரையரங்கங்களில் இந்தப் படங்கள் வெளியாகும். படம் வெளியான மூன்றாம் நாளே படம் வெளியிட்டதாக அறிவிக்கப்பட்டு அதற்காக சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பும் 'சக்ஸஸ் பார்ட்டி'யும் நடத்தப்படும்.

 

மேலே சொன்ன படங்கள் எல்லாவற்றுக்கும் இவை நடந்தன. ஆனால் எதுவுமே சரியாக ஓடவில்லை. பணம் போட்டவர்கள் லாபத்தைப் பார்க்கவில்லை. ரசிகர்களும் திருப்தி அடையவில்ல்லை. ஆனால் இந்த நாயகர்கள் தங்களது அடுத்த படங்களில் மும்முரமாகிவிட்டார்கள்.

 

தனுஷ் தன் மனைவியும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடித்த படம் ';3'. நாயகி, கமலின் மகள் ஸ்ருதிஹாசன் என்பதால், தனுஷ் படத்துக்கு ஏற்கனவே இருக்கும் எதிர்பார்ப்பு கூடியது. அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் வெற்றி பெற்றதில் படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது.

 

ஆனால் படம் வெற்றி பெறவில்லை. பல காட்சிகள் தனுஷின் முந்தைய படமான 'மயக்கம் என்ன' படத்தின் காட்சிகளின் மறுபதிப்பாக இருந்ததாலும், இரண்டாம் பாதி ரொம்பவும் சோகமாக இருந்ததாலும் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. தவிர, நாயகனுக்கு இடைவேளைக்குப் பிறகு வரும் பிரச்சினை திரைக்கதையில் கையாண்ட விதம் ஏற்புடையதாக இல்லை. முதல் பாதியும் இரண்டாம் பாதியும் வேறு வேறு படங்களைப் பார்க்கும் எண்ணத்தை ஏற்படுத்தின. படம் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

தொடர் வெற்றிகளை வழங்கிவந்த கார்த்தி நடிப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் படம், சிறுத்தையில் அசத்திய கார்த்தி-சந்தானம் கூட்டணியின் அடுத்த படம் ஆகிய காரணங்களால் அறிமுக இயக்குநர் ஷங்கர் தயாளின் 'சகுனி' படத்துக்குப் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. படம் உலகெங்கும் சுமார் 2000 திரையரங்குகளில் வெளியானது. முதல் மூன்று நாட்கள் ரசிகர்களை ஈர்க்கவும் செய்தது. ஆனால் எல்லாம் ஆரம்பப் பரபரப்போடு சரி. அரசியல் கதையை அரதப் பழசான திரைக்கதையுடன் சொன்ன இப்படத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கார்த்தி-சந்தானம் கூட்டணியும் திருப்தி அளிக்கவில்லை. சகுனியின் தந்திரம் பலிக்கவில்லை.

 

பலமுறை தள்ளிப்போப்பட்டு வெளியான 'பில்லா-2'. அஜித்தின் திரைவாழ்வில் முக்கிய திரைப்படமான 'பில்லா'வின் முன்கதை என்ற பெயருடன் வெளியான இந்தப் படம் பல முறை தள்ளிப்போடப்பட்டு வெளியானது. 'பில்லா 1' ஐ விடவும் இதற்கு எதிர்பார்ப்பு அதிகம்.

 

'உன்னைப் போல் ஒருவன்' என்னும் ரீமேக் படத்தை இயக்கியிருந்த சக்ரி டோலட்டி இயக்கிய இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புக்கு அஜித் என்னும் அந்த மந்திரச் சொல்லே போதும். ஆனால் 'மிஸ்' இந்தியா பட்டம்பெற்ற பார்வதி ஓமனக்குட்டன், பாலிவுட் கவர்ச்சிக் கன்னி ப்ரூனா அப்துல்லா இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஆகியோரின் பங்கேற்பும் சேர்ந்ததால் படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு. அஜித் படங்களுக்கு இருக்கும் மாபெரும் ஒப்பனிங்கை நம்பி 'பில்லா-2'வை உலகெங்கும் 2500 திரையரங்குகளில் வெளியிட்டார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

 

யுவனின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக இருந்தன. ராஜ்சேகரின் கேமரா சர்வதேசப் படங்களை ஒத்திருந்தது. அஜித் படங்களுக்குக் கிடைக்கும் ஓப்பனிங்  இந்தப் படத்துக்கும் கிடைத்தது. வெளியான முதல் சில நாட்களில் படத்தின் வசூல் சில கோடிகளைக் கடந்தது. இத்தனை இருந்தும் 'பில்லா 2' வியாபார ரீதியாகத் தோல்வியைத் தழுவியது.

 

காரணம், அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தை நம்பி கோட்டைவிடப்பட்ட திரைக்கதை. படத்தில் வன்முறையையும் பிகினி காட்சிகளையும் தவிர வேறெதுவும் இல்லை. காட்சிகளில் புதுமையோ சுவாரஸ்யமோ இல்லை. அஜித்தின் சாகசங்கள் மிகை நாயக பிம்பத்தையும் தாண்டிவிட்டன. ரசிகர்கள் காதில் பூ சுற்றும் வகையில் பல காட்சிகள் இருந்தன. குறிப்பாக இந்திய கப்பற்படையினரின் பாதுகாப்பில் உள்ள ஆயுதங்களை அஜித்தும் அவரது நண்பரும் ஒரே ஒரு துப்பாக்கியின் உதவியுடன் மீட்டுவரும் காட்சி தீவிர அஜித்தின் தீவிர ரசிகர்களையே மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைத்தது.

 

விக்ரம் நடித்த சுசீந்திரனின் ராஜபாட்டை படுதோல்வியடைந்தது. ரசிகர்கள் விஜயுடன் அவர் மீண்டும் இணையும் தாண்டவம் படத்தை ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அனுஷ்கா, சந்தானம், நாசர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா என்று 'தெய்வத்திருமகளில்' பணியாற்றிய பலர் இந்தப் படத்திலும் இருந்தார்கள். இவர்களுடன், தெலுங்கு நாயகன் ஜகபதிபாபு, 'மதராஸப்பட்டினம்' புகழ் ஏமி ஜாக்ஸன் ஆகியோரும் படத்துக்கான எதிர்பார்ப்பை உயர்த்த உதவினார்கள். கதையில் ஓரளவு புதுமை இருந்தாலும் தொய்வு நிறைந்த திரைக்கதையும் சுவாரஸ்யமில்லாத காட்சிகளும் படத்தின் தோல்விக்கு வித்திட்டன. நட்சத்திர பலமும் வெளியீட்டுக்கு முந்தைய பரபரப்பும் கைகொடுக்கவில்லை.

 

2009இல் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த 'அயன்' அவரை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக நிலைநிறுத்தியது. அதன் பின் அவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றிபெற்றன (ரத்த சரித்திரம் தவிர). அயனுக்குப் பின் கே.வி. ஆனந்த் இயக்கிய 'கோ' படமும் வெற்றியடைந்தது. இவர்கள் மீண்டும் இணைந்த 'மாற்றான்' படத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.

 

ஒட்டிப் பிறந்த இரட்டையராக சூர்யா நடிப்பதால், அவரது நடிப்பின் வேறொரு பரிமாணம் வெளிப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஹாரீஸின் இசை, சூர்யாவுடன் காஜல் அகர்வால் முதல் முறையாக இணைவது, ஆண்டனியின் படத்தொகுப்பு, பெரிய பட்ஜெட் என்று படத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டிய காரணிகள் பல.

 

ஆனால் 1200 திரையரங்குகளில் வெளியான 'மாற்றான்', பாத்திரப் படைப்பிலும் காட்சியமைப்பிலும் எந்தப் புதுமையும் இல்லாததால் தோற்றான். 'ஒட்டிப் பிறந்த இரட்டையர்' என்பது ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவைக்கும் உத்தியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. முதல் பாதியில் தொழிலாளர் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டிருந்தது. இரண்டாம் பாதியில் சர்வதேசப் பாதுகாப்புச் சட்டங்கள் கேலிக்கூத்தாக்கப்பட்டிருந்தன. சில வசனங்களில் ஆபாசம் உச்சத்தைத் தொட்டது. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்பவர் என்று நம்பப்பட்ட சூர்யாவும் வியாபாரப் படங்களுக்கு புத்திசாலித்தனமான திரைக்கதையமைத்து மெருகூட்டுபவர் என்ற பெயர்பெற்ற கே.வி. ஆனந்தும் இணைந்த படத்தில் ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே கிடைத்தது.

 

இயக்குநர் மிஷ்கினும் இளம் கதாநாயகன் ஜீவாவும் இணைந்த 'முகமூடி' கமர்ஷியல் வெற்றிக்கான படம் என்ற அறிவிப்புடன் வெளியானது. வந்த சுவடு தெரியாமல் மறைந்தது.

 

சென்ற ஆண்டு வெளியான'ஒஸ்தி' படத்தின் படுதோல்வியையும் இந்தப் பட்டியலில் சேர்த்துப் பார்க்க வேண்டும். எந்தப் படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெற்றி அடைந்ததோ அதே படம் தமிழில் ஏன் வெற்றிபெறவில்லை? பிற மொழிகளில் நாயகர்களின் பாத்திரப் படைப்புடன் தமிழ்ப் படத்தின் ஹீரோ பாத்திரப் படைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் இதற்கான காரணம் புரியும். முதலில் போலீஸ் சீருடை சிம்புவின் சிறிய தோள்களில் சௌகரியமாக உட்காரவில்லை என்பதிலிருந்து பல காரணங்களை அடுக்கலாம்.

 

***

 

இதையெல்லாம் பார்க்கும்போது 'குசேலன்' படத்தில் வரும் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. ரஜினிகாந்த் தன் நிஜவாழ்வை ஒத்த சூப்பர் ஸ்டார் வேடத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தில் ''படம் நல்லா இருந்தாதான் ஜனங்க பார்ப்பாங்க. படம் நல்லா இல்லேன்னா நானே நடிச்சிருந்தாலும் பார்க்க மாட்டாங்க''' என்பார் ரஜினி. இந்த வார்த்தைக்கு விளக்கமாக மேலே சொன்ன படங்களைக் குறிப்பிடலாம். ரஜினி மந்திரத்தை அதிகம் நம்பி மூலக்கதையை நீர்த்துப் போகச் செய்ததால் தோற்றுப்போன 'குசேலனையும்' இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

 

விஜயும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "கண்டண்ட் (Content) தானுங்ணா என்னிக்கும் ஹீரோ'' என்று பேசியிருக்கிறார். நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் எந்த நடிகரும் உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக நிராகரித்ததில்லை. ஆனால் அவர்கள் நடிக்கும் படங்களில் உள்ளடக்கத்தைவிட ஹீரோயிஸத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதையோ அஜாக்கிரதையான திரைக்கதையையோ நம்ப முடியாத காட்சிகளையோ ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? ஹீரோக்கள் தங்கள் பாத்திரங்களில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதுமை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் திரைக்கதையில் வித்தியாசமோ புதுமையோ இருக்கிறதா என்று அவர்கள் பார்ப்பதில்லை. நட்சத்திரங்கள் இருக்கும் தைரியத்தில் இயக்குநர்களும் இந்த விஷயத்தில் மெனக்கெடுவதில்லை. இதுதான் இன்று தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கும் பிரச்சினை.

 

இந்த ஆண்டு பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளியான 'வழக்கு எண் 18/9', அருண்குமார் நடித்த 'தடையறத் தாக்க', இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த 'நான்', இயக்குநர் பிரபு சாலமன் புதுமுகங்களை வைத்துத் தயாரித்த 'சாட்டை', நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஆரோஹணம் 'ஆகிய படங்ளும் முற்றிலும் புதுமுகங்கள் உழைப்பில் வெளியான 'அட்டக்கத்தி', 'பீட்ஸா' ஆகிய படங்களும் ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றில் பல வியாபார வெற்றியும் பெற்றிருக்கின்றன.

 

இவையனைத்துமே புதுமையான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை. தாளம்போட வைக்கும் பாடல்கள், பொருத்தமான பின்னணி இசை, சொதப்பலில்லாத நடிப்பு ஆகிய உள்ளடக்கங்களுக்காகத்தான் கவனிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளடக்கம் சரியாக இல்லாததால்தான் நட்சத்திரப் படங்கள் தோல்வியடைந்தன.

 

ஒரு படத்தின் வெற்றிக்கு உள்ளடக்கம்தான் முக்கியம் என்றால் பிறகு ஏன் கோடிக் கண்க்கில் சம்பளம் கொடுத்து நட்சத்திரங்களை நடிக்கவைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் ஒரு படத்துக்கு உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நட்சத்திர மதிப்பும் முக்கியம். நட்சத்திர மதிப்புதான் ஒரு படத்தைப் பெரிய வெற்றியடையவைக்க முடியும். பெரிய ஹீரோக்களின் படங்கள் உள்ளடக்கம் சரியில்லாததால் தோற்றதைப் போல் உள்ளடக்கம் நன்றாக இருந்து நட்சத்திர மதிப்பு இல்லாததால் பெரிய வெற்றி அடையாத படங்களும் இருக்கின்றன. உதாரணம் அருண் விஜயின் தடையறத் தாக்க.

 

நட்சத்திரங்கள் நடிக்கும் சில படங்களில் உள்ளடக்கம் ஓரளவேனும் சரியாக அமைந்தால் அந்தப் படங்கள் ஓடும். ஆனால் அப்படி அமையாததற்குக் காரணம் என்ன?

 

அலட்சியமான அணுகுமுறை அல்லது அதீத நம்பிக்கைதான் காரணமாக இருக்க முடியும் என்கிறார் நம் தோழி இதழின் ஆசிரியரும் சின்னத்திரை திரைக்கதை ஆசிரியருமான சி. முருகேஷ் பாபு. 'ராஜபாட்டை' இசை வெளியீட்டு விழாவில் அதன் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, அந்தப் படத்தை அவர் எவ்வளவு அலட்சியமாக அணுகினார் என்பது அம்பலமாயிற்று என்பதை இவர் சுட்டிக்காட்டுகிறார். 'கமர்ஷியல் படத்துல நாலு பாட்டு இருக்கும். ஆறி ஃபைட் இருக்கும். டான்ஸ் மாஸ்டர்ஸ் பாட்ட எடுத்துருவாங்க, ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் சண்டைய எடுத்துருவாங்க. மிச்சம் எட்டு, பத்து சீன்தான் நம்ம வேலை. அதனால் இந்த மாதிரி படம் பண்றது ஈஸியாதான் இருக்கு என்றார் அவர். கமர்ஷியல் படம் என்பதை அலட்சியமாகக் கருதும் போக்குதான் இது. உண்மையில் வெற்றிகரமான கமர்ஷியல் படம் எடுப்பது அவ்வளவு ஈஸி அல்ல' என்கிறார். பெரிய ஸ்டார்,கமர்ஷியல் ஃபார்மேட் என்று வந்துவிட்டாலே இயக்குநர்கள் அதை ஈஸியாக எடுத்துக்கொள்ளும் இதுபோன்ற போக்குதான் இந்தப் படங்களின் தோல்விக்குக் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் அவர்.

 

சீரியஸ் படமோ கமர்ஷியல் படமோ, காமெடி படமோ செண்டிமெண்ட் படமோ, எடுத்துக்கொண்ட விஷயத்துக்கு ஏற்ற உழைப்பைச் செலுத்தாவிட்டால் வெற்றி கிடைக்காது என்று சுட்டிக் காட்டுகிறார்.

 

'ராஜபாட்டை'யின் கதைக் களமேகூட நல்ல கமர்ஷியல் படத்துக்கான களம்தான் என்கிறார் முருகேஷ். சினிமாவில் ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் ஒருவன் தற்செயலாகச் சந்திக்கும் ஒரு பெரியவருக்காக அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது என்னும் கதைக் கருவை வைத்து ஒரு நல்ல கமர்ஷியல் படம் எடுக்க முடியும் என்று சொல்லும் இவர், அதற்கான மெனக்கெடல் திரைக்கதையில் இல்லாததுதான் தோல்விக்குக் காரணம் என்கிறார்.

 

நட்சத்திரங்கள் தஙகள் விருப்பத்திற்கேற்ப கதையை மாற்றியமைக்கிறார்களா? அல்லது தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நட்சத்திரம் உடன் இருக்கும் தைரியத்தில் மெனக்கெட மறுக்கிறார்களா என்ற கேள்வி இந்தச் சமயத்தில் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

 

இரண்டுமே நடக்கின்றன என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. 'சகுனி' படத்தின் காட்சியமைப்பிலும் அதன் நாயகன் கார்த்தியின் தலையீடு இருந்ததாகக் கிசுகிசுக்கப்படுகிறது. 'பில்லா 2' வின் பல காட்சிகள் அஜித் என்ன செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசட்டு தைரியத்தில் எடுக்கப்பட்டதாகவே தெரிந்தன.

 

'எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் வைத்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவரான இயக்குநர் பீம்சிங்கிடம் ஒரு படத்துக்கு மிகவும் முக்கியமானது எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'ஒரு படத்துக்கு மிக முக்கியமானது திரைக்கதையும் எடிட்டிங்கும்தான். கதை, திரைக்கதை எழுதிவிட்டு அதற்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்தால்தான் படம் வெற்றிபெறும்' என்று கூறியிருந்தார்.

 

வணிக வெற்றி என்னும் பெயரால் நம்ப முடியாத ஹீரோயிஸத்தை நாடும் நட்சத்திரங்கள், நட்சத்திரங்களைக் குறிப்பிட்ட வளையத்திற்குள் சிக்க வைத்து அவர்களை வித்தியாசமான முயற்சி எடுக்க அனுமதிக்காத தயாரிப்பாளர்கள், கதை, திரைக்கதைக்காக மெனக்கெடாமல் நட்சத்திரக் குதிரைகளில் ஏறி சவாரி செய்ய நினைக்கும் இயக்குநர்கள் - இந்தக் கூட்டணியின் அணுகுமுறை மாறாதவரை பணம் கொடுக்கும் ரசிகனைத் திருப்திப்படுத்தும் படங்களின் எண்ணிக்கை சொற்பமானதாகவே இருக்கும்.

 

இந்தப் பின்னணியில் துப்பாக்கியின் வெற்றி முக்கியமானதாகிறது. திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ப நாயக உயர்வு நவிற்சியைக் கட்டமைத்திருக்கும் இந்தப் படம் பெற்றுள்ள வெற்றி நமது நாயகர்களுக்கு முக்கியமான செய்தியைச் சொல்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய நட்சத்திரமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கதையும் திரைக்கதையும் வலுவாக, விறுவிறுப்பாக, ஓரளவேனும் நம்பகமாக இல்லையென்றால் உங்கள் வெளிச்சம் வெற்றியாகப் பரிணமிக்காது. எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த் போன்ற மாபெரும் சூப்பர் ஸ்டார்களுக்கே இந்தக் கதிதான்.

 

கதையை மதியுங்கள். இயக்குநருக்குச் சுதந்திரம் அளித்து வலுவான திரைக்கதை அமைய ஒத்துழையுங்கள். வெற்றி உங்கள் வாசலை மிதிக்கும்

 

இதுவே தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும் கூறும் செய்தி.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=5146e8e3-958f-43fc-b778-106372348270

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.